நண்பர்களே,
வணக்கம். ஒரு தெறி பிஸி அக்டோபர் கூப்பிடு தொலைவில் காத்திருக்க இப்போவே பேஸ்மெண்டெல்லாம் டான்ஸ் ஆடத் தொடங்கியாச்சு! இன்னான்றீங்களா?
- 440 பக்கங்களுக்கு டெக்ஸ் தீபாவளி மலர் ‘24!
- 104 கலர் பக்கங்களில் வேட்டையன் ஜாரோப்புடன் முத்து காமிக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ‘24!
- 192 பக்கங்களில் மிஸ்டர் நோவுடன் நம்ம V காமிக்ஸின் தீபாவளி மலர்!
ஆக 736 பக்கங்களின் பணியானது “ரா...ரா... சரசுக்கு ரா... ரா...” என்று மிரட்டலாய் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது! And இதிலொரு அழகான பின்புல ஒற்றுமையும் இல்லாதில்லை!
நமது தற்போதைய மொழிபெயர்ப்பு டீமில் ஒன்றுக்கு, மூன்றாய் செம fresh யுவதிகள் இடம்பிடித்திருக்கின்றனர்! ஓசையின்றி எக்கச்சக்கமான பின்புலப் பயிற்சிகளுக்குப் பின்பாய் இந்த மூவரணி நமக்காக இப்போது பேனா பிடித்து வருகின்றனர்! Of course “பூ“ என்று அவர்கள் எழுதியிருப்பதை “புய்ப்பம்” என்று திருத்தி எழுதும் எனது திருகுதாளங்களும் உண்டு தான் ; இன்னமும் கணிசமான திருத்தங்களின்றி அவர்களது ஸ்கிரிப்ட்களைக் களமிறக்கச் சாத்தியமில்லை தான்! ஆனால் துள்ளிக் குதித்து வரும் நம்ம “இயமை” நிரந்தரமானதல்ல எனும் போது, ஒரு backup டீமை தயார் பண்ணிடும் அவசியம் ஜிங்கு ஜிங்கென்று முன்னே நின்று டான்ஸ் ஆடி வருகிறது! And மேலே நான் குறிப்பட்டுள்ள 3 தீபாவளி மலர்களும், ஒவ்வொரு அம்மணியின் கைவண்ணமென்பதால் அவற்றுள் புகுந்திட செம ஆர்வமாய் வெயிட்டிங்!
அதுவும் அந்த டெக்ஸ் 4 பாக மெகா சாகஸமானது இப்போது நமக்கு நிரம்பவே பரிச்சயமாகிப் போயிருக்கும் எஸ்கிமோக்களின் இன்யூட் பூமியில் அரங்கேறிடும் த்ரில்லர்! இந்த 4 பாகங்களுக்கும் 4 தெறி அட்டைப்படங்கள் ஒரிஜினலில் போனெலி போட்டுத் தாக்கியிருக்க, அவற்றில் எதையுமே ஓரம்கட்ட மனசு கேட்கவில்லை! So நான் முன்னே குறிப்பிட்ட economy slipcase இந்த நவம்பரில் டெக்ஸுடன் களம் காண்கிறது! 224 பக்கங்கள் வீதம் 2 ஆல்பங்கள் & அவற்றை இந்த slip case-க்குள் வைத்து compact ஆக வழங்கவிருப்பதால் - ஆல்பங்களின் முன்னட்டைகளில் தலா 2 டிசைன்கள் + ஸ்லிப் கேஸின் front & back-ல் 2 டிசைன்கள் - என 4 போனெலி ராப்பர்களையும் உங்கள் கண்முன்னே படைத்த திருப்தி கிட்டிடும் என்பதே திட்டமிடல்!
மற்ற கதைகளுக்குக் கூட மகளிரணி பேனா பிடித்து விடலாம் தான்; ஆனால் ‘தல‘ சாகஸங்களுக்கு அது அத்தனை சுலபச் சமாச்சாரமே நஹி! So டெக்ஸுக்கெனவே பிரத்தியேகமாய் ஒருத்தரை earmark செய்து - கிட்டத்தட்ட 40 டெக்ஸ் கதைகளை வாசிக்கும் அவசியத்தை அவருக்கு ஏற்படுத்தினேன்! “இவரு அவருக்கு தோஸ்த் ; அவரு இவருக்கு மச்சான் முறை... அந்தாளுக்கு, இந்தாளு சித்தப்பு!... So அவுக இப்படிப் பேசிக்கணும்; இவுக அப்படிக் கதைச்சிக்கணும்” என்று கிட்டத்தட்ட முக்கால் வருஷத்துக்குப் பாடமெடுத்து பாடாய்ப்படுத்தி எடுக்க - சகலத்துக்கும் எவ்வித எரிச்சலின்றி தலையாட்டினார். அதே சமயம் அவரவரது ஒரிஜினல் எழுத்து பாணிகளுக்கு தடா போட்டுப்புட்டால், அம்புட்டுப் பேரும் எனது clone-களாக மாறி - “புளகாங்கிதம் அடைந்தார்; “புழுக்கடிக்கு சொறிஞ்சார் என்று ஒரேமாதிரி எழுத ஆரம்பித்து விடுவரோ என்ற பயமும் இருந்தது! So அந்தந்தக் கதைகள் / நாயகர்கள் / தொடர்களுக்கென, நாம் இது நாள் வரை set செய்து வைத்திருக்கும் template-களை மதித்திடும் அவசியங்களை மட்டும் வலியுறுத்தினேன்! And here we are!!
இந்தப் பயிற்சிப் பட்டறைகளின் பலனே போன மாதத்து டிடெக்டிவ் ரூபின் சாகஸத்தின் மொழிபெயர்ப்பு! ஒரு லேடி ஈரோயினிக்கு ஈ குஞ்சாகோபன் அவ்வை ஷண்முகயியாய் மாறி, பேனா பிடிப்பதைக் காட்டிலும் ஒரு ஒரிஜினல் ஸ்தீரியே பேனா பிடித்தால், வல்லியதொரு ஸ்க்ரிப்ட் சாத்தியமாகிடும் என்ற எண்ட சொப்பனம் மெய்யாகிப் போயீ! So வரும் நாட்களில் lady power புதுப்புது வாசிப்பு அனுபவங்களை - எனது திருத்தங்களுக்கு அவசியங்களின்றிப் படைக்கச் செய்தால் , ஞான் சிறப்பாய் ரண்டு நாட்களுக்கொரு ரீல்ஸ் போட்டுக்கினே குஜாலாய் பொழுதுகளை நகர்த்தும்! எண்ட குருவாயூரப்பா... ஆ நாள் சீக்கிரமே புலரட்டும்!
டெக்ஸின் அடுத்த மாத சாகஸம் காத்திருப்பது எஸ்கிமோ பூமியில் என்றால் - இதோ அக்டோபரிலேயே நம்மை அந்தப் பனிபடர்ந்த பூமிக்கு இட்டுச் செல்ல கமாண்டர் ப்ரூனோ ப்ரேஸில் தனது 2.0 அவதாரில் காத்திருக்கிறார்! முதல் சுற்றிலான ப்ரூனோ ப்ரேஸில் கதைகள் உருவாக்கப்பட்டது ஜாம்பவான் ஜோடியான Greg & Vance-ன் கைவண்ணங்களில் தான்! And நிஜத்தைச் சொல்வதானால் - இந்தத் தொடர் அந்நாட்களில் பதிப்புலகையும், வெள்ளித்திரைகளையும் ஆண்டு கொண்டிருந்த ஜேம்ஸ் பாண்ட் 007-ன் ஒரு பாலிஷான வார்ப்பே! ஸ்டைலிஷான ஒரு நாயகர்; சும்மா பந்தாவான கோட்-சூட் என்று முதல் ஆல்பத்தில் வலம் வந்த ப்ரூனோ, தொடர்ந்த ஆல்பங்களில், முதலைப்பட்டாளத்தின் இதர அங்கத்தினர்களையும் இணைத்துக் கொண்டார்! இந்தக் கதைகள் ஒரிஜினலாய் உருவான 1967-ல் - அமெரிக்கா தான் உலகத்தின் மேய்ப்பராக அம்புட்டுப் பொழுதுபோக்கு ஊடகங்களிலும் சித்தரிக்கப்பட்டு வந்தனர். ரஷ்யர்கள், மற்றும் கம்யூனிஸ்ட் தேசங்கள் சகலமும், லோகத்தை நாசம் பண்ணப் பிறந்தோர் என்பதாகவும், அமெரிக்க இரகசிய ஏஜெண்ட்கள் தான் பூமியையே உருப்படியாய் சுழலச் செய்து கொண்டிருந்தனர் என்பதாகவும் படங்கள், நாவல்கள், காமிக்ஸ்கள் ரவுண்டு கட்டி அடித்து வந்தன! அந்தக் காலகட்டத்தின் உலக அரசியல் அரங்கிலும் Cold War ஒரு அதிமுக்கிய அம்சமாக இருந்து வந்ததால் - மேற்கத்திய வாசகர்கள் இந்த மாதிரியான படைப்புகளை செம ஆர்வமாய் ரசித்து வந்தனர். So அந்த நாட்களின் வெற்றிக்கான formula-வினை கதாசிரியர் Greg-ம் கையிலெடுத்திருந்தார் - ப்ரூனோ ப்ரேசில் தொடரின் வாயிலாக! 1969-ல் முதல் ஆல்பம்; 1971-ல் இரண்டாவது; அதன் பின்பாக 1977 வரைக்கும், ஆண்டுக்கொரு ஆல்பம் என வெளிவந்து கொண்டிருந்த தொடரானது ‘பச்சக்‘ என அத்தோடு படுத்து விட்டது! அதன் பின்பாய் 1995ல் ஒரேயொரு ஆல்பம் & அதன் பின்னர் பரணே ஜாகையாகியிருந்தது - முதலைப்பட்டாளத்துக்கு!
ஆனால் க்ளாஸிக் நாயகர்களுக்கு ஒரு புது லுக் தந்திடும் முனைப்பு வேகமெடுத்த போது முதலைப்பட்டாளம் 2.0 சாத்தியமானது! 2019-ல் இந்த முயற்சி ஒரு டபுள் ஆல்பத்தோடு துவங்கிட ; அதற்குப் பின்பாக ஒரு ஒன்-ஷாட் 2022-ல் வெளிவந்தது! இதோ அக்டோபரில் நீங்கள் வாசிக்கவிருப்பது அந்த ஒன்-ஷாட் தான்!
“பனிக்கடலில் முதலைகள்” ஒரு புத்தம்புது கிரேட்டிவ் டீமின் கதை / சித்திரம் / கலரிங்கில் அனல்பறக்கச் செய்திடுகிறது - வடதுருவத்துப் பனிப்பூமியில்! இங்கே நாயகர்கள் / நாயகியர் அனைவருக்குமே வயது முதிர்ந்து இருப்பதாய், தயக்கமின்றிக் காட்டிடத் திட்டமிட்டுள்ள கதாசிரியர் பாராட்டுக்கு உரியவர். அது மட்டுமன்றி ப்ரூனோவுக்கு ஒரு சராசரி மனிதனைப் போலான மெல்லிய உணர்வுகள்; சுக-துக்கங்கள் இருப்பதையும் அழகாய் கதையின் இறுதியில் உட்புகுத்தியுள்ளார்! சித்திரங்களோ முற்றிலும் வேறொரு லெவல்! பனிபூமியும் சரி, அந்த வனாந்திரங்களின் எழிலும் சரி, பனிக்கரடிகளின் மிரட்டலும் சரி - ஓவியர் + கலரிங் ஆர்டிஸ்டின் கைவண்ணங்களில் அதகளம் செய்கின்றன! So ரூ.135 விலைக்கு ஒரு ஆர்டிக் துருவப் பயணச்சீட்டு ரெடி ! இதோ - ஒரிஜினல் ராப்பர் + உட்பக்க previews!! அக்டோபரின் தவறவிடக்கூடாத இதழ்களுள் இதற்கு நிச்சயம் இடமுண்டு என்பேன்!
And மாதத்தின் இறுதி இதழாக இடம்பிடித்திட வேண்டிய ஸ்டெர்னின் “மாயா... எல்லாம் மாயா...” அந்த “மிஸ் பண்ணலாகாது” லிஸ்டில் இடம்பிடிக்கப் போகும் இன்னொரு இதழும் கூட ! இதோ - ஒரு மென்சோகம் நூலிழையாய் இழையோடும் நாயகர் ஸ்டெர்னை ஒரு அட்டகாசமான அட்டைப்படத்தில் ரசித்திடுவோமா? ஒரிஜினல் அட்டையே - நமது மெருகூட்டலுடன்!
கதையைப் பொறுத்தவரை இது நிகழ்வது நியூ ஆர்லியன்ஸ் நகரினில்! அது ஊடூ சூன்யங்களுக்கு பெயர் போன நகரம் எனும் போது, இந்த ஆல்பத்திலும் அதன் தாக்கத்தினைக் கண்டிட இயலும்! தனிமையில் உழன்று வரும் நம்மாளுக்கு ரம்யமாய் ஒரு தோழி இங்கு கிட்டிட, சுறுசுறுப்பாய் மனுஷன் சுற்றி வருகிறார்! நிஜத்தைச் சொல்வதானால் - இந்த வாரத்தின் நடுவாக்கில், அம்மாவின் முதலாண்டு நினைவு நாள் வந்திட்டதால் ரெண்டு நாட்களுக்கு அதனில் பிசியாகிப் போனேன்! And வார இறுதியினில் வெளியூர் பயணம் என்பதாலும் ஸ்டெர்னின் பணிகளை இன்னமும் முடித்தபாடில்லை! கையோடு பக்கங்களையும் கொண்டு வந்திருப்பதால் குட்டிக்கரணம் அடித்தேனும், மொழிபெயர்ப்பினை பூர்த்தி செய்திட வேண்டும். நான் முடித்துத் தந்தால் மீதப் பணிகள் முற்றிலுமாய் மூன்றே நாட்களில் நிறைவு கண்டிடும்! ஜெய் பாகுபலி 💪!
Before I wind up, சிம்பிளான கேள்விகள் :
1.அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ?
2.ப்ருனோ பிரேஸில்!! இவரை மெய்யாலுமே நினைவுள்ளதா உங்களுக்கு?
3.ஸ்டெர்ன் : இவரது கி. நா. வினை வாங்குவீர்களா? வாசிப்பீர்களா?
திருச்சியில் புத்தகவிழா அட்டகாசமாய் ஓடிக்கொண்டுள்ளது and நமது ஸ்டால் நம்பர் : 60. அந்தப் பகுதி நண்பர்கள் ஒரு விசிட் அடிக்க இயன்றால் சூப்பர் 🔥🔥!!
Bye all... See you around! Have a lovely weekend!