Sunday, July 30, 2017

முதுகுக்கு மேஜைவிரிப்பு !!

நண்பர்களே,

வணக்கம். காட்சி # 1 :  நடுக்கூடத்தில் ஊஞ்சல்! புஷ்டியானதொரு செந்தில் சம்மணமிட்டு அந்த ஊஞ்சல் மேல்! அவர் முன்னாலோ ஒரு முக்கால் கிளாஸ் டீ! செந்திலாரின் முகத்திலோ தீவிர சிந்தனை ரேகைகள்! டீயை ஒரு நொடி உற்றுப் பார்க்க...மறு நொடி மோட்டு வளையை நோக்கிப் பார்வைகளை ஓட விட... தொடர்கிறது காட்சி ! காட்சி # 2 : நள்ளிரவைத் தாண்டிய ராப்பொழுது! சுமாரான புஷ்டியில் ஒரு ஆந்தைவிழியன் மாடிக்குப் போகும் ஏணிப்படிகளில்! ஆ.வி.யின் முன்னேயோ ஒரு கத்தைக் காகிதங்கள்! ”2018” என்று போட்டு என்னமோ கீச்சலாய் எழுதியிருக்கும் தாள்களை, கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் கோணங்களிலெல்லாம் டிசைன் டிசைனாய்  முறைத்துப் பார்க்க... அப்புறமாய் விட்டத்தை விட்டேந்தியாய் ரசிக்க... ”ஊஹும்...!” என்று மண்டையை ஆட்டிவிட்டு, பரபரவென்று அந்தக் காகிதத்தின் மேலே எதையோ அடித்துத் திருத்தி எழுத, ஆந்தைகளே அடங்கும் நேரம் வரைக்கும் தொடர்கிறது காட்சி!

முந்தையது ‘ஜென்டில்மேன்‘ திரைப்படத்திலிருந்து நமது ஆதர்ஷ கவுண்டரும், செந்திலும் பின்னியெடுத்த காமெடிக் காட்சியின் இரவல் எனில் – பிந்தையது கடந்த சில பின்னிரவுகளில் எங்கள் வீட்டில் அரங்கேறி வரும் காட்சி! As usual – it’s “that” time of the year guys! 2018-ன் அட்டவணைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் தான் வீட்டின் மூலை முடுக்குகளிலும், ரயில் நிலைய பெஞ்சுகளிலும், சிக்கும் பேப்பர்களையெல்லாம் எதையாவது எழுதி பார்ப்பதில் செலவிட்டு, அப்புறம் பந்து பந்தாய்ப் அவற்றைக் கசக்கித் தூக்கியெறிந்து புதுசு புதுசாய் "கூட்டணிக் கோட்பாடுகளை" முயற்சித்து வருகிறேன்! தலீவருக்குப் போட்டியாக பேப்பரைச் செலவிடும் இந்தப் பொழுதுகளின் முடிவில் கையிலொரு திட்டமிடல், இறுதியாக, அழகாய் தயாராக நின்ற போது நமது லியனார்டோ தாத்தாவின் முகத்தில் தெரியும் ஒளிவட்டம் மிளிர்வது போலொரு பீலிங் உள்ளுக்குள்! Of course – இது ரொம்பவே சீக்கிரம் அந்த அட்டவணையை உங்களோடு பகிர்ந்து கொள்ளவதற்கு ; ஆனால் நிச்சயமாய் 2018-ன் timetable ஒவ்வொரு ரசனை அணிக்கும் முகத்திலொரு புன்னகையை மலரச் செய்யுமென்ற நம்பிக்கை நிரம்பி வழிகிறது எனக்குள்! கொஞ்சமே கொஞ்சமான இறுதி டிங்கரிங்குகள் மட்டும் செய்திடுவதற்கு உங்களது அபிப்பிராயங்களை இரவல் வாங்கிடுவது நலமென்று நினைத்தேன்! So அதுவே இந்த ஞாயிறின் படலம்!

* நடப்பாண்டின் சந்தா A-வின் ஹைலைட்களே சிலபல புதுவரவுகள் தானென்பதில் நிச்சயம் சந்தேகம் லேது! ட்யுராங்கோ; Lady S என்ற இரு புத்தம்புது இறக்குமதிகள் + ‘ஜேசன் ப்ரைஸ்‘ எனும் சற்றே புது வரவு (இவரது துவக்க சாகஸம் 2016-ல் அல்லவா?) இணைந்திட்ட போது சந்தா A-வின் மெருகு ஒரு படி தூக்கலாய் எனக்குத் தோன்றியது! Of course – பழைய பரீட்சைப் பேப்பர்களை வாங்கி பைண்டிங் செய்து, அதன் மீது ‘லயன் காமிக்ஸ்‘ என்று போட்டு வைத்தாலே அதை எனக்கு ரசிக்கத் தோன்றும் தான்; எந்தக் காக்காய் தன் குஞ்சை ‘கறுப்பா‘ என்று முத்திரை குத்தியிருக்கிறது? ஆகையால் என் பார்வையைத் தாண்டியதொரு கருத்துப் பகிரலும் இங்கு பிரயோஜனப்படுமென்று நினைத்தேன்! My question is: ஏற்கனவே ஒரு மினி கல்யாண வீட்டுப் பந்தி அளவிற்கு நாயகர்களும், நாயகியரும் நம் அணிவகுப்பில் முண்டிக் கொண்டு நிற்கும் போது – மேற்கொண்டு புது நாயக / நாயகியருக்கு சொற்ப காலத்திற்காவது no entry போடல் அவசியம் என்பீர்களா? அல்லது புதுசுகளே சுவாரஸ்யங்களை எகிறச் செய்திடும் காரணிகள் என்று கைதூக்குவீர்களா? நிதானமாய் சிந்தித்து உங்கள் பதில்கள் ப்ளீஸ்?

* ‘ஜேசன் ப்ரைஸ்‘ - வந்தார் ; வென்றார்! காதில் கொஞ்சமல்ல, ஒரு லோடு மலர்களை பட்டுவாடா செய்து விட்டுப் போயிருந்தாலுமே, இவர் எழுப்பிய தாக்கத்தின் அதிர்வலைகள் சமீப நாட்களுள் ஒரு செம ஸ்பெஷல் ரகமென்பேன்! அவரது கதைத் தொடரில், அந்த 3 ஆல்பங்களைத் தாண்டி புதுசாய் சரக்கு ஏதும் கிடையாதென்பதால் – அவரது தொகுதியில் ஆட்டோமேடிக்காக இடைத்தேர்தல் நடத்தும் அத்தியாவசியம் எழுகிறது! ஏற்கனவே கரை வேட்டி கட்டி நம்மோடு கைகோர்த்து உலவி வரும் நாயகர் யாரையேனும்  இந்தக் காலி slot-க்குப் பரிந்துரைப்பீர்களா? அல்லது கட்டாயமாய் இன்னொரு புது வரவுக்கேவா ? புது வரவே என்றால் – தரமான நாயகர் யாராக இருந்தாலும் ஓ.கே. தானா? அல்லது அந்த fantasy ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக இன்னொரு fantasy சுப்பையாவே இடம்பிடித்தல் தேவலாம் என்பீர்களா? A straight swap (or) anything that’s good ?

* சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார் ?  Please : ”வேதாளர்”; ”ரிப் கிர்பி”; ”காரிகன்” போன்ற பதில்கள் தற்போதைக்கு பாடத்திட்டத்திலேயே கிடையாது! அதனால் பார்வைகளை / சிந்தனைகளை கொஞ்சம் விசாலமாய் வீசியொரு சுவாரஸ்யமான பதில் தந்திடுங்களேன் – ப்ளீஸ்?

* சந்தா B: காத்திருப்பது Tex-ன் 70-வது ஆண்டு என்பதால் இதற்கென கௌபாய் ஆர்வலர்களிடம் நிறைய யோசனைகள் இருக்கலாம் தான்! காத்திருக்கும் ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது இது பற்றிப் பேசிடலாம் என்பதால் இப்போதைக்கு அந்தக் கேள்வியை மனதுக்குள் மாத்திரம் அசைபோடச் சொல்லி கோரிக்கையை முன்வைக்கிறேன் guys! ‘ஆயிரம் ரூபாய்க்கு ஒரே புக்; ரெண்டாயிரம் பக்கத்துக்கு ஒரே புக்‘ என்ற ரீதியிலான டெரர் பரிந்துரைகளின்றி – யதார்த்தத்தை ஒட்டிய திட்டமிடல்கள் பக்கமாய் சிந்தனைக் குதிரைகளை அனுப்புவோமே?

* சந்தா C – எனது favorite சந்தா ரகம் இதுவே என்பதில் சந்தேகமில்லை! ஆனால் இன்னமுமே இதுவொரு சகல தரப்பின் thumbsup பெற்ற universal ரசனையாக உருப்பெற்றிருக்கவில்லை தான்! So 2018-ல் சந்தா C வழமை போலத் தொடரும் ; ஆனால் கட்டாயச் சந்தாவாக இருந்திடாது! பிடித்தாலும், பிடிக்காது போனாலும் – கார்ட்டூன் சந்தாக்கள் உங்கள் தேர்வுதனில் நிச்சயம் இடம்பிடித்திடும் என நடப்பாண்டில் கண்டிப்புக் காட்டியதால் ஒரு முப்பது – நாற்பது சந்தாக்கள் miss ஆகியிருக்கக் கூடும் என்பது புரிகிறது ! அதே பிழையை இம்முறையும் செய்திட வேண்டாமென்று தீர்மானித்துள்ளேன்! ‘படித்தால் மகிழ்வோம்; பிடித்துப் படித்தால் ரொம்பவே மகிழ்வோம்; ஆனால் திணிக்க மாட்டோம்‘ என்பதே இனி நம் சிந்தனையாக இருந்திடும்! இந்தக் கார்ட்டூன் சந்தாவில் எனக்கான கேள்விகள் சில on the fence பார்ட்டிகள் சார்ந்தது!

* முதல் கேள்வி : நீலப் பொடியர்கள் ஸ்மர்ஃப்ஸ் சார்ந்தது! “அற்புதமானதொரு படைப்பு; எனக்குமே அப்படியொரு அழகான உலகிற்குள் போய் வந்த உணர்வு ஒவ்வொரு ஸ்மர்ஃப் கதையிலும் கிடைக்கிறது!” என்று சொல்லியுள்ள நண்பர்கள் கணிசம். அதே மூச்சில் – “ஏனோ சொல்லத் தெரியவில்லை; ஆனால் என்னால் இந்தத் தொடரோடு ஒன்றிட முடியவில்லையே?” என்ற மண்டைச் சொரிதல் சகித சம்பாஷணைகளுக்கும் நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்! கார்ட்டூன் சந்தாவின் ஒவ்வொரு பக்கமுமே உங்களுக்குப் பிசிறில்லா மகிழ்வைத் தந்திட வேண்டுமென விரும்புபவன் நான்; So அந்தச் சந்தாவில் இப்போதொரு முக்கிய அங்கமாய் இருந்து வரும் இந்தப் பொடியர் பட்டாளத்தைத் தொடரும் நாட்களில் நாம் எவ்விதம் கையாள்வது என்பதிலொரு ஊர்ஜிதம் இருந்தால் நல்லதென்று நினைக்கிறேன்! பொடியர்கள் – இதே போல தொடரலாமா? அல்லது  சற்றே slot-களைக் குறைவு பண்ணிட அவசியமாகுமா? 

* உப கேள்வி # 2 : மேலேயுள்ள வரிகளை அட்சர சுத்தமாய் நகல் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீலப்பொடியர்கள் “ஸ்மர்ஃப்” என்ற இடத்தில் “ரின்டின்கேன்” என்று மட்டும் மாற்றிக் கொள்ளுங்களேன்? இந்த 4 கால் ஞானசூன்யம் பலருக்கு வெல்லம் கலந்த செல்லம்; சிலருக்கு ‘ஙே‘ ரகம் என்பது இந்தாண்டினில் நமக்கு வந்துள்ள விமர்சனங்களும், மின்னஞ்சல்களும் சொல்லும் சேதி  ! ஒரு இலக்கில்லாது slapstick காமெடி போல் இந்தத் தொடருள்ளது என்பதே இது தொடர்பாய் வந்துள்ள புகார்களின் சாராம்சம் ! "நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ;அடுத்த தலைமுறைக்கு" என நான் நிறைய பில்டப் தரலாம் தான் ; ஆனால் நாளின் இறுதியில், காசு போட்டுப் புத்தகம் வாங்கும் நபருக்கு அந்தப் படைப்பு ஒரு நிறைவைத் தந்தாகவும் வேண்டும் தானே ? So – அந்த மாமூலான ஒற்றை slot-ல் இந்த நாலுகால் நாயகன் தொடர்வது பற்றிய உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்?

* சந்தா D பற்றிப் புதிதாய் என்ன கேட்கப் போகிறேன் - இந்த பால்யத்து நினைவுச் சின்னங்கள் சற்றே சுவாரஸ்யமாகத் தொடர்ந்திட ஏதாவது உபாயங்கள் மனதில் உள்ளனவா என்பதைத் தாண்டி ? சில காலமாகவே என் மனதில் இருப்பது - மும்மூர்த்திகள் கதைகளுக்கு fresh ஆகவொரு மொழியாக்கத்தை வழங்குவதே - என்பதில் ரகசியமில்லை தான்  !  நண்பர்கள் அணி பொறுப்பேற்றுக் கொள்வதாயிருப்பின் I am game for it ! ஆனால் “முதல் தமிழ் மாநாடு நடந்த வருஷத்தில், நான் வாசித்த மும்மூர்த்திகளின் கதையினில்  முனையளவு மாற்றம் இருந்தாலுமே முகச்சுளிப்பே மிஞ்சும்” என்றொரு நிலை அதற்கு பலனாகிடக் கூடாதென்பதே எனது அவா! அந்நாட்களது கதைகளுள் ஆரம்பத்து batch-ன் தமிழாக்கம் – அப்புசாமித் தாத்தாவைச் சீடை சாப்பிடச் சொன்னது போன்ற சங்கடத்தை இன்றைக்கு ஏற்படுத்துவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் ! “Nostalgia” என்றதொரு கூலிங் கிளாஸ் மட்டும் இல்லாமல் இன்றைய ரசனை அளவுகோல்களில், அன்றைய வரிகளை ஆழத்தியெடுத்தால் – விளைவுகள் செம ரகளையாக இருக்குமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை! எனது கவலையெல்லாம் அந்தக் கண்ணாடி இல்லாது முதல் தடவையாக இந்தக் கதைகளை வாசிக்கும் ஒரு இன்றைய யுகத்து வாசகர் – ”இதென்னடா சாமி  பாணி?” என்று மிரண்டு விடக் கூடாதென்பதே! ”சிறைப்பறவைகள்”; ”தங்கவிரல் மர்மம்” போன்ற 1975 / 76 + ஆண்டுகளில் வெளிவந்த கதைகளுள் நமது கருணையானந்தம் அவர்களின் பணிகளும் ஒரு அங்கம் வகிப்பதால் அவற்றை நோண்டிப் பார்க்க அவசியமிராது! அவற்றிற்கு முன்பான ஆண்டுகளில் வெளிவந்த சுமாரான எழுத்து நடைகளை செப்பனிட முனைவோமா ?  What say guys? புதிதாய் ஒரு நடையை 2018-க்கு நடைமுறையாக்கிப் பார்க்கலாமா? ‘Yes’ எனில் அந்தப் பொறுப்பை ஏற்க யாரெல்லாம்   தயார் என்றும் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ்?

சந்தா E முளைத்தே மூன்று இலைகள் இன்னமும் விட்டிருக்கவில்லை என்பதாலும்; “சூப்பர் 6” பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி செய்து முடித்தும் விட்டோம் என்பதாலும் – அந்த 2 பிரிவுகள் பற்றிய வினாக்கள் ஏதுமிருக்கப் போவதில்லை! - at least for now ! ஆகையால் current affairs பக்கமாய் பார்வைகளைத் திருப்பிடலாம்! ஆகஸ்டின் இதழ்களுள் கலரில் ரகளை பண்ணக் காத்திருக்கும் இறுதி இதழ் பற்றிய அறிமுகம் இனி !

டைலன் டாக்கின்இது கொலையுதிர் காலம்” தான் உங்களை சந்தா B-ன் சார்பாய் இம்மாதம் சந்திக்கவிருக்கும் இதழ்! And இதோ – அதன் அட்டைப்பட முதல் பார்வை!

ஒரிஜினலே செம டெரராய் அமைந்திடும் போது அதனில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்கும் அவசியமே எழாது போய்விடுகிறது! So முன் + பின் அட்டைகளுமே ஒரிஜினல்களின் உபயமே! And உட்பக்கங்களும் நமது இந்தக் கறுப்பு + சிகப்பு உடுப்புக்காரரின் சாகஸத்தில் ஜகஜ்ஜோதியாக டாலடிக்கின்றன! வழக்கமாய் டைலன் கதைகளில் பத்தி பத்தியாய் பேசும் sequences நிறைய இருந்திடும்; ஆனால் இம்முறையோ ஆரம்ப பக்கத்தில் தொட்டுப் பார்க்கும் டாப் கியர் கடைசிப் பக்கம் வரையிலும் இம்மி கீழறங்குவதாகயில்லை! தலைதெறிக்கும் (மெய்யாலுமே தலைகள் தெறிக்கின்றன சாமி – கதையினில்!!) வேகத்திலான இந்த சாகஸத்தின் பின்னணியில் ஒரு சின்ன குளறுபடியின் கதையும் உள்ளது! சென்றாண்டு நாம் வெளியிட்ட டைலன் டாக் சாகஸத்தின் பெயர் KILLERS என்று பொருள்படும். இப்போது வெளியாகவுள்ள “இது கொலையுதிர் காலம்” – ”KILLER” என்று பொருள் தரக்கூடிய தலைப்பைக் கொண்டது. 2015 -ன் இறுதியினில்  நான் ஆர்டர் செய்ய நினைத்திருந்தது “KILLERS” என்ற (சென்றாண்டின்) சாகஸத்தையே! ஆனால் அனுப்பிய மின்னஞ்சலில் ஒரு ‘S’-ஐ விழுங்கி விட்டேன் போலும் – ‘KILLER’ என்ற இப்போதைய கதையின் டிஜிட்டல் .ஃபைல்களைத் தூக்கி அனுப்பி விட்டார்கள்! எங்களிடம் மொழிபெயர்க்கப்பட்டிருந்த கதை வேறு; வந்திருக்கும் ஃபைல்கள் வேறாக உள்ளதே என்று மண்டையைச் சொரிந்து கொண்டே ஆராய்ச்சி செய்த போது தான் விபரம்  புரிந்தது. So கில்லர்ஸ்  & கில்லர் அடுத்தடுத்த “டை.டா.” சாகஸங்களாகிப் போன கதையிது தான்! And அதற்குள்ளாகவே இத்தாலியிலிருந்து “டை.டா” ரசிகர்களிடமிருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்கி விட்டன இம்மாத வெளியீட்டுக்கு!

புது இதழ்கள் மூன்றும் திங்கள் இரவு தயாராகி விடும்; செவ்வாய் காலையில் (August 1) உங்களைத் தேடிப் புறப்படும்! ”டைலன் டாக்” இதழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கடைசி நிமிட ரிப்பேர் பணித் தாமதமே இந்த ஒற்றை நாள் தாமதத்துக்குப் பொறுப்பு! புதியதொரு மொழிபெயர்ப்பாளர் இதனில் பணி செய்திருந்தார் & வழக்கம் போல துவக்கத்தில் நெருடல்கள் தோன்றிடவில்லை என்பதால் இதனில் ரொம்ப பேன் பார்க்கத் தேவைப்படாது என்ற நம்பிக்கையில் “இரத்தக் கோட்டை” பணிகளுக்குள் ஆழ்ந்திருந்தேன்! ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக “இது கொலையுதிர் காலம்” பக்கங்களைத் தூக்கிக் கொண்டு அமர்ந்த போது – குண்டும், குழியுமான சாலையில் சவாரி போனது போல் தோன்றியது. இங்கே திருத்தம்; அங்கே ரிப்பேர் என்று ஆரம்பிக்க – ‘முழுசாய் மாற்றி எழுதிப் போவது இதை விட சுலபம்‘ என்று ஒரு கட்டத்தில் மனதுக்குப் பட, வெள்ளியிரவு தான் அது சார்ந்த பணி நிறைவுற்றன! ‘விடாதே... போட்டுத் தாக்கு‘ என்று நேற்று பிராசஸிங் & அச்சு வேலைகளை செய்யத் தொடங்கினோம். இந்தப் பதிவை நான் டைப் செய்யும் சனி நள்ளிரவுக்கு ஆபீசில் டைலன் டாக் அச்சுப் பணிகள் பரபரப்பாய் ஓடியவண்ணம் உள்ளன ! So செவ்வாய் காலை உங்கள் கூரியர்கள் ‘ஸ்லிம் சிம்ரனாய்‘ இங்கிருந்து புறப்படும் – EARLY BIRD பேட்ஜ்களையும் சுமந்து கொண்டு! 

No சிம்ரன் ; only  புஷ்டிகா !! - என்ற கோஷத்தோடு  இந்தக் கவர்களை உசிலைமணியாய் பரிணாம வளர்ச்சி கொண்டு பார்த்திட விரும்பும் பட்சத்தில், வாரயிறுதி வரைக் காத்திருந்து “இரத்தக் கோட்டை” இதழையும் இந்தக் கூரியருக்குள் நுழைத்திடல் வேண்டும் ! அவ்விதம் திட்டமிடுவதாயின்,  வெள்ளியன்று (ஆகஸ்ட் 4) பார்சல்கள் புறப்பட்டாக வேண்டும் ! எவ்விதம் செய்யலாமென்று தீர்மானிப்பது உங்கள் choice folks! 

அப்புறம் பணிகள் முடிந்த கையோடு - "சலோ ஈரோடு" என்ற ஏற்பாடுகளுக்குள் தலைநுழைக்கக் காத்திருக்கிறேன் ! As usual - அதே பரபரப்பு உங்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை எண்ணி ! அதே வேளையில், உங்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏதோ விதங்களில் நியாயம் செய்திட வேண்டுமே என்ற ஆதங்கமும் !! அடுத்த ஒரு வாரத்துக்கு மட்டுமாவது கால் சராய்க்கு மேலாக ஜட்டியையும். ; மேஜை விரிப்பை முதுகிலும் கட்டிக்க கொள்ள முடிந்தால் தேவலாம் என்று பட்டது !! மீண்டும் சந்திப்போம்! அது வரை have an awesome Sunday!

P.S : கோவை புத்தக விழாவின் கடைசி நாளின்று !!நமது ஸ்டால் நம்பர் 202 க்கு மறவாது ஒரு விசிட் அடித்திடலாமே ?


Monday, July 24, 2017

கனவுகள் - நேற்றும் ..நாளையும் ...!

நண்பர்களே,

வணக்கம். பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய்ப் புது வரவுகளை பற்றித் தகவல்கள் போட்டு விட்டு, கடைசிப் பாராவில் XIII பற்றி நாலே வரி  எழுதினாலுமே - மனுஷன் முண்டியடித்துக் கொண்டு வெளிச்ச வட்டத்தை ஆக்கிரமிப்பது ஒரே நாளில் 340 + பின்னூட்டங்கள் என்ற அலையிலேயே அப்பட்டமாகிறது ! இதே வேகமும், எழுச்சியும், "இரத்தப் படலம்" முன்பதிவினில் தொடர்ந்திடும் பட்சத்தில் - ஒரு landmark தருணம் நமக்குக் காத்திருக்குமென்பது உறுதி ! But first things first ! "படலம்" பற்றிய அக்கறைக்கு முன்பாக "கோட்டை" மீதான கரிசனமே முக்கியம் என்ற சூழலில் நாமுள்ளோம் இப்போது ! இன்னமுமே "இரத்தக் கோட்டை" The Collection இதழினை முன்பதிவு செய்திருக்கா பட்சத்தில் - why not give it a try today folks ? வண்ணத்தில் அட்டகாசமாய் வந்துள்ளது இதழ் & அட்டைப்படமுமே பிரமாதமாய் வந்துள்ளது ! 

சென்றாண்டின் உங்கள் கனவை நனவாக்கி விட்டோம் ; அடுத்த கனவுக்குள் ஆழ்ந்திடும் முன்பாக இந்த நொடியில் திளைத்திடுவோமே முதலில் ?

Please note : "இரத்தக் கோட்டை" இதழினை கடைகளிலோ ; புத்தக விழாக்களில் வாங்கிடுவதாக இருந்தாலோ - இதழின் விலை ரூ.575 என்பதை மறந்து விடாதீர்கள் ! முன்பதிவுகளுக்கு மட்டுமே சலுகை விலைகள் ! And ஆன்லைன் முன்பதிவு இம்மாத இறுதி வரைக்குமே தொடர்ந்திடும் சலுகை விலைகளில் !


Sunday, July 23, 2017

சந்தையில் என்ன புதுசோ ?

நண்பர்களே,

வணக்கம். கொஞ்சமே கொஞ்சம் மொக்கையாக இந்த ஆரம்ப வரிகள் தெரியக் கூடுமென்றாலும், சபலத்தை அடக்க முடியவில்லையே ! So, here goes : ("சிங்கம்" சூர்யாவின் மாடுலேஷனை மனதில் இருத்திக் கொண்டே )

"ஷெல்டன் காரிலே போய்ப் பார்த்திருப்பீங்க... விமானத்திலே போய்ப் பார்த்திருப்பீங்க... கப்பல்லே போய்ப் பார்த்திருப்பீங்க ! ஏன்- பாராசூட்லே போறதைக் கூடப் பார்த்திருப்பீங்க! 

ஆனால்..

ஷெல்டன் கழுதையிலே போறதைப் பார்த்திருக்கீங்களா? அதுவும் காய்ஞ்ச ரொட்டியைக் கழுதைக்கு முன்னாலே தொங்க விட்டுட்டே, அதைத் தாஜா பண்ணிட்டுப் போறதைப் பார்த்திருக்கீங்களா...? பார்த்திருக்கீங்களா ? "

என்றைக்கேனும் ஒரு நாள்; ஒரேயொரு நாள் – நமது ஆதர்ஷ ஷான் வான் ஹாம்மே, தமிழுக்கென பிரத்யேகமாய் ஸ்கிரிப்ட் எழுத முன்வந்து; ஷெல்டனின் லேட்டஸ்ட் சாகஸத்தை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் அவசியம் மட்டும் எழுந்தால் – சாமி சத்தியமாய் மேற்கண்ட வரிகளைத் தான் எழுதியிருப்பார்! ஆத்தாடியோவ்- வெள்ளியன்று வேய்ன் ஷெல்டனின் “ஒரு காகிதத்தைத் தேடி” இதழின் எடிட்டிங் பணிக்குள் புகுந்த நேரம் எனக்குள் எழும்பிய சிரிப்பலைகளை ஒருவழியாய் இப்போது தான் மட்டுப்படுத்திக் கொள்கிறேன் ! சர்வதேச spy த்ரில்லர்கள்; XIII போன்ற அசாத்தியத் தொடர்படலங்கள்; லார்கோ வின்ச் போன்ற offbeat சாகஸத் தொடர்கள் என்றெல்லாம் அதகளம் செய்திடும் வான் ஹாம்மே ஒரு ஜாலியான தருணத்தில் இந்தக் கதைக்கு plot எழுத அமர்ந்திருப்பார் போலும்! சுலபமானதொரு துவக்கப் புள்ளியை நிர்ணயம் செய்து கொண்ட பிற்பாடு டுரோன்டோ எக்ஸ்பிரசைப் போல கதையைத் துளி பிரேக்குமின்றி நகற்றிச் செல்கிறார், மனுஷன்! அந்தப் பயணத்தின் போது தான் நமது பென்சில் மீசை நாயகருக்குக் கழுதைச் சவாரி; ரொட்டியைத் தந்து நாலுகால் நண்பரை சமனப்படுத்தும் சாகஸம் என்றெல்லாம்! சவாரி கழுதை மீதென்றாலும்- கதையின் வேகமோ ஜெட் வேகம்!

ஷெல்டனின் அறிமுக நாட்கள் இந்தத் தருணத்தில் என் மனதில் நிழலாடுகின்றன! சின்ன வயதிலிருந்தே காமிக்ஸ் நாயகர்கள் என்றால் மீசையில்லா 'மொழுமொழு பார்ட்டிகள்' என்பதான template என் தலைக்குள் குடிகொண்டிருந்தது! நமது மாண்ட்ரேக் நீங்கலாய், கண்ணுக்குத் தென்பட்ட பாக்கி அத்தனை பேருமே அந்த “no மீசை” இலக்கணத்துக்கு சாட்சிகளாக நிற்க – நம்மூர் படைப்புகளான “இன்ஸ்பெக்டர் கருடா” விற்கு மட்டும் மனசு ஒப்புதல் தந்திருந்தது. இந்த சூழலில் 2013-ன் NBS இதழுக்கான திட்டமிடல்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த வேளையது! ஏகமாய்க் கதைகளை அறிவித்து விட்ட போதிலும் எனக்குள் சன்னமாயொரு நெருடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது – நாயகர்களுள் ஒருவித ‘X’ factor குறைகிறதோ என்ற ரீதியில்! “கேப்டன் டைகர்”; சிக் பில்; மாடஸ்டி; லார்கோ என்று பரிச்சயமான முகங்களோடு – ஜில் ஜோர்டன் மட்டுமே புதுவரவாக இருந்தது என்னை சமனப்படுத்தியிருக்கவில்லை! ஜில்லாரின் சித்திர பாணி – கார்ட்டூன் ஸ்டைல் என்பதாலும், ரொம்பவே புராதனம் தட்டுப்படும் படைப்பு என்பதாலும் அவர் மட்டுமே போதுமா – இந்த அசுர (??!!) விலையிலான இதழைக் கரைசேர்க்க என்ற பயம் என்னை அலைக்கழித்தது! தவிர, லார்கோ துவக்கித் தந்திருந்த “நவீன யுகக்கதைகள்” என்ற முன்செல்லும் பாதைக்கு வலுசேர்க்க, லேட்டஸ்டாய் யாரேனும் தோள் தந்தால் தேவலாமே என்று தோன்றியது!

நமது நரைமுடி ரோமியோ வேய்ன் ஷெல்டனை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும் தான்! ஆனால் அந்த மோவாய்க்கு மேலான ‘கம்பிளிப் பூச்சியின்‘ காரணத்தால் – “ஓவியாவுக்குக் கூட ஓட்டுப் போட்டு விடலாம்; இவருக்கு வேண்டாமே?!” என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது! வீட்டிலிருந்தபடிக்கு சாமங்களில் பதிவுகளை டைப்பித்து பழகி வந்த நாட்களவை என்பதால் ஒரு மணி – ரெண்டு மணி என்பதெல்லாம் எனக்கு நண்பகல் போல! புதுசாய் யாரையேனும் தேடிப் பிடிக்க வேண்டுமே (NBS-க்குத் தானுங்கோ!!) என்ற குடைச்சல் வேறு தூங்க விடாது பண்ண, எனது காமிக்ஸ் சேகரிப்பு பீரோவைக் குடைய ஆரம்பித்தேன்! “Les Casseurs” என்றதொரு பிரெஞ்சுத் தொடரின் ஆல்பங்கள் கையில் சிக்கின! அந்தத் தொடரோ ஐரோப்பாவில் மெகா சைஸ் டிரக்குகளை சாலையில் ஓட்டிச் செல்லும் 2 சாகஸ டிரைவர்களின் கதை! அதில் நமக்கு ஜாஸ்தி ஆர்வம் இருக்க முடியாதென்றாலும், கதை நெடுகிலும் தலைகாட்டிய ராட்சஸ சைஸ் ‘பூம்‘ டிரக்குகளின் சித்திரங்கள் சொக்க வைத்தன! ஓவியர் யாரென்று கூகுளில் தேடிப் பார்த்தால் – க்ரிஸ்டியான் டினாயெர் என்று பதில் கிடைத்தது. கூடவே அவர் பணியாற்றியுள்ள இதர தொடர்கள் என்ற தலைப்பில் ‘வேய்ன் ஷெல்டன்‘ என்று பிரதானமாய் எழுதப்பட்டிருந்தது! “ஆகா... இது அவர்லே?” என்றபடிக்கே யோசனையில் லயிக்கத் தொடங்கினேன். என்னிடமிருந்த ஷெல்டனின் முதல் பிரெஞ்சு ஆல்பத்தையும் புரட்டத் தொடங்கிய போது- “வான் ஹாம்மே” என்ற பெயரும் கண்ணில் பட்டது! ஆஹா... ஒரு ஜாம்பவனோடு, ஒரு ஓவிய ஜீனியஸ் கைகோர்த்திருக்கும் போது – மீசையென்ன – ஜடாமுடியே வைத்திருந்தாலும் கதை சோடை போகாதென்று ஞானோதயம் உதித்தது! அப்புறம் நடந்த சமாச்சாரங்கள் தான் நாமறிந்ததாச்சே? NBS என்னும் வண்டி ஜெட் வேகத்தில் கரை தாண்டியது; நம்மையுமே அடுத்ததொரு லெவலுக்கு இழுத்துக் கொண்டே! அந்த வெற்றியில் வேய்னுக்கு எத்தனை சதவிகிதப் பங்குண்டு என்று சொல்லத் தெரியவில்லை – ஆனால் நிச்சயமாய் நம்மிடையே ஒரு பக்கவான ஆக்ஷன் ஹீரோவாக ஆசாமி ‘செட்‘ ஆகிப் போனது மட்டும் நிச்சயம்! And இதோ எட்டிவிட்டோமே – இந்தத் தொடரின் அந்திமப் பகுதியினை! ஆகஸ்டில் வரவிருக்கும் "ஒரு காகிதத்தைத் தேடி" இந்தத் தொடரில் ஆல்பம் # 11 ! இதற்குப் பின்னே ஒரேயொரு ஆல்பம் எஞ்சியுள்ளது !  இதழின் அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க டீசர் இதோ:

”கழுதைச் சவாரி” தான் இதழின் ஒரிஜினல் அட்டைப்படமுமே என்பதால் அதனையே நாமும் ஏற்றுக் கொண்டோம் – பின்னணிகளில் மட்டுமே மாற்றங்களைச் செய்து கொண்டு! பின்னணிக்கு இம்முறை பயன்படுத்தியுள்ள ஒரு வித Prussian Blue – நமது ராப்பர்களுக்குப் புதுசு என்றே தோன்றியது!
உட்பக்கங்களில் வழக்கம் போலவே அதிரடிச் சித்திரங்கள் + கலரிங் பாணிகள் என்று கண்களுக்கொரு விருந்து காத்துள்ளது! So ”ஒரு காகிதத்தைத் தேடி” – வான் ஹாம்மேவின் மறுபக்கம்! Don’t miss it guys!

அப்புறம் இன்னமுமொரு ‘ஷெல்டன்‘ சேதியும் கூட! இந்தத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்களோ ? என்ற மெலிதான சந்தேகம் எனக்குள்ளிருந்தது! ஆனால் சென்றாண்டின் ஏதோவொரு சமயம் இது பற்றிப் படைப்பாளர்களிடம் கேட்ட போது – கண்சிமிட்டலோடு ‘don’t worry!’ என்று மட்டும் சொல்லி வைத்திருந்தார்கள்! அதற்கென்ன அர்த்தமென்பது தற்சமயம் புரிகிறது – ஆகஸ்டில் காத்திருக்கும் புத்தம் புதிய ஆல்பத்தின் அறிவிப்போடு! So இன்னும் ஒரேயொரு ஷெல்டன் கதை மட்டுமே பாக்கியுள்ளது என்ற நிலை மாறுகிறது! இதோ – காத்திருக்கும் புது ஆல்பத்தின் அட்டைப்படம்!
And புது ஆல்பங்கள் காத்திருப்பது நமது கோடீஸ்வரக் கோமகனின் தொடரிலுமே! வான் ஹாம்மே கதை இலாக்காவிலிருந்து VRS வாங்கியான பின்னே ஓவியரே ஆல்-இன்-ஆல் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு, நாவலாசிரியர் ஒருவரின் ஒத்தாசையோடு தயாரித்துள்ள புது ஆல்பம் வரும் October மாதம் வெளிவரக் காத்துள்ளது! “வான் ஹாம்மே” என்ற மெகா நிழலிலிருந்து வெளிவருவது அத்தனை சுலபமல்ல தான்; ஆனால் ஓவியர் பிலிப் ப்ராங்குமே ஒரு அட்டகாச ஆற்றலாளரே எனும் போது எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன! இரு பாக சாகஸத்தின் முதல் ஆல்பம் இந்தாண்டிலும், இறுதி ஆல்பம் 2018-ன் இறுதியிலும் வெளியாகும்! So நாமதை சுவைபார்க்கும் வாய்ப்பு 2019-ல் தானிருக்கும் என்று நினைக்கிறேன்! இதோ அதன் அறிவிப்பு !
புது வரவுகளின் பட்டியலை இன்னமுமே கொஞ்சம் வாசித்து விடுகிறேனே? நமது ஒல்லிப் பிச்சான் லக்கி லூக்கின் புது ஆல்பம் சமீபமாய் வெளியாகியுள்ளது! ஒரு வெற்றித் தொடர் முற்றுப்புள்ளி காணாது, தொடர் நடை போடுவதில் மகிழ்ச்சியே! பாருங்களேன் அதன் ராப்பரை!
அதே சமயம் – நம்மவர்களை, நம்மவர்களே பகடி செய்திடுமொரு புது ஆல்பமும் களம் காண்கிறது! லக்கி லூக்கின் சொல் பேச்சை ஜாலி ஜம்பர் கேட்க மறுத்தால் கதை என்னாவது? என்ற கேள்வியோடு ஒரு கார்ட்டூனை கார்ட்டூனாக்கும் ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர் பிரெஞ்சில்! பாருங்களேன் இந்தக் கூத்தை! எப்போதாவது ஒரு பொழுது போகா தருணத்தில், இதையும் தமிழாக்க முயற்சிப்போமா guys?
Jolly Jumper Stops Responding !!
இந்தப் ”பகடி மேட்டர்” புதுசில்லை என்பது கொசுறுச் சேதி! ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை செமையாக வாரி லோம்பா குழுமமே ஒரு இதழொன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது! இதுவரையிலான வெவ்வேறு ஜானி சாகஸங்களிலிருந்தே படங்களை frame by frame இரவலெடுத்துக் கொண்டே ஒரு உட்டாலக்கடி சாகஸத்தை ஒரு முழு ஆல்பமாக்கியுள்ளனர்! இதில் beauty என்னவென்றால், ஆல்பத்தின் ஒவ்வொரு frame சித்திரமுமே, இதற்கு முன்பான 78 ஜானி ஆல்பங்களுக்கு வரையப்பட்ட சித்திரங்களே ! எந்த விதத்திலும் மாற்றி வரையாது, ஆங்காங்கிருந்து அள்ளிக் கொண்டு வந்து David Vandermeulen என்ற கதாசிரியர் ஒரு remix ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் !! என்னவொரு கற்பனை பாருங்களேன் ?!! 

அது மட்டுமன்றி New look ரிப்போர்ட்டர் ஜானியின் சாகஸத்தில் ஆல்பம் # 2-ம் சமீபமாய் வெளியாகி தூள் கிளப்பியுள்ளது! ரொம்பவே கட்டுப்பட்டியாய் சுற்றித் திரிந்த நம்மவர் – இந்தப் புது அவதாரில், பட்டப் பகலில் பார்க்கில் "பச்சக்" அடிக்கும் அளவுக்கு வெளுத்து வாங்குகிறார் பாருங்களேன்!
Moving on – ஆகஸ்டின் நமது மையப் பணியான “இரத்தக் கோட்டை” சிறிதும் தாமதமின்றித் தயாராகிட வேண்டுமென்ற வேகத்தில் சாத்தியமான சகல பல்டிகளையும் அடித்து வருகிறோம் ! 'தல' அச்சாகும் வேளைகளில் எங்கும் மஞ்சள் மயமெனில் - "தளபதி" சர்வமும் நீலம் என்கிறார் ! இந்த முழுநீள அதிரடித் தொகுப்பை நண்பர்களின் மூவர் தனித்தனியாய்ப் பிழை திருத்தம் செய்து தந்திருக்க, என் பாடு லேசாகிப் போகுமென்ற மிதப்பிலிருந்தேன் ! ஆனால் கடைசி நேரத்தில், வழக்கம் போலவே மனம் ஒப்பவே இல்லை - நானுமொரு வாசிப்பைப் போடாது பக்கங்களை அச்சுக்கு அனுப்ப ! பலனாக கிட்டத்தட்ட மறந்தே போயிருந்ததொரு கதையினை மீண்டும் வாசித்த திருப்தி கிட்டியது ! Printer's Devils என்றொரு பெயருண்டு - அச்சில் தலைகாட்டும் இந்தப் பிழைகளுக்கு  ! எத்தனை லிட்டர் விளக்கெண்ணையை, எத்தனை பேர் கண்ணில் விட்டுக் கொண்டு திருத்தங்களை செய்தாலும், அவ்வளவு பேருக்குமே 'பிம்பிலிக்கா பிலாக்கி' காட்டும் ஆற்றல் இந்தக் குட்டிச் சாத்தான்களுக்குண்டு என்பதை இன்னமுமொருமுறை உணர முடிந்தது ! நண்பர்களின் கண்களுக்கு டிமிக்கி கொடுத்திருந்த, என் ஆந்தை விழிகளுக்குத் தட்டுப்பட்ட பிழைகளுக்கு திருத்தங்களை போட்ட கையோடு (நிச்சயமாய் இது போகவும் சைத்தான்கள் இருப்பது உறுதியே !!) - இறுதி பாகத்தில் கிழவன் ஜிம்மியின் வசனங்களை மாத்திரமே இன்னும் கொஞ்சம் lively ஆக்க முயன்றேன் ! நிச்சயமாய் இந்த இறுதி ஆல்பத்தை மட்டும் மறுக்கா மொழிபெயர்க்க நேரம் இருந்திருப்பின், இன்னமும் கூட மெருகூட்டியிருக்க முடியுமே என்ற ஆதங்கமும் மெலிதாய்த் தலைதூக்கியது ! But எக்ஸ்டரா நம்பர் போட்டு தர்மஅடி வாங்கிய "தங்கக் கல்லறையின்" ஞாபகம் இன்னமுமே மங்காதிருக்க ,வான்டனாய்ப் போய்திரும்பவும் முதுகைப் பழுக்க வைக்க வேண்டாமே என்று தீர்மானித்தேன் !! 

ஒரு வழியாய் அச்சுப் பணிகள் நேற்றைக்கு முழுமையாகிட – தங்கத் தலைவன் பைண்டிங் பிரிவுக்குத் தற்காலிகமாய் ஜாகையை மாற்றியுள்ளார்! அட்டைப்பட நகாசு வேலைகளுக்கு இம்முறை கூடுதலாகவே மெனக்கெடல்கள் எடுத்திருப்பதால், அதன் பொருட்டு பொறுமையாய் பணி செய்து வருகிறோம் ! மாதந்தோறும் இது போல ஹார்ட-கவர் இதழ்கள் தொடர்ந்திடும் பட்சத்தில், ஷெரீப் டாக்புல்லுக்குப் போல எனக்குமே முடி வெட்டிக் கொள்ளும் செலவேயிராது என்பது மட்டும் நிச்சயம்! Phew!

And ஆகஸ்டின் ‘சஸ்பென்ஸ்‘ புக் ஃபேர் இதழுக்கான பணிகள் ‘விடாதே-பிடி‘ என்ற ரகத்தில் நடந்து வருகின்றன! ஏற்கனவே சொன்னது போல, இதுவொரு முரட்டு இதழல்ல என்பதால் – நிச்சயம் ஈரோட்டுக்கு முன்பாகவே தயாராகிடும் என்பதில் சந்தேகமில்லை எனக்கு! 

எனது பொழுதுகள் தற்போதைக்கு லயித்துக் கிடப்பதோ – our own சஞ்சய் ராமசாமியாரை அடுத்தாண்டு வண்ணத்தில் உலவச் செய்திடும் மார்க்கங்களை அலசுவதில் தான்! 
“ஒரே 900 பக்க மெகா இதழ்” என்ற இரத்தப் படலக் கனவை நனவாக்கிப் பார்த்திடும் பொருட்டு ஒரு சாம்பிள் பிரதியைப் போட்டுப் பார்த்தோம் ! And மெர்செலாகிப் போனோம் சாமி - அதன் எடையையும், ஆகிருதியையும் பார்த்து !!  
சத்தியமாய் சம்பளத்திற்கு ஆள் போட்டே இந்த இதழைச் சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்பது அப்பட்டமாய்ப் புரிகிறது! மல்லாக்கப் படுத்துக் கொண்டு இதைப் படிக்க யாருக்கேனும் எண்ணமிருந்தால் அதற்கு முன்பாய் தத்தம் இல்லங்களிலிருந்து புத்தூருக்குப் போகும் பஸ்களின் நேரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்த சிந்தனையாக இருக்குமென்பேன்! Still not too late guys – “ஒற்றை இதழ்” என்ற உங்கள் கனவு,சேகரிப்புகளுக்கு மகுடம் சேர்க்கக் கூடுமே தவிர, பயன்பாட்டுக்கு எத்தனை தூரம் சுகப்படுமோ? என்ற கேள்விக்கு பதில் என்னிடம் நஹி ! But பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேண்டுமென்று நீங்கள் தீவிரமாகயிருப்பின், உங்களோடு சேர்ந்து இப்போதே நானும் தண்டால், பஸ்கியெல்லாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டியது தான்! தலீவர் போன்ற 'பிஞ்சு பயில்வான்களுக்கு' இந்த இதழ் வழங்கப்படாதென்றொரு போர்டே வைத்து விடலாம்! So இதற்கான முன்பதிவுப் படிவத்தில்,  பெயர்; முகவரி; செல் நம்பர் என்பதோடு - எடை; பளு தூக்கும் ஆற்றல் என்ற களங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்! So Last chance all : கோட்டைச்சாமி தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றியே தீர வேண்டுமென்பதில் உறுதியாய் உள்ளீர்களா ? உறுதியானவர்கள் கை தூக்குங்கள் - please ! மிச்ச மீதியை ஈரோட்டில் பேசிக் கொள்ளலாமே !
கோவை புத்தக விழா நேற்றைக்குத் துவங்கியுள்ளது! ஈரோட்டளவிற்கு அங்கு விற்பனை இருந்ததில்லையென்றாலும், இம்முறை துவக்க 2 நாட்களிலேயே ‘அடடே‘ சொல்லும் விதமாய் அட்டகாச response! அடுத்த ஞாயிறு வரை நடைபெறும் விழாவிற்கு அந்தப் பகுதிகளில் உள்ள நண்பர்கள் ஒரு விசிட் அடித்திடலாமே? 

புறப்படும் முன்பாய் - மீண்டுமொரு caption contest !! இம்முறையே தளபதியும், அவரது சகாக்களுமே !! வெற்றி பெரும் caption writer-க்கு  "இரத்தக் கோட்டை" யின் ஒரிஜினல் பிரெஞ்சு இதழ் பரிசு !!
And ஈரோட்டுக்கு வந்திடவுள்ள நண்பர்கள் இன்னமும் attendance பதியாதிருப்பின், இந்தப் பதிவினில் செய்து கொள்ளலாமே - ப்ளீஸ் ? 

SATURDAY 5th.AUGUST'2017 :

சந்திக்கும் இடம் : HOTEL LE JARDIN 

VOC பார்க் வாயிலில், பஸ் நிலையத்திலிருந்து நடக்கும் தூரமே !

நேரம் : காலை 10 to மதியம் 2 

Please do drop in !!!

மீண்டும் சந்திப்போம் guys! டைலன் டாக் காத்திருக்கிறார் எனது ஞாயிறை கபளீகரம் செய்திட !!  Have a great Sunday!

SUNDAY FROM KOVAI
நமது ஸ்டாலில் நிற்பது யாரெல்லாமென்று  பாருங்களேன் !!


Tuesday, July 18, 2017

காத்திருக்கும் திருவிழாக்கள் !

நண்பர்களே,

வணக்கம். உற்சாகப் பதிவுகள் ---->> ஹை வோல்டேஜ் பின்னூட்டங்கள் ---->> உபபதிவுகள் என்ற சங்கிலிக் கோர்வையை மீண்டுமொருமுறை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில் உள்ள சந்தோஷமே தனி தான் !! So  இதழ்களில் 400 -ஐத் தொட்ட சூடு தணியும் முன்னரே, பதிவுகளில் 400 -ஐ எட்டிப் பிடிக்க இதோ இன்னுமொரு படி நெருங்குகிறோம் !! இவற்றுள் எவ்வளவு உப்மா பதிவுகள் இருந்தன ? ; எத்தனை நாலு வரிப் பதிவுகள் இருந்தன ? என்பதெல்லாம் சத்தியமாய் நினைவில்லை ; ஆனால் நமது காமிக்ஸ் பயணத்தின் சுவாரஸ்யம் ஒரு விதமெனில், இங்கு நாம் கடந்து வந்திருக்கும் பதிவுகளின் பயணமோ அதற்குத் துளியும் சளைத்ததல்ல என்பேன் ! வண்டி வண்டியாய் எழுதும் போது - எதை / எங்கே / எதற்கு எழுதினேன் ? என்பதெல்லாம் ஒரு blur ஆக மாத்திரமே உள்ளது எனக்குள் !  என்றேனும் ஒரு சாவகாசமான  நாளில் - பதிவுகளே பயணமாய் அமைந்திட்ட நாட்களை அசை போட்டுப் பார்க்கும் ஆசையுண்டு எனக்கு ! 

Moving on,கோவைப் புத்தக விழா இவ்வார இறுதியில் துவங்குகிறது ! நமது ஸ்டால் நம்பர் 202 ! அங்கு 30-ம் தேதி திருவிழா நிறைவுற, கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஈரோடு செல்லவுள்ளனர் நம்மவர்கள் ! So தொடரும் வாரங்கள் நமக்கு ரொம்பவே முக்கியமான நாட்களாக இருந்திடும் ! நமது FB பக்கத்தில் புத்தக விழா சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் சமயம், அவற்றை உங்கள் நட்பு வட்டத்தின் மத்தியில் பரவலாய் பகிர்ந்திடக் கோருகிறேன் ! 
அப்புறம் ஈரோட்டின் "சஸ்பென்ஸ்" இதழ் பற்றிய வானளாவிய யூகங்களைப் பார்த்து லைட்டாக டர்ராகிப் போனேன் !! சென்ற மாதம் சுமார் 825+ பக்கங்கள் ; இம்மாதம் சுமார் 460+ பக்கங்கள் என்ற நிலையில் இன்னுமொரு குண்டோதர இதழைத் தயாரிப்பதற்கான 'தம்' பாக்கெட்டிலும் லேது ; உடலிலும் லேது ! அது மாத்திரமின்றி, ஈரோட்டுக்கான homework செய்திட கொஞ்சமேனும் அவகாசமின்றி, கடைசி நாள் வரைக்கும் பணிகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடப்பின் - அங்கு வந்து'பெப்பெப்பே' என்ற பிழைப்பாகிப் போகும் என்று பட்டது ! So - நிச்சயமொரு சஸ்பென்ஸ் இதழ் உண்டு  ; but ராட்சஸ ரகத்திலல்ல !  

ஈரோட்டு சந்திப்புக்கென சென்ற முறைகள் போலவே அதே LE JARDIN ஹோட்டலின் ஹால் ; இம்முறை அடித்தளத்தில் ! 4 மணி நேர அவகாசம் தந்துள்ளனர் நமக்கு ! அந்த 240 நிமிடங்களை - பூமியைக் காப்பாற்றக்கூடிய எந்தெந்த விஷயங்களின் பொருட்டுச் செலவிடலாமென்ற உங்கள் suggestions வரவேற்கப்படுகின்றன ! Of course - "இரத்தப் படலம்" பற்றிய அலசல் ; அடுத்தாண்டின் TEX 70 தொடர்பான கொண்டாட்டங்கள் நம் அட்டவணையில் முக்கிய இடங்களை பிடித்திடும். அவை தவிர்த்து - வேறென்ன சங்கதிகளை பற்றி பேசிடல் அவசியமென்று சொல்வீர்களோ ? ஒரு 30 நிமிடங்களை உங்கள் நினைவாற்றலுக்கான போட்டிக்கென ஒதுக்கி விட்டுச் சொல்லுங்கள் !! அந்த 30 நிமிடங்களுக்குக் கதவுகளைச் சாத்தி தாழ் போட்டால் தப்பில்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? Bye for now guys !!

Saturday, July 15, 2017

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.....!

நண்பர்களே,
         
வணக்கம். நமது வரலாற்றை (?!!) என்றைக்கேனும் எழுதிப் பார்ப்பதாயின் “க.பே.ஸ்.மு”; “க.பே.ஸ்.பி” என்று 2 பிரிவாகப் பிரிக்கலாமென்று ஆய்வாளர்கள் சொல்லவிருப்பது உறுதி! அத்தகைய “க.பே.ஸ்.பி” காலகட்டத்தில் ஏகமாய் பாடங்கள் படிக்க சாத்தியமாகியுள்ளது! அவற்றுள் முக்கியமானதொன்றை சமீபமாய் மீண்டும் ஒரு தபா உணர்ந்து புரிந்து கொள்ளும் அனுபவம் கிட்டியது உங்கள் புண்ணியத்தில்! “இப்படித் தான்; அப்படித் தான் என்று எதன் மீதுமொரு கல்லில் வடித்த தீர்மானத்தை எடுத்தல் சரிப்படாதுடா அம்பி!” என்பதே அந்தப் பாடம்! And அதை மறுக்கா எனக்கு நீங்கள் நினைவூட்டியது நமது சூப்பர் 6 இதழ்கள் பற்றி சமீபமாய் நான் எழுதிய பதிவுதனில்!

நடப்பாண்டில் சூப்பர் 6 பட்டையைக் கிளப்பி வருவது பற்றியும்; தொடரும் காலங்களில் இதற்கொரு “சீசன் 2” தருவதாயின் என்ன செய்யலாமென்ற உரத்த சிந்தனைகளை அந்தப் பதிவில் செய்திருந்தேன்! பழைய இதழ்களை மெருகூட்டி மறுபதிப்பிடலெனில் எந்தெந்தக் கூட்டணிகள் / நாயக அணிவகுப்புகள் சாத்தியமென்பதற்கொரு கோடிட்டுக் காட்ட யத்தனித்திருந்தேன் அந்தப் பதிவில்! படித்த மறுகணமே உங்கள் உற்சாகங்கள் டாப் கியரை எட்ட – ஞாயிறின் முக்கால் பகுதிக்குள்ளாகவே உங்களது பின்னூட்டத் தாண்டவங்கள் 335ஐ எட்டிப் பிடிக்க, அன்றே ஒரு உப பதிவும் தட்டி விடும் வரலாற்று அவசியம் அரங்கேறியது! மறுமுனையில் குந்தியிருந்தவனுக்கோ புன்னகை மன்னன் கமலஹாசனைத் தூக்கிச் சாப்பிடும் விதமாய் சிரிப்பும் அழுகையும், கலந்த ரியாக்ஷன்கள் தடதடத்து வந்தன! சிரிப்பு – for obvious reasons! நடப்பாண்டின் மறுபதிப்புகள் வெற்றி நடை போட, அதனைத் தொடர்ந்திடுவதில் நீங்கள் காட்டிய உத்வேகம் முகமெலாம் சந்தோஷத்துக்கு வித்திட்டதில் வியப்பில்லை! ஆனால்- எனது அன்றைய பதிவில் இரண்டாவது தவணையைக் களமிறக்கிட இக்ளியூண்டு (!!) வாய்ப்பு கூடக் கிட்டாது போய் விட்டதே என்பதில் தான் கவலை மேகங்கள்!

பழசைக் கொண்டொரு “சூப்பர் 6 – சீஸன் 2” உருவாக்குவதாயின் – இவையே menu! அதே போல புதுசைக் கொண்டொரு புது சீஸனைத் துவக்குவதாயின் எந்தெந்த புதுவரவுகளையெல்லாம் இறக்குமதி  செய்யலாமென்று உங்கள் முன்னொரு டிரெய்லர் ஓட்ட நினைத்திருந்தேன்! இந்தப் புதுப்பட டிரெய்லரே – அன்றைய பதிவின் part 2 ஆக இருந்திருக்க வேண்டியது! ஆனால் போட்டியே இல்லாது லக்கி லூக்கும், சிக் பில்லும் தேர்தல்களில் ஜெயம் கண்டு, ஆர்டின் பயல் அமெரிக்க ஜனாதிபதியாகிடும் அட்டகாசமும் சாத்தியமாகி நின்ற போது – ‘நான் சரியாத் தான் யோசிச்சிட்டிருக்கேனா?‘ என்று பஞ்சாயத்துக்கு வந்த சங்கிலி முருகன் போல மண்டையைச் சொரியத் தொடங்கினேன். இருந்தாலும் ரூமெல்லாம் போட்டு யோசித்து, டெம்போவெல்லாம் வைத்துக் கடத்தித் தயார் செய்த திட்டத்தின் ஒரு சன்னமான முன்னோட்டத்தையாவது உங்களுக்குக் காட்டாது போனால் பின்நாட்களில் முருங்கை மரத்துக்கும், ஆலமரத்துக்கும் தாவித் திரியும் தலையெழுத்து உறுதியாகிப் போகும் என்று பட்டது! So அன்றைய பதிவின் பின்னணிச் சிந்தனையின் பாகம் 2 தான் இவ்வாரத்துக்கு!

ஆண்டின் ஒவ்வொரு ஆகஸ்டுமே எனக்குக் கொத்துக் கொத்தாய் கேசம் காணாது போகும் பருவம்!! (நிறைய ஆகஸ்ட்களைப் பார்த்து விட்டேன் தான்!!!) அந்த மாதம் தான் காத்திருக்கும் புத்தாண்டின் அட்டவணையின் பொருட்டு புதுசு புதுசாய் கதைகளையும், தொடர்களையும் தேடிப் பிடித்து அலசிடும் தருணமாகயிருப்பது வழக்கம். "அதைப் போடுவோமா? இதைப் போடுவோமா?" என்றெல்லாம் மகா சிந்தனைகளுக்குள் லயித்தான பின்பு – “ஆங்... லார்கோ தவிர்க்க முடியாது; ஷெல்டன் வேணும்; ம்ம்ம்... தோர்கல் போடாட்டி பூரிக்கட்டை விற்பனைகள் சூடு பிடிக்கும்... ‘தல‘ இல்லாட்டி கதை கந்தல்... லக்கி லூக்? மூச்ச்ச்... யோசிக்கவே இடம் கிடையாது!” என்ற ரீதியில் ஒரு safe ஆன பட்டியலைப் போட்டுஅடங்கி விடுவேன்! ஆனால் இடைப்பட்ட நாட்களில், “ஒட்டு மொத்தமாய்ப் பழைய குப்பன்களையும் சுப்பன்களையும் ஒரு வருஷத்துக்காவது உறைநிலையில் இருக்கப் பண்ணி விட்டு, ஒரேயொரு ஆண்டுக்காவது all new வரவுகள் என்று திட்டமிடலாமா ?" என்ற நமைச்சல் எடுக்கத் தான் செய்யும்! ஆனால் விஷப் பரீட்சைகள் உங்களது முகச் சுளிப்புகளையும், சில பல வியாபார இழப்புகளையும் உருவாக்கி விடுமோ என்ற பீதியில் அடக்கி வாசித்திடுவேன்! அது போன்ற அடக்கி  வாசிக்கும் அத்தியாயங்களின் போது - "என்றைக்கேனும் இவர்களைக் களமிறக்காது விட்டேனா பார்?!” என்ற வைராக்கியமும் தலைகாட்டாது போகாது – ஒரு சில நாயகர்கள் / தொடர்கள் குறித்து!

அந்த வரிசையில் ஒரு முக்கிய இடம் பிடித்து நிற்கும் தொடர் பற்றி இப்போது! என்ன தான் ரசனைகளில் முன்னேறி விட்டோம்; பனை மரத்தில் ஏறி விட்டோமென்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், உலக அரங்கில் நமது ரசனைகள் சற்றே குறுகிய வட்டத்துக்குள் அடங்கிக் கிடக்கும் நிஜத்தை மறுப்பதற்கில்லை! ஓவராய் காதுல பூ சுற்றாத மிதமான சூப்பர் ஹீரோக்கள்; டிடெக்டிவ் நாயகர்கள்; adventure ஹீரோக்கள்; கௌபாய்ஸ்; தெளிவான கதையம்சம் கொண்ட கார்ட்டூன்கள்; அப்புறம் கொஞ்சம் திகில் சார்ந்த கதைகள் என்பதே நமது மெனு! எப்போதாவது எட்டிப் பார்க்கும் யுத்தக் கதைகளும், கிராபிக் நாவல்களும் நமது மேஜையை நிரப்பும் சைடு டிஷ்கள்! ஆனால் உலகரங்கிலோ இன்னதான் என்றில்லாது – சகல உணர்வுகளுக்கும் சித்திரக் கதைகளில் ஒரு வடிகால் தேடுவது சகஜம்!

சில காலம் முன்பொரு கதை படித்தேன் – ரொம்பவே casual ஆன சித்திரங்களோடு! ஒரு சிறு நகரில் வசிக்கும் ஆசாமி பணி நிமித்தம் பெரியதொரு நகருக்குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறான்! வாழ்க்கையின் ஒரு மத்திய பகுதியினில் ஏதோவொரு ஆர்வத்தில் உந்தப்பட்டு தன் சொந்த ஊருக்கான ரயிலில் ஏறியமர்ந்து அங்கே போய் இறங்குகிறான்! சின்ன வயதில் தான் குடியிருந்த வீட்டுப் பக்கமாய்; அப்பாவோடு போய் ஏததோ வாங்கித் தின்ற கடைத்தெரு பக்கமாய்; நண்பர்களோடு ஓடியாடிய பார்க்குகள் பக்கமாய் ;  தனிமையில் கழித்த சில ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்கள் பக்கமாய் என்று மௌனமாய் நடைபோடும் மனுஷன், திரும்பவும் ரயிலேறி – பெருநகரத்துக்குத் திரும்புகிறான்! மிக மிகச் சொற்பமான டயலாக்குகள்; கதையின் (??!) முழுமைக்கும் ஒரேயொரு மையக் கதாபாத்திரம்; சினிமா பாணி ப்ளாஷ்பேக்குகள் கிடையாது; “அந்த நாள் ஞாபகம் வந்ததே... வந்ததே...” என்ற சென்டிமெண்ட் நெடிகள் கிடையாது; ஆனால் கதை நெடுகிலும் அந்த ஒற்றை மனிதனோடு நம்மால் ஒன்றிட இயல்கிறது! இதுவுமே உலகரங்கில் ஒரு அழகான காமிக்ஸ் ஆல்பமாக வலம் சர சாத்தியமாகிறது! So இது போன்ற அளவுகோல்களுக்கு முன்பாக நமது தற்போதைய வாசிப்புக்களங்கள் ரொம்பவே ஜனரஞ்சகமான ரகம் தான் என்பதில் சந்தேகமேது? அதற்காக நமது ரசனைகளை மட்டம் தட்டுவதோ; ஒரே நாளில் கிராபிக் நாவல்களை ஒட்டு மொத்தமாய் நாம் (சு)வாசிக்கத் தொடங்கினால் தான் ஷேமம் காண்போம் என்றெல்லாம் நான் சொல்ல முனைந்திடவில்லை! நாம் இன்னமுமே எட்டிப் பார்த்திராக் களங்கள் / genre-கள் ஏகம் காத்துள்ளன என்று சுட்டிக் காட்டுவது மாத்திரமே எனது குறிக்கோள்!

அவற்றுள் ஒன்று தான் பரந்து, விரிந்த சமுத்திரங்கள் சார்ந்த காமிக்ஸ் தொடர்கள்! கடலோடு நமக்குப் பரிச்சயம் இல்லாதில்லை தான்! கேப்டன் பிரின்ஸின் துணையோடு கப்பல் பயணங்களை நாம் ரசித்துள்ளோம் ! ஆனால் அவருமே ஒரு இன்டர்போல் அதிகாரியாய் இருந்து விட்டு அப்புறமாய் கேப்டனாகப் புரமோஷன் கண்டவரெனும் போது, கதைகளில் சாகஸம் + குற்றம் புரிவோரை விரட்டிப் பிடிக்கும் பாணி மேலோங்கியிருந்ததில் வியப்பில்லை! ஆனால் நான் தற்போது குறிப்பிடுவதோ சமுத்திரங்களை மட்டுமே சாம்ராஜ்யங்களாய்க் கொண்டிருந்த அந்நாட்களது கரடு முரடான மனிதர்களை! இன்றைக்குப் போல கடல்களில் பாதுகாப்பு; வான்வெளிப் பாதுகாப்பு என்றெல்லாம் சாத்தியப்பட்டிருக்கா பழைய நாட்களில் வணிகக் கப்பல்களை; பயணியர் கப்பல்களை வழிமறித்துத் தேட்டை போடும் கடற்கொள்ளையர்கள் நிறையவே இருந்து வந்தனர்! அவர்களைப் பின்புலங்களாக்கி பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகில் நிறையவே கதைகள் / தொடர்கள் ஹிட்டடித்து உள்ளன! ரொம்ப காலமாகவே அவற்றுள் ஏதேனுமொன்றை நம் கரைகள் பக்கமாய் நகர்த்தி வர வேண்டுமென்பது எனது ஆசை! ”குடிக்கவே தண்ணி இல்லாத பயலுவோ... உனக்கு கடற்கொள்ளையர்கள் கேக்குதோ?” என்று நம்மை வழிநடத்தும் பெரும் தேவன் மனிடோ நினைத்தாரோ என்னவோ - தெரியவில்லை; இது வரைக்கும் வாகானதொரு வாய்ப்பு கிட்டவில்லை! என் மண்டைக்குள் மட்டுமாவது கப்பல் ஓட்டிக் கொண்டிருக்கும் தொடர்கள் 3 உள்ளன!

அதில் மூத்தது Bruce Hawker என்ற நாயகரின் கதை வரிசை! மொத்தம் ஏழே ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை நான் முதன் முதலில் வாய் பார்த்தது 1985-ல்! ஓவியர் வில்லியம் வான்ஸ் இதற்கான சித்திரங்களைத் தீட்டியிருக்க, பிராங்க்பர்டில் இந்தத் தொடருக்கான விளம்பரமெல்லாம் தடபுடலாய் செய்து வைத்திருந்தனர்! ப்ரூஸ் என்ற இளம் கப்பற்படை அதிகாரியின் அனுபவங்கள்; போராட்டங்கள்; கடற்கொள்ளையர்களுடனான மோதல்கள் என்று ஓடும் தொடரிது என்பதைப் பின்நாட்களில் தெரிந்து கொண்டேன்! சித்திரங்கள் மட்டுமல்ல, கதையுமே வில்லியம் வான்ஸின் கைவண்ணமே என்பதும் தெரிய வந்த போது, இந்தத் தொடர் மேல் இன்னமுமே மையல் கூடிப் போனது எனக்கு! ஆனால் துப்பாக்கி ஏந்தும் டிடெக்டிவ்களோ; மிதமான சூப்பர் நாயகர்களோ அல்லாத தொடர்களுக்குள் புகுந்திட ‘தில்‘ இல்லாத நாட்களவை என்பதால் பராக்குப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வேன்! நம்மிடம் இவற்றின் முதல் 5 ஆல்பங்கள் உண்டு; ஒவ்வொரு ஆகஸ்டிலும் அவற்றைப் புரட்டுவதிலேயே கொஞ்சமாய் விரல் ரேகைகளைத் தேய்த்துக் கொள்வது வழக்கம். ஆல்பம் 4 முதலாய் கதைப் பொறுப்பு  (ரிப்போர்டர் ஜானி புகழ்) Andre Paul Duchateau என்பதால் கதையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிராது என்பது என் எண்ணம்; ஆனால் ஏழே கதைகள் 11 ஆண்டுகளில் என்ற நிலையில் இந்தத் தொடர் முற்றுப்புள்ளி கண்டது ஏனோ? என்ற சிறு நெருடலும் உண்டு உள்ளுக்குள்!

மண்டைக்குள் சுக்கான் விரித்துப் பாய்மரம் ஓட்டும் அடுத்த தொடரானது LONG JOHN SILVER! “Treasure Island” கதையினை பள்ளிக்கூடத்திலோ; லைப்ரரியிலோ படித்திருக்கக் கூடிய எல்லோருக்குமே LONG JOHN SILVER என்ற பெயர் புதிதாக இராது தான்! அதில் வரும் அந்தக் கடற் கொள்ளையனின் கதி என்னவாகி இருக்குமோ? என்ற கேள்விக்குறியினைக் கையில் எடுத்துக் கொண்டு கதாசிரியர் சேவியர் டோரிசன் (!!!) புறப்படுகிறார் - ஒரு அட்டகாசமான 4 பாகக் கதையினை உருவாக்கிட! ஒரு டெரரான கதைத் தொடருக்கு இன்னமும் கொஞ்சம் சிறப்பான ஓவியர் பணி செய்திருக்கலாமோ? என்ற சின்ன குறைபாட்டைத் தவிர்த்து வேறெந்தச் சலனமும் நேராது, தடதடக்கும் இந்த 4 பாகத் தொடர் – கடலில் கோலோச்சி வந்த கொலைவெறிக்கு அஞ்சாத மனிதர்களின் பக்கமாய் வெளிச்சத்தைத் திருப்புகிறது! CINE BOOK புண்ணியத்தில் ஆங்கிலத்திலும் வெளிவந்து ஹிட்டடித்த இந்தத் தொடர் எனது “விட்டேனா பார்” பட்டியலில் தொடர்ந்து வருகிறது!


அந்தப் பட்டியலில் அடுத்து வருவது அதகள சித்திரங்களோடு வாய்பிளக்கச் செய்து வரும் “பராகுடா” தொடரே! ஆறு ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடருக்கு ஓவியர் ஜெரெமி போட்டுள்ள சித்திரங்கள் ஒரு massive highlight. ஒரு அட்டகாசமான சினிமா எடுக்கக் கூடியதொரு கதைக்கருவோடு பயணிக்கும் இந்தத் தொடரில் கொஞ்சமே கொஞ்சமாய் நிர்வாணம்; காதல் காட்சிகளென்றும் உண்டு தான்! ஆனால் முறையாக எடிட்டிங் மட்டும் செய்து இந்தக் கடற்கொள்ளையர் அணியை நம்மிடையே களமிறக்கினால் தண்ணீர் பஞ்சமே கூட ஒரு தடையாக இராதென்றே சொல்வேன்! சில பல செயலாளர்கள் உருவாக்கக் கூடிய ஜொள் ஜலப் பிரவாகத்தில் கப்பல்கள் அட்டகாசமாய் பயணம் செய்து விடுமென்பேன்! வண்ணத்தில் மட்டுமன்றி, இந்தத் தொடரின் டிராயிங்குகளை நான் b & w லும் பார்த்து மிரண்டே போனேன்! பாருங்களேன் ஒரு சித்திரத் திருவிழாவை!


முக்கிய குறிப்பு : இது சீசன் 2 -வில் முயற்சிக்கக் கூடிய இதழ்களுள்  ஒரேயொரு slot-க்கான தேர்வுகள் மட்டுமே  ! இன்னும் வெவ்வேறு genre-களில், வெவ்வேறு கதைத் தொடர்கள் waiting - இன்னொரு வாரத்துப் பதிவில் தலை காட்டும் பொருட்டு ! 

So சூப்பர் 6 - Season 2 எனும் இணைதடத்தில் நம்மள் கி ஆதர்ஷ அங்கிள்ஸ் சவாரி செய்வதைத் தாண்டியும் பார்வைகளை லயிக்க அனுமதிக்கலாமெனில் மேற்கண்ட மூன்றில் ஒன்றை இறக்குமதி செய்யலாம். ‘நஹி... நஹி... பழசே இப்போதைக்குப் பொன்!‘ என்று நீங்கள் கருதினால் – இருக்கவே இருக்கு அடுத்தாண்டின் ஆகஸ்ட்! So பந்து நம்மள் கோர்ட்டிலிருந்து – நிம்மள் பக்கம் இப்போது வர்றான்! அதை இன்னா பண்றதுன்னு நிம்மள் சொல்றான்; வழுக்கையன் கேட்கிறான்! டீக் ஹை?

அப்புறம் ஆகஸ்ட் எனும் அடுத்த இலக்கு வைகை எக்ஸ்பிரஸ் போல விரைந்து நெருங்குவது புரிகிறது! இம்மாதம் b & w இதழ்களே கிடையாது; சகலமுமே கலர் என்பது highlight! And பல மாதங்கள் கழித்து வண்ணத்தில் தலைகாட்டும் டைலன் டாக்கும், டெக்ஸ் வில்லரின் மறுபதிப்பும் – அந்த மீடியம் சைஸில் விருந்து பரிமாற உள்ளனர்! “மரணத்தின் நிறம் பச்சை” சுமார் 30 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பாவதால் – நம்மில் பலருக்கும் இதுவொரு புது வாசிப்பனுபவமாகவே இருந்திடும் என்று தோன்றுகிறது! இதோ – அந்த க்ளாசிக் சாகஸத்தின் தற்போதைய அட்டைப்படத்தின் preview!


போனெல்லியின் ஒரிஜினல் டிசைனின் ஈயடிச்சான் காப்பியிது – நமது ஓவியரின் கைவண்ணத்தில்! And உட்பக்கங்களும் வண்ணத்தில் சும்மா கலக்குகின்றது! மாதம்தோறும் அந்தப் பெரிய சைஸில் பிரான்கோ- பெல்ஜியக் கதைகளை வண்ணத்தில் படித்துப் பழகி விட்டு, இந்த மீடியம் சைஸ் ரொம்பவே handy ஆகப் படுகிறது என்பேன்! பார்க்கலாம் – உங்களுக்கும் அவ்விதமே தென்படுகிறதாவென்று !

அப்புறம் – ஈரோட்டில் “இரத்தக் கோட்டை” project வேக வேகமாய் ஓடி வருகிறது! நேரில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் – சிரமம் பாராது இங்கே கைதூக்கிக் காட்டினாலோ; ஒரு மின்னஞ்சல் மூலம் 25/07/2017-க்கு முன்பாக உறுதி செய்தாலோ, உங்கள் பிரதிகளை ஈரோட்டுக்கு நாங்கள் எடுத்து வர வசதியாக இருக்கும்! So- please do let us know!

அப்புறம் அந்த Early Bird badges தயாராகி வருகின்றன! இவற்றுள் உங்கள் சாய்ஸ் எதுவோ guys?





மீண்டும் சந்திப்போம்! Have a lovely weekend ! Bye for now!

Monday, July 10, 2017

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஆர்டின் வாழ்க !!

நண்பர்களே,

வணக்கம். நிறைய தடவைகள் ஹாட்லைனிலும், நமது இன்ன பிற மாட்லாடல்களின்போதும் செப்பிய அதே விஷயம் தான் ; ஆனால் இன்னொரு முறை இங்கே சொல்லி வைத்தால் தப்பாகாது என்று தோன்றியது. அரை நிஜார்களும், பள்ளிப் பைகளும் நம்மை அலங்கரித்த - or rather உங்களை அலங்கரித்த நாட்களில் - ஏப்ரல் & மே மாதங்கள் ஒட்டுமொத்தமாய் சோன்பப்டியாய் இனித்திடுவது வழக்கம். மாறாக ஜூன் & ஜூலை மாதங்கள் வேப்பங்காயாய்க் கசப்பது வாடிக்கை ! So என்னை அறியாமலே, "ஜூலை என்றாலே சுமாரான விற்பனைகள்" என்றதொரு template தலைக்குள்  நிலைகொண்டு விடும் ! 

ஆனால் -

இந்த ஜூலை 5 -ம் தேதி உங்கள் கைகளுக்கு நமது கூரியர் கவர்கள் கிடைத்த நாள் முதலாய் - நமது அலுவலக போன்களிலும் சரி ; ஆன்லைன் ஸ்டோரின் தளத்திலும் சரி - அதகள அனல் பறக்கின்றது !! மாமூலாய் 'ஹாவ் ' என்று கொட்டாவி விட்டபடிக்கே நம்மைப் பார்த்திடும் சில ஏஜெண்ட்கள் கூட, " சிக் பில்னு ஏதோ ஒரு  புக் வந்திருக்காமே .....அதிலே மறக்காமே 20 போட்டிடுங்க !!" என்று பரபரக்கிறார்கள் ! "இது limited edition ; ஆகையால் கடன் கிடையாது sir !" என்று நம்மவர்கள் சொல்லும் போதும் முகம் சுளிக்காது இயன்ற முன்பணத்தைத் தட்டி விடுகிறார்கள் ! 

ஆன்லைனிலோ திருவிழாக் கோலம் தான் !! வழக்கமாய் வார நாட்களில் மாயாவிகாரு pack ஒன்றிரண்டு போணியாகும் ; டெக்சின் சில இதழ்களைத் தேடி பிடித்து ஆர்டர் செய்யும் சில புண்ணிய ஆத்மாக்களின் தலைகள் தென்படும். ஆனால் கடந்த நாலைந்து நாட்களாய் அண்டர்டேக்கர் ஒரு பக்கம் ; LADY S இன்னொரு பக்கம் ; லயன் # 300 ; ஜூலை pack  - என்று அதகளம் அரங்கேறி வருகிறது !! பற்றாக்குறைக்கு LADY S ஆங்கில Cinebook இதழ்களும் பறந்து வருகின்றன !!

But எல்லாவற்றிற்கும் சிகரம் நமது ஆர்டினின் அழகுமுகம் ஜொலிக்கும் சிக் பில் ஸ்பெஷல்லின்- அதிரடி விற்பனை தான் !! பொதுவாய் ஆன்லைனில் நண்பர்கள் கொள்முதல் செய்திடும் போது - கார்ட்டூன் இதழ்களுக்கு கல்தா கொடுத்து விடுவது வாடிக்கை ! ஆனால் இம்முறையோ நிலைமையில் ஆரோக்கியமான மாற்றம் ! 75 % ஆர்டர்களில் உட்ஸிட்டி கும்பல் இடம்பிடித்துள்ளது ! Of course - "கார்ட்டூன்களுக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம் !" என்று தொடர்ந்திடும் வாடிக்கையாளர்களும் உள்ளனரே ; but இம்மாதம் நிறைய கார்ட்டூன் எதிர்ப்புக் கோட்டைகளை ஆர்டினின் கள்ளமிலாப் புன்னகை சிதறச் செய்துள்ளது அப்பட்டம் !! இன்றைக்கு நம்மிடையே மட்டுமொரு தேர்தல் நடத்தி அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதாயின் 100 - 0 என்ற வோட்டு எண்ணிக்கையில் டாக்புல்லின் சகா வெற்றிவாகை சூடி ஷெர்வானி மாட்டிக்கொண்டு நிற்பது நிச்சயம் !! வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஆர்டின் சார் வாழ்க !! 
சூப்பர் 6 அறிவித்த போது நம்மிடையே கொஞ்சமாய் சலனங்கள் ; இது இப்போ தேவை தானா ? இந்த விலைகள் சரி தானா ? என்ற விவாதங்கள் தலைதூக்கியதை நாமறிவோம் ! But ஆறில் நான்கு உங்களை எட்டிப் பிடித்து விட்ட நிலையில் - இந்தாண்டின் சந்தோஷத் தருணங்களில் ஒரு கணிசமான பங்கை SUPER 6 நமக்குத் தந்துள்ளதை மறுப்பதற்கில்லை என்பேன் ! என் மூக்கும் ; உங்கள் பணங்களும் சேதாரமின்றித் தப்பித்துள்ளதற்கு ஆண்டவனுக்கு, லக்கி லூக்குக்கும் ; இளவரசிக்கும் ; ஜெரெமியாவுக்கும் ; சிக் பில் & கோ.வுக்கும் அந்த வரிசையில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் !!

Last but not the least - சூன்ய மாதமாய் மண்டைக்குள் நிலைகொண்டிருக்கக்கூடிய ஜூலை மாதத்தை ஒரு அட்டகாச அதிரடி மாதமாய் மாற்றி வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பவுண் மோதிரம் போட ஆசை தான் ; but சங்க நிதிநிலைமைக்குச் சவால் விடும் நம்மள் கி நிதிநிலைமை அதற்கு ஒத்துழைக்க மறுப்பதால்  - பவுனுக்குப் பதிலாய் பன் மாத்திரமே  சாத்தியமாகிறது ! ஈரோட்டில் மறக்காமல் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் guys !! 

Jokes apart - இங்கு கூத்தும், கும்மாளமுமாக அரங்கேறும் ஒவ்வொரு நாளோடும் , நமது இதழ்களின் ஆரோக்கியத்திற்கும் ஒரு நேரடித் தொடர்பு இருப்பதை சத்தியமாய் மறப்பதற்கோ ; மறுப்பதற்கோ நான் தயாரில்லை ! உங்கள் ஒவ்வொருவரின் வருகைகளிலும், அளவளாவல்களிலும்  - நிறைவது கல்லா மாத்திரமல்ல guys ; உள்ளமுமே !! நீங்கள் ஒவ்வொருவருமே காமிக்ஸ் வாசகர்கள் ; ஆர்வலர்கள் மட்டுமல்ல - காமிக்ஸ் தேசத்துத் தூதர்களுமே ! Keep rocking Ambassadors !!!
P.S : கடந்த பதிவின் load more  இறுதிக்கட்ட நெரிசலுக்குள் உங்களது கதை விமர்சனங்கள் புதைந்து கிடப்பின், அவற்றை இங்கே ஒரு மீள்பதிவு செய்திடுங்களேன் all ? Thanks !

Sunday, July 09, 2017

ஒரு ஸ்பெஷல் மாதத்தின் மறுபக்கம்...!

நண்பர்களே,

உஷார் : நீஈஈஈளமாய் செல்லும் பதிவிது !! 
வணக்கம். ‘எப்படி இருந்த நான் – இப்டி ஆயிட்டேன்!‘ என்று பீற்றல் தொனியடிக்காதொரு விதமாய்ச் சொல்லி்ப் பாருங்களேன்... அது தான் எனது தற்சமயத்து மைண்ட் வாய்சாக இருந்திடும் ! நான் சொல்ல முனைவது இரு வாரங்களுக்கு முன்பாய் என் வதனமிருந்த லட்சணத்தைப் பற்றியும்  ; குமரிமுத்துவின் ‘யிஹாஹாஹா‘ இளிப்பை imitate செய்யும் பாணியில் தற்போது என் முகரையில் குந்திக் கிடக்கும் புன்னகையைப் பற்றியுமே ! இந்தாண்டின் இறுதியில், அதற்கான சந்தர்ப்பம் அமையும் போது ஜுன் மாதம் நானடித்த பல்டிகளின் பரிமாணங்களைப் பற்றிச் சொல்ல முயற்சிக்கிறேன்! அந்த சமயம் புரிந்திடும் - சில வாரங்களுக்கு முன்பு வரையிலும் சொக்காய் மாட்டிய உராங்குட்டானாய் நான் சுற்றித் திரிந்ததன் பின்னணி! And இன்றைக்கு – இதழ்களை ஒருசேர உங்கள் கைகளில் சேர்ப்பித்தான பின்னே, மின்னல் கீற்றுகளாய் பதிவாகிடும் உங்களின் பாராட்டுக்களை மெதுமெதுவாய் (சு)வாசிக்கும் போது - அந்தச் சிரம நாட்களின் நினைவுகள் எல்லாமே சோப்புக் குமிழிகளாய் கரைந்து போக – சந்தோஷம் மட்டுமே தங்கி நிற்பது புரிகிறது ! அவையடக்கம், ஆட்டுக் குட்டி அடக்கம் என்று சகலத்தையும் சித்தே ஓரம்கட்டி விட்டு – இந்த ஸ்பெஷல் தருணத்தைக் கொஞ்சமே கொஞ்சமாய் உள்வாங்கிக் கொள்ளும் சபலம் அலையடிக்கிறது உள்ளுக்குள்!

பாராட்டுக்களும் புதிதல்ல; பருமனான இதழ்களும் நமக்கு அந்நியமல்ல தான்! ஆனால் இந்தத் தருணம் ஏனோ இதற்கு முன்பான நாட்களை விடவும் ஒரேயொரு படியாவது பிரத்யேகமாய்த் தோன்றுகிறதென்று நானும் மண்டையைச் சொரி்ந்து பார்த்தேன் ! I might be wrong – ஆனால் இந்தப்புள்ளியின் வேர் நிற்பது ஓரிரு மாதங்களுக்கு முன்னர் என்றே என் உள்மனது சொல்கிறது ! 2 ‘மைக்கேல்-மதன-காமராஜன்‘ பாணிக் களவாணிக் கிழவிகளிடம் பாஸ்போர்ட்டைப் பறிகொடுத்துப்பட்ட அல்லல்கள் ; பொதுவெளியில் அம்சமாய் நடத்தப்பட்ட “கழுவிக் கழுவிக் காக்காய்க்க்கு ஊற்றும் படலம்” என்று ஏதேதோ அரங்கேறியிருந்த சிரம நாட்களவை ! முந்தையதைத் தாண்டி வரும் பாதைதனில் எனது இத்தனை காலத்து நிழல் தனக்கென ஒரு அடையாளத்தோடு நிஜமாவதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது! பிந்தையதைக் கடக்க முனைந்த வேளைகளிலோ, எதிர்பார்ப்பிலோ, மெய்யான அன்பின் விஸ்வரூபத்தை தரிசிக்கும் வரம் கிட்டியது ! Maybe பேனாவை டிராயரில் போட்டுப் பூட்டி விட்டு, ஓய்வெனும் சொகுசுக்குள் புகுந்திடும் நாளொன்று புலரும் போது, இந்த 2 நிகழ்வுகளுமே என்னையே எத்தனை மாற்றியமைத்து விட்டிருந்தன என்பது முழுசுமாய்ப் புலனாகுமோ – என்னவோ தெரியவில்லை ! பொதுவாய் 30 -கள் ; அதனோடு கூட்டணி போடும் முதல் நரைமுடியின் வருகை; 40கள்... கையோடு கூட்டி வரும் முகச்சுருக்கங்கள்; 50கள்... துணைக்குக் கூடவே வரும் முதுமையின் அறிமுகம் என்பனவெல்லாம் சற்றே டர்ராக்கிடும் சங்கதிகள் தான்! ஆனால் நானோ 50ஐ எட்டித் தொட்ட நாளை எண்ணி சந்தோஷமே கொள்கிறேன் – வாழ்க்கையின் சில அசாத்தியப் பாடங்களை கற்றுணரும் பொழுதாக இது அமைந்துள்ளதை எண்ணி ! 

“ஒரு முடியா இரவு”க்குமே இந்த சந்தோஷத்தில் ஒரு பங்குண்டு என்பேன் ! நிறைய வித்தியாசமான one-shots; கிராபிக் நாவல்கள் என்று ரவுண்ட் கட்டி  அடித்திருக்கிறோம் தான் ! “க்ரீன் மேனர்” போன்ற masterpieces-களுமே நமது வாசிப்புப் பட்டியலில் இருந்துள்ளன தான் ! So இந்த black & white கிராபிக் நாவலைக் களமிறக்கிய போது எனக்குள் கொஞ்சம் கூடப் பதட்டம் இருக்கவில்லை! சித்திரங்கள் விகாரமாகவும்; கதையில் நாயக அந்தஸ்துக்கு ஈ-காக்காய் கூடக் கிடையாதெனினும், இதனை நீங்கள் நிச்சயமாய்த் தூக்கிப் போட்டு உதைக்க மாட்டீர்களென்ற நம்பிக்கை இருந்தது! ரசனை எனும் ஏணியில் நாம் ஒருத்தரையொருத்தர் பற்றிக் கொண்டே ஏறியுள்ள படிகள் நிறையவே என்ற யூகத்தில் பிறந்த தைரியமிது ! அவார்ட் வாங்கப் போகும் கதையெல்லாம் கிடையாது தான் ; சிலருக்குப் படு மொக்கையாகத் தெரிந்திருக்கவும் கூடும்தான் என்பதும் புரியாதில்லை ! ஆனால் இந்தியக்  காமிக்ஸ் உலகில் – ஆங்கிலம் அல்லாததொரு பிராந்திய மொழியினில் இது போன்ற கதையினை பரீட்சார்த்தமாய் என்றில்லாது, ஒரு பிரத்யேக சந்தாவின் அங்கமாகவே களமிறக்கச் சாத்தியப்படக் கூடியது நமது மொழியில் மட்டுமே என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது ! So “ஒரு முடியா இரவு” வெற்றியா - தோல்வியா ? என்ற கேள்வியே எழவில்லை எனக்குள் ! இந்த பாணிக் கதைகளையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டதொரு வாசக வட்டம் நம்மது என்பதில் மட்டற்ற கர்வமே மிஞ்சியது ! 

தொடர்ந்தது அதகளம் – “அண்டர்டேக்கர்“ அவதாரில் !! And அதற்கு நீங்கள் தந்த வரவேற்பின் வீரியமானது எங்களது பேட்டரிகள் இரும்புக்கை மாயாவியின் கொள்ளுப்பேரன் வரைக்கும் கரெண்ட் இழுத்துக் கொள்ளும் அளவிற்குத் தேவையான சார்ஜை உள்வாங்கிக் கொள்ளும் விதமாயிருந்தது ! ஒரு நெகடிவ் நாயகன் வெற்றி காண்பது புதிதல்ல தான்; ஆனால் இம்முறை கிட்டிய வெற்றியின் பரிமாணமே முற்றிலும் வேறானது ! சில நாட்களுக்கு முன்பாய் “இவ்வார இதழில் சமீப இதழைப் பற்றிச் சில வரிகள்” என்றதொரு மெசேஜ் வந்திருந்தது எனது மொபைலில் ! அடடே... என்றபடிக்குப் பார்த்தால் “குமுதம்” குழுமத்திலிருந்து !! ஏற்கனவே குங்குமம் இதழினில் 6 பக்கக் கவரேஜ் என்ற கேக்கே – மேஜை மீது கம்பீரமாய் நின்று கொண்டிருக்க, “அண்டர்டேக்கர்” குமுதத்தில் ஈட்டிய கவனத்தை கேக் மீதான செர்ரிப் பழமாய்ப் பார்க்கத் தோன்றியது ! இரு பதிப்புலகப் பெருந்தலைகளுக்குத் தலைவணங்குவோம் !! 
இந்தச் சிற்சிறு சந்தோஷங்கள் சகிதம் நகர்ந்த வண்டி – லயன் # 300 & முத்து # 400 என்ற மைல்கற்களை ஒருங்கே தொடுமொரு சுபயோக சுபதினத்தை எட்டிய போது உள்ளுக்குள் ஒரு இனம்புரியாப் பதட்டம் & பரபரப்பு குடிகொண்டது ! நமது ஸ்க்ரிப்ட்களை ஆண்டவன் தான் எழுதுகிறார் என்பதில் என்றைக்குமே எனக்குச் சந்தேகங்கள் இருந்ததில்லை ; so ஒரு சந்தோஷ மாதத்தை நமக்கு சாத்தியமாக்கிய அவரே நமது பணிச்சுமைகளைச் சமாளிக்கும் சக்தியையும் தந்துவிடுவாரென்ற நம்பிக்கையோடு தான் ஜுன் முழுவதையுமே ஒப்பேற்றினேன் ! 

முதன் முதலாய் பணிகள் நிறைவு கண்டது ‘Lady S’ ஆல்பத்தினில் தான் ! வான் ஹாம்மேவின் படைப்பு எனும் போதே – இதனில் என்ன எதிர்பார்த்திடலாமென்ற எதிர்பார்ப்புகள் ஏகமாய் இருக்குமென்று புரிந்தது ! அதே போலவே கதை நெடுகிலும் "வா.ஹா."வின் முத்திரைகள் இரைந்து கிடக்க, இந்தக் கதை நிச்சயமாய் நம்மை வசீகரிக்கும் என்ற நம்பிக்கை வேரூன்றத் தொடங்கியது...! இவர் மாடஸ்டியும் கிடையாது... ஜுலியாவுமல்ல ; பிரான்கோ-பெல்ஜிய சமுத்திரத்திலிருந்து நம் பக்கமாய் ஒதுங்கியிருக்கும் முதல் (?? வேறு யாரேனும் உண்டா ?) லேடி ஸ்டார் என்ற வகையில் இவருக்கொரு சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைத்திடல் சாத்தியமே என்றுபட்டது! ஆங்கிலத்தில் ஏற்கனவே இவரது கதைகளைப் படித்திருக்கக் கூடிய நண்பர்களுமே நம்மிடையே கணிசமாய் இருக்கக் கூடும் என்பதால் மொழிபெயர்ப்பிற்கு வழக்கத்தை விடவும் கூடுதலாக கவனம் தர விழைந்தோம் ! என்ன – நமது இரவுக் கழுகாருக்குத் தந்திடும் அந்த ‘பன்ச்‘ டயலாக் ட்ரீட்மெண்டோ; கார்டூன்களில் அவசியமாகிடக் கூடிய வார்த்தை விளையாட்டுக்களுக்கோ இங்கே தேவையில்லை என்றமட்டில் – ஒரிஜினலின் வரிகளை இறுகப் பற்றிக்கொண்டு சவாரி செய்தாலே கரை சேர்ந்து விடுவோமென்று பட்டது ! ஒரிஜினலாய் பேனா பிடித்தவர் காமிக்ஸ் உலகப் பெருந்தலை எனும் போது எக்ஸ்ட்ரா நம்பர்களை அவரது ஸ்க்ரிப்ட்களில் போட்டு விஷப்பரீட்சை செய்யும் தில்லும் நமக்கில்லை ! Early days தான்; இன்னமும் உங்களுள் பலர் “விடைகொடு ஷானியா” வுக்கு ஹலோ சொல்லியிருக்க வாய்ப்புகள் குறைச்சலே என்பதும் அப்பட்டமே ! But – அம்மணி சோடை போக மாட்டாரென்ற gut feel மாத்திரம் தங்குகிறது என்னுள் ! Maybe இந்த ஞாயிறை ஷானியாவோடு செலவிடும் திட்டமிருப்பின் தொடரும் நாட்களில் உங்கள் அபிப்பிராயப் பகிர்வுகள் எவ்விதமிருக்குமென அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பேன்!

‘சட்‘ டென்று முடிந்த அடுத்த இதழ் “சில்வர் ஸ்பெஷல்” தான்! மறுபதிப்பு எனும் போதே அதன் பொருட்டு பெரிதாய் மெனக்கெட அவசியமிராது என்பதால் – பாதிக் கிணறை தாண்ட சிரமமே இருக்கவில்லை ! And அதனில் இடம்பிடித்திருந்த புதுக்கதையுமே – நம்மைப் பொறுத்தவரையிலும் அரதப் பழசே ! சுமார் 15 வருடங்களாகவே மேஜைக்குள் குறட்டை விட்டுக் கொண்டிருந்த 3 ஜான் சில்வர் கதைகளுள் இதுவும் ஒன்று! ஏனோ இடைப்பட்ட தருணத்தில் இந்தப் பைலட் தம்பி கொஞ்சம் outdated ஆகத் தோன்றத் துவங்க – காரிகன் & கம்பெனியோடு பரண் வாசம் செய்து கொண்டிருந்தார்! சென்றாண்டின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் – சந்தா D யின் மும்மூர்த்தி ஆதிக்கத்தை லேசாய் மட்டுப்படுத்தும் எண்ணம் தலைதூக்கிய போது இவரது ஞாபகம் வந்தது! And 'இவருக்கும் இத்தனை ரசிகர்களா ?' என்று ஆச்சர்யப்பட வைத்த உங்கள் பின்னூட்டக் கத்தைகள் தொடர்ந்த போது “சில்வர் ஸ்பெஷல்” சிந்தனை உதித்தது! இந்த இதழினை நீங்கள் rate செய்திடுவதைப் பொறுத்து – தொடரும் ஆண்டுகளில் அந்தப் பாக்கி 2 கதைகளைக் கண்ணில் காட்டுவதா? என்று தீர்மானித்தாக வேண்டும். 

And இந்த இதழில் இடம்பிடித்திருந்த இரண்டாம் கதை தொடர்பாய் நண்பர்கள் செந்தில் மாதேஷ் & jegang atq நேற்று இட்டிருந்த பின்னூட்டங்கள் எனக்குப் புரிந்திடவேயில்லை ஆரம்பத்தில்  ! "இது ஜான் சில்வரின் கதையே அல்ல ; ஜான் ஸ்டீலின்சாகசம் ; கதை முடியும் கடைசி 2 பக்கங்கள் மட்டும் வேறொரு ஜான் சில்வர் கதையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன !" என்று அப்புறமாய்க் கொஞ்சம் விளக்கமான பின்னூட்டம் தொடர்ந்த போது தான் - "இது என்னடா புதுக் கூத்து ?" என்று நமது புக்கைக் கையில் எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன் ! நம்மிடமிருந்த அதன் ஆங்கில bromide பக்கங்களையும் மறுபடிக்குப் புரட்டினேன் ! ஸ்பஷ்டமாய் "A John Havoc Casefile" என்று எழுதியிருக்க, இதில் நண்பர்களுக்கு சந்தேகம் எழுவது எவ்விதமென்று யோசிக்க ஆரம்பித்தேன். (John Havoc தான் தமிழில் ஜான் சில்வர் என்று பெயர் மாற்றம் கண்டவர் என்பது புதியவர்களுக்கான கொசுறுச் சேதி !) கூகுள் ஆண்டவர் சகல சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தவர் என்பதால் JOHN HAVOC என்று டைப் அடித்து விட்டு - இந்தக் கதையின் ஆங்கிலப் பெயரையும் (ONE FALSE STEP)சேர்த்தே டைப் செய்தேன் ! கிட்டிய பதில்களை சில நிமிடங்கள் பார்வையிட்ட போதே சகலமும் புரிந்தது !! 

நண்பர்களின் கூற்று நூற்றுக்கு நூறு சரியே ! 

இந்தக் கதை 1957-ல்  ஜான் ஸ்டீலின் சாகசமாகவே ஒரிஜினலாய் வெளிவந்துள்ளது - FLEETWAY-ன் Thriller Library-ல் ! இதோ அதன் ஒரிஜினல் அட்டைப்படம் - கதை பெயரோடு ! 
பின்னாட்களில் ஜான் ஸ்டீல் கதைகள் பரணுக்குச் சென்று விட, TOP SECRET Library என்றதொரு வரிசையில் நம்மவர் John Havoc (என்ற ஜான் சில்வர்)  கதைகள் வெளியாயின ! அதற்குமே 40 ஆல்பங்களோடு மங்களம் பாடப்பட்டது ! இந்நிலையில் 1980-களில் TOP SECRET HOLIDAY SPECIALS என்றதொரு தொகுப்பினை அறிமுகம் செய்து - ஒவ்வொன்றிலும் நான்நான்கு John Havoc (சில்வர்) கதைகளை மறுபதிப்பு செய்திருந்தனர் ! அவ்விதம் 1982 -ல் மறுபதிப்பான தொகுப்பினில் தான் நமது இம்மாத சில்வர் ஸ்பெஷல்லின் 2 கதைகளுமே இடம் பெற்றிருந்தன ! 
அந்த இரண்டாம் கதையை கொஞ்சம் உற்றுப் பார்த்த போதுதான் பகீரென்று உண்மை புலனானது ! John Havoc மறுபதிப்புகள் அடங்கிய அந்த இதழின் தயாரிப்பின் போது - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு அவர்களுக்கு உரிய JH கதைப்பக்கங்கள் கிட்டியிருக்கவில்லை போலும் ! 'டக்' கென்று 1957-ல் வெளியான ஜான் ஸ்டீல் கதையினை எடுத்து, பக்கங்கள் நெடுக "Steel" என்ற பெயர் வரும் இடங்களிலெல்லாம் "Havoc" என்று மட்டும் மாற்றிவிட்டு - அந்தத் தொகுப்பைத் தயாரித்து விட்டிருக்கிறார்கள்! So ஏதோவொரு அவசியம் + அவசரத்தின் பொருட்டு,புராதன "ஸ்டீல்" - லேட்டஸ்ட் "ஹேவக்" ஆக உருமாற்றம் கண்டிருக்கிறார் - - ஆனால் கதை பெயரில் மாற்றமின்றி  ! ஆக "இவரே அவர் ; அவரே இவர் " என்ற நியமனத்தை படைப்பாளிகளே செய்துள்ளனர்! இது எதுவுமே சனிக்கிழமை மாலையின் ஆராய்ச்சி வரைக்கும் நானே அறிந்திருக்கவில்லை ! வித விதமான ஆர்டிஸ்ட்கள் பணியாற்றியிருப்பார்கள் ; so சித்திரபாணிகளில் தெரியும் வேற்றுமைகள் அதன் பொருட்டே இருந்திருக்குமென்று எண்ணியிருந்தேன். இப்போது நிதானமாய் ஆங்கில bromide களைப் பார்க்கும் போது தான் HAVOC என்ற பெயர் எழுதப்பட்டுள்ள சகல இடங்களிலும், ஒரிஜினலிலிருந்து மெலிதான கையெழுத்து வேற்றுமை தட்டுப்படுவதைக் கவனிக்க முடிகிறது ! கடலளவு கதைகள் கொண்டிருந்த FLEETWAY-க்கே இப்படியொரு நெருக்கடியா ? என்றே நினைக்கத் தோன்றியது ! And நம்மவர்கள் அளவுக்கு இங்கிலாந்தின் ரசிகர்களுக்குக் கழுகுக் கண்கள் கிடையாது போலும், என்றும் நினைத்துக் கொண்டேன்  !!

"மறுபதிப்புகளுக்கு மெனக்கெடத் தேவையில்லை !"  என்ற எண்ணம் அபத்தமானதென்று மண்டையில் தட்டிச் சொன்ன இதழ் நமது உட்சிட்டி கூத்துப் பார்ட்டிகளின் “சிக் பில் க்ளாசிக்” தான் ! For starters – மே & ஜுன் மாதங்களில் நமது டிசைனர் பொன்னன் வேறு பல வெளிவேலைகளின் பொருட்டு பிஸியாக இருந்திட – நம் தரப்பில் ஏகமாய் செருப்புத் தேய்மானம் ! எனக்கோ இங்கே பொறுமையெல்லாம் கரைந்து கொண்டிருக்க – நமது DTP அணியைக் கொண்டொரு டிசைன் போடத் தொடங்கியிருந்தேன்! ஆனால் உங்கள் நல்ல காலமோ – எங்கள் நல்ல காலமோ; பொன்னன் பரபரவென்று பணி செய்திட – அட்டைப்படம் செமத்தியாய் ‘செட்‘ ஆகிவிட்டது! கதைகள் இரண்டுமே மறுபதிப்புகள் தானென்ற போதிலும் – “விண்ணில் ஒரு எலி”க்கு முழுசுமாய் புது மொழிநடை தந்தாகும் நெருக்கடியிருந்தது! அங்குதான் அனாமதேயத்தை விரும்பியதொரு நண்பரின் ஒத்தாசை கிட்டியது – முழு நீள ஸ்க்ரிப்டின் வடிவத்தில் ! “பேரெல்லாம் வெளியே தெரிய வேண்டாமே சார்....வாசகர்களுக்குப் பிடிக்காது போய் விட்டால் கோடையிடியாய் மொத்தித் தள்ளி விடும் ஆபத்திருக்குமே!” என்று அவர் சொன்னதால் – அடித்தே கேட்டாலும் அவரது அடையாளத்தை வெளியிடுவதாகயில்லை நான் ! 

என்ன ஒரே சிக்கல் – நண்பர் ரசித்து எழுதியிருந்த ஸ்க்ரிப்டானது நீ-ள-மோ ; நீ-ள-ம் ! அவற்றைக் கத்திரி போடாது அச்சுக்குக் கொண்டு சென்றிருப்பின், நம் உட்சிட்டி ஆசாமிகள் சவாரி செய்த பலூன் தெரிவதற்குப் பதிலாய் வசன பலூன்களே பிரதானமாய்த் தெரிந்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி ‘கச்சக்‘; ‘கச்சக்‘ என்று கத்திரி சுழற்றத் தொடங்கினேன்! ஸ்க்ரிப்டுக்குள் நுழைந்த பிற்பாடு – சொரிந்து பழகிய கையை சும்மாயிருக்கச் சொல்லுவது எத்தனை சிரமம் என்பதை உணர முடிந்தது! “ஹை... இதை இப்படி மாற்றி எழுதலாமோ ? அதை அப்படிக் கொஞ்சம் நோண்டிப் பார்க்கலாமோ ?” என்ற கையரிப்பு கடுமையாகப் போட்டுத் தாக்க – கத்தரியோடு கைவரிசையை நிறுத்திக்கொள்ள படாதபாடு பட்டேன் ! ஒருவழியாய் டயலாக் நீளங்களையும் மட்டுப்படுத்தி விட்டு “ஷப்பாடா” என்று பெருமூச்சு விட்டபடிக்கு நிமிர்ந்தால் மைதீன் ஆஜராகி நின்றான் – “அண்ணாச்சி, இந்தக் கதை பெரிய சைசிலே 30 பக்கங்கள் தான் வந்திருக்குது!” என்றபடிக்கு ! அந்நாட்களில் 30 பக்க ஒரிஜினலை 64 பக்க சின்ன இதழாக வெட்டி ஒட்டியிருக்கிறோம் போலும் என்று புரிந்த போது – குழாய் ஓட்டையை விரலால் அடைத்துக் கொண்டு பொறுமையிழந்து நிற்கும் மைதா மாவு மண்டை ஷெரீப் டாக்புல்லின் அவஸ்தை புரிந்தது எனக்கு ! "ஏற்கனவே லேட்... இன்னமும் லயன் # 300 காத்துக் கிடக்குது; இந்த அழகில் இன்னுமொரு 14 பக்கங்களைத் தேற்றணுமா?! ஆண்டவா!!” என்றபடிக்கே இந்த இதழுக்கான ஒரிஜினல் கலர் file-களுக்குள் தலை நுழைத்த போது 10+4 பக்க சிறுகதைகள் இரண்டு காத்திருப்பது புரிந்தது! அந்நாட்களில் ரூ.2/- விலைக்குள் இதழ்களை அடக்கிடும் கட்டாயம் இருந்ததால் அந்தத் துக்கடாக் கதைகளைக் கடாசிவிட்டு மெயின் ஸ்டோரியை மட்டுமே வாங்கியிருந்திருக்கிறோம் ! ஆனால் இப்போது standard ஆக எல்லா பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பங்களின் 44 அல்லது 46 பக்க சாகசங்களை நாம் கத்திரி போடாது வெளியிடுவதால் - மொத்தமாய் அந்தச் சிறுகதைகளும் சேர்ந்தே வந்திருந்தன !!"ஆஹா..இனிமேல் இதனை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்து வாங்கி  ; அப்புறமாய்த் தமிழாக்கம் செய்து 14 பக்கங்களைக் கரை சேர்ப்பதற்குள் கிழவியே குமரியாகிப் போவாளே !!" என்று சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளையில் ‘படக்‘கென்று உதித்தது ஞானோதயம் ! காத்திருக்கும் (புது) வெளியீடான “ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்” கதையின் 30 + 14 பக்க மெனு நினைவுக்கு வந்தது ! அந்த இதழின் மெயின் ஸ்டோரி 30 பக்கங்களே என்பதால் – பின்னிருந்த 14 பக்க சிறுகதையை அப்படியே இங்கே இறக்குமதி செய்து விட்டேன்! ஆக “காதலுக்கும் உண்டோ – அடைக்கும் தாழ்?” எனது தலைவலிக்குத் தீர்வாய் அமைந்து போனது ! 

எப்போதுமே கலர் இதழ்களை முதலில் முடித்து விட்டால் – b & w இதழ்களைக் கடைசிநொடியில் கூட முடித்துக் கொள்ளலாம் என்பது தான் கடந்த சில ஆண்டுகளின் பழக்கம் நமக்கு! ஆனால் இம்முறையோ காத்திருப்பது 512 பக்கங்கள் (LION 300) என்ற நினைப்பிலேயே உறக்கம் தொலைந்தது ! எனது முதல் பயம் “க்யூபா படலம்” சார்ந்ததே ! இத்தாலியில் நம்மவரை ஒரு அதிரடி ரேஞ்சராய்ப் பார்த்திடும் மூச்சிலேயே அமானுஷ்யத்தைப் போரிடும் தில்லாலங்கடியாகவும் பார்த்திடுகிறார்கள் ! ஆனால் நமக்கது எத்தனை தூரத்திற்கு இயலுமோ என்ற பயம் நெருடிக் கொண்டேயிருந்தது! Of course – மெபிஸ்டோவை நமக்குத் தெரியும் தான்; அவனோடு டெக்ஸ் மோதிய சாகஸங்களை நாம் செமையாய் ரசித்திருக்கிறோம் தான்! ஆனால் – கடந்த 4 ஆண்டுகளாய் நாம் டெக்ஸ் & கோவிற்குத் தந்து வரும் treatment முழுக்க முழுக்கவே ஒரு அதிரடி ரேஞ்சர் என்ற அந்தஸ்தைச் சுற்றியே எனும் போது – திடுதிடுப்பென மாயாஜாலம்; ஊடூ என்று போகும் கதையோட்டத்தை நீங்கள் எவ்விதம் அணுகுவீர்களோ என்ற கலக்கம் உள்ளே ப்ரேக் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது. பற்றாக்குறைக்கு இது மௌரோ போசெல்லியின் கதை எனும் போது – ஒரு வரலாற்றுக் களம் சிக்கினால் மனுஷன் என்னமாய் பின்னியெடுப்பார் என்பதும் நானறிவேன்! எக்கச்சக்கமாய் நிஜ நிகழ்வுகளை வரலாற்றிலிருந்து இரவல் வாங்கி கதையினை அதைச் சுற்றிப் புனைந்திடுவதில் போசெல்லி நிகரற்றவர் என்பதால் – “க்யூபா படலத்தின்” பொருட்டு நான் கூகுளில் அடித்த தேடல் கூத்துக்கள் ஒரு வண்டி ! ‘ஓவராய் விபரங்களை அள்ளித் தருகிறேன் பேர்வழி‘ என்று வரலாற்றுப் பாடம் போல கதையை நிறம் மாற்றித் தொலைத்து விடக் கூடாதென்ற பயம் ஒரு பக்கம் ; நம்மவர்களின் அலசல் + ஆராய்ச்சி ஆற்றல்களை போன மாதம் கண்கூடாய்ப் பார்த்தான பின்னே மேலோட்டமாய் நுனிப்புல் மேய்ந்தபடிக்கே ஒப்பேற்றவும் பீதி இன்னொரு பக்கம் ! ஜடை போட்டிருக்கோ; கொண்டை போட்டிருக்கோ ; தலையை அவிழ்த்துப் போட்டிருக்கோ – ஒரு அழகான பெண்பிள்ளை அட்டைப்படத்தில் மந்தகாசமாய் சிரித்து நின்றாலே லயித்துப் போய் மரத்தடியில் மட்டையாகிடும் செயலரைப் போல எல்லா வாசகர்களும் இருந்து விட்டால் தான் இத்தனை முன்ஜாக்கிரதைகள் தேவைப்படுமா?? - என்ற எண்ணம் லேசாய் மண்டைக்குள் ஓடிப்பிடித்து விளையாடியது !  ஒருமாதிரியாய் “க்யூபா படலத்தை” முடித்து விட்டு வந்த போது ராபின் த்ரில்லர் ஒரு walk in the park ஆகவே தோன்றியது ! பட படவென்று கதை ஓட... அதற்கு ஈடாய் பக்கங்களும் பறந்திட – இதழின் ஒரு பெரும் பகுதி தயார் என்ற குஷியில் நிமிர்ந்தால் – காத்திருந்தது இம்மாத 3 அழகிகளுள் இருவர்!

மாடஸ்டி எப்போதுமே நமக்கு ‘தோஸ்த்‘ தானே – சுலபமான நேர்கோட்டுக் கதைக்களங்களின் காரணமாய் என்றபடிக்கு “சிறையில் ஒரு சிட்டுக்குருவி” கதையினுள் புகுந்தேன்! நமது கருணையானந்தம் அவர்கள் எழுதியதே என்ற போதிலும் – ஒரிஜினலில் எப்போதுமே விரவிக் கிடக்கும் இங்கிலாந்துக்கே உரித்தான அந்த wry humour தமிழில் குறைவதாய் தோன்றியது ! ஷப்பா.. தேதி 26 !! இன்னமுமொரு திருத்தப்படலமா ?  என்று மேல் வலிக்கத் தொடங்கியது !  தலைக்குள் வால் முளைத்த, ஈட்டி ஏந்திய சாத்தான் ஆஜராகி “லேட்டாகிடுச்சுடா முட்டைக்கண்ணா... அப்படியே அடிச்சி விடு!” என்று கட்டைக் குரலில் பேசியது! ஆனால் மறுபக்கமோ சைதாப்பேட்டை ஆற்றில், தண்ணீர் இருந்த காலத்தில் சலவை செய்த வெள்ளை உடுப்பைக் களவாண்ட கையோடு பாரதிராஜா படத்தில் வரும் தேவைதையொன்று “ஊஹும்... லேட்டானாலும் ஒழுங்காக இதழ் அமைந்தாகணும்டா அம்பி! மெனக்கெட சோம்பேறித்தனப்படாதே!” என்று ஓதிவிட்டுப் போனது! சரி... நமது முதல் நாயகிக்கு 300-வது இதழில் முறையான உபசரிப்பு இல்லாது போயிற்றென்ற வரலாற்றுப் பழி வேண்டாமென்ற தீர்மானத்தில் தொடர்ந்தேன் ராக்கூத்துக்களை ! 

எல்லாம் முடிந்ததுடா சாமி... இனி only ஜுலியா! என்றபடிக்கு குஷாலானேன் ! சென்றாண்டே புது மொழிபெயர்ப்பாளரொருவரின் கைவண்ணத்தில் தயாராகிவிட்டிருந்த ஸ்க்ரிப்டைப் பட்டி பார்க்க அமர்ந்தால் நள்ளிரவில் காலன் வருகிறானோ இல்லியோ ; கொட்டாவி செமத்தியாய் வருமென்று புரிந்தது. ஜுலியா கதைகளில் மெலிதான மனித உணர்வுகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தருவதும்; கதையின் ஓட்டத்துக்கு அது சில வேளைகளி்ல் பிரேக் போடுவதும் அப்பட்டமாய்த் தெரிந்திட – மண்டை காய்ந்து போனது ! ஸ்க்ரிப்டை சரி செய்வது பற்றாதென்று – ஸ்பீட் பிரேக்கர்களை சமன் செய்யும் பணிகளுமே பூதாகரமாய் நிற்பது புரிந்தது – மாதயிறுத்திக்கு 3 நாட்களே பாக்கி நின்ற சமயம் ! தொடர்ந்த இரவுகள் கொஞ்சம் கொட்டாவி; கொஞ்சம் குறட்டை; நிறைய பேய்முழி; அதை விட நிறைய எடிட்டிங் என்று கழிந்திட – லயன் # 300 ஒரு வழியாய் 28-ம் தேதிக்கு என் மேஜையினில்  நிறைவுற்றிருந்தது ! அட்டைப்படம் ஏற்கனவே ரெடியாகியிருக்க, பைண்டிங் பிரிவின் கதவை உடைக்கப் புறப்பட்டனர் நம்மவர்கள் ! And you know the rest of the story ! இதழை நிறைவு செய்த கையோடு சட்டி, பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு பயணம் புறப்பட – நேற்றைக்குத் தான் இதழைக் கண்ணில் பார்த்திட முடிந்தது ! அந்த black & white கம்பீரம் அபாரமாய் மிளிர்வதைப் பார்க்க முடிந்த போது – பட்ட சிரமங்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை! 

காத்திருக்கும் நாட்களில், விரிவான அலசல்கள் திரைவிரியும் போது – கதைகளின் நிறைகளும், குறைகளும் highlight ஆவதும் நிச்சயம் ! இம்மாதத்து சிக் பில் கிளாஸிக்ஸ் அட்டைப்படமானது ஒருவிதத்தில் எனக்கொரு சேதி சொல்வதாகவே படுகிறது !  ஷெரீப்புக்கு விழும் குத்துக்களும் ஒரு பக்கமிருக்கும் ; டாட்டோவில்லி ஆர்டினுக்குத் தந்திடும் அன்பும் இன்னொரு பக்கமிருக்கும் என்பது புரிகிறது ! சகலத்தின் இறுதியில் – பின்னட்டையில் புன்னகைக்கும் ஆர்டினைப் போல அடியேனும் நிற்கும் பிராப்தம் அமையின் இந்த ஜுன் மாத சர்க்கஸ் வேலைகளின் நோவு மறந்தே போயிருக்கும் ! Fingers crossed! 

Before I sign out, சில updates : 

1.இன்றோடு (9th ஜூலை) நெய்வேலி புத்தக விழா நிறைவுறுகிறது ! மிதமான வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும் ; ஆனால் ஏகமாய் குட்டிப் பட்டாளம் வருகை தந்துள்ளது என்பதொரு hghlight !

2.ஜூலை 21 முதல் ஜூலை 30 வரைக்கும் கோவை மாநகரில் புத்தக விழா CODISSIA அரங்கில் நடைபெறவுள்ளது ! So நமது கேரவன் அடுத்து நிலை கொள்ளப் போவது அங்கு தான் !! சென்றமுறை போலவே இம்முறையும் நமது ஸ்டாலுக்கு வருகை தரக்கூடிய  புது வாசகர்களை guide செய்திட - we would love to have volunteers ! And of course சென்றாண்டு போலவே சிறியதொரு சன்மானமும் இருந்திடும் ! சகோதரி கடல்யாழ் ; ஸ்டீல் & இதர கோவை நண்பர்கள் : எங்கிருந்தாலும் மேடை அழைக்கின்றது உங்களை!! 

3. இருபத்திஐந்து இலட்சப் பார்வைகளை கடந்துள்ளோம் ; இப்போது தான் கவனிக்கிறேன் !! Wow !! Awesome guys !!

4.Oh yes, மறக்கவில்லை தான் !! Erode caption போட்டியின் வெற்றியாளரை மறக்கவில்லை தான் ! இதோ பாருங்களேன் : 

டைகர்:
இன்னாபா க்ரோ கொஞ்சம் கூட யோசிக்காம இப்டி படுகுழில வுழுந்திட்டியே. நானும் டெக்ஸ் அண்ணாத்தே யும் எத்தினி வருஷமா இங்க குப்பை கொட்றோம்.நம்மகிட்ட ஒரு வார்த்தை கேக்கலாமில்ல. ஆரம்பத்துல இப்டிதான் இருக்கும். போகப்போக ரண கொடூரமா இருக்கும்.அப்பால மூக்க பஞ்சராக்குவாங்க.சேத்துல புழுதியில புரண்டு வரணும்.காலி வயத்தோட அலையணும். மாசக்கணக்கா குளிக்காம இருக்கணும்.சாவடி வாங்கணும் ஆனா சாகாம இருக்கணும்.ஹீரோயின்னு ஒருத்திய காட்டுவாங்க ஆனா அவளுக்கு இன்னொருத்தன்தன் ஹீரோவா இருப்பான். இதெல்லாம் தேவையா உனக்கு?.என்ன பிள்ளையோ போ..

டெக்ஸ்:
ஆமாம்பா கரைட்டா சொல்லியிருக்கே டைகர் தம்புடு. நானும் ஒவ்வொரு வில்லனோட சோலிய முடிச்சப்பறம், நம்ம கிட் டுக்கு கண்ணாலம் பண்ணாம்னு பொண்ணு பாக்க கிளம்புலாம்னு இருக்கிறப்பதான் கரைட்டா ரேஞ்சர் ஆபிஸிலிருந்து தந்தி வரும். இல்லாட்டி ரெட்ட வால் குருவிகிட்டேர்ந்து இல்லைனா சீறும் சிங்கம்II கிட்டேர்ந்து புகை சமிக்ஞை வரும்.இதாலே லேட்டாகி லேட்டாகி கிட்'டும் கிட் கார்ஷனாட்டம் ஆயிடுவானோன்னு நெனச்சாதான் கடுப்பாகுது...

கார்சன்:
அட விடுங்கப்பா. இத்தன நாளும் நம்மலால மண்டயபோட்டவங்கள நாமதானே பொதைச்சொம்.இப்பதான் வெட்டியான் இருக்கிறான்ல நமக்கு வேலை மிச்சம்னு சந்தோசப்படுங்கப்பு.
ஏம்பா டைகர் அந்த சில்க் புள்ளையோட அட்ரஸ கொடேன்.ச்சும்மா ஜெனரல் நாலெஞ்சுக்குதான். ஹி..ஹி..ஹி.

க்ரோ:
அய்யோ ராமா! என்ன ஏன் இவங்ககூட கூட்டு சேர வச்சே?.
இவிங்க நல்லவங்ளா? கெட்டவங்களா?
கடவுளே!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
As promised, நண்பருக்கொரு அட்டைப்படப் பெயின்டிங் நமது பரிசாக ஈரோட்டில் வழங்கப்படும் ! சார் : வருகிறீர்கள் தானே ? 
இதற்கு மேல் டைபிடிக்கச் சொன்னால், விரல்கள் எனக்கு விஷம் வைத்து விடக்கூடுமென்பதால் இப்போதைக்கு  விடை பெறுகிறேன் all ! Bye for now ! See you around !!