Tuesday, November 30, 2021

ஒரு டிசம்பர் டான்ஸ் !

நண்பர்களே,

வணக்கம். ஊரெல்லாம் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வேளைகளில் கூட, சும்மா ஜிலோவென்று வெயில் அடிக்கும் ஊர் - எங்களது ! ஆங்காங்கே சாலைகளில் போட்டிங் போகும் கொடுமைகளை ட்விட்டரிலும் ; டி-வியிலும் பார்த்த கையோடு, பிக் பாஸ் பார்க்கக் கிளம்பி விடுவார்கள் எங்கள் ஜனம் ! ஆனால் கடந்த சில நாட்களாய் எங்களுக்கே ரிவிட் அடித்து வருகிறார் வருண பகவான் ! ராத்திரிகளெல்லாம் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்த மழையில் பைண்டிங் ஆபிஸுக்குப் போகும் சாலையே குளமாகிப் போயிருக்க -  டிசம்பர் புக்ஸ் இன்று காலை தான் டப்பிக்களில் அடைக்கலமாகிப் பயணங்களைத் துவங்கியுள்ளன ! So உங்கள் ஊர்களில் படகு விடும் நிலவரங்கள் இல்லையெனில் - நாளை முதற்கொண்டு பட்டுவாடாக்கள் துவங்கிட வேணும் ! மழை தேவன் மனசு வைப்பாராக !!

So ஒரு ரொம்பவே புதிரான கூட்டணியிலான புக்ஸ் இம்மாதம் உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டக் காத்துள்ளன !! 

**மறதிக்கார நண்பர் XIII-ன் இந்தப் புது ஆல்பத்தை முழுமையாய் உள்வாங்கிட - இரண்டாம் சுற்றின் முந்தைய இதழ்களையெல்லாம் ஒரு புரட்டாவது புரட்ட அவசியமாகிடலாம் ! வழக்கம் போல் "தொடரும்" என்ற கொக்கியோடு இந்த ஆல்பமுமே நின்றாலும், ஏகப்பட்ட ஆக்ஷன் blocks உண்டென்பதால், அவற்றையும், சித்திர ஜாலங்களையும் ரசிக்கவே பொழுது போறாதென்பேன் !

**"சின்னவர்" சமாச்சாரத்திலுமே கொஞ்சமே கொஞ்சமாய் flashbacks சார்ந்த ஞாபகங்கள் இருந்தால் தேவலாம் என்பேன் - becos "எதிரிகள் ஓராயிரம்" ; "காற்றுக்கென்ன வேலி ?" போன்ற இளம் டெக்ஸ் backissues களோடு இணைந்தே இந்த சாகசத்தின் முடிச்சும் பயணிக்கிறது ! 320 பக்க குண்டு புக் ; so கணிசமாய் நேரமும் ஒதுக்கிக் கொள்ளுங்கோ - ப்ளீஸ் !

**சிறப்பு டிடெக்டிவ் ஷோம்சும், சிரிப்பு டாக்டர் வேஸ்ட்சன்னும் - எப்போதும் போலவே லாஜிக்காவது, ஒண்ணாவது - என்று லூட்டி அடிக்கின்றனர் - ஒத்தாசைக்கு அலாவுதீன் பூதத்தையும் வைத்துக் கொண்டு ! So ஒரு அரை அவருக்காவது அவரவர்களது லாஜிக் லட்சுமணசுந்தரம் அவதார்களுக்கு விடை தந்திடாவிடின், மத்தளம் கொட்டவே அவசியப்படும் - என் சிரத்தில் !

**And "காட்டான் கூட்டம்" !! புது வெட்டியானின் இலக்கியத் தேடலின் பலனான ஒற்றை நாளே இந்த ஆல்பம் ! கரடு முரடான வன்மேற்கு ; அதன் கோக்குமாக்கான மக்கள் - இவர்களின் மத்தியில் ஒரு கலா ரசிக வெட்டியான் என்பதே இங்கு cocktail ! So  "இது தான் கதை ! இது தான் ட்விஸ்ட் ; இது தான் க்ளைமாக்ஸ்" - என எதிர்பார்த்துத் தேடினீர்களெனில் நிச்சயமாய் கிட்டிடாது ! And சித்திர பாணிகள் + கலரிங்குமே இங்கு ரசிக்கப்பட வேண்டிய முக்கிய அங்கங்களே ! பர பரவென வரிகளை மட்டும் வாசித்து விட்டு 'வரட்டா ?' எனக் கிளம்புவதே உங்களின் பாணியெனில், இம்முறை கொஞ்சமே கொஞ்சமாய் மாற்றம் அவசியமாகிடலாம் ! 

So கொஞ்சம் preparations கோரிடும் கூட்டணி இம்முறை ! தேர்ந்த ஜூரிக்களான உங்களுக்கு இதையெல்லாம் நான் சொல்லிட வேண்டிய  அவசியங்கள் இராது தான் ; but என் திருப்திக்காகவாச்சும் சொல்லி வைத்து விடுவோமே என்று தோன்றியது !! நாளை முதல் உங்களின் அலசல்களுக்கு spotlight-ஐ ஒதுக்கிடுவோமா ? Happy reading all !!

அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி :

https://lion-muthucomics.com/latest-releases/890-december-pack-2021.html

https://lioncomics.in/product/december-pack-2021/

Happy shopping too !

மீண்டும் சந்திப்போம் ; நான் அட்டவணையின் 12 மாதங்களுக்குள் எந்தெந்த இதழ்களை எங்கெங்கே புகுத்துவதென்ற சிண்டைப் பிய்க்கும் பணியினைத் தொடரக் கிளம்புகிறேன் ! கதைகளைத் தேர்வு செய்வதை விடவும், அவற்றை slot செய்திடும் பணியானது செம tough என்பதை பத்தாவது தபாவாய் உணர்ந்து வருகிறேன் - கடந்த பத்தாண்டுகளில் !! Bye all...see you around !!

கிளம்பும் முன்பாய் - மறுபடியும் FFS முன்பதிவு / உங்கள் போட்டோக்கள் சார்ந்த நினைவூட்டல் guys ! நிறையப் பேர் அனுப்பி வருகின்றனர் ; ஆனால் இன்னமும் கணிசம் வந்திட வேண்டியுள்ளது ! லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்டாய் வருவது இங்கு சாத்தியமாகாது என்பதை நினைவூட்டுகிறேன் ; so சற்றே வேகம்ஸ் ப்ளீஸ் ! அப்புறம் சில விஷயங்களுமே :

1.நீங்கள் அனுப்பும் போட்டோக்கள் கொஞ்சமேனும் ஷார்ப்பாய் இருந்தால் தேவலாம் ; ரொம்பவே மொசு மொசுவென்ற இமேஜஸ் நிறையவே வந்துள்ளன !  அவை ஒரு முழுப் பக்க சைசுக்குப் பெரிதாய் அச்சாகும் போது - "இந்த அண்ணாச்சி ஆரு ?" என்ற கேள்வியினை உங்களுக்கே எழுப்பிடும் !! 

2 .தவிர, இயன்றமட்டுக்கு நேர்வசமான போட்டோக்களாய் இருந்தால் புக்கிலும் அவை பொருத்தமாய் உட்கார்ந்திடும் ! மாறாய் wide angle-களில் எடுத்து அனுப்பிடும் போட்டோக்களை படுக்கவசமாகவே அச்சிட சுகப்படும் ! அவை புக்கில் பார்க்கும் போது பாந்தமாய் இருக்க கஷ்டப்படும் ! So கவனம் ப்ளீஸ் !! 

3 .உங்களின் போட்டோக்களோடு சந்தா நம்பர்ஸ் ப்ளீஸ் ? மூன்றோ நான்கோ நபர்கள் ஒரே பெயருடனும் உள்ளனர் எனும் போது குளறுபடிகளுக்கு வாய்ப்புகள் ஏகம் ! So ப்ளீஸ் - வெறும் போட்டோக்களை மொட்டையாய் அனுப்பிட வேணாமே ?     

And இந்தக் கோரிக்கைகள், போட்டோக்களை இனி அனுப்பிடவுள்ள நண்பர்களுக்கு மாத்திரமே ; ஏற்கனவே குவிந்து கிடக்கும் மெயில் பாக்சில் மேற்கொண்டும் போட்டோக்களைக் குவித்தால், நம்மாட்களின் கதை கந்தலாகிப் போகும் !

And இதோ - போன பதிவில் நான் பிராமிஸ் செய்த "டேங்கோ" உட்பக்கப் பிரிவியூ :



Friday, November 26, 2021

லயன் லட்டு லைப்ரரி...!

 நன்பர்களே,

வணக்கம். டிசம்பர் ஆல்பங்களின் பணிகளெல்லாம் நிறைவுற்றிருக்க, FFS இதழ்களின் finishing touches-ல் செம பிசி - கடந்த வாரமாய் ! கொட்டித் தள்ளும் மழை டிசம்பரிலும் இது போல ஏதேனும் அதிரடிகளைக் காட்டும் உத்தேசத்தில் இருப்பின், நாம் முன்ஜாக்கிரதையாய் முந்திக் கொண்டாகணும் அல்லவா ? So தட தடத்து வருகிறோம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல - நான்கு இதழ்களின் பணிகளுடன் ! 

And FFS புக்களுக்கான அட்டைப்படங்களுமே நிறையவே trial & error சகிதம் ஓட்டமெடுத்து வர, நமது டிசைனர்கள் அத்தினி பேரும் - வானிலை அறிக்கையைக் கேட்கும் சென்னைவாசிகளைப் போல தெறித்தடித்து ஓடி வருகின்றனர் ! ஜனவரியில் இதழ்(கள்) வெளியான பின்னே, அவற்றின் making பற்றி எழுதிடும் வேளையில் - இன்றைய இந்த அட்டைப்படக் கூத்துக்களை நிச்சயம் பகிர்ந்திடுவேன் ! And அந்தப் பதிவுக்கு பெயர் கூட ரெடி -  "சலோ ஜார்கண்ட் !!" என்று ! எது எப்படியோ - ஒரு மைல்கல் தருணத்தின் பொருட்டு அரங்கேறி வரும் இந்த அட்ராசிட்டிக்கள் - உங்களின் புத்தாண்டின் பொழுதுகளை 'பளிச்' ஆக்கிடும் பட்சத்தில் - நிச்சயம் ஒட்டு மொத்தமாய் மகிழ்வோம் ! Fingers crossed - with a prayer on the lips too !!

டிசம்பரின் இதழ்கள் நவம்பர் 29-ல் கிளம்பிடுமா ? அல்லது 30-லா ? என்பது வர்ண பகவானின் கைகளில் உள்ளதால் - இப்போதைக்கு நான் வாயை விடத் தயாரில்லை ! 3 புக்ஸ் ஏற்கனவே பைண்டிங் முடிந்து காத்திருக்க, 320 பக்க குண்டுப்பையனான "இளம் டெக்ஸ்" தான் ரெடியாகிடணும் ! படிக்கும் போது 'தல' ரம்யம் தருகிறார் தான் - ஆனால் பணியாற்றும் போதோ, அந்த sheer number of pages பெண்டைக் கழற்றிட தவறுவதே இல்லை ! அதிலும் இம்முறை 62 பக்கங்கள் வீதம் 5 அத்தியாயங்கள் எனும் போது - பக்கங்களும், பணியும் முடிஞ்சா பாடில்லை ! ஒரிஜினல் வரிசையின்படி - நாமிப்போது வாசிக்கக் காத்துள்ளவை ஆல்பம்ஸ் 5 to 9 வரையிலான இதழ்களை ! 'சின்னவருக்கு' இன்னமும் ஒரு பின்னணி ; ஒரு கள உருவாக்கல் நிலையிலேயே நாமிருக்கிறோம் என்பதால் - பெரியவர் பாணியில், சலூனுக்குள் புகுந்தோமா ? முரட்டு பீஸ்களாய்ப் பார்த்து மூக்கோடேயே குத்தினோமா ? என்ற பாணிகள் இன்னமும் இங்கு உட்புகுந்திருக்கவில்லை ! Maybe பெருசுக்கும், சிறுசுக்கும் மத்தியினில் கதாசிரியர் போசெல்லி அவர்கள் காட்ட விரும்பிடும் நூலிழை வேற்றுமைகளின் ஒரு அங்கமாகக் கூட இது இருந்திடலாம் ! எனது ஆதங்கம் என்னவெனில், முரட்டு & மொக்க பீஸ்களுக்கு சுளுக்கெடுக்கும் படலங்கள் அரங்கேறிடும் வேளைகளில் வசனம் அதிகம் அவசியமாகிடாதென்பதே ! தெறிக்க விடும் பன்ச் ஏதாச்சும் சிக்கினாலே ஒரு எட்டுப்பத்துப் பக்கங்களை ஜிலோவென்று தாண்டி விட இயலும் எனக்கு ! ஆனால் இங்கே still very much a hero in progress என்பதால் டயலாக்ஸ் ஏகம் ! So நமது தமிழாசிரியர் அவர்கள் proof reading செய்து தர, நான் இறுதி எடிட்டிங்கை நிறைவுறச் செய்திட - என ஒன்றிரண்டு நாட்கள் கூடுதலாய் இழுத்து விட்டது ! இதற்கு முந்தைய அத்தனை ஆல்பங்களிலும் 'சின்னவர்' அடித்துள்ள சூப்பர் ஹிட்ஸ், இம்முறையும் தொடருமென்ற நம்பிக்கை எனக்குள் கணிசம் ! அடுத்த சில நாட்களில் பார்த்து விடலாமே !!

ரைட்டு...டிசம்பர் பிரிவியூஸ் ஆச்சு ; அவற்றைப் பற்றி மேலோட்டமாய்ப் பேசவும் செய்ஞ்சாச்சு ; இணைத்தடத்தில் FFS கதைகள் பற்றி சலசலக்கவும் செஞ்சாச்சு ! இந்தப் பதிவில் what next ? என்று யோசித்தேன் ! போன வாரத்து பாணியினில் அடுத்த புது வரவை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று தோன்றியது ! 'அதுவும் செர்தான் ; டேங்கோ தம்பியினை சபைக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் !' என்று தீர்மானித்த போது தான், இனிப்பு லட்டு, புளிப்பு லட்டு என்று உங்களை உசுப்பி விட்ட ஞாபகம் எழுந்தது ! மகளின் திருமணத்துக்கு பத்திரிகை தர வந்த நண்பன், கையோடு கொண்டு வந்திருந்த ஒரு டப்பி லட்டுக்கள் அதற்கு உதவியும் இருக்கலாம் தான் ! So ஒரு இனிப்பு லட்டு first ; டேங்கோ அறிமுகம் next !

ஒரு ருசியானது - தித்திப்பா ? அல்லது திகட்டலா ? என்பது அவரவர் நாவிற்கேற்ப மாறிடும் என்பதைப் புரிந்திடுவது பெரும் கஷ்டமே அல்ல தான் ; so தொடரவுள்ள அறிவிப்பானது அவரவரது ரசனைகளுக்கேற்பவே,  impact ஏற்படுத்திடும் என்பதை நான் நினைவில் இருத்தியாச்சு ! "திகட்டுது" அணியினராய் யாரெல்லாம் இருப்பர் ? என்பதைக் கூட யூகமும் பண்ணியாச்சு ! And அவர்களுக்கு ஒற்றை வேண்டுகோள் மாத்திரமே : ரொம்ப காலமாய் ; ரொம்ப ரொம்ப காலமாய் நண்பர்களின் ஒரு அணி (சிறுசோ - பெருசோ ; doesnt really make a difference !!) கோரி வருவதை நடைமுறை செய்திடும் வாய்ப்பாய் இதனைப் பார்த்துள்ளேன் ; so உங்களுக்குத் திகட்டலாய்த் தென்பட்டாலுமே, அந்த நண்பர்களின் மகிழ்வுக்கோசரம் சற்றே பொறுமை காத்திடக் கோரிடுவேன் ப்ளீஸ் ! "ஷப்பா....பீடிகையே கண்ணை கட்டுதே....மிடிலே !!" என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் அடுத்து ஏதாச்சும் bad words பக்கமாய்த் தாவிடும் முன்பாய் மேட்டருக்கு வந்து விடட்டுமா ? 

இமய மலையையே ABT பார்சல் சர்வீஸில் அடைத்து உங்களிடம் ஒப்படைத்தால் கூட, "ஹ்ம்ம்...பரவால்லே....ஆனா நான் ஒன்பதாப்பு படிக்கிறச்சே பரணிலே குந்தியபடிக்கே பஜ்ஜி சாப்டுட்டே படிச்ச அந்த கதை மெரி வருமா ?" என்று நண்பர்கள் அவ்வப்போது நோஸ்டால்ஜியா பயணங்களில் கிளம்பிடுவதில் இரகசியங்கள் கிடையாதே ? ஆனால் கொஞ்ச காலத்திற்குள் அவற்றுள் பெரும்பான்மை done & dusted என்பேன் ! 

  • "இரத்தப் படலம்" - துவையோ, துவையென்று துவைத்துத் தொங்கப் போட்டாச்சு !
  • "மும்மூர்த்திகள்" - அதே நிலவரமே !! புத்தக விழா audience நீங்கலாய் இவர்களுக்கென கொடிபிடிக்க நமது ஆக்டிவ் வாசகர்களின் மத்தியில் ஆட்கள் சொற்பம் !
  • "ஆர்ச்சி" - நீங்கள் ரெடியெனும் போதெல்லாம் ஞானும் ரெடி !
  • "ஸ்பைடர்" - நீங்க சொன்னா மட்டும் போதும் !!
  • "வேதாளன்" - இதோ ஜனவரியில் !!
  • "ரிப் கிர்பி" - இதோ ஏப்ரலில் !!
  • "மாண்ட்ரேக்" - இதோ ஜூலையில் !!
  • "காரிகன்" - இதோ அக்டொபரில் !!
  • "க்ளாஸிக் டெக்ஸ் கதைகள் / கலரில்" - இதோ புத்தாண்டினில் !

இதுவே நிலவரம் எனும் போது - "விங் கமாண்டர் ஜார்ஜ்  நஹியா ?" ; "சார்லீ நஹியா ?" ; இரட்டை வேட்டையர் இல்லியா ?" என்ற ரீதியிலான random வினவல்கள் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடும் ! 

ஆனால்...ஆனால்...ரொம்ப காலமாய் ; ரொம்பவே ரொம்ப காலமாய், தொங்கலில் இருந்து வருமொரு request - நமது கார்ட்டூன் ஜானர் சார்ந்தது ! "இன்றைய கார்ட்டூன் வறட்சிக்கான அருமருந்து ; இன்றைய  கொரோனாக் காலத்திலும் குஷி கொள்ளச் செய்யும் அதிசயம் !" என்றெல்லாம் ஒரு தொடர் அதன் அபிமானிகளால் சிலாகிக்கப்படுவது வழக்கம். இத்தனைக்கும் நாம் அந்தத் தொடரிலிருந்து வெறும் மூன்றே இதழ்களை வெளியிட்டுள்ளோம் ; அதுவும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னே ! சில மாதங்களுக்கு முன்பான நமது அரட்டைக் கச்சேரிகளில் கூட இந்தக் குட்டிப் பையன் + சுட்டிப் பெண் ஜோடி பற்றிய பேச்சு எழுந்திருந்தது & ஒரு குறிப்பிடும் அளவிலான நண்பர்கள் "முயற்சிக்கலாமே ?" என்று கோரிக்கை வைத்திருந்ததும்  நினைவுள்ளது ! FFS பணிகளின் அழுத்தம் கருதி பாக்கி  சமாச்சாரங்களைக் கொஞ்சமாய்ப் பின்சீட்டில் அமர்த்தியிருந்தேன் தான் ; ஆனால் மண்டைக்குள்ளிருந்து எவையுமே விலகியிருந்திருக்கவில்லை ! So நண்பர்களின் அந்த தொங்கல் கோரிக்கையினை நிஜமாக்கிப் பார்த்திடும் முனைப்பில் கொஞ்ச காலம் முன்னே மெது மெதுவாய்ப் பணிகளைத் துவக்கினேன் ! And அதன் பலனே நான் குறிப்பிட்ட இனிப்பு லட்டு # 1 !!

To cut a longish story short, நண்பர்களின் அபிமான "சுஸ்கி & விஸ்கி" மறுக்கா நம் மத்தியினில் வலம் வரவுள்ளனர் - 2022 முதலாய் !! And அவர்களது முதல் இதழாய் காத்திருப்பது ஒரு டபுள் ஆல்பம் ! And அந்த டபுள் ஆல்பத்தில் காத்திருப்பதோ - நீங்கள் பஜ்ஜி சாப்பிட்டபடியே படித்த 2 இதழ்கள் ! And அவற்றிற்கு  "பயங்கரப் பயணம்" & "ராஜா ராணி..ஜாக்கி...!!" என்று அந்நாட்களில் பெயர் ! 



Yes dudes - சேகரிப்பாளர்கள் மத்தியில் செம டிமாண்டான  நமது அந்நாட்களது இந்த மினி-லயன் இதழ்கள் - முழு வண்ணத்தில் ; ஆர்ட் பேப்பரில் ; லக்கி லூக் சைசில் ; ஹார்ட் கவர் ஆல்பமாய், செம ஸ்டைலிஷாக வந்திடவுள்ளன - 2022-ன் வாகான பொழுதினில் ! எப்போது ? என்ன விலையில் ? என்பதையெல்லாம் ஒரு சாவகாசப் புத்தாண்டின் பொழுதினில் சொல்கிறேனே ? 

இவை மறுபதிப்புகளாய் இருந்தாலுமே, நண்பர்களின் பெரும்பான்மை இதனை வாசித்திருக்க வாய்ப்புகள் சொற்பம் என்பதே எனது யூகம் ! நம்மிடமே ஒரேயொரு பிரதி பீரோவுக்குள் அடியில் உறங்கிக் கிடப்பதால், hardcore சேகரிப்பாளர்கள் நீங்கலாய் பாக்கிப் பேரிடம் இவை இருக்கும் வாய்ப்புகள் குறைச்சலே என்றே நினைக்கிறேன் ! Anyways அந்நாட்களில் சாணித் தாளில், சின்ன சைசில், இரு வண்ணத்தில் வாசித்ததை இன்றைக்கு உயர் தரத்தில், முழுவண்ணத்தில் வாசிப்பதென்பது முற்றிலும் வேறொரு லெவல் அனுபவமாய் இருக்கக் கூடும் என்பதால் - ஏற்கனவே வாசித்துள்ளோருக்குமே காத்திருக்கும் இந்த "லயன் லைப்ரரி" பதிப்பு ரசிக்காது போகாதென்பேன் ! Fingers crossed again !

உரிமைகளுக்கெனப் பேசிய போது - "எக்கச்சக்கக் கதைகள் கொண்ட தொடரிது  - so புது யுகக் கதைகளாய்த் தேர்வு செய்திடலாமே ? தொடரின் துவக்க காலத்து ஆல்பங்களாய்த் தேர்வு செய்வானேன் ?" என்று படைப்பாளிகள் வினவினர் ! ஆனால் நாம் என்ன மாதிரியான நோஸ்டால்ஜியா பிரியர்கள் என்பதை விளக்கிச் சொல்லி விட்டு, "to start with - பெட்ரோமேக்ஸ் லைட்டே குடுங்க ப்ளீஸ் ; போகப் போக LED ; போகஸ் லைட் என்றெல்லாம் வாங்கிக்கொள்கிறோம் !" என்று சொன்னேன் ! இவை முழுக்கவே கார்ட்டூன் ; ஜாலி கதை ஜானர் எனும் போது தொடரினில் முன்னுள்ள கதைகளுக்கும், பின்னுள்ளவைக்கும் பெரிதாய் content-ல் மாற்றம் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை ! And பல ஐரோப்பியப் படைப்புகளில், அந்நாட்களின் ஒரிஜினல் பிதாமகர்களின் படைப்புத் திறனை இன்றைய யுகக் கதாசிரியர்கள் எட்டிப் பிடிக்கத் தடுமாறுவதைப் பார்த்துள்ளோம் ! So கார்ட்டூன்களில், old is a golden option என்று தீர்மானித்தேன் ! எது எப்படியோ - பரிச்சயமான இந்த ஆல்பங்களைப் பார்த்து, ரசித்த பிற்பாடு, தொடரின் புதுக் கதைகள் பக்கமாய் நுழைய நீங்கள் இசைவு சொல்லின் சூப்பர் ! இப்போதைக்கு பந்து உங்களின் தரப்பினில் கார்ட்டூன் காதலர்களே ! So பார்த்து கரை சேர்த்து விடுங்கோ ப்ளீஸ் ! 

And லயன் லைப்ரரியின் லேபிலில் வரவுள்ள இந்த இதழுக்கும் முன்பதிவெல்லாம் அவசியமாகிடாது ! ஏதேனுமொரு புத்தக விழாவின் போதோ - நமது ஆன்லைன் புத்தக விழாவிலோ வெளியாகிடும் & வேண்டுவோர், நிதானமாய் வாங்கிக் கொள்ளலாம் ! என்ன - கார்ட்டூன் ஜானர் எனும் போது ஒரு டெக்ஸ் வில்லர் அளவுக்கோ ; ஒரு ஆக்ஷன் கதையின் அளவுக்கோ நமது பிரிண்ட்ரன் இருந்திடாது தான் ; but கார்ட்டூன் ரசிகர்கள் திடீரென ஆவேசப்பட்டாலொழிய, ஸ்டாக் டப்பென்று காலியாகிடாது தான் ! So ஆராம் சே !

ஆச்சு ! பெரிய லட்டு என்னவென்பதைச் சொல்லியாச்சு ! And குட்டி லட்டு என்னவென்பதைத் தொடரும் பதிவிலோ ; உபபதிவிலோ பார்த்துக் கொள்ளலாம் ! So FFS இதழின் புதியவர்களுள் ஒருவரான டேங்கோ பக்கமாய்ப் பார்வைகளை ஓட விடுவோமா இனி ?

TANGO !! நான்கு ஆண்டுகளுக்கு முன்பாய் உருவாக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் இந்த ஆக்ஷன் தொடரின் நாயகர் ஒரு போலீஸ்காரரோ ; டிடெக்டிவோ ; சீக்ரெட் ஏஜெண்டோ கிடையாது !  யார் கண்ணிலும் படாது ஓரமாய் ; தூரமாய் விலகி வாழ நினைத்திடும் ஒரு வித்தியாசமான மனுஷன் ! பதுங்கிட அவர் தேர்வு செய்வதோ தென்னமெரிக்காவில் பொலிவியாவில் எனும் போது - மூச்சிரைக்கச் செய்யும் அந்த தேசத்தின் பாலைப்பரப்புகளின் நடுவே ஒரு அனல் பறக்கும் ஆக்ஷன் மேளா அரங்கேறுகிறது ! செம ஓட்டமெடுக்கும் கதையின் மத்தியில் - ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்டுமே ரவுண்டு கட்டி அடித்துள்ளனர் ! So சம அளவு  சிலாகிப்புக்கு அவர்களும் உரியோர்களே ! இதுவரையிலும் நாம் பார்த்திரா ஒரு புது மண்ணில் ஓடுமிந்தக் கதையின் நிறைய பகுதிகளில், நாயகர் தானாகவே மனசுக்குள் பேசிக்கொள்ளும் விதமாய் வரிகளை அமைத்துள்ளார் கதாசிரியர் ! So அவையெல்லாம் நான் போட்ட எக்ஸ்டரா நம்பர்களோ ? என்ற சந்தேகங்களின்றி படிக்கலாம் ! And சமீபத்தில் செய்த பணிகளுள் ரொம்பவே சுவாரஸ்யத்தை உருவாக்கிய ஆல்பம் இது என்பதால் - உங்களின் வாசிப்பு அனுபவங்கள் பற்றியறிய ஜனவரியில் காத்திருப்பேன் ! 

உட்பக்க பிரிவியூ நாளை பகலில் upload செய்கிறேன் !

கிளம்பும் முன்பாய், FFS முன்பதிவு / சந்தாக்கள் பற்றிய நினைவூட்டல் guys !! And "சந்தா செலுத்தியாச்சு ; ஆனால் இன்னமும் போட்டோ அனுப்ப நேரமில்லை !" நண்பர்களுமே - ஜல்தி ப்ளீஸ் !! டிசம்பரின் முதல் வாரத்துக்குள் எல்லா அச்சுப் பணிகளையும் நிறைவு செய்திருப்போம் ; so அழகுக்கு அழகு சேர்க்க உங்களின் "வதனப் படங்களை" விரைந்து அனுப்புங்கள் all !! 

ப்ளூகோட் பட்டாளத்துடன் லூட்டி செய்ய இப்போது கிளம்புகிறேன் ; see you around all ! Bye for now !!

P.S : வாரயிறுதிக்குக் கொஞ்சம் வேலைகள் காத்திருப்பதால் - பதிவு ஒரு நாள் முன்பாகவே !! 

Saturday, November 20, 2021

லேட்டானாலும் லேட்டஸ்ட்டாய்...!

 நண்பர்களே,

வணக்கம். கார்த்திகை தீபமும் அழகாய் ஆச்சு ; முருகரின் பெயரைச் சொல்லி அரை டஜன் பொரிகடலை உருண்டைகளையும் உள்ளே தள்ளியாச்சு ; நவம்பரின் பெரும் பங்கும் ஓடியாச்சு ; டிசம்பர் இதழ்களின் டெஸ்பாட்ச் தேதியுமே கூப்பிடு தொலைவுக்கு நெருங்கியாச்சு ; நான்கில் மூன்று அச்சாகி, பைண்டிங்கும் ஆகியாச்சு ; எஞ்சிய ஒன்றும் அடுத்த சில நாட்களில் அச்சாகி விட்டால் - "நவம்பரில் டிசம்பரும் சாத்தியமாகிப் போச்சு" என்ற திருப்தியுடன் நடப்பாண்டுக்கு விடை தந்தது போலாகி விடும் ! 

Phew ....இதுவரையிலும் 2021-ன் ஓட்டம் உங்களுக்கெல்லாம் எவ்விதம் இருந்ததோ - ஞான் அறிஞ்சில்லா ; பச்சே இங்கே எங்களுக்கு "வாம்மா...மின்னல் !!" என்று ஓட்டம் பிடிக்காத குறை தான் ! ஏப்ரலில் புதுச் சந்தா துவங்கியது நேற்றைய நிகழ்வு போலவும் ; மே மாதத்தில்  லாக்டௌன் துவங்கியது அதற்கு முந்தா நாள் நிகழ்வைப் போலவும் தோன்றினாலும், இதோ இந்த டிசம்பரின் நான்கையும் சேர்த்தால் - 31 இதழ்களைக் கடந்து விட்டிருக்கிறோம் - இடைப்பட்டுள்ள நாட்களில் ! இவற்றுள் - லயன் # 400 ; தீபாவளி with டெக்ஸ் ; சில book-fair ஸ்பெஷல்ஸ் என்ற மெகா இதழ்களும் இடம்பிடித்திருக்க, பேரிடர் பொழுதுகளிலுமே பொம்ம புக் தாக்குதல் தொடர்ந்திருப்பது புரிகிறது !! And இன்னொரு 4 வெயிட்டிங் - ஜம்போவின் சீசன் # 4-ன் அட்டவணையில் ! அவற்றையுமே அடித்துப் பிடித்து இந்த ஒன்பது மாதங்களுக்குள் புகுத்தியிருப்பின், "மாதம் 4" என்ற கணக்கு ஓடியடைந்திருக்கும் !! இன்னொரு Phew !! 

எது, எப்படியோ - தொடரும் ஆண்டினில் எண்ணிக்கைகள் சற்றே கட்டுக்குள் இருப்பது உறுதி ; ஆனால் பருமனில் குண்டு கல்யாணத்துக்குப் போட்டி தரக்கூடிய இதழ்கள் கணிசம் என்பதால் "எண்ணிக்கை குறையும் ; ஆனா வாசிப்பு குறையாது !" என்றே சொல்லத் தோன்றுகிறது !!  

ரைட்டு....டிசம்பரின் பிரிவியூக்களில், இன்னமும் கண்ணில் காட்டியிரா இளம் டெக்சின் "திக்கெட்டும் பகைவர்கள்" பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்யலாமா ? இதோ -  5 பாகங்கள் கொண்ட இளம் 'தல' சாகஸத்தின் first look - ஒரிஜினல் அட்டைப்படத்துடன் ! 

வழக்கம் போல கதை மௌரோ போசெல்லி அவர்களின் பொறுப்பிலிருக்க, "சின்னவர்" சோலோவாய் கதையினை முன்னெடுத்துச் செல்கின்றார் ! And இங்கேயும் தேஷா உண்டு ; black & white-ல் கூட கண்ணைப் பறிக்கும் வசீகரத்தோடு ! போசெல்லி மட்டும் நம்ம ஊர்ப் பக்கமாய் கொஞ்ச காலம் ஒதுங்கியிருப்பின், அம்மணிக்கும், சின்னவருக்கும் சம்திங் ..சம்திங் என்பதாகக் கதையைக் கொண்டு போயிருப்பார் ; and சும்மா விசில் பறக்க நாமும் அதகளப்படுத்தியிருப்போம் ! இந்தக் கதையில் கூட, சின்னவரோடு வரும் பசங்கள், "அது உன் டாவு இல்லியா ப்ரோ ?" என்று சீண்டிக் கொண்டே வருவதைப் பார்க்கலாம் ! ஆனால் நமது மஞ்சள் சட்டை அண்ணாத்தே, பாசமிகு அண்ணாத்தேவாகவே தொடர்கிறார் ! போனெல்லியில் இந்த 64 பக்க மாதாந்திர 'இளம் டெக்ஸ்' வரிசையை ரெண்டு வருஷங்களுக்கு முன்னே அறிவித்த போது - சற்றே ஆர்வ மிகுதியின் திட்டமிடலாகவே எனக்குத் தென்பட்டது ! இணைதடங்களில் - சின்னவர் + மூத்தவர் கதைகளை ஒரே வாசக வட்டத்துக்கு விடிய விடிய எவ்விதம் வழங்குவது ? சின்னவரின் 'இஸ்திரி'யில் அப்படி பெருசாய் என்ன சுவாரஸ்யத்தை விதைக்க இயலும் ? என்ற கேள்விகள் என்னுள் இருந்தன தான் ! ஆனால் செம fresh அணுகுமுறையோடு, ஒவ்வொரு இதழும் (அத்தியாயமும்) வெறும் 64 பக்கங்களே ; ஒவ்வொன்றுக்கும்  ஒரு மிரட்டலான அட்டைப்படம் ; 'கச கச'வென்ற குளறுபடிகள் இல்லா நேர்கோட்டில் பயணம் - என்பதே போச்செல்லியின் திட்டமிடலாக இருந்திட, இந்தத் தொடருக்கான response அங்கும் சரி, இங்கும் சரி - wow ரகம் !! இதோ ஓவியர் Brindisi-ன் கைவண்ணத்திலான உட்பக்க டிரெய்லரும் :

Moving on, ரயிலின் அடுத்த ஸ்டேஷன் புத்தாண்டின் FFS தான் எனும் போது அந்தப் பணிகளின் இறுதிக் கட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன !! And சிறுகச் சிறுக அதன் கதைகள் / நாயகர்கள் பற்றிய முன்னோட்டங்களுக்குள் புகுந்தால் தப்பில்லை என்று பட்டது !! 

CIA ஏஜெண்ட் ALPHA !! FFS-ன் முதல் புக்கில், ஒளிவட்டத்தின் மிகுதி பாய்ந்திடுவது இந்த ஸ்டைலான நாயகர் மீதே !  இந்த ஹீரோவுடனான எனது  பரிச்சயத்துக்கு  வயது 25 !! செம ஷார்ப் சித்திரங்கள் ; தெறிக்க விடும் ஆக்ஷன் ; இளவரசர்கள் வழக்கத்தை விடவும் ஜாஸ்தியாய் ஜொள்ளிட தகுதி வாய்ந்ததொரு அழகுப் பெண் - என்ற combo-வில் இந்தத் தொடரின் முதல் ஆல்பம் 1996-ல் வெளியாகிய போது, நமக்கு மாதிரி புக் ஒன்றினை அனுப்பியிருந்தார்கள் ! (அந்நாட்களிலெல்லாம் தான் இந்த டிஜிட்டல் கோப்புப் பரிவர்த்தனைகள் கிடையாதே ?!)  அந்த புக்கினை அச்சிட்டிருந்த பேப்பர் கூட ஒரு வித மினுமினுப்புடனான ஏதோ ஸ்பெஷல் ரகம் போலும் ; கலரில் சும்மா டாலடித்தது !! பக்கங்களை புரட்டப் புரட்ட எனக்குள் உற்சாகம் ஊற்றடிக்கத் துவங்கியது ! And அந்நாட்களில் கூகுள் ; டூகுள் ஏதும் கிடையாதெனும் போது, இந்தப் புதுத் தொடர் மீது உடனடி ஆராய்ச்சிகளும் சாத்தியமாகிடவில்லை & அதற்கு அவசியம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை ! So "அட்றா சக்கை..புடிச்சாச்சு பாரு, ஜேம்ஸ் பாண்டுக்கு சவால் விடற ஹீரோவை !!" என்ற வேகத்தில் - இது ஒரு தொடர்கதையா ? one shot-ஆ ? என்றெல்லாம் கவனிக்காது "இதை வெளியிடணுமே ப்ளீஸ் " என்று மாக்கானைப் போல பிரான்சுக்கு ஒரு fax தட்டி விட்டேன் ! அவர்களும் சீக்கிரமே சம்மதம் தெரிவிக்க,இதைக் கொண்டு "1997 கோடை மலர்" என்று  பீப்பீ ஊதிடலாமென்ற கற்பனைகளில் திளைத்துப் போய், மாலையப்பனிடம் அட்டைப்பட டிசைன் போடவெல்லாம் ஏற்பாடு செய்து விட்டேன் !  ராயல்டி தொகைகளை தேற்றி அனுப்பிட அப்போதெல்லாம் நமக்கு ஒரு மாமாங்கம் ஆகிடுவது வழக்கம் என்பதால் இந்தப் பக்கம் பணிகளை ஆரம்பித்த கையோடு, வசூல்களில் ஒரு பகுதியினை ராயல்டிக்கென ஒதுக்கிட குட்டிக்கரணம் போட ஆரம்பித்திருந்தேன்  ! அந்தத் தாமதம் தான் நம்மை அன்றைக்கு காப்பாற்றியது, becos பிரெஞ்சு to english மொழிபெயர்ப்புக்கு அந்நாட்களில் பணி செய்து வந்த மதுரையிலிருந்த பிரெஞ்சு டீச்சருக்கு இந்தப் பக்கங்களை அனுப்பிய ரெண்டாவது நாளே அவரிடமிருந்து போன் வந்தது - "இது தொடர்கதையாச்சே ? முழுசையும் அனுப்புங்களேன் ?" என்ற கோரிக்கையோடு ! "கிழிஞ்சது போ" - என்றபடிக்கே படைப்பாளிகளிடம் விசாரித்தால் - 'Yes ..வருஷத்துக்கொரு பாகம் ; 3 பாகங்களில் முதல் சுற்று நிறைவுறும் !' என்று பதில் கிட்டியது ! சரியாகப் 10 வருஷங்களுக்கு முன்னே "இரத்தப் படலம்" இதழினை இதே போல one shot என்று நம்பி வாங்கியது மனதில் நிழலாட - அவசரம் அவசரமாய், "இல்லீங்க...தொடர் முடியட்டும் ; அப்புறமா வாங்கிக்குறோம் !" என்று சொல்லி வைத்தேன் ! 1998-ல் முதல் சுற்று முற்றுப் பெற்றிருந்த நேரத்திற்கு, பாக்கி 2 ஆல்பங்களுமே தக தகதகத்தபடிக்கே வந்து சேர்ந்திருந்தன ! So மூன்று ஆல்பங்களையும்  பெருமூச்சோடு ஒருசேரப் புரட்டிப் புரட்டிப் பார்த்தவனுக்கு - 139 பக்கங்கள் கொண்ட அந்த முழுக் கதையினை எவ்விதம் கையாள்வதென்றே தெரிந்திருக்கவில்லை ! தொடர்கதையாய்ப் போடுவதா ? - அபச்சாரம் !! விலையைக் கூடுதலாகி, ஒரே புக்காய்ப்  போடுவதா ? - விஷப் பரீட்சை ! - என்ற ரீதியில் உள்ளுக்குள் சிந்தனைகள் ஓட, "ரைட்டு...இந்தப் பழம் புளிக்கிறா மெரி தெரியுதே...அப்புறமா பாத்துக்கலாம் !" என்று ஓரம் கட்டி விட்டேன் ! நாட்களும், மாதங்களும், வருடங்களும் ஓட்டமெடுத்திருக்க, நமது FFS திட்டமிடல் ; குண்டு புக் ஆர்வம்  ; கௌபாய் அல்லாத தொடர்களின் தேடல் - என்ற முக்கோணப் புள்ளிகள் சங்கமித்த வேளையில் என் பீரோவில் பத்திரமாய் இருந்த ALPHA எட்டிப் பார்த்தார் !! அப்புறமென்ன - மலரும் நினைவுகளுக்கு மத்தியில் CIA ஏஜெண்ட் சாரை தமிழ் பேசிட வரவழைத்தோம் ! And லேட்டாய் வந்தாலும், செம ஸ்டைலாய் வந்திறங்கியிருக்கும் இந்த மனுஷனின் பிரிவியூ பக்கங்களை பாருங்களேன் : 


சந்தேகமின்றி, இந்த முப்பாக ஆல்பத்தின் highlight அந்தச் சித்திரங்களும், கலரிங் அமர்க்களமுமே  ! இரத்த படலம் - இரண்டாம் சுற்றின் ஓவியரே இங்கு ஆர்ட்டிஸ்ட் ; in fact ஆல்பாவில் துவங்கி மிரட்டியதன் தொடர்ச்சியாகவே XIII இரண்டாம் சுற்றுக்குப் படம் போடும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியுள்ளது ! கதை நெடுக நாம் பார்த்திடவுள்ள அட்டகாசமான கார்கள் ; பாரிஸின் தெறிக்கும் அழகுடனான landmarks ; இரண்டாம் பாகம் முதலாய் மாஸ்கோவின் அழகு - என்று இங்கு நமக்கு காத்துள்ள visual treat வேறொரு லெவல் ! 


And of course - கதை ஒரு அக்மார்க் spy த்ரில்லர் ! அழகானதொரு கதைக்கரு ; அதனை ஐரோப்பியப் பின்னணியினில் சொன்ன சாகசம் - இவற்றினை நீங்கள் முழுசுமாய் உள்வாங்கிட எண்ணிடும் பட்சத்தில் பொறுமையாய் ; நிதானமாய் இங்கு பயணிக்க வேண்டி வரும் ! ஒவ்வொரு பிரேமிலுமே சின்னச் சின்னதாய் ரசிப்பிற்குரிய விஷயங்கள் இருப்பதை அவசர வாசிப்பில் மிஸ் செய்திடாதீர்கள் ப்ளீஸ் ! And லார்கோவின் (துவக்க) ஆல்பங்களை போலவே - சில பக்கங்களில் வசனங்கள் மிகுந்தே இருந்திடும் - complex ஆனதொரு கதையை கதாசிரியர் சிறுகச் சிறுக முடிச்சவிழ்க்கும் தருணங்களில் ! பேனா பிடித்த நானே பேஸ்தடிக்காது அவற்றினூடே பயணித்து விட்டுள்ளேன் எனும் போது - வாசிப்பினில் ஜமாய்த்தீர்களெனில் "துரோகம் ஒரு தொடர்கதை" தரும் high octane த்ரில்களை முழுமையாய் ரசிக்கலாம் ! அதே சமயம் - இந்த நாயகர், almost a real life ஏஜெண்ட் போலவே வலம் வந்திடுவார் - மிகையான ஸ்டண்ட்ஸ் அடிக்காமல் ! So பன்ச் டயலாக்ஸ் இன்றி ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 செய்திடும் ரணகள ஆக்ஷன்ஸ் இன்றி, ஒரு மிரட்டலான spy த்ரில்லர்  காத்துள்ளது ! அப்புறம் அந்த ரஷ்ய அம்மணிக்கு நற்பணி மன்றம் அமைக்க விரும்புவோர் டபுள்யூ.டபுள்யூ.ஜொள்ளுமணி.டாட்.காம். என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் !! 

கிளம்பும் முன்பாய் சில updates :

1.இனிப்பு லட்டுக்கள் ஒன்றுக்கு இரண்டாய் confirmed !! ஒன்று குட்டி லட்டு ; இன்னொன்று ரெகுலர் லட்டு ! பூந்தியாய் உள்ளதை உருண்டை பிடிக்க இன்னும் நாலைய்ந்து நாட்கள் எடுக்கும் என்பதால் லிட்டில் வெயிட்டிங் ப்ளீஸ் !!

2 .கார லட்டு ? Again ஒன்று ரெடி ! இன்னொன்றுக்கு முயற்சிகள் முழு முனைப்பினில் ! புனித மனிடோ மனசு வைத்தால் அதுவும் க்ளிக் ஆகி விடும் ! இங்குமே கொஞ்சம் பொறுமை ப்ளீஸ் !! 

ஐரோப்பாவில் மறுக்கா கொரோனா தாண்டவமாடத் துவங்கியிருக்க, பணிகள் ரொம்பவே தடைபட்டு வருகின்றன !! ஜெர்மனியில் தினசரி 50,000 கேஸ் ; பெல்ஜியத்தில் நாளொன்றுக்கு 16,000 ; ஆஸ்திரியாவில் லாக்டௌன் ; ஹாலந்தில் லாக்டௌன் ; இங்கிலாந்தில் 40,000 தினமும் - என்ற ரீதியில், காதில் விழும் சேதியெல்லாமே குலை நடுங்கச் செய்து வருவதால் - லட்டுக்களை உருண்டை பிடிக்க கூடுதல் நேரமெடுக்கிறது ! So அவர்களது இன்னல்களை புரிந்து கொள்வதோடு, நாமும் இங்கே கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்தால் தப்பில்லை என்று தோன்றுகிறது !! தடுப்பூசி guys ; முகமூடிஸ் guys - மறவாதீர்கள் ப்ளீஸ் !!

3.அந்தியும் அழகே - தாத்தாஸ் சீக்கிரமே வெள்ளித் திரையில் லூட்டியடிக்க உள்ளனர் ! பிரெஞ்சில், இந்தத் தொடர் திரைப்படமாகிறது !! பாருங்களேன் :

The three stars of the film,Pierre Richard, Eddy Mitchell and Bernard Le Coq, have started shooting in Simorre in France ! 

4.அப்புறம் FFS புக்கினில் உங்களின் போட்டோக்கள் இணைத்திட வேண்டுமெனில், முன்பதிவு செய்திட or சந்தா செலுத்த அவசரம் காட்டிட வேண்டி வரும் ப்ளீஸ் ! "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" திங்களன்று அச்சுக்குச் செல்கின்றது ! And அதன் மறுவாரம் FFS புக் # 1  அச்சாகிடவுள்ளது ! And புக் # 3 ஆன - "தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்"  அட்டை to அட்டை 68 பக்கங்களுக்கும் கதைகள் கொண்டிருப்பதால் - அங்கே உங்களின் போட்டோக்களை நுழைக்க சாத்தியமாகிடாது ! So தாமதித்திடும் பட்சத்தில் FFS-ன் மெயின் புக்ஸ் எவற்றிலும் உங்களின் போடடோக்களை இணைத்திட இயலாது போய்விடும் guys !! அதன் பின்னே, புக் # 4 ஆக வந்திடவுள்ள அந்த விலையில்லா இணைப்பினில் மட்டும் தான் இடமிருக்கும் ! சற்றே கவனம் on this ப்ளீஸ் !

Bye all...see you around ! Have a chill Sunday !!

Saturday, November 13, 2021

பனிக்காலமும், பணிக்காலமும் !

நண்பர்களே,

வணக்கம். "மனுஷ மனம் ஒரு குரங்கு" என்று வாசித்திருப்போம் ; பேச்சுவாக்கில் எங்கேனும் கேட்டும் இருப்போம் தான் ! அது மட்டும் நிஜமெனில், அடியேனின் மனசு லேசான குரங்கெல்லாம் லேது ; மொக்கையான மலைக்குரங்கின் மனசென்பேன் ! 'அது தெரிஞ்சது தானே ?' என்கிறீர்களா ? அப்படியெனில், அதைத் தெரிந்திருக்கா எனக்கே எனக்காய் இதைச் சொல்லிக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! பின்னென்ன சார் - கடந்த 4 மாதங்களாய்த் தூங்கப் போகும் முன்பாயும், விடிந்த முதல் பொழுதினிலும், நிறைந்து கிடக்கும் மேஜையையும் ; குவிந்து கிடக்கும் கதைக்குவியல்களையும் பேஸ்தடித்த முகரையோடு பார்த்து வந்தவனுக்கு - அவை ஒட்டு மொத்தமாய்க் காலியாகி, காற்றாடும் வெற்றிடமாய்க் காட்சி தரும் இன்றைய பொழுதினில் நியாயப்படிப் பார்த்தால் துள்ளிக் குதித்து கொண்டாடத் தோணனுமில்லியா ? பகவான் புண்ணியத்தில், பணிகளின் பெரும்பான்மையை ஒரு before time ரயில் வண்டியைப் போல போட்டுத் தாக்கிடச் சாத்தியப்பட்டுள்ளதற்கு - சுக்காவைக் கண்ட கார்சனாட்டம் வாயெல்லாம், பல்லாகிட வேணாமா ? மாறாக, 'ஹ்ம்ம்ம்' என்றதொரு ஏக்கப் பெருமூச்சோடு மேஜையின் காலியிடத்தை முறைத்து முறைத்துப் பார்த்து வருகிறேன் ! இப்போது சொல்லுங்களேன் - அந்த மலைக்குரங்கு உவமை இன்னாமா பொருந்துது என்று !! 

சரியாக 20 நாட்களுக்கு முன்பாய் பெண்டிங் கிடந்த பணிகளையும், அவற்றைப் பூர்த்தி செய்திடத் தோராயமாய்த் தேவைப்படக்கூடுமென எனக்குப்பட்ட கால அவகாசத்தையும் - ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்த நொடியில் கலங்கிய வயிறானது, இப்போது தான் மெது மெதுவாய் சமனம் கண்டு வருகிறது ! இன்னமும் அட்டைப்படங்கள் மட்டுமே பாக்கி ; பாக்கியினில் எனது பணிகள் 90% ஆச்சு என்பதே நிலவரம் ! So ஜூலை முதலாய், மேஜை முழுக்கக் கதைகளையும், பிரிண்ட் அவுட்களையும் குமித்துப் போட்டுக்கொண்டு, ஒன்றின் பின் இன்னொன்றென, அவற்றினூடே பூந்து பூந்து ஓடியே பழகி விட்டவனுக்கு, "இனி பிப்ரவரியின் ப்ளூகோட் பட்டாளம் தான் அடுத்த பணி !" என்பது புரியும் போது ஒரு இனம்சொல்லத் தெரியா வெறுமை ஆட்கொள்வது போலுள்ளது ! கடந்த 4 மாதங்களின் குட்டிக்கரணங்களும் ; ராக்கூத்துக்களும் ஒருவித வாழ்க்கைமுறையாகவே மாறிப் போயிருக்க, கடந்த சில நாட்களாய் லாத்தலாய்க் கழிந்து வரும் பொழுதுகள் ரொம்பவே விநோதமாய்த் தென்படுகின்றன ! பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மேட்சை முழுசாய்ப் பார்க்க முடிந்தது - "அய்யய்யோ...நேரத்தை வீண் பண்ணுறியே !!" என்ற நெருடலின்றி ! யூடியூபில் கோபி-சுதாகர் பரிதாபங்களை குற்ற உணர்வின்றிப் பார்க்க முடிகின்றது ! ஆபீசுக்கு நடு நடுவே போய் அவரவர் வேலைகளை ஓசையின்றிப் பார்த்து வருவதை ஜாலியாய்ப் பராக்குப் பார்க்க முடிகிறது ! ஆனாலும், எதையோ தொலைத்தது போலவே மண்டைக்குள் ஒரு உணர்வு !! 

பணிகளின் அழுத்தம் மிகையாய் இருந்தாலுமே, அது பழகிப் போயிருப்பதும், புது நாயகர்களை, ஒரு புது ஆண்டினில் உங்கள் முன்னே கொண்டு நிறுத்தும் ஆர்வமும் ; இனி என்னதான் குட்டிக் கரணமடித்தாலுமே இது போலானதொரு மெகாப் பணிக்காலம் கொஞ்ச காலங்களுக்காச்சும் துளிர் விட வாய்ப்புகள் லேது என்ற புரிதலும் ஒன்றிணைந்து ஒருவித வெறுமையை உண்டாக்குவது போலொரு பீலிங்கு !! Of course , கால் இருக்கு, கட்டை விரலிருக்கு ; திணிக்க ஒரு வாயும் இருக்கு எனும் போது ஏதாச்சும் செய்து கொள்ளலாம் தான் ; ஆனால் இந்த நொடியின் காலி மேஜை .............!!! Phew !!! 

Moving on, டிசம்பரில் காத்துள்ள 4 இதழ்களுள் - மூன்று அச்சுக்கு வரும் வாரத்தினில் ஜாத்தா ஹை & பாக்கி ஒன்றுமே ஏற்கனவே அச்சாகி ஆத்தா ஹை ! So ஒரு "நவம்பரில் டிசம்பர்" சர்வ நிச்சயமாய்ப் போட்டுப்புடலாம் ! And டிசம்பரின்  ஹைலைட்டாக இருக்கவுள்ள நமது மறதிக்கார மக்லேனின் லேட்டஸ்ட் ஆல்பத்தின் பிரிவியூ படலம் இதோ :


"2132 மீட்டரில்" இருந்து 'சவ சவ' பாணியிலிருந்து 'விறு விறு' பாணிக்கு மாறிய கதைப் போக்கானது இங்கும் அதே வேகத்தில் ஓட்டமெடுக்கிறது ! நிறைய ஆக்ஷன் ; நிறைய வேகம் & க்ளைமாக்சில் மறுக்காவொரு twist என்ற template இம்முறையும் தொடர்கிறது ! சித்திர ஜாலங்களும், அமரர் வான்சுக்கு சிறிதும் சளைக்கா உச்சத்தில் பயணிக்கிறது ! என்ன ஒரே நெருடல் - ஒரிஜினல் பிதாமகர் வான் ஹாமின் கைவண்ணம் கதையோட்டத்தில் மிஸ்ஸிங் ! ஜேசனின் அடையாளம் தெரிந்திருக்கா நிலையில் - 'நான் கோயிந்தசாமியா ? கொயந்தசாமியா ? குப்புசாமியா ?' என்று முதல் சுற்றில் XIII திணறியது நம்மையெல்லாம் பரவசம் கொள்ளச் செய்ததொரு novelty ! ஆனால் இப்போதோ - "ஜேசன் மக்லேன் தான் ; மேபிளவர் கப்பலில் வந்தோரின் வாரிசு தான் ; அந்த foundation-ன் நிர்வாகிகளுக்கு அமெரிக்க ஆட்சி பீடத்தின் மீதுள்ள வேட்கை தான் சகலத்துக்கும் காரணி !" என தேங்காயைப் போட்டுடைத்திருக்கும் நிலையில் - பழைய அக்னி சற்றே lacking என்று எனக்குப்பட்டது ! ஆனால் அதை நிவர்த்தி செய்யும் விதமாய் க்ளைமாக்சில் நம்மவருக்கு புதியதொரு ட்ரீட்மெண்ட் காத்துள்ளது ! அது முடிந்திடும் பட்சத்தில், அடுத்த ஆல்பத்தில் கோடுகளை அழித்து விட்டு முன்மாதிரியே தேடல்களைத் தொடங்கிடுவாரோ - என்னவோ ; கதாசிரியருக்கே வெளிச்சம் !! "நினைவோ ஒரு பறவை !!" - சிறகை விரிக்க இன்னும் அதிக நாட்களில்லை !

And போன வாரம் அலாவுதீன் பூதத்துடன் ஹெர்லக் ஷோம்ஸ் செய்திடவுள்ள லூட்டிகளின் ஆல்பத்தின் அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டியிருந்தேன் ! இதோ உட்பக்கங்களின் preview !! 


லாஜிக் ; கொஞ்சமேனும் கதைக்கட்டமைப்பு ; கட்டத்துக்குக் கட்டம் கிச்சு கிச்சு மூட்டல் - இவையெல்லாமே இருந்தாலன்றி கார்ட்டூன்கள் ரசிக்காதென்ற எண்ணம் கொண்டோர் - ப்ளீஸ் இந்த இதழுக்கொரு டாட்டா சொல்லிடலில் தப்பில்லை என்பேன் ! Simply becos அந்த "நொடியில் மாறுவேஷம் " template-ல் துவங்கி, கதை நெடுக ஜாலியாய் கதக்கழி ஆடியுள்ளார் கதாசிரியர் ! இதோ இங்குள்ள இந்தப் பிரிவியூ பக்கமே அதைப் பறைசாற்றும் ! So relaxed ஆனதொரு வேளையில், இந்த ஆல்பத்தைக் கையிலேந்தினீர்களெனில் நிச்சயமாய் you will not be disappointed !

And இம்மாதத்து கிராபிக் நாவலுக்கும் கூட, அப்படியே மேலுள்ள வரிகளில் கணிசத்தை copy paste செய்திடலாம் என்பேன் ; becos நாகரீக வெட்டியான் ஸ்டெர்னின் "காட்டான் கூட்டம்" - அந்நாட்களது மனிதர்களின் ஒரு சித்தரிப்பே ! ஒரு டவுன் பஸ் டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதிடக்கூடியதொரு மெல்லிய கதைக்கருவுடன் Maffre சகோதரர்கள் கரடு முரடான வன்மேற்கில், சற்றே நாகரீகத்தைத் தேடிட முனையும் ஒருவனின் ஒற்றை நாளைச் சித்தரிக்க முனைந்துள்ளனர் ! And for a change - இங்கே நேரோ நேர்கோட்டுக் கதை சொல்லலே புழக்கத்தில் உள்ளது ! சித்திர பாணியிலும், கலரிங்கிலும் இந்தப் படைப்பாளி உடன்பிறப்புகள் மிரட்டியிருப்பதை "காட்டான் கூட்டம்" வெளிச்சம் போட்டுக் காட்டிடும் ! சில மாதங்களுக்கு முன்பானதொரு வாக்கெடுப்பில் - "வெட்டியான் ஸ்டெர்னுக்கு இரண்டாம் வாய்ப்பு தரலாமா ? வேணாமா ? " என்று கேட்டதும், பெரும்பான்மையின் முடிவு "Give him another chance " என்பதாகவே இருக்க - அது இதோ நனவாகிடுகிறது ! இந்த ஆல்பம் வெளியான பின்பான கேள்வி - "ஸ்டெர்னுக்கு வாய்ப்பு # 3 தரணுமா ? நஹியா ?" என்பதாகவே இருந்திடும் ! இதோ - அட்டைப்படம் நமது பாணியில் & உட்பக்க preview : 



Before I sign out - சில ஜாலி updates :
  • 2022-ன் "லட்டுப் படலங்களில்" இன்னுமொரு இனிப்பு லட்டு காத்துள்ளது என்பது இப்போதைய தகவல் ! அதனை அடுத்த பதிவில் போட்டுத் தாக்கலாமா ? என்ற யோசனை ஓடிக்கொண்டுள்ளது !
  • சீனியர் எடிட்டரின் "எழுதிப் பழகும் படலம்" ஒரு மாதிரியாய் துவக்கம் கண்டுள்ளது ! கும்முடிப்பூண்டி போய் ; கொள்ளிடம் போய் ; கூர்க் வழியாய் யூ-டர்ன் அடிக்கும் பக்கங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி ? என்ற யோசனையுமே தற்சமயம் ரன்னிங் !
  • சத்தமின்றி யுத்தம் செய்த நாயகரின் ரசிகர்களுக்கொரு செம நியூஸ் ! ரொம்ப காலமாய் தூண்களில் கிடந்த "ட்யுராங்கோ" தொடரின் அடுத்த ஆல்பம் ரெடியாகி விட்டுள்ளது ! So இந்த ஆல்பத்துக்கு தொடர்ச்சிகள் ஏதுமுண்டா ? அல்லது ஒன்ஷாட்டா ? என்பதை அறிந்தான பின்னே நமது திட்டமிடலைக் கையில் எடுக்கணும் !

  • லட்டுக்கள் போதுமா ? அல்லது இன்னமும் கொஞ்சத்தை மொசுக்கலாமா ? என்ற யோசனைகளுமே ஓடிய வண்ணமுள்ளன ! அஜீரணமாகிடாதென்ற நம்பிக்கை பிறப்பின், ஒரு கார லட்டுமே காத்திருக்கும் !! சொல்லுங்களேன் - வயிற்றில் இடமிருக்குமா என்று ?
Bye all...see you around !! 2023 அட்டவணைக்குத் திட்டமிட புறப்படுகிறேன் !! See you around !! Super Sunday all !!

P.S : 2022 சந்தா எக்ஸ்பிரஸுக்கு டிக்கெட் போட்டாச்சுங்களா ? 

Sunday, November 07, 2021

வாரம் ஒன்று....பாணிகள் மூன்று...!

 நண்பர்களே,

வணக்கம். சமீப காலமாகவே எனக்கொரு ஆதங்கமுண்டு ! வேறொன்றுமில்லை - இப்போதெல்லாம் நான் வாசிப்பதையும், மனப்பாடம் செய்வதையும் ஒரு நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே பள்ளிக்கூடத்தில் இருந்த நாட்களிலும் செய்திருப்பின், ஏதாச்சும் மாவட்ட first ; மாவாட்டும் first என்று சாத்தித்திருப்பேனோ - என்னவோ ?! அன்றைக்கு ஜாலியாய் சுற்றித் திரிந்தவன், இன்றைக்கு இந்த வயசில் ராப்பகலாய் மாங்கு மாங்கென்று படித்துத் திரிவது காலக்கொடுமை அன்றி வேறென்ன என்பது ? அதிலும் நம் மறதிக்கார நண்பர் XIII-ன் லேட்டஸ்ட் ஆல்பத்துக்குப் பேனா பிடிக்க வேண்டிப் போகும் போது - அசோக சக்கரவர்த்தி சாலையோரம் மரம் நட்டின புள்ளியிலிருந்தே சகலத்தையும் நினைவூட்டிக் கொள்ள வேண்டிப் போகிறது ! 

"இந்தப் பெருசு யாரு ? இந்த ஆபரேஷனுக்கு போன ஆல்பத்தில் என்ன பெயர் தந்திருந்தோம் ? இந்த பூச்சாண்டிகள் நம்மாளுக்கு எதிரிகளா ? வேண்டப்பட்டவர்களா ? "மேடையை நாறடிச்சிப்புடுவேன் ; இங்கேர்ந்து என்னை அப்புறப்படுத்திடுங்க !" என்று கதறும் சோன்பப்டி மண்டையர் நல்லவரா / வல்லவரா / டூபாக்கூரா ? " என்று ஒருவண்டிச் சந்தேகங்கள் பக்கத்துக்குப் பக்கம் தோன்ற - முந்தையது ; அதற்கு முந்தையது ; ஆறு வருஷங்களுக்கு முந்தையது - என்று எதையெதையோ அள்ளி வைத்துக் கொண்டு எழுத வேண்டியிருக்கிறது ! பற்றக்குறைக்கு இந்த ஆல்பம் இன்னமும் சினிபுக் ஆங்கிலப்பதிப்பில் வெளிவந்திருக்கவில்லை எனும் போது மொழிபெயர்ப்பினில் பஞ்சாயத்துச் சங்கிலி முருகன் போல நொடிக்கொரு சந்தேகம் எழவும் தவறவில்லை  ! ஏற்கனவே இதற்கான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பினை ஒரு பிரெஞ்சு பிரஜையே செய்திருந்தார் என்றாலும், எனக்கு அதனில் முழுமையாய் திருப்தியில்லை ! So  மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்து ஓய்வில் இருக்கும் நமது வழக்கமான மொழிபெயர்ப்பாள மேடமையும் குடலை உருவி அவரையுமே இக்கதைக்கொரு மொழிபெயர்ப்பினைச் செய்து வாங்கியிருந்தேன் ! அதன் பலனாய் எனது மேஜையில் இப்போது இறைந்து கிடப்பது தலீவரின் கதறல் கடுதாசிகளுக்குப் போட்டி தரவல்லவொரு காகிதக் குவியல் !  படங்களுடனான பிரெஞ்சுப் பக்கங்கள் ஒரு பக்கம் ; ஒன்றுக்கு இரண்டாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு ஸ்கிரிப்ட்ஸ் ; கடைசி மூன்றோ-நான்கோ இ.ப. இரண்டாம் சுற்றின் புக்ஸ் என்று சூழ்ந்து நிற்கின்றன ! இவற்றினூடே செய்யும் பயணம் என்பதால் எதிர்பார்த்த வேகம் இங்கே சாத்தியமாகவில்லை ; பாதிக் கிணற்றினையே இது வரைக்கும் கடந்துள்ளேன் ! அடுத்த 2 நாட்களுக்குள் ஒரு மாதிரியாய் ஜேசன் மக்லேனுக்கு விடை தந்துவிட்டேனெனில் - கொஞ்ச காலத்துக்காவது இந்த மறதிக்கார நண்பரின் பஞ்சாயத்துக்களிராது ! Becos இவரது புது ஆல்பமானது பிரெஞ்சில் வெளிவந்திடவே இன்னும் ஓராண்டு  அவகாசமுள்ளது & அதனை சினிபுக் ஆங்கிலத்தில் வெளியிட நிச்சயமாய் 2023-ன் இறுதிக்கு முன்னே சாத்தியங்கள் இராதென்று சொல்வேன் ! So அதுவரையிலும் அசோக சக்கரவர்த்தியின் revision மறுக்கா அவசியமாகிடாது !

கதையைப் பொறுத்தவரையிலும் - பட்டாசாய் ஆக்ஷன் பொரிந்து தள்ளுகிறது ! "மேபிளவர் சுற்று" என்று நிறுத்தி, நிதானித்து சாவகாசமாய் (புதுக்) கதாசிரியர் செய்திருந்த பில்டப்கள் இரண்டாம் சுற்றின் துவக்க ஆல்பங்களில் பொறுமையை ரொம்பவே சோதித்திருந்த நிலையில் - இதற்கு முன்பான ஆல்பமான "2132 மீட்டர்கள்" செமையாய் வேகமெடுத்திருந்தது ! வாஷிங்டனில் போப்பாண்டவரை நோக்கிச் சீறிப் பாயும் தோட்டாவோடு 'தொடரும்' என்ற போர்டை அங்கே மாட்டியிருக்க - அதன் தொடர்ச்சியான இந்த ஆல்பம் அதே வேகத்தில் பிய்த்துப் பிடுங்கிப் பயணிக்கிறது ! இன்னும் ஒன்றோ, இரண்டோ ஆல்பங்களோடு இந்த இரண்டாம் சுற்றுக்கு "சுபம்" போடுவதே படைப்பாளிகளின் திட்டமிடலாம் ; ஆனால் அது எப்படிச் சாத்தியமாகிடக்கூடுமென்று எனக்குப் புரிஞ்சில்லா ! Anyways புரியாத புதிர்கள் தான் இந்த மொத்தத் தொடரின் template எனும் போது படைப்பாளிகளின் கைவசம் ஏதாச்சுமொரு யுக்தி இல்லாது போகாதென்பது உறுதி !  

Moving on, டிசம்பரின் கி.நா.வான "காட்டான் கூட்டம்" பணிகள் நிறைவுற்று அச்சுக்குத் தயாராகி நிற்கிறது ! And 74 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பம் நிச்சயமாய் mixed reactions கொணரக்கூடுமென்பதை இப்போதே யூகிக்க முடிகிறது ! கதை ; க்ளைமாக்ஸ் ; இத்யாதி என்ற நார்மல் இலக்கணங்களுக்குட்பட்ட வாசிப்பை எதிர்பார்த்து இங்கே புகுந்தீர்களெனில் - யூடியூபைப் பார்த்து இல்லாள் செய்த அல்வாவினை விழுங்க முனையும் பீலிங்கே மேலோங்கும் ! ஆனால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றிப் புகுந்தால், கண்ணுக்கு இதமான சித்திரங்களும், வர்ணங்களும், ஒரு நேர்கோட்டுக் கதையோடு நம்மைக் கட்டுண்டு கைபிடித்துச் செல்லும் ! And இங்குமே லோக்கல் மொழிநடைக்கு அவசியம் இருப்பதாய் எனக்குத் தோன்றிட, அதற்கேற்பவே பேனா பிடித்துள்ளேன் ! கதையின் நாயகன் ஸ்டெர்ன் ஒரு வெட்டியானாய் இருக்கும் போதிலும், அவனொரு இலக்கிய ரசிகன் ; பண்பட்ட வாசிப்பாளன் and therefore அவனுக்கு டீசெண்டான வரிகளில் வண்டி ஓடி விடுகிறது ! ஆனால் அவன் எதிர்கொள்ளும் இதர கதைமாந்தர்களோ வன்மேற்கின் கரடுமுரடு பார்ட்டீஸ் எனும் போது அவர்களுக்கு தன்மையான வரிகளை பொருத்திப் பார்க்கவே இயலவில்லை ! So டெட்வுட் டிக்கில் ஆரம்பித்த கச்சடா பாணியானது - அதே வீச்சில் இங்கில்லை என்றாலும் தொடர்கதையாகிடுகிறது  ! இதே போக்கில் போனால், ஆபீஸிலும் போய் "இன்னாமே ...டெசுபாட்சுக்கு ரெடியா கீதா - இல்லியா ?" என்று பேச ஆரம்பித்து விடுவேனோ - என்னவோ தெரியலை !! Anyways காமிக்ஸ் வாசிப்புகளின் பன்முகங்களை தரிசிக்க இந்த ஆல்பமொரு வாய்ப்பாகிடக்கூடும் என்பேன் ! Definitely not for the traditional comics reader !!

ஒன்றுக்கொன்று துளியும் சம்பந்தமே இல்லாப் பாணியிலான பணிகளின் பட்டியல்  கடந்த ஒரு வாரத்தில் மேற்கொண்டும் நீண்டது - நமது டுபாக்கூர் டிடெக்டிவ் "ஹெர்லக் ஷோம்சின் புண்ணியத்தில் !  இரத்தப் படலம் - சீரியஸான ; நயமான மொழிநடையினைக் கோரிடுகிறதெனில் ; ஸ்டெர்ன் லோக்கலாய் பயணிக்கச் சொல்லுகிறதெனில் ; இந்த ஷோம்ஸ் + வேஷ்ட்சன் கூட்டணியானதோ - ஜாலியாய் , சகஜமாய் கதை நகர்த்தக் கோருகிறது ! ஒரே வாரத்தில் மூன்றுக்குள்ளும் தலைநுழைத்து குட்டிக்கரணங்கள் போட்டுப் பார்க்கும் இந்த நடப்பாண்டின் இறுதி மாதத்துப் பணிகளின் முயற்சிகள் in some ways எனக்கு ஸ்பெஷலாய்த் தென்படுகின்றன ! ஏனென்கிறீர்களா ? Simply becos - காத்துள்ள 2022 & maybe தொடரக்கூடிய அதற்குப் பின்னான பொழுதுகளிலும், கமெர்ஷியல் கதைகளுக்கே ரெகுலர் தடங்களில் முன்னுரிமை தந்திடவுள்ளோம் ! So இந்த மாதிரியான அதிரி புதிரி offbeat கதைகள் - இடையிடையே கிட்டும் ஸ்பெஷல் வாய்ப்புகளில் மட்டும் தானே இனி தலை காட்டிட இயலும் ? 2022-ன் அட்டவணையினைப் பார்த்தீர்களென்றாலே no more விஷப் பரீட்சைஸ் & no more விளிம்புநிலை நாயகர்கள் என்பது புரிந்திடும் ! So in many ways - காத்துள்ள இந்த டிசம்பரின் இதழ்கள் 2012 முதலானதொரு 120 மாதங்களில், வளைந்து, நெளிந்து, படர்ந்து ஓடிய சிற்றோடையின் இறுதி stretch என்பேன் ! Of course கமர்ஷியல் கதைகளாய் மட்டுமே நம் பயணம் காலத்துக்கும் இருந்திடாது & ஏதோவொரு புள்ளியில் திரும்பவும் குரங்குச் சேட்டைகள் அரங்கேறாது போகாது தான் ; but இந்த நொடியில் அந்தப் புள்ளி பற்றி ஆரூடம் சொல்லத் தெரியலை ! இதோ என்வசம் இருக்கும் ஹெர்லக் ஷோம்சின் இறுதிக்கு முன்பான version அட்டைப்படத்தின் பிரிவியூ !  திருத்தங்கள் போட்ட version-ஐ நாளைக்குப் பகலில் இங்கே replace செய்திடுகிறேன் ; so அதுவரைக்கும் இதனில் இருக்கக்கூடிய குறைகள் சார்ந்த அலசல்கள் வேணாமே, ப்ளீஸ் !

அடுத்த சில நாட்களுக்குள் "இரத்தப் படலம்" மொழிபெயர்ப்புக்கு மங்களம் பாடிவிட்டால் - அப்புறமாய் FFS-ன் புக் # 1 -ன் எடிட்டிங் பணிகளே காத்திருக்கும் ! ஏற்கனவே ALPHA முதல் பாகத்தினைத் திருத்தம் போட்டு முடித்து விட்டேன் ; so மீத 2 பாகங்கள் + ஏஜெண்ட் சிஸ்கோவின் 2 பாகங்கள் + 1 பாக TANGO இவ்வாரத்து பணி லிஸ்டில் இடம்பிடித்திடும் ! அதற்கெல்லாம் மத்தியிலோ இன்னொரு செம முக்கியமான பணி வெயிட்டிங் ! 

அது தான் சீனியர் எடிட்டரின் "அந்தியும் அழகே" flashback-ஐ உருப்படியாய் அமைக்கும் பணியானது ! ரெகுலராய் எழுதும் touch இல்லாது போகும் பட்சங்களில் எண்ணங்களை எழுத்தாக்குவது சுலபமே அல்ல என்பது சீனியர் எனக்கு எழுதி அனுப்பி வரும் மின்னஞ்சல் பக்கங்களில் புரிகிறது ! இது வரைக்கும் அவர் எழுதி அனுப்பியுள்ள நினைவுகள் எல்லாமே தந்தி பாணியில் 'லொஜக்-மொஜக்-பச்சக்' என்றே நிறைவுறுகின்றன !  

  • உங்களுக்கு எவை சுவாரஸ்யமான விஷயங்களாகிடக்கூடும் ? 
  • எங்கே சற்றே விலாவரியாய் எழுதிட வேண்டி வரும் ? 
  • எங்கே சுருக்கமாய்த் தாண்டிச் செல்ல வேண்டி வரும் ? 
  • "கோபால் பற்பொடி" விளம்பர பாணிகள் எழுத்துகளுக்குள் எட்டிப் பார்த்திடாது தொடரை முன்னெடுத்துச் செல்ல என்ன செய்யலாம் ?  
  • ஒரு அத்தியாயமானது ஒன்றிரண்டு பக்கங்களுக்குப் பயணிக்க வேண்டுமெனில், எவ்வளவு எழுத வேண்டி வரும் ? 

என்ற ரீதியில் கோச்சிங் க்ளாஸ் நடத்திட ஏதாச்சுமொரு  செண்டரை  அவசரமாய்த் தேடி வருகிறேன் !  In any case - சீனியரின் நினைவலைகளுக்கு அகவை 50 and அவரது இன்றைய அகவை 80 என்பதால் - "பொட்டுக்கடலை சாப்பிட்டேன் ; புதினா துவையல் ஆட்டினேன் !" என்ற ரீதியிலான எனது நினைவுகூரல்களின் detail-களை இங்கு எதிர்பார்த்திட வேண்டாமே ப்ளீஸ் ?! 

Before I sign out - சில updates :

1.FFS புக் # 2 ஆன "ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்" காத்திருக்கும் வாரத்தில் அச்சுக்குச் செல்கிறது ! And "வாசக நினைவலைகள்" இடம்பிடிப்பது இந்த புக்கில் தான் எனும் போது - உங்களின் பின்னூட்டங்களை மின்னஞ்சல்களில் அனுப்பிட இன்னும் ஓரிரு நாட்களே அவகாசம் ! "இங்கே பதிஞ்சாச்சு ; வாட்சப்பில் அனுப்பியாச்சு" - என்று லூசில் விட்டு விடாதீர்கள் ப்ளீஸ் ; மின்னஞ்சல்களை நம்மாட்களுக்கு forward செய்வதைத் தாண்டி வேறெந்த வேலைகளையும் செய்யுமளவிற்கு எனக்கு இந்தத் தருணத்தில் நேரமில்லை guys ! So அப்புறமாய் - "நான் எழுதினது வரலே ?!" என்ற விசனங்கள் வேணாமே - ப்ளீஸ் !! மின்னஞ்சல்கள் ...மின்னஞ்சல்கள் மட்டுமே இந்த நொடியில் கைகொடுக்கும் ! 

2.FFS புக் # 1 - இம்மாதத்தின் நான்காம் வாரமே அச்சுக்குத் தயாராகி விடும். இதனில் தான் உங்களின் போட்டோக்களை இடம்பிடிக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளேன் ! So முன்னர் சொன்னது போல டிசம்பர் 5 வரைக் காத்திருக்க அவகாசமிராது folks ! நவம்பர் 30 தான் இதற்கான இறுதிப் பொழுதாக இருந்திடும் !! ஓயாமல் பெய்து வரும் மழைகள்  மதியங்களுக்குப் பின்னான பொழுதுகளை தினமுமே வேலைக்கு ஆகாதவைகளாக்கி வருகின்றன ! So இயன்றமட்டுக்கு முன்கூட்டியே நமது வேலைகளை முடித்துத் தந்தால் தான் பைண்டிங்கில் சொதப்பிடாது தலைதப்பிக்கும் ! அது மட்டுமன்றி, தலையில் சுமந்து திரியும் இந்த பாரத்தை இறக்கி வைக்க எனக்கும் ஒரு துரித வாய்ப்பு கிட்டினால் தான் ; தொடரக்கூடிய பணிகளுக்குள் கவனம் செலுத்த எனக்கு சாத்தியப்படும் ! So போட்டோக்களை நவம்பர் 30-க்கு முன்பாய் ப்ளீஸ் !

Before I sign out - உங்களிடம் கேட்க எனக்கொரு கேள்வி ! முத்து பொன்விழா logo தேர்வினில் நிறைய டிசைன்களை நம்மாட்கள் போட்டுத்தந்திருந்தனர் & அவற்றுள் எனக்கு ஒரு டிசைன் ஓ.கே.வென்று பட்டது ! ஆனால் சீனியருக்கோ இன்னொன்று ரசித்தது ! And ரைட்டு - சீனியரின் தேர்வே இதனில் முன்னுரிமை பெறட்டும் என்று தீர்மானித்து கேட்லாக் அச்சுக்குப் புறப்படவிருந்த நேரத்தில் நண்பர் உதய் சில டிசைன்களை அனுப்பியிருந்தார் ! அவற்றுள் ஒன்று பளிச்சென்று இருப்பதாய்பட்டது ; அதனை நீங்களும் FB க்ரூப்களில் ஏற்கனவே பார்த்திருப்பீர்களென்று நினைக்கிறேன் ! இடைப்பட்ட நேரத்தில் ஏதேதோ பணிகளுக்குள் நான் புகுந்து, மண்டை சாம்பாராய் குழம்பிக்கிடக்கும் நிலையினில் - 'எங்கே ஆரம்பித்தோம் ? எங்கே நிற்கிறோம் ?' என்பது கூட நினைவுகூர்ந்திட முடியலை !! So இந்நேரம் நான் முடிவெடுக்கிறேன் ; முடியெடுக்கிறேன் என்று மொக்கை போடுவதற்குப் பதிலாய் பந்தை உங்களிடமே toss பண்ணி விடுகிறேன் ! 

இங்குள்ள மூன்றில் :

# 1 எனக்கு ஓ.கே. என்றான டிசைன்  !

# 2 சீனியருக்கு ஓ.கே.  !

# 3 நண்பரின் கைவண்ணம் ! 

# 1

# 2 
# 3

இந்த மூன்றுக்குள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து சொல்லுங்கள் ; 'பச்சக்' என அட்டைப்படத்தில் பதித்து வரும் வாரமே அச்சுக்குப் புறப்பட்டு விடுவோம் ! நானிப்போது இருக்கும் நிலையில் ஆபீசில் கட்டியிருக்கும் நூலான்படையை ஒரு போட்டோ  எடுத்து யாரேனும் காட்டினால் கூட, 'ஏ ..சூப்பரப்பு !!' என்று டிக் அடித்து விடுவேன் என்று பயமாக உள்ளது ! So சிம்பிளாக உங்களின் தீர்ப்பை நடைமுறையாக்கிடுவோம் ! 

"1 or 2 or 3" - என்று பின்னூட்டங்களில் உங்கள் தேர்வுகளைப் பதிவிட்டால் போதும் ! திங்கட்கிழமை காலைக்குள் (8th Nov'21) இதனில் எந்த டிசைனுக்கு கூடுதலாய் ஆதரவுள்ளதோ - அதுவே நமது லோகோவாய் FFS இதழினில் இடம்பிடித்திடும் ! Bye all...see you around !! XIII உடனான பயணத்தைக் தொடரக் கிளம்புகிறேன் ! Have a cool Sunday ! 

P .S : சந்தா 2022 விறுவிறுப்பாய் வேகமெடுத்து வருகின்றது ! நீங்களும் அதனில் பங்கேற்க கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன் - ப்ளீஸ் ?

Wednesday, November 03, 2021

தீபாவளியின் நிறம் மஞ்சள் !

 நண்பர்களே,

வணக்கம். உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! பெரும் தேவன் மனிடோவின் அருளோடு இல்லம்தோறும் மகிழ்வும், ஆரோக்கியமும் , வளமும் நிலைக்கட்டும் !! இங்கே எங்கள் சிறுநகரத்தினில் கண்ணில்படும் கடைசிநிமிட உற்சாகங்கள் - தமிழகமெனும் ஒரு பானைச்சோற்றுக்கான பதமென இருப்பின், ஊரெங்கும் இந்நேரம் தெறிக்க விட்டுக் கொண்டிருப்பீர்களென்பது உறுதி ! கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின்பாய் ஜனம் இப்படியொரு உத்வேகத்துடன் பொங்கியெழுவதை நிறைய குஷியோடும், கொஞ்சூண்டு கிலியோடும் பார்க்கும் இந்த வேளையினில், இக்கட என்ன எழுதுவதென்ற யோசனை எனக்குள் ! 

ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பானதொரு தீபாவளி என்று ஞாபகம் ; அக்கா, தங்கை, தம்பி குடும்பங்களென அத்தினி பேரும் குற்றாலத்திற்கு ஒட்டு மொத்தமாய்ப் போயிருந்தோம் ; ஆனால் என் மண்டையோ - "தீபாவளிப் பதிவு" என்பதிலேயே நிலைகொண்டிருந்தது ! புதுசாய் லவ்ஸ் பண்ணும் விடலையைப் போல, கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், ரூமுக்கு ஓடிப் போய் மாங்கு மாங்கென்று டைப்படித்துக் கொண்டிருந்தேன் ! நான் அடிக்கும் கூத்துக்கள் ஆத்துக்காரிக்கு நிரம்பவே பரிச்சயம் என்பதால் - "லூசு மாமூலான பிசியில் உள்ளதென்று" கண்டுகொள்ளாது விட்டு விட, பெருசாய் சேதாரங்களின்றி அன்றைய பதிவையும், பொழுதையும் ஒப்பேற்றி முடித்து விட்டேன் ! 'ரைட்டு...பதிவைப் போட்டாச்சு ; இனி மக்களின் பின்னூட்டங்களைப் பார்க்கலாம்னு' பாத்தாக்கா - அன்னிக்குப் பொழுதில் கவிஞரை கூட ஆளைக் காணோம் ! பலமாய் ஈயோட்டிய நாளின் இறுதியில் மொத்தமாய் நாற்பதோ என்னவோ தான் தேறியிருந்தது பின்னூட்ட response ! 'அவசரமா ரூமுக்குத் திரும்புற முனைப்பு இருந்திருக்காங்காட்டி, பார்டர் கடையிலே இன்னும் ரெண்டு புரோட்டா கூடுதலா சாப்ட்ருக்கலாமோ ? ' என்ற ஆதங்கத்தோடு படுக்கையில் விழ ரெடியான போது தான் தெரிந்தது - அன்றைக்கு பகலிலும், மாலையிலும் - தல ; தளபதி ; தலைவர் என அத்தினி பேரது படங்களும் டி-வியில் போட்டுத் தாக்கியுள்ளனவென்று !! "தேவுடா....இது மொதல்லேயே தெரிஞ்சிருந்தா நானே படம் பாக்கக் குந்தியிருப்பேனே ? " என்று மண்டையில் தட்டிக் கொண்டேன் ! So தீபாவளிக்கு தேவை நிதானம் - தொந்தி நிரப்புவதிலும் சரி, பதிவினைத் தாக்குவதிலும் சரி - என்பது அன்றைக்கு புரிந்தது ! 

நாளைக்குக் காத்திருப்பது என்ன படமென்று தெரியில்லா ; ஆனால் OTT தளங்களும் சரி, சேனல்களும் சரி, பொரியோ பொரியென்று பொறித்து விடுவார்கள் எனும் போது - யீ நாயர் டீக்கடையினில் சாயாவை அளவோடு ஆத்துவதே மதியென்று புரிஞ்சூ !! In any case - டிசம்பரின் பணிகள் & FFS இதழின் பணிகள் தலை தெறிக்கும் வேகத்தினில் ஓடி வரும் வேளையினில் இந்த விடுமுறைப் பொழுதுகளை அங்கு செலவிட்டால் - ஆபீசுக்கே அந்த மட்டுக்கு டென்க்ஷன்  குறையும் என்பதும் மண்டையில் உறைக்கிறது ! So சிக்கென்ற ரிஷாப் பண்ட் இன்னிங்க்சைப் போல இந்தப் பதிவினையும் அமைக்க முயற்சிக்கலாமா folks ?

தீபாவளி & TEX !! எப்படியேனும் பண்டிகைக்கு முன்பாக உங்கள் அனைவரிடமும் 'தல' சென்று சேர்ந்திருக்க வேண்டுமென்பதே எனது தலைக்குள் அக்டோபர் முழுமைக்கும் குடியிருந்த வேகம் ! அதிலும் சந்தா நண்பர்களுக்கு மாத்திரமன்றி, கடைகளில் வாங்குவோருக்குமே புக்ஸ் கிட்டிட வேண்டும் என்பதால் - கடைசி 3 நாட்களும் ஆபீசில் நம்மாட்களை நிம்மதியாய் அமரவே விடவில்லை ! பைண்டிங்குக்கு ஒரு ஆள் ; அட்டைப்பெட்டிகளை வாங்கி வர இன்னொரு ஆள் ; ஸ்டிக்கர் ஓட்ட ஒரு ஆள் ; அட்ரஸ் ஓட்ட ஒரு ஆள் ; கூரியர்களுக்கு ஒரு ஆள் ; லாரி ஷெட் போக ஒரு ஆள் - என்று அத்தனை பேருக்கும் கால்களில் சக்கரம் மாட்டி விடாத குறை தான் !! And ஆண்டவன் புண்ணியத்தில் கூரியர்கள் ; டிரான்ஸ்போர்ட் என அத்தனையுமே இம்முறை ஒத்துழைத்திருக்க - தல ஒரு ரவுண்டு அடித்து முடித்து, "மறு ஆர்டர்கள்" ரவுண்டுக்கு ரெடியாகும் சூழல் கூட சாத்தியமாகியுள்ளது !! அது மாத்திரமின்றி, கலர் ; black & white ; மௌன மொழி சாகசம் - என 3 கதைகளுமே களைகட்டியிருக்க, நிம்மதிப் பெருமூச்சு எங்களிடம் ! ஆண்டின் எந்தப் பொழுது லயித்தாலும், லயிக்காது போனாலும் - தீபாவளி மட்டும் சொதப்பிடின் - "வைச்சு செய்வீங்க !!" என்பதை 2014 முதலே அறிவேன் ! (Remember "இரவே..இருளே..கொல்லாதே" ?!!!) So அந்த பயம் ஒவ்வொரு பண்டிகைப் பொழுதுக்கும் தொடர்கதையாவதுண்டு and நீங்கள் தரும் thumbs up அடையாளங்களே - எங்களுக்கு நிஜமான தீபாவளிகள் ! இம்முறையும் தலை தப்பியதற்கு 'தல'யே தலையாய காரணம் எனும் போது தலை வணங்குகிறோம் - நம் தலைமகனுக்கு !! (ஆத்தாடி...ஒரே வரியில் எத்தன தல ?!!) ஆக (நமது) தீபாவளிகளுக்கோர் புது வர்ணம் தருவது மஞ்சசொக்காய் TEX & டீம் தானெனும் போது - இந்த தீபாவளிப் பதிவிலும் அவரைத் தவிர்த்து வேறு யார் பற்றிய சேதியினைப் பகிர்வது பொருத்தமாகிடக்கூடும் ? 

சேதி இது தானுங்க ! 2022 அட்டவணையினை உங்களிடம் ஒப்படைத்தாச்சு ;  பெருசாய் சாத்துக்களின்றி எனது தேர்வுகள் ஒரு மாதிரி ஓ.கே. ஆகி விட்டுள்ளன ! அட்டவணையினில் இரண்டு விஷயங்கள் கவனத்துக்குரியவை :

நம்பர் 1 : ரெகுலர் சந்தா தடத்தினில் மறுபதிப்புகளே லேது !! 

நம்பர் 2 : 'தல' டெக்ஸுக்கு அட்டவணையினில் நாம் ஒதுக்கியிருந்ததோ 9 ஸ்லாட்ஸ் மட்டுமே ! 

ஆனால் "மாதம்தோறும் 'தல' தரிசனமிருக்கும் !" என்று சூடத்தை அணைத்து சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி வைத்திருந்தேன் !! And இதோ - ஜனவரியிலேயே நான் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றும் அவசியம் எழுந்து நிற்கின்றதே - simply becos ஜனவரி 2022-ன் துவக்கத்தில் வெளிவரக் காத்துள்ளது முத்துவின் பொன்விழா ஆண்டுமலரான FFS மட்டுமே ! And ஜனவரியின் இறுதிக்கு முன்பாய் SMASHING '70s சார்பில் வேதாளன் ஸ்பெஷல்-1 வந்திருக்கும் ! ஆக ஆண்டின் முதல் மாதத்திலேயே TEX-க்கு (அறிவிப்புகளில்) ஸ்லாட்ஸ் நஹி ! என்ன தான் அதிரடியாய் புது நாயகர்கள் ; கிளாசிக் நாயகர் (வேதாளன்) என்றெல்லாம் ஜனவரிக்கு மெருகூட்டினாலும்  TEX இல்லாது போயின் - something lacking என்றே இருக்குமல்லவா ? தவிர, அவ்வித சூழலில்  தலீவருக்கு இடுப்பில் வெறுமனே வேப்பிலை கிளையைக் கட்டி அனுப்பி மறியல் செய்யச் சொல்லி, சிவகாசியையே ஸ்தம்பிக்கச் செய்யும் வாய்ப்புகள் பிரகாசம் என்பதால், அவசரமாய் யோசித்தேன் என்ன செய்வதென்று ?! இருக்கவே இருக்குது நமது புத்தக விழா ஸ்பெஷல் formula ! 

  • ஜனவரியில் சென்னையில் புத்தக விழா இருந்து ; அங்கு நமக்கு ஸ்டால் கிடைக்கவும் செய்தால் ரைட்டு !!
  • Maybe ஒரு துரதிர்ஷ்ட சூழலில் விழா இல்லாது போகும் பட்சத்தில், இருக்கவே இருக்கு நமது மொட்டை மாடி ஆன்லைன் விழா !! 

புத்தகவிழா எதுவாயிருப்பினும் ஜனவரியினில் நம்மவருக்கு களம் காத்துள்ளது - 2 அதிரடி முழுவண்ண கிளாசிக் சாகசங்களின் தொகுப்பாய் !! Here are details :

*The LION LIBRARY - ஜனவரி 2022 முதலாய் ...... !

*நாம் அட்டவணைகளில்  அறிவித்திரா இதழ்களை அவ்வப்போது குறுக்காலே நுழைக்கும் இதழ்களை, தற்சமயமாய் - "சன்ஷைன்  லைப்ரரி" லேபிலில் வெளியிட்டு வருகிறோமல்லவா - இனிமேற்கொண்டு அவையெல்லாமே "லயன் லைப்ரரி" என்ற அடையாளம் தாங்கி வந்திடும் ! 

*லயன் லைப்ரரியின் முதல் இதழாய் வரவுள்ளது - TEX க்ளாசிக்ஸ் - 1 !!

*இதனில் 352 பக்கங்கள் இருந்திடும் ; முழுக்கவே முழுவண்ணம் ; ஹார்ட் கவர் ; 2 க்ளாஸிக் சாகசங்களுடன் !

*இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 1 - உங்களின் நெடுநாளைய கோரிக்கையான "பழிக்குப் பழி " !! In full color !!

*இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 2 - "கானகக் கோட்டை !" - லயன் ஜாலி ஸ்பெஷல் இதழில் இடம்பிடித்த டெக்ஸ் & கார்சன் அதிரடி மேளா இது ! இதுவும் in full color !

*எவ்வித முன்பதிவுகளும் இதற்குத் தேவை இராது ; நிதானமாய் ; உங்களுக்கு வசதிப்படும் சமயத்தில், வாங்கிக் கொள்ளும் விதத்தில் கையிருப்புகளைத் திட்டமிட்டுக் கொள்வோம் ! உங்களுக்கு வசதிப்படும் சமயத்தில் நிதானமாய், சாவகாசமாய் வாங்கிக் கொள்ளும் luxury இங்கிருக்கும் ! So "சந்தா கட்டாதீங்க ; முன்பதிவு பண்ணாதீங்க !" என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு குரல் கொடுத்துக் களப்பணியாற்றும் "நண்பர்களுக்கும்" லைட்டாக ரெஸ்ட் தந்தது போலிருக்கும் தானே ?!

* டெக்ஸ் என்பதால் தயக்கமின்றி முகவர்கள் வாங்குவர் and therefore இவை கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். So முகவர்களிடம் வாங்கி வரும் நண்பர்கள் அதனையே தொடர்ந்திடலாம் ! 

* லயன் லைப்ரரியில் பழசுகள் மாத்திரமே என்றிராது ; புதுசும் வந்திடும் - சந்தர்ப்பங்களுக்கேற்ப !! 

லயன் லைப்ரரி இதழ் # 2 - "உயிரைத் தேடி" ! In full color !!


So இந்த அறிவிப்போடு அடியேன் இப்போது கிளம்புகிறேன் - "இரத்தப் படலம்" பணிகளில் ஐக்கியமாகிட !! 

அதற்கு முன்பாய் - caption போட்டியின் TOP 3 எவையென்று தேர்வு செய்திட - போன வருஷம் இதே வேளையில் நடுவர்களாய் செயலாற்றிய 2 அசலூர் or rather அசல்நாட்டு ஜட்ஜையாக்களை மேடைக்கு அழைக்கிறேன் ! நண்பர் Radja & மஹிஜி ...நம்ம ஜட்ஜ் ராய் பீன் போலவொரு தீர்ப்பைச் சொல்லிப் போடுங்க ப்ளீஸ்  ! வெற்றி பெறும் 3 நண்பர்களுக்கு - தலா ஒரு TEX க்ளாசிக்ஸ் - 1 , நமது அன்புடன் !!

Bye all....Have a lovely & safe Diwali !! See you around !!

And நவம்பர் இதழ்களின் அலசல் தொடரட்டுமே folks ?!