Sunday, July 29, 2018

விடைகளோடே வினாக்கள் !!

நண்பர்களே,

வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் காமிக்ஸ் பணிகளைக் கொஞ்சம் லாத்தலாய் செய்து முடிக்க முடிந்தது ! ஆனால் அதிசயத்தில் அதிசயமாய் – ஆடி மாதத்தில் மற்ற பணிகளும் லேசாய்ச் சுறுசுறுப்பாகிட; இரத்தப் படல ரிலீசும் நெருங்கிட, ஆந்தை விழிகள் – கோட்டானின் விழிகளாகிடாத குறை தான்! பயணம்… அப்புறமாய் இன்னும் கொஞ்சம் பயணம்… என்ற கூத்துக்கு மத்தியில் நமது காமிக்ஸ் திட்டமிடல்களுக்கு நேரம் ஒதுக்கத் திண்டாட்டமோ திண்டாட்டம் தான் ! ஆனால் இருக்கவே இருக்கிறதே – ரயில் நிலையங்களிலும்; விமான நிலையங்களிலும் ‘தேவுடா‘ காக்கும் தருணங்கள்!! ஆங்காங்கே காத்துக் கிடக்கும் சமயங்களில் தலைக்குள் நர்த்தனமாடி வந்தது முழுக்கவே ஈரோட்டுப் புத்தக விழாவுக்கான சிந்தனைகளும், 2019-ன் அட்டவணை பற்றிய இங்க்கி-பிங்க்கி-பாங்க்கிகளும் தான்! 

கையில் ஒரு கோடு போட்ட நோட்… விரல்களில் ஒரு பேனா… வதனத்திலோ தாமஸ் ஆல்வா எடிசனுக்கே சவால் விடும் “ரோசனை” ரேகைகள்! எதையாவது பரபரவென எழுத வேண்டியது ; ஈயென்று முகம் முழுக்க மறுகணம் ஒரு புன்னகை நிழலாட வேண்டியது ; பேப்பரையே உற்றுப் பார்க்கும் மூன்றாவது நிமிடத்தில் உச்சா போகாத உராங்குட்டான் போல முகம் இறுக்கமாக – பரபரவென எழுதியதை – சரசரவென அடித்து வைப்பது ; அப்புறம் அதையே முறைத்துப் பார்ப்பது - என்று சிக்கிய காத்திருப்புகளையெல்லாம் சமீப நாட்களில் நான் செலவிட்டு வந்துள்ள விதம் இதுவே !! தூரத்திலிருந்து பார்க்கும் போது – ஏதோ ரிலையன்ஸ் குழுமத்தின் வரவு-செலவு கணக்குப் போடும் அம்பானி ரேஞ்சுக்குத் தோன்றியிருக்கும் ; ஆனால் இங்கே அமர்ந்திருப்பதோ “ரின்டின் கேன் உள்ளேயா ?”; “கமான்சே வெளியேவோ?” என்ற குழப்பத்திலிருக்கும் பேமானி மாத்திரமே என்பது எனக்குத் தானே தெரியும் ?! ஆண்டுக்கொருமுறை தொடரும் இந்த routine ; ஆண்டுக்கொருமுறை அதையே சொல்லி வைத்து உங்களை பிளேடு போடுவதுமே அந்த routine-ன் ஒரு அங்கமாகிப் போய் விட்டது ! 

கார்ட்டூன் சந்தாக்கள்; அப்புறம் ஆக்ஷன் ஜானர்கள் பற்றிய உங்களது எண்ணங்களைத் தெரிந்து கொண்ட பிற்பாடு – காத்துக் கிடப்பதோ நம் ஜீவிதத்துக்கு ஆதாரமாயிருக்கும் Black & White சந்தா பற்றிய அலசல் தானே ? இன்னும் சரியாகச் சொல்வதானால் – ‘டெக்ஸ் சந்தா‘ பற்றி! 

A word of caution : “ச்சை… மஞ்சள் சட்டை போட்ட தொப்பிக்கார்களையே எனக்குப் புடிக்காது” என்று பழிப்புப் காட்டும் ஸ்மர்ஃபாகவோ ; "இத்தாலிக்கார் ஓவரோ-ஓவர்டோஸ்” என்று கருதும் அணியினராகவோ நீங்களிருப்பின் – நேராக இந்தப் பதிவின் வால்பகுதியில் உள்ள ஈரோடு updates-க்குள் புகுந்திடல் நலமென்பேன்! வீணாய் உங்களது எரிச்சல்களை சம்பாதித்த புண்ணியத்தைக் கட்டிக் கொள்ள வேண்டாமே ! என்ற ஆசையில் எழுந்திடும் வேண்டுகோள் தான் இது!

ஆண்டுக்கு மூன்றோ – நான்கோ டெக்ஸ் கதைகளே என்ற வேகத்தில் ஆண்டாண்டு காலமாய் வண்டி ஓடிக் கொண்டிருக்க – நமது இரண்டாம் வருகைக்குப் பின்பாக “More of டெக்ஸ் ப்ளீஸ்!!” என்ற வேண்டுகோள் உரக்க ஒலிக்கத் துவங்கியது நாம் அறிந்ததே! இதுவரையிலும் வேறு எந்த நாயகருக்குமே இது போலொரு பிரத்யேகத் தடம் பற்றி நாம் யோசித்தது கூடக் கிடையாதென்பதால் எனக்குள் உங்கள் கோரிக்கை பெரியதொரு தாக்கத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தவில்லை என்பது தான் நிஜம்! ஆனால் நாட்களின் ஓட்டத்தோடு உங்களது கோரஸும் வலுத்த போது என்னால் தொடர்ந்து பிள்ளையாராய் மௌனம் சாதித்திட இயலவில்லை! ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பிற்பாடே “சந்தா டெக்ஸ்”-க்கு தலையசைத்தேன்! தொடர்ந்தது என்னவென்பதை நான் சொல்லவும் வேண்டுமா – என்ன ?!

பட்டாசாய் பொரிந்த “சட்டத்துக்கொரு சவக்குழி” ஆரம்பித்து வைத்த ஊர்வலம் சீக்கிரமே பேரணியாகியதைப் பார்த்த போது வாத்து மடையன் போலத் தான் உணர்ந்தேன் நான்! “இந்த மாதிரியானதொரு பந்தயக் குதிரையை களத்தில் இறக்கி விடாமல் மடியில் கட்டித் திரிந்தாயாக்கும் – இத்தனை காலமாய்?” என்று எனக்குள்ளிருந்த ஜீனியஸ் ஸ்மர்ஃப் விரலை ஆட்டி, ஆட்டித் திட்டித் தீர்த்தது! சிங்கிள் ஆல்பங்களோ; டபுள்களோ; Black & வைட்டோ; வண்ணமோ; சின்ன சைஸோ; மெகா சைஸோ – எல்லா பாணிகளிலுமே  நமது டெக்சாஸ்கார் (ம.ப. சார் அல்ல!!) அதகளம் செய்வதைத் தொடர்ந்த மாதங்களும், ஆண்டுகளும் எனக்குக் காட்டியுள்ளன ! புத்தக விழாக்களிலும் சரி, ஆன்லைன் விற்பனைகளிலும் சரி, மறுபதிப்புகள் தூள் கிளப்பி வந்தது “டெக்ஸ் சந்தா” துவக்கம் காண்பதற்கு ஓராண்டு முன்பான தருணம் என்றொரு ஞாபகம் எனக்கு! சிறுகச் சிறுக – இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும், சின்னக் கழுகாரும், மாதம்தோறும் நம் இல்லங்கள் தேடி வரும் routine பரிச்சயமாகிப் போக, பிரிட்டிஷ்கார்கள் பின்சீட்டுக்குச் செல்லும் சம்பவம் நிகழத் துவங்கியது.

இது நிச்சயமாய் மறுபதிப்புகளை மட்டம் தட்டும் முயற்சியே அல்ல ; கடந்த 3+ ஆண்டுகளாய் நாமிங்கே பணியாளர்களுக்குப் பொரிகடலைக்குப் பதிலாய் சம்பளமென்று ஒன்றைத் தந்திட முடிந்துள்ளதெனில் – அது முழுக்க முழுக்க மும்மூர்த்திகளின் விற்பனைகளின் புண்ணியத்திலேயே ! ஆயுசுக்கும் இந்த Fleetway நால்வருக்கும் நாம் ஒரு அசாத்திய நன்றிக்கடன் பட்டிருப்போமென்பது நிச்சயம் ! ஆனால் இன்றைக்கு அந்த trend தானாய்ப் பின்வாங்குவது கண்ணில் படுகிறது – டெக்ஸின் மவுசு கூடிடும் யதார்த்தத்தோடு! கிட்டத்தட்ட தினம்தோறும் ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கையிலான மறுபதிப்புகள் ஆன்லைனில் விற்பனையாகிடுவதுண்டு – ஆறு மாதங்கள் முன்பு வரையிலும்! ஆனால் இப்போதோ நிலவரம் தலைகீழ்! மாதத்தில் யாராவது ஒருத்தரோ, இருவரோ மும்மூர்த்திகளை நாடினாலே அது நமது யோக தினமென்று எடுத்துக் கொள்கிறோம்! Of course – மறுபதிப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட காலியாகும் நிலைக்கு அருகிலுள்ளன என்பதால் இந்தக் குப்புறப் பாயும் விற்பனைப் போக்கை எண்ணி ரொம்பவும் தூக்கத்தைத் தொலைக்க அவசியப்படவில்லை! அதே வேளையில் கார்ட்டூன்களும், டெக்ஸும், அந்தப் பள்ளத்தை ரொப்பி உதவிடுவதால் – ஆபீஸில் லாந்தர் விளக்குகளைத் தேடிடாது – கரெண்ட் பில்களுக்குப் பணம் கட்டும் அளவுக்குத் தேறி விடுகிறோம்! So – இந்தப் பின்னணியில் நான் முன்வைக்கப் போகும் கேள்விகளானவை செம குடாக்குத்தனமானதாய் காட்சி தருமென்பது எனக்கே புரிகிறது! But – ஒவ்வொரு ஆண்டுமே உங்களது நாடிகளை லேட்டஸ்டாய் ஒரு தபா பிடித்துப் பார்ப்பது உத்தமமென்று – உள்ளே குடியிருக்கும் டாக்டர் ஸ்மர்ஃப் சொல்வதால் இதோ எனது கேள்விகள்!

Once again -  “ஓவர்டோஸ்” அணியினர் மன்னிச்சூ… இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் பதிவிடத் தேவை இராது!

1. ஆண்டொன்றுக்கு டெக்ஸுக்கென ஒதுக்கும் ஸ்லாட்களின் நம்பருக்கு எது கச்சிதமென்பீர்கள்? (சந்தாப் பிரிவின் தற்போதைய maximum எண்ணிக்கையே தலா 9 இதழ்கள் தான் என்பதை மறந்திட வேண்டாமே ?!)

     6          8          9


2. ஆண்டொன்றுக்கு சிங்கிள் TEX ஆல்பங்கள் எத்தனை? டபுள் TEX ஆல்பங்கள் எத்தனை ?

3. மெ-கா-ாா- சாகஸங்களாய் மஞ்சள் சட்டைக்காரர் இதுவரையிலும் தலைகாட்டியுள்ள (ட்ரிபிள்) ஆல்பங்கள் – அதாவது - 330 பக்கக் கதைகள் பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் ப்ளீஸ்?


4. கதைத் தேர்வில் நேரும் பிழைகளுக்குப் பொறுப்பு என்னதே! But still – கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்துள்ள டெக்ஸ் சாகஸங்களுள் "ஹிட் – சொதப்பல் ratio" என்னவென்பீர்கள்?

    80% - 20%       70% - 30%       60% - 40%


5. Looking ahead – இந்த “நடுக்கூடத்தில் நாலு சாத்து; முன்வாசலில் மூணு குத்து!” என்ற அதிரடி பாணி நமக்குச் சலித்திடக் கூடுமென்பீர்களா? அல்லது – சில சமாச்சாரங்கள் சலிப்புகளுக்கு அப்பாற்பட்டவைகளா?

6. TEX கலர் மறுபதிப்புகள்: இவை மெய்யாலுமே மறுவாசிப்புக்கும்; ரசனைகளுக்கும் நியாயம் செய்கின்றனவா folks? அல்லது இவை சேகரிப்புகளுக்கு மாத்திரமேவா?


பந்தியில் முக்காலே மூணு வீசம் இடத்தை ரேஞ்சர் அணி ஆக்ரமித்துக் கொள்ளும் போது - எஞ்சியிருக்கும் போனெல்லி b&w நாயக / நாயகியரைப் பற்றிக் கேட்க சொற்பமான வினாக்களே எஞ்சியிருக்கின்றன :

7. மர்ம மனிதன் மார்ட்டின் : சந்தேகமின்றி இவரொரு தனிப்பட்ட லெவலில் உலாற்றும் நாயகரே !! எந்தவொரு மாமூலான template -களுக்குள்ளேயும் இவரது கதைகளை அடைக்க முடியாதென்பது திண்ணம் ! சமீபத்தைய "மெல்லத் திறந்தது கதவு" ஏற்படுத்திய தாக்கங்களின் இரு பரிமாணங்களையும் கருத்தில் நிறுத்தி தீர்ப்புச் சொல்வதாயின் - ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் என்பது ஓ.கே.என்பீர்களா guys ? 

8. C.I.D ராபின் சார்ந்தும் அதே கேள்வியே !! "அக்மார்க் டிடெக்டிவ்" என்ற அடையாளத்தைச் சுமந்து நிற்கும் இவருக்கு - ஆண்டுக்கொரு வாய்ப்பு என்பது பொருத்தமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?

9. அப்புறம் கல்தா கண்டுள்ளவர்கள் மூவர் :

மேஜிக் விண்ட்
டைலன் டாக்
ஜூலியா 

இவர்களுள் யாரேனும் ஒருவர் மறுவருகைக்கு அருகதையுள்ளவர்களெனில் யாருக்கு வோட்டுப் போடுவீர்கள் ? யாருக்கு வேட்டு வைப்பீர்கள் ? Curious to know .....!!
ஆக that winds up my questions about சந்தா : கருப்பு & வெள்ளை ! நிதானமாய் பதில்கள் ப்ளீஸ் ? 

புறப்படும் முன்பாய் ஈரோடு புத்தக விழா & "இரத்தப் படலம்" ரிலீஸ் சார்ந்த updates :

1 . ஈரோட்டில் நமது ஸ்டால் நம்பர் 58 ....! ஆகஸ்ட் 4 துவங்கி, ஆகஸ்ட் 15 வரை புத்தக விழா V.O.C பூங்காவில் நடைபெறுகிறது !! As always - we would love to see you there !!

2 . ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் "இரத்தப் படலம்" ரிலீஸ் & வாசக சந்திப்பு என்ற agenda விற்கு உங்கள் ஒவ்வொருவரையும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்போம் ! தங்களது முன்பதிவுப் பிரதிகளை ஈரோட்டில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள், தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடக் கோருகிறேன் !! Most important please !!

3 .அரங்கில் ஏற்பாடு ; ரவுண்ட் பன்; சதுர பன் கொள்முதல் ; மதிய போஜன ஏற்பாடு என்பனவற்றையெல்லாம் பிசகின்றிச் செய்திட, வருகை தர உத்தேசித்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை தெரிந்தால் மிகுந்த உதவியாய் இருக்கும் ! முதல் வருடம் மதிய உணவின் போது நேர்ந்தது போலான தாமதங்கள் இனியொருமுறை வேண்டாமே என்பதால் முன்கூட்டியே உணவுக்கான திட்டமிடலை சரிவரச் செய்திட  விழைகிறோம் ! சிரமம் பாராது "உள்ளேன் நைனா !" என்று கைதூக்கி விட்டால் சிக்கல் தீர்ந்திடுமே ?!!

மீண்டும் சந்திப்போம் all !! Enjoy the Sunday !! Bye now !!

Tuesday, July 24, 2018

வாராதோ வாரயிறுதிகள் ?!

நண்பர்களே,

வணக்கம். நித்தமும் ஒரு வாரயிறுதியாய் இருந்திடக் கூடாதா ? என்ற ஏக்கம் எழுகிறது ! அட...பெர்முடாக்களைப் போட்டுக் கொண்டு வீட்டில் ஹாயாகத் திரியவொரு முகாந்திரம் என்பதற்காகவோ ; ஒரு  full கட்டு கட்டி, தொந்தியை ரொப்பிக் கொண்டு ஏகாந்தமாய் ஏப்பம் விடும் மதிய நேரத்து ரம்யங்களுக்காகவோ இந்த ஏக்கப் பெருமூச்சல்ல ! மாறாய் - மக்கள் குஷாலாய் வெளியே outing  புறப்பட ஒரு தருணமாகவும், அந்த வேளையினில் ஒரு புத்தக விழா எதிர்ப்பட்டால் அவர்களது வாங்கும் ஆர்வங்கள் விஸ்வரூபமெடுப்பதும் -  வாரயிறுதிகளெனும் அந்த 2 நாட்களின் மகிமையால் எனும் காரணத்திற்காகவே வாரஇறுதிகளை காதலிக்கத் தோன்றுகிறது !! தற்போது கோவையில் நடந்து வரும் புத்தக விழாவின் கதையும் இந்த "வாரயிறுதி magic " சார்ந்ததே ! 

வெள்ளிக்கிழமை துவங்கிய விழாவின் முதல் நாள் சுமாரான விற்பனை தான் ; ஆனால் தொடர்ந்த அடுத்த 2 நாட்களும் அழகான அனுபவங்களே !! Of course - சென்னையின் ஒரு மிதமான விற்பனை நாளின் நம்பர்களுக்கு அருகே கூட, இதர நகரங்களின் peak sales நெருங்கிடாது தான் ; ஆனால் அமாவாசைகள் நித்தமும் வருவதில்லை அல்லவா ? சனி & ஞாயிறு இரு நாட்களுமே பரபர விற்பனை ! இரு தினங்களுமே ஆஜராகி, கடல்யாழ் விற்பனைக்கு ஆனதையெல்லாம் முயற்சிக்க, நமது கவிஞர் ஸ்டீலோ  - ஞாயிறுக்கு ஒரு பாலு மஹேந்திரா அவதாரெடுத்து ஒளி  ஓவியக் கலைஞராக உருமாறி, சும்மா மடக்கி மடக்கி போட்டோக்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்ததை 5000 மைல்களுக்கு அப்பாலிருந்தே வாட்சப்பின் புண்ணியத்தில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது !! அங்கே கோவையில் நிலவும் சூழலை நொடிக்கு நொடி எனக்கு update செய்து வந்தார் நம் மின்னல் மனிதர் !

ரம்யா ஸ்டாலில் செய்யும் ஒத்தாசைகள் பற்றாதென, அவரது தந்தையோ - தொலைவிலிருக்கும் வங்கியில் பணம் செலுத்தக் கிளம்பிய நமது அண்ணாச்சியை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று,வேலையை முடித்த கையோடு மறுபடியும் ஸ்டாலில்  கொணர்ந்து இறக்கி விட்டுள்ளார் ! இன்னொரு பக்கம் கவிஞரோ - சிவகாசியிலிருந்து அனுப்பப்பட்ட பண்டல்களை தன் பொறுப்பில் டெலிவரி எடுத்து வந்து ஸ்டாலில் ஒப்படைக்கிறார் - அதற்கான பணத்தைக் கூடப் பெற்றுக் கொள்ளாது !! And கோவையில் புத்தக விழா நடைபெறும் இடமானது ஊருக்கு வெளியே guys !! ஒவ்வொருமுறையும் நிறைய மெனெக்கெடாது நமக்கு உதவிடல் சாத்தியமே ஆகாது !! ஆனால் சகலத்தையும் தம் கடமைகளாய் பாவித்து நண்பர்கள் செய்திடும் உதவிகளுக்கு என்ன மாதிரியாய் நாம் நன்றி சொல்லப் போகிறோமோ - தெரியலை !! Thank you guys !!! Simply Awesome stuff !!

நேரம் கிட்டும் போது மேற்கொண்டும் போட்டோக்களை இங்கே பதிவிடுகிறேன் !! Bye for now !!

























Saturday, July 21, 2018

தொடரும் "உள்ளே-வெளியே" படலம் !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு Disclaimer : துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே - இதுவொரு உரத்த சிந்தனையின் தொகுப்பென்பதை !!  "தேமேன்னு போய்க்கினு இருந்த என்னைப் பாத்து நீ ஜிலோன்னு கருத்துக் கேட்டே ; நானும் படா ரோசனைலாம் பண்ணி மெனெக்கெட்டு சொன்னேன் ; ஆனாக்கா நீ அதை நடைமுறைப்படுத்தலை  ; இது முறையா நைனா ?!" என்ற விசனப் படலங்கள் எழக்கூடாதல்லவா ? உங்கள் அபிப்பிராயங்களே எனது தீர்மானங்களின் அஸ்திவாரம் என்பதில் துளியும் ஐயம் கிடையாது  ; so நிச்சயமாய் ஒவ்வொரு புள்ளியிலும் உங்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பேன் ! ஆனால் ரசனைகளின் மாற்றங்களுக்கேற்ப, நீங்கள் முன்வைக்கும் சிந்தனைச் சிதறல்களும் வேறுபடுவது இயல்பே ! அந்தச் சூழலில் அனைவரது அவாக்களையும் ஒருசேர நிறைவேற்றிடுவது நட்வாக் காரியம் என்பதால் இந்த முன்ஜாக்கிரதை ! தவிர, சில நேரங்களில் இங்குள்ள நம் பொதுவான கருத்துக்களும், விற்பனைகளின் பின்னணிகளை முரண்படுவதுண்டு ! For instance - இங்கே நமது நீலப் பொடியர்கள் மித வரவேற்பு கொண்டிருப்பின், புத்தக விழாக்களில் 'ரொம்பவே தேவலாம்' என்பது மாதிரியான response பெற்றிருக்கிறார்கள் ! So எனது தீர்மானங்கள் - உங்கள் அவாக்களுக்கும், விற்பனைகளின் புள்ளிவிபரங்களுக்கும் மத்தியில் ஒரு பொதுவான சமதளத்தை நாடிடும் அவசியம் கொண்டிருக்கும் ! இவையெல்லாமே நீங்கள் அறியா சமாச்சாரங்கள் இல்லையென்றாலும் - இதற்கு முந்தைய ஆண்டுகளில், தேர்வுகள் சார்ந்த அலசல்களில் சிற்சிறு  நெருடல்கள் தலைதூக்கியது நினைவுள்ளது ! So முன்கூட்டியே உங்கள் புரிதலுக்குக் கைகூப்புகிறேன் !! ஜெய் முன்ஜாக்கிரதை முன்சாமி ! So here goes !

வருடாந்திர ‘உள்ளே-வெளியே‘ விளையாட்டை கார்ட்டூன் ஜானரோடு கனகச்சிதமாய்த் துவக்கி விட்டுள்ள நிலையில் – பார்வைகளை இனி மையமான ”ஆக்ஷன் ஜானர்” பக்கமாய்த் திருப்புவது தானே முறையாகிடும் ?! As always – காத்திருக்கும் ஆண்டுமே ஆக்ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் நிறையவே தந்திடும் தான் ! And – இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நடப்பைப் போலவே இங்கேயும்  முக்கால்வாசி இடங்களை கேள்விகளின்றி தமதாக்கிக் கொள்கிறார்கள் - நாயகர்கள் சிலர் ! So எஞ்சியிருக்கும் இடங்களுக்கான விளிம்புநிலை ஆட்டக்காரர்களின் தலையெழுத்தை (நம்மளவில்) நிர்ணயம் செய்திடும் பொறுப்பு மட்டும் தேர்வாளர்களான நம்  கைகளில் இருந்திடும்!

ஆரம்பமே ஒரு “இல்லை ஐயா !” தான் – நமது கோடீஸ்வரர் லார்கோவின் புண்ணியத்தில் ! 2012-ல் (or 2013ல்??) ஜாலியாய் அமர்ந்தபடிக்குப் புன்னகையோடு – “என் பெயர் லார்கோ” என்றபடிக்கே சுய அறிமுகம் செய்து கொண்ட இந்த நாயகர் தொடர்ந்துள்ள ஒவ்வொரு ஆண்டுமே, நமது ஆக்ஷன் அட்டவணையின் முதுகெலும்பாய் இருந்து வந்துள்ளார் ! ஆனால் இவரில்லாததொரு புத்தாண்டே நமக்குக் காத்துள்ளது – simply becos இவரது தொடரின் சகல ஆல்பங்களையும் நாம் வெளியிட்டு முடித்து விட்டோம் ! புதியதொரு 2 பாக ஆல்பத்தின் முதல் அத்தியாயம் பிரெஞ்சில் அக்டோபர் 2017-ல் வெளி வந்திருக்க, அதன் க்ளைமேக்ஸ் இந்தாண்டின் இறுதியில் வெளிவந்திடலாம் ! So அது தயாராகாத வரையிலுமே நமக்கு சரக்கு லேது – புதுசாய் லார்கோ தோசைகள் வார்த்திட ! இந்த not so happy சேதியோடு இதர நாயகர்கள் பக்கமாய் கவனத்தைத் திருப்புவோமா?

ஆரம்பத்தில் மெதுமெதுவாய் response இருப்பினும், போகப் போக கதைகளின் ஆழங்களால் நம்மைக் கட்டுண்டு போகச் செய்த மனுஷன் – ஆரிசியாவின் ஆத்துக்காரர் தோர்கல் ! "Fantasy-யா ?? இது குழந்தைப்புள்ளைகளுக்குத் தான் சுகப்படுமோ ?" என்று நம்மிடையே ஒரு லேசான தயக்கம் துவக்கத்தில் நிலவியதென்னவோ நிஜம் தான் ; ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் வெளியீடுகள் சகலமும் டாப் கியரைத் தொட்டிருக்க – இந்த ஆணழகர் இன்றைக்கு நமது ஆட்டோமேட்டிக் தேர்வுகளுள் ஒன்றாகிறார் ! அதிலும் நடப்பாண்டின் துவக்க ஆல்பமான “கடவுளரின் தேசம்” ஒரு மறக்க இயலா saga என்பதில் ஐயமில்லை என்பதால் – இவரைக் கொண்டு மறுக்கா ‘உள்ளே வெளியே‘ கூத்தடிக்க அவசியமில்லை என்ற நம்பிக்கை பலமாயுள்ளது  ! So என் சார்பாய் ; உங்கள் சார்பாய் - வைக்கிங் சார்வாளுக்கு ஒரு ‘டிக்‘ போட்டு விடலாமா ?

அதே வேகத்தோடு நமது நரைமுடி நாயகர் பக்கமாய்த் திருப்பினால் – அவரது தொடரில் ஒரேயொரு ஆல்பம் எஞ்சி நிற்பது தெரிகிறது! வேய்ன் ஷெல்டன் தொடரிலுமே பரபரவென புதுக்கதைகள் உருவாகிடா பட்சத்தில் –சமீப வருடங்களில்  நமது அட்டவணைகளில் ஒரு permanent fixture ஆக இடம்பிடித்து வரும் இந்த சாகஸக்காரர், தொடரும் காலங்களில் missing ஆகிடக் கூடும் ! லார்கோ அளவிற்கு இவரது ஆல்பங்களில் ஆழம் நஹி என்பது எனது அபிப்பிராயம். அதே சமயம், இது நிச்சயமாய் ஒரு மாமூல் தொடருமல்ல என்பதும் உறுதியே ! விற்பனைக் கோணங்களில் மனுஷன் பெரிதாய் வூடு கட்டி அடிக்காது போனாலும், ‘முதலுக்கு மோசமில்லை‘ என்ற ரீதியில் safe ஆனதொரு ஹீரோவே ! And இதுவரையிலான இவரது ஆல்பங்களுள் எதுவுமே ‘செம மொக்கை‘ என்ற மாதிரியான அர்ச்சனைகளைப் பெற்றிருக்கவில்லை எனும் போது – எஞ்சி நிற்கும் ஒற்றை (புது) சாகஸத்தையும் களமிறக்குவதில் நிச்சயமாய் நமக்கு ஆட்சேபனைகள் இராதென்று நான் எடுத்துக் கொள்ளலாமா ?

Moving on, ‘ஒற்றை ஸ்லாட்டுக்கு மோசமில்லை!‘ என்ற உத்தரவாதமளிக்கும் இன்னொரு மனுஷர் தனது டிரேட் மார்க் புன்னகையோடு எதிர்கொண்டு நிற்பது தெரிகிறது! அறிமுகமான 1986 முதலாய் இதுவரையிலும், நாம் இவரை அசாத்தியமாய் சிலாகித்ததுமில்லை ; சாத்தியெடுத்ததுமில்லை தான் ! 'பரபர'வென துவங்கும் கதையை கடைசி 2 பக்கங்கள் வரையிலும் கொதிநிலையிலேயே பயணிக்கச் செய்து, அந்த க்ளைமேக்ஸ் பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிரையும் ‘பொடேரென‘ முடிச்சவிழ்க்கும் லாவகம் ‘ரிப்போர்ட்டர் ஜானி‘யின் படைப்பாளிகளுக்கே உரித்தான கெத்து ! அந்தப் பரபரப்பை வண்ணத்தில் ஆண்டுக்கொரு முறை ரசிப்பதை இதுவரையிலும் ஒரு மாறா வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் – நமது மறுவருகையினில்! So அந்த routine-ஐ இம்முறையும் தொடரலாம் தானே folks ?! அதே போல ஜானியின் புது பாணி பிரெஞ்சில் வேகமெடுத்து வருகிறது – மூன்றாவது ஆல்பமும் வெற்றி கண்டுள்ள நிலையில்! ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா ? பழசா ? உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்குமோ ?

Next in line.....“ஆண்டுக்கு ஒரு முறையே” என்ற ஃபார்முலா இவருக்குமே பொருந்தும் தான் - சின்னதொரு வித்தியாசத்தோடு ! ஆண்டுக்கு ஒரு முறையே தலைகாட்டினார் என்றாலும், மூன்றோ-நான்கோ கதைகளோடு பட்டாசு வெடிக்கும் மௌனப் புயல் இவர் ! 2017-ல் அறிமுகமாகி – 2018-ல் தொடர்கதையாகி நம்மோடு உலவி வரும் ட்யுராங்கோவுமே ஒரு சந்தேகமிலாத் தேர்வென நாம் கருதிடலாமா நண்பர்களே ? “சத்தமின்றி யுத்தம் செய்” பெற்றது 95 மார்க்குகளெனில், நடப்பாண்டின் “மௌனமாயொரு இடிமுழக்கம்” அந்த உச்சத்தைத் தொட்டிருக்கவில்லை என்பது வார்னிஷ் அடிக்காத யதார்த்தம் ! ஆனால் ‘ஆனை படுத்தாலும் குதிரையை விட உசத்தியே‘ என்ற கணக்காக லேசாய் கோட்டைவிட்ட ட்யுராங்கோ – இதர தத்தா புத்தா நாயகர்களை விடவும் better choice தான் என்று நீங்களும் சொல்வீர்களென்ற நம்பிக்கையுண்டு எனக்கு ! So ஒற்றை ஸ்லாட் ; கற்றைக் கதைகள் - என்ற பாணிக்குப் பச்சைக் கொடி possible ?

ஒரு மாதிரியாய் சுலபமான கேள்விகளை எதிர்கொண்டான பிற்பாடு தொடர்வன சற்றே complex வினாக்கள் ! And எப்போதும் போலவே இங்கே அபிப்பிராய பேதங்கள் இருக்குமென்பது நிச்சயம் !

கேள்வி # 1: கமான்சேவின் வனவாசம் தொடர்வது சரி தானா ? அல்லது ஹெர்மனின் இந்தப் பரட்டைத்தலைக் கௌபாய்க்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தால் மோசமில்லை என்பீர்களா ? விற்பனைகளில் மனுஷன் பெரிதாய் கம்பு சுழற்றிடவில்லை என்பதால் எனக்குமே இவருக்கென பெரிதாய் வாதாடத் தோன்ற மாட்டேன்கிறது தான் ; ஆனாலும் ஒரு தொடர் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் அம்போவென நிற்கிறதே என்ற வருத்தமும் இல்லாதில்லை ! “பிள்ளையைக் கிள்ளி விட்றான், தொட்டில் ஆட்டி விட்றான்” என்ற விமர்சனத்துக்கு இது இடம் தருமென்று  புரியாதில்லை ; ஆனால் ஹெர்மனின் படைப்புகளில் கேப்டன் பிரின்ஸ் தவிர்த்து வேறு யாருமே நம்மிடையே பெருசாய் சோபிக்கவில்லையே என்ற ஆதங்கமே என்னை வாய் திறக்கச் செய்கிறது !

கேள்வி # 2 : LADY S!!! ஆண்டுக்கொரு ஸ்லாட் என்ற ஃபார்முலா இவருக்கு ஓ.கே. தானா - என்று உங்கள் பார்வைக்கோணங்களிலிருந்து  ரோசிக்க முயன்று வருகிறேன் ! ? வான் ஹாமின் கதைக்களம்; மிரட்டலான சித்திரங்கள்; வசியம் செய்யும் கலரிங் என்று மிளிரும் இந்த நாயகி மீது எனக்கு தனிப்பட்ட முறையில்  நிறையவே அபிமானம் உண்டு ! ஆனால் சமீப 2 ஆல்பங்களிலும் “ஆக்ஷன் குறைச்சல்” என்ற புகார்கள் முகாரி ராகமாய் ஒலிப்பதையும் மறக்க இயலவில்லை எனும் போது – பந்து சிந்தனைகள் வலுப்பெறுகின்றன ! மகளிரணி ரொம்பவே பலவீனமாய்க் காட்சி தரும் நிலையில், இந்த மதிமுக ஷானியாவை 2019-ல் தொடரச் செய்வது ஓ.கே.வாக இருக்குமா ? நாம் எதிர்பார்க்கும் “அக்மார்க் ஹீரோ / ஹீரோயின் இலக்கணத்துக்கு” Lady S முழு நியாயம் செய்திடாது போயிருக்கலாம் ; ஆனால் for that matter, இந்த ஆக்ஷன் ஜானரில் புராதனம் சொட்டாத சமகாலத்துப் படைப்புகள் அத்தனை நிறைய இல்லை என்பதையும் நினைவில் இருத்திட வேண்டியுள்ளது ! அதற்குமீறி ‘பளிச்‘சென்ற ஆக்ஷன் தொடர்கள் கண்ணில் பட்டாலும், அவை பெரும்பாலும் கௌபாய்க் களங்களாக உள்ளன ; அல்லது நான்கோ – ஆறோ ஆல்பங்களில் முற்றுப்பெறும் ஒரு நெடுந்தொடராக இருக்கின்றன ! அவற்றை இது போன்ற சிங்கிள் ஆல்பங்களாய் வெளியிட இயலாதெனும் போது சிக்கல் எழுகிறது ! So சிந்தனைக் குல்லாவைத் தேடித் திரிகிறேன் தற்சமயம் ! Your thoughts please ?

மகளிரணியின் மறு மகாராணியார் பற்றிப் பேசாது போனால் பிழையாகிப் போகுமென்பதால் படாரென மாடஸ்டி பிளைஸி பக்கமாய் ரேடாரைத் திருப்பிடுவோம்!  இவருக்குமே “ஆண்டுக்கொரு ஸ்லாட்” என்ற ரீதியில் வாய்ப்பளித்து வருகிறோம் – with mixed results ! துவக்க காலம் முதலாய் இளவரசியை ஆராதித்து வரும் நண்பர்களுக்கு இவரொரு இன்றியமையா ஹீரோயினாகத் தோன்றினாலும்; சமீப வாசகர்களுக்கு லைட்டாகப் பேஸ்தடிப்பதும் நிஜமே ! மாடஸ்டி கதைகள் உருவான காலகட்டத்தில் உலகின் அரசியல் வரைபடமே வித்தியாசமானதொன்றாகக் காட்சி தந்து வந்தது! அன்றைக்கு ரஷ்யாவும்; கம்யூனிச தேசங்களும் ஒரு அணியாகவும்; மேற்கத்திய சக்திகள் இன்னொரு அணியாகவும் முறைப்புக் காட்டிக் கொண்டு திரிந்தன! பெர்லின் மதில் வீழ்ந்திருக்கவில்லை; சர்வதேச அரங்கில் தேசங்களுக்கு மத்தியில் ஒரு அரூபமான திரையிருந்து வந்தது! Those were the days of the Cold War !! ஜேம்ஸ் பாண்ட் பாணிகளுக்கும் ; அதனைத் தழுவிய மாடஸ்டியின் பாணிகளுக்கும் அந்தக் காலங்களில் பரபரப்பான acceptance இருந்ததில் வியப்பில்லை! ஆனால் இன்றைக்கோ உலக அரசியல் அரங்கே ஏகமாய் மாறியிருக்க – மாடஸ்டியின் கதைக்களங்கள் நண்பர்களில் ஒரு அணிக்கு அத்தனை ரம்யம் தருவதில்லை என்பது புரிகிறது ! பெர்சனலாக மாடஸ்டி-கார்வின் கதாப்பாத்திரங்களுக்கு நானும் ரசிகனே ! ஆனால் உங்களின் ரசனை மீட்டர்களும் அதே திசையில் பயணித்தாலன்றி – இளவரசியை உங்கள் மீது திணித்த கதையாகிப் போகும் ! அக்குவேறு ஆணி வேறாய் அலச வேண்டுமென்றில்லாது – ஒரு ஸ்லாட்டுக்கு இவர் ஓ.கே.வா ? என்று மட்டும் சொல்லிடுங்களேன் folks ?

அடுத்ததாய் தலைகாட்டுபவர் நமது ஜில்லார்! இவரது சித்திர பாணி கார்ட்டூன்களை நினைவுபடுத்தும் விதமாய் இருப்பதாலும், இவரது அல்லக்கை அசிஸ்டெண்ட் மொக்கை ஜோக்குகளாய் அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதாலும், ஜில் ஜோர்டன் கதைகளை கார்ட்டூன்களாய்ப் பார்த்திட நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை தான் ! Maybe அந்த சிறு தடுமாற்றம் இந்தக் கதைகளோடு ஒன்றிடுவதற்குத் ‘தடா‘ போடுகிறதாவென்று தெரியவில்லை! எது எப்படியோ – ஜில்லாருக்கு இன்னொரு வாய்ப்பு பற்றி உங்களது அபிப்பிராயம் ப்ளீஸ் ?

புதுவரவு ட்ரெண்ட் பலரிடம் ”ஆஹா” என்ற சிலாகிப்பையும் ; சிலரிடம் ‘ஐயோ‘ என்ற அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பது புரிகிறது! இதுவொரு slam-bang ரகக் கதையே அல்ல ; மாறாக, நாம் இதுவரையிலும் பார்த்திரா ஒரு புதுப் பிரதேசம் சார்ந்த கதைக்களம் - என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது நினைவிருக்கலாம் ! So “ஆக்ஷன் கம்மி” என்ற புகார் அத்தனை பொருத்தமென்று சொல்ல மாட்டேன்! அதே போல ஒற்றை சாகஸத்தோடு ஓரம்கட்டுமளவிற்கு இவர் சொதப்பிடும் ரகமுமல்ல என்பதால் – ‘உள்ளே; வெளியே‘ ஆட்டத்துக்கான முகாந்திரமே இந்த நொடியில் இவருக்கு இருப்பதாய் நான் நினைக்கவில்லை !

ஆக்ஷன் நாயகர்களைப் பற்றிப் பேசும் போது தளபதியைப் பற்றிப் பேசாது போனால் முட்டுச் சந்தில் போட்டுக் குமுறி விடுவார்களென்பதால் “டைகர்” என்ற பெயரை பவ்யமாய் உச்சரிக்க முனைகிறேன் ! பெரியவரின் கதைகள்; மார்ஷல் அவதாரின் கதைகள் என்று சகலமும் காலி என்பதால் – இளையவரின் சாகஸங்கள் மட்டுமே பாக்கி ! இந்த அமர கதாப்பாத்திரத்தை உருவாக்கிய பிதாமகர்கள் இன்று நம்மோடு இல்லை என்ற நெருடல் இந்தத் தொடரில் புதுசு புதுசாய்ப் பணியாற்றும் கதாசிரியர்களையும், ஓவியர்களையும் பார்க்கும் போது எழாதில்லை ! எத்தனை ஆற்றல்மிக்க சமகாலத்துப் படைப்பாளிகள் களமிறங்கினாலுமே – தலைமுறைக்கொருமுறை தலையெடுக்கும் ஜாம்பவான்களின் காலணிகளை இட்டு நிரப்புவது சுலபமல்ல தானே ? 'சார்லியே – ஜிரௌ' என்ற அந்த அசாத்தியக் கூட்டணியை மனதில் இருத்திக் கொண்டு – புதியவர்களின் உழைப்புகளை எடைபோட முனைவது முறையாகாது என்பது புரிந்தாலும் – ஆழ்மனசு சேட்டைகளைக் கைவிட மறுக்கிறது ! Again – சிந்தனைக் குல்லாவுக்கு ‘ஜே‘ போட்டு வருகிறேன்!

இவர்கள் நீங்கலாய் – விளிம்பு நிலை நாயகர்களாய் சாகஸ வீரர் ரோஜர்; டிடெக்டிவ் ஜெரோம் என்றெல்லாம் நிற்கிறார்கள் – வாய்ப்புகள் கோரி ! மறுக்கா ஒரு நாசூக்கான சாரியை இவர்களிடம் சொல்லத் தான் வேணுமோ ? உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ?

That just about sums up the majority of the action heroes from recent years....! இவர்கள் தவிர்த்து - புழக்கத்திலிருக்கும் (color) நாயகர்கள் யாரையேனும் கவனத்திற்கு கொண்டு வர மறந்திருந்தேன் என்றால் - உங்கள் நினைவூட்டல்கள் உதவிடும் folks !! போனெல்லியின் b & w நாயக / நாயகியரைப் பற்றி அடுத்த வாரப் பதிவில் பார்த்திடலாம் !

அப்புறம் "இரத்தப் படலம்" வெளியீட்டு விழா பற்றிய updates :

😃ஈரோடு புத்தக விழா நடைபெறும் VOC பூங்காவின் வாயிலில் உள்ள ஹோட்டல் LE JARDIN-ன் தரைதளத்திலுள்ள ORCHID ஹாலில் ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் சந்திக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் guys ! 10 மணி முதல் மதியம் 2 வரை அரங்கில் அரட்டை ; இரத்தப் படல ரிலீஸ் என்றான பிற்பாடு அங்கேயே சைவ உணவும் மதியத்துக்கு ! உங்களின் லேட்டஸ்ட் கனாவும், இதுவரையிலான costliest கனாவுமான"இ.ப."வெளியாகும் தருணத்தில், உங்கள் அனைவரின் அண்மை நமக்கு   அத்தியாவசியத் தேவை என்பேன் ! So உங்களது அட்டவணைகளில் ஆகஸ்ட் 4-ம் தேதியினை நமக்கோசரம் ஒதுக்கிடக்  கோருகிறேன் !! Would love to see you all !!

😃அதே போல கூரியர்களில் அல்லாது, ஈரோட்டில் "இ.ப." பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தயை கூர்ந்து ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடணும் - ப்ளீஸ் ! இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில்  உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் ! உங்கள் புக்கிங் நம்பர் ; அல்லது பெயர் & முகவரி அவசியமாகிடும் folks !! 

Before I sign off - சில updates :

☎கோவையில் தற்போது நடைபெற்று வரும் புத்தக விழாவின் முதல் 2 நாட்களும் சுவாரஸ்யம் தரும் விற்பனை என்று சொல்லலாம் ! சென்னைக்குப் போட்டியாகவோ  ; ஈரோட்டுக்குப் போட்டியாகவோ - கோவையின் விற்பனைகள் அமைந்திடும் வாய்ப்புகள் குறைவே என்றாலும், கிட்டங்கி நிறைய இதழ்களை ரொப்பி வைத்துக் கொண்டு விழிபிதுங்கி நிற்கும் நமக்கு எந்தவொரு சிறு கிளையுமே உதவிடும் தான் ! தொடரும் நாட்களில் விற்பனை கூடுதல் வேகமெடுக்க, நம் சார்பில் வேண்டிக் கொள்ளுங்களேன் guys ! 

☎அப்புறம் சின்னதொரு இதழ் மாற்றமுமே : நடப்பாண்டின் அட்டவணையில் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்ற பெயரில் மாடஸ்டி பிளைசி + டிடெக்டிவ் ராபின் கதைகள் இணைந்து வருவதாய் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் தற்சமயம் ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்ல கைவசமுள்ள இதழ்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாய் இருப்பதால் - மாடஸ்டியை தனி இதழாகவும் ; ராபினை தனி இதழாகவும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம் ! 

☎நமது இத்தாலிய டெக்ஸ் வில்லர் ரசிக / ஓவியர் இன்னமுமொரு அட்டைப்படப் பெயின்டிங் போட்டுத் தரச் சம்மதித்துள்ளார் - அவகாசம் கிட்டும் போது ! So இந்தாண்டினில் இன்னும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் ராப்பரைப் பார்க்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! 

மீண்டும் சந்திப்போம் !! Have a lovely weekend !! Bye now all !!

Monday, July 16, 2018

ஒரு காமிக்ஸ் ஜனநாயகக் கடமை !!

நண்பர்களே,

வணக்கம். "சிரிக்க வைப்போரில் யாருக்கு நம் வோட்டு ?" என்று சிந்திக்கக் கோரி போன பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன் ! அது ஒரு ஆர்ப்பரிக்கும் அலசலாய் அரங்கேறி வருவது நான் சிறிதும் எதிர்பார்த்திரா போனஸ் !எக்கச்சக்க நாட்களுக்குப் பின்பாய் ஒரு சுவாரஸ்ய விவாத மேடையைப் பார்த்த உணர்வு மாத்திரமின்றி, இந்தப் பதிவின் புண்ணியத்தில் 2019 கார்ட்டூன் அட்டவணையில் - "யார் உள்ளே ? யார் வெளியே ?" என்ற கேள்விக்கான விடையும் கிட்டி வருகிறது என்பேன் ! So இது வரையிலும் தங்கள் வோட்டைப் பதிவு செய்திரா நண்பர்களும், தங்களது காமிக்ஸ் ஜனநாயகக் கடமையை ஆற்றும்படி அன்போடு கோருகிறேன் !! NOTA-வுக்குப் போட்டாலும் no problem.தான் ; உங்கள் மௌனங்களைக் கரைக்க இயன்றதையுமே ஒரு positive ஆக எடுத்துக் கொள்வோம் ! 

நடைபெறும் விவாதங்களின் பலனாய் ஒரு முக்கிய கேள்வியும் முன்னிறுத்தப்பட்டுள்ளதில் எனக்கு கூடுதல் திருப்தி ! "யார் நமது target audience ? இந்தப் பயணத்தில் நாம் பங்கேற்க எதிர்பார்ப்பது எந்த அகவையினரை ?" என்ற கேள்வியை இதுநாள் வரைக்கும் பெரிதாய் நாம் ஆராய்ந்துள்ளதாய் எனக்கு நினைவில்லை ! இது பொதுவெளியில் பேசப்படவில்லை என்றாலுமே - என்னளவுக்கு நமது core audience நடுத்தர வயதினர் மட்டுமே என்பதில் ஐயமிருக்கவில்லை ! Of course - நமது அகில் போன்ற ஜுனியர்களும் இங்கே பங்கெடுக்காதில்லை தான் ; ஆனால் பெரும்பான்மை என்று பார்த்திடும் போது - Under 18 / 16-களின் எண்ணிக்கை சொற்பமே ! இதை பற்றி லேசாய் மனதில் அசை போடும் தருணத்தில் சின்னதாயொரு curiosity தலைதூக்கியது : 

Maybe Under 12 அல்லது Under 8 குட்டீஸ்களுக்கான ஒரு சில கார்ட்டூன் கதைகளை நமது சந்தாவில் ஒரு இக்ளியூண்டு அங்கமாக்கினால் - அவை நம்மில் எத்தனை பேருக்கு பயன் தரக்கூடுமோ ? அவற்றை தத்தம் வீட்டில் உள்ள சுட்டீஸ்களுக்குக் கதை சொல்லவோ ; படிக்கத் தரவோ - வாகான சூழல் கொண்ட நண்பர்கள் எத்தனை பேர் இருக்கலாமிங்கே ? தற்சமயம் நாம் target செய்வது நமது ரெகுலராக வாசக வட்டத்தையே ! மாறாக - "இவை உங்க வீட்டு நண்டு-சிண்டுகளுக்கு மட்டுமே ஓய் ! சுகப்படுமா ?" என்ற கேள்வியை முன்வைத்தால் உங்களின் பதில்கள் என்னவாக இருக்குமோ என்றறிய ஆவல் ! 

Please note : இது சும்மா ஒரு உரத்த சிந்தனை மாத்திரமே ! நம்மிடம் இதற்கான கதைகள் காத்துள்ளன என்றோ ; உறுதியாய் இப்போதோ-அப்போதோ களமிறக்கப் போகிறேன் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாமே ! அதே போல - "இல்லை ; இப்படியொரு முயற்சியை நீங்கள் செய்வதாக இருப்பின், என்னளவுக்கு அதற்கு ஆதரவு நஹி !என்று சொல்வதாயினும் ; என் இல்லத்தில் குட்டியும் நானே ; சுட்டியும் நானே என்பது தான் நிலவரம் ! என்று சொல்வதாயினும், தாராளமாய் பதிவு செய்யலாம் ! நிச்சயமாய் நானோ, கார்ட்டூன் காதல அணியோ விசனம் கொள்ளப் போவதில்லை ! இது சமீப நாட்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடமிருந்தே பதில் தேட முயற்சிக்கும் ஒரு mini exercise மாத்தரமே !! 
அட...கார்டூனுக்கே இந்த அலசல் என்றால், கி.நா. சந்தா சார்ந்த கேள்விகளுக்கு என்ன காத்துள்ளதோ ? என்ற ரோசனையோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் ! Fingers crossed !!!

மீண்டும் சந்திப்போம் all !! Bye for now !!
கோவை புத்தக விழா இன்று (20th.July'18) CODISSIA அரங்கில் துவங்கி விட்டது !!

ஸ்டால் நம்பர் 123-ல் உங்களுக்காகக் காத்திருக்கிறோம் !! Please do visit !!

Saturday, July 14, 2018

சிரிக்க ..சிந்திக்க...!

நண்பர்களே,

வணக்கம். பள்ளிக்கூடம் போகும் நாட்களில் கூட இத்தனை வாசித்த மாதிரி ஞாபகம் இல்லை ! அந்தக் காலத்தில் (!!!) நினைவாற்றல் பிரமாதமாக இருக்க, வகுப்பறையில் கவனித்தது மண்டையில் தங்கியிருக்கும் ; அப்புறமாய் பரீட்சைகளுக்கு முந்தைய தினங்களில் லேசாக ஒரு வாசிப்பைப் போட்ட கையோடு வண்டியோட்ட சாத்தியமாயிற்று ! ஆனால் இன்றைக்கோ “ஞாபகசக்தியா ? வீசம்படி எவ்வளவு ?” என்று கேட்க வேண்டிய நிலை ! ஆனால் வருஷா வருஷம் என் முன்னே இந்த ஜுலை / ஆகஸ்ட் மாதங்களில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் “மெகா தேர்வு”களின் பரிமாணமோ முரட்டுத்தனமானது ! So 'மாங்கு மாங்கென்று' வாசிப்பதைத் தாண்டி என்ன செய்திட முடியும் ?! வாசிக்கிறேன்… சிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வாசிக்கிறேன்…! விடிய விடிய வாசிக்கிறேன் !

சமீபமாய் கார்ட்டூன்களை (சு)வாசிக்கிறேன் – புதுசாய் ஏதேனும் சிக்குமா என்ற ஏக்கத்தோடு ! தற்போதைய நமது காமிக்ஸ் பட்டியலில் ஏகமாய் நாயகர்களும், நாய்களும் இருந்தாலும் – அவர்கள் சகலருமே உங்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டார்களென்ற நிலையில்லை தானே ?! சமீப cartoon வரவுகளில் பலர் – புத்தக விழாக்களில், casual வாசகர்களின் புண்ணியத்தில் மட்டுமே வண்டியோட்டி வருவதில் ஏது இரகசியம் ? So 2019-ன் அட்டவணைக்கான இடப்பங்கீடு இறுதியாகும் தருணத்தில் – யார் உள்ளே? யார் வெளியே ? என்ற கேள்விக்குப் பொருத்தமான பதில் தேட வேண்டியிருக்கும் என்பதால் – புது வரவுகளை உள்ளே புகுத்த முடிகிறதா ? என்ற ஆசை எனக்குள் ! 

கார்ட்டூன்களில் நமது ரசனைகள் ஒரு நேர்கோட்டு template-ல் இருந்து வருவதை ஸ்பர்ஷ்டமாகப் புரிந்து கொள்ள முடிகிறது ! ‘கெக்கே-பிக்கே‘ நாயகர்கள் சார்ந்த கதைகளே இவை என்ற போதிலும் – இங்கொரு தெளிவான கதைக்களத்தை நீங்கள் எதிர்பார்த்திடுவது புரிகிறது ! அந்தக் கதையைச் சொல்லும் விதத்தில் நகைச்சுவை நிறைவாக இருந்திட வேண்டும் என்பதும் உங்கள் எதிர்பார்ப்பு ! So இந்த 2 முக்கிய கண்டிஷன்களுக்கும் நியாயம் செய்திடக் கூடிய தொடர்கள் / ஆல்பங்கள் hands down வெற்றிகளை ஈட்டி விடுகின்றன – சமீபத்தைய 2 லக்கி லூக் சாகஸங்களைப் போல ! அந்த இரு எபிசோட்களிலுமே சுலபமான, ஆனால் தெளிவானதொரு கதை இருந்ததால் அவற்றோடு ஒன்றிடுவதில் உங்களுக்கு சிரமமிருக்கவில்லை என்று யூகிக்க இயலுகிறது ! இவை எல்லாவற்றையும் விட உங்களின் இன்னொரு தலையாய கண்டிஷன் - “நம்பகத்தன்மை” சார்ந்ததே என்பதும் புரியாதில்லை ! சிரிப்பு நாயகர்களே ஆயினும் அவர்கள் ”காதுல பூ” ரகத்தில் இருந்திடக் கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி விட்டீர்கள் ! சமீப வரவுகளான ”மேக் & ஜாக்” ஹிட்டானதற்குக் காரணமாக இதையுமே நான் பார்த்திடுகிறேன் ! So மேற்படி 3 கண்டிஷன்களும், கையுமாய், வரன் தேடும் தோப்பனாரைப் போல கார்ட்டூன் லோகத்தினுள் ‘லோ-லோ‘வென்று சுற்றித் திரிகிறேன் சமீப நாட்களில் !

புதியதொரு தொடர் கண்ணில்பட்டது – வித்தியாசமான களத்தோடு! ஒரு விண்கல் கிராமத்தில் மத்தியில் விழுந்து வைக்க – அதைப் பராக்குப் பார்த்தபடிக்கே தொட்டுப் பார்க்கும் மக்கள் எல்லாருமே சித்திரக் குள்ளர்களாகிப் போகிறார்கள்! கிராமமே சுண்டுவிரல் சைஸ் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட – இந்தக் குட்டி மனுஷர்களின் சாகஸங்கள் தான் இந்தத் தொடரின் அச்சாணி ! Maybe கார்ட்டூன் களங்களை ஆர்வ ஆர்வமாய் உட்புகுத்திய நாட்களில் இந்தத் தொடர் என் அகன்ற விழிகளில் பட்டிருப்பின் – மறுயோசனையின்றி ‘டிக்‘ அடித்திருப்பேன் ! ஆனால் இன்றைக்கோ ஏற்கனவே ஒரு ‘குட்டிக் கும்பல்‘ பெற்று வரும் mixed reactions-க்கு இடையினில் இந்தப் “புதுக் குட்டிகளை” களமிறக்க பயம் பயமா வருது !

இன்னொரு தொடர்… ஆனால் இதுவோ ஒரு ஆக்ஷன் தொடர் போன்ற சித்திரங்களோடு ! நாயகரோ ஒரு டெரரான டான் மாதிரி ! கதைக் களத்திலுமே ஆக்ஷன் நிறையவே இருந்தாலும் – இறுதியில் எஞ்சி நிற்பது விலா நோகச் செய்யும் சிரிப்புகளே ! “அட… இதுக்கென்ன குறைச்சலாம்டாப்பா ?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது ! பிரச்சனை என்னவென்றால் இது முழுக்க முழுக்கவே 4 பக்கம் அல்லது 6 பக்கத்திலான சிறுகதைகளின் தொகுப்புகள் ! நாம் எதிர்பார்த்திடும் நீ-ள-மா-ன கதை என்ற ஜோலியெல்லாம் இங்கே லேது ! ஏற்கனவே நமது பஞ்சுமிட்டாய் தாடிக்காரத் தாத்தாவும், மதியிலா மந்திரிகாருவும் இந்தக் காரணத்தின் பொருட்டு பெற்று வரும் சாத்துக்கள் மனதில் வந்து வந்து போக – உரமேறிய முதுகு – “நான் இந்த ஆட்டத்துக்கே வரலீங்கோ!” என்று கதறுவது கேட்கிறது ! மறுபடியும் பயந்து பயந்து வருது!

அட… புதுசாய்… இன்னும் விரிவாய்த் தேடலைத் தொடரலாமே என்று முனைந்தால் – ஒரு சிறைக்கைதி கண்ணில் பட்டான்! இது வரை நாம் பார்த்திரா கதை நாயகனாட்டம் தெரிகிறானே – பயபுள்ளையை லபக்கிப் பார்க்கலாமா ? என்று அவனது  பின்னணி; முன்னணி, சைட் அணி என்று நிறைய ஆணிகளைப் பரபரவென பிடுங்கிப் பார்த்தால் – கிட்டிய reviews எல்லாமே “பிரமாதம்” என்ற சேஞ்சில் இருந்தன ! முகமெல்லாம் பிரகாசமாக – இந்தத் தொடரின் 2 ஆல்பங்களைக் கோரிப் பெற்றேன், அவசரம் அவசரமாய் ! ஃபைல்களும் வந்து சேர்ந்தன ! ஆனால் புரட்டப் புரட்ட நம்மள் கி பிரகாசம் காணாமல் போகத் துவங்கியது ! கதை நயமாக இருக்குதோ – இல்லையோ; சித்திர பாணி செம சுமாராய் காட்சி தந்தது ! ரொம்பவே காஷுவலான படங்களோடு கதை பயணிக்க, எனக்குச் ‘சப்‘பென்று போய் விட்டது ! லக்கி லூக் தொடரிலேயே ஆரம்ப நாட்களது லக்கி & ஜாலி ஜம்பர் படு சுமாராய் காட்சியளிப்பதன் காரணமாய் அந்தப் பக்கமாய் தலைவைக்காத நமக்கு, இந்தப் புதுத் தொடர் சுத்தமாய் ரசிக்காதென்று பட்டது! பச்சக்… அந்த சாப்டர் க்ளோஸ் !

இன்னொரு தொடர் ! இங்கே கதை நாயகரே ஒரு மியாவிகாரர் தான்! பூனைகளின் அழகான உலகத்தினுள் கதாசிரியர் நம்மை இட்டுச் சென்று – மனிதர்களோடு மாரடிக்க இந்த நாலுகால் சுட்டிகள் படும் அவஸ்தைகளைப் பிரமாதமாய் சொல்லியிருக்கிறார் ! சித்திரங்களும் decent ரகம் தான்! Again – இந்தத் தொடரை ”ஆயிரம் துடைப்பச் சாத்துக்கள் வாங்கிய அபூர்வ சிகாமணி” அவதார் எடுப்பதற்கு முன்பாக நான் பார்த்திருக்க நேர்ந்திருந்தால் – துளித் தயக்கமுமின்றி சிகப்புக் கம்பளம் விரித்திருப்பேன் ! ஆனால் ஒரேயொரு நாலுகால் ஞானசூன்யம் கதைநெடுக வலம் வருவதற்கே தெளிய வைத்துத் தெளிய வைத்துத் தெறிக்க விடும் நண்பர்களிடம் ஒரு பூனை gang–ஐ ஒட்டுமொத்தமாய் கொண்டு போய் நிறுத்தினால் – நம் திசையில் பறக்கக் கூடிய வீட்டை சுத்தம் செய்யும் உபகரணங்கள்; பூரி போட்டிட உதவும் சாதனங்கள் பற்றிய நினைப்பைத் தவிர்க்க இயலவில்லை ! அதுவும் இப்போதெல்லாம் நல்ல, நயமான ஸ்டீலில் மேற்படி உபகரணங்கள் கிட்டி வரும் வேளையில் பயம் இருமடங்காகிறது! 

'இதுக்கெல்லாம் பயந்தாக்கா குப்பை கொட்ட முடியுமா? ஜெய் பூரிபலி!” என்றபடிக்கே தேடலைத் தொடர்ந்த சமயம் – நம் முன்னே ஒரு வித்தியாசமான டார்ஜான் மாதிரியான சுள்ளான் நின்றான்! நவீன உலகின் புள்ளை – ஆனால் கொரில்லாக்களால் கடத்தப்பட்டு காட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறான் – ஒரிஜினல் டார்ஜானின் ப்ளாஷ்பேக் போலவே! தம்பிக்கு உற்ற துணை ஒரு ஆறடி மலைக்குரங்கே ! இந்த கொரில்லாவும், லங்கோடு கட்டிய சுள்ளானும் அடிக்கும் கூத்துக்களே இந்தத் தொடரின் களம்! “பரவாயில்லையே… இது தேறிடும் போல்படுதே!” என்றபடிக்கு இதன் முதல் சிறுகதையை மொழிபெயர்த்து வாங்கினேன் ! ‘ஙே‘ என்று முழிக்கத் தான் முடிந்தது – ஸ்கிரிப்டைப் படிக்கத் துவங்கிய போது! ரொம்பவே ஜுனியர்களுக்கான கதைக்களமாய், ரொம்பவே தத்தியான நகைச்சுவை உணர்வுடன் கதை பயணிக்கிறது! Moreover – நாம் எதிர்பார்த்திடும் வலுவான கதை எனும் சமாச்சாரம் இங்கே sorely lacking ! சம்பவங்களை; டயலாக்குகளை; வார்த்தை விளையாட்டுகளை மட்டுமே நம்பி இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கும் போலும் ! ஏற்கனவே ஒரு மந்திரியாரின் தொடர் இந்த template-ல் வலம் வந்து கொண்டிருக்கையில் "இன்னொன்றா? “தாங்காது சாமி !” என்று தோன்றியது !

”ஊஹும்… இது ஆவுற கதையில்லே !" என்றபடிக்கு லேப்டாப்பிலிருந்த உலகம் வியக்கும் கார்ட்டூன் ஆல்பங்களை ஒரு மோன நிலையில் ஓட விட்டேன் ! சகலமும் classics – சகலமுமே நமக்கு எட்டா உயரங்களிலிருக்கும் உச்சப் படைப்புகள் எனும் போது – அமாவாசை விரத நாளில் ஒரு மிட்டாய் கடையைத் தாண்டிப் போகும் உணர்வு தான் ஏற்பட்டது ! "ஹை… டின்டின் நெய் மைசூர்பாகு…! ஹைய்யோ… ஆஸ்டெரிக்ஸ் பால்கோவா ! ஸ்ஸ்ஸ்ஸ்… வால்ட் டிஸ்னி ரசகுல்லா….!!” என்ற ரீதியில் ! ச்சை…. சடாரென்று வளர்ந்து; தடாரென்று மேற்படி ஜாம்பவான் தொடர்களுக்கு அருகதை கொண்டவர்களாய் நாம் மாறிட ஏதேனும் புதுரக காம்ப்ளான் இருந்தால் தேவலையே - என்று தோன்றியது! கடைவாய் ஓரத்தில் வழிந்தோடும் ஜொள்ளை லேசாகத் துடைத்துக் கொண்டே ”No… no… ஆஸ்டெரிக்ஸ்லாம் தமிழாக்கம் பண்றதிலே நகைச்சுவை குன்றிடும் ; வால்ட் டிஸ்னியெலாம் ரசிக்கிற வயசா நமக்கு?” என்றபடிக்கே நடையைக் கட்டுகிறேன் ! நமக்கு ஒல்லிப்பிச்சானும், வுட் சிட்டியின் கோமாளிகளும் தான் சரிப்படுவார்கள் போலும் !! ஹ்ம்ம்ம்ம்ம் !!

கிளம்பும் முன்பாய் சில கேள்விகள் guys :

கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும்  சமாச்சாரங்களா ? அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா ?  எவ்விதம் பார்க்கிறீர்கள் folks ? 

தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ ?

இதை நூற்றியெட்டாம் தடவையாகக் கேட்கிறேன் தான் – ஆனால் ரசனைகளெனும் விஷயம் நிலையாய் நிற்பதில்லை எனும் போது, அட்டவணைக்கு இறுதி வடிவம் தரும் முன்பாய் உங்களின் எண்ணங்களை அறிந்திட முயற்சிக்கிறேன்!

And மௌன நண்பர்களே : தயைகூர்ந்து மௌனம் கலைத்திடக் கோருகிறேன் !! அப்புறமாய் அட்டவணை வெளியாகும் சமயம் – “இவரைக் காணோம்; எனக்குப் பிடித்த அவரைக் காணோம் !” என்று விசனம் கொள்வதில் பலனிராது ! உங்கள் இலைகளில் என்ன பரிமாறலாம் ? என்பதை நீங்களே சொன்னால் நிறைவாக இருக்குமே ? Please ?

Before I sign off - சில updates:

1. வரும் ஜுலை 20 முதல் கோவை கொடீஸியா அரங்கில் துவங்கிடவுள்ள புத்தக விழாவில் நாம் பங்கேற்கிறோம் ! நமது ஸ்டால் நம்பர் : 123. எப்போதும் போல நமது கோவை நண்பர்களின் ஒத்தாசையை இப்போதும் கோரி நிற்கிறோம் ! நேரம் கிட்டும் போதெல்லாம் அங்கே எட்டிப் பார்க்க முனையுங்களேன் – ப்ளீஸ்?

2. சமீபமாய்க் கண்ணில் பட்ட இந்த வண்ணப் பக்கம் ரொம்பவே உசுப்பேற்றியது ! என்னவென்று பாருங்களேன்! நமது இரண்டாவது இன்னிங்சில் ‘தல‘ அடித்த பிரதான சிக்ஸர்களுள் ஒன்றான “நில்…கவனி…சுடு” முழு வண்ணத்தில்; மெகா சைஸில் ! ஓவராய் உசுப்பேத்துறாங்க யுவர் ஆனர்!
3.அப்புறம் இது நமது வாசகர் ஜெயராமன் (சென்னை) அனுப்பிய சமீபத்து போட்டோ ! நமக்குப் பரிச்சயமான / பிரியமான நாயகர்களை ஜெர்மனியின் புத்தகக் கடைகளில் பார்க்க இயன்ற சந்தோஷத்தைப் பகிர்ந்துள்ளார் !!


4.And இதோ - "இரத்தப் படலம்" முன்பதிவுகளின் இறுதிப் பட்டியல் ! விடுதல்கள் இருப்பின் (and there are bound to be....) கோபித்துக் கொள்ளாது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ? 




ஓராண்டுக்கு முன்னே சிறுகனவாய் என் மீது நீங்கள் சுமத்தியதொரு சமாச்சாரத்தை, இன்றைக்கொரு அசாத்திய வெற்றியாக்கிக் காட்டியிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் மெகா சல்யூட் ! பணிகளுக்குள் புதைந்து கிடக்கும்  இந்த நொடியின்  மும்முரத்தில், தற்சமயம் இதன் முழுப் பரிமாணமும் எங்களுள் இறங்கியிருக்கவில்லை தான் ; ஆனால் என்றேனும் ஒரு சாவகாசமான மழைநாளில் இந்த ஒட்டுமொத்த அனுபவத்தை மனதில் அசைபோடும் சமயம், உங்கள் ஆதரவின் அசகாய அளவானது, பிடரியில் அறையாது போகாது !! Simply awesome guys !!

மீண்டும் சந்திப்போம்! Have a great weekend all! Bye for now!

Saturday, July 07, 2018

கதை வரும் முன்னே..தொடர்பு வரும் பின்னே..!

வணக்கம் நண்பர்களே,  அநேகமாய் இது நம்மில் அனைவருக்குமே நிகழ்ந்திருக்குமென்று நினைக்கிறேன் : 

புது ஊர்...பணிகள் முடிந்த கையோடு ஊர் திரும்பலாமென்றிருக்கும் நேரம் ; ரயிலுக்கு நேரம் நிறையவே இருக்கும்  ! சாலையில் பராக்குப் பார்த்தபடிக்கே நடக்கும் போது எதிரே திடீரென ஒரு 'பளிச்' ஹோட்டல் கண்ணில்படும் ! 'அடடே...சூப்பரா கீதே ?!" என்றபடிக்கு உள்ளே விரைகிறோம் ! ஜிலீர் AC முகத்தை வருடித் தர - வரிசைகட்டி நிற்கும் மெத் மெத்தென்ற சோபாக்கள் நம்மைப் பார்த்துக் கூப்பிடுவது போலொரு  பிரமை  ! ஒய்யாரமாய் அமர்ந்தால் ஆறடியிலான பீம்பாய், தடிமனானதொரு மெனுவை நம்மிடம் நீட்டுவார் ! புரட்டினால் சும்மா கண்களுக்கும், புத்திக்கும் ஒரு விருந்தே எதிர்படும்  ! "அடடே...பாஸந்தி இருக்கா ? சர்ர்ர்ர்....பானிபூரி கூட இருக்கு போல ? தோ பார்டா.....சில்லி இட்லியா ? சூப்பரு...சூப்பரு...! ஹ்ம்ம்ம்…பக்கத்து டேபிளுக்குப் போறது டிராகன் காளிபிளவரா…? ஆர்டர் பண்ணிட வேண்டியது தான் ....ஹை…. பாஸ்த்தா கூட இருக்கு போல ; சொல்லிப் பார்ப்போமா..? அச்சோ...எதிர் டேபிள்லே அந்த ஆசாமி விழுங்கும் பலூடாவைப் பார்த்தாக்கா மெர்சலா கீதே !!"” என்றபடிக்கே மூளைக்கும், நாவுக்குக்குமிடையே ஒரு ஜலப் பிரவாக சம்பாஷணை ஓடும் பாருங்கள் - அந்த நொடியில் வயிறு ஒரு நெல் கிட்டங்கியாய் மாறிடக் கூடாதா ? என்பது போலொரு ஆதங்கம் எழும்  ! ஆனால் "இதுவா-அதுவா ? ஒற்றை ஆளுக்கு அது கொஞ்சம் ஜாஸ்தியோ ? காரத்தை ஓவராய்த் தின்னுப்புட்டு காலைத் தூக்கிக் கொண்டு கிடப்பானேன் ?" என்பது மாதிரியான சிந்தனைகள் தலைக்குள் சுழன்றடிக்கும் போதே - பொறுமையிழந்த பீம்பாய் - "என்ன சார் சாப்பிடறீங்க ?" என்று வினவும் குரல் கேட்கும்! திருதிருவென முழித்தபடிக்கு "ஆங்...ரெண்டு இட்லி கொடுங்க !!"என்று சொல்லிவிட்டு அந்த மெனுவை பட்டென்று  மூடி வைத்து விடுவோம் ! "இந்தக் கூத்துக்கு தான் இவ்ளோ நேரம் மெனுவை புரட்டுனியாக்கும் ?" என்பது போலொரு பார்வையோடு பீம்பாய் அகலும் போது, நாமோ ஐ,நா.சபையிலிருந்து அவசர சேதி வந்திருப்பது போல் செல்போனுக்குள் புதையும் பாவ்லா காட்டிக்கொண்டிருப்போம் ! மனக்கண்ணில் பாம்பே மீல்ஸ்களும் ; தந்தூரி ஐட்டங்களும் ; ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து ஓட ; ராமநாதபுர மாவட்ட வறட்சிக்கே விடையாகிடக்கூடிய அளவுக்கு,  வாய்க்குள் ததும்பிக் கிடக்கும் ஜொள் நீரை சத்தமில்லாது விழுங்கி விட்டு,தட்டில் மலர்ந்து கிடக்கும் இட்லிக்களைப் பிய்த்து போடத் துவங்கிடுவோம் - ஒரு மௌனப் பெருமூச்சோடு ! "அது வந்து - travel-லே இட்லி தான் best !" என்று நமக்கே ஒரு சமாதானமும் சொல்லிக் கொள்வோம் ! Phewww !!!

அநேகமாய் இது போன்ற அனுபவத்திலிருந்து நம்மில் யாருமே விதிவிலக்காக இருந்திருக்க இயலாது என்பேன் !!  அது சரி - இதுக்கும் , இன்றைய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? சித்தே பொறுமை ப்ளீஸ் ; குட்டிக் கதை வரும் முன்னே - சம்பந்தம் வரும் பின்னே !

இப்போ cut பண்ணுனா - நேரா நடப்பு  நாட்களுக்குத் திரும்புகின்றோம் ! ஜூலையின் சந்தோஷங்களோடே தொடரவிருக்கும் மாதங்கள் மீதான பணிகள், ஜரூராய் நடந்தேறி வருகின்றன! “இரத்தப் படலம்” சார்ந்த பணிகள் நம்மளவிற்கு முற்றிலுமாய் நிறைவுற்றிருக்க – அந்த 3 தடிமனான ஹார்ட்கவர் இதழ்களை நுழைத்திடும் slip-case க்கான காத்திருப்பு தொடங்கியுள்ளது ! அது மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வந்திட வேண்டிய சமாச்சாரம் என்பதால் ஆகஸ்ட் துவக்க நாட்களில் தான் நம் கைக்கு வந்து சேரும் போலும் ! So டப்பிக்குள் இதழ்களை அடைத்த கையோடு – அந்த “Code Name மின்னல்” என்ற ரவுண்ட் பேட்ஜோடு தயாராகிட வேண்டியது தான்! நம்மளவிற்கு எஞ்சியிருப்பது அந்த பேட்ஜை செய்து வாங்கும் வேலை மாத்திரமே ! So அக்கடாவென சேரில் சாய்ந்து உட்கார லேசாய் முற்பட்டு வருகிறோம் !  And பேட்ஜ் டிசைனை செய்து தர நண்பர்களுக்கு ஆர்வமிருப்பின் – most welcome too !!

ஆகஸ்ட் முழுமைக்குமே “இரத்தப் படலம்” மாத்திரமே என்பதால் – ஆண்டின் இறுதி quarter-ன் இதழ்கள் மீதான வேலைகள் துவங்கி விட்டன ! தடதடவென ஆண்டின் பெரும்பகுதி ஓட்டமாய் ஓடிவிட்டிருக்க – அடுத்த biggies என்று நம்மை எதிர்நோக்கியிருப்பன சிலபல ‘தல‘ வெளியீடுகளே !
  • முழு வண்ணத்தில் – “சைத்தான் சாம்ராஜ்யம்” – color reprint செப்டம்பரிலும்.....
  • வண்ணம் + b&w – “டைனமைட் ஸ்பெஷல்” – அக்டோபரிலும்......
  • B&W-ல்  தீபாவளி மலராக – ”காதலும் கடந்து போகும்”  நவம்பரிலும்..... 

slot ஆகிக் காத்துள்ளன ! ‘தல‘யின் பிறந்த நாள் தினமான செப்டம்பர் 30-ல் – இத்தாலியில் ஏதேதோ ஸ்பெஷல் வெளியீடுகளை போனெல்லி திட்டமிட்டிருக்க, அதே தேதியில் நாம் “டைனமைட் ஸ்பெஷலை” கையில் ஏந்திடலாமென்று நினைத்தேன்! “இ.ப.” பணிகள் முடிந்து விட்டதால் – இப்போதைக்கு எனது மேஜையை நிரப்பிக் கிடப்பது – மேற்படி டைனமைட்டே!! இதில் வரவிருக்கும் கதைகளைப் பற்றி அடுத்த மாதம் preview பார்த்திடலாமென்றும் நினைத்தேன் – நம்மவர் XIII மீதான கவனம் சற்றே ஓய்ந்த நிலையில் !

டைனமைட்டை‘க் கரை சேர்த்த கையோடு அடுத்த மெகாப் பணி – தொடரவிருக்கும் புது வருடத்தின் கதைத் தேர்வுகள் + அட்டவணை இறுதி செய்தல் தானென்பதால் – இப்போதே கிடைக்கும் சந்தடி சாக்குகளில் கதைகளை மேயத் தொடங்கியுள்ளேன்! வருடத்தின் இந்தத் தருணம் தான் – இந்தப் படைப்பாளிகளின் பிரம்மாண்டத்தை எண்ணி மேலும் மேலும் வாய்பிளக்கும் வாய்ப்புகளைத் தருகின்றது! ஷப்பாடி… எத்தனை எத்தனை வித விதமான ஜானர்கள் ; எத்தனை எத்தனை பரீட்சார்த்த முயற்சிகள்?!! இவர்களெல்லாம் மனுஷப் பிறவிகளே கிடையாது ; அசுரர்கள் ; ஜாம்பவான்கள் ; தெய்வப் பிறவிகள் !! 

👀“ஹாரர்” கதை வரிசைகளுக்குள் புகுந்தால் – மிரளச் செய்யும் variety சிதறிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது! ஏற்கனவே நாம் விவாதித்த Zombie கதைகள் இங்கும், அங்கும் கொட்டிக் கிடக்கின்றன! நமக்குத் தான் அந்த அருவருப்பான ஜென்மங்களை நம் வாசிப்புக் குடையினுள் புகுத்திக் கொள்ளும் பிரியம் எழமாட்டேன்கிறது; ஆனால் ஐரோப்பிய & அமெரிக்க காமிக்ஸ் ரசிகர்கள் இந்தச் செத்தும், சாகாத அழகு சுந்தரன்களோடு வாஞ்சையோடு தோளில் கைபோட்டுக் கொள்கிறார்கள்!! அதே போல Monsters சார்ந்த கதைகளும் ஏராளமோ ஏராளம் ! 

👀 நேற்றைக்கு வரவழைத்ததொரு மூன்று பாக ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்தாலே கபாலத்தில் மீதமிருக்கும் ரோமக்கால்கள் குத்திட்டு நிற்காத குறை தான்! மனிதன் பாதி – மிருகம் பாதி – என்பது போலொரு அசுர உருவம் கேசரி சாப்பிடுவது போல ஒரு ஆசாமியின் குடலை உருவி வாய்க்குள் தள்ளிக் கொண்டுள்ளது! ‘லாஜிக்‘ என்றதொரு சங்கிலியை அந்த ஊர் மார்வாடி நண்பரிடம் தற்காலிகமாய் ஒப்படைத்து விட்டு –படைப்பாளிகள் தங்களின் கற்பனைக் குதிரைகளுக்கு ஒரு லோடு ரம்மை ஊற்றிக் கொடுத்து விடுகிறார்கள் என்பது நொடியில் புரிந்தது. வண்ணத்தில் அந்தச் சித்திரங்களைப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தோடு போட்டி போடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது! நமக்கு மட்டும் லாஜிக் சார்ந்த templates அவசியப்படாதிருப்பின் இந்த முப்பாக ஹாரர் த்ரில்லர் மீது நிச்சயம் ஒரு பெரிய ‘டிக்‘ அடித்திருப்பேன்! A stunning visual masterpiece !!

👀அதே போல பரபரவெனப் பயணிக்கும் சைக்கோ கொலைகாரன் plot கொண்டதொரு ஆல்பத்தையும் படித்துப் பார்த்தேன் (அதாவது, கதைச்சுருக்கம் சகிதம் பக்கங்களைப் புரட்டினேன் !! !!) ஆளரவமில்லாத் தீவு ஒன்றில் குழுமும் நண்பர்கள் குழுவில் ஒவ்வொரு உருப்படியாய் பரலோகம் போய்ச் சேருகிறது ! அட… சுவாரஸ்யமாக உள்ளதே ?! என்றபடிக்குப் பக்கங்களைப் புரட்டினால் – திடுமென ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களின் தாக்குதல், உலகக் கோப்பையில் பெல்ஜியத்தின் கோல்களைப் போல் அதிரடியாய்த் துவங்கின ! பழைய தமிழ் சினிமாப் படங்களில் வருவதைப் போல,அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சார சீன்களில்  மொக்கையான சூரியகாந்திப் பூக்களை உட்புகுத்தினாலுமே, பிரேம்களில்  விரசத்தை அணைகட்ட முடியாதென்று புரிந்தது! ஒரு பௌன்சரைச் சமாளிப்பதிலேயே பிராணனில் பாதி காலாவதியான நிலையில் மேற்கொண்டும் வில்லங்கத்தை விலை தந்து வாங்குவானேன்? என்று தோன்றிட – ‘டப்‘பென்று அந்தப் பக்கங்களை மூடி விட்டேன்!

👀கௌபாய் + fantasy + திகில் என்ற ஒரு வித்தியாசமான கூட்டணியில் கதையொன்று கண்ணில் பட, அதனையும் நெட்டில் தேடிப் பிடித்து அலசினேன் ! கதை நெடுகிலும் குதிரை போட்டிருக்கும் அதே அளவு துணியை மட்டுமே நாயகியும் போட்டிருக்க, பக்கங்களைப் புரட்ட புரட்ட – ஜேஸன் ப்ரைஸ் மாதிரியான கதைக்களம் என்று தோன்றியது ! "அட… ஜே.பி. ஹிட் தந்த கதைபாணியாச்சே ? – அதனைத் தொடர்ந்திட இதுவொரு வாய்ப்பாக அமையுமோ?" என்ற ஆர்வம் மேலோங்கியது! ஆனால் கதை நகர, நகர fantasy சமாச்சாரங்கள் டாப் கியரைத் தொட்டு விட்டது போல - பூதம்; பிசாசு ; சாத்தான் என்று ஏதேதோ தாண்டவமாடத் தொடங்கின! ”ஆத்தாடியோவ்… விட்டலாச்சாரியா காலமெல்லாம் மலையேறி ஏகப்பட்ட மாமாங்கங்கள் போயே போச்சு! இந்நேரத்தில் இது வேலைக்கு ஆகாதுடோய்‘” என்று தீர்மானித்து ஓட்டம் பிடித்தேன்!

சரி… 2019-ஐ கிராபிக் நாவல்களால் கலக்கலாமென்ற ஆர்வத்தோடு – ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் பட்டியலோடு, புதுத் தேடல்களையும் தொடங்கினேன்! கற்பனைகளுக்கு வானம் கூட எல்லையாகாது என்பதை umpteenth தடவையாகப் புரிந்து கொள்ள முடிந்தது! இன்ன தான் கதைக்கள வரையறைகள் என்றில்லாது – just like that வாழ்க்கையின் சகல பரிமாணங்கள் பக்கமும் பார்வைகளை ஓடவிடுகிறார்கள்!

👍 கர்ப்பமடையும் பெண்ணொருத்திக்கு பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கக் கூடுமென்பதால் டாக்டர்கள் முழு ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள் - 5-ம் மாதம் முதலாக ! வேறு வழியின்றி ஓய்ந்து கிடக்கும் போது வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் பார்க்கிறாள் அந்தப் பெண்! நேற்று வரை பரபரவென உலகத்தோடு தானுமே ஓடித் திரிந்த போது கவனித்திரா எக்கச்சக்க சமாச்சாரங்கள் இன்றைய ஓய்வில் அவள் கண்ணுக்கு எட்டுகின்றன ! இது தான் ஒரு ஆல்பத்தின் களமே !! என்னவொரு தைரியமென்று வியக்க மட்டுமே முடிந்தது ! 

👍 முதல் உலகப்போரின் போது நிகழ்ந்ததொரு நிஜ சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு ஆல்பத்தை தரிசித்தேன்! பிரெஞ்சு – ஜெர்மானிய எல்லையை ஒட்டியதொரு பகுதியில் 1300 பேருக்கும் அதிகமான மனநோயாளிகளைப் பராமரிக்கும் ஒரு காப்பகம் உள்ளது! நாஜிக்களின் படை நெருங்கிட, தலைமை டாக்டர்களும், காவலர்களும் ஓட்டம் பிடிக்கின்றனர். எஞ்சியிருக்கும் செவிலியரும் பணியாளர்களும் அந்த நரக சூழலைச் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் கதைக்களம்! உணவு இருப்பு பூஜ்யம்; மருந்து – மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு! மனதை உருக்கும் ஒரு ஜீவ மரணப் போராட்டம்! நெருங்கும் பனிக்காலத்தில் இதை சாமான்ய மக்கள் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் முதுகெலும்பு ! “அட… மறுக்கா அழுகாச்சிக் கதைகளா? வாணாமே”? என்று நம்முள் பலமாய் அலாரம் அடித்திடக் கூடுமென்பதால் இது போன்ற ஆல்பங்களைப் பெருமூச்சோடு தாண்டிட வேண்டி வருகிறது!

👍 இன்னொன்றோ – செம சிரிப்பு + செம டிராஜெடி கலந்ததொரு படைப்பு! ‘படம் எடுக்கிறேன் பேர்வழி‘ என்று ஒரு புது டைரக்டர் பட்ஜெட்டை எக்குத்தப்பாய் எகிறச் செய்து விடுகிறார்! படமும் முடிகிறது ; ஆனால் பட்ஜெட்டோ கூரையைப் பிய்த்துக் கொண்டு எங்கோ சென்று விடுகிறது ! 20 மடங்கு கூடிப் போன செலவை என்ன செய்தாலும் ஈடு செய்ய இயலாதென்று புரிந்த கணத்தில் ரௌத்திரம் கொள்ளும் தயாரிப்பாளர், ஆத்திரத்தில் மொத்த பிலிம் சுருள்களையும் தூக்கிப் போய் எங்கோ ஒரு வனாந்திரத்தில் குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்! நாட்களின் ஓட்டத்தோடு, அந்தச் சுருள்களும் மாயமாய் மறைந்து போகின்றன! பின்னாளில் அதைத் தேட முற்படுவதே இந்த ஆல்பத்தின் ஓட்டம் ! 

👍 ஒரு சர்வதேச வல்லரசின் வரலாற்றுத் தலைவர் அவர்! இரும்புக்கரத்தோடு பரந்து விரிந்த தேசத்தையே ஆள்பவர்! ஒரு நாளிரவு மனுஷன் இறந்து போகிறார்! சகலமுமாய் இத்தனை காலம் நின்றவர் சவமான மறுகணமே அடுத்தகட்டப் பொறுப்பிலிருக்கும் மனிதர்களின் பதவி வெறிகள் உந்திக் கொண்டு வெளிவருகின்றன! தலைவரின் சாவை வெளியுலகிற்கு அறிவிக்காது – அதற்கு முன்பாய் தத்தம் ஆதாயங்களை கணக்கிடுகிறது அதிகார மையம்! யதார்த்தத்தை; வரலாற்றை – பகடியோடு சொல்கிறார்கள்! க்ரீன் மேனர் பாணியில் ஒரு வித கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களுடன் கலக்குகிறது தான்! ஆனால் வரலாறு சார்ந்த விவகாரம்; நம்மூர்களில் வேறுவிதமாய் பார்க்கப்படலாம் என்பதால் தைரியம் நஹி – இதனுள் தலைநுழைக்க!

👍 இன்னொரு “வெட்டியான்” பற்றிய கதை! இவனுமே ஒரு விவேகமான பார்ட்டி தான்! புக் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன்! தொழிலுக்கும், சுபாவத்துக்கும் துளியும் தொடர்பிலா ஆசாமி! தொல்லையைக் கண்டு தெறித்து ஓட நினைக்கும் போதெல்லாம் அது இவனை இறுகத் தழுவிக் கொள்கிறது! அதே வன்மேற்குக் களம் தான் & சித்திரங்களுமே semi-cartoon பாணியில்! பொறுமையாய் கதையை வாசித்த பின் – நாம் எதிர்பார்க்கும் கதையோட்டம் ; ஆக்ஷன் என்றான templates missing என்பது புரிந்தது! சாரி ப்ரோ… எங்ககிட்டே இருக்கும் அந்த அண்டர்டேக்கரே இப்போதைக்கு போதும் ! என்படிக்கு நடையைக் கட்டினேன்!

👍 Sci-fi ரகக் கதைகள் ஒரு வண்டி காத்துக் கிடக்கின்றன! எப்போதும் போல அவற்றை இம்முறையும் பராக்குப் பார்த்த கையோடு டாட்டா காட்டி விட்டுக் கிளம்பத் தான் முடிகிறது! Incals; Metabarons; Valerian – என்று பிரான்கோ-பெல்ஜியத்தில் மாத்திரமின்றி – ஏகமாய் பல வேற்று மார்கெட்களிலும் சாதனைகள் செய்துள்ள கதைகளை நாம் (சு)வாசிக்க நாள் என்று புலருமோ ?

பெருமூச்சு விடும் கணத்தில், கட் பண்ணிய கையோடு நேராக இந்தப் பதிவின் துவக்கத்துக்குப் போலாமா ? அந்த ஹோட்டல் ; மெனு ; குழப்பம் ; இறுதியில் இட்லி என்ற விவரிப்பை இப்போது மறுக்கா படியுங்களேன் - ப்ளீஸ் ? லேசாய் ஒரு தொடர்பு ; ஒரு சம்பந்தம் இருப்பது புரிந்திடுமென்று நினைக்கிறேன் ! 

Variety எனும் மெனுவிலிருந்து,வித்தியாசமாய் ஆர்டர் செய்திட ஆசையிருக்கும் தான்; ஆனால் பயணத்தின் போது, கண்டதையும் தின்னு வயித்தைக் கெடுத்துப்பானேன்? என்ற முன்ஜாக்கிரதையும் தலைதூக்கும் ! அதே dilemma தான் நமக்கும் - இந்தக் கதை தேர்வுகளில் !  ! லேசாய் வித்தியாசம் காட்ட எண்ணி கனடாவின் போலீஸ்காரரைக் களமிறக்கிய மறுகணமே ”ஆக்ஷன் கம்மி! ஊஹும்…!” என்ற அபிப்பிராயங்கள் சுற்றி வர – “டெக்ஸ் வில்லர் இட்லிகளும்; தோர்கல் வீட்டு தோசைகளும்; லக்கி லூக் பொங்கலுமே போதுமோ?” என்ற மகா சிந்தனை எழுகிறது! விற்பனை எனும் அளவுகோல்களில் மட்டுமல்லாது - நம் சின்னவட்டத்தின் பெரும்பான்மைக்கு உகந்த ரசனை எனும் அளவுகோலிலும் நமது mainstream, commercial நாயகர்களே பிரதான இடம்பிடித்துத் தொடர்கிறார்கள் எனும் போது - பரீட்சார்த்த முயற்சிகள் பக்கமாய் நாம் அதிக கவனம் தர சாத்தியப்பட மாட்டேன்கிறது ! இதில் யார் மீதும் தவறும் இல்லை எனும் போது - நீள நீளமான மெனுக்களின் மீது ஒரு ஏக்கப் பார்வையை மட்டுமே வீச முடிகிறது ! 

ச்சை! எனக்கு இந்தப் பெ-ரி-ய மெனுக்களே புடிக்காது!!!

 Bye folks! See you around !!

P.S : கலர் டெக்ஸ் தொகுப்பு ஜூலை 15-ல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்திடும் ! இதன் அட்டைப்படம் - 'தல' தேசத்திலிருக்கும் ஒரு 'தல' ரசிக / ஓவியர் நமக்காக வரைந்து தந்துள்ள சமாச்சாரம் ! நாம் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் டெக்சின் முகத்தில் இத்தனை களையைக் கொணர சாத்தியமாவதில்லை ! ஆனால் இத்தாலிய ஓவியருக்கோ - இது செம சுலபமாய் முடிகின்றது !! Classic !!!

Tuesday, July 03, 2018

ஜூலையின் வோட்டு ?!

நண்பர்களே,

வணக்கம். சமீபமாய்க் காற்று வாங்கி வந்த நமது வலைப்பக்கம் ஜூலை இதழ்களின் உபயத்தில் லேசாய் சுறுசுறுப்பாகியிருப்பதில் மகிழ்ச்சி ! So கம்பெனி விதிமுறைகளின்படி - இதோ ஒரு உபபதிவு ! 

இம்மாதத்து நான்கில் எனது favorite எதுவென்பதில் துளியும்  சந்தேகம் கிடையாது எனக்கு !  எனது முதல் choice என்றென்றும் கார்டூன்களே  எனும்போது, 'இளம் தலயே' எதிரே கோதாவில் நிற்கும் வேளையிலும் கூட, எனது விரல்கள் "ஒல்லிப்பிச்சான்" என்ற பெயருக்கு நேராகவுள்ள அந்த பட்டனையே அமுக்கி வோட்டுப் போட முனைகிறது ! நடப்பாண்டின் அட்டவணையை இறுதி செய்த போதே - ஜூலை எப்போது வருமென்று என்னை எதிர்பார்க்கச் செய்த இதழ் -  "லூட்டி with லக்கி" தான் ! இந்த ஆல்பத்தின் 2 கதைகளையும்  ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்ததால் இவை நிச்சயமாய் உங்களுக்கு ரசிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது ! அதிலும் "திசைக்கொரு திருடன்" நம்மூரின் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமான "அருணாச்சலத்தை" லேசாய் நினைவுபடுத்தியது ! அங்கே ஒரு முரட்டுத் தொகையை, 30 நாட்களுக்குள் செலவிட்டாக வேண்டுமென்ற நெருக்கடி ; நடுவே வில்லன்கள் முட்டுக்கட்டை போடும் விதமாய் லாபத்தை அதிகமாக்கிவிட்டு சக்கை வைக்க முயற்சிப்பர் ! இங்கேயோ ஒரு மில்லியன் ஈட்டுவதில் டால்டன்களுக்கு மத்தியில் போட்டி & கன்னத்தில் மருவும், முகமெல்லாம் கரியும் பூசிக் கொண்டு லக்கி & ஜாலி வில்லன்களாக முனைகிறார்கள் !

பேனா பிடிக்கும் போதே இரு கதைகளுமே இந்த ஆண்டுமலரை bright ஆக்கிடுமென்ற நம்பிக்கை வலுப்பெற்றது ! போன வருஷம் (அல்லது அதுக்கு முந்தைய வருஷமா ??) அந்த கேப்டன் பிரின்ஸ் சிறுகதைகளும், பெட்டி பார்னோவ்ஸ்கியின் flashback சாகசமும் ஆண்டுமலராய் வெளியானதில் யாருக்கும் அத்தனை திருப்தி நஹி ! என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! So இம்முறை அதே மாதிரியான தப்பைச் செய்திடலாகாது என்றே உஷாராய் லக்கியை ஆண்டுமலருக்கென slot செய்தேன் ! And அட்டைப்படங்கள் எப்போதுமே ஓ.கே.ஆகி விட்டால் இதழும் ஓ.கே. ஆகிடுவது வழக்கம் என்ற அந்த எழுதப்படா விதி இம்முறையும் work out ஆகிட - ஒரு அழகான இதழ் நமக்கு சாத்தியமாகியுள்ளது !

உள்ளதைச் சொல்வதானால் "மார்செல் டால்டன்" கதையின் இடத்தினில் "கானம் பாடும் கம்பிகள்" தான் இடம்பிடிப்பதாக ஒரிஜினல் திட்டம்  ! அந்தக் கதை "கௌபாய் எக்ஸ்பிரஸ்" பாணியிலான சாகஸம் ! ஆனால் இந்த ஒற்றை ஸ்பெஷல் இதழை, டால்டன்களின் கச்சேரி ஸ்பெஷலாக அமைத்தாலென்னவென்று திடீரெனத் தோன்றியது ! அட - அது கூட நல்லாத் தான் இருக்குமோ ? என்று மனதில் பட - இறுதி நிமிடத்தில் கதை மாற்றம் நிகழ்ந்தது ! Glad you liked it !!

கார்ட்டூன் ரேஸ்களில் இன்னமும் முதலிடத்தை விட்டுத் தர லக்கி & ஜாலி ஜோடி தயாராகயில்லை என்பதை இந்த இரு ஆல்பங்களும் உணர்த்தியிருப்பதில் எனக்கும் குஷி தான் ! எஞ்சியிருக்கும் கதைகளுள் இனி வரும் நாட்களில் ரொம்பவே கவனமாய்க் கதைத் தேர்வுகளைச் செய்திட வேண்டியிருக்கும் என்பதும் புரிகிறது !

கதைத் தேர்வுகள் பற்றி பேசும் போது - one கேள்வி உங்களுக்கு :   லக்கியின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடிட பிரெஞ்சில் உருவான கார்டூனும் இல்லா / சீரியஸ் பாணியமில்லா ஆல்பம் ஒன்றினைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் ! "லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யாரு ?" என்பதான இந்த சாகஸம் - லக்கி லூக் ஒரு நிஜ வாழ்க்கை வன்மேற்கு நாயகராய் இருப்பின் வாழ்க்கை எவ்விதமிருக்கும் என்பது போலானதொரு சாகஸம் ! No காமெடி - ஆனால் க்ரீன் மேனர் பாணியிலான ஓவியங்கள் கதைக்கொரு இலகுத்தன்மையை நல்குகின்றன ! என்ன நினைக்கிறீர்கள் folks ? இது 2019-க்கு சுகப்படுமா ? அல்லது சிவனே என்று இந்த நம்பகமான கார்ட்டூன் பாதையிலேயே பத்திரமாய்ப் பயணம் செய்யலாமா ? உங்கள் choice ?
ஜூலை reviews தொடரட்டுமே - ப்ளீஸ் ?! Bye now...see you around !

Sunday, July 01, 2018

குட்டிக்கரணங்களின் கதை ..!

நண்பர்களே,

வணக்கம். "ஆங்...துபாய் போனேனா ? அங்கே கமர்கட்டு வாங்கினேனா ?" என்றெல்லாம் இவ்வாரத்துப் பதிவு நீண்டு செல்லாது ! காரணங்கள் 2 !! சகோதரியின் மைந்தனுக்குத் திருமண ஏற்பாடுகள் என்பதால் சனி மதியமே ஆபீசுக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியூர் பயணம் ! So பதிவை டைப்பிடிக்க அமரும் போதே நள்ளிரவை தாண்டி விட்டது ! காரணம் # 2 : ஜூலையின் இதழ்கள் !! ஆவி பறக்க அவை உங்கள் கரங்களில் நிலைகொண்டிருக்கும் போது - கவனத்தை வேறெங்கும் திசைதிருப்பலாகாதில்லயா ? So இது நான் லொட லொடக்கும் வேளையல்ல ; இதழ்களை அலசியவாறே வண்டியை இட்டுச் செல்லும் பொறுப்பு உங்கள் தரப்பில் !!

ஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; மறுக்கா ஒலிபரப்பு செய்கிறேன் ! என்னதான் அட்டவணையைக் கண்ணும் கருத்துமாய்த் திட்டமிட்டாலுமே, சில டப்ஸாக்கள் உள்ளே புகுவதும் நிகழ்கிறது ; எதிர்பாரா ஹிட்கள் தாமாகவே ஸ்லாட்டில் வந்து அமர்வதும் நிகழ்கிறது ! இம்மாதத்து 4 இதழ்களின் கூட்டணி பின்சொன்ன தற்செயல் நிகழ்வே !! ஒன்றுக்கொன்று சளைக்கா இதழ்களாய் நான்கும் அமைந்து போனது பெரும் தேவன் மனிடோவின் மகிமையே அன்றி நாம் சண்டியர்களாய் உருமாறி வூடு கட்டியதன் பலனல்ல என்பேன் ! Anyways இந்த 4 இதழ் காம்போவின் பின்னணியில் பணியாற்றியது சுவாரஸ்யமான அனுபவமாய் அமைந்தது என்பதால், அது பற்றி ஜாலியாய் பேச முனைவதே இவ்வாரத்துப் பதிவின் முதுகெலும்பு !! 

Starting off with  ஜம்போ : "இங்கே சகலமும் சும்மா 'ஜிவ்'வென்று சறுக்கிக் கொண்டு ஓடியது ; குழந்தைப் புள்ளை விளையாட்டாய் அமைந்தது !" - என்றெல்லாம் நான் பீலா விட்டால்  ஒரு கோவில் யானையாவது என்னை மண்டையிலேயே குட்டி வைக்கத் தவறாது ! ஜம்போவின் ஒவ்வொரு எட்டுமே ஏகமாய் பெண்டைக் கழற்றிய சமாச்சாரம் ! "தனியாகவொரு லேபில் ; தனியாகவொரு கதைவரிசை" என்பதற்கு என்ன அவசியம் ? என்பதை. சாவகாசமாய் "சிங்கத்தின் பொக்கை வாய் வயதினிலே" எழுதும் சமயம் எப்படியேனும் தட்டுத் தடுமாறி ஞாபகப்படுத்தி எழுதிவிடுவேன் என்பதால் அதனுள் இப்போதைக்கு நுழையப் போவதில்லை ! "கதைத் தேர்வுகள்" என்று ஆரம்பித்த போது - பெரிதாய் நான் ரோசனை பண்ணிச் சாதித்தேன் என்பதை விட, சில பல ஆல்பங்கள் மொந்தென்று என் சறுக்குமண்டையில் தாமாகவே வந்து விழுந்தன - என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும் ! இடையிடையே வாங்கிய கதைகள் ; எப்பெப்போதோ துவக்கிய பேச்சு வார்த்தைகள், எப்பெப்போதோ நிறைவுற்றதன் பலனாய் வாங்க அவசியப்பட்ட கதைகள் என்று ஓசையின்றி கையில் ஒரு சிறு கத்தைக் கதைகள் துயின்று கொண்டிருந்தன ! ஜெரெமியா ; ஜேம்ஸ் பாண்ட் ; ஹெர்லாக் ஷோம்ஸ் ; Fleetway (சிறு) கதைகள் - அந்தக் கத்தையின் பிரதிநிதிகள் ! So இவற்றை கொண்டே அட்டவணையின் 90 சதவிகிதத்தை மங்களம் பாட சாத்தியமாகியிருக்க, ரங்கோலியின் துவக்கப் புள்ளி மட்டுமே எனக்கு அவசியப்பட்டது ! அந்தப் புள்ளி நமது தற்போதைய நடைமுறையின் ஒரு அங்கமாய் இல்லாதிருந்தால் தேவலையே  என்றும் தோன்றியது ; அதே சமயம் அதுவொரு  விஷப்பரீட்சையாகவும் இருந்திடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதையும் நிறையவே இருந்தது ! அப்போது நினைவுக்கு வந்தவர் தான் ஜுனியர் 'தல' ! 

உள்ளதைச் சொல்வதானால் - 2018-ன் அட்டவணையில் இவரை நுழைத்திடத் தீர்மானித்திருந்தேன்  - "சிங்கத்தின் சிறுவயதில்" என்ற தலைப்போடு ! 😄😄 ஆனால் "டெக்ஸ் ஓவர்டோஸ்" என்ற பேச்சு வழக்கம் போல் லேசாய்த் தலைதூக்கிட, எனது ஒரிஜினல் தேர்வுகளிலிருந்து  2 டெக்ஸ் இதழ்களுக்கு கல்தா கொடுக்கத் தீர்மானித்தேன் ! அவற்றுள் ஒன்று தான் Young TEX ! இதை ஏதேனும் ஒரு ஸ்பெஷல் தருணத்துக்கென வைத்துக் கொள்ளலாமென்று தோன்றிட, 2018-ன் லயன் அட்டவணையின் இழப்பு - ஜம்போவின் லாபமாகிப் போனது ! ஒரு proven performer ; வெற்றிக்கு உத்திரவாதமான நாயகர் ; அதே சமயம் இந்த Young டெக்ஸ் அவதார் நமக்கு அத்தனை ஆழமாய்ப் பரிச்சயமற்ற ஒன்று எனும் போது, ஜம்போவின் ஆரம்பப் புள்ளியாகிட தகுதிகள் நிரம்பி வழிவதாய் எனக்குப்பட்டது ! தலைப்பை அப்படியே அமைத்தால் போராட்டக் குழுவை இன்னும் சித்தே உசுப்பிவிட்டது போலாகிடும் என்ற பயமும், பீதியும், என்னை அங்குலம், அங்குலமாய் ஆட்கொண்டதால்  - "காற்றுக்கு ஏது வேலி ?" என்பதில் freeze ஆனேன் ! கதைத் தேர்வும், தலைப்பும் ஒருமாதிரி சடுதியில் set ஆகிவிட்ட போதிலும் - தொடர்ந்த சகலமுமே மல்லுக்கட்டும் அனுபவங்களாகவே அமைந்தன ! 

ஒரு இதழின் அட்டைப்படம் திருப்திகரமாக அமைந்தாலே,  எனக்கு  அந்த இதழ் மீது positive vibes ஒடத் துவங்கிடுவது வழக்கம் ! அந்த நடைமுறையில் நம் ஓவியரை 2 டிசைன்கள் போட்டுக் கொணரும்படிச் சொல்ல, சோதனையாய் இரண்டுமே, செம மொக்கையாக வந்து சேர்ந்தன ! அவருக்கும் வயது 65-ஐக் கடந்துவிட்டுள்ள நிலையில், மூப்பின் தாக்கம் இப்போதெல்லாம்   தெரியத் துவங்குகிறது ! So முதல்முயற்சியிலேயே சரியாய் அமையாது போனால் - தொடரும் திருத்த முயற்சிகள் ரணகளமாகிப் போகின்றன ! இம்முறையும் அதுவே நிகழ்ந்தது ! டெக்சின் முகத்திலும், கழுத்தின் ஆங்கிளிலும் மாற்றங்கள் செய்ய முற்பட, கழுத்து சுளுக்கிக் கொண்ட நாட்களில் நாமெல்லாம் உடம்போடு திரும்பிப் பார்ப்போமே - அதைப் போல 'தல'யின் தலை தென்பட்டது ! மாற்றங்கள் தொடரத் தொடர, பரோட்டா சூரிக்கு கௌபாய் தொப்பி மாட்டியது போலொரு உருவம் பிரசன்னமானது தான் மிச்சம் ! சரி, இது வேலைக்கு ஆகாதென்று அதை ஓரம் கட்டிவிட்டு, புதிதாய் இன்னொரு டிசைன் போட்டுவரச் செய்தேன்! இம்முறை இளம் தல ஓ.கே.ஆகிட, பின்னணியில் எனக்குத் திருப்தியே இல்லை ! சரி, அதை நம் டிசைனரைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்றபடிக்கு டிசைனை ஸ்கேன் செய்து பொன்னனிடம் ஒப்படைத்தோம் ! வழக்கமாய் முதல் டிசைனிலோ, இரண்டாம் டிசைனிலோ, கோழியைக் கூடையைப் போட்டுக் கவிழ்ப்பது போல் ஒரே அமுக்காய் அமுக்கிடும் பொன்னன் இம்முறை சொதப்பிக் கொண்டே போக, எனக்கோ மண்டையெல்லாம் காய்ந்து போனது ! "அட...உள்ளேயே நாமும் முயற்சிப்போமே !" என்றபடிக்கு இன்டர்நெட்டில் சிக்கிய reference களையெல்லாம் திரட்டிக் கொண்டு நமது DTP கோகிலாவைக் கொலையாய்க் கொல்லத் துவங்கினேன் ! கலைநயம் என்பதெல்லாமே " வீசம்படி என்ன விலை ?" என்று கேட்கும் பார்ட்டி நான் ! பள்ளிக்கூடத்தில் டிராயிங் க்ளாசில் பட்டாம்பூச்சி வரைந்தால், வவ்வால் ஆஜராவதும் ; கார் வரைந்தால் கட்டை வண்டி ஆஜராவதும், எனக்கு மட்டுமே தெரிந்த சூட்சமங்கள் ! So எனது மேற்பார்வையில் டிசைன் பண்ணினால், அட்டைப்படம் விளங்கின மாதிரித் தான் !! என்பது ஓரிரு நாட்களின் கொடூர அனுபவங்களுக்கு  அப்புறமாய்ப் புலனாகிட, மறுக்கா பொன்னனைக் குடலை உருவத் துவங்கினோம் ! Sci-fi ரகக் கதைகளுக்கான டிசைன்கள் போல் ஏதேதோ  தொடர்ந்தன ! ஒருகட்டத்தில் மண்டையெல்லாம் காய்ந்து போக, டைனமைட் ஸ்பெஷலுக்கென ரிசர்வ் செய்து வைத்திருக்கும் டிசைனையே எடுத்துச் சோமாறிடுவோமா ? என்று புத்தி பயணிக்கத் துவங்கியது ! இன்னும் ஒரேயொரு மொக்கையான கலர் பேக்கிரவுண்ட் மட்டும் தொடர்ந்திருப்பின், டைனமைட் - ஜம்போவாகிப் போயிருக்கும் ! But அந்த சிகப்பு + grey  கலரிங்கில் ஒருமாதிரியாக 'பளிச்' டிசைன் ஒன்று கிட்டிட, புது பிரஸ்டிஜ் பிரெஷர் குக்கருக்குப் போட்டியாய் ஒரு பெரும் பெருமூச்சை விட்டு வைத்தேன் ! 

அட்டைப்படம் ரெடி ; அப்புறம் அந்த லோகோ ?! நண்பர் அனுப்பியிருந்த அந்த "யானைக்குள் யானை"யை மெருகேற்ற முயன்றால் எதுவும் சுகப்படவில்லை ! நண்பர் (சேலம்) ஜெகத் நிறைய டிஸைன்களாய்ப் போட்டுத் தாக்கியிருக்க, நம் மனதில் fix ஆகிவிட்டிருந்த அந்த யானை+யானையை மெருகூட்ட அவருக்கு அனுப்பி வைத்தேன் ! அவரிடமிருந்து கிட்டிய சில மாதிரிகளை மேற்கொண்டும் நோண்டி ஒரு மாதிரியாய் "இதுதான் லோகோ !" என்று தீர்மானித்தேன் ! நடுவில் உள்ள யானைகளின் வர்ணங்கள் மட்டும், ஒவ்வொரு அட்டைப்படத்தின் கலரிங் தீமுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்வது என்றும் தீர்மானித்தேன் ! So background சிகப்பெனில் யானைகளும் சிகப்பிலிருக்கும்; ப்ளூ எனில் அவையும் நீலத்தில்குளித்திருக்கும் !

சரி, கஷ்டமான மேட்டர்கள் ஓய்ந்தன ; கதைக்குள் நுழைறோம் ; டெக்ஸுக்கு மட்டும் பன்ச் வரிகள் எழுதறோம் ; பிரின்டிங் போறோம் ! என்றபடிக்கே புறப்பட்டவனுக்கு, மண்டை காய்ந்தே போனது ! ரொம்பவே out of sync ராகத்தில் வசனங்கள் கதைநெடுகிலும் முகாரி பாடுவது போல் பட - தொடர்ந்த 10 நாட்கள், திருத்தியெழுதும்  ராக்கூத்துத் தான் ! வயது முதிரா ஒரு போக்கிரி டெக்ஸ் ; வன்மேற்கில் பெரிதாய் சாதித்திருக்கா பச்சா .... இவனே இந்த ஆல்பத்தின் மத்திய உருவம் எனும் போது, வசனங்களில் அதீத மரியாதைகளுக்கோ ; கதை மாந்தர்கள் - டெக்சுக்கோசரம் :"லாலே...லா லல லா லா" என்று கோரஸ் பாடுவதும் ரொம்பவே நெருடியது தான் சிக்கலே ! வசனங்களில் லேசாய் துடுக்குத்தனமும், ஒருவரையொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் casualness-ம் புகுத்திட முயற்சித்தேன் ! பாதித் தூக்கத்தில் பணி செய்த அந்தப் 10 நாட்களில் முழுசுமாய் சாதித்த நம்பிக்கையெல்லாம் எழவில்லை எனக்கு ; ஆனால் துவக்கத்து நெருடல் மட்டுப்பட்டிருந்தது போல் தோன்றிட - அச்சுக்குச் சென்றோம் ! 

தயாரிப்பில் richness தெரிந்திட வேண்டுமென்பது மண்டைக்குள் குடைய - இந்த வெளிர் மஞ்சள் நிறத் தாளின் விலைகளைக் கேட்டுவிட்டேன் ! நம்மவர்கள் விலையை வந்து சொல்ல, ரெண்டு நாட்களுக்கு ஜெலுசில் மாத்திரைகளை கடலைமிட்டாய் போல் லபக் லபக்கென்று தின்று வைத்தேன் ! ஓரு மாதிரியாய் நான் என்னோடே சமரசம் செய்து கொண்டு, அந்த பேப்பரையே வாங்கிடுவோம் எனத் தீர்மானித்த போது "ஹையோ...ஹையோ..."என்று வடிவேல் மாடுலேஷனில் பேப்பர் ஸ்டார்க்காரர்கள் சிரித்தது போலிருந்தது எனக்கு - simply becos நான் யோசித்துக் கொண்டிருந்த நாட்களுக்குள் மில்லில் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் விலையேற்றம் செய்திருந்தார்கள் ! மறுக்கா ஒரு அட்டை ஜெலுசில் ஜீரணம் ஆனது தான் மிச்சம் ; "ச்சை...எனக்கு செக் எழுதவே புடிக்காது !!: என்றபடிக்கே பேப்பரை வாங்கினோம் !

ஜம்போவில் nothing but காமிக்ஸ் என்று முன்னமே  தீர்மானித்திருந்ததால் - அந்தக் குட்டியானதொரு அறிமுகத்தை மட்டும் எங்கே நுழைப்பது என்று யோசித்த சமயம் தான் முன்னட்டை & பின்னட்டையில் flaps பற்றிய யோசனை உதித்தது ! அந்த நிலையிலுமே இவை பற்றாது - "I want more emotions " என்று தோன்றியது ! அப்புறம் தான் அந்த மெல்லிய சொர சொர feel கொண்ட அட்டைக்கெனத் திட்டமிட்டோம் !  ஒரு வழியாய் எல்லாம் முடிந்து பைண்டிங்குக்கு புக்குகள் கிளம்பிட, மாமூலாய் இது போன்ற பணிகளுக்கு நண்பர் பூசைப்பாண்டி இரண்டே நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை என்ற நம்பிக்கையில் திங்கட்கிழமை despatch என்று பந்தாவாய்ப் போட்டு வைத்தேன் பதிவில் ! ஆனால் இறுதி பணியான சாட்டிங் துவக்கிய சமயம் பைண்டிங்கில் உள்ள கட்டிங் மிஷினின் முக்கிய பாகம் பணாலாகிப் போக, அதனை சரி செய்ய கோவைக்குத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார்கள் ! வழக்கமாய் இது போன்ற வேலைகள் கோவையில் ஒரே நாளில் முடிந்து விடுவது வழக்கம் ; ஆனால் இப்போதெல்லாம் அங்குள்ள எஞ்சினியரிங் சிறுநிறுவனங்கள் பெரும்பாலும் சிரமங்களில் உழன்று வர , ஒற்றை நாளின் வேலையை 4 நாட்களுக்கு ஜவ்வாய் இழுத்து விட்டார்கள் ! பைண்டிங் நண்பரோ கையைப் பிசைந்து கொண்டு முன்னிற்க - அவரைக் கடிவதில் லாபமிருப்பதாய்த் தோன்றவில்லை எனக்கு ! கடந்த 6 வருடங்களில் இது போன்றதொரு தாமதம் நிகழ்ந்ததாய் நினைவேயில்லை !  ஒரு மாதிரியாய் மிஷின் சரி செய்யப்பட்டு புக்குகள் வெட்டப்பட்டு, நம்மிடம் அவை வந்து சேர்ந்த போதே அந்த  வாரத்தின் பெரும் பகுதி ஓடிவிட்டிருந்தது ! So இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுத்தால் ஒட்டு மொத்தமாய் despatch சாத்தியமாகிடுமே என்று தீர்மானித்து, அதுக்கோசரம் இங்கே நண்பர்களிடம் ஒரு மண்டகப்படியை வாங்கிக் கட்டிக்கொண்ட கையோடு, அவசரம் அவசரமாய் சகலத்தையும் ரெடி பண்ணி அனுப்பியும் விட்டோம் ! 

இப்போது, இதழ்கள் உங்கள் கைகளில் .....and ஜம்போ சார்ந்த துவக்க அபிப்பிராயங்கள் "பிரமாதம் !" என்ற ரீதியில் இருப்பதைப் பார்த்த பின்பு தான் லேசாய் ஜீவன் திரும்புகிறது கூட்டுக்கு !! "தலயை நம்பினோர் - கைவிடப்படார் !" என்பது இன்னொரு தபா மெய்யாகியிருப்பதில் நாங்கள் ஹேப்பி அண்ணாச்சி ! தொடரும் நாட்களில் ஜம்போ இதழ்  # 1 தொடர் பாராட்டுக்களை ஈட்டினால் - இந்தக் குட்டிக்கரணங்களின் கதை - ஜாலியான நினைவுகளின் அச்சாரமாகிப் போய் விடும் ! Fingers crossed !! 

எதை எழுதினாலும் ராமாயண நீளத்துக்கு அது ஓடுவது வரமா ? சாபமா ? என்று தெரியா நிலையில் - "குட்டியான" இந்தப் பதிவு - குட்டி போட்டுக் கொண்டே செல்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுக் கிளம்புகிறேன் guys ! பாக்கி இதழ்கள் பற்றி அடுத்த பதிவில் ஜவ்விழுக்கிறேன் ! இப்போதைக்கு adios ! 

In the meantime, ஜூலை விமர்சனங்கள் தொடரட்டுமே - ப்ளீஸ் ? Bye all ! Have a lovely weekend !!

P.S : கீழேயுள்ள இந்த டெக்ஸ் படத்தைப் பாருங்களேன்..? எவ்விதமுள்ளது ? இந்தப் படம் பற்றியொரு துணுக்குச் செய்தியுள்ளது - அடுத்த பதிவில் !