Monday, February 29, 2016

ஒரு ஸ்பெஷல் ரயில்...!!

நண்பர்களே,

வணக்கம். நேற்றைக்கே load more இடியாப்பத்தினுள் பின்னூட்டங்கள் புதைந்திடத் துவங்கி விட்டதால் - இதோ மார்ச் மாதத்து விமர்சனங்களுக்கென புதியதொரு பதிவுப் பக்கம் ! இங்கே கலக்குங்கள் !!
ஆன்லைன் லிஸ்டிங் கூட இப்போது ரெடி : http://lioncomics.in/monthly-packs/20540-march-2016-pack.html

And சந்தா ரயிலை ஜனவரியில் தவற விட்ட நண்பர்களுக்காக இப்போதொரு ஸ்பெஷல் ரயில் !! 
Why not get onboard ? Bye for now !!

Sunday, February 28, 2016

நாவல் காமிக்ஸ் !!

நண்பர்களே,
         
வணக்கம். ‘லீப்‘ வருடத்தின் போனஸ் தினத்தினில் நமது மார்ச் இதழ்கள் உங்களை எட்டிப் பிடித்திடும் வாய்ப்புகள் பிரகாசம்! சனிக்கிழமை காலையே 4 இதழ்களும் தயாராகிட – DTDC ; ST ; பதிவுத் தபால்கள் என தினுசு தினுசான சவாரிகளை உங்களது சந்தாப் பிரதிகள் துவக்கி விட்டன! So திங்கள் காலையில் (பிப்ரவரி 29) யார் கதவை – யார் தட்டுவதென்ற பட்டிமன்றத்தினுள் நீங்களும், உங்கள் ஏரியா கூரியர்வாலாக்களும் ஜாலியாக மூழ்கிடலாம்! கொஞ்சமே கொஞ்சமாய் நமது பைண்டிங் பணியாளர்களைத் தாஜா பண்ணியிருப்பின், வெள்ளிக்கிழமை மாலையே பிரதிகளைக் கூரியர் செய்திடும் வாய்ப்புகள் இருந்தன தான் ; ஆனால் சனிக்கிழமையன்று பாதிப் பேருக்குக் கிடைத்து – மீதப் பேர் நகங்களையும் பற்களையும் திங்கள் வரையிலும் கடிக்குமொரு சூழல் வேண்டாமென்று தோன்றியதால் ஒட்டுமொத்தமாய் சனிக்கிழமை despatch என்று தீர்மானித்தோம் !

இம்மாத இதழ்கள் நான்கையும் கையில் ஏந்திப் பார்க்கும் போது இரண்டு விஷயங்களிலிருந்து உங்கள் கண்களை அகற்றிட இயலாச் சிரமங்கள் நேர்ந்திடப் போவது உறுதி! முதலாவது விஷயம் – ஓவியர் ஹெர்மெனின் (கமான்சே) அட்டைப்படம் ! என்ன தான் இதை நீங்கள் நெட்டில் ஏற்கனவே பார்த்து விட்டீர்கள் என்றாலும் – நிஜத்தில், கையிலொரு ஆல்பமாய்க் கொண்டு பார்க்கும் போது just looks stunning ! நாம் துளிகூடக் கை வைக்க அவசியமில்லாது போன அட்டைப்பட டிசைன் இது ; சமீப சமயங்களின் டாப் ராப்பர்களுள் இதுவொரு உச்ச இடம்பிடிக்கும் என்று நினைக்கச் செய்தது! 

விஷயம் # 2 இம்மாத இரவுக்கழுகாரின் இதழும்; பருமனும்! ‘Almost a MAXI Tex’ - 260 பக்க நீள சாகஸம் எனும் போது, இதழைக் கையில் தூக்கும் போதே ஒரு சுகமான சுமையை உணர்ந்திட முடிகிறது! அதிலும் தெள்ளத் தெளிவான சித்திரங்களும், TEX-ன் முழு டீமும் இதழின் முழுமைக்கும் உலா வருவதை மேலோட்டமான புரட்டலின் போதே ரசித்திட முடியும்! கதையைப் படிக்கும் போது சில பல கோலிவுட் திரைப்படங்கள் உங்கள் மனதில் தோன்றினால் – போனெல்லி குழுமத்தின் தற்போதைய தலைவரும் சரி, அவரது தந்தையாரும் சரி – தீவிர ‘இந்தியாக் காதலர்கள்‘ என்பதை நினைவுகூர்ந்து கொள்ளுங்கள்! So – இந்திய பாணியில் - செண்டிமெண்ட் ; காதல்; மோதல்; வீரம்; தியாகம் என நவரசங்கள் சொட்டுமொரு கதையை அவர்கள் இத்தாலியில் உருவாக்கியிருந்தாலும் –அதன் ஆணிவேர் நம்மூர் பக்கமாகத்தானிருக்குமென்பது நிச்சயம்! இம்மாத ‘விதி போட்ட விடுகதை‘க்கு உங்களது விமர்சனங்களை ஏக ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்! தொடரும் நாட்களில் இங்கே மறவாது பதிவிடுங்களேன் guys! 

‘மாதமொரு Tex‘ என்ற தண்டவாளத்தினில் நாம் சவாரியைத் துவங்கிடும் முன்பாக எனக்குள் லேசானதொரு உதறல் இருந்ததைப் பற்றி நிறையவே எழுதிவிட்டேன் தான்; இப்போது இந்த இதழ்களை ஒன்றன்பின் ஒன்றாய்ப் பார்க்கவும், ரசிக்கவும் முடிகின்ற போது – ‘அடங்கொன்னியா... இதுக்குப் போயா இவ்ளோ ரோசனை பண்ணிப் போட்டேன்னு?‘ நமது கவுண்டர் பாணியில் என்னையே கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது! சூப்பர் டூப்பர் கதைகளோ; average ஆனவைகளோ – இந்த ஜாலியான ‘தடதட‘ப் பயணத்தின் சிம்பிளான சுகமே அலாதிதான் என்பது ஒவ்வொரு தினமும் புரிகிறது ! அதிலும் ஏப்ரலுக்கான ‘Mega Tex’ இதழின் பணிகளை நம்மவர்கள் செய்து வருவதைப் பராக்குப் பார்க்கும்போதே வதனத்தின் முழுமைக்குமொரு ‘ஈஈஈஈ....‘ புன்னகையும்; கடைவாயின் கடையோரத்தில் ஒரு குற்றால அருவியும் ஆர்ப்பரிப்பதை உணர முடிகிறது! ஓவியர் சிவிடெலியின் சித்திரங்களை அந்த ‘மெகா‘ சைஸில் பக்கம் பக்கமாய் ரசிக்கும் வேளையினில் -வண்ணத்துப் பூச்சிகளின் க்ரூப் டான்ஸ் என் தொந்திக்குள் அரங்கேறுகின்றது! நிச்சயமாய் நமது இரவுக் கழுகாரின் (தமிழ்) சகாப்தத்தில் இந்த இதழானது ஒரு மறக்க இயலா லேண்ட்மார்காக இடம்பிடிக்குமென்ற திட நம்பிக்கையும் எழுகின்றது! பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்ததொரு புராதன யுகத்திற்குப் பின்பாய் ‘ஏப்ரலே வாராயோ?‘ என்ற ஏக்கத்தோடு நாட்களைக் கடத்துகிறேன் !

நாம் ஒருமாதிரியாய்த் தக்கி முக்கி TEX தொடரினில் பால்வாடி வகுப்புகளுக்குப்  போகத் தொடங்கியிருக்கிறோம் என்றால் - பொனெல்லியிலோ நேராக டிக்ரீ முடிக்க வழி தேடுகிறார்கள் ! சென்றாண்டு "ஒரு தலைவன்-ஒரு சகாப்தம் " என டெக்ஸ் கதைகளை வண்ணத்தில் ; பிரான்கோ பெல்ஜிய பாணியில் அவர்கள் வெளியிட்டுலதைப் பற்றி எழுதி இருந்தது நினைவிருக்கலாம் ! அதனில் ஆல்பம் 2 சென்றாண்டின் பிற்பகுதியில் வெளியானது ! பாருங்களேன் : 

இது மூச்சிரைக்கச் செய்வது பற்றாதென இந்த வரிசையினில் ஆல்பம் # 3 - மூன்று நாட்களுக்கு முன்பாய் வெளியாகியுள்ளது ! பிரான்கோ-பெல்ஜிய பெரிய சைசில் - கதாசிரியர் மௌரொ பொசெல்லியின் கைவண்ணத்தில் ! மாதந்தோறும் டெக்ஸ் எனவொரு template -க்குள் புகுந்திருக்கும் வேளையில் - மேற்கொண்டு இந்த மாதிரியான சபலங்களைப் பார்க்கும் போது மண்டை கிர்ராகிறது ! இவற்றை "நாவல் காமிக்ஸ்" என்று அழைப்பதில் பிரியம் கொள்கிறார்கள் !! ஆண்டுக்கு இரண்டு இவ்விதம் வெளிவந்திடுமாம் !! நாம் எப்போதிந்த "நா.கா"-வினுள் குதிப்பது ? சொக்கா...சொக்கா...!!! ஆயிரம் பொன்னாச்சே...!! பெரிய சைஸ்...வித்தியாசமான கதைபாணி...முழுவதும் ஒரிஜினலாகவே கலரில்...!! ஐயோ..ஐயோ...!! மிச்சம் சொச்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் சமாச்சாரங்களும், "இதை எங்கே நுழைப்பது ? அதை எப்படி வெளியிடுவது ?" என்ற அங்கலாய்ப்பிலேயே போயே போயிடும் போலுள்ளது !! முடிலே !!!
இதற்கு மேலும் ‘தல‘ புராணம் தொடர்ந்தால் – சிகுவாகுவா சில்க்கியின் ஆதர்ஷரின் ஆர்வலர்கள் சார்பாய் எனக்கொரு புத்தம்புதிய துடைப்பம் பார்சலாகும் என்பதால் – தடம் மாறுகிறேன்! ‘என் பெயர் டைகர்‘ முதல் 4 பாகங்களில் பெரும்பங்குப் பணிகள் முடிந்துள்ள நிலையில் – அவற்றின் மீது எனக்கு ஒரு வாரத்துத் தீவிர வேலையிருக்குமென்று தெரிகிறது! Intense பாணியிலான கதையிது எனும் போது இங்கே கொஞ்சம் கவனம்; அங்கே கொஞ்சம் நேரம் - என்ற ரீதியில் வேலைசெய்தல் இம்முறை வேலைக்கு ஆகமாட்டேன்கிறது ! தொடரும் நாட்களில் ‘தம்‘ பிடித்துப் பணி செய்தால் தான் நமது உடைந்த மூக்காருக்கு நியாயம் செய்திட முடியுமென்று புரிகிறது! Will do for sure!

ஏப்ரல் மாதத்து இதழ்கள் சகலமுமே ‘ஹை... ஜாலி!‘ ரகக் கதைகள் என்பதால் almost தயாராகி விட்டன இப்போதே ! அழகாய் லார்கோ ஹாங்காங்கில் தனது முழு டீமோடும் தூள் கிளப்புவது ஒரு பக்கமெனில் – உட்சிட்டியில் நமது நீதிக்காவலர்கள் பட்டையைக் கிளப்பும் உற்சாகத்திற்குக் கேட்கவும் வேண்டுமா – என்ன? அதிலும் க்ளைமேக்ஸில் ஷெரீ்ப் டாக்புல்லின் அதிரடி முடிவைப் பார்த்து ‘சீரியஸோ- சீரியஸானவர்கள்‘ கூட ‘கெக்கே-பிக்கே‘ என்று ஆரம்பித்து விடுவார்கள்! அப்புறம்  ஏப்ரலில் நண்பர்களின் பங்களிப்பு சற்றே தூக்கலாய் இருந்திட வாய்ப்புகளுண்டு – because உட்சிட்டி தவப்புதல்வர்களின் அட்டைப்பட டிசைனிங் மட்டுமன்றி –மறுபதிப்பான ‘நாச அலைகள்‘ proofreading-ம் நண்பர்களின் கரங்களில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது! Interesting days ahead என்பதால் ஆவலாய்க் காத்துள்ளேன்!!

'மாதம்தோறும் ஒரு கார்ட்டூன்' என்ற உபயத்தால் - இறுக்கமான கதைகளின் பணிகளுக்கு மத்தியிலும் கொஞ்சம் கெக்கே பிக்கே moments எனதாகின்றன ! So 'சொத்தில் ஒரு பங்கு கேட்டால் கூட ‘ரோசனை‘ செய்யலாம் – ஆனால் கார்ட்டூன் கதைகளில் பணியாற்றும் வாய்ப்பைக் கைமாற்றத் தயாரில்லைடா சாமி !' என்பதில் தீவிரமாயுள்ளேன்! காத்திருக்கும் நமது நீலப் பொடியர்களின் அடுத்த சாகஸத்தினுள் ஓரிரு நாட்களுக்கு முன்பாய் பேனாவுடன் புகுந்திட – எனது நாட்களே செம சிலுசிலுப்பாய் உருமாறியிருப்பது போலொரு உணர்வு! ‘தேவதையைக் கண்டேன்‘ என நமது ஸ்மர்ஃப் பட்டாளம் ஒட்டுமொத்தமாய் செய்யும் லூட்டிகள் simple awesome! பக்கத்துக்கு 15 அல்லது 16 frame-கள் சர்வ சாதாரணமாய் ஆஜராகுவதால் டயலாக்குகளின் எண்ணிக்கை ரொம்பவே ஜாஸ்தி! ஆனால் இந்தப் பொடியர்களுக்குக் குரல் கொடுப்பது ஒரு அற்புத அனுபவமென்பதால் சரளமாய் நாளொன்றிற்கு பத்துப் பன்னிரண்டு பக்கங்களைத் தாண்டிச் செல்ல முடிகிறது! அமெரிக்காவில் ஸ்மர்ஃப் ஆல்பங்களை வெளியிடும் Papercutz நிறுவனம் – இவற்றை ‘A SMURFS graphic novel’ என்றே விளம்பரப்படுத்தியுள்ளன ! நாம் கூட அந்த ரூட்டைப் பிடித்துக் கொண்டு இந்தக் குட்டி மனுஷர்களின் சாகஸங்களை graphic நாவல்களின் குடையினடியில் ஐக்கியமாக்கினால் – தாரமங்கலம் தலீவரும் சரி ; மாடஸ்டியின் கொ.ப.செ.வும் சரி, பெரும் நிம்மதி கொள்வார்களென்று நினைக்கத் தோன்றியது !
Moving on – புத்தக விழாக்கள் தொடர்பான சேதிகள்! திருச்சி மாநகரில் வரும் மார்ச் 4-ம் தேதி துவங்கிடவிருக்கும் BAPASI புத்தகத் திருவிழாவினில் நமக்கு ஸ்டால் கிடைக்கும் வாய்ப்புகள் நிறையவே உண்டு போல்படுகின்றது! அமைப்பாளர்கள் நம் மீது கருணைப் பார்வை காட்டிடும் பட்சத்தில் மலைக்கோட்டை நகருககு மூன்று வருட இடைவெளிக்குப் பின்பாகத் திரும்பிடுவோம் ! அது ஏனோ தெரியவில்லை – திருச்சியில் மட்டும் இதுவரையிலும் ஆறேழு கடைகளையும், ஓரிரு முகவர்களையும் முயற்சித்துப் பார்த்தும் எதுவுமே இன்றுவரை set ஆகிடவில்லை! பாக்கிப் பெருநகரங்களில் நமது விற்பனை எண்ணிக்கை கூரைகளைப் பிய்த்துக் கொண்டில்லை என்றாலும் கூட – அங்கெல்லாம் நமக்கொரு presence உண்டு ! ஆனால் சமீப நாட்களில் திருச்சியில் நாம் ‘ஹி... ஹி... ஹி‘ தான்! Maybe இந்தாண்டின் புத்தக விழாவின் வாயிலாக அங்கே ஓரிண்டு புதிய முகவர்களின் அறிமுகங்கள் கிட்டினாலும் சந்தோஷமே!

சென்ற வாரத்துக் கேப்ஷன் எழுதும் போட்டிக்கான முயற்சிகளை சாவகாசமாய் வெள்ளியன்று தான் படிக்க முடிந்தது! சைக்கிள் கேப்பில் – ஆறுவழிச் சாலை போடும் திறன்கொண்ட நம்மவர்களுக்கு இதுவொரு ஜுஜுப்பி மேட்டரே என்று சொல்லும் விதமாய் ஏராளமான சூப்பர் வரிகள்! But சித்திரத்திற்கும் சரி; அதனிலிருந்த டெக்ஸ் & கார்சனின் முகபாங்களுக்கும் சரி – ரொம்பவே பொருத்தமான caption எழுதியது நண்பர் வெட்டுக்கிளியார் தான் என்று பட்டது! 
Vettukili Veeraiyan : 
அந்தா தெரியிற மொட்டைப்பாறை வரைக்கும் எங்க பாட்டனாருக்கு சொந்தமான இடமாத்தான் இருந்தி ச்சிப்பா ..
அப்புறம் என்னாச்சி  ?
வறுத்த கறிக்கு ஆசைப்பட்டு பூராத்தையும் வித்து தின்னே தீத்துப்புட்டாராம்.....!

So பரிசான இரத்தப் படலம் ஆங்கிலப் பதிப்பு நமது வாழ்த்துக்களுடன் நண்பருக்கு நாளையே அனுப்பிடப்படும்! அட்ரஸ் ப்ளீஸ் வெ.வீ. சார் ! அதே போல நண்பர் ‘உருவுது‘ சரவணனும் முகவரியோடொரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன்? உங்களுக்கான ‘மினி லயன்‘ புக்கினையும் அனுப்பிடுகிறோம்.

‘மினி லயன்‘ இதழைத் தேடி முந்தைய இதழ்களை உருட்டிக் கொண்டிருந்த போது –சுவாரஸ்யமான சில பல விஷயங்கள் கண்ணில் பட்டன! இன்றைய சூழலுக்கு அவற்றைப் பொருத்திப் பார்த்த போது வேடிக்கைக்குப் பஞ்சமிருக்கவில்லை! இந்த விளம்பரத்தைப் பாருங்களேன்...! 
68 இதழ்கள் – ரூ.500 விலைக்கு – free shipping – பற்றாக்குறைக்கு ரூ.100/- மதிப்புக்கு பட்டாசு பார்சல்! 2012-ன் சென்னைப் புத்தகவிழாவின் போது கூட இதே போன்றதொரு அதிரடியை செய்தது நினைவுக்கு வருகிறது! சுமார் 140 முந்தைய இதழ்கள் கொண்ட pack ரூ.1100 or அது போன்றதொரு விலைக்கு விற்றோம் – கிட்டங்கியைக் காலி செய்திட ! அவை பார்சல் –பார்சலாய் சென்றடைந்தது காமிக்ஸ் காதலர்களிடம் மாத்திரமேயெனில் நிச்சயமாய் நமக்கு சந்தோஷமே!

And இந்தக் கூப்பன் கூட ஒரு புராதன பைலில் படபடத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது! 
இதே கேள்வியினை இன்றைய சூழலில் – நமது சமகாலத்து நாயகர்களையும் களமிறக்கிக் கேட்டிடும் பட்சத்தில் உங்களது பதில் என்னவாகயிருக்கும்? நமது இதுவரையிலான காமிக்ஸ் பயணத்தின் Top 3 நாயக / நாயகியர் யாராக இருக்கக் கூடும் உங்கள் பார்வைகளில் ? இதோ – உங்களது updated options:
1. இரும்புக்கை மாயாவி
2. C.I.D. லாரன்ஸ் & டேவிட்
3. வேதாளன்
4. ஸ்பைடர்
5. கேப்டன் டைகர்
6. டெக்ஸ் வில்லர்
7. லக்கி லூக்
8. XIII
9. லார்கோ வின்ச்
10. கேப்டன் பிரின்ஸ்
11. பௌன்சர்
12. மாடஸ்டி பிளைஸி
 வண்டி வண்டியாய் நாயகர்களை நாம் கையாண்டுள்ள போதிலும் – அதிகளவு வாய்ப்புகள் பெற்றுள்ள இந்த popular 12-லிருந்து உங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்வதே பொருத்தமாயிருக்குமென்று நினைத்தேன் ! உங்கள் பார்வையில் நமது பயணத்தின் சூப்பர் டூ்ப்பர் performers என முதல் 3 இடங்களை பெற்றிடும் தகுதிகள் யாரிடமுள்ளன ? சொல்லுங்கண்ணே... சொல்லுங்க! நான் இப்போதைக்கு தூக்கத்தை அரவணைக்கச் செல்கிறேண்ணே...! மீண்டும் சந்திப்போம்! !! Bye for now all !! Enjoy the day & the week ahead !!

Sunday, February 21, 2016

ஹி...ஹி...ஹி..!!

நண்பர்களே,

வணக்கம். சின்ன வயதில் நானொரு சதுரங்கப் பைத்தியம்! வாரயிறுதி புலர்ந்து விட்டாலே மனதுக்குள் ஒரு படபடப்பு... ஒரு எதிர்பார்ப்பு துளிர்விடத் துவங்கும்; ஞாயிறு காலை மணி ஒன்பது அடிக்கும் முன்பாக எங்கள் வீடிருந்த அதே வீதியிலிருந்த செஸ் க்ளப்பின் வாசலில் ‘தேவுடா‘ காக்கத் தொடங்கி விடுவேன்! இப்போதெல்லாம் அந்த நாட்கள் மறுவிஜயம் செய்தது போல உணர்கிறேன்! சனிக்கிழமை பகலிலேயே... 'ஹை... ப்ளாக்கிற்குத் தயாராக வேண்டுமே !" என்ற சிந்தனைகளும்... ஞாயிறு காலை புலரும் போதே உங்கள் எண்ணச் சிதறல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தூக்கத்தை தொலைக்கச் செய்து விடும்! இதோ – இந்த ஞாயிறுக்கு லீவ் லெட்டரை நேற்றே ஒப்படைந்திருந்த போதிலும் – எழுதிப் பழகிய அந்த விரல்கள் கோலம் போடத் தொடங்காத குறை தான்! நீங்களும் நேற்றைய பதிவிற்கு அதற்குள் 295 பின்னூட்டங்களை போட்டுத் தாக்கி விட்ட நிலையில் – load more பஞ்சாயத்திலேயே இந்த வாரத்தின் இதர நாட்களை ஒப்பேற்றும் சிரமத்தை உங்களுக்குத் தருவானேன் என்று தோன்றியது! அதன் பலனே இந்த back to back பதிவுகள்!

கொட்டாவி விட்டது முதல், பட்டாணிக் கடலை கொறித்தது வரை அத்தனையும் உங்களிடம் அவ்வப்போது ஒப்பித்து வரும் சூழலில் புதுசாய் என்ன எழுதுவதென்று ரொம்பவே மெனக்கெனடத் தோன்றவில்லை! சின்னச் சின்ன updates; குட்டிக் குட்டி நிகழ்வுகள் பற்றிய சேதிகள் போதாதா நமது காமிக்ஸ் ஞாயிறுகளைக் கலகலப்பாக்கிட? And அதற்கொரு ஆரம்பமாய் – மார்ச் இதழ்களில் நீங்கள் இன்னமும் பார்த்திரா டெக்ஸின் அட்டைப்பட first look இதோ! ஏற்கனவே சிலபல வாரங்களுக்கு முன்பாக இதே டிசைனுக்கு வேறொரு வர்ணக்கலவையுமான ராப்பரை உங்கள் கண்களில் காட்டியிருந்தேன்! இதோ – நீங்கள் பார்த்திடவிருக்கும் real thing-ன் preview!
அட... இதுக்கு அதுவே தேவலை!‘ என்ற எண்ணங்கள் எழக்கூடும் தான்; அந்த சிகப்பு பேக்கிரவுண்ட் பளீரென்று டாலடித்தது தான்; ஆனால் தந்தையும், மகனும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளுமொரு சாகஸத்திற்கு நிலவின் கீழான அந்த நிசப்தப் பின்னணி கூடுதல் மெருகோடு தோன்றுவதாக நினைத்தோம்! பிடித்திருந்தால் பாராட்டுக்களை சொல்லிட பொன்னனைத் தேடுங்கள்; “ஊஹும்“ எனில் பூரிக்கட்டைகளை சிவகாசிக்குக் கூரியர் செய்திடுங்கள்! கதையைப் பொறுத்தவரை – நமது இரவுக்கழுகார் ஒரு ‘ஹாட்ரிக்‘ அடிக்கும் வாய்ப்புகள் ரொம்பவே பிரகாசம் என்று சொல்லத் தோன்றுகிறது! ஜனவரி டெக்ஸ் – கலப்படமில்லா high octane ஆக்ஷன் எனில்; பிப்ரவரி டெக்ஸ் – ஆர்ப்பாட்டமில்லா டிடெக்டிவ் பாணி! இம்முறையோ ரேஞ்சர் குழு ஒட்டுமொத்தமாய் களம்காணும் சிவகாசிச் சரவெடியிது! யெஸ் – நீண்ட நெடும் காலத்திற்குப் பின்பாக டெக்ஸ், கார்சன், கிட் & டைகர் ஒட்டுமொத்தமாய் கதை முழுவதிலும் பட்டையைக் கிளப்பிடுகிறார்கள்! தந்தைக்கும்-தனயனுக்கும் மோதல் ; கிட்டின் வாழ்வில் மலர்ந்திடும் மெல்லிய காதல்; பாசமிகு தந்தையாய் நமது இரவுக் கழுகார் மௌனமாய் அனுபவிக்கும் வேதனைகள் – என மார்ச் மாதத்து டெக்ஸ் இதழும் ஒரு சிக்ஸர் for sure! அட்டகாசமான artwork வலு சேர்க்கும் போது சுமாரான கதைகளே வீரியமாகிடும் வேளைகளில் – நயமான கதைக்கு என்ன பலன் என்பது நமக்குத் தெரியாதா? And 260 பக்க நீ-ள-மா-ன சாகஸமிது! Almost a Maxi!! இதனை வெளியிடக் கோரி நினைவூட்டிய நண்பர் முதலைப்பட்டாளக் கலீலுக்கு ஒரு தேங்க்ஸ்!

Moving on – க்ளிப்டன் அச்சாகி விட்டார்; ஸ்பைடர்காருவும் தான்! கமான்சே திங்கட்கிழமை பிரிண்டிங்கிற்கு செல்கிறார் & டெக்ஸ் புதன் மாலையில் அச்சுக்குத்  தயார் நிலையிலிருப்பார்! So- வரும் வாரயிறுதியினில் இதழ்கள் நான்குமே தயாராகி விடுமென்பதால் ஒட்டுமொத்தமாய் அடுத்த ஞாயிறன்று கூரியரில் ஒப்படைத்து விடுவோம் – தொடரும் வாரத்தை நமது இதழ்களோடு நீங்கள் ஆரம்பிக்கும் விதமாய்! And சென்ற முறை DTDC-ல் சிக்கலின்றிப் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட நண்பர்களுக்கு அதே சேவை தொடர்ந்திடும்; சொதப்பலாகிப் போன சில வாசகர்களுக்கு ST-ல் பிரதிகளை அனுப்பிடுவோம்! So இம்முறை தலைவலிகள் இராதென்று நம்புகிறேன்! 

இன்னும் முன்செல்லும் போது – ஏப்ரலின் இதழ்களின் பணிகள் சத்தமின்றி ஒரு பக்கம் நிகழ்ந்து வருவதைப் பார்த்திட முடிகிறது! ஏப்ரலில் ஒரு கோடீஸ்வரர் தனது முரட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த யத்தனிக்கிறார்! Oh yes – நமது ப்ளுஜீன்ஸ் பில்லியனர் லார்கோ வின்ச்சின் “கடன் தீர்க்கும் நேரமிது“ ஏப்ரலில் டபுள் ஆல்பமாக வரக்காத்துள்ளது! இதன் பணிகள் சகலமும் முடிந்துள்ள நிலையில் – முதல் பாகத்தின் எடிட்டிங்கினுள் எனது காலைகளை சுவாரஸ்யமாக்கிக் கொள்கிறேன்! And நம்மவர் இம்முறை ஹாங்காங்கில் நிகழும் இந்த ஆக்ஷன் த்ரில்லரில் அனல் பறக்க சாகஸம் செய்கிறார்! லார்கோ தொடரில் ஒரு highlight இதழாக இது அமையக் காத்திருக்கிறது guys!

And “என் பெயர் டைகர்” கிட்டத்தட்ட 60% பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன ! புரட்டப் புரட்ட பக்கங்களும், படிக்கப் படிக்க வசனங்களும் பிரவாகமெடுத்து வருவதால் இதனைப் பொறுமையாக எடிட்டிங் செய்திட ரொம்பவே திணறி வருகிறேன்! அதிலும் இந்த Mister Blueberry அவதாரில் நம் உடைந்த மூக்கார் ஒரு laid back சீட்டாட்டப் பிரியராக அறிமுகம் காண்பதால் வழக்கமான விதத்தில் அவரைக் கையாள இயலவில்லை! இந்தப் புதுப் பாத்திரப் படைப்பிற்கேற்ப வசனநடைகளையும், கதையின் டெம்போவையும் நிர்ணயிக்க வேண்டி வருகிறது! And முதல் முறையாக கலர் + black & white என வரக்காத்திருக்கும் இதழினை சரியான சமயத்திற்குத் தயார் செய்வதில் எங்களது அடுத்த சில வாரங்கள் மூச்சுமுட்டும் பணிவாரங்களாக உருமாற்றம் காணப் போவது உறுதி!

அப்புறம் டிசைனிங் + மொழிபெயர்ப்பில் உதவிட நண்பர்கள் சிலர் முன்வந்துள்ளதைத் தொடர்ந்து சிறுகச் சிறுக அவர்களிடம் பணிகளை ஒப்படைக்கத் துவங்கி வருகிறோம். அவற்றின் பலன்களை தொடரும் வாரங்களிலேயே கண்டிட முடியுமென்று நம்புகிறேன்! நிச்சயமாய் ஒரு refreshing மாற்றம் நமக்குத் தென்படும் என்று நினைக்கத் தோன்றுகிறது! 

‘எல்லாம் சரி- ஏப்ரலில் அறிவிப்பதாக இருந்த சந்தா Z ன் தலைவிதி என்னவோ?‘ என்ற கேள்விளை நண்பர்கள் கடந்த பதிவிலேயே எழுப்பியிருந்தை கவனித்திருந்தேன். நிஜத்தைச் சொல்வதானால் – இந்தத் தனித்தடத்தின் பொருட்டு சிலபல கதைகளை shortlist செய்து; ஒரு சிலவற்றை மொழிபெயர்த்தும் வைத்துள்ளோம்! ஆனால் ஜனவரியின் சென்னைப் புத்தக விழா ரத்தானதன் பலனாய் சந்தா Z பக்கமான வேகத்தை லேசாக மட்டுப்படத்திக் கொள்ள நேர்ந்தது. ஜனவரியில் BAPASI விழாவில் சந்தாப்  புதுப்பித்தல்கள் + இதழ்கள் விற்பனையில் ஒரு decent ஆன தொகை வசூலாவது வாடிக்கை! BAPASI விழா ரத்தாகிட – அதன் பின்னே திட்டமிடப்பட்ட பொங்கல் விழா அந்த குறைபாட்டை ஓரளவிற்கு நேர் செய்திருந்தாலும் – ரெகுலரான விற்பனை நம்பர்களைத் தொட சாத்தியமாகவில்லை! தவிரவும் சுமார் 50 சந்தாக்கள் சென்றாண்டிலிருந்து இந்தாண்டுக்கு மாற்றம் காணத் தவறிய போது – அதன் பொருட்டும் நமது பட்ஜெட்டில் கொஞ்சம் பள்ளம் விழுந்து போனது! இதை இன்னமும் சரி செய்ய முயன்றே வருகிறோம் – மார்ச் to டிசம்பர் 2016க்கென ஒரு ஸ்பெஷல் சந்தாவின் திட்டமிடலின் மூலமாக! So- இன்னமும் நேரமுள்ளது நண்பர்களே, 2016-ன் சவாரியில் ஒட்டிக் கொள்வதற்கு! இந்த எதிர்பாரா பட்ஜெட் துண்டுகளுக்கு மத்தியினில் சந்தா Z எனும் துண்டை நான் விரித்தால் – ஆண்டின் இறுதி மாதங்களில் ரெகுலர் இதழ்களுக்கு பணம் புரட்டச் சிக்கலாகி விடுமென்பதால் இது வரை அடக்கியே வாசித்து வருகிறேன். வரும் மார்ச்சில் ஒரு பெருநகரிலும், ஏப்ரலில் சென்னையிலும் புத்தக விழாக்கள் திட்டமிடப்பட்டு வருகின்றனவாம்! அவை உறுதியாகி; அங்கே நமக்கொரு ஸ்டாலும் கிடைத்திடும் பட்சத்தில் – we would be on track with சந்தா Z! So கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை காத்தோமெனில் நிலவரம் தெளிவாகிவிடும்! வீராப்பாய் எதையேனும் செய்து விட்டு – அச்சாணியை முறித்த மடைமை வேண்டாமேயென்ற முன்ஜாக்கிரதையில் தான் மௌனத்தை மொழியாக்கி வருகிறேன்! மற்றபடிக்கு புதுக்களங்களுக்குள் தலை நுழைத்திடும் பேரவா எப்போதும் போல இப்போதும் உயிர்ப்போடே உள்ளது !  Just a question of finding the apt moment for it!

கிளம்பும் முன் சின்னதாயொரு வேண்டுகோள்! நமது சந்தா நண்பர்களுக்கான டி-ஷர்ட்களை வரும் வாரத்தில் ஆர்டர் செய்யவுள்ளோம்! அதன் முகப்பில் – சின்னதாய், classy ஆக ஆங்கிலத்திலோ;தமிழிலோ ஏதேனும் வாசகம் இடம்பிடித்தால் சிறப்பாக இருக்குமென்று தோன்றியது! ‘ஈஈஈ‘ என்று இளிக்கும் ஸ்பைடரையோ, குழந்தைப் புள்ளைகளைக் கவரும் ஸ்மர்ஃப்களையோ டி-ஷர்டில் போட்டு நம் வயதுகளுக்கு ஏற்பில்லா தோற்றத்தை உருவாக்கிட வேண்டாமே என்று நினைத்தேன்! So- ‘பளிச்‘ என ஏதாவது suggest செய்திடலாமே நண்பர்களே? முடிந்தால் அதை டிசைனாகவே அனுப்பி விட்டால் உங்களுக்கு எங்கள் ஆபீஸின் சாலையில் குட்டியானதொரு சிலை வைத்து விடுவோம்!

ஞாயிறை இலகுவாக்கிட இதோ நெடு நாளைக்குப் பின்பாகவொரு caption எழுதும் போட்டி! (கடந்த முறை வென்ற நண்பர் ‘உருவுது‘ சரவணனுக்கு ஏற்கனவே ஒரு மினிலயன் இதழ் அனுப்ப வேண்டியுள்ளது!!) இம்முறை வெற்றி காணும் நண்பருக்கு தற்போதைய flavor ஆன “இரத்தப் படலம்“ Cinebookன் முதல் ஆல்பத்தைப் பரிசாகத் தந்திடலாமா? ஆளுக்கு மூன்றே வாய்ப்புகளே - போட்டிக்கோ; லூட்டிக்கோ! (இதே சித்திரத்தைக் கொண்டு ஏற்கனவே போட்டி-கீட்டி ஏதும் வைத்து விட்டோமா ? அப்படியே இருப்பினும், புதுசாய் எதையேனும் எழுதி தலை தப்பிக்கச் செய்யுங்களேன் ?! )

மீண்டும் சந்திப்போம் guys! அது வரை – have an awesome weekend! Bye!

P.S : விடியற்காலை ஐந்தரைக்கு - "எங்கே ஞாயிறு பதிவைக் காணோம் ??"என்ற வாட்சப் சேதி - சீனியர் எடிட்டரிடமிருந்து !! வெள்ளியிரவே நானிங்கு ஆஜராகி - அந்தக் கச்சேரி 300 பின்னூட்ட நீளம் சென்றுள்ளது - ஞாயிறுக்கே பழகிப் போனவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை தான் !! So அந்தக் குறையையும் வைப்பானேன் என்று நினைக்கத் தோன்றியது !! 


Friday, February 19, 2016

ABSOLUTE CLASSICS !!

நண்பர்களே,
         
வணக்கம். ஒற்றை நாளில் 4250+ பார்வைகள்.....351 பின்னூட்டங்கள்!!! மும்மூர்த்திகள் + ஸ்பைடரின் மறுவருகையினை 2014-ன் அக்டோபரிலோ, நவம்பரிலோ அறிவித்ததொரு ஞாயிறு காலையில் ஒற்றை நாளில் 360 பின்னூட்டங்களோடு ரெக்கார்ட் ஏற்படுத்தியிருந்தீர்கள் ! அதைப் போன ஞாயிறன்று முறியடித்து விடுவோமென்று தான் தோன்றியது – பிரவாகமெடுத்த உங்களின் உற்சாகத்தைப் பார்த்த போது ! Just miss.....! ஒன்று மட்டும் அப்பட்டமாகப் புரிகிறது – நம்முள் ஒரு சன்னமான மூலையினில் பதுங்கிக் கிடக்கும் பால்யங்களும், அவை சார்ந்த நினைவுகளும் சந்தர்ப்பம் அமைந்திடும் போது, ஜாலியாக விஸ்வரூபமெடுப்பதை நமது வயதுகளோ – இன்றைய தகுதிகளோ தடை போட்டிடுவதில்லை! And என்னதான் தொண்டை நரம்பு புடைக்க புது genre; புது நாயகர்கள்; லார்கோ; அவரது ஒன்றுவிட்ட பெரியப்பா என்று நான் தேர்தல் பேச்சாளரைப் போலப் பேசிப் பார்த்தாலோ – ‘மினி லயனின் ஆரம்பத்து இதழ்கள் கிடைக்காதா?‘ என்ற சிம்பிளான கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாமல் விழிப்பது தான் யதார்த்தம்! So- உங்கள் தேவைகளில் இவையுமொரு பகுதி தான் எனில் – அவற்றை இனியும் புறக்கணிப்பானேன்? யார்-யாரோ எங்கிருந்து கொண்டோ நமது வியர்வைகளின் பலன்களை வருஷங்களாய் தமதாக்கிக் கொண்டிருக்கும் “அபத்தங்களைக்“ களையெடுக்கவும் இந்தப் “பழையன புகுத்தலின்“ வாயிலாகச் சாத்தியமெனில் – why not ? என்று தோன்றுகிறது  ! 

“டுபாக்கூர்” முத்து மினி காமிக்ஸ் பற்றி நான் எழுதியதைத் தொடர்ந்த நாட்களில் ஆங்காங்கேயிருந்து நமக்கு மேற்கொண்டு வந்துள்ள மின்னஞ்சல்களும், ஒரு சில கடிதங்களும் சொல்லும் சேதிகள் நிச்சயமாய் ரசிக்கும் விஷயங்களாக இல்லை! "கலரில் பார்க்க ஆசை" ; "என்னிடம் இல்லாத இதழ்களை ஏதோ ஒரு ரூபத்திலாவது பார்த்திட ஆசை!" என ஆர்வத்தின் வெளிப்பாடாகத் துவக்கம் கண்டு, அதற்கிருந்த வரவேற்பைக் கண்டு இதனை வியாபாரமாக்கிடும் மகா சிந்தனைகள் சிலபல சிரங்களை வியாபித்ததும், இன்றைக்கு இதுவொரு  organised தொழிலாகவே முன்னேறி  வரும் விபரங்கள்; பணப்பட்டுவாடாக்கள் எவ்விதம் நிகழ்கின்றன ? ; எந்த வங்கிக்கணக்குகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன ? ; எந்தெந்த நகரங்களில் இவை ஸ்டாக்கில் உள்ளன ? ; போன்ற விபரங்கள் சொல்லும் கதைகளைப் பார்க்கும் போது – லார்கோவின் hi-tech முடிச்சுகள் இந்தத் “தொழிலதிபர்களிடம்“ பிச்சை எடுக்க வேண்டும் போலும் ! And இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பது பனிக்கட்டியின் வெளிமுனை மாத்திரமே – இன்னும் நேரம் செலவிட்டால் XIII-ன் மர்மங்களை விடவும் அடர்த்தியான இடியாப்பங்களைப் பார்த்திட இயலும் என்பதும் புரிகிறது! 

One thing is for sure... சூழல்களே ஒரு மனிதனின் செயல்பாட்டைப் பல நேரங்களில் நிர்ணயிக்கின்றன! “பழைய சமாச்சாரங்களை மறுபதிப்பிடுகிறேன் பேர்வழி!” என எனது உழைப்பை அதன்பால் அதிகமாய்ப் பாத்தி வெட்டிட நான் தயாரில்லை என்று காலம் காலமாய் சொல்லி வந்திருக்கிறேன்  ! ஆனால் இன்றைக்குக் கண் முன்னே பூசணிக்க்காயகளும், பின்னணி விபரங்களும்  வெளிச்சத்தைக் காண நேரிடும் போது – எனது தீர்மானங்களை மாற்றியமைக்கும் நேரமும் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டுள்ளது! அதே போல ‘எல்லோருமே காமிக்ஸ் குடும்பத்தின் அங்கத்தினர்களே; நம்மால் யாருக்குமொரு களங்கமோ, சங்கடமோ வேண்டாமேயென்ற‘ ஆதங்கத்தினாலேயே இத்தனை காலமாய் யார் மீதும் எவ்விதக் கடுமையையும் காட்டிடத் தோன்றவில்லை. இந்தக் கணத்திலும் அந்தச் சிந்தனையில் துளியும் மாற்றமில்லை தான்; ஆனால் – இனி வரும் நாட்களிலும் இந்த அபத்தங்களும்; ‘முடிஞ்சா தடுத்துப் பாரு‘ ரீதியிலான உதார்களும் தொடர்ந்திடும் பட்சத்தில், நமது சாத்வீகத்தின் ஆதிக்கம் தொடர்ந்திட வழியிராது! பழைய தமிழ்ப் பட வில்லனைப் போல கையைக் கசக்கிக் கொண்டே மிரட்டல்கள் விடுவதெல்லாம் என் மூஞ்சிக்கு நிச்சயம் செட் ஆகாது தான் ; அதனில் ஆர்வமுமில்லை எனக்கு !  பழைய இதழ்களை ஒரு கோடி ரூபாய்க்கு விற்றாலும், அதனுள் மூக்கை நுழைப்பது எங்கள் ஜோலியாகாது! ஆனால் இந்த அபத்தக்களஞ்சியத் “தொழில் முயற்சிகள்” தொடரும் பட்சத்தில் – நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயமாகி விடும்! இவற்றை எழுதுவதே எனக்கொரு சங்கட அனுபவமாக உள்ளது; ஆனால் இந்த ஆறு நாட்களில் நம்மைத் தேடி வந்துள்ள சேதிகள் நுரைத்துப் போன கள்ளை விடவும் மோசமாய் ‘மணம் வீசும்‘ விதமாய் இருப்பதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை! Please folks – இதனை இனியும் தொடர்ந்திட வேண்டாமே; and பணம் செலவழித்து இவற்றை இத்தனை காலம் தழைக்க வைத்துள்ள நண்பா்களும் இவற்றிற்கான ஆதரவுகளை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்களேன்! இந்திய சட்டப்படி வெளியிடப்படும் எந்தவொரு இதழிலும் அதன் பதிப்பாளர், அச்சிடுபவரின் பெயர் அத்தியாவசியம்! அனாமதேய ‘திகில்‘ காமிக்ஸின் வர்ணத்திலான வார்ப்புகளோ; முத்து காமிக்ஸின் கலரிங் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரதிகளோ எங்களது உரிமைகளை 'ஸ்வாஹா' செய்வதற்கு முன்பாகவே, இந்திய சட்டங்களை மீறியவைகளாகவும் மாறிப் போகின்றன! So பெயரில்லாப் பூச்சிகளாய் இரத்தப் படலங்களும், பிசாசுக் குரங்குகளும், உலவிடுவதால் பாதகமில்லை என்ற அபிப்பிராயங்களைத் தயைகூர்ந்து இவற்றின் “தயாரிப்பாளர்கள்“ மாற்றிக் கொண்டால் சந்தோஷப்பட்டுக் கொள்வேன்!

இன்னொரு பக்கமோ – ‘ஐயையோ... இதற்குள் நேரத்தையும், பொருளையும் செலவிடப் போகிறீர்களா? போச்சுடா!‘ என்ற ரீதியிலான மின்னஞ்சல்களுக்கும் பஞ்சமேயில்லை! மீண்டுமொருமுறை அழுத்தமாய் பதிவிடுகிறேன் நணபர்களே – புதியனவற்றுள் கவனம் செலுத்துவதோடு எனது பணிகள் முற்றுப்புள்ளி கண்டுவிடும்! And புது இதழ்களுக்கென வசூலித்துக் கட்டிக் காப்பாற்றி வரும் உங்கள் சந்தாத் தொகையிலிருந்து அரையணா கூட மறுபதிப்பின் வயல் பக்கமாய் திசைதிரும்பிடாது! மறுபதிப்புகள் சகலமுமே அவ்வப்போது, உங்களது ஆர்வங்களுக்கும், தேவைகளுக்குமேற்ப – உங்களது முன்பணங்களோடே செயலாகிடும்! So நிறைய ஸ்டாக்கினைக் குவித்து வைத்து பூதம் போல ‘தேவுடா‘ காக்கவும் போவதில்லை; இதன் பொருட்டு மேற்கொண்டும் கடன் வாங்கி – நிறுவனத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண அனுமதிப்பதாகவுமில்லை! சின்னதாகவொரு 'லாட்' அச்சிடுவோம் ; அது காலியான நாளில் மீண்டுமொரு சின்ன ‘லாட்‘! So – பணமுடக்கத்திற்கும் அவசியமிராது; 'இந்தந்த இதழ்களெல்லாம் மார்க்கெட்டில் இல்லை டோய்... அந்தக் குறையை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம்‘ என்ற சேவைநெஞ்சங்களையும் திரும்பவும் களமிறக்கிச் சிரமப்படுத்திட அவசியங்களும் எழாது! ஆனால் இந்த bargain-ல் விலைகள் நமது வழக்கங்களை விட சற்றே அதிகமாயிருப்பது தவிர்க்க இயலா இடராக இருந்திடும்! அதன் பொருட்டு உங்கள் புரிதலையும் கோருவோம்! ‘ஆஹா... grey market விலைகளை ஒரு வைக்கோல் கன்றுக்குட்டியாகக் காட்டியே நம்மிடம் விலைகளைக் கறக்க சாக்குப் பிடித்து விட்டானோ?‘ என்ற சந்தேகங்கள் எழலாம் தான்; ஆனால் நிச்சயமாய் அந்தந்த printrun களைக் கொண்டு மாத்திரமே நாம் விலைகளைத் திட்டமிடுவோமே தவிர – காதுகளை எட்டிடும் அபத்தமான நம்பர்களை ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டல்ல!

For starters – “இரத்தப் படலம்” முழுத்தொகுப்பின் பக்கமாய் மறுபதிப்புக் கவனத்தைத் திருப்பும் முன்பாக – பொதுவான சில எண்ணச் சிதறல்களை உங்களிடமிருந்து அறிந்திட ஆர்வம்! இதோவொரு உத்தேசமான scenario! 850-875 பக்கங்கள் கொண்ட இ.ப. வர்ண இதழை ஒற்றை hardcover இதழாக உருவாக்கி, அதனில் 750 பிரதிகள் விற்பதாயின் விலை ரூ.2300 என்று உத்தேசமாய் நிர்ணயம் செய்திட முடிந்திடலாம்! (தற்போதைய விலைவாசிகளில்!) So கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் பளீஸ் :
  1. முன்பதிவிலக்காய் 450 / 500 பிரதிகள் அமைத்திட வேண்டி வரும். உங்களுள் இ.படல சேகரிப்பின் மீதான ஆர்வலர்கள் அத்தனை பேர் இருக்க சாத்தியமுண்டு தானா? Let's be practical please ?
  2. ஒரே இதழாய் அத்தனை பாகங்களையும் சுமந்து வரும் இதழின் எடை சுமார் 1.8 கிலோக்கள் இருக்கக் கூடும்! ஒரே புக்காக வெளியிடும் பட்சத்தில் அத்தனை கனத்தைக் கைகளில் தாங்கிப் படிப்பது முடியுமென்று நினைக்கிறீர்களா?
  3. பிரித்து வெளியிடுவதாயின் – தனித்தனி வர்ண இதழ்கள்; ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 4 இதழ்கள் என்ற ரீதி சுகப்படுமா?
  4. அல்லது இரு ஆல்பங்களாய் பிரித்து வெளியிட்டால் தேவலாம் என்பீர்களா? . அல்லது 'மணந்தால் மகாதேவி' மாத்திரமேவா ? 
  5. இரு தவணைகளில் பணம்  செலுத்திடும் வசதி தந்து – முறையான அறிவிப்பிலிருந்து 4-5 மாத அவகாசம் வழங்கினால் ஓ.கே. என்று தோன்றுகிறதா? (ரொம்பவே ஆறப் போட்டால் சுரத்து குறைவதாய் மனதுக்குப் படுகிறது!)
  6. And ஏற்கனவே துவைத்துத் தொங்கப் போட்டு விட்ட  இதழினுள் நானோ – நமது டீமோ பிழைதிருத்தங்களின் பொருட்டு கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொள்வதற்குப் பதிலாக – சின்னதாகவொரு நண்பர் குழுவினை அமைத்திட்டு – இந்த இதழின் proof reading-ஐ அவர்களிடம் ஒப்படைத்து விடல் ஓ.கே. ?

Too much of a good thing கூட ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதில் நிச்சயம் நம்முள் மாற்றுக் கருத்திருந்திடாதென்று உறுதியாக நம்புகிறேன்! So ஒரே வருஷத்தில் சகலத்திற்கும் மறுபிறவி தந்திட எண்ணிடாது அழகான இதழ்களையாகத் தேர்வு செய்து அவற்றை மறுபதிப்பாக்கிட முனைவோமே! ‘இதெல்லாம் என்னிடம் இல்லை... இதையெல்லாமே மறுபதிப்புப் பட்டியலினுள் புகுத்திடுவோமே ! என்ற முனைப்பில் இருந்திடாது – “Absolute Classics” என்ற குடையின் கீழ் தஞ்சம் கொள்ளத் தகுதி கொண்டவைகள் எவையோ - அவற்றிற்கு முன்னுரிமை தருவோமா? அவ்விதமாய் ஒரு Top 12 பட்டியலை அவ்வப்போது தயார் செய்து கொண்டோமேயானால் சிறுகச் சிறுக அதன் பணிகளை நமது கான்டிராக்ட் பணியாளர்களிடம் ஒப்படைத்து விட்டு நடைமுறைப்படுத்திடலாமே? உங்கள் தேர்வுகளின் சில கதைகளை matter of fact ஆக மறுபதிப்பிடுவது சுலபமாக இருந்திடலாம்! ஒருசிலவற்றிற்கு படைப்பாளர்களிடம் டிஜிட்டல் கோப்புகள் கோர வேண்டி வரலாம்; இன்னும் சிலவற்றிற்கோ பிள்ளையார் சுழிகளிலிருந்தே பணிகள் துவக்க அவசியங்கள் இருந்திடலாம்! So – இந்த Top 12 பட்டியல் படலம் நம் பணிகளுக்கொரு திசையை நல்கிட உதவிடும்! ஏப்ரலில் முத்து மினி காமிக்ஸ் என்பது உறுதியென்ற நிலையில் what next folks ? திருவாளர்.XIII தானா? சொல்லுங்க ப்ளீஸ் ? சொல்லுங்க!
‘பழமையின் புளகாங்கிதங்கள்‘ போதுமே இந்த வாரத்திற்கு என்று படுவதால் – இதோ இம்மாத புது வரவுகளின் பக்கமாய் நமது பார்வைகள்! மீண்டுமொரு கமான்சே ஆல்பம்... மீண்டுமொரு  ஹெர்மென் (சித்திர) அதகளம்; மீண்டுமொரு ஒரிஜினல் ராப்பர்! ‘சாத்தானின் உள்ளங்கையில்‘ சமீப சமயங்களில் என் பெண்டை நிறையவே நிமிர்த்தியதொரு எழுத்துப்பணி என்பதில் ஐயமில்லை ! ஒரிஜினல் பிரெஞ்ச் வசனங்கள் எல்லாமே பூடகமான பாணியில்; அவர்களது மொழியிலான சிலேடைகளோடும், உணர்வுகளோடும் மிகுந்து கிடந்திட – நமது பிரெஞ்ச் மொழிபெயர்ப்பாளரும் அவற்றை அட்சர சுத்தமாய் ஆங்கிலமாக்கித் தந்திருந்தார்! ஆனால் தமிழுக்கு எழுதிட முனைந்த போது – பாயைப் பிறாண்டாத குறை தான்! நேர்கோட்டில் செல்லும் ஒரு சிம்பிளான; அழகான கதையே என்ற போதிலும் – வசனங்கள் ரொம்பவே முக்கிய பங்கு வகிப்பதை உணர முடிந்தது! நிறைய மெனக்கெடல்களுக்குப் பின்பாய் தயாரான தமிழாக்கம் நிறைவாகயிருப்பதாய் நினைக்கத் தோன்றியது! Of course – இதன் மீது மாற்றுக் கருத்துக்கள் நிச்சயமாய் இல்லாது போகாது – ஆனால் பிரெஞ்ச்சின் சிரமங்கள் இம்முறை வழக்கத்தை விடவும் கூடுதல் – ரொம்பவே கூடுதல்! இதோ – உட்பக்கங்களிலிருந்து ஒரு குட்டி preview! எப்போதும் போலவே ஓவியர் ஹெர்மென் ஒரு அசாத்திய லெவலுக்குச் சென்று சித்திரங்களில் தனது டிரேட்மார்க் முத்திரையைப் பதித்திருப்பது கண்கூடு! And வர்ணங்கள் & அச்சு இம்முறையும் செம அழகாய் அமைந்திருப்பதாய் மனதுக்குப்பட்டது! Hopefully – ‘சாத்தானின் உள்ளங்கையில்...‘ 2016-ன் நிறைவான இதழ்ப் பட்டியலினுள் தவறாது இடம்பிடித்திடும்! Fingers crossed!
And இதோ – மார்ச் மாதத்தின் மறுபதிப்புக் கோட்டாவின் பிரதிநிதியாக நம் கூர்மண்டையர்! “டாக்டர் டக்கர்” கதையினை அக்டோபர் 1984-ல் வெளியிட்ட வேளைகளில் அடித்த கூத்துக்களெல்லாம் நேற்றைய நிகழ்வுகள் போல நினைவில் நிற்கின்றன! ‘தத்துப் பித்தென்று‘ அந்நாட்களில் எழுதிய வரிகளை இன்றைக்கு லேசாகப் பட்டி  – டிங்கரிங் செய்துள்ளோம்! ஆனால் என்ன டிங்கரிங் பண்ணினாலும், அடாவடி ஆவர்த்தனம் செய்திடும் ஸ்பைடர் சாரின் அலம்பல்கள் முகத்திலொரு புன்னகையைத் தான் வரவழைத்தன! அது சந்தோஷப் புன்னகையா?; ‘ஷப்பா... முடியல!‘ என்ற கைவிரிப்பின் புன்னகையா?‘; ‘அடடே... காதுல புஷ்பவனமா?‘ என்ற பிரமிப்பின் பலனான புன்னகையா? விடை சொல்லத் தெரியவில்லை! மீண்டும் சந்திப்போம் folks! Have fun !! 
இதனில் இன்னமும் பணியுள்ளது...
P.S : ஞாயிறன்று குடும்பத்துடன் சின்னதொரு ட்ரிப் திட்டமிடலில் உள்ளதால் - 2 தினங்களுக்கு முன்பாகவே ஆஜர் ! 

Sunday, February 14, 2016

ஒரு 'மினி"மம் முயற்சி !

நண்பர்களே,
            
வணக்கம். நமது மதிப்பிற்குரிய பிரதமர் Make in India; Digital India என்றெல்லாம் அழகாய் பல திட்டங்களை முன்வைத்திருப்பது நாடறிந்த விஷயம் ; அதனை இன்னும் சற்றே refine செய்து ‘Make at home’; ‘Digital @ home’ என்றெல்லாம் நம்மவர்களுள் ஒரு சிறு பிரிவினர் பின்னிப் பெடலெடுத்து வருவது பற்றிய எண்ணச் சிதறல்களே இந்த ஞாயிறின் பதிவு! ஜனவரிப் பொங்கல் புத்தக விழா சென்னையில் நடந்து முடிந்த சில நாட்கள் கழிந்திருந்த நிலையில்- என் பெயரைத் தெளிவாக highlight செய்ததொரு parcel கூரியரில் நம் அலுவலகம் வந்திருந்தது! எல்லாமே ஆன்லைன் பணப்பட்டுவாடாக்கள்; போனிலும், வாட்சப்பிலும், மின்னஞ்சல்களிலும் ஆர்டர் & டெஸ்பாட்ச் விபரப் பரிமாற்றம் என்றாகிப் போன நிலையில் கடுதாசிகளும், இது போன்ற கூரியர் கவர்களும் நம்மவர்களிடம் அத்தனை கவனத்தைப் பெறுவதில்லை. அதிலும் “பெர்சனல்“ எனப் பருமனான எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருந்த கவரைத் தொடக்கூடச் செய்யாமல் பத்திரமாக என்னிடம் ஒப்படைத்தனர்! அதனிலிருந்த கடிதத்தை அதாவது அவசியமான அதன் பகுதிகளை மட்டுமேனும் இங்கே உங்களோடு பகிர்ந்திடுவது சுவராஸ்யமான அனுபவமாகயிருக்குமென்று தோன்றியது!
*************** 
டியர் எடிட்டர்,
வணக்கம். சுற்றி வளைத்து எழுத எனக்குத் தெரியாது என்பதை விட பிரியமில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னடா இப்படிக் கேட்கிறானே என்று நீங்கள் வருத்தப்பட்டால் கூடப் பரவாயில்லை ஆனால் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகு அதை நிஜமா ? பொய்யா? என்று தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்கிறது. உங்களுக்கு பழைய, கிடைக்க சான்ஸில்லாத முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ் புக்குகளை சத்தமில்லாமல் கொள்ளை லாபத்துக்கு விற்கும் ஆட்களோடு தொடர்பு உள்ளதா? 2 ரூபாய் பழைய புக்கை ஆயிரம் ரூபாய்க்கு விற்பவர்களை பற்றி நான் கேட்கவில்லை. உங்க புக்குகளை உங்கள் பெயர் போட்டே பிரிண்ட் போட்டு கிறுகிறுக்க வைக்கும் விலையில் விற்கிறார்களே அவர்களைப் பற்றித் தான் உங்களிடம் கேட்கிறேன். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முத்து மினி காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் செட்டாக அச்சு போட்டு செட் ஒன்றுக்கு 1800 என்று விற்கிறார்கள். இது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? என்னிடம் இந்த புக் ஒன்று கூட கிடையாது என்பதால் நானும் அவ்வளவு பணம் கொடுத்து தான் வாங்கினேன். யாரிடம் இருந்து? எந்த வழியிலிருந்து ? என்று கேட்காதீர்கள்- ஏனென்றால் அவர்களோடு நான் உண்மையாகவே பல வருடங்கள் பழகியிருக்கிறேன். ஆரம்பத்தில் கிடைக்காத புக்குகளை ஒருவருக்கொருவர் சுற்றில் விடுவது என்று ஆரம்பித்தது, அதன் பின்னர் ஸ்கேன் போட்டு, ஜெராக்ஸ் போட்டு, ஸ்பைரல் போட்டு பரிமாறிக் கொண்டது வரை எனக்கு தெரியும். ஆனால் திடீரென்று அந்த ஸ்கேன்கள் புத்தகங்களாக மாறி நீங்கள், அதாவது உங்கள் தந்தை 60 பைசாக்குப் போட்ட புக்குகளை இன்றைக்கு 200-250 என்று விற்கும் போது தான் எனக்கு வெறுத்து விட்டது. நண்பர்கள் என்ற உரிமையில் இது எப்படி என்று கேட்ட போது ‘ஜி... எல்லாமே விஜயன் சாருக்கும் தெரியும்; அவரால் இதையெல்லாம் பிரிண்ட் போட டைம் இல்லாததால் நாங்கள் போடுவதை அவர் கண்டுகொள்ள மாட்டார்!‘ என்று சொன்ன போது கூட நம்பிக்கையில்லை. ஆனால் தண்டம் அழுது அந்த 8 புக்குகளையும் வாங்கி பார்த்த போது, அதில் உங்கள் பழைய கம்பெனி பெயர் முதற்கொண்டு அச்சாகி இருப்பதைப் பார்த்த பிறகு எனக்கே சந்தேகம் வந்து விட்டது! ஒரு வேளை நீங்களும் தெரிந்து கொண்டே சும்மா இருக்கிறீர்களோ என்று. இதில் உங்களுக்கும் நேரடி பங்கு இருப்பதாய் நான் சொல்லவில்லை சார்; ஆனால் தெரிந்தவர்கள் தானே என்று பார்த்தும், பார்க்காதது போல இருக்கிறீர்களோ என்று! 

சென்னையில் மழை, வெள்ளம், சேதம் என்பதில் என் புக் கலெக்ஷன் காலியாகி விட்டது. என்னைப் போலவே நிறைய நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இது மாதிரி தான் இனிமேல் பழசை சேகரிக்க வேண்டுமா? உங்கள் பிரச்சனைகள் பற்றி நிறைய ப்ளாக்கில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் பழையதை சேகரிக்கும் ஆர்வம் எங்களைப் போன்றவர்களுக்கு குறையாது, நாங்கள் இப்படி கொள்ளை விலைகளுக்கு தான் வாங்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளணும் போலும். வாரமலர் கலரில், அப்புறம் ஏதோ திகில் புக்குகள்; அப்புறம் கிடைக்காத பழைய இதழ்கள் எல்லாவற்றையும் இதே போல சப்ளை செய்ய முடியும் என்று இஷ்டத்துக்கு விலை பேசினார்கள். நீங்கள் சென்னை புத்தக விழாவுக்கு வருவீர்கள் நேரில் புக்குகளை காட்டி பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் கடையில் இருந்தவர் இந்த முறை நீங்கள் வரமாட்டீர்கள் என்று சொல்லி விட்டதால் இந்த கடிதம் எழுதுகிறேன். உங்கள் போன் நம்பர் தந்தால் பேசுகிறேன்..."
************ 
இன்னமும் நிறையவே நீண்டு செல்லும் அந்தக் கடிதத்தோடு 8 புத்தகங்களும் விறைப்பாக இருந்தன! ‘வாயுவேக வாசு‘ ; சூரப்புலி சுந்தர்‘  ; தபால்தலை மர்மம் etc. etc. என்ற அந்த 8 இதழ்களும் 1970-களின் மத்தியில் முத்து மினி காமிக்ஸ் என்ற லேபிலில் வெளிவந்திருந்த இதழ்களின் டிஜிட்டல் பிரிண்டுகள் என்பது பார்த்தவுடன் புரிந்தது. நமது லோகோ;அச்சகப் பெயர்,வெளியீடு நம்பர், தேதி, இத்யாதி என அட்சரசுத்தமாய் உட்பக்கங்களில் கண்ணில்பட்ட போது தான் கடிதம் எழுதியவரின சந்தேகம் முகாந்திரமின்றி இல்லை என்பது புரிந்தது! 

பிப்ரவரி மாதத்து இதழ்களின் வேலைகள், திருப்பூர் புத்தக விழாப் பணிகள் என்று தவிர்க்க இயலா விஷயங்கள் இடையே காத்திருந்தபடியால் இந்த சமாச்சாரத்தைத் தற்காலிமாகக் கிடப்பில் போடுவதெனத் தீர்மானித்தேன். பிப்ரவரி இதழ்கள் வெளியாகி, அழகாய் உங்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில் இதைப் பற்றி போன ஞாயிறின் பதிவில் எழுதிடும் பட்சத்தில் ஒளிவட்டம் பிப்ரவரி இதழ்கள் மீதிருந்து விலகிப் போய் விடக்கூடுமென்று பட்டது. So சென்ற வாரமும் வாய் மூடி இருந்து விடல் நலமென்று எண்ணியவன், இன்றைக்கு ஒரு வழியாக இதற்கென கவனம் தந்திடத் தீர்மானித்தேன்! 

முந்தைய இதழ்களுக்கென ஒரு சிறு மார்கெட் இன்றைக்கும் தொடர்வதும், அதனைப் பயன்படுத்திக் கொண்டு சேகரிப்புகளை யானைவிலை குதிரைவிலை சொல்லி விற்பதும் OLX வரை பகிரங்கமாகவே நடந்து வரும் விஷயங்கள் என்பதால் அது அவரவர் பிரியம் என்ற மட்டில் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் சேகரிப்பின் மீதான மோகத்தைக் கல்லாக்கட்டும் கருவியாகப் பார்த்திடுவது மட்டுமின்றி, இவற்றிற்கு நமது ஆசீர்வாதங்களும் உண்டென்று உரக்கப் பேசிடும் ‘கெத்து‘ நிச்சயமாய் ஆரோக்கியமானதல்ல என்பது புரிகிறது! இந்த சமாச்சாரங்கள் நண்பர்களுள் பலருக்கும் ஏக காலமாய்த் தெரிந்துள்ளது எனும் போது நான் மட்டுமே ‘சிவாஜி செத்துட்டாரா?‘ என்ற ரேஞ்சிற்கு டியூப்லைட்டாக இருந்திருப்பதும் புரிகிறது! தெளிவாக ஸ்கேன் செய்தால் போதும் ஒரு பெரிய சைஸ் டிஜிட்டல் பிரிண்டரில் தேவைக்கேற்ப பிரிண்ட்கள் போட்டு சுலபமாய் மேகி நூடுல்ஸ் கிண்டி விடலாமென்ற மகாசிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் யாரென்பதைக் கண்டுபிடிப்பதற்கு பெரியதொரு ஷெர்லக் ஹோம்ஸ் தேவையில்லை ! கொஞ்சம் மெனக்கெட்டாலே ஸ்கேனிங் செய்வது யார் ? ; அச்சு வேலைகளைக் கவனிப்பது யார்?; மார்க்கெட்டிங் செய்வது யார் ? எந்த ரூட்டில் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் ? என்பதைத் தெரிந்து கொள்வதில் சிரமமிராதுதான்! இதனை மாவட்டம்தோறும் மார்கெட் செய்திட “Help Wanted” என்றும்; தயாரிப்புத் தரப்பினரின் விலைக்கு (!!!) மேல் ஒரு லாபம் வைத்து ஆங்காங்கே விற்றுக் கொள்ளலாமென்ற சட்டதிட்டங்களும் அமலில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள நேர்ந்த போது நிஜமாகவே சங்கடமாக இருந்தது! “எமது அடுத்த project-கள்“ என்று MC வாரமலர் தொகுப்பு; XIII – இரத்தப்படலம் தொகுப்பு என்ற பலமான / பசையான திட்டங்களும் pipeline-ல் இருப்பதாய்க் கேள்விப்பட்ட போது சில பல மாதங்களுக்கு முன்பாய் வருடத்திற்கு 48 புத்தம்புது இதழ்களை வழங்கிட ஆண்டுச் சந்தாவென நாலாயிரம் ரூபாய் கோரிட நான் முழித்த பேய்முழி தான் நினைவுக்கு வந்தது! இங்கேயோ 20 ரூபாய் சமாச்சாரத்தை 225-க்கு விற்பது மட்டுமின்றி இது கூட ஒரு ‘சேவை அடிப்படையில்‘ என்ற பில்டப்போடு நடைபெறுவதாய்க் கேள்விப்பட்டபோது அழுவதா-சிரிப்பதா என்று தெரியவில்லை!

சரி... இதற்கான தீர்வு என்னவாக இருக்க முடியுமென்று யோசித்த போது தான் ‘if you can’t beat them – join them !என்று தோன்றியது! எனது ஆசீர்வாதங்களோடு தான் அரங்கேறும் விஷயம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர் – அவர்களது ஆசையை முழுமைப்படுத்தி விட்டாலென்னவென்று நினைத்தேன்! குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தொடர்ந்த நாட்களில் நமது முந்தைய பதிவுகளில் ஏதோ ஒரு நிலையில் புத்தகக் கண்காட்சிகளுக்கு வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கென மலிவு விலைப் பிரதிகளைத் தயாரித்தால் நன்றாக இருக்குமே என்ற ரீதியில் நண்பர்கள் எழுதி வைக்க அக்கணமே தீர்மானித்தேன் நிழலில் தயாரிக்கப்பட்டுள்ளதை நிஜவுலகிற்குக் கொணர்வதென! So மறுபதிப்புப் படலத்தினுள் நாம் இறங்குகிறோம் தீர்க்கமாய்! 

பெரியதொரு எண்ணிக்கையி்னை அச்சிடுவதோ அவற்றை ஸ்டாக்கில் வைத்திருந்து கங்காரூ குட்டியைப் போலச் சுமந்து திரிவதோ இம்முறை இந்த மலிவுவிலை மறுபதிப்புகளில் இருந்திடப் போவதில்லை! சிறிதளவுப் பிரதிகளை, துவக்கத்தில் அச்சடுவோம், அவை காலியாவதைப் பொறுத்து அடுத்து திட்டமிடுவோம்! And தற்போது சுடச்சுட மார்கெட் செய்யப்படும் நமது முத்து மினி காமிக்ஸிலிருந்தே அரை டஜன் இதழ்களை முதல் சுற்றுக்கான மறுபதிப்பு இதழ்களாகத் தேர்வு செய்திடுவோம்! இவற்றுள் ஒற்றை இதழ் நீங்கலாக பாக்கி எல்லாமே மும்பை நிறுவனத்திடமிருந்து flat ரேட்களில் வாங்கப்பட்டவை என்பதால் மறுபிரசுரம் செய்வதில் தடைகளில்லை.தொடரும் நாட்களில் விச்சு & கிச்சு தொகுப்பு; பரட்டைத்தலை ராஜா தொகுப்பு ஸ்டீல்பாடி ஷெர்லாக் தொகுப்பு  என்று பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு என் கையிலுள்ள 8 முத்து மினி இதழ்களுமே தெளிவான ஸ்கேன்களிலிருந்து digital பிரிண்ட் போடப்பட்டிருப்பதால் நேரடியாக அவற்றை நாம் அச்சுக்கு எடுத்துச் செல்வதில் துளியும் சிரமமிராது! இந்த மலிவு விலைப் பதிப்புகள் மாணவர்களின் மீதான focus-ல் தயாரிப்பது நமது நோக்கமெனும் பொழுது இதனில் வியாபார நோக்கத்தை பெரியளவில் நுழைத்திடுவதாக நாமில்லை! So, 64 பக்கங்கள் கொண்ட ஒவ்வொரு புக்கும் ரூ.20 என்ற விலையில் வெளிவரும் ; புத்தக விழாக்களில் 10% கழிவுடன் விற்பனை செய்யப்படும். இந்த முயற்சியினில் நமக்கு ராயல்டி, மொழிபெயர்ப்பு, இத்யாதி,எனத் தயாரிப்புச் செலவுகள் இல்லாததால் அதன் பொருட்டு நாம் வசூலித்திடும் தொகையினை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உங்கள் சார்பிலும், நமது சார்பிலும்,மிகுந்த சிரத்தையோடு ஸ்கேன்னிங் செய்த நண்பர்களின் சார்பிலும் ஒரு சிறு அன்பளிப்பாய்ச் சேர்ப்பித்து விடுவோமே?! சென்றாண்டின் ஒரு பதிவில் ஏதாவதொரு இதழிலிருந்து கிடைக்கும் சிறு தொகையினையாவது charity-ன் பொருட்டு தந்திட முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எழுதியிருந்ததும் மறந்திருக்கவில்லை! அதனை நடைமுறைப்படுத்திட இது வாகான வாய்ப்பாகவும் எனக்குத் தோன்றியது! So- மினி‘மம் முயற்சிகளில், ‘மினி‘மம் எண்ணிக்கையிலான இதழ்களை அச்சிட்டாலும், முத்துமினி காமிக்ஸ் வாயிலாக ஒரு நல்ல விஷயத்திற்கு வழி பிறந்திருப்பதை சங்கடமான இந்த சூழலிலும் ஒரு வெளிச்சக் கீற்றாகப் பார்க்கத் தோன்றுகிறது. விற்பனை எண்ணிக்கைகள் பற்றிய யூகங்கள் ஏதுமில்லா நிலையில் நாம் வழங்கக் கூடிய தொகைகளைப் பற்றிப் பேசிடத் தயக்கமாகவுள்ளது! ஆனால் இந்த முயற்சி take off ஆகும் சமயமே அந்த நம்பர்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் என்பது எனது promise!

செய்வன திருந்தச் செய்‘ என்ற கோட்பாட்டை வரும் நாட்களில் தீர்க்கமாகவும் செய்தே விடுவோமே? தற்போது ‘இல்லை... இல்லை‘ என்ற நிலையில் சேகரிப்பாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் ‘இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பின் மீதாக விரைவில் பார்வையைப் பதிப்போம்! தற்சமயம் அமலிலுள்ள முறையில் அல்லாது முன்பதிவுகளுக்கு மாத்திரமே இவை‘ என்ற ரீதியில் சிறிதளவு பிரதிகளை மட்டுமே அச்சிடுவோம் தனித் தனி நம்பர்களிட்டு ! அதாவது 750 பிரதிகள் மட்டுமே அச்சிடப் போகிறோம் என முன்கூட்டியே நிர்ணயம் செய்துவிடும் பட்சத்தில் இதழின் பின்னட்டையில் சலான்களில், டிக்கெட்டுகளில் வருவது போல அடுத்தடுத்த நம்பர்களை 1 முதல் 750 வரை அச்சிட்டு விடலாம். So- இவை மெய்யான Limited Collector’s Editions களாக மாத்திரமே இருந்திடும் ! On the flip side – printrun குறைவாய் அமைந்திடும் போது நாம் இதுவரைப் பழகியுள்ள ரீதியில் விலைகள் (சகாயமாய்) இருந்திட வாய்ப்பிராது! ஆனால் தற்போது க்ரே மார்க்கெட்டில் நிலவிடும் ஏழாயிரம், எட்டாயிரம் பத்தாயிரம் என்ற அபத்த விலைகள் நிச்சயமாய் நம்மிடம் இராது என்ற மட்டில் உறுதி! 

சரியாகத் தேர்வு செய்து மறுபதிப்பைத் திட்டமிடல்; எட்டிப் பிடிக்கக் கூடியதொரு சிறு printrun–ஐ மட்டுமே நிர்ணயம் பண்ணுதல்; போதிய அவகாசமும், தவணைகளும் தந்து பணம் வசூலித்தல் வாகான சந்தர்ப்பத்தில் ரிலீஸ் என்பதே நமது modus operandi ஆக இந்த limited editions மறுபதிப்புகளுக்கு வைத்துக் கொள்ளலாம்! So ஞாபக மறதிக்கார நண்பர் XIII வண்ண அவதாரில் நம்மை சந்திக்கவொரு வேளை புலர்வதும் இவ்விதம் தான் இருந்திட வேண்டுமென விதிக்கப்பட்டிருப்பின் - அதனை மாற்றியமைக்க நாம் யார் ?!! (ஸ்டீல் பொன்ராஜ் சார் - என்ஜாய் !!!)
அதே சமயம்- ‘தட புட‘வென்று ராத்திரியோடு ராத்திரியாய் அத்தனை மறுபதிப்புகளையும் களமிறக்கிடுவோமென்ற கற்பனைகளில் நானில்லை. புது இதழ்கள் தான் நமது எதிர்காலம் என்பதில் துளி கூட மாற்றுக் கருத்தில்லை என்னிடம்! And நமது சொற்ப வசதிகளை, கையிருப்புகளைப் புது இதழ்களைத் தாண்டி இந்த limited editions அந்தர்பல்டிகளுக்குள் விதைத்திடும் எண்ணமும் என்னிடமில்லை. And முக்கியமாக இவற்றினுள் எனது உழைப்பைக் கூட முதலீடு செய்யும் நிலையிலும் நான் இல்லை என்பதால் - இதனை மட்டும் இனி நமது சீனியர் எடிட்டர் பார்த்துக் கொள்வார் - வரும் நாட்களில் ! ஏதேனும் டென்ஷன் இல்லாப் பணிகளுக்குள் ஆழ்ந்திட ஆர்வமாயிருக்கும் அவரும் நிச்சயம் இதனில் சந்தோஷம் கொள்வார் ! (இது அவருக்கே இதுவரையிலும் தெரிந்திருக்கா சேதி !)So- புதுசை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பழசை மறுபதிப்பாக்கிடும் ஊக்கத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் இந்தக் கூட்டணி நிச்சயம் ஜெயம் காணும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது !!

டெக்ஸ் கதைகளில் வரும் புகை சமிக்ஞைகளுக்குப் போட்டியாக இன்றைக்கு என் புண்ணியத்தில் சிலபல செவிகளிலிருந்து வெப்பச் சலனங்கள் வெளிப்படுவது உறுதியென்பது புரிகிறது! And எனது யோக்கியதாம்சங்களோ ; இன்மையோ தீவிரமாய் அலசலுக்கு உட்படுத்தப்படும் என்பதும், இனி வரும் நாட்களில் அழகான அர்ச்சனைகள் ஆங்காங்கே அமர்க்களமாக நடைபெறும் என்பதும் தெரியாமலில்லை! ஆனால் நடந்து வரும் அபத்தங்களை ஏதோவொரு நிலையில் நிறுத்த முயற்சிக்காது போயின் ஏற்கனவே நாலணா நாணயத்தைப் போலச் சுருங்கிக் கிடக்கும் காமிக்ஸ் வாசகர் வட்டம் நாளாசரியாக மாயமாகவே  மறைந்து விடுமென்ற அச்சம் எழுகின்றது! ‘இதைச் செய்யுங்கள் இதைச் செய்யாதீர்கள்‘ என்ற ரீதியில் அட்வைஸ் பண்ண அவசியமிங்கே நிலவுவதாய் நான் நினைக்கவில்லை! யதார்த்தத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள நான் தான் செம லேட் என்ற வகையில் இங்கே ஞானசூன்யம் அடியேனே! So அட்வைஸ் செய்யும் தகுதிகள் எனக்குக் கிடையாது சர்வ நிச்சயமாய்! 

ஆனால் இத்தகைய முறையற்ற முயற்சிகளைக் காமிக்ஸ் நேசத்தின் இன்னுமொரு பரிமாணமாக நியாயப்படுத்திடுவதை ஊக்குவிக்க வேண்டாமே ப்ளீஸ்? முந்தைய சேகரிப்புகளைப் பத்திரமாக வைத்திருக்கும் நண்பர்கள் நட்பு வட்டாரத்தின் பயனுக்காக அவற்றை ஸ்கேன்களாக வலையேற்றம் செய்வது தான் இந்த “தொழில் முனைவோர்க்கு“ மூலதனம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ? தயைகூர்ந்து வரும் நாட்களில் உங்கள் ஸ்கேன்களை நமக்கு அனுப்பித் தாருங்கள் மொத்த வாசகர்களும் அதனிலிருந்து பலன் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்திடுவோம்! இத்தனை காலமாய் நண்பர்கள் ஜாடை மாடையாக இந்த grey market படலம் பற்றி என்னிடம் தகவல் சொல்லியுள்ள போதிலும் இது போல ஆதாரங்களுடன் எதனையும் பகிர்ந்திட்டிருக்கவில்லை. So யூகத்தின் பெயரில் யாரையும் நோக்கி விரல்நீட்ட எனக்குத் தோன்றவில்லை. அது மட்டுமன்றி, சின்னதொரு வட்டத்துக்குள் மௌன பாஷையில் வியாபாரமாகி வரும் இந்த சங்கதிகளை நானே ஊதிப் பெருசாக்கி,விளம்பரப்படுத்தி விட்டு   இது நாள் வரைக்கும் ‘சிவனே‘ என்று விலகி நிற்கும் இதர வாசகர்களையும் இந்த விரயத்துக்குள் கால்பதிக்கச் செய்ய வேண்டாமே என்பதே என் எண்ணமாகயிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இதனைத் தோண்டித், துருவிப் பின்னணிகளை அம்பலமாக்குவதன் மூலம் ஏற்கனவே கார்சனின் இளமையைப் போல் தேய்ந்து நிற்கும் காமிக்ஸ் ரசிக வட்டத்தினை  மேற்கொண்டும் பலவீனமாக்குவது ரசிக்கக் கூடிய சிந்தனையாக எனக்குத் தோன்றவில்லை ! எல்லோருமே காமிக்ஸ் எனும் நேசத்தின் வாயிலாக அறிமுகம் கண்ட நண்பர்களே எனும் பொழுது யாரையும் கஷ்டப்படுத்திட மனதும் கேட்கவில்லை !  So இத்தனை காலமும் காற்றுவாக்கில் காதுகளைத் தேடி வந்த கசப்பான சங்கதிகளை கண்டும் காணாது நகன்று செல்ல முயற்சித்ததன் பின்னணி இதுவே. ஆனால் ஒரு கட்டத்தில் துளியும் கூச்சமின்றி இத்தகைய வேலைகள் பகிரங்கமாய் செயலாவதற்கு எனது இத்தனை கால மௌனமும் முக்கிய காரணமென்பது புரியும் போது மௌன விரதத்தைக் கலைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை ! ‘நீ புதுசைப் போட்டுக்கி்ட்டே போ; அது காலியான பின்னே நாங்க பின்னாடியே அறுவடை செய்து கொள்கிறோம்‘ !'என்ற சிந்தனையை இனியும் வளர்த்திடவோ, சகித்திடவோ நம்மிடம் திராணியில்லை! புதிய பாணிக் கதைகளின் தேடலிலும் , உங்கள் ரசனைகளுக்கேற்ற படைப்புகள் முக்கியம் என்ற வேட்கையிலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கி வைத்துள்ள oldie கதைகளை நான் வருஷங்களாய்ப் பீரோவுக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்க, இன்னொரு பக்கமோ அதே பழசைக் கடைவிரித்து,நம் பெயரைப் போட்டே சத்தமின்றி வியாபாரம் நடத்திடும் அந்த லாவகம் - phew ! 
இவை தற்போது வீட்டிலுள்ள எனது மேஜையில் வருஷங்களாய்த் தூங்கி வருபவை ! ஆபீசில் இன்னுமொரு வண்டி உள்ளது ! 
காமிக்ஸ் மீதான காதலின் பிரதிபலி்ப்பாய் ஏதாவது செய்திட வேண்டுமென்ற அவா மேலோங்குகிறதா folks ? - please do join hands with us ; உங்கள் கைவண்ணங்களை நமது இதழ்களுள் வாகான தருணங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்-நமக்கு இயன்ற சன்மானங்களுடனும், அங்கீகாரங்களுடனும் ! இன்னும் ஒருபடி மேலே போய் maybe ஆண்டுக்கு ஒரு இதழினை அட்டைப்பட டிசைனிங்கில் துவங்கி, மொழியாக்கம், டைப்செட்டிங் வரையிலும் முழுக்க முழுக்க வாசகர்களின் கைவண்ணத்திலேயே இருக்கும் விதமாய் கூட அமைத்திடலாம்! ‘அட்டைப்பட டிசைனிங்கில் பங்கேற்க வாருங்களேன் நண்பர்களே‘ என்று நான் கூவும் போது மூன்றே நண்பர்கள் மாத்திரமே கைதூக்கும் அதே வேளையில், இந்த துல்லியமான ஸ்கேனிங்களின் பொருட்டும், உயர்மட்ட software-களைப் பயன்படுத்தி கலரிங் செய்வதற்கு மாதக்கணக்கான உழைப்புகளை நல்கிடுவதும் நடந்து வருகிறது! உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு showcase தேவையென்று தோன்றும் பட்சத்தில் அதனை சரியான விகிதத்தில் அணுகிடுவோமே இனியாவது? சீரியஸாகவே - மொழிபெயர்ப்புகளுக்கு கூடுதலாய் கரங்கள் கிட்டின் மகிழ்வேன் - தொடர்ச்சியாய் இந்தப் பளுவை இரண்டே பேராய் நாங்கள் சுமந்திடுவது சதாநேரமும் ஏதாவதொரு deadline-ன் பொருட்டு முட்டி மோதி ஓடிக்கொண்டே இருப்பது போலுள்ளது ! ஒவ்வொரு ஞாயிறையும் ஏதேனும் ஒரு காகித மலைக்குப் பின்னே புதைந்து கிடந்து கழிப்பதே எனது routine ஆகி நிற்கிறது ! So டிசைனிங்கில் மாத்திரமின்றி, மொழிபெயர்ப்பினில் ஆர்வம் காட்டிட நண்பர்கள் இருப்பின் - ஒரு பிள்ளையார் சுழி போடவும் இதனை ஒரு தருணமாக்கிக் கொள்ளலாம் ! ஒரு அழகான ரசனையை மிகக் குறுகிய வாசகவட்டத்தின் துணையோடு உயிரோட்டத்துடன் தொடர்ந்திடச் செய்ய முயற்சிக்கும்போது இத்தகைய ஸ்பீட் பிரேக்கர்கள் வேண்டாமே ப்ளீஸ் ! என்ற ஒற்றைக் கோரிக்கையோடு காத்திருக்கும் மார்ச் மாதத்தின் இதழ்கள் பக்கமாய் பார்வைகளைத் திருப்புகிறேன்!

இதோ- மார்ச் மாதத்து சிரிப்புப் புலி க்ளிப்டனின் இதழின் அட்டைப்பட first look ! ஒரிஜினலே சூப்பர் என்பதால் அதனை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்து நமது அட்டைப்படமாக்கியுள்ளோம்! 
And கதையைப் பொறுத்த வரை வழக்கமான க்ளிப்டன் பாணி விறுவிறு கதை laced with british humor என்ற தடத்தில் தான் வண்டி ஓடுகிறது! பரபரப்பான கதைக்களத்தின் மத்தியினில் உறுத்தலின்றி நகைச்சுவையினைப் புகுத்திட படைப்பாளிகள் எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தையை இயன்றளவுக்குப் பின்பற்றிட நானும் முயற்சித்திருக்கிறேன்! இந்த அழகான வண்ண ஆல்பம் உங்கள் முகங்களிலும் ஒரு மென் புன்னகையை வரச் செய்திடும் பட்சத்தில் நிச்சயம் திருப்தி கொள்வேன்! ஏற்கனவே சொன்னது போல மாதமொரு கார்ட்டூன் இதழ் எனும் போது பணியில் தொய்வுகளின்றிச் செயல்படுவது சாத்தியமாகிறது! இந்த எண்ணங்களை விதைத்த நண்பர்களுக்கும், இன்று அதனை பாராட்டுக்களால் குளிர்விக்கும் நண்பர்களுக்கும் நமது நன்றிகள்! 

And இதோ - தளபதியின் காத்திருக்கும் "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழின் உட்பக்கப் preview - வண்ணத்திலும், கறுப்பு வெள்ளையிலும் ! பார்த்து விட்டு - எது அழகாய்த் தெரிகிறதென்று சொல்லுங்களேன் ? எனக்கு இரண்டுமே ரம்மியமாய்த் தோன்றின !! மீண்டும் சந்திப்போம் guys ! Bye for now ! And oh yes,enjoy the day of love !!

P.S: விடிந்தும் விடியாமலும் இருக்கும் அதிகாலைகளிலேயே எழுந்தமர்ந்து தவறாமல் நமது பதிவுகளைப் படித்து வரும் என் தந்தைக்கு நிச்சயமாய் இவ்வாரப் பதிவு சந்தோஷம் தரப்போவதில்லை! என்றைக்கோ இந்த 74 வயது இளைஞர் துவக்கி வைத்த சிலபல முயற்சிகள் இவ்விதம் திசைமாறிய கப்பல்களாய் பயணிப்பதை யார் தான் ரசித்திடுவர்? Please do spare a thought guys! 

Sunday, February 07, 2016

ஒரு 68-ம்....ஒரு 70-ம்...!

நண்பர்களே,

வணக்கம். ஒற்றைக் குருவியின் சந்தோஷ கானத்தை வசந்த காலத்தின் ஒட்டுமொத்த அறிவிப்பாய்ப் பார்த்திடக்கூடாது தான்; ஆனால் மகிழ்ச்சியான நாட்கள் ரொம்பத் தொலைவிலில்லை என்பதன் அறிகுறியாய் எடுத்துக் கொள்ளலாமல்லவா? புத்தாண்டு பிறந்து இரு மாதங்களது வெளியீடுகள் மட்டுமே நம் கைகளில் இருக்கும் வேளையில் பின்னிட்டோம்லே... தூள் சூப்பர் ஹிட்‘ என்ற கனவில் நான் சுற்றி வந்தால் மதிமந்திரியாரின் அல்லக்கை வேலைக்குக் கூட லாயக்காக மாட்டேனென்பது உறுதி! ஆனால் ஜனவரி & பிப்ரவரி இதழ்கள் as a whole அழகானதொரு வார்ப்பில் அமைந்து விட்டுள்ளதை ரசித்திடலில் தவறில்லைதானே? இதற்கு முன்னே தொடர்ச்சியாய் ‘ஹிட்‘ கதைகளைத் தாங்கி வந்த மாதங்கள் பல அமைந்துள்ளன தான் ; ஆனால் 2016 துவக்கம் முதலாகவே  'மாதமொரு டெக்ஸ்' + 'மாதமொரு கார்ட்டூன் மேளா' என்ற பார்முலா ரொம்பவே புத்துணர்ச்சியோடு எங்களைப் பணி செய்ய அனுமதிக்கின்றது என்பது அப்பட்டமாய் புரிகிறது! இதுவரையிலும், கனமான கதைகள் அமைந்திடும் வேளைகளில் அந்த சீரியஸ் தொனியினை சற்றே மட்டுப்படுத்திட கார்ட்டூன்களைப் பயன்படுத்தி வந்தோம்! ஆனால் இப்போதோ கார்ட்டூன்களே ஒரு தனித் தடம்; சிரிப்பின் நாயகர்களே ஒரு star attraction என்றான பிறகு ஒவ்வொரு மாதத்துப் package –ம் ரம்யமாகத் தெரிகின்றன ஆந்தை விழிகளுக்கு! இந்தாண்டின் tagline – ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை  என்பதே! அதன் துவக்கம் எங்கள் பக்கமிருந்து சரியாக அமைந்துள்ளதெனும் போது உங்கள் வதனங்களையும் அது அழகுபடுத்திடும் நாள் நிச்சயமாய் தூரத்தில் இல்லையென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!

பிப்ரவரி இதழ்கள் இப்போது தான் உங்களது நேரங்களையும், வாசிப்புகளையும் கோரி வரும் சூழலில் அது டாப்.... இது சூப்பர்‘ என்று நான் தீர்ப்பெழுதுவது ரொம்பவே முந்திரிக்கொட்டைத்தனமாக இருக்குமென்பது உறுதி! ஆனால் இதுவரையிலான உங்களது சிந்தனைச் சிதறல்களை ஒரு துவக்கமாக வைத்துப் பார்த்தோமெனில் 68-க்குச் சரியான போட்டியைத் தருகிறது 70 என்பது புரிகிறது ! தனது எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் லக்கி லூக் 68-வது அகவையில் பயணிக்கும் இரவுக்கழுகாரோடு தம் கட்டி மல்லுக்கு நிற்பதை உணர முடிகிறது ! So நம்மிடையே 1987 முதலாக ஜாலி ஜம்ப்பரோடு சுற்றித் திரிந்து வரும் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாய் மீதான ஒளிவட்டமே இவ்வாரத்துப் பதிவு! So here goes!

லக்கியாரை நான் முதன் முதலில் தரிசித்தது 1980-களின் துவக்கப் பொழுதினில்! “சூப்பர் சர்க்கஸ் & ஜெஸ்ஸி ஜெம்ஸ்“ ஆகிய இரு ஆல்பங்களையும் மும்பையில் ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து என் தந்தை வாங்கி வந்திருந்தார். ஆங்கிலத்தில், அழகான பெரிய சைஸில், வண்ணத்தில் நம்மாளைப் பார்த்த மறுகணமே அவரோடு ஐக்கியமாகி விட்டேன்! இன்டெர்நெட்டோ, வெளியுலகத் தொடர்புகளுக்கு சுலப வாசல்களோ இல்லா அந்நாட்களில் தொடரில் மேற்கொண்டு இதழ்களைச் சேகரிக்க எவ்வளவோ முயன்று பார்த்தும் பருப்பு வேகவில்லை! So அந்த இரு ஆல்பங்களையே புரட்டோ புரட்டென்று புரட்டி திருப்திப்பட்டுக் கொண்டேன்! 1985-ல் பிரான்க்பர்ட் செல்லும் தருணம் வந்த பொழுது லக்கியாரை எப்படியேனும் தமிழ் பேசச் செய்தே தீர வேண்டுமென்ற வேகம் எனக்குள் நிறைய குடியிருந்தது! 1985-ல் போடத் தொடங்கிய துண்டு நமக்கொரு சீட் பிடித்துத் தர ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டது! இங்கிருந்து நானொரு கடுதாசி போட்டால் அது வான்வழி மார்க்கமாய் சாவகாசமாய் 25 நாட்கள் கழித்துப் பாரிஸ் சென்றடைவதும், அவர்களது பதில் கடிதம் ஒரு மாதத்தை விழுங்கிக் கொண்டு நம்மை எட்டிப் பிடிப்பதும் வேறு எதற்குப் பயன்பட்டதோ இல்லையோ எனது பொறுமையின் அளவுகளை உயர்த்திக் கொள்ள ரொம்பவே உதவியது! 

ஒரு வழியாக லக்கியின் கான்டிராக்டும் 1986-ல் செப்டெம்பரில் கைக்குக் கிடைக்க, அதனில் எனது கையெழுத்தைக் கிறுக்கி வைத்து விட்டு மறுதபாலில் திருப்பி அனுப்பிடாமல் பத்திரமாகக் கையிலேயே வைத்துக் கொண்டேன். அக்டோபரில் பிரான்க்பர்ட் + பாரிஸ் பயணம் என்ற திட்டமிடல் இருந்ததால் இன்னுமொரு 25 நாட்களை கடுதாசிப் பயணங்களில் விரயம் செய்யத் தோன்றவில்லை ! நேரில் பார்க்கும் போது கையிலேயே ஒப்படைத்து விட்டு - கதைப் பக்கங்களை அப்படியே வாங்கி வந்து விடலாமென்பது எனது மகாசிந்தனை ! அதன்படியே பிரான்க்பர்டில் அவர்களது ஸ்டாலில் சந்தித்த வேளையில் பந்தாவாய் கான்டிராக்டை எடுத்து அவர்களிடம் கொடுக்க ‘சரி... பக்கங்களைத் தயார் செய்து தபாலில் அனுப்புகிறோம் !‘ என்று சொல்லி விட்டு அவர்கள் என்னை வழியனுப்பி வைக்க முனைந்தபோது  எனக்கோ தவிப்பு! திரும்பவும் ஒன்றரை மாதங்கள் காத்திருந்தாக வேண்டுமே; கையில் வாங்கிக் கொள்ள முடிந்தால் அலுப்பிருக்காதே என்ற நப்பாசையில், தயங்கித் தயங்கி எனது கோரிக்கையை முன்வைத்தேன்! “இவன் கொடுக்கவிருக்கும் ராயல்டியோ பொரி உருண்டை... இந்த அழகில் துரைக்கு உடனடி சர்வீஸ் கேட்குதாக்கும்?“ என்ற ரீதியில் அவர்கள் முகத்தைச் சுளித்திருந்தால் நான் எதுவும் சொல்லியிருக்க இயலாதுதான்; ஆனால் அவர்களோ முகமெல்லாம் புன்னகையோடு Bromide பிரிண்ட்கள் போட்டு வாங்க நாலைந்து நாட்களாவது ஆகுமே...?‘ என்று கேட்ட பொழுது - பிரான்பர்ட் கண்காட்சி முடிந்த கையோடு அடியேன் பாரிஸை போட்டுத் தாக்கவிருப்பதாகச் சொல்லி வைத்தேன்! இவன் நம் குடலை உருவாமல் ஊர் திரும்ப மாட்டான் போலும்! என்று மனதிற்குள் நினைத்திருக்கலாம்தான் ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல், ‘பாரிஸ் வந்த பிற்பாடு போன் அடித்து விட்டு ஆபீசுக்கு வாருங்கள்!‘ என்று சொன்னார்கள்! இவ்வளவு சொன்னால் போதாதா? புத்தக விழா முடிந்த கையோடு பாரிஸ் புறப்பட்டுச் சென்றான பின்னே முதல் காரியமாகப் போன் போட்டேன்! 
ஒவ்வொரு பிராங்க்பர்ட் விழாவும் பெரிய பதிப்பகங்களுக்கு ஒரு யானைப்பொதி வேலையை உருவாக்கித் தரும் வேளை என்பதையோ; அத்தனை சுமைக்கு மத்தியில் நமது வேண்டுகோளுக்கு முக்கியத்துவம் தருவதும் சுலபமாகாது என்றெல்லாம் அன்றைக்கு எனக்குத் தெரிந்திருக்கவுமில்லை! ஒரு நிமிட மௌனத்துக்குப் பின்பாக “சாரி... வேலை மும்மரத்தில் இதைச் சுத்தமாக மறந்தே போய் விட்டேன்; இன்றைக்கு ஆர்டர் பண்ணினால் கூட, வெள்ளிக்கிழமை சாயத்திரத்துக்கு முன்னதாகக் கிடைத்திட வாய்ப்பேயில்லையே!“ என்று நிஜமான சங்கடத்தோடு சென்னார்! சனி, ஞாயிறு அவர்களது விடுமுறைகள் எனும் போது மறு திங்கட்கிழமைக்கு முன்பாக எதுவும் சாத்தியமாகாதே என்பது புரிந்தது! நானோ அந்த வாரயிறுதியினில் ஊர் திரும்புவதாகத் திட்டமும், டிக்கெட்டும்! 

இதற்கு மத்தியினில் 1985-ல் ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, என்று சுற்றித் திரிந்திருந்த என்னை- ‘இவ்வளவு தொலைவு போய்ட்டு ஸ்விட்சர்லாந்தைப் பாக்காமத் திரும்பிட்டியாக்கும்டா? சுத்த வேஸ்ட் போ!‘ என்று என் நண்பர்கள் உசுப்பி விட்டிருந்தனர். So- பிரான்க்பர்ட் + பாரீஸ் வேலைகளை முடித்த கையோடு இரண்டு நாட்களுக்கு ஸ்விட்சர்லாந்து செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன்! இந்தியாவுக்குத் திரும்பும் ரிட்டன் ப்ளைட் பாரிஸிலிருந்து தான் எனும் போது சனிக்கிழமை அதிகாலையில் நான் ஸ்யூரிக்கிலிருந்து பாரிஸ் வந்து சேர்வதாயிருந்தேன்! ஈனஸ்வரத்தில் சனிக்கிழமை உங்கள் விடுமுறையென்பதை அறிவேன் தான்; ஆனால் நான் நாடு திரும்பவிருப்பது சனி இரவில்.... அதற்கு முன்பாக உங்களை எங்கேயாவது சந்தித்து கதைப் பக்கங்களை collect பண்ணிக் கொள்ள இயலுமா?“ என்று கேட்டு வைத்தேன்! நிச்சயமாய் எரிச்சலில் மறுப்புச் சொல்லப் போகிறாரென்று எதிர்பார்த்திருந்த நிலையில் கலகலவென சிரிப்புக் குரல் தான் மறுமுனையிலிருந்து கேட்டது! “இத்தனை காதலோடு எங்களது கதைகளைப் பின்தொடரும் உங்களுக்கு இதைக் கூடவா செய்ய மாட்டோம்?“ என்று சொல்லிய கையோடு சனி காலை நானிருக்கும் ஹோட்டலுக்கே வந்து பக்கங்களை ஒப்படைப்பதாக வாக்குத் தந்தார்! நமக்குத் தான் “சிக்கனம் சோறு போடும்“ என்பதில் அசைக்க இயலா நம்பிக்கை உண்டாச்சே அன்றும் சரி, இன்றும் சரி பெரிய ஹோட்டல்கள் பக்கமெல்லாம் தலைவைத்துப் படுப்பது கிடையாதே! கண்ணில் படும் முதல் பட்ஜெட் ஹோட்டல் தான் ஜாகை எனும் போது சனிக்கிழமை காலை எனக்கு எந்தப் புண்ணியவான் ரூம் தருவானோ என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருக்க வழியேது? ஒருமாதிரியாக அசடுவழிந்து நான் சனிக்கிழமை போன் பண்ணிச் சொல்லட்டுமா மேடம்?“ என்று கேட்டேன்! செல்போன்கள் இல்லா அந்நாட்களில் சனிக்கிழமை அவரோடு தொடர்பு கொள்ள வேண்டுமெனில் அவர்தம் வீட்டு போன் நம்பரைப் பெற்றாக வேண்டுமென்ற விஷயம் அப்புறமாய்த்தான் மண்டைக்கு எட்டியது. எந்தப் பக்கம் பால் போட்டாலும், இவன் கோல் போடாமல் தீர மாட்டான் போலும் என்பதை மறுபடியும் நினைத்துக் கொண்டாரோ என்னமோ சின்னதொரு சிரிப்போடு தனது வீட்டு நம்பரையும் தந்தார்! நம்மூரில் இதுவொரு சமாச்சாரமே கிடையாது தான்; சிக்கியவர்கள் எல்லோருக்கும், எல்லா நம்பர்களையும் சகஜமாய்த் தந்து விடுவோம் - ஆனால் privacy-க்கு முக்கியத்துவம் தரும் ஒரு நாட்டில், இந்தக் குழந்தைப் பையனை நம்பி தனது பெர்சனல் நம்பரைத் தந்தவருக்கு நன்றிகள் சொல்லி விட்டு, ஸ்விட்சர்லாந்துக் கனாக்களுள் ஆழ்ந்து போனேன்!

ஸ்யூரிக் நகருக்கு இரு நாட்கள் சென்று திரும்பிய திசையெல்லாம் பேங்குகளும், அழகான லேக்குகளும் இருப்பதை மட்டுமே பராக்குப் பார்த்து விட்டு இரயிலைப் பிடித்து பாரிஸினுள் சனிக்கிழமை அதிகாலை 6 மணி சுமாருக்குப் போய்ச் சேர்ந்தேன்! பாரீஸ் நகரில் அரை டஜன் பிரதான இரயில்நிலையங்கள் உண்டென்பதோ; எனது இரயில் அதில் எந்த நிலையத்திற்குச் சென்று நிற்குமென்பதோ துளியும் தெரிந்திராது அரைத்தூக்கச் சொக்கில் பேந்தப் பேந்த இறங்கி நின்ற போது அந்த நிலையத்துக்கு கரே டி லியான் என்று பெயர் என்று பார்க்க முடிந்தது. சரி, எதுவானால் என்ன ? ; கட்டையைக் கொஞ்ச நேரம் கிடத்த இடம் தேடினால் போதுமே ! என்று பையைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு ஐரோப்பிய இரயில் நிலையத்தைச் சுற்றியும் குறைந்த கட்டண லாட்ஜ்கள் விரவிக் கிடப்பது வழக்கமென்பதால் ஒவ்வொன்றாய் ஏறி ரூம் கேட்கத் தொடங்கினேன்! உள்ளே நுழையும் முன்பாகவே ரூம் நஹி... இடத்தைக் காலி பண்ணு!‘ என்ற ரீதியில் பிரெஞ்சில் கசமுசாவென்று குரலெழுப்ப இது என்ன கூத்தடா சாமி? என்ற கேள்வி மண்டைக்குள் எழுந்தது! கிட்டத்தட்ட மூன்றோ-நான்கோ லாட்ஜ்களில் இதுவே routine ஆகிப் போன பின்னே, இது ஏதோ வேறுவிதமான சிக்கல் என்பது லேசாக உறைக்கத் தொடங்கியது! அடுத்து நுழைந்த ஹோட்டலினுள் ஒரு பெரியவர் அமர்ந்திருக்க தயங்கித் தயங்கி ரொம்பவே மரியாதையான குரலில் ரூம் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் நீ இலங்கையைச் சார்ந்தவனா?“ என்று கேட்டார்! ‘இல்லை‘ என்பதாய் தலையை ஆட்டிய போதிலும் திருப்தி கொள்ளாமல் என் பாஸ்போர்ட்டைக் கேட்டார். அதை எடுத்து நீட்டியவுடன் கையில் வாங்கி எழுத்துக் கூட்டி ஆங்கிலத்தில் உள்ள விபரங்களைப் படிக்க முயற்சித்தார். 5 நிமிடங்களாவது அதை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் “show me your bag!” என்றார். நானும் என் பையைத் தூக்கிக் காட்ட, அதைத் திறக்கச் சொல்லி சைகை செய்தார். ஜிப்பைத் திறந்து காட்டிய மறுகணம், பையை அப்படியே மேஜை மீது சாய்த்தார் ! உள்ளே கிடந்த என் துணிமணிகள். புத்தகங்கள் என சகலமும் அந்தக் கறைபடிந்த மேஜையில் இரைந்து கிடக்க, பையை திரும்பவும் உற்று உற்றுப் பார்த்தார்! அவமானமாய், எரிச்சலாய் உணர்ந்த போதிலும் அந்த நேரத்தில் நிலைமையை வேறு மாதிரியாகக் கையாளத் தெரியாது மௌனமாகவே நின்றேன். அந்தப் பெரியவரின் மனைவி உள்ளேயிருந்து வர, இரண்டு பேரும் ஏதோ பேசிக் கொண்டனர். அன்றைக்கு அணிவதற்கென நான் பத்திரமாக வைத்திருந்த மடிப்புக் கலையா சட்டை‘பப்ரப்பா‘வென்று அலங்கோலமாய் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே நான் நின்று கொண்டிருக்கையில் அந்த மூதாட்டி டொக்கு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்!

இலங்கையினில் ஈழத்து விடுதலை தொடர்பான யுத்தம் தீவிரமடையத் துவங்கியிருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து ஐரோப்பாவின் முக்கிய தேசங்களில் தஞ்சம் தேடிப் புகுந்து கொண்டிருந்த காலகட்டம் அது என்பதையும்; பாரிஸில் கணிசமான மக்கள் அடைக்கலமாகியிருந்ததையும் மேலோட்டமாகச் சொன்னார். அந்தப் பகுதியிலிருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றினில் முந்தைய நாள் இரவில் ஏதோ வன்முறைச் சம்பவம் நிகழ்ந்திருந்ததாகவும் அதனில் ஈடுபட்டிருந்தோர் அடைக்கலம் நாடி வந்திருந்த மக்களாக இருக்கக் கூடுமென்ற சந்தேகம் நிலவுவதால்தான் தற்காலிகமாக இந்த "பரிசோதனைகள்"என்று அந்தப் பாட்டி சொன்ன போது எனக்குச் சொல்ல முடியா எரிச்சல்! பார்த்தால் நானும் இலங்கையைச் சார்ந்தவன் போலத் தெரிவதால் தான் என் பையைச் சோதனை போட வேண்டியதானது என்றும் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே  சத்தமில்லாமல் எனது உடைமைகளை அள்ளித் தூக்கி மறுபடியும் பைக்குள் திணித்துக் கொண்டு மேஜை மீதிருந்த எனது பாஸ்போர்ட்டையும்  எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினேன். ‘ரூம் வேண்டாமா?‘ என்பது போல எதையோ அந்தத் தாத்தா என்னிடம் கேட்க பதிலேதும் பேசப் பிடிக்கவில்லை! சரி, இனி ரூம் தேடி அலைந்து பொழுதை வீணடிக்க வேண்டாம் என்ற கடுப்பில் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்தேன்! பாரிஸின் வீதிகளில் ஒரு கிலோமீட்டருக்கொரு புல்வெளியோ, பூங்காவோ இருக்கத் தவறுவதில்லை என்பதால் எதிர்க்கொண்ட முதல் பூங்காவில் தட்டுப்பட்ட காலி பெஞ்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டேன். தூக்கம் சுத்தமாய்ப் போயிருந்தது இந்த எரிச்சலான அனுபவத்தின் பொருட்டு! ‘என்ன ஊர்டா சாமி...? என்ன மாதிரியான மனுஷன்கள்?‘ என்ற ‘காண்டு‘ உள்ளுக்குள் குமைய, வெயில் வரத் தொடங்கும் வரை அங்கேயே அமர்ந்திருந்தேன்.வாரயிறுதி என்பதால் நான் ரூம் கேட்டுச் சென்றிருந்த ஆரம்பத்து ஹோட்டல்களில்  இடம் இல்லாமலும் இருந்திருக்கக் கூடும் ; அவர்கள் ஏதோ பிரெஞ்சில் சொல்லி என்னைத் திருப்பியனுப்பியது அதன் பொருட்டும் இருந்திருக்கலாம் என்பதை நிதானமாய் யோசித்திருந்தால் புரிந்திருக்கக்கூடும் ! ஆனால் அந்த நொடியின் அவமான உணர்வில் புத்தியானது செயல்படும் நிலைமையில் இருக்கவில்லை !  
லக்கி லூக் கதைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு போன் அடிக்க வேண்டுமேயென்ற நினைப்பு அப்போது தான் மண்டையி்ல் பொறி தட்ட கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை. மரியாதையானதொரு சூழலில் அந்தப் பெண்மணியை சந்திப்பதாயின் ஏதேனும் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் எடுப்பது மட்டுமே எஞ்சியிருந்த மார்க்கம் என்றாலும், எனது நிதி நிலைமை அதற்கெல்லாம் ஒ.கே. சொல்லவில்லை ! சரி, எவ்வளவோ தொந்தரவைத் தந்து விட்டோம் - இதையும் விட்டு வைப்பானேன் ? என்ற சிந்தனையோடு ‘விறுவிறு‘வென்று அதே இரயில் நிலையத்திற்குத் திரும்பவும் நடையைக் கட்டினேன் ! அங்கே கண்ணுக்குத் தெரிந்த முதல் டெலிபோன் பூத்திலிருந்து அவருக்கு ஃபோன் அடித்து, லியான் இரயில் நிலையத்தில் இருப்பதாகவும்; அங்கிருந்தபடிக்கே இரயிலைப் பிடித்து விமான நிலையம் செல்லவிருப்பதால் கோபித்துக் கொள்ளாமல் ஸ்டேஷனுக்கே கதையைக் கொணர்ந்து தந்து விட முடியுமா ? என்று கேட்டேன்! துளித் தயக்கமுமின்றி ஓ.கே. என்று சொல்லி விட்டு என்னை ஏதோவொரு இலக்கில் காத்திருக்கச் சொன்னார். சரியாக 20 நிமிடங்களில் ‘டக் டக்‘ என்று நடை போட்டு வந்தவர் முகம் நிறைந்த புன்னகையோடு ஒரு கனத்த பார்சலை என்னிடம் ஒப்படைத்து விடடு ‘good luck’ என்றபடிக்குத் திரும்பிச் சென்று விட்டார். பல் கூட விளக்காமல் பரட்டைத்தலைப் பக்கியாக நின்று கொண்டிருந்த எனக்கு அவர் துரிதமாய் விடைபெற்றுச் சென்று விட்டதில் நிம்மதி! நானிருந்த கோலத்தில் ரொம்ப நேரத்தை அவரோடு பேசிப் போக்கியிருந்தால் மானம் கப்பலேறியிருக்குமோ என்ற பயம்தான்! So- நமது ஒல்லிப் பிச்சான் கௌபாயின் முதல் சாகஸமான ‘சூப்பர் சர்க்கஸ்‘ நம்மை எட்டிப் பிடித்தது பல் கூட விளக்கியிராவொரு அக்டோபர் மாதத்து இளம் காலைப் பொழுதினில்! எப்படியோ ஏர்போர்ட் சென்றடைந்து அங்கே ஆக வேண்டிய சமாச்சாரங்களையெல்லாம் செய்து முடித்த பின்பு ஆசை ஆசையாய் பார்சலைப் பிரித்து ‘சொட சொட‘வென்றிருந்த கறுப்பு வெள்ளை போட்டோ பிரிண்ட்களை வருடிய போது சந்தோஷம் அலையடித்தது! ஊர் திரும்பிய பின்னே, செம ஆர்வமாய் மொழிபெயர்ப்பைச் செய்தது கலரில் தயார் செய்தது என்று வண்டி ஓடிட லக்கி லூக்கின் (தமிழ்) முதல் ஆல்பம் தயாராகியிருந்தது ஜனவரி 1987-ல்!

அதன் பின்பாய் இன்று வரை சுமார் 25 ஆல்பங்களை வெளியிட்டிருப்போம்... LLஎன்ற அடையாளமும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றும் விட்டது! ரசனை மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்திருந்தாலும் லக்கியும், டெக்ஸ்-ம் மாத்திரமே எல்லாக் காலகட்டங்களிலும் evergreen favourites ஆகத் தொடர்ந்து வருவது தான் நமக்கெல்லாம் தெரியுமே? And இந்த பிப்ரவரியில் அந்தக் கூட்டணி தொடரும் தருணத்தில் அதிரடிகளுக்குப் பஞ்சம் தான் இருக்க முடியுமா ? 

"சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் XIII & லக்கி கதைகளின் ஒரிஜினல்கள் ஒருசேர தபாலில் வந்து சேர்ந்ததாய் எழுதியிருந்தது நினைவுள்ளது ! லக்கியின் பின்னே இருந்த இந்த நீட்டல் முழக்கல்களை அங்கே அந்நேரம் எழுதிடத் தோன்றவில்லை ! பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஒவ்வொருவருக்கும் இது போல் சிற்சிறு சம்பவங்கள் நடப்பது இயல்பே எனும் போது அவற்றை பெரிதுபடுத்தல் வேண்டாமே என்று நினைத்தேன் ! இங்கும் கூட இதை எழுதியிருக்க மாட்டேன் - ஆனால் நமக்குப் பற்பல வருடங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்து வந்த அந்தப் பெண்மணியான திருமதி ஆன்தியா ஷாக்கிள்டன் அவர்களை எங்கேனும் நினைவி கூர்ந்திடாது போய் விட்டோமே என்ற குறுகுறுப்பு தான் இதனை இன்று எழுதிடுவதன் பின்னணிக் காரணம் ! தவிர "சிங்கத்தின் சிறு வயதில்"கோரிக்கையோடு  "எட்றா வண்டியை ; அமுக்குடா ஹாரனை ! !" என்று கைபிள்ளையாய்த் தலீவர் கிளம்பியான போது - வாழைப்பூ சீசனும் இல்லையென்ற நிலையில் அவரை சாந்தப்படுத்தும் அவசியமும் தட்டுப்பட்டது ! அவர்பாட்டுக்கு இந்தியத் தபால்துறையின் சகாயத்தோடு தாக்குதலைத் தொடுக்கத் துவங்கினால் பூமி தாங்குமா ?
     
கூகுளைத் தட்டினால் லக்கி லூக்கின் ஜாதகமே கிடைத்து விடுமென்ற நிலையில் புள்ளி விபர ரமணா அவதாரத்தைக் கையில் பெரிதாய் எடுக்கத் தோன்றவில்லை ! நமது நாயகரின் பிறந்த நாள் டிசம்பர் 7,1946 ! இதோ பாருங்களேன் முதல் முதலாய் வெளியான லக்கி & ஜாலியின் சித்திரத்தை ! 
மாரிஸ் டி பிவியெர் என்பதே லக்கியின் படைப்பாளியின் நிஜப் பெயர். 'மோரிஸ்' என்ற சுருக்கமான பெயருடன் உலவி வந்தவர் 1955 வர தானே கதையும் எழுதி, சித்திரங்களும் போட்டு வந்தார். 1955-ல் கதாசிரியர் கோசினியுடன் கைகோர்க்க - அடுத்த 12 ஆண்டுகளுக்கு எக்கச்சக்க ஹிட் கதைகள் உருண்டோடி வந்தன ! 2001-ல் மோரிஸ் இயற்கை எய்திட - தற்போது Achde என்ற கதாசிரியரின் பராமரிப்பில் உள்ளார் நம்மாள்  ! இரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிகளில் லக்கி உலகெங்கும் வம் வந்திட - அவரது தொடரில் 2015 வரைக்கும் 82 கதைகள் உள்ளன ! (சுட்டி லக்கி & ரின் டின் கேன் சேர்க்காமல்) ! வாயில் துண்டு சிகரெட் சகிதம் பவனி வந்தவர் 1983 முதல் புகைக்கு எதிரியாகிப் போய் வாயில் புல்லை வைத்துக் கொண்டு "சைவமாய்" சுற்றி வரத் தொடங்கி விட்டார் ! 
70-வது பிறந்த நாளை நம்மவர் கொண்டாடும் இந்தாண்டில் பிரான்சில் நிறையவே கொண்டாட்டங்கள் இதன் பொருட்டு நடந்து வருகின்றன. சமீபமாய் நிறைவு பெற்ற அங்குலெம் காமிக்ஸ் விழாவில் ஓவியர் மோரிஸின் ஏராளமான ஒரிஜினல் லக்கி லூக் சித்திரங்கள் ஒரு கண்காட்சியாக நடந்தது! And பிப்ரவரியில் லக்கியின் 5 டாப் சாகஸங்களை மறுபதிப்பும் செய்கிறார்கள்! அவற்றுள் 3 நாம் பார்த்தான இதழ்களே! இதோ அந்தப் பட்டியல்:
§  ஜெஸ்ஸி ஜேம்ஸ்
§  மேடையில் ஒரு மன்மதன்
§  மேற்கே ஒரு மாமன்னர்
§  Canyon Apache
§  Le Grand Duke
 சந்தர்ப்பம் கிட்டும் போது மேற்படிப் பட்டியலின் இதழ்கள் # 4 & 5 ஐ நாம் தமிழில் நிச்சயமாய் வெளியிட்டு விடுவோம்! இதே போலொரு Top 5 தேர்வினை இது வரையிலான லக்கி லூக் தமிழ் ஆல்பங்களுள் செய்வதாயின் உங்கள் தேர்வுகள் என்னவாகயிருக்கும் folks?

மார்ச் மாதம்  லக்கி லூக்கின் ஒரு one shot ஆல்பத்தை நம்மைப் போலவே (!!!!)கறுப்பு வெள்ளையிலும், வண்ணத்திலும் ஒரே சமயம் வெளியிடவுள்ளனர்! இதில் வேடிக்கை என்னவெனில் black & white பதிப்பு விலை கூடுதல்!! 60 பக்கங்கள் கொண்ட இந்த லக்கியின் கதையினைக் கோரியுள்ளேன் ; அழகான படைப்பாக அமைந்திடும் பட்சத்தில் நமது அட்டவணைக்குள் சீக்கிரமே நுழைக்கப் பார்ப்போம்! மே மாதம் இன்னுமொரு புது one shot இதழும் திட்டமிடலில் உள்ளதாம்! So- தனிமையே என் துணைவன்“ என்ற கவிதை வரிகள் (!!!) இந்தாண்டில் அடிக்கடி ஒலிக்கவிருக்கிறது பிரான்கோ-பெல்ஜிய வானில்!

நமது அட்டவணையில் இந்தாண்டே காத்திருக்கும் அடுத்த LL சாகஸமும் (திருடனும் திருந்துவான்!) ஒரு சிரிப்பு மேளா! இதனில் டால்டன்களும், ஜாலி ஜம்பரும் விலா எலும்புகளை நோவச் செய்தாலும் நிஜமான நாயகனென்னும் பெருமையைத் தட்டிச் செல்லக் காத்திருப்பது நமது அறிவுஜீவி ரின் டின் கேன் தான்! கதையின் முக்கிய தருணங்களில் தவறாமல் தலைகாட்டும் ரி.டி.கே.வுக்காக பன்ச்  டயலாக்குகளை (!!) எழுத இப்போதே பயிற்சி எடுத்து வருகிறேன்! சந்தேகமின்றி இது  லக்கியின் இன்னுமொரு ‘ஹிட்‘!
நீ-ண்-டு செல்லும் பதிவை இத்தோடு முடித்துக் கொண்டு மேஜை நிறையக் குவிந்து கிடக்கும் பணிகளுக்குள் டைவ் அடிக்கப் புறப்படுகிறேன்! 
  • டெக்ஸின் அடுத்த சாகஸமான ‘விதி போடும் விடுகதை‘யில் ரொம்ப காலத்திற்குப் பின்னர் டெக்ஸ், கார்ஸன், கிட், டைகர் என நால்வரும் இணைந்து அற்புதமாய்க் கலக்குவதை ரசிப்பதா? அல்லது-
  • கேரட் மீசைக்காரரின் கலர்புல், ஜாலி த்ரில்லரின் மீதான எடிட்டிங்கை நிறைவு செய்வதா? அல்லது-
  • நீலப் பொடி மனுஷர்களின் உலகினுள் நுழைவதா? அல்லது-
  • நமது தளபதியின் 5 பாக சாகஸத்துள் முதல் 3 பாகங்கள் முழுமையாக முடிந்து மேஜையின் ஒரு கணிசமான பகுதியை ஆக்கிரமித்து வருவதைப் பார்த்தாவதா? அல்லது
  • பக்கங்களைப் புரட்டும் போதே பேனா பிடிக்கக் கைவிரல்களில் நமைச்சலை ஏற்படுத்தும் ரின் டின் கேனின் “பிரியமுடன் ஒரு பிணைக் கைதி“க்குள் கட்டையைக் கிடத்துவதா? அல்லது
  • ப்ளுஜீன்ஸ் பில்லியனரின் “கடன் தீர்க்கும் வேளையிது“ பணிகளின் இறுதிக்கட்ட touches-ஐ கவனிப்பதா?


என்ற சந்தோஷக் குழப்பம்! விஞ்ஞானபூர்வமாய் 'இன்க்கி-பின்க்கி-பாங்க்கி' போடடுப் பார்த்து வேலைகளைச் செய்து விட்டு தூக்கத்தைத் தேடிப் புறப்படுகிறேன்! Enjoy the Sunday folks! மறவாமல் பிப்ரவரி இதழ்களின் விமர்சனங்களைத் தொடர்ந்திடுங்களேன்! Bye for now!
சில updates :

  • இம்மாத இதழ்களது ஆன்லைன் ஆர்டர்கள் செம வேகம் !! அதிலும் லக்கி    இதழ்களை gift -ஆக அனுப்பக் கோரிடும் ஆர்டர்களும் கணிசம் !
  • சந்தாவினில் இணையும் புது வாசகர்கள் சமீப வாரங்களில் நமக்கு சந்தோஷ ஆச்சர்யத்தைத் தந்து வருகின்றனர் ! FB -ல் கிடைக்கும் கூடுதல் reach இதன் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் முற்றிலும் புதியவர்கள் நம் குடும்பத்தினில் இணைவது ரொம்பவே நிறைவைத் தருகிறது !
  • "பாம்புத் தீவு" நிறைய ரெகார்ட்களை முறியடிக்கும் சாத்தியங்கள் ஏகம் ! "நயாகராவில் மாயாவி" ஏற்படுத்திய விற்பனை சாதனையை இது தாண்டி விடும் போல் தோன்றுகிறது !!
  • CINEBOOK இதழ்களும் கூட மெதுமெதுவாய் வேகம் பிடித்து வருகின்றன ! தோர்கல் ; LADY S - இரு தொடர்களுமே இந்த வாரத்தின் flavors !!
  • அட்டைப்பட டிசைனிங்கில் திறமைகளைக் காட்டிட எண்ணிடும் நண்பர்கள் நமக்கொரு மின்னஞ்சலைத் தட்டி விடலாமே ?