Saturday, April 09, 2022

அம்மணிகளின் ஏப்ரல் !

 நண்பர்களே,

வணக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு திரும்பிடுகிறது - at least இந்த நொடியினில் & at least எங்கள் பகுதிகளில் ! மதுரையில் மீண்டும் சித்திரைத் திருவிழா களை கட்டி வருகிறது  ; 2 ஆண்டுகளுக்குப் பின்பாய் எங்கள் ஊரிலும் ; சுற்றியுள்ள நகரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் இரட்டிப்பு உற்சாகங்களுடன் அரங்கேறி வருகின்றன ! ஈராண்டுகளின் இழப்புகளை இந்தாண்டே தொட்டுப் பிடித்து விடும் உத்வேகங்களில் மக்கள் ரவுண்டு கட்டியடித்து வருவதை ரதவீதிகள் பறைசாற்றி வருகின்றன !! ஆனால் நமக்கோ மாட்டா ஹாரியைப் பார்த்த ஜெர்மானியர்களைப் போல இன்னும் பீதி அடங்கிடவில்லை எனும் போது - 'தெய்வமே...இந்த சகஜ நிலை தொடரட்டுமே !!" என்ற பிரார்த்தனையை முகமூடிக்குப் பின்னிருந்து  சொல்ல மட்டுமே முடிகிறது !! இதோ - நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு எங்கள் ஊரே total விடுமுறை மூடில் தெறிக்க விடவுள்ளது !

ஆனால் லீவோ, வேலையோ ; வெயிலோ, புயலோ ; திருவிழாவோ, லாக்டவுனோ  - நம்ம புழைப்பில் மாற்றங்கள் லேது என்பதால் - வழக்கம் போல மேஜை முழுக்க கதைகளை பப்பரக்கா என்று பரப்பிப் போட்டு வைத்துக்கொண்டு பொழுதுகளை ஒட்டி வருகின்றேன் !! And ஏப்ரலின் முக்கூட்டணி, இதுவரைக்குமாவது ஆன்லைன் விற்பனைகளில் செமையாய் ஸ்கோர் செய்து வருவதை சுவாரஸ்யமாய்ப் பார்த்தும் வருகின்றேன் ! Without a doubt - இந்த ஏப்ரலானது  2 பெண்களின் மாதமே - நம்மைப் பொறுத்தமட்டிலுமாவது ! யூத்தான இன்ஸ்பெக்டர் ரூபின் உருப்படியான காரணங்களுக்காகவும், யூத்தாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் அம்மணி மாட்டா ஹாரி உருப்படியற்ற காரணங்களுக்காகவும் ஒளிவட்டத்தினைப் பகிர்ந்து வருகின்றனர் ! 

Rubine !! இந்த கேரட் மண்டை பட்டாசுப் பார்ட்டி நம் கரைகளில் ஒதுங்கியது தற்செயலே ! போன வருஷத்து லாக்டௌன் பொழுதுகளின் போது முத்துவின் ஐம்பதாவது ஆண்டுமலருக்கென புதுசாய் நாயக நாயகியரைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் - மகளிருக்கும் பிரதிநித்துவம் தந்தாலென்ன ? என்ற மகா சிந்தனை எழுந்தது ! ரைட்டு....இதைக்காரணமாக்கி இளவரசியை உள்ளாற புகுத்தலாமென்றால், ஊற வைத்தே நொங்கிட அநேகர் இருப்பது புரிந்தது ! கட்டுப் போட்டுவிட்டு ஆறுதல் சொல்ல சிலபல டாக்டர்கள் இருந்தாலுமே, இளவரசியாருக்கு மனசில் தரும் சீட்டே பாதுகாப்பானது என்று தீர்மானித்தேன் ! ஜூலியா ; லேடி S போன்ற சமகால அம்மணிகளுமே உங்களுக்கு சொர்ணக்காக்களையே நினைவூட்டுகிறார்கள் எனும் போது அவர்களையும் தொந்தரவு செய்திடத் தோன்றவில்லை ! தவிர, கதம்ப இதழ் என்ற template க்கு அவர்கள் சுகப்படமாட்டார்கள் என்பதுமே புரிந்தது ! So கூட்டணி இதழுக்கு ஓ.கே. சொல்லியிருந்த லொம்பா குழுமத்தின் படைப்பாகவே நாம் தேடும் அம்மிணியுமே இருந்திட வேண்டி வந்தது ! அந்தக் கோணத்தினில் தேடலைத் தொடர்ந்த போது ஒரு 2 பாக லேட்டஸ்ட் த்ரில்லர் கதை தான் முதலில் கண்ணில் பட்டது ! அவரும் ஒரு டிடெக்டிவ் தான் என்பதால் வேக வேகமாய் கோப்புகளை வரவழைத்து தலையை உள்ளே விட்டுப் பார்த்தேன் ! அதிர்ஷ்டவசமாய் அதற்கான இங்கிலீஷ் மொழிபெயர்ப்பினையுமே படைப்பாளிகள் தந்து விட்டிருந்ததால் - அரை அவரிலேயே படித்திட முடிந்தது ! கதை சூப்பருமல்ல ; மோசமும் அல்ல என்று பட்டது ; தவிர சித்திரங்களுமே just about ஓ.கே. என்றிருந்தன ! ரைட்டு...வேறு ஏதும் சிக்காத பட்சத்தில் இந்த அத்தாட்சிக்கு slot தந்துப்புடலாம் என்று தீர்மானித்தபடிக்கே மேற்கொண்டும் உருட்டினேன் ! அப்போது எனது பழைய டயரியினில் குறித்திருந்ததொரு பெயர் கண்ணில்பட, 'அட...ஆமால்லே ....அந்த ஏர் ஹோஸ்டஸ் நடாச்சா பிள்ளையை பரிசீலிக்கலாமோ ?' என்றுபட்டது ! 

கார்ட்டூன் பாணி சித்திரங்கள் ; பப்ளிமாஸ் கன்னங்கள் ; ஏர் ஹோஸ்டஸ் உத்தியோகம் - என்று இந்த நாயகி 1970 களில் துவக்கம் கண்டவர் ! நான் பிராங்கபர்ட் புத்தக விழாவுக்குப் போன கி-பி- ; கி-மு. காலங்களிலேயே இவரைப் பார்த்திருக்கிறேன் ! ஆனால் அன்றைக்கெல்லாம் - 'குட்டைப் பாவாடையா ? அபச்சாரம் ; அபச்சாரம் !! துணியைக் கழட்டுற பாப்பாவா ?!! நாசமாய் போச்சு !! ' என்று தெறிச்சடித்து ஓடுவதே நமது இயல்பு என்ற போது நடாச்சா திசைக்கு ஒரு பெரும் கும்பிடு போட்டிருந்தோம் ! ஆனால் இப்போதோ நம்ம 'தெகிரிய ரேஞ்சே' வேறு என்பதால் ஆவலாய் நடாச்சாவின் கோப்புகளை வரவழைத்து வாசிக்க முனைந்தேன் ! ஆனால் 1971-ல் துவங்கிய தொடர் என்பதாலோ, என்னவோ, கதைக்களங்கள் ரொம்பவே சுமாராய் ; ஓவர் நேர்கோட்டு பாணியில் இருப்பதாய்ப்பட்டது ! 'இது வேலைக்கு ஆகாதே'என்றபடிக்கே மண்டையைச் சொறிந்த போது தான் நடாச்சாவினை உருவாக்கிய அதே ஓவியரின் கைவண்ணத்தில் இன்னொரு லேடி டிடெக்டிவ் இருப்பது கண்ணில்பட்டது ! 

அவர் தான் நமது சிகாகோ போலீஸ் டிபார்ட்மென்டின் அதிரடிப் பார்ட்டி - ரூபின் ! இவரது கதைகள் ஆங்கிலத்தில் இல்லை என்ற போது - படித்துப் பார்த்து எதையும்  தீர்மானிக்கும் சூழல் சாத்தியமாகிடவில்லை ! So நெட்டில் கிட்டிய அலசல்கள் ; ரிவியூக்கள் என்பனவே ஒரு தளமாகிட வேண்டியிருந்தது ! பார்த்தமட்டிற்கு நமது இன்ஸ்பெக்டரம்மாவுக்கு எல்லோருமே thumbs up தந்திருக்க - "ரைட்டு..ரிஸ்கின்றி ரஸ்கில்லை ! ஜெய் மூ.ச. !! " என்று தீர்மானித்தபடிக்கே ரூபினின் தொடருக்கு உரிமைகளை வாங்கியும் விட்டேன் ! 14 ஆல்பங்கள் கொண்ட தொடரினில் top rating பெற்றிருந்த ஆல்பத்துக்கு ஆர்டரும் தந்து விட, கோப்புகளும் இரண்டாம் நாளே நம் கைகளில் ! அது நமது மாமூலான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் சுகவீனமாய் இருந்த தருணம் என்பதால் - புதிதாய்ப் பணியாற்றி வந்த சென்னை மாணவியிடம் french to english மொழிபெயர்ப்புக்கென அனுப்பி வைத்தேன் ! ஒரே வாரத்தில் அதுவும் கைக்கு வந்திருக்க, மேலோட்டமாய் வாசித்துப் புரிந்து கொள்ள முயற்சி பண்ணிப் பார்த்தால் - ஊஹூம்....தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை ! 'ஆஹா....பரணில் சயனம் பண்ணும் நாயக / நாயகியருக்குப் பேச்சுத் துணைக்குப் புதுசாய் ஒரு பார்ட்டியை தேற்றிப்புட்டோம் போல் தோணுதே ?!!' என்றபடிக்கே மோட்டைப் பார்த்தேன் ! அதற்குள்ளாக "FFS இதழ் இன்னும் கிராண்டாய் வேணும் ; பெரிய விலையினில் வேணும் !!" என்ற உங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்துவங்கிட - கதைகளில் rejig அவசியமென்ற தீர்மானத்துக்கு வந்தேன் ! எதுவும் பிடி தந்திரா ரூபினையுமே அப்பாலிக்கா பார்த்துக்கலாமென்ற தீர்மானத்தில், FFS ஸ்லாட்டிலிருந்து அவரைக் கழற்றிய கையோடு 'கோடை மலர்' ஸ்லாட்டுக்கு நகற்றினேன் ! 

கோடையுமே நெருங்கிய வேளையினில் ரூபினை மறுக்காவும் கையில் எடுத்த போது புரிந்த முதல் விஷயம் - 'இந்தம்மா ஜானி சுடும் இடியாப்பங்களை லெப்ட்டுக்கா வாங்கி, ரைட்டுக்கா கடாசக் கூடிய வல்லமை கொண்டவர் !" என்பது ! So இவரது கதையில் நுனிப்புல் மேய்ந்தபடிக்கே  புரிந்து கொள்ள முயற்சிப்பதென்பதெல்லாம் ஓவர் நப்பாசை ; ஓவர் குசும்பு என்பதுமே உறைத்தது ! கர்மசிரத்தையாய் பணிகளைத் துவக்கிய போது தான், கதாசிரியரின் ஆற்றல்களின் முழுப் பரிமாணமும் சிறுகச் சிறுகப் புரியத்துவங்கியது ! ஓவியருமே தன் பங்குக்கு போட்டுத் தாக்கியிருக்க, இந்த அம்மிணியைக் கண்டு ஓட்டமெடுத்தவனுக்கு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது ! தவிர, 'எவனா இருந்தா எனெக்கென்னடா ?' பாணியிலான ரூபினின் அந்த attitude சூப்பராக ரசித்தது !! இயன்றமட்டுக்கும் இவரது கதாப்பாத்திரத்தை கதாசிரியர் சிருஷ்டித்திருந்த விதத்திலேயே உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் பக்கத்துக்குப் பக்கம் மேலோங்க - சென்சார்கள் ஏதும் செய்திடாது, வசனங்களில் தெனாவட்டோடு பயணிக்கும் தீர்மானம் உருப்பெற்றது என்னுள் ! அதனால் தான் எங்கேயுமே கத்திரியோ ; தார் பெயிண்ட் டப்பியோ கையிலெடுத்திடாது விட்டுவிட்டேன் ! 

And பேனா பிடிக்கும் போது வித்தியாசமான சவால் முன்நின்றது ! ஒரு SODA ஆல்பத்தின் வறண்ட ஹ்யூமர் சகிதம் வரிகளை அமைப்பதில் பெருசாய் சிரமங்கள் இருக்கவில்லை - டேவிட் சாலமனும் ஒரு ஆம்பிளைப் பையன்  என்பதால் ! நக்கலும், நையாண்டியும், குசும்புமாய் சுற்றித் திரியும் டெட்வுட் டிக்குக்குமே பெரிதாய் மொக்கைகள் எழவில்லை - அவனைப் போலவே கோக்கு மாக்காய்ச் சிந்திக்க நமக்கும் சாத்தியப்படுவதால் ! அட, அவ்வளவு ஏன் - தாத்தாவ்ஸ் யாருமே கூட தொல்லையே தரலை தான் ; ஆனால் அவர்களோடு உலவிடும் அந்தப் பேத்தி கேரக்டருக்கு என்ன மாதிரியாய் வசனங்கள் செட் ஆகுமென்று பிடிபட மொக்கை போட்டேன் ! Likewise with ரூபின் !! ஒரு பெண் தெனாவட்டாயப் பேசினால் எப்படியிருக்கும் என்று யோசித்தால் வைஜயந்தி IPS களும், சொர்ணக்காள்களுமே நினைவுக்கு வந்தனர் ! ஆனால் நம்மூரிலே விஜயசாந்திக்கள் சித்தே நேரம் விறைப்பாய் நின்று வஜனம் பேசிப்புட்டு அப்புறமாய் மரத்தைச் சுற்றி பாட்டுப்பாடி டான்ஸ் போட ஆரம்பித்துவிடுவதே வாடிக்கை என்றிருக்க, அந்த templates இங்கே வேலைக்கு ஆகாதென்றுபட்டது ! சரி, ரைட்டு...'தெனாவட்டில் ஆண்பாலென்ன ? பெண்பாலென்ன ? அல்லாமே ஒண்ணா தானே இருக்கும் ?' என்று மனசைத் தேற்றிக் கொண்டு எழுத ஆரம்பித்தேன் ! கொஞ்ச நேரத்தில் கதையின் flow நம்மைக் கைபிடித்து நடத்திச் செல்வது ஆரம்பித்திட, ஒரு மாதிரியாய்க் கரை சேர்ந்தேன் ! கதையினூடே இன்னமும் எனக்கு ஒரு இடத்தில் கொஞ்சம் குழப்பம் உண்டு தான் ; சாவகாசமாய் புக்கை இன்னொருக்கா புரட்டும் போது அது தெளிகிறதாவென்று பார்க்க வேணும் ! அப்புறம் நடாச்சாவும் ; ரூபினும் இணைந்து வரும் frame ஒன்றினை படைப்பாளிகள் அமைத்துள்ளதைப் பார்த்தீர்களா ?  

ஆக தடுமாற்றத்தோடு உட்புகுந்த நாயகி ஒரு திட ஸ்லாட் ஈட்டியிருப்பது ஒருபக்கமெனில், திடமான தேர்வாய் உள்ளே புகுந்து, தடுமாற்றத்தோடு ஏமாற்றம் தந்திருப்பது இன்னொரு நாயகி ! And அந்த நாயகியின் பெயர் மாட்டா ஹாரி ! வரலாற்றில் முக்கிய ஒற்றர்களாய் அறியப்பட்டோரைக் கொண்டு ஒரு மினி தொடர் உருவாகும் தகவல் கிடைத்த போது ஆர்வமாய் உள்ளே மண்டையை நுழைத்ததே "உளவும் கற்று மற" இதழின் துவக்கப் புள்ளி ! And அம்மணி மாட்டா ஹாரி ஐரோப்பிய உளவு சீனில் ஒரு பெரும் புள்ளி என்ற நம்பிக்கையுடன் தொபுக்கடீரென தேர்வுக்கு ஓ.கே.சொல்லியிருந்தேன் ! ஆனால் மாட்டாவின் சாகசங்கள் எந்த ரகம் என்பதையும், அவரது 'ஒளவு' எந்த பாணி என்பதையும் நான் புரிந்திட நேரிட்ட போது காலம் கடந்திருந்தது ! 

So இந்த நொடியில் என் முன்னிருக்கும் குயப்பம் - ஜம்போ சீசன் 4-ன் இறுதி இதழையாச்சும் சொதப்பாது உருப்படியான கதையுடன் வெளியிட  என்ன செய்வதென்பதே ! அறிவிக்கப்பட்டிருக்கும் "வைகறைக் கொலைகள்" black & white-ல் செமத்தியான சித்திரங்களுடன், ரூ.65 விலையில் வந்திட வேணும் ! ஆனால் அதுவும் ஒரு நிஜ கொலைக்கேஸின் காமிக்ஸ் சித்தரிப்பே ! 1952-ல் பிரெஞ்சு கிராமீய பகுதியினில் ஒரு இளம் பெண் உட்பட மூன்று பேர் செத்துக் கிடக்க, அருகிலிருக்கும் பண்ணை வீட்டிலுள்ளோர் மீது சந்தேகம் விழுகிறது ! தொடர்ந்திடும் (நிஜப்) புலன்விசாரணை & கோர்ட் ஹியரிங் தான் இந்த ஆல்பத்தின் களமே ! இந்த ஆல்பத்தினை நான் தேர்வு செய்ததே grey shades கலந்த அந்த அசாத்திய black & white ஓவியங்களின் பொருட்டே ! ஆனால் கதையின் ஓட்டம் எவ்விதமென்பது மில்லியன் டாலர் கேள்வியே ! ஏற்கனவே கருணையானந்தம் அங்கிள் இதனை மொழிபெயர்த்து நம்மாட்கள் DTP செய்தும் வைத்துள்ளனர் ! ஆனால் கதையோட்டத்தினை உள்வாங்கிடாதே அதனுள் பயணித்துள்ளார் என்பது புரிந்தது ! So ஒரு சாவகாச வேளையில் மொத்தமாய் முழுசையும் மாற்றி எழுதிடும் முனைப்பினில் இருக்கிறேன் ! சற்றே மூச்சு விட அவகாசம் கிடைக்கும்  முதல் தருணத்தினில் இதனுள் புகுந்திட வேணும் ; and கதை மிதமே என்றிருப்பின், நிச்சயமாய் மாற்றாய் எதையேனும் தேடிடவே வேண்டி வரும் ! இன்னொரு மாட்டா ஹாரியை பூமி தாங்காது !

Moving on, திருப்பூர் புத்தக விழா 14-ம் தேதி துவங்கிடவுள்ளது & கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பாய் நமது புத்தக கேரவன் நகர்ந்திடவுள்ளது ! TEX க்ளாசிக்ஸ் 2 இதழானது இந்தத் திருவிழா விடுமுறைகள் நிறைவுற்ற கையோடு அச்சாகி, அடுத்த ஞாயிறு முதலாய் திருப்பூர் புத்தக விழாவிற்கு அனுப்பிடவுள்ளோம் ! 

And டெக்ஸ் என்ற subject-ல் உள்ள போது - ஒரு ஜாலி நியூஸ் ! கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் போனெலியே மறந்திருந்த வில்லன் மெபிஸ்டோ நேற்றைக்கு இத்தாலியில் வெளியாகியிருக்கும் ஒரு நெடும் ஜாகஜத்தில் மறுவரவு செய்திருக்கிறார் ! கதாசிரியர் மௌரோ போசெல்லியின் கைவண்ணத்தில் துவங்கியுள்ள இந்த ஆல்பம் ஆறோ-ஏழோ பாகங்களுக்கு நீண்டிடக் கூடும் போலும் ! ஓவியர் சிவிடெல்லி ஒரு பாதிக்கு சித்திரம் போடவுள்ளார் & மீதப் பாதிக்கு  ரௌல் & கியான்லுக்கா சகோதரர்கள் ! கடைசியாய் கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் 2002-ல் தலை காட்டிய இந்த விட்டலாச்சார்யா வில்லன் - 20 ஆண்டுகளுக்குப் பின்பாய் போசெலியின் canvas-ல் இடம் பிடிக்கிறான் ! பார்ப்போமே - சமகாலத்து டெக்ஸ் எடிட்டரின் கைவண்ணத்தில் மெபிஸ்டோகாரு  எவ்விதம் பயணிக்கிறானென்று !! 


Further down the line, அண்டர்டேக்கரின் ஆல்பம் # 6 தெறிக்கத் தெறிக்க ரெடியாகி வருகிறது ! இதோ - அதன் அட்டைப்பட முதல்பார்வை !

And புறப்படும் முன்பாய் இதோ - தயாராகி வரும் ரிப் கிர்பியின் உட்பக்கப் preview !! அம்சமான சித்திரங்களுடன், தெளிந்த நீரோடை போலான கதைகளை இந்த மெகா சைசில் ரசித்துப் பழகி விட்டால், அப்பாலிக்கா இந்த மூக்கை முன்னூறு தபா சுற்றும் non-linear கதைகளெல்லாம்  ரசிக்குமோ - என்னவோ ?  

Bye all ..... see you around ! Have a cool weekend !

169 comments:

  1. Replies
    1. //ஜூலியா ; லேடி S போன்ற சமகால அம்மணிகளுமே உங்களுக்கு சொர்ணக்காக்களையே நினைவூட்டுகிறார்கள்// அமைதியான ஆர்ப்பாட்டமில்லா ஜூலியா எனது favorite ஹீரோயின் சார், மாடஸ்டியை விடவும்...

      Delete
  2. வணக்கம். படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  3. மாலை வணக்கம். படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  4. ### And டெக்ஸ் என்ற subject-ல் உள்ள போது - ஒரு ஜாலி நியூஸ் ! கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் போனெலியே மறந்திருந்த வில்லன் மெபிஸ்டோ நேற்றைக்கு இத்தாலியில் வெளியாகியிருக்கும் ஒரு நெடும் ஜாகஜத்தில் மறுவரவு செய்திருக்கிறார் ! கதாசிரியர் மௌரோ போசெல்லியின் கைவண்ணத்தில் துவங்கியுள்ள இந்த ஆல்பம் ஆறோ-ஏழோ பாகங்களுக்கு நீண்டிடக் கூடும் போலும் ! ###
    -- அதை தமிழில் ஒரே குண்டு புக்காக வெளியிடுமாறு ஆசிரியரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்--

    ReplyDelete
  5. Good evening to all. வெறுமனே அட்டன்டன்ஸ் கொடுக்குறது மட்டுமே இப்போதையெ பொழப்பாகி விட்டது.

    ReplyDelete
  6. மாலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. வந்தாச்சி..வணக்கம் வச்சிக்கிறேன் சபைக்கு...🙏

    ReplyDelete
  8. //And புறப்படும் முன்பாய் இதோ - தயாராகி வரும் ரிப் கிர்பியின் உட்பக்கப் preview !//

    எங்கே சார்.. காணோமே...

    ReplyDelete
  9. டேட்டா முடிஞ்சு இருந்தாலும் ,பேட்டரி சிவப்பை நெருங்கினாலும் அழுத்தி புடிச்சு வந்துட்டோம்ல ...


    இனி படிச்சுப்போட்டு...:-)

    ReplyDelete
  10. மிக அருமை சார் இன்றைய பதிவு.

    *அனுப்பிடவுள்ளோம்* என்றால்?, நீங்கள் வரமாட்டீங்களா சார்? எங்க ஊருக்கு

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் தாரமங்கலம் மாதிரி பெரிய பெரிய சிட்டில நடந்தா தான் ஸ்ரீ சார்...:-)

      Delete
  11. ரிப்கெர்பிய காணோம் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. என்னது ஒரு டிடெக்ட்டிவ்வையே காணோமா, கூப்பிடுங்க அந்த மஞ்ச சட்டை மாவீரரை

      Delete
  12. Edi Sir..
    மாலை வணக்கம் ...

    ReplyDelete
  13. மகளிர்கான ஒதுக்கிட்டீன் பிண்ணனியை சுவைப்பட தெரிவித்து உள்ளீர்கள் சார்..

    அருமை...!

    ReplyDelete
  14. இம்மாத வாசிப்பில் என்னுடைய பார்வையில் சிக்பில் அண்ட் கோ முதலிடம் வகிக்கிறது...

    கொலைகார காதலி, விற்பனைக்கு ஒரு ஷெரீப், இரும்பு கௌபாய் போன்றே அசத்தலான கருவுள்ள தரமான கதை. சமயத்தில் நகைச்சுவையில் லக்கி லூக்கையும் கூட வுட்சிடி நீதிக்காவலர்கள் மிஞ்சி விடுகின்றனர்.
    சந்தடி சாக்கில் ஆசிரியர் ஆர்டினியை பெரிய டெக்ஸ் வில்லராமே என்று கலாய்த்து விடுகிறார்...😅😅😅
    சித்திரங்கள் ஜானி கதையினை போல ஷார்ப்பாக இல்லாமல் பிசிறடிப்பது பெரும் குறை.
    எனது ரேட்டிங் 4.2 / 5

    ReplyDelete
    Replies
    1. ஜானியின் கதை பழைய திகில் காமிக்ஸினை முழு வண்ணத்தில் படித்தது போன்றே ஒரு அசத்தலான சித்திர விருந்து. அச்சுத் தரம் பிரமாதம்.
      சசஸ்பென்ஸ் கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள்.
      எனது ரேட்டிங் 4/5

      Delete
    2. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அளவான டெக்ஸ் கதை... இது சின்ன கதையெல்லாம் கிடையாது. முழு நீளமான ஜானி கதைகள் போன்ற அளவிலான 500+ சித்திரங்கள் கொண்ட ஜெட் வேக முழு நீள கதை. படிப்பது சுலபம். இது போன்ற நீளம் கொண்ட கதை களை அடிக்கடி வெளியிட்டால் நலம்.

      எனது ரேட்டிங் 4/5

      Delete
    3. கோடை மலர் ஐடியா சூப்பர்... 3 கதைகளும் நன்றாகயிருந்தது. அடுத்த வருடம் கருப்பு வெள்ளை fleetway கதைகளையும் இணைத்து லயன் சூப்பர் ஸ்பெசல் போல வெளியிட முடியுமா என்று பாருங்கள் சார்.

      இன்ஸ்பெக்டர் ரூபின் கதை அருமை... ஏராளமான பின்னல்களுடன் அசத்தலான உருவாக்கம்... மொழிபெயர்ப்பு அழகு எப்போதும் போலவே.

      எனது ரேட்டிங் 3.9 / 5
      (பள்ளி பாலக தமிழ் வாசகர்களை ஆதாயப்படுத்தும்விதமாக ஒரு தரமான கார்ட்டூன் கதையாக்கிட சில தேவையற்ற பேனல் (திணிப்பு)களை வெட்டியெறிந்திருக்க வேண்டும்.)

      Delete
    4. பிளீட்வே ஸ்பெஷல் நல்ல ஐடியா...

      அதுவும் கோடைமலருக்காக என்றால் இன்னும் சிறப்பு...

      இதுவரை மறுபதிப்பு ஆகாத, வெளிவராத எத்தனையோ கதைகள் உள்ளன. ஸ்பைடர், ஆர்ச்சி, ஜான் சில்வர், ஆக்சன் ஹீரோ சைமன், இரும்புக்கையார்,etc...

      ஆர்ச்சி கதைகள் கேட்டால் கிடைக்கும் என ஆசிரியர் சொல்லி இருந்தார். ஆனால் யாரும் பெரிதாக கேட்டதாக நினைவில்லை... ஆர்ச்சி மீண்டும் ஒருமுறை அந்த A4 வடிவில், முழு வண்ணத்தில் வந்தால் lovely 😍😍😍

      Delete
    5. We too love Archie & all other golden heroes...

      Delete
  15. TEX க்ளாசிக்ஸ் 2 இதழானது இந்தத் திருவிழா விடுமுறைகள் நிறைவுற்ற கையோடு அச்சாகி, அடுத்த ஞாயிறு முதலாய் திருப்பூர் புத்தக விழாவிற்கு அனுப்பிடவுள்ளோம் !


    #####


    ஆஹா...அருமை....!

    ReplyDelete
  16. மறந்துட்டேனே...நேரமா வந்ததுக்கு ரொம்ப நன்றிங் சார்...:-)

    ReplyDelete
  17. இந்த ஏப்ரலானது 2 பெண்களின் மாதமே - நம்மைப் பொறுத்தமட்டிலுமாவது ! யூத்தான இன்ஸ்பெக்டர் ரூபின் உருப்படியான காரணங்களுக்காகவும், யூத்தாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் அம்மணி மாட்டா ஹாரி உருப்படியற்ற காரணங்களுக்காகவும் ஒளிவட்டத்தினைப் பகிர்ந்து வருகின்றனர் !

    #####


    :-))))))

    ReplyDelete
  18. Edi Sir..
    We are eagarly waiting for Rib kerbi preview ..

    ReplyDelete
  19. // கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் போனெலியே மறந்திருந்த வில்லன் மெபிஸ்டோ நேற்றைக்கு இத்தாலியில் வெளியாகியிருக்கும் ஒரு நெடும் ஜாகஜத்தில் மறுவரவு செய்திருக்கிறார் ! //

    வாவ்,அப்ப அடுத்த வருடம் டெக்ஸ் 75 க்கு இதையும் ஒரு ஸ்லாட்டா புக் பண்ணிடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. // TEX க்ளாசிக்ஸ் 2 இதழானது இந்தத் திருவிழா விடுமுறைகள் நிறைவுற்ற கையோடு அச்சாகி, அடுத்த ஞாயிறு முதலாய் திருப்பூர் புத்தக விழாவிற்கு அனுப்பிடவுள்ளோம் ! //
      மற்றவர்களுக்கு தமிழ் புத்தாண்டுக்கு முன்பு கிடைக்க வாய்ப்பு உண்டுங்களா சார் ???!!!

      Delete
    2. Sorry, no sir....அச்சு ; பைண்டிங் - என நேரம் எடுக்கும் !

      Delete
  20. டியர் சார்-
    "ரிப் கிர்பி "_அழுத்தமான printing-கிர்பியின்-தோற்றம் என்றும் ரசிக்கக்கூடிய கம்பீரம்தான்..
    ஒவ்வொரு Frame வரிசைக்கும் இடையில் கேப் நிறைய உள்ளதால் - வசனங்களை படங்களை மறைக்காமல் மேலே கொண்டு செல்லலாமே...
    .. மாட்டா ஹரி - போர்முனையில் தேவதைகள். - ரொம்பவே அநியாயம்-அழகா - இரண்டு ஜூலியா - கதைகளை வெளியிட்டு இருக்கலாம் சார்-.
    ஒவ்வொரு கதைகளையும் - இரண்டு மூன்று முறை படித்து ரசித்து இருக்கிறேன்... காமிக்ஸ் புத்தகம் என்றாலே பாதுகாத்து வைத்திருந்து இரண்டு முறை படித்து ரசிக்க வேண்டும் சார்..
    அதிலும்-ஸ்மாஷிங்-70- இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இது போன்ற கதைகள் வருவது என்னைப் போன்ற ரசனைக்காரர்கள்-அழுத்தமாக அதையே கெட்டியாக பிடித்துக்கொண்டு விடுவோம் சார்....

    ReplyDelete
    Replies
    1. ஜூலியா கதைகளை வெளியிட்ட நாட்களில் நிகழ்ந்தவைகளை சித்தே flashback-ல் போய்ப் பாருங்களேன் நண்பரே !

      Delete
  21. Edi Sir..
    ஆகா..ரிப் கிர்பி..Wow..பார்க்கவே பரவசமா இருக்கே..படிச்சா எப்படி இருக்கும்.. Hearty welcome Rib kerbi ஜி..

    ReplyDelete
  22. //20 வருடங்கள் கழித்து மெபிஸ்டோ திரும்ப வந்திருக்கிறார்//
    இப்பொழுதிருந்தே வேப்பிலை கோர்க்க ஆரம்பித்து விடலாம்

    ReplyDelete
  23. அந்தருக்கும் நமஸ்காரம்,
    எடிட்டர் காரு,
    இந்த மெபிஸ்டோ காரு எப்புடு இக்கட ஒஸ்தாரு?

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் இந்த மெபிஸ்டோவை கண்ணில் காட்ட ஆவணை செய்யுங்கள் ஆசானே

      Delete
    2. அக்கட பூமியில் இந்த ஜாகஜம் நிறைவுறவே நடப்பாண்டில் இறுதியைத் தொட்டு விடும் நண்பரே ; அப்பாலிக்கா தான் கதையின் தன்மை பற்றி அறியவே முயற்சிக்க முடியும் !

      Delete
  24. Replies
    1. பழனி மலரையும் ...புத்தகத்திருவிழா இதழயும் ஒன்னா போட்டு குழப்பிக்க வேண்டாமே....

      Delete
    2. அண்டர் டேக்கர் அடி தூளு...அப்படியே ட்யுராங்கோ ஸ்டைல் புதிய நாயகர் குறித்தும் கூறவும்

      Delete
  25. உண்மையில் இந்த மாத கதைகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பது ரூபின்.
    இரண்டாம் இடம் ஜானி.
    மூன்றாம் இடம் டெக்ஸ்.
    நான்காம் இடம் கிட் ஆர்டின்.

    ரூபின் கதையில் பக்கத்திற்கு பக்கம் திருப்பங்கள்.
    கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது.

    ஜானி கதையிலும் இதே நிலை.
    ஆர்வத்தை கூட்டிக் கொண்டே செல்லும் கதை. வில்லன் யாருமறியாதது.

    டெக்ஸ் முதலிலேயே உண்மை தெரிந்து விடுகிறது. ஆனா அதை புலனாய்வு செய்து டெக்ஸ் அன் கார்சன் கண்டுபிடிப்பதே கதை.

    கிட் வழக்கம் போல காமடி

    மாட்டா ஹாரி - டாகுமெண்ட்டரி.....

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் முதலிலேயே உண்மை தெரிந்து விடுகிறது//

      தலீவரின் template அதுவே தானே நண்பரே !

      Delete
  26. எல்லாம் சரி இந்த கதை சொல்லும் காமிக்ஸ் எப்போ வரும்

    ReplyDelete
    Replies
    1. வரும் சாரே....ஷீக்கிரமே வரும் ! அதற்கென இன்னும் கொஞ்சம் சந்தாக்கள் சேர்ந்தால் ரெம்போ ஷீக்கிரமே வரும் !

      Delete
  27. அடடே வந்துட்டேன்

    ReplyDelete
  28. வணக்கம் காமிக்ஸ காம்ரேட்களுக்கு ....!!!

    ReplyDelete
  29. When reading this post, I was wondering how you can write this post with such love and passion for comics. At one point of time, our job or business becomes boring. But you are still passionate about comics.

    I think you are the best editor in the world since nobody would have ever given us such varieties in stories, hundreds of heroes introduced in last 10 years. You are best for one other reason. Selection of heroes. 95% of the time you catch our pulse and stories are well welcomed. 5% slippage like Mata hari is nothing in any business.

    Once again I thank our editor who is a MEGA comic lover first and businessman next.

    2022 is great tribute to MUTHU 50. Such great introductions and stories.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் டாக்டர் சார் !

      டெஸ்ட் மேட்ச்களை போல வாழ்க்கையிலும் ஒரு இரண்டாவது இன்னிங்ஸ் கிட்டினால், நிறையப் பேர் மகிழ்வர் என்பது சர்வ நிச்சயம் ! முதல் முறை செய்த சொதப்பல்களைத் தவிர்த்து, விட்ட கோட்டைகளையெல்லாம் பிடிக்கும் முனைப்பு இரண்டாவது தபாவினில் தலைதூக்குவதில் வியப்பே இராதல்லவா ? இங்கே கடந்த 10+ ஆண்டுகளாய் அரங்கேறி வருவதும் கிட்டத்தட்ட அதே போலானதொரு சமாச்சாரம் தான் சார் !

      எனக்கெனக் கிட்டிய முதல் வாய்ப்பினை நான் முறையாய் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற உறுத்தல் உள்ளுக்குள் இருப்பதில் no secrets ! Maybe இன்னும் கொஞ்சம் சிரத்தையோடு அந்நாட்களில் செயல்பட்டிருக்கலாமோ ? என்ற எண்ணம் பின்னாட்களில் எழுந்து கொண்டே இருந்தது ! "ரைட்டு...ஒரு இரண்டாம் வாய்ப்பைப் பிடித்துத் தொலை ; இந்தவாட்டியாச்சும் சொதப்பி வைக்காதே !" என்று புனித மனிடோ 2011-ல் சொன்ன போது அதனை உதாசீனம் செய்தால் என்னை விடப் பெரிய டோமர் மண்டையன் யாருமே இருக்க இயலாதென்பது புரிந்தது !

      அந்த இரண்டாம் வாய்ப்பினை cherish செய்திடும் முனைப்பே இந்தப் பத்தாண்டுகளின் உழைப்புகள் சார் ! And ஒவ்வொரு படியிலும் உங்களின் அன்பான அண்மைகள் தரும் ஊக்கமானது இன்று வரைக்கும் ஓடும் 'தம்'ம்மைத் தந்து வருகின்றது ! கடந்த காலத்தை அழிக்கவல்ல ரப்பர்கள் கிடையாது தான் ; ஆனால் ஒய்வை நாடும் பொழுதினில், இந்த இரண்டாம் இன்னிங்சிலாவது I gave it my all என்ற திருப்தி இருக்குமல்லவா சார் ?

      Delete
    2. டாக்டர் @ வரிக்கு வரி +1000

      Delete
    3. ஆமாம் டாக்டர் சார் நீங்கள் சொன்னது அத்தனையும் உன்மை....

      Delete
    4. வாவ் சூப்பர் சார்.

      //At one point of time, our job or business becomes boring. But you are still passionate about comics.//

      பெரும்பான்மையான உண்மை.

      எடிட்டர் சார் ஒரு முறை சொன்னது.

      "மனதிற்கு நெருக்கமான / பிடித்த தொழில் அமைந்ததே பெரிய மகிழ்ச்சி" என்று.

      பலருக்கும் இது போல் அமைவதில்லை என்பதே யதார்த்தம்.

      //you are the best editor in the world since nobody would have ever given us such varieties in stories, hundreds of heroes introduced in last 10 years. You are best for one other reason. Selection of heroes. 95% of the time you catch our pulse and stories are well welcomed.//

      ++++மிக நல்ல மனிதர்.

      Delete
    5. @editor sir.

      No. You did score century in first innings. It was that kind of time period where batsmen can score a century in 250 balls. So we liked it then.

      Second innings was like one day match where u scored 100 out of 100 balls and made each and everyone excited and happy.

      2022 is T20 match where you are having strike rate of 200. Athiradi mannan vijayan. U age like wine sir. Like padayappa dialogue. Vaayaasu era era personality innum athikamaakuthu (as editor sense)

      2022 is new game you are playing sir and we love u for that. So many intros and all Sixers. We know when a player bats for long, some bad shots will be there and catches missed. Mata hari, amaya were like that. Continue this great game sir.

      As I told, we the LION comic fans are the most gifted in the world, since our editor is THE BEST in the world in giving us wide varieties most of which are loved by us

      Delete
  30. கிரபி அழகாக இருக்கிறார்...


    கிர்பி பெரிய அளவில் அசத்தலாக மின்னுகிறார்..


    கிர்பிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே தலீவரே !

      Delete
    2. அழகான ஹீரோக்களில் ஒருவர்

      Delete
    3. ஆஹா..காத்திருக்கிறேன் சார்...!

      Delete
  31. Dear Editor,
    Detective Rubins TT is the Best story of the year till now
    Layered, witty and filled with nice emotions, artwork.
    Regards
    Arvimd

    ReplyDelete
    Replies
    1. பணி செய்யும் போதே நிரம்ப ரசிக்க முடிந்தது சார் ! Not surprised at all by the positive reviews !

      Delete
  32. Replies
    1. வண்ணத்தில் கதையின் அச்சுத்தரம் செம மாஸாக உள்ளது

      Delete
    2. மியாவ் மியாவ் சிங்கக்குட்டி

      ஆர்ட்டின் உடல் அளவில் பலமானவர் ஆனால் மனதளவில் கோழை; இது நமக்கு தெரிந்த விஷயம் ஆனால் இதனையே பிரதானமாகி ஒரு சிரிப்பு தோரணத்தை மற்றும் ஒரு அருமையான விஷயத்தையும் சொல்லி உள்ளார்கள்!

      ஆர்ட்டினின் தாழ்வு மனப்பான்மையை அகற்ற சிக்-பில் மற்றும் குள்ளன் இருவரும் சேர்ந்து போராடி சரி செய்து வர அதனை ஒவ்வொரு முறையும் டாக்-புல் தனது இயல்பான குணம் மூலம் ஒருநொடியில் உடைத்து மீண்டும் ஆர்டினை பழைய நிலைக்கு கொண்டு செல்வது செம காமெடி!

      சிக்-பில் மற்றும் குள்ளன் இருவரும் சேர்ந்து ஆர்ட்டினின் மனவுறுதியை அதிகரிக்க செய்ய எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ரசிக்கும் படி இருந்தது; பெர்ட் பங்களிப்பும் சிறப்பு!

      டாக்-புல் மற்றும் ஆர்ட்டினின் காமெடி வழக்கத்தை விட இந்தமுறை மிகவும் சிறப்பு!

      அதிகப்படியாக இதற்கு முன்னர் வந்த கதைகளில் ஆர்ட்டினை சிரிப்புக்கு மட்டும் உபயோகப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இந்தமுறை கதையின் நாயகனே இவர்தான். ஆர்ட்டினின் ஹீரோ மற்றும் காமெடி ரோலை கதாசிரியர் மிகவும் ரசிக்கும் படி அமைத்தது சிறப்பு!

      கோடை விடுமுறையை சிரிப்புடன் ஆரம்பித்து வைத்து விட்டது இந்த மியாவ் மியாவ் சிங்கக்குட்டி!

      இன்று முதல் இந்தக்கதையை எனது குழந்தைகளுக்கு சொல்ல போகிறேன்!

      Delete
  33. ரிப் கிர்பியின் உட்பக்கப் preview super sir!

    ReplyDelete
  34. உளவும் கற்று மற:

    இந்த மாதத்தின் கதைகளில் நான் முதலில் படித்து முடித்தது இந்த கதையை மட்டுமே! மற்ற கதைகளை இன்னமும் தொடவில்லை. சொல்லப்போனால், இதுவரை வந்துள்ள விமர்சனங்களில் கதையின் தலைப்பை விட 'மாட்டா ஹாரி' என்ற பெயரே ஒளிவட்டம் பாய்ச்சப்பட்டு வந்துள்ளது. அதிலிருந்தே தெரிகிறது அம்மணி எதையெல்லாம் மறக்கச் செய்யக் கூடிய வலிமை பெற்றவர் என்று!

    இந்த கதையைப் பொறுத்த வரையில் என்னால் 10-க்கு 8 மதிப்பெண்கள் தர முடியும். ஏனெனில், ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி, லேடி எஸ் போன்ற ஆக்ஷன் கதையாக சொல்லாமல், ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்றுக் கதையாக சொல்லி உள்ளதற்காகவே இந்த மதிப்பீடு. கடைசி 2 இரண்டு பக்கங்களில் எழுத்து வடிவில் கொடுத்திருந்தவைகளை முதலில் படித்தால், கதையில் எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்கக் கூடாது என்ற புரிதல் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

    உளவாளி என்றாலே உறவாடிக் கெடுக்கும் கலைகளில் வல்லவராக இருக்க வேண்டும் என்பது அடிநாதம். அந்த வகையில் மாட்டா ஹாரி அப்பட்டமான உளவாளியே! ஜேம்ஸ்பாண்டுக்கு துப்பாக்கியும், விசித்திரமான கைக்கருவிகள், வாகனங்கள் ஆயுதங்களாக இருப்பதை போன்று ஆக்ஷ் தூக்கலான ஆயுதங்கள் எதையும் இந்த உளவாளி வைத்திருக்கவில்லை. இன்றைய வல்லரசுகள் பலவும் பயன்படுத்தும் 'ஹனி ட்ராப்' வழிமுறையே மாட்டா ஹாரியின் ஆயுதம். விபச்சாரி, இரட்டை உளவாளி, வசியக்காரி என்று இழிவாக விளித்தாலும், அந்த காலத்து சமூகம் அவளுக்கு ஒதுக்கி வைத்த இடங்கள் இவையே என்பதை மறுக்க இயலாதே!

    2-3 நாடுகளுக்கு இடையிலான சதிராட்டத்தில் ஐந்தாம் படையினர் வீழ்ந்து போவது எப்போதும் நடக்கும் விஷயமே! மாட்டா ஹாரிக்கு எதிரி எந்த நாட்டு உளவு நிறுவனங்களுமல்லாமல், அவளுடைய அழகு மட்டுமே என்பது என் கருத்து! அந்த அழகை வைத்து மனிதர்களை வீழ்த்தும் கலையில் அவள் வென்றிருந்தாலும், யார் பக்கம் நின்று வீழ்த்துகிறோம் என்பதை உணராதவளாக இருந்த காரணத்தினாலேயே வீழ்ந்து விட்டிருக்கிறார்.

    டமால், டுமீல் என்ற ஆக்ஷன்களையோ, பஞ்ச் வசனங்களையோ எதிர்பார்க்காமல் ஒரு வாழ்க்கை வரலாற்று கதையை படிப்பதாக அணுகினால் 'மாட்டா ஹாரி' இன்னமும் அழகு தான்! இந்த கதையை ஜம்போவில் வழங்கிய ஆசிரியருக்கு மிக்க நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. That அடேய் ராயப்பா ..நான் நான்தானா ? நீ நீதானா ? மொமெண்ட்#

      Delete
    2. ஹிஹிஹி அதே தான் சார். எங்க தல பூபதி வேற லெவல் 🙏

      Delete
    3. அவள் காதலனின் பக்கம் நிற்கிறார்....பின்னர் பணத்தின் பக்கம்..சுற்றி வளைத்தால் பணத்தின் பக்கம்.....உளவுக்கு காதலும்...களவுக்காதலும் ஆகாது...

      Delete
    4. அருமை பூபதி... எங்களை போல புத்தகம் சீக்கிரம் கிடைத்து, உங்களின் இந்த விமர்சனம் வந்திருந்தால் நலமாய் இருக்கும். அதிரடி இல்லாவிட்டால் அது காமிக்ஸ்சே இல்லை என்னும் போக்கு இருக்கும் நம்முடைய இந்த சிறிய வட்டத்தில் மாறிட்டால் நல்லது. ஏனோ மாட்டா ஹாரியை இன்னும் படிக்கவில்லை. யூtube விவரம் பார்க்கையில் உடலை பணயம் வைத்து பகடைகாயாக மாண்டு போன இன்னுமொரு பரிதாபத்துக்குரிய பெண் ஜீவனென்பது புரிகிறது.

      Delete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. தொட்டால் பூ மலரும் ... ரூபீன் என்ற இந்த பூவை நெருங்கினாலே தெறிக்கிறது!

    செம செம அறிமுகம் ரூபீன்! கோடை மலர் அட்டை படத்திற்கு இவர் முழு தகுதியானவர்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையே ..அதே சமயம் ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப்படம் எப்பொழுதுமே மிக சிறப்பாக இருக்கும்..அவருக்கும் அட்டைப்படத்தில் சான்ஸ் கொடுத்து இருந்தால் இன்னும் பட்டாஸாய் இருந்து இருக்குமோ என்ன எண்ணமும் எனக்கு உண்டு..:-)

      Delete
  37. அடடே தொட்டால் தெறிக்கும் கதைக்கு நான் எழுதிய விமர்சனம் மேலே படத்தில் உள்ளது. என் முதுகில் நானே ஷொட்டு கொடுத்துக் கொள்ளும் படங்கள் 100.

    அண்ணன் அறிவரசு ரவி, நண்பர்கள் நவநீதன், மிதுன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எதுக்காக வாழ்த்துகள்! மன்னிக்கவும் நண்பரே, புரியவில்லை

      Delete
    2. மேலே உள்ள ருபின் விளம்பரம் பார்க்கவும். உங்கள் விமர்சனம் அதில் உள்ளது.

      Delete
    3. அட ஆமாப்பா நானும் இப்போதுதான் பார்த்தேன்,மகிழ்ச்சி...

      Delete
    4. இந்த வாரம் மீள் வாசிப்பில் மீண்டும் தெறிக்க விட வேண்டியதுதான்...

      Delete
    5. மிகவும் மகிழ்ச்சி நன்பரே,கண்டறிந்து சொன்னது நல்ல விஷயம்தான் 😁

      Delete
    6. அட, ஆமாம்! நன்றி நண்பரே!

      Delete
  38. // கொஞ்ச நேரத்தில் கதையின் flow நம்மைக் கைபிடித்து நடத்திச் செல்வது ஆரம்பித்திட, ஒரு மாதிரியாய்க் கரை சேர்ந்தேன் // அட்டகாசமான மொழிபெயர்ப்பு சார். அந்த கேரக்டர் ஸ்கெட்ச் செம்மையாக இருந்தது. சோடா போலவே இன்னும் ஒரு அசத்தலான அறிமுகம் இந்த ரூபின்.

    ReplyDelete
    Replies
    1. // அந்த கேரக்டர் ஸ்கெட்ச் செம்மையாக இருந்தது. //
      பாயிண்ட்...

      Delete
  39. //எனக்கெனக் கிட்டிய முதல் வாய்ப்பினை நான் முறையாய் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற உறுத்தல் உள்ளுக்குள் இருப்பதில் no secrets ! Maybe இன்னும் கொஞ்சம் சிரத்தையோடு அந்நாட்களில் செயல்பட்டிருக்கலாமோ ? என்ற எண்ணம் பின்னாட்களில் எழுந்து கொண்டே இருந்தது ! "ரைட்டு...ஒரு இரண்டாம் வாய்ப்பைப் பிடித்துத் தொலை ; இந்தவாட்டியாச்சும் சொதப்பி வைக்காதே !" என்று புனித மனிடோ 2011-ல் சொன்ன போது அதனை உதாசீனம் செய்தால் என்னை விடப் பெரிய டோமர் மண்டையன் யாருமே இருக்க இயலாதென்பது புரிந்தது !

    அந்த இரண்டாம் வாய்ப்பினை cherish செய்திடும் முனைப்பே இந்தப் பத்தாண்டுகளின் உழைப்புகள் சார் ! And ஒவ்வொரு படியிலும் உங்களின் அன்பான அண்மைகள் தரும் ஊக்கமானது இன்று வரைக்கும் ஓடும் 'தம்'ம்மைத் தந்து வருகின்றது ! கடந்த காலத்தை அழிக்கவல்ல ரப்பர்கள் கிடையாது தான் ; ஆனால் ஒய்வை நாடும் பொழுதினில், இந்த இரண்டாம் இன்னிங்சிலாவது I gave it my all என்ற திருப்தி இருக்குமல்லவா சார் ?//

    சார், நான் ஏற்கனவே கூறியது தான். பவர் ப்ளேயில் இருக்கும் உங்களிடம் நிறைய பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் எதிர்பார்க்கிறோம். சிங்கிள்களையும், டொக்குகளையும் 2011 க்கு முன்பு நிறைய பார்த்து போரடித்து விட்டது. இனி டொக்கு வைப்பதை குறைத்து கொண்டு முடிந்தால் தவிர்த்து விட்டு பந்துகளை பறக்க விடுங்கள்.

    ஆனாலும் ரீசன்ட் டொக்கு ரிப்கிர்பி மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்க முடியாத கதையாக அந்த தண்டவாளம் போன்ற அல்லது ஸ்கேலில் கோடு போட்டது போன்ற நேர்கோட்டு சிறிய பேனல்கள் அதிலும் மேக்ஸி சைசில் அப்பட்டமாக இருப்பது பளிச்.


    ReplyDelete
    Replies
    1. ஸ்கேல் புடிச்சுப் போடும் நேர்கோட்டுச் சந்தா பிளேயர் அடிக்கும் ஸ்கோர் : 120 /100 ! இத்தனைக்கும் இவருக்கு இது முதல் சீசன்தான் !

      கலக்கலாய் , வித விதமாய் தோரணம் கட்டி, கொட்டடித்து , பீப்பீ ஊதி பந்தாவாய் களமிறங்கும் சந்தா பிளேயர் அடிக்கும் ஸ்கோர் 70 /100 ! இவருக்கோ இது ஸீஸன் நம்பர் 11

      சொல்லுங்களேன் நண்பரே - IPL விளம்பரங்களில் இப்போது எந்த பிளேயரை முன்னிறுத்துவீர்கள் என்று ?!

      Delete
    2. இங்கே யாரையும், எதற்காகவும் நோவதில் பலனில்லை நண்பரே ! பத்தாண்டுகளில் ; கிட்டத்தட்ட 30 புது நாயக, நாயகியருடன் ; கிட்டத்தட்ட 500 + இதழ்களை வித விதமான ஜானர்களில், வித விதமான தயாரிப்புத் தரங்களில் களமிறக்கியாச்சு !

      ஆனால் கிளாசிக் நாயகர்களில் நாலே பேர், அதுவும் black & white-ல் செய்திருக்கும் விற்பனை சாகசம் - அந்த 120 + மாதங்களின் படைப்புகளை ஓரம் கட்டிவிட்டுள்ளது ! சொல்லுங்களேன் - கொண்டையை மறைக்க அவசியம் உண்டா - இல்லையா என ?

      Delete
    3. நன்றாகவே தெரிகிறது சார் நிலவரம். ஆனால் முன்பு ஒரு முறை தொலைக்காட்சி சந்திப்பில் பாலு மகேந்திரா அவர்கள் கமலஹாசனுக்கு கேட்ட கேள்வி இது "இடை இடையே குப்பை படைப்புகளை கொடுத்து விட்டு தான் ஒரு காவியத்தை தர வேண்டுமா. ஏன் அந்த குப்பைகளை தவிர்த்து விட்டு முழு மூச்சாக புதிய முயற்சிகளை தொடரலாமே".

      இது கமல் என்னும் நடிப்பு அசுரன் இன்னும் தன் திறமையை காட்ட வேண்டும், இருக்கும் குறைந்த காலத்தில் பல முயற்சிகள் மேற்கொண்டு புதிய களங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்க வேண்டும் என்கிற ஒரு அவா. தவிர அவர் குப்பை என்று குறிப்பிட்டு கூறியது "யாருடைய ரசனையயும் குறை கூறுவதற்காக அல்ல", ஒரு உன்னத கலைஞனின் கலை வீணாகிக்கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கமே.

      அதே நிலை தான் இங்கேயும் "உலகளாவிய தரமான புதிய படைப்புகளை தமிழில் காண்பது என்பது உங்கள் மூலம் தான் சாத்தியம்." இந்த க்ளாசிக் நாயகர்களை தான் தேவையான அளவுக்கு பார்த்தாயிற்றே. அவர்களுக்கு மனதில் இடம் கொடுத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லலாமே. இருக்கும் பொன்னான நேரத்தை புதிய ஆக்கங்களுக்கு செலவிடலாமே என்கிற ஆதங்கமே தான் சார் இது.

      மற்றபடி ஒரு பப்ளிஷராக பார்க்கையில் ஓடும் குதிரைக்கு தான் யாருமே பந்தயம் கட்டுவார்கள். இது நிதர்சனம்.

      அதே போல் 5 வருடத்திற்கு முன்பு மீண்டும் களமிறங்கி விற்பனையில் தெறிக்க விட்ட மாயாவி இப்பொழுது அமைதியாக இருக்கும் காரணம் அனைவரும் அறிந்ததே.

      அதே நிலை தான் இன்னும் ஒரிரு வருடங்களில் 70's நாயகர்களுக்கும் வரும். இதுவும் நிதர்சனம். அதன் பின்பாவது நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆசிரியரின் புது முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம்.

      நன்றி

      Delete
  40. சிகாகோவின் சாம்ராட்:
    அட்டகாசமான ஆக்சன் விருந்து..





    முதல் பதினைந்து பக்கங்கள் மட்டும்..

    ReplyDelete
    Replies
    1. ஏன் 15 ம் பக்கம் வந்தவுன வேற ஏதாவது வேலை வந்துருச்சா ரம்மி சார்.. ..அதுக்கு மேல படிக்கலையா...:-)

      Delete
  41. ///கிளாசிக் நாயகர்களில் நாலே பேர், அதுவும் black & white-ல் செய்திருக்கும் விற்பனை சாகசம் - அந்த 120 + மாதங்களின் படைப்புகளை ஓரம் கட்டிவிட்டுள்ளது ! சொல்லுங்களேன் - கொண்டையை மறைக்க அவசியம் உண்டா - இல்லையா என ?////

    ----ஆசிரியர் சார்@

    முதல் முறையாக விற்பனை முனையில் நல்ல தகவல்களை அளித்து உள்ளீர்கள்..😍😍😍😍

    நாயகர்கள் பழசு என்றாலுல் வரவேற்பை பெறுபவர்களையே தொடருங்கள் சார்👌👌👌👌
    இது பழையவ்வர்களின் காலம் எனும்போது அந்த பாதையில் பயணிப்பதே சரியானது...😍😍😍😍😍


    புதியதை விரும்பும் என் விருப்பத்தையும் ஒட்டுமொத்த நண்பர்களின் தேர்வின் முன் விட்டுத்தருகிறன்...


    ReplyDelete
  42. புதியது வேணும் என்கிற முயற்சியின்போது (முத்து50 திட்டமிடுதலின்போது ), பழைமைக்கு ஆதரவாக கருத்து சொல்லி வாதாடிய நண்பர்களிடத்தே, அப்போது அவர்களை வருத்தம் கொள்ள செய்தமைக்கு என் மன்னிப்பைக் கோருகிறேன்...

    புதியனவற்றுக்கான காலம் வந்திட்டது என நம்பிய என் கணிப்பும் பொய்த்துப்போனதையும் ஒப்புக் கொள்கிறேன்...

    நண்பர்களிடம் தோற்றுப்போனதை பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. 🙏🙏👏👏👌👌🤝🤝

      வார்த்தைகள் மொளனமாயிட்டு உங்க அன்பான வார்த்தைகள்ல...

      Delete
    2. நண்பரே...உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. மொத்தத்தில் காமிக்ஸ் ஜெயிக்க வேண்டும் என்பதே எல்லார் விருப்பமும்.

      Delete
    3. ஒரு சாவகாச வேளையில், நண்பர்களுக்கும் பங்கேற்கும் அவகாசம் கிட்டும் போது இன்னொரு பதிவில் இந்த சமாச்சாரங்களை அலசுவோம் folks !

      Delete
    4. புதியது வேணும் என்கிற முயற்சியின்போது (முத்து50 திட்டமிடுதலின்போது ), பழைமைக்கு ஆதரவாக கருத்து சொல்லி வாதாடிய நண்பர்களிடத்தே, அப்போது அவர்களை வருத்தம் கொள்ள செய்தமைக்கு என் மன்னிப்பைக் கோருகிறேன்...

      புதியனவற்றுக்கான காலம் வந்திட்டது என நம்பிய என் கணிப்பும் பொய்த்துப்போனதையும் ஒப்புக் கொள்கிறேன்...

      நண்பர்களிடம் தோற்றுப்போனதை பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்



      உண்மையை ஒத்துக்கொள்ளும் உங்கள் பெருந்தன்மை யாருக்கும் வராது நண்பரே பாராட்டுக்கள்

      Delete
    5. //மொத்தத்தில் காமிக்ஸ் ஜெயிக்க வேண்டும் என்பதே எல்லார் விருப்பமும்.//

      100% true, sago

      Delete
    6. நண்பர்களே@ நாம இருப்பதே ஒரு சின்னஞ்சிறு கூட்டம்... இங்கே நான் சொன்னது தான் சரி; அதுவே சாஸ்வதம்; அது தவறுனாலும் கூட திருத்திக்கொள்ள மாட்டேன்; நான் அதுலேயே தான் நிற்பேன் என பிடிவாதம் பிடித்து சாதிக்கப் போவதென்ன?????

      தன் நிலைப்பாடு தவறுனு தெரிஞ்ச பிறகும் வறட்டு ஜம்பத்தோடயேதான் இருப்பேன்னு இருந்து என்னத்தை நிலைநிறுத்தப்போறோம்....!!!

      புதியவைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பிறிதொரு நாளில் படித்துக்கொண்டால் போயிற்று...சோ சிம்பிள்...காத்திருக்கிறேன்...

      டெக்ஸ் வண்ணத்தில் காண, இ.ப. வண்ணத்தில் காண, கால் நூற்றாண்டு காலம் ஏன் அதற்கு மேலே கூட காத்திருந்தோமே.

      தற்போது பெரும்பாலான நண்பர்கள் விருப்பத்தின் படி போவதால் நன்மை விளையும் எனில் அதில் போக துளியும் தயங்குவானேன்.....!

      காமிக்ஸ் ஜெயிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தானே!!!!!

      Delete
    7. புதியனவற்றுக்கான காலம் வந்திட்டது என நம்பிய என் கணிப்பும் பொய்த்துப்போனதையும் ஒப்புக் கொள்கிறேன்...//

      தீர்ப்பு அவ்வளவு சீக்கிரமா எழுத வேண்டாம் எ. எ. க. . புதுசு பழசு என்பதை விட ஆர்வமூட்டும் பொழுதுபோக்கு கதைகள் விற்கும் என்பது தான் வரலாறு. அது அந்தியின் அழகேவாக இருந்தாலும் சரி பராகுடாவாக இருந்தாலும் சரி…க. ம. கோட்டையாக இருந்தாலும் சரி. எது ஆர்வமூட்டுமவது என்பது காலகட்டத்தை பொறுத்து மாறுபடலாம்.

      S70 என்பது நீண்ட கால காத்திருப்பு. எனவே மிகுந்த ஆரவார வரவேற்பை பெறுவது நியாயமே.

      சந்தையில் வரவேற்பை தொடர்ந்து பெற வேண்டிய கட்டாயம் இங்கு டெக்ஸ்வில்லர் கதைகள் மேற்கொண்டு எல்லாக் கதைகளுக்கும் உண்டு. சோ..அந்த கட்டாயம் S70 நாயகர்களுக்கும் உண்டு.

      Delete
    8. வாஸ்தவம்தான் மஹி..மாப்பு... மிக சரி!
      ஆனா நம்மாட்கள் கெளபாய், டிடெக்டிவ், பேன்டசி& மும்மூர்த்திகள் மீது தீராக் காதல் கொண்டுள்ளனர்..

      அது இப்போதைக்கு தீர்ந்து போகும்னு நினைக்கல....

      அத்தி பூத்தார்போல ஓரு ஜேசன் ப்ரைஸ்ம், அந்தியும் அழகேயும், ஓருபாரகுடாவும் வெற்றி பெறலாம்... ஆனா தொடர் வெற்றிகளை இதுபோன்ற புதியவர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை இனியும் வளர்த்துக்கொள்வதில் அர்த்தம் இல்லை..

      யாருட விரும்பத்தை மீறி எதையும் திணிக்க இயலாது....😊

      Delete
  43. நீங்கள் மட்டுமல்ல சார் நாங்களுமே எங்கள் காமிக்ஸ் பொற்காலத்தை மட்டுமல்ல பொக்கிசங்களையும் தவறவிட்டுவிட்டோமே என்று வருந்திக் கொண்டே இருக்கிறோம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  44. கோடை மலர் டிடெக்டிவ் ரூபின் அருமை, அதிரடி ஆக்சன், தொடர்ந்து வாய்ப்புகளை

    கொடுங்க, கார்ட்டூன் படங்களாக கிடைத்த இரண்டு அதிரடி ஆக்சன் ஹீரோஸ் soda and ரூபின்

    ReplyDelete
  45. In FB post some people are asking about where books can be brought...but not sure why they can't reach the number provided in the message...latest mayavi photo msg so many are asking about that

    ReplyDelete
  46. கதை சொல்லும் காமிக்ஸ் எப்போது வெளிவரும் சார்?

    ReplyDelete
  47. அண்டர்டேக்கரின் அடுத்த பாகம் சுடச் சுட ரெடி ஆவது சூப்பர் நியூஸ்! அட்டைப்படம் செமையாக உள்ளது! ஒரிஜினலில் வெளியானவுடன் இங்கேயும் அதனை வெளி இட ஏதுவாக நமது காலெண்டரில் ஒரு இடத்தை கொடுத்து விடுங்கள் சார்.

    அண்டர்டேக்கர் எனக்கு காமிக்ஸ் ஹீரோ போல் தெரியவில்லை உண்மையான ஒரு மனிதனின் வாழ்க்கையை பின் தொடர்வது போல் உள்ளது. அவ்வளவு இயல்பான கதாபாத்திரங்கள் அவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சித்திரங்கள்.

    ReplyDelete
  48. அன்பு நண்பர் STV@

    உணர்ச்சிபூர்வமாக எழுதிவிட்டீர்கள்.
    உண்மையின் வெளிச்சம் அதில் இல்லை என்பது கண்கூடு.

    S70 s விற்பனை 120 மாத வெளியீடுகளின் விற்பனையை காட்டிலும் அதிகம் என அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எடிட்டர் சார் கூறினாலும் அதன் காரணம் அனைவரும் அறிந்த ஒன்றே.

    லயன் முத்து காமிக்ஸ் வரலாற்றில் 4 வெவ்வேறு நாயகர்களின் வேறு வேறு இதழ்களுக்கும் ஒற்றை சாளர சந்தா என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது கிடையாது.

    ஜம்போ இதழ்களும் கூட தனித்தனியே நீங்கள் வாங்க இயலும்.வழமையான சந்தா இதழ்களைப் போல.

    சரித்திர முயற்சியாக s70s இதழ்களை முகவர்கள் வாங்க வேண்டுமாயின் முதல் இதழை வாங்கும்போதே இரண்டாம் இதழுக்கும் முன்பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது.


    இவை தனித்தனி இதழ்களாக வெளியாகி இருக்குமாயின் இந்த மகோன்னத வெற்றி சாத்தியமாகி இருக்கமுடியுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    வேதாளர் என்ற ஒற்றை மந்திரச் சொல் ஏற்படுத்திய பிரளய விளைவுகளுக்கு கிர்பி, காரிகன், மாண்ட்ரேக் ஆகிய மூவருக்கும் பாராட்டினை பகிர்ந்தளித்து 4 கிளாஸிக் நாயகர்கள் என எடிட்டர் சார் கூறியிருப்பதை அப்படியே ஏற்க மனம் ஒப்பவில்லை.

    எடிட்டர் சார் 4 - இதழ்களும் ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான சித்தாந்தரீதியாக, தர்க்கரீதியாக அனைவரும் ஏற்றுக் கொள்ள காரணங்களை சொல்லிவிட்டே இதழ்களை வெளியிட்டார். அவர்மேல் இக்காரணம் குறித்து எவ்வித குறையுமில்லை.

    ஆனால்

    நிபந்தனையின் பேரில் வெளியிடப்பட்ட கிளாஸிக் நாயகர்களின் வெற்றியை முன்வைத்து தடதடக்கும் வெற்றியை முன்வைத்து துவங்கிய லார்கோக்களையும்( கடைசி இதழ் தவிர), ஆரம்பகால ஷெல்டன்களையும், அதிசயிக்க வைத்த அண்டர்டேக்கர்களையும், திகைப்பிலாழ்த்திய ட்யூராங்கோக்களையும் ,பிரமிக்கவைத்த பௌன்ஸர்களையும், மொழியாக்கம்,உன்னத நடை, சம்பவக்கோர்வை, வளர்உருமாற்றம் கண்ட மார்கோ இவற்றை உள்ளடக்கிய மாபெரும் சாதனை படைத்த பிஸ்டலுக்கு பிரியாவிடைகளையும் , சமீபத்தில் வந்த ரூபின்களையும் மங்கலான பிம்பங்களாக காண்பிப்பதை உள்வாங்க இயலவில்லை.

    வேதாளர் எனும் சூரியனின் ஒளியை வாங்கி வெளிவிடும் நிலாக்களான இதர நாயகர்களையும் ஆதவன்கள்தான் எனச் சொல்லி புதுயுக நாயகர்களின் புகழின் மேல் கிரகண நிழல் படிவதை உண்மையாகவே ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

    பழமை , புதுமை இவ்விரண்டின் சம விகிதாச்சார கலவைகளை கூட ஏற்றுக் கொள்ள இயலும்.

    கொண்டாட்ட தருண மகிழ்வு கலவையின் விகிதாச்சாரத்தை புரட்டி போட்டுவிடக் கூடாது என்பதே வேண்டுகோள்.

    ஏழ்மை பற்றி எழுசீர் கழிநெடிலடி ஆசிரியப்பாவில் சத்தியமுற்றத்து புலவர்

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே

    எனப் பாடினார்..



    ரசிகவ் ஞானியார்

    ஏழ்மை


    மகள் பூப்பெய்தினாள்

    அவள் தாய்க்குமினி
    தாவணிதான்.


    எனப் பாடினார்

    முன்னது இலக்கியச் சுவையின் வெளிப்பாடு என்றால் பின்னதுபொளேரென்று பொட்டில் அறையும் புதுமையின் அறைகூவல்.

    ஒன்றை உயர்த்தி பிறிதொன்றை தாழ்த்துவது வேண்டாமே.

    ஷானியாக்களும், ஜூலியாக்களும் தோற்றிருக்கலாம்.அவை கால்குலேடட் ரிஸ்க்குகள்.( எடிட்டர் சாரின் பணப் பைகள் என்னிடம் இல்லாததால் இதைச் சொல்வது சுலபம்தான்:)]

    பதநீரும், இளநீரும் நுங்குகளும் வரட்டும். ஜிகர்தண்டாக்களுக்கும் ,பலூடாக்களுக்கும் போதிய இடமிருக்கட்டும்.




    ReplyDelete
    Replies
    1. ஒன்றை வேகமா எதிர்க்கவும் வேண்டாம்; அதே வேகத்தோடு ஏத்துக்கவும் வேணாங்கறீங்க. சரிங்களா செனா?

      வேதாளரின் ஆரம்ப வெற்றி அபாரமானது; தொடர் வெற்றியாக வாழ்த்துகள்.

      மொத மேட்சுல டபுள் செஞ்சுரி அடிச்சவர் தொடரும் மேட்சுகளில் எப்படி ஆடறாருன்னு பார்ப்போமே.

      Delete
    2. /ஒன்றை வேகமா எதிர்க்கவும் வேண்டாம்; அதே வேகத்தோடு ஏத்துக்கவும் வேணாங்கறீங்க. சரிங்களா செனா?/


      Yep! :)

      Delete
    3. நெடிய விளக்கம் அருமை செனா அனா ஜி!

      ஆம்....என் முடிவுகளில் அநேக நேரங்களில் உணர்வு பூர்வமாக இருக்கும், அப்படியே அமைந்துவிடுகிறது!

      ///என் இளம் பருவத்தில் இந்த மும்மூர்த்திகளோ, ரிப்கெர்பி, காரிகன், மாண்ட்ரேக், சார்லி, விங் கமாண்டர் ஜார்ஜ்..... போன்ற பழமையான ஹூரோக்கள் பரிச்சியம் அல்ல... அவைகள் அந்த வயதில் ஏற்படுத்தியிருக்க கூடிய தாக்கம் என்னவென அறிந்திருக்கவில்லை...!!
      அதை உணர்ந்தவர் சொல்லும் போது விளங்கிங்கொள்ளவும் வாய்ப்பில்லை..

      தொடர்ச்சியாக சில புதியவர்கள் வெற்றி பெறவும் புதியனவற்றுக்கான காலம் கனிந்ததாக நினைத்தேன்...,அதன்படியே முத்து50திட்டமிடுதலின்போது புதியவை வேணும்என பேசவும் செய்திருந்தேன்...

      புதியனவை வரும்மாதங்களில் ((அந்தியும் அழகே& தோழனின் கதை போன்ற சில விதிவிலக்குகள் தவிர்த்து) பொதுவான ஒரு மெல்லிய இறுக்கத்தை உணரமுடிகிறது....

      அந்த "இறுக்கம்" விற்பனையிலும் எதிரொளிப்பதாக ஆசிரியர் சாரின் கூற்றும் தெரிவிக்கிறது!

      முன்கூட்டியே முடிவுக்கு வந்துட்டமோ என்ற என் முன்மொழிவை விளக்கிக்கொண்டேன்!////

      இது தற்காலிகம் தான் என்ற தெளிவில் தாங்களும் மஹியும் உள்ளீர்கள்! அப்படியே அமைந்தால் சந்தோசமே!

      காலம் என்ன முடிவை தரப்போகிறது என கணிப்பதில் முந்தைய வரலாறும் ஆணித்தரமான ஆதாரத்தைக் கொண்டே உள்ளது புரிகிறது!

      பழமைக் காதல் எந்தளவு போகிறதுனு காண ஆவலுடன் காத்துள்ளேன்...!!!

      Delete
  49. Replies
    1. தொட்டால் தெறிக்கும் - ஒன்னுமே புரியாத மாதிரி ஆரம்பித்த கதை பக்கங்கள் செல்லச் செல்ல அட இதுவா விஷயம் என அழகாக ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்து அதனை இணைத்து ஒரு நேர்கோட்டுக்கு கொண்டு வந்து முடித்து விட்டார்களே என நினைக்கும் போது கதை இன்னும் முடியவில்லை தம்பி என்று அடுத்த சில பக்கங்களில் ஒரு தெறிக்கும் குட்டி பிளாஷ் ப்ளாக் என கொடுத்து கதையை முழுமையாக முடித்தது ரசிக்கும் படி இருந்தது!

      இது போன்ற கதை கருவை கொண்ட கதைகள் பல உள்ளது என சொல்லலாம் ஆனால் இந்த கதை சொல்லப்பட்ட முறை இது ஒரு வித்தியாசமான வாசிக்கும் அனுபவத்தை கொடுத்தது! இந்த கதைக்கு கார்ட்டூன் பானி ஓவியம் மிக பெரிய பலம் என்று சொல்லலாம்.

      ரூபினி தெனாவட்டு போலீஸ், அதற்கு ஏற்றார் போல கதை களம் ப்ளஸ் வசனங்கள் சிறப்பு! நிறைய இடத்தில வசனங்கள் அட போட வைத்தது.

      முதல் சில பக்ககளில் ஒரு கடுதாசி சரியான முகவரிக்கு பயணம் செய்யும் விதம் வித்தியாசம், அதிக பொறுப்பெடுத்து சில மனிதர்கள் கடுதாசியை சேர்க்க தங்களால் ஆனதை செய்ய இறுதியில் அவர்களுக்கு ஏற்படும் முடிவு எதிர்பாராதது. நிகழ்கால வாழ்க்கையிலும் இது போன்ற பொறுப்பான மனிதர்களுக்கு கிடைக்கும் மரியாதை கசப்பானதே!

      மொத்தத்தில் தொட்டால் தெறிக்கும் தெறிக்கும் வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது!

      Delete
  50. தொட்டால் தெறிக்கும் - படித்தால் பத்திக்கும் .

    சும்மா தெறி ரகம்.

    இன்ஸ்பெக்டர் நம்பள் மனசை டச் பண்ணிட்டாங்கோ.

    ஒரு நேர்கோட்டுத் துப்பறியும் கதை.பழைய தமிழ்ப்படங்களைப் படைப்பாளிகள் பார்த்திருக்க வேண்டும்.

    இன்ஸ் ரூபினின் அடுத்த சாகசத்துக்காக காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  51. சார் பழனி ஸ்பெஷல் எப்பொழுது வரும்

    ReplyDelete
  52. இன்று பதிவு உண்டுங்களா

    ReplyDelete
  53. சார்::பழனி ஸ்பெஷல்""பதிவு இன்றா அல்லது நாளைய

    ReplyDelete
  54. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    *திருப்பூர் புத்தக விழா 2022 கொண்டாட்டம்*

    நாளை தொடங்கும் திருப்பூர் புத்தக விழாவில் *"லயன்-முத்து"* ஸ்டாலில் புத்தகங்கள் வாங்கும் *"திருப்பூர் புத்தக விழா2022" வாட்ஸ்ஆப் குழு* நண்பர்களுக்கு மட்டுமே...

    *தினந்தோறும் பரிசு& மெகா பரிசு* காத்திருக்கிறது..

    தினந்தோறும் பரிசு:- *உயிரைத்தேடி*

    *11நாட்கள்..... 11பரிசுகள்.....*

    லயன்- முத்து ஸ்டாலில் ஏப்ரல் 14 முதல் 24வரை ரூ700&அதற்கு மேல் புத்தகங்கள் வாங்கும் நண்பர்களில் குலுக்கள் முறையில் தினம் ஓருவருக்கு உயிரைத்தேடி பரிசளிக்கப்படவிருக்கிறது. அதை அடைய நீங்கள் செய்ய வேண்டியது என்ன???

    *லயன்-முத்து ஸ்டாலில் ரூ700க்கு மேல் புத்தகம் வாங்கும் நண்பர்கள் தங்கள் பில்லை போட்டோ எடுத்து இங்கே பதிவிடவேணும்...! ஒருவர் மட்டுமே எண்ட்ரி ஆகி இருந்தால் அவருக்கே பரிசு. ஓன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் பதிந்து இருந்தால் அவர்களில் இருந்து குலுக்கள் முறையில் ஒருவருக்கு பரிசு...*

    தினம் பரிசளிக்க *திருப்பூர் வாசகர் வட்டம்* ரெடி; வாங்க நீங்க ரெடியா நண்பர்களே????

    *மெகா பரிசு:-*

    தினம் ஓரு புத்தகம் மட்டுமா??? காத்திருக்கிறது *அதிரடி Super60 சந்தா ஒருவருக்கு....*

    தினம் தங்களின் பில்லை இங்கே பதிவிடும் நண்பர்கள் அனைவரும் குறித்துக்கொள்ளப்பட்டு, புத்தகவிழாவின் கடைசி நாளில் அதில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்த்தெடுக்கப்பட்டு அவருக்கு *2023ன் Super 60 சந்தா*(Smashing 70-சீசன்2) பரிசளிக்கப்படவிருக்கிறது....

    மெகா பரிசையும் தினந்தோறும் பரிசையும் அள்ளிக்கொள்ள அனைவரையும் திருப்பூர் புத்தக விழா வருக வருக என *திருப்பூர் வாசகர் வட்டம்* அன்போடு அழைக்கிறது🙏🙏🙏🙏🙏

    அனைவரும் கலந்து கொள்ளுங்கள்; பரிசுகளையும் அள்ளிச்செல்லுங்கள் நண்பர்களே!

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    https://chat.whatsapp.com/Fs50U1MCKy6LNc1X1LqcAG

    *பரிசுகளை வெல்ல இப்போதே இணையுங்கள் திருப்பூர் புத்தகவிழா 2022வில்...*

    ReplyDelete
  55. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  56. சார் தமிழ் புத்தாண்டு பதிவு ஒன்று? நமது அன்பிற்கு உரிய ஆசிரியர் அவர்களுக்கும், நமது நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  57. லயன் குழுமம் மற்றும் நம்பர்கள் அனைவருக்கும் சுபக்ரித் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  58. ஒரு tex கிளாசிக் 2 மற்றும் கோடை online புத்தக விழா குறித்த பதிவு போடுங்க சார்

    ReplyDelete
  59. Edi Sir..
    இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  60. இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  61. நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐🥗🥙🙏

    ReplyDelete
  62. சகோதரிகள், நண்பர்கள், சொந்தங்கள், அன்பின் ஆசிரியர் சார், சீனியர் சார்& ஆசிரியர் பணியாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐🥗🥙🙏

    ReplyDelete
  63. ஆசிரியர் அவர்களுக்கும்! சீனியர் எடிட்டர் ஐயா அவர்களுக்கும் !ஜூனியர் எடிட்டர் அவர்களுக்கும்! மற்றும் சக ஊழியர்களுக்கும்! காமிக்ஸ் சொந்தங்களுக்கும் !! இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 🎉💥🎉🎉🎉

    ReplyDelete
  64. ழ, ழகரம், தனிப்பெரும் புகழ் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், நண்பர்களே

    ReplyDelete
  65. ஆசிரியர் மற்றும் லயன் காமிக்ஸ் அலுவலக மற்றும் வாசக நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  66. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  67. Replies
    1. வந்து விட்டீர்களா? Very good

      Delete
  68. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  69. இன்று பதிவுக் கிழமை சார்

    ReplyDelete
  70. சார் இன்றாவது பதிவு வருமா??

    ReplyDelete
  71. சார் இன்று ச.கி...,அதனால ப.கி...

    ReplyDelete
  72. இன்று பதிவு உண்டுங்களா ?

    ReplyDelete
  73. நாளை Tex classic 2 அனுப்பிச்சுட்டு பதிவு போடுவாருங்க.

    ReplyDelete
  74. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete