Friday, May 17, 2024

ஒரு ரவுண்ட் பன் ரவுண்டப் !

 நண்பர்களே,

வணக்கம். வழக்கமாய் புது புக்ஸ் ஆபீசுக்கு வந்து இறங்கும் போதெல்லாம்  பிரெஷான அந்த பிரின்டிங் இங்கின் மணம் நாசியைத் துளைக்கும் ! So டெஸ்பாட்ச் தினத்தை ஆந்தை விழிகள் ஊர்ஜிதம் செய்யும் முன்பாகவே மிஸ்டர் மூக்கார் இனம்கண்டு சொல்லி விடுவது வழக்கம். ஆனால் இன்றைக்கோ ஆபீஸ் வாசலிலேயே ஒரு 'ஜம்'ம்மென்ற மணம் நாசியை வருட, 'அடடே இன்னா மேட்டரு ?' என்றபடிக்கே உள்ளே நுழைந்தால், திக்கெட்டும் ரவுண்டு பன் பாக்கெட்கள் !! அடடா, ரக ரகமாய், சைஸ் சைஸாய், நமது ஆன்லைன் மேளா புக்ஸ் குவிந்து கிடக்க, நடுநாயகமாய் ஒரு பன் மலை ! நூறு தபா கடையில் பார்த்த சமாச்சாரம் தான் ; ஆனால் இப்படி மொத்தமாய்ப் பார்க்கையில், "ஆகா....ஆகாகா..." என்றபடிக்கே பாய்ந்து ஒரு பாக்கெட்டைப் பிரித்து மொசுக்கும் ஆசையை அவசரம் அவசரமாய் விழுங்கி வைப்பது அத்தனை சுலபமாகவெல்லாம் இருக்கவில்லை ! 'ச்சே..ச்சே..நாம சட்டைய இன்லாம் பண்ணிட்டு, கெத்தா வந்திருக்கோம் ; ஒரு வட்டமான வஸ்துவுக்கோசரம் புள்ளீங்க முன்னாடி அதை விட்டுக்கொடுக்கப்படாது' என்றபடிக்கே நடையைக் கட்டினேன் ! "ஆங்...அல்லா டப்பிகளிலேயும் ஒண்ணை மறக்காம வைச்சு விட்டுருங்க !!" என்று கடமைக்குச் சொல்லிவிட்டு ரூமுக்குள் போனாலும், கடைவாயில் கர்சீப்பை ஒற்றியெடுக்கத் தேவை இருந்தது ! பேக்கரியே இங்கு குடி மாறியிருந்தது போலான பீலிங்கை தவிர்க்க இயலவில்லை ! "மைதீன்...இரத்தப் படலம் எவ்ளோ பக்கம் முடிஞ்சிருக்குப்பா ?" என்று வினவும் போதும் பார்வை CC டி.வியில் லயிக்கிறது - பரபரவென்று உசரம் குறைந்து வரும் பன் மலையைப்  பார்த்தபடிக்கே ! "அப்புறம்...அந்த ஆண்டுமலர் ராப்பர் டிசைன் கோகிலா கிட்டேர்ந்து வந்திருச்சா மைதீன் ?" என்று விசாரிக்கும் போதும் முட்டைக்கண்கள் அக்கடயே !! "வாங்கியிருக்க பன்னு எண்ணிக்கைலாம் செரியா போயிடுமில்லையா ? எதும் பற்றாம கிற்றாம போயிடாதுலே ?" என்று அக்கறையாய்க் கேட்கும் தோரணையில் வெளியே வந்து நின்ற போது டப்பிகளுக்குள் வேக வேகமாய் அடைக்கலமாகிக் கொண்டிருந்த வட்ட வடிவங்கள் என்னைப் பார்த்து வசீகரப் புன்னகையினை உதிர்ப்பது போலவே இருந்தது !! "இன்னிக்கி சட்டைய இன் பண்ணாமலே வந்திருக்கணுமோ ?" என்ற எண்ணம் மண்டைக்குள் ஓடியதும், "பன்னு ஜாஸ்தி தான் இருக்கு சார் ; பாக்கெட்லாம் போட்ட பிறகும் பத்து-பதினைஞ்சு மிச்சம் கிடக்கும் !" என்று நம்மாட்கள் தகவல் சொன்னதும், ஒரே நொடியின் நிகழ்வுகளாகிட, பச்சக்கென்று குனிந்து ஒரு பாக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு ரூமுக்குள் போய் ஐக்கியமானேன் !! "மாடு..மாடு...எடுத்தது தான் எடுத்தே - ரெண்டா எடுத்திருக்கலாமில்லே ?" என்ற குரல் உள்ளுக்குள் ஒலித்த போது, எனக்கே லஜ்ஜை பிடுங்கித் தின்ன, பன்னில் ஒரு வாயைப் பிய்த்துப் போட்டு, அதை சமன் செய்ய முயன்றேன் !!  So ஒரு கத்தை இதழ்களோடு இன்றைய டெஸ்பாட்ச் இனிதே நடந்தேறியதென்ற தகவலை, பண்பட்ட மனங்களுக்கு, பன் போட்ட வாயால் சொல்வதே இந்தப் பதிவின் பிரதான நோக்கம் ! நாளை காலை கூரியர்கள் பட்டுவாடாக்களைச் செய்து என்னையும், பன்னையும் காப்பாற்றிட, புனித தேவன் அருள்புரிவாராக !! Phew !!

பொதுவாய் ஒவ்வொரு மாதமும், புக்ஸை தயாரிக்கும் பணிகளினிடையே இருக்கும் போது - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு, "ஆஹா..புக்ஸ் இப்போவே நண்பர்களைப் போய்ச் சேர்ந்தால் சூப்பரா கீதுமே ?" என்ற எண்ணம் மேலோங்கும் ! ஒரு சூப்பரான கதை அதற்கொரு காரணமாயிருக்கலாம் ; அல்லது நெடுநாள் காணாது போயிருந்ததொரு க்ளாஸிக் நாயகரின் மறுவருகை ஆல்பமாக அது இருந்து வைப்பது காரணமாக இருக்கலாம் ; இல்லாங்காட்டி, உங்களின் கைதட்டல்களை ஈட்டவல்ல ஏதேனும் ஒரு மொழிபெயர்ப்புப் பகுதி மீதான நம்பிக்கை காரணமாக இருக்கலாம் ! And இதோ, இந்த நொடியில் அந்த ஆர்வம் ஊற்றெடுக்கிறது உள்ளுக்குள் - இந்த ஸ்பெஷல் புக்ஸ் மத்தியில் உள்ளதொரு ஒற்றை ஆல்பம் மட்டுமாவது, அம்புட்டுப் பேரது பார்வைகளிலும் இப்போதே விழுந்து விடாதா ? என்று !! அந்த ஆல்பமானது - இம்முறையின் கமர்ஷியல் கி.நா.வே தான் !!

துணைக்கு வந்த ஆவி !!! ஏற்கனவே இது பற்றிய பில்டப்பெல்லாம் 2 பதிவுகளுக்கு முன்னமே தந்து விட்டிருந்தேன் தான் ; yet அதை மறுக்கா மெய்சிலிர்த்து சிலாகிக்க காரணமுள்ளது ! பொதுவாகவே காக்கைகளுக்கு கூட்டில் இருப்பவையெல்லாமே பொன்னிறமாகத் தென்படக் கூடும் தான் !! அட்டுப் படம் எடுப்போருக்குக் கூட, "வாங்கப் போகும் ஆஸ்கார் விருதை எந்த ஷெல்பிலே வைப்பது ?" என்ற கேள்வி எழுந்திடும் ! டப்ஸா புக்கைத் தயாரிக்கிறோம் என்று ஆழ்மனசுக்குத் தெரிந்தாலும், "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" என்று கூவவே ஒரு பப்லிஷருக்குத் தோன்றும் ! அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல எனும் போது - "துணைக்கு வந்த ஆவி" மீதான அதீத வாஞ்சையினை கொட்டாவியோடு நீங்கள் எதிர்கொண்டீர்களேயானால் தவறு உங்களிடம் இராது ! Yet, trust me guys , இது மாமூலான பில்டப் படலமே அல்ல ! 

இந்த ஆல்பத்தினை நான் முதன்முதலாய்க் கண்ணில் கண்டது, லாக்டௌன் நாட்களின் ஏதோவொரு வேளையில் தான் ! வழக்கமான கௌபாய் கதை போலத் தென்பட்டாலும், கச்சா-முச்சா என்ற அந்த ஓவிய பாணி பெருசாய் எனது ஆர்வத்தைக் கிளறியிருக்கவில்லை ! நாட்கள் ஓடின & மறுக்கா அந்த ஆல்பம் பற்றிய தகவல்கள் அகஸ்மாத்தாய்க் கண்ணில்பட்டன - செம சிலாகிப்புகளாய் ! Black & White டீலக்ஸ் பதிப்பாகவும், கலர் பதிப்பாகவும் இது சக்கை போடு போட்டு வருவதாய் வாசிக்க முடிந்தது ! இன்னொருவாட்டி பக்கங்களை புரட்டிய போது, முதல்வாட்டி கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கு ஓவியர் ஹெர்மன் தீட்டியிருந்த சித்திரங்களைப் பார்த்தது தான் நினைவுக்கு வந்தது ! சரி, இதை ஓரம்கட்டுவதானால், அதற்கு சித்திர பாணி ஒரு காரணமாக இருக்க வேண்டாமே ? என்ற எண்ணத்துடன் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் அனுப்பி வைத்தேன் ! 2 வாரங்களுக்குப் பின்னே அவருக்கு போன் செய்து, "அந்தக் கதை எப்புடி கீது மேடம் ? ஏதாச்சும் தேறுமா ?" என்று விசாரித்தேன் ! பொதுவாய், சிக் பில் தவிர்த்த மீத பிரெஞ்சு ஆல்பங்களையெல்லாமே - "ஓ.கே.வா இருக்கு மிஸ்டர் விஜயன் ; எதுக்கும் நீங்க ஒருவாட்டி செக் பண்ணிக்கோங்க !" என்று சொல்லி ஒதுங்கி கொள்ளுவார் ! ஆனால் இம்முறையோ, "வித்தியாசமா இருக்கு ! நம்ம ரீடர்ஸுக்குப் புடிக்கும்னு தான் நினைக்கிறேன் !" என்றார். நமக்கெல்லாம் கதை வாங்குவதென்பது, B.G.நாயுடு ஸ்வீட் ஸ்டாலில் நிற்கும் பச்சைப் புள்ளைக்கு சகல துவாரங்களிலிருந்தும் ஜொள் பிரவாகமெடுப்பதற்கு ஈடானதொரு செயல் ! நம்ம மொழிபெயர்ப்பாளரே க்ரீன் சிக்னல் தந்த பின்னே கேட்கவும் வேணுமா - கபாலென்று வாங்கிப்புட்டேன் ! தொடர்ந்தது தான் ஸ்டெர்ன் வேணுமா ? அல்லது இந்த நவீன கிராபிக் நாவல் வேணுமா ? என்ற ஓட்டெடுப்பு இத்யாதி...இத்யாதி !  

அங்கே ஸ்டெர்ன் கெலித்திருந்தாலும், இந்த கமர்ஷியல் கி.நா.வை வாகானதொரு வேளையில் உங்களிடம் காட்டியே தீரணுமே - என்ற குடைச்சல் தலைக்குள் இருந்து வந்தது ! ஆன்லைன் மேளா அதற்கான களமாகிட, ஒரு வழியாய் மொழிபெயர்ப்புக்கென இந்த ஆல்பம் கைக்கு வந்து சேர்ந்தது ! 78 பக்கங்கள் ; கிட்டத்தட்ட நமது ரெகுலர் இதழ்களின் ஒண்ணேமுக்கால் பங்கு நீளம் கொண்டது ! And ஜாலியாய் 2 பெருசுகளோடு வன்மேற்கில் கதை துவங்க, 'அட்றா சக்கை' என்றபடிக்கே வேகமெடுத்தேன் ! 'இப்போதெல்லாம் கிழடுகள் கதைமாந்தர்களானால் நம்மையும் அறியாது குஷி கிளம்பிடுதே - ஒருக்கால் நாமளுமே கிழடாகி வர்றோமோ ?' என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியை மண்டையோடு தட்டி அமுக்கி விட்டு வேலையைத் தொடர்ந்தேன் ! டெட்வுட் டிக் அளவுக்கெல்லாம் இல்லாங்காட்டியும், இங்கே நாகரீகமே எட்டிப் பார்த்திரா raw ஆன மனிதர்களே உலா வருகிறார்கள் என்பதும், செம லோக்கலான பேச்சு நடையுமே புழக்கத்தில் இருக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது ! And ரொம்பச் சீக்கிரமே புரிந்தது, இதுவொரு கதை என்பதைக் காட்டிலும் "ஒரு பயணம்" என்பதே மெய்யாகிடும் என்பது ! நம்ம Texkit போடும் பின்னூட்டங்களுக்குச் சவால் விடும் சுருக்கத்தில் இந்தக் கதையினைச் சொல்லி விடலாம் ! ஆனால் அதனைச் சொல்லியுள்ள பாணியும் சரி, செம சுவாரஸ்யமாய் இணைத்துள்ளதொரு இணைகோட்டுப் பயணியும் சரி, இந்த ஆல்பத்தை ரொம்பவே ரசிக்கும் விதமானதாக்கி இருந்தது ! நிறைய பக்கங்களில் வசனங்களே இல்லாமல் ஓவியர் நம்மோடு பேசியிருப்பதையும் பார்த்த போது - "ஹை...இந்தப் பக்கங்களுக்குலாம் பேனா புடிக்க தேவையே இல்லியே !!" என்று உள்ளுக்குள் குஷியானது ! ஆனால், நிறையவே அழுத்தமான இடங்கள் இருக்க, நிறையவே வேலை வாங்கிடவும் செய்தது ! எல்லாம் முடிந்து, அச்சுக்குச் சென்று, மாதிரிகள் வந்த போது தான் உள்ளுக்குள் 'ஜிவ்வென்று' பரபரக்கத் தோன்றியது !! வேறொன்றுமில்லை - நான் எழுதுவதோ black & white பிரிண்ட்களிலிருந்து ; so டின்டின், லக்கி லூக் போல நான் ஏற்கனவே பார்த்திருக்கும் இதழ்களாய் இருந்தால் தவிர, புக் அச்சாகும் வரைக்கும் கலரில் அதன் பரிமாணங்களை நான் பெரிதாய்ப் பார்த்திருக்க மாட்டேன் ! நான் வேக வேகமாய்த் தாண்டிச் சென்றிருந்த வசனங்களில்லா முழுப்பக்க சித்திரங்களெல்லாம் கலரில் சும்மா தெறிக்க விட்டுக் கொண்டிருந்தன !! Phewwwwww !!! இங்கே கதையே தேவை லேது ; இந்தச் சித்திரங்களை ரசித்தாலே வயிறு நிரம்பி விடும் போல் தோன்றியது ! அந்த நொடியில் எழுந்தது தான், 'இப்போவே இந்த புக் நண்பர்கள் கைக்குச் போய்ச் சேர்ந்திடாதா ?" என்ற பேரவா !! So இந்த ஆல்பத்துக்கும், பணியாற்றிய எங்களுக்கும் நீங்கள் எத்தினி மார்க் போட்டாலும் சரி, போடாமல் மூ.ச.பக்கமா பழகிப் பார்க்க இட்டுப் போனாலும் சரி, நிச்சயமாய் 'ஈஈஈஈ' என்ற இளிப்பு மட்டும் முகத்திலிருந்து அகன்றிடாது - becos இவை போலான சித்திர விருந்துகள் தினமும் வாய்ப்பதே இல்லை ! And அவற்றை இது போன்ற தருணங்களில் களமிறக்கிடும் 'த்ரில்' அறிவார்ந்த சில ஆர்வலர்கள் காதில் புகை விட்டு கழுவி ஊற்றினாலும் கூட மட்டுப்படவே செய்யாது ! இதோ பாருங்களேன் folks : 






  

அந்த முதல் சித்திரத்தைத் தான் பாருங்களேன் !! கண்ணில் பார்க்கவே செய்திரா ஒரு காலகட்டத்தினை இத்தனை உயிர்ப்போடு வரைவதென்பது இந்த AI காலத்திலுமே பிரமிக்கச் செய்கிறது ! And அந்தக் கலரிங் ஆர்ட்டிஸ்ட் நெடுக கதையின் மூடுக்கேற்ப அடர் வர்ணங்களைக் கொண்டு விளையாடியுள்ளார் ! நாளையே உங்களின் பார்சல்கள் கைக்கு கிட்டிடும் பட்சத்தில் - பன்னுக்குத் தரும் கவனிப்பினை "து.வ.ஆ."க்குமே தந்திட்டால் you won't be disappointed guys !!

அப்புறம் க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷலில் ஒரு சின்ன மாற்றம் கீது folks ; அதுக்கோசரம் முன்கூட்டிய sorry ! நம்ம ஸ்பைடர் சாரும், ஆர்ச்சீ சாரும் மோதும் சாகசத்தைக் கண்டு பரவசமாகி, கதையினை ரெடியும் செய்து விட்டோம் ! ஆனால் எடிட்டிங் செய்திடும் போது தான் புரிந்தது - இந்த சாகசம் தொடரின் அத்தியாயம் # 2 என்பது ! So வேக வேகமாய் முதல் பாகத்தையும் வரவழைத்து, ராத்திரியோடு, ராத்திரியாய் மொழிபெயர்ப்பினையும் செய்து முடித்து, பிரிண்டும் செய்தாச்சு ! Surprise ...surprise ....இங்கே நம்ம ஸ்பைடரோடு சலம்புவது சாட்சாத் இரும்புக்கை மாயாவி தான் !! And கூர்மண்டையர் நயமாய் அல்வா தந்திடுகிறார் - மிஸ்டர் கிராண்டேலுக்கு !!   

And இன்னொரு இறுதி நிமிட சமாச்சாரமுமே - இம்முறை தவிர்க்க இயலா விஷயமாய் ! பைண்டிங்கில் இறுதி நிமிடத்தில் இயந்திரப் பழுது நேர்ந்திட்டத்தைத் தொடர்ந்து "தண்டர் in ஆப்ரிக்கா" இதழ் சுணங்கி விட்டது ! பழுது நீக்கி, அதையும் முடித்து வாங்கிடுவதானால் இன்னும் 2 அல்லது 3 நாட்களாகிடக்கூடும் என்றொரு சூழ்நிலை ! இவை லேட்டாகிக் கொண்டே போனால் அப்புறம் ஜூன் மாதத்து ரெகுலர் இதழ்களும் சுணங்கிடக்கூடும் என்பதால் இன்றைக்கு 7 புக்ஸ் மட்டுமே அனுப்பியுள்ளோம் ! விடுபட்டுள்ள அந்த ஒற்றை இதழானது ஜூன் சந்தா டப்பிகளோடு பயணமாகும் & சந்தாவில் அல்லாதோருக்கு, தனியாக அனுப்பிடுவோம் ! Very Sorry guys ; தவிர்க்க இயலா இடர் !! 

அப்புறம் புறப்படும் முன்பாக ஒரு குட்டியான ஜாலி சேதி !! பிரமிக்கச் செய்யும் 2 ஒன்-ஷாட் ஆல்பங்களுக்கான உரிமைகள் அடுத்த வாரத்தில் நம்மதாகிடும் என்று எதிர்பார்க்கிறேன் ! தெய்வமே.....அவற்றை உள்ளே நுழைக்க கூடுதல் ஸ்லாட்ஸ் தேவை ; அதற்கென வருஷத்தில் ஒரு ரெண்டோ-மூணோ மாசங்களைக் கூட்டிட மட்டும் முடிந்தால் சும்மா 'ஜிலோ'வென்று இருக்குமே !! புனித மனிடோ ! 

ரைட்டு..நான் நடையைக் கட்டுகிறேன் guys - க்யூபாவில் நம்ம XIII கூட ரகளை செய்திட !! And ஆத்தீ.....நம்மவருக்கென படைப்பாளிகள் திட்டமிட்டிருக்கும் க்ளைமாக்ஸ் மட்டும் எனது யூகத்தின்படி இருக்குமேயானால், பிதாமகர் ஷான் வான் ஹாம் கூட மெய்சிலிர்த்துப் போய்விடுவார் ! அடுத்த ஆல்பத்தோடு முடிவுக்கு வருகிறதாம் இந்த இரண்டாம் சுற்று - பார்க்கணும் இந்த நவம்பரில் அந்த க்ளைமாக்ஸ் இதழை !! 

Bye guys....see you around !! அப்புறம் இதையே இந்த வாரயிறுதிக்கான பதிவாய்ப் பாவித்திடக் கோருகிறேன் ! ஆயிரமாவது பதிவின் வருகையை இன்னும் 2 வரங்களுக்காச்சும் நீட்டிக்கணும் ஷாமியோவ் !!  Have a beautiful weekend !!

Wednesday, May 15, 2024

ராயப்பா....நான் - நான் தானா ?

 நண்பர்களே,

வணக்கம். That "டேய் ராயப்பா....நான் நான் தானா ? நீ நீ தானா ?" #moment !! டீக்கடையில் 200 பின்னூட்டங்கள் பதிவாவதே பெரும்பாடாகிக் கிடக்கும் வேளையில் 413 பின்னூட்டங்களா ? ஆத்தீ !! தானைத் தலைவர் ஸ்பைடரின் மகிமையே மகிமை !! So இந்த குஷியான நொடியினில் ஆன்லைன் மேளா ஸ்பெஷல் pack இதழ்கள் வாங்கியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு ரவுண்டு பன் பார்சல்லல்லல் போட்டுப்புடலாமா ? வருண பகவான் இந்த வாரம் முழுக்க கருணையும், மழையும் பொழிந்து தள்ளியிருக்க, ஹார்ட்கவர் பைண்டிங் டெக்ஸ் காய்ந்திட சண்டித்தனம் பண்ணி வருகிறார் ! So கொஞ்சமே கொஞ்சமாய் காய்ந்திட அவகாசம் தந்து விட்டு வெள்ளியன்று டெஸ்பாட்ச் செய்திடுவதாக இப்போதைக்குத் திட்டம் - வருண பகவான் willing !! சற்றே  பொறுமை ப்ளீஸ் guys !!

ரைட்டு, இடைப்பட்ட இந்தப் பதிவினில் என்ன எழுதலாமென்று யோசித்த போது தான் நேற்றைக்கு வந்ததொரு மின்னஞ்சல் நினைவுக்கு வந்தது ! அதுவே ஒரு சுவாரஸ்ய மினி பதிவுக்கு ஓ.கே. ஆகிடுமென்று பட்டது ! வேறொன்றுமில்லை folks - நம்ம ஜெரெமியா தொடரின் ஆல்பம் # 41 ரெடியாகியுள்ளதாம் ! அதனைத் தொடர்ந்திடும் ஆர்வமுள்ளதா ? என்று கேட்டிருந்தனர் ! தவிர, அமெரிக்காவில் டி.வி.தொடராக உருவான ஜெரெமியா இப்போது அமேசான் ப்ரைமிலும் பார்க்கக் கிடைக்கிறதாம் ! Luke Perry என்ற அமெரிக்க ஹீரோ நடித்திருக்கிறாராம் ! 

நம் மத்தியில் செமத்தியான இருதரப்பட்ட கருத்துக்களை உருவாக்கிய தொடரிது என்பதை நாம் மறந்திருக்க இயலாது ! "சூப்பர்" என்று சிலாகித்தோர் கணிசம் ; "பதம் தப்பிய மைசூர்பாகு" என்று சாத்தியோரும் கணிசம் ! So இரண்டே தொகுப்புகளுக்குப் பின்பாய், சகல துவாரங்களிலும் பெவிகாலைப் பூசிவிட்டு அமர்ந்து விட்டோம் ! Absence makes the heart grow fonder என்பார்கள்......பிரிவு நேசத்தை மறுபடியும் மலரச் செய்யும் ஆற்றல் கொண்டதென்று ! அப்பிடிக்கிப்பிடி ஒரு நேசம்...ஒரு லவ்ஸ்...பிதாமகர்  ஹெர்மனின் இந்த apocalypse நாயகர்களின் தொடர் மீது இந்த ஏழெட்டு ஆண்டுகளின் பிரிவினில் உங்களிடையே எழுந்துள்ளதா ? என்றறிய ஆர்வம் ! What say people ?  

ரைட்டு....கேள்வியைக் கேட்டாச்சு ! அதன் நீட்சியாய் ஒரு காமிக்ஸ் தொடர் வெள்ளித்திரைக்கு புரமோஷன் காண்பது பற்றி லேசாக சிந்தித்துக் கொண்டிருந்தேன் ! இங்கே நம்மூரில் கூட, ஆறு மாசத்துக்கொருவாட்டி "இரும்புக்கை மாயாவி"ன்னு நானொரு கதை எழுதியிருக்கேன் ; படமாக்கப் போறேன் !" என்று கோலிவுட் செய்திகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில், மெய்யாலுமே வெள்ளித்திரைக்குச் சென்ற நம்ம ஈரோ / ஈரோயினி பற்றி லேசாக கூகுள் செய்த போது கிட்டிய தகவல்கள் இவை !!

1966-ல் மோனிகா விட்டி என்ற நாயகி நமது ஆதர்ஷ இளவரசியாய் நடித்திருக்கும் படமொன்று வெளியாகியுள்ளது போலும் ! இதோ - இந்த அம்மணி தான் அவர் ! 


ஓரளவுக்கு நாமெல்லாம் மனதில் உருவகப்படுத்தி வைத்திருக்கும் மாடஸ்டிக்கு இவர் ஒத்துப் போகிறார் என்று எனக்குத் தோன்றியது ! இன்ன பிற மருத்துவ வல்லுனர்களும், கலா ரசிகர்களும் தான் தீர்ப்பைச் சொல்லிட வேண்டும் !

நமது 'தல' 1985-ல் வெள்ளித்திரைக்கு சென்று, ரொம்பவே சுமாரானதொரு படத்தினில் இடம்பிடித்திருக்கிறார் போலும் ! TEX & The Lord of The Deep என்பதே அந்தப் படம் & இதோ - இந்த போட்டோவிலுள்ள இத்தாலிய நடிகரான கிலியானோ ஜெம்மா தான் டெக்ஸாக ஆக்ட் கொடுத்துள்ளார் !!  😕😕


இன்னொரு ஆதர்ஷ கௌபாய் நாயகரான லுக்கி லூக் வெவ்வேறு தருணங்களில் வெள்ளித்திரையில் வலம் வந்துள்ளார் போலும் - but அவை எதுவும் பெருசாய் சோபித்த மாதிரித் தெரியக் காணோம் ! இதோ - 2009-ல் லக்கி லூக்காக வேஷம் கட்டிய டீன் டுஜார்டின் :


Of course - ஜேம்ஸ் பாண்ட் எண்ணற்ற திரைப்படங்களில், எண்ணற்ற அதிரடி ஹீரோக்களின் அவதார்களில் களம் கண்டுள்ளார் ; so அவரைப் பற்றி பெருசாய் பேசிட ஏதுமிராது ! நவயுக ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஸ்டைலாக காமிக்ஸ்களில் கலக்கிய நமது லார்கோ 2008-ல் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, அப்பாலிக்கா 2011-ன் இறுதியில் இரண்டாவதாயொரு படத்திலும் ரகளை செய்திருந்தார் ! இதோ - அதன் நாயகர் Tomer Sisley ! (இவரது பெயரை தமிழில் டைப்படித்தால் திட்டுறா மெரி அமையுதுடா சாமி !!)  


And 2008-ல் பிரான்ஸ்-கனடா கூட்டணியில் உருவான XIII - The Conspiracy - இரு பாக டி-வி. படத்தில் நம்ம ஆதர்ஷ ஞாபக மறதிப் பார்ட்டியாக நடித்திருந்த ஹீரோ ஸ்டெபென் டொர்ஃப் இவர் தான் !   


இவர்கள் தவிர்த்து, நமது நாயகர்களில் யாரேனும் வெள்ளித்திரையில் காலூன்றியுள்ளனரா ? இருப்பின், சொல்லுங்களேன் folks !! அப்புறம் ஒரு ஜாலியான உட்டாலக்கடி வினாவும் : 

இவையெல்லாம் அசலூர்களில், அசல்நாட்டு நடிக / நடிகையரின் கைவண்ணங்களில் உருவானவை !! நம்ம ஊரில், நம்ம கோலிவுட்டில், நம்ம இளவரசி மாடஸ்டி movie ஒன்றினை இங்குள்ள டாக்டர்ஸ் + தொழிலதிபர்ஸின் தயாரிப்பில் உருவாக்குகிறோமெனில் - மாடஸ்டி ரோலுக்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் ? கார்வின் வேஷத்துக்கு யார் பொருந்திப் போவார் ? நானெல்லாம் யோசித்தால் பரவை முனியம்மாவும், காந்திமதியும் தான் நினைவுக்கு வருகிறார்கள் ! இங்குள்ள 'யூத்ஸ்' ரோசனை பண்ணிச் சொல்லுங்களேன் ! (ஐயா இரும்பாரே - இத படிச்சிப்புட்டு 'மெய்யாலுமே மாடஸ்டி படமெடுக்கப் போறாக'ன்னு பீதியைக் கிளப்பிப்புடாதீங்க ! )

Bye all...see you around ! Have a lovely week ! 

P.S : ராஜசேகர் சார் : ஸ்பைடர் கேப்ஷன் போட்டியின் முடிவுகளை நாளை அறிவிக்கலாம் ! பரிசீலனைகளை வேகமாய் ஆரம்பியுங்களேன் சார் ! 

Saturday, May 11, 2024

மேஜர் சுந்தர்ராஜன் ஹியர் !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு "அப்பாடா" பதிவு..😃!! நீண்ட நாட்களுக்கு பிறகு மண்ணை குளிர்ச்சியாக்கப் பெய்த மழையைபோல மனதை நிறைவாக்கி விற்பனையில் திக்குமுக்காட வைத்து ஆன்லைன் புத்தக மேளாவை "கிராண்ட் சக்சஸ்" ஆக்கிய நண்பர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏 ஆந்தை விழியனின் விழிகள் தெறித்து விழும் அளவிற்கு புக்கிங்குகள், விற்பனைகள்..👍நமது சின்னஞ்சிறு டீமின் மெம்பர்கள் இப்போதுதான் கடைசி புத்தக பார்சலை அனுப்பிவிட்டு "அப்பாடா" என்று உட்கார்ந்தார்கள்.. ! (நன்னி ஜம்பிங் பேரவை தலைவரே !! ஏதேனும் ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்க்க வேணும் போலும் !!)

Oh yes, இரண்டே இரண்டு ஆர்டர் நீங்கலாய் பாக்கி சகலத்தையும் நம்மாட்கள் அனுப்பி முடித்து விட்டார்கள் ! And  of course - அந்தப் புது இதழ்களை அடுத்த வாரத்தினில் அனுப்பிட வேண்டும் ! இந்த வாரத்தின் திங்களும், புதனும் கோவில் திருவிழாவினையொட்டி உள்ளூர் விடுமுறைகள் என்பதால் டெஸ்பாட்ச் கொஞ்சம் தேங்கி விட்டது ! இல்லாவிடினுமே இம்முறை வந்திருந்த ஆர்டர்களுக்கும் சரி, அந்த FCBD புக்குகளுக்கும் சரி, இரண்டு கிட்டங்கிகளிலும் உருட்டி புக்ஸை எடுக்க வேண்டியிருந்ததால் அநியாயத்துக்கு நேரத்தை விழுங்கியதை மறுக்க இயலாது ! பத்தாண்டுகளுக்கு முன்பான இதழ்களை, படர்ந்து கிடந்த தூசுப் படலங்களைத் தட்டிய கையோடு சேகரித்துக் கொண்டு வருவதே ஒரு பெரும் பிரயத்தனமாகிப் போனது !! Anyways - கண்ணாலம் ஆன பிற்பாடு தாய்வீட்டை விட்டுப் பிரியத்  தடுமாறும் பாசமான புள்ளீங்களை ஒரு பெருமூச்சோடு வழியனுப்புவது போல, நம்மோடே இத்தினி காலமாய் ஐக்கியமாகியிருந்த சில பல புக்ஸ்களுக்கு பிரியாவிடை தந்து அனுப்பி வைத்திருக்கிறோம் !  And பழைய புக்ஸை இந்தத் தருணத்தில் பார்த்த போது பற்பல மலரும் நினைவுகளும் நிழலாடத் தவறவில்லை ! "ஹைய்யோ ...இந்த புக்குக்குத் தானே புளியமரத்திலே கட்டி வைச்சு கும்முனாங்க !"......"ஆத்தீ....இந்த புக்கோட தானே மொதவாட்டி மூத்திர சந்துப் பயணம் !!" ......"அச்சோ....இந்த புக்குக்கோசரம் முட்டுச் சந்திலே மொத்து வாங்கி எம்புட்டு நாளாச்சு ?!!" என்ற ரேஞ்சில் அந்தக்காலத்து ஈஸ்ட்மேன் கலரில் flashbacks ஜிவ்வென்று ஓட்டமெடுத்தன !! In fact - வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமோ ? என்று கூடத் தோன்றுகிறது ! ஒவ்வொன்றிலும் தான் எத்தனை நவரசங்கள் ? What say people ?

இங்கே உள்ளூரில் விடுமுறை என்றாக, சொந்த ஜோலியாய் நானும் சில நாட்களுக்கு சென்னைக்குப் பயணமாக, ஸ்பெஷல் இதழ்களின் இறுதிக் கட்டப் பணிகளுக்குள் இன்று முதலே மறுக்கா தலை நுழைக்க முடிந்துள்ளது ! ரைட்டு....பதிவைப் போட்டுப்புட்டு தொடரலாமென்று இங்கே ஆஜராகி, உங்களின் last batch of comments-களுக்குள் புகுந்தால், திடீரென்று "தானைத் தலைவர் ஸ்பைடருக்கொரு ஸ்பெஷல் !!" என்ற கோரிக்கை எழுந்திருப்பதைப் பார்க்க முடிந்தது !! "ஹை..இதென்ன புது ஐட்டமா இருக்கே ?" என்ற கேள்வியோடு முகத்திலொரு புன்னகை விரிந்ததை மறுக்க மாட்டேன் ! புதுசாய் நமக்கு வேலை வைக்காமல், அப்டிக்கா சூடு பண்ணி, அப்டியே பரிமாறக்கூடிய மறுபதிப்புப் பதார்த்தங்களென்றால் எனக்கு எப்போதுமே ஓ.கே. தான் ; ஆனால் மெய்யாலுமே இவற்றை நாம் இன்று ரசிக்கும் வாய்ப்புகள் எத்தனை சதவிகிதம் ? என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொண்ட போது கிடைத்த பதிலில் அத்தனை வலு இருந்திருக்கவில்லை! 

In fact ஐம்பது ரூபாய்க்கு க்ளாஸிக் ஸ்பைடர் கதைகள் மறுபதிப்பான 2015 / 2016 ஆண்டுகளில் நம்ம கூர்மண்டையரை வாருவதே நிறைய பேருக்கு மாதாந்திர ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்து வந்தது ! ஒரு கட்டத்தில் எனக்கே போதுமென்று பட்டதாலே, கடைசி batch ஸ்பைடர் இதழ்களை அன்றைக்கு மறுபதிப்பிடவில்லை ! பழசோ, புதுசோ பொதுவாக நமது இதழ்களை வாங்கிடும் அந்த core குரூப் நீங்கள் தான் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை ! So உங்கள் விருப்பங்களுக்கேற்ப ஒரு க்ளாஸிக் ஸ்பெஷலை ரெடி பண்ண முயற்சிக்கலாம் தான் ; ஆனால் எனது நெருடலோ - இவற்றை வாங்கிடக்கூடிய புது வாசகர்களை எண்ணியே ! Of course -மஞ்சக் கொடிய புடிச்சுக்கிட்டு, கூட்டம் கூட்டமால்லாம் புதிய வாசகர்கள் படையெடுக்கப் போவதில்லை தான் ; but still புத்தக விழாக்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது newcomers நமது இதழ்களை அள்ளிச் செல்கின்றனர் என்பது நிஜம் ! அந்தப் புதியவர்கள், அந்த manga தலைமுறை,  நம்ம இஸ்பைடர் சாகசங்களை இன்றைக்குப் படிக்கும் பட்சத்தில், அவர்களது ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்குமோ ? என்ற குழப்பம் தான் எனக்கு ! இந்த ஜனவரிக்கு சென்னைக்கென நாம் மறுபதிப்பு செய்த லக்கி லூக் இதழ்களெல்லாம் தெறி ஹிட்ஸ் ! வசனங்களில் நிறைய tweak செய்திருந்தோம் & அந்தக் கதைகள் சகலமுமே செமத்தியான evergreen hits ! So அவற்றை நாம் (சு)வாசித்தாலும் சரி, புதியவர்கள் வாசித்தாலும் சரி, வண்டி ஓடி விடுகிறது ! Oh yes, ஸ்பைடரின் சூப்பர்-ஹீரோ சாகசங்கள் - அமெரிக்காவில் விண்ணைத் தொடும் விற்பனை காணும் அந்த மனிதன்-இந்த மனிதன் சாகசங்களுக்குச் சளைத்தவைகளே அல்ல தான் & நம்மை தாங்கிப் பிடித்த ஜாம்பவானும் இவரே ! So அவரை மட்டம் தட்டும் எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது ! But மாறியுள்ள காலங்களில் / ரசனைகளில் இவருக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்த curiosity என்னுள் நிறைய உள்ளது !! கொஞ்சம் பேசுங்களேன் guys இது பற்றி ?

ஒற்றை இதழ், இரண்டு இதழ்களென்றால் கூடப் பரவாயில்லை ; ஆனால் ஒரு முழுநீளத் தொகுப்பென்பது totally a different beast !! அதனை சமாளித்து விடலாமென்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா folks ? இதோ - ஆகஸ்டில் நம்ம தானைத் தலைவர் மெகா சைசில், கலரில், "விண்வெளிப் பிசாசு" உடனான மோதலில் களமிறங்கிடவுள்ளார் - நம்ம கரூர் ஸ்பைடர்மன்றத் தலைவரின் மொழிபெயர்ப்புடன் ! விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமே guys ? What say ? 

And ஏற்கனவே ஏதோவொரு சமயத்தில் பிராமிஸ் செய்திருந்த "மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2" பெண்டிங் உள்ளது ! அவரைக் கரைசேர்க்கும் பொருட்டு, இம்முறை டக்கரான கதைகளையாய்த் தேர்வு செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் ரெடி செய்து வருகிறோம் ! So அவர் சூட்டவிருக்கும் புய்ப்பங்களோடு, ஸ்பைடரும் ஒரு கொத்தைச் சூட்டச் செய்தால், ஈரோட்டுக்கு வரும் போது அம்புட்டு பேரும் ஊட்டியின் மலர்க்கண்காட்சிகளிலிருந்து ஓடியாந்தோர் போலிருப்பது உறுதி ! பரால்லீங்களா ?   

Moving on, வருஷத்தில் ஒரு பாதியினைக் கடக்கும் தருவாயினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் போது - 40-வது லயன் ஆண்டுமலர் ;  ஈரோடு ; தீபாவளி ; கிறிஸ்துமஸ் - என்பனவற்றையெல்லாம் தாண்டி, அடுத்த ஆண்டினுள் பார்வைகளை ஓட விடும் சபலங்கள் மேலோங்குகின்றன ! And காத்துள்ள 2025-ல் முத்துவின் இதழ் # 500 வெயிட்டிங் ! In fact முத்துவின் ஆண்டுமலரே இதழ் நம்பர் ஐநூறாகவும் இருந்திடவுள்ளது ! So அதற்கு என்ன திட்டமிடுவது ? என்ற கேள்வி தலைக்குள் இப்போதே உருட்டி வருகிறது ! 

அடுத்தாண்டுக்கென என்னிடமுள்ள அடுத்த கேள்வி - பொதுவானது !! இது வரையிலும் குண்டு புக்ஸ் ; புஷ்டியான புக்ஸ் - என்று டிராவல் செய்திருந்த நாம், 2024-க்கென crisp வாசிப்புகள், முன்செல்லும் பாதையென்று தீர்மானித்திருந்தோம் ! And அந்த முனைப்போடு நடப்பாண்டின் அட்டவணையினையும் அமைத்திருந்தோம் ! இதோ - முதல் 5 மாதங்கள் ஓட்டமெடுத்திருக்கும் நிலையில், எனது கேள்விகள் இவையே :

1.இந்த வாசிப்பு அனுபவம் எவ்விதம் ரசிக்கிறதோ மக்கா ? 'எடுத்தோம்-படிச்சோம்' என்ற ஸ்டைல் சுகப்படுகிறதா ? இதோ - இந்த மே மாதம் கூட ஒரு க்ளாஸிக் உதாரணம் ! போனவாட்டி, இதே டேங்கோவையும், இதே சிக்பில்லையும், துணைக்கு ரூபின் அம்மணியையும் கூட்டிக் கொண்டு, கூட்டணி இதழாய் வெளியிட்டு, அதே மாதத்தில் மேற்கொண்டும் இரண்டு இதழ்களை வெளியிட்டிருந்தோம் ! ஆனால் இம்முறை, ஒவ்வொன்றும் தனித்தனியாய், நறுக் என்ற crisp பாணியில் !! இது ஓ.கே. என்பீர்களா ? அல்லது 'என்ன இருந்தாலும் குண்டூஸ் மெரி வருமா ? என்பீர்களா ? 

2.இந்த ஆண்டினில் இதுவரைக்கும் பதினைஞ்சோ, பதினாறோ இதழ்கள் வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன் ! அவற்றுள் நீங்கள் வாசித்தது  எத்தனையை ? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ? 

3.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இருந்துள்ளன இம்முறை என்ற எனது இந்த அனுமானம் சரிதானுங்களா ? இல்லாங்காட்டி, நான்பாட்டுக்கு கனா கண்டுக்கினு இருக்கேனுங்களா ?

உங்களின் மெய்யான பதில்கள், அடுத்த ஆண்டிற்கென ஒரு blueprint போடும் முதற்கட்டப் பணிகளுக்கு உரம் சேர்க்கும் என்பதால், தவறாது பதில்ஸ் ப்ளீஸ் ? இதோ - இந்தப் பதிவில் நான் தருமி அவதாரில் கேட்டுள்ள கேள்விகளின் தொகுப்பு - பதிவுகளும் crisp ஆக இருந்தால் தேவலாமென்று எண்ணிடும் நண்பர்களுக்கோசரம் !! So மேஜர் சுந்தர்ராஜனாய் ஒருக்கா performance பண்ணிய கையோடு நான் கிளம்புகிறேன் !! கபாலத்துக்கு மேல் பணிகள் காத்திருப்பதால் ஓட வேண்டுமுங்கோ !! Bye all....see you around ! Have a bright Sunday !!

QUESTIONS AT A GLANCE :

1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ? 

2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?

3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?

4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ? 

5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ?

6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?

7.லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?

P.S : பன் போட்டியில் வென்று, நமது இஸ்திரியில் பெயர் பொறித்திருக்கும் நண்பர், தனது அட்ரஸ் & போன் நம்பரை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பிடக் கோருகிறேன் ப்ளீஸ் ! ஒரு வேளை பன் பார்சலை இரக்க சிந்தனை கொண்ட கிளவரசருக்கு, ச்சீ..சீ.....இளவரசருக்கு அனுப்பிட எண்ணினாலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் சாத்தியமே !! 

And இதோ - ரவுண்டு பன் படலத்துக்குப் பிற்பாடாக ஒரு ஸ்பாஞ் கேக் போட்டி !! இதோ - ஆழ்ந்த சிந்தனையில் லயித்துக் கிடக்கும் நம்ம வலைமன்னருக்குப் பொருத்தமான மைண்ட்வாய்ஸ் ஒன்றை எழுதி அனுப்புவோருக்கு ஸ்பா.கே. 4 பார்சல்லல் !! And இம்முறை நடுவராக இருந்து தேர்வு செய்திடவுள்ளது - நம்ம கரூர் ராஜசேகரன் சார் ! புலவர்களே களமிறங்குங்கள் !






Sunday, May 05, 2024

சந்தோஷம் - ஒரு தொடர்கதை !

 நண்பர்களே,

வணக்கம். Phewww !! அடை மழை பெய்து ஓய்ந்த மாதிரி ஒரு பீலிங் - நமது இரு தின ஆன்லைன் மேளாவின் நிறைவினைத் தொடர்ந்து !! 

ரெண்டு நாட்களுமே நமது ஆபீஸ் போன்களின் கீ-பேட்களும் சரி, கால்குலேட்டர்களின் பட்டன்களும் சரி, சட்னியாகாத குறை தான் ! இதற்கு முன்பான விழாக்களின் போது, போன்கால் பேசியே நாக்கு வறண்டு போயிருந்த நம்மாட்கள், இம்முறை கூலாக டைப் பண்ணியே 2 தினங்களின் ஆர்டர் பிரவாகங்களைச் சமாளித்து விட்டுள்ளனர் என்று தான் எட்ட இருந்து பராக்குப் பார்க்கும் படலத்தின் போது நினைத்திருந்தேன் ! ஆனால் கொஞ்ச நேரம் கிட்டக்க இருந்து கவனித்த போது தான், எந்த புக் எந்த டிஸ்கவுண்ட் விகிதத்தில் ? மொத்த லிஸ்டின் கிரயமென்ன ? யார்-யார் எந்த free books தேர்வு செய்துள்ளனர் ? And அவற்றை எங்கே அனுப்புவது ? அப்புறம் புது இதழ்களுக்கான ஆர்டர்கள் என்ன ? என்ற விபரங்களை பதிவு செய்வதெல்லாம் மொத்தமாய் குறுக்கைக் கழற்றிடும் பணியாகிப் போனதை புரிந்து கொள்ள முடிந்தது ! இந்த ரகரகமான டிஸ்கவுண்ட்களும் சரி, FCBD விலையில்லா இதழ்களின் திட்டமிடலும் சரி, 8 புது ரிலீஸ்களின் அறிவிப்பும் சரி, கணிசமாகவே டெஸ்பாட்ச்சில் கசரத் வாங்குமென்பதை எதிர்பார்த்திருந்தேன் தான் ; ஆனால் அதன் முழுப் பரிமாணத்தையும் 2 நாட்களாய்ப் பார்த்த போது, இருக்கும் சொற்ப (wo)man பவரைக் கொண்டு, கொஞ்சம் டூ மச் ; த்ரீ மச்சாகத் தான் இழுத்து விட்டுப்புட்டோமோ ?? என்று தோன்றியது ! But புண்ணியத்துக்கு 8 புது ரிலீஸ்களில் யாருமே, "எனக்கு இது வேணும் ; அது வேணாம் !" என்ற ரீதியில் pick & choose பண்ணியிருக்காது மொத்தமாகவே செலெக்ட் செய்து விட்டதால் அதன் பொருட்டு நோவுகளின்றித் தப்பித்து விட்டார்கள் ! And சஞ்சீவி மலையையே தூக்கி தலையில் வைத்தாலும், முகம் சுளிக்காது - 'சரிங்க சார் !' என்று செயலாற்றிடும்  நம்மவர்களின் புண்ணியத்தில் நானும் தப்பித்தேன் !

மாலையில் பலத்த காற்றும், லேசான மழையுமாய் பெய்ததில் கரண்ட் கட்டாகிப் போயிட ஆபீசில் wi-fi பணாலாகியதால், கடைசி ஒரு மணி நேரத்து ஆர்டர்களுக்கு சரி வர தொகைகளைச் சொல்ல முடிந்திருக்கவில்லை ! அவர்களுக்கும் இந்த 2 தினங்களின் சலுகைகள் உண்டென்பதால் no worries ; திங்கட்கிழமையின் உள்ளூர் திருவிழா  விடுமுறை முடிந்து, செவ்வாய் காலையில் ஆபீசுக்கு வந்தவுடன் சொல்லி விடுவார்கள் ! So லேட்டாக ஆர்டர் செய்திருந்த நண்பர்கள் ஒரு நாள் பொறுத்துக்க கொள்ளுங்கள் - ப்ளீஸ் ! I repeat - திங்கள் நமது அலுவலகம் உள்ளூர் திருவிழாவின் பொருட்டு விடுமுறையிலிருக்கும் !

ரைட்டு....பொதுவாய் என்ன விற்றது ? அதற்கு ஈடாக Free Comics லிஸ்டிலிருந்து எதைத் தேர்வு செய்தார்களென்று பார்த்த போது - made for interesting viewing !! 

*நம்ம மீசைக்கார ஷெல்டன் சார் புதுசாய் ஜாகைகள் தேடிட ஒரு வழியாக இந்த 2 நாட்களிலும் மனசு இறங்கியுள்ளார் !! நல்லதொரு நம்பரில் ஷெல்டன் புக்ஸ் நகன்றுள்ளன !!

*விறு விறுப்புக் காட்டியுள்ள இன்னொரு title - "உயிரைத் தேடி" ! போன வருஷம் இதே சமயம் வெளி வந்திருந்த இந்த cult hit-ன் black & white இதழ்கள் அப்போதே காலியாகியிருந்தன ! கலர் புக்ஸ் மட்டும் ஸ்டாக்கில் இருக்க, அவற்றில் brisk sales !

*பொதுவாகவே ஹார்ட்கவர் இதழ்களில் நல்ல நகர்வுகள் !! அதுவும் கென்யா கிட்டத்தட்ட அனைவரது லிஸ்ட்டிலும் இருந்துள்ளது !!

*மிதமாய் நகர்ந்துள்ளது சுஸ்கி & விஸ்கி ஹார்ட் கவர் Book # 2.

*சுப்ரீம் '60s ஹார்ட்கவர் இதழ்களும் fast movers !! 'நீ தெற்கே போய்க்கோடே  ...மேற்கே போய்க்கோடே ...!! ஆனா நாங்க பாட்டுக்கு சிக்ஸர் அடிச்சிகினே தனி வழியிலே டிராவல் பண்ணிப்போம் !' - என்று க்ளாஸிக் பார்ட்டீஸ் சொல்லாத குறை தான் !   

*Talking of hardcovers - போன மாசத்து பெளன்சர் அடித்திருக்கும் சிக்சரின் புண்ணியத்தில் முந்தய பெளன்சர் இதழ்களும் செம decent ஆக நகர்ந்துள்ளன !

*And சர்ப்ரைஸ்....சர்ப்ரைஸ்....கிட்டத்தட்ட அனைவரது தேர்விலும் இடம் பிடித்துள்ள ஒரு பார்ட்டி - நம்ம இளவரசி மாடஸ்டி தான் !! சின்ன விலைகள் ; அதிலுமே டிஸ்கவுண்ட்ஸ் என்பதைத் தாண்டி, இவர் இன்றைக்கு ஏதோவொரு வசீகரத்துடன் செம hot property ஆகத் தெரிகிறார் ! போகிற போக்கில் அடுத்த க்ளாஸிக் தொகுப்புகளின் பட்டியலில் அம்மணிக்குமொரு பெசல் போட வேண்டிப் போகும் போலும் !! 

*இன்னொரு surprise தேர்வு - நம்ம வலைமன்னன் தான் ! நிறைய நண்பர்கள் ஸ்பைடர் இதழ்களை pick செய்துள்ளனர் !! And அந்த புது ஸ்பைடர் + ஆர்ச்சி சாகசம் எப்போதென்று எக்கச்சக்க ஆர்வங்ஸ்கி !! நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரை கம்பியூட்டர் மேக்ஸும், ஆர்ச்சியும் பந்தாடுவதைப் பார்த்து நிறைய பற்கள் நறநறக்கப்படுமென்பது உறுதி !! 

*கைவசமுள்ள ஒன்-ஷாட் ஜம்போ கிராபிக் நாவல்களிலிருந்து "மா..துஜே ஸலாம்" நிறையப் பேரின் லிஸ்ட்களில் இருந்துள்ளதில் எனக்கு பெர்சனலாக நிரம்ப மகிழ்ச்சி !! நான் ரசித்த சமீப ஆண்டுகளின் புக்சில் அதற்கொரு முக்கிய இடமுண்டு என்பதில் ஏது ரகசியம் ? 

*புது இல்லங்களைத் தேடி டெமக்ளீஸ் டீமும் புறப்படுவது சந்தோஷமான இன்னொரு சேதி !! சில பல வருஷங்களுக்கு முன்னே ஈரோட்டில் வெளியான நாள் முதலாய் கிட்டங்கியில் நீண்ட நெடு நாள் குத்தகையினை எடுத்திருக்கும் இந்த இதழ் கொஞ்சமாகவேணும் நகர்ந்திருப்பதில் ஹேப்பி !

*ஆச்சர்யமாய் இம்முறை - அயல்நாட்டுப் பங்களிப்புகளும் கணிசம் ! புக்ஸை இங்குள்ள முகவரிகளுக்கு அனுப்பப் கோரினார்களா ? என்பது எனக்குத் தெரியலை - but கண்முழித்திருந்து கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் நண்பர்கள் ஆர்டர் செய்துள்ளனர் ! And நம் அண்டை வீட்டு ஸ்ரீ லங்காவினை குறிப்பிடாதிருக்க இயலுமா ? அங்கிருந்தும் செம handsome orders !!

*இந்த தபா "இரத்தப் படலம்" தொகுப்புகள் ஏதேனும் surprise விற்பனைக்கு இல்லியா ? என்று கேட்டோரும் நிறைய !! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஏற்பாடுகளை குளறுபடிகளின்றிச் செயல்படுத்திடும் முனைப்பிலும், புது புக்ஸ்களின் பணிகளிலும் மறந்தே போய்விட்டேன் !! 

*மொத்தமான 40 விலையில்லா புக்ஸையும் ஆங்காங்கேயுள்ள நூலகங்களுக்கு அனுப்பிடக் கோரியுள்ள நண்பர்களே கணிசம் !! அவை வெறும் 10 சதவிகிதப் புது வாசகர்களைச் சென்றடைந்தாலுமே இந்த முயற்சி செம வெற்றி என்றாகிடும் !! 

பந்தாவாய் அறிவிச்சாச்சு ; விழாவையும் தெறிக்க விட்டாச்சு ; இனி டெஸ்பாட்ச் செய்திடும் பணி நம்மாட்களுக்கும், எஞ்சியுள்ள 2 புது இதழ்களுக்கான பணிகளை சட்டென்று முடிக்கும் பொறுப்பு எனக்கும் வெயிட்டிங் !! So இந்த 2 நாட்களாய் வேறொரு மண்டலத்தில் உலாற்றிக் கொண்டிருந்ததிலிருந்து தரையிறங்கி, பணிகளுக்குள் மூழ்கியாக வேண்டும் ! But பற்பல காமிக்ஸ் ஜாம்பவான்கள் கொண்டாடிய ஒரு மைல்கல் தினத்தினில் சுண்டெலி ரேஞ்சுக்காவது நாமும் களமாடிய மகிழ்ச்சியில், காத்துள்ள பணிகளின் பளு அழுத்தவே காணோம் !! And guess what - கையிலுள்ள இரண்டும் முடிந்த நொடியில், அடுத்ததாகக்  காத்துள்ளோர் நம்ம XIII-ம், தாத்தாக்களும் தான் ! 'கரும்பு தின்னக் கூலி' என்ற தேய்ந்த பழமொழியினை நாமறிவோம் ; அதனை மெய்யாலுமே yet again அனுபவித்திடும் வரம் எனக்குக் காத்துள்ளது ! புனித மனிடோ - yet again நன்றிகள் ஓராயிரம் !

Bye guys ...see you around !! And thanks for being the wonderful people you are !! எந்தவொரு முயற்சிக்கும் சர்வ நிச்சயமாய்த் தோள் கொடுப்போமென்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்து வருகிறீர்கள் !! Thanks a million !! Have a beautiful week ahead !!

P.S : மகளிரணித் தலைவி - தனது கேப்ஷன் தேர்வினை அறிவிக்கலாம் !!

Saturday, May 04, 2024

டெக்னாலஜி !!!

நண்பர்களே,

வணக்கம். டெக்னாலஜி பின்னிப் பெடலெடுத்து வருகிறது இன்றைய பொழுதினை !! வழக்கமாய் போன் பண்ணி விபரங்கள் கேட்டு ; ஆர்டர் சொல்லி ; சந்தேகங்களை நிவர்த்தித்திட முயன்று அப்புறமாய் ஆர்டர் place செய்து வந்த நண்பர்களெல்லாம்  இன்றைக்கு செம கூலாக வாட்சப்பில் ஆர்டர்களைக் குவித்து வருகின்றனர் !! முந்தைய இதழ்களின் லிஸ்ட் + Free Comics லிஸ்ட் - என இரண்டையும் அழகாய் அனுப்பி வருவதால் நம்மாட்களின் வேலைகள் சூப்பர் சிம்பிள் ஆகி வருகிறது !! Maybe நேற்றைக்கே இந்த லிஸ்ட்களை இங்கே நமது பதிவிலும், ஆபீசில் வாட்சப்பில் இருந்தும் பகிர்ந்தது இதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம் ! And இம்மாத புது புக்ஸ் கூரியர்களோடு நியூஸ்பேப்பர் பாணியில் அனுப்பியிருந்த ஆன்லைன் மேளா ஸ்பெஷல்ஸ் விளம்பரங்களும், back issues stocklist-ம் செமையாக reach ஆகியுள்ளது ! More than anything else - நண்பர்கள் இதனை பரவலாக்கிட க்ரூப்களில் ; FB-ல் செய்து வரும் முயற்சிகளும் ஒரு அசாத்திய ஒத்தாசையாய் இருந்துள்ளது ! Thanks a ton folks !! 

"மெய்யாலுமே - விலைக்கு ஈடாய் புக்ஸ் free தானா ?" என்ற கேள்வி தான் காலை முதலாக ஒலித்து வருகிறது போனில் ! தொடர்ந்து எழுந்த கேள்விகளால் நம்மாட்களுக்கே சந்தேகம் ஆகிப் போய் என்னிடம் மறுக்கா கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு, இப்போது தெம்பாகப் பதிலளித்து வருகின்றனர் ! Oh yes - FCBD சர்வ நிச்சயமாய் உருட்டல்ல ; நீங்கள் வாங்கிடும் முந்தைய இதழ்களுக்கு ஈடான கிரயத்துக்கு விலையின்றி புக்ஸ் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம் ! And முந்தைய இதழ்களுக்கு மட்டும் ஆர்டர் செய்துள்ள நண்பர்களுக்கு, அவர்கள் தேர்வு செய்த free books சகிதம் இயன்றமட்டுக்கு இன்றே அனுப்பிடவும் முயற்சித்து வருகிறோம் ! 

இதோ - புது இதழ்களின் பிரிவியூ படலங்கள் ! டெக்ஸ் க்ளாசிக்ஸ் நீங்கலாக பாக்கி 7 இதழ்களிலுமே limited print runs தான் ! நேற்றும், இன்றுமாய் அதற்குள்ளாகவே கிட்டத்தட்ட 30% புக்ஸுக்கு ஆர்டர்கள் வந்தாச்சு ! And அனைவருமே மொத்த செட்டாகவே ஆர்டர் செய்துள்ளனர் என்பது தான்  icing on the cake !! நான் கூட அந்த குட்டி புக்சில் selective ஆக வாங்கிடுவீர்களென்று எண்ணியிருந்தேன் ; but ஊஹூம்...ஏக் தம்மில் 8 ! 😍😍😍








 


















விடுபட்டுள்ள ப்ரிவ்யூக்களை மதியம் upload செய்கிறேன் !! இப்போதைக்கு "துணைக்கு வந்த மாயாவி"யோடு பயணத்தைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் folks !! Bye for now ....see you around & have a super cool weekend !!

P.S : Online மேளா ஸ்பெஷல் புக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடிhttps://lion-muthucomics.com/pre-booking/1203-the-great-online-comics-mela-tamilnadu.html




Friday, May 03, 2024

மே = மேளா !!

நண்பர்களே,

வணக்கம்! ஆன்லைன் மேளா!! கொரோனா லாக்டௌன்களின் வேளையில் கொஞ்சமேனும் மூச்சு விட்டுக் கொள்ளும் பொருட்டு துளிர்விட்ட மகா சிந்தனை இது! ஆனால் மெள்ள மெள்ள நமது அட்டவணையினில் ஒரு நிரந்தரமான, முக்கியமான இடத்தை இது பிடித்துக் கொண்டிருப்பது கண்கூடு! In fact, இப்போதெல்லாம் ஆண்டின் அட்டவணையினைத் திட்டமிடும் சமயமே, உத்தேசமாய் ஆன்லைன் விழா சார்ந்த புக்ஸ் பற்றியும் மண்டைக்குள் வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கத் தவறுவதில்லை! And இதோ – 2024-ல் அதற்கான தருணமும் நெருங்கி விட்டது!

நிஜத்தைச் சொல்வதானால் – கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னமே MAY 4 & MAY 5-ல் தான் நடப்பாண்டின் மொட்டை மாடி மேளாவை அரங்கேற்றிட வேண்டுமெனத் தீர்மானித்திருந்தேன்! அதற்கு உருப்படியானதொரு முகாந்திரம் இருப்பதை அப்போதே உணர்ந்திருந்தேன்! ஆனால் இப்போதெல்லாம் எட்டு மாதங்களென்பது எட்டு யுகங்களுக்கான மாற்றங்களையும் கண்ணில் காட்ட வல்லதெனும் போது – ‘தேமே‘வென்று வாய்க்கு ஒரு லோட் பெவிகாலை பூசிக் கொண்டேன்! இதோ – ஒரு வழியாக மே 4-க்கு ஒற்றை தினமே பாக்கியிருக்க இனி ஓட்டைவாய் உலகநாதனாகிடத் தடையில்லை என்று பட்டது!

சுமார் 8 மாதங்களுக்கு முன்னே ஏதோவொரு தேடலின் போது கண்ணில் பட்ட தகவல் இது! உலக காமிக்ஸின் முதன்மை மார்க்கெட்டான அமெரிக்காவில் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும், பெரும்பான்மையான காமிக்ஸ் பதிப்பகங்களும், காமிக்ஸ் விற்பனை செய்திடும் கடைகளும் வருகை தரும் வாசகர்களுக்கு – விலையின்றி, தேர்வு செய்யப்பட்ட காமிக்ஸ்களை வழங்கி வருகின்றனர்! அந்த ஒற்றை நாளின் சலுகையானது – புதுசாய் வாசகர்களை உருவாக்கவும், குடும்பங்களை காமிக்ஸ் நோக்கிப் பயணிக்க ஊக்குவிக்கவும் உதவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை! காமிக்ஸ் கலாச்சாரம் ஆலமரமாய் வேரூன்றி நிற்கும் அமெரிக்காவின் ஒவ்வொரு பட்டி-தொட்டியிலும் கூட காமிக்ஸ்கள் மட்டுமே பிரத்தியேகமாய் விற்றிடும் கடைகள் உண்டென்பதால், இங்கோ இதுவொரு திருவிழா போலவே களை கட்டுகிறது! இதோ – இந்த YouTube வீடியோவைப் பாருங்களேன் : https://www.youtube.com/watch?v=XfM1vlSUdcY

இதைப் பார்க்க வாய்த்த நொடியிலேயே மண்டைக்குள் குறுகுறுத்தது – “அடங்கொன்னியா.... புலியைப் பார்த்து பெருச்சாளி சூடு போட்டுக்கின மாதிரித் தெரிஞ்சாலும் தப்பில்லே ; நம்ம சத்துக்கேற்ப இதை ஒருவாட்டியாச்சும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே...” என்று! மிகச் சரியாக மே துவக்கத்தின் வாரயிறுதியில் தான் நாம் ஆன்லைன் மேளாக்களை நடத்தி வந்துள்ளோம் என்ற போது, இந்த உடலுக்கு, அந்தத் தலையைப் பொருத்திடும் அவா எழுந்தது! So – தி கிரேட் கிரிகாலனின் மேஜிக் ஷோவுக்குப் போட்டியாக -

“The Great ஆன்லைன் காமிக்ஸ் மேளா‘24”

&

Free காமிக்ஸ் புக் டே

மே 4 & மே 5 தேதிகளில் அரங்கேறிடவுள்ளன!

ரைட்டு... இதை எவ்விதம் செயல்படுத்திட எண்ணியுள்ளோம் என்பதைப் பதிவின் வால்ப்பகுதியில் தெளிவாகத் தந்திடலாம் என்பதால் – இந்த மேளாவின் highlight ஆன ஸ்பெஷல் புக்ஸ் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்பிடலாம் folks! 

  • ஏற்கனவே சொன்னதைப் போல 4 பெரிய புக்ஸ் – சகலமும் கலரில்!
  • And 4 சின்ன புக்ஸ் – அதில் இரண்டு கலரில்!

Here we go with the details : 

 புக் #1 : டெக்ஸ் க்ளாஸிக்ஸ் – 6 :

ஓநாய் வேட்டை”! Truth to tell – ஒரு வருஷத்துக்கும் மேலாச்சு இதன் ராப்பர் அச்சாகி! 2023-ல் ஈரோட்டுப் புத்தக விழாவின் போது இதை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தோம் ! ஆனால் கடைசி நொடியில் ”கார்சனின் கடந்த காலம்” மெகா சைஸில் உட்புகுந்து பட்டாசாய்ப் பொரிந்து விட்டது! So அந்த க்ளாஸிக் டெக்ஸ் சாகஸம் – கலரில் ஹார்ட்கவரில் இப்போது பட்டையைக் கிளப்பிட வருகிறது! Of course இது மறுபதிப்பே & நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, என் வேலைப்பளுவை மட்டுப்படுத்திக் கொள்ளவும், விற்பனைகளுக்கு உரமேற்றிக் கொள்ளவும், மறுபதிப்புகளுக்கு ஸ்லாட்களை மறுக்க வழியில்லை! இது டெக்ஸின் க்ளாஸிக் கலர் மறுபதிப்பு வரிசையில் ஆறாவது ஆல்பம் & ஏற்கனவே 4 விற்றுக் காலியாகி விட்டன! So ‘இதன் இடத்தில் வேறு புக் போட்டிருக்கலாமே?!‘ என்ற விசனங்களை ஓரம் கட்டிடுவோமா folks? ‘நச்‘சென்ற கலரில், ஹார்ட் கவருடன், ரூ.300/- விலையில் வந்திடவுள்ள ஆல்பமிது!

புக் # 2: தண்டர் in ஆப்பிரிக்கா:

பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், க்ரோவேஷியா, ஸ்பெயின், ஹாலந்து, இங்கிலாந்து என ஐரோப்பாவில் எங்கெங்கோ எட்டிப் பார்த்து, அவர்களது நாயக / நாயகியரை தமிழ் பேசச் செய்துள்ளோம்! And அந்த வரிசையில் புதுசாய் ஒரு நாட்டையும் இனி இணைத்துக் கொள்ளலாம் – அது தான் டென்மார்க்! டின்டினுக்கு ஒன்றுவிட்ட சித்தாப்பாரு பையனாட்டம் தோற்றம் தரும் Kurt Dunder டேனிஷ் மொழியில், பிரபலமான நாயகர்! அவரை அண்டா-டண்டா – என்ற பெயருடன் அல்லாது க்ரே தண்டராக்கி, தமிழுக்கு இட்டு வந்துள்ளோம் – ஜாலியாக சாகஸம் செய்திட! டின்டின் நாயக பாணியை மட்டுமன்றி, சித்திர பாணியையுமே அந்த பெல்ஜிய ஜாம்பவானின் ஸ்டைலிலேயே அழகாக அமைத்துள்ளார்கள்! And டின்டினைப் போலவே இவரும் கார்ட்டூன் பார்ட்டியெல்லாம் கிடையாது ; ஜாலியானதொரு சாகஸ வீரரே! ”தண்டர் in ஆப்பிரிக்கா” – 48 பக்கங்களில் செம க்ரிஸ்பானதொரு சாகசத்துடன் அட்டகாசமான கலரில் வெளிவரக் காத்துள்ளது !


புக் # 3: ஸாகோரின் பனிமலைப் பலிகள்:

”டார்க்வுட் நாவல்கள்” என்றதொரு 6 இதழ் கொண்ட சுற்றில் – இருள்வனத்தின் மாயாத்மாவை crisp சாகஸங்களில் போனெலி களமிறக்கியிருந்தனர்! நம்ம V காமிக்ஸிலும் அதனை முயற்சித்திருந்தோம் – with mixed results! ஐநூறு – அறுநூறு சாகஸங்களுக்குப் பின்பாய் ஸாகோரை அந்த மினி சாகஸங்களில் இத்தாலியில் பார்த்திருக்கும் போது, அவை ரசித்திருக்கலாமோ – என்னவோ; but மிகச் சமீப வரவான நாயகரை இந்த மினி அவதாரில் ரசிப்பது நமக்குச் சிரமமாகவே இருந்தது! So அந்த மினி பாணிக்கு டாட்டா சொல்லி விட்டு, முழுநீள சாகஸ பாணிக்கே திரும்பியுள்ளோம் – “பனிமலைப் பலிகள்” வாயிலாக! 128 பக்கங்களில் இதுவொரு செம breezy ஆக்ஷன் த்ரில்லர்!

ஸாகோரின் இந்த இரண்டாம் அவதாரை ரசித்திட, ஒரு துவக்கப் புள்ளியாய் – டெக்ஸ் வில்லரோடு ஒப்பிடாது இவரையொரு தனித்துவமான ஹீரோவாகப் பார்க்க ஆரம்பிப்போமே folks! இருவருமே ஒரு குழுமத்தின் பிள்ளைகள் என்பதைத் தாண்டி பெருசாய் இருவருக்குமிடையே ஒற்றுமைகள் கிடையாது! And ஸாகோர் கதைகளின் பின்னணியே கொஞ்சம் மாந்த்ரீகம்; கொஞ்சம் அமானுஷ்யம் எனும் போது, நூல் பிடிச்சாற் போல லாஜிக்கை இங்கே தேடிடுவது சிரமம்! So டெக்ஸின் மெபிஸ்டோ; யமா கதைகளை ஏற்றுக் கொள்ளும் அதே mindset சகிதம் இங்கே புகுந்திட்டால் ஸாகோர் நிச்சயம் சோபிப்பார்! நடப்பாண்டிலேயே இன்னும் 2 முழுநீள ஆக்ஷன் த்ரில்லர்கள் நம்ம V காமிக்ஸில் காத்துள்ளன! So அந்த ‘மினிக்கள்‘ பதித்திருக்கக்கூடிய மேலோட்டோமான முத்திரையினை உதறிவிட்டு, வீறுகொண்டு ஜம்ப்பிங் மாயாத்மா எழுந்திட இந்தக் கலர் ஆல்பம் ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திடுமென்ற நம்பிக்கை எனக்குண்டு! Fingers crossed!

புக் # 4: துணைக்கு வந்த மாயாவி:

“கமர்ஷியல் கிராபிக் நாவல்” என்ற அடைமொழியோடு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த ஒன்-ஷாட் ஆல்பம் நினைவுள்ளதா folks? 'இது வேணுமா? அல்லது நாகரீக வெட்டியான் ஸ்டெர்னின் அடுத்த ஆல்பம் வேணுமா?' என்ற கேள்வியோடு ஒரு வோட்டிங் கூட நடத்தியிருந்தோம்! And எனது ஞாபகம் சொதப்பாதிருக்கும் பட்சத்தில் – 40% வாக்குகள் பெற்றிருந்தது இந்த கமர்ஷியல் கி.நா.! ஸ்டெர்ன் ரெகுலர் அட்டவணைக்குள் புகுந்திருக்க, இதோ – ஆன்லைன் மேளாவின் ஸ்லாட்டை அந்த ஆல்பத்துக்கு ஒதுக்கியுள்ளோம்!

வழக்கமான வன்மேற்குக் களம்; வழக்கமான கௌபாய்கள்... ஆனால் அந்த மாமூலான டமால் – டுமீல் மாவுகளை அரைக்காது, இங்கே கதை முற்றிலும் புதிதாயொரு ரூட்டில் பயணமாகிறது! And இங்கே சித்திர பாணியில் அமரர் வில்லியம் வான்ஸுக்குப் போட்டி தரும் உத்தேசமெல்லாம் யாருக்குமே இருக்கவில்லை! தலைகாட்டும் அத்தினி ஆசாமிகளுக்கும் மூக்குக்குக் கீழே ஆலமரமாட்டம் மீசைகள் மட்டும் தவறாது இடம்பிடித்திட, இயற்கையின் வனப்புகளை வரைவதிலும், வர்ணமூட்டுவதிலும் பின்னிப் பெடல் எடுத்துள்ளனர்! ‘வள வள‘வென்று பேசும் கி.நா.க்களின் மத்தியில் இது மணிரத்னம் பாணியில் சுருக்கமாகப் பேசிடும் பாணியில் travel செய்கிறது!

உள்ளதைச் சொல்வதானால் – இந்த ஸ்லாட்டில் “கதிரவன் கண்டிரா கனவாய்” தான் வருவதாகயிருந்தது! ஆனால் அதன் மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்த போது, கணிசமாய் பட்டி-டிங்கரிங் பார்த்திடத் தேவையிருப்பது புரிந்தது! 156 பக்கங்களுக்கு செப்பனிடும் பணிகளைச் செய்யும் நேரத்துக்கு 78 பக்கங்களுக்குப் புதிதாய் பேனா பிடித்து விடலாமென்று ஆரம்பித்துள்ளேன்! தேவுடா!!!

இனி மினிஸ் !!   

புக் # 5: லேடி ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெஷல்-1

தொடர்ந்திடும் 4 மினி புக்ஸும் பிரதானமாய் புத்தகவிழாவுக்கு வருகை தரும் மாணாக்கரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை! எல்லாமே சின்ன விலைகளில்! அவற்றுள் நாமுமே ரசிக்கும் விதமான முதல் புக் – ஜேன் பாண்ட் என்ற பெண் உளவாளியை அறிமுகம் செய்திடும் 32 பக்க இதழ்! Fleetway-ன் பிரபலமான இந்தக் காரிகையை நாம் ஏற்கனவே நமது அணிவகுப்பில் பார்த்திருக்கிறோமா ? – நினைவில்லை எனக்கு! But இங்கிலாந்தில் JANE BOND Special என வெகு சமீபமாய் அட்டகாசமாய் வெளியிட்டுள்ளதைப் பார்த்த போது, அம்மணியை இட்டாந்திட ஏற்பாடுகளை செய்தோம்! லக்கி லூக் போலான பெரிய சைஸில், ஒரிஜினல் பக்க அமைப்புகளுடன், black & white-ல் 32 பக்கங்களுடன், ரூ.35/- விலையில் வரவிருக்கிறது! சிறுத்தை மனிதனைப் போல ஜேன் பாண்டும் புக் # 1; புக் @ 2; புக் # 3 என்று தொடர்ந்திடுவார்!

புக் # 6 : சிறுத்தையின் சீக்ரெட்:

ஸ்கூல் பசங்களிடையே இந்த சிறுத்தை மனிதன் தொடரானது நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது புத்தக விழாக்களின் விற்பனைகளில் பிரதிபலிப்பது தெரிகிறது! பெருநகர விழாக்களில் பெருசாய் impact இருப்பதில்லை தான்! ஆனால் அடுத்த லெவல் நகர்களில் அரங்கேறிடும் விழாக்களில் படையெடுக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கு இந்த compact size; சின்ன விலைகள்; அந்தப் புதிரூட்டும் ஹீரோ ரொம்பவே ரசிக்கிறது! So தொடரின் புக் # 3 நமது ஆன்லைன் மேளாவில் இடம்பிடித்திடுகிறது!

சின்னதொரு ப்ரேக்குக்குப் பின்பாக, ஜுலை முதலாகத் துவங்கிவிருக்கும் புத்தகவிழாக்களின் circuit குறைந்தது அடுத்த 8 மாதங்களுக்காவது ஊர் ஊராய் நம்மை இட்டுச் செல்லும். So அங்கே வருகை தரக்கூடிய இளைய தலைமுறைக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் variety வளர்த்திட முனைந்து வருகிறோம்! Wish us luck please !!

புக் # 7: சக்கரத்துடன் ஒரு சாத்தான் (டைலன் டாக் மினி த்ரில்லர்)

Again ஒரு மினி புக்! ஆனால் இது பெரும்பாலும் நமக்கானது! அமானுஷ்யங்களை ஆராயும் நமது டைலன் இம்முறை வித்தியாசமானதொரு சக்தியை எதிர்கொள்கிறார்! டெக்ஸ் சைஸில்; கலரில் 32 பக்கங்கள் & again மினி விலையில்!!

புக் # 8 : The சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 1 :

ஹி! ஹி! ஹி! இந்த இதழைப் பார்க்கும் போது ஆங்காங்கே முகங்களில் LED பல்புகள் பளிச்சிடப் போவதும், ஆங்காங்கே பற்கள் நறநறக்கப்படுவதும் நிகழும் என்பதை யூகிக்க முடிகிறது! "ஒற்றைக் க்ளாஸிக் சூப்பர் ஹீரோவைச் சமாளிப்பதே இப்போதெல்லாம் பெரும் பிரயத்தனமா கீது... இந்த அழகிலே ரண்டு பேரு; அதுவும் ஒரே ஜாகஜத்திலா?? ஆத்தாடி!!" என்று நறநறப்போர் சங்கம் சொல்லிடும் தான்! ஆனால் நமது காமிக்ஸ் வாசிப்புகளுக்கு உரமிட்ட ஜாம்பவான்களை ஒருசேர ரசித்திடும் விதமாய், சில புதுக்கதைகளை இங்கிலாந்தில் வெகு சமீபமாய் உருவாக்கியிருப்பதைப் பார்த்த நொடியில் நம்மள் கீ ஆர்வங்ஸ்கி அடக்க முடியலைங்கி! சட்டித் தலையனும், வலை மன்னனும், பற்றாக்குறைக்கு பதிமூன்றாம் மாடிக் கம்ப்யூட்டரும் சேர்ந்து கொள்ளும் போது அங்கேயிருப்பது கதையோ - கேரட் கொத்சோ ; அதுபற்றியெல்லாம் கவலையின்றி உள்ளே பாய்ந்து விடாட்டி நானென்ன எடிட்டர்? So – ஜாம்பவான்களை தரிசிக்கிறோம் – முழு வண்ணத்தில்; லக்கி லூக் சைஸில்; ரூ.80/- விலையில்!! And....and....க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் பெசல்களுமே தொடர வாய்ப்புகள் பிரகாசம் !! 😁😁😁

Thus end the ஸ்பெஷல் புக்ஸ்! இவை டின்டினுக்கோ; மின்னும் மரணத்துக்கோ சவால் விடப் போகும் படைப்புகளாக இருக்கப் போவதில்லை தான் – ஆனால் ஒவ்வொன்றுமே உட்புகுந்தால் காந்தமாய் உங்களை ஈர்த்து முழுசையும் வாசிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை! And பிரதானமாய் – no அழுகாச்சீஸ்; no சவ-சவ & no ஜவ்வு மிட்டாய்ஸ்! So டப்பி உடைக்காது, புக்ஸை பரணிலேற்றும் நம்ம ப்ளேட்பெடியா கார்த்திக் கூட இவற்றுள் ஒன்றோ – இரண்டையோ புரட்டும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன்!

And இம்முறை எட்டில் ஆறு கலர் இதழ்கள் எனும் போது புக்ஸுமே பிரமாதமாய் டாலடிக்கவுள்ளன!

ஜேன் பாண்ட் தவிர்த்த பாக்கியெல்லாமே ஒரிஜினல் அட்டைப்படங்கள்! இந்த லேடி J.B.க்கான கவர் நமது புது அமெரிக்க ஓவியையின் கைவண்ணம்!

ரைட்டு... இனி இந்த FCBD (Free Comic Book Day) & நமது மேளா செயல்படவிருக்கும் விதம் பற்றி சொல்லிடட்டுமா?

- நம் கையிருப்பில் உள்ள புக்ஸ் :

10% discount

20% discount

30% discount

50% discount

என்ற ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்  இங்கே pdf  இதோ !


- நமது ஆபீஸ் நம்பர்களான 9842319755 or 7373719755 என்ற நம்பருக்கு “Stock List“ என்று வாட்சப் சேதி அனுப்பினாலும் இந்த pdf அனுப்பி விடுவார்கள். 

- அப்புறம்... அப்புறம்... இன்னொரு பிரிவில் 40 முந்தைய இதழ்களை லிஸ்ட் செய்திருக்கிறோம்! இவை தான் முற்றிலும் விலையில்லா இதழ்கள்!








- கைவசமுள்ள முந்தைய வெளியீடுகளிலிருந்து நீங்கள் டிஸ்கவுண்ட் கழித்து ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன் – அதே ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான Free புக்ஸ்களை மேலேயுள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்து விலையின்றிப் பெற்றுக் கொள்ளலாம்! தமிழகம் எனில் கூரியருக்கு ரூ.100/- மட்டும் extra செலுத்திட வேண்டியிருக்கும்! வெளி மாநிலம் எனில் ரூ.160/-.for the couriers.

- கையிருப்பு back issues இதழ்களின் லிஸ்டிலேயே, ஒவ்வொரு புக்குக்கும் நேராக உள்ள பாக்சில் டிக் அடித்து உங்களின் ஆர்டர்களை பதிவு செய்திடலாம். நம்மாட்கள் கணக்கிட்டு, நீங்கள் அனுப்ப வேண்டிய தொகையினை வரிசைக்கிரமமாகத் தெரிவிப்பார்கள் ! பணம் அனுப்பிய கையோடு நீங்கள் அந்த Free Comics லிஸ்டிலிருந்து, உங்கள் ஆர்டர்களின் மதிப்புக்கு ஈடான தொகைக்கு புக்ஸ் தேர்வு செய்து அந்த லிஸ்டினை அனுப்பிட வேண்டும் ! 

- கூரியர் கட்டணங்களும் சரி, பேக்கிங் பொருட்களும் சரி, கணிசமாய், ரொம்பக் கணிசமாய் உயர்ந்திருப்பதாலும், டிஸ்கவுண்டுகளில் பாதாளங்களைத் தொட நாம் தயராகி விட்டதாலும், இம்முறை ரூ.3000/-க்கு மேலான ஆர்டர்களுக்கு மட்டுமே கூரியர் கட்டணங்கள் இராது. மூவாயிரத்துக்குக் குறைவான ஆர்டர் தொகைகளுக்கு கூரியர்கள் கட்டணமிருக்கும்; So இது குறித்து நம்மவர்களிடம் லடாய் வேணாமே ப்ளீஸ்!

- And புது புக்ஸிற்கு (ஏப்ரல் & மே ’24) ; ஆன்லைன் மேளா ஸ்பெஷல் இதழ்களுக்கு இந்த Free Comics சலுகைகள்  இராது !! அவை பிரத்யேகமாய் back issues வாங்குவோருக்கு மட்டுமே !! 

- "FCBD-யில் (Free Comics Book Day) தேர்வு செய்திடும் விலையில்லா இதழ்களை கொண்டு நேக்கு பெருசா எதுவும் பிரயோஜனம் இல்லேடா தம்பி ; அவற்றை உறவினர்களுக்கோ, பள்ளி / கல்லூரி / அலுவலக நூலகங்களுக்கோ அனுப்பிட நினைக்கிறேன் ! இன்னான்கிறே அதுக்கு ?" - என்கிறீர்களா ? பேஷாய் அதனைச் செய்திடவும் இயலும். தெளிவாக முகவரிகள் + ரூ.100/- or ரூ.160/- கூரியர் கட்டணங்கள் தந்தால் போதும்!

- இந்தத் திட்டங்கள், Free Comics என்பனவெல்லாம் May 4 & 5 தேதிகளுக்கு மட்டுமே! இது குறித்தும் நம்மவர்களோடு விவாதங்களைத் தவிர்த்திடுவதற்கு முன்கூட்டிய நன்றிகள்! செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே அவர்களிடம் இருக்கும் என்பதால், எனது தீர்மானங்களின் plus / minus சார்ந்த குட்டுக்களை அவர்களது தலைகளில் இறக்கிட வேண்டாமே ப்ளீஸ்!

- FCBD – விலையில்லா இதழ்களில் உங்களது தேர்வுகளைத் தெரிவிக்க அந்த Free Comics லிஸ்டையும் வாட்சப்பில் பெற்றுக் கொள்ளலாம். தயைகூர்ந்து அந்த லிஸ்டில், ஒவ்வொரு புக்குக்கும் நேராக உள்ள பாக்சில் டிக் செய்து, அதனை வாட்சப்பில் மட்டுமே எங்களுக்கு அனுப்பிடுங்கள்! அவற்றை போனில் ஒப்பித்து, நம்மாட்கள் குறித்துக் கொள்வது என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமே ஆகாது! இங்கும் உங்களது புரிதலுக்கு நன்றிகள்!

- அதே போல, "இது யாரு கதை ? இவரு சிரிப்பு காட்டுவாரா ? சண்டை போடுவாரா ?" என்ற ரீதியிலான விலாவரி வினவல்களையும் தவிர்த்திட்டால் நலம் - ப்ளீஸ் !! அடுத்தடுத்து கால்கள் வந்து கொண்டிருக்கும் போது, நம்மாட்கள் வரிசையாய் அவர்களிடம் திட்டு வாங்க நேரிடுகிறது ! So நமது சமீப புக்ஸ் பாணியில், crisp calls ப்ளீஸ் ! 

- In a nutshell:

- வாட்சப்பில் கையிருப்பில் உள்ள இதழ்களின் முந்தைய ஸ்டாக் லிஸ்ட் பெற்றுக் கொள்ளலாம். Numbers : 98423 19755 or 73737 19755.

- வாட்சப்பில் விலையில்லா 40 இதழ்களின் லிஸ்டையும் பெற்றுக் கொள்ளலாம்.

முந்தைய இதழ்களில் நீங்கள் ஆர்டர் செய்திடப் போகும் (டிஸ்கவுண்ட் கழித்தகிரயத்துக்கு ஈடாக Free Comics லிஸ்டிலிருந்து புக்ஸ் தேர்வு செய்து விலையின்றிப் பெற்றுக் கொள்ளலாம் !

- இரண்டு லிஸ்ட்களையும் பூர்த்தி செய்து, பணம் அனுப்பியுள்ள விவரத்தோடு, உங்கள் அட்ரஸ் சகிதம் நமக்கு வாட்சப் அனுப்பினால் போதும்.

இரு தினங்களும் பணிநேரம் : காலை 10 to மாலை 6 வரை!

- And நமது GPay நம்பரில் (90039 64584) போன் அடிக்க வேண்டாமே - ப்ளீஸ் ! அதனை attend செய்திட யாரும் இருக்க மாட்டார்கள் ! 

PLEASE NOTE : ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் புக்ஸில் 5 ரெடி !! இன்னும் 3 தயாராகிட வேண்டியுள்ளன! So புது புக்ஸ்  எல்லாமே மே 15 முதலே டெஸ்பாட்ச் ஆகிடும்ஆகையால் புது புக்ஸ் ஆர்டர் செய்திடுவோர் - சற்றே பொறுமை ப்ளீஸ் !!

என் மண்டைக்குள் உருவகமான திட்டமிடல் என்பதால் பஞ்சாயத்துக்கு வரும் சுனா-பானா வடிவேலைப் போல எனக்குள் எல்லாமே தெளிவாகவுள்ளது ! ஆனால் பஞ்சாயத்து பண்ண வரும் சங்கிலி முருகனாட்டம் நம்மில் எம்புட்டு பேர் குழப்பத்தில் கிறுகிறுக்கக் காத்துள்ளார்களோ - தெய்வமே !!! அவர்களையும், 2 நாள் மேளாவைக் கையாளப் போகும் நம்மவர்களையும் காத்தருளும் கையோடு, இந்த 2 நாள் திருவிழாவை அதகள வெற்றியாக்கி, கிட்டங்கியும், நாமும் சற்றே பெருமூச்சிட்டுக் கொள்ள பெரும் தேவன் மனிடோ வரம் தந்திடுவாராக !!  Bye all! See you around! Have a great weekend! 

And ரெகுலர் தடத்தின் இதழ்கள் டெஸ்பாட்ச் செய்தாச்சு !! வெள்ளியன்று உங்களைத் தேடி வந்திடுமென்று எதிர்பார்த்திடலாம் folks !! ஆன்லைன் லிஸ்டிங்குமே ரெடி : https://lion-muthucomics.com/latest-releases/1199-2024-may-pack.html

Happy Reading !! இதழ்களின் முதல் பார்வை பற்றிய ரேட்டிங் செய்ய மறந்திட வேணாமே - ப்ளீஸ் ?