Wednesday, June 27, 2012

ஒரு போராட்டத்தின் கதை !


நண்பர்களே,

என் நினைவாற்றலின் வீரியத்தை நான் முழுவதும் நம்பிடுவதாக இல்லை ; எனினும் இங்கே நான் review செய்திடவிருக்கும் இதழ் வெளியானது மார்ச் 1988 ல் தான் என்று எனக்கு உறுதிபடத் தோன்றுகிறது ! எனது அனுமானம் சரியா ; தவறா என்பதை ஊர்ஜிதப்படுத்திட உங்களில் யாருக்கு முடிகின்றதோ, அவர்களுக்கு எனது நன்றிகள் -முன்னக்கூடியே !


1980களின் பிற்பகுதியில் நான் மெய்யாலுமே ரொம்ம்ப்ப busy  என்று தான் சொல்லிடணும் ! லயன் காமிக்ஸ் ; திகில் ; மினி லயன் ; பற்றாக்குறைக்கு முத்து காமிக்ஸ் என்று 4 இதழ்களின் பணிகளில் நான் எப்போதுமே மூழ்கிக் கிடந்திட்ட சமயமது! பட்டாளமாய் ஓவியர்கள் ; 3 அச்சுக் கோர்ப்புப் பணியாளர்கள் ; டெஸ்பாட்ச் செய்திட 4 பணியாளர்கள் ; பிரெஞ்சிலிருந்து, இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்திட ஆங்காங்கே நண்பர்கள் என்று அது ஒரு பரபரப்பான யுகம் !! 'ஆண்டு மலர்' ; 'கோடை மலர்' ; 'அந்த ஸ்பெஷல் '; 'இந்த ஸ்பெஷல்' என்று ரவுண்ட் கட்டி சிலம்பம் ஆடிய அந்தக் காலத்தில் ; மெய்மறக்கச் செய்த அந்த ராட்டினச் சவாரியில் ; அந்த காமிக்ஸ் பவனியில் பங்கேற்றிட்டவர்கள் உங்களில் எத்தனை பேர் என்பதை தெரிந்திட ஆவல் ! புதுசு புதுசாய் கதை வரிசைகள் ; விதம் விதமான விலைகள் - சைஸ்கள் ; உலகின் பல்வேறு மூலை முடுக்குகளின் திறமையான காமிக்ஸ் படைப்புகள் என தூள் கிளப்பிய அந்த golden age -ல் நம்மோடு பயணித்திருக்க இயலா நம் இளம் நண்பர்களுக்கும் சரி ; அந்த சுவாரஸ்யமான அனுபவங்களில் பங்கேற்ற நம் ஆரம்ப கால வாசகர்களுக்கும் சரி, இது ஒரு engrossing பதிவாக இருந்திடுமென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் ! 

மினி லயன் இதழ்களினைத் தயாரிப்பதென்பது எப்போதுமே ஒரு ஜாலியான சங்கதி ! எந்த டென்ஷனும் இல்லாமல், எந்த ஒரு set patternம் இல்லாமல், இதழ்களை உருவாக்கிட சுதந்திரம் தந்திட்ட format என்பதால், எனது favoriteகளில் பல மினி லயன் இதழ்களாகவே இருந்து வருகின்றன ! "ஒரு நாணயப் போராட்டம்"  அந்த வரிசையினில் எனக்கு ரொம்பவும் பிடித்த இதழ் - பல காரணங்களின் பொருட்டு !


நாம் ஏராளமான படைப்பாளிகளின் கதைகளை வெளியிட்டு இருப்பினும், உலகப் பிரசித்தி பெற்ற வால்ட் டிஸ்னி (முழு நீளக்) கதைகளை நாம் அதிகம் முயற்சிக்காதே இருந்து வந்தோம் ! வால்ட் டிஸ்னியின் படைப்புகள் சின்னத் திரைக்கும், வெள்ளித் திரைக்கும் அசாத்தியமானவை என்ற போதிலும், நமது காமிக்ஸ் ரசனைக்கு சற்றே juvenile ரகமென்றே நான் நினைத்திட்டது தான் இதற்குக் காரணம் ! எனினும் எனது இள வயது favoriteகளில் ஒருவரான Uncle Scrooge கதைகளை தமிழில் கொணர்ந்திட எனக்குள் எப்போதும் ஒரு நப்பாசை இருந்து கொண்டே வந்தது. So 1987 ல் ஒரு சுபயோக சுபதினத்தில் மும்பையிலிருந்த வால்ட் டிஸ்னியின் Licensing ஏஜெண்ட்களை சந்திக்கப் புறப்பட்டேன் ! அந்த சமயத்தில் விமானப் பயணங்கள் அத்தனை சுலபமான சங்கதிகளல்ல என்பதாலும், அடியேனின் சிக்கன நடவடிக்கைகள் ரயில் பயணத்திற்கு அதிகமாக எதற்கும் செலவிட இடமளிக்காதலாலும்  - சென்னை சென்று, அங்கிருந்து Dadar எக்ஸ்பிரஸ்-ல் மும்பை சென்றிடத் திட்டம். ஆனால், கிளம்பும் அன்று மாலை ஆபீசிலிருந்து வீடு திரும்பும் வழியில் எனது கைப்பையை ரோட்டில் எங்கோ தவற விட்டு விட்டேன் - உள்ளே இருந்த ரயில் டிக்கெட்களோடு ! 

'ஆரம்பமே சரி இல்லியே' என்று மண்டைக்குள் குடைந்திட, பிரயாணத் திட்டங்களை தூக்கிப் போட்டு விட்டேன். அப்போது எங்களது டிரைவர் போன் செய்தார்...'நான் எதையாச்சும் தொலைத்து விட்டேனா ?'என்ற கேள்வியுடன் ! 'இதென்னடா அதிசயமாய் இருக்கே?' என்று நானும் மேற்கொண்டு பேச...அவர் வசிக்கும் தெருவினில் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள், சாலையில் கிடந்ததொரு handbag ஐ கண்டெடுத்ததாகவும் ; அதனுள் ஆறாயிரம் ரூபாய் பணமும், எனது போடோவும் இருந்ததாக அவர் சொல்லச் சொல்ல எனக்கு "தப்பிச்சோம்டா சாமி' என்ற உற்சாகம் ! அவசரம் அவசரமாய் அங்கே சென்று, பையை பெற்றுக் கொண்டு , அந்தச் சிறுவர்களுக்கும் பரிசாக சின்னதொரு தொகையைக் கொடுத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் ரயில் நிலையத்திற்கு விரைந்தேன். ஒரு விஷயத்தை நொடியில் புரட்டிப் போடும் ஆண்டவன் அதனை மறு நொடியிலேயே செப்பனிடவும் முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றியோடு !

ஒரு வழியாக மும்பை வந்து சேர்ந்து அந்நிறுவனத்தை சந்தித்தேன் ! நமது இதழ்களின் மாதிரிகளைக் காட்டிட்டேன் ; நம்மால் செலுத்திடக் கூடிய ராயல்டி பற்றியும் தெரிவித்தேன் ! "சரக்கு முறுக்காக இருந்தாலும், செட்டியார் முறுக்காக இல்லியே" என்று சொல்லிடும் விதத்தில்..நமது சர்வதேச காமிக்ஸ் ஸ்டார்களின் அணிவகுப்பைப் பாராட்டிய கையோடு, நமது சுமாரான production தரத்தை விமர்சித்தனர் ! ஒரு வழியாகப் பேசி, சின்னதாய் ஒரு துவக்கத்தை எற்படுத்திடுவோம் ; பின்னர் போகப் போக கூடுதலாய் கதைகள் வாங்கிட முயற்சிப்போமென நான் 'முன்ஜாகிரத்தை முனுசாமி' ஆக இருந்து கொண்டேன். இந்த இதழின் அட்டைப்படத்தில் பந்தாவாய் போஸ் கொடுத்திடும் Uncle Scrooge நம் அணிவகுப்பிற்கு வந்து சேர்ந்திட்டது இவ்விதமே 

வழக்கமான black  & white வேண்டாமெனத் தீர்மானித்து இரு வண்ணங்களில் மினி லயன் வெளிவந்து கொண்டிருந்த சமயம் அது ! So இந்த 24 பக்க சாகசம் rose red & chrome yellow  வர்ணங்களில் வந்திட்டது ! கொஞ்சம் மாயாஜாலம், நிறைய காமெடி ; என்று ஜாலியாய் ஓடிய இந்தக் கதை எல்லோரின் பாராட்டையும் பெற்றிட்டது இன்னமும் நினைவுள்ளது எனக்கு ! 

தொடர்ந்திட்டது "பரட்டைத் தலை ராஜா"வின் 2 பக்க snippet ; "குண்டன் பில்லியின் " 4 பக்க காமெடி கலாட்டா....விச்சு கிச்சு ; ஜோக்கர் என்று filler pages! 





"பிரபல கட்டிடங்கள்" என்ற தலைப்பில் இரு பக்கப் பொது அறிவு சங்கதியும் நடுவினில் ! Fleetway ன் துப்பறியும் ஜார்ஜ் நோலன் - ஒரு நான்கு பக்க குட்டி சாகசத்தில் அசத்திட ; தொடர்ந்தது ரூபாய் 100  பரிசுப் போட்டியானதொரு குறுக்கெழுத்துப் புதிர் ! அவசரம் அவசரமாய் நான் உருவாக்கிய இந்தப் புதிரின் மறுபக்கம் இதற்கு முந்தைய இதழான "வெள்ளைப் பிசாசு" க்கான வாசகர் கடிதம் ! இதில் பிரசுரமான இந்தக் கடிதங்களை அன்று எழுதிட்ட நண்பர்களில் எவரேனும் இப்போது, இங்கே இருந்திடும் பட்சத்தில், பெரியதொரு "ஓஓஓ " போட்டிடலாம் !


தொடர்ந்த பக்கங்களில் "ஏட்டிக்குப் போட்டி" என்றதொரு குட்டிக் கதை ; "வரலாற்றில் விளையாட்டுக்கள்" என்றதொரு 2 பக்க சித்திர /பொது அறிவுப் பக்கம்; மற்றும் "பனிமலை மர்மம்" என்றதொரு 12 பக்க Fleetway படைப்பு ! 




இதழினை நிறைவு செய்திட்டது அடுத்த வெளியீடான "சம்மர் ஸ்பெஷல் " க்கான இரு பக்க விளம்பரம் ! அன்றும் சரி, இன்றும் சரி நமது கற்பனைகளைத் தட்டி ஓட விட்டிடும் "வருகின்றது" விளம்பரங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானவை என்பதை நான் சொல்லிடவும் வேணுமா என்ன ??! 


குட்டிக் குட்டியாய் கதைகளும், filler page களும் நிறைந்திட்ட இதழ் மட்டுமே இது என்ற போதிலும், இரண்டு ரூபாய்க்கு நிறைய படிக்கக் கிடைத்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்திய இதழ் இது என்று எனக்குத் தோன்றியது ! அன்று இரண்டு ரூபாய் என்பது எத்தனை பெரிய சமாச்சாரம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிய வைத்திடுவது சுலபமான பணியல்ல..அதனை நான் முயற்சிக்கவும் போவதில்லை ! மாறாக இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது என்றும் எத்தனை பேர் படித்துள்ளீர்கள் என்றும் சின்னதாய் ஒரு census எடுத்துப் பார்ப்போமா ?  

இன்னொரு பதிவு இவ்வாரக் quotaவில் உள்ளதென்ற வாக்குறுதியோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன். See you around guys ! Bye for now !


Tuesday, June 19, 2012

வானவில்லாய் சில சிந்தனைகள் !

நண்பர்களே,

அங்கே...இங்கேவென சிதறலாய் ஓடிடும் பல சிந்தனைகளின் ஒருமித்த சேகரிப்பென இப்பதிவைச் சொல்லிடலாம்...! 

முதலில்..இம்மாத வெளியீடுகள் பற்றிய update ...! முத்து காமிக்ஸ் banner -ல் ரூபாய் 10 விலைகளில் அறிமுக ஹீரோவான - டிடெக்டிவ் டோனி ஜெரோம் துப்பறியும் "சிகப்புக் கன்னி மர்மம்" + "தற்செயலாய் ஒரு தற்கொலை" தயார் ஆகி வருகின்றன. இந்த இதழ்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னரே வெளிவந்திருக்க வேண்டியவையே ....ஆனால் கடந்த இரு வாரங்களாய் நான் கொஞ்சம் personal பணிகளில் சுற்றிக் கொண்டிருந்தபடியால் - தாமதம் (வழக்கம் போல்) தொற்றிக் கொண்டது.




ஜெரோம் நிரம்பவே வித்தியாசமானதொரு கதைத் தொடர் என்று சொல்லிடுவேன் ! நமக்குப் பரிச்சயமான நுணுக்கமான சித்திரங்கள் இந்தக் கதைத் தொடரினில் நீங்கள் பார்த்திட முடியாது ;ஆனால் சற்றே amateurish ஆகத் தோன்றினாலும் ஒரு விதமான ஈர்ப்பினை இந்த சித்திர ஸ்டைல் ஏற்படுத்திடும் ! அதே போல் நிறைய இடங்களில் வசனங்களே இல்லாது, சித்திரங்களும், சூழ்நிலைகளும் மட்டுமே கதையை நகற்றிச் சென்றிடுவதை பார்த்திடப் போகிறீர்கள் ! ஒரு இள வயது ரிப் கிர்பி போல் மென்மையாய் செயலாற்றும் ஜெரோம் உங்களுக்குப் பிடித்திடும் பட்சத்தில் இவரை தொடர்ந்து சந்திக்க ஏற்பாடுகள் செய்திட முடியும் ! அடுத்த வாரம் இதழ்கள் கிடைத்த பின்னே நீங்கள் எழுதப் போகும் விமர்சனங்களே ஜெரோமின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் - at least நம் தமிழில்..! இதோ - எக்கச்சக்கமான மாதங்களுக்கு முன்னரே அச்சிடப்பட்ட இந்த இதழ்களுக்கான அட்டைப்படங்கள் : 



ஜெரோமைத் தொடரவிருப்பது நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் " ! முழு வண்ணத்தில் லக்கி லூக்கின் இரு கதைகளோடு -48 பக்கங்களில் surprise ஆக இரு ஆக்ஷன் ஹீரோக்களின் முழு நீள சாகசங்கள் வரவிருக்கின்றன! இதோ - ஜூலை நடுவினில் வரவிருக்கும் இந்த இதழுக்குத் தயாராகி இருக்கும் அட்டைப் படத்தின் ஒரு sneak peek !! நிழலை விட வேகமாய்ச் சுடும் நம் காமெடி கௌபாய் லக்கியும், திருவாளர் ஜாலி ஜம்பரும் பொட்டல் காட்டில் சாவகாசமாய் செஸ் ஆடும் இந்த முன் அட்டையில் - வர்ணங்களை மிதமாய் பிரயோகித்திருக்கிறோம்...ரசிக்கும்படி உள்ளதாவென்பதை அறிந்திட ஆவலாய் உள்ளேன் !



ஆகஸ்டில் வரவிருக்கும் நமது "லயன் Double Thrill ஸ்பெஷலுக்கும் கதைகள் + அட்டைப்பட டிசைன் தயார் ! இதோ - நமது "பிரியாணிப் புகழ் " கேப்டன் பிரின்ஸ் ரசிகர் மன்றத்தின் அங்கத்தினர்களுக்கும், நமது இதர நண்பர்களுக்கும் அந்த அட்டைப்படத்தின் trailer ! லார்கோவின் அட்டைபடத்தில் சில்வர் வர்ணம் வந்தது போல் இந்த இதழில் Metallic Gold கூடுதலாய் இருந்திடும் ! இந்த அட்டைப்படமும் உங்களின் rating -ல் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிடுமெனத் தெரிந்திட ஆவல் மாளவில்லை !       



அப்புறம் கள்ள வோட்டுக்கள் ; நல்ல வோட்டுக்கள் ; பிரியாணிப் பொட்டலங்கள் என்று இரு அணியினரும் தத்தம் ஹீரோக்களை நமது online poll -ல் வெற்றி பெறச் செய்ய அடாது பாடு படுவதைப் பார்த்திடும் போது, புல்லரிக்கின்றது !! Joking apart , மறுபதிப்புகளுக்குள்ள இந்த தீவிர வேட்கை என்னுள்ளே சின்னதாய் ஒரு சிந்தனையினை தோற்றுவித்துள்ளது ! 

2013 -ல் நமது ரெகுலர் இதழ்கள் ஒருபக்கம் வெளிவந்திடும் போது - சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6  மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது ! முன்னக்கூடியே அந்த ஆண்டிற்கான மறுபதிப்புப் பட்டியலை வெளியிட்டு - அதற்கான கட்டணத்தையும் தெரிவித்து விட்டால், மறுபதிப்புகளை வாங்கிட விரும்பும் நண்பர்கள் மாத்திரமே அதற்கு subscribe செய்திடலாம் !  What say folks ?     

அப்புறம் நமது இதழ்களின் second இன்னிங்க்ஸ் பற்றி இன்னும் அறிந்திருக்காத ; இன்டர்நெட் தாக்கத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் நண்பர்களுக்கு எப்படி விஷயத்தைத் தெரிவிப்பது என்பது பற்றி உங்களது எனக்குத் தேவை ! நீங்கள் செய்திடக் கூடியதென தற்சமயம் நான் நினைத்திடுவது :

  • உங்களின் Facebook ; Twitter பரிச்சயங்களுக்கு சேதியினை தெரிவித்திடலாமே - ப்ளீஸ் ?
  • உங்கள் ஊரில் உள்ள தரமான புத்தகக் கடைகளின் முகவரி + தொலைபேசி எண்ணினை சேகரித்து அனுப்பிட முடிந்தால், அவர்களிடம் நம் இதழ்களை விற்பனைக்கு அனுப்பிட முயற்சிக்கலாம் !  மேற்கொண்டு அவர்களோடு வியாபார ரீதியாக நீங்கள் பொறுப்பேற்க எவ்வித அவசியமும் இருந்திடாது ! 
  • சந்தா நீட்டிப்பு (Rs .400 ) இது வரை செய்திடாமல் இருக்கும் நண்பர்கள், துரிதமாய் அதனைச் செய்திட்டால் நலமே !
  • உங்களின் உறவுகளுக்கு ; நண்பர்களுக்கு ஏதேனும் பரிசளிக்கும் இடத்தில நமது இதழ்களுக்கு அவர்களின் பெயரில் சந்தா செலுத்திடுவது   சாத்தியமாவென சிந்தித்திடலாமா ?
உங்களின் ஆர்வத்தை, ஆதரவை exploit செய்திடும் முயற்சியாக எனது வேண்டுகோள்களைப் பார்த்திட மாட்டீர்களென்ற நம்பிக்கையில் எனது கோரிக்கைகளை இங்கே கடை விரித்திருக்கிறேன் ! இன்னும் நமது சந்தா எண்ணிக்கை ; வலைப்பதிவின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் ஆட்டம் இன்னும் சூடு புடிக்குமே என்று தோன்றியதால் எழுதினேன் ! Take care guys ! இவ்வார இறுதியில் இன்னொரு பதிவோடு சந்திப்பேன் !

 


Monday, June 18, 2012

ஒரு பஜ்ஜியும் ; ஒரு பட்டாசுப் பார்சலும் !

நண்பர்களே,

'No place like home' என்று எங்கேயோ, எப்போதோ சொல்லி வைத்த புண்ணியவான் ஏகப்பட்ட செருப்புகள் தேய எக்கச்சக்கமான பயணங்கள் செய்தவராய் தான் இருந்திருக்க வேண்டும். ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு திரும்பிடும் குஷியை அனுபவித்து,ரசித்துத் தான் மனுஷன் இதை வாயாற சொல்லி வைத்திருப்பார் ! 

ஐந்து நாள் போராட்டத்துக்குப் பின்னே, தங்கு தடையற்ற இண்டர்நெட்டை வீட்டில் உபயோகித்திட முடியும் போது, ரம் பாட்டிலைக் கண்ட பார்னேயின் உற்சாகம் தான் எனக்கு ! அப்படியே இங்கே நுழைந்து, உங்களின் சமீபத்திய பதிவுகள் ; தொடர்ந்து வரவிருக்கும் நமது ஸ்பெஷல் இதழ்களுக்கான 'பெயர் சூட்டும் படலம்' ; நமது மறுபதிப்புக்கான இடைத்தேர்தலின் வாக்கு சேகரிப்புகள் ; நல்ல / கள்ள வோட்டுக்களின் பின்னணிகள் என்று படிக்கும் போது பயணக் களைப்பு காணாது போன இடமே தெரியவில்லை ! 

First things first - என்ற கதையாய் அந்த பஜ்ஜிக்கும் ; பட்டாசுக்கும் சொந்தக்காரர்கள் யாரென்று முதலில் பார்த்திடுவோமே ?!  

எக்கச்சக்கமான பெயர் suggestions ; நிறைய புது நண்பர்களின் பங்களிப்பு ; கோவை steel claw அனுப்பிய மெகா பட்டியல் என்று இம்முறை மெய்யான பரபரப்பு ஆடுகளத்தில் ! சென்ற முறை நண்பர் Saint Satan அனுப்பிய பெயரைத் தேர்வு செய்திடும் போது அதிக சிரமம் எனக்கிருந்திடவில்லை! ஆனால் இம்முறையோ தினமும் வந்திட்ட selections அசத்தல் ரகங்களாய் இருந்திட்டதால் ஒரு தீர்மானத்திற்கு வந்தடைய நிறையவே அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிப் போச்சு ! 'பஜ்ஜியின் படலம்' கொணர்ந்த பெயர் தேர்வுகளில் எனக்கு 'பளிச்' ரகமென மனதிற்குப் பட்ட பெயர்கள் இதோ :


  • லயன் ADVENTURE ஸ்பெஷல் - Raja Babu 
  • லயன் 'கோல்டன் ஒல்டி' ஸ்பெஷல் - Venkat 
  • லயன் 'எவர்க்ரீன் ஹீரோ' ஸ்பெஷல் - Venkat





ஒவ்வொரு பெயருமே கேப்டன் பிரின்ஸ் மற்றும் ரிப்போர்டர் ஜானி தோன்றிடும் அந்த ஸ்பெஷல் இதழுக்குப் பொருத்தமானவையாகவே எனக்குப் பட்டது ! இந்த 3 பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியது தான் வேலை என்று முடிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் "லயன் Adventure ஸ்பெஷல் " என்ற பெயரை டிக் அடித்தேன் !   'சிம்பிள், yet neat ' என்ற நினைப்பில் இதனை பிரின்ஸ் அட்டைப்படத்தில் கூட இணைத்து டிசைன் தயார் செய்து விட்டோம். அப்போது தான் வந்திட்டது நண்பர் உதயகுமாரின் தேர்வு ! "லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் "  என்ற அவரது ஆக்கம் instant hit அடித்தது என் மனதில் ! இரு ஹீரோக்கள் சாகசம் செய்திடும் இந்த இதழை வர்ணித்தது போலவும் ; ஒரு விறுவிறுப்பை உணர்த்திடுவது போலவும் இந்தத் தலைப்பு இருப்பதாய் எனக்குத் தோன்றியது !  So பஜ்ஜி பார்சல் - நண்பர் உதயகுமாருக்கே ! 


வாழ்த்துக்கள் உதயகுமார் ! உங்களின் புகைப்படத்தோடு , உங்களைப் பற்றிய சின்னதொரு அறிமுகத்தையும் எழுதி அனுப்புங்களேன் ப்ளீஸ் ? ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் இந்த Double-Thrill ஸ்பெஷல் இதழில் அதனை சந்தோஷமாய்ப் பிரசுரிப்போம் ! 

And  நண்பர் Saint Satan : நீங்களும் துரிதமாய் உங்களின் போட்டோ + அறிமுகத்தை அனுப்பிடுங்களேன் : லயன் நியூ லுக் ஸ்பெஷலில் பளிச் வண்ணத்தில் வந்திடும் !

அடுத்தது பட்டாசுப் பார்சலுக்கான போட்டி : (கேப்டன் டைகர் + 'எமனின் திசை மேற்கு' - இரு கௌபாய் இதழ்கள் வந்திடும் இதழுக்கான பெயர் தேர்வு)

இம்முறை கவனத்தை ஈர்த்திட்ட பெயர்கள் இதோ :    


  • "தோட்டா ஸ்பெஷல் " - Bladepedia Karthik
  • "Wild West ஸ்பெஷல்" -SoundarSS
  • "Great ஹீரோஸ் ஸ்பெஷல்" - Saint Satan (!) 



தேர்வுகளை shortlist செய்த பின்னர் வழக்கம் போல் குழப்பம் என்னுள் ! ஆனால் நண்பர் சௌந்தரின் "Wild West ஸ்பெஷல்" என்ற பெயரைக் கேட்கும் போதே 'சும்மா அதிருது-லே ' என்று எனக்குத் தோன்றியது ! அதுவும் அல்லாது "எமனின் திசை மேற்கு" (Van  Hamme ) கிராபிக் நாவல் வரவிருக்கும் இந்த ஸ்பெஷல் இதழுக்கு - இந்தப் பெயர் ரொம்பவே பொருந்துமெனத் தோன்றியது ! 

ஆங்கிலத்தில் இந்தப் பெயர் fairly common  ; எக்கச்சக்கமான கௌபாய் இதழ்கள் இந்தப் பெயரில் வந்துள்ளன என்ற போதிலும், தமிழுக்கு ; நம் இதழ்களுக்கு இது முதன் முறை தானே ?! So - பட்டாசுப் பார்சலை வென்றிடுவது நண்பர் சிவகாசி சௌந்தர் ! (பார்சலை கூரியர் அனுப்பும் செலவு மிச்சம் !!) Congrats சௌந்தர் ! உங்களின் புகைப்படம் + bio data  வினை விரைவில் எதிர்பார்த்திடுவேன் !    




உற்சாகமாய் ; creative -ஆக பெயர்கள் எழுதி அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ! "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்"  என்ற பொன்மொழியைப் பின்பற்றி மனம் தளராது அடுத்த முறையும் இது போன்ற போட்டியில் "சமோசா வேட்டையை" நடத்த துள்ளிக் குதித்து வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு - இன்றைய இப்பதிவை நிறைவு செய்கிறேன் ! நாளை இரவு - உங்களின் சமீபத்திய கமெண்ட்ஸ்-க்குப் பதில்கள் ; எனது updates கொண்டதொரு புதுப் பதிவோடு உங்களை சந்திக்கிறேன் ! Adios until then ! 

Friday, June 08, 2012

காமிக்ஸ் ஸ்டோர்ஸ் 2012 !


நண்பர்களே,

சின்னதாய் ஒரு பதிவு...! நமது லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களை இப்போது நீங்கள் online-ல் வாங்கிடலாம் ! 

E-Bay வலைத்தளத்தின் இந்தியப் பிரிவில் thecomicsstores2012 என்ற பெயரில் நமது இதழ்களை விற்பனை செய்திடும் முயற்சியினைத் துவக்கி உள்ளோம் ! இதோ அந்த வலைப்பக்கத்தினை சென்றடைந்திட link :




இவ்வார இறுதிக்குள் நம் கைவசமுள்ள அனைத்து இதழ்களும் இங்கே விற்பனைக்குத் தயாராக இருந்திடும். இந்தியாவிற்குள் இனி எந்த மூலையில் நீங்கள் இருந்திட்டாலும் உங்களது credit card ; debit card களைப் பயன்படுத்தி இதழ்களைத் தருவித்துக் கொண்டிட இயலும் !  Paisapay உதவியோடு துவக்கியுள்ள இந்தப் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெற்றிடும் பட்சத்தில் அயல்நாட்டு online விற்பனைக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டிடலாம் ! 



Fingers Crossed !

Friday, June 01, 2012

ஒரு ஜூன் மாத டைம் டேபிள் !


நண்பர்களே,

புதியதொரு மாதம் ! பள்ளி / கல்லூரி செல்லும் மாணாக்கருக்குப் புதியதொரு துவக்கமும் கூட !  

'பலித்த மட்டிற்குப் பார்ப்போமே' என்று அம்மாமார்களின் உடும்புப் பிடியினிலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்திடும் குழந்தைகள் !  நேற்று வரை IPL மேட்ச்கள் பார்த்து விட்டு, மறு நாள் விட்டம் வரை விரியும் கொட்டாவிகளோடு பணிக்குச் சென்று வந்த தந்தைமார்கள்,இன்று பரபரப்பாய் டூ-வீலர்களிலும், சைக்கிள்களிலும், தத்தம் சிறார்களை பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் நேர்த்தி!....2 மாதங்களாய் sudoku  போட்டுக் கொண்டிருந்த கடைக்காரர்கள் இப்போது நிமிர்ந்து பார்க்க நேரமின்றி நோட்டுக்களும் , புத்தகங்களும் விற்பனை செய்திடும் லாவகம் - என ஒரே நாளில் தான் எத்தனை மாறுபட்ட காட்சிகள் !! 

சுறுசுறுப்பாய் துவங்கியுள்ள இந்த ஜூன் மாதம் ஒரு காலத்தில் நமக்கு ரொம்பவே 'கடுப்பேற்றும் மாதம்'  என்ற ரகமாய் இருந்து வந்தது நிஜம் ! ஏப்ரல், மே இரு மாதங்களும் பள்ளி விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் விற்பனை அட்டகாசமாய் இருந்திடும் -ஆனால் ஜூன் வில்லங்கமான மாதமாய் இருந்திடும் - உங்களில் பெரும்பான்மை பள்ளி செல்லும் மாணவர்களாய் இருந்து வந்த காரணத்தினால் !! காலம் தான் எத்தனை துரிதமாய் பயணித்து விட்டது !! 

புதிதாய் டைம் டேபிள் போட்டு வகுப்புகள் துவங்கிடும் இப்புது மாதத்தில், சின்னதாய் நாமும் ஒரு டைம் டேபிள் போட்டால் என்னவென்று எனக்குத் தோன்றியது ! உங்களில் பலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொன்னது போலவும் ஆகிடும்..சின்னச் சின்னதாய் புதிய சங்கதிகளையும் உங்களுக்குத் தெரிவித்த திருப்தியும் இருக்குமென நினைத்தேன் !அதன் பலனே இப்பதிவு ! 

June 15 releases ! 
ஜூன் 15 -ல் முத்து காமிக்ஸ் - black & white இதழ்களான "சிவப்புக் கன்னி மர்மம்" & "தற்செயலாய் ஒரு தற்கொலை" ஒரே சமயத்தில் வெளிவந்திடும் ! தலா ரூபாய் பத்து விலையிலான டிடெக்டிவ் ஜெரோம் சாகசங்கள் இவை !  ஒரே முழுநீளக் கதை இரு பாகங்களாய் உள்ளதால், இவற்றை இரண்டு இதழ்களாக பிரித்து வெளியிடும் எண்ணத்தில், சுமார் 2  வருடங்கள் முன்னரே இந்த அட்டைப்படங்கள் அச்சாகின ! ஆனால் அவற்றிற்கு விடியல் வந்திட இத்தனை காலமாகுமென சத்தியமாய் நான் எதிர்பார்த்திடவில்லை ! Anyways, better late than never I guess ! 

July 15 release 
அதனைத் தொடர்ந்து ஜூலை 15 -ல் நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் " - ரூபாய் 100 விலையில் - முழு வண்ண லக்கி லூக் சாகசங்களுடன் ! இரு லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில், ப்ளஸ் ஒரு black  & white கதை வந்திடும் ! (இந்தப் பக்கங்களில் நிச்சயம் மறுபதிப்புக் கதைகள் இருந்திடாது ...!!) 

ஆகஸ்ட் மாதம் ரிப்போர்டர் ஜானியின் குத்தகையில்..! ரூபாய் 100 விலையில் - "பனியில் ஒரு பரலோகம்' முழு வண்ணத்தில் ! அத்தோடு கேப்டன் பிரின்சின் "பரலோகப் பாதை பச்சை" முழு வண்ணத்தில். So ஜானி & பிரின்ஸ் என்று நமது "பழைய கைகள் " ஒன்று சேர்கிறார்கள் ! இந்த "இடைத்தேர்தல் கூட்டணிக்கு" என்ன பெயர் சூட்டலாம் ? இந்த இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயரை உருவாக்கிடுவோமா ?!  (இம்முறை பரிசாய் வடை இல்லாங்காட்டி ஒருபஜ்ஜியாவது நிச்சயம் உண்டு !! )  

August'2012


அதே ஆகஸ்ட் 15ல், ரூபாய் 10 விலையிலான ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" black  & white  சாகசமும் கூட வெளி வந்திடும் ! So, ஜானியை வண்ண அவதாரத்திலும் சரி..கருப்பு வெள்ளையிலும் சரி..ஒரே சமயம் ரசித்திடப் போகிறீர்கள் ! உங்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆகஸ்டில் எப்போதையும் விட அதிக ஆர்வமாய் காத்திருப்பேன் ! ஒரு டெஸ்ட் போட்டியும், ஒரு T20 மாட்ச்சும் ஒரே சமயம் பார்த்திடும் effect நிச்சயம் இருந்திடப் போகின்றது !!

September'12
செப்டெம்பரில் ஒரு மாறுபட்ட combo காத்துள்ளது ! கேப்டன் டைகர் தோன்றும் "மரண நகரம் மிசூரி"  முழு வண்ணத்தில்..பிளஸ் "எமனின் திசை மேற்கு" graphic novel - இரு அட்டகாசமான கௌபாய் சாகசங்களும் கரம் கோர்த்து வரவிருக்கின்றன ரூபாய் 100  விலையினில்!இரு கதைகளும் வண்ணத்தில் வந்திடும் !இரு கதைகளும் பிரெஞ்சு காமிக்ஸ் உலக ஜாம்பவான்களின் அசாத்தியப் படைப்புகள் !! பெயர் சூட்டிடும் அன்பர்களே..ஆர்வலர்களே...மீண்டும் உங்கள் சேவைக்கு வேலை வந்து விட்டது !இந்த மாறுபட்ட இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயர் உருவாக்கிடும் நண்பருக்கு ஒரு சிவகாசிப் பட்டாசு பார்சல் அந்த இதழோடு அனுப்பிடப்படும் !  So, get cracking guys..please !  

October'12 - Diwali Special ! 
அக்டோபர் மாதம் நமது "சூப்பர் மூவர்" ; "சாகச Trio " தோன்றிடும் "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" ரூபாய் 100 விலையினில் தீபாவளி மலராய் வந்திட உள்ளது ! இதில் எந்த மாற்றமோ ; ஒத்திவைப்போ ; நிச்சயம் இருந்திடாது guys ! ஸ்பைடர் & சட்டித் தலையன் ஆர்ச்சி கதைகளில் பட்டி டிங்கரிங் செய்திட இன்னும் சற்றே கூடுதலாய் எனக்கும் அவகாசம் கிட்டியுள்ளது !
November'12


நவம்பர் மாதம் திரும்பவும் டைகர் மாதமே ! இம்முறை "தங்கக் கல்லறை" பாகம் 1 & 2 இணைந்த முழு வண்ண மறுபதிப்பு...ரூபாய் 100  விலையில் ! இந்த இதழின் பின் பகுதியில் black & white -ல் - திகில் இதழ் # 2 மறுபதிப்பாக வந்திடும் ! So இது முழுக்கவே மறுபதிப்பு சமாச்சாரம் !   

டிசம்பர் மாதம் ரொம்ப காலமாய் hibernation -ல் இருந்திட்ட நமது டாப் ஸ்டார் டெக்ஸ் வில்லரின் "காவல் கழுகு" - ரூபாய் 10  விலையில், black  & white -ல் !  இந்தப் பாணியில் ; இந்த விலையினில் இதன் பின்னர் இன்னொரு (புது) இதழ் வந்திடாது என்பதால், நமது black& white சகாப்தத்திற்கு விடைதந்திடும் இதழாய் இது அமைந்திடும் ! மாற்றங்களுக்கு நமது லயனும் விதிவிலக்கல்ல என்பது அப்பட்டம் என்ற போதிலும், இத்தனை காலமாய் நாம் பரிச்சயப்பட்டு வந்ததொரு பாணியினை முழுவதுமாய் புறந்தள்ளிடும் வேளை வரும் போது லேசான கனம் மனதில் !
Dec'12
டைம் டேபிள் போட்டாகி விட்டது இவ்வாண்டிற்கு ! இனிமேல் "பீஸ் கட்டும் படலம்" துவங்கிட வேண்டுமே!! ஆகஸ்ட் மாத இறுதியோடு உங்களின் சந்தா ரூபாய் 620 நிறைவடைந்திருக்கும் ! இதோ அதற்கான கணக்கு :


Rs .100  + (கூரியர் கட்டணம்) 25 = Rs .125  வீதம் x 4 இதழ்கள் =       Rs 500 

  • லயன் Comeback ஸ்பெஷல் 
  • முத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல் 
  • லயன் நியூ லூக் ஸ்பெஷல் 
  • ஆகஸ்ட் மாத ஜானி + பிரின்ஸ் ஸ்பெஷல் 



Rs.10 + (தபால் கட்டணம்) Rs .5 வீதம் = Rs.15 வீதம் x 6  இதழ்கள் = Rs .90 

  1. விண்ணில் ஓரு குள்ளநரி 
  2. கொலைகாரக் கலைஞன்
  3. சாத்தானின் தூதன் Dr .7 
  4. சிவப்புக் கன்னி மர்மம்
  5. தற்செயலாய் ஒரு தற்கொலை
  6. மரணத்தின் நிசப்தம் 
தலைவாங்கிக் குரங்கு - Rs .25  + தபால் கட்டணம் Rs 5 =                  Rs 30 

ஆக மொத்தம் : Rs .620 

இந்தாண்டின் துவக்கத்தின் போது சந்தாத் தொகை நிர்ணயம் செய்திட்ட போது - ஸ்பெஷல் இதழ்கள் நான்கிற்கு மேல் நம்மால் முடியுமென நான் நிச்சயம் எதிர்பார்த்திடவில்லை ! உங்களின் அசாத்திய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதன் பலனே இந்த அதிசயம் என்று நான் சொல்வேன் !  Thanks for the awesome support guys !

செப்டம்பர் ; அக்டோபர் ; நவம்பர் & டிசம்பர் 2012 மாதங்களுக்கான இதழ்களுக்குக் கட்டணம் Rs .400 ஆகின்றது ! (3  x ரூபாய் 100 இதழ்கள் + 1 x  Rs .10 + கூரியர் & தபால் கட்டணங்கள்). So ஜூலை மாதத்திற்குள் இந்தத் தொகையினை எங்களுக்கு அனுப்பிட்டால், தொடர்ச்சியாய் இதழ்களை இந்தாண்டின் இறுதி வரை அனுப்பிட ஏதுவாய் இருக்கும். Please make some time to transfer Rs.400 to our account guys ! பணம் அனுப்பிய பின்னர் lioncomics@yahoo.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "சந்தா நீட்டிப்பு" என்று தலைப்பிட்டு ஒரு இ-மெயில் ; உங்களின் செல் நம்பரோடு அனுப்பிடக் கோருகிறேன் ! இதோ -எங்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பிடத் தேவையான விபரங்கள் :


2013 -க்கான புது இதழ்கள் பற்றிய சிந்தனை என் மண்டைக்குள்ளே ஓடிய வண்ணம் உள்ளன ! God willing அடுத்த ஆண்டு இன்னும் எக்கச்சக்கமான hi tech கதைகள் ; அற்புத அறிமுகங்கள் என்று உங்களை அசத்திட என்னால் இயன்றதை செய்வேன் !  

இந்தப் பதிவிற்கு சுப மங்களம் போட்டிடும் முன்னே, சின்னதாய் ஒரு சேதி ! ஜூலை 15 -ல் வரவிருக்கும் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது ! Keep guessing folks ! Bye for now !