Friday, May 31, 2019

ஹல்லோ ஜூன் !

நண்பர்களே,

வணக்கம்...சில பல Bata செருப்புகள் இம்மாதச் செலவுகணக்கில் கூடுதல் ; ஆனால் "பொட்டிகள்" இன்றைக்கு கிளம்புகின்றன என்பது good news !! பள்ளிகளின் துவக்க வேளை கூப்பிடு தூரத்தில் நிற்க, இங்கே சிவகாசியில் அச்சகங்கள் & பைண்டிங் நிறுவனங்களில் - நோட்ஸ் ; கைடுகள் ; டயரி ; பாடப்புத்தகங்கள் என வேலைகள் நிரம்பி வழிந்த வண்ணமுள்ளன ! நமது அச்சகத்திலுமே இதே கதை தான் ! வெளியூரிலிருந்து வந்து காத்திருக்கும் பார்ட்டிகள் தூங்கச் சென்ற பிற்பாடு ராக்கூத்தடித்து தான், எனக்கே நமது புக்குகளை அச்சிடவே முடிந்தது !! 

செவ்வாயிரவே ஜம்போவின் இளம் TEX & மார்ட்டின் கதைகள் அச்சாகி முடிந்து விட்டிருந்தன & பாக்கி 2  கலர் இதழ்களோ 15 நாட்களுக்கு முன்னேவே நிறைவுற்று பைண்டிங்கில் தூங்கிக் கொண்டிருந்தன ! புதன் காலை முதல் பைண்டிங் ஆபீஸ் படையெடுப்பில் Bata-க்கள் தேயத் துவங்கிட - அங்கே மலையெனக் குவிந்து கிடந்த வெளி வேலைகளைப் பார்க்கும் போதே மலைப்பாய் இருந்தது ! பைண்டிங் நண்பருக்கு போன் அடித்துப் பேச முற்பட்டால் - ஊஹூம் அடிக்கும் செல்லை எடுக்க ஆள் நஹி ! நேற்றைக்கு இரவு வரைக்குமே வேலையை எடுக்கவே இல்லை என்ற நிலையில் எனக்கு வெறுத்தே போய் விட்டது ! ஒரு மாதிரியாய் நேற்றிரவு எட்டரை மணிக்கு உரிமையாளரை நேரில் பார்த்த கையோடு மைதீன் போன் போட்டு என் கையில் தந்திட - 'அய்யா..சாமி.தெய்வமே...கவுத்திப்புடாதீங்கய்யா !! மாசம் முடியுது நாளைக்கு !' என்று ஒப்பாரி வைத்தேன் ! 'எப்படியாச்சும் காலையிலே 4 புக்குகளையுமே தந்துடறேன் !' என்று அவர் சொன்ன போது கூட எனக்கு நம்பிக்கை லேது ; ஆனால் வெளியே சுற்றி விட்டு நண்பகல் சுமாருக்கு இன்று ஆபீசுக்குள் நுழைந்தால், வெயிலில் மினுமினுக்கும் கலர் கலரான அட்டைப்படங்களுடன் புக்குகள் லோடு ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன !! "மனுஷன் கில்லாடிய்யா.....!" என்ற எண்ணம் தலைக்குள் ஓட - பேக்கிங் வேலைகள் துவங்கிவிட்டன ! அடுத்த 2 மணி நேரங்களுக்குள் சகலமும் கூரியருக்குக் கிளம்பியிருக்கும் ! இனி அடுத்த பஞ்சாயத்து அவர்களோடு தான் எனும் போது சொம்பைத் தூக்கிக் கொண்டு, ஜமுக்காளத்தைக் கம்மங்கூட்டுக்குள் செருகிக் கொண்டு நடையைக் கட்டுகிறேன் folks அந்தத் திக்கில் !!

DTDC-ல் சிக்கல் இராது ; டாணென்று ரசீதை போட்டுக் கையில் கொடுத்து விட்டு டப்பிக்களையும் அனுப்பி விடுவார்கள் !! ஆனால் ST எவ்வித வரம் தரக் காத்துள்ளனரோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! So நாளைய பொழுதை புக்குகளோடு துவக்கிடும் கொடுப்பினை கொண்ட நண்பர்களுக்கு happy reading சொல்லிக் கொள்கிறேன் !! அதே கையோடு - 'உன்னை வெள்ளிக்கிழமை புக் அனுப்பாதேன்னு முன்னமே சொல்லியிருக்கோம்லே ?' என்று தேய்ந்த Bata-க்களால் குமுறக் காத்திருக்கும் இதர நண்பர்களுக்கு happy சாத்திங் !!" எல்லாத் தீர்மானங்களும், எல்லா வேலைகளிலும் என் கையில் இருப்பதில்லையே...!! Thanks for your understanding guys !

Anyways - bye all for now !! பேக்கிங் முடிந்த கையோடு ஆன்லைன் லிஸ்டிங் செய்திடுவோம் ! 

Saturday, May 25, 2019

சின்னவர் vs சின்னவர்..!

நண்பர்களே,

வணக்கம். அநேகமாய் காத்திருக்கும் புது மாதத்து இதழ்களின் preview-களைக் கண்ணில் காட்டாமலேயே இடைப்பட்ட சில பல வாரங்களை ஒப்பேற்றச் சாத்தியமாகியுள்ள முதல் தருணம் இதுவாகத்தானிருக்குமென்று நினைக்கிறேன்! மே மாத மெகா இதழ்கள் ; XIII Spin-offs ; லக்கி லூக் Spin-off (Spoof ?); 'தோற்றோர் பட்டியல்' என்று விதவிதமான வடைகளை வாயால் சுடவொரு வாய்ப்புக் கிட்டியதால் புதுசுகளைக் களமிறக்கிட அவசியமின்றி நாட்களைக் கடத்தியாச்சு ! But இதோ – மாதம் முடிய ஒரே வாரம் எஞ்சியிருக்கும் தருவாயில், all புதுசுகளை ‘ஏக் தம்மில்‘ வலம் வரச் செய்திடத் தயாராகி விட்டேன்!

In some ways, இது “சின்னவர்களின் மாதம்”!! And நம்மளவிலாவது இரு ஜாம்பவான்களாய் உசந்து நிற்கும் இரு அசாத்தியர்களின் face to face மாதமும் கூட ! அதென்ன சின்னவர்களின் மாதம் என்கிறீர்களா ? இம்மாத அட்டவணையின் 2 பிரமுகர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?

- இளம் TEX

- இளம் டைகர்

ஆக இரு ஜாம்பவான்களின் சின்ன வயதுச் சாகஸங்கள் பக்கமாய் பார்வை ஓடிடுவது ஒரே வேளையில் எனும் போது, காத்திருக்கும் ஜூன் மாதத்திற்கு – “சி.மா.” என்ற பெயர் சூட்டல் பொருத்தம் தானே?

ஜம்போவின் சீஸன் # 1-ல் அறிமுகமாகிய “சின்ன இரவுக்கழுகார்” ஒரு போக்கிரி அவதாரில் கலக்கிய இளம் பிராயத்து நாட்களைக் கதாசிரியர் மௌரோ போசெல்லியின் கைவண்ணத்தில் (காற்றுக்கு ஏது வேலி ?)ரசித்திருந்தோம் ! அந்த இளம் டெக்ஸ் கதையோட்டத்துக்கு இத்தாலியிலும், இன்னபிற டெக்ஸ் மார்க்கெட்களிலும் வரவேற்பு செமையாக இருந்திட, சற்றே ஆழமாய், அழுத்தமாய் டெக்ஸின் ப்ளாஷ்பேக்கினுள் பார்வைகளைப் பாய்ச்ச படைப்பாளிகள் கச்சைகட்டத் துவங்கினர். அதன் இன்னொரு பரிமாணம் தான் இம்மாத ஜம்போவில் நாம் ரசித்திடவுள்ள “சிங்கத்தின் சிறுவயதில்” 256 பக்க black & white ஆல்பம் ! டெக்ஸின் பெற்றோர்கள் யார் ? அவரது சகோதரர் ? பால்ய சகாக்கள் ? இளவயது அனுபவங்கள் ? என்று தீட்சண்யமாய் நமக்குச் சித்தரித்திட மௌரோ போசெல்லி மீண்டும் முயற்சித்திருக்கிறார் இந்த crackerjack இதழில் ! இத்தாலிய மொழியில் இந்த இதழ் ஈட்டியுள்ள landmark வெற்றி – டெக்ஸின் சகாப்தத்தில் இன்னுமொரு வைரக்கல் ! 

இளையவரின் பாணிக்கும் வாசகர்களிடையே கிட்டிய இந்த தடாலடி வெற்றியானது, புத்தம் புதுசாய் ஒரு டெக்ஸ் மாத இதழையே உருவாக்கும் அளவிற்கு போனெல்லியைத் தயார்ப்படுத்தியுள்ளது என்றால் அதன் impact என்னவென்று புரிந்து கொள்ள முடியும் தானே ? “TEX” என்ற லேபிலில் ஏற்கனவே கதைகள் மாதம்தோறும் களமிறங்கி வரும் நிலையில், போன நவம்பர் முதலாய் "TEX WILLER" என்ற லேபிலில் “போக்கிரி டெக்ஸ்” தனித்தடத்தில் தடதடக்கத் துவங்கியுள்ளார் ! அதே நண்பர்கள் (ரேஞ்சர்கள்) அணி ; அதே செவ்விந்தியக் கிளர்ச்சி ; ஆயுதக் கடத்தல் ; ஊழல்கார உள்ளூர் ஷெரீப் ; மோசடிக்காரப் பண்ணையார் ; என்ற ரீதியில் கதைகளைச் சொல்லி வருவது என்றைக்கேனும் அயர்வுக்கு வித்திட்டு விடக் கூடும் என்று நினைத்தார்களோ என்னவோ – முற்றிலும் புதுசானதொரு திசையில் “சின்னவரின்” வண்டியைச் செலுத்தி வருகிறார்கள் ! And எனக்குத் தெரிந்த வரைக்கும் இந்தப் புது TEX WILLER லேபிலும் சக்கை போடு போட்டு வருகிறது ! ஓவிய பாணிகளில் compromise ஏதுமின்றி, மிக அட்டகாசமான தரத்திலான ராபர்டோ டி ஆஞ்சலிஸின் உயிரோட்டமான சித்திரங்களும் வலு சேர்க்க – இந்த 64 பக்க ஆல்பங்கள் இத்தாலியின் புதிய தலைமுறையையும் சுண்டி இழுத்து வருகிறதாம் ! பெருமூச்சே முஞ்சுகிறது இந்தப் புது ‘புல்லெட் டிரெயின்‘ தடதடப்பதைப் பார்க்கும் போது ! ஏற்கனவே உள்ள தொடரில் அவர்கள் 700+ கதைகளோடு பிய்த்துப் பிடுங்கிக் கொண்டு, பாய்ந்து சென்று கொண்டிருக்க, இப்போது நம்மை உசுப்பேற்ற இந்தப் புது முயற்சியும் இணைந்து கொண்டு விட்டது ! 

நாம் சமீபமாய்ப் பார்த்து வரும் அந்த 32 பக்க மினி கலர் TEX சாகஸங்கள் இந்தப் புது (போக்கிரி) டெக்ஸ் முயற்சிகளுக்கொரு வெள்ளோட்டம் என்பது இப்போது புரிகிறது ! அதாகப்பட்டது, பெரியவர் செர்ஜியோ போனெல்லியின் துவக்க நாட்களில் டெக்ஸ் கதைகள் 75 பக்கங்களிலும் இருந்திடும் ; 100 பக்கங்களையும் ஆக்கிரமித்திடும் ; 160+ ; 190+ ; 240+ என்றும் வெவ்வேறு விதமான நீளங்களில் பயணிப்பது வாடிக்கை ! நம்மைப் போல முழுமையான கதைகளையே ஓரிதழாய் வெளியிடும் அவசியமெலாம் அவர்களது மார்க்கெட்டில் நஹி ! So ஒரு 190 பக்க சாகஸமானது, இதழ் நம்பர் 36-ன் இறுதியில் கொஞ்சமாய் ஆரம்பித்து  ; 37-ல் ஓடி ; 38-ல் முடிவதெல்லாம் சர்வ சாதாரணம்! (எனது கேச அழகு(!!)க்கு இந்த நூல் பிடித்து கதையின் தலையையும்; வாலையும் இனம் காணும் முயற்சிகளுக்கும் பெரும் பங்குண்டு ! போனெல்லியில் ஆண்டுதோறும் கதைத் தேர்வுகளைத் தெரிவிக்கும் வேளையிலேயே அவை எந்த இதழ் to எந்த இதழ் ஓடுகின்றன என்பதைத் தெளிவாகத் தெரிவித்திட வேண்டும் ; 'டெக்ஸ்' எனும் சமுத்திரத்தில் சவாரி செய்யும் அவர்களது records பிரிவு இல்லையேல் தடுமாறிப் போவார்கள்! ) So டெக்ஸ் சிங்கள் ஆல்பங்கள் (110 பக்கங்கள்) ; ஒன்றரை ஆல்பங்கள் (160+ பக்கங்கள்) ; டபுள் ஆல்பங்கள் என்றெல்லாம் கலந்து கட்டி அடித்து வந்தார்கள் துவகத்தில் ! சிறுகச் சிறுக கதாசிரியர்கள் மாற்றம் கண்ட வேளைகளில் கதைகளின் நீளங்கள் சீராகத் துவங்கின! And மௌரோ போசெல்லி அவர்கள் TEX எடிட்டராய் பொறுப்பேற்கத் துவங்கிய பிற்பாடு ஸ்பஷ்டமாய் "220 பக்கங்கள் – டபுள் ஆல்பம்" என்பதே நார்மலான format என்றாகியது ! MAXI டெக்ஸ் என்ற பெயரில் வெளியாகும் ஸ்பெஷல்கள் மட்டும் 330 பக்கங்கள் என்று அமைத்துக் கொண்டார்கள் ! So ஒரு டெக்ஸ் சாகஸத்தை விவரிப்பதென்றால் அதற்குக் குறைந்தபட்சம் 220 பக்கங்கள் அவசியமென்றதொரு அரூப விதி நடைமுறையிலிருக்க, பற்பல கதாசிரியர்களும் அதற்கேற்பவே திட்டமிடத் துவங்கினர் ! அவ்விதமிருக்க, வெகு சமீபமாய் அறிமுகமான COLOR TEX ஸ்பெஷல் ஆல்பங்களில் – 4 அல்லது 5 சிறுகதைகளின் வண்ணத் தொகுப்புகளை இணைத்து வெளியிட்டு ஆச்சர்யமூட்டும் ஹிட்டடித்தனர் ! புதுசாய் ஏ-க-ப்-ப-ட்-ட கதாசிரியர்களை இனம் கண்டு ; புத்தம் புது ஓவியர்களிடம் பொறுப்புத் தந்து இந்த மினி சமோசாக்களை, செம சுவையாய் உருவாக்கிடுவதில் வெற்றி கண்டார் போசெல்லி ! நம்மைப் போலவே இத்தாலியிலும் – “அட… நம்மவரை இது போன்ற சின்னஞ்சிறு களத்திலுமே ரசிக்க முடியுமா? திறமையான கதாசிரியரின் கைவண்ணம் சாத்தியமாயின் கடுகுமே சுவையூட்ட முடியும் போலும் !” என்று வியக்கத் தொடங்கினர் ! பின்நாட்களில் பெருசு பெருசாய், நீள நீளமான சாகஸங்களை வாசிக்கும் பொறுமை வாசகர்களிடையே குன்றிப் போனாலோ ; புதுசாய் ஒரு crisp பாணியைக் கையிலெடுக்க போனெல்லி பதிப்பகம் நினைத்தாலோ – அதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தயாராக இருந்திட வேண்டுமென்ற தீர்க்கதரிசனம் மௌரோ போசெல்லிக்கு இருந்ததாலேயே இந்தச் சிறுகதை track-க்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கியிருக்கிறார் என்பது இப்போது புரிகிறது ! அந்த மினி கலர் சாகசங்களின் வெற்றி அனுபவம் கைகொடுக்க, மௌரோ போசெல்லியே நேரடியாய்க் களமிறங்கி “போக்கிரி டெக்ஸ்” வரிசையின் (இதுவரையிலான) எல்லாக் கதைகளையும் எழுதியுள்ளார் ! இங்கிருந்தபடிக்கே, இத்தாலி இருக்கக்கூடிய மேற்கு திசையை நோக்கிப் பெருசாய் ஒரு வணக்கத்தைப் போடத் தோன்றுகிறது ! போசெல்லி… நீர் தேவுடு !!

Back to the present – இதோ “சிங்கத்தின் சிறுவயதில்” அட்டைப்பட முதல் பார்வை ! 
Of course – ஒரிஜினல் டிசைனே ; வர்ணங்களில் மட்டுமே மாற்றங்களோடு ! And ஜம்போவின் தயாரிப்பில் எப்போதுமே ஒரு notch உசத்தி தென்பட வேண்டுமென்ற அவாவில் – இதழின் பெயரினை மினுமினுக்கச் செய்துள்ளோம் ! புக்கைக் கையில் ஏந்திடும் போது அதனை ரசித்திடலாம் ! And 256 பக்க ஆல்பம் எனும் போது அட்டை to அட்டை கதையிருக்கும் ! ஜம்போவின் இன்னொரு template ஆன – “No நொச-நொச; only கதை!” என்ற ஃபார்முலா இம்முறையும் அமலிலிருக்கும் ! இதன் எடிட்டிங்கை திங்களுக்குள் முடித்து, அச்சுக்குக் கொண்டு செல்லும் பரபரப்பே இந்த நொடியில் எனக்கு !
அடுத்த “சின்னவர்” – நாம் ஏற்கனவே ரசித்துள்ள ஒரு black & white சாகஸத்தை இம்முறை தரமான, வண்ணத்திலான பெரிய சைஸில் நமக்கு நடத்திக் காட்ட முனைந்திடும் இளம் டைகர் ! “இளமையில் கொல்” நமது கௌ-பாய் ஸ்பெஷல் இதழில் வெளியான சாகஸம் என்று ஞாபகம் ! தட்டை மூக்காரின் துவக்க நாட்கள் ; அவர் பட்டாளத்தில் சேர்ந்தது எவ்விதம் ? பிறப்பால் தெற்கத்தியராக இருந்தாலும் வடக்கின் படையில் அவர் நுழைந்தது எவ்விதம் ? சும்மா பீப்பீ ஊதும் பொறுப்பிலிருந்த மனுஷன் அடுத்தடுத்து புரோஷன்களைக் கண்டது எவ்விதம் ? என்றெல்லாம் சொல்ல முனையும் இந்தத் துவக்கப் புள்ளியைக் கலரில் – (சற்றே புராதனமான) அடர் வண்ணங்களில் பார்த்திடவிருக்கிறோம் ! டைகரின் அடையாளமான அந்த அசாத்திய மதியூகம் அவரது ஆயுட்காலத் துணை என்பதை இந்த ஆல்பம் நமக்குச் சொல்லும்! புதுசாய் படிப்போர்க்கு மட்டுமன்றி, தளபதியாரின் ரசிகக் கண்மணிகளுக்கும் இந்த இதழ் நிச்சயமாய் லயிக்குமென்று நினைக்கிறேன்! இதோ இந்த classic மறுபதிப்பின் ஒரிஜினல் அட்டைப்படம் – துளியும் மாற்றமின்றி ! திரு.மோபியஸ் போன்றதொரு ஜாம்பவானின் கைவண்ணம் இந்த அட்டைப்படம் எனும் போது, அதனை நோண்டுவது குசும்பாகிப் போகும் என்பதால், ‘சிவனே‘ என்று ஒரிஜினலை அப்படியே தந்துள்ளோம் ! 
‘சின்னத் தல‘ ஆல்பத்தின் நீளமோ – நவீனமோ ‘சின்னத் தளபதியின்‘ ஆல்பத்தில் நஹி என்றாலும் தற்செயலாய் அமைந்து விட்டுள்ள இந்த ‘நேருக்கு-நேர்‘ நமக்கெலாம் நிச்சயம் சுவாரஸ்யத்தை ஒரு மிடறு ஜாஸ்தியாக்கிடும் என்று நினைக்கிறேன் ! And மக்களே – இது தற்செயலான pairing தான்! பிலீவ் மீ!
Moving on – இம்மாத இதழ்களுள் கலக்கக் காத்திருக்கும் கார்ட்டூன் பார்ட்டிகள் இதோ! அத்தி பூத்தாற் போலவே இப்போதெலாம் கார்ட்டூன் இதழ்கள் தலைகாட்டுகின்றன எனும் போது – உட்சிட்டியின் இந்த ரகளைப் போலீஸாரின் ரவுசுகளை நான் செமத்தியாக ரசித்தேன்! “ஒரு ஷெரீப்பின் சாஸனம்!” நமது ரவுண்ட் பன் மண்டை டாக்புல்லின் ஒரு டெரர் முகத்தைக் கட்டவிழ்த்துக் காட்டுமொரு கெக்கே-பிக்கே மேளா என்பேன் ! நகருக்குள் அராஜகம் தலைவிரித்தாட – அதை அடக்க தனது புஜபல பராக்கிரமத்தை சார்வாள் கடைவிரிக்க, 44 பக்கங்களுக்குக் கூத்து தொடர்கிறது ! ‘கும்-கும்‘ என்று குத்தும் ஆக்ஷன் சாகஸங்களுக்கு இணையாக இந்த கார்ட்டூன் அலப்பரைகளையும் நீங்கள் ரசித்திட மட்டும் ஓ.கே. சொல்லி விட்டால், ஆகா… ஆகாகா… மாதா மாதம் எனது பணிகள் இன்னமுமே ரம்யமாகிப் போய்விடுமே !! நொடிக்கு நூறு தோட்டாக்களை உமிழும் கதைளிலெலாம் லாஜிக் பார்க்காது – இந்தச் சிரிப்புப் பார்ட்டிகளைத் தரத் தணிக்கைகளுக்கு உட்படுத்துகிறீர்களே… இது நியாயமாங்க சாரே ?

இதோ அட்டைப்பட முதல் பார்வை – again ஒரிஜினல் டிசைனோடே! வர்ணச் சேர்க்கைகள் மட்டும் நமது DTP அணியின் கோகிலாவின் கைவண்ணம் ! And எழுத்துருக்கள் ஓவியர் சிகாமணி! தொடர்வது உட்பக்கத்தின் preview-ம்! Enjoy!

Last but not the least – இதோ இம்மாத சந்தா B-ன் ஆல்பத்தின் முதல் பார்வையுமே ! மர்ம மனிதன் மார்ட்டினின் அட்டைப்படங்களை நாமாய் வரைய முற்படும் போதெலாம், கிராமத்தில் கோழி திருடிவிட்டு மாட்டிக் கொள்பவர்களின் லுக்கே சாத்தியப்பட்டு வந்துள்ளது! So வம்பே வேணாம்டா சாமி ! என்ற நினைப்பில் ஒரிஜினல் அட்டைப்படத்தை அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம் ! “நியூட்டனின் புது உலகம்” அட்டைப்படத்தில் மாற்றமின்றி உட்பக்கச் சித்திரங்களிலும் அட்டகாசமாய் மிளிரவுள்ள இதழ் ! படு ஸ்டைலிஷான சித்திரங்களோடு மார்ட்டின், கதைநெடுக வலம் வருகிறார் !

So சின்ன ஜாம்பவான்கள் இருவர் + ஒரு சிரிப்பு டீம் + ஒரு மர்ம ஜாம்பவான் என்றதொரு கூட்டணி உங்களைச் சந்திக்கக் காத்துள்ளது - எதிர்வரும் மாதத்தில் ! ஏதோ பார்த்துப், பதவிசாய்க், கரைசேர்த்து விடுங்கள் சகோக்களே…! எலெக்ஷன்களில் சில பல கூட்டணிகள் வாங்கியுள்ள தர்ம அடி ஏற்படுத்திடும் கிலியே இந்தக் கோரிக்கையின் பின்னணி ! நாங்க சாத்வீகக் கூட்டணி சாமியோவ் !

மீண்டும் சந்திப்போம் all ! Have a fun weekend ! Bye for now !!

Wednesday, May 22, 2019

"மனமிருந்தால் மார்க்கபந்து !"

நண்பர்களே,

வணக்கம்.நிறைய எண்ணச் சிதறல்கள் ; நிறைய அலசல்கள் ; நிறைய பின்னூட்டங்கள் என்று இன்னொரு பதிவு ஓடியிருப்பதில் செம happy ! And வகுப்புக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் நாயகர்களுக்கு இன்னமும் support இருப்பதைப் பார்த்திடும் போது வியப்பே மேலோங்குகிறது !  இந்த 'உள்ளே-வெளியே' ஆட்டம் சுவாரஸ்யமானதே என்றாலும், 'ரிஜிட்டான பார்ட்டிகளை' மறுபடியும் உள்ளே கொணரும் தீர்மானத்தை ஒரு வண்டி அலசலின்றிச் செய்திட நான் தயாரில்லை ! So பார்க்கலாமே, இங்கு எதிரொலித்துள்ள குரல்களுக்கு இணையத்தினில் இணைந்திருக்கா நண்பர்கள் எவ்விதம் react செய்கிறார்களென்று ! எது எப்படியோ - சமீப அலசல்களின் பலனாய் உங்கள் ரசனைகள் எத்தனை மெருகேறியுள்ளன என்பதும் சரி ; உங்களின் எதிர்பார்ப்புகள் / அளவீடுகள் எத்தனை உசரத்துக்கு எகிறி நிற்கின்றன என்பதும் சரி -  பளிச்சென்று புரிகிறது !  இப்போதெல்லாம் Lone ரேஞ்சர் போன்றதொரு நாயகரே நம்மிடையே முத்திரை பதிக்க குட்டிக்கரணம் அடிக்க வேண்டியுள்ளதெனும் போது, ரெம்போ கெடுபிடியான ஜூரிக்கள் நீங்கள் என்பது தெள்ளத் தெளிவு !

அப்புறம் கடைசிப் பதிவினில், நிறைய நாயக அலசல்களோடு, இறுதியாய் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வது குறித்த தலைப்பில் நண்பர் பொடியன் ஆதங்கத்தோடு பதிவிட்டிருந்ததையும் ரசித்தேன் !

Cut to a week ago : சமீபமாய் நண்பர் ஒருவரின்  குட்டிப் பெண் நமது "மியாவி" இதழைக் கையில் ஏந்திக் கொண்டு கதை சொல்லும் வீடியோ ஒன்றினை எனக்கு அனுப்பியிருந்தார் ; வசனங்களே இல்லாத அந்த ஒரு பக்கப் பூனைக் கதைகளுக்கு நுணுக்கமாய் ஒரு கதையை அனுமானித்துக் கொண்டே அந்த மழலை  பேசியது அத்தனை அழகு !! "அட....நண்பர்கள் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றியதொரு இதழுக்கு இப்படியுமொரு பலனா ?" என்று சந்தோஷப்பட்டுக் கொண்ட கணமே, "இதே போல் இன்னமும் ஏதாச்சும் ஆண்டுக்கு ஒருவாட்டியாவது வெளியிடணுமோ ?" என்ற நினைப்பும் உள்ளுக்குள் ஓடியது ! இந்த மியாவி தொடரின் புக் # 2 கூட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே அங்கே வெளியாகியிருப்பதும் நினைவுக்கு வர, "சந்தர்ப்பம் அமையுதா பார்ப்போம் !" என்று நினைத்துக் கொண்டேன் !!  And ஒரே வாரத்தில் நான் மறந்து போயிருந்த அந்த topic அகஸ்மாத்தாய் இங்கே தலைகாட்டியிருக்க, எனக்கு ரொம்பவே சந்தோஷம் !!

Back to the present : "வாசிப்பை நேசிப்போம் " ; "புத்தகங்கள் நம் தோழர்கள்" என்றெல்லாம் அவ்வப்போது புத்தக விழாக்களில் slogan-களை வாசித்திருப்போம் ; கொட்டாவி விட்டபடிக்கே நகர்ந்தும் போயிருப்போம் ! "ஓட்டம்..ஓட்டம்..ஓட்டம்" என்பதே இன்றைக்கு நமக்கெல்லாம் வாழ்க்கையாய் ஆகிப் போயிருக்கும் சூழலில் நாம் படிக்க நேரம் எடுத்துக் கொள்வதே ஒரு பெரும் பிரயத்தனம் என்றாகிவிட்டது ! 'இந்த அழகில்  ஜூனியர்களுக்கு அந்தச் சுவையைப் புகட்ட நேரத்தைத் தேட நானெங்கு போவேன் ?' என்று உள்ளுக்குள் நம் எல்லோருக்குமே ஒரு ஆற்றமாட்டாமை இருக்காது போகாது தான் ! ஆனால் finding the time & the patience for it - சுலபமே அல்ல தான் ! "மனமிருந்தால் மார்க்கபந்து !" என்ற கோலிவுட் பொன்மொழியைத் தான் இங்கே ஒரு தீர்வாய்ச் சொல்லத் தோன்றுகிறது !

நம் பங்குக்கு கருத்துக் கந்தசாமியாய் மாத்திரமே இருந்திடாது - வாண்டுகளுக்குக் கதை சொல்ல ஏதுவாய் ஒரு மினி இதழை, தலா சென்னை & ஈரோட்டுப் புத்தக விழாக்களின் போது இனி வெளியிடலாம் என்றிருக்கிறேன் ! மூத்த புலவரின் நீட்டி முழக்கல்கள் ஜாஸ்தி அவசியப்படா, சிம்பிளான ஆக்கங்களாய்த் தேடிப் பிடித்து, சின்னதொரு விலையில்  வெளியிட, 2020 முதல் ஒரு பிள்ளையார்சுழியினைப் போட்டுத் தான் பார்ப்போமே ?!  And மியாவியின் புக் # 2-ஐ இந்தப் புது முயற்சிக்கு ஆரம்பமாக்கிட இயல்கிறதாவென்றும் பார்க்கப் போகிறேன் !
அது தவிர, வாண்டுக்களுக்கு சுவாரஸ்யமூட்டக்கூடிய வேறு 2 அழகான / சிம்பிளான கார்ட்டூன் தொடர்களுமே எனது குறிப்புகளில் உள்ளன ! So அவற்றிற்கும் உரிமைகளை வாங்கிவிட்டு, சந்தாவின் அங்கமாக்காது - "விரும்புவோர் வாங்கிக்கலாம்" என்று ஆண்டுக்கு இருமுறை வெளியிட்டுத் தான் பார்ப்போமே ! Oh yes - ஒற்றை ராத்திரியில் இது லோகத்தைப் புரட்டிப் போட்டுவிடப் போவதில்லை தான் ; ஆனால் பத்தே பத்து வாண்டுக்களை வாசிப்பின் பக்கமாய்ச் சுண்டியிழுக்க இந்த முயற்சி வெற்றி கண்டாலும் கூட முட்டுச்சந்துப் புலவர் ஹேப்பி அண்ணாச்சி  ! யார் கண்டது - ஏதேனுமொரு தூரத்து நாளில் "சந்தா V for வாண்டூஸ்" என்றொன்று அமைந்திட இதுவே கூட ஆரம்பப்புள்ளியாய் இருக்கக்கூடும் தானே ? மனமிருந்தால் மார்க்கபந்து !! 

Bye guys ; see you around !! "சிங்கத்தின் சிறுவயதில்" அழைக்கிறது !!

Saturday, May 18, 2019

They came...They saw...They left...!

வணக்கம் நண்பர்களே,

தொரை என்ன இங்கிலீசுலாம் பேசுதுன்னு பார்க்கிறீர்களா ? இங்கிலீசு மட்டுமா, கவிதையுமே காத்திருக்கு ஒபெனிங்கிலேயே !! 

வந்து...நின்று..வென்றவர் பலர்..!

வந்து..நின்று..சென்றவர் சிலர் ! 

திடீரென ராகுல் சஹர் ரேஞ்சுக்கு வார்த்தைகளில் ஸ்பின் போடுறானே...விசேஷம் என்னவோ என்ற கேள்வியா ? வேறொன்றுமில்லை - spin-offs ; நின்ற நாயகர்கள் ; நொந்த நாயகர்கள் என்றெல்லாம் சமீபப் பதிவுகளில் அலசிய போதே நமது இரண்டாம் வருகையினில் இதுவரைக்கும் ஆஜராகி, ஏதேதோ காரணங்களின் பொருட்டு ரிவர்ஸ் கியர் போட அவசியமாகிப் போனவர்களைப் பற்றிய நினைப்பு மனதில் நிழலாடியது ! சரி....அது தான் 'ரிஜிட்' என்று கவுண்டர் பாணியில்  கழித்த பிற்பாடு அவர்களை பற்றிய அலசல் ஏனோ ? என்று கேட்கிறீர்களா ? Absence makes the heart grow fonder என்பார்கள் !! கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றித் திரியும் வரைக்கும்..."ஏய்..உசுர வாங்காம அப்பாலிக்கா போவியா ?" என்று திட்டும் நாமே, கொஞ்ச காலமாய் அந்த உருப்படி கண்ணில்  தென்படாது போகும் சமயம்.."அட...பயல் இருந்தவரைக்கும் கல கலன்னு இருந்துச்சே....இப்போ இடமே வெறிச்சோடிக் கிடக்கே..!" என்று நினைப்பதில்லையா ? அந்த பாணியில், நாம் நேற்றைக்கும், முந்தின நாட்களிலும் துரத்தி விட்ட நாயக / நாயகியரைப் பற்றித் திரும்ப ஒரு அலசலைப் போட்டால் results எவ்விதமிருக்குமோ ? என்ற curiosity தான் ! So இது நம்மளவில் தோற்றோரின் கதையே...!!

Please note : இது சம்பந்தப்பட்ட நாயக / நாயகியரின் தரம் / திறன் மீதானதொரு தீர்ப்பே அல்ல ; தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நாம் அப்பாடக்கர்களும் அல்ல ;  உலகளவில் சாதித்திருக்கக்கூடிய நாயகர்கள் நமது ரசனைகளுக்கு செட் ஆகாது போவதாலேயே அவர்கள் சொதப்பல்களாகிடவும் போவதில்லை ! இது சும்மா ஒரு ஜாலியான, நம் பார்வைக் கோணங்களிலொரு அளவீடே !! So "என்னமா நீ இந்த நாயகரை மட்டம் தட்டப்  போச்சு ?!" என்ற கண்சிவத்தலோடு துடைப்பங்களைத் தேடும் ஆர்வமான FB முஸ்தீபுகள் அனாவசியம் ! 

பட்டியலின் முத்லிடத்தைப் பிடிக்கப் போகிறவர் சோடா புட்டிக் கண்ணாடியும், தொள தொள ஓவர்கோட்டும் போட்டபடிக்கே சுற்றி வருமொரு டிடெக்டிவ் ! Yes - டிடெக்டிவ் ஜெரோம் தான் வந்து ; நின்று ; புறப்பட்ட முதல் புண்ணியவான் - post 2012 ! "தற்செயலாய் ஒரு தற்கொலை" black & white-ல் வெளியானதொரு 2 பாக mystery த்ரில்லர் ! சொல்லப் போனால் இது நமது முதல் இன்னிங்சின் இறுதியிலேயே தயார் ஆன கதையே ; but முடங்கிக் கிடந்து, விடியலைப் பார்த்தது ரொம்பவே லேட்டாகத் தான் ! நிஜத்தைச் சொல்வதானால் எனக்கு இந்த ஆல்பம் ரொம்பவே பிடித்திருந்தது ! ஆரவாரமில்லா ஒரு  டிடெக்டிவ் ; தெளிவான, யதார்த்தமான கதையோட்டம் ; clean சித்திரங்கள் என்று பயணித்த இந்தக் களத்தில், கதையின் plot ரொம்பவே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்திலிருந்ததில் தான் சிக்கலே ! உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் நின்ற கதையோ நானறியேன் - but ஒரிஜினலின்படி கிளைமாக்சில் முடிச்சவிழும் இரகசியத்தை நான் கொஞ்சம் மாற்றியமைக்காது போயிருந்தால் இன்னமுமே ரொம்பவே பொங்கியிருப்பீர்கள் !! ஆனால் சொந்தத் தாத்தாவே பேத்தியைச் சீரழித்து, கர்ப்பமாக்கியதாய் வந்த sequence தனை நான் வேறு மாதிரியாய் மாற்றியதற்கு "ஒக்குட்டுப்புட்டான் ஒரிஜினலை !" என்று மாலை மரியாதை நல்கிய கையோடு இந்த சாத்வீக டிடெக்டிவ்வையும் ஓரம்கட்டியதே பலனாகியது ! அன்றைக்கு நடந்த மண்டகப்படிகளின் முழு விபரமும் நினைவில்லை (ஒரு சந்திலே...ஒரு பொந்திலே மட்டும் சாத்து வாங்கியிருந்தா ஞாபகமிருக்கும் ; நாம தான் ஒண்ணு பாக்கியில்லாமல் அத்தனைலேயும் வாங்கியிருக்கோம்லே !!) & அன்றைய சாத்துக்கள் justified தானா என்பதுமே நினைவில்லை ! But  முதல் ஓவரிலேயே மனுஷன் அவுட்....ஆனால் நோ-பாலில் என்பது தான் சோகம்  !! 
பட்டியலில் தொடர்ந்த இடங்கள் சில முன்னாட்களது ஜாம்பவான்களுக்கே ! அன்றைக்கு பெரும் பைட்டர்களாய்க் காட்சி தந்தோர் - முழு வண்ணத்தில், நம் இரண்டாம் இன்னிங்சில் தலைகாட்டிய போது, கந்துவட்டிக் கோவிந்தன்களாகிப் போனது கொடுமையே !! "சாக மறந்த சுறா" சும்மா அசத்தலான அட்டைப்படத்தோடு, ரம்யமான சித்திரங்களோடு வெளியான சமயம் "இன்னொரு ஹிட் உறுதி !!" என்று மனம் துள்ளியது ! ஆனால் பொடனியோடு நீங்கள் விட்ட சாத்தில் "கொய்யங்க்க்" என்ற ஓசை மட்டுமே கேட்டது தொடர்ந்த நாட்களுக்கெல்லாம் ! "ப்ருனோ பிரேசில் ....பரணுக்கு...!! ஓவர்..ஓவர்...!" என்றபடிக்கே நடையைக் கட்டினேன் ! So புராதனமெனும் கூக்ளிக்கு சாய்ந்த முதல் விக்கட் வில்லியம் வான்சின் அழகு ஆக்ஷன் ஹீரோ !

அதே பந்து ; அதே மாதிரியொரு விக்கெட் விழுந்தது சாகச வீரர் ரோஜரின் புண்ணியத்திலும் ! மிரட்டலான சித்திரங்கள் ; அதிரடியான களங்கள் என்று ஓப்பனிங் எப்போதுமே செம அமர்க்களமாய் இருந்தாலும், போகப் போக தள்ளாட்டமே என்ற கதை தொடர்கதையாகிட - "அடுத்த ஆப்பரேஷன் ரோஜராருக்கே !!" என்று தீர்மானிக்க நேரிட்டது !! கடைசி கடைசியாய், ஒரு கதையை அறிவித்து விட்டு, உரிமைகளை வாங்கி, மொழிபெயர்ப்பும்  ; டைப்செட்டிங்கும் செய்துவிட்டு, வெளியிட வேண்டியதற்கு 15 நாட்களுக்கு முன்பாய் பேஸ்தடித்து பின்வாங்கியதும் நடந்தது ! கதை அத்தனை சுமார் ! பரணில் உறங்கும் கதைகள் லிஸ்டில் அதுவும் சேர்ந்தது தான் மிச்சம் !! 60 + கதைகள் ; அமர்க்களமான ஆக்ஷன் நாயகர் ; exotic locations என்றெல்லாம் ஏகப்பட்ட ப்ளஸ்கள் இருக்கும் போதிலும், இந்தத் தொடராய்ச் சரியாய் நமக்கு செட் செய்து கொள்ள முடியாது போவதில் வருத்தமே எனக்கு !

மூன்றாவது பந்தும் ஒரு கூக்ளி ; மூன்றாவது விக்கெட்டுமே ஒரு ஜாம்பவானே! ஆனால் அதை உரக்கச்  சொல்ல முனைந்தால் தர்மஅடி தான் விழும் எனக்கு ! இருந்தாலும் நாம் பார்க்காத முட்டுச் சந்துக்களா ? So ஒரு வீரனாய் ; சிரிச்சா மேரியே மூஞ்சை வய்ச்சுக்கினு சொல்லித் தான் பார்க்கிறேனே !! "டைகர்.....இளம் டைகர்...!!" தட்டை மூக்காரின் இள வயது சாகசங்கள் ஒரு சங்கிலித் தொடராய் ஓடி வர, நாம் அவற்றை ஆண்டுக்கு 2 என வெளியிட, ஆரம்பம் அட்டகாசமாய் இருந்தது ! "கான்சாஸ்  கொடூரன்" ; "இருளில் ஒரு இரும்புக் குதிரை" என்றெல்லாம் ஹிட்டடித்தோம் ! ஆனால் தொடர்ந்த ஆல்பங்கள் வறண்டு காட்சி தர, வெகு சீக்கிரமே அயர்ச்சி உட்புகுந்ததை மறுப்பதற்கில்லை ! இந்தத் தொடரின் சீனியர் ஹீரோவின் (கேப்டன் டைகர்) அதிரடிக் கதைகளை எழுதியிருந்த சார்லியே அவர்கள் மரித்திருக்க, புதுப் புது கதாசிரியர்கள் இளம் புலிக்கு கதை சொல்ல முயன்று அத்தனை வெற்றியைப் பெற்றிருக்கவில்லை என்பது bottomline  ! விடாப்பிடியாய் அவர்களும் அந்த வடக்கத்தியர் vs தெற்கத்தியர் உள்நாட்டு யுத்தத்தையே பிடித்துத் தொங்கிட, நம்மிடையே கொட்டாவிகள் விட்டம் வரை விரிந்ததை உணர முடிந்தது ! ஒரு கட்டத்தில் கொரியர் டப்பிக்களைத் திறக்கும் போதே உங்களுக்கெல்லாம் கை நடுங்கிடுமோ ? என்ற பயம் மேலோங்கிட - இளம் புலிக்கு டாட்டா சொல்லி வைத்தோம் ! Oh yes - இங்கே எனது தவறுகள் இல்லாதில்லை தான் !  Maybe தோர்களின் தொகுப்புகள் ; ட்யுராங்கோவின் தொகுப்புகள் போல Young டைகரையும் கையாண்டிருப்பின், results சற்றே தேவலாமாக இருந்திருக்கலாம் என்பதை மறுக்க மாட்டேன் ! But end of the day - தொடரின் கதைவலிமை அத்தனை சுகமில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை ! Therefore கூக்ளி - கூக்ளி தான் !
விக்கெட் # 4 பற்றி எழுதினால் bad bad  words-லே திட்டு வாங்க வேண்டிவரும் என்பது புரிஞ்சூ ! But கடமைன்னு வந்துட்டா இந்த டெலெக்ஸ் பாண்டியன் ஒரு கர்ம வீரன் என்பதால் ஓங்கி அந்தப் பெயரையும் உச்சரித்தே விடுகிறேன் !! இன்னும் சொல்லப் போனால் அதுவொரு பெயரல்ல ; நம்பர் மட்டுமே !! XIII !!! Yes - நமது பெயரில்லா மறதிக்கார இரத்தப் படல நாயகரே !!  முதல் சுற்றில் 18 மறக்கவியலாக் கதைகளின் உபயத்தில் ஒரு அசுர உயரத்தைத் தொட்டு நிற்கும் cult hero ! So அவரது இரண்டாம் சுற்றினை படைப்பாளிகள் அறிவித்த போது நாமெல்லாம் ஆர்ப்பரித்தது நினைவுள்ளது ! ஓவியர் வில்லியம் வான்சுக்கு சற்றும் சளைக்கா சித்திர பாணியும் கண்ணில்பட - சப்புக் கொட்டினோம் காத்திருக்கும் விருந்தை எண்ணி !! ஆனால்...ஆனால்...அது வந்து....well ....I mean ....என்ன சொல்ல வர்றேன்னா....இப்போ பாத்தீங்கன்னா....mayflower...mayflower ன்னு ஒரு கப்பல் ; ஆமா...ஒரேயொரு கப்பல் தான்.....அது வந்து...அதிலே வந்து....ஆங்...எங்கே விட்டேன்...ம்ம்ம்..கப்பல்லே ...லேசா பசிக்கிற மாதிரி இருக்கு....ஒரு வா சாப்டுட்டு வந்து தொடர்றேனே... ? நேராய் அமெரிக்கக் குடியேற்ற நாட்களுக்குப் போய் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து ; சம கால அரசியலோடும் ஐக்கியமாகி,அப்புறம்  யூதர்கள் ; உயர் குலத்தோர் ; இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் track எப்படி எப்படியோ பயணிக்க - இந்த இரண்டாம் சுற்றின் ஆல்பங்களை எடிட் செய்வதற்குள் தலை நிறையவே நரைத்துப் போய்விட்டது ! And துவங்கிய வேகத்திலேயே ஒரு சந்தில் வண்டியை நிறுத்திய கையோடு அதன் புது ஓட்டுநர்களும் இறங்கிக் கொண்டுவிட - ஒரு சிகரம் தொட்ட தொடருக்கு இப்படியொரு sequel தேவையா ? என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை - at least என்னளவிற்கு  !! வான் ஹாம் எனும் அசாத்தியரின் உயரம் என்னவென்பது இப்போது தான் இன்னமும் தூக்கலாய்த் தெரிகிறது என்பேன் ! எத்தனையோ புது சுவாரஸ்ய மார்க்கங்களில் நண்பர் ஜேசனைப் பயணிக்கச் செய்திருக்க வாய்ப்புகள் இருந்த போதிலும், இந்த Mayflower ரூட்டை கதாசிரியர் பிடித்திருக்க நிச்சயமாய் ஏதோ வலுவான காரணங்கள் இருந்திருக்க வேண்டும் தான் ; ஆனால் அதனைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கில்லாது (at least எனக்கில்லாது ) போனது தான் வருத்தமே !! XIII எனும் அந்தப் புதிர் பிறவியினை இன்னமும் ஒருவாட்டி வான் ஹாம் கையில் எடுத்தால், வண்டி பென்ஸ் ரேஞ்சுக்கு உறுமும் என்பதில் சந்தேகமில்லை ; ஆனால் அது நடைமுறை காணுமா என்பது தான் சிக்கலே !!
தலை காட்டிய வேகத்துக்கே தலை தெறிக்க ஓட நேரிட்ட முதல் வீராங்கனை - "விண்ணில் ஒரு வேங்கை" இதழின் நாயகியே ! அம்மணியின் பெயர் எனக்கு நினைவில்லை ; ஆனால் நீங்கள் வாளி வாளியாய் கழுவிக் கழுவி ஊற்றியது மட்டும் பளிச்சென்று நினைவுள்ளது !! "எவனோ  எங்கேயோ, எப்போதோ போட்ட சண்டையையெல்லாம் இன்னிக்கு இங்கே நாங்க படிச்சு எந்த ஆணியை பிடுங்க போறோம்பு ?" என்று மூஞ்சில் பன்னீர் சோடாவைத் தெளித்துத் தெளித்து அடித்த அழகை இன்றைக்கெல்லாம் சிலாகிக்கலாமே !! அன்றைக்கு மறுபடியும் பிளைட் ஏறின புள்ளை ; மறுக்கா கீழே இறங்கவே இல்லியாம் !! பராகுடா கப்பலானது சமுத்திரமெல்லாம் சுற்றுகிறதெனில், அந்த Spitfire விமானமோ வானமெலாம் வலம் வருகிறதாம் !!

அப்புறம் கெக்கே பிக்கே வென தரையில் உருண்டு சிரித்து மானத்தை ஏலமிட மாட்டீர்கள்  என்ற உத்திரவாதம் தந்தீர்களெனில் ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் - காதுகளைக் கொண்டு வாருங்கள் கிட்டே !! இந்த பெண் பைலட் கதைக்கு உரிமைகளை வாங்கிய சமயம் எக்கச்சக்கக் கனவுகள் எனக்குள் - இது பின்னிப் பெடலெடுக்கப் போகும் தொடராய் அமைந்திடுமென்று  !! அந்நேரம் தான் THE KING SPECIAL என்ற பெயரில் ஒரு TEX ஸ்பெஷல் இதழ் வெளியிட்டிருந்தோம் ! அதே பாணியில் "THE QUEEN SPECIAL" என்ற நாமகரணத்தோடு - "லேடி pilot + மாடஸ்டி + ஜூலியா" என்ற முக்கூட்டணியைக் களமிறக்க உள்ளுக்குள் ஒரு மஹா சிந்தனை உருப்பெற்றிருந்தது !! பின்னே எப்படியோ அதை மறந்து விட்டேன் ! எந்தச் சாமி புண்ணியமோ - நீங்களும் தப்பித்தீர்கள் ; நானும் தப்பித்தேன் !! யப்பா !!! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழை விடவும் பெரிய கார்ட்டூனாகிப் போயிருக்கும்டா சாமி !! Just miss !!! But இதோ - 2014 முதலாய் ஒரு பெரும் தொகையைத் தன்னுள் அடக்கிக் கொண்டு பீரோவினில் அடங்கிக் கிடக்கும் இந்தத் தொடரின் பாக்கி இதழ்கள் !! ரொம்பவே காஸ்ட்லியான புத்திக் கொள்முதல் தான் !!
சாத்துப் பட்டியலில் அடுத்த இடமோ - ஒரு இத்தாலிய cult நாயகருக்கு ! "Danger டயபாலிக்" என்றால் இத்தாலியில் ஷாரூக் கான் ; ரன்வீர் கபூர் ரேஞ்சுக்குப் பிரபல்யம் ! அவரது விளம்பரத்தைப் பார்த்த நொடியே ஒரு 50 இதழ்களை இத்தாலிக்குப் பார்சல் செய்து விடலாம் ; ரசிகர் மன்றத்தினர் வரிசையில் நின்று பணம் அனுப்பிடுவார்கள் ! நாமும் பெரும் எதிர்பார்ப்புகளோடே இவரைக் களமிறக்க, முதலில் "அட..." என்ற நீங்கள் அடுத்து "அடேய் !!" என்று கூக்குரலிடத் துவங்கிய சமயம் டர்ராகிப் போயிற்று எனக்கு ! 2014 என்று ஞாபகம் ; ஆண்டின் இறுதியில் review கோரியிருந்தேன் நாயக / நாயகியரைப் பற்றி ! "சும்மா கிழி..கிழி..கிழி" என்று இந்த முகமூடிக்காரரை போட்டுப் புரட்டோ புரட்டென்று வதம் செய்து விட்டீர்கள் ! "நாளைக்குச் சாகப் போற கிழவியை கூட கொலை பன்றானே !!" என்று இந்த anti hero-வைப் பப்படமாக்கியிருந்தீர்கள் ! நிறைய நாயகர்களை வெளுத்து வெள்ளாவிக்குப் போட்டிருக்கிறீர்கள் தான் ; ஆனால் இந்த ரேஞ்சுக்கு நீங்கள்   பொங்கி நான் பார்த்தது அண்ணன் DD கேசில் தான் !!  மேற்கொண்டு ஒரு 4 இதழ்களுக்கு உரிமைகளை வாங்கிட எண்ணியிருந்தவன் சத்தமின்றி வாலைச் சுருட்டிக் கொண்டதே மிச்சம் ! Truly sad !!
அடுத்த பூரண கும்ப மரியாதை அரங்கேறியது இன்னொரு இத்தாலியருக்கே !! திருவாளர் மேஜிக் விண்ட்  ! "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" அழகான ஆரம்பமாகிட, "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" fantasy ஜானருக்கு வழிகாட்ட - "நீங்க தக தக ன்னு எம்.ஜி.ஆர் போலவே இருக்கீங்க தம்பி!" என்று மே.வி.யிடம் உற்சாகத்தில் சொல்ல நினைத்தேன் நான் ! ஆனால் தொடர்ந்த இதழ்களையும் சரி,இந்த ஜடாமுடிக்காரரையும் சரி - "நீ அதுக்கு சரிப்பட்டு மாட்டே...நீ சுகப்பட மாட்டே !!" என்று நீங்கள் கட்டம் கட்டிட , கீழ்வானத்தை வெறித்துப் பார்த்தபடிக்கே  "போனால் போகட்டும் போடா !!" என்று பாடிக் கொண்டே போகத் தான் தோன்றியது ! இன்றைக்கும் எனக்குள் ஒரு குறு குறுப்பு ஓடுவதுண்டு தான் ; maybe  இவரை black & white-ல் சிம்பிளாக வலம் வரச் செய்தால் எவ்விதமிருக்குமென்று !! 130 + கதைகள் உள்ளதொரு தொடரானது அத்தனை மத்திமமாகவா இருந்திடப் போகிறது ?
Next in the list : ஹெர்மனின் western நாயகர் !! நெடும் கயிறு வழங்கப்பட்ட பிற்பாடும் வண்டி ஸ்டார்ட் எடுக்காது நொண்டிக் கொண்டேயிருக்க,  பொறுமையிழந்து நாம் கை கழுவ முனைந்தது கமான்சே தொடரை !! When it started off - என்னுள் ஏகப்பட்ட கனவுகள் - கேப்டன் டைகர் ரேஞ்சுக்கு இந்தப் புள்ளையாண்டானும் வன்மேற்கில் சூறாவளியாய் சுற்றி வருவாரென்று ! "யுத்தம் உண்டு எதிரி இல்லை" இதழ் சும்மா பட்டாசாய்ப் பொரிய, செம குஷி எனக்கு !! ஆனால் சிறுகச் சிறுக வேகம் கூடும் ; கதைகளில் வீரியம் எகிறுமென்று உங்களைப் போலவே நானும் காத்திருக்க, எகிறியதோ நமது பொறுமைகளின் தெர்மாமீட்டர் தான் ! அசாத்திய ஓவிய பாணி ; அடித்துத் தூக்கும் அடர் வர்ணங்கள் ; ஆனால் வெகு யதார்த்த ; மிகையிலாக் கதைக்களங்களே இந்தத் தொடரின் ஒட்டு மொத்த template என்பது புரிந்த போது - "போட்றா ரிவர்ஸ் கியரை !" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் ! குறை என்று சொல்ல ஏதுமிலா தொடரே ; அதே சமயம் நிறையென்று சிலாகிக்கவும் நிறைய இல்லாதது தான் நெருடலே !!

இன்னொரு ஹெர்மன் படைப்பு ; இன்னொரு ரிவர்ஸ் கியர் தருணமும் நமக்குப் பரிச்சயமே ; but still அது தற்போதைக்கு நம்மிடையே லைவ்வாக  உள்ள தொடர் என்பதால் no comments !!

"ஆனாலும் இந்த சொடலைமுத்து ரொம்ப strict-பா" moment புலர்ந்தது நமது மதிமுக (சேர்த்தே படிக்கணும் ; தேர்தல் நேரமும் அதுவுமுமாய் ம-தி-மு-க என்று படித்து குழப்பிக்கப்படாது !!) அழகியின் சமாச்சாரத்தில் தான் ! வான் ஹாம் எனும் கதாசிரிய ஜாம்பவான் ; LADY S எனும் அட்டகாச ஹீரோயின் ; வெகு நவீன கதைக்களங்கள் ; மிரட்டும் ஓவியங்கள் ; குளிரூட்டும் வர்ணங்கள் என்றதொரு formula - வெற்றிக்கு இருநூறு சதவிகிதம் உத்திரவாதம் என்றே சொல்வேன் - நூற்றுக்குத் தொண்ணூறுவாட்டி !! ஆனால் நடந்ததென்னவோ வேறு மாதிரி ! "விடை கொடு ஷானியா" என்று அமர்க்களமாய் தலைகாட்டிய LADY S அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நம் மனங்களை ஆட்சி செய்யப் போகிறாரென்ற எண்ணத்தில் நான் ஜாலியாக இருந்தேன் ! ஆனால் முதல் ஆல்பத்துக்கு அப்பாலிக்கா அம்மணியின் கதைகளும், அவரது கதாப்பாத்திரம் எடுத்திட்ட மாற்றங்களும், நம்மை அத்தனை ரசிக்கச் செய்யாது போக - இந்தப் பத்தியின் முதல் வரி நடைமுறை கண்டது ! "மதிமுக அழகியானாலும் சரி ; அண்டர்வேரை மாத்திரமே போட்டுக் கொண்டு கூரைகளில் பயணிக்கும் சொப்பன சுந்தரியாக இருந்தாலும் சரி - கதை சுகப்படாட்டி சட்னி சட்னி தான் ; டாட்டா....bye bye தான் !!" என்று படு தீவிரமாய் நின்று விட்டீர்கள் !! Gone with the wind...!
கிட்டத்தட்ட இதே நிலவரம் தான் பென்சில் இடையழகி ஜூலியா விஷயத்திலுமே ! "என்னலே....  பாப் வய்ச்ச இந்தக் கொத்தவரங்காய்ப் பிள்ளை சண்டையே போட மாட்டேன்கி..? நெதம் பேசியே கொல்லுதே ?" என்றபடிக்கு அந்த கிரிமினாலஜிஸ்டை நீங்கள் கடைந்து எடுக்க, நான் தான் "அய்யா..தர்மவான்களே....ஒரு ஓரமா அம்மணி இருந்திட்டுப் போகட்டுக்குங்கண்ணா !" என்று கூத்தாடி இடம் போட்டு வருகிறேன் ! ஆனி முடிஞ்சு ஆவணி துவங்குறச்சே, இந்தாண்டாவது பொண்ணு டாப்பா வந்ததோ - நான் தப்பித்தேன் ! இல்லாங்காட்டி நடு மண்டையில் ஒரு முட்டை பரோட்டா போடப்படுவது நிச்சயம் !!
சீரியஸ் நாயக நாயகியரை கட்டம் கட்டிய பட்டியலைத் தொடர்வது சிரிப்பு நாயகர்களின் கல்தா பட்டியல் ! எனது அவ்வப்போதைய புலம்பல்களின் புண்ணியத்தில் - அவர்களை எல்லாம் நாம் அடிக்கடி நினைவு கூர்ந்திடுகிறோம் தான் ! Anyways - வரலாறு முக்கியம் என்பதால் இங்கே பதிவிட்டு விடுகிறேனே :

  • SMURFS 
  • சுட்டிப் புயல் பென்னி
  • ரின்டின் கேன்
  • லியனார்டோ தாத்தா 

இவர்களை ஓரம்கட்ட நேர்ந்த சூழல்கள் பற்றி நிறையவே பேசி விட்டதால் no more மறுக்கா ஒலிபரப்பு !!

இந்தப் பட்டியலில் இருந்திட வேண்டிய இன்னொரு பெயர் "ஸ்டீல்பாடி  ஷெர்லாக்" !! பக்க நிரப்பிகளாய் வந்த இந்த ஷெர்லாக் ஹோம்ஸின் பகடி - எனது ஆதர்ஷ கார்ட்டூன்களுள் ஒன்று ! அந்தக் கோக்கு மாக்கான ஓவியங்கள் ; டாக்டர் வாட்சன் ; இன்ஸ்பெக்டர் லெஸ்டிரேட் ஆகியோருக்கு தரப்பட்டிருக்கும் பாத்திரங்கள் என எல்லாமே செம ரவுசு ! And இவருக்குப் பேனா பிடித்த ஒவ்வொருமுறையும் உற்சாகம் பீறிடும் உள்ளுக்குள் ! Sadly உங்களுக்குப் பிடிக்கக் காணோம் !! So தோற்றோர் பட்டியலில் உழல்கிறார் இந்தச் சிரிப்பு டிடெக்டிவ் !
இவர்கள் போக, விளிம்பு நிலையில் ஊசலாடும் மாடஸ்டி பிளைசி ; ஜில் ஜோர்டன் ; டைலன் டாக் ; மதியிலா மந்திரி போன்ற நாயகர்களும் உண்டு தான் danger zone-ல் !! ரசனைகளின் ஓட்டம்  காட்டாற்று வெள்ளம் போல ; எந்தவொரு தடுப்பையும் சட்டை செய்யாது ஓடியே தீரும் போலும் !! So அதுவே உலக நியதி எனும் போது பொம்மை புக்குகளின் நாயகர்களெல்லாம் விதிவிலக்காகிட முடியுமா - என்ன ?

Before I sign off, இரண்டே கேள்விகள் மாத்திரமே !

1.மேலுள்ள பட்டியலின் 'ரிஜிட்' நாயக /நாயகியரின் கல்தா குறித்து உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ?

2 .ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? Who do you feel deserves another go ?

கிளம்பும் முன்பாய், முட்டுச்சந்து முன்னூறு கண்ட மூத்த புலவர் முத்துவிசயனாரின்  பொன்வரிகள், மீண்டும் உங்கள் நினைவூட்டலுக்கு :

வந்து...நின்று..வென்றவர் பலர்..!

வந்து..நின்று..சென்றவர் சிலர்... ! 

நின்றவரெல்லாம் வென்றவரல்லர்....

சென்றவரெல்லாம்  தோற்றவருமல்லர் !! 

ஏ..டமுக்கு...ஏ அஜிக்கு...!! ஏ..அஜிக்கு..ஏ டுபுக்கு !!

Bye all ! See you around..! Have a fab weekend !!

Friday, May 17, 2019

இது spin off சீசனோ ?!

நண்பர்களே,

வணக்கம். உப பதிவுக்கு உப பதிவு போடும் ரேஞ்சுக்கு நாம் முன்னேறியிருக்க, உங்கள் வேகத்துக்கு நானும் ஈடு தந்திட வேண்டாமா ? இதோ இந்த வாரத்தின் பதிவு # 3 ! 

Spin-off என்று மறதிக்காரர் XIII சார்ந்த பதிவுக்கு அப்பாலிக்கா எனக்குத் தோன்றியதும் இன்னொரு spin-off பற்றிய சிந்தனையே ! And அது நமது ஒல்லிப்பிச்சான் கார்ட்டூன் நாயகரைச் சார்ந்தது !
பாருங்களேன் - நம்மவர் ஜாலி ஜம்பரின் முதுகில் உப்புமூட்டை போகாது, மாங்கு மாங்கென்று ஒரு சைக்கிளை மிதித்தால் எவ்விதமிருக்குமென்று !! அமெரிக்க பெரும் கண்டத்தின் குறுக்கே சவாரி செய்யுமொரு போட்டியில் புரட்சிகரமான தனது கண்டுபிடிப்பை வலம் வரச் செய்திட எண்ணுகிறார் ஒரு கண்டுபிடிப்பாளர் ! ஆனால் போட்டி நிறுவனமோ சக்கை வைக்க முயற்சிக்க, ஆபத்பாந்தவராய் ஆஜராகிறார் நம்மவர் !  ஜாலிக்கு ஒய்வு தந்து விட்டு, இரண்டு சக்கர வண்டிக்குத் தாவுகிறார் !! பகடியானதொரு ஸ்டைலில் புதியதொரு ஓவியர் உருவாக்கியிருக்கும் இந்த spin-off-க்கு உங்கள் ஆதரவு எவ்விதமிருக்குமோ என்றறிய ஆவல் guys !! சொல்லுங்களேன் - ப்ளீஸ் ! Bye for now !

Monday, May 13, 2019

அண்ணன் தலையிலே ஒரு மத்தளம்ம்ம்ம்ம் !!

நண்பர்களே,

மீண்டும் வணக்கம் ! அநேகமாக லெமுரியா கண்டம் புவியிலொரு அங்கமாய் இருந்த வேளையினில் நிகழ்ந்ததொரு சமாச்சாரம் இன்றைக்கு repeat ஆகியுள்ளது ! Oh yes  - ஒற்றை நாளில் 310+ பின்னூட்டங்கள் - என நீங்கள் போட்டுத் தாக்கியுள்ளதைத் தான் குறிப்பிடுகிறேன்  ! ஏகப்பட்ட ஈயோட்டிய நாட்களுக்குப் பின்பான இந்த பிசி தருணத்தை உரியதொரு உப-பதிவோடு கௌரவிப்பது தானே நியாயம் ?! So here I am !! 

எங்கோ ஆரம்பித்த அலசல்கள் நடுவாக்கில் நண்பர்கள் சிலரின் ஆதங்கத்தினால் XIII spin-offs பக்கமாய் சித்த நேரம் பயணித்தது மாத்திரமன்றி - "500 பிரதிகளை வாங்கிக்கொள்ள  உத்திரவாதம் தந்தால் spin offs சாத்தியமா ?" என்ற கேள்வியும் என்னிடம் பின்மதியப் பொழுதில் மின்னஞ்சல் மூலமாய்க் கேட்கப்படுவதற்குக் காரணமாகிப் போனது !  ! "Sorry no ..நடைமுறை சாத்தியமிலா கோரிக்கை !" என்று மறுத்து விட்டேன் ! 

நான் மறுப்புச் சொன்னதற்கு இந்தத் தொடரின் விற்பனைத் தொய்வுகள் ஒரு காரணமெனில், இன்று மிகக் குறுகி நிற்கும் நமது பொறுமைகளின் சாளரங்களும் இன்னொரு முக்கிய காரணம் ! ஒரேயொரு மித ரக ஜானதன் கார்ட்லெண்ட் ஈட்டித் தந்த சாத்துக்களையும், அதன் பலனாய் நடப்பாண்டின் அதுவரையிலுமான clean report card-ம் துவம்சமாகி நிற்பதையும் நான் அத்தனை விரைவாய் மறந்திடத் தான் இயலுமா ? உலகமே கொண்டாடும் ஜெரெமியா -  'அப்பால நீ போவியா ?!" என்ற வரவேற்பையும், தீர்ப்பையும் துரிதமாய்ப் பெற்று நிற்கிறார்  நம்மிடையே ! SMURFS ? 'நீங்க லோகத்தில் எத்தனை பெரிய அப்பாடக்கர்களாக இருப்பினும்,   இங்கே நீங்க பிடுங்கின ஆணிகள் போதும் !' என்று தீர்ப்புச் சொல்லி விட்டார்கள் நண்பர்கள் ! அட...அவ்வளவு என் ? எனக்கு ரொம்பவே பிடித்திருந்த மேஜிக் விண்ட் தொடருக்கும் ; பென்சில் இடையழகி ஜூலியாவிற்குமே ஒற்றை இடம் பிடிக்க நான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்காத குறை தானே ?  இதோ - LONE ரேஞ்சர் போலொரு உத்தரவாதமான கமர்ஷியல் நாயகருமே உங்களின் அளவீடுகளில் தத்தளிப்பதைக் கண்கூடாய்ப் பார்த்திடுகிறோம் ! The bottomline is : PERFORM....OR PERISH !! திறந்தது நெற்றிக்கண்ணோ ; முட்டைக்கண்ணோ - குற்றம் - குற்றமே ! என்பது தான் நமது வாசக நக்கீரர்களின் இன்றைய நிலைப்பாடு எனும் போது -  "எனக்கு 500 பிரதிகள் ஏக் தம்மில் சுலபமாய் போணியாகின்றன ; மிச்சத்தை உங்க தலையிலே கட்டிடுறேன் folks ! லைட்டா அஜீஸ் பண்ணிக்கோங்க !" என்று சொல்வது சாத்தியம் தானா ? ஒரு துடைப்பத்தை வாயில் கவ்வக் கொடுத்து இன்னொன்றால் பின்னியெடுத்து விடமாட்டார்களா - என்ன ? 

ஒவ்வொரு ஆண்டிலும் அட்டவணையில் அனைவருக்கும் ஏற்புடையன இடம்பிடிக்கின்றனவோ இல்லையோ - முகச்சுளிப்புகளுக்கு இடம்தந்திடக் கூடிய ஆல்பங்கள் இருந்திடக் கூடாதென்பதே எனது முதல் ஆதங்கம் ! நிலவரம் அவ்விதமிருக்க, XIII இரண்டாம் சுற்றின் அந்த Mayflower சங்கிலியின் இதழ்களை உங்களிடம் ஒப்படைப்பதே அயரச் செய்யும்  ஒரு பொறுப்பாய் இருந்த நிலையில் up & down  ரக spin -offs களை எந்த தகிரியத்தில் உங்களிடம் நான் ஒப்படைப்பேனோ ? 

"சரி தான்....பிழைத்துப் போய்த் தொலை ! 500 book போணியாகுதே ; ஒரு புக்கைப் போட்டுக்கோ ! " என்று நீங்கள் பெருந்தன்மையாய் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோமே - இதே லாஜிக் பல நாள் கோரிக்கைப் பட்டியலில் இருக்கக்கூடிய ஸ்பைடரின் Sinister Seven கதைக்கும் பொருந்தும் அல்லவா ? கோவைக் கவிஞரோ ; சென்னையின் தீவிர ஸ்பைடர் மன்றத்தினரோ  நிச்சயமாய் இதனை sponsor செய்திடக்கூட்டும் அல்லவா ?! ஜெரெமியாவின் தொடரும் பாகங்களுக்கும் இதே லாஜிக் suit ஆகக்கூடும் & SMURFS மறுவருகைக்கும் இதே பார்முலாவை முன்மொழிய நண்பர் கணேஷ்குமார் தயார் எனும் போது - வரிசையாய் "நீங்கள் கேட்டவை" ஸ்பெஷல்களாய்ப் போடத் துவங்குவது  தான் எனது அடுத்த திட்டமிடலாய் இருக்க வேண்டி வரும் ! மேற்சொன்ன இதழ்களையும், XIII spin-off களையும், காத்திருக்கும் ஆண்டின் அட்டவணையில் ஒரு அங்கமாக்கினால்,  2020-ன் சந்தா நிலவரத்தின் கதிக்கு யாரேனும் கியாரண்டி தந்திட வாய்ப்பு தான் இருக்குமா ? அல்லது அந்த உத்திரவாதத்தை நான் கோரத் தான் முடியுமா ? "சரி...நீ அட்டவணைக்குத் தேர்வு பண்ணிக் கிழிக்கும்  அத்தனையும் ஹிட்டாகிட போகுதாக்கும்பு ?" என்ற கேள்வியும் காதில் விழாதில்லை ! நிச்சயமாய் அவற்றுள் சொதப்பல்களும் இருந்திடும் தான் ; ஆனால் அவை மிதமான கதைகளே  என்பது முன்கூட்டியே தெரிந்தே செய்யப்பட்ட தேர்வுகளாய் இராதென்பது மட்டும் சர்வ நிச்சயம் ! 

இன்றைக்கு ஒரு தோல்வி என்பது "ஆஹ்...அடுத்து பாத்துக்கலாம் !" என்றபடிக்கே துடைத்து விட்டு நகரும் சாமான்ய சிராய்ப்பாய் இருப்பதில்லை ; அவ்விதம் நான் அவற்றைப் பார்த்திடுவதுமில்லை ! மாறாக புத்தூரைத் தேடிப் போய் மாவுக்கட்டு போட அவசியமாக்கிடும் முறிவுகளாகவே இருந்திடுகின்றன ! அந்த எலும்பின் முறிவு, வாசக முதுகுகளை முறிக்கக்கூடிய இறுதிக் கட்டு வைக்கோல்போராய் அமைந்திடக்கூடாதே என்ற பயம் எனக்கு ஒவ்வொரு இதழின் பின்னணியிலும் உண்டு ! இதை படிக்கும் போது - "அக்காங்...ரொம்பத் தான் பீலா விட்றான் ; என்னமோ வானத்திலிருந்து குதிச்சு வந்தா மேரி !!" என்று சில பகடிகள் ஆங்காங்கே எழலாம் தான் ; ஆனால் believe it or  not - "ALL HITS ; NO FLOPS " என்றொரு முழுமையான திருப்தியான ஆண்டைத் தேடியே திரிந்து வருகிறேன் - தங்கக் கல்லறையின் லக்னரைப் போல ! அந்த பித்துப் பிடித்த வேட்கையினிடையே, நெற்றி முழுக்க "RISK"என்று எழுதி நிற்கும் கதைகளைக் கையாள மனசு ஒப்புமா - என்ன ? 

"சரி....இவற்றை நாங்க படிக்க என்னதான் வழி ?" என்று குரல்கள் மௌனத்தில் எழுவதும் கேட்பதால் - CINEBOOK தளத்துக்கு விரைந்தேன் - அவர்களாச்சும் இந்த spin-offs வரிசையினை கையில் வைத்திருந்தார்களெனில் இறக்குமதி செய்து கிரய விலைக்கே ஆங்கிலப் பதிப்புகளையாவது விற்றிடலாமே என்ற எண்ணத்தில் ! அவர்களோ "மங்கூஸ்" கதையோடு மேற்கொண்டு தொடரக் காணோம் !! "இங்கொரு சேதி உள்ளதோ நமக்கு ?" என்றபடிக்கே வாபஸ் ஆனேன் ! Maybe பின்னாட்களில் எஞ்சியுள்ள கதைகளை அவர்கள் வெளியிடும் பட்சத்தில் - தருவிக்க நிச்சயம் ஏற்பாடு செய்வேன் ! அதன் மத்தியில் - நாளையே  XIII இதழ்கள் அத்தனையையும் ஒரு ஸ்பெஷல் பேக்காக்கி - 25% தள்ளுபடி என ஆன்லைன் ஸ்டோரில் அறிவிக்கவும் செய்திடவுள்ளேன் ! ஒரு மாதிரியாய் கையிருப்பில் பாதி குறைந்தாலும், ஒன்றிரண்டு spin offs களைப் போட முனைகிறேன் ! இருக்கவே இருக்கின்றன Felicity Brown மற்றும் Judith Warner அம்மையார்களின் செழுமையான கதைக்களங்கள் !!  Peace until then people !!

பரோட்டா மாவைத் தப்புவதைப் போல எனது வழுக்கைத் தலையை தப்பியெடுக்க,   இந்தப் பதிவில் வாகாய் நிறைய மேட்டர்களைத் தந்துள்ளேன் என்பதால், CSK தோற்ற சோகத்தையுமே சேர்த்து நீங்கள் குமுறி எடுக்கலாம் நண்பர்களே ! அதற்காவது நான் பிரயோஜனப்படாது போனால் எப்படி ? The Hunting season's on...!!! Tally ho !!
அப்புறம் May இதழ்களை அல்சிடவும் செய்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...see you around !!

Sunday, May 12, 2019

அண்ணனுக்கொரு ஊத்தப்பம்ம்ம்ம்ம்....!!

நண்பர்களே,

வணக்கம். எல்லோருக்குமே நேரக் கட்டுப்பாடுகள் எத்தனை கழுத்துப் பிடியாக உள்ளன என்பதை இந்த மே முதல் வாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்பேன்! ஒன்றுக்கு மூன்றாய் மெகா இதழ்கள் இந்த மாதம் உங்கள் வீடு தேடி வந்திருப்பினும் – அவற்றுள் புகுந்திட கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதத்தினருக்கு இன்னமும் அவகாசம் கிடைக்கக் காணோம் ! பள்ளி விடுமுறை நேரங்களுமே எனும் போது, குடும்பத்துக்கு priority தரும் வேளையிது என்பது புரிவதால் maybe நாம் தான் திட்டமிடல்களில் மாற்றங்களைக் கொணர வேண்டும் ! விடுமுறைக் காலங்களைக் கோடை மலர்க் காலங்களாய்க் கொண்டாடியது நீங்கள் பாலகர்களாய் இருந்த நாட்களில் ! இன்றைக்கு உங்கள் இல்லங்களிலேயே பற்பல பாலகர்கள் இருக்கும் வேளைதனில், ஜுன் மாதமோ; ஜுலை மாதமோ தான் வரும் காலங்களின் கோ.ம. தருணங்களாகிட வேண்டும் போலும்! எது எப்படியோ – ஓரிரு விஷயங்களை ஸ்பஷ்டமாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது !

- "குண்டூஸ் புக்ஸ் ; 1000 பக்கம்; 2000 பக்கம்" என்ற கோஷங்கள் அவ்வப்போது கேட்டாலும், யதார்த்தத்தில் – light reading-களுக்கு மாத்திரமே நம்மில் பெரும்பான்மையினருக்கு நேரம் உள்ளது - இன்றைய ஓட்டமோ ஓட்டமான வாழ்க்கையினில் !

- லக்கி லூக் போலான breezy cartoon reads இதற்கு சூப்பராய் சுகப்படும் என்பது போன மாதத்து முதல் வாரப் பின்னூட்டங்களை நினைவு கூர்ந்திடும் போது புரிகிறது!

- And, சகலத்தையும் விட முக்கியமாய் – the ‘தல‘ factor!! மஞ்சள் சொக்காயில் இந்தியாவின் ‘தல‘ சேப்பாக்கத்தில் களமிறங்கும் போது நமது நாடித்துடிப்புகள் எகிறத் துவங்குவதற்கும், அதே மஞ்சள் சொக்காயுடன் இத்தாலியின் ‘தல‘ நம்மிடையே களமிறங்கும் போது உருவாகும் சுவாரஸ்யங்ளுக்கும் இடையிலொரு ஒற்றுமை இருப்பது போலத் தோன்றுகிறது ! கழுத்துப்பிடியாய் வேலைகள் இருந்தாலுமே – இடையே ஒரு சால்ஜாப்பைச் சொல்லியாவது டெக்ஸ் கதைகளுள் மூழ்கிட நம்மில் பெரும்பான்மைக்கு சாத்தியப்படுகிறது ! Of course – சில நண்பர்கள் இதனை வன்மையாய் எதிர்த்திடக்கூடும் தான் ; ஆனால் அவர்களிருப்பது மிகக் குறைவான பலம் கொண்ட அணியிலே என்பதை அவர்களே மறுக்கப் போவதில்லை ! So ஏதேனுமொரு ரூபத்தில் நம்மவர் தலைகாட்டாது போயின், அந்த மாதம் காற்று வாங்கவே செய்யும் போலும் ! And இதில் பெரிய விந்தையே – நமது முகவர்களின் எதிர்பார்ப்புகளுமே ! “ஆங்… பராகுடா சரி…. கார்ட்டூன் சரி… மறுபதிப்பு சரி… டெக்ஸ் வில்லர் கிடையாதா ? ஒரு புக் கூடக் கிடையாதா?" என்று அவர்கள் கேட்பது இப்போதெல்லாம் ஒரு ரெகுலரான நிகழ்வு ! And இந்தத் தம்மாத்துண்டு COLOR TEX செமயாய் ஹிட்டாவதன் பின்னணியிலும் breezy read என்ற காரணம் பிரதானமாய்த் தென்படுகிறது - at least எனது ஆந்தை விழிகளுக்கு ! 

So இந்த மே மாதம் புரியச் செய்துள்ள சில பல பாய்ண்ட்களை வரும் நாட்களின் திட்டமிடல்களுக்கு முன் எடுத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டே topic தாவுகிறேன்!

ஜுன் மாத இதழ்கள் அடுத்த சில வாரங்களில் என்று காத்திருந்தாலும் நமது பணிகள் ஜுலை ; ஆகஸ்ட் என்று தடதடத்துக் கொண்டுள்ளன ! தற்போதைய முனைப்பே நடப்பாண்டின் ஈரோட்டுப் புத்தகவிழாவில் ஸ்டால் ஒன்றைக் கோரிப் பெறுவதும் ; அதன் தொடர்ச்சியாய் நம் சந்திப்பின் போது உங்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்திடும் முஸ்தீபுகளின் பொருட்டுமே ! For a change – திட்டமிடல்கள் சகலத்தையுமே முன்கூட்டி ஒப்பித்து வைக்காது, வாயில் குளிர பெவிகாலைப் பூசிக் கொள்ளலாமென்றிருக்கிறேன் ! So ஈரோடு வரையிலும் பெப்பே..பெப்பெப்பே ........பெப்பெப்பெப்பே…. தான்!

இந்த மௌன விரத அவதாரிலிருக்கும் போது என்ன எழுதலாமென்று யோசித்த போது தான் சமீபத்தைய “கதை படிக்கும் படலம்” மனதில் நிழலாடியது ! ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் இடம் பிடிப்பதென்னவோ பரிச்சயப்பட்ட தோர்கல்களும் ; ரிப்போர்ட்டர் ஜானிகளும் ; லார்கோக்களும் என்றாலும் – விடாப்பிடியாய் புதுசு புதுசாய் ஆல்பங்களைத் தேடிப் பிடித்து, படித்து, ரசிப்பது ஒரு வருடாந்திரப் பொழுதுபோக்கு எனக்கு ! And கிராபிக் நாவல் என்ற களம் தற்சமயமாய் கைவசமிருப்பதால் offbeat கதைகளை விரட்டிப் படிப்பதுமே ஒரு ஜாலியான அனுபவம் !

ஆனால் கனமான களங்களல்ல first up! ரொம்பவே ஜாலியான நமது சோன்பப்டித் தாடிக்கார தாத்தா தான் முதலில் ! இந்தாண்டு சரித்திரப் பிரசித்தி பெற்ற லியனார்டோ டா வின்ஸியின் 500-வது பிறந்த ஆண்டு என்பதால் அவரைப் பகடி செய்து உருவாக்கப்பட்ட லியனார்டோ கார்ட்டூன் தொடரினில் ஒரு ஸ்பெஷல் ஆல்பம் இந்த ஏப்ரலில் வெளிவந்துள்ளது  ! இது லியனார்டோ தொடரின் ஆல்பம் # 50 என்பதும் ஒரு coincidence ! இதன் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள ஆல்பத்தின் pdf file-களை அனுப்பி ‘Any interest?’ என்ற கேள்வியோடு ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டிருந்தனர் எனக்கு ! Given a choice “கதையை நீங்க வெளியிடற மாசத்திலேயே நாங்களும் வெளியிடறோம்!!” என்று பாய்ச்சலாய் பதில் போட்டிருப்பேன் தான் ! ஆனால் அப்புறமாய் "தாத்தா தாக்குதல் கழகத்தின்" கண் சிவத்தல்களுக்கு ஆளாகிடக் கூடுமோ என்ற பயத்தில் நமைச்சல் எடுத்த விரல்களை கீ-போர்ட்டிலிருந்து எடுத்து விட்டேன்! What say guys?  வழக்கமான 3-4 பக்கச் சிறுகதைகள் பாணியே இம்முறையும் ! தாத்தாவுக்கும், அல்லக்கை அசிஸ்டெண்டுக்கும் இன்னொரு வாய்ப்பு தரலாமா ? அல்லது மனதில் கொடுத்துள்ள இடமே போதுமா ?

சமீப மின்னஞ்சல்களில் #2 : சாகஸ வீரர் ரோஜர் சார்ந்தது! அவரது அந்நாட்களது க்ளாசிக் கதைகளுள் மூன்றைத் தேர்வு செய்து – சித்திரங்கள் & வண்ணங்களை remaster செய்து ஒரு 200+ பக்க ஸ்பெஷலை வெளியிட்டுள்ளார்கள்! இவற்றிலுமே நமக்கு ஆர்வம் இருக்குமா ? என்று கேட்டுள்ளார்கள் ! அட்டகாசச் சித்திரங்கள், ஆக்ஷன் கதைக்களங்கள் என்றிருந்தாலும் இன்றைய நமது வயதுகளுக்கும் / ரசனைகளுக்கும் இவை அவ்வளவாய் set ஆகவில்லையென்றே ரோஜரை வனவாசம் அனுப்பியிருந்தோம் ; இன்னும் சிறிது காலம் அவர் அங்கேயே தொடரட்டுமா ? அல்லது நம் கரைகளில் இன்னொரு தபா ஒதுங்கட்டுமா ? Maybe அவரது புது அவதார் கதைகளோடு ? ஜானி 2.0 போல; ரோஜர் 2.0 கதைகளும் doing reasonably well ! அவற்றைப் பரிசீலனை?

மின்னஞ்சல் # 3 – சில மாதங்களுக்கு முன்பே வந்ததொன்று! But அதுவுமே நமது பரிச்சய நாயகர் சார்ந்ததே! ப்ருனோ ப்ரேசிலின் முதலைப் பட்டாளம் ‘திகில்‘ காமிக்ஸில் வெளியான தருணங்களில் செம ஹிட்! அதிலும் இந்த “முகமற்ற கண்கள்” கன்னாபின்னாவென்று ஹிட்டடித்த ஆல்பம் ! மிகக் குறைச்சலான எண்ணிக்கை தான் இந்தத் தொடரில் & அதனில் ஒன்றேயொன்றைத் தவிர்த்து பாக்கி சகலத்தையும் போட்டு விட்டோம் என்பதே நிலவரம் ! ஆனால் நமது இந்த இரண்டாவது இன்னிங்ஸில் 1960-களில் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரின் கதைகள் பெருசாய் சோபிக்காது போய் விட்டன! “சாக மறந்த சுறா” வாங்கிய சாத்துக்கள் சன்னமா ? சும்மா பூந்து விளையாடி விட்டீர்களே ! So ‘கம்‘மென்று கிடந்தவனுக்கு சில மாதங்களுக்கு முந்தைய மின்னஞ்சலில் ஒரு ஜாலியான சேதி இருந்தது ! புத்தம்புது டீம் ஒன்றின் கைவண்ணத்தில் ஒரு ப்ரூனோ ப்ரேசில் black & white ஆல்பம் one-shot ஆகத் தயாராகி வருகிறது ! அதன் முதல் 20 பக்கங்களைப் பார்த்த போது மிரண்டே போய்விட்டேன் ; அத்தனை அட்டகாசம் ! முந்தைய ஆல்பங்களைப் படித்திராத வாசகர்களுக்குக் கூட இது ரசித்திடும் விதமாய் இருக்குமென்று சொல்லியிருந்தனர். அநேகமாய் இந்நேரத்துக்கு அந்தப் படைப்பு முழுமை பெற்று – இந்தாண்டின் இறுதிக்குள் வெளிவந்திடக்கூடுமென்று நினைக்கிறேன்! 2020-ன் பட்டியலில் இந்த முதலைப் பட்டாளம் 2.0க்கொரு புக்கிங் போட்டாலென்ன guys ? Your thoughts please ? 
Random Reads # 1 : பழகிய முகங்களைத் தாண்டி – புதுத் தேடல்களின் ஒரு அங்கமாய்ப் பரிசீலித்த நாயகர்களுள் இன்னொரு வெட்டியானும் அடக்கம் (!!!) ஏற்கனவே அண்டர்டேக்கர் கலக்கி வரும் அதே கௌபாய் உலகு தான் இந்த ஒல்லிப் பிச்சானின் களமும் கூட ! அடிதடி; ஆக்ஷன் என்று பெருசாய் மனுஷன் சாகஸமெல்லாம் செய்யும் ரகமல்ல ; மாறாக புத்தக வாசிப்பில் நாட்டமெலாம் கொண்ட ஒரு வித்தியாச வெட்டியான் ! இரண்டே ஆல்பங்கள் (இது வரையிலும்) உள்ள இந்தத் தொடர் சற்றே dark ஆன ரகம் ; but ஒரு ஜாலியான சித்திர பாணியுடன் ! கிராபிக் நாவல் சந்தாவில் இடம்பிடிக்க சாத்தியங்கள் கொண்டவர் ! Thinking....!

Random Reads # 2 : ஒரு பொதுஜனத் தேர்விலிருந்து வெற்றி காணும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு விண்வெளி செல்லும் ராக்கெட்டில் இடம்பிடிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது ! ரஷ்ய விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மனுஷனுக்கு 8 மாதங்கள் பயிற்சி தரப்பட்டு, விண்ணிற்குச் செல்கிறார்! அவரது அனுபவங்களை கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில், ஜாலியாக, லைட்டாகச் சொல்கிறது ஒரு முழுநீள ஆல்பம்! “ஒரு சாமான்யனின் பார்வையில் விண்வெளிப் பயணம்” என்ற அந்தக் களம் எனக்கு ரொம்பவே சுவாரஸ்யமாய் பட்டது ; but இந்த டாகுமெண்டரி பாணிலாம் நமக்கு சுகப்படாது என்று சொல்வீர்கேளோ என்ற பயம் தான் ! Again thinking....!

Random Reads # 3 : அப்புறம் இன்னொரு ஆல்பம்... அதன் நாயகரோ ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசமானவர்! ஆக்ஷன் ஹீரோவோ; கௌபாயோ ; டிடெக்டிவோ நஹி ! மாறாக சிமெண்டாலும், கம்பிகளாலும் செய்யப்பட்டதொரு பென்ச் ! Yes, ஒரு பப்ளிக் பூங்காவில் ‘தேமே‘ என ஒரு ஓரமாய் கிடக்கும் பென்ச்சின் பார்வையில் உலகைச் சித்தரித்துள்ளார் கதாசிரியர் !! திரும்பிப் பார்க்கக் கூட நேரமின்றி கடந்து செல்லும் மனுஷர்களை ; அமர்ந்து கதை பேசும் மாந்தர்களை; முகமிலா சாமான்யர்களை; தவறாது ஆஜராகி அமர்ந்து ஓய்வெடுக்கும் மனுஷாளை என்று அந்த பென்ச் மௌனமாய் சந்திக்கும் அனுபவங்களே இந்தத் தொடரின் ஆணிவேர் ! என்னைத் திகைக்கச் செய்த ஆல்பமிது...Maybe... இன்னும் சில காலம் பின்பாய் நமக்கு...? 

Random Reads # 4 : ஒரு வாள்சண்டை வீரன்... கிட்டத்தட்ட பராகுடாவில் நாம் சந்தித்த கேப்டன் ப்ளின் போல ! அந்தக் காலகட்டங்களின் புரட்சிகள்; ரத்தக் களரிகள் என்பதோடு காதல் லீலைகள் என்று அவரது சாகஸங்கள் மிரட்டலான சித்திரங்களில் பார்த்திட்ட போது பராகுடாவுக்கு சவால் விடும் என்று பட்டது ! But... but... அடல்ட்ஸ் ஒன்லி தூக்கலாய்...படு தூக்கலாய் இருப்பதால் thinking...! Artwork is simply breathtaking !!

Random Reads # 5 : 100 வருஷங்களுக்கு அப்பாலொரு தருணம்! பூமியின் வளங்களைச் சுரண்டிச் சுரண்டியே மனுஷன் நாசம் செய்திருக்க, வசதியான பசைப் பார்ட்டிகள் ஒரு 10,000 பேர் மட்டும் செவ்வாய் கிரகத்தில் குடியேறத் தீர்மானித்து கிளம்பும் முஸ்தீபுகளில் இறங்குகின்றனர் ! செவ்வாயிலும் ஜனம் ஜீவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன ! இதற்கிடையே வெள்ளத்தாலும், நிலநடுக்கத்தாலும் சீரழிந்து கிடக்கும் நியூயார்க் நகரை எப்பாடுபட்டாவது பழைய மாதிரி மீட்டெடுக்க ஒரு போலீஸ்காரர் தீயாய் உழைத்து வர, அங்கு அரங்கேறும் ஒரு கொலை மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது ! Sci-fi ; adventure ; த்ரில் என்று தெறிக்கின்றன !! ஷப்பாாா!

பொதுவாய் இந்தக் கதை வாசிப்பு mode-க்குள் புகுந்திடும் போதெல்லாம் இரண்டு மாதிரியான உணர்வுகள் பிரவாகமெடுப்பது வழக்கம் ! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல!

- உணர்வு # 1 : இவர்களுக்கெல்லாம் கற்பனை எனும் ஊற்று உள்ளூர் கொத்தவால் சாவடிகளில் சல்லிசாய் கிடைக்கிறதோ ? என்ன மாதிரியாய் பின்னி பெடல் எடுக்கிறார்கள் - year after brilliant year ?!!

- உணர்வு # 2 : “வரூம்ம்ம்.... ஆனா வராதுதுது.....syndrome !  களங்கள் ஒரு நூறு இருந்தாலும் நாம் இறுதியில் சுற்றி வரப் போவது சில பல குதிரைவாலாக்களின் டெக்சாஸ்களிலும் ; சில பல துப்பாக்கிவாலாக்களின் நியூயார்க்களிலுமே எனும் போது 'அண்ணனுக்கொரு ஊதப்பம்ம்ம்ம்ம்" தான் நினைவுக்கு வருகிறது !! நமது ரசனைகளில் பிழையில்லை என்பதுமே புரிகிறது ; மாறாய் அங்கே கொட்டிக்கிடக்கும் ஆல்ப மழையில் ஓரிரு துளிகளைத் தாண்டி ருசித்திட நமக்கு வாய்ப்புகள் லேதுவே என்பது சார்ந்த ஆதங்கமே எனது பெருமூச்சுகளுக்குக் காரணம் !! 

Bye all.... Have an awesome weekend !

மே மாத இதழ்களின் அலசல்கள் தொடரட்டுமே - please ?

P.S : ஒரு சிறு திருத்தம் : ப்ருனோ பிரேசில் 2.0 புது ஆல்பம் வண்ணத்திலேயே தயாராகி வருகிறது !! நவம்பர் 2019-ல் ரிலீஸ் என்று திட்டமிடல் உள்ளதாம் ! 

Sunday, May 05, 2019

முதலிடம் யாருக்கு ?

நண்பர்களே,

வணக்கம். Once upon a time ...."பதிவுக்கு உபபதிவு" என்பதெல்லாம் அவசியப்பட்டிருந்த நாட்களில் 'உ.ப'.வின் பொருட்டு வாங்கிய Garfield பக்கங்கள் பரணில் துயில் பயில்வது நினைவுக்கு வந்தது ! So இந்த சோம்பலான ஞாயிறினை அந்தச் சோம்பேறித் திலகப் பூனையின் கார்டூனோடு  ஒட்டிட நினைத்தேன் !! 
மே மாதத்து இதழ்கள் நிறையப் பேருக்குக் கைக்குக் கிடைத்ததே லேட் எனும் போது - அவற்றை வாசிக்க / அலசிட எத்தனை பேருக்கு நேரம் கிடைத்ததோ தெரியலை !! தவிர, பள்ளி விடுமுறைகள் எனும் போது குடும்ப விடுமுறைப் பயணங்களும் இருக்கக்கூடும் ! So ஒரு சத்தமிலா மூலையைத் தேடிப்பிடித்து  - 'தனியொருவனாய்' பொம்மை புக் படித்து "இரத்த வைரம்" போலான புதையல்களை ஈட்டும் நினைப்பில் இல்லத்தரசிகளின் "வதம் செய்ய விரும்பும்" வேட்கைகளுக்கு ஆளாகிடாது தப்புவதே இந்த நொடியின் priority ஆக நிறையப் பேருக்கு இருந்திடலாம் !  So அந்தச் சூழல்களில் சிக்கியிரா நண்பர்கள் மே மாதத்து இதழ்கள் பற்றிய தங்களது எண்ணங்களைப் பகிர்ந்திடலாமே ? 

  • DURANGO 
  • BARRACUDA
  • The LONE RANGER
ரேங்குகளில் முதலிடம் யாருக்கு ? மூன்றாமிடமும் யாருக்கு ? சொல்ல நேரம் எடுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு முன்கூட்டிய  நன்றிகள் ! Bye guys !! Have a cool Sunday !! 

Wednesday, May 01, 2019

தி ஈரோடு எக்ஸ்பிரஸ் ..!

நண்பர்களே,

வணக்கம். மே தின வாழ்த்துக்கள் !! ஓட்டுக்கள் பொட்டிக்குள் துயில் பயிலும் போதே "அண்ணன் மந்திரி....நான் வட்டம்...நீ சதுரம் !" என்ற கணக்குகள் ஓடுவதெல்லாம் சகஜம் தானே நம்மூர்களில் ? முதல் வாரத்தைத் தாண்டி படம் தாக்குப் பிடிக்குமா என்பது தெரியாத நிலையிலேயே "வெற்றி..மாபெரும் வெற்றி" என்ற promos ஓடுவதும் நமக்குத் புதுசல்ல தானே ?  அப்புறம் நாம் மட்டும் அதற்கு விதிவிலக்காகிட முடியுமா - என்ன ? ஈரோட்டுப் புத்தக விழா '2019 காத்திருப்பதோ ஆகஸ்டில் தான் ; ஒவ்வொருமுறையைப்  போலவுமே  இந்தாண்டும் பொறுமையாய், நம்பிக்கையோடு காத்திருந்தே ஸ்டால் கிடைப்பதனை உறுதி செய்திட வேண்டிவரும் தான் ; ஆனால் இதோ கெத்தாய் கிளம்பிட்டோம்ல "தி ஈரோடு எக்ஸ்பிரஸ்" அறிவிப்போடு !! 

நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒவ்வொரு புத்தக விழா சந்திப்பின் போதும் ஆங்காங்கே உள்ள புளியமர நிழல்களில் தான் வாசகர்களோடு அரட்டையரங்கம் தொடர்ந்து வந்தது ! அட...LMS வெளியீட்டினைக் கூட ஈரோட்டில், நமது ஸ்டாலிலேயே தான் வைத்துக் கொண்டிருந்தோம் - சுற்றுமுற்றும் இருந்த மற்ற கடைக்காரர்களின் எரிசல்களை ஈட்டிடும் விதத்தில் ! இனியும் இந்தச் சேட்டைகள் தொடர்ந்தால் - புத்தகவிழாவினுள் நுழைய வாலுமிராது ; காலுமிராது என்ற புரிதல் புலர்ந்த பிற்பாடு தான் புத்தக விழா நடைபெறும் V.O.C மைதானத்தின் வாசலிலேயே உள்ள ஹோட்டலில் ஒரு குட்டியான அரங்கில் சந்திக்கும் ஞானோதயம் துளிர்விட்டது ! முதல் ஆண்டினில் maybe 30 - 40 நண்பர்கள் குழிமியிருந்தாலே அதிகம் என்ற ஞாபகம்...! So அது புளியமரத்தின் நீட்சி போலவே இருந்ததால் எனக்குப் பெருசாய் பேஸ்மெண்ட் டான்ஸ் ஆடவில்லை ! எப்போதும் போலவே அரட்டை ; கலாய்ப்புகள் என்ற அந்த 3 மணி நேரங்கள் ஓட்டமெடுத்தன ! ஆனால் தொடர்ந்த ஆண்டுகளில் ஈரோட்டுக்கு பயணிக்கும் ஆர்வமான நண்பர்களின் எண்ணிக்கை மிகுந்து கொண்டே செல்ல, 2018-ன் ஆகஸ்ட் - was a beautiful high !! அந்த காலைப்பொழுதானது ஒரு வாசக சந்திப்பு என்ற லெவலோடு நின்று கொள்ளாது -  குட்டியான கல்யாண வீட்டு feel-ஐத் தந்தது என்றால் மிகையில்லை தான் ! அன்றைய தினத்தின் agenda-வில் இருந்த "இரத்தப் படலம்" ஒரு மெகா உச்சம் எனும் போது - நீங்கள் தெறிக்க விட்ட உற்சாகங்களும் அதனோடு கைகோர்த்திட - நிறைவானதொரு காலையை நமக்கெல்லாம் நினைவில் நிற்கச் செய்து விட்டது ! And அது நாள்வரையிலும் நம்மள் கி  குச்சிப்பிடி ; குடுமிப்பிடி ; கதக் ; வெஸ்டர்ன் ரக நடனங்களையெல்லாமே பதிவுப் பக்கங்களில் மௌன வாசகராய் மட்டுமே பார்த்துப் பழகியிருந்த கருணையானந்தம் அவர்களும் ; சீனியர் எடிட்டரும் அன்றைய நாளில் நம்மோடு ஐக்கியமாகியிருக்க - the morning seemed even more special ! 

ஒவ்வொருமுறையும் ஒரு உயரத்தைத் தொட்டுப் பார்க்கத் தட்டுத் தடுமாறிட வேண்டிவரும் தான் ; and அந்தத் தடுமாற்றங்களின் மும்முரத்தில் "ஆஹா...இவ்ளோ உசரமா ? மறுக்கா இதனில் ஏறுவதென்றால் சில்லுமூக்கு சிதறிடுமேடா சாமீ ?" என்ற பயங்களோ ; "அடுத்த தபா இதே உசரத்தையோ ; இல்லாங்காட்டி இன்னும் ஜாஸ்தியையோ எட்டிப் பிடிக்க முயற்சிக்காட்டி ரெம்போ சப்பையாய் feel ஆகுமே ?" என்ற குழப்பங்களோ எழுவதில்லை தான் ! But அந்தக் குழப்ஸ் & டரியல்ஸ் எல்லாமே ஒட்டுமொத்தமாய்த் தலைகாட்டுவதெல்லாம் - அடுத்த மலையேற்றத்துக்கான நேரம் நெருங்கும் போது தான் ! 2019-ம் புலர்ந்து...அட்டவணையில் பெயர்களாய் மட்டுமே  நின்ற இதழ்களை நிஜமாக்கும் பணிகளும் துவங்கிய போதெல்லாம் மண்டையில் தெளிவிருந்தது ! ஆண்டின் mid point -ல் காத்திருந்த சில பல biggies இதழ்களைக் கரைசேர்க்கும் முனைப்பே அப்போது முக்கியமாய்த் தென்பட்டது ! அந்த வேளையும் புலர்ந்து, வேலைகளும் துவங்கி ; ஒன்றல்ல-இரண்டல்ல-மூன்று குண்டூஸ்களை பூர்த்தி செய்த கையோடு ஹாயாக முன்னோக்கும் போது தான் வயிற்றுக்குள் லேசான 'கட முடா' சத்தம் ! எனக்கு செம பிடித்தமான ஒரு வேலையினைச் செய்திடுவதற்கு ஆண்டின் 12 பொழுதுகளில் வாய்ப்புகள் கிட்டுவது வாடிக்கை ! அது வேறொன்றுமில்லை - ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்தாண்டின் அட்டவணையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கலர் மார்க்கரைக் கொண்டு - "ஆங்...தோர்கல் புக் முடிஞ்சது ; லக்கி லூக் வெளிவந்திடுச்சு ; கிராபிக் நாவல் பினிஷ் " என்ற ரீதியில் அந்தந்த மாதத்து ரெடியான இதழ்களை டிக் அடிப்பேன் !! "ஹை,...கிட்டத்தட்ட பாதிக்கு மேலே தாண்டியாச்சு ; அடுத்து என்ன காத்திருக்கு ?"  என்று பார்த்தபடிக்கே அடுத்த ஒரு வாரத்தை OP அடித்தே ஒப்பேற்றுவேன் ! வழக்கமானதொரு சூழலாயிருப்பின், மே மாதத்து biggies-களைப் பூர்த்தி செய்த கையோடு அட்டவணையைப் பார்த்திருப்பின், தொலைவில் காத்திருக்கும் "தீபாவளி மலர்" இதழைத் தவிர்த்து , பணி மிகுந்த சமாச்சாரம் என்ற இதழ்கள் வேறெதுவும் தென்பட்டிராது !! அட்ரா சக்கை... அட்ரா சக்கை... என்றபடிக்கே 2020-ன் தேடல்களுக்குள் புகுந்திடுகிறேன் பேர்வழி என்ற பாவ்லாவோடு சுற்றித் திரிந்திருப்பேன் !  ஆனால் இப்போதோ - "ஈரோடு 2019 கூப்பிடு தொலைவில் கீதே ; இன்னா மேட்டரு ?" என்ற கேள்வி  ஜிங்கு ஜிங்கென்று எழுந்து நிற்கிறது !! சும்மா இருக்காமல் நடப்பு அட்டவணையில் "ஈரோடு ஸ்பெஷல் புக் இரண்டா ? மூணா ? அரை டஜனா ?" என்று நானும் பகுமானமாய் விளம்பரத்தையும் செய்து வைத்திருக்க - கொஞ்ச நாட்களாகவே thinking !! 

களமிறக்கிட கதைகளுக்குப் பஞ்சமே லேது எனும் போது பொதுவாய் இது போன்ற சந்தர்ப்பங்களில் எனது டயரியைத் தூக்கி வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டிக் கொண்டே, நான் குறிப்பெழுதி வைத்திருப்பதிலிருந்து ஏதேனுமொரு ஆல்பத்தை / தொடரைத் தேர்வு செய்திருப்பேன் ! In fact இம்முறை அதற்குக் கூடத் தேவையின்றி -  உங்களிடம் சென்றாண்டு நடத்திய கருத்துக் கேட்பின் பலனாய்க் கதைகளையும் தேர்வு செய்தே வைத்திருந்தேன் !! "இத்தாலியா ? அமெரிக்காவா ? கென்யாவா ?" என்ற பதிவு நினைவுள்ளதா folks ? இதோ - அன்றைக்கு எழுதியது :

//இந்த 500-ன் தருணத்துக்கு என்று யோசித்த போது சில பல options என் முன்னே அணிவகுத்தன ! இந்த மைல்கல்லைத் தொட்டுப் பிடித்திட உதவியது நீங்கள் தான் எனும் போது அந்த ஸ்பெஷல் இதழ் எதுவாக இருந்திடலாமென்ற தேர்வையுமே உங்களிடமே ஒப்படைக்கலாமென்று தோன்றியது !“ஆங்… சாய்ஸில் எதையுமே விட்டுத் தள்ளாம – அத்தனையையும் போட்டுப்புடலாமே!” என்றே நீங்கள் அபிப்பிராயப்படுவீர்கள் என்று பட்சி சொன்னாலும் தேர்வு செய்திடும் சுதந்திரத்தை உங்களிடமே ஒப்படைக்க எண்ணுகிறேன் - இந்த ஒற்றைத் தருணத்திலாவது !! 

 - Fun with 500!! என்பதே இந்த ஸ்பெஷல் இதழின் பெயராக இருந்திடும் !

- சந்தாவினில் இடம்பெறாது ; முன்பதிவுகளுக்கு மாத்திரமேயான limited edition !!

- “500” என்பதால் இதழின் விலையும் ரூ.500 !! Plus courier costs...!

இதற்கென உங்களுக்கு நான் தரக்கூடிய Options 3 !!

முதலாவது நமது குண்டு-கதம்ப புக் ஆசைக்கு நியாயம் செய்திடக் கூடிய விதத்தில் - "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு !! 

"இத்தாலி பக்கமாய்ப் பறந்து - பறந்து அலுத்துப் போயிட்டூ அண்ணாத்தே !! " - என்பதே உங்களது எண்ணங்களாயிருப்பின் - பிளேனை நேராக பிராங்கோ -பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு - அங்கே அவர்களிடம் ஆசீர்வாதங்களையும், அனுமதிகளையும் வாங்கிக் கொண்டு, லைட்டாக பெட்ரோல் நிரப்பிக் கொண்ட கையோடு - அமெரிக்க களத்தை  நோக்கிப் படையெடுப்போமா - அந்த மண்ணிலான க்ரைம் த்ரில்லர்களெல்லாம் சுகம் தானாவென்று கண்டறிய ? 5 பாகங்கள் கொண்டதொரு வண்ண த்ரில்லர் maybe ? What say ?

அட..."அமெரிக்காலாம் பார்த்துப் பழகிய கதைக்களம் தானே அண்ணாச்சி ? " என்கிறீர்களா ?  கவலையே வாணாம் - மறுக்கா பிளைட்டை அதே பிரான்க்கோ-பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு, மறுக்கா ஆசீர்வாதங்கள் + அனுமதி + பெட்ரோல் என்று நிரப்பிக் கொண்டு,  நாம் ஜாஸ்தி பார்த்திரா  ஆப்ரிக்கா மீதாகப் பறந்து பார்க்கலாமா ? மறுக்கா 5 பாகங்கள் கொண்ட கலர் த்ரில்லர்களை அங்கேயும் பார்க்கலாமோ ? "என்னா ஒய்.. அவ்ளோ பெரிய இருண்ட கண்டத்தில் எங்கேன்னு பறக்கிறதாம் ?" என்று கேட்கிறீர்களா ? "ஆங்....ஒன் மினிட் ப்ளீஸ் !! ம்ம்... கென்யா மேலே பறந்து பார்க்கலாமா ?" சுகப்படுமென்று தோணுதோ ? இந்த டீசர்களோடே இப்போதைக்குப் புறப்படுகிறேன் folks - இந்தத் தேர்வுகளில் உங்களது எண்ணப் பிரதிபலிப்புகளைப் பார்த்திடும் ஆர்வத்தோடு !! //

And தொடர்ந்த உங்களது 'குத்தடி-குத்தடி-சைலக்கா' வோட்டிங்கைத் தொடர்ந்து வெற்றி கண்டது "அமெரிக்கா" !! https://lion-muthucomics.blogspot.com/2018/09/blog-post_24.html

So சுலபமாய் உங்களது தேர்வுகள் 1 & 2-ஐ (அமெரிக்கா & கென்யா) இரு தனித்தனி இதழ்களாக்கி ஈரோட்டு ஸ்பெஷல் ஆகியிருக்கலாம் ! In fact கென்யாவுக்கும் உரிமைகள் வாங்கியாச்சு & அமெரிக்காவுக்கும் உரிமைகள் வந்துவிட்டன நம்மிடம் ! எல்லாமே ரம்யமாய்த் தோன்றினாலுமே, தலையோரமாய் ஒரு சிறு நெருடல் - பட்ஜெட்டின் பொருட்டு எழுந்தது !

ஏற்கனவே ஜம்போ சீசன் # 2 உங்கள் பாக்கெட்களில் ஆயிரம் ரூபாய்க்கொரு சூடு போட்டு விட்டிருக்க - "ஈரோடு ஸ்பெஷல்" என்ற சாக்கில்  பெருசாய்த் திட்டமிட்டு, இன்னொரு மெகா ஓட்டை போட்டுவிடும் பயம் தான் அது  ! பற்றாக்குறைக்கு, "சொத்து விற்றுத் தான் இனி காமிக்ஸ் வாங்கணும் போலும்" என்ற புலம்பல்களுமே ஒலித்திட - கொஞ்சம் அடக்கி வாசித்தால் தப்பில்லையோ ? என்று தோன்றியது ! இந்தக் குழப்பத்தில் சுற்றித் திரிந்த சமயம் தான் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஞாபகத்துக்கு வந்தது !! 4 பாக ஆல்பம் எனும் போது கொஞ்சமாய் விலை கட்டுக்குள் இருந்திடுமென்று நினைத்தேன் ! Plus இந்த ஆல்பத்தை தமிழுக்குக் கொணர ரொம்ப காலமாகவே எனக்கு ஆசை - அந்த க்ரீன் மேனர் பாணியிலான non-linear சித்திரங்களின் காரணமாய் !! நேர்கோட்டில் செல்லும் linear கதைகள் தெரியும் ; மூக்கை முன்னூறு சுற்று சுற்றிடும் non-linear கதைகளும் தெரியும் ! ஆனால் அதென்ன - non-linear artwork என்கிறீர்களா ? சித்திர பாணி ஒன்றாய் இருந்து - கதை பயணிக்கும் திக்கோ வேறாக இருப்பின் அதனை non -linear artwork என்ற சொல்லலாம் தானே ? So கார்ட்டூன் பாணியில் சித்திரங்கள் ; கதையைக் கொண்டு செல்லும் விதத்திலும் நகைச்சுவை - but கதையின் மையப் புள்ளி ஒரு பக்காவான ஆக்ஷன் plot என்ற இந்த மினி தொடரை ஏதேனுமொரு பொழுதினில் உட்புகுத்தக் காத்திருந்தேன் ! தி ஈரோடு ஸ்பெஷல் எக்ஸ்பிரஸின் முதல் 4 கோச்களுமே  "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" என்பதைத் தீர்மானித்தேன் !

சரி....ஒரு தேர்வு ஆச்சு ; அடுத்தது ? என்ற யோசனை பலமானது ! Of course ஒரு ஜனரஞ்சக சந்திப்புத் தருணத்தை இன்னும் உற்சாகமாக்கிட ஒரு popular & evergreen ஆக்ஷன் நாயகரைக் களமிறக்குவதே லாஜிக் என்ற புரிந்தது ; and மேற்படி விவரிப்புகளுக்கு "உள்ளேன்" என்ற பதிலளிக்கக் கூடிய தகுதி ஒரு இத்தாலிய மஞ்சள் சொக்காய்க்காரரிடம் மாத்திரமே இருப்பதும் புரிந்தது ! TEX 700 ; TEX Maxi ; என்ற நிறையவே மண்டைக்குள் ஓட்டமெடுத்தன ! ஆனால் தினப்படி சந்திக்கும் ஒரு நாயகரை  ; அதுவும் பெரும்பான்மையினர் தவறாது வாங்கிடப் பிரியப்படும் ஒரு popular ஹீரோவை - இதுபோலான முன்பதிவுக்கான limited edition வரிசைக்கு கொண்டு போவதென்பது "இஷ்டப்பட்டால் வாங்கி கொள்ளுங்கள் " என்ற மேலோட்டமாய்ச் சொன்ன கையோடு - "இதை வாங்கிக்காமே போயிடுங்களேன் பார்ப்போம் !!" என்ற குசும்பும் செய்வதற்கு சமானம் என்று தோன்றியது ! So இரவுக்கழுகார் & கோ.அந்த இரண்டாம் ஸ்பெஷல் slot-க்கு வேண்டாமே என்று பட்டது !

தொடர்ந்து மின்னும் மரணத்தாரின் இளம் பிராயத்து ஆல்பங்களைத் தொகுப்பாக்கினால் என்னவென்று யோசித்தேன் ! ஆனால் இரண்டாவது பட்டாசைப் பெருசாய்  வெடிக்காது, அளவாய் அமைத்திடுவதே பட்ஜெட்டின் கட்டாயம் எனும் போது - ஐந்தாறு ஆல்பங்களை ஒன்றிணைப்பது வேலைக்கு ஆகாது என்று பட்டது ! பற்றாக்குறைக்கு அந்தக் கதைவரிசை சங்கிலித் தொடராய் ஓடுகிற போது, நடுவாக்கில் ஒரு சில ஆல்பங்களை போட்டு விட்டு, அப்புறம் இன்னொரு வாய்ப்புக் கிட்டும் வரை 'தேமே' என்றிருப்பதும் சரிப்படாது என்று தோன்றியது ! இன்னொரு 132 பக்க க்ரைம் த்ரில்லரைப் பரிசீலித்தேன் ; வண்ணத்தில் வித்தியாசமாய்த் தென்பட்டது தான் ; ஆனால் கொஞ்சம் dark ஆன கதைக்களம் - "பாதி கி.நா" என்ற சொல்லும் விதமாய் ! அச்சோ...ஒரு ஜாலியான வேளையின் மூடுக்கு இந்தக் கதை அவ்வளவாய் set ஆகாதென்று தீர்மானித்தேன் ! "Lone ரேஞ்சரை மட்டும் ஜம்போ - சீசன் 2-க்கென ஒதுக்கியிராவிடின் அவரை இந்த இரண்டாம் ஸ்லாட்டுக்குள் நுழைத்திருக்கலாமே ? என்ற எண்ணமும் ஓடியது தான் ! ஆனால் ஜம்போவின் இரண்டாம் சீசனை அதிரடியாக்கிட இந்த முகமூடி மனிதர் ரொம்பவே அவசியம் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது ! அப்போது தான் ஜம்போவின் சீசன் 2 ; சீசன் 3 (!!) பொருட்டு வாங்கி வைத்திருந்த கதைகளுள் ஒன்று நினைவுக்கு வந்தது !!

தெறிக்கும் ஆக்ஷன் ; முற்றிலும் வித்தியாசமான நாயகக்  குழு (!!) and எல்லாவற்றையும் விட முக்கியமாய் - தெளிவான கதையோட்டம் என்று டாலடிக்கும் அந்த ஆல்பம் ஈரோடு எக்ஸ்பிரஸின் பேட்டி நம்பர் 5 & 6 ஆனது !! "நித்தமொரு யுத்தம்" - இன்னொரு பிராங்கோ-பெல்ஜிய ஆக்கமே ! இதன் பிரதான protaganist ஒரு பெண்ணே ; ஆனால் ஒரு டீமாய் நண்பர்களுடன் களமிறங்கிடுவார் இவர் ! கூப்பிடு தொலைவிலிருக்குமொரு எதிர்கால சமூகத்தின் உச்சபட்ச நிலைகளிலிருக்கும் பெரிய மனுஷர்களுக்கு எல்லாவித சூழல்களிலும் பாதுகாப்பு நல்கிடத் தயாராகயிருக்கும் ஒரு high tech பாடிகார்ட் நிறுவனத்தின் top டீம் இவர்கள் !!  அவர்களை நாடிவரும் பெரும் புள்ளிகளை பாதுகாக்கும் படலங்களில் அசாத்திய ஆக்ஷன் பலனாகிறது !! DAMOCLES என்பது இத்தொடரின் ஒரிஜினல் பெயர் !! மொத்தமே 4 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் சாகசம்  2 ஆல்பங்களில் நிறைவுற்றிடும் ! So சிக்கென்று ஒரு டபுள் ஆல்பமாய் போட்டு அசத்திவிடலாம் என்ற நினைத்தேன் !

"பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இன்றைய உலகிற்கு அத்தியாவசியமானதொரு சமாச்சாரத்தை - நேற்றைய சூழலில் சொல்ல முற்படுகிறதென்றால்....

"நித்தமொரு யுத்தம்" இன்றைய உலகிற்கு அவசியப்படக்கூடியதொரு கற்பனையை நாளைய சூழலில் சொல்ல விழைகிறது !!

So இந்த 2 ஆல்பங்களையும் ஒற்றைத் தருணத்தின் இரட்டை துளிர்களாய் அறிவிப்பது பொருத்தமே என்ற நினைத்தேன் !! And here you go :
இரு இதழ்களும் முன்பதிவுகளுக்கானவை என்பதால் சின்னதொரு பிரிண்ட் ரன் மட்டுமே இருந்திடும் ! Of course - இவற்றை ஈரோட்டில் புத்தக விழாவில் நமது ஸ்டாலில் வாங்கிக்கொள்ளலாம் தான் ; or அன்றைய பொழுதில் நம் கைவசம் எஞ்சியிருக்கக்கூடிய பிரதிகளை நமது ஆன்லைன் ஸ்டோரிலோ ; முன்பணம் செலுத்திடும் முகவர்களிடமோ வாங்கிக்கொள்ளலாம் தான் ! ஆனால் முன்பதிவு செய்திடும் நண்பர்களின் டப்பாக்களுக்குள் மட்டும் ஒரு சன்ன surprise gift-ம் இருந்திடும் என்பதிங்கே கொசுறுச் சேதி  ! So எவ்விதம் வாங்குவதென்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டுவிடுகிறோம் guys ; and ஈரோட்டில் சந்திப்பின் போது வாங்கிட எண்ணும் முன்பதிவுகளுக்கு கூரியர் கட்டணங்களை முழுசுமாய் waive செய்திடத் தீர்மானித்துள்ளோம் !  Please note : இது நமது மீட்டிங் தினத்தன்று நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு மட்டுமே பொருந்திடும் ! "ஸ்டாலில் வைத்திருங்கள் ; நான் அப்பாலிக்கா ஒருநாள் வந்து பெற்றுக்கொள்கிறேன் !" என்ற கோரிக்கைகளை செயல்படுத்த இயலாது guys - பெரும் குளறுபடியாகி விடுகிறது அந்த நடைமுறை ! So இயன்றமட்டுக்கு விரயங்களை மட்டுப்படுத்த முயற்சித்துள்ளோம் ! (அதற்காக எனக்கு ஒரு சிலை வைத்திட ஏற்பாடுகள் நடந்தேறும் என்ற பகற்கனவெல்லாம் எனக்கில்லை ; இதற்குள்ளேயும் ஏதேனுமொரு காரணத்தைக் கண்டுபிடித்து நாலு சாத்தினால் தான் சிலபலரது மே தினங்கள் முழுமை காணும் என்பதை புரிந்தே உள்ளேன் !!) Anyways - this is what has been decided guys !! இனி முன்பதிவுக்கு நீங்கள் முந்தினால் பணிகளுக்குள் தடதடப்போம் நாங்கள் !! In fact "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" மொழிபெயர்ப்பு பாதிக்கும் மேல் ஓவர் & இன்றைக்கு DAMOCLES டீமுடன் கைகுலுக்க உத்தேசித்துள்ளேன் !!

Before I  sign out - கேள்வியும் நானே ; பதிலும் நானே என்றொரு அவதார் எடுத்துக் கொள்ளட்டுமா ?
-----------------------------------------------------------------------------------------------------------
கேள்வி # 1 : முன்பதிவு செய்வதானால் இரண்டுக்கும் சேர்த்தே தானா ? தனித்தனியாய் நஹியா?

பதில் : தனித்தனியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் - but  சலுகை விலைகள் இராது & கூரியர் கட்டணங்கள் will apply ! And of course the surprise gift'd miss out too !

ONLY "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" எனில் - ரூ.450 (கூரியர் சேர்த்து)

ONLY "நித்தமொரு யுத்தம்" எனில் -ரூ.250 (கூரியர் சேர்த்து)
------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி # 2 : எப்போக்குள்ளாற முன்பதிவு பண்ணனும் ?

பதில் : ஜூலை 10 க்கு முன்பாய் !!
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 3 : "கார்ட்டூன்...கார்ட்டூன் என்ற கரடியாய்க் கத்தியது காதில் விழலியா டமாரக்காதா ?"

பதில் : விழுந்துச்சுங்கோ ; "பிஸ்டலுக்குப்  பிரியாவிடை" கார்ட்டூன் பாணி தான் - சித்தே அஜீஸ் பண்ணிகோங்க !" என்ற வாயில் வடை சுடமாட்டேன் !! A promise is a promise ---ஈரோட்டில் உங்களுக்கு கார்ட்டூன் இதழ்களும் காத்திருக்கும் ! எது ? எப்படி ? என்றெல்லாம் இப்போது கேட்காதீர்கள் guys - ஆகஸ்டில் முதல் ஞாயிறை நிச்சயமாய் நீங்கள் நமது சிரிப்புப் பார்ட்டிகளோடும், சிறப்பாய்க் கொண்டாடுவீர்கள் !!
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 4 : "இப்படியொரு தருணத்தில் 'தல' இருக்க வேண்டாமோ ? அவரின்றி ஓரணுவும் அசையாதே ?"

பதில் : வாஸ்தவமே !! Again - எப்படி ? என்ற கேள்வியை மட்டும் கேட்காதீர்கள் நண்பர்களே - ஆனால் 'தல'யும் இருப்பார் உங்களின் ஈரோட்டுப் பயணத்தின் சமயம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன் ! 
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 5 : KENYA ??? AMERICA ???

பதில் : இரு தொடர்களுக்கும் உரிமைகள் ரெடி ; "கென்யா" மொழிபெயர்ப்புமே ரெடி ! வெளியிடவொரு வேளை புலர்ந்திட வேண்டியது மட்டும் தான் பாக்கி ! 2020-ல் இரண்டும் நிச்சயமாய் உங்களை சந்திக்கும் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் ! 
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 6 : வரிசைக்கு புக்கா அறிவிச்சிட்டே போய் எங்களை ஒரு வழி பண்றதாய் உத்தேசமா ? இந்தக் கதைகளை படிக்கலைன்னு யாரு அழுதா உன்கிட்டே ?

பதில் : ஒரு சிறு வாசகவட்டத்தின் சந்தோஷமே பிரதானம் இந்தப் பயணம் தொடர்ந்திடுவதற்கு ! "இரத்தப் படலம்" எனும் ஒரு ராட்சச முன்மாதிரி 2018 -ல் களமிறங்கியான பிற்பாடு - சும்மா சந்தித்து ; அரட்டையடித்து ; வடை சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதெல்லாம் இனி சுகப்படாதென்று மனசு சொல்கிறது ! So இரத்தப் படல மெகா பட்ஜெட்டெல்லாம் இன்றியும், ஏதேனும் வித்தியாசமான கதைத்தேடல்களின் வாயிலாய் உங்களின்  சுவாரஸ்யங்களைத் தக்க வைப்பதே பின்னணியிலுள்ள அவா ! 

தவிர, இவை போன்ற மினி தொடர்களைக் களமிறக்கிட ரெகுலர் சந்தாவில் வாய்ப்புகள் மிகச் சொற்பம் ! So இத்தகைய one-off தருணங்களை விட்டால் - இவற்றை வெளியிட platforms லேது !! 
------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி # 7 : உனக்கு மொக்கை போட்டுப் போட்டு போரே அடிக்காதாப்பா அழகப்பா ? பதிவு இம்மாம் நீளம் போகுதே ? எதைப் போட்டு அந்தக் காவாய் வாயை அடைக்கிறதாம் ?

பதில் : இதோ கிளம்பிட்டேனுங்கோ - வழக்கமா சொல்றதைச் சொல்லிப்புட்டு : Bye guys ; see you around !! Have a chill break  !!

பி,கு, மே இதழ்கள் செவ்வாய் மாலை தயாராகி விட்டன ! வியாழன்று கூரியரில் கிளம்பிடும் !!