Thursday, July 02, 2026

42 ......and Counting !!

 நண்பர்களே,

YEAR 42 and Counting....👍

வணக்கம்! இறக்கை கட்டிப் பறப்பது அண்ணாமலை சைக்கிள் மட்டுமல்ல (no அரசியலுங்கோ)– காலச் சக்கரமும் தான்! தேய்ந்து, ஓய்ந்து போன cliche-களை உவமானத்துக்கு நான் இங்கே இரவல் வாங்கப் போவதில்லை! மாறாக, டெக்னாலஜியில் நாம் கண்டுள்ள மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கொஞ்சமாய் நினைவு கூர்ந்தாலே – கடந்து சென்றிருக்கும் இந்த 500+ மாதங்களின் பரிமாணம் சுயமாகவே புரியும்!!

​1984-ல் "கத்திமுனையில் மாடஸ்டி"க்கு அச்சுக் கோர்ப்பு செய்த வேளைகளில் கிட்டத்தட்ட 240 தனித்தனி சிறு டப்பிகள் கொண்டதொரு பெரிய மர கேஸை நிறுத்தி வைத்து, ஒவ்வொரு டப்பிக்குள்ளும் ஈயத்தினாலான தமிழ் எழுத்துக்களை போட்டு வைத்திருப்பார்கள்! 'யா' எங்கே உள்ளது? 'டீ' எங்கேயுள்ளது என்றெல்லாம் நினைவில் வைத்திருக்கும் கம்பாஸிட்டர்கள் அந்த எழுத்துக்களை சேகரித்து வரிகளை உருவாக்குவார்கள்! அதன் பின்னே அந்த ஈய எழுத்துக்களில் கருப்பு மசி பூசப்பட்டு பிரிண்ட் எடுக்கப்படும்! இன்றைக்கோ – லொடடு லொடடு லொடடென்று தட்டினால் சகல பாஷைகளிலும் ஸ்கிரீன் ரெடி!

​அந்த நாட்களில் பிரிண்ட் போடப்படும் தமிழ் ஸ்கிரிப்ட்டை நமது ஆர்டிஸ்ட் டீம் கர்ம சிரத்தையாய் வெட்டி, ஒட்டி, ஓரம்-சாரங்களில் படங்களை நீட்டித்துத் தருவார்கள்! இன்றைக்கோ – again கொஞ்சம் லொட்டு.. லொட்டு.. லொட்டு!! பக்கம் ரெடி! அட, அதுவே இப்போது பூமர் ஸ்டைல் என்றாகிப் போய்விட்டது; செயற்கை நுண்ணறிவு அண்ணாத்தேயிடம் சொன்னால், கதையே எழுதி, படமும் வரைந்து, அதுவே வாசித்து, விமர்சனமும் செய்து விடும்!

​அந்த நாட்களில் ஐரோப்பிய படைப்பாளிகளிடம் பேச வேண்டுமெனில் ‘இன்டர்நேஷனல் ட்ரங்க் புக்கிங்’ என்ற பெயரில் ஒரு நான்கு மணி நேரங்களுக்கு முன்பாகவே புக்கிங் பண்ணிவிட்டு, போனின் அருகிலேயே புளிசாதத்தோடு காத்திருக்க வேண்டியிருக்கும்! அப்புறமாய் டெலக்ஸ் வந்தது; அதைத் தொடர்ந்து fax வந்தது ; பின்னே pager என்றார்கள்; next செங்கக்கட்டி போலொரு மொபைல் போன் என்றார்கள்; பிற்பாடு ஸ்மார்ட்போன் என்றார்கள் ....வாட்சப் என்றார்கள்... Wi-Fi என்றார்கள்... 3G..4G...5G என்று பற்பல G-க்கள் தகவல் தொலைத்தொடர்பை உள்ளங்கைக்குள்ளேயே கொணர்ந்து விட்டனர்!

​அட, அவ்வளவு போவானேன் folks? இரண்டு ரூபாய், மூணு ரூபாய் என்று தெருமுனைப் பெட்டிக்கடைகளில் தொங்கிய அந்த மெல்லிய நியூஸ்பிரிண்ட் காமிக்ஸ் புத்தகங்கள், இன்று பளபளக்கும் ஆர்ட் பேப்பரில், அட்டகாசமான வண்ணங்களில், ஹார்ட் கவர் பைண்டிங்கில் உங்கள் புத்தக அலமாரிகளை அலங்கரிப்பது கூட மாற்றங்களின் ஒரு மாயாஜாலம் தானுங்களே?

​பள்ளி முடிந்து வந்ததும், கையில் இருக்கும் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, புத்தகக்கடைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்ற அந்த மாலைப் பொழுதுகள் நினைவிருக்கிறதா? 'லயன் காமிக்ஸ் புதுசு வந்துருச்சாண்ணா?' என்று கேட்டு, அந்த ஸ்பைடரையோ, ஆர்ச்சியையோ வாங்கியவுடன், வீட்டுக்கு வரும் வழியிலேயே வாசித்த அந்தத் தருணங்கள் நேற்றைய நினைவுகள்! And கச்சிதமாய் வாங்கியவற்றை அம்மாவின் கண்ணில் படாமல் வீட்டுக்குள் கொண்டு செல்வது பற்றாதென, ஸ்கூல் பைக்குள் அவற்றைப் பதுக்கி எடுத்துப் போய் நண்பர்களோடு ஷேர் விட்டதெல்லாம் அலாதி! இப்போதோ – கிரெடிட் கார்டைத் தேய்த்து சில ஆயிரங்களிலான சந்தாவைக் கட்டிப்புட்டு வீடு தேடி கொரியர் வரும் போது 'நண்பன் கொடுத்த கிப்ட்மா...!' என்று  புளுகியபடிக்கே , வாசக சந்திப்புகளுக்கெல்லாம் 'ஆபீஸ் டூர்' என்று பீலா விட்டுக் கிளம்புவது இப்போதைய சாகசங்கள்!!

​இந்த நான்கு தசாப்தங்களில் நம்முடன் தான் எத்தனை எத்தனை நாயக/நாயகியர் பயணித்திருக்கிறார்கள்! ஆனால், நம் கற்பனை உலகை ஆக்கிரமித்திருந்த யாருக்கும் வயதாகவே இல்லை என்பது தான் மேட்டரே! டெக்ஸ் வில்லர் இன்றும் அதே சீற்றத்துடன், அதே நவஹோ செவ்விந்தியர்களுடன் குதிரையில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறார்! நமக்குத் தான் ஓரத்தில் ஒயிட் எட்டிப் பார்த்துவிட்டது  ; கண்களில் ரீடிங் கிளாஸ் ஏறிவிட்டது; தொப்பைகளின் விஸ்தீரணங்களும் செழிப்பாகியுள்ளன! ஆனாலும், கூட மாதத்தின் முதல் தேதிகளில் காமிக்ஸின் பார்சல் வீட்டுக்கு வரும் போது நம்முள் ஒளிந்திருக்கும் அந்தப் பாலகன் உள்ளுக்குள்ளாவது லைட்டாகத் துள்ளி குதிக்கிறான் தானே? இந்த 42 ஆண்டுகளில் நமது லயனுடனான பயணத்தின் மெய்யான சாதனையாய் அதையே பார்க்கத் தோன்றுகிறது!

​எத்தனையோ ஏற்ற-தாழ்வுகள் இந்தப் பயணத்தில் உண்டென்றாலும், நீங்கள் தந்துள்ள நிபந்தனைகளற்ற ஆதரவுகளே இந்தச் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஆதாரங்கள்! மாதம் ஒரு black & white சாணிக் காகிதப் புத்தகம் என்ற நிலையிலிருந்து, இன்று 'சாம்பலின் சங்கீதம்...' 'பயணம்' போலான பிரம்மாண்டமான கிராஃபிக் நாவல்களை ஐரோப்பிய தரத்திற்கு இணையாக வெளியிடுமளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் உங்களின் தணியாத காமிக்ஸ் தாகம் மட்டுமே!

​நாம் ஒரு விசித்திரமான, அழகான குடும்பம் என்பேன் guys! சாதி, மதம், வயது, அனுபவம், அரசியல், என அனைத்தையும் தலையைச் சுற்றி தூர வீசி விட்டிருக்கும் நம்மை, சின்னச் சின்ன கட்டங்களுக்குள் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், அவற்றில் உள்ள வசனங்களும் ஒற்றைப் புள்ளியில் இத்தனை காலமாய் இணைத்திருக்கின்றன ! புத்தகத் திருவிழாக்களில் நாம் சந்திக்கும் போது, நீங்கள் காட்டும் அந்த ஆர்ப்பாட்டமில்லாத அன்பும், உரிமையோடு நீங்கள் வைக்கும் விமர்சனங்களும்தான் இந்தப் பயணத்தின் பெட்ரோல்.... டீசல்... LPG என எல்லாமே!! சந்துகள் பல கண்டு, சந்தடியே இல்லாது சாத்துக்கள் பல வாங்கினாலும் - ‘ அந்த சிக்-பில் க்ளாஸிக்கை மறுக்கா போடுங்க; MAXI சைஸில் XIII எப்போது? ‘டைகருக்கு இன்னும் ஒரு ஸ்லாட் கூடுதலா குடுங்க’ என்றெல்லாம் நீங்கள் உரிமையோடு கேட்கும் ஒவ்வொரு தருணத்திலும், குணா கமல் போல - ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப் போன மாயமென்ன – பொன்மானே..பொன்மானே?’ என்றே பாடத் தோன்றுகிறது!

​42 ஆண்டுகள்!

​வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான மைல்கல் - வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் பருவம்! ஆனால், (தமிழ்) பதிப்புலகின் சவலைப் பிள்ளையான ஒரு காமிக்ஸ் நிறுவனத்திற்கோ - இந்தக் கால அவகாசமானது ஒரு நீண்ட, உணர்வுபூர்வமான சகாப்தம்! என்னோடு இந்த நெடிய பயணத்தில் ராப்பகலாகத் துணை நின்ற ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அச்சுக்கூட நண்பர்கள், பைண்டிங் தொழிலாளர்கள்; front ஆபீஸ் உதவியாளர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் லயன் காமிக்ஸின் ஆணிவேரான உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும் ! நீரின்றி லயன் இல்லை; இந்தப் பயணமும் இல்லை!

​நாளை என்ன நடக்கும்? தொழில்நுட்பம் நம்மை எங்கு கொண்டு செல்லும்? என்று ஆருடம் சொல்ல சத்தியமாய்த் தெரில்லீங்கோ ! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! காகிதத்தின் வாசனையும், கற்பனையின் வீச்சும், இந்த பொம்ம பொஸ்தவங்களை ரசிக்கும் உங்களைப் போன்ற காதலர்களும் இருக்கும் வரை, நம் காமிக்ஸ் உலகம் உயிர்ப்போடு இருக்கும்! And அந்தச் சித்திரக் கட்டங்களுக்குள் நம் நாயகர்கள் உங்களுக்காக மறுக்கா மறுக்கா பிஸ்டல்களை தோட்டாக்களால் நிரப்பிக் கொண்டே இருப்பார்கள்!

​Yet another ஆண்டினுள் அடியெடுத்து நடை போடுகிறோம் - நமது மாமூலான லக்கி லூக்கின் ஆண்டுமலரோடும், 'தல' டெக்ஸின் அதிரடியோடும்!! இம்மாமாதம் GEN Z தடத்தில் ஒரு தாத்தாவும், பேத்தியுமென்றால், கிராபிக் நாவல் தனித்தடத்தில் ரவுசு பண்ணும் தாத்தாஸ் trio!! இந்த variety தானே நமது அடையாளமே folks? இந்தியாவில் வேறெந்த மொழியிலோ, மாநிலத்திலோ நாம் ரசிப்பனவற்றை ரசிக்கவல்ல வாசகர்கள் யாருமே கிடையாது என்ற பெருமிதத்தில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே முன்செல்வோம்!! You have been an absolutely fabulous audience & உங்கள் துணைகளுடன் இன்னும் பற்பல மைல்கற்களை எட்டிப் பிடிக்க புனித மனிடோ அருள்புரிவாராக!! 

இதோ ஜூலை இதழ்களின் அட்டைப்படம்ஸ் & பிரிவியூஸ் !! 


ONLINE LISTING : https://lion-muthucomics.com/latest-releases/1472-2026-july-pack.html


இம்முறை தொடரின் ஒரு துவக்க நாட்களின் சாகசமும், பின்னாட்களின் சாகசமும் காம்போவாகி உள்ளன ! அதனில் அந்த லேட்டஸ்ட் சாகசமே ஹைலைட் - என்  பார்வையிலாவது !! அந்தக் காலத்தில் வன்மேற்கில் வாழ்ந்த பெல் ஸ்டார் எனும் அடாவடி அம்மணியே இந்தப் படைப்பின் துவக்கப் புள்ளி என்பது கொசுறுத் தகவல் !! 

And இம்மாத 'தல' சாகசத்திலுமே ஒரு ரியல் லைப் பார்ட்டி உண்டு - நமக்குத் பரிச்சயமான ஜட்ஜ் ராய் பீன் ரூபத்தில்..! (லக்கி லூக்கின்  - "நிதிக்குத் தலைவணங்கு" நினைவுள்ளதுங்களா ? So வன்மேற்கின் முக்கிய புள்ளிகளை இம்முறை இரு மஞ்சள் சொக்காய்க்காரர்களுமே உள்ளடக்கியுள்ளனர் !! இரண்டுமே absolute must reads என்பேன் !! 


And GEN Z சந்தாவினில் இம்முறை தாத்தா & பேத்தி சிறுகதை + டீம் ஜு.டி சிறுகதை என்ற அழகான காம்போ !



மேற்கொண்டு இன்னும் கொஞ்சம் எழுதணும் folks - முடிந்தால் இப்போவே ; இல்லாங்காட்டி நாளைக்கு காலையில்... ! So catch you again ! Bye for now !







85 comments:

  1. பத்துக்குள்ள வந்தாச்சு..!

    ReplyDelete
  2. **பள்ளி முடிந்து வந்ததும், கையில் இருக்கும் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, புத்தகக்கடைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்ற அந்த மாலைப் பொழுதுகள் நினைவிருக்கிறதா? 'லயன் காமிக்ஸ் புதுசு வந்துருச்சாண்ணா?' என்று கேட்டு, அந்த ஸ்பைடரையோ, ஆர்ச்சியையோ வாங்கியவுடன், வீட்டுக்கு வரும் வழியிலேயே வாசித்த அந்தத் தருணங்கள் நேற்றைய நினைவுகள்! And கச்சிதமாய் வாங்கியவற்றை அம்மாவின் கண்ணில் படாமல் வீட்டுக்குள் கொண்டு செல்வது பற்றாதென, ஸ்கூல் பைக்குள் அவற்றைப் பதுக்கி எடுத்துப் போய் நண்பர்களோடு ஷேர் விட்டதெல்லாம் அலாதி**.

    ஒவ்வொரு ஆண்டும் கடந்த காலத்தை லயன் காமிக்ஸ் உடன் நினைவுபடுத்தும் போதெல்லாம் காமிக்ஸ் மீது கூடுதலான வாஞ்சை எழாமலில்லை. சூழலுக்கு ஏற்ப இயந்திரத்தனமாக போன வாழ்க்கையில் சற்றே தென்றலாய் வருடிக் கொண்டிருப்பது இந்த காமிக்ஸ் சார்ந்த நினைவுகளே.
    அந்த பொற்காலத்தை இன்றுவரை தொடர்வது கொடுப்பினை.

    தங்கள் அன்புக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  4. 42nd ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  5. நம்ம லயனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. 42nd ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... LIon comics !!

    ReplyDelete
  7. Lion Comics. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  8. இரட்டை வேட்டையரின் திக்கு தெரியாத தீவில் புத்தகம் எப்போது வரும்ங்க விஜயன் சார் ..??

    ReplyDelete
  9. வருடந்தோரும் புதிதாய் பிறக்கும் லயனுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அருமையான பதிவு சார் மீண்டுமோர் முறை.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லயனே....அட்டைபடங்க வேற லெவல்

    ReplyDelete
  11. அன்பு ஐயருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அன்பு "லயனுக்கு"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஜட்ஜ்ராய் பீன்" சல்லிசான விலைக்கு நீதியும், ஐஸ் பீரும் வழங்கி ய புண்ணியவாளனை மறக்க முடியுமா?
    ஜட்ஜ் : பாக்கெட்ல எவ்வளவு ப்பா இருக்கு?

    லக்கி லூக் :
    தோராயமாக ஐம்பது டாலரோ என்னவோ.

    ஜட்ஜ்:தோராயமாக ஐம்பது டாலரோ என்னவோ வும்அபராதம்

    அவரோட அட்ரா சிட்டி மறக்க முடியுங்களா?

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. கேசங்கள் காதோரம் ஒயிட் போட்டா என்ன.. சுத்தமா உதிர்ந்து தலை முழுக்க ப்ளாட் போட்டா என்ன..? இன்னமும் எங்களை யூத் ஆகவும் கொயந்த புள்ளைகளாகவும் வைத்திருக்கும் எங்கள் அன்பான லயனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..! (என்ன..லைட்டா மூச்சு வாங்குது..?)

    ReplyDelete
  16. அருமையான பதிவு எடிட்டர் சார்! உண்மையில், உங்களது அபரிமிதமான, தீராத, தனியாத, குன்றாத, குறையாத, ஒப்பீடு இல்லாத காமிக்ஸ் காதல் மட்டும் இல்லாவிட்டால் நீங்கள் ஆராதிக்கும் இந்த சின்னஞ்சிறு கூட்டம் இல்லவே இல்லை! எத்தனையோ சோதனைகள், ஏற்ற தாழ்வுகள், மூ. ச அனுபவங்கள் கிட்டியிருந்தாலுமே கூட, உங்களது காமிக்ஸ் காதல், அற்புதமான எழுத்துத்திறன், அபாரமான நகைச்சுவை உணர்வு - இவற்றோடு கூட - ஒரு எடிட்டராக மட்டும் இல்லாது எங்கள் அனைவரிடமும் நட்பு பாராட்டி - எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணவோட்டங்களையுமே கூட தூரத்திலிருந்தே அனுமானிக்கத் தெரிந்த ஒரு உளவியல் நிபுணராகவும் இருப்பதால் தான் இந்த 42 வருடங்கள் என்ற மகத்தான, பிரம்மிக்க வைத்திடும் மைல்கல் சாத்தியமாகியிருக்கிறது!

    சிறு வயதில் எங்களுக்கு தமிழ்நாடு தாண்டிய ஒரு புது உலகை அறிமுகப்படுத்தினீர்கள். அதாவது, புத்தகங்கள் மூலமாகவே புதுப் புது நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்க்கும் வாய்ப்புகளை வழங்கி எங்களது அன்றைய தேடலுக்குத் தீனி போட்டீர்கள். முத்துவில் கிடைக்காத துள்ளல் துடிப்புகளை லயனில் கொண்டு வந்து (ஸ்பைடர், ஆர்ச்சி, டெக்ஸ், லக்கி, வுட்சிட்டி டீம், ரிப்போர்ட்டர் ஜானி, இரட்டை வேட்டையர், முதலைப் பட்டாளம், அலிபாபா, ம. இ. மந்திரி, etc., etc.,) எங்களையெல்லாம் ஆச்சரியத்தில் மூழ்கிடித்தீர்கள்! குடும்பத்தில் பிரச்சனை காரணமாக பொருளாதாரம் தரை தட்டி, என் சிறு வயதிலேயே மன அழுத்தத்தோடும், ஒரு வாய் சம்சா கூட கிடைக்காத பசியோடும் சுற்றிய நாட்கள் பல உண்டு. அன்று என் மன அழுத்தத்தை, பசியை மறக்கச் செய்யும் மந்திரக்கோலாக இருந்தது நமது காமிக்ஸ் புத்தகள் மட்டுமே! குறிப்பாக லயன்!!

    நன்றிகள் சார்! அத்தனைக்கும் நன்றிகள்! 🙏🙏🙏💐💐💐 உண்மையில் இன்னும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தீராது நான் கொண்ட இந்த நன்றிக்கடன்!

    இன்றுமே கூட, மண்டையைப் பிளக்கும் வேலைப் பழுவினூடே உங்களது பதிவுகளும், காமிக்ஸ் சார்ந்த செய்திகளும், படங்களும் தான் என் (போன்றோரின்) உற்சாகத்தை மீட்டெடுக்கும் stress busters!!

    லயன் பொன் விழாவை நோக்கி இதே ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் நடை போடுவோம் சார்!! 🙏💐💐💐

    ReplyDelete
    Replies
    1. அழகாக எடுத்துரைத்தீர் செயலர்...100% அனைத்து வரிகளும் உண்மை....

      Delete
    2. // இன்றுமே கூட, மண்டையைப் பிளக்கும் வேலைப் பழுவினூடே உங்களது பதிவுகளும், காமிக்ஸ் சார்ந்த செய்திகளும், படங்களும் தான் என் (போன்றோரின்) உற்சாகத்தை மீட்டெடுக்கும் stress busters!! // எனது விசயத்திலும் இது 100 சதவீதம் உண்மை.

      Delete
    3. டேங்க் யூ டியர்ஸ்!!😊

      Delete
  17. பள்ளி முடிந்து வந்ததும், கையில் இருக்கும் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, புத்தகக்கடைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்ற அந்த மாலைப் பொழுதுகள் நினைவிருக்கிறதா? 'லயன் காமிக்ஸ் புதுசு வந்துருச்சாண்ணா?' என்று கேட்டு, அந்த ஸ்பைடரையோ, ஆர்ச்சியையோ வாங்கியவுடன், வீட்டுக்கு வரும் வழியிலேயே வாசித்த அந்தத் தருணங்கள் நேற்றைய நினைவுகள்! And கச்சிதமாய் வாங்கியவற்றை அம்மாவின் கண்ணில் படாமல் வீட்டுக்குள் கொண்டு செல்வது பற்றாதென, ஸ்கூல் பைக்குள் அவற்றைப் பதுக்கி எடுத்துப் போய் நண்பர்களோடு ஷேர் விட்டதெல்லாம் அலாதி!

    #####
    உண்மையான உண்மை சார்..இந்த வரிகள் பால்ய நினைவுகளை கண் முன்னால் நிறுத்துகிறது..

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லயனாரே....:-)

    ReplyDelete
  19. எங்கள் சிங்கத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐😘🥰

    ReplyDelete
  20. பிறந்த நாள் பதிவு செம்ம பதிவு சார். பல விஷயங்களை சும்மா அசால்டாக நீங்க சொல்லி செல்வது சின்ன வயதில் இருந்து காமிக்ஸ் படிக்கும் அனைவருக்கும் relate ஆகிறது. இந்த மாத புத்தகங்களுக்கு ஆவலுடன் waiting.

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு லயன் காமிக்ஸ் தொடரவும்,எடிட்டர் வாழவும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. புத்தகங்கள் வந்தாச் சார்...அனைத்து அட்டைகளும் அதகளம்.....டாப் டெக்ஸார்

    ReplyDelete
  24. வணக்கம் சார். நன்றி சார்.

    ReplyDelete
  25. வணக்கம் Sir,

    உங்களுடைய காமிக்ஸ் மீதான ஆர்வமும் அன்பும் இல்லையென்றால், இது சாத்தியமாகியிருக்காது.

    நான் 2023-லிருந்து காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன். பழைய காமிக்ஸ்களையும், 2012-க்கு பிறகு வந்த காமிக்ஸ்களையும் முடிந்தவரை படித்து வருகிறேன். நீங்கள் கொண்டு வந்த கதைகளின் வெரைட்டி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ஒவ்வொரு கதையையும் படிக்கும் போதும், உங்கள் மீது இருக்கும் அன்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகிறது.

    எங்கள் வாழ்க்கையை இவ்வளவு கலர்ஃபுல்லாக மாற்றியதற்கும், காமிக்ஸ் மூலம் எங்களுக்கு சந்தோஷத்தையும், மன அழுத்தத்திலிருந்து ஒரு நல்ல ரிலீஃபையும் கொடுத்ததற்கும் ரொம்ப நன்றி, Sir.

    ReplyDelete
  26. என் இனிய லயனிற்கு
    42வது பிறந்தநாள்
    நல்வாழ்த்துக்கள்...
    முதலில் Texயை படிக்கிறேனோ ...
    லக்கி லூக்கை படிக்கிறேனோ
    மாடஸ்டி யின் ஒரு கதையைப் படித்து விட்டுதான் அடுத்தது ...

    ReplyDelete
  27. // நான்கு மணி நேரங்களுக்கு முன்பாகவே புக்கிங் பண்ணிவிட்டு, போனின் அருகிலேயே புளிசாதத்தோடு காத்திருக்க வேண்டியிருக்கும் //

    எங்க வந்து எப்படி அழகாக புளிசாதத்தை இங்கே நுழைத்து இருக்கீங்க சார். செம செம சார்.

    ReplyDelete
  28. // பள்ளி முடிந்து வந்ததும், கையில் இருக்கும் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, புத்தகக்கடைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்ற அந்த மாலைப் பொழுதுகள் நினைவிருக்கிறதா? 'லயன் காமிக்ஸ் புதுசு வந்துருச்சாண்ணா?' என்று கேட்டு, அந்த ஸ்பைடரையோ, ஆர்ச்சியையோ வாங்கியவுடன், வீட்டுக்கு வரும் வழியிலேயே வாசித்த அந்தத் தருணங்கள் நேற்றைய நினைவுகள்! //

    ஆமாம் சார். கடை பக்கத்திலேயே சில பக்கங்களை புரட்டி பார்த்து படித்த பிறகு தான் வீட்டு பக்கம் நானும் எனது நண்பனும் செல்வோம். அந்த நண்பனின் தந்தை மூலமாக தான் நமது காமிக்ஸ் மற்றும் சிறுவர் கதை புத்தகங்கள் எனக்கு அறிமுகமானது.

    ReplyDelete
  29. // முதல் தேதிகளில் காமிக்ஸின் பார்சல் வீட்டுக்கு வரும் போது நம்முள் ஒளிந்திருக்கும் அந்தப் பாலகன் உள்ளுக்குள்ளாவது லைட்டாகத் துள்ளி குதிக்கிறான் தானே? இந்த 42 ஆண்டுகளில் நமது லயனுடனான பயணத்தின் மெய்யான சாதனையாய் அதையே பார்க்கத் தோன்றுகிறது! //

    ஆமாம் சார். மறுக்கமுடியாத உண்மை சார்.

    ReplyDelete
  30. // உங்கள் துணைகளுடன் இன்னும் பற்பல மைல்கற்களை எட்டிப் பிடிக்க புனித மனிடோ அருள்புரிவாராக!! //
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  31. இந்த மாத புத்தகங்கள் கிடைத்து விட்டன ஆனால் நான் இப்போது இருப்பது தூத்துக்குடியில். ஞாயிறு காலையில் தான் நமது புத்தகங்களை பார்க்க படிக்க முடியும் சார்.

    லக்கி தான் இந்த முறை பமுதலில் படிக்க போகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த லக்கி லுக் கதை. அட்டைப்படம் நன்றாக உள்ளது சார்.

    ReplyDelete
  32. // இந்த பொம்ம பொஸ்தவங்களை ரசிக்கும் உங்களைப் போன்ற காதலர்களும் இருக்கும் வரை, நம் காமிக்ஸ் உலகம் உயிர்ப்போடு இருக்கும்! //

    😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  33. எமது சிறு வயது முதல் வாசிப்பு பழக்கத்தினை வழங்கிய காமிக்ஸ், எமக்கு புது புது உலகங்களை அறிமுகப்படுத்திய காமிக்ஸ் , எமது உற்ற தோழன் ஆக வழி நடத்திய காமிக்ஸ் , இன்றோ வேறு லெவலில் புது பரிணாமங்களை தொடந்து காட்டி வீறு நடை போடும் சிங்கத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  34. லயன் 42-வது ஆண்டு மலர் – Lucky Lion Special

    முதலில் புத்தகத்தைப் பற்றி...

    செம கலரிங், கண்கவர் அட்டைப்படம், புத்தகத்தின் அச்சுத் தரம் பக்கா! **தாறுமாறு தக்காளி சோறு ஆர்ட் வொர்க்!** ஒவ்வொரு பேனலும் கண்ணில் நின்றுவிடுகிறது.

    **டேய் Asterix & Obelix, மாங்கா காமிக்ஸ்... உங்க panel-க்கும், Lucky Luke panel-க்கும் ஜோடி போடலாம்டா ஜோடி!** 😎

    எப்போதும் Special Edition புத்தகங்கள் கொஞ்சம் விலை அதிகம் என்று சொல்லும் நானே சொல்கிறேன்... இந்த புத்தகம் ஒவ்வொரு ரூபாய்க்கும் worth! Mark my words... இந்த வருடத்தின் milestone book இதுதான்!

    ---

    சட்டம் என் சுருக்குப் பையில்

    ஒரு கிளாசிக் Lucky Luke சாகசம். Female antagonist, comedy, lollu, nakkal... எதற்கும் பஞ்சமில்லை. **Bellie Star வீட்டில் வில்லன்கள் செய்யும் அடாவடி அட்டகாசம்**, court scenes, old age home scenes... எல்லாமே தரமான artwork!

    மொத்தத்தில் இது *இரும்புக்கோட்டை மொரட்டு சிங்கம்* + *மாப்பிள்ளை* இரண்டையும் mix பண்ண மாதிரி ஒரு sema entertainer!

    ---

    காசு பணம் துட்டு... மருந்து!

    *சதுரங்க வேட்டை* படத்தில் Natty "quackery"யை கையில் எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்தக் கதையின் template.

    ஒரு டுபாக்கூர் டாக்டரை Lucky Luke lock பண்ணுறார். ஆனா show stealer யார்னா... அந்த குடிகார குதிரைதான்! அது செய்யும் ரவுசு, அட்டகாசம் வேற லெவல்!

    Gubeer சிரிப்புக்கு நிறைய moments இருக்கு.

    Negativeன்னு சொல்லணும்னா... கடைசி act மட்டும் கொஞ்சம் repetitive-ஆ இருந்துச்சு. அந்த இடத்தில் அந்த குடிகார குதிரையை வைத்து ஒரு twist கொடுத்திருந்தா பாட்டாசா இருந்திருக்கும். ஆனாலும் அது பெரிய குறை இல்லை.

    ---

    இந்த வருட ஆண்டு மலரை Current Trend-ல சொல்லணும்னா...

    **"நீ அடிச்சு தூக்கு சாமி!"** 🔥

    ReplyDelete
    Replies
    1. அருமையான சுட சுட விமர்சனம். பாராட்டுகள் நண்பரே.

      Delete
  35. நிதிக்கு நீதி
    "ஜட்ஜ் ராய் பீன்".!
    கையில் சிக்கும் குற்றவாளிகளின் பையில்இருப்பதை பிடுங்கி விட்டு கழுத்தில் கயிற்றை மாட்டிவிட்டுதான் விசாரணையையே ஆரம்பிக்கும் கல் நெஞ்சர் ,காதல் நெஞ்சராய் உலா வருகிறார் ..நேரில் பார்த்திராத லில்லி லங்ட்ரியின் மீது ஒருதலை காதலில் உருகும் ஜட்ஜ் தனது சலூனுக்கு அவளது பெயரை வைத்து அழகு பார்க்கிறார். மட்டுமில்லாமல் லங்ட்ரியின் பெயரையே புதிதாக கட்டும் தியேட்டருக்கும் வைக்கிறார்.லங்க்ட்ரியின் உயிரை காப்பாற்ற குண்டடி பட்டும் குற்றுயிரும் குலை உயிருமாக உயிரை பணயம் வைத்து குதிரையில் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஜட்ஜ் குதிரையில் இருந்துமயங்கி சரியும் போது மனதை உருக வைக்கிறார்.
    கதையின் ஹைலைட்டே ஜட்ஜின் ஒரு தலை காதலே.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார். செம சூடான விமர்சனம் 👏🏻

      Delete
    2. ரசிச்சு ரசிச்சு படிக்கறீங்க ராஜசேகர் ஜி!!💐💐💐

      Delete
  36. சமீபமாக டெக்ஸ்வில்லரின் கதைகளை படிக்க ஆரம்பிக்கும் போதே கதாசிரியர் யார் என்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது.முதல் பக்கத்தில் கதாசிரியர் பெயர் போடாததால் ,யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பக்கங்களை புரட்டினால் கதாசிரியர்" "போசெல்லி"என்ற பெயரை இடையில்பார்த்தவுடன் மனம் உற்சாகத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டது. வழக்கம்போல்பேனாவிற்க்கு மை ஊற்றுவதற்க்கு பதிலாகபெட்ரோலை ஊற்றி தெரிக்கவிட்டிருக்கிறார் போசெல்லி.

    டெக்ஸ்&கார்சனின் நக்கல்கள்,துப்பாக்கி சூடு, அதிரடி சண்டைகள் என்று சூடுபறக்கும் கதையின்இறுதியில் ஜட்ஜ் ராய் பீனின் ஒருதலை காதல் தமிழ்பட கிளைமாக்ஸ் ஆக ஜொலிக்கிறது.
    இந்த ஆண்டின் டாப் 10 கதை வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும்

    ReplyDelete
  37. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  38. நேற்று முதலில் படித்தது ஜென் Z

    டேக் மீ டு தி மூன் தாத்தா

    இந்த முறை இரண்டு கதைகள்.
    Double the amount of Joy.

    ஆண்டு விடுமுறை ரோஸ்க்கு அப்போது அவளை ஒரு சின்ன ட்ரிப் அழைத்து செல்ல அவளது அம்மா, அப்பா வர தாத்தாவை விட்டுவிட்டு டூர் செல்கிறாள் அப்போது என்ன நடக்கிறது என்பது தான் கதை. ஓவியங்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. அதும் கதையின் முதல் பேனலில் briefcase உடன் துள்ளிக் குதிக்கும் வாத்தியாரை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. செம்ம

      Delete
    2. இரண்டாவது கதை நமது ஜூ .டி துப்பறியும் டீச்சரை காணோம்.

      இதுவும் செம்ம ஃபன். ரொம்பவே simple, realistic கதை. அவர்களது டீச்சரின் மொபைலில் இன்று இரவு 8 மணிக்கு உன்னை கடத்த போகிறேன் என்று ஒரு மெசேஜ் இருப்பதை இவர்கள் பார்க்க. அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை. Simply refreshing

      Delete
    3. குமார் @ ஒரு நல்ல காமிக்ஸ் ரசிகர்.. புத்தகங்கள் வந்த உடன் படித்து மாதம் தவறாமல் எல்லா கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதும் உங்கள் காமிக்ஸ் காதலுக்கு எனது வாழ்த்துக்கள்; இந்த காமிக்ஸ் காதல் இன்று போல் என்றும் தொடரட்டும் ❤️

      Delete
    4. ///குமார் @ ஒரு நல்ல காமிக்ஸ் ரசிகர்..///

      யெஸ்! ஒரு சிறந்த கலாரசிகரும் கூட!!😁

      Delete
  39. // ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப் போன மாயமென்ன – பொன்மானே..பொன்மானே?’ என்றே பாடத் தோன்றுகிறது! //

    எப்படி சார் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது 🤩

    ReplyDelete
  40. Gen zகதைகளின் முதன்மை வாசகர் குமார் . ஒவ்வொரு மாதமும் முதல் வாசிப்பு மற்றும் முதல் விமர்சனம் குமார் சார் தான்

    ReplyDelete
  41. மரணம் மறந்த மம்மி...அடடா என்ன ஒரு கதை....கற்பனை குதிரையில் ஏறி செல்லும் மண் உருவங்கள்....அடக்கியாளும் மம்மி....எகிப்திய பழங்கால பிரமிட் கதைகள் மேல் ஈடுபாடு கொண்ட எனக்கு ஓர் அரிய பரிசு இக்கதைன்னா மறுக்க முடியாது...கதை கெடுக்க பயணிக்கும் உருவங்கள் வீழ்த்தும் டெக்ஸ் மோரிஸ்கோ கூட்டணி....மரண முள் கதை போல அடுத்து என்னன்னு விறுவிறு பாய்ச்சல்...அருமை அட்டகாசம் சார்

    ReplyDelete
  42. சிறுவயதில் பாக்கெட் சைஸ் படித்து இன்புற்ற போது நினைக்க வில்லை கையடக்க அலை பேசியில் வாட்சப் கம்னியூட்டி அளாவிட முடியும் என்று

    பல நாட்களின் தனிமையின் துணைவனாக இருந்தது லயன் காமிக்ஸ் முக்கியமாக லக்கி, டெக்ஸ்,

    2014 தான் நான் மீண்டும் காமிக்ஸ் புத்தங்களை பார்த்தேன், அப்போது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது☺☺☺

    Thank you so much for not giving up on comics and bringing joy to us

    ReplyDelete
  43. நிதிக்கு நீதி ...

    மீண்டும் ஓர் அட்டகாசமான டெக்ஸ் சாகஸம்...டெக்ஸ் கார்ஸன் உடன் இந்த முறை முக்கிய கதாபாத்திரத்தில் ஜட்ஜ் ராய்பீன்... டெக்ஸ்ன் குறுகிய சாகஸம் இது எனில் 85 ம் பக்கம் வரை ஒரு முழுநீள சாகஸமாக இந்த இதழை வாசிக்கலாம்...பின் அதன் தொடர்ச்சியான சாகஸத்தை அதன் பின்னாகவும் வாசிக்கலாம் போல் அமைந்த ஓர் பரபரவிறுவிறு சாகஸம் இந்த நிதிக்கு நீதி...வழக்கம் போல் டெக்ஸ்ன் இந்த சாகஸமும் பந்தய குதிரை போல் ஓடுகிறது ....இறுதி க்ளைமேக்ஸ் சமயம் ஒரு நிகழ்வு நடக்கும் காட்சியை கண்டு மனம் வருந்தியது கதையினை இப்படி இறுதியில் சோகமாக முடித்து விட்டார்களே என்று ...அதனை பற்றி இப்பொழுது எதுவும் நான் சொல்ல விரும்ப வில்லை ட்விஸ்ட் எது என்று அறியாத வாசிக்காத நண்பர்களுக்காக...பட் எப்பொழுதும் போல பட்டாஸாய் பரபரவென நம்மையும் பற்றி கொண்டு முழுவேகத்தில் செல்கிறது இந்த டெக்ஸ் சாகஸமும் என்பது நூறுசதவீதம் உறுதி...இந்த ஜட்ஜ் எங்கள் கார்ஸனையே தூக்கு மேடையில் மாட்ட வைத்தவரா ...இது எப்படி என இவர் பங்கு பெறும் அந்த முதல் சாகஸத்தை கொஞ்சம் விரைவில் கண்ணில் காட்டுங்கள் சார்..

    இந்த இதழில் ஓர் சிறு பிழை மட்டும் நெருடல்... 58 மற்றும் 59 ம் பக்கம் கிட்கார்ஸ்ன்..ராய்பீன் இருவரும் உரையாடி கொண்டு இருக்கும் காட்சியில் ராய்பீனை டெக்ஸ் என உரையாடியும் ....இந்த கிட்கார்ஸன் இருக்கும் வரை என சொல்ல வரும் இடத்தில் டெக்ஸ்வில்லர் இருக்கும் வரை என்றும் பெயர் இடம் மாறி உரையாடுவது ஓர் சிறு குறை ...சரி அதனை திருஷ்டி பொட்டாக கழித்து கொண்டு மீண்டும் ஓர் அட்டகாசமான டெக்ஸ் சாகஸத்தை அளித்ததற்கு மிக்க நன்றி சார்...

    மீண்டும் அடுத்த டெக்ஸ் சாகஸத்திற்காக ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. தலயின் தல கதை விமர்சனம் சூப்பர்

      Delete
  44. வணக்கம் குமாரு 😊

    ReplyDelete
    Replies
    1. சார் இன்று பதிவுக் கிழமை...

      Delete
    2. வணக்கம் பரணி

      Delete
  45. ஈரோடு புத்தக திருவிழா அறிவிப்புகள் .
    ஆவலுடன் வெய்ட்டிங்

    ReplyDelete
  46. Gen-z இந்த முறையும் தாத்தா பேத்தி என்னை மகிழ்வித்தார்கள்.
    குட்டி துப்பறியும் குழு வழக்கம் போல ஒரு ஆராச்சி, மகிழ்வு.

    இந்த முறை இரண்டு கதைகள் ஒரு புத்தகத்தில், எனவே ரொம்ப விரைவாக கதைகள் முடிந்து விட்டன; இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் 😃

    ReplyDelete
  47. *தி லக்கி லயன் ஸ்பெஷல்*

    அதிரடி கெளபாய்...காமெடி கெளபாய் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் நம்ம லக்கி கெளபாயை...இந்த முறையும் இந்த ஆண்டுமலரில் இரண்டு சாகஸங்களில் லக்கி பருமனாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி...எப்பொழுதும்இரு லக்கி சாகஸங்கள் வரும் பொழுது சமீப படைப்புகளை விட பழமையான லக்கி சாகஸங்களே எப்பொழுதும் முதலிடத்தை பெறும்.. இந்த முறை இரு சாகஸங்களுமே ஓகே என்றாலும் அப்பொழுதைய சாகஸத்தை விட சமீப சாகஸமே கதையிலுமே சரி..காமெடியிலும் சரி ..அதிரடியிலும் சரி அட்டகாசபடுத்தி விட்டது...அதிலும் லக்கியின் பேமஸ் வில்லன்கள் பொடியன் பில்லி..டால்டன் சகோதரர்கள் மட்டுமல்ல கெளரவே வேடத்தில் வந்த ஜெஸ்லிஜேம்ஸ் (?) அனைவரும் லக்கியுடன் இணைந்து கலக்கி எடுத்து விட்டார்கள்... பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்ததுடன் நீண்ட நாட்கள் கழித்து தன் நிழலை விட வேகமாக சுடும் துப்பாக்கி வீரனையும் சந்தித்ததில் மகிழ்வே இந்த முறை ஓல்ட் இஸ் கோல்ட் என்பதை விட நியூ இஸ் கோல்ட் என்பது தான் சிறப்பு..

    மொத்தத்தில் இந்த வருட ஆண்டுமலரும் வழக்கமான சிறப்பான இதழ்...

    ReplyDelete