Saturday, November 26, 2022

விழாக்களும், வினாக்களும் !

 நண்பர்களே,

வணக்கம். அப்டியே கேப்டன் விஜயகாந்தின் கம்பீரக் குரலை மனசுக்குக் கொண்டு வந்துக்கோங்கோ ! அப்டியே அவரது பாடி லாங்குவேஜையும் மனசிலே ஓட விட்டுக்கோங்கோ ! அதே ஏத்த-இறக்க மாடுலேஷனில் பின்வரவுள்ள நம்பர்கள் கலந்து வரிகளை வாசியுங்கோ - 'ஜிலோ'ன்னு effect கிட்டாது போகாது ! 

'இன்னா மன்னாரு மேட்டரு ?' என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை folks - இதோ - எனது மேஜையினில் கிடக்கும் மார்ட்டின் கதையினில், எஞ்சியுள்ள 30 பக்கங்களை முடித்து விட்டால் - 2022-ன் பணிகளின் முழுமையையும் பூர்த்தி செய்திருப்போம் !! Oh yes, ஒரு 12 மாதத்தின் திட்டமிடல் முழுமை கண்டிடும் நொடி எனக்கு வெகு அண்மையில் காத்துள்ளது ! ஆண்டு முழுக்க புலி வாலைப் பிடித்த கதையாய் ஓட்டமெடுப்பது என்னவோ கடந்த 10+ ஆண்டுகளாய்ப் பழகிப் போனதொரு routine தான் ; ஆனால் ஆண்டுக்கு ஆண்டு நம்ம 'இயமை' ஊஞ்சல் ஆடிக்கினே போகும் நிலையினில், நம் பயண வேகங்களுக்கு ஈடு கொடுப்பதென்பது not getting easy at all ! அதிலும் ஒரு மைல்கல் ஆண்டினில் ஏதேதோ திட்டமிடல்களை ; ஏதேதோ அசட்டுத் துணிச்சல்களில்  களமிறக்கி விட்டான பின்னே, அவற்றிற்கும், உங்களின் நம்பிக்கைகளுக்கும் நியாயம் செய்திட, கடந்த பதினொன்றரை மாதங்களில்  அடிக்க அவசியப்பட்டுள்ள குட்டிக்கரணங்கள் - சொல்லி மாளா ரகம் !  ஒரு புத்தாண்டும், முற்றிலும் புதுசாயொரு ஓட்டமும், அது சார்ந்த பணிகளும், தொட்டு விடும் அண்மையில் காத்திருப்பது தெரிந்தாலுமே, இதோ இந்த நொடியினை ; 2022-ன் எண்ணற்ற பல்டிகளுக்கு டாட்டா சொல்லிடும் தருணத்தை 'ஷப்பாஆஆஆஆ' என்றதொரு பெரும் பெருமூச்சுடன் ரசிக்கும் சபலத்தை தவிர்க்கவே இயலவில்லை !! And அதன் நீட்சியாகவே இதோ வரும் 'ரமணா' பாணியிலான புள்ளி விபரங்கள் ! இப்போ கேப்டன் வாய்ஸ் + பாடி லாங்குவேஜ் + மாடுலேஷன்ஸ் ப்ளீஸ் :

  • நடப்பாண்டிலே வந்திருக்கிற மொத்த பொம்ம பொஸ்தவங்களின் எண்ணிக்கை : 45 !
  • இதிலே கலரிலே வந்திருக்கது  : 30
  • கருப்பு-வெள்ளையிலே வந்தது : 15
  • கொசுறுங்க எண்ணிக்கை : 10
  • இந்த வருஷத்துக்கான மொத்த பக்க எண்ணிக்கையோ : 6950
  • கலரிலே - 4206
  • ஒத்தைக் கலரிலே - 2744
  • ஆக ஒவ்வொரு மாசமும் நீங்க படம் பாத்திருக்கது...ஆங்...ஐயாம் சாரி, நீங்க படிச்சிருக்கது - சராசரியா  580 பக்கங்கள் ! 

இப்போது சொல்லுங்களேன் folks - இது நாம் சன்னமாகவாவது இளித்துக் கொள்ளுமொரு தருணம் தானே ? 

If I'm not mistaken , ஆண்டுக்கு ஆறாயிரம், ஏழாயிரம் என்ற பக்க எண்ணிக்கைகள் நமக்குத் புதியனவே அல்ல தான் ! கடந்த சில ஆண்டுகளாய் இது போலான நம்பர்களுக்கு மத்தியினில் தான் பயணம் செய்து வருவதாய் எனக்கொரு ஞாபகம் ! ஆனால் தம்மாத்துண்டு அளவிலான எங்களின் டீம் இன்னமும் on an average, மாதம்தோறும் 600 பக்கங்களுக்கு அனுசரித்ததொரு output-ஐ அடித்துத் தாக்கி வருவது பிரமிக்கச் செய்யத் தவறவில்லை ! In simple numbers, இது  நாளொன்றுக்கு வெறும் இருபது பக்கங்களாய்த் தோன்றிடலாம் தான் ; but trust me guys - வெயிலோ, புயலோ,மழையோ,வெள்ளமோ, பொங்கலோ, தீபாவளியோ, ரம்ஜானோ, கிருஸ்துமஸோ, எவ்வித சால்ஜாப்புகளுமின்றி மிஷின்களாட்டம் இந்த எண்ணிக்கையினை தொட்டு நிற்பதென்பது ஒரு பெரும் அணிக்கே மூச்சிரைக்கச் செய்யுமொரு சமாச்சாரம் ; நம் போன்ற துக்கடாக்களின் பாட்டைப் பற்றிக் கேட்கவும் வேணுமா ? And இந்த ஆண்டு எனக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் extra special - simply becos இந்த ஆண்டினில் தோராயமாய் நான் பேனா பிடித்திருப்பது மட்டுமே நான்காயிரம் பக்கங்களுக்கு அருகிலானதொரு நம்பருக்கு !! ரெம்போ சீக்கிரமே சீனியர் சிட்டிசன் சலுகைகளில் டிக்கெட் எடுக்கக் காத்துள்ள ஒரு ஆசாமிக்கு இது மோசமே இல்லாத நம்பர் தானுங்களா ? திரும்பிப் பார்க்கும் இந்த நொடியினில் 'ஆத்தாடியோவ்வ்வ்வ் !!' என்று மட்டுமே சொல்ல இயல்கிறது !

முதுகை நானே சொரிந்து கொள்ளும் பணியை கொஞ்சமாய் ஓரம் கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் 2022-ன் highlights எக்கச்சக்கமாய்க் கண்ணில் படுகின்றன தான் ! ஆனால் டிசம்பரின் இதழ்கள் இன்னமும் உங்களை எட்டியிருக்கவில்லை & அவற்றின் reviews நமக்கு அவசியமே எனும் போது இந்த நொடியின் பெருமூச்சு கலந்த பார்வையில் ஆண்டின் முழுமையும் cover ஆகிடாது தான் ! So இந்தாண்டினை review செய்திடும் வேலையினை டிசம்பரின் நடுவாக்கில் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பேன் ! இந்த நொடிக்கொ - இன்னொரு நிம்மதி பெருமூச்சை விட்டுக்கிறேனே ! Moreso இந்தாண்டினில் க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டுக்குப் பதிலாய் இன்னொரு மாடஸ்டி சாகசம் என்ற மாற்றத்தைத் தவிர்த்து பாக்கி அனைத்துமே அறிவிக்கப்பட்டவாறே வந்துள்ளன ! குரங்கை விடவும் மோசமாய்க் கிளை தாவும் நமக்கு இதெல்லாம் சரித்திரச் சாதனையாச்சே ?!

And வேறு topic பக்கமாய் கிளை தாவும் முன்பாய் ஒரு சமாச்சாரத்தினைப் பேசிடுவோமே ? இளவரசி மாடஸ்டியின் 2 கதைகள் இணைந்த தொகுப்பாய் இதுவரைக்கும் நாம் எப்போதும் வெளியிட்டதாய் எனக்கு நினைவில்லை ! (Correct me if I'm wrong please !) So இந்த மாதத்தின் எதிர்பாரா மாடஸ்டி டபுள் டமாக்காவினில் பணியாற்றுவது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது ! And அதிர்ஷ்டவசமாய் 2 கதைகளுமே நீட்டான சாகசங்களாய் அமைந்து போக, எனக்கே 'அட....இது கூட நல்லாத்தான் இருக்கே ?!' என்ற எண்ணம் எழுந்தது ! நமது தீவிர நண்பர்களுள் ஒருவர், 'இளவரசிக்கு MAXI சைசில் ஒரு Collector's எடிஷன் போடலாமே ?' என விடாப்பிடியாய்க் கேட்டு வருவது அந்த நொடியினில் நினைவுக்கு வந்தது ! இம்மாத "சிரித்துச் சாக வேண்டும்" இதழ் வெளியான பிற்பாடு, மாடஸ்டிக்கொரு மாக்ஸி (ட்ரெஸ்ஸில் அல்லங்கோ !!) தரும் ஐடியா பற்றிய உங்களின் அபிப்பிராயங்களை சொல்லிடலாமே folks ? And டாக்டர்களுக்குப் பிரியமான அம்மணிக்குப் பேனா பிடிக்கும் பணியினை நம் மத்தியில் மிகுந்துள்ள டாக்டர்களிடமே பகிர்ந்தும் தந்து விடலாம் ! What say folks ? 

டிசம்பரின் நிச்சய highlight கெட்ட பையன் டெட்வுட் டிக் பக்கமாய் இனி பார்வையினை ஓட்டுவோமா ? ஏற்கனவே சொன்னது போல, கரடு முரடான நாயகனுக்கேற்ப, கரடு முரடான ஸ்கிரிப்ட் தான் ஒரிஜினலில் ! And உங்களின் சம்மதங்களுடன் தமிழிலும் அதே பாணியினையே பின்தொடர்ந்துள்ளேன் - சில புருவங்கள் உயர்ந்திடக்கூடுமென்று தெரிந்திருந்துமே ! And இங்கே இன்னொரு விஷயமும் கூட guys : ஒரு டெக்ஸ் கதையைப் போல ; டைகர் சாகஸத்தைப் போல பெருசாய் கதை ; வில்லன் கோஷ்டி ; பில்டப் ; கிளைமாக்ஸ் என்றெல்லாம் லேது ! மாறாக நிற துவேஷம் தலைவிரித்தாடிய அந்நாட்களில் அமெரிக்காவினில் ஒரு கறுப்பினன் சந்தித்திடும் இடர்கள் ; வன்மேற்கின் யதார்த்தம் மிகுந்த சிரம வாழ்க்கை - என இதுவொரு டயரிக் குறிப்பு மாதிரியானதே ! So "கிணத்தைக் காணோமென்று" வடிவேலு பிராது தந்ததைப் போல, புக்கில் பக்கங்களை புரட்டப் புரட்ட கதையினைத் தேடி என்னை மூ.ச.வுக்கு இழுத்திட வேணாமே - ப்ளீஸ் ? இது நமக்கு ரொம்பவே பரிச்சயமானதொரு களத்தில் அரங்கேறும், பரிச்சயமற்ற படைப்பு ! So இதுவொரு கமர்ஷியல் கதையல்ல என்பதை நினைவில் இருத்திய பின்னே புக்கினுள் நுழைந்திட பரிந்துரைப்பேன் ! இதற்கான அட்டைப்படம் + உட்பக்கக் கோப்புகளை நம்மாட்கள் எனக்கு அனுப்பாமல் சொதப்பி இருப்பதால் நாளை பகலில் அவற்றை இங்கே upload செய்திடுவேன் ! 



காத்துள்ள இறுதி இதழான "மரணத்தின் வாடிவாசல்" பற்றி இனி ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த நொடியில் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் - மார்ட்டினின் இந்த ஆல்பத்தின் பின்னணியிலுள்ள பிரெஞ்சு வரலாற்றை ; நிஜத்தோடு அதனை கதாசிரியர் பிணைத்துள்ள லாவகத்தை புரிந்திட ! கருணையானந்தம் அங்கிள் பேனா பிடித்திருக்க, புரியாத இடங்களையெல்லாம் காலியாக விட்டு எனக்கு அனுப்பியிருந்தார் - 'நீயே பார்த்துக்கோப்பா' என்றபடிக்கு ! 'பக்கங்கள் கொஞ்சம் தானே ? ; பார்த்துக்கலாம் !' என்று நானுமே சாவகாசமாய் இருந்து விட்டு, கடைசி நொடியினில் எடுத்துப் பார்த்தால் - பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து வண்டி வண்டியாய் வரலாற்றுத் தரவுகளைத் தேடி மொக்கை போட வேண்டியிருப்பது புரிகிறது ! வருஷத்தின் 6920 பக்கங்களைக் கடந்து விட்டவனுக்கு, இந்தக் கடைசி 30 பக்கங்கள் குறுக்கைக் கழற்றி வருகின்றன !! தெய்வமே !!

சில நேரங்களில் - variety என்ற பெயரில் நம் ஆழங்களுக்கு மீறிய சமாச்சாரங்களுக்குள் கால்பதிப்பதெல்லாம் தேவை தானா ? என்ற கேள்வி இது போன்ற தருணங்களில் எழாதில்லை ! Moreso - இதோ கடந்த ஒரு வாரமாய் சேலத்திலும், விருதுநகரிலும் பட்டையைக் கிளப்பி வரும் புத்தக விழா விற்பனைகளைப் பார்க்கும் போது, இந்தக் கேள்வி முன்னெப்போதையும் விட  தலைக்குள் உரக்கக் கேட்பது போலுள்ளது ! அனுதினமும் அங்கே ஸ்டாலில் காலியாகிப் போன / ஸ்டாக் குறைவாகிப் போன இதழ்கள் எவை எவையென்ற லிஸ்ட் போட்டு ஆபீசுக்குச் சொல்வார்கள் & அந்தக் குறிப்பிட்ட ரக புக்ஸ் டிராவல்ஸில் பயணிக்கும் ! இந்த வாரம் முழுசும் இரு நகர்களுக்கும் பார்சல் ஆகி வரும் புக்ஸ் லிஸ்ட் என்னவென்று பார்த்தால் - ரொம்ப சிம்பிள் !!!

*மாயாவி

*அப்புறம் மாயாவி 

*மறுக்கா மாயாவி

*அப்புறம் டெக்ஸ்

*மீண்டும் டெக்ஸ்

*இன்னொருக்கவும் டெக்ஸ் 

*ஸாகோர் 

லக்கி லூக் நடு நடுவே பயணமாகிறார் ; கேப்டன் டைகர் ; சுட்டிப் புயல் பென்னி ; சிக் பில் போன்றோர் என்னிக்காச்சும் ஒரு நாள் ; பாக்கி சார்வாள்களெல்லாம் அந்தந்த நகரங்களின் சீதோஷ்ணங்களை ஜம்மென்று அனுபவித்தபடிக்கே ரேக்குகளில் ஓய்வெடுத்து வருகின்றனர் ! Of course கலவையாய் புக்ஸ் வாங்கும் வாசகர்களும் வருகை தருகின்றனர் தான் ; ஆனால் சக்கரங்களைச் சுழலச் செய்வோர் முன்னாள் ஜாம்பவானும், இந்நாள் ஜாம்பவானும் மாத்திரமே ! So நாமிங்கே மாங்கு மாங்கென்று பணியாற்றி 'டக்கிலோ..கபாப்..ஸ்ப்ரிங் ரோல்...'என மெனுவை பந்தாவாய்த் தயாரித்து வைத்தால் - 'பொரட்டா இல்லியா ? இட்லி இல்லியா ?' என்ற கேள்விகள் மாத்திரமே எதிர்கொள்கின்றன ! புத்தக விழா வரும் casual வாசகர்களுக்கான பதார்த்தங்களும், ரெகுலரோ ரெகுலர் தீவிர, வாசகர்களுக்கான பசி தீர்ப்பினிகளும், எல்லா நேரங்களிலும் ஒன்றாகவே இருந்திட இயலாது என்பது புரிகிறது தான் ! ஆனால் 2 அணிகளுக்கும் மத்தியினில் இத்தனை பெரிய ரசனை வேறுபாடு ஓ.கே. தானா ? இயல்பு தானா ? என்பதைச் சொல்லத் தெரியலீங்கோ ! 

And இந்த புத்தக விழாக்களின் இன்னொரு eye opener - சமீபமாய் நாம் சந்தித்து வரும் பள்ளி மாணாக்கர்களின் பிரவாகங்கள் ! ஒவ்வொரு மாவட்டத்திலும் ரெகுலராக பள்ளிகளிலிருந்து பசங்களை விழாக்களுக்கு இட்டார வேண்டிய உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வருகின்றனர் என்பதால் யூனிபார்ம் அணிந்த அடுத்த தலைமுறையினை விழாக்களில் இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது ! And surprise ..surprise ...இப்போதெல்லாம் அவர்கள் நமது ஸ்டாலில் செமத்தியான ஆர்வங்களுடன் ஐக்கியமாகி விடுகின்றனர் ! கார்ட்டூன்கள் ; மாயாவி ; டெக்ஸ் - என அவர்களும் அள்ளிடுவது பொதுவான light reading ; commercial reading புக்ஸ்களே !! Phew ...இதோ - பிரெஞ்சுப் புரட்சியில் எவன் தலையை எவன் கொய்தான் ? என்று ஆராய்ச்சியை அர்த்த ராத்திரியில் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் - இந்த புத்தக விழா சார்ந்த தகவல்களை நம்மாட்கள் காதில் போடுவது, இரு மடங்கு வீரியத்தோடு ஒலிப்பது போலுள்ளது ! சொல்லுங்களேன் ப்ளீஸ் : சினிமாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சீக்கிரமே நமக்கும் அவசியமாகிடுமா ?

*** "பொன்னியின் செல்வன்" போலான படங்களை ஜனம் தியேட்டர்களில் விரும்பிப் பார்ப்பதைப் போல - கமர்ஷியல்  கதைகளை / புக்ஸ்களை மட்டும் ரெகுலர் தடத்தில் இறக்கி விடணுமோ ?

*** பாக்கி ரசனைகளுக்கான படங்களை Netflix : Amazon Prime போலான OTT தளங்களில் வெளியிடுவது போல, நாமும் பிரத்தியேக முன்பதிவு தடத்திற்கு மடைமாற்றம் செய்து கொண்டு சென்றாகனுமா ?

எல்லாமே, எல்லோருக்கும் ! என்ற காலங்களெல்லாம் மலையேறி விடுமோ ?சொல்லுங்களேன் ப்ளீஸ் folks !! Your thoughts ?

And அந்த caption போட்டிக்கான வெற்றியாளர்களை (TOP 3) அறிவிக்கும் பொறுப்பை நம் தளத்தின் தன்னிகரில்லா அசல்நாட்டு ஜட்ஜையாக்களிடம் ஒப்படைக்கிறேன் ! பாரிஸ் ரட்ஜா சார் & அமெரிக்க ஷெரீப் - please help ! அந்த caption போட்டிக்கான வெற்றியாளர்களை (TOP 3) அறிவிக்கும் பொறுப்பை நம் தளத்தின் தன்னிகரில்லா அசல்நாட்டு ஜட்ஜையாக்களிடம் ஒப்படைக்கிறேன் ! பாரிஸ் ரட்ஜா சார் & அமெரிக்க ஷெரீப் - please help ! இங்கே மார்ட்டினைக் கரை சேர்க்காவிடின் டிசம்பர் கூவிடும் இக்கட்டில் உள்ளேன் ! 

As usual - சந்தா சார்ந்த நினைவூட்டலுமே guys ! கூப்பிடு தொலைவில் ஜனவரி இருப்பதால் நமது சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட விரைந்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...மார்ட்டினோடு மல்யுத்தத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் ! See you around ! Have a fun Sunday !















Marvel ஸ்டுடியோவிலிருந்து பஸ்ஸில் கிளம்பியாச்சாம் - அடுத்த AVENGERS படத்துக்கு நாயகர்களை புக்கிங் பண்ண !








As usual சந்தா சார்ந்த நினைவூட்டலுமே guys ! கூப்பிடு தொலைவில் ஜனவரி இருப்பதால் நமது சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட விரைந்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...மார்ட்டினோடு மல்யுத்தத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் ! See you around ! Have a fun Sunday !

Tuesday, November 22, 2022

ஊவா ? ...ஊஹூமா ?

 நண்பர்களே,

வணக்கம். உங்களின் எண்ணங்களை நீங்கள் அவசரமாய்த் தெரிவிக்க அவசியமாகிடும் குட்டிப் பதிவு இது ! 

டெட்வுட் டிக் ! வாயைத் திறந்தாலே கூவம் மணக்கும் இந்த நாயகனை நினைவிருக்கலாம் ; போன வருஷம் "நரகத்திற்கு நடுவழியே" இதழ் மூலமாய் அறிமுகம் கண்டிருந்தார் ! And இதோ - டிசம்பரில் மனுஷனின் அடுத்த ஆல்பம் காத்திருக்க, அதன் மொழிபெயர்ப்பினில் மாங்கு மாங்கென்று பணியாற்றி வருகிறேன் ! முதல் ஆல்பத்திலேயே வசனங்கள் செம கரடு முரடாய் இருந்தது நினைவிருக்கலாம் & நானுமே அவற்றை பெருசாய் cushion செய்திட முயன்றிருக்கவில்லை என்பதாய் ஞாபகம் ! பரவலாய் இதற்கு வரவேற்பு இருந்ததாகவுமே எனது ஞாபகம் சொல்லுகிறது ! ஆனால் ஒண்ணேகால் ஆண்டுகளுக்குப் பின்பாய், இந்தக் கெட்ட பையனோடு மறுக்கா புழங்க ஆரம்பிக்கும் போது தான், முதல் ஆல்பத்துக்குக் கொஞ்சமும் குறையில்லாத வசன நடையில் ஆல்பம் # 2 அனல் பறக்கப் பயணிப்பது புரிகிறது ! 

பாதியை நெருங்கி விட்டேன் எனும் போது லைட்டாக ஒரு நெருடல் உள்ளுக்குள் : ரொம்பவே லயித்து, ஒரிஜினலின் நடையோடு பயணித்து வரும் எனக்கு இந்த தெறி டயலாக்ஸ் ரொம்பவே இயல்பாய்த் தென்படுகின்றன ! ஆனால் இங்கிலீஷிலான மொழியாக்கங்களின்றி, நேரடியாய் தமிழில் மாத்திரமே வாசிக்கவுள்ள உங்களுக்கு இது எவ்விதம் தோன்றிடுமோ ? என்ற கேள்வி உள்ளுக்குள் ! So கீழ்க்கண்ட பதில்களுள் உங்களுக்குத் பொருந்துவதை அவசரமாய் டிக் அடியுங்களேன் ப்ளீஸ் :

Option A : ஒரிஜினலில் உள்ள அதே வார்த்தைப் பிரயோகங்கள் தமிழிலும் தொடரட்டும் ; 18+ வயதினருக்கான வாசிப்பு material எனும் போது, இங்கே குஷன் போட்ட கையுறைகளுடன் எங்களை அணுக வேண்டியதில்லை !! உள்ளது உள்ளபடிக்கே வர்ட்டும் மாமு !

Option B : ஒரிஜினல் பாணி என்பதற்கோசாரம் எல்லாவற்றையும்  அப்படியே உல்டா அடிப்பது நமக்கு சுகப்படாது நைனா ! கடமை...கண்ணியம்...கட்டுப்பாடு....இல்லாங்காட்டி மண்டையோட ஒரே போடு ! சும்மா காரம் குறைச்சலா வந்தா தப்பில்லே !

Option C : உள்ளபடிக்கே வரட்டும் ! ஆனா நாங்க புக் வந்ததுக்கு அப்பாலே கும்மியடிச்சு குண்டுக்கட்டா மூ.ச.க்கு தூக்கிக்கினு,  போவோமே ..போவோமே !! ஐ ..ஜாலி...ஜாலி !!

Option D :  இதை நான் வாங்கவோ, வாங்கினா படிக்கவோ செய்யப் போறதில்லே ! அதனாலே நீ போர்த்திட்டு படுத்துகினாலும் சரி, படுத்துக்கினு போர்த்திக்கிட்டாலும் சரி நேக்கு நோ டென்க்ஷன் ! சிங்க்க்க்க் இன் த ரயின்ன்ன் !

காத்துள்ள இரண்டாம் பாதிக்குள் பயணிக்கும் முன்பாய் இந்தத் தெளிவு எனக்குக் கிட்டினால் மகிழ்வேன் guys ! இந்த நொடியில் செம raw & செம கரடு முரடாகவே வரிகளை அமைத்துள்ளேன் ! And please note : இம்மி கூட எக்ஸ்டரா நம்பர்ஸ் இங்கே நஹி ; எல்லாமே ஒரிஜினலின் தடத்துடனான பயணம் தான் ! So சொல்லுங்களேன் ப்ளீஸ் - இயன்றமட்டுக்கு துரிதமாய் ப்ளீஸ் !

Bye all ! See you around !!

Saturday, November 19, 2022

தொடும் தூரத்தில் டிசம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். நடு நடுவே சில நாட்கள் புலரும் - காது வழியாய்....மூக்கு வழியாய் ...நவ துவாரங்களின் வழியாயும் வஜனங்கள் பிரவாகமெடுக்கும் பிரமைகளோடு ! அது போலான நாட்களே இந்த வாரத்தின் ஒவ்வொரு தினமும் ! தற்செயலாய்க் கொஞ்சம் ; தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றதன் காரணம் கொஞ்சம் - டிசம்பருக்கு 4 புக்ஸ் & நாலுமே black & white என்று அமைந்து போனது ! 

ஒரிஜினல் திட்டமிடலின்படி பார்த்தால், இம்மாதம் வரவுள்ள டெக்சின் "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" புக் நடப்பின் ஏப்ரலிலோ, மே மாதத்திலோ வந்திருக்க வேண்டியது ! ஆனால் இதற்கென பேனா பிடிக்கத் துவங்கியதொரு சகோதரியின் தாயார் கொரோனாவில் ரொம்பவே அல்லாடும்படியாகிப் போக, அவர் பத்தோ , இருபதோ பக்கங்களோடே கழன்று கொண்டார் ! இதுவோ வழக்கத்தையும் விடப் பெரிய சாகஸம் எனும் போது, அன்றைக்கு திடு திடுப்பென இதனுள் குதிக்க எனக்குத் தோதுப்படவில்லை ! And so 'அகஸ்டிலே போடலாம் ; அக்டொபரிலே போடலாம்' என்று இந்த ஆல்பத்தைச் சுற்றில் விட, இனி வருஷத்தில் மாசங்களே பாக்கி இல்லை என்றான பின்னே தான் இதனுள் புகுந்திட இயன்றுள்ளது ! இது மட்டும் தான் என்றில்லை ; டெட்வுட் டிக்குமே 2 மாதங்களுக்கு முன்னே ஆஜராகியிருக்க வேண்டிய மனுஷன் ; எனது வேலைப்பளு காரணமாய் 'ஆ..தள்ளு...தள்ளு..தள்ளு..' என்று டிசம்பர் வரைக்கும் தள்ளப்பட்டு விட்டார் ! 

So பாருங்களேன் - டிசம்பரில் காத்துள்ள 4 ரெகுலர் சந்தா இதழ்கள் அவசியமாக்கியுள்ள பக்க எண்ணிக்கையினை : 

TEX - 248 பக்கங்கள்

டெட்வுட் டிக் : 144  பக்கங்கள் 

மாடஸ்டி ஸ்பெஷல் - 120 பக்கங்கள் 

மர்ம மனிதன் மார்ட்டின் - 80 பக்கங்கள் 

கிட்டத்தட்ட 600 பக்கங்களைத் தொட்டு நிற்கிறது நம்பர் & இதனில் முதல் 2 இதழ்களுக்கும் முழுசாய்ப் பேனா பிடித்து விட்டு, அப்பாலிக்கா மீத 2 இதழ்களுக்கும் வஜனங்களை மாற்றியமைப்பதெனில், காது வழியாய் டயலாக்ஸ் பிரவாகம் எடுப்பதில் ஏது ஆச்சர்யம் ? Phewwwww ; has been one incredibly tough week & இன்னும் கிணற்றை முழுசுமாய்த் தாண்டிய பாடில்லை தான் ! காத்திருக்கும் அடுத்த 7 நாட்களுமே இதே மும்முரத்தில் பயணித்தால் மாத்திரமே, டிசம்பரிலாவது டிசம்பர் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்திட இயலும் ! புனித மனிடோ !!

காத்திருக்கும் டெக்ஸ் சாகஸம் - டீமின் நால்வருமே பங்கேற்குமொரு அதிரடி ! இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் ஒரு அணியாகவும், இள ரத்தங்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு, க்ளைமாக்சில் கரம் கோர்க்கிறார்கள் ! And இதன் கதாசிரியர் திரு மௌரோ போசெல்லி எனும் போதே, இங்கே புதிதாய் என்ன எதிர்பார்க்கலாம் ? என்ற கேள்வி உள்ளுக்குள் துளிர் விட்டது ! True to form - மனுஷன் பின்னியெடுத்துள்ளார் ரொம்பவே வித்தியாசமானதொரு பாணியில் !  வழக்கமானதொரு கதைக்கருவே தான் ; ஆனால் அதற்கென தந்துள்ள treatment ; கதை அரங்கேறும் backdrop ; கதையினை நகர்த்தியுள்ள விதம் ; முற்றிலும் புது ரகக் கதை மாந்தர்கள் - என ஜோஸ் பட்லர் ரேஞ்சுக்கு போசெல்லி சிக்ஸர்களாய் விளாசியுள்ளார் ! ரொம்பவே உள்ளே புகுந்து இந்தக் கதைக்கொரு preview தராது இருப்பதே இப்போதைக்கு நல்லதென்று  படுகிறது - வாசிப்பினில் அந்த த்ரில் உங்களுக்கும் கிட்டிடும் பொருட்டு ! நம்புங்கள் guys - ரொம்ப காலம் நினைவில் நிற்கப் போகும் 'தல' சாகசங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திடப் போகிறது ! And ரொம்பவே டைட்டாக நகரும் கதை என்பதால், வசனங்களில் வெள்ளிமுடியாரைக் கலாய்க்கும் பாணி இங்கு செட் ஆகாது என்பது ஆரம்பத்திலேயே புரிந்தது ! So சும்மாங்காட்டியும் கார்சனின் காலை வாருவது போலான டயலாகுகளுக்குப் பதிலாய், கதையோட்டத்தோடே மெல்லிய நகைச்சுவை இழையோடிச் செல்லச் செய்ய முயன்றுள்ளேன் ! இது சுகப்படும் பட்சத்தில், முன்செல்லும் நாட்களில் இதனையே நமது template ஆக்கிக்கொள்ளலாம் ! இதோ இந்த extra நீள ஆல்பத்தின் அட்டைப்பட preview & உட்பக்க முதற்பார்வை :

ஒரிஜினல் அட்டைப்படம், பின்னணி வர்ணச் சேர்க்கை மட்டுமே நமது கைவண்ணம் ! கதையினை முழுசுமாய்ப் படித்தான் பின்னே அட்டைப்படத்தை ஒருவாட்டி சாவகாசமாய்ப் பாருங்களேன் - 240 பக்கக் கதையின் முழுமையையுமே ராப்பரில், சித்திரங்களில் சொல்லியிருப்பது புரியும் ! போனெல்லி எனும் ஜாம்பவான்களின் விண்ணுயரத்திலான standard-களுக்கே இது ஒரு மிடறு கூடுதல் உசரம் என்பேன் ; இந்தாண்டின் 8 மாதங்களுக்கு முன்னேயே அச்சாகி விட்ட அட்டைப்படத்தை இதுவரைக்கும் ஒரு நூறு தடவைகளாவது ரசித்திருப்பேன் ! And இதோ - உட்பக்க டிரெய்லர்கள் : 


சற்றே மாறுபட்ட ஓவிய பாணி ; and கதையின் பெரும்பகுதியை black ஆக்கிரமிக்கவும் செய்கிறது தான் ! ஆனால் கதையின் இருண்ட மூடுக்கு இந்தச் சித்திர பாணியும், கலரிங்கும் செமத்தியாய் வலு சேர்க்கின்றது ! ரொம்பவே ஆவலாய்க் காத்திருப்போம் - ஆண்டின் இறுதி டெக்ஸ் சாகசத்துக்கு நீங்கள் போடவுள்ள மார்க்குகள் என்னவென்பதை அறிந்திட !

இம்மாதத்தின் அடுத்த highlight சந்தேகமின்றி நமது இளவரசியே !! ஒன்றுக்கு, இரண்டாய் சாகசங்கள் & இரண்டுமே வலுவான எதிராளிகளுடன் எனும் போது ஆட்டக்களம் தானாய் சூடேறி விடுகிறது ! நடு நடுவே "எதிர்காலம் எனதே' போன்ற சுமாரான கதைகளை மருத்துவர்களும், தொழிலதிபர்களும் கொண்டாடியிருந்தாலும், பரவலாய் அத்தகைய கதைகள் ஸ்கோர் செய்த மதிப்பெண்களைக் கொண்டு, அண்ணா யூனிவெர்சிட்டியில் ரெண்டாப்பு சீட் கூட வாங்க வழியிருந்திருக்காது ! ஆனால் இம்முறை காத்துள்ள 2 அதிரடிகளுமே, டாக்டர்களை மாத்திரமன்றி நம் போன்ற சாமான்யர்களையுமே குத்தாட்டம் போடச் செய்யும் என்று ஆரூடம் சொல்லுவேன் ! And இரண்டுமே ஓவியர் ரோமெராவின் சித்திரங்கள் என்பதால் - புக் நெடுக இளவரசி ஜொலிக்கிறார் ! கணிசமான கர்சீப்களைக் கைவசம் வைத்துக் கொண்டு, சமயம் பார்த்து கடைவாய்களைத் துடைத்துக் கொண்டே வாசிக்க முனைந்தால், வீட்டம்மாக்களின் விநோதப் பார்வைகளையும், பூரிக்கட்டைப் புலன்விசாரணைகளையும் தவிர்க்க இயலும் ! முன்கூட்டியே சொல்லிட்டேனுங்கோ ; அப்பாலிக்கா வீங்கிய கபாலங்களோடு என்மீது பழி போடாதீங்கோ ! இதோ - இந்தப் பருவநிலைக்குக் கொஞ்சமும் பொருந்தாததொரு உடுப்பில் நம்ம இளவரசியின் அட்டைப்படம் : 

ஒரிஜினல் சித்திரங்கள் ; வர்ணங்களில் வரைந்திருப்பவர் நமது சென்னை ஓவியர் & மெருகூட்டியிருப்பவர் கோகிலா ! And இதோ - உட்பக்க preview :

பேனா பிடித்திருப்பது நமது டீமுக்கு ஒரு சமீப வரவானதொரு சகோதரியே ! இன்னமும் அவராகவே முழுமையையும் கையாளும் வேளை புலர்ந்திருக்கவில்லை என்றாலும், வேகமாய் முன்னேறி வருகிறார் ! Of course - நிறைய திருத்தி ; மாற்றி எழுதியுள்ளேன் தான் & இரு கதைகளிலுமே நான் நோண்டியுள்ள இடங்கள் உங்களுக்குப் புலப்படாது போகாது தான்  ! ஆனால் தன் தோள்களிலேயே பணிகளை பக்குவமாய்ச் சுமக்க அவர் பழகிடும் நாள் not very far என்பேன் ! அடுத்த பதிவுக்கென டெட்வுட் டிக் & மார்ட்டினை வைத்துக் கொள்ளலாம் என்பதால், புத்தக விழா நியூஸ் பற்றி !

Nov 17 to 27 : விருதுநகரில் நமது ஸ்டால் # 27 

Nov.20 to 30 : சேலத்தில் நமது ஸ்டால் # 120 

சேலம் விழா நாளை துவங்கிடவிருக்க, அங்கிருந்து போட்டோக்களை அனுப்பியுள்ள நண்பர்களின் புண்ணியத்தில் அட்டகாசமான விழா ஏற்பாடுகளை தரிசிக்க முடிந்துள்ளது ! மிரட்டலான தோரண வாயில்களையும், நகாசு வேலைகளையும், சேலம் ஜனம் தம் வருகைகளோடு சிறப்பித்திட்டால் - இந்த விழா ஒரு அழகான அனுபவமாகி விடுமென்பது உறுதி ! PLEASE DROP IN ALL !!

And விருதுநகரிலுமே விறு விறு சேல்ஸ் ; கணிசமான பள்ளி மாணவர்கள் இங்கேயும் படையெடுக்க இன்றைக்கு விற்றுள்ளவை டெக்ஸும் ; கார்ட்டூன்களும் தான் ! அது என்ன மாயமோ தெரியலை ; ஸ்டாலில் இளம் தலைமுறை படையெடுத்து நிற்பதை பார்க்கும் போதெல்லாம் இருக்கும் சொற்ப கேசம் நட்டுக்கொண்டு விடுகின்றது ! 

மாடஸ்டியின் இரண்டாம் ஆல்பத்தோடு பழகிப் பார்க்கும் படலம் காத்திருப்பதாலும், டெட்வுட் டிக் இன்னொரு திசையிலிருந்து மிரட்டிக் கொண்டிருப்பதாலும், இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys ! கிளம்பும் முன்பாய் some updates :

1.லேட்டஸ்ட் caption போட்டியில் ஆளாளுக்கு பின்னிப் பெடல் எடுத்து வருவதை போன பதிவில் பார்க்க முடிந்தது ! திங்களன்று அதன் TOP 3 யாரென்பதை அறிவிக்கிறேன் guys !

2.சந்தாக்கள் செம விறு விறு ! ஜனவரியில் வரவுள்ள வேதாளர் ஸ்பெஷல்-2 (SUPREME '60ஸ் இதழ் # 1) அட்டைப்படம் அடுத்த வாரயிறுதியில் அச்சுக்குச் செல்கிறது ! So அதனில் இணைந்து கொள்ளவிருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை தெரிந்தால் தான் பிரிண்ட்ரன் நிர்ணயிக்க இயலும் ! So இன்னமும் சந்தாவினில் இணைந்திருக்கா நண்பர்கள் - இப்போதே அதற்கென நேரம் ஒத்துக்கிடலாமே ப்ளீஸ் ? Same goes for the ரெகுலர் சந்தாஸ் also !

3.அயல்நாட்டுச் சந்தாக்கள் குறித்து சின்னதொரு தகவலுமே : எவ்வளவு தான் கவனமாய்த் திட்டமிட்டாலும், மாதா மாதம் போஸ்ட்டாபீஸில் ஏர்மெயில் கட்டணங்கள் சார்ந்த பஞ்சாயத்துக்கள் ஓய்ந்த பாடில்லை ! And ஏற்கனவே ஏர்மெயில் கட்டணங்களும் எகிறி விட்டிருப்பதால், ஆண்டின் கடைசி மாதங்களில் புக்ஸ் அனுப்ப பணம் போதாமல் போய்விடவும் செய்கிறது ! இது முழுக்கவே நம் கட்டுப்பாட்டில் இம்மியும் இல்லாததொரு சமாச்சாரம் என்பதால் அயல்நாட்டுச் சந்தாக்களில் உள்ள நண்பர்களின் புரிதல் இங்கு அவசியமாகிடுகிறது ! நீங்கள் கட்டும் பணம் ஆண்டின் இறுதியில் மீதம் இருக்கும் போதெல்லாம் அவற்றை மறுஆண்டுக்கு முன்னெடுத்துச் செல்வதையே வழக்கமாக்கி வந்துள்ளோம் ! அதே போல ஆண்டின் இறுதியினில் பணம் பற்றாது போகும் பட்சங்களில், you just might need to make another payment ! இது குறித்த தர்க்கங்களில் நம்மாட்கள் குட்டுப்பட்டு வருவதை பார்க்க நேரிட்டதால் இந்த விளக்கம் ! So please note : அயல்நாட்டுச் சந்தாத் தொகைகள் குத்துமதிப்பான உத்தேசங்கள் மாத்திரமே !

Before I sign out, ஜனவரியில் சில பல செமத்தியான surprise சேதிகள் காத்துள்ளன என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஜூட் விடுகிறேன் !! Bye all....see you around ! Have a cool Sunday !



Wednesday, November 16, 2022

கேரவன் கிளம்பிடுத்து !

 நண்பர்களே,

வணக்கம். மழைக்காலம் வந்தாலே பெண்டுகள் சித்தே கூடுதலாய்க் கழறுவது இயல்பு தானோ ? ஆபீசில் பாதிப் பேர் இஷ்டைலாக கண்ணாடி மாட்டிக் கொண்டு வர ; 'ஆத்தாடி....இது மெட்றாஸ் ஐ ஆச்சே ?!!' என்று மிரண்டடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் பார்த்தால், எனக்குக் கண்ணில் என்னவோ 'கிச் கிச்' போலொரு உணர்வு ! 'ரைட்டு....அண்ணாச்சி நமக்கு ஏற்றுமதி பண்ணிட்டன் !' என்ற பயத்தோடே மருத்துவமனைக்குப் போனேன் ! நம்ம கண்ணு இருக்கும் சைசுக்கு தூசு விழுந்தாலே டெரரா இருக்குமெனும் போது, ஊரெல்லாம் ஜனம் கண்ணைக்கசக்கித் திரியும் இந்த மெட்றாஸ் ஐ சீசனில் கேட்கவும் வேணுமா ? லேசாய் கண்ணை அகற்றிப் பார்த்த கையோடு....'யெஸ்..யெஸ்...Conjuctivitis தான் ; 5 நாளைக்கி சொட்டு மருந்து போடணும் ; ஐஸ் ஒத்தடம் தரணும் ; கண்ணைக் கசக்கப்படாது ; அப்பாலிக்கா வூட்டிலே உள்ளவுங்களுக்குத் தானம் பண்ணாம இருக்கணும்னா, நீங்க   திண்ணையிலே குடியேறிடுறது மதி !" என்று சொல்லி 150 ரூபாய் பீஸ் வாங்கிவிட்டு துரத்தி விட்டார் டாக்டர் ! "கண்ணு அப்டி ஒண்ணும் பெருசா உறுத்தலிங்களே.....சிவப்பாகலீங்களே டாக்டர் ...?" என்று கேட்டதுக்கு - கிரகணத்துக்கு தேதி சொல்லுவது போல "நாளைக்கி ஆகிடும்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தார் ! கர்ம சிரத்தையாய் ஐஸ்கட்டிகளைக் கொண்டு கண்களைக் குளிப்பாட்டிக் கொண்டே ரூமுக்குள் முடங்கியதில் 2 நாட்கள் பணியாற்ற வாய்ப்பு கோவிந்தா ஆனது தான் மிச்சம் ; கண் சிவக்கக் காணோம் ! 'ரைட்டு....இது மெட்றாஸ் ஐயும் இல்லே ; மானாமதுரை ஐயுமில்லே ' என்று தீர்மானித்து விட்டு இன்று பகலில் ஆபீசுக்குத் திரும்பினால், ஆட்பற்றாக்குறையில் பரபரப்பாய் பல்டியடித்துக் கொண்டிருந்தனர் நம்மாட்கள் ! 

விஷயம் இது தான் : 

புத்தக விழா circuit மீண்டும் துவக்கம் காண்கிறது - விருதுநகர் ; தூத்துக்குடி ; சேலம் என்ற நகர்களில் ! 

வெறும் 25 கி.மீ.தொலைவில் உள்ள விருதுநகரில் நிகழவிருக்கும் முதல் புத்தக விழா இது !  BAPASI + மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டினில் அரங்கேறிடவுள்ள விழா எனும் போது, நிச்சயம் அட்டகாசமாக இருக்குமென்ற நம்பிக்கை நிரம்ப இருந்தது ! நம்பிக்கையோடு விண்ணப்பித்திருந்தோம் & பபாசி நிர்வாகிகளின் கனிவின் காரணமாய், நமக்கு விருதுநகர் விழாவினில் பங்கேற்க ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது ! So இன்றைக்கு மாலை அள்ளியடித்துக் கொண்டு புக்ஸோடு அண்ணாச்சி கிளம்பிச் சென்றாச்சு & ஸ்டால் # 27-ல் நமது இதழ்கள் தயாராய்க் காத்துள்ளன !  தினமும் பட்டிமன்றம், பிரபலங்களின் சொற்பொழிவுகள் என நிகழ்ச்சி நிரலும் பட்டையைக் கிளப்பிடுவவதால், நிச்சயமாய் எங்கள் மாவட்ட மக்கள் இந்த first ever புத்தக விழாவினை சூப்பர் வெற்றி காணச் செய்து விடுவார்களென்ற நம்பிக்கை உள்ளது ! Fingers crossed !! 

சேலத்திலும் இந்த ஞாயிறு முதலாய்த் துவங்கும் விழாவினில் நமக்கொரு சிங்கிள் ஸ்டால் என்பதால் அண்ணாச்சி சேலம் going & நமது front office திருமதி.ஜோதி விருதுநகர் going ! அதற்குள்ளாக ஆபீசில் உள்ள பாக்கிப் பேர் கண்வலிகளும், காய்ச்சல்களும் தீர்ந்து பணிக்குத் திரும்பிடாவிடின் , அடியேன் நமது front ஆபீஸ் going ! இம்மாத புக்ஸ் 4-ம்  கிங்கரர்களாய் மிரட்டிக் கொண்டிருக்க, அவற்றை ஒருபக்கம் அமர்த்தி விட்டு, இன்னொரு பக்கம் பிரபா ஒயின்ஸ் ஓனராய் உங்களின் அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது தான் !! புனித ஒடின் இந்த நவம்பருக்கு மட்டும் 40 தேதிகள் கொடுப்பாராக !!

ரொம்ப ரொம்ப காலம் கழித்து சேலம் திருவிழாவினில் நாம் பங்கேற்பதில் செம excited !! வருண பகவான் கருணை காட்டினால் கொஞ்சமாய்ப் பிழைத்துக் கொள்வோம் !! Fingers doubly crossed !

2 விழாக்களுக்கும், அந்தந்தப் பகுதிகளின் நண்பர்கள் உற்சாகமான ஆதரவளித்து, நம்மளது நிரம்பி வழியும் கிட்டங்கியினை கொஞ்சமே கொஞ்சமாய் இலகுவாக்கிட உதவிடக் கோருகிறோம் ! Please do drop in folks !!

அப்புறம் 3 பதிவுகளுக்கு முன்னே ஒரு caption போட்டி வைத்திருந்தோம் ; ஆனால் கிட்டியிருந்த entries அத்தனை சுவாரஸ்யமில்லை ! So மறுக்கா ஒரு caption போட்டி இதோ ! வெள்ளிமுடியாரும்...சின்னக்கழுகாரும், டாடி கழுகார் இல்லாததொரு ஓய்வான தருணத்தில் என்ன பேசிக்கொள்வார்களென்பதை உங்கள் caption-களாக்கிடலாமே guys ? TOP 3 entries-க்கு அடுத்த டெக்ஸ் க்ளாசிக்ஸ் நமது அன்புடன் ! 

P.Sசந்தாக்களுக்கொரு நினைவூட்டலுமே folks !!



Bye all...see you around !! Have a great week ahead !

Saturday, November 12, 2022

ப்ராங்க்பர்ட் டயரி - 2 !

 நண்பர்களே,

உஷார் : 

1 .இன்னொரு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இது !

2.போன பதிவு : ஆந்தையன் - the traveler-ன் பதிவென்பதால் சற்றே கெக்கேபிக்கே ரகமாக இருந்திருக்கலாம் ! இதுவோ ஆந்தையன் - the editor-ன் பதிவென்பதால் has to be businesslike ! So இது அதுவல்ல....அது இதுவல்ல..!

வணக்கம் . முதல் பாகம் நன்றாக அமைந்து விட்டால், இறுதிப் பாகம் அதே அளவினில் அமைவதில்லை என்பதொரு பொதுவான jinx ! பார்க்கலாமே - இந்த ப்ராங்க்பர்ட் டயரியின் இறுதிப் பாகம் அந்த நியதிக்குக் கட்டுப்படுகிறதா- விதிவிலக்காகிறதா என்று!

அக்டோபர்...20...! மப்பும், மந்தாரமுமான அந்த ஜெர்மானியக் காலைப் பொழுதினில்  புத்தக விழாவின் வாயிலில் நின்றபடிக்கே என் கையிலிருந்த காகிதத்தை வாசிக்கலானேன் - யாரை ? எத்தனை மணிக்குச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் உள்ளதென்று ! இளம் குளிருக்கு ஆளாளுக்கு மப்ளர்களுக்குள்ளும், கோட்களுக்குள்ளும் புதைந்து கிடக்க, நானோ “அபியும்... நானும்” படத்து பிரகாஷ்ராஜ் போல, ஒரேயொரு மெல்லிசான ஸ்வெட்டரை போட்டுக்கினு- ”குளிரலியே... எனக்குக் குளிரலியே...” என்பதாய் சீன் போட்டுக் கொண்டிருந்தேன்! 2020-க்கு முன்னே வரையிலும், பையைத் தூக்கிக் கொண்டு தேசாந்திரம் போவதெல்லாம் அடிக்கடியான நிகழ்வுகளாக இருந்து வந்ததால் -'இந்த மாசத்துக்கு ; இந்த ஊருக்கு ; இந்த ட்ரெஸ் தோதுப்படும் ; இதை-இதை எடுத்துப் போகணும்' - என்பதெல்லாம் அத்துப்படியாக இருந்து வந்தது ! ஆனால் கொரோனா புண்ணியவானின் உபயத்தில் வீட்டிலேயே கிட்டத்தட்ட 36 மாதங்களாய்க் குப்பை கொட்டிக் கொண்டதன் பலன் - துணிகளையும் காணலை ; கண்ணில் படுபவைகளோ தொந்திக்கும் சேரலை ! வாசலிலேயே நின்றிராமல், உள்ளே புகுந்தால் ஊதைக் காற்று படுத்தாது என்பதால் உள்ளுக்குள் புகுந்தேன் - முதுகில் செமையாய் உப்புமூட்டை நமது காமிக்ஸ் மாதிரிகளுடன் ! அதிலும் எனது முதல் சந்திப்பே போனெலியுடன் எனும் போது, ​​அவர்களுக்கென கொண்டு சென்றிருந்த டெக்ஸ் ஹார்ட்கவர் இதழ்களெல்லாம் பிசாசுகளாய்க் கனத்தன !

ஆளாளுக்கு செல்போன்களில் வைத்திருந்த டிக்கெட்களை வாயிலில் நீட்ட - “ப்ளியாங் ... ப்ளியாங்”! என்ற ஓசைகளோடு அவற்றைச் சரிபார்த்து உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தனர். எனக்கோ என் முறை வரும் வரை படபடப்பு - 'இல்லியே... இந்த மூஞ்சியைப் பார்த்தால்லாம் பத்திரிகையாளனாட்டம் தெரியலியே ! போயி உண்டான டிக்கெட்டை வாங்கிட்டு வா!' என்று மூக்கில் குத்தி திருப்பியனுப்பிவிடுவார்களோ - என்று! ஆனால் எனக்கும் ஒரு 'ப்ளியாம்'... ஒரு புன்னகை... and I was into the Fair !

காகிதத்தில் கிறுக்கியிருந்த அட்டவணையில், போனெலியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு காலை 10-30க்கு என்றிருந்தது ! அவர்களோ புத்தக விழாவினில் ஸ்டால் எடுத்திருக்கவில்லை ! மாறாக - புத்தக விழா க்ரவுண்டுடனே இணைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கி, அங்கே முதல் மாடியில் இருந்த ஹாலை 2 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தனர். So அவர்களைச் சந்திக்க Hotel Maritim என்ற அந்த இலக்கைத் தேடி நடக்க ஆரம்பித்தேன்! பொதுவாகவே வழி கண்டுபிடிப்பதில் நான் நயம் புளி! கூகுள் மேப்பைப் போட்டுக் கொண்டாலும் சரி, GPS-ஐ ஆன் செய்து பயணித்தாலும் சரி, கனகச்சிதமாய் தப்பான ரூட்டில் போவது எனக்குக் கைவந்த கலை! So புலிக்கேசி பாணியில் “இப்டிக்கா போனா பாதாளக் கிணறு ; இது தான் வந்த பாதை!” ! என்று சுற்றிச் சுற்றி வந்தேன் ! மணி வேறு பத்தேகால் ஆகியிருக்க, பதட்டமும் தொற்றிக் கொண்டது! ஒருவழியாய் இரண்டு தப்பான மாடிகளையும், இரண்டு தவறான கட்டிடங்களையும் கடந்த பிற்பாடு, ஹோட்டலுக்கான இணைப்பு இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன்! உசரமான கண்ணாடிக் கதவுகள் சாத்தி நிற்க, அவற்றைப் பிடித்து தள்ளிப் பார்த்தால்... ஊஹும்...'கிச்'சென்று பூட்டிக் கிடப்பது புரிந்தது ! இது ஆகுறதுக்கில்லே...! மரியாதையாய் வெளியே போய், கொஞ்சம் சுற்றி என்றாலும் ஹோட்டலுக்கு சாலை வழியாகவே போய்விடலாமென்று தீர்மானித்தேன் ! உள்ளே புகுந்த வேகத்தை வி்ட இரட்டிப்பு துரிதத்துடன் நான் வெளியேறுவதைப் பார்த்த வாயிலில் இருந்த பெண்ணுக்கோ வியப்பு! கவுண்டரின் அந்த ரொ-மா-ன்-டி-க் புன்னகையை அந்தத் திக்கில் உதிர்த்தபடிக்கே, ஓட்டமும், நடையுமாய்ப் போனவன் மூன்றே நிமிடங்களில், Maritim என்ற கம்பீரமான கண்ணாடி முகப்புடனான ஹோட்டலை எட்டி விட்டேன்! “இதுக்கு பேரு தான் பேலஸு!” என்ற வடிவேலுவின் டயலாக் தான் நினைவுக்கு வந்தது - உள்ளாற கால்வைத்த நொடியிலேயே ! திரும்பும் திக்கிலெல்லாம் செல்வச் செழிப்பின் அடையாளங்கள் விரவிக் கிடக்க, வேகமாய் ரெஸ்ட்ரூமைத் தேடிப் போனேன் - காற்றில் திசைக்கு ஒன்றாய் நட்டுக் கொண்டிருந்த கேசத்தோடு சமாதானம் பேசி, லேசாய்ப் படியச் செய்ய! ஒரு மாதிரியாய் அவர்களது மீட்டிங் ஹாலைத் தேடிப்பிடித்துப் போய் விசிட்டிங் கார்டை நீட்டினால் - நிறையப்பேர் ஓவர் கோட், கைகளில் பெட்டிகள் என்று நிற்பது தெரிந்தது ! “இன்ன மெரி...இன்ன மெரி, நான் இந்தியாவிலேர்ந்து வர்றேன்... இன்ன மெரி..இன்ன மெரி....மேடம் xxx-கிட்டே எனக்கொரு அப்பாயிண்ட்மெண்ட்  உள்ளது !" என்று டேபிளின் நின்று கொண்டிருந்த யுவதியிடம் சொன்னேன் ! அவர் என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார்! 'ஒரு வேளை படிய வச்சது மறுக்கா நட்டுக்கிச்சோ? ... அல்லது ஒரு வேளை, அப்பாயின்ட்மெண்டை தப்பாகக் குறித்துக் கொண்டு லேட்டாகவோ ; சீக்கிரமாகவோ வந்து தொலைத்து விட்டேனோ?' என்ற யோசனையோடே மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தேன் ! குறைந்தது ஒரு டஜன் தனித் தனி மேஜைகள் & ஒவ்வொன்றிலும் 4 நாற்காலிகள் என்று ஜம்மென்று காட்சியளித்தது ! ஓரங்களிலோ கொஞ்சமாய் காமிக்ஸ் இதழ்கள் நின்று கொண்டிருந்தன ! 

என்னைப் பார்த்தவுடனே 'ஓ... மை காட்!' என்றபடிக்கே வந்தார் – நான் சந்திக்கவிருந்த நிர்வாகி ! அவருமே ஓவர் கோட்... கையில் பிரயாணத்துக்கான பெட்டி சகிதம் நிற்க, எனக்கு ஏதோ உதைத்தது! “ரொம்ப சாரி ... ரொம்ப சாரி” என்றபடிக்கே அவர் என் கையைக் குலுக்க, நான் நம்ம ட்ரேட்மார்க் முழியை முழித்து வைத்தேன்! தொடர்ந்த 2 நிமிடங்களில் அவர் பொரிந்ததன் சாராம்சம் இது தான் : 19 & 20 ஆகிய இரு தேதிகளுக்கு மாத்திரமே ப்ராங்பர்ட் புரோகிராம் அவர்களுக்கு! அன்று மாலை இத்தாலிக்குத் திரும்ப ஜெர்மானிய ஏர்லைன்ஸான Lufthansa-வில் அவர்களுக்கு டிக்கெட்! ஆனால் அன்று Lufthansa -வின் சார்பு நிறுவனமான German Wings என்ற குறைந்த கட்டண சர்வீஸின் பணியாட்கள் திடீரென்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பார்கள் போலும்! அவர்களுக்குத் தோள்தர Lufthansa பணியாட்களில் ஒரு பகுதியினருமே முன்வர, அன்றைக்கு மதியம் முதலாய் பிராங்க்பர்டிலிருந்து கிளம்பும் நிறைய விமானங்கள், காலவரையின்றி ரத்தாகிடும் அறிவிப்பு வந்துள்ளது போலும்! So நின்ற நிற்பில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்ட்ரைக் முடியும் வரை ஊருக்குத் திரும்ப முடியாது என்பது அவர்களது இக்கட்டு ! தவிர, அடுத்த சில நாட்களிலேயே இத்தாலியில், லூக்கா நகரில் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான காமிக்ஸ் திருவிழா அரங்கேறவிருந்த நிலையில், அதன் டாப் பங்கேற்பாளர்களான போனெலி முன்நின்று ஏகமாய் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய சூழல் ! So இந்த எதிர்பாரா வேலைநிறுத்தத்தால் , புத்தக விழாச் சந்திப்புகள் சார்ந்த  திட்டமிடல்கள் நிறையவே  சொதப்பிவிட்ட தாளா வருத்தம் அவர்களுக்கு ! And அவசரமாய்க் கிளம்பி, ஏர்போர்ட்டுக்கு ஓட்டமாய் ஓட வேண்டியுள்ளது என சங்கடத்தோடு விளக்கினார் ! அவர்களது அன்றாடங்கள் எத்தனை அசாத்திய பிஸியான பொழுதுகள் என்பதை இத்தாலியிலேயே நேரில் பார்த்தவன் என்ற முறையில், அவர்களின் இக்கட்டு எனக்குப் பூரணமாய்ப் புரிந்தது !

'என்னடா இது சோதனை - முதல் அப்பாயிண்ட்மென்டே இப்படி ஆகிப் போய்விட்டதே'  என்று உள்ளுக்குள் காற்று பிடுங்கியது போலிருந்து ! ! ஆனால் அவர்களது சங்கடங்களும் புரியாது இல்லை ! So நின்று பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் அனைவரின் புறப்பாடுமே தாமதப்படும் என்பதால் - “அடுத்த சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் !" என்றபடிக்கே விடைபெற்றேன் ! ஏழேகால் கிலோ காமிக்ஸ் பொதியுடன், மறுக்கா விழா நோக்கி நடை ; மறுக்கா அந்த 'ப்ளியாங்' டிக்கெட் பரிசோதனை வாயிலில் க்யூ ; மறுக்கா அதே புன்னகை அம்மணி! 'ஊசிப் போன மசால் வடையைத் தின்னுப்புட்டு, ஓட்டமாய் ஹோட்டலுக்கு ஓடியவன் இப்போது திரும்பி வந்துள்ளான் போலும்!' என்று அம்மணி உள்ளுக்குள் நினைத்திருக்கலாம்; ஆனால் மாறாப் புன்னகையோடு உள்ளே அனுமதித்தார்!

வரிசையாய் 20 & 21 தேதிகளில், நமது பல்வேறு படைப்பாளிகளுடன் சரம் கோர்த்த மாதிரியான சந்திப்புகள் இருந்தன ! முதலாவதாய் நான் சந்திக்கவிருந்தது நமது Lombard நிறுவனமே ! கேப்டன் பிரின்ஸ் ; ரிப்போர்ட்டர் ஜானி ; தோர்கல் ; ரோஜர் ; சிக் பில் என்று எண்ணற்ற கதை வரிசைகளை நமக்கு வழங்கியுள்ள இந்த ஜாம்பவான்களிடம் எனக்கு எப்போதுமே ஒரு மிடறு வாஞ்சை அதிகம் ; simply becos, வாழ்க்கையில் முதன்முறையாய் ஒரு கான்டிராக்ட்டில் கையெழுத்து இடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது Lombard நிறுவனத்துடன் தான் ! கொயந்தபுள்ளையாய் 1985-ல் பிராங்பர்ட்டில் புத்தக விழாவில் சந்தித்து, கேப்டன் பிரின்ஸ் கதைக்கு டிக் அடித்த கையோடு, அடுத்த சில நாட்களிலேயே பிரஸ்ஸல்ஸ் நகரினில் அவர்கள் குடலை உருவ, அவர்களது ஆபீசில் ஆஜராகியிருந்தேன் ! அப்போது பொறுப்பிலிருந்த நிர்வாகிக்கோ என்னை விடவும் மூன்று மடங்கு வயது ஜாஸ்தியிருக்கும்  ! முகம் முழுக்கப் புன்னகையோடு, எனது குழந்தைத்தனமான அவசரங்களை சகித்துக் கொண்டு, கான்டிராக்டை ரெடி செய்து, அங்கேயே என்னைக் கையெழுத்திட வாய்ப்பேற்படுத்தித் தந்தார் ! பொதுவாய் புத்தக விழாக்கள் முடிந்து ஊர் திரும்பியான பிற்பாடு, அவர்களின் ரெகுலர் பப்ளீஷர்களுக்கான கதைகளையும், கான்டிராக்ட்களையும் ரெடி செய்திடவே ஒரு மாதத்துக்கு மேலாகி விடும் ! அன்றைக்கு நாமோ, முகமில்லா அனாமதேயங்கள் ; கை நிறைய  பட்டாணிச் சுண்டல் வாங்க அவசியமாகிடக்கூடிய ராயல்டியினை மாத்திரமே தர முன்வந்திருந்தோம் & இந்தக் கொள்ளையில் "ஊருக்குத் திரும்புறச்சே, கையில் ஒரு கான்டிராக்டையாச்சும் கொண்டு போகாவிட்டால் கவுரத பிரச்சனையாகிப் போகும் !" என்ற வேண்டுகோளுடன் நின்றிருந்தேன் ! அத்தனைக்குமே சம்மதித்து, என் கையில் "பனிமண்டலக் கோட்டை" கான்டிராக்டைத் தந்து Good luck என்று வழியனுப்பினார் அன்றைய நிர்வாகி ! So எப்போதுமே அந்த நிறுவனத்தின் மீது நமக்கொரு லெவல் கூடுதலாய் நேசம் ! 

Cut to the present : அங்கே ஏற்கனவே பொறுப்பில் இருந்த லேடியோ கொரோனா ப்ரேக் சமயத்தில் விலகியிருந்தார் ! So அவரிடத்தில் பொறுப்பிலிருந்த புதியவரோடு நமக்கு மின்னஞ்சல் பரிச்சயம் மாத்திரமே! பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அவர்களது ஸ்டாலில் நான் போய் நின்ற நொடியே அவர் அடையாளம் கண்டுகொண்டார்- இந்தியாவிலிருந்து அடிக்கொருதரம் ஈ-மெயிலில் உசிரை வாங்கும் மலைமாடு இது தானென்று ! முகம் நிறையப் புன்னகையோடு என்னை அமரச் செய்து நலம் விசாரித்தபடிக்கே பேச ஆரம்பித்தார் ! நாம் சமீபங்களில் புதிதாய்ப்  பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் தவிர்த்த பாக்கி அனைவருமே, நமக்குப் பத்தோ - இருபதோ - முப்பதோ ஆண்டுகளாய்த் தெரிந்தவர்களே என்பதால் இந்தச் சந்திப்புகள் எல்லாமே அந்த நட்புகளை உரப்படுத்திக் கொள்ளும் பாணியிலானவை மட்டுமே! தவிர, என்ன வேண்டுமானாலும் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் விபரங்கள்; கதைக் கோப்புகள் கிட்டி விடும் எனும் போது, அவர்கள் முன்னே ஆஜராகி, பூமியைப் புரட்டிப்போடவல்ல காரியங்களைச் சாதிக்க வேண்டிய நிலைமையினில் இல்லை தான் ! So புதிதான கதை வரவுகள் ; திட்டமிடல்களில் உள்ள சமாச்சாரங்கள் ; சில பல முந்தைய தொடர்களின் புனர்ஜென்மங்கள் சார்ந்த வினவல்கள் என்பனவே நமது படைப்பாளிகளிடம் நான் வாயைப் பிடுங்க எத்தனித்தவை ! And அவற்றின் பலன்களைக் கீழே தொகுத்துள்ளேன் - நமக்கு சுவாரஸ்யம் தரும் விதமாய் : 

1. நமது செம்பட்டைத் தலை ஜேம்ஸ் ... அது தான் முதலைப்படையின் கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில் இருக்கிறார் அல்லவா? அவரது version 2.0 மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே இரு பாக ஆல்பம் வாயிலாக அறிமுகம் கண்டுள்ளது ! And அவரது ஆல்பம் # 3 ரொம்பச் சமீபமாய் வெளியாகியிருக்க, அங்கே பிராங்பர்ட்டில் அதன் ஹார்ட்கவர் ஆல்பம் கம்பீரமாய் ஷெல்பில் அமர்ந்திருந்தது! ஆர்வமாய் எடுத்துப் புரட்டினேன்; அட்டகாசமான சித்திரங்கள்... கலரிங் பாணி !! அது பற்றியும், தொடரின் எதிர்காலம் பற்றியும் கேட்டுக் கொண்டேன் ! Sounded very promising !!

My கேள்வி # 1 to you :

What say Folks - முதலைப் பட்டாளத்தின் இரண்டாவது சுற்றுக்கு நாம் தயாராகிக்கலாமா ? காத்திருக்கும் ஆண்டினில் முதலைப்பட்டாளத்தை மறுக்கா ரசிக்க ஆரம்பிக்கலாமா ?

2. கொரோனா லாக்டவுனிற்கு ஓரிரு வாரங்கள் முன்னே வெளியான வெளியான ZAROFF நினைவில் உள்ளாரா ? தென்னமெரிக்காவின் அமேசான் காடுகளில் நடந்த அந்தத் 'தெறிக்கும்' ஜீவமரண போராட்டம் - “நில் ... கவனி ... வேட்டையாடு” ஆல்பத்தை சூப்பர் ஹிட்டாக்கியிருந்தது. ப்ரெஞ்ச்சிலும் இவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதால் Zaroff இன்னொரு ஒன்-ஷாட்டில் களமிறங்கவுள்ளாராம் & ஆட்டகளம் இம்முறை மாஸ்க்கோவாம் ! 2023-ல் ஏப்ரல்வாக்கில் இந்த ஆல்பம் ரெடியாகுமாம்!

My  கேள்வி #2:

ஹீரோவாய்ப் பார்ப்பதா ? வில்லனாய்ப் பார்ப்பதா இந்த மனஷனை ? இவரது இரண்டாவது ஆல்பத்துக்கும் நம் மத்தியினில் ஆர்வங்கள் சேஸ்தானு ? இவருக்கும் 'ரைட்' சொல்லி வண்டியில் தொற்றிக் கொள்ளலாமா நாம் ?


3. அப்புறம் தோர்கல் பற்றி!! ஏற்கனவே இளம் தோர்கல் தனித்தடம் ஓட்டமெடுத்து வர, இப்போது “THORGAL SAGA” என்று புதியதொரு மினித்தடம் உருவாகி வருகிறதாம்! இப்போதைய திட்டமிடல் - மொத்தம் 4 ஆல்பங்கள் என்பதே ! 2023-ல் துவங்கி, ஆண்டுக்கு ஒன்று வீதம் வெளியாகிடவுள்ளதாம் ! ஒவ்வொரு ஆல்பமும் 112 பக்கங்களில் இருக்க ; 4 வெவ்வேறு ஓவியர்கள் இதனில் பணியாற்றுவராம் ! இந்தத் தொடரின் கதைக்கருவைப் பற்றிச் சொன்னார்கள்  - 'WOWWW' என்று தான் சொல்லத் தோன்றியது எனக்கு! முதல் ஆல்பம் ஜனவரி '23-ல் வெளிவரவுள்ளதாம்! So அந்தப் preview ரெடியாகும் சமயமாய் கதை பற்றிய பகிர்ந்திடலாம் folks!

My கேள்வி #3:

இந்தத் தனித்தடத்தின் முதல் ஆல்பம், அநேகமாய் டிசம்பரில் நமக்குக் கிட்டிவிடும்! படித்துப் பார்த்து விட்டு ரம்யமாய்த் தெரியும் பட்சத்தில், இதனுள்ளேயும் மூக்குகளை நுழைக்க ஓ.கே.வா ?

4. LONESOME !! ட்யுராங்கோவின் பிதாமகரான Yves Swolfs உருவாக்கியுள்ள இன்னொரு கௌ-பாய் தொடர் இது! ட்யுராங்கோ பாணியில் சித்திரங்கள் இருந்தாலும், கதை பாணியில் இது மாறுபட்டது! 4 ஆல்பங்களில் முதல் சுற்று & ஜுலை 2023-ல் க்ளைமாக்ஸ் ஆல்பம் வெளியாகிடவுள்ளது ! And இரண்டாம் சுற்றில் தொடர் தொடரும் போலும் - been a huge hit there already !!

My கேள்வி # 4:

இந்தத் தொடரின் காண்டிராக்ட் நம்மிடம் கொஞ்ச காலம் முன்னிருந்தே உள்ளது ! முதல் சுற்றின் முற்றுப்புள்ளி கண்ணில் தெரியும் வரையிலும் 'தேமே' என்றிருப்போம் என்ற எண்ணத்தினில் இருந்தேன் ! Now that the climax is in sight - ட்யுராங்கோ பாணியில் நாலு அத்தியாயங்களையும் ஏக் தம்மில் 2024-ல் களமிறக்கி விடலாமா? ? அல்லது அடுத்தடுத்த மாதங்களில் சிங்கிள் ஆல்பங்களாகவா ?


5. ட்யுராங்கோ பற்றிய Topic-ல் இருக்கும் போதே- இளம் ட்யுராங்கோ பற்றியுமே  பேசிப்புடலாமா ? இது என்ன- புது மேட்டரா கீதே ? என்கிறீர்களா? Oh Yes - 4 பாகத் திட்டமிடலில், ட்யுராங்கோவின் இளமை நாட்களைச் சித்தரிக்க படைப்பாளிகள் ரெடியாகி விட்டனர் ! இதோ- இம்மாதமே அதன் முதல் ஆல்பம் ரிலீஸாகிறது… and 2023-ன் இறுதிக்குள் முதல் சுற்று பூர்த்தி காணவுள்ளது ! 

My கேள்வி #5:

இளம் ட்யுராங்கோ காலத்தின் கட்டாயாமா folks - நமது அணிவகுப்புகளில்? Again - ஒரே தொகுப்பா ? அல்லது சிங்கிள் இதழ்களிலா ?

6. ரிப்போர்ட்டர் ஜானி 2.0

இந்தப் புது வரிசையில் ஆல்பம் # 6 வெளியாகி உள்ளது & ப்ராங்க்பர்ட்டில் அதனைப் பார்க்கவும் செய்தேன்! செம அழகாய் இருந்தது! ஒரு வருஷம் க்ளாஸிக் பார்ட்டி ; மறுவருஷம் version 2.0 ஜானி எனப் பயணித்தால் அயர்வின்றியிருக்குமென்று மனசுக்குப் பட்டது!

My கேள்வி #6:

ஏற்கனவே துடைப்பத்தால் சாத்தி, பதிலும் சொல்லியுள்ளீர்கள் தான் ; but still இந்தக் கேள்வியினைக் கேட்காது இருக்க இயலவில்லை ! மாற்றங்களைக் கண்டாலே ஒய் திஸ் கொலவெறி guys? 'வேணவே வேணாம்' என்று அடம்பிடிக்கும் அளவுக்கு இந்த ஜானி 2.0 மோசமும் இல்லை & 'மணந்தால் மகாதேவி தான்!' என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு க்ளாஸிக் ஜானி ஒரு அசாத்தியமும் அல்ல  என்பது எனது அபிப்பிராயம் ! பெட்ரோமேக்ஸ் லைட்டை அவ்வப்போது மாற்றித் தான் பார்ப்போமே ?

7. நிஜத்தில் அரங்கேறிய சில க்ரைம்களைப் பற்றியதொரு தொடரை சமீபமாய் உருவாக்கியுள்ளனர் படைப்பாளிகள்  ! நிகழ்ந்த அந்தப் புதிரான கொலைகள் ; அது சார்ந்த புலனாய்வின் கட்டங்கள் ; விசாரணைகள் ; முடிச்சவிழ்ப்புகள் பற்றியெல்லாம் பதிவிட்டு 150+ பக்க நீளத்துக்கு ஆல்பங்கள் உருவாக்கியுள்ளனர்! நிஜ சமாச்சாரங்கள் எனும் போது maybe இங்கே மிகைப்படுத்தப்பட்ட டமால்-டுமீல்-ணங் சமாச்சாரங்கள் இல்லாது போகலாம்; ஆனால் நிஜமான புலனாய்வுகள் பொதுவாய் இந்த சினிமா பாணியில் இருப்பதில்லை தானே?!

My கேள்வி #7:

டமால்-டுமீல்-ணங் இல்லாங்காட்டியும் ரசிக்க ஓ.கே.வா guys? அல்லது இதை கி.நா. அணிக்குள் தள்ளி விடுவதே உசிதமாகிடுமா ?

8. நாகரிக வெட்டியானின் ஆல்பம் # 5 ஏப்ரல் 2023-ல் வெளிவரவுள்ளது. ஸ்டெர்னின் பயணம் ப்ரெஞ்சில் ரொம்பவே ரசிக்கப்பட்டு வருகிறதாம் !

My கேள்வி #8:

நம் மத்தியில் ஸ்டெர்ன் வேரூன்றியிருப்பது கண்கூடு ! ஆண்டுக்கொரு ஸ்லாட் இனி இவருக்கு உறுதிப்படுத்தி விடலாமா ? அல்லது முன்பதிவுகளில் "விரும்புவோர் வாங்கட்டும்" என்பதே சுகப்படுமா ? 

9. ஒரிஜினல் வெட்டியானின் (THE UNDERTAKER) ஆல்பம் # 7 இரு அத்தியாயக் கதையாக, வழக்கம் போல் வெளிவருகிறதாம் ! சுற்றின் முதல் கதை செப்டம்பர் 2023-ல் வெளிவரவுள்ளதாம் ! அதன் க்ளைமேக்ஸ் பாகமும் வெளியான பிற்பாடு ஒன்றிணைத்துப் போட்டு விடலாம் ! ஓ.கே. தானே guys?



10. நமது மறதிக்கார XIII-ன் ஆல்பம் # 28 இம்மாதம் ரிலீஸ் ஆகிடுகிறது & அதன் ஹார்ட்கவர் ஆல்பமும் அங்கே ஸ்டாலில் கண்ணில்பட்டது ! ப்ரெஞ்சில் இருந்தாலும், படம் பார்க்க அதை எனக்குத் கோரினேன் & மறுநொடியே தந்து விட்டார்கள் ! க்யூபாவில் ஓட்டமெடுக்கும் இந்தக் கதை - அடுத்த ஆல்பத்தோடு நிறைவு காணவுள்ளதாம் ! அதாவது ஆல்பம் #29 will wind up Cycle # 2. மாஸ்கோவில் பயணிக்கும் இந்த இறுதி ஆல்பத்தில், மேற்கொண்டான சுற்றுக்களுக்கு வாகான  கொக்கிகளைப் போட்டே வைத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை! ஆனால் இப்போதைக்கு சுற்று # 3 பற்றிப் பெரிதாய்த் திட்டமிடல்கள் எதுவும் இல்லையாம் !


11. இரத்தப் படலம் மெயின் தொடரில் பெரிதாய் ஆக்ஷன் இப்போதைக்கு இல்லையெனினும், முக்கியக் கதாப்பாத்திரமான லெப்டினெண்ட் ஜோன்ஸ் பிஸியாகவே இருந்திடவிருக்கிறார் ! Because இவருக்கெனவொரு பிரத்தியேக 3 பாக தனித்தடம் தயாராகி வருகிறது! 2023-ல் ஆரம்பித்து, ஆண்டுக்கொன்று என 2025 வரையிலும் இந்தத் தொடர் உருவாக்கம் கண்டிடவுள்ளதாம்! XIII spin-offs வரிசையில் ஏற்கனவே ஜோன்ஸுக்கு ஒரு ஆல்பம் உண்டெனினும், அவரை ஒரு முப்பாகத் தொடருக்கு நாயகியாக்கிட முன்வந்துள்ளனர் இம்முறை ! இது 2025-ல் தான் நிறைவுறும் என்பதால் நிறையவே அவகாசம் உள்ளது நமக்கு - இதைப் பற்றித் தீர்மானிக்க!


12. அப்புறம் ஒரு ஜாம்பவான் கதாசிரியரின் முன்நாட்களது கௌபாய் தொடரானது புதுப்பிக்கப்பட்டு 2023-ன் மத்தியில், புது கலரிங் சகிதம் களம் காணவுள்ளது! மொத்தம் 6 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரின் சுற்று 2023-ன் இறுதிக்குள்ளேயே நிறைவும் காணவுள்ளதாம்!

My Question #9:

கதாசிரியர் ஒரு செம ஆற்றலாளர் என்பதற்காகவே இந்தத் தொடரினை நாம் பரிசீலனை செய்திடலாமா ? அல்லது - காது வழியே cowboys வெளிப்படும் அளவுக்கு ரொம்பவே திகட்ட ஆரம்பித்து விட்டது சாமீ என்பீர்களா ?

13. கௌபாய்களின் கரடுமுரடான உலகிலிருந்து நேராய்க் கோடீஸ்வரக் கோமகனின் `W` சாம்ராஜ்யம் பக்கமாய்ப் பயணித்தால் - 2023-ன் இறுதியில் லார்கோ வின்ச்சின் புதிய ஆல்பத்தின் க்ளைமேக்ஸ் ஆல்பம் வெளியாகுமென்று அறிய வருகிறோம்! So 2024-ல் லார்கோ நம் மத்தியில் இருப்பாரென்று எதிர்பார்க்கலாம்!

கதாசிரிய ஜாம்பவான் வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து விடைபெற்றான பின்னே விற்பனைகள் எவ்விதம் உள்ளன? என்று கேட்டு வைத்தேன்! வான் ஹாமின் உச்சத்தின் போது 'லார்கோ ஆல்பங்கள்' தலா 4 இலட்சம் விற்பனையாகினவாம்! இன்றைக்கு அத்தனை இல்லை என்ற போதிலும் செம decent ஆனதொரு விற்பனை எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்கள்! நாமளோ 10 வருஷங்களாய் ப்ளு ஜீன்ஸ் பில்லியனரின் கையிருப்பைக் கரைக்க கதகளி ஆடி வருகிறோம்! Phew!!

14. Last but not the least - தங்கத்தலைவனின் புது தடம் ஒன்றினை புதுப் படைப்பாளிகளுடன் துவக்கியிருந்தனர் 2019-ல் ! அதன் க்ளைமாக்ஸ் பாகம் 'புலி வருது..புலி வருது' கதையாய் ஜவ்வு இழுத்து வந்தது ! Finally அது 2023-ன் இரண்டாம் பாதியில் வெளியாகிடுமாம் ! So அடுத்தாண்டினில் ஒரு புது டபுள் ஆல்பம் கிட்டியிருக்கும் தளபதியின் ரசிகர்களுக்கு ! Fingers crossed !

இங்கும் அங்குமாய் மந்தியாட்டம் சுற்றிச் சுற்றி நமது பல்வேறு பதிப்பகங்களிடமிருந்து சேகரிக்க இயன்ற சேதிகள் இவையே! இவை தவிர்த்து, புதுசு புதுசாய் ஏகப்பட்ட தொடர்களைக் கண்ணில் காட்டிட, அவற்றின் கோப்புகளை அனுப்பச் சொல்லியுள்ளேன்! And அந்தக் குவியலைப் பார்க்கும் போது , இப்போதே இன்னொரு அட்டவணையினை போட்டாலென்ன என்ற பேராசை பொங்காத குறை தான்! ஆனால் ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாது என்பதால், ஒரு பெருமூச்சோடு கதைகளை எனது டயரியில் குறித்துக் கொண்டு, இப்போதே 2024 பக்கமாய் கோழி எப்போது கூவுமென்று காத்திருக்கிறேன்!

ஒவ்வொரு ஸ்டாலாய்க் குதித்துக் குதித்து ஒவ்வொரு பதிப்பகத்தோடும் குசலம் விசாரித்த களைப்பில் வயிறு பிறாண்டிய போது சாப்பிட வெட்டவெளியில் அமைந்திருந்த அமைந்திருந்த Food Trucks பக்கமாய் நடையைக் கட்டினேன்! உள்ளே ஸ்டால்களிலும் ; ஒவ்வொரு அரங்கிலும், நடைபாதையிலும் தென்படாத பரபரப்பு - இங்கே சாப்பாட்டுக் கடைகளின் முன்னே தெறித்துக் கொண்டிருந்தது! நம்மூரில் போல முண்டியடித்துக் கொண்டு முன்னே போக இங்கெல்லாம் வழி லேது என்பதால், நெளிந்த பாம்பைப் போல நீண்டு நின்ற க்யூவின் வாலில் போய் நின்று கொண்டேன்! 5 நிமிடங்கள்ஆகியிருக்கும் ; ஆனால் வரிசை இம்மியூண்டு கூட நகர்ந்தது போல் தெரியக்காணோம் ! நமக்குத் தான் பசியில் கண்ணடைக்கிறதா என்று பார்த்தால் -  'இன்னியோட உலகம் முடிஞ்சே போய்விடும்!' என்ற பயம் வந்தவர்களைப் போல, ஆளாளுக்கு ரவுண்ட் கட்டிக் குமுறிக் கொண்டு ஆர்டர் தருவதைப் பார்க்க முடிந்தது ! எனது முறை வர குறைந்தபட்சம் அரை அவராவது ஆகும் போலத் தோன்றியது! “அடப் போங்கைய்யா, உங்க காய்ஞ்ச ரொட்டியைத் தின்ன இவ்வளவு காத்திருக்க முடியாது!' என்றபடிக்கே மறுபடியும் விழா அரங்குக்குள் புகுந்தேன்! அந்த லஞ்ச் வேளையின் அடிபிடிக் கூட்டம் மட்டுப்பட்ட பின்னே, திரும்பப்போய் சாப்பிட்டுக் கொள்வதென்று தீர்மானித்தேன்! அது வரையிலும், புது ஸ்டால்களுக்குப் போய் பராக்குப் பார்த்தபடிக்கே, அவர்களது கேட்லாக்களை வாங்கிக் கொண்டே, விருந்தாளிகளை உபசரிப்பதற்கென வைத்திருக்கும் பிஸ்கெட்களையும், சாக்லெட்டுகளையும் லைட்டாய் ருசி பார்த்தேன் ! So தேசம் தேசமாய் புக்ஸ் & பிஸ்கெட்ஸ் ருசி பார்ப்பதில் எனது மதியம் நகன்றது !

நாம் மாமூலாய் குப்பை கொட்டும் ப்ரெஞ்சு பதிப்பங்களைத் தாண்டி வேற்று காமிக்ஸ் பதிப்பகங்களைத் தேடியபடியே நடக்க, கொரிய; ஜப்பானியப் பதிப்பகங்கள் கண்ணில்பட்டன! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஆண்டில் நான் எதிர்பார்த்திருந்த பரபரப்பு ஒரு மிடறு குறைச்சலே ! முன்னெல்லாம் எந்த நேரம், எந்த அரங்கில் நடைபோட்டாலும், ஸ்டாலில் உள்ளோர் பிஸியாக இருப்பதுண்டு ! ஆனால் இம்முறையோ செல்லை நோண்டிக் கொண்டு காலை நீட்டி ஓய்வெடுத்த ஜனம் கணிசமாய்க் கண்ணில் பட்டனர்! And காமிக்ஸ் பதிப்பகங்களின் பங்கேற்புமே குறைவு தான் ! அமெரிக்க ஜாம்பவான்களில் கிட்டத்தட்ட யாருமே வந்திருக்கவில்லை ; ஹாலந்திலிருந்தும் யாருமே கண்ணில்படவில்லை! அதற்கு மீறி வந்திருந்த பதிப்பகங்கள் ஸ்டால் போட்டிருக்காமல்; பொதுவான இடங்களில் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தனர்! நமது ப்ரெஞ்ச் அல்லாத படைப்பாளிகளில் சிலரைக் கூட இது போல் ஆங்காங்கே இருந்த Coffee ஷாப்களில் தான் சந்திக்க நேர்ந்தது!

இம்முறையின் அரட்டைகளின் போது, பொதுவாகவே அனைத்துப் பதிப்பகங்களும்  சொன்னவொரு விஷயம் ரொம்பவே பெருமூச்சிடச் செய்தது என்னை! இந்த இரண்டரை ஆண்டுகால லாக்டௌன் நாட்களில் காமிக்ஸ் விற்பனைகள் ப்ரெஞ்சு மார்க்கெட்களிலும் சரி, அமெரிக்க மார்க்கெட்களிலும் சரி, செம ஏற்றம் கண்டுள்ளனவாம் ! இதுதான்; அது தான் என்றெல்லாம் இல்லாது, எல்லா தேசங்களிலும், எல்லா மொழிகளிலுமே புக்ஸ் செம சேல்ஸ் போலும்! கேட்க ரொம்பவே பிரம்மிப்பாக இருந்த போதிலும், உள்ளுக்குள் லைட்டாக நெருடாமல் இல்லை - நமக்கெல்லாம் எதிர்மாறான தாக்கம் தான் கிட்டியுள்ளதே என்று! அது மட்டுமன்றி, வழக்கத்தை விடவும் ஜாஸ்தியாய் புக்ஸ் விற்று வரும் சூழலில் இருப்போரிடம்; அதுவும் சிலபல இலட்சங்களில் ப்ரிண்ட்ரன் கொண்டிருப்போரிடம் போய் நின்று - “தர்மதுரை… ஆயிரத்துச் சொச்சம் ப்ரிண்ட்ரன்னுக்குப் பார்த்து, ஏதாச்சும் பண்ணிப் போடுங்க எசமான்!” என்று கேட்பதே கூசச் செய்தது தான்! ஆனால் விரல்களில் ஐந்தும், ஐந்து ரகம் என்பதைப் புரிந்திருக்கும் படைப்பாளிகள் - நம்மை யாசகம் தேடுவோராய் ஒற்றை நொடி கூட உணரச் செய்திடாது பார்த்துக் கொண்டது தான் நீ்ங்களும், நாங்களும் செய்த புண்ணியங்களின் பலன்! And இப்போதெல்லாம் தரைமட்டமான ராயல்டிகளை நாமுமே கோருவதுமில்லை; கொஞ்சமேனும் decent ஆனதொரு தொகையாய் இருந்தாலன்றி, விரும்பும் திக்குக்கெல்லாம் படைப்பாளிகளை இழுப்பதென்பது நடவாக் காரியமாகி விடும் என்ற பயம் உள்ளுக்குள்!

ப்ராங்க்பர்ட் புத்தகவிழாவில் தொழில்முறை விசிட்டர்களே முக்கால் பங்கு! உள்ளூர் ஜனம் பராக்குப் பார்க்க வருவதோடு சரி - சர்வதேசப்  பதிப்பங்களிடமிருந்து புக்ஸ் எவற்றையும் வாங்கிட இயலாது! ஆனால் ஒரேயொரு முரட்டு அரங்கிலிருந்து உள்ளூர் புள்ளீங்கோ சாரையாய் வெளிப்படுவதும்; ஆளாளுக்குக் கைநிறைய புக்ஸோடு வலம் வருவதையும் பார்க்க முடிந்த போது தான் ஞாபகத்துக்கு வந்தது - ஜெர்மானியப் பதிப்பகங்களுக்கு மாத்திரமே விழாவின் போது விற்பனை செய்திடும் அனுமதி உண்டென்பது! 

நம்மைப் போலவே வேற்றுமொழிப் பதிப்புகளின் உரிமைகளை வாங்கி, ஜெர்மன் மொழியில் பிரசுரிக்கும் ஒரு காமிக்ஸ் நிறுவனத்தை ஏற்கனவே எனக்குத் தெரியும்! ரைட்டு… அவர்களைப் போய் எட்டிப் பார்க்கலாமே என்றபடிக்கு உள்ளே நுழைந்தால் - மூச்சடைக்காத குறை தான்! பொன்னியின் செல்வன் ஷுட்டிங் ஸ்பாட்டில் என்னவொரு திரளும், பரபரப்பும் இருந்திருக்குமோ - அதைக் காட்டிலும் மூன்று மடங்கு தெறி! ஒவ்வொரு பதிப்பகமும் டபுள், ட்ரிபிள் ஸ்டால்கள் எடுத்து புக்ஸை மலை உசரத்துக்கு அடுக்கி வைத்திருக்க, மக்கள் மொய்த்தெடுத்துக் கொண்டிருந்தனர்! நாவல்கள்; காமிக்ஸ்கள், இலக்கியம்; பொது ரசனை என்று புஸ்தக பாணிகள் எதுவாயினும், சகலத்திலும் சொல்லி மாளா ஜனம்! ஒரு பெரும் பப்ளிஷரின் ஸ்டாலிலோ - அழகானதொரு யுவதி முகம் நிறையச் சிரிப்போடு ஒரு உசரமான மேஜையருகே, உசரமான ஹீல்ஸ் அணிந்து நின்றிருக்க, அவருக்கு முன்னே நீளமானதொரு வரிசையில் மக்கள் தேவுடு காத்து நின்றனர்! அனைவரின் கைகளிலும் ஒரே புக்! ஆஹா…. அந்த அழகு அம்மணி தான் அதன் எழுத்தாளர் போலும் ; புக்கை வாங்கிய கையோடு ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு, ஒரு ஸெல்ஃபியும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்தது! அந்த வரிசையில் இளவரசரின் ஆகிருதிகளிலும், ஈரமான கடைவாய்களோடும் சிலர் நிற்பதையும் பார்க்க முடிந்தது! 'இவனுங்களைப் பார்த்தாக்கா இம்மாம்தண்டி புக்குகளைத் தலைக்கு வச்சுப் படுக்கிற பார்ட்டிங்க மாதிரிக் கூடத் தெரியலியே ?' என்று மைண்ட்வாய்ஸ் சொல்லியது! அவர்களும் அம்மணியருகே நின்று, ப்ராங்க்பர்ட்டிலிருந்து ஹாம்பர்க் வரை விரியும் இளிப்புகளோடு selfie எடுத்துக் கொள்வதைப் பார்த்த போது காதுகள் புகை சமிக்ஞைகளை எழுப்பாத தான் ! அதே சமயம் நமது இந்தச் சிறுவட்டத்தின் விதியையும் எண்ணி இளித்துக் கொள்ளாதிருக்கவும் இயலவில்லை ; இங்கெல்லாம் selfie எடுத்தாக்கா டாலடிக்கும் கபாலமும், கோல்ட்பிஷ் கண்களும்  தானே வாய்க்கும் !! Poor you folks !!

நடுநாயகமாய் Carlsen Venlag என்றிருந்த காமிக்ஸ் பதிப்பகத்து ஸ்டாலினுள் போனால்  கிறுகிறுத்துப் போனேன்! ஒரு ஜெர்மன் காமிக்ஸ் வாசகனுக்கு பூலோக சொர்க்கமென்று ஏதேனும் இருக்குமெனில் – அது அந்த ஸ்டாலைத் தவிர்த்த வேறு ஏதுமாய் இருக்க வாய்ப்பு பூஜ்யமே! நாமெல்லாம் ஓரமாய் நின்று பராக்குத் தான் பார்க்க வேண்டும் - அவர்களது காமிக்ஸ் நாயக / நாயகியரின் அணிவகுப்பின் முன்னே ! 37 ஆண்டுகளுக்கு முன்னமே இதே பிராங்க்பர்ட்டில் அவர்களைச் சந்தித்திருந்தேன் தான்; அன்றைக்கே ரவுண்ட் கட்டி அடித்துக் கொண்டிருந்தனர் தான் ; ஆனால் இப்போதோ முற்றிலுமாய் ஒரு உச்சத்தில் வீற்றிருப்பது புரிந்தது! ஸ்டாலுக்கு நான்கு திக்குகளிலும் வாயில்கள்; எல்லா வாயில்களிலும் கம்ப்யூட்டர் சகிதம் பில் போட பசங்கள் / பிள்ளைகள்! டன் டன்னாய் காமிக்ஸ் இதழ்கள் உள்ளே குவிந்து கிடக்க, ஆளாளுக்கு பில்லிங் கவுண்டர்களில் குமுறிக் கொண்டிருந்தனர்! இன்னொரு பக்கமோ, ஒரு சிறார் பதிப்பகம் - சிறுவர் கதையெழுதும் ஒரு author-ஐ இட்டு வந்து, அவரது கதை பற்றிய முன்னோட்டம் பின்னே இருந்த டி-வியில் ஓடியபடியே இருக்க, சிறுசுகளை அரங்கிலேயே அமர்த்தி, அவரோடு அளவளாவ விட்டிருந்தனர்! அருகே ஒரு அம்மணி அமர்ந்து, அவரது லேட்டஸ்ட் புக்கிலிருந்து நிதானமாய் வாசித்துக் கொண்டே போக, அரை டிக்கெட்கள் அனைத்தும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த காட்சியின் ரம்யத்தை எழுத்துக்களில் கொண்டு வர யாரேனும் பிறந்து வந்தால் தானுண்டு! பொறாமையாக இருந்தது - இந்தத் தலைமுறையில் ஒரு பகுதியினராவது வாசிப்பில் இத்தனை கொண்டிருப்பதைப் பார்க்கும் போது! Phewwww! 

பதிப்புத் துறையானது என்றைக்குமே அஸ்தமனம் காணாது என்ற நம்பிக்கையோடு அந்த அரங்கிலிருந்து வெளிப்பட்ட போது, வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது! கொஞ்ச நேரம் பராக்குப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, லேசாக மழை ஓய்ந்த சமயமாய் குடையை விரித்துக் கொண்டு சர்வதேச பதிப்பக அரங்குக்குள் புகுந்தேன்! அடடே- பரிச்சயமான தமிழ் முகங்கள் எதிர்ப்பட வேகமாய் நடை போட்டேன்! அரசின் சார்பினில் சென்னைப் புத்தக விழாவினை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கினில் பயணித்திருக்கும் ஆய்வுக் குழுவினர் என்பதால் அவர்களது முயற்சிகள் எத்தனை மகத்தானது என்பது புரிந்தது! பரபரப்பாய், பம்பரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருந்தோரிடம், அதிகமாய்ப் பேச இயலவில்லையென்றாலும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்குப் பிள்ளையார் சுழி போட வந்திருந்தோரைச் சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது!

அரங்கினுள் தொடர்ந்து நடை போட்டால் நமது நாட்டுப் பதிப்பகங்களின் ஸ்டால்கள் கண்ணில்பட்டன ! முக்கால்வாசிப் பதிப்பகங்கள் டில்லியைச் சார்ந்தவை & சிறுவர் புக்ஸ் வெளியிடும் துறையில் இருப்பது புரிந்தது! சர்வதேசத் தரங்களுக்குப் போட்டி போடும் விதமாய் படைப்புகளும், தரங்களும் இருப்பதை பராக்கு பார்த்தபடிக்கே நடந்தேன்! ஆனால் வழக்கமான எண்ணிக்கையில் இம்முறை இந்திய ஸ்டால்கள் இல்லை என்பதை உணராது இருக்க முடியவில்லை! சிக்கனங்கள் இந்த நொடிகளின் தேவை எனும் போது புரிந்து கொள்ள முடிந்தது தான்!

மாலை 5.30-க்கு எனது கடைசி அப்பாயி்ண்ட்மென்ட் நிறைவுற, அதனையும் முடித்த கையோடு ட்ராமைப் பிடிக்க வெளியேறி வந்தேன்! செம ரம்யமான க்ளைமேட்டைப் பார்த்த போது - அட ... முக்கால் கிலோ மீட்டர் தூரம் தானே ஹோட்டலுக்கு ! நடந்தே போய் விடலாமென்றுபட்டது! தோளிலிருந்த காமிக்ஸ் மாதிரிகளில் டெக்ஸ் நீங்கலாக பாக்கி  எல்லாமே அந்தந்தப் படைப்பாளிகள் வசம் தாவியிருந்ததால், பளு போட்டுத் தாக்கவில்லை! சாவகாசமாய் நடக்கலானேன்! மைய ரயில் நிலையத்தைத் தாண்டியே எனது ஹோட்டலுக்குச் சென்றாக வேண்டும் & ரயில் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் காலங்காலமாய் சரக்கடித்துத் தள்ளாடும் கும்பல் இம்முறை செம அதிகளவில் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிந்தது! முக்கால்வாசிப் பேர் கஞ்சாவின் போதையில், கண்களெல்லாம் வெறித்து நிற்பதும், தங்களுக்குள் கத்திக் கூப்பாடு போட்டுக் கொள்வதுமாய் இருந்து வந்தனர். அது ஏனோ தெரியவில்லை - எது மாறினாலும் 'நகரின் மையத்தினில் இந்த ஒச்சம் மட்டும்  மாற்றம் காணக் காணோம்!

ஒரு மாதிரியாய் ரூமிற்குப் போன பின்னே, மறுநாள் அதிகாலையில் திரும்பும் ப்ளைட்டைப் பிடிக்க வேண்டியிருந்ததால், அழுக்குத் துணியைப் பெட்டிக்குள் திணித்துப் போட்டு விட்டு தயாரானேன்! வியாழன் & வெள்ளி - என 2 நாட்களே ஜெர்மானிய ஜாகை என்ற போதிலும் நாம் பார்க்க வேண்டிய அத்தனை பதிப்பகங்களிடமும் அட்டெண்டன்ஸ் போட்டு வைத்திருந்த திருப்தி விரவிக் கிடந்தது! And எனது குறிப்புகளில் இடம்பிடித்திருந்த புதுக் கதைகளும், தொடர்களும் அடுத்த சில ஆண்டுகளுக்கு நமக்கு வழிகாட்டிடும் என்ற மகிழ்வுமே! காமிக்ஸ் எனும் கனவுலகில் ஆழ்ந்தபடிக்கே தூங்கிப் போனவன் அதிகாலையில் எழுந்து பெட்டியை உருட்டிக் கொண்டு போய் சீக்கிராய் ஏர்போர்ட்டில் குந்திய போது தான் உரைத்தது - ஆஹா இன்று சனிக்கிழமை aka பதிவுக்கிழமை என்று ! ஒரு ஓரமாய் ஒதுங்கியபடியே, விறுவிறுவென எழுத ஆரம்பித்தேன் - ஆபீஸுக்கு வாட்சப்பில் சூட்டோடு சூடாய்ப் பக்கங்களை அனுப்பியபடிக்கே !

சென்னைக்கு ப்ளைட் மாற அபுதாபியில் இறங்கிய போது தான் ஜுனியர் இங்கே பதிவினை upload செய்து கொண்டிருக்க, ஒரு பீட்ஸா சாப்பிட ஆர்டர் தந்த கையோடு, லைனில் நின்றபடிக்கே கண்ணில்பட்ட பிழைகளை என் செல்லிலிருந்தே திருத்திட முயன்று கொண்டிருந்தேன்! கடைக்காரர் சூடு பண்ணித் தந்திருந்த பீட்ஸாவை பதிவினை வாசித்தபடிக்கே வாய்க்குள் திணிக்க, சூட்டில் நாக்கும், மேல் அன்னமும் புண்ணாகிப் போனது! ஆத்தாடியோவ் ... பதிவில் சூடுபடுவது பற்றாதென்று இது வேறயா? என்றபடிக்கே மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து, சென்னை ப்ளைட்டைப் ப்ளைட்டைப் பிடித்து ஞாயிறு அதிகாலையில் நம்மூர் திரும்பிய போது அதிகாலை 3.30. ! அங்கிருந்து மதுரைக்கான ப்ளைட்டை உறக்கத்தில் சாமியாடியபடியே பிடித்து வீடு சென்று போது காலை 9 ஆகிவிட்டிருந்தது & மறுநாள் தீபாவளி ! தொடர்ச்சியாய் 3 தினங்கள் விடுமுறைகள் என்ற குஷியில் ஒரு கெட்டத் தூக்கத்தைப் போடலாமென்று நினைத்தால் - ஊஹும்; காத்திருந்த அட்டவணை சார்ந்த சிந்தனைகள், குறுக்கும், நெடுக்குமாய் ஓட்டம் பிடித்தன! ப்ராங்க்பர்ட் புதுவரவுகளில் எதையேனும் உள்ளே புகுத்தலாமா? அல்லது அட்டவணையினை நோண்டாமல் விட்டு விடலாமா? ! என்ற தர்க்கம் ஓடியது உள்ளுக்குள் ! இறுதியில் இந்தப் புதுவரவுகளை முறைப்படி பரிசீலிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு, அவற்றிற்கான ஏற்பாடுகளையும் செய்தான பின்னே திட்டமிடலே சிறப்பென்று தீர்மானித்தேன்!

For sure - 2 புதுத் தொடர்கள் பற்றிய அறிவிப்பு சீக்கிரமே இருந்திடும்! 

And பாக்கி சகலமும் 2024-க்கே சாத்தியம் என்பதால் நமது பீரோவுக்கு இவை குதூகலமான புதுவரவுகளாகிடும் !  ஏதேனுமொரு கனவு தினத்தில் ஆண்டுக்கு 100 புக்ஸ் போடும் ஆற்றல் நமக்கும், அவற்றை வாங்கிட, வாசித்திட நேரம் உங்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் - அட...அடா...அடாாா...ஒரு திருவிழாவையே கண்ணில் பார்த்து விடலாமன்றோ ?! புலரும் ... அத்தகையதொரு பொழுது ஒரு தூரத்து நாளில் புலருமென்ற கனவோடு கிளம்புகிறேன்! Bye all... See you around! Thanks for reading this !!

P.S: 

SUPREME '60s 

&

ரெகுலர் சந்தா 2023 

இரண்டிலுமே இணைந்து கொள்ள எண்ணும் நண்பர்கள், அவசியமாகின் 3 தவணைகளில் பணம் செலுத்தலாம் !