Wednesday, July 31, 2024

காலை எழுந்தவுடன் காமிக்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். பெல்ஜியத்து ஜாம்பவான்கள் கிளம்பி விட்டார்கள் - ஆகஸ்ட்டின் முதல் தேதிக்கு உங்களது இல்லக்கதவுகளையும், உள்ளக்கதவுகளையும் தட்டிட ! 2 பாக டின்டின் ஆல்பங்களுக்குத் துணையாக தாத்தாஸ் கூட்டணியும்,  வேதாள மாயாத்மாவும் உடன் பயணித்து வருகின்றனர் ! And விலையில்லா மினி டெக்ஸ் கலர் இதழும் கொசுறாய் ஒட்டிக் கொண்டு வருகிறது - ஆகஸ்ட் ஒரு 'தல'யில்லா மாதம் என்ற முத்திரையைத் தவிர்த்திட ! So ஈரோட்டுக்குப் பயணங்களைத் துவக்கும் முன்பாகவே ரெகுலர் சந்தா இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடுமென்று நம்பலாம் ! ஜெய் proffesional கூரியர் !!

ஆன்லைன் லிஸ்டிங்கும் போட்டாச்சு - ஆகஸ்ட் pack ஆகவும், தனித்தனி இதழ்களாகவும் ! Please note : டின்டின் ஒரு டபுள் அத்தியாய சாகசம்  என்பதால், இரு புக்ஸும் சேர்ந்தே விற்பனைக்குக் கிட்டிடும் ! ஆகையால், அவற்றை தனித்தனியாய் ஆர்டர் செய்திட மெனெக்கெட வேணாமே - ப்ளீஸ் ! காலையில் புக்ஸ் கைக்கு வந்தான பின்னே, முதல் பார்வை ரேட்டிங்ஸ் போட மறவாதீர் folks ! 'முதல் பார்வை என்ன - படிச்சு, விமர்சனத்தையே போட்டுப்புடலாம் !' எனும் மிஷின்கன் வாசகர்கள் more than welcome !! டின்டின் பற்றிய உங்களின் எண்ணங்களையும், தாத்தாக்களின் மீதான உங்களின் தீர்ப்பினையும், செம ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம் !! ஓடின் தேவனே....காத்தருள்வீராக !!

தூரத்தில் சிறு புள்ளியாய் காத்திருந்த ஈரோட்டு விழாவானது, இதோ இந்த வாரயிறுதி என்று பிரம்மாண்டமாய் எதிர்நோக்கிக் காத்து நிற்கின்றது ! "டீம் ஈரோடு" கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு மஞ்சள் மாநகரை தெறிக்க விட்டு வருகின்றனர் ! இதோ - அவர்களின் கைவண்ணத்தில் ஹாலிவுட்டுக்கு இல்லாங்காட்டியும், கோலிவுட்டுக்கு இல்லாங்காட்டியும், ஜாலிவுட்டுக்கு போட்டியாய் உருவாகியுள்ளதொரு குறும்பட teaser ! மீதம் வெள்ளித்திரையில் - ஞாயிறன்று !! ஜிவாஜி சார் ரேஞ்சுக்கும், பத்தமினிம்மா ரேஞ்சுக்கும் நம்மவர்கள் பிழிந்துள்ள நடிப்பு ரசத்தை சுவைத்திட செம ஆர்வமாய் வெயிட்டிங்க்க்க் ! மறக்காம நீங்களும் வந்திடுங்கோ folks !!

https://www.youtube.com/watch?v=4XGpCmFJE_I

இந்த தபா "see you around folks" என்பதற்குப் பதிலாக, "see you in Erode folks " என்றபடிக்கே நடையைக் காட்டுகிறேன் ! இந்த வாரயிறுதி மகிழ்வும், ஒற்றுமையும், காமிக்ஸ் நேசமும் பிரவாகமெடுக்கும் ஒரு அற்புதப் பொழுதாய் அமைந்திட சகல தெய்வங்களும் அருள் பாலிப்பார்களாக !! God be with us all !!

Saturday, July 27, 2024

அண்மையில் ஆகஸ்ட் !

நண்பர்களே,

வணக்கம். எட்டித் தொடும் அண்மையில் ஆகஸ்டும் காத்திருக்க, நமது ஜாம்பவான்கள் களமிறங்க வேண்டிய வேளையும் நெருங்கி விட்டது! நான் குறிப்பிடும் ஜாம்பவான்களோ – கலர்-கலரான டி-ஷர்ட்டுகளை மாட்டிக் கொண்டு கைகளில் க்ரிக்கெட் மட்டைகளை ஏந்தி நிற்கும் வாசக வீரர்களல்ல – நமது ‘பொம்ம புக்‘ அணிவகுப்பின் ஜாம்பவான்களே! So அடுத்த சில நாட்களிலேயே உங்களை சந்திக்கக் காத்திருப்போருக்கு ‘ஹலோ‘ சொல்வோமா? Here they are: 

டின்டின் & கேப்டன்  ஹேடாக்

வேதாளர்

தாத்தாஸ் 

டின்டின் பற்றியும், அவரது தயாரிப்பின் பின்னணிகள் பற்றியும் ஏகமாய் ஜனவரியிலேயே எழுதியிருந்தேன்! So புதுசாய் "நான் ஏழு மலைகளை ஏறினேன்; ஏழு சமுத்திரங்களைத் தாண்டினேன்" என்றெல்லாம் இன்னொரு தபா அள்ளி விடமாட்டேன்! நிஜத்தைச் சொல்வதானால் – நம்ம கார்த்திக் சோமலிங்காவோடு முதல் டின்டின் இதழின் முஸ்தீபுகளின் சமயத்தில் செய்த பணிகள் இன்றைக்கும் கைகொடுத்து வருகின்றன! Oh yes – “மீன்கள் விற்கப்படும்” என்ற ரேஞ்சுக்கு கார்த்திக் suggest செய்திருந்த பலவற்றை “காயாத கானகத்தே, நின்றுலாவும் காரிகையே” – இங்கே நயமான நெய் மீன்கள் நித்தமும் கிடைக்கும்” என்ற ரேஞ்சுக்கு நான் tweak பண்ணியிருந்தேன் தான்! But 'தத்தாபுத்தா'வென்றேனும் டின்டினுக்கான வசன பாணி template-ஐ  செட் பண்ணிட சாத்தியமாகி, படைப்பாளிகளிடமும் உங்களிடமும் ஏற்கனவே ஓ.கே. வாங்கிட்டதால், டின்டின் எக்ஸ்பிரஸ் இந்தவாட்டி தடையின்றித் தடதடத்து விட்டது! 

And மெர்சலூட்டும் அந்த கதைக்களம் எனது வேலையை ரொம்பவே சுலபமாக்கி விட்டதையும் சொல்லியே தீரணும்! டின்டின் தொடரின் டாப் சாகஸங்களுள் மிக முக்கியமானவை நாம் ஆகஸ்டில் ரசித்திடவிருக்கும் டபுள் ஆல்பங்கள் என்று சொல்லலாம்! எங்களது ஸ்கூல் லைப்ரரியில் அநேகமாக இந்த 2 புக்குகளுமே எனது கைரேகைகள் பட்டு ஓடாய்த் தேயாத குறை தான்! கணக்கே இராது – இவற்றை நானும் சரி, எனது நண்பர்களும் சரி – படித்து ரசித்த தடவைகளுக்கு! So ஒரு iconic தொடரின் iconic கதைகளைக் கையிலெடுக்கும் போது, மொழிபெயர்ப்பாளரின் பணி அந்தமட்டிற்கு சுலபமாகிப் போகிறது!

டின்டின் கதைகளின் அடிநாதமே அவருக்கும், கேப்டன் ஹேடாக்குக்கும், புரபஸர் கேல்குலஸுக்கும், நாலுகால் தோழன் ஸ்நோயிக்கும் இடையிலான நட்பு தான்! And இந்த டபுள் ஆல்பத்திலும் அதுவே அழுத்தமான முக்கியத்துவம் பெறுகிறது! காணாமல் போகும் புரபஸரைத் தேடி, காடு, மேடு, கானகம், பனி மண்டலம் என வெறித்தனமாய் தேடல் அரங்கேறுகிறது! போனவாட்டி திபெத்திலும், நேபாளத்திலும் நம்மவர்கள் சுற்றியலைந்தனர் என்றால் – இம்முறையோ களம் தென்னமெரிக்காவின் இன்கா பூமியில்! கொஞ்சம் மாந்த்ரீகம்; கொஞ்சம் வரலாறு; கொஞ்சம் இங்கிலாந்தில்; அப்புறம் முழுசாய் தென்னமெரிக்காவில்; என்று தடதடக்கிறது இந்த 124 பக்க சாகஸப் பயணம். கேப்டன் ஹேடாக் வழக்கம் போலவே தெறிக்க விட, டிடெக்டிவ் இரட்டையரான தாம்ஸனும், தாம்ப்னும் தம் பங்கிற்கு கிச்சுக்கிச்சு மூட்டுகின்றனர். ஆக்ஷனுக்கும், ஜாலியான கதையோட்டத்துக்கும் மத்தியில் ஒரு டைட்டான, த்ரில்லராய் கதை நகர்த்தலை அமரர் ஹெர்ஜ் செய்திருப்பது தான் இங்கே highlight!

ஒரிஜினலைப் போலவே இரட்டை ஆல்பங்களாய், ஒரிஜினலின் அதே அட்டைப்படங்களோடு, அதே பக்க அமைப்புகளோடு, இம்மி கூட வேற்று சமாச்சாரங்களுக்கு இடமின்றி இந்த இரு ஆல்பங்களும் வந்திடவுள்ளன! And போன இதழைப் போலவே தயாரிப்புத் தரமும் இருந்திடும் - அதே பெங்களூரு ஏற்றுமதிக் குழுமத்தின் கைவண்ணத்தோடு! இந்தவாட்டி கிட்டத்தட்ட 2 மாதங்களாகிப் போச்சு - அவர்கள் ப்ராசசிங் & அச்சை முடித்து, முழுவதுமாய் மிஷினில் பைண்ட் செய்து புக்ஸை மொத்தமாய் சப்ளை செய்வதற்கு! And போன தடவையைக் காட்டிலும் கட்டணங்கள் சற்றே உசந்தும் போயிருக்கின்றன! Yet, கைகளில் ஏந்தும் போது, உணர முடியும் கெத்து, அந்தக் காசுக்கு நியாயம் செய்வதாய் சொல்கிறது! Fingers crossed - உங்களுக்குமே அதே திருப்தி கிட்டிட! இதோ - அட்டைப்பட previews & உட்பக்க ட்ரெய்லர்கள்:




ஆகஸ்டின் all-color மேளா மாதத்தினை வித்தியாசமானதொரு பாணியில் பட்டாசாய்ப் பொறியச் செய்யவிருப்பது ஏற்கனவே நாம் பிரிவியூ செய்து விட்ட நம்மள் கி தாத்தாஸ் தான்! லயன் கிராபிக் நாவல் தடத்தின் இதழிது என்பதால் நீங்கள் அதற்கும் சேர்த்தான சந்தா செலுத்தியிருக்கும் பட்சத்தில் பெருசுகளின் yet another ராவடியை ராவாக ரசித்திடலாம்! தொடரின் முதல் மூன்று ஆல்பங்கள் - தலா ஒவ்வொரு தாத்தாவினை மையப்படுத்திப் பயணித்தன என்றால் - இந்த நான்காம் ஆல்பத்தில் focus இருப்பது பேத்தி ஸோஃபி மீது! By now, இந்தத் தொடரின் ‘போட்டுத் தாக்கு‘ வசன பாணிக்கு நாம் பரிச்சயமாகியிருப்போம் என்பதால் பெரிய புருவ உயர்த்தல்களின்றி பயணித்திடலாம் என்பேன்! Can't wait for தாத்தாஸ் to reach you! சின்னதொரு reminder yet again guys: முந்தையை 3 ஆல்பங்களையும் ஒருக்கா புரட்டி விட்டு இந்த ஆல்பம் # 4-க்குள் புகுந்திட்டால் நலம்!

ஆகஸ்டின் V காமிக்ஸில் வரவிருப்பவர் வேதாளர். Sy Barry-ன் அட்டகாசமான கைவண்ணத்தில் உருவானதொரு சாகஸமான “அதிர்ஷ்டத்தைத் தேடி” முழு வண்ணத்தில் வரவிருக்கிறது! And இம்முறை கலரிங் பொறுப்புகளை ஏற்கனவே வேதாளர் கதைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டதொரு வடஇந்திய டிஜிட்டல் ஆர்டிஸ்ட் கையாண்டுள்ளார். இதோ - அட்டைப்பட preview ! 

உட்பக்க கோப்புகளை கேட்டு வாங்க மறந்துப்புட்டேன் ; நாளை இங்கே upload செய்து விடுகிறேன் !! 

புக்ஸ் சகலமும் அச்சாகி விட்டன! In fact டின்டின் புக்ஸ் டப்பிகளில் டெலிவரியாகி, ஒரு வாரத்துக்கு மேலாச்சி. தாத்தாக்களும் ரெடி! வேதாளர் மாத்திரம் பைண்டிங்கில் உள்ளார்! அவரும், விலையில்லா ஒரு டெக்ஸ் 32 பக்க கலர் இதழும் பைண்டிங் முடிந்து செவ்வாய் மாலை நம்மிடம் வந்து சேர்ந்திடும் & புதனன்று இங்கிருந்து புறப்பட்டு விடும். So ஆகஸ்ட் முதல் தேதிக்கு இந்தப் புது இதழ் கத்தை உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்று திட்டமிடல்! PLEASE NOTE : சந்தாப் பிரதிகளை ஈரோட்டுக்கு கொண்டு வருவதாக திட்டமிடல் நஹி ! So "என்னோட பொஸ்தவங்களை அங்கே வாங்கிக்கிறேன் !" என்ற கோரிக்கைகள் வேணாமே - ப்ளீஸ் !

ஆகஸ்ட் பிறந்த மறுநாளே, ஈரோட்டு புத்தக விழா துவங்கவிருப்பதும், அதைத் தொடர்ந்த வாரயிறுதினில் நமது ஈரோட்டுச் சந்திப்பும் காத்திருப்பதால் நம்மாட்கள் அனைவரும் பம்பரமாய் சுற்றிக் கொண்டுள்ளனர். டீம் ஈரோடும் அங்கே ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டுள்ளனர் - தங்களது சொந்த வேலைகளையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டு! 

And ”ஈரோட்டுக்கு வாரீகளா?” என்ற வினவலுக்கு "Oh yes" என்று கிட்டத்தட்ட 245 நண்பர்கள் பதில் தந்துள்ளனர். போன தபா சுமார் 175 பேர் வருகை தந்திருந்ததே ஒரு திருவிழா feeling ஏற்படுத்தியிருந்தது; இம்முறை அந்த நம்பரை ஆராமாய் விஞ்சிடல் சாத்தியம் போல் தென்படுவதால், அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் குத்துடான்ஸ் போட்டு வருகின்றன! சகல ஏற்பாடுகளும் கச்சிதமாய் அமைந்து அன்றைய பொழுதில் நம் அனைவருக்குமே மகிழ்ச்சி பிரவாகமெடுக்க பெரும் தேவன் மனிடோவும், ஓடினும் அருள்புரிவாராக! 

நான் மறந்துவிடும் முன்பாக இங்கொரு interlude: "ஈரோடு ஸ்பெஷல்ஸ்" என இரண்டே இதழ்கள்தான் வெளிவருகின்றன:

- மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 2 : ரூ.450

- ஸ்பைடர் Vs ஆர்ச்சி ஸ்பெஷல் : ரூ.80

இரண்டுமே ஈரோட்டு சந்திப்பன்று (ஞாயிறு - ஆகஸ்ட் 4) Hotel Oasis அரங்கிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். So வருகை தர எண்ணியுள்ள நண்பர்கள் கூரியர்களுக்கு தண்டம் அழத் தேவையின்றி, நேரில் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு அவை தேவையெனில் இங்கோ, நமது அலுவலக வாட்சப் நம்பருக்கோ - "1 செட்" என்றொரு confirmation மட்டும் செய்திடக் கோருகிறேன் ! அதற்கேற்பவே புக்ஸை கொண்டு வருவதாக உள்ளோம் !

ஈரோடு வந்திட இயலா நண்பர்கள் கூரியர் கட்டணமாய் ரூ.60 (தமிழகம்) சேர்த்து ரூ.590 அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். வெளி மாநிலமெனில் ரூ.90/- கூரியர் !

Before I sign out - கோவை புத்தக விழா சார்ந்த news !! வாரநாட்களில் அத்தனை விறுவிறுப்பு இல்லது போக, கொஞ்சமாய் பேஸ்தடித்திருந்தது சேல்ஸ் ! ஆனால் வாரயிறுதியில் அனல் பறக்கும் விற்பனை செமத்தியாக கைதூக்கி விட்டுள்ளது ! கடைசி நாளான நாளைக்கும் அதே வேகம் இருக்கும் பட்சத்தில் போன வருஷத்து ரெக்கார்டை சமன் செய்திடலோ, விஞ்சுவதோ சாத்தியமாகிடும் !! Fingers Crossed கோவை மக்கா ! 

ரைட்டு...2025 அட்டவணையினில் பெயர் சூட்டும் படலம் ஓடிக்கொண்டிருப்பதால், அதனைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் ! 

"உதிரம் பொழியும் நிலவே !"

"இளமை எனும் பூங்காற்று...!!" - 

இவையெல்லாம் டெக்சின் தலைப்புகள் !! நம்பவாச்சும் முடியுதா ?

Bye all....have a cool weekend !! See you around !

Saturday, July 20, 2024

நெருங்குது ஈரோடு!

 நண்பர்களே,

வணக்கம். “விஷம்“ தவணை முறையில் பருக சுகப்படாதென்பதை ‘பளிச்‘சென்று சொல்லி விட்டீர்கள்! அடிக்கப் போவது ஒரே ‘கல்ப்‘பிலோ; சாவகாசமாகவோ ; மாமாங்கம் கழித்தோ - ஆனால் ‘ஏக் தம்மில்‘ பரிமாறியே தீரணும் என்ற உங்களின் அவா loud and clear ஆகி காதில் விழுகிறது! இங்கே எனக்கொரு மாளா வியப்பு நூத்திச் சொச்சமாவது தபாவாக எழுவதைத் தவிர்க்க இயலவில்லை! And அது தான் - ஐரோப்பிய ரசிகர்களுக்கும், நமக்கும் மத்தியிலான வேற்றுமைகள்!

- உள்ளதைச் சொல்வதானால் “விஷம்“ உரிமைகளுக்கு நாம் துண்டை விரித்து வைத்தது சமீபத்திலெல்லாம் நஹி! 2018-ன் இறுதியிலேயே “இந்தக் கதைக்கான உரிமைகள் வேணுமுங்கோ!” என்று மின்கடுதாசி தட்டி விட்டிருந்தோம். தொடர்ந்த வாரத்தில் அதற்கான ஒப்புதலோடு, கான்டிராக்டும் வந்த போது தான் ஜெர்க் அடித்தேன் - becos நான் நினைத்துக் கொண்டிருந்ததோ இதுவொரு one-shot என்று! ஆனால் காண்டிராக்ட் 5 அத்தியாயங்களுக்கும் சேர்த்து இருந்தது! அந்த நொடியில் தான் எனக்கே தெரிய வந்தது – இது நீண்டு ஓடப் போகும் ரயில் வண்டியென்பது!

- So “தொடர் முடியட்டும்; அப்புறமாய் பேசிக்குவோம்” என்று அன்றைக்கு தீர்மானித்திருந்தோம்! And இதோ – கண்மூடித் திறப்பதற்குள் 5 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன!

- ஆக ப்ரெஞ்சில் – முழுசாய் ஐந்து வருடங்கள் காத்திருந்திருக்கின்றனர் – விஷத்தை நிதானமாய் உருவாக்கிடும் வரையிலும்! பாகம் - பாகமாய்; ஆண்டாண்டாய் வாசிப்பதிலும் – சுவாரஸ்யங்களைத் தங்கச் செய்ய அவர்களுக்கு சாத்தியாமிடுகிறது! அந்தப் பொறுமை நமக்கெல்லாம் எட்டாக்கனியாய் இருப்பது தான் சிக்கலே!

- இத்தாலியில் கூட டெக்ஸின் சில மெகா நீள சாகஸங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ஓட்டமெடுத்தாலுமே மூன்றோ – நான்கோ மாதங்கள் நீள்வதும் உண்டு! பட்டாசாய்ப் பரபரக்கும் ஒரு ஆல்பத்தக்கு திடுமென “தொடரும்” போடும் போது, அந்த வாசகர்கள் எவ்விதம் சமாளிக்கிறார்கள் என்பது தான் Million Euro கேள்வியே!

- அட, லார்கோ போலான high voltage ஆல்பங்களில் கூட காத்திருப்பு ஒரு தொடர்கதையே! முதல் பாகம் வெளியான 18-24 மாதங்கள் கழித்தே க்ளைமேக்ஸ் ரெடியாகிறது! அத்தினி மாதங்கள் கழியும் போது முதல் அத்தியாயமே நமக்கெல்லாம் மறந்து போயிருக்கும்! But அங்குள்ள மக்கள் சமாளிப்பது எவ்விதமோ - அறியில்லா!!

எது எப்படியோ – நமது பாணி நமக்கே நமக்கானது என்பதால், உங்களது தீர்ப்பே இந்த காமிக்ஸ் அரசாணையாகிறது!

- So “விஷம்” ஒரே சமயத்தில் 5 பாகங்களுடனும் வெளிவந்திடும்!

- 5 தனித்தனி இதழ்களாகவே – ஒரு ஸ்லிப் கேஸில் இடம்பிடித்திடும்!

- “இரத்தப்படலம்” கலர் தொகுப்புகளுக்குத் தந்தது போலான slipcases இப்போதெல்லாம் நெருக்கி ரூ.100 விலையாகிடுவதால் – அத்தனை பணத்தை விரயம் செய்திடாது, economy case-களில் தந்திடத் திட்டமிடுகிறோம்.

- கூடிய சீக்கிரமே அந்த economy case-க்கு ஒரு வெள்ளோட்டமும் பார்த்திடவுள்ளீர்கள்! So அதன் பின்பாய் ”விஷம்” சார்ந்த planning அறிவிக்கப்படும்.

- ‘இல்லேடா தம்பி... எனக்கு ஸ்லிப்லாம் ஆகாது....அப்புறமா கேசு..கோர்ட்டும் புடிக்காது ; so நான் மஞ்சப் பையிலேயே போட்டு பொஸ்தவத்தைப் பத்திரப்படுத்திகிறேன்‘ என்று எண்ணிடக்கூடிய நண்பர்களின் வசதிகளுக்கேற்ப – slipcase இல்லாமலேயுமே புக்ஸ் மட்டும் வழக்கம் போல கிடைத்திடவும் செய்யும்.

- இதற்கான முன்பதிவுகளை இந்த வாட்டி சற்றே வித்தியாசமாய் செய்திட இருக்கிறோம். இம்முறை எங்களது பணிகளை முதலில் சத்தமின்றி துவக்கி, சில மாதங்களில் நிறைவு செய்திடவுள்ளோம். அப்பாலிக்கா முன்பதிவுகளை அறிவித்து, சூட்டோடு சூடாய் நான்கே வாரங்களில் புக்ஸை ரிலீஸ் செய்திட உள்ளோம்! So ”இதை புக் பண்ணினோமா – இல்லியா?” என்பதையே மறக்கும் ‘சவ சவ‘ படலங்கள் இதனில் இராது! ஈரோட்டு விழா சார்ந்த பணிகளை முடித்த பிற்பாடு – “விஷம்” நமது ரேடாரில் இடம்பிடிக்க ஆரம்பிக்கும்!

ரைட்டு, ”ஈரோடு” என்ற topicல் உள்ள போதே – அது சார்ந்த தகவல் பகிரல்களைப் பண்ணி விடுகிறேனே:

1. குடும்பத்தோடு வருகை தந்திடவுள்ள நண்பர்களுக்கான ஹோட்டல் புக்கிங்கள் – ஏற்கனவே குறிப்பிட்டது போல ஜுன் 30-ம் தேதியோடு நிறைவு பெற்றுவிட்டன. அதே போல தொலைவிலிருந்து வரவுள்ள சிங்கிள் நண்பர்கள் ரூம் கேட்டு குறிப்பாய் கோரிக்கை எழுப்பியுள்ள பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குமான ஏற்பாடுகளையுமே செய்திருக்கிறோம். Again the date cut-off stays at June 30. 

Please note : எவ்வித செய்தியுமின்றி blank ஆக வந்திருந்த மின்னஞ்சல்களை அட்டெண்டன்ஸ் போடும் தகவல்களாக மாத்திரமே கருதியுள்ளோம் and அவற்றிற்கு தங்கும் ஏற்பாடுகள் செய்திருக்கவில்லை ! ஜூன் 30 வரைக்குமான தெளிவான திட்டமிடல்களுக்கான ரூம்களை மொத்தமாய் ‘புக்‘ செய்திடவே “TEAM ஈரோடு” நாக்குத் தொங்க ரவுண்டடித்துக் கொண்டிருக்கிறார்கள்! ஈரோட்டுப் புத்தகவிழா தருணம் என்பதால் பல ஹோட்டல்களில் மொத்தமாய் ரூம் தர மறுக்கிறார்கள். தர ரெடியாக உள்ள சில ஹோட்டல்களோ சுமாராக உள்ளன! ஒரு வழியாய் உருண்டு புரண்டு உருப்படியாய் ரூம்ஸ் இன்று இரவு புக்கிங் செய்தாச்சு! So உரிய நேரத்தில், தெளிவாய் கோரிக்கை அனுப்பியிருந்த நண்பர்கள் அனைவருக்கும் ரூம்கள் காத்திருக்கும்! And நமது விருந்தினராய் வரவிருக்கும் அகவை 40-காரர்களுக்கும் ரூம்ஸ் ஏற்பாடாகியாச்சு! உங்கள் புரிதல்களுக்கு முன்கூட்டிய நன்றிகள் folks!

2. போன தபா போல மதிய உணவில் குளறுபடிகள் நடந்து விடலாகாது என்பதால், வெளியில் கேட்டரிங் ஏற்பாடுகள் செய்திடவுள்ளோம். அங்கு போன முதல் நொடியில் கேட்பது! ”எத்தினி பேருக்கு சமைச்சாகணும் நைனா?” என்பதே! கொஞ்சமாய் சொல்லிப்புட்டு, நிறைய நண்பர்கள் வருகை தந்திடும் பட்சத்தில், ஆளுக்கொரு ரவுண்ட் பன்னை மட்டும் தட்டில் நீட்டும் அவலம் நேர்ந்திடலாகாது! அதே சமயம் ‘கொடி புடிச்சிட்டு, ஆரவாரமா கூட்டம் கூட்டமா வர்றாங்க‘ என்று நாமாய் ஒரு கற்பனையைப் பண்ணிக்கினு – அண்டா, குண்டாவையெல்லாம் சாப்பாட்டால் நிரப்பி விட்டு, அப்புறமாய் வீண் பண்ணிடவும் கூடாது! So ப்ளீஸ் guys – ஏற்கனவே பகிரப்பட்டுள்ள இந்த லிங்க்கில் உங்களது வருகை சார்ந்த தகவலைப் பதிவிடக் கோருகிறேன்! ப்ளீஸ்?!

https://forms.gle/5GDpbs1he1CbyFSN9

3. அப்புறம் கீழ்க்கண்ட சமாச்சாரங்களுககுப் பெயர் தந்திட விரும்புவோர் – ஜல்தியாய் ஈ-மெயிலில் (lion40erode@gmail.com) விபரம்ஸ் ப்ளீஸ் : 

-தனித்திறமைகளை வெளிப்படுத்துதல்!

-5 நிமிட அவகாசத்தில் ஆகக் கூடுதலான பன்களை உள்ளே தள்ளும் "பண்"பாளரை அடையாளம் காணும் போட்டி!

-பட்டிமன்றத்தில் இடம் பிடிக்க விரும்புவோர்! 

இந்த வாரமே இவை சகலத்தினையும் final செய்திட வேண்டியிருப்பதால் – சற்றே வேகம் ப்ளீஸ்!

4. And இதோ – உத்தேசமான நிகழ்ச்சி நிரல்!

- “கதை சொல்லும் சித்திரங்கள்” – ஓவியக் கண்காட்சியில் முழியாங்கண்ணனுடன் ஒரு டூர்!

- வாசகர்கள் சுய அறிமுகங்கள்!

-லயனின் 40-வது பிறந்த நாள் கேக் வெட்டிடும் வேளை!

- ஒரு மினி மேஜிக் ஷோ!

-ஹாலிவுட்டை நடுநடுங்கப் பண்ணப் போகும் ஒரு குறும்பட ரகளை!

-லயன் சார்ந்த உங்கள் நினைவுகள் கொண்ட வீடியோக்களின் தொகுப்பு!

- IPL என்ன பொல்லாத ஐ.பி.எல்...? நம்ம CPL கிளப்பப் போகும் க்ரிக்கெட் ரகளைகள் சார்ந்த வீடியோ க்ளிப்!

- தனித்திறமைகளுக்கான மேடை!

-சீனியர் எடிட்டர் & கருணையானந்தம் அங்கிளின் உரைகள்!

- “40 ஆண்டுகள்!” ஆந்தை அண்ணாத்தே ஆத்தப் போகும் ராகி மால்ட்!

-காமிக்ஸ் பட்டிமன்றம்!

- “மரத்தடி பஞ்சாயத்து” – எடிட்டருக்கு மு. ச. & மூ. ச. க்களை சுற்றிக்காட்டும் வைபவம்!

-காமிக்ஸ் க்ரிக்கெட் லீக் வெற்றியாளர்களுக்கு சுழற்கோப்பை & மற்ற அணிகளுக்கு மெடல்கள் வழங்குதல்!

So ஒரு ஜாலியான தினத்துக்கு ரெடியாகிக்கலாமா folks? இன்னமும் வேறேதேனும் நிகழ்ச்சிகளை இணைத்திட உங்களிடம் suggestions இருந்தால் அவற்றையுமே நிச்சயம் பரிசீலித்திடலாம்!

Before I sign out – சில மினி updates :

❤️-கோவை புத்தக விழாவில் ஸ்டால் # 191-ல் (ஏழாவது வரிசை) ஒரு காமிக்ஸ் குவியலோடு எப்போதும் போலக் காத்திருக்கிறோம்! கோவை & இதர சுற்றுப்பகுதிகளைச் சார்ந்த நண்பர்கள் குடும்பத்தோடு விசிட் அடிக்கலாமே ப்ளீஸ்? முதல் நாளின் விற்பனை மிதமாகயிருக்க, இன்று (சனி ) பட்டையைக் கிளப்பியுள்ளது சேல்ஸ் 😁😁😁😁!!!!

❤️அப்புறம் Sunday காலையில் சேலத்தையே திரும்பிப் பார்க்க வைக்கவுள்ள நமது க்ரிக்கெட் போட்டிகள் அரங்கேறிடவுள்ளன! அங்கிருக்கும் நண்பர்கள் தவறாது போட்டிகளை உற்சாகப்படுத்திடக் கோருகிறேன்! சிறு துளிகள் தான் பெரு வெள்ளங்களாகிடும் என்பதை நாமறிவோம்! ஒரு அட்டகாசமான விருட்சமாய் கிளைவிடக் காத்துள்ள சமாச்சாரத்திற்கு நம்மால் இயன்ற ஊக்கங்களை உரமாக்கிடுவோமே?! Go well guys! May the best team win!

❤️கபிஷ் பணிகள் ஆரம்பிச்சாச்சு ; சேலத்தில் எதிர்பார்த்திடலாம்!

❤️2025 அட்டவணை பணிகளுமே தட தடத்து வருகின்றன! அது சார்ந்ததொரு quick question : SODA-வா? ரிப்போர்ட்டர் ஜானியா?

❤️ஒரு மாதமாய் வாட்சப்பிலும் ஒரு community துவங்கி வாரயிறுதிகளை கலகலப்பாக்கிட முயன்று வருவது தெரிந்திருக்கலாம்! இதோ - அதனில் இணைந்து கொள்வதற்கான லிங்க் : https://chat.whatsapp.com/IQFYKCvdGxADE8GfljKTko

Bye all,,, have a great weekend! See you around!




Saturday, July 13, 2024

வெசம்?

நண்பர்களே,

வணக்கம்.  தடதடக்கும் சனிக்கிழமைகளின் yet another episode – இதோ நம் முன்னே! டின்டின்னோடு வருஷத்தை ஆரம்பித்தது நேற்றைக்குப் போலிருக்க, அடுத்தாண்டுக்கான டின்டினின் தயாரிப்புப் பணிகள் துவங்கி விட்டன! நாட்களும், பொழுதுகளும் மின்னல் மோஹினிகளாய் எடுக்கும் ஓட்டங்களின் துரிதம் மட்டுப்படவே செய்யாது போலும்!

And இதோ – ஈரோட்டுச் சந்திப்புக்கான countdown-ம் ‘மளமள‘வென்று நெருங்கிக் கொண்டேயிருக்க, லேட்டஸ்டாய் தோன்றிதொரு மகாசிந்தனையினை மறக்கும் முன்பாகச் சொல்லிட நினைக்கிறேன்!

- ஐந்தே – நிமிட அவகாசத்தில் ஆகக் கூடுதலான ரவுண்டு பன்களை அமுக்கக் கூடிய ஜாம்பவான் யாரென்று கண்டுபிடிக்க முனையலாமே? மகாலில் உள்ள அம்புட்டுப் பேரும் போட்டிக்குக் கையைத் தூக்கிப்புட்டால் சிவகாசி காரனேஷன் பேக்கரியே கோவிந்தாவாகிப்புடும் தான்! So ஒரு டஜன் போட்டியாளர்களிடையே செமத்தியான “பண்பாளர்“ யாரென்று கண்டுபிடிக்க முனைந்திடலாம்! அந்தப் “பன் பன்னிரெண்டு” முதலில் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கும் 12 பேராக இருப்பர்!

- இப்போ வரைக்கும் வந்துள்ள (சொற்ப) வீடியோக்களைக் கொண்டு நம்ம டீம் ஈரோடு ஒரு மினி குறும்படத்தை தயார் பண்ணி வருகின்றனர். தொலைவிலிருக்கும் லயன் 40-ல் இருந்திட வேண்டுமென்று எண்ணிடும் பட்சத்தில், இந்த வாரமே - ப்ளீஸ்?!

ரைட்டு... பதிவுக்குள் புகுந்திடலாமென்றால் ஜுலை இதழ்கள் இன்னமும் fresh ஆக இருந்திடும் வேளையில் ஒளிவட்டத்தை வேறெங்கேணும் பாய்ச்சிட நெருடுகிறது! அதே சமயம் – ஜுலையின் நான்கு இதழ்களையும் போட்டுத் தாக்கி முடித்திருக்கும் நண்பர்களுக்கு What next? என்ற கேள்வி முன்நிற்கும்!கேள்விகளுக்குக் கேள்விகளையே பதிலாக்குவது தானே நம்ம லொடுக்ஸ் பாண்டி ஸ்டைல்?

சிலபல பதிவுகளுக்கு முன்பாக ”The மேஜிக் மொமண்ட்ஸ் ஸ்பெஷல்” – என்றதொரு சிறப்பு இதழை முன்மொழிந்திருந்தீர்கள்! நம்ம பதிவுப் பக்கத்தினில் ஆயிரம் பதிவுகளைத் தாண்டியதைக் கொண்டாடிட வேண்டிய சிறப்பிதழ் அது! And வரும் டிசம்பரில், ரெகுலர் சந்தாத் தடத்திலேயே கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து – ஒரு டெக்ஸ் கலர் சாகஸத்தை உட்புகுத்தி ரகளை பண்ணிட முஸ்தீபுகள் துவங்கியாச்சு!

இதனோடே இன்னொரு ”ஆயிரம்” சார்ந்த celebration பற்றிய பேச்செடுத்திருந்தோம்; and அது இன்னமும் take-off ஆகியிருக்கவில்லை! அது தான் நம்ம Owl eyed –ன் மேற்பார்வையில் ஆயிரம் இதழ்களைக் கடந்து வண்டி ஓடிக் கொண்டிருப்பதை சிறப்பிக்கும் இதழ்! And இதனில் வெளியிட மூன்று கதைகளை உங்களது தேர்வுக்குத் தந்திருந்தேன்!

- 5 பாக வெஸ்டர்ன் த்ரில்லர் – “விஷம்

- ரூட் 66 – 5 பாக க்ரைம் த்ரில்லர்

- “பயணம்” – மிரட்டலான b&w கிராபிக் நாவல்!

மேற்படி மூன்றுமே மோதிக் கொண்டதொரு tough fight-ன் இறுதியில் “விஷம்” என்ற கௌபாய் த்ரில்லரே உங்களது சாய்ஸாக அமைந்திருந்தது! 


இப்போது எனது கேள்விகள் இவையே :

- இந்த மெகா நீள சாகஸம் – ஒரிஜினலாக 5 பாகங்களாக; 5 தனித் தனி ஆல்பங்களில்; 5 ஆண்டுகளில் வெளியாகியுள்ளது!

- நாமுமே அதே பாணியில் – 5 தனித்தனி ஆல்பங்களாய் – அடுத்தடுத்த 5 மாதங்களில் இந்த 235+ பக்க சாகஸத்தைக் கையாண்டால் என்ன?

- ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையின் மையமான பழிவாங்கும் அழகி புதிதாய் ஒரு பயணத்தோடு, புதிதாய் ஒரு காவு வாங்கிடக் கிளம்புகிறாள்! So 5 தனித்தனி இதழ்களுக்கு இது அழகாய் set ஆகிடச் செய்யும்!

- ‘ஏக் தம்மில்‘ வெளியிடுவதாயின் விலையில் மாற்றங்கள் இராது தான் – ஆனால் 5 அத்தியாயப் பெருங்கதைகளை வாசிக்கும் பொறுமைகள் இன்று நம்மில் எம்புட்டுப் பேரிடம் உள்ளதென்பதே கேள்விக்குறி!

- So “மணந்தால் மகாதேவியே” என்று பெட்ரோமேக்ஸ் லைட்டையே தேடிப் பிடிச்சு வாங்கியாந்த பிற்பாடு, அவை டப்பி உடைக்காமல் பரணில் துயில் பயிலும் ரிஸ்க் எடுப்பதா ? அல்லது – “மாற்றம் – முன்னேற்றம் – 5 இதழ்கள்” என்று தகிரியமாய் முயற்சித்துப் பார்ப்பதா?

- உங்கள் தீர்மானங்கள் + அவற்றிற்கான காரணம் ப்ளீஸ்?!

- அப்பாலிக்கா இந்த ஸ்பெஷல் இதழுக்கு நல்லதாயொரு பெயரை இம்முறையேனும் சூட்டி வைத்தால் – வண்டியை ஸ்டார்ட் எடுக்கச் செய்திட உதவுகிறதா? என்று பார்த்து விடலாம்! So ஒரு பொருத்தமான – ‘நச்‘ பெயர் ப்ளீஸ்?!

- இந்தத் திட்டமிடல் எப்படியிருந்தாலுமே 2025-ல் தான் நடைமுறை கண்டிட முடியும்! So அட்டவணை தயாரிப்பின் பிஸியில் உள்ள இந்தத் தருணத்தில் when? where & how to fit the book(s) என்பது பற்றி எனக்குள் தெளிவு கிட்டினால் நலமென்பேன்! So உங்களது inputs ப்ளீஸ்?!

தோள்பட்டை சிகிச்சை தொடர்ந்து வர, ஏற்கனவே சொன்னது போல, வாரயிறுதிகள் பட்டினத்தில் கழிந்து வருகின்றன! அக்குபஞ்சரிலும், உடற்பயிற்சிகளிலும் தொங்கிக் கிடக்கும் நாக்கோடும், புஜங்களோடும் நீளமாய் பதிவை எழுத / டைப்ப ‘தம்‘ லேது என்பதால் இந்த வாரம் எச்சூஸ் ப்ளீஸ்!

Bye all... See you around! Have a fun Sunday!

And இதோ ஒரு கொசுறு trivia கேள்வி :

அல்லது - இவை எவையுமே அல்லாத வேறொன்றாய் எது?

Sunday, July 07, 2024

ஒரு ரவுண்டடிக்கும் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். போன பதிவு இந்த சிறுவட்டத்தின் ஈர மனசை yet again வெளிச்சம் போட்டுக் காட்டியது என்றால் அது மிகையே ஆகாது !! 'போட்ட கதையையே  மறுக்கா போட்டிருக்கியே கோமுட்டித் தலையா ?' என்று தூக்கிப் போட்டு மிதித்திருந்தாலும், சத்தமே இல்லாது வாங்கியிருக்க வேண்டியவன் தான் ! அதே போல, "57 வயசிலே நோவுகள் இல்லாம ஒடம்பு முத்தமா கொஞ்சும்டா தம்பி ?" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே நீங்கள் நகர்ந்திருந்தாலுமே நான் சொல்ல எதுவும் இருந்திருக்காது ! ஆனால் பிழைக்குப் பெருந்தன்மையை பதிலாக்கி ; நோவுக்குப் பரிவை பரிசாக்கி வாயடைக்கச் செய்து விட்டீர்கள் ! Thanks from the bottom of my heart all !!  

ரைட்டு, சென்டிமென்டை கசக்கியது போதுமென்று நினைத்தீர்களெனில், let's get on with things !!  ஆனை-அம்பாரம் என்று நான் எதற்குள்ளாச்சும் புகும் முன்பாக - இதோ இந்தாண்டின் காமிக்ஸ் கிரிக்கெட் லீக் பற்றிய அறிவிப்பைப் பண்ணிவிடுகிறேனே !! போன வருஷம் இந்த முயற்சியினை நண்பர்கள் முன்னெடுத்த போது, மெய்யாலுமே இதெல்லாம் ஒரு தொடர்கதையாகிடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை ! ஏதோ ஒரு வேகத்தில் இறங்கிப்புட்டாங்க ; புத்தாண்டுக்கு எடுக்கும் சபதங்கள் பொங்கலுக்கு முன்பாகவே காலாவதியாவதைப் போல, இந்த வைராக்கியங்களும் நிச்சயம் இந்த தபாவோடு புஸ்ஸாகி விடுமென்றே எண்ணியிருந்தேன் ! ஆனால் 4 டீம்களை உருவாக்கி, ஜூலை 2023-ன் ஒரு வாரயிறுதியில் அனைத்து மேட்ச்களையும் நடத்தி, அட்டகாசமாய் ஒரு அணி  கோப்பையைத் தட்டிச் செல்லும் சாகஸத்தையும் நடத்திக் காட்டிய போது 'அட' என்றிருந்தது ! ஈரோட்டு சந்திப்பின் போது அதனை வீடியோவிலும் பார்க்க நேர்ந்த போது 'அடேடேடேடே' என்றிருந்தது ! இதோ - சீசன் 2-ல் லீக் தொடரவுள்ளது - வரும் ஜூலை 21-ம் தேதியிலான போட்டிகளோடு ! இந்தவாட்டி சேலத்தில் மேட்ச்கள் நடைபெறவுள்ளன & அன்று மாலை தெரிந்து விடும், சுழற்கோப்பையை இந்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லவிருப்பது எந்த அணியென்று ?! நம்பினால் நம்புங்கள் guys - போனெல்லியின் CEO திரு டேவிட் போனெல்லி எந்த அணி வெற்றி பெறுகிறதென்று தெரிவிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் !! So உங்களது வெற்றிகள் கடல் கடந்தும் கவனிக்கப்படுகின்றன என்ற உற்சாகத்தோடு போட்டுத் தாக்குங்கள் !! May the best men win !!  நமது ஆதரவுகளுடன் நண்பர்களை செமத்தியாக உற்சாகப்படுத்துவோமே folks ? ஜூலை 21 தேதிக்கு சேலம் செல்ல சாத்தியமாகிடும் நண்பர்கள் - please do drop in !! 

அப்புறம் நம்ம பொம்ம புக் சமாச்சாரங்கள் பக்கமாய் வண்டியை இனி விடுவோமா ? ஜூலை இதழ்களில் லக்கி லூக் எப்போதும் போல் கலக்கிடுவார் என்பதில் confident ஆக இருந்தோம் ; ஆனால் நம்ம தானைத் தலைவர் ஸ்பைடர் பட்டையைக் கிளப்பி, இம்மாத ரேஸில் முன்னணியில் இருப்பாரென்பதைத் தான் நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ! அந்த அட்டைப்பட அலட்சிய smile தான் காரணமா ? அல்லது மெகா சைஸா ? அல்லது கலரில் வரும் ஸ்பைடர் கதை என்ற காரணமா ? சொல்லத் தெரியலை - but ஏஜெண்ட்களுமே இம்முறை "விண்வெளிப் பிசாசை" தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர் ! இதில் கொடுமைஸ் of இந்தியா என்னவெனில், கிட்டங்கியினை ரொப்ப வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதையில் தானைத் தலைவரின் பிரிண்ட் ரன்னை குறைவாகவே திட்டமிட்டிருந்தோம் ! So தொடரவிருக்கும் புத்தக விழா சீசனை ஆர்டினியின் முதலாளி தாண்டிட மாட்டார் என்றே தோன்றுகிறது ! காலச் சக்கரங்களைப் பின்னோக்கி ஓடச்செய்து - 1984-க்கே திரும்பி விட்டதாக உணர்வு உள்ளுக்குள் - 'எவன் எந்த மாசத்தில் வெளிவந்தாலும், அவனை போட்டு அமுக்கிட்டு நான் போய்க்கினே இருப்பேன் !!" என்று நம்ம கூர்மண்டையர் கொக்கரிப்பது போலான குரல் தலைக்குள் கேட்பதைத் தொடர்ந்து !! Of course - ஒரு வாரம் கூட இன்னும் ஆகவில்லை தான் ஜூலை புக்ஸ் வெளியாகி - so ஓவர் சவுண்டு ஒடம்புக்கு ஆகாது தான் ! ஆனால் இந்த நொடிக்காவது ஸ்பைடரின் ஹெலிகார் ஓவர்டேக் செய்திருப்பது - டைனமைட்டையும், ஜாலி ஜம்பரையும் எனும் போது, கொஞ்சம் குத்தாட்டம் போடாமலிருக்க முடியவில்லை !! 

And இம்மாத லக்கி லூக்கும் சாத்தி வருவது சிக்ஸர்களையே !! கார்ட்டூன் ஜானரில் இன்னமும் ஒல்லி கில்லியாய் ஏன் தொடர்கிறாரென்பதை yet again நிரூபித்து வருகிறார் ! சிம்பிளான நேர்கோட்டுக் கதைகள் ; கச கசவென்ற கதைமாந்தர்கள் நஹி ; கிட்டத்தட்ட பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகள் - என்று செல்லும் லக்கிக்கு டால்டன் சகோதரர்கள் செம பலம் என்பேன் ! அந்த நாலு கேடிப்பசங்க தலை காட்டிடும் அத்தனை சாகஸங்களுமே தொடரினில் சூப்பர்ஹிட்ஸ் எனலாம் ! Not to mention - ரின்டின் கேன் !! கதைபாட்டுக்கு கூடுவாஞ்சேரி நோக்கிப் போய்க்கினு இருந்தால், நம்ம நாலுகால் ஞானசூன்யமோ கும்பகோணம் நோக்கி வண்டியை விட்டுக் கொண்டிருப்பது வாடிக்கை !! Pity - ரி.டி.கே. சோலோ கதைகள் இதே தரத்தில் இல்லாது போனதே ! Yet - ஜூனியர்களின் வாசிப்புக்கு ரி.டி.கே. நிச்சயம் ரசிப்பானென்றே தோன்றும் ; ஆனால் நம்ம "என்றும் 16 " அணி தந்திடும் thumbsdown-ஐ நினைத்து ஷட்டரை சாத்தி விடுவேன் ! 

TEX !! "பும்ரா சிறப்பாய் பந்து வீசினார்" என்பது எம்புட்டு சகஜமான தகவலாகிப் போனதோ - அதே அளவில் தான் "டெக்ஸ் போட்டுத் தாக்குகிறார்" என்ற சேதியும் !! எப்போதும் போலவே 💥💥!! இங்கே சின்னதொரு கேள்வி மக்கா - moreso காத்திருக்கும் நமது 2025-ன் அட்டவணையினையும் கருத்தில் கொண்டு :

"இளம் டெக்ஸ் தொடர் ஒரு மெரி அரைச்ச மாவையே அரைக்குது ; இளம் 'தல' ஓடுறார்...ஓடுறார்..ஓடிக்கினே கீறார்....! கொஞ்சம் பிரேக் விட்டாலென்ன ?" என்று நண்பரொருவர் வினவியிருந்தார் !! இத்தாலியிலோ இந்தத் தனித்தடம் புயலாய் சீறிப் பறந்து சென்று கொண்டுள்ளது ! நாம் ஓராண்டுக்கு பிரேக் விட்டால் கூட நமக்கும், அவர்களுக்கும் மத்தியிலான இடைவெளி கூடிக் கொண்டே போய்விடும் ! உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் folks ? எப்போதும் போலவே இளம் தல தொடரட்டுமா ? அல்லது ஓராண்டு பிரேக் தருவது மதியோ ?

இம்மாதத்தின் இன்னொரு surprise packet - ஏஜென்ட் ராபினின் "ஆரூடத்தில் நிழலில்" தான் ! Truth to tell - எனக்கே ராபினின் இந்த மீள்வருகை சீரிஸ் சின்னதொரு ஆச்சர்யத்தினைத் தந்து வருகிறது ! ரொம்பத் தெளிவான சித்திரங்கள் ; crisp கதைக்களங்கள் இந்த வரிசையினில் இலகுவான வாசிப்புக்கு உதவிடுவதாகப் படுகிறது !! And இங்கே நெஞ்சை நிறையச் செய்திடும் இன்னொரு சமாச்சாரம் நம்ம V காமிக்சின் இரண்டாம் பாதியின் சந்தாப் புதுப்பித்தல்கள் ராக்கெட் வேகத்தில் அரங்கேறி வருவது தான் !! மாதாமாதம் crisp வாசிப்பின் அடையாளமாக V உருவாகி வருவதில் செம ஹேப்பி !!

So ஒரு நிறைவான வாசிப்பு ஜூலையில் சாத்தியமென்ற சந்தோஷத்துடன், இதே மாதத்தில் வந்திருக்க வேண்டிய 3 பெருசுகளின் பக்கமாய் கவனத்தைத் திரும்புகிறேன் !! Yes - அவர்கள் நம்ம தாத்தாஸ் கூட்டணியே !! தொடரின் முதல் 3 ஆல்பங்களிலும் ஒவ்வொரு தாத்தாவை highlight செய்து கதாசிரியர் கதை நகர்த்தியிருந்தாரெனில் இந்த ஆல்பம் # 4-ல் focus இருப்பது பேத்தி சோஃபியாவின் மீதே !! முதல் ஆல்பத்தில் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து கொண்டிருக்க, இரண்டாவதில் கைக்குழந்தையை  ஏந்தி இருக்க, இந்த ஆல்பத்திலோ மெதுமெதுவாக பேசப் பழகிடும் மழலையோடு சோஃபியா ஆஜராகிறாள் ! And தாத்தாக்களுக்கு கொஞ்சமும் சளைக்காது பட்டாசாய்ப் பொரிபவள் சோஃபி என்பதை மறக்கவாச்சும் முடியுமா ? இத்தாலி போகும் பயணத்தின் மத்தியில் சில கிழட்டு டூரிஸ்ட்களை வாங்கு வாங்கென்று முதல் அத்தியாயத்தில் வாங்கும் உக்கிரமாகட்டும் ; ஒவ்வொரு தாத்தனின் தலையிலும் முட்டையை உடைச்சு பாடம் நடத்தும் அந்த மூன்றாம் பாகத்து தில்லாகட்டும் - எனக்கு நிரம்பவே பிடித்த கதாப்பாத்திரம் அவள் ! இம்முறை அவளைக் கொண்டு கதாசிரியர் ஒரு செமத்தியான ஒற்றைப்பக்க ஜாலத்தை நடத்தியிருக்கிறார் ! முதல் வேக வாசிப்பில் அதனிலிருந்த பெசல் ஐட்டத்தை கவனிக்கத் தவறியிருந்தேன் ; அதன் பலனாய் கொஞ்ச நேரத்துக்குப் புரியாது முழித்துக் கொண்டுமிருந்தேன் ! ஆனால் டியூப்லைட் மண்டைக்கு அந்தப் பின்னணி புரிந்த போது "wow" என்றே சொல்லத்தோன்றியது !  எப்போதும் போலவே வசன நடையில் கதாசிரியர் இம்மிகூட சமரசம் செய்து கொள்ளாத உரையாடல்களை முன்வைத்திருக்க, அவற்றை அப்படியே, அதே raw பாணியில் நானும் பரிமாறியுள்ளேன் ! By now - இங்கே என்ன எதிர்பார்ப்பதென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் தான் ; yet எனது கடமை அதனை repeat செய்திடுவது : கொஞ்சம் sensitive ஆன வாசகர்கள் ஜாக்கிரதையாய் வாசித்தால் தேவலாம் என்பேன் ; வார்த்தைகளில் கணிசமான அராத்து குடிகொண்டிருக்கும் என்பதனால் ! இதோ சின்னதாயொரு சாம்பிள் பாருங்களேன் : 



So ஆகஸ்டில் ஆஜராவார்கள் தாத்ஸ் கும்பல் ! ஆல்பம் # 4-க்குள் புகும் முன்பாய் ஒருவாட்டி, முந்தைய மூன்று ஆல்பங்களையும் மேலோட்டமாய்ப் புரட்டிக் கொண்டால் நலமென்பேன் !! ஒருக்கால் டப்பி பிரிக்காது முந்தைய மூணு தாத்ஸ் ஆல்பங்களும் தேவுடு காத்து வரும்பட்சத்தில், இவர்களையும் அவர்கட்குத் துணையாக்கிடலே நலம் ! நீங்கபாட்டுக்கு நடுவாக்கிலிருந்து வாசிக்க ஆரம்பித்தால் இம்மி கூடப் புரியாதே ! 

Bye all...ஈரோட்டின் சந்திப்புக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அதற்கான ஏற்பாடுகளை நண்பர் குழு ஜரூராய் கவனித்து வருகிறது ! அவர்கள் கோரி வருவதெல்லாம் உங்களின் அந்த வீடியோ testimonials-களைத் தான் ! இயன்றமட்டுக்கு விரைவாய் அனுப்பிட முயற்சியுங்கள் ப்ளீஸ் ! See you around ! Have a beautiful Sunday !!

P.S : ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாய் ஒரேயொருவாட்டி நெய்வேலி புத்தக விழாவினில் பங்கேற்றிருந்தோம் - மிக மிதமான விற்பனையே பலனாகியிருந்தது !! அப்புறமாய் கொரோனா காரணமாய் விழாவே நடந்திடவில்லை ! இம்முறை செம விமர்சையாக விழா ஏற்பாடுகள் அரங்கேறியிருக்க, சனிக்கிழமையின் ஒற்றை நாள் சேல்ஸ் மட்டுமே போனமுறையின் மொத்தப் பத்து நாட்களின் சேல்ஸையும் விஞ்சி விட்டிருக்கிறது !! Simply stunning !! புனித மனிடோ இதே அற்புதம் தொடர வாழ்த்துவாராக !! 

நினைவூட்டல்கள் : 





Monday, July 01, 2024

அட்வைஸ் அர்னால்டு !!!

 நண்பர்களே,

வணக்கம். ஏழு இல்லே...பதினாலு கழுதை வயசானாலுமே பிழைகளுக்கு விதிவிலக்காகிட மாட்டோம் போலும் ! Yes , நான் குறிப்பிடுவது இம்மாதத்து கலர் டெக்ஸ் இதழில் நேர்ந்துள்ள குளறுபடியினைத் தான் என்பதை புரிந்திருப்பீர்கள் ! "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை !" என்ற பெயரில் கலரில் நாளை உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டவுள்ள ஆல்பமானது 2016-ல் black & white-ல் வெளியான அதே சாகஸமே என்பதை ஞாயிறு இரவினில் தான் உணர்ந்து தொலைத்தேன் ! போனெலியிலிருந்து வந்திருந்த கோப்புகளில் ஏதோ மாறிப் போயிருக்க, அதனை புதுக்கதை என்றெண்ணி போன மாதம் மொழிபெயர்த்த சகோதரியில் துவங்கி, டைப்செட்டிங் செய்த நமது DTP டீமிலிருந்து, மேற்பார்வையிடும் மைதீன் வரைக்கும் சொதப்பியதெல்லாம் கூட பெரிய சமாச்சாரமல்ல - ஆனால் எடிட்டிங்கிற்குத் தூக்கிக் கொண்டு அமர்ந்த எனக்கும் இது எட்டாண்டுகளுக்கு முன்னே பணியாற்றிய ஆல்பமே என்பது உறைக்காமல் போனது தான் மடத்தனத்தின் உச்சம் !! 

ஒரிஜினலாக இந்த ஸ்லாட்டில் வந்திருக்க கதைக்கு வைத்திருந்த பெயரோ "விதி எழுதிய வெற்றி வரிகள்" ! But மொழிபெயர்ப்பு செய்திடும் சகோதரிகளிடம் எப்போதுமே அவர்களது பெயர் suggestions-களை நான் கேட்பது வாடிக்கை ; அதற்கேற்ப இம்முறை அவர் கொடுத்திருந்த பெயர் முதல் தபாவாய் நன்றாகத் தோன்றிட, அதையே போட்டு விளம்பரத்தைப் போன மாதமே சாத்தியிருந்தோம் ! இதில் கொடுமை என்னவெனில், எப்போதுமே இம்மியூண்டு பிசகைக் கூட கவனித்திடும் sharp shooters ஆன நீங்களும், விளம்பரத்தினில் இடப்பிடித்திருந்த  சித்திரங்கள் ஏற்கனவே வெளியானவை என்பதைக் கவனித்திருக்கவில்லை ! So எதுவும் தெரிந்திருக்காமலே அவசரமாய் எடிட்டிங் முடித்து அச்சும் முடித்திருந்தோம் - போன வாரயிறுதியில் ! ஆனால் ஞாயிறன்று பதிவினில் நண்பரொருவர் "இது ஏற்கனவே போட்ட கதையாச்சே சார் ?" என்ற பின்னூட்டத்தினைப் பதிவு செய்த போது தான் தலை கிறுகிறுத்துப் போனது ! நானிருந்ததோ - சென்னையில் - சிகிச்சையில் !! ஞாயிறு இரவு ஊர் திரும்பிய கையோடு ஆபிஸுக்கு ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பரின் observation ஆகச் சரியே என்பது புரிந்தது !! பேஸ்தடித்துப் போயிற்று - நடந்திருக்கும் கோமாளித்தனத்தின் பரிமாணத்தை எண்ணி !

பொதுவாய் பிழைகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது எனக்கு ஏற்புடையதே அல்ல ! பிழையை ஒத்துக் கொண்டு, அதனை நிவர்த்திக்க முனைவதே முன்செல்லும் பாதை என்று நம்புகிறவன் நான் ! அதற்கேற்ப, இந்த மாதத்து சொதப்பலுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் folks ; and I apologize for the terrible lapse !! வயசாகி வருகிறதென்பதற்கான எச்சரிக்கையாகவுமே இதனைப் பார்த்திடுகிறேன் !! எது, எப்படியோ - வரும் ஆகஸ்ட்டில் வேறொரு முழுநீள டெக்ஸ் புது சாகசமொன்று, விலையில்லா இதழாய் உங்களது கூரியர் டப்பிகளில் இடம்பிடித்திடும் !! நமது மன்னிப்புகளுடன் அதனை ஏற்றுக் கொள்ளக் கோருவேன் !! 

"ரைட்டு, சிகிச்சைன்னு ஏதோ பிட்ட போட்டியேப்பா ...என்னாச்சு ?" என்ற உங்களின் வினவலுக்கு பதில் சொல்லி விடுகிறேனே ! பொதுவாக பெர்சனலான சமாச்சாரங்களைப் பற்றி, அதிலும் உடல் சார்ந்த நோவுகளைப் பற்றி இங்கு நான் பகிர்ந்திட விழைவதில்லை ! யாருக்குத் தானில்லை சுகவீனங்கள் ? So "எனக்கு இங்கே இஸ்துக்கிச்சு ; அங்கே வலிச்சுக்கிச்சு" என்றெல்லாம் எழுதிக் கொண்டு அனுதாபம் தேடுவதில் எனக்கு உடன்பாடே கிடையாது ! ஆனால் யாம் பெற்ற துன்பத்திலிருந்து நீங்களாச்சும் பாடம் படிச்சிக்கினா தேவலையே ?! என்ற ஒரு எண்ணம் தோன்றியதால் மாத்திரமே இதைப் பற்றி இங்கே வாயைத் திறக்கிறேன் :

ரெண்டு மாதங்களாகவே இடது தோள்பட்டையில் ஒரு வித இறுக்கம், நோவு இருந்து கொண்டிருந்தது ! அந்தப் பக்கமாய்ப் புரண்டு படுத்தால் வலியில் பிராணன் போக ஆரம்பித்த போது தான், 'ஆஹா...இது மாமூலான சுளுக்கோ ; பிடிப்போ அல்ல ! என்று உறைத்தது ! அப்புறமாய்த் தான் தெரிய வந்தது - இது Frozen Shoulder என்றதொரு சிக்கலின் வெளிப்பாடென்று ! தோள்பட்டையில் இருக்கும் உள்தசையானது வலுவாகிப் போக, அந்த மூட்டின் அசைவுகளை அது கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்கிப் பிடிக்குமாம் ! கையை உயர்த்துவதே பெரும் பிரயத்தனம் என்றாகி, நாளாசரியாய், சின்னச் சின்ன அசைவுகளை செய்வதற்குள்ளே நாக்குத் தொங்கிப் போகுமென்ற நிலைக்கு இட்டுச் சென்று விடுமாம் ! Middle age-ல் வரக்கூடிய இந்தச் சிக்கலானது சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச இணைப்பாகிடுவது சகஜமாம் ! 'பங்க பிரி..பங்க பிடி..!' என்று 20 வருஷங்களுக்கு முன்பாகவே சர்க்கரை வியாதியை எனக்கும், மூத்த 2 சகோதரிகளுக்கும் அப்பா அன்பளிப்பாக்கியிருக்க, இந்த Frozen Shoulder சகிதம் குப்பை கொட்டுவது எப்படியென்ற தேடலில் கடந்த 4 வாரங்களாக நான் பிசி ! சட்டையைப் போடவோ, கழற்றவோ, இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொள்ளணும் ! முதுகுக்குப் பின்னே அரிக்குதெனில் சொரிந்து கொள்ள பசுமாடாட்டம் சுவரைத் தேடணும் ! உசக்கே பெர்த்தில் ஏறிப் படுக்கனுமென்று நினைத்தாலே உறக்கம் ஓடிப்போயிடும் !  இதுக்கு குணமென்று பெருசாய் எதுவும் லேது ;  சமாளிக்கும் வைத்தியம் பாத்துக்கிட்டா, ஒண்ணோ, ரெண்டோ, மூணோ வருஷங்களில் சரியாகி விடும் என்று சொன்னார்கள் ! வைத்தியம் பாக்காங்காட்டி, அதுவாவே அறுநூறோ, எழுநூறோ, எண்ணூறோ நாட்களில் சரியாகிடும் என்றும் சொன்னார்கள் ! 'ஆனா உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு !' என்றபடிக்கே கடந்த 4 வாரங்களாக வெளியூரில் இதற்கான அக்குபங்ச்சர் ; physiotherapy சிகிச்சைகளில் வாரயிறுதிகளை ஓட்டி வருகிறேன் ! 

இந்த Frozen Shoulder தரும் வேதனை ஜாஸ்தியா ? அல்லாங்காட்டி இதற்கென அவர்கள் தரும் பயிற்சிகளும், சிகிச்சைகளும் தரும் வலி ஜாஸ்தியா ? என்றொரு பட்டிமன்றத்தை ஈரோட்டில் வைத்தாலென்னவென்று கூட ஒரு கட்டத்தில்  தோன்றியது ! இதில் கூத்து  என்னவென்றால், ஒரு தோள்பட்டைக்கு வந்து சுகம் கண்ட நோவானது, அடுத்த தோள்பட்டையையும் அரவணைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏக பிரகாசமாம் ! அடடே...ஆடித் தள்ளுபடி மெரி, தோள்பட்டைக்கு "ஆடாத" தள்ளுபடி கூட உண்டாக்கும் ?! என்று டாக்டரிடம் மண்டையை ஆட்டிக் கொண்டேன் ! வீட்டில் வைத்துச் செய்ய ஒரு வண்டி stretches ; exercises என்று தந்துள்ளனர் ; வலியினை பொறுத்துக் கொண்டு தொடர்ச்சியாய் அவற்றைச் செய்து கொண்டே இருக்கணுமாம் ! So வீட்டிலிருக்கும் ஜன்னல் கிராதிகளைப் புடிச்சிக்கினு இப்டிக்கா ; அப்டிக்கா திருகிக் கொள்வது ; கையில் ஒரு குச்சியை 'ஆட்றா ராமா' ஸ்டைலில் ஏந்தியபடியே தலைக்குப் பின்னே வரை கொண்டு போக முனைவது என்று ராத்திரிகளில் சர்க்கஸ் நடத்தி வருகிறேன் ! இந்தக் கூத்துக்களின் மத்தியில் பணிகளில் கோட்டை விட்டுடப்படாதே என்ற கவனமும், ஆதங்கமும் பெருமளவு உள்ளுக்குள் இருந்திருந்துமே இந்த TEX சொதப்பல் நிகழ்ந்துள்ளது தான் ரொம்பவே உறுத்துகிறது ! Maybe இந்த நோவுகளில் கவனம் சிதறிடாது இருந்தாலுமே, இந்தப் பிழை நிகழ்ந்திருக்கும் என்றே என்னைத் தேற்றிக் கொள்கிறேன் - becos இதன் மையப் புள்ளி ஒட்டு மொத்த மறதி & ஒரு வித brain freeze தான் ! 

So இந்த நோவினையோ, அதனை சமாளிக்கும் (எனது) சிரமங்களையோ இங்கே highlight செய்வது எனது நோக்கமே அல்ல ! And இந்தப் பதிவுப் பக்கத்தின் ஆயிரத்துச் சொச்சம் பதிவுகளில் நான் செய்திராத ஒரு விஷயத்தை இந்த தபா மட்டும் பண்ணிக்கிறேனே folks - அது தான் அட்வைஸ் அர்னால்டாக அவதார் எடுப்பது : தயவு செய்து உங்களது நாட்களில் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்குங்கள் folks !  "வாக்கிங் போறேன் ; சைக்கிளிங் போறேன்" என்று மிதப்பாகத் திரிந்தவன் தான் நான் ; ஆனால் உடம்பில் உள்ள ஒரு வண்டி தசைகளையும், மூட்டுகளையும் செயல்பட வைக்க அது பற்றாதென்று இப்போ முக்கிக்கினே குச்சியைத் தூக்கிடும் போதெல்லாம் புரிகிறது ! மூட்டுகள் ஒழுங்காய் செயல்பட்டு வரும் வரைக்கும் ஆயுட்காலத்துக்கும் அவை அப்படியே தொடர்ந்திடுமென்று நம்பி விடுகிறோம் ! But வண்டி நொண்டியடிக்க ஆரம்பிக்கும் போது தான் தேகப் பயிற்சிகளின் முக்கியத்துவம் புரிகிறது !! கையில் ஒரு எலாஸ்டிக் பட்டையைத் தந்து, அதை 'தம்' கட்டி இழுக்கச் செய்யும் போதெல்லாம் - அதே கையில் செல்லை ஏந்திக் கொண்டு YouTube-ஐ பார்த்தபடிக்கே கெக்கலித்தது தான் நினைவுக்கு வருது !! இன்றைக்கோ "Frozen Shoulder treatments" என்பதைத் தாண்டி என்னோட YouTube அக்கவுண்டில் வேறு எதுவும் ஓட மாட்டேங்குது ! குஸ்தி பயில்வான் ஜாடையிலிருக்கும் வெள்ளைக்கார physiotherapists செய்து காட்டும் பயிற்சிகளையெல்லாம் பார்க்கும் போது கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் மண்டைக்குள் ஓடுகின்றன !! So ஞான் போட்டு வரும் மொக்கைகளிலிருந்து நீங்கள் பாடம் படிச்சால் அந்தமட்டுக்காவது மகிழ்வேன் !  

Bye all....see you around ! ஜன்னல் கிராதிகளோடு எனது லவ்சை தொடரக் கிளம்புகிறேன் ! Have a fun week !!

And oh yes - புக்ஸ் கிளம்பியாச்சு ! And ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போட்டாச்சு : https://lion-muthucomics.com/latest-releases/1224-2024-july-pack.html

P.S : தாத்தாஸ் கதையின் மொழியாக்கம் இப்போது தான் நிறைவுறுகிறது ! So ஆகஸ்ட்டில் டின்டின் கூட அவர்களை அனுப்பிடுகிறோம் folks ! விட்டு விட்டு பணி செய்து இந்த ஆல்பத்தின் அழகைப் பாழ் பண்ண மனசு வரலை ! Sorry again !