நண்பர்களே,
வணக்கம். மலையேற்றத்தைக் காட்டிலும் சிரமமானது எதுவென்று யாரும் என்னிடம் விசாரிக்கப் போவதில்லை தான், but அப்படி யாரேனும், என்னிக்கேனும் தப்பித்தவறி வினவிடும் பட்சத்தில், இம்மி தயக்கமுமின்றிச் சொல்வேன் -"Actual பயணத்தைக் காட்டிலும், அந்த அனுபவத்தை ; அந்த சந்தோஷ நினைவுகளைப் பகிர்வது தான் ஆகச் சிரமமான task" என்று !! இதோ, ஞாயிறு நடந்து முடிந்த "ஈரோட்டில் லயன் 40" அதகளத்தினில் அந்த உண்மையை yet again உணர்ந்திட முடிந்துள்ளது !!
விழாவுக்கு ஒன்னரை மாதங்களுக்கு முன்பிலிருந்தே துவங்கிய முஸ்தீபுகள் - நாட்கள் நெருங்க நெருங்க ஒரு fever pitch-க்கு மாற்றம் கண்டதை நானும் சரி, டீம் ஈரோடும் சரி - உணர்ந்திருந்தோம் ! அந்தத் தன்னிகரில்லா தன்னார்வலர் டீம் + குறும்படத்தினில் தெறிக்க விட்டிருந்த நவரச நண்பர்கள், கடைசி வாரத்தினில் தூக்கங்களையும் சரி, தங்களின் சொந்த ஜோலிகளையும் சரி, முழுசுமாய் தொலைத்து விட்டு, தம் வீட்டு விசேஷம் ஜொலித்திட வேணுமே என்ற அக்கறையில் ஓடோ ஓடென்று ஓடிக்கொண்டிருந்த அழகையெல்லாம் வார்த்தைகளுக்குள் அடக்குவது - (ஒரிஜினல்) கவிஞர்களுக்கே சவால் விட்டிருக்கும் !! எங்கென்று ஆரம்பிப்பது ? எதை சிலாகிப்பது ? எதையெதையெல்லாம் எண்ணிப் புளகாங்கிதம் கொள்வது ? மண்டைக்குள் இன்னமுமே அலையடிக்கும் ஓராயிரம் சந்தோஷக் கீற்றுகளை எவ்விதம் வரிசைப்படுத்துவது ? - சத்தியமாய் I have no clue !!
**ஒரு பெரிய பொட்டி நிறைய சிறுதானிய வகை பிஸ்கெட்கள் (ஸ்ரீபாபு சார் - டேஸ்ட் ஆஹா-ஓஹோ ரகம் !!) ; பாட்டில் நிறைய துளியும் கலப்படமில்லா அசல் மலைத் தேன் ; ப்ளஸ் இன்னும் என்னென்னவோ உசத்தியான அசல் spices !! அம்புட்டையும் நீட்டாக பேக் பண்ணி, அதை என்னைத் தூக்கக் கூட அனுமதியாமல் என் ரூம் வரைக்கும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன அன்பை முதற்புள்ளியாக்குவதா ?
**விழா அரங்கில் நுழைந்த நொடி முதலாய், முகம் முழுக்க மகிழ்வோடு என்னை வரவேற்று, "தோள் இப்போ எப்படியுள்ளது ?" என்று ஆள் மாற்றி ஆள் நலம் விசாரித்த வாஞ்சையை ஆராதிப்பதா ?
**அன்றைய பொழுதினில் எடுக்கப்பட்ட எண்ணற்ற போட்டோக்களிலும் - "கிட்டக்க நின்றால் போதாது - என் தோளில் கை போடுங்க சார் !" என்று உரிமையோடு கோரிய நண்பர்களின் அன்பை சிலாகிப்பதா ?
**மதிய உணவு இடைவேளையின் போது வெளியே போய்விட்டுத் திரும்பிய நொடியில் வாங்கியாந்திருந்த சாக்லேட் பர்பியை எனக்கும், ஜூனியருக்கும் தந்திட்ட அன்பை குறிப்பிடுவதா ?
**'உடல்நலம் சரியில்லை' என்பது அப்பட்டமாய்த் தெரிந்த போதிலுமே, முந்தைய இரவு 8 மணிக்கு விழா அரங்கினில் ஆஜராகி, மறுநாள் மாலை ஊர் திரும்பிடும் வரையிலும், தரப்பட்ட அத்தினி வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த நம்ம மகளிரணித் தலைவிக்கு ஒரு "ஓ" போடுவதா ?
**அல்லது, கல்லூரி துவங்கி விட்டிருக்கும் சூழலிலும், ஒரு நாள் லீவைப் போட்டு விட்டு நமது விழாவின் ஏற்பாடுகளுக்கென ஆஜராகிய நமது பிள்ளைகள் மனோஜ் + காயத்ரியின் அர்ப்பணிப்பை எண்ணி அகம் மகிழ்வதா ?
**இல்லாங்காட்டி, புத்தம் புது ரோஜா மலராட்டம்,அப்பாவுடன் காலையிலேயே அரங்கில் ஆஜராகி, வீடியோ நேரலை ஒளிபரப்புக்கு இயன்ற ஒத்தாசைகளையெல்லாம் செய்து வந்த அந்த சுட்டிக் குழந்தையை உச்சி முகர்வதா ? (கோவை பிரகாஷ் சார் - கண்ணம்மாவுக்கு சுற்றிப் போடச்சொல்லுங்கள் !!)
**அன்றைய பொழுதினை நம்மோடு கழித்திட, எங்கெங்கிருந்தெல்லாமோ, ஏதேதோ பல்டிகளெல்லாம் அடித்து வந்து சேர்ந்திருந்த நண்பர்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குவதா ?
**கேடயங்கள் ; நினைவுப் பரிசுகள் ; tokens of love என்று அமர்க்களப்படுத்திய உங்களின் உள்ளன்பை எண்ணி நெகிழ்வதா ?
Phewwwwwwwww !!! சத்தியமாய் ஆஸ்டெரிக்ஸ் கதைகளைக் கூட தமிழில் மொழிபெயர்த்து விடலாமுங்க - ஆனால் உங்கள் நேசங்களின் வெளிப்பாடுகளைப் பட்டியல் போடுவதென்பது அதைவிடவும் சிரமக்காரியம் !
தி TEAM ERODE !!!!!!!!!
நண்பர் ஸ்டாலினில் துவங்கி, இந்த விழாவின் ஏற்பாடுகளுக்கென literally ராப்பகலாய் முட்டி மோதிய டீம் ஈரோட்டின் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் நாம் ஒற்றை ரூபாய் சன்மானம் தருவதாய் இருந்தால் கூட, இன்றைக்கு அவர்களுக்கு கோடி ரூபாய் கடன்பட்டிருப்போம் !! உழைப்பென்றால் - சொல்லி மாளா அசாத்திய உழைப்பு ! நான் இங்கே சிவகாசியில் சொகுசாய் குந்தியபடிக்கே - "ஆஅ...இங்கே பூஸ்....ரைட்லே பூசுங்க...ஆங்...லெப்ட்ல பூசுங்க !' என்று கவுண்டராட்டம் நெளித்துக் கொண்டே ரோசனைகளை மட்டும் அள்ளி வீசிக் கொண்டிருக்க, அங்கோ ஈரோட்டின் வீதிகளை டீம் ஈரோடு அளந்து கொண்டிருந்தது !! தங்கும் அறைகளின் ஏற்பாடுகளுக்கென குறைந்த பட்சமாய் எட்டுப் பத்து ஹோட்டல்களுக்கு நடை போட்டிருப்பார்கள் !! கேட்டரிங் ஏற்பாடுகளுக்கென ஏறி இறங்கிய உணவகங்களைக் கணக்கில் கொண்டால், ஒரு ஈரோடு Food Directory போட்டு விடலாம் !! வாட்டர் பாட்டில்களுக்கு அலைச்சல் ; வடையா - பஜ்ஜியா -சமோசாவா ? என்ற தேடலுக்கொரு அலைச்சல் !! கோப்பைகள், மெடல்கள் மாத்திரமன்றி, அவற்றினுள் பொறிக்க வேண்டிய பெயர்ஸ் + போட்டோஸ் ஒருங்கிணைப்பென்பது இன்னொரு அசாத்தியப் பணி !! And அந்த முயற்சிகளில் உறுதுணையாய் இருந்தவரோ ஈரோட்டில் பிரம்மாண்டமாய் டிஜிட்டல் பிரின்டிங் செய்து வரும் வாசக நண்பர் !! நாமடிக்கும் ராக்கூத்துக்களுக்கு இம்மியும் முகம் சுளிக்காது அத்தனைக்கும் இசைவு சொன்னார் !!
அப்புறம் அரங்கத்தில் செய்திட வேண்டிய ஏற்பாடுகளுக்கென இன்னொரு திக்கில் ஓட்டம் !! ரவுண்டு டேபிள் ; அதன் மேல் விரிக்க satin துணி ; மேடைக்கு focus lights ; சவுண்ட் effect-க்கென ஸ்பீக்கர்கள் ; இம்முறை அகிலால் உதவிட இயலா சூழல் என்பதால் போட்டோ + video எடுக்க ஆள் ஏற்பாடு - என்று அது தடதடத்து வந்தது ! இதில் கூத்தென்னவென்றால் அமைந்த போட்டோகிராபரோ, நமது தீவிர வாசகரும் போல !! போட்டோ எடுக்கும் போதே முகம் முழுக்க கொப்பளித்த உற்சாகம் ஒரு பக்கமெனில், கிடைத்த சந்தர்ப்பத்தில் என்னிடம் வந்து தனது காமிக்ஸ் ஆர்வத்தைப் பற்றியும் ஒப்பித்து விட்டுச் சென்றார் ! ரூம்கள் போட்டாச்சு ; ஆனால் யார்-யாருக்கு எங்கே ? என்ற பொறுப்பினை அடுத்து எடுத்துக் கொண்டனர் நண்பர்கள் !! அத்தனை பேருக்குமே முன்கூட்டியே தகவல் தெரிவித்து, துளியும் இடரின்றி check in செய்திட ஏற்பாடுகளை துளியும் குழப்பமின்றிப் பார்த்துக் கொண்டார்கள் ! அப்புறம் மாடஸ்டி, ஸ்பைடர் & லக்கி லுக் கட்-அவுட் செய்திடும் பொறுப்பை கோவையில் உள்ளதொரு தயாரிப்பாளரிடம் தந்து விட்டு, அதனையும் co-ordinate செய்து கொண்டார்கள் நண்பர்கள் !! பலூன் தோரணத்துக்கு ஆள் ஏற்பாடு ; ஐஸ்க்ரீமுக்கு ஏற்பாடு ; பீடாவுக்கு ஏற்பாடு - பிறந்தநாள் கேக்குக்கு ஆர்டர் ; பந்தியில் பரிமாற சுவீட்டுக்கான ஆர்டர் - என ஒரு கல்யாண வீட்டுக்கு இம்மியும் குறைச்சலில்லா அலைச்சல் ! ஊரில் இருந்தபடிக்கே ரெண்டு நாட்களுக்கொரு தபா ராவின் பாதிப் பொழுதுக்கு ஸ்டாலின் சாரும், நானும் போனில் பேசிக் கொண்டே இருந்தோம் ; yet பணிகள் மலையாய் மிரட்டுவதாகவே எனக்குப் பட்டது ! In fact - இத்தனை சிரமங்களை நண்பர்களின் சிரங்களில் சுமத்தி வருகிறோமே - இதெல்லாம் தேவை தானா ? என்ற எண்ணம் எனக்குள் சுழற்றியடிக்கத் துவங்கியது ! நாலு நாளாய் உச்சா போகாத வானரமாட்டம் 'உர்ர்ர்ர்' என்றே ஆபீசில் கடைசி வாரத்தின் முழுமைக்கும் திரிந்து கொண்டிருந்தேன் !!
தேவையான பேனர்கள் ; டிஜிட்டல் பிரிண்ட்ஸ் ; டிசைன் தயாரிப்புகள் ; அப்புறம் ஓவியக்கண்காட்சிக்கான படங்கள், மாண்ட்ரேக் புக்ஸ் ; நண்பர்களுக்கு gift bags என நம் தரப்பிலிருந்து வந்திட வேண்டிய ஐட்டங்களையெல்லாம் வெள்ளி இரவு ரெடி பண்ணிவிட்டு "லாரிக்கு அனுப்பி விடுங்கள்" என்றபடிக்கே வீட்டுக்குப் போனால் - பின்னாடியே இடியாய் சேதி வந்தது "நாளைக்கு (சனிக்கிழமை ஈரோட்டில் லாரி ஷெட் லேதாம் சார் ; தீரன் சின்னமலை நினைவு தினம் + ஆடிப் பெருக்கு என்பதால் விடுமுறை ! ஞாயிறும் நஹி !" என்று !! கிழிஞ்சது போ - என்றபடிக்கே ஆபீசுக்கு திரும்பவும் ஓடிப் போய் திருப்பூர் செல்லும் தினசரி பார்சல் சர்வீஸில் பேசினோம் ! "காலங்கார்த்தாலே ஆறரை மணி சுமாருக்கு ஈரோட்டை கடக்கும் போது பார்சல்களை போட்டு விட்டுப் போகலாம் ; அவ்வளவு தான் செய்ய முடியும் !!" என்றார்கள் ! அதற்கும் நண்பர்கள் சளைக்கவில்லை ; அதிகாலையிலேயே அரங்கு வாசலில் ஆஜராகி பண்டல்களை பத்திரமாய் வாங்கி வைத்து விட்டனர் !
சனி காலையில் நானும் ஈரோட்டுக்கு சென்றிறங்க, காலையே கல்யாண வீட்டு feel வந்து விட்டது - ஸ்டாலின் சாரின் இல்லத்தில் டிபனுக்கு நண்பர்களோடு குழுமிய போதே !! யார் -யார் எந்தெந்தப் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதென்ற final call ; நிறைய discussions என்றதன் பின்னே காத்திருந்த இறுதிக் கட்டப் பணிகளை நிறைவு செய்ய ஆளாளுக்கு ஒரு திக்கில் கிளம்பிப் போயினர் ! மாலை ஒரு ஐந்து மணிவாக்கில் எனது ரூமிலிருந்து ரோட்டை தாண்டி மறுபக்கமிருந்த அரங்கிற்குப் போனால் - ஸ்டாலின்ஜி + கோவை நண்பர் பிரகாஷ் மாத்திரமே அங்கிருந்தனர் - "பே" என காட்சி தந்த அரங்கினில் !! கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராய் நண்பர்கள் வரவும், அடுத்தடுத்த வேலைக்கென புறப்படவுமாய் இருக்க, நான் வாய் பார்த்தபடிக்கே இருந்தேன் ! இரவு எட்டுவாக்கில் சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அங்கிளும் வந்த நமது காரிலேயே ரவுண்டு பன்களும் வந்திறங்க, அவற்றை உள்ளே அடுக்கி விட்டு, நண்பர்களிடம் விடைபெற்று விட்டு ரூமுக்குக் கிளம்பினேன் ! நான் புறப்பட்ட போதோ அரங்கம் ரணகளமாய்க் கிடந்தது ; 'ஆத்தீ...பாக்கியிருக்கிற வேலைகளை ராவோடு ராவா முடிக்க பெரும் தேவன் ஓடின் நம்மவர்களுக்கு எக்ஸ்ட்ராவாக நாலு கைகளைத் தந்தால் தானுண்டு !!' என்ற எண்ணமே எனக்குள் !! அதிகாலை ரயிலில் வந்திறங்கிய ஜூனியர் எடிட்டருடன் காலையில் ஒன்பதே காலுக்கு அரங்கினுள் நுழைந்தால் - phewwwwww ; ஒரு மாய தேவதை தனது மந்திரக்கோலின் ஒற்றை வீச்சில் சகலத்தையும் அழகாக்கியது போலொரு பிரமையே எழுந்தது எனக்கு ! ஒன்பதடி உசர பேனர்கள் நான்கிலும் 'தல' டெக்ஸ் ; வேதாளர் ' ஆர்ச்சி & XIII மிரட்டிக் கொண்டிருந்தனர் ! அவற்றை அந்த ஒசரத்தில் எப்படித்தான் கட்டினார்களோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! மேஜைகள் அனைத்தும் கெத்தாய் காட்சி தர, அவற்றின் மீது நமது லேபிள்கள் போடப்பட்ட தண்ணீர் பாட்டில்களும், டிஜிட்டல் பிரிண்டவுட் அட்டைகளும் ஒய்யாரமாய் குந்தியிருந்தன ! ஓவியக் கண்காட்சிக்கும் சகலமும் ரெடியாக இருந்தது ! வாய் பிளக்கும் வேலை மட்டுமே எனக்கு பாக்கியிருக்க, டீம் ஈரோடு - டீம் பாகுபலியாய் எனக்குக் காட்சியளித்தனர் !!! Awesome job team - stunningly amazing !!! நீங்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனையானது தான் இந்தாண்டின் விழா வெற்றியின் முதுகெலும்பே !!! தலைவணங்குகிறேன் !!!! பெருமிதம் கொள்கிறேன் !! கடன்பட்டிருக்கும் குறுகுறுப்பையும் உணர்ந்து நிற்கின்றேன் !!
The நவரசத் திலகங்கள் !!
அன்றைய தினத்தின் highlight நம்ம நவரச நாயக / நாயகியரின் குறும்படமே என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திருக்க இயலாது ! கருங்கல்பாளையத்தின் தெருக்களிலும், வீதிகளிலும் ஓட்டமெடுத்து லூட்டி பண்ணியிருக்கும் Alone Star-ல் துவங்கி, அவரை வெளுத்தெடுக்கும் ரோல்களில் பின்னிப் பெடலெடுத்த அத்தனை நண்பர்களும் ; கேமியோ ரோலில் அசல்தேசத்துக்காரும் ; டாக்டரம்மா சமுத்திர இசைக்கருவி ; காயத்ரி - என அம்புட்டுப் பேருமே மெர்சலூட்டியிருந்தனர் !! கொஞ்சமே கொஞ்சமாய் வாய்ஸ் மட்டும் இன்னும் தெளிவாய் அமைந்திருப்பின், இதன் தாக்கம் இன்னமுமே பிரமிப்பூட்டியிருக்கும் என்பதில் no doubts !! இதற்கான ஷூட்டிங் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே சாத்தியமாகி இருக்க , டப்பிங் செய்வதெல்லாம் இறுதி நிமிடம் வரை நீண்டு செல்ல, மனோஜின் எடிட்டிங் + தொழில்நுட்ப லாவகத்தில், சகலமும் balance ஆகி - ஞாயிறு காலையில் பத்தரை மணிக்கு all ready என்றாகியிருந்தது !! நல்லாவே அவகாசம் தந்து, இன்னும் சிறப்பான equipment சகிதம் படப்பிடிப்பை (!!!) நடத்திட இயன்றிடும் பட்சத்தில், அடுத்த தபா நம்மவர்கள் அடிக்கக்கூடிய சிக்ஸரானது ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கும் ரகமாக இருக்கும் என்பதில் இம்மியும் ஐயங்கள் வேண்டியிராது ! Absolutely fantastic show all !! எழுந்து நின்று அன்றைக்கே கைதட்டியிருக்க வேண்டும் கண்டு ரசித்த நாங்கள் அனைவரும் !! And என்னை இன்னமும் மண்டைக்குள் குடைந்து தள்ளிக் கொண்டேயிருக்கும் ஒரே சமாச்சாரமானது - குறும்படம் ஓடி முடிந்த நொடியினில் அதன் நவரசத் திலகங்களை, அவர்களின் இல்லத்தரசிகளோடு மேடையேற்றி கவுரவிக்க தவறி விட்டோமே என்ற ஆதங்கம் தான் !! Sorry சார்ஸ் - ப்ரோக்ராம் ஆரம்பித்ததே ரொம்ப லேட்டாக என்பதில் மண்டை கொஞ்சம் நிதானத்தில் இருந்திருக்கவில்லை ! தவிர, துவக்கத்தில் விருந்தினர் எண்ணிக்கை மிதமாகவே இருந்திட்டதால் - 'ஆஹா..சாப்பாடு ஏகமாய் விரயமாகிப் போகுமே !' என்ற நெருடலும் மனதை கவ்விக்கொண்டிருந்தது ! But நேரம் போகப்போக அரங்கம் நிறைந்ததைப் பார்த்த போது மனம் சமனம் கண்டது !! 236 பேர் - அன்றைக்கு நம்மை தம் வருகைகளால் சிறப்பித்தோர் !! சாத்தியமாகிடும் அடுத்த சந்திப்பினில் நவரசத் திலகங்கள் அனைவருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட் தந்திட மறக்க மாட்டேன் !! Take a bow all !!!!!
ஆத்திங் the உரை !!!
அன்றைய திட்டமிடலின்படி காலை ஒன்பதரைக்கே துவங்கியிருக்கும் பட்சத்தில் பன்னிரெண்டரைவாக்கில், மைக் என் கைகளுக்கு வந்திருக்க வேண்டும் & ஒரு 30 நிமிடங்கள் ஆத்தோ ஆத்தென்று நான் ஆத்தியிருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு லன்ச் மேளா துவங்கியிருக்க வேணும் ! ஆனால் ஆடி அமாவாசை என்பதால் விருந்தினர் வருகைகளில் தாமதம் என்ற போது, எல்லாமே got pushed back ! So அப்பா ரொம்பச் சுருக்கமாகவும், கருணையானந்தம் அங்கிள் சுருக்கமாகவும் பேசி முடிக்கும் போதே மணி 1-35 ஆகியிருந்தது ! 'சரி, ரைட்டு - ரெண்டு மணிக்கெல்லாம் மங்களம் பாடிப்புட்டு மக்களை சாப்பிடப் போக விடணும் !' என்பதே எனது தலைக்குள் மேடையேறும் போது ஓடியது ! ஆனால் ஒரு உரையினை முன்கூட்டியே தயார் செய்திடாது, ஊர் சுற்றும் கழுதையாட்டம் அந்த நொடியினில் சிந்தைகள் ஓடும் திக்கிலெல்லாம் சொற்பொழிவை இட்டுச் செல்வதன் flipside என்னவென்பதை மேடையிலிருந்து கீழிறங்கிய போது தான் உணர்ந்தேன் - simply becos மொத்தமாய் 56 நிமிடங்களுக்கு எனது உரை நீண்டிருக்கிறது என்பதை கடிகாரம் சுட்டிக் காட்டியது !! Uffffffff !! மேடை மீது மைக்கைப் பிடித்து நின்றிருந்த சமயத்தில் சத்தியமாய் நேரத்தின் ஓட்டம் எனக்குள் register ஆகிடவே இல்லை folks !! இயன்றமட்டுக்கு ஒரு கோர்வையாய் பேசிட முற்பட்ட போது, one thing led to the other & கொஞ்ச நேரத்துக்குப் பின்னெல்லாம் உரை சுத்தமாய் எனது கட்டுப்பாட்டில் இல்லை - மாறாக autopilot mode -ல் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது - என்னையும் தரதரவென இழுத்துக் கொண்டே !!
ஆயுசில் இத்தனை நீளத்துக்கு நான் பேசியது இதுவே முதல் தபா & பேசும் போது emotional ஆனதுமே இது தான் முதல்வாட்டி ! எவ்வளவோ முயன்றும் தாத்தாவைப் பற்றிப் பேசத் துவங்கிய நொடியில் தொண்டை அடைப்பதையும், கண்கள் லைட்டாக பனிப்பதையும் தவிர்க்கவே இயலவில்லை ! நிச்சயமாய் அவரவருக்கு தத்தம் வீட்டோர் ரொம்பவே ஸ்பெஷல் தான் ; so எனது உணர்வுகளை புரிந்து கொள்ள யாருக்குமே இடரிருந்திராது தான் ! But தாத்தா சார்ந்த எனது நினைவுகள் ஒரு மிடறு தூக்கலானது becos - (பேரப்) பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தவர் அவர் ! இது நான் கேட்டதொரு நிகழ்வு - அதனை இங்கே narrate செய்வதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன் :
அம்மா தான் தாத்தாவுக்கு ஒரே பிள்ளை ; so அம்மாவுக்கு கல்யாணம் ஆன நாள் முதலாகவே தாத்தா & பாட்டி கிட்டக்கவே வீடு பிடித்து, குடியிருந்து வந்தனராம். 1962 - எனது மூத்த சகோதரி பிறந்த வருஷம் ! முதல் பேத்தி என்பதால் தாத்தாவுக்கு செம வாஞ்சை ! ஒரு வயசுப் பிள்ளையாய் அக்கா இருக்கும் சமயம், சிவகாசியிலிருந்து மதுரைக்கு ஏதோவொரு திருமணத்துக்காக எல்லோரும் பயணமாகியிருக்கின்றனர் - பாசஞ்சர் ரயிலில் ! வெறும் 72 கிலோமீட்டர் தூரத்தை கடக்க அது 3 மணி நேரங்கள் எடுக்கும் போலும் ! போகும் வழியில் அக்காவோ செம அழுகையாம் !! தொட்டில் இல்லாமல் தூங்க மாட்டேனென்று பயங்கர அடம் !! என்ன செய்வதென்று தெரியாமல் கள்ளிக்குடி எனும் அடுத்த சிறுநகர ஸ்டாப்பில் இறங்கி விட்டிருக்கிறார்கள் ! கொஞ்ச நேரத்தில் அக்கா மூச்சடக்கி அழ ஆரம்பிக்க, பதட்டத்தில் அங்கிருந்த தம்மாத்துண்டு ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்குள் புகுந்து எங்காச்சும் தொட்டில் கட்ட வாய்ப்பிருக்குமா ? என்று தாத்தா பார்த்திருக்கிறார் ! ஊஹூம்....அங்கெல்லாம் உத்திரத்தில் தொட்டில் கோர்க்க வளையத்துக்கு என்ன வேலை இருக்கப் போகிறது ? So வேற வழி ஏதும் புலப்படாது போக, அங்கிருந்த ஜன்னல் கம்பியை ஒரு கையால் கெட்டியாய் தாத்தா பிடித்துக் கொள்ள, தாத்தாவின் கரத்திலேயே தணிவாயொரு தொட்டிலைக் கட்டி, அக்காவை அதற்குள் படுக்கப் போட்டு தூங்கப் பண்ணியிருக்கிறார்கள் !! ஒரு மணி நேரமோ, ஒன்னரை மணி நேரமோ, தூங்கி முழிக்கும் வரைக்கும் ஜன்னல் கம்பியைப் பிடித்த கையை அசைக்காமல் சிலையாய் நின்றிருந்தாராம் தாத்தா !! And அக்கா சின்ன வயசில் நல்ல புஷ்டி !!!
பேரப் பிள்ளைகளுக்கென எதையும் செய்யலாமென்ற எண்ணம் கொண்ட தாத்தாவைப் பற்றி, என்னோடு பிறந்த சகோதரிகளுக்கும், சகோதரனுக்கும் நிச்சயமாய் இது போலான ஒரு நூறு நிறைவான அனுபவங்கள் இருக்கும் தான் ! But பாட்டி இயற்கை எய்திய 1984 முதலாய், தனது கடைசிப் 13 ஆண்டுகளில் தாத்தா maximum time செலவிட்டது என்னோடு தான் !! அதனால் தான் தாத்தா பற்றி மேடையில் பேச முற்பட்ட போதே உள்ளுக்குள் என்னவோ செய்தது !! Sorry guys !!
And sorry too - உங்களின் லன்ச் டைம்களை எனது லன்ச் டைம் போல கோக்கு மாக்கி வைத்து விட்டதற்கு !! To your credit - நீண்டு கொண்டே போன எனது பேச்சின் மத்தியில் உங்களில் யாருமே முகம் சுளிக்கவுமில்லை & எழுந்து போகவுமில்லை !! அதற்கு மட்டுமே உங்களுக்கு ஓராயிரம் ஸ்பெஷல் தேங்க்ஸ் !! Maybe கொஞ்சமாய் எழுந்து லன்ச் ஹாலுக்கு நடையை கட்ட ஆரம்பித்திருந்தால், நிச்சயமாய் அங்கேயே ப்ரேக்கைப் போட்டு வண்டியை இழுத்து நிறுத்தியிருப்பேன் தான் !! And ஆத்தோ ஆத்தென்ற படலத்தை முடித்து விட்டு கீழே இறங்கிய போது, ஈரமான விழிகளோடு என் கைகளைப் பற்றிக் கொண்ட நண்பர்களும் இருந்தனர் ! இதில் எனது மாளா வியப்பென்னவெனில், நானெல்லாம் ஏதோ மிட்டா, மிராசுப் பரம்பரையில் வந்தவனென்று அதிகம் interact செய்திட வாய்ப்புக் கிட்டியிரா நண்பர்கள் சிலர் நினைத்திருந்தது தான் !! Not at all folks ....வசதியாய் வளர்ந்து, சகலத்தையும் தொலைத்து விட்ட குடும்பத்திலிருந்து, உள்ளங்கை ரேகைகளை மட்டுமே கையிருப்பாய்க் கொண்டு பிள்ளையார் சுழி போட்டவன் நான் !! பள்ளியின் டாப் மாணவன் ; ஆனால் ப்ளஸ் டூவில் கடைசி மாத fees கட்ட ரூ.60 கையில் லேது ; அதையுமே ஒரு கொட்டும் மழை இரவில் தாத்தாவிடம் போய் வாங்கி கட்டி விட்டு, கடைசியாய் ஹால் டிக்கெட் வாங்கிய பிருகஸ்பதியும் நானே ! பொதுவாக நம்மில் பலருக்கும் வாழ்க்கைப் பாதைகள் சுலபமானவைகளாக இருப்பதில்லை தான் என்பதால், நொய்யு நொய்யென்று அந்த நாட்களின் அழுகாச்சிகளை highlight செய்திட நான் விழைந்திடுவதில்லை !
எது எப்படியோ - ஒரு மைல்கல் தருணத்தில் தத்து-பித்தென்று உளறி வைக்காமல் வண்டியை ஓட்ட முடிந்தமைக்கு பெரும் தேவன் மனிடோவுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும் ! In fact - எனது உரையில் நான் நன்றி சொல்ல மறந்திருந்தது இருவருக்கு ! முதலாவது - ஒற்றை நபரன்றி, ஒரு அணிக்கே !! நமது மீள்வருகை நாட்களில் நமக்கு சமூக வலைத்தளங்களில் இம்மியும் பரிச்சயம் கிடையாது ; சென்னை, மற்றும் இதர பெருநகரப் புத்தக விழாக்கள் எந்தத் திக்கில் அரங்கேறிடும் என்பது கூடத் தெரியாது ! நெட்டில் நம் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, நமது மீள்வருகையினை இந்த வட்டத்துக்குச் சொல்ல முனைந்த bloggers ; துவக்க நாட்களில் விற்பனைகளுக்கு உதவிய நண்பர்கள் - என்று அந்த அணியில் நிறையப் பேர் உண்டு ! So அவர்கள் அனைவருக்குமே ஒரு நன்றி ! Last but not the least - பெரும் தேவன் மனிடோவுக்கு !!
நானெல்லாம் ஒரு காமிக்ஸ் எடிட்டர் ஆவேனென்று எண்ணியதே கிடையாது ! ஒரு சிறார் பத்திரிகை துவக்கி, வாண்டுமாமா ரேஞ்சுக்கு "அன்புக் குழந்தைகளே !!" என்று உங்களை விழித்திருக்க வேண்டியவன் ! நான் டில்லிக்கு அனுப்பிய "டிங்-டாங்" பெயர் பதிவு விண்ணப்பத்தினை ஏதோவொரு மஹானுபாவ குமாஸ்தாவின் ரூபத்தில் கிடப்பில் போடச் செய்து, என்னை லயன் காமிக்ஸ் முதுகில் உப்புமூட்டை ஏற்றிடத் தீர்மானித்தவரே மனிடோ தானே ?! மாடஸ்டி துவக்கத்தில் மொக்கை போட்ட நாட்களில் அந்த முத்து காமிக்ஸ் பீரோவினில் ஸ்பைடராரை எனக்காகக் காத்திருக்க அவர் திட்டமிட்டிருக்காவிடின், 1984 டிசம்பர் வரைக்கும் கூட இந்த முழியாங்கண்ணனின் பதிப்புலக ஜாகஜம் தாக்குப் பிடித்திராது ! அதே போல Frankfurt புத்தக விழாவில், பம்பை மண்டையனாய் நான் போய் நின்ற முதல் நாளில், "போ..போ..அடுத்த வருஷம் பாக்க ட்ரை பண்றோம் !"என துரத்திவிட்ட மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தைப் போலவே பிரான்க்கோ-பெல்ஜிய நிறுவனங்களும் என்னை உதாசீனப்படுத்தியிருந்தால் - "ச்சீ..ச்சீ..இவய்ங்க கதைகளே சரியில்ல ! உவ்வே...யாருக்கு வேணும் இதுலாம் ?" என்றொரு கதையைக் கட்டிய கையோடு ஊர் திரும்பியிருப்பேன் ! ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் காக்கும் கரங்களுடன் நின்ற பெரும் தேவன் மனிடோவின் கருணையின்றி மட்டும் போயிருந்தால், இன்றைக்கு எனது நண்பர்களின் பட்டாசு ஆலைகளில் ஏதேனும் ஒன்றில், கணக்குப்பிள்ளையாய் பணியாற்றி விட்டு, ரிட்டயர்மெண்ட்டை எதிர்நோக்கிக் காத்திருந்திருப்பேன் -இந்நேரத்துக்கு !! So ஒரு கோடி நன்றிகள் படைத்தவருக்கு !!
The விருந்து :
போன வருஷத்து சாப்பாட்டு சொதப்பலுக்குப் பின்பாய் நாங்கள் அனைவருமே செம உஷாராய் இருந்தோம் - இம்முறையாச்சும் பசியாறும் படலங்களை சுவையானதாக்கிட ! மொத்தம் 4 கேட்டரிங் க்ரூப்களில் விசாரித்தார்கள் நண்பர்கள் ! இல்லை போட்டு சோறு, சாம்பார்.கூட்டு,பொரியல் என்று திட்டமிட்டோம் ! But பந்தியொன்றுக்கு 75 பேர் அமர்ந்தால் கூட, நிச்சயம் மூன்றல்லது, நான்கு பந்திகள் தேவைப்படும் அனைவரும் உண்டு முடிக்க என்ற யதார்த்தம் உதைத்தது ! So buffet ; அல்லது ரயில்களில் வருவது போல பேக் பண்ணி வரும் பூவா என்பதை வலியுறுத்தினேன் நண்பர்களிடம் ! இறுதியில் buffet என தீர்மானமாகி, அப்பாலிக்கா மெனு ! அதுவும் final ஆகி, ரேட்டும் பேசி பணம் தந்த பிற்பாடும் எனக்கு உள்ளுக்குள் லைட்டாய் உடுக்கடித்துக் கொண்டே இருந்தது - 'சாப்பாடு அனைவருக்கும் சுகப்பட வேணுமே !!' என்று !! And நான் போட்ட மெகா மொக்கைக்குப் பின்பாய், மக்கள் இரண்டரை மணிக்கு கை நனைக்க வந்திருந்த நிலையில், சாப்பாடு மட்டும் சரியில்லாது போயிருந்தால் தூக்கிப் போட்டு மொத்தியிருப்பார்களென்று ஒரு beethi உள்ளுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது !! But ஆண்டவன் yet again கரை சேர்த்து விட்டார் - செம டக்கரான லன்ச் சகிதம் ! சிம்பிளான மெனு ; yet வயிறார அனைவரும் உண்ண, செம சுவையுடன் லன்ச் கிட்டியதால் அனைவரின் முகங்களிலும் ஒரு திருப்தி !! மூச்சே அப்போது தான் திரும்பியது பின்னணியில் இருந்தோர் அனைவருக்கும் !!
The அனுபவம் - ஒட்டுமொத்தமாய் !!
நிறைய தருணங்களில் முக்கிய முன்னேற்றங்கள் நிகழ்வது அகஸ்மாத்தாகவே என்பது எனது நம்பிக்கை ! பெருசாய் திட்டமிட்டெல்லாம் நமது இரண்டாம் இன்னிங்க்ஸை நாம் துவக்கியிருக்கவில்லை ! பெரிய ரோசனைகளுக்கு அப்புறமாயெல்லாம் ஈரோட்டில் வாசக சந்திப்புகளுக்கு அடிக்கோலிட்டிருக்கவில்லை ; they just happened !! அதே போல இம்முறையும் ஒரு பெரும் திட்டமிடலெல்லாம் இல்லாமலே அழகானதொரு முன்னேற்றத்துக்கு ரோடு போட்டிருக்கிறோம் என்றே படுகிறது ! 'குடும்பங்களோடு வரலாமே guys ?' என கேஷுவலாக போட்ட விதைக்கு பல நண்பர்கள் அட்டகாசமாய் இசைவு தெரிவித்திருக்க, அன்றைய தினத்தினில் கணிசமான மகளிர் எண்ணிக்கை மாத்திரமன்றி, குழந்தைகள் எண்ணிக்கையும் கண்ணில்பட்டது ! And பிள்ளைகள் மேடையேறியதும் ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே ! 'இந்த லூசுக அடிக்கிற கூத்தை மேலோட்டமா வேடிக்கை பார்த்துப்புட்டு திரும்புவோம் !' என எண்ணியிருக்கக் கூடிய இல்லத்தரசிகள் கூட, விழாவின் முழுமைக்கும் அரங்கினில் இருந்தது icing on a beautiful cake ! And விழாவின் இறுதியினில் மேடையேறி நினைவுப் பரிசுகளையும், மெடல்களையும் பெற்றுக் கொள்ள அவர்களுமே ஆஜரானதே அந்த நாளின் absolute highlight என்பேன் !! இனி வரும் காலங்களில், "யோவ்...நீர் கெளம்பி வர்றீரா - இல்லாங்காட்டி நான் முன்னே காமிக்ஸ் விழாவுக்குப் போகட்டுமா ?" என அவர்கள் வினவும் நாட்கள் புலராது போகாதென்றே படுகிறது !! சர்வ நிச்சயமாய் இனி வரும் சந்திப்புகள் மெய்யான குடும்ப விழாக்களாகவும் அமைந்திடுமென்று ஸ்டீலின் பட்சி சொல்கிறது !!
மாலையில் நண்பர்களின் தனித்திறமைகள் வெளிப்பாடு, டிராமா, கேள்வி-பதில் session ; கிரிக்கெட் கோப்பை வழங்கும் நிகழ்வு என நிகழ்ச்சி நிறைவு பெற்ற நேரம் வரைக்கும் 150 நண்பர்களுக்கு குறையாது காத்திருந்தது மனநிறைவினைத் தந்தது ! என்ன - கிரிக்கெட் போட்டிகளின் வீடியோ வராது போன சொதப்பல் ; கோப்பையினை, மெடல்களைப் பெற்றுக் கொள்ள கணிசமான போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாது போனது மாத்திரமே பிசிறடித்தது போலிருந்தது ! Anyways திருஷ்டிப்பொட்டு இல்லாது போனால் கண் பட்டுவிடுமல்லவா - so அந்தக் குறையுமே அதுக்கோசரமாச்சும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று எண்ணிக் கொண்டேன் !!
Overall, this was a day to savour for a lifetime !!!!
The Future :
ரைட்டு...லயனுக்கு இப்போ வயசு 40 ....இந்த வளர்ந்தமாடனுக்கு வயசு 57 ! What next ? என்பது பற்றியும் மேடையில் maybe பேசியிருக்க வேணுமோ - என்னமோ ?! But அந்த நொடியில் லயனின் பயணத்தைத் தாண்டி வேறெதுவும் பெருசாய் பேசுபொருளாகிட வேணுமென்றே எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கவில்லை !! நான்லாம் ஒரிஜினலாய் திட்டமிட்டது 58-ல் பாதி ரிட்டயர்மெண்ட் ; 60-ல் முழுசாய் என்பதே !! ஆனால் அந்தத் தருணமானது தொட்டு விடும் அண்மையிலிருக்கும் போது, 'ஆத்தீ...இப்போவே வூட்டுல குந்த நெனைச்சா வௌக்குமாத்தாலே சாத்தி பத்தி விட்ருவாளே !' என்ற டர் தலைதூக்காதில்லை ! So இந்த நொடியினில் ஸ்கூல் மேடையில் ஒப்பித்ததொரு இங்கிலீபீஷ் கவிதையின் வரிகள் தான் மண்டைக்குள் ஓடுகின்றன :
The woods are lovely, dark & deep..
But I have promises to keep..
And miles to go before I sleep...
And miles to go before I sleep..!
-Robert Frost-
நாம தான் கவிஞர் முத்துவிசய மேஜர் சுந்தர்ராஜனார் ஆச்சே - இதையும் நமக்கேற்றாற்போல மொழிபெயர்க்காது விட்ருவோமா ?
ஓய்வெனும் வனமோ ரம்யமாய் சபலமூட்டுது...!
ஆனால் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளோ ஒரு வண்டி கெடக்குது...!
இழுத்துப் பொத்திப் படுத்துறங்கும் நாள் புலர இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது...
......ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது !!
-கவிஞர் முத்துவிசயனார்-
Thanks a ton all - for all the love that you have given us this many years !!! இந்த அன்புக்குத் தொடர்ந்து அருகதையானவராய்த் திகழ்ந்திட, இயன்ற சகலத்தினையும் செய்திடுவோம் என்பது எங்களது ப்ராமிஸ் !! God be with us all !! சலோ - லயன் 50 நோக்கி !! வண்டிய உட்றா சம்முவம் !!
P.S : பாரிசில் Olympics அரங்கேறி வரும் வேளைதனில், இந்த விழா தந்துள்ள அசாத்திய உற்சாகத்தோடு ஒலிம்பிக்சின் motto-வை நினைவுகூர்ந்திட ஆசை எழுகிறது !! Citius ...Altius ...Fortius .....!!
Together Stronger....Higher...& Faster இந்தப் பயணத்தினைத் தொடர்ந்திடுவோம் all !!
P.P.S. : ஆங்...சொல்ல மறந்து போய்விட்டேன் : நம்மிடம் பெரும் எண்ணிக்கையில் உள்ள முந்தைய இதழ்களில் 24 டைட்டில்களை செலெக்ட் செய்து, மாணவர்களுக்கென ஒரு செம ஸ்பெஷல் விலையில் ஈரோட்டில் ஸ்டாலில் வைத்திருக்கிறோம் ! இனி தொடரவிருக்கும் எல்லா புத்தக விழாக்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்திடும் !!