Powered By Blogger

Saturday, March 07, 2020

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...!

நண்பர்களே,

வணக்கம்.  மேற்படிப் பழைய பாட்டு தான் தலைக்குள்ளே ஓடுது இந்த நாலைந்து நாட்களாய் ! ஊஹூம்... கரோனா வைரஸின் இந்திய விஜயமோ ; எகிறும் டாலர் / யூரோ விலைகளோ ; சட்டையைப் பிய்த்துக் கொள்ளச் செய்யும் உட்பொருட்களின் தட்டுப்பாடோ என்னைப் பாட்டுப் படிக்கச் செய்யவில்லை ! அட...மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ; லட்சங்களை முடக்கி லூசுப்பயலாட்டம் கிட்டங்கி நிறைய புக்குகள் மீது சிவகாசியில் ஒருத்தன் குந்திக் கிடக்க, மாதந்தோறும் வெளியாகும் புக்குகளை  கர்ம சிரத்தையாய் ஸ்கேன் பண்ணி, pdf ஆக்கி, விநியோக சேவை செய்திடும் பெருந்தகையையோ  ; அதை நோகாமல் வாங்கி இன்னொருத்தர் 15% டிஸ்கவுன்ட்டில் (அடடா !) கல்லா கட்ட முனைந்திடும் போது  -  'யார் உழைப்பை (!!!!) யார் உறிஞ்சுவது ?" என்று கண் சிவந்து FB-ல் ஓடிடும் பஞ்சாயத்துக் கூத்தையோ,   கூட எண்ணி பாட்டுப் பாடத் தோன்றவில்லை ! மாறாக - மார்ச்சின்  அலசல்கள் இதுவரையிலுமாவது கொணர்ந்துள்ள எண்ணச் சிதறல்களை பார்க்கும் போதே பாட்டு பீறிடுகிறது !! 

ஒவ்வொரு இதழினிலும் பணியாற்றும் சமயமே உள்ளுக்குள் ஆலய மணியோ ; அலார மணியோ ஒலிப்பதுண்டு !! "நைனா... காலரைத் தூக்கி விட்டுக்கினு கெத்தாய்ச் சுற்றி வர  இம்மாதம் வாய்ப்பு பிரகாசம் !" என்றோ - "விளக்குமாற்றுச் சாத்துக்கள் confirmed தம்பி !" என்றோ அவை சொல்லிடும் ! And பெரும்பாலும் அந்த உள்வசிக்கும் பட்சியின் ஆரூடங்கள் சொதப்புவதில்லை ! நூற்றுக்கு நூறு என்றில்லாது போயினும் எண்பது சதவிகிதமாவது சரியாகவே இருப்பதுண்டு !! ஆனால் இம்மாதம் ஒண்ணுமே புரியலே...உலகத்திலே !! மாடஸ்டியின் தொடரில் மொத்தம் 100 கதைகள் உள்ளன ! ஓவியர்கள் மாறிக் கொண்டே போனாலும் கதாசிரியர் மாறுவதில்லை எனும் போது அந்த basic template பெரிதாய் மாற்றம் கண்டிடுவதில்லை ! இம்மாதமும் அந்த "கோடீஸ்வர நண்பனின் எஸ்டேட்டில் இளவரசி & கார்வினின் விடுமுறை" என கதை துவங்கிய போது வழக்கமான ஆக்ஷன் block ஒன்றினை எதிர்பார்த்தே பணிகளுக்குள் புகுந்தேன் ! ஆனால்  வித்தியாசமான பாணியில் பயணிக்கும் plot ; திடீர்  ட்விஸ்ட் என்று கொடைக்கானல் மலைகளின் கொண்டைஊசி வளைவுகள் போல கதை வளைந்து, நெளிந்து ஓடிடத் துவங்கிய போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் சல்சா நடனம் துவங்கி  விட்டிருந்தது எனக்கு ! இதை எவ்விதம் அணுகப் போகிறீர்களோ ? என்ன மாதிரியான பாயசம் போடப் போகிறீர்களோ ? என்ற பயம் துளிர் விட்டிருந்தது ! "இளவரசி" ; "வேலு நாச்சியார் "  ; "ராணி மங்கம்மா" என்ற ரீதியிலான வருகைப் பதிவேட்டு ஊர்ஜிதங்களைத் தாண்டி, இளவரசிப் பேரவையின் செயல்பாடுகள் ஒருநாளும் வீரியமாய் இருப்பதில்லை எனும் போது எனது பயங்கள் கூடிப் போயின !! சரி...இம்முறை பாக்கி 3 கலர் இதழ்களுமே heavyweights தான் ; இளவரசியின் சாகஸம் ஒரு மிடறு குறைச்சலாய்த் தென்பட்டாலுமே மற்றவை balance செய்து விடும் ; பற்றாக்குறைக்கு 'தல' ஆண்டின் முதல் குட்டி கலர் ஆல்பத்தோடு களமிறங்குவதால், சிக்கலிராது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிய கையோடு COLOR TEX பணிகளுக்குள்  கட்டக்கடைசியாய்ப் புகுந்தேன் !!

தெறிக்கச் செய்யும் அந்த ஆரம்பம் எனது குஷிகளை பன்மடங்காக்கியது !! ஆனால்...ஆனால்....குல்லாக்காரர் கதைக்குள் என்ட்ரி ஆனது முதலாய், நிழல்கள் காலாற வாக்கிங் கிளம்புவதும், சுடிதாரைப் போட்டுக்கொண்டு ஷாப்பிங் போகாத குறையாய்  சுற்றிவருவதுமிருக்க, நம்மவர்களோ டூரிங் டாக்கீஸில்  பாட்டு சீன்களின் போது முட்டைபஜ்ஜி சாப்பிட ஒதுங்கிடுவோரைப் போல ஓரம் கட்டிட - ஒளிமயமான "பாயச எதிர்காலம்" என் கண்முன்னே விரிந்தது !! பிப்ரவரியின் கடைசிப் பதிவுகளில் / பின்னூட்டங்களில் எல்லாமே  எனது இந்த பீதிகளின் எதிரொலியே தென்பட்டிருக்கும் ! "சரி, காரசாரப் பாயசம் என்றொரு பதார்த்தத்தை யதார்த்தமாய் ருசிப்போம் இந்த மார்ச்சில்" என்று தயாராகியிருந்தேன் !! 

மார்ச்சும் வந்தது ; மெதுமெதுவாய் அலசல்களும் வந்தன ; குடந்தையிலிருந்து ரவாப்பாயசமும் சுடச் சுட பிரவாகமெடுத்தது : "இது  எதிர்பார்த்ததுதானே பாலகுமாரா - ஜமாய் !!" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு, "அடுத்தாப்டி சேமியாவா இருக்குமோ ?" என்ற காத்திருப்பை ஆரம்பித்தேன் ! ஆனால்....ஆனால்... தொடர்ந்ததோ மெய்யாலுமே இனித்த சமாச்சாரங்களே !    

இளவரசியின் அந்த பெரிய சைஸ் அட்டைப்படத்தில் துவங்கி, புக்கின் அமைப்பு, பிளைசி & கார்வினின் நட்பு ; வித்தியாசமான கதை பாணி என நிறைய விஷயங்களின் பொருட்டு பாராட்டுக்கள் ! "அடங்கொன்னியா.... இந்த மாசம் உனக்கு டபுள் கொட்டு இல்லே ; போலும் !! ஒண்ணோட தப்பிச்சே !!" என்று உள்ளுக்குள் நான் குதூகலிக்கும் போதே COLOR TEX-க்கும் சாராமரியாய்ப்  பாராட்டுக்கள் பதிவாகத் துவங்கின !!  "அமானுஷ்ய த்ரில்லர் ; இந்த ஜானரும் தேவை தான் !!" என்ற ரீதியில் பெரும்பான்மையின் எண்ணங்கள் அமைந்ததை வாசித்த போது - இந்தப் பதிவின் முதல் பத்திப் பாடல் தான் தலைக்குள் ஓடியது !! "ஒண்ணுமே புரியலே....உலகத்திலே !!" ஒரிஜினல் கதைவரிசையினில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை - டெக்ஸை ஒரு மிடுக்கான ரேஞ்சராய் ; நீதிக்காவலராய் மட்டுமே (நம் மத்தியிலாவது) நிலைநாட்டுவதே நல்லது என்ற எனது அபிப்பிராயத்தை நான் ஒரு போதும் ஒளித்துமறைத்ததில்லை ! நண்பர்களில் ஒரு சிறு அணி "மெபிஸ்டோ ; யுமா" என்று மனம் தளராது கொடி பிடித்து நின்றாலும் - எதையாச்சும் சொல்லி, மழுப்பி காலத்தை ஓட்டுவதே எனது பாணியாக இருந்து வந்துள்ளது ! In fact - ஆளும், பேருமாய்ச் சேர்ந்து இந்தக் குட்டி COLOR TEX இதழுக்குச் செய்யவிருக்கும் அபிஷேகத்தில் - "பாத்தீங்களா ? பாத்தீங்களா ? தம்துண்டு கதைக்கே 'தல' இந்த பரேடை சந்திக்க வேண்டியுள்ளது ; இந்த அழகில் ஒரு முழுநீள கதையில் மந்திரம், தந்திரம் என்று காதில் புய்ப்பங்களை சாத்தினால் நம்மவரின் கதி என்னாகும் ?" என்று லாஜிக் பேச திட்டம் வைத்திருந்தேன் ! ஆனால்...ஆனால்...ஒண்ணுமே புரியலே..உலகத்திலே...!! என்று பெனாத்துவதே இப்போது பலனாகி நிற்கிறது !! 

"ரைட்டு...மெபிஸ்டோ எப்போ ? நாளைக்கா - நாளான்னிக்கா ?" என்ற கேள்விகள் இயல்பாய்த் தொடரும் என்பது புரிகிறது தான் ! ஆனால் ஒரு 32 பக்க மினி சாகசத்தையே ஒரு 300 பக்க சாகசத்துக்கான முன்னோட்டமாய்ப் பார்த்திடுவதன் சாதகங்களை விடவும், பாதகங்களே பிரதானமாய்த் தென்படுகின்றன எனக்கு !  Maybe in the near future - ஒரு 110 பக்க சிங்கிள் ஆல்பத்துக்கு டெக்சின் அமானுஷ்ய அதிரடிகளை வைத்துக் கொள்வோமே & அப்புறமாய் யோசிக்கலாமே !! Of course - மெபிஸ்டோ நற்பணி மன்றத்தினருக்கு என் மண்டையில் தபேலா வாசிக்கும் உத்வேகம் ஊற்றடிக்கும் என்பது புரிகிறது தான் ; ஆனால் கால் முளைத்த நிழல்களும் ; தம்மடித்தால்  புறப்பட்டுப் போகும் பூதங்களும் - more at home with டைலன் டாக் அல்லவா ? 

கண்ணியமான ரேஞ்சர் ; பொறுப்பான நீதிக்காவலர் ; கடமை மறவா இரவுக் கழுகார் ; அன்பான தந்தை ; உறுதியான நண்பன் என்ற அடையாளங்களை முன்னிறுத்தி விட்டு - "மாயாஜாலத்தோடு மோதுபவர் " என்ற அடையாளத்தை சித்தே பின்நிறுத்துவோமே folks ?

Moving on, கடந்த 2 வாரங்களுமே நம் ஆபீஸின் லேசர் பிரிண்டர் கண்ணீர் விட்டுக் கதறாத குறையைப் பற்றிப் பேசிட நினைக்கிறேன் !! 
  1. ஜம்போ சீசன் 3-ல் ஒரு ஸ்லாட் காலி !
  2. சந்தா D-ல் இன்னும் 2 ஸ்லாட் காலி
  3. MAXI லயனில் வெளிவந்திட வேண்டிய வாண்டு ஸ்பெஷல் - 2 ஸ்லாட் காலி !!

ஆக மொத்தம் நடப்பாண்டிலேயே இன்னமும் 5 ஸ்லாட்கள் காலி ! 

And பற்றாக்குறைக்கு "ஈரோடு 2020" இன்னமும் நான்கே மாதத் தொலைவில் நின்றிட - அதற்கான பிரத்யேக முன்பதிவு ஸ்பெஷல் இதழ்களின் திட்டமிடலும் தலையாய முக்கியத்துவம் பெறுகின்றது !! So கடந்த ஒரு மாதமாகவே நமது படைப்பாளிகளிடம் "இந்த கதையை அனுப்புங்க ; அந்தக் கதையை அனுப்புங்க !!" என்று குடலை உருவி வருகிறேன் !! அவ்விதம் வந்திடும் கோப்புகளை லேசர் பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து நம் மொழிபெயர்ப்பாளருக்குக் கூரியரில் அனுப்பி, "ஒவ்வொரு கதைக்கும் கொஞ்சூண்டு பொரிகடலை !" என்றொரு சன்மானத்தையும் அறிவித்து நித்தமும் கதை கேட்டு வருகிறேன் !! ஏற்கனவே நெட்டில் அந்தத் தொடர்களின் / ஆல்பங்களின்  outline பற்றித் தெரிந்த பிறகே படைப்பாளிகளிடம் கோப்புகளைக் கோரிடுகிறேன் என்பதால், அவற்றை மனதில் இருத்திக் கொண்டபடிக்கே, நம் ரசனைகளுக்கு ஒத்துப் போகும் விதமாய்க் கதை பூரணமாய்  ஓட்டமெடுக்கிறதா ? என்றறியும் விதமான கேள்விகளை நான் முன்வைப்பேன் ! நாம் தரும் பொரிகடலையை சட்னி ஆட்டிடும் பொருட்டு மிக்சியில் போட்டபடிக்கே அவரும் பொறுமையாய் பதில் சொல்லுவார் ! இந்தக் கடைசி 7 நாட்களில் மட்டுமே இரட்டை இலக்கத்தில் கதைகள் கேட்டுள்ளேன் & அவற்றுள் மூன்று தேர்வும் கண்டுள்ளன !! நிஜத்தைச் சொல்வதானால் இப்போதெல்லாம் கதைத்தேர்வுகள் என்பது எனக்கான நீட் தேர்வு போலாகி வருகிறது ! போகிற போக்கில் ஜார்கண்ட் பக்கமாய் யாரையாச்சும் அமர்த்தித் தான் தேர்வுகளை இனி செய்ய வேண்டும் போலும் !! 

சரி, காத்திருக்கும் ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள் பக்கமாய் இனி பார்வைகளைத் திருப்போவமா ? Here goes அறிவிப்பு # 1 : 


ARS MAGNA !! இரண்டாம் உலக யுத்தப் பின்னணியில் ஒரு புதையலைத் தேடும் இந்த முப்பாக ஆக்ஷன் த்ரில்லர் - முழுவண்ணத்தில், ஹார்ட்கவர் பைண்டிங்குடன் வெளிவருகின்றது - ஈரோடு ஸ்பெஷல் # 1 ஆக !! ஜேசன் ப்ரைஸின் கதாசிரியர் Alcante இங்கும் பேனா பிடிக்க, அதே ஓவியர் யோவானோவிக் இங்கும் தூரிகையைப் பிடிக்க, மார்ஷல் டைகர் தொடரின் ஆல்பம் # 3-க்கு  கலரிங் செய்த  ஸ்மூல்கோவ்ஸ்கி வர்ணமிட - ஒரு அட்டகாசமான புதையல் வேட்டை நம் முன்னே விரியக் காத்துள்ளது !! மாமூலாய் வன்மேற்கையே பார்த்து அலுத்துப் போயிருக்கக்கூடியோர்க்கு இந்த ஜெட் வேக த்ரில்லர் ஒரு அழகான மாற்றமாய் இருக்கக் கூடும் !! 

Down the line, ஈரோட்டின் இரண்டாவது ஸ்பெஷல் "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி" என்ற பதத்துக்கு சரியான எடுத்துக்காட்டு என்பேன் ! அமெரிக்க க்ரைம் த்ரில்லரே இந்த ஸ்லாட்டுக்கு என்று 75% உறுதி கொண்டிருந்தேன் நான் ! ஆனால் அந்தப் படைப்பின் base சற்றே வயது முதிர்ந்தோருக்கே ஒத்து வரும் விதமாய் இருப்பது தான் சின்னதொரு நெருடலாகவே என்னுள் இருந்து வந்தது ! கதையின் உரிமைகளையும் வாங்கி ; மொழிபெயர்ப்பையும் செய்து விட்டேன் தான் ; but ஈரோடு போன்றதொரு ஜனரஞ்சகக் களத்தினில் இதனை வெளியிடுவதில் தான் தயக்கம் இருந்தது ! So அதனிடத்தில் நிறையவே கதைகளை / மினி தொடர்களை விடாப்பிடியாய்ப் பரிசீலிக்கத் துவங்கினேன் !! அப்போது தான் நினைவுக்கு வந்தது - "எது மாதிரியும் இல்லாத சமாச்சாரம் !!" And அது அதிகாரி சார்ந்த விஷயம் எனும் போது எனது உற்சாக மீட்டர் சற்றே பிஸியானது !! "அதிகாரியை இந்தவாட்டி ஈரோட்டில் களமிறக்க மாட்டேன்னு - இளம் தளபதியை அடுத்த வருஷத்துக்குத் தள்ளிப்போட்ட பதிவில் சொன்னியேப்பு ?" என்ற கேள்வி எழும் என்பது நினைவிருந்தது தான் ! ஆனால் இது அதிகாரி சார்ந்த இன்னொரு முகம் என்பதால் - வாக்குத் தவறியவன் ஆகிடமாட்டேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! Without much ado - இதோ ஈரோடு ஸ்பெஷல் # 2 சார்ந்த அறிவிப்பு : 

டெக்சின் 70-வது பிறந்தநாளை ஒட்டி இத்தாலியில் போனெல்லி நிறைய ஸ்பெஷல் சமாச்சாரங்களை நடைமுறைப்படுத்தியிருந்தனர் ! அவற்றுள் ஒன்று தான் 1958 முதல் 2018 வரையிலான அத்தனை டெக்ஸ் அட்டைப்படங்களையும் 3 மெகா தொகுப்புகளில் வெளியிட்டது !! 1958 முதல் 1979 வரை முதல் தொகுப்பு ; 1980 முதல் 19999 வரை இரண்டாம் தொகுப்பு & 2000 முதல் 2018 வரையிலும் தொகுப்பு # 3 என்று அவை இருந்தன !! Here they are :
இத்தாலியில் அமோக வரவேற்பு இந்த இதழ்களுக்கு ! துவக்க நாட்கள் முதலாய், இன்று வரைக்கும் நம்மவரின் எக்குத்தப்பான எண்ணிக்கையிலான ஆக்ஷன் அட்டகாசங்களை இத்தாலிய ஓவியர்களின் கைவண்ணத்தில் ஏகமாய் ரசிப்பது அங்கிருந்த 'தல' ரசிகர்களுக்கு  செம கொண்டாட்ட அனுபவமாய் அமைந்திருந்தது ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே நமக்கும் இது கண்ணில் காட்டப்பட்டது என்றாலும், பட்ஜெட் உதைத்துக் கொண்டே இருந்தது ஒரு பக்கம் ; கதைகளின்றி, வெறுமனே படம் பார்க்கும் சமாச்சாரத்துக்கு இத்தனை செலவு செய்வது ஓ.கே. தானா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே ஓடியதால் உடனே கட்டைவிரலை வாய்க்குள் நுழைக்க முனைந்திடவில்லை ! ஆனால் என்றேனும் இதனை நடைமுறைப்படுத்தும் ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது ! 

பதிப்புலகில் Coffee table books என்றொரு சமாச்சாரம் உண்டு ! அழகழகான போட்டோக்களுடன் நகரங்கள் ; கோட்டைகள் ; சுற்றுலாத் தளங்கள் ; இயற்கை காட்சிகள் என்று பெரிதாய் புக்குகள் உண்டு ! நேரம் கிடைக்கும் போது ரிலாக்ஸ்டாய் புரட்டிப் படம் பார்த்து ரசிப்பதே இந்த வெளியீடுகளின் motive ! ஒரேயொருவாட்டியாவது நமது காமிக்ஸ் தலைமகனின் பொருட்டு இந்த முயற்சியைக் கையில் எடுத்துப் பார்த்தாலென்ன என்ற ஆசை கூடிக் கொண்டே போனதால் - இதோ அதனை செயலாக்கிட நமது முயற்சி ! நமது ரெகுலர் சைசில் (இரத்தப்படல சைஸ்)  ; முழு வண்ணத்தில் ; ஹார்ட் கவருடன் அழகாய் வெளிவரவுள்ள இந்த limited edition இதழுக்கு ரூ.600+ என்ற விலை நிர்ணயம் தவிர்க்க இயலாது போகிறது ! "புள்ளையாண்டான் கடையே விரிச்சுட்டான்லே..!!இந்த சமயம் பாத்து YesBank வேற புட்டுக்கிச்சு...லோன் போட லோன் ரேஞ்சரைத் தான் இனி தேடணுமோ ? " என்று இது சார்ந்த கும்மியடிகள் நிச்சயமாய் இன்றைக்கு சுறுசுறுப்பாய் அரங்கேறிடும் என்பதில் ஐயமில்லை எனக்கு ! ஆனால் எகிறி நிற்கும் செலவினங்களின் தாக்கங்களுக்குப் பதில் சொல்லும் அத்தியாவசியம் கும்மியடிப்போர் சங்கத்துக்குக் கிடையாதெனும் போது அவர்களைக் குற்றம் சொல்லியும் அர்த்தமில்லை ! டன் ஒன்றுக்கு ரூ.16,800 அதிகம் தந்து ஆகஸ்ட் வரைக்குமான பேப்பர் கொள்முதலை நேற்றைக்குச் செய்த  சமயம் "ஷப்பா..பேப்பர் கிடைத்ததே !! என்ற மேலோங்கிய நிம்மதி பெருசா ? இழந்த தொகையின் வேதனை பெருசா ? என்ற கேள்விக்கு எனக்கே விடை தெரியலை தான் ! 

Taking a cue from the song in the title - இந்த "அட்டைப்படத் தொகுப்பு" முயற்சி சரி தானா ? உங்களுக்கு ரசிக்குமா ? என்று எனக்கே கணிக்கத் தெரியவில்லை தான் ! Maybe..just maybe ..உங்கள் எல்லோருக்குமே இது தேவையில்லாத கூத்தாய்த் தென்பட்டால், நிச்சயமாய் இதனிலிருந்து ரிவர்ஸ் அடித்து விட்டு, வேறேதேனும் கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழினை இதன் இடத்தில புகுத்திடவும் மறுக்க மாட்டேன் தான் ! ஆனால் 2000 முதல் 2018 வரைக்குமான அட்டைப்படங்களை வரிசையாய் வண்ணத்தில் புக்காகப் பார்ப்பது ஒரு ரம்ய அனுபவமாய் இருக்குமென்றே எனக்குப் பட்டது ! 1958 முதல் 1979 வரையிலான முதல் தொகுப்பிலிருந்து ஆரம்பித்தால் அந்தப் புராதன நெடி நமக்கு ஒத்துக் கொள்ளாதோ என்ற தயக்கத்தில் போனெல்லியிடம் கடைசித் தொகுப்பிலிருந்து துவங்கிட அனுமதி கோரிப் பெற்றோம் ! ஆனால் "இதை ஒன்றரையணா செலவின்றி நான் தான் நெட்டில் பாத்துக்குவேனே..? இதுக்கு அறுநூறு சில்லறை செலவழிப்பானேன் ?" என்ற கேள்வியினை முன்வைப்பீர்களாயின் சத்தியமாய் என்னிடம் அதற்குப் பதில் லேது ! இதுவொரு சேகரிப்பின் சின்னமே தவிர்த்து, நமது ஞானங்களை நாளைக்கே நான்கு மடங்காக்கப் போகும் அற்புதமல்ல என்பதை ஒத்துக் கொள்ளும் முதல் ஆசாமி ஞானே !  அதே போல "வண்டி வண்டியாய் கதை கேட்டேன்னு, வண்டி வண்டியாய்ப் பீட்டர் வுட்டுப்புட்டு - இப்போ கதையே இல்லாத ஒரு புக்கை திட்டமிடுவானேன்டா தங்கக்கம்பி ?" என்று கேள்வி கேட்கக்கூடியோர்க்குமே என்னிடம் பெருசாய் பதில்களில்லை ! நாளைக்கோ ; நாலு வருஷங்கள் கழித்தோ - என்றேனும் இதனை வெளியிடுவதாயின்,  அதை உங்களிடம் தானே  கொணர வேண்டி வரும் ? So என்றைக்கேனுமே இது கதைகளைத் தன்னில் கொண்டிரா அலங்காரத் தொகுப்பாக மாத்திரமே இருந்திடப் போகிறது !! So அதனை நியாயப்படுத்தும் மெனெக்கெடலில் அர்த்தம் இருக்கப் போவதில்லை !! "ரைட்டு...டெக்ஸ் ரசிகர்களின் ஆசைக்கு இதை போட்டாக்கா - XIII ரசிகர்களின் ஆசைக்கோசரம் XIII spin offs தொகுப்பைப் போட ஏன் நோவுதாம் ?" என்ற கேள்வி இன்னொரு திக்கிலிருந்து ஒலிக்கும் என்பதும் புரிகிறது ! "அக்டொபர் வரைக்கும் பொறுமை காத்திடுங்கள் - "சதியின் மதி" வெளியாகும் வரை ! அதை படித்த பின்னேயும் இந்தக் கோரிக்கை தொடரின் பார்ப்போம் !" என்பதே எனது பதிலாக இருந்திடும் ! 

So தற்போதைய இந்த TEX அட்டைப்படத் தொகுப்பு சமாச்சாரத்துக்கு க்ரீன் சிக்னலா ? சிகப்பா ? என்பதை நீங்கள் சொல்வதை பொறுத்தே இந்தத் திட்டமிடலின் இறுதி வடிவத்தை கண்ணில் காட்டிட எண்ணியுள்ளேன் ! 

So 1 + 2 = 3 என்ற விஞ்ஞானபூர்வமான பதிலைப் பின்னூட்டமிட்டால் Ars Magna + டெக்ஸ் அட்டைப்படத் தொகுப்புகள் என்ற திட்டமிடலை ஓ.கே. என்று எடுத்துக் கொள்வேன் ! மாறாக 1 + 2 = 12 என்று பின்னூட்டமிட்டால் "விஷப்பரீட்சைக்கு நோ !" என்று நீங்கள் சொல்வதாக அர்த்தம் எடுத்துக் கொள்வேன்

In any case - "ஒரு புதையலின் பாதையில்" உண்டு தான் ; so  அதனையும் மாற்றும் பொருட்டு 1 + 2 = 41 என்று பின்னூட்டங்கள் வேண்டாமே - ப்ளீஸ் ! 

Bye folks....have a great weekend !! See you around !!

அப்புறம் மார்ச்சின் அலசல்கள் தொடரட்டுமே - ப்ளீஸ் ?

And by the way - முதல் பத்தியில் நான் எழுதிய அந்த pdf சமாச்சாரங்கள் இனியும் தொடரின் நிச்சயமாய் அவற்றின் மீது நடவடிக்கை இருக்கும் !  Please do give these a skip !

324 comments:

  1. வணக்கம் ஆசிரியர்

    ReplyDelete
  2. டியர் எடிட்டர் சார் அட்டை படங்களுடன் ஒரு புத்தகம் ஓகே . தாராளமாக வெளியிடலாம்.ஆனால் ஈரோட்டில் கதை புத்தகம் 2 .+ டெக்ஸ்
    இது எனது விருப்பம்.

    ReplyDelete
  3. டியர் சார் சென்ற பதிவினில் 007 , 2.0 இரண்டு புத்தகம் வெளியிட வேண்டுமானால் பாக்கெட் பெரிதாக வேண்டும் என்று சொன்னீர்கள். தாராளமாக 2 அல்லது 3 வெளியிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. சார்...அமெரிக்காவில் இந்தக் கதைவரிசையில் இப்போதைக்கு மீதமிருப்பன இரண்டே ஆல்பங்கள் தான் ! அதன் பின்னே ஜேம்ஸ் பாண்டின் வரலாறு (!!) என்றொரு ரூட்டில் வண்டி ஓடுகிறது ! So இஷ்டத்துக்குப் போட்டுத் தாக்க இங்கே சரக்கு நஹி !

      Delete
    2. அய்யோ... ஜேம்ஸ் பான்டிற்கும் விரைவில் எண்டு கார்டா?

      Delete
  4. அர்ஸ்மேக்னா அருமையான கதை...சூப்பர் வரவு...

    ReplyDelete
  5. எனக்கு நிறைய புரியவில்லை.

    ReplyDelete
  6. பிடிஎப் விற்பதற்கென இருந்த அந்த முகநூல் பக்கம் வெகுகாலமாகவே இருந்த ஒன்றுதான் சார்.. 2018 அதன் பின் 2019 மார்ச்சில் ஒருவர் விலையை விசாரித்ததை கவனித்தேன்.. காலையிலேயே நண்பர்களோடு சேர்ந்து சக வாசகர்களை எச்சரிக்கும் பணியை செய்தாயிற்று.. கவலையை விடுத்து நூல் வெளியீடுகளை மெருகேற்றுங்கள்... டெக்ஸ் அட்டை தொகுப்பு நல்ல விஷயம்தான். விலைவாசி விசிறிகளை மாத்திரமே அணுகும்படியாக இருப்பதால் இந்த முயற்சியை குறைவான அளவில் செய்தல் நலம்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. சார் ஈரோட்டில் இரண்டாவது புத்தகம் டெக்ஸ் கதையாக இருந்தால் ஓகே . வெறும் படங்களாக நமக்கு இது சரி வரும் என்று தோன்றவில்லை. This is my own two cents only Sir. நமது பெரும்பான்மை நண்பர்கள் முடிவுக்கு நான் கட்டுபடுகிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. அட்டைப்படத் தொகுப்பைத் தவிர்த்து வேறொரு தேர்வினை செய்வதாயின் அது டெக்ஸ் கதையாய் இராது சார் !

      Delete
    2. நீங்கள் மெபிஸ்டோ யுமா வெளியிட்டால் கூட எனக்கு ஓகே தான் சார். நான் எப்படியும் ஈரோடு ஸ்பெஷல் இரண்டுமே வாங்கத்தான் போகிறேன்.

      Delete
  8. நான். இன்னும் பதிவை படிக்கலை..

    ReplyDelete
  9. 1+2 = 3...தலையோட தரிசனத்திற்க்காக ஆவலுடன் வெயிட்டிங் சார்....

    ReplyDelete
    Replies
    1. பார்ப்போமே யுவா ...பெரும்பான்மையின் எண்ணம் என்னவென்று !!

      Delete
  10. என்னுடைய இன்னும் ஒரு கருத்து நீங்கள் எந்த கதையை வெளியிட்டாலும் அது பிஸ்டலுக்கு பிரியா விடையைவிட முதிர்ந்ததாக இருக்காது. எனவே அமெரிக்கன் த்ரில்லர் பிளீஸ் சார்.

    ReplyDelete
    Replies
    1. "முதிர்ந்த ரசனை" என்ற சொல்லுக்குப் பின்னே நிறைய அர்த்தங்கள் இருப்பதை நினைவூட்டுகிறேன் சார் !

      Delete
    2. புரிந்தது சார். :+)

      Delete
  11. Replies
    1. அப்பாடா நம்ம கட்சிக்கு ஒரு ஆள் கிடைச்சாச்சு

      Delete
  12. மார்ச் மாத ரேட்டிங் :

    1.ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி .. அடுத்த வருடம் 2 comedy slots அதிக படுத்தினால் நன்றாக இருக்கும் .. 8.5/10 ..

    2.color TEX .. வருடம் ஒன்று இம்மாதிரி TEX GENRE வேண்டும் சார் .. 9/10 ..

    3.DAMOCLES .. முதல் PART அளவுக்கு விறுவிறுப்பு இல்லை என்றாலும் நன்றாக தான் இருந்தது
    .. 8.5/10

    4. மாடஸ்டியின் எதிர்காலம் (எனதே ).. அடுத்த வருடத்திற்கு ஒரு SLOT CONFIRM .. 8/10

    5. நில் கவனி வேட்டையாடு .. கதை செம ஸ்பீட் ..சித்திரங்கள் ,வசனங்கள் பெரிய பிளஸ் .. 9.5/10..

    ஈரோடு 4 மில்லியன் ஸ்பெஷல் .. வெறும் TEX படங்களாக இது நமக்கு சரி வரும் என்று தோன்றவில்லை sir .. முடிந்தால் ஏதேனும் கதை போடுங்கள் .. majority நண்பர்கள் சொல்வதை .. நீங்கள் இறுதியில் முடிவு செய்வதை எதுனாலும் எனக்கு ஓகே SIR .. MY OPINION இந்த "விஷப்பரீட்சைக்கு நோ !"

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தம்பி எனக்கும் உனக்கும் almost இந்த முறை ஒத்து வருகிறது. அருமை

      Delete
  13. குடும்ப பணி அழைக்கப்படுகிறது :-) பதிவை நிதானமாக படித்து நள்ளிரவில் பின்னூட்டம் போட வேண்டியதுதான்.

    ReplyDelete
  14. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. ARS MAGNA : ஒரு புதையலின் பாதையில்...
      அட்டகாசம் சார்!

      Delete
    2. ஆமாம் ஆமாம் அட்டகாசம்.

      Delete
    3. சார்... லயனில் இதுவரை வந்த அட்டைப்படங்களின் தொகுப்பு என்றால் கூட ஒரு nostalgic ஆர்வம் இருக்கும்! கதை என்னவென்றே தெரியாத வெறும் அட்டைப்படங்கள் அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா எனத் தெரியவில்லை. சாரி சார்!

      Delete
    4. // கதை என்னவென்றே தெரியாத வெறும் அட்டைப்படங்கள் அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா எனத் தெரியவில்லை. சாரி சார்! //

      சரியாக சொன்னீர்கள் சரவணன்.

      Delete
    5. அட, சாரி எல்லாம் அநாவசியம் சார் ! முன்பதிவுத் தொகைகளையோ ; இதழ்களின் (சரியான) விலைகளையோ நான் அறிவித்திருக்கவில்லை எனும் போதே இதனில் எவ்வித முடிவெடுக்கவில்லை என்பது புரிந்திருக்குமே !

      Delete
  15. Replies
    1. சார்!!

      தல படங்களை அவிழ்த்து விடுங்க!!!


      ஒரு சராசரி காமிக்ஸ் ரசிகன் கூட இது போன்றவற்றை விரும்பவே செய்வான்..

      பத்து வருஷம் கழிச்சு புரட்டி பாத்தா கூட சொகமாத்தான் இருக்கும்!!!

      நெட்ல பாக்கறதும் நம்ம பதிப்பகத்துலேர்ந்து வெளிய வர்றதை கையில் வச்சு தடவி பாக்கறதும் ஒண்ணாகுமா சார்?

      புக் ஒண்ணு விலைய சொல்லுங்க!!

      ரெண்டுக்கும் சேத்து ரெண்டு காப்பி புக் பண்ணிப்புடுவோம்..

      இன்னைக்கே...


      புதுமாதிரி ஐடியா எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு...

      ( எப்பவும் இட்லி தோசைதானா? ஒரு ஸ்பிரிங் ரோல்,பர்கர் சாப்பிடப்படாதா?
      - அலர்ட் ஆறுமுகம்)

      Delete
    2. அர்ஸ் மேக்னா!!!

      அட்றா சக்க!! அட்றா சக்க!!!

      Delete
    3. அர்ஸ் மேக்னா +100

      Delete
    4. நம்மள் கி மெஸ் மேலே கபாப்...ஸ்ப்ரிங் ரோல்லாம் ஒத்துப் போகாது போலிருக்குதே சார் ! ரவா தோசையும், இட்லியும் , பரோட்டாவுமே மெனுவில் தொடர்ந்திட வேண்டி வரும் போலிருக்குதே !!

      Delete
  16. நில் கவனி வேட்டையாடு:

    ஒரு வேட்டையனே வேட்டையாடப்படும் கதையின் மைய முடிச்சு இயல்பாகவே சுவராஸ்யத்தை கிளப்புகிறது....

    பொதுவில் கதையின் களத்தில் நல்லவர் கெட்டவர் இருவருக்கும் இடையிலான மோதலில் நல்லவர் கெலிக்க வேண்டும் என்று நினைப்பதே பொதுப் புத்தி,
    ஆனால் இங்கே அந்த வரையறைகள் ஏதுமில்லை,எனினும் இவ்வேட்டை நிகழ்வில் ஜாரோப்பின் சகோ மற்றும் அந்த குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணமே பொதுவாக எல்லோர்க்கும் எழும்,அதில் வியப்பேதுமில்லை தான்....
    வேட்டையார்களுக்கு இடையே பகடைக்காய்களாக அவர்கள் பயன்படுத்தப்படுவது நம்மிடையே பதட்டத்தையே ஏற்படுத்துகிறது....

    ஜெனரல் ஜாரோப் ஸ்டூவர்ட் ப்ளானாகனை வேட்டையாடுவது வினை எனில்,பியோனா ப்ளானாகன் ஜெரோப்பை வேட்டையாடுவது எதிர்வினை....

    எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜாரோப் வேட்டையில் ஈடுபடுவதும்,அதற்கான வியாக்கியானத்தை தெளிவாக சொல்வதும்,வேட்டையில் வெளிப்படுத்தும் அபார திறனும்,வேட்டையை முழுமையாக அனுபவித்து வேட்டையாடுவதும் அந்த பாத்திரத்தின் மேல் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.....

    அதே நேரத்தில் ப்யானோ பிளாகானின் நோக்கத்தில் பழிவாங்கும் தன்மையே பிரதானமாக உள்ளதாலோ என்னவோ வேட்டை உத்தியிப் சற்று பின்தங்கியே உள்ளார்,ஆனால் ஜாரோப் ஒரு முழுமையான வேட்டையாளன் என்பதாலோ என்னவோ முன்னிலையிலேயே உள்ளார்......

    ஓவியங்களை பொறுத்தவரை முதல்தரம் என்று சொல்வது மிகையாகாது....
    பக்கம் எண்-6 ல் 4 ஆம் பேனலில் வேட்டையாடப்படும் நபர் பொறியில் சிக்கும் போது கையில் இருக்கும் துப்பாக்கி அழகாக அந்தரத்தில் நேர்கோட்டில் நிற்கும் முறை அபாரமாக வரையப்பட்டுள்ளது......
    பக்கம் எண்-44 ல் 7 ஆம் பேனலில் எதிரில் நிற்கும் சகோதரியின் நிழல் ஜாரோப்பின் முகத்தில் படிவது அசத்தல்......
    ஓவியருக்கு கை கொடுத்து பாரட்ட வேண்டும் என்று தோன்றியது....

    ஜரோப் பிரேசில் தீவில் ஆடம்பரமாய் வசிப்பதும்,அங்கிருந்து வெனிசுலா தீவிற்கு இடம் பெயர்ந்து பகட்டாய் மாளிகையை நிர்மாணித்து வசிப்பதும்,பல பணியாளர்களை வைத்துக் கொண்டு வேட்டையில் இறங்குவதையும் பார்க்கும் போது இவருக்கு எங்கிருந்து இம்புட்டு பணம் கிடைக்குது ஏதேனும் தங்கச் சுரங்கம் வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.....

    வசனங்கள் கூடுதல் நேர்த்தி,

    "இயற்கை நியதியின்படி நடக்கும் எதுவுமே பாவகாரியமாகாது"....

    "எந்தவொரு செயலையும் அதுதான் நீ செய்யும் கடைசிச் செயல் என்ற நினைப்போடு முனைப்பாகச் செய்".....

    எமது ரேட்டிங்-10/10.
    ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்,
    இதுபோன்ற அசத்தலான கதைகளை தேடியெடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தவும்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் விமர்சனத்தை இனிதான் வாசிக்க வேண்டும்.....

      Delete
    2. ரவி அண்ணா உங்களுக்கு நான் கொடுத்த விமர்சனப் புயல் என்ற பட்டம் 100 க்கு 100 பொருத்தமே என்று நிரூபித்த மற்றும் ஒரு விமர்சனம்.

      Delete
    3. அருமையான விமர்சனம்..

      Delete
    4. //ரவி அண்ணா உங்களுக்கு நான் கொடுத்த விமர்சனப் புயல் என்ற பட்டம் 100 க்கு 100 பொருத்தமே என்று நிரூபித்த மற்றும் ஒரு விமர்சனம். //
      நல்லது குமார்......

      Delete
    5. அசத்தலான விமர்சனம் அறிவரசு அவர்களே!! நாளுக்கு நாள் உங்கள் எழுத்து வன்மை அதிகரித்துக்கொண்டே போகிறது!

      Delete
    6. அறிவரசு ரவி..
      அட்டகாசமான விமர்சனம்பா..👏👏👏

      Delete
  17. புத்தக திருவிழா ஸ்பெசல் 1 ஓகே சார்.
    புக் 2 கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வெளிவந்த டெக்ஸின் அட்டைப்பட தொகுப்பு நிச்சயம் எதிர்பாக்கல சார் அருமையான புத்தகம். ஆனால் விலை சற்று யோசிக்கவைக்கிறது சார்...

    ReplyDelete
  18. இந்த பதிவின் மகிழ்ச்சியான விசயமே பதிவின் கடைசி பத்திதான்.

    ReplyDelete
  19. அட்டகாசமான வேட்டைக்களம் அருமையான கதை. மிரட்டும் ஓவியங்கள் என பின்னி பெடலெடுத்தது நில் கவனி வேடாடையாடு...! அருமை சார்...100/100

    ReplyDelete
  20. //அக்டொபர் வரைக்கும் பொறுமை காத்திடுங்கள் - "சதியின் மதி" வெளியாகும் வரை ! அதை படித்த பின்னேயும் இந்தக் கோரிக்கை தொடரின் பார்ப்போம் !" என்பதே எனது பதிலாக இருந்திடும் !//

    நிச்சயமா காத்திருப்போம் சார். காத்திருப்பது XIII பொருத்தவரை புதிதல்லவே .... 2132 மீட்டர்...எப்போ சார்..அக்டோபர் வரை எங்க தலைவர பாக்காம இருக்க முடியுமா சார்...?

    ReplyDelete
    Replies
    1. உங்க தலைவர் கம்பத்தில் ஏறிக்கிட்டு இருக்காரில்லையா - மெள்ளமா இறங்க அவகாசம் வேணுமில்லியா ?

      Delete
  21. அட்டைப்பட தொகுப்பை போடுவதாய் இருந்தால் நமது குழுமத்தில் வெளிவந்த அனைத்து புத்தகங்களின் அட்டைப்படங்களை ஒரே தொகுப்பாக போடலாம் சார் .லயன் முத்து மினிலயன் திகில் கிளாசிக் ஜம்போ கிராபிக்நாவல் என முழு தொகுப்பாக....

    ReplyDelete
  22. 1 + 2 = 12 என்று பின்னூட்டமிட்டால் "விஷப்பரீட்சைக்கு நோ !"

    இது போன்ற புத்தகத்தை தரவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் புரிகிறது. ஆனால்
    எனக்கு இதில் விருப்பம் இல்லை. இது போன்ற புத்தக விழா சமயங்களில் படிப்பதற்கு கூடுதல் கதைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை/ஆர்வத்தை இது மட்டுபடுத்துகிறது.

    படிக்க இன்னும் ஓராயிரம் கதைகள் இருக்கும் என பல நூறு தடவை சொன்ன நீங்கள் இது போன்ற ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்வதை ஜீரணிக்க முடியவில்லை.

    சாரி சார். Big NO.

    ReplyDelete
  23. 1 + 2 = 12 "விஷப்பரீட்சைக்கு நோ !"

    ReplyDelete
  24. 1 + 2 = 12 என்று பின்னூட்டமிட்டால் "விஷப்பரீட்சைக்கு நோ !"

    1 + 2 = 12

    ReplyDelete
    Replies
    1. 1 + 2 = 12 என்று பின்னூட்டமிட்டால் "விஷப்பரீட்சைக்கு நோ !"

      1 + 2 = 12
      அதே,அதே.......

      Delete
  25. 1 +2 = 3 சார் இது நல்ல Concept இத drop பண்ணிராதீங் இது வந்தா நா 2 Copies வாங்கிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நம்ம கட்சிக்கு டெபாசிட்டே தேறலியே சார்...!

      Delete
  26. 1+2=12 no sir விலையும் ஒரு காரணம்

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டுக்கு காமெடி இதழ் இல்லாத குறையைப் போக்கும் பொருட்டு காமெடி செய்கிறீர்களா பழனி ? :-))))

      Delete
  27. அதென்னவோ தெரியல கொஞ்ச நாளா
    வின்சென்ட் வில்லியம் வான்ஹாஹ் ன் ஓவியங்கள மட்டும் கொண்டு ஒரு புக் வந்தா நல்லாருக்கும்னு தோணுது

    ReplyDelete
  28. // முதல் பத்தியில் நான் எழுதிய அந்த pdf சமாச்சாரங்கள் இனியும் தொடரின் நிச்சயமாய் அவற்றின் மீது நடவடிக்கை இருக்கும் ! //
    நல்லது சார்.....

    ReplyDelete
  29. டெக்ஸ் 1958 தொகுப்ப முதல் வரிசயா தரலாமே....பழங்கால கதை சுகமல்லவா...தலைப்ப தமிழிலும் தரணும்

    ReplyDelete
  30. அர்ஸ் மேக்னா!!! - வரவேற்கிறேன்.

    ReplyDelete
  31. டெக்ஸ் அட்டைப்படத் தொகுப்புக்கு பதிலா வேறொரு கதையைப் போடுங்கள் சார்.

    அப்படியே முதல் புக் 'கின் தலைப்பையும் பரிசீலனை செய்யுங்களேன்.ஏற்கனவே ஏகப்பட்ட புதையல் தலைப்புகள் கைவசம் இருப்பதால் கொஞ்சம் பழைய நெடி அடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு தலைப்பு வைக்கும் போட்டி வைத்தால் போச்சு சார் !

      Delete
  32. // முதல் பத்தியில் நான் எழுதிய அந்த pdf சமாச்சாரங்கள் இனியும் தொடரின் நிச்சயமாய் அவற்றின் மீது நடவடிக்கை இருக்கும் ! //

    நல்ல விஷயத்தை தள்ளி போட வேண்டாம்.

    ReplyDelete
  33. Replies
    1. அதற்குத்தான் காத்து இருக்கிறேன்

      Delete
  34. // Down the line, ஈரோட்டின் இரண்டாவது ஸ்பெஷல் "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி" என்ற பதத்துக்கு சரியான எடுத்துக்காட்டு என்பேன் ! //
    காத்திருப்பில் நிறைய கதைகள் வரிசை கட்டி நிற்பதால் இந்த முடிவை சற்றே தள்ளி வைக்கலாமே சார்....
    இது என் பணிவான வேண்டுகோள் சார்.....

    ReplyDelete
    Replies
    1. அட..ஜாலியான கருத்துக் கோரல் தானே சார் - உரிமையோடு உங்கள் எண்ணங்களை பதிந்திடலாம் !

      Delete
  35. 1 + 2 = 12

    'விஷப் பரிட்சை' எனும் அளவுக்கு நினைக்க முடியவில்லை! ஆனால் (இப்போதைக்காவது) அவசியமில்லாத பரிட்சை என்றே தோன்றுகிறது!

    சும்மாகாச்சும் ஒரு ஆல்பத்தைப் புரட்டுவதைப் போன்ற அனுபவத்தில் ஆர்வமில்லை! என் கல்யாண ஆல்பத்தையே இதுவரை முழுமையாய் புரட்டிப் பார்த்ததில்லை!

    ReplyDelete
    Replies
    1. "AXA-வின் அட்டைப்படங்கள்" என்றொரு தொகுப்பை இன்னொரு நாள் அறிவிக்க நேரிட்டால் செயலரின் ரியாக்ஷன் எவ்விதம் இருக்குமோ ?

      Delete
    2. சார் முன்பதிவுத் தொகையை நாளை அனுப்பிவிடுகிறேன். எல்லா அட்டைப்படங்களுமே மொழு மொழுவென்றிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் சார்.. சில சொரசொரப்பான நகாசு வேலைகள் கன்னத்தில் கீறலை ஏற்படுத்திவிடுகின்றன என்பதே நான் இப்படிச் சொல்லக் காரணம்!

      Delete
  36. புதையல் கதை அட்டகாசமா இருக்கும் போலிருக்கு.ஈரோடு எக்ஸ்ப்ரஸ் வேகமெடுக்க சரியான வினையூக்கி என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது கதைமட்டும் சரியான எரிபொருளாக அமைந்தால் இன்னும் சுகப்படும்.

      Delete
    2. நிச்சயமாய் தயார் செய்து விடுவோம் சார் !!

      Delete
  37. விஜயன் சார்,

    //
    அட்டைப்படத் தொகுப்பைத் தவிர்த்து வேறொரு தேர்வினை செய்வதாயின் அது டெக்ஸ் கதையாய் இராது சார் !//

    பலமாக கைதட்டி ஆரவாரத்துடன் இதனை வரவேற்கிறேன். ரெகுலர் சந்தாவில் வரும் டெக்ஸ் மட்டும் போதும் ஈரோடு புத்தகத் திருவிழாவில்.

    ReplyDelete
  38. வில்லரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தாலும் அட்டைப்பட முயற்சி இப்போது வேண்டாம் சார் இந்த முயற்சி ஈரோட்டுத் திருவிழாவிற்க்கு (மற்ற ரசிகர்களை)திருப்தி படுத்தாது

    ReplyDelete
    Replies
    1. இது விஷயத்தில் விலைகள் பற்றியோ ; முன்பதிவுத் தொகைகள் பற்றியோ நான் மூச் காட்டவில்லை என்பதைக் கவனித்தீர்களா சத்யா ? அது ஏனென்று யோசித்துப் பாருங்களேன் ?!

      Delete
  39. //சும்மாகாச்சும் ஒரு ஆல்பத்தைப் புரட்டுவதைப் போன்ற அனுபவத்தில் ஆர்வமில்லை! என் கல்யாண ஆல்பத்தையே இதுவரை முழுமையாய் புரட்டிப் பார்த்ததில்லை!// ஏன்ப்பா செயலு ! உம்ம கல்யாண ஆல்பம் மாதிரி அவ்வளவு பயம் ஏற்படுத்தும் தொகுப்பா ஆசிரியர் வெளியிடப் போறார் ???

    ReplyDelete
    Replies
    1. அதானே! அப்ப விஜயின் கல்யாண ஆல்பம் என்ற பாயாசத்தை ஈரோட்டில் போட ஏற்பாடு செய்திட வேண்டியதுதான் :-)

      Delete
    2. //என் கல்யாண ஆல்பத்தையே இதுவரை முழுமையாய் புரட்டிப் பார்த்ததில்லை!//

      வொய் பிளட் ? ஷேம் பிளெட் !

      Delete
    3. //வொய் பிளட் ? ஷேம் பிளெட் !//

      ஆஹா...! இந்த விஷயத்தில் நிறைய பேர் நம்மை போலத்தான் போல...

      Delete
  40. ஆசிரியருக்கு...இப்போ அமானுஷ்யத்துக்கு(நம்ம தல வகையில்)இவ்வளவு சாக்கு போக்கு சொல்லும் நீங்கள்...எடுத்த எடுப்பிலேயே நம்ம தலயை அறிமுகம் செய்தது ஒரு அமானுஷ்ய த்ரில்லரில் தானே..வருடத்திற்கு 1,2 தல கதைகளை வெளியிட்ட போதே ம.மண்டலம்,ம.நி.பச்சை,இருளின் மைந்தர்கள் போன்ற அமானுஷ்ய கதைகளை எந்த தைரியத்தில் வெளியிட்டீர்கள் சொல்லுங்கள்.....இப்போது மாதம் ஒரு டெக்ஸ் வெளியீடும் போது அட்லீஸ்ட் வருடத்திற்கு 2முறையாவது அமானுஷ்யம் சார்ந்த கதைகளிலும் நம்ம தல கலக்குவதை பார்க்க மனது ஏங்குகிறது...
    எனக்கு எல்லாம் 2 கால் எதிரிகளுடன் மோதுவதை காட்டிலும் அமானுஷ்ய கதைகளில் டெக்ஸின் அணுகுமுறை மிகவும் பிடிக்கும்..அதிலும்.இருளின் மைந்தர்கள் கதையில் கார்சனுக்கு இ.மைந்தர்களின் பலம்,பலவீனத்தை புட்டு புட்டு வைக்கும் இடம் மெய் சிலிர்க்க வைக்கும்....
    தலயின் வெறியனான எனக்கு இது போன்ற அமானுஷ்யம் கலந்த கதைகளை படிப்பது மிகவும் அதிகமாக பிடிக்கும்..ப்ளீஸ் வருடத்திற்கு 2 முறையாவது முயற்சி செய்யுங்களேன்.....ப்ளீஸ். .ப்ளீஸ். .ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற பதிவுக்கு எல்லாம் பச்சை சிக்னல் தான் நம்ம ஆசிரியர்...வண்டி நிற்காமலே போய் கொண்டே இருக்கும்😭😭😭😭😭😭

      Delete
    2. நிதானமாய், விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு யோசியுங்களேன் - பதில்கள் தாமாய்க் கிடைக்கும் !

      1985-ல் டெக்ஸ் வில்லரை வெளியிடத் துவங்கிய போது இன்டர்நெட் கிடையாது ; கூகுள் கிடையாது ; இத்தாலிய மொழிபெயர்ப்புக்கு (ரொம்ப நாள்வரைக்கும்) ஆளும் கிடையாது ! அப்படியொரு சூழலில் டெக்ஸை வெளியிட இருந்த ஒரே மார்க்கம் என்னவாக இருந்திருக்க முடியும் - ஆங்கிலத்தில் வெளியான டெக்ஸ் கதைகளையே நாமும் தேர்வு செய்வதைத் தவிர்த்து ? So மரணத்தின் நிறம் பச்சையோ ; எலுமிச்சை மஞ்சளோ - ஆங்கில ஒரிஜினலைக் கொண்டிருந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்தல் சாத்தியப்பட்டது !

      ரைட்டு....மொழிபெயர்க்க ஒரு ஆள் கிடைத்த பின்னே என்ன செய்தோமாம் ? இன்றைக்குப் போல ஒன்றரை நிமிஷத்தில் low resolution pdf file களை டஜன்கணக்கில் மின்னஞ்சல்களில் வரவழைத்து, இன்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து தேர்வு செய்யவா அன்றைக்கு வழிகள் இருந்தன ? இல்லியே....!!! இங்கிருந்து கடுதாசி டைப் செய்து ஏர் -மெயிலில் அனுப்பினால் தோராயமாக 30 நாட்களில் அவர்களை அது எட்டும் ; அவர்கள் அங்கிருந்து அனுப்பும் சொற்ப புத்தகங்கள் sea -mail-ல் தோராயமாய் 3 மாதங்கள் கழித்து நம்மை வந்து சேரும் ! ஆக 4 மாத இடைவெளிக்குப் பின்னே அவர்கள் அனுப்பும் கதைகள் கறுப்போ - ஊதாவோ ; சத்தமின்றி அவற்றையே வெளியிடுவேன் ! அட...இன்னும் ஒரு படி மேலே போய் அன்றைய தேர்வுகளின் பின்னணியை விளக்கிச் சொல்லவா ? அங்கிருந்து வரும் டெக்ஸ் புத்தகங்களின் உட்பக்கத்தில் உள்ள கதை லிஸ்டை மொழிபெயர்த்து வாங்கி - டெரரான தலைப்புகளாய் உள்ள கதைகளை டிக் அடிப்பேன் ! இவை தான் அந்நாட்களது நடைமுறை ! சொல்லுங்களேன் - இன்றைக்கும் இது சுகப்படுமா என்று !

      And எல்லாவற்றுக்கும் மேலாய் - அன்றைக்கு உங்களுக்கும் சரி, எனக்கும் சரி, வயதுகள் என்னவோ ? அன்றைய ரசனைகளோடே இன்றைக்கும் பயணிக்க நீங்கள் நினைப்பதில் தவறில்லை நண்பரே ; ஆனால் சிறு வட்டமே ஆயினும், அதன் பெரும்பான்மையின் சார்பாய் சிந்திக்க வேண்டிய நானுமே அந்த அரை டிராயர் நாட்களின் பணிமுறைகளை தொடர்ந்திட்டால் சிரிப்பாய் சிரித்துப் போய் விடும் பிழைப்பு !!

      மெபிஸ்டோவோடு எனக்கு வாய்க்கால் வரப்புத் தகராறும் கிடையாது ; ரேஞ்சர் டெக்ஸ் எனக்குப் பங்காளியும் கிடையாது ! இன்றைய யதார்த்தங்களுக்கும், இன்றைய நம் ரசனைகளும் நியாயம் செய்ய முனைவது மட்டுமே என் பணி சார் - உங்களுக்கு அதனில் உடன்பாடிருந்தாலும், இல்லாது போனாலும் !

      Delete
    3. அதற்காக இன்றைக்கு நான் தேர்வு செய்யும் எல்லாக் கதைகளும் ஹிட் என்றெல்லாம் நான் பீலா விடப்போவதில்லை ! "சுமாரான கதை" என்பதற்கும் 'காதிலே பூ' என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை மதிக்க மட்டுமே முயற்சித்து வருகிறேன் !

      ஏன் - ஆர்ச்சி சுத்தாத பூவா ? என்ற அடுத்த கேள்விக்கு பதில் சுலபம் ! ஆர்ச்சியே ஒரு காதிலே பூ ஆக்கம் எனும் போது அங்கே யதார்த்தம் அசாத்தியம் ! ஆனால் ஒரு யதார்த்த நாயகருக்கு 'காதிலே பூ ' வேணாமே என்பதே என் பார்வை !

      Delete
    4. சார் டெக்சின் அறிமுக கதையான தலைவாங்கிக் குரங்குக்கு ஈடான கதை கிடையாதே...டெக்ச ரசிக்க தூண்டியதே அவ்விபரீத கற்பனைதானே

      Delete
    5. "தலையில்லா போராளி"யை மறுக்கா படிச்சுக்கோங்க ஸ்டீல் !

      Delete
    6. And தலைவாங்கிக் குரங்கு" அமானுஷ்யக் களமில்லையே ?

      Delete
    7. பக்கா அமானுஸ்ய கதை தானே சார். அந்த வாலில்லா பிசாசு வேடம் தரித்த குரங்கு ஈஈஈஈஈஈ.... என தலை வெட்ட கிளம்பும் போது திகிலாக இருந்தது. மர்மத்தை வெளியே கொணரும் இடம்... செம... தங்களது வசனங்கள் இன்னும் சிறப்பு... உதாரணமாக....,


      """ரென்னி: பேய் பிசாசுகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

      வில்லர்: சாண்டா க்ளாசை நம்பும் அளவுக்கு உண்டு!"""



      """""ரென்னி:அப்படியானால் ஆசாமியை கண்டுபிடிக்க உங்களால் இயலுமா?

      வில்லர்: நிச்சயமாக!

      ரென்னி: முயற்சி செய், கொலையாளி இரத்தத்தாலும் சதையாலும் ஆனவன் தான் என்று நிரூபித்து விட்டால் என் தொப்பியை நான் தின்று விழுங்கத்தயார்!

      வில்லர்:பொறு ரென்னி...தொப்பி ரொம்ப கடினமானது.லேசில் தின்ன முடியாது """""

      Delete
  41. 1+2=12 600+ விலைக்கு ஒரு மிக நீநீநீளளளளளளமான ஆக்ஷன் திரில்லர், அல்லது பராகுடா மாதிரி ஒரு சித்திர விருந்து அளித்தீர்கள் என்றால் பரமானந்தம் சாரே..

    ReplyDelete
  42. டெக்ஸ் அட்டைப்பட தொகுப்பு பற்றிய பதிவை படித்த உடன் தோன்றியது "ஒண்ணுமே புரியலே உலகத்திலே...!" :-)

    ReplyDelete
  43. சார் பல நண்பர்கள அட்டை தொகுப்பு வேண்டாம்னு சொல்ல வைப்பதால அந்த குண்டு ஸ்பைடரயோ..அந்த ஆயிரம் பக்க கௌபாயயோ....அந்த மாயாலோக டெக்சயோ போடலாமே...சார் அறுநூறு விலைக்கான கதை நிச்சயம் வேண்டும்...இரத்தப் படலம் போல ஈர்ப்பான வெளியீடு வேணும்...அம்புட்டுதான்...அறுநூறு பொற்காசுக்கான பொன்னான கதைகள்....சொக்கா அத்தனயும் எமக்கா...சொக்க வைக்கிறியே சொக்கா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இவரு இப்படி எல்லாம் பின்னூட்டம் மட்டும் இடுவார்... ஆனால் ஈரோடு புத்தகத் திருவிழா பக்கம் மட்டும் வர மாட்டார். ஏலே போ..

      Delete
    2. "குண்டு ஸ்பைடர்" என்று நீங்கள் குண்டு போட்டால் - மக்கள் அந்த டெக்ஸ் அட்டைப்படத் தொகுப்பே தேவலாம் என்று மனசு மாறிடக்கூடும் ஸ்டீல் !!

      Delete
    3. // டெக்சோ //

      வேண்டாம்ல. ரெகுலரா சந்தாவில் வரும் டெக்ஸ் போதும்ல மக்கா.

      Delete
    4. ///தம்பி சத்தம்போடாதல....டெக்ஸ் குண்ட சந்திக்க சரியான வாயய்ப்புல//+++++++++++++++++++++ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்!

      Delete
    5. ரெகுலரா வர்ற டெக்ஸ் குண்டே எனக்கு சங்தோஷம் மக்கா. :-)

      Delete
  44. சார் டெக்ஸ்க்கு பதிலாக ஒரு ஐந்து பாக ஒன் ஷாட் கவ்பாய் கதைகளை வெளியீடுகள்

    ReplyDelete
    Replies
    1. அது என்ன கணக்கு சார் - 5 பாகமென்று ?

      Delete
    2. அந்த விலைக்கு அது சரி வரும் என்று கேட்டார் சார். 600+

      Delete
    3. ஒரு வேளை அவர் கதை திரைக்கதை எழுதி வைத்து இருக்கும் புத்தகமாக இருக்கலாம் சார். நன்றாக இருந்தால் அவரின் படைப்பை வெளியிடுங்கள் சார்.

      Delete
    4. சார் ஆயிரம் பக்க கொபாய் கதை அட்டகாசமா உள்ளதுன்னு ஒரு முறை எழுதினீயளே....அதத்தான் தொண்டத்தண்ணி வத்த கேட்டுக்கிட்டே இருக்கார் நம்ம சேக்காளி

      Delete
    5. இன்றைய நிலவரங்களில் ஆயிரம், ரெண்டாயிரம் பக்கத் திட்டமிடல்கள் - எல்லாரையுமே சீக்காளிகள் ஆக்கிடக் கூடும் ஸ்டீல் !

      Delete
  45. ஈரோடு புக் #1.மிக அருமையான தேர்வு. வாழ்த்துக்கள்.👏👏👏👏
    ஈ்ரோடு புக்#2.வெகு காலத்திற்கு முன்பு இதுவரை வந்த நம்ம இதழ்களின் அட்டைபடங்களின் தொகுப்பை சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு தாருங்களேன் என்று கேட்டு இருந்தேன்...ஆனால் நம்ம தலயின் இத்தாலி அட்டை படங்களின் தொகுப்பை தருகிறீர்கள் என்று அறிந்தவுடன் ஆனந்த கடலில் விழுந்தேன்..நீச்சல் அடித்து கரை சேரும் நேரத்தில்...வெறும் அட்டைகளின் தொகுப்பை ரூபாய் 600 கொடுத்து எல்லோரும் வாங்குவார்களா...இதையே நிலவொளியில் ஒரு நரபலி புக் சைஸிக்கு கொடுத்தால் விலையும் குறைய வாய்ப்புண்டு..கைக்கு அடக்கமாக பார்க்கவும் அழகாக இருக்கும் என்பது எண்ணம்...அத்துடன் ஈரோட்டில் டெக்ஸ் ஸ்பெஷல் வண்ணத்தில் வந்து சில ஆண்டுகள் ஆகி விட்டது.
    நிலவொளியில் ஒரு நரபலி புக் சைஸிக்கு ஒரு டெக்ஸ் இதழ் வண்ண குண்டு புக் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.(அதுமே மெபிஸ்டோ,யுமா கதையாக இருந்தால் வாரே...வாவ்..👏👏👏👏👏👏)

    ReplyDelete
  46. அட்டைப்படத்தை ரசிச்சுப் பார்த்துட்டு உள்ளே புரட்டினால் உள்ளே 'கதை' ஆரம்பிக்கணும்.. இன்னொரு அட்டைப்படம் ஆரம்பிக்கக்கூடாது!

    ஆனா இந்த அட்டைப்பட ஆல்பத்தால எடிட்டருக்கு ஒன்னே ஒன்னு மிச்சம் மக்களே! மொழிபெயர்ப்பு - எடிட்டிங் - ப்ரூஃப் ரீடிங் -- எதுவும் தேவையிருக்காது!

    ஆனால இதே அட்டைப்பட ஆல்பம் என்றைக்கேனும் 3D + கண்ணாடி சகிதம் வெளியாகிட வாய்ப்பிருக்குமேயானால் குதியாட்டம் போட்டுக்கொண்டு ஓகே சொல்வேனாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. //மொழிபெயர்ப்பு - எடிட்டிங் - ப்ரூஃப் ரீடிங் -- எதுவும் தேவையிருக்காது!//

      தப்பு !! ஓவியரின் எண்ணங்கள் ; சிலபல இதழ்களின் பின்னணிகள் என்று text பகுதியும் உண்டு இந்த ஆல்பங்களில் !

      Delete
    2. // மொழிபெயர்ப்பு - எடிட்டிங் - ப்ரூஃப் ரீடிங் -- எதுவும் தேவையிருக்காது! //
      விமர்சனம் பதியும் வேலையும் இருக்காது ஈ.வி.......
      ஸ்பாய்லர் அலார்ட் கொடுக்கவும் தேவையில்லை.......

      Delete
  47. 2019 லாயல்டி பாயிண்ட்களுக்கு ஈடாக ஒரு அட்டைப்பட தொகுப்பு புத்தகம் (லயன், முத்து முதலிய நமது இதழ்களில் வெளிவந்த அட்டைப்படங்கள்), கடந்த முறை ஈரோடு வாசகர் சந்திப்பில் கொடுத்தது போல முயற்சி செய்யலாமே சார்...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு அட்டைப்படத்தை பார்க்கும்போதும் அந்த இதழ் (அ) கதை ஞாபகம் வருவது கட்டாயம் ஒரு நாஸ்டால்ஜிக் அனுபவமாக இருக்கும்.

      Delete
    2. அந்நாட்களின் ஒரிஜினல்கள் எல்லாமே மக்கிப் போன நெகட்டிவ் வடிவில் மாத்திரமே உள்ளன சார் ! கிட்டத்தட்ட 900 புக்குகளுள் - ஒரு 625 + டிஜிட்டல் யுகத்துக்கு முன்பானவை ! அவற்றை திரட்டி, ஸ்கேன் செய்து புக்காக்கும் பணி நாக்குத் தொங்க வைக்கும் ரகம் !

      Delete
    3. அட்டை பட தொகுப்பா...எப்போ தந்தார் நம் ஆசிரியர்...

      Delete
  48. / அட்டைப்படத்தை ரசிச்சுப் பார்த்துட்டு உள்ளே புரட்டினால் உள்ளே 'கதை' ஆரம்பிக்கணும்.. இன்னொரு அட்டைப்படம் ஆரம்பிக்கக்கூடாது /
    I like it..

    ReplyDelete
  49. விஜயன் சார், ஈரோடு போன்ற திருவிழாவில் புதிய கதைக்களம் மற்றும் புதிய நாயகர்கள் கதைகளை வெளியீடுகள்.

    ReplyDelete
    Replies
    1. பரிசீலனையில் உள்ள சகல கதைகளுமே புதுசு தான் சார் !

      Delete
    2. நன்றி. இத இத தான் எதிர்பார்க்கிறேன் உங்களிடம்.

      Delete
  50. அர்ஸ் மேக்னா..😍😍😍😍😍😍😍😍😍

    1+2= 12 (என்னுடைய கருத்து)

    வெளியானாலும் சந்தோசமாக வாங்கி ரசிப்பேன்..!

    ReplyDelete
    Replies
    1. வெளியிடுவதை தயங்காது வாங்குவது உங்களின் பெருந்தன்மை சார் ; வாங்குவதை ரசிக்கும் விதமாய் அமைப்பது என் கடமை அல்லவா ?

      Delete
    2. அதனை பெருந்தன்மைன்னு சொல்வதைவிட காமிக்ஸ் காதல்னு சொல்வது பொருத்தமா இருக்கும் சார்.!:-)

      Delete
  51. ஈரோட்டிற்கு அந்த அமெரிக்க க்ரைம் திரில்லர் சுகப்படாது என்றால் கதையையே நாயகனாகக் கொண்ட ஒரு அமானுஷ்ய ஹாரர் ஸ்பெஷல் வெளியிடுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. அல்லது அனைவரையும் திருப்தி செய்யும் வகையில் ஒரு கதம்ப ஸ்பெசல் புத்தகம் 500+ பக்கங்களில்...

      Delete
    2. ஒரு சந்தோஷ வேளையில் ஹாரர் வேண்டாம் சார் ! வேறு கதைகள் கணிசமாய் உள்ளன ! பட்ஜெட்டை நிர்ணயம் செய்து கொண்டு அதற்கு சுகப்படும் சமாச்சாரத்தைத் தேர்வு செய்திடலாம் !

      Delete
    3. ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு மாயாவி + ஒரு லாரன்ஸ்-டேவிட் என்ற கதம்பம் தான் இந்நாட்களில் சாத்தியம் சார் !! காதுகள் தாங்குமா ? என்பதே கேள்வி !!

      Delete
    4. Saravanakumar7 March 2020 at 22:56:00 GMT+5:30
      // ஒரு சந்தோஷ வேளையில் ஹாரர் வேண்டாம் சார் !//

      100% ஏற்றுக் கொள்கிறேன் சார்.

      //ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு மாயாவி + ஒரு லாரன்ஸ்-டேவிட் என்ற கதம்பம் தான் இந்நாட்களில் சாத்தியம் சார் !! காதுகள் தாங்குமா ? என்பதே கேள்வி !! //

      தாங்காது சாமி! ஆளை விடுங்கள்! ஜூ...ட்....

      Delete
    5. சார் என்ன இப்படி கேட்டுட்டீங்க...இதன் உபபதிவுல இந்தக் கேள்விய கேட்டுத்தான் பாருங்களேன்

      Delete
    6. காதுகளை விடுங்கள் சார்....எனக்கெல்லாம் மனசே தாங்கும் சார்......தாராளமாக வெளியிடுங்கள்

      Delete
    7. எனக்கும் தாங்காது எஸ்கேப்....

      Delete
    8. // ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு மாயாவி + ஒரு லாரன்ஸ்-டேவிட் என்ற கதம்பம் தான் இந்நாட்களில் சாத்தியம் சார் !! //

      அடுத்த வருடம் சந்தா-d ல் கொடுங்கள் சார்.

      Delete
    9. //இதன் உபபதிவுல இந்தக் கேள்விய கேட்டுத்தான் பாருங்களேன்//

      எனக்கு சாத்து வாங்கி கொடுக்காமல் தூங்குறதில்லைன்னு தீர்மானமா ஸ்டீல் ?

      Delete
    10. //ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு மாயாவி + ஒரு லாரன்ஸ்-டேவிட் என்ற கதம்பம் தான் இந்நாட்களில் சாத்தியம் சார் !! காதுகள் தாங்குமா ? என்பதே கேள்வி !! //

      தாங்கிக் கொள்ள நாங்க ரெடி சார். நீங்க வெளியிடுங்கள். அதுவும் பழைய பாக்கெட் சைசில் வந்தா நல்லாவே இருக்கும். +1000000

      Delete
  52. ((ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு மாயாவி + ஒரு லாரன்ஸ்-டேவிட் என்ற கதம்பம் தான் இந்நாட்களில் சாத்தியம் சார் !! காதுகள் தாங்குமா ? என்பதே கேள்வி !!))
    என் காது யானை காது அதனால் தாங்கும் ஆசிரியரே

    ReplyDelete
  53. பேசாமல் நமது ஸ்டீல் கேட்ட கொலைப்படை ஸ்பெஷலை ஈரோட்டில் அவரின் கரத்தாலேயே வெளியிடலாமே

    ReplyDelete
  54. தல இல்லையென்றால் பேசாமல் சூப்பர் ஹீரா ஸ்பெஷல் 2 ....இறக்கி விடலாமே...இப்போதே. 3 புக்குக்கு புக்கிங் செய்து விடுங்கள்👏👏👏👏👏👏

    ReplyDelete
  55. அனைவருக்கும் வணக்கம்.
    இம்மாத இதழ்கள் அனைத்தும் அருமை. வேட்டையன் பட்டையை கிளப்பி விட்டார். Democl. ஆக்ஷன் +செண்டிமெண்ட் கலந்த கலவை. புதுமையான tex கதை. ஆர்டினும் அருமை.

    இளவரசி அருமையான கதைக்களம். கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு சிறப்பு.
    ஆனால் அட்டை படத்தில் இளவரசி fast and furious லெட்டியை நினைவு படுத்துகிறார்

    ReplyDelete
  56. சந்தோச தருணத்தைக் கொண்டாட ஒரு maxi டபுள் ஆல்பம் கார்ட்டூன் ஸ்பெஷல் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் சார்....

    ReplyDelete
    Replies
    1. ஞான் ரெடி சார் ; பச்சே வாசிப்போர் ரெடி இல்லியே !

      Delete
  57. எடிட்டர் சார் இந்த வருட சந்தா மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாத இதழ்களும் சேர்த்து ஆன்லயனில் செலுத்தி விட்டேன்.

    ஆவலுடன் நான்.

    ReplyDelete
    Replies
    1. சொன்னதைச் செய்திருக்கிறீர்கள் சரவணன்!! மகிழ்ச்சி!!

      Delete
  58. ஈரோடு ஸ்பெஷல் கு ars magna கதை ok. Tex அட்டை பட collection ஐ வேறொரு சந்தர்ப்பத்தில் வெளியிடலாம் என்பது என் கருத்து

    ReplyDelete
  59. ///டெக்ஸ் அட்டைப்படத் தொகுப்புகள் என்ற திட்டமிடலை....///

    ----2016 ஈரோடு விழாவில் மூத்த நண்பர் திரு சன்ஸ்மைல் பவுண்டேசன் அவர்கள் இது போல லயன்-முத்து இதழ்களின் அட்டை படங்களை தொகுப்பாக போட கோரிக்கையை வைத்த போது நிறைய நண்பர்கள் நகைத்தனர். 4ஆண்டு காலகட்டத்தில் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பாக அவரின் எண்ணம் ஆக்க பூர்வம் காண , எடிட்டர் சார் புள்ளி வைத்து இருக்கிறார். ஆனா இன்னும் அந்த காலம் வரவில்லை என நண்பர்களை போல நானுமே நினைக்கிறேன். (என்றுமே இது நமக்கு செட் ஆவது என்பதுதான் தனிக்கதை...)

    சோ,....1+2=12!

    டெக்ஸ் அட்டை என்றாலும் கூட இது விசப்பரிட்சைதான்!

    ReplyDelete
  60. ஈரோடு ஸ்பெஷல் 1க்கு ars magna புதையல்கள் டபுள் ஓகே சார்!

    ReplyDelete
  61. ஈரோடு ஸ்பெசல் 2க்கு ஒரு கார்டூன் குண்டு ஸ்பெசல் புக்கை முன்மொழிகிறேன்! 2015விழாவில் வெளியான கார்டூன் கதம்ப பாக்ஸ் செட் அத்தனை பெரிய ஹிட் இல்லை! அந்த வரலாற்றை சரிப்படுத்தும் விதமாகவும் இருக்கும்!


    இல்லீனா இருக்கவே இருக்கு...ஹி..ஹி...
    அதே தான் சார், இளம்டெக்ஸ் தொகுப்பு!

    ReplyDelete
    Replies
    1. //ஈரோடு ஸ்பெசல் 2க்கு ஒரு கார்டூன் குண்டு ஸ்பெசல் புக்கை முன்மொழிகிறேன்!//

      நான் வழிமொழிகிறேன்.

      Delete
    2. // ஈரோடு ஸ்பெசல் 2க்கு ஒரு கார்டூன் குண்டு ஸ்பெசல் புக்கை முன்மொழிகிறேன்! //

      +1

      Delete
    3. முன்னுக்கு, பின்னுக்கு, சைடுக்குலாம் மொழிய நானும் இருக்கேன் தான் ; ஆனால் வாங்கிடத் தான் யாரையும் கண்ணில் பார்க்க முடிவதில்லையே !

      Delete
    4. தங்களது பதில் தெரிந்த ஒன்றுதான் சார். தங்களது சூழல் புரிகிறது. ஆனா மனசு கேக்க மாட்டது. கார்டூன் இதழ்கள் தான் இப்பலாம் மறுவாசிப்புல இருக்கு!

      Delete
    5. //ஆனால் வாங்கிடத் தான் யாரையும் கண்ணில் பார்க்க முடிவதில்லையே//

      அய்யகோ...! இது என்ன கார்ட்டூனுக்கு வந்த சோதனை...!

      Delete
  62. விஷப்பரிட்சை தற்போது வேணாமே சார் 😣😣😣

    ReplyDelete
  63. ஈரோட்டில் ஒரு கார்ட்டூன் ஷ்பெசல்

    ஒரு லக்கி லூக்
    ஒரு கிட் ஆர்டின்
    ஒரு புது அறிமுகம்
    ஒரு மறுபதிப்பு

    நாலும் சேர்ந்து ஒரே புக்கா (பேராசைதான்), ஹார்டு பவுண்டுல வெளியான எப்படி இருக்கும்.!?😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ஆனால் பலர் கார்ட்டூன் என்றால் தெறித்து ஓடுவார்கள். எனவே இதற்கு வாய்ப்புகள் குறைவு கண்ணா :-(

      Delete
    2. காத்தா இருக்கும் ; ஏன்னாக்கா கற்பனையிலான இதழ்களுக்கு பேப்பர் வாங்க வேண்டியிராதே !! பேப்பர் இல்லாத இதழ் காத்தா இருக்குமே !!

      Delete
    3. அப்படி இல்லையெனில்..

      நீண்ட துயிலில் இருக்கும்

      சுட்டி லக்கி
      ரின்டின்கேன்
      ஜில் ஜோர்டான்
      ஸ்டீல்பாடி ஷெர்லாக்

      போன்றோரை களமிறக்கிப் பார்க்கலாம்..!(சும்மா ஒரு நப்பாசைக்கு கேட்ட கேள்விதான் சார்.! நடைமுறை சிக்கல்கள் புத்திக்கு தெரிந்தாலும் இந்த மனசு கிடந்து அலையுதே..!) :-)

      Delete
    4. ///ஏன்னாக்கா கற்பனையிலான இதழ்களுக்கு பேப்பர் வாங்க வேண்டியிராதே !! பேப்பர் இல்லாத இதழ் காத்தா இருக்குமே !!///

      பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
      பாயும் மீன்களில் படகினை கண்டான்
      எதிரொலி கேட்டான் வானொலி பபைத்தான்..

      எனவே இன்றைய கற்பனை நாளைய நிஜம்..

      காதல் படத்துல.. நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்னு காத்ததிருக்குற விருச்சிககாந்த் மாதிரி நாங்களும் வெய்ட் பண்றோம் சார்.!

      Delete
  64. இந்த வருட ஜம்போவில் கார்ட்டூன் எதுவுமில்லையா சார்?

    ReplyDelete
  65. 1+2=12.
    dont take risk.
    இதுக்கு பதிலா இரத்தப்படலம்1-18 மறுபதிப்பு செய்தீங்கன்னா வாங்காம miss பண்ணினவங்க கூட வாங்குவாங்க. விற்பனையும் அமோகமா இருக்கும். இல்லையெனில் வித்தியாசமான கதை ஏதாவது வெளியிடுங்கள். கண்டிப்பாக ஆல்பம் வேண்டாம். நல்ல கதைகளே விற்பனையில் சுணக்கம் காண்கின்றன. அட்டைப்படத்தொகுப்பே ஒரு புத்தகம் எனும் போது வாங்கிட எண்ணுவோர்க்கு ஏமாற்றமே மிஞ்சும். ஈரோடு ஸ்பெஷல்க்கு ரிஸ்க் வேண்டாம் என்பதே எனது கருத்து.

    ReplyDelete
  66. Nostalgia is only for our editions and NOT for the editions across the globe sir. It may not create a vibe for many of us, I presume sir. Better to alternate with something else sir.

    ReplyDelete
  67. ஆங்.. ஒரு ஐடியா!!

    டெக்ஸ் அட்டைப்பட ஆல்பத்தை ஒரே ஒரு காப்பி மட்டும் போட்டு EBFக்கு எடுத்துட்டு வருவீங்களாம்.. மீட்டிங் முடியறதுக்குள்ள நாங்கள்லாம் ஒருமுறை புரட்டிப்பார்த்து ரசித்துவிட்டு உங்ககிட்டே திருப்பிக் கொடுத்துடுவோமாம்.. கடேசியா அந்தப் புத்தகத்தை ஏலத்தில் விடுவீங்களாம்.. செனாஅனா ஒரு ப்ளாங்க் செக்கை கொடுத்துட்டு அதை எடுத்துக்குவாராம்.. ஹிஹி!!

    ReplyDelete
  68. ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு மாயாவி + ஒரு லாரன்ஸ்-டேவிட் என்ற கதம்பம் தான் இந்நாட்களில் சாத்தியம் சார் !! காதுகள் தாங்குமா ? என்பதே கேள்வி !!
    இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கே.

    ReplyDelete