Wednesday, October 31, 2018

இதழ்கள் 3 ....எதிர்பார்ப்புகள் 300 ..!

நண்பர்களே,

வணக்கம். இம்முறை ஆபீசில் மாமூலான அந்த டெஸ்பாட்ச் தின ரணகளமில்லை ; "DTDC க்கு ஆட்டோ போயிடுச்சா ? ST -லே எப்போ புக்கிங் பண்ணுவாங்களாம் ? Professional ரசீது வாங்கியாச்சா ? அச்சச்சோ....இது ரிஜிஸ்டர் பார்சலாக்கும் ; இதை யாரு கூரியர் கட்டில் வைத்தது ? பாரின் பார்சல் பேக்கிங் ஆச்சா ?" என்று அப்பப்போ வெட்டி ஆபீசராய் நான் சவுண்ட் கொடுக்க முகாந்திரம் இன்றைக்கு இம்மி கூட இருக்கவில்லை !! சில பல நாட்களுக்கு முன்னே தயாராகிக் காத்துக் கிடந்த இதழ்களை நமது அச்சகப் பணியாளர்கள் ஒரு நாள் முன்னதாகவே நீட்டாகப் பேக் செய்து தந்திருக்க, இன்று காலை வரிசையாய் சகலமும் கூரியர்களை நோக்கிப் புறப்பட்டு விட்டன ! So புலர்ந்திடவுள்ள நவம்பரை நம் இதழ்களோடே வரவேற்கத் தயாராகிக் கொள்ளுங்கள் guys !! ஆண்டின் இறுதி stretch-ன் அட்டவணை செம இலகுவாய் இருப்பதன் புண்ணியத்தில் - ஜாலியாய் கையை வீசிக் கொண்டிருக்கிறேன் !!

இம்முறை இதழ்கள் 3 மட்டுமே என்றாலும், என்னுள் இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்புகளைக்  கிளப்பியுள்ளன! 

தீபாவளி மலர் true to form - உங்களின் டெக்ஸ் காதலுக்குத் தீனி போடுமா ? டைகரின் flashback - நாம் தந்துள்ள பில்டப்புக்கு நியாயம் செய்திடுமா ? என்ற ரீதியில், TEX ட்ரிபிள் ஆல்பத்தில் என்னுள் கேள்விகள் ! 

நீலப் பொடியர்களின் சமாச்சாரத்திலோ - கேள்விகளின் பரிமாணமோ வேறொரு விதம் ! SMURFS களுக்கு maybe தற்காலிகமாய்  "சுப மங்களம்" பாடவிருக்கும் இந்த இதழ், திடு திடுப்பென ஏதேனும் மாயம் செய்திடுமா ? உங்களிடையே பரவலாய் ஏதேனும் அதிரடி மனமாற்றங்களைக் கொணர்ந்திடுமா ? என்ற ஏக்கங்கள் உள்ளுக்குள் !!

007-ன் சமாச்சாரத்திலோ முற்றிலும் வேறொரு வித எதிர்பார்ப்பு ! அட்டைப்படம் ; சித்திரங்கள் ; கலரிங் ; பிரின்டிங் என ஜம்போவின் இந்த இதழ் # 3 செம கச்சிதமாய் அமைந்திருப்பதாய் என் கண்களுக்குத் தெரிந்தாலும் -  செம ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களான உங்களிடம் அதனை ஒப்படைத்த கையோடு - உங்களின் reaction-களை கண்டறிந்திடும் ஆர்வத்தை அடக்க இயலவில்லை ! ஜேம்ஸ் பாண்டின் முற்றிலும் புதுமையான அவதாரை நீங்கள் ரேட் செய்திடல் தானே நமக்குப் பிரதானம் ? So காத்திருப்போம் - உங்களின் முதலாவது ;.இரண்டாவது, மூன்றாவது ரியாக்ஷன்களுக்கு !!

இம்முறை 2019-ன் அட்டவணையை சந்தாதாரர்கள் அத்தனை பேருக்கும் மட்டுமன்றி - ஆன்லைனில் ; உள்ளூர்க் கடைகளில் வாங்கிடக் கூடிய வாசகர்களுக்குமே கிடைக்கும் விதமாய்த் திட்டமிட்டுள்ளோம் ! So இம்மாத SMURFS இதழோடு அட்டவணை 2019-ம் இடம் பிடித்திருக்கும் ! Try not to miss it folks !! 

தீபாவளிக்கு ஒற்றை வாரம் கூடப் பாக்கியில்லை எனும் போது - எங்கள் நகரம் இந்நேரம் தூங்கா நகரமாய் உருமாறியிருக்க வேண்டும் தான் !! ஆனால் உச்ச நீதி மன்றத்தின் பட்டாசு சார்ந்த தீர்ப்புகள் - உற்சாகங்களை சற்றே மட்டுப்படுத்தியுள்ளது போலத் தெரிகிறது ! ஊருக்குள் ; கடை வீதிகளில் ; பஜாரில் இன்னமும் பண்டிகைக்கான அந்த உத்வேகத்தைப் பார்த்திட இயலவில்லை ! But surprise ....surprise ..ஊரைச் சுற்றிலுமுள்ள அத்தனைப் பட்டாசுக் கடைகளிலும் போன வாரயிறுதி முதலாகவே செம கூட்டம் ; செம விற்பனை !! காத்திருக்கும் வாரயிறுதியில், இன்னமும் அமர்க்களமாய் விற்பனையாகிடுமென்ற நம்பிக்கையில் வணிகர்கள் காத்துள்ளனர் !! Fingers crossed !!  

ஒரு புஸ்வானத்தையே ஏழடி தொலைவிலிருந்து கொளுத்த முற்படும் சூரப்புலியான எனக்கு, தனிப்பட்ட முறையில் பட்டாசுகள் மீது மையல் லேது ; ஆனால் இந்தப் பகுதிகளின்  பொருளாதாரமே, இந்தத் துறையைச் சார்ந்திருக்கும் போது - அவற்றின் வெற்றிகளிலும், தோல்விகளிலுமே நகரின் எதிர்காலமும் கலந்துள்ளது ! Crossroads of life for குட்டி ஜப்பான் ! ஆனால் கடந்த சனி & ஞாயிறின் விற்பனைகளை ஒரு வழிகாட்டியாய் எடுத்துக் கொள்வதாயின் - பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள் இம்முறையும் !! Bye guys ! See you around !
P.S : இதழ்கள் ஆன்லைனில் லிஸ்ட் ஆகி ரெடியாகக் காத்துள்ளன : http://lioncomics.in/monthly-packs/547-november-2018-pack.html

Sunday, October 28, 2018

ஒரு சோம்பலான ஞாயிறின் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். அட்டவணை 2019 ; 2020 என்று எங்கெங்கோ நாம் பயணம் போகியிருக்க - 'மக்கா...இங்கே நாங்க குத்துக்கல்லாட்டம் இருக்கிறதை மறந்துப்புடாதே !!" என்று நவம்பர் & டிசம்பர் இதழ்கள் உரக்கக் கூவுவது போலொரு பீலிங் எனக்கு ! And அதிலுமே "தீபாவளி மலர் " ; லக்கி கிளாஸிக்ஸ் 2 ; ஜேம்ஸ் பாண்ட் (ஜம்போ) ; Action Special என்று சில பல ஸ்பெஷல் இதழ்கள் இந்த 2 மாதங்களுக்கென காத்திருக்க - சுடப் போகும் அடைக்காக, சுட வேண்டிய தோசையை மறந்து விடப்படாது !! என்ற உறுத்தல் உள்ளுக்குள் !! So first up - நவம்பர் இதழ்களின் updates !

ரெகுலர் சந்தாவினில் இம்முறை இரண்டே இதழ்களே - சந்தா B சார்பாய் - டெக்சின் தீபாவளி மலர் +  சந்தா C-ன் சார்பாய் one last time (at least for now !!) - நமது நீலப் பொடியர்களின் "காசு...பணம்...துட்டு..!" நடப்பாண்டில் திட்டமிடல்களை சற்றே கூர்ந்து நோக்குபவராய்  நீங்களிருக்கும் பட்சத்தில் - "அட்டவணையில் இல்லாத இதழாச்சே ? இது எப்படி உள்ளே ? " என்று புருவத்தை உயர்த்துவது உறுதி ! 2019 எனும் தென்னையில் கொட்டிய தேளின் புண்ணியத்தில் நடப்பாண்டில் லேசாய் நெரி கட்டியுள்ளது - வேறென்ன ?!!  சுட்டிப் புயல் பென்னியின் இடத்தில smurfs களமிறங்குகிறார்கள் - தவிர்க்க இயலா காரணங்களினால் ! 

3 ஆண்டுகளுக்கு முன்பாய் smurfs கதைகளை வெளியிடத் தீர்மானித்து உரிமைகளைப் பெற்ற போது மொத்தம் நாம் வாங்கியது 8 கதைகள் ! அவற்றைத் தொடரும் ஆண்டுகளில் வெளியிடுவது & 2018 -ல் அடுத்த batch கதைகளை கொள்முதல் செய்வது என்றும் ஏற்பாடு ! அவர்களிடம் பேசி விட்டு புறப்பட்டவனுக்கு, சுட்டிப் புயல் பென்னியையுமே கொசுறாய் சேர்த்து வாங்கி வெளியிடுவோமே என்ற ஆசை தலைதூக்கிட - பிடித்த பிடியில் பென்னியின் தொடரின் முதலிரண்டு கதைகளையும் காண்டிராக்டினுள் நுழைத்து - 8 smurfs + 2 பென்னி = ஆக மொத்தம் 10 கதைகள் என்று திருத்தி அமைக்கச் செய்தேன் ! ஊருக்கும் திரும்பி ; பொடியர்களும் களம் கண்டு ; அப்புறமாய் பென்னியும் அறிமுகமாகிட - 2016 ; 2017 & நடப்பாண்டினில் இதுவரையிலும் 7 smurfs + 2 பென்னி கதைகளை வெளியிட்டு விட்டோம் ! 'சரி...எப்படியும் 2018 -ல் அடுத்த set கதைகளைக் கொள்முதல் பண்ணுவோம்லே...அதிலே இருந்து பென்னியின் ஆல்பம் # 3 -ஐ எடுத்து நடப்பாண்டு டிசம்பரில் வெளியிட்டுக் கொள்ளலாம் !" என்ற நினைப்பில் பென்னியை 2018-ன் அட்டவணையில் கோர்த்திருந்தேன் ! ஆனால் smurfs & பென்னி பக்கமாய் ஆதரவுக் காற்று மிதமாகவே வீசிடுமென்றோ  - சித்தே அவர்களுக்கொரு பிரேக் தரும் நிலை எழுமென்றோ  நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை ! So புதுக் கதைகளை வாங்காத நிலையில் கைவசமிருந்த smurfs ஆல்பம் # 8-ஐ வெளியிடுவதைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை ! So நீலக் குட்டி மனுஷாளை இன்னொருவாட்டி சந்திக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நாமும் ; நம்மோடு கரம் குலுக்கக் கிட்டியிருக்கும் வாய்ப்பினை அவர்களும் உருப்படியாய்ப் பயன்படுத்திக் கொண்டிட முடிந்தால் ஷேமமே என்று தோன்றுகிறது ! எப்போதும் போலவே -  ஒரிஜினலையே அட்டைப்படமாக்கியுள்ளோம் - நமது எழுத்துருக்களின் சேர்க்கையோடு மட்டுமே ! 

கதையைப் பொறுத்தவரையிலும் புதிதாய் என்னவிருக்கப் போகிறது - நான் சொல்லிட ? As always - மனிதனின் வாழ்வியல் முறைகளின் முரண்களை அட்டகாசமாய்ப் பகடி செய்யும் பாணி இம்முறையும் தொடர்கிறது !! இதற்கெனப் பயன்படுத்தப்படும் நாயகர்கள், சுட்டு விரல் சைசிலான ஆசாமிகள் என்பதாலோ- என்னவோ ; நம்மில் நிறைய பேருக்கு இவர்கள் கதைகளில் பெருசாய் சாரம் இருக்காதென்றே ஒருவித நம்பிக்கை ஏற்கனவே குடி கொண்டுள்ளது ! So கதையோடு ஒன்றிட இயலாது தடுமாறுகின்றனர் ! "காசு...பணம்..துட்டு.." அந்த நம்பிக்கையைத் தகர்க்க முற்படும் ஒரு கடைசி அஸ்திரமென்று வைத்துக் கொள்வோமே ?!! ஏதேனுமொரு அதிசயம் நிகழ்ந்து, ஒற்றை ராவினில் smurfs காதல் நம்மிடையே பிரவாகமெடுப்பின் - பெல்ஜியத்துக்கான அடுத்த பிளைட்டில் ஷ்டாண்டிங்கிலாவது ஒரு டிக்கெட்டைப் போட்டுக் கிளம்பி விடுவேன் !!  And நிறைய நண்பர்களுக்கு அந்தப் பொடி பாஷை பெரும் நெருடலை தந்திடுவதால் - இம்முறை அதை 90% ஓரம் கட்டி விட்டோம் ! இயன்றமட்டிலும் சகஜ நடையிலேயே கதை பயணிக்க முயற்சித்துள்ளோம் ! So இனி தீர்ப்பு - ஜூரிவாள் கைகளில் !! பார்த்துப் பண்ணுங்கோ sirs !! "பண்ணிடாதீங்கோ !!"
And இம்முறை பிரிண்டிங்கும் தீயாய் அமைந்துள்ளது - நீல லோகத்தின் ரம்யத்தை நம் கண்களுக்கொரு விருந்தாக்கிட ! அது மாத்திரமின்றி - 2019-ன் கலர் அட்டவணையின் ஒரு பிரதியும் இந்த இதழோடு உண்டு - கடைகளில் வாங்கிடக் கூடிய வாசகர்களுக்கும் சேர்த்தே ! So இந்த இதழை வாங்கச் செய்திட இதற்கு மேலும் தடிப் போடுவதாயின் - சிபாரிசுக்கு விராட் கோலியைத் தான் கூட்டி வர வேண்டியிருக்கும் !! Give it a try folks - an unbiased try !! Please !!

நவம்பரின் பார்ட்டி # 2 - இது போல் கெஞ்சிடக் கூடிய ஆசாமியே கிடையாது ! :"இப்போ இன்னான்றே ?" என்றபடிக்கே ஆகிருதியாய் முன்னே நின்றாலே, maybe ஒரு பெங்களூர்வாழ் நண்பர் தவிர்த்து, பாக்கி அத்தனைப் பேருமே அந்த மஞ்சள் சட்டைக்காரரின் கட்சிக்கு பச்சக் பச்சக் என்று வோட்டு போட்டு விடுவோமென்பதில் ஏது சந்தேகம் ? "காதலும் கடந்து போகும்" ஒரு அக்மார்க் டெக்ஸ் சாகசம் ! இதோ அதன் அட்டைப்படத்தின் முதல் பார்வை ! 
முன் + பின் அட்டைகள் ஒரிஜினல்களின் வார்ப்புக்களே - மெலிதான வர்ண மாற்றங்களோடு மட்டும் ! And இதுவொரு MAXI Tex குண்டு சாகசமெனும் போது 341 பக்க புஷ்டியான ஆக்ஷன் மேளா waiting !! இது உட்பக்கங்களில் ஒன்றிரண்டு :

கூரியரில் இதழ் # 3 ஆக இடம்பிடிக்கவிருப்பது ஜம்போவின் JAMES BOND !! மீண்டுமொருமுறை சொல்லி விடுகிறேன் guys - "பனியில் ஒரு பிரளயம்" - ஜம்போ காமிக்சின் வெளியீடு மாத்திரமே ! So இதையும் ரெகுலர் சாந்தாவின் ஒரு அங்கமாய் கருதி - "புக்கைக் காணோம்"  என்று நம்மவர்களை கட்டி வைத்து உரித்திட வேண்டாமே - ப்ளீஸ் ? அதே போல - "நான் ரெகுலர் சந்தாவில் உள்ளேன் ; ஜம்போவிற்கு  சந்தா கட்டவில்லை ! ஆனால் இப்போது ரூ.200 அனுப்பியிருக்கிறேன் ; ஜேம்ஸ் பாண்டை என் கூரியரில் இணைத்திடுங்கள் !" என்ற கோரிக்கைகளும் நடைமுறை சாத்தியமற்றவை guys !! தனியாய் அதற்கெனவொரு ஆர்டர் செய்திடத் தான் தேவைப்படும் ! ஸ்டெல்லாவும் தாய்மையின் காரணமாய் பணியிலிருந்து விலகியிருக்க - நமது தற்போதைய front office முழுக்கவே new look கொண்டது ! So இந்த திடீர் திடீர் request-களை பூர்த்தி செய்திடல் இப்போதைக்கு அவர்களுக்கு சிரமமே !!

அதே போல இன்னுமொரு தகவல் + கோரிக்கையும் folks :

உள்நாட்டுச் சந்தாவாயினும் சரி ; அயல்நாட்டுச் சந்தாவாயினும் சரி - உங்களது தேர்வுகளுக்கேற்ப சரியான தொகைகளை மட்டுமே இனி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ! உருட்டுப் பொதியாய் ஒரு தொகையை அனுப்பி விட்டு, ஒவ்வொரு மாதமும் கணக்கு வைத்துக் கொள்ளும் பாணிகளில் சிக்கல்கள் நாக்குத் தள்ளச் செய்கின்றன ! So இனி அந்த roundsome தொகைகள் சார்ந்த பாணிகளைத் தொடர்ந்திட மாட்டோம் என்பதால், உங்கள் புரிதல்களைக் கோருகிறோம் - ப்ளீஸ் !! 

அப்புறம் நவம்பரின் இதழ்கள் எல்லாமே ரெடியாய் உள்ளன !! வரும் புதனன்று (31 அக்டோபர்) அவை இங்கிருந்து கிளம்பிடும் - நவம்பரின் முதல் தேதியில் உங்களை எட்டிப் பிடித்திட !! So தீபாவளிக்கு வெகு முன்பாகவே போனெல்லியின் அதிர்வேட்டுக்கள் உங்கள் கைவசமிருக்கும் guys !! And இந்த ரகப் பட்டாசுகள் மாசுக் கட்டுப்பாட்டின் கண்காணிப்பில் வராதென்பதால் ; உச்ச நீதிமன்றமும் கண்டு கொள்ளாது !! So நீங்கள் இஷ்டப்படும் போதெல்லாம் இந்த வாண வேடிக்கைகளை அரங்கேற்றலாம் !! 

Before I sign off - ரொம்ப நாள் கழித்தொரு  caption contest ! இதோவுள்ள படத்துக்கேற்ப செமையாய் டயலாக் எழுதும் நண்பருக்கு ஒரு LMS புக் நம் அன்பளிப்பு !! And வெற்றி பெரும் டயலாக்கை இங்கேயே, உங்களுள் ஒருவர் தீர்மானம் செய்திடட்டுமே ? Maybe காமிக் லவர் ? அல்லது பொருளாளர் ?  Bye all....see you around ! Have a cool Sunday !
P.S : ஒரு கோரிக்கையும் ; ஒரு கேள்வியுமே : 

1 .கேள்வி : நடப்பாண்டில் "கொலைகாரக் கானகம்" - TEX சாகசம் பெண்டிங்கில் உள்ளது ! கதையில் அழுத்தம் குறைவு என்பதால் அட்டைப்படமெல்லாம் அச்சாகி, கதையும் 90% மொழிபெயர்க்கப்பட்டு, டைப்செட் செய்யப்பட்டுள்ள நிலையில் - தொங்கலில் உள்ளது ! அதற்குப் பதிலாய் வேறொரு கதையை தயார் செய்து 2019-க்கு கொண்டு சென்று விடுவோமா ? அல்லது - 'சிங்கிள் ஆல்பம் தானே - அஜீஸ் பண்ணிக்கலாம் ; இந்த வருஷக் கோட்டாவை இந்த வருஷமே தீர்த்துப்புடுவோம் !' என்று தீர்மானிப்போமா ? 

2 . கோரிக்கை : "பழிக்கு பழி" டெக்ஸ் இதழ் யாரிடமேனும் இருப்பின், நமக்கொரு ஜெராக்ஸ் மட்டும் அனுப்பிட இயலுமா guys ? 

3. கோரிக்கை # 2 : சந்தா 2019-க்கு உங்களின் ஆதரவு !! தீபாவளி ஷாப்பிங் முடிந்திருப்பின், இதற்குமொரு பட்ஜெட் போட்டிட முயற்சியுங்களேன் folks ?!! 

4. கோரிக்கை # 3 : நமது புது இத்தாலிய ஓவியரிடமிருந்து நேற்றைக்கு வந்த மின்னஞ்சல் ரொம்பவே வருந்தச் செய்தது !அவருக்குப் புற்று நோய் இருப்பதாய் மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றதால், தீவிர பரிசோதனைகளின் பொருட்டு தொடரும் மாதம் முழுக்க பிஸியாகிட உள்ளாராம் ! "எனது எதிர்காலம் இருட்டாய் தென்படும் நேரமிது" என்று அவர் எழுதியிருந்ததைப் படிக்கும் போது உள்ளுக்குள் பிசைந்தது ! ஏகமாய்க் கனவுகளையும், லட்சியங்களையும் தாங்கி நிற்கும் திறமைசாலி ! அவர் நலம் பெற்றிட அவரை நம் பிரார்த்தனைகளில் நினைவு கூர்ந்திடுவோமென்று ஆறுதலாயொரு பதில் போட்டுள்ளேன் ! அதனை நிஜத்திலும் செயல்படுத்திடுவோமா folks ? பிரார்தனைகளின் பலன்களைத் தான் பிரபஞ்சமே அறியும் ?!

Saturday, October 20, 2018

My அலசல் of your அலசல்ஸ் !

நண்பர்களே,

வணக்கம். வெள்ளியின் ராட்சஸப் பதிவுக்குப் பின்பாய் இந்த ஞாயிறை சற்றே இலகுவாய் எடுத்துக் கொள்ளும் உத்தேசத்தில் இருக்கிறேன்! அட்டவணையும் சரி, அந்தப் பதிவும் சரி, மறு-மறு-மறு வாசிப்புகளுக்கும் / பரிசீலனைகளுக்கும் உட்படும் எனும் போது – இன்றைக்கு நான் அடக்கி வாசிப்பதில் தப்பில்லை என்று படுகிறது ! Anyways – இதுவுமே நமது அட்டவணை சார்ந்த உரத்த சிந்தனை தான் எனும் போது – அதன் நீட்சியாகவே பார்த்திடலாம் ! 

‘மாற்றங்கள் மட்டுமே மாறாதது‘ ; ‘பழையன கழிதல்… புதியன புகுதல்‘ என்று நிறையவே துவைத்துத் தொங்கப் போட்ட cliché-களை நாம் கேட்டுப் பழிகியிருப்போம் தான்! ஆனால் “மாற்றம்” என்பதை ஓரளவுக்கு அருகாமையில் பார்த்திடும் சமயங்களில் தான் நாம் அதற்கு எத்தனை தயாராகயில்லை என்பது அப்பட்டமாய்த் தெரகிறது ! 

Without a doubt – 2019-ன் அட்டவணை ஒரு conventional அட்டவணையே கிடையாது தான் ! வழக்கத்தை விடவும் இம்முறை நான் ரொம்பவே அதிக அவகாசம் எடுத்துக் கொண்டதன் பிரதான காரணமே – “மாற்றங்கள்” என்பன பெயரளவிற்கு என்றிராது – மெய்யான மாற்றங்களாய் ; அவசியப்படும் மாற்றங்களாய் இருந்திட வேண்டுமென்பதற்கே ! அதன் பிரதிபலிப்பாகவே கடந்த சில மாதங்களாக மெதுமெதுவாய் உங்கள் காதுகளைக் கடித்து – விளிம்புநிலை நாயக / நாயகியரின் விற்பனை நிலவரங்களைப் பகிர்ந்து வந்தேன் ! ஒற்றை நாளில் விடிந்து, முழித்து நீங்கள் எழுந்து பார்க்கும் சமயம் wholesale மாற்றங்களை நான் சொல்லாமல்-கொள்ளாமல் செய்து வைத்திருப்பின் – அவற்றை ஜீரணிக்க நீங்கள் நிரம்பவே சிரமப்படக் கூடும் என்பதாலேயே, காற்றின் போக்கு எவ்விதமுள்ளது என்று உங்களுக்கொரு கோடி காட்ட ஓசையின்றி முயற்சித்து வந்தேன்! So தற்போது நாம் பார்த்திடும் மாற்றங்கள்…கல்தாக்கள் out of the blue சமாச்சாரங்களாய் இருந்திடவில்லை என்றமட்டிலும் மகிழ்கிறேன் !

சந்தா A-விலிருந்து துவங்கினோமேயானால் – எங்கெங்கு உங்களுக்கு லேசாய் ‘ஜெர்க்‘ அடிக்கிறதென்பதை அடிக்கோடிட்டு விடலாம் !

By far the easiest & yet the toughest தேர்வுகளாய் எனக்கு அமைந்தது சந்தா A தான் ! எனது துவக்கத் திட்டமிடலில் இந்த வரிசையில் 12 இதழ்கள் ; சந்தா B-ல் 12; கார்ட்டூனில் 6 & கிராபிக் நாவலில் 6 ; ஆக மொத்தம் 36 என்றே இருந்தது ! மறுபதிப்புக் கோரிக்கைகளான “மரண வைரம்” (கேப்டன் ப்ரின்ஸ்) & “வைக்கிங் தீவு மர்மம்” இதழ்களை தலா சந்தா A & B-ல் சேர்த்து விட்டு – ஒட்டுமொத்தமாய் மறுபதிப்புச் சந்தா D-ஐ ஓரம்கட்டும் எண்ணம் லேசாய்த் துளிர் விட்டிருந்தது ! ஆனால் இரு சிரமங்கள் என் முன்னே நின்றன !

- சந்தா A-வில் 12 ஸ்லாட்களெனில் ஏகப்பட்ட புது வரவுகளை இணைக்க வேண்டியதிருக்கும் என்பது புரிந்தது ! அதற்காக எக்கச்சக்கத் தொடர்களைப் பரிசீலனையும் செய்தேன். ஆனால் ஒரு லார்கோவையோ; ஒரு அண்டர்டேக்கரையோ பார்த்த நொடியிலேயே பற்றிக் கொள்ளும் நெருப்பை சமீபத்துப் புதுத் தொடர்களுள் பார்த்திடவே இயலவில்லை எனக்கு. So மத்திமமான கதைகள் கொண்ட அறிமுகங்களை  மறுக்கா wholesale ஆகச் செய்து வைத்து – உங்களின் ஒட்டுமொத்த சாத்துக்களையும் அறுவடை செய்திட வேண்டாமெனப்பட்டது!

- ‘மாற்றம் செய்கிறேன் பேர்வழி‘ என்று ஒட்டுமொத்தமாய் பழமையுடனான நமது தொப்புள்கொடியைக் காவு வாங்கிடுவதும் நெருடலாகவேயிருந்தது. தவிர, இந்த மேம்படுத்தப்பட்ட மறுபதிப்புகள் விற்பனைகளிலும் சோடை போவதில்லை எனும் போது அவற்றை ஒற்றை நாளில் புறம்தள்ளுவது சரிப்படாது என்றும் புரிந்தது.

நம்மவர்கள் ஊர் ஊராய்ப் பயணம் போய் – புதுப்புதுக் கடைகளைத் தேடிப் பிடித்து விற்பனைக்கு முனையும் போது இந்த வண்ண மறுபதிப்புகள் ரொம்பவே கைகொடுக்கின்றன! “நாலாயிரம் ரூபாய்க்கு கலவையாய் புக்ஸ் போடுங்க அண்ணாச்சி” என்று சொல்லும் புது முகவர்களுக்கு, லக்கி லூக்; கேப்டன் ப்ரின்ஸ்; டெக்ஸ் வில்லரின் விலை குறைந்த புக்குகள்; ரிப்போர்ட்டர் ஜானி என்று தான் அனுப்பிடுவோம் ! And of course – மாயாவியுடன்! ஆனால் புதியவர்கள் இப்போதெல்லாம் கேட்பதோ கலரில் உள்ள புக்குகளையே எனும் போது – பழசுக்கும், புதுசுக்கும் பாலமாய் நிற்கக்கூடிய வண்ண மறுபதிப்புகள் ரொம்பவே கைகொடுக்கின்றன! So அந்த ஆங்கிளும் மனதில் நிழலாட – சந்தா D-ஐக் காணாது போகச் செய்வது உசிதமல்ல என்று தீர்மானித்தேன் !

So சந்தா A-வில் நடப்பாண்டைப் போலவே மொத்தம் 9 ஸ்லாட்களே என்று தீர்மானித்த பின்பாய் என் பணி ஓரளவுக்கு சுலபமாகிப் போனது ! கீழ்க்கண்டோர் தம்மைத் தாமே தேர்வு செய்து கொண்டனர்:

- வேய்ன் ஷெல்டன்

- ட்யுராங்கோ

- தோர்கல்

- ரிப்போர்டர் ஜானி

அப்புறம் “அண்டர்டேக்கர்” ஒரு ஆட்டோமேடிக் தேர்வாகியிருக்க – அவரை இங்கே நுழைப்பதா ? சந்தா E –ல் நுழைப்பதா? என்ற கேள்வி மட்டும் எஞ்சி நின்றது. நிறைய யோசனைக்கு அப்பால் அவரை A –க்கு புரமோஷன் தந்திடத் தீர்மானித்தேன்!

And ஜானதன் கார்ட்லேண்ட் புது வரவாகிடுவதற்கும் பெரிதாய் பட்டிமன்றம் நடத்த அவசியப்பட்டிருக்கவில்லை. So ஒன்பதுக்கு 6 தொகுதிகளின் வேட்டாளத் தேர்வில் பெரிதாய் சிரமங்களிருக்கவில்லை. பாக்கியிருந்த மூன்றில் – ஒன்று சமீப வரவான ட்ரெண்டுக்கு என்பதிலும் உறுதியிருந்தது என்னுள் ! Maybe அவருக்கு ஒரு ஸ்லாட் கூடுதலாக்கியது உங்களுள் சிலருக்கு நெருடலை தந்திருக்கக் கூடுமென்பது புரிகிறது ! So எனது பார்வையில் நெருடல் # 1 – ட்ரெண்டின் ஒற்றை கூடுதல் ஸ்லாட்டே!

அப்புறம் ஒன்பதாவது இடத்தை ஏதேனுமொரு தொடர் ஹீரோவுக்குத் தந்திடாது – one-shot-க்கு வழங்க நான் தீர்மானித்தது நெருடல் # 2 ஆகியிருக்கலாம் ! இங்கேயும் எக்கச்சக்க deliberations-களுக்குப் பின்பே இந்தத் தீர்மானத்துக்கு வந்தேன். 2017-ல் முதல் பாகம் ; 2018-ல் க்ளைமேக்ஸ் பாகம் என வெளியாகியுள்ள “நீருமில்லை… நிலமுமில்லை” ஆல்பத்தை எப்படியும், எங்கேனும் நுழைப்பதென்று உறுதி கொண்டிருந்தேன் – கதைக் களத்தையும், சித்திரங்களையும், வர்ணங்களையும் பார்த்த போதே ! ஆனால் சந்தா A–விலா? சந்தா E–யிலா? ஜம்போவிலா ? என்ற கேள்வி மட்டும் எஞ்சி நின்றது. ‘பளிச்‘சென்று தேறிடும் விதமாய் நெடுந்தொடர் நாயகர்கள் யாரேனும் கண்ணில்பட்டிருப்பின் நிச்சயமாய் இந்த இறுதியும், ஒன்பதாவதுமான ஸ்லாட்டை அவருக்கே வழங்கியிருப்பேன் ! வெகு தாமதமாய் – அதாவது போன வாரத்தில் தான் அதற்குப் பொருத்தமானதொரு வித்தியாசமான ஹீரோவைக் கண்ணில் பார்க்க முடிந்தது! அவரது சாகஸத்தை மொழிபெயர்த்து வாங்கி ; ‘அடடே‘ என்று புருவத்தையும் உயர்த்தினேன் தான் ! ஆனால் அதற்கான உரிமைகளைக் கோரிப் பெறவே அடுத்த 2 மாதங்கள் ஓடிவிடுமெனும் போது – அவகாசமில்லை அவரை 2019-ன் அட்டவணைக்குள் நுழைத்திட! But ஜம்போவின் சீஸன் 2-ல்; அல்லது 2020-ன் அட்டவணையில் மனுஷன் இடம்பிடிக்கப் போவது உறுதி என்பேன்!

So one-shot சாகஸமான ”நீரில்லை… நிலமில்லை” ‘டிக்‘ ஆனது சந்தா A-வின் அணிவகுப்பை நிறைவு செய்திட!

மிகச் சொற்பமான நண்பர்களுக்கு இந்த ஸ்லாட்டை LADY S-க்கு தந்திருக்கலாமே என்ற ஆதங்கமிருப்பின் அது சந்தா A-வின் நெருடல் # 3 ஆக இருந்திடக் கூடும் ! ஆனால் நேற்றைக்குப் பார்த்த வரையிலும் Ms.ஷானியாவை பெரியளவிற்கு மிஸ் செய்திட மூன்றல்லது, நான்கு குரல்களைத் தாண்டி வேறெதுவும் கேட்டதாய்படவில்லை!

Moving on to சந்தா B – இங்கே இருக்கக் கூடிய bones of contention என்னவென்பதை யூகிக்க நமது லியனார்டோவின் உதவியாளன் ஆல் லெ கை கூடப் போதுமே?!

 - குண்டு – கலர் – புது – Tex இல்லியே?

- ஜுலியாவா???

- டைலன் டாக்கா???

என்பதைத் தாண்டி இங்கே நெருடல்கள் ஏதுமிருப்பதாய் நான் பார்த்திடவில்லை ! Point # 1 ன் பதிலை யூகிப்பதில் சிரமமிராது – பட்ஜெட் என்பதே எனது காரணியாக இருக்குமென்பது தான் ஊருக்கே தெரியுமெனும் போது ! இன்றைய விலைவாசிகளில் ஒரு நார்மலான டெக்ஸ் டபுள் ஆல்பம் கருப்பு-வெள்ளையில் வெளியாகும் போதே விலை ரூ.135 என்று எகிறுகிறது ! So இன்னொரு அணுகுண்டு ஸ்பெஷல் ; ரசகுண்டு ஸ்பெஷல் என்று கலரில், புஷ்டியாய் நான் எதையாச்சும் அறிவிக்கும் பட்சத்தில், சந்தாவின் மொத்தத் தொகை ஹை-ஜம்ப் செய்திடும் என்ற மிரட்சி தான் ! இயன்றமட்டிலும் எல்லாமும் (காமிக்ஸ் தான்) எல்லோருக்கும் என்று அமைவதே எனது முதல் choice எனும் போது - பட்ஜெட்டின் பக்கம் சதா நேரமும் ஒரு முட்டைக் கண்ணைப் பதிக்காதிருக்க முடியவில்லையே ?  

Point # 2 : ஜுலியா!! & Poin # 3: டைலன் டாக்

பதிவிலேயே மேற்படிக் கேள்விகளுக்குப் பதில் தந்து விட்டேன் எனும் போது, மறு ஒலிபரப்பு அவசியமாகாது என்று படுகிறது! Trust me on this folks – இம்முறை இந்த இத்தாலிய ஜோடி நிச்சயமாய் உங்களை disappoint செய்திடப் போவதில்லை !

And "குண்டு புக் – கதம்ப இதழ்" என்று சதா சர்வ காலமும் கனவு கண்டு வரும் நண்பர்களுக்கு – போனெலியின் நாயக / நாயகியரை ஒன்றிணைப்பது தவிர்த்து வேறு எதுவுமே சாத்தியமில்லை என்பதும் தெரியும் தானே ? So இது போன்ற combo வேண்டாமெனில் – ‘கதம்ப இதழ் கனவுகளுக்கு‘ டாட்டா காட்டிட வேண்டியது தான்!

Ahead to சந்தா : C – கல்தாக்களின் காரணமாய் சிலபல “ச்சை… எனக்கு வழுக்கை விழுந்த எடிட்டர்களே புடிக்காது !” பீலிங்குடனான நண்பர்கள் வலம் வருவது புரிகிறது! But இந்த நொடியில் ஏமாற்றத்திலிருக்கக் கூடியவர்களை சமாதானம் செய்கிறேனென்று மேற்கொண்டும் கடுப்பேற்றிடலாகாது என்பதால் மௌனமே தேவலாமென்று படுகிறது! கல்தாக்களின் முகாந்திரங்களை இதற்கு மேலும் ஸ்பஷ்டமாய் பதிவிட இயலாதெனும் போது – அவற்றை ஜீரணித்துக் கொள்ளும் அவகாசம் மட்டுமே தற்போதைய தேவை !

On to சந்தா : D – மும்மூர்த்திகளின் கல்தாவை உங்களின் பெரும்பான்மையினர் யூகித்திருப்பது நிச்சயம் ! So அதன் பொருட்டு பெரிதாய் அதிர்வுகள் பதிவாகிடவில்லை என்றமட்டிற்கு தப்பித்தேன்! ஆனால் இங்கே நெருடுவன :

- கேப்டன் டைகரின் “இளமையில் கொல்!” ஒரே போடாய் 3 பாகங்களாய் சேர்த்தே போட்டு விடலாமே என்ற ஆதங்கம் !

- Out of the blue அறிவிக்கப்பட்டுள்ள ஹெர்லக் ஷோம்ஸின் வண்ண மறுபதிப்பு – யாரது பட்டியலிலும் இருந்திருக்கா தேர்வு என்பதிலான ஜெர்க் ! இதுக்குப் பதிலா, வேற ஏதாச்சும் வெயிட்டா மறுபதிப்பு போட்டிருக்கலாமோ ? என்ற ஆதங்கம் !! But எதைக் கேட்க என்றறியா குழப்பம் ! எதைக் கேட்டாலும் இவன் என்னமாச்சும் சாக்குப் போக்கு சொல்லி கேட் போட்டு விடுவானே - என்ற உறுத்தல் ! 

ஆதங்கம் # 1 நியாயமே; ஆனால் 2019-ல் ஏற்கனவே டபுள்; டிரிபிள் ஆல்பங்கள் ஏகமாய் இடம்பிடித்திருக்க – மறுபதிப்புகளின் பக்கமும் வெயிட்டாய்ப் போட்டுத் தாக்கினால், சிறுநகர முகவர்கள் திண்டாடிப் போவர் என்ற பயமே இதன் பின்னணி ! வணிகம் சார்ந்தும் ; சிறு முகவர்கள் சார்ந்துமே நான் யோசிக்க வேண்டியவன் என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை ! எல்லாமே சந்தாக்களும்; ஆன்லைன் விற்பனைகளும்; புத்தக விழா விற்பனைகளும் சார்ந்த சமாச்சாரங்களாயிருப்பின் வேறு எதைப் பற்றியும் நான் அலட்டிக் கொள்ளத் தேவையிராது. ஆனால் யதார்த்தம் அதுவல்லவெனும் போது – நான் சிந்திக்க அவசியமானது வெவ்வேறு கோணங்களிலிருந்துமே!

ஹெர்லக் ஷோம்ஸின் மறுபதிப்பைப் பொறுத்த வரையிலும் – இந்தத் தொடரின் முழுமையிலுமே உள்ளதே வெறும் 10 கதைகள் தான்! So புதுசை மட்டுமே நாடுவதெனில் இன்னும் இரண்டே ஆல்பங்கள் தான் சாத்தியம் ! தவிர, இத்தொடரின் best கதைகள் – நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளவையே ! So அவற்றை வண்ணத்தில் – மெருகூட்டப்பட்ட தரத்தில் வெளியிடுவது நிச்சயமாய் ரசிக்குமென்று நினைத்தேன் !

இன்னொரு யூகமும் கூட ! இது சரியாகவும் இருக்கலாம் ; என் கற்பனையின் பலனாகவும் இருக்கலாம் தான் ! ஆனால் மும்மூர்த்தியர் & ஸ்பைடர் கதைகள் ஒரு ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தவரைக்கும், ஒரு nostalgia சார்ந்த சன்ன திருப்தி உங்களுள் ஒரு மூலையில் குடியிருந்திருக்க வேண்டும் ! படிக்கிறோமோ-இல்லையோ - ஒருவாட்டி புரட்டிவிட்டு, "ஹ்ம்ம்" என்று பெருமூச்சாவது விடும் திருப்தி சாத்தியப்பட்டிருக்க வேண்டும் அதனில்  ! ஆனால் இன்றைக்கு அவர்கள் almost gone for good என்ற விஷயம் சிறுகச் சிறுக பதிவாகிடும் போது - அதனை ஏற்றுக் கொள்ள மனங்கள் லேசாய்த் தள்ளாட்டம் காண்கின்றன ! I maybe right ; I maybe wrong...but just a gut feel ! இந்த யூகத்தில் சாரம் உள்ளதெனில் - உங்கள் சங்கடத்தை நான் ஏளனம் செய்திடவோ ; கேள்விக்குறியாக்கிடவோ போவதில்லை ! புரிந்து கொள்வேன் நிச்சயமாய் ! 

இனி சந்தா E பற்றி ! விம்மி விம்மி அழச் செய்யும் இன்னொரு pitch dark “நிஜங்களின் நிசப்தம்” இம்முறை அட்டவணையில் இல்லை என்பதைத் தாண்டி இங்கே நெருடல்கள் இருக்க வாய்ப்புகள் குறைவென்றே சொல்வேன்! In many ways – நாயகர்களே இல்லாத ; stereotype எதையும் பின்பற்றாத இந்தச் சந்தா வரிசை தான் எனக்கு ரொம்பவே இலகுவான பணியாகத் தெரிகிறது; சவாலாகவும் அமைகிறது ! Boy...am I glad !!

So thus ends my அலசல் of your அலசல்ஸ் of the 2019 அட்டவணை ! நான் பட்டியலிட்டுள்ள நெருடல்களில் பட்ஜெட் சார்ந்த சமாச்சாரங்களை நீக்கி விட்டுப் பார்த்தால்....

1. சந்தா A-வில் ட்ரெண்ட் 1 கூடுதல் இடம் கொடுத்தது 

2. சந்தா A வில் one-shot -க்கு ஒரு ஸ்லாட் ஒதுக்கியது ! 

3. ஜுலியா & டைலன் டாக் in சந்தா : B

4.TEXXXXXXXXXXX !!! புஷ்டியாய்.கலரில் ! 

என்பனவே உங்கள் நெருடல்களாய் இருந்திட வேண்டும் ! என்னிடத்தில் நீங்கள் இருந்திருப்பின் – மேற்படிச் சிக்கல்களை எவ்விதம் நிவர்த்தி செய்திட முயற்சித்திருப்பீர்கள் என்று பகிர்ந்திடலாமே folks ?! Would love to hear !! ‘வேதாளனைப் போட்டிருப்பேன்‘; ‘Batman-ஐப் போட்டிருப்பேன்‘ ; ‘டிடெக்டிவ் ஸ்பெஷல் மறுபதிப்புகளில் போட்டிருப்பேன்‘ என்ற ரீதியிலான நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களாய் இல்லாது - நிஜமான worthy suggestions-களாய் இருப்பின்  மகிழ்வேன் ! Bye all ! See you around ! Have a beautiful week-end !

P.S : Last but not the least - "இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாய் புக்குகள் இருந்தால் தேவலாமே " என்ற ஆதங்கமும்,  "ஆனால் பட்ஜெட் உதைக்குமே!" என்ற புரிதலும் ஒன்றிணையும் சமயம், உள்ளுக்குள் ஒரு சன்னமான ஆற்றமாட்டாமை  ததும்பினால் that is perfectly understandable !! Maybe ஜம்போவின் சீசன் 2-ன் கதைகள் சார்ந்த அறிவிப்புகளையும் இப்போதே நான் செய்திருந்தால், அந்த நெருடல் எழாது போயிருக்கலாம் உங்களுக்கு !! But ஜம்போவுக்கு இன்னும் நிறையவே தேடல்களுள்ளன எனும் போது - எனக்கு நானே இன்னும் அவகாசம் தந்து கொள்ள நினைக்கிறேன்என்பது தான் நிலவரம் guys !!

நேற்றே சந்தாப் புதுப்பித்தல்கள் மட்டுமன்றி, புதுச் சந்தாக்களும் தட தடக்கத் துவங்கிவிட்டன ! And கிட்டத்தட்ட எல்லாமே ABCDE என்ற All -In சந்தாக்களே !!! Awesome guys !!! 

Friday, October 19, 2018

2019 - The Announcements !

நண்பர்களே,

சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all ? இந்தப் பதிவினை  வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் ! இதன் முழுமையையும் படித்து ; உள்வாங்கிக் கொண்டிருக்கும் நொடியில் மறுக்கா மணியைக் குறித்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ? Start to finish - எவ்வளவு நேரத்தை இது விழுங்கியது என்று தெரிந்து கொள்ளவோரு குழந்தைத்தனமான ஆசை தான் !! வேறொன்றுமில்லை ! 

வணக்கம். வருஷத்தின் “அந்த” வேளையும் புலர்ந்தே விட்டது! ‘பட்ஜெட் தாக்கல் செய்யப் போகிறேன் பேர்வழி‘ என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி ப்ரீப்கேஸோடு சட்டமன்ற வாசலில் நின்று மந்திரிகள் போஸ் கொடுப்பார்களல்லவா ? அதே போல அடியேனையும் உருவகப்படுத்திப் பார்த்துக் கொள்ளுங்களேன் – மைனஸ் the கரைவேட்டி! 'அந்தப் பெட்டிகளுக்குள்ளே என்ன தான் இருக்குமோடா சாமி ?' என்று நிறைய நாட்கள் நான் யோசித்ததுண்டு – becos பட்ஜெட் பேப்பர்கள் என ஒரு லாரி லோடு காகிதங்களை அப்புறமாய் இறக்கிக் கொண்டு போவார்கள் ! ஆனால் என் கையிலிருக்கக்கூடிய ப்ரீப்கேஸிலோ ஒரேயொரு காகிதம் மாத்திரமே ! And அது தான் 2019-ன் அட்டவணையுமே!

ஒரே நேரத்தில் ரொம்பவே சுலபமுமான சிரமுமான பணி என்னவென்று யாரும் என்னிடம் மைக் நீட்டிக் கேட்கப் போவதில்லை தான்! ஆனாக்கா அப்படி யாரேனும் கேட்டு வைத்தால் “ஓராண்டின் அட்டவணையை, ஓரளவுக்கேனும் எல்லோருக்கும் ஏற்புடைய விதமாய் முன்கூட்டியே நிர்ணயிக்கும் முயற்சி தானுங்கோ !“ என்று பதில் சொல்லுவேன் ! ”அடுத்த மாதம் என்ன புக்னு விளம்பரம் போடறது அண்ணாச்சி?” என்று மைதீன் கேட்கும் போதே – அது சார்ந்த மகாசிந்தனையில் மோவாயைத் தடவுவது வாடிக்கை – 2010-க்கு முன்பான அந்த நாட்களில் ! பீரோவைத் திறந்து உள்ளே சிதறிக் கிடக்கும் சொற்பக் கதைகளுள் எதையாவது இன்க்கி-பின்க்கி போட்டு எடுத்து வருவது மாத்திரமே அன்றைய “திட்டமிடல்கள்” ! ஆனால் காலங்களும் மாறிப் போய் ; விற்பனை முறைகளும் மாற்றமோ மாற்றம் கண்டான பின்பு – அதே பழைய “ஃப்ரீயா வுடு” approach வேலைக்கு ஆகாது என்றான பிற்பாடு – இந்த ஓராண்டுக்கான அட்டவணை நாட்கள், காலத்தின் கட்டாயமாகிப் போய் விட்டுள்ளன! And genre-களின்படி சந்தாக்களை / கதை வரிசைகளைப் பிரித்தான பின்னே – தெளிவானதொரு ப்ளூபிரிண்டை உங்கள் முன்னே சமர்ப்பிக்கும் அவசியம் முன்னெப்போதையும் விட, இன்னும் ஜாஸ்தியாகிப் போயுள்ளன !

So – இந்தப் பின்னணியில் தான் 2019-க்கான ரோசனைகளையும் துவக்கினேன் – சுமாராக 3 மாதங்களுக்கு முன்பாகவே ! நடப்பாண்டின் ஓட்டத்தின் மத்தியினிலேயே இந்தத் திட்டமிடல்களைச் செய்வதில் நிறையவே நிறைகளுண்டு – simply becos ஒவ்வொரு நாயகரையும் / நாயகியையும் நீங்கள் current ஆக எவ்விதம் அணுகுகிறீர்கள் என்று பார்த்திட முடிவதால் ! அது மட்டுமன்றி கோவை, ஈரோடு, மதுரை என வரிசையாகத் தொடர்ந்திடும் புத்தக விழாக்களின் புள்ளி விபரங்களுமே எனக்கு லேசாகக் கோடிகாட்டிடும்  – யார் நொண்டியடிக்கும் குதிரை ? யார் துள்ளிப் பாயும் குதிரையென்று ! சின்னதொரு உதாரணம் சொல்லலாம்... புது வரவான ட்ரெண்டை எடுத்துக் கொண்டு ! நடப்பாண்டில் அறிமுகமாக மனுஷன் “பார்த்தாலே பத்திக்கும்!” என்று சொல்லக் கூடிய firebrand நாயகரல்ல என்பதில் இரகசியமே கிடையாது ! வித்தியாசமான களம்… நிதானமான நாயகர்… சிம்பிளான plots என்பதே இவரது template ! ஆக இவரை ஒரே இதழில், கேப்டன் டைகர் ரேஞ்சுக்கோ, இரவுக் கழுகார் ரேஞ்சுக்கோ நாம் உச்சி மோர்ந்திடுவோமென்றெல்லாம் நான் நிச்சயம் கனா கண்டிருக்கவில்லை ! முதல் இதழுக்கு மிதமான வரவேற்பு ; இதழ் # 2-க்கு அட்டகாச வரவேற்பு என்பதை live ஆகப் பார்க்க சாத்தியப்பட்ட கணமே 2019-ன் பட்டியலில் இவருக்கு எவ்வித இட ஒதுக்கீடு சுகப்படுமென்று தீர்மானிக்க இயன்றது ! So இந்த “அட்டவணைத் தேர்வு” என்ற பந்தாவை நான் விட்டுத் திரிந்தாலுமே, இதன் நிஜமான பின்னணிகள் - நீங்களும், உங்களது ரசனைகளின் வெளிப்பாடான குரல்களுமே ! I pick what you choose ! Simple as that ! ஒவ்வொரு இதழையும் படித்த பின்னே அது சார்ந்த உங்களது அபிப்பிராயங்களை நான் ஓட்டை ரெக்கார்ட் போல மறுக்கா, மறுக்கா கோரிடுவதே இந்த மையப் புள்ளியின் பொருட்டே ! எனக்கு எட்டிடும் feedback-கள் மாத்திரமே எனது தேர்வுகளை influence செய்திடக் கூடும் எனும் போது – மௌனங்களை மொழிபெயர்க்கும் வித்தையை அறிந்து வைத்திருக்க வழியில்லையே?!

Without more ado – விஷயத்தினுள் புகுந்திடலாமா ?

2019-ன் அட்டவணைத் தேர்வின் பின்னணியில்  எனது முதலிரண்டு லட்சியங்கள் இவையாகவே இருந்தன :

* ஓராண்டின் சந்தாத் தொகை நடப்பிலுள்ள தொகைகளை அனுசரித்தே இருக்க வேண்டும் ! செலவினங்கள்....முக்கியமாக கூரியர் கட்டணங்கள் ஏகமாய் உயர்ந்து விட்டுள்ள போதிலும் என்ன குட்டிக்கரணம் அடித்தாவது மொத்த பட்ஜெட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் !

* நடப்பாண்டின் 4 சந்தாப் பிரிவுகளும் சேர்ந்து இதழ்களின் மொத்த எண்ணிக்கை 36. ஜம்போ ; பிரத்யேக முன்பதிவுகள் etc…தனித்தடங்கள் என்பதால் நமது தற்போதைய ரெகுலர் சந்தாத் தடத்தின் நம்பர் 36 தான் ! தொடர்ந்திடவுள்ள 2019-ல் இதற்கு அதிகமாக்கிட இயல்கிறதோ - இல்லையோ ; நிச்சயமாய் குறைந்திட அனுமதிக்கலாகாது ! 

ரெகுலர் சந்தாவில் இதழ்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டு – முன்பதிவுக்கான Special இதழ்களை அறிவித்து balance செய்திடும் option-ம் என் முன்னே இருந்தது தான் ! ஆனால் மாதாமாதம் புஷ்டியான Plus Size கூரியர்களை சமீப ஆண்டுகளாய்ப் பார்த்துப், படித்துப், பழகிப் போனவர்களுக்கு திடீரென டயட்டில் இருந்து ‘சிக்‘கென்று ஆஜராகக் கூடிய Size Zero கூரியர்கள் ரசிக்கவே ரசிக்காது என்பதால் அதை rule out செய்து விட்டேன் !

அதே போல 36-ஐ இன்னும் ஜாஸ்தியாக்கும் சபலமும் எட்டிப் பார்க்காதில்லை தான் ! ஆனால் மாடிக்குப் போய் கிட்டங்கிக்குள் லேசாய் நானே எட்டிப் பார்த்த நொடியில் எனக்குள் எட்டிப் பார்த்த சபலமானது தெறித்தடித்து ஓடி விட்டது ! So status quo @ 36 என்று உறுதி கொண்டேன் !
2017-ஐப் போலவே இம்முறையும் 5 சந்தாப் பிரிவுகள் !

And வழக்கம் போலவே சந்தா A – ACTION & ADVENTURE கதைகளுடனான வரிசை ! இங்கு எனக்கிருந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது – simply becos ஒருவித ஸ்திரத்தன்மை கொண்ட இந்த சந்தாப் பிரிவை இன்னும் கொஞ்சம் dynamic ஆக்கினால் தேவலாமென்றுபட்டது ! அதே லார்கோ ; அதே ஷெல்டன் ; அதே ரிப்போர்ட்டர் ஜானி ; எனும் போது இங்கே ஒரே மாதிரியான template-கள் தொடர்வதாகவே எனக்குள் ஒரு சன்னமான உறுத்தல்!

* லார்கோவின் பயணங்கள் இட்டுச் செல்லும் ஊர்கள் மாறிடலாம்… ஆனால் வான் ஹாம் லார்கோவை மாட்டி விடும் இக்கட்டுகள் கிட்டத்தட்ட அதே பாணியிலேயே இருப்பது வாடிக்கை ! அவற்றைத் தகர்த்தெறிந்து Larg ஜெயம் காண்பதை நிறைய பார்த்து விட்டோம்!

* பணமே ஷெல்டனின் driving force ! இங்குமே தேசங்கள் / கதைக்களங்கள் மாறிடக்கூடும்; ஆனால் கதையோட்டங்களின் பொதுவான pattern அத்தனை மாறிடுவதில்லை!

* ரிப்போர்ட்டர் ஜானியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை ! குழப்போ குழப்பென்று குழப்பி விட்டு – கடைசி 2 பக்கங்களில் ஒட்டுமொத்தமாய் விடை சொல்லும் template-கள் நமக்கு 1986 முதல் பரிச்சயம் !

So ஒருவித செக்கு மாட்டு routine கொஞ்சமேனும் மாற்றப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடே சந்தா A-வில் கவனம் செலுத்தினேன் ! இந்தப் பகுதியினை நான் எழுதும் நேரம் வரையிலும் லார்கோ புது ஆல்பத்தின் க்ளைமேக்ஸ் பாகம் ப்ரெஞ்சிலேயே வெளிவரவில்லை என்பதால் – நமது மறுவருகைக்குப் பின்பாக “An year without Largo” என்பது இதுவே முதல் தடவையாக இருந்திடப் போகிறது !

* ஷெல்டன் தொடரின் இறுதி ஆல்பம் (at least for now) மாத்திரமே எஞ்சி நிற்பதால் பட்டியலில் நான் முதலில் அவர் பெயரைத் தான் குறித்து வைத்தேன் ! So நரைமுடி ரோமியோ தான் 2019-ன் தேர்வுகளுள் புகுந்த முதல் வரவு !

* ரிப்போர்ட்டர் ஜானியின் இந்த பழகிப் போன பாணி படைப்பாளிகளுக்கே போரடித்துப் போச்சோ – என்னவோ, “ரிப்போர்ட்டர் ஜானியின் புதிய புலனாய்வுகள்” என்றதொரு வரிசையைத் துவங்கி இதுவரையிலும் 3 ஆல்பங்களை மிதமான வெற்றியோடு வெளியிட்டுள்ளனர் ! இதன் ஆல்பம் # 2 பற்றி நண்பர் (பிரான்ஸ்) ராட்ஜா ஏற்கனவே இங்கே சிலாகித்திருந்தது கூட நினைவிருக்கலாம் ! So ஜானியின் புது பாணிக்கு நாமுமே இம்முறை தாவிப் பார்க்கலாமே என்ற சிந்தனையோடு அதனையே இரண்டாவது தேர்வாக்கினேன் ! ஜானி 2.0 !! 

* சமீபமாய் அறிமுகமாகி, அழகான சித்திரங்களோடும், தெளிவான கதைகளோடும் நம்மை லயிக்கச் செய்துள்ள ட்ரெண்ட் எனது அடுத்த தேர்வாக அமைந்தார் ! நடப்பாண்டைப் போலவே 2019-லும் இவருக்கு 2 நார்மல் இதழ்கள் என்று தீர்மானித்தேன் – 3 காரணங்களின் பொருட்டு! Reason # 1 : ஒவ்வொரு கதையுமே அதனுள்ளேயே முடிவுறும் ரகங்களாயிருப்பினும் – ஒரு மெலிதான நூலிழை அடுத்தடுத்த ஆல்பங்களைப் பிணைத்து நிற்கின்றது - ஆல்பம் # 3 & 4-ல்! So அவற்றை அடுத்தடுத்த மாதங்களில் வெளியிடும் வகையில் திட்டமிட்டால் தேவலாமென்று நினைத்தேன் ! Reason # 2 : ட்ரெண்ட் தொடரின் முழுமையிலுமே மொத்தம் எட்டே ஆல்பங்கள் தான் ! So ஜவ்வாய் அவற்றை நீட்டிக்காது – ஆண்டுக்கு 2 என்ற வேகத்தில் நடத்திச் சென்றால், ‘நறுக்‘கென்று தொடரை நிறைவு செய்த திருப்தி சாத்தியம் அல்லவா ?! Reason # 3: காத்திருக்கும் 2 கதைகளுமே (ஆல்பம் # 3 & 4 in the series) செம அட்டகாசமாய் உள்ளன ! 

* சத்தமேயின்றி என் பிடரியோடு ஒரு பிஸ்டல் அழுத்தும் உணர்வு ஏற்பட்ட நொடியில் புரிந்தது! – மிரட்டலாய் நிற்பது வேறு யாருமல்ல – ட்யுராங்கோ தானென்று ! 2 ஆண்டுகளாய் – தனது அலட்டலிலா அதிரடிகளோடு நமது அட்டவணைகளில் ஒரு fixture ஆகிப் போயிருக்கும் இந்த அதிரடி ஆட்டக்காரர் இம்முறையும் ஒரு முப்பாக தொகுப்போடு ஆஜராகிறார் ! “வதம் செய்ய விரும்பு” – கோடை மலராய் 2019-ல் களம் காணவுள்ள ட்யுராங்கோவின் hardcover ஆல்பம்!

* சமீப ஆண்டுகளில் இவருமே நமக்கு “Mr. அவசியத் தேவை” என்றாகியிருக்கிறார் என்பதால், இன்னமுமொரு சுலபத் தேர்வின் சொகுசு சாத்தியமானது – தோர்கலின் பெயரைச் சொல்லி !! நடப்பாண்டின் முதல் இதழான “கடவுளரின் தேசம்” 4 பாகங்கள் கொண்டதொரு நெடிய கதை என்பதால் அதனை ஒற்றை இதழாய், ஒரே தொகுப்பாக்கிட வேண்டிய அவசியமிருந்தது ! ஆனால் தற்சமயம் நம் முன்னே காத்திருப்பவை தொடரின் one shots ! இருப்பினும், 40 ஆல்பங்கள் கொண்ட நெடும் தொடரை சுவாரஸ்யம் குன்றிடாது முன்னெடுத்துச் செல்ல- கொஞ்சமேனும் கூடுதல் slots அவசியமே என்று பட்டதால் - மறுக்கா ஒரு பெரிய ஆல்பம் – 3 one-shots இணைந்து ஒரே புக்காக வரவுள்ளது ! ஜனவரியில் - முத்து காமிக்சின் ஆண்டுமலராகவும் வரவுள்ள இதழிது ! 

* தொடர்வது ஒரு டபுள் ஆல்பம் – இம்முறை லேசான surprise தரக்கூடிய தேர்வோடு ! கிராபிக் நாவல் சந்தாவில் அறிமுகமாகி, தனது அசாத்தியக் கதை வலிமையால் நம்மை மிரட்டோ மிரட்டென்று மிரட்டிய அண்டர்டேக்கர் இம்முறை ரெகுலர் சந்தாவுக்கே தாவுகிறார் ! இந்தத் தொடரில் ஆல்பம் # 3 & 4 இணைந்து ஒரே இதழாக வரவுள்ளது ! Gory… gruesome…. என்று சொல்லும் விதமாய் இந்த ஆல்பங்களில் ஏதுமில்லை என்பதால் ரெகுலர் வரிசையிலேயே இவரை வரவேற்பது ஓ.கே.வென்று பட்டது ! So The Undertaker adds to the Action scene...!

* “லார்கோ” எனும் established ஆட்டக்காரர் அணியில் இல்லை எனும் போது – அவரிடத்தில் ஒரு seasoned புதுவரவை நுழைக்க எண்ணினேன் ! எனது முதல் சாய்ஸ் துப்பறியும் நாயகரோ / ஆக்ஷன் ஹீரோவோ தான்! ஆனால் for some reason, தரமான டிடெக்டிவ்களைக் கண்ணால் பார்ப்பது – டால்டன்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பதை விடவும் சிரமமாகி வருவதால் பெரியதொரு வெற்றியில்லை என் தேடலுக்கு ! சைக்கிளில் சுற்றி வரும் கண்ணாடிக்கார டிடெக்டிவ் ஜெரோமை பரிசீலித்தேன் ; ஆனால் அவரது பாணி நமக்கு ரசிக்குமென்று தைரியமாய் சொல்லத் தெரியவில்லை !முன்னர் விளம்பரப்படுத்திய ஜான் டைனமைட்டை மறுக்கா நம் ரேடாருக்குக் கொணர முயற்சித்தேன் ! ஆனால் அங்கோ தொடரை நீட்டிக்கப் போவதில்லை என கதாசிரியர் முடிவு செய்த கையோடு – ஏற்கனவே வெளியாகியுள்ள 2 கதைகளுக்குமே தற்போதைக்கு உரிமைகளை விற்பனை செய்திட வேண்டாமென சொல்லி வைத்திருக்கிறாராம் author ! ரிப் கிர்ப்பி… காரிகன்… ஜார்ஜ் என்று நீங்கள் முன்மொழிய நினைப்பதையும் நான் மறக்கவில்லை தான்! ஆனால் அவற்றை இது போன்ற சிற்சிறு ஒற்றை இதழ்களாய் வெளியிடும் சாத்தியங்கள் பூஜ்யமாகி விட்டன – அவற்றின் உரிமைகளை சந்தைப்படுத்தும் ஏஜென்சியின் தீர்மானத்தால் ! எதுவாகயிருப்பினும் ஒரு குறைந்தபட்சத் தொகைக்கு உத்தரவாதம் தந்தாலொழிய சின்ன விலைகளுக்கான, சிங்கிள் இதழ்களாய் வெளியிட அனுமதிப்பதில் இனிமேற்கொண்டு ஆர்வம் லேது என்று சொல்லி விட்டார்கள் ! So அமெரிக்காவில் வெளிவருவது போல “The Best of Rip Kirby”; The Best of Corrigan என்று உசத்தியான தயாரிப்புத் தரங்களோடு ; அவர்கள் எதிர்பார்த்திடும் உசத்தியான விலைகளில், ஆண்டுக்கு மூன்றோ – நான்கோ திட்டமிட்டால் மாத்திரமே அந்த நாயகர்கள் பக்கமாய் இனி நாம் ஒதுங்கிட முடியும் ! So இங்கும் அங்கும் சுற்றித் திரிந்த பின்னே – இருக்கவே இருக்கிறதே அந்த வன்மேற்கின் களமென்று திரும்பினேன் – நமக்கிப்போது தாய்வீடு மாதிரியாகிப் போய்விட்டுள்ள அந்த கௌ-பாய் உலகிற்கு! பழகிப் போன அந்தக் களத்தில் – சற்றே புதுமையானதொரு உலகத்தை ரசிக்க முயற்சிப்போமே என்பதே எனது தேடலின் objective ஆக இருந்தது ! 

அப்போது தான் Jonathan Cartland பற்றிய ஞாபகம் வந்தது – நண்பர் சௌந்தரின் புண்ணியத்தில் ! 2014-ல் ALL NEW SPECIAL -ல் இவர் அறிமுகமாக வேண்டியவர், விளம்பரத்திலெல்லாம் இடம் பிடித்திருந்தார் ! ஆனால் இறுதி நிமிடத்தில் கமான்சே better தேர்வென்று எனக்குத் தோன்றிட, அந்த மனுஷன் குறுக்கே புகுந்துவிட்டிருந்தார் ! So better late than never என்ற கதையாக – ஜானதன் கார்ட்லேண்டுக் சிகப்புக் கம்பளம் விரித்தேன் ! இவரொரு Wild West நாயகரே தவிர, மாமூலான கௌ-பாயல்ல ! பொறி வைத்து விலங்குகளைப் பிடித்து விற்கும் trapper ! பனி படர்ந்த மலைப்பிராந்தியங்களே இவரது ஜாகை ! செவ்விந்தியப் பழங்குடியினரைப் பரிவோடு பார்க்கும் வெள்ளைக்காரர் ! Again – வெறும் பத்தே கதைகள் கொண்ட தொடரிது என்பதால் என் கொள்ளுப் பேரன் காலம் வரைக்கும் நீண்டிடக் கூடிய தொடராக இது இராது ! ஜானதன் கார்ட்லேண்ட் – 2 கதைகள் கொண்டதொரு டபுள் ஆல்பத்தோடு அறிமுகம் காண்கிறார் 2019-ல் ! And நமது லயனின் இதழ் # 350 ஆக இருந்திடத் போவதும் இவரது சாகஸமே ! பக்கத்துக்கு ஆறோ / எட்டோ bold ஆன சித்திரங்கள் மட்டுமே என்பதால் - அவற்றை compact ஆன Tex சைசில் வண்ணத்தில் ரசித்திடவுள்ளோம் ! புதுத் தொடர் என்பதால் - ஆரம்பம் முதலே இதனை இந்த Compact சைசில் பயணிக்கச் செய்வதெனத் தீர்மானித்துள்ளேன் !  

இது வரையிலுமான 8 இதழ்களின் தேர்வுகளும் பெரியதொரு குழப்பத்தை ஏற்படுத்திடாது கரை சேர்ந்து விட்டிருக்க, எஞ்சியிருக்கும் ஸ்லாட்கள் எத்தனை? என்ற கேள்வி எழுந்தது ! 2018 நடப்பாண்டில் ஒவ்வொரு ஜானருக்கும் 9 இதழ்கள் வீதம் மொத்தம் 36 என்பதே திட்டமிடல் ! ஆனால் - 2019-க்கென நாம் திட்டமிட்டிருப்பதோ 5 சந்தா ரகங்கள் எனும் போது arithmetics-ல் கொஞ்சம் மாற்றம் கண்டிட வேண்டுமென்று புரிந்தது ! ஆனால் ஏகப்பட்ட நாயகர்கள் கொண்ட சந்தா A-வில் எண்ணிக்கையினில் வெட்டு ஏதும் சுகப்படாது என்று தெரிந்ததால் - as usual இங்கே 9 இதழ்கள் என்று டிக் அடித்தேன் !

அதன் நீட்சியாய் இதழ் # 9 ஆக நான் தேர்வு செய்தது ஒரு suspense த்ரில்லரை ! சமீபமாய் வெளியாகிய இந்த ஆல்பத்தின் கதாசிரியர் ஒரு ஹாலிவுட் திரைப்பட இயக்குநரே ! இரு பாகங்கள் கொண்ட இந்த த்ரில்லர் – புது யுகத்தின் அத்தனை அடையாளங்களையும் தாங்கி நிற்கும் ஒரு mystery whodunit ! ஆளரமிலா தீவில் ஒதுங்கிடும் நண்பர் குழுவின் மத்தியில் ஒரு கொலையாளியும் இருக்க – மரணம் அங்கே சத்தமில்லாது முகாமிடுகிறது ! யாரந்தக் கொலையாளி ? ; தொடர்ச்சியாய் அரங்கேறும் மரண தாண்டவத்தின் பின்னணி என்ன ? பதில் சொல்லவுள்ள taut ஆன இந்த த்ரில்லரே – final album of சந்தா A ! நீரில்லை....நிலமில்லை...!
So – பஸ்ஸைப் பிடித்துள்ள நாயகர்களின் பட்டியல் பின்வருமாறு!

* வேய்ன் ஷெல்டன்

* ரிப்போர்ட்டர் ஜானி

* ட்ரெண்ட்

* தி அண்டர்டேக்கர்

* தோர்கல்

* ஜானதன் கார்ட்லேண்ட்

* ட்யுராங்கோ

கல்தா கண்டுள்ள ஒரே நாயகி – மதிமுக Lady S ! அறிமுக ஆல்பத்தைத் தாண்டி, தொடர்ந்த 2 இதழ்களிலுமே இவர் உங்களது அபிமானங்களை ஈட்டிடத் தவறி விட்டிருப்பது கண்கூடு ! எனக்கோ இது “Still an o.k series” என்றே தோன்றினாலும் – உங்களது பரவலான அபிப்பிராயங்கள் நெகடிவ்வாக இருப்பதால் வேறு வழியில்லை – தாண்டிச் செல்வதைத் தவிர்த்து ! இதுவொரு நிரந்தர break ஆக இருந்திடுமா ? அல்லது சின்னதொரு இடைவெளிக்குப் பின்பாய் ஷானியாவின் மறுவருகைக்கும் காலம் கனியுமா ? பதில் உங்களிடமே folks !

Thus ends சந்தா: A !

இவருக்கு இத்தனை ஏன்? அவருக்கு இத்தனை மட்டும் ஏன் ? வேதாளர் இல்லியா ? ரிப் கிர்பி இல்லியா ? XYZ இல்லியா ?” என்ற ரீதியிலான கேள்விகள் இருந்திடுமென்பது உறுதியே ! ஆனால் இருப்பதே ஒன்பதே ஸ்லாட்கள் எனும் போது  எனது தேர்வுகளின் பின்னணிகளையும், தேர்வின்மைகளின் லாஜிக்களையும் புரிந்திட கொஞ்சமே கொஞ்சமாய் நேரமெடுத்துக் கொண்டால் மகிழ்வேன் ! ஆசையிருக்கு இன்னும் ஒரு நூறு நாயகர்களைக் கண்ணில் காட்ட ; ஆனால் பையிலுள்ள பணமும், நமக்குள்ள வட்டத்தின் விஸ்தீரணமும், போடும் வேலிகள் முரட்டுத்தனமானவைகள் அல்லவா ? 

* Moving on to சந்தா B ! Best of Bonelli & More…!

இங்கே எனது ஒரே கேள்வி : HOW MUCH IS TOO MUCH FOR TEX ? என்பது மாத்திரமே ! விற்பனை நம்பர்களை மட்டுமே ஒரு வழிகாட்டியாக்கிக் கொண்டு நான் செயல்படுவதாயின் – “ஆங்… 12 டெக்ஸ் கதைகள்பா இந்த சந்தாவில் ; பஞ்சாயத்து முடிஞ்சது !!” என்றபடிக்கே, சொம்பையும், ஜமுக்காளத்தையும் எடுத்துக் கொண்டு  நடையைக் கட்டியிருப்பேன் ! ஆனால் ஓவர் exposure உடம்புக்கு ஆகாது என்பதோடு – மற்ற நாயகர்களையும் பேலன்ஸ் செய்திடும் தேவை உண்டென்பதால் அடக்கி வாசிக்க வேண்டி வருகிறது ! So இங்கே எனது தேர்வுப் படலமானது இவ்விதமிருக்கும்:

* TEX – Single + Double + Bigger Doubles என Black & White-ல்   - 6

* மர்ம மனிதன் மார்டின் – Black & White-ல்    -    1

* வில்லியம் வான்சின் ரிங்கோ - Black & White-ல் - 1

அப்புறம்..ஆங்… அஹ்ஹாங்… அது வந்து… சித்தே பொறுத்து சந்தா B -ன் 9-வது இதழ் பற்றிச் சொல்கிறேனே ?

- TEX-ன் சாகசக் கடலினுள் இங்கி -பிங்கி -பாங்க்கி போட்டுப் பார்த்து, கதைகளைத் தேர்வு செய்வது மட்டுமே பணி என்பதால் no problems in selection !

- மர்ம மனிதன் மார்டினின் slot பற்றி யாருக்கும் எந்த வருத்தமும் இராதென்றே நினைக்கிறேன் ! ஆட்டோமேடிக் தேர்வல்லவா மனுஷன் ?

- மறைந்த ஓவியர் வில்லியம் வான்சிற்கு நமது tribute ஆக 2019-ல் ஏதேனுமொரு இதழினை அமைத்திடலாமென கொஞ்ச காலம் முன்பாய் நாம் தீர்மானித்தது நினைவிருக்கலாம் ! வான்ஸின் சித்திரங்களை ரசிக்க b&w தான் பெஸ்ட் எனும் போது – அவரது ரிங்கோ மினி தொடரின் முதல் ஆல்பத்தை நாம் black & white-ல் வெளியிடவுள்ளோம் ! மொத்தமே 2 இதழ்கள் கொண்ட மினி-தொடரிது !

* ஆங்… அப்புறம் சந்தா B –ன் இதழ் நம்பர் 9 பற்றி....!!

சமீபமாய் நமது பதிவுப் பக்கத்தின் 500-வது post சார்ந்த ஸ்பெஷல் வெளியீட்டு option-களுள் - கென்யா ; அமெரிக்கா ; அப்புறமாய் இத்தாலி என 3 சாய்ஸ்கள் தந்திருந்தது அத்தனை சுலபத்தில் மறந்திருக்காது ! முதலிரண்டு தொகுப்புகள் ஜம்போவிலும் ; பிரத்யேக முன்பதிவுத் திட்டமிடலிலும் இடம் பிடித்திருக்க – இந்த மூன்றாவது அணி மட்டும் ‘அம்போ‘வென அல்லாடிக் கிடந்தல்லவா? அதற்கென்றும் ஆசையாய் (நல்ல) வோட்டுப் போட்ட நம்மவர்களை அத்தனை சுலபமாய் மறந்திடலாமா ? So - ஐவர் அடங்கிய போனெல்லியின் படைப்புகள் தாங்கிய அந்த இதழே 2019-ன் தீபாவளி மலராக வரவுள்ளது ! 
* இந்த ஐவருமே, தத்தம் பணிகளிலும் இந்த இதழில் டிடெக்டிவ் அவதாரில் அதகளம் செய்யவிருப்பதால் “The டிடெக்டிவ் ஸ்பெஷல்” என்ற நாமகரணத்துடன் இந்த இதழ் அன்போடு அழைக்கப்படுமாக !

* Without much ado – இந்த இதழின் நாயகர்களின் பட்டியல் இதோ:

The Detective of the Impossible : மர்ம மனிதன் மார்டின்

The Detective of the Nightmares : டைலன் டாக்

Criminologist                  : ஜுலியா

NYPD Detective               : C.I.D. ராபின்

Texas Rangers                  : டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன்

* போனெல்லியின் ஆதர்ஷப் புத்திர / புத்திரிகளை ஒன்றிணைத்திருப்பதில் சில புருவங்கள் உயரக் கூடும் என்பது புரிகிறது! குறிப்பாகப் பென்சில் இடையழகி ஜுலியா & டைலன் டாக்கின் தேர்வுகளில் ! But அவற்றிற்குத் தெளிவான காரணங்கள் உள்ளன folks!

* நம் மத்தியில் இது வரையிலும் மூன்றே வாய்ப்புகளைப் பெற்றிருந்த ஜுலியா – அவற்றுள் இரண்டில் decent ஆக ஸ்கோர் செய்திருந்தாலும், சொல்லிக் கொள்ளும் பாணியில் ஆக்ஷனில் இறங்கவில்லையென்ற மனத்தாங்கல் பரவலாக உண்டு என்பது புரிகிறது ! யதார்த்தங்களை ஒட்டியே பயணிக்க விரும்பும் ஒரு தொடரில் மிகைப்படுத்தல்களை எதிர்பார்த்தது தான் நமது பிழையோ ?! தவிர, நம் மத்தியில் தேர்ந்த டிடெக்டிவ்கள் என்று சொல்லிக் கொள்ளும் விதமான ஹீரோக்களோ / ஹீரோயின்களோ ஜாஸ்தி இல்லை எனும் போது – இந்த 250+ கதைகளுடனான தொடரை கடாசிடுவதில் நிறைய தயக்கம் என்னுள் ! And இம்முறை ஒரு அட்டகாசமான கதைக்களத்துடனான ஆல்பம் சிக்கியிருப்பதால் – இது அவரது மறுவருகையின் துவக்கப் புள்ளியாக அமைந்திடுமென்று gut feeling சொல்கிறது ! இந்த ஒற்றைத் தேர்வை என் பொருட்டு ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன் guys!

* டைலன் டாக்கைப் பொறுத்த வரையிலும், டெக்ஸ் வில்லருக்கே விற்பனையில் சரியான சவால் தந்த நாயகர் இவர் என்பதை நாமறிவோம் ! ஆனால் நாமறியாத தகவல் என்னவெனில் சமீப காலங்களில் வெளியாகி வரும் டை.டா. கதைகள் நாம் பார்த்துப் பழக்கப்பட்டுள்ள துவக்க ஆல்பங்களிலிருந்து wholesale மாற்றங்களோடு செம ஸ்டைலிஷாக வெளிவந்து கொண்டுள்ளன என்பதை ! 2019-ன் கதைப் பரிசீலனைகளின் ஒரு பகுதியாக ஒரு லோடு புக்குகளை வரவழைத்ததன் பலனாக இந்த சமாச்சாரம் தெரிய வந்த மறுகணமே தீர்மானித்தேன் – இது ஒதுக்கக்கூடியதொரு தொடரல்ல என்று! நீங்கள் இந்த ஸ்பெஷல் இதழில் சந்தித்திடவுள்ளது ஒரு டைலன் டாக் 2.0!! And – மிரட்டலான black & white-ல்!

* மார்டின் & C.I.D.ராபின் சமாச்சாரங்களில் எந்தவிதக் கேள்விக்குறிகளும் இராதென்பதால் அந்த இறுதித் தேர்வுப் பக்கமாய்ப் போகலாமா ?

* "டெக்ஸ் வில்லர் என்றைக்கு டிடெக்டிவ் ஆனார் அப்பு? சொல்லவேயில்லே?!” என்று குறுந்தகவல்கள் வாட்சப் & FB வட்டங்களில் ஸ்மைலிக்களோடு சுற்றி வரப் போவது புரிகிறது ! ஆனால் இந்தக் கதையைப் படித்தான பின்னே – எனது தேர்வின் பின்னணி புரியாது போகாது guys! Trust me on that !!

* So சில ஜனரஞ்சகத் தேர்வுகள் + சில “எதிர்நீச்சல் தேர்வுகள்” என்ற கூட்டணியோடு இந்த ஸ்பெஷல் இதழ் அடுத்த தீபாவளியை அதிரடியாக்கிடும் ! ஹார்ட்கவர்; வழக்கமான ஜிகினா வேலைகள் என்று எதற்கும் பஞ்சமிராது! சந்தோஷமா இத்தாலி அணி ?

Thus ends சந்தா B 

Now On to சந்தா: C

கார்ட்டூன் சந்தாவே என் மனதுக்கு நெருக்கமானது என்பதை கூரை மேலேறி நின்று எத்தனையோ தடவைகள் நான் தம்பட்டம் அடித்துள்ளேன் தானே ? So இந்தத் தேர்வுகளுள் புகுந்திடும் தருணத்தில் எனக்குள்ளே ஒரு ஜிலீர் feeling! ஆனால் – இம்முறை கல்தாக்களின் பெரும்பான்மையே கார்ட்டூன் சந்தாவில் தான் எனும் போது மனசு கனக்கிறது ! இம்முறை தேர்வுகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாய் கல்தாக்களை லிஸ்ட் செய்கிறேன் வருத்தத்தோடு!

* நீலப் பொடியர்கள் SMURFS ! நிறைய தொடர்களைப் பரிசீலித்துள்ளோம்; கழற்றியும் விட்டுள்ளோம் ! ஆனால் அவற்றுள் எதையுமே ஓரம்கட்டும் தருணத்தில் இந்தளவுக்குச் சங்கடப்பட்டதில்லை ! 3+ ஆண்டுகள் ; 8 முழு வண்ண ஆல்பங்கள் - என்பது more than sufficient grounds எனும் போது – அதன் முடிவிலும் உங்களது 100% அபிமானங்களை சேகரிக்க நமது நீலப் பொடியர்களுக்கு சாத்தியப்படவில்லை ! காரணங்கள் எதுவாகயிருப்பினும் – இதனை நமது ஒட்டுமொத்த ரசனைகளின் தோல்வியாகவே நான் பார்த்திடுகிறேன்! “பொடி பாஷை சகிக்கலை; ரொம்ப சின்னப்புள்ளைத்தனமாக உள்ளது” போன்ற காரணங்கள் முன்வைக்கப்படலாம் தான் ; ஆனால் end of the day – அந்த வான் நீல நிச்சலன உலகோடு ஐக்கியமாகிட சாத்தியப்படாது போனது நிச்சயம் நமது இழப்பே ! Adieu boys in blue…! I will miss you !

* சுட்டிப் பயல் பென்னி ! மேலுள்ள வரிகளை மறுக்கா இங்கே கட் & பேஸ்ட் ப்ளீஸ் ! ஓவராய் சிறுபிள்ளைகள் ரகத்திலுள்ளது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டே இந்த அரை நிஜார் அழகனிடமும் ! Phew!!

 * ரின் டின் கேன் !!!! இங்கேயோ கல்தாவின் காரணம் இந்த நாலுகால் ஞானசூன்யத்தின் கதைகளின் வலுவின்மையே என்பேன் ! ரசிக்கவல்ல பாத்திரமே ; ஆனாலும் கொஞ்சமாச்சும் வண்டியை ஒட்டிட, ஓரளவுக்கேனும் எடுபடக்கூடிய கதையும் வேண்டாமா ?

* மதியில்லா மந்திரி ! சின்னச் சின்ன கதைளெல்லாமே filler pages-க்கு மட்டுமே சுகப்படுமென்ற நமது mindset தான் காரணமா ? அல்லது இந்தக் கதைகளின் மையம் துளியும் மாற்றமின்றித் தொடர்வதால் எழுந்துள்ள அயர்ச்சியா? என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் மதியிலா மந்திரி கொஞ்ச காலமாகவே danger zone-ல் இருந்து வருவது தான் யதார்த்தம் ! And இப்போது ஒரு ஓய்வை நாடிச் செல்லும் கட்டாயம் எழுந்துள்ளது !

நம் இல்லத்துக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்ல வாகான அத்தனை கதைவரிசைகளுக்கும் இம்முறை ஒருங்கே கல்தா என்பது புரிகிறது ; உறுத்துகிறது ; வருத்துகிறது !! ஆனால் - மீசையும், கிருதாவும் வைத்துள்ள சில பல ஆறடி "குட்டீஸ்கள்" மனம் குளிர்ந்தாலன்றி, வண்டிகள் ஓடாது என்பதே யதார்த்தம் எனும் போது இந்த வெட்டுக்களை கனத்த மனதோடு செய்திடுகிறேன் ! Trust me folks - நீங்களும் என் போலவே ஒரு கார்ட்டூன் காதலராக இருக்கும் பட்சத்தில் எத்தனை சங்கடப்படுவீர்கள் என்பது எனக்குப் புரியாதில்லை !! ஆனால் சூழ்நிலைகளை மதிக்க வேண்டிய அவசியம் என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டுள்ளது !

ஆக 9 இதழ்களுடன் 2018-ல் வலம் வந்திடும் சந்தா C-ல் 4 தொடர்களின் கல்தாவானது அதன் ஆற்றலை நிறையவே மட்டுப்படுத்தியுள்ளது! பொதுவாகவே காமிக்ஸ் என்றால் ஆக்ஷன் சார்ந்த கதைகள் மாத்திரமே ரசித்திடும் என்பதான mindset நம்மில் ஆழமாய் வேரூன்றியிருக்க, கடந்த 3 வருடங்களது dedicated கார்ட்டூன் வழித்தடத்தால் கூட அதனில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திட முடிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டியுள்ளது ! 'லக்கி லூக் ஓ.கே… சிக் பில் ஓ.கே….' என்பதைத் தாண்டி இதர சிரிப்பு கோஷ்டிகளின் மீதான judgements reserved என்பதே யதார்த்தம் எனும் போது – அதனை சங்கடத்தோடே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி வருகிறது!புத்தக விழா sales நம்பர்கள் கார்ட்டூன்களுக்கு உரக்க ‘ஜே‘ போடுவதை மனதில் இருத்திப் பார்க்கும் போது – கார்ட்டூன்களின் றெக்கைகளைக் கத்தரிக்க மனம் ஒப்பாது தான் ! ஆனால் சந்தாதாரர்கள் எனும் மதில் சுவரின் மீதே இதர சித்திரங்களை நாம் வரைகிறோம் எனும் போது – அந்த மதிலுக்குச் சேதமோ, அயர்ச்சியோ நேர்ந்திடக் கூடாதென்பதே எனக்கு முதல் priority ஆகத் தோன்றுகிறது ! நமது தீவிர அபிமானிகளுக்குமே நீலப் பொடியர்களை, பென்னியை, லியனார்டோ தாத்தாவை ; ரின் டின் கேனை ரசிக்க முடியவில்லை என்று குரல் கேட்கும் போது – அதனை உதாசீனப்படுத்த முடியமாட்டேன்கிறது ! “எது போட்டாலும் வாங்குவார்கள்!” என்று அவர்களை taken for granted – ஆகக் கருதுவது மரியாதையாகாதே ! So கனத்த இதயத்தோடு – மேற்படி quartet-க்கு இதயத்தில் மட்டுமே இடம் தருகிறேன் ! கார்ட்டூன் காதலர்களே : நானுமே நொந்து தான் போயிருக்கிறேன் இந்தத் தருணத்தில் ; So உங்களது வருத்தங்களில் நியாயம் இருப்பினும் – மறுதரப்பின் கண்ணோட்டத்துக்கும் மதிப்பளிக்க வேண்டிய எனது கட்டாயத்துக்குப் புரிதலைக் கோருகிறேன் ! ஆற்றமாட்டாமையில் கைகளைப் பிசைவதைத் தாண்டி வேறென்ன செய்வதென்று தெரியாத நிலை எனக்கு !

So- அரை டஜன் இதழ்களோடு மட்டும் இம்முறை களமிறங்கும் சந்தா C-ன் கார்ட்டூன் நாயகர்கள் இதோ !

* லக்கி லூக்  (டபுள் ஆல்பம்)

* சிக் பில்

* மேக் & ஜாக் 

* ப்ளூகோட் பட்டாளம்

* கர்னல் க்ளிப்டன்

* லக்கி லூக் (செம புது single album) 
(விற்பனையின் Top 3 இடங்களுள் இடம்பிடிக்கிறார் லக்கி என்பதால் - அவருக்கு 1 ஸ்லாட் அதிகமாய் !! )


Thus concludes the (brief) சந்தா C...!

Moving on… அடுத்து வருவது சந்தா: D !

முதலில் ஒரு ஹெல்மட்டை மாட்டிக் கொண்டு வந்து விடுகிறேன் folks – மும்மூர்த்திக் காதலர்களிடமிருந்து பாயக் காத்திருக்கும் அழுகின முட்டைகளும், கற்களும் என்னைப் பதம் பார்ப்பதிலிருந்து தப்பிக் கொள்ளும் பொருட்டு!கண்கள் சிவக்க, திட்ட வாகான வார்த்தைகளை அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் இந்த நொடியில் – தொடரும் நிஜங்களைப் புரிந்திட லேசாய் முயற்சித்துப் பாருங்களேன் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் : 

* துவக்க வருடத்தில் ; அதாவது மறுபதிப்புத் தடம் பிரத்யேகமாய் துவங்கிய வருடத்தில் - சந்தாதாரர்களின்  break upA + B + C + D = 100%

நடப்பாண்டு = 65% (அதாவது மறுபதிப்புச் சந்தா வேணாமென்று சொல்லியுள்ள நண்பர்களின் சதவிகிதம் 35%)

* 2017 வரைக்கும் ஒவ்வொரு புத்தக விழாவிலும் மும்மூர்த்திகளின் விற்பனை stats : இரும்புக்கை மாயாவி : 200 பிரதிகள் ஒவ்வொரு இதழிலும் ! ஸ்பைடர் : 70 பிரதிகள் ஒவ்வொரு இதழிலும் ! But 2018-ல் : 15 பிரதிகள் per title - மாயாவி  & ஸ்பைடர் - Less than 5 பிரதிகள் ஒவ்வொரு இதழிலும்..!

* 2017 வரைக்கும் மாதாந்திர ஆன்லைன் விற்பனையில் மும்மூர்த்திகளின் பங்களிப்பு : 25 - 30% ...நடப்பாண்டில் : 5% - 7% !

*2017 வரைக்கும் விற்பனையாளர்களின் ஆர்டர்களுள் மும்மூர்த்திகளின் இதழ்களுக்கான  average ஒதுக்கடு : 25% .......தற்போது : ம்ம்ம்ம்… வேணாமே… ப்ளீஸ் !

இது தான் நிஜம்… யதார்த்தம்… நடப்பு… நடைமுறை…! “கிடைக்காது!” என்றிருந்த வரையிலும் விடாதே – பிடி – என்று விரட்டோ விரட்டென்று விரட்டியதன் மோகம் படிப்படியாய் taper down ஆகி, இன்றைக்கு புளித்த ஏப்பமிடும் நிலையை எட்டியிருக்கிறோம் என்பதை மேற்படிப் புள்ளி விபரங்கள் தெள்ளத் தெளிவாக்குகின்றன ! இன்றைய புத்தக விழாக்களில்  கூட மும்மூர்த்திகளின் இதழ்களை (அதிலும் மாயாவியை !!!!!) சீரியஸாக வாங்கிட ஆளில்லை எனும் போது ரொம்பவே சங்கடமாயுள்ளது !  நம் மீதான அபிமானத்தின் ஒரே காரணத்தால் இன்னமும் தொடர்ந்து மறுபதிப்புச் சந்தா செலுத்தும் நண்பர்களுள் பெரும்பாலானோர் அவற்றை சேகரிப்பிற்கோ, பகடிக்கோ மாத்திரமே பயன்படுத்திடுகின்றனர் என்பதிலும் இரகசியமில்லை ! So இது தான் நிலவரமெனும் போது – தொடர்ந்து மும்மூர்த்திகளோடும், ஸ்பைடரோடும் பயணம் செய்யும் இந்த பாணிக்குக் கொஞ்ச காலமாவது break தருவது தவிர்க்க இயலா நெருக்கடி என்றாகிறது ! ஆனால் அதே சமயம் - மெருகூட்டப்பட்ட / வண்ணத்திலான மறுபதிப்புகள் - Day One முதலாய் நம்மைக் கரை சேர்த்து வருகின்றன ! 2018 -ன் ஏஜெண்ட் விற்பனையில் இன்றுவரைக்கும் முதலிடம் வகிப்பது : "சைத்தான் சாம்ராஜ்யம்" & "பவளச் சிலை மர்மம்" தான் ! அதே போல லக்கி கிளாஸிக்ஸ் ; பிரின்ஸ் ஸ்பெஷல் இதழ்களும் கிட்டத்தட்ட காலி ! 

- "போச்சு! தலையிலே கல்லைப் போட்டுப்புட்டீங்க… மாயாவி இல்லா ; லாரன்ஸ்-டேவிட் இல்லா-ஜானி நீரோ & இஸ்பய்டர் இல்லா தேசத்தை விட்டே வெளியேறுவதைத் தாண்டி எனக்கு வேறு வழி இல்லே…!"

- "போச்சு! மறுக்கா க்ரே-மார்கெட் தலைதூக்கப் போகுது !"

-"போச்சு! பழசில்லாட்டி, புதுசை நான் வாங்கவோ / படிக்கவோ போறதில்லே !"

என்ற ரீதியில் nostalgia குரல்கள் ஒலித்தால் நான் நிச்சயமாய் ஆச்சர்யப்படமாட்டேன் ! ஆனால் யதார்த்தத்தை – வார்னிஷ் பூச்சின்றி விளக்குவது மாத்திரம் தானே நான் செய்யக் கூடிய சமாச்சாரம் ?

There's another angle to this too folks ! கற்பகோடி வருஷங்கள் திடமாய், தாட்டியமாய், ஆற்றலோடு தொடர்ந்திட முடிவதெல்லாம் டெக்ஸ் வில்லருக்கு ஓ.கே.யாக இருக்கக் கூடுமே தவிர்த்து, 51-ன் மத்தியில் நிற்குமொரு சராசரி ஆசாமிக்கல்ல தானே ?! 60 வரை உருப்படியாய்ப் பணியாற்றிட முடிந்தால் அதுவேவொரு பெரும் வரமாக இருந்திடும் என்பதை நான் உணர்ந்தேயுள்ளேன் ! So எஞ்சியுள்ள work years-ன் ஒரு கால்வாசியை – அரைத்த மாவையே புதுசாய் பாக்கெட் போட்டு போணி பண்ணிச் செலவிடுவதில் மனசுக்கு என்ன ரம்யம் இருந்திடப் போகிறது ? ‘நான் ஏழு வயசில் – எட்டு பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே படிச்ச புக் இது !‘ என்று ஒரு 1960-s கதையை இன்றைக்கும் சிலாகிப்பதில் சிலபல பால்யங்களது நினைவுகள் நிழலாடிடலாம் தான் ; ஆனால் அறுபதுக்கு அப்புறமாய் வாழ்வின் அடுத்த கட்டத்திலிருக்கும் தருணத்தில் – நான் கடந்து வந்துள்ள பாதையின் highlights என்று நினைவு கூர்ந்திட, எனக்குமே ஏதாவது உருப்படியான நினைவுகள் வேண்டாமா ? Nostalgia is fine when you are in inertia ; but probably not when you can be in a state of motion !! So மறுபடியும் மும்மூர்த்திகள் et al சார்ந்த தேடல் வீரியமாகிடும் வரையிலாவது, சந்தா D-யினில் சில பல புராதன நாயகர்கள் தற்காலிக ஓய்வினில் இருக்க நேரிடும் ! 

But மறுபதிப்புகளை ஒரேயடியாய் ஓரம்கட்டிவிடவில்லை என்பதற்கு அடையாளமாகவே இம்முறை சந்தா D-ன் இதழ்களைத்   திட்டமிட்டுள்ளேன் ! Here is the list : 

* கேப்டன் பிரின்சின் "மரண வைரங்கள்" - (உங்களது "குத்தோ குத்தோ தேர்வு !!)

* டெக்ஸ் வில்லரின் "வைக்கிங் தீவு மர்மம்" (உங்களின் ஈரோட்டுத் தேர்வு)

* ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தோன்றும் "விற்பனைக்கு ஒரு பேய்" (இந்தத் தொடரின் மொத்தத்திலுமே 10 கதைகளே !! So அவற்றுள் மறுபதிப்புகள் தவிர்க்க இயலா சங்கதிகளே !)

* மாடஸ்டி பிளைசியின் "பழி வாங்கும் புயல்" : இளவரசியின் evergreen அதிரடி !! இன்றைய மிதமான புதுசைகளைக் காட்டிலும், அதகள பழைய adventure தேவலாமென்று நினைத்தேன் ! And நானே முந்திக் கொள்கிறேன் - இதனோடு இணைந்து வந்த அந்த இரட்டை வேட்டையர் கதையையும் இங்கே லிங்க் செய்திட வழி நஹி என்ற தகவலோடு !! So அதன் பொருட்டாக கோரிக்கைகள் வேண்டாமே - ப்ளீஸ் ?

* "இளமையில் கொல் !"  உடைந்த மூக்கார் ; 'மின்னும் மரண' நாயகரான கேப்டன் டைகளின் இளம் வயதிலான சாகஸத் துவக்கம் - முழு வண்ணத்தில் - compact ஆக டெக்ஸ் வில்லர் சைசில் ! இந்தக் கதைவரிசையினை துவக்கத்தில் திட்டமிட்ட போதே ஒருவித பாக்கெட் சைசுக்கே இதனை அமைக்க படைப்பாளிகள் எண்ணியிருந்தனர் ! So மாமூலான பிரான்க்கோ-பெல்ஜிய பாணியில் இல்லாது - பக்கத்துக்கு ஆறே சித்திரங்கள் என்றதொரு அளவீட்டில் பக்க அமைப்பிருக்கும் ! So  அதனையே நாமும் பின்பற்றிடவுள்ளோம் - in a compact size !

* இதழ் # 6 : அந்நாட்களில் black & white-ல் வெளியான ரிப்போர்ட்டர் ஜானியின் "தலைமுறை எதிரிகலரில் !


மீண்டும் படிக்கும் இதழ்களாகவே இருப்பினும், துளி கூட புராதனம் தென்படா - மெருகூட்டப்பட்ட தரத்திலானவைகளாய் இந்த அரை டஜனுமே இருந்திடுமென்பது எங்களது promise ! So பழசு தான் ; ஆனால் புதுசாய் !!

Thus ends the Planning for சந்தா : D 

 உப்ப்ப்ப்…!! இனி சந்தா : E பக்கமாய் !!

கிராபிக் நாவல்… அல்லது செல்லமாய் “கி.நா.“ ! 2017-ல் அறிமுகம் – தனித் தடத்தில் ! And அந்த ஆண்டிலேயே செம வரவேற்பும், ஆதர்ஷமும் கிட்டியது ! So லாஜிக்படிப் பார்த்திருந்தால் நடப்பாண்டிலும் ‘நச்‘சென்று இடம்பிடித்திருக்க வேண்டும் தான்! ஆனால் “இரத்தப் படலம்” எனும் பீம்பாய்,நமது பட்ஜெட்டின் பெரும்பகுதியை லபக்கிட, கல்தா கிட்டியது இந்த வித்தியாச genre-க்குத் தான் !

2019-ல் அந்தத் தவறைச் செய்வதாகயில்லை !

அதே போல கிராபிக் நாவல்கள் என்றாலே மூச்சுக்கு முன்னூறு தபா மூக்கைச் சிந்தியபடிக்கே,இருட்டுக்குள் அழுது பயணிக்கும் இருண்ட களங்கள் மட்டுமே தான் - என்றவொரு மாயையைத் தொடரச் செய்வதுமாகயில்லை !

எனது பார்வையில் – சராசரியான காமிக்ஸ் தொடர்களில் தென்படுவதை விட ஒரு மடங்கோ, பல மடங்கோ அழுத்தம் ஜாஸ்தியான கதைகளின் சகலமுமே ‘கிராபிக் நாவல்கள்‘ என்ற குடைக்குக் கீழே வரத் தகுதியுடையவைகளே ! So "E for EXOTIC TALES" என்ற பெயருடன் களமிறங்கவிருக்கும் இந்தத் தடத்தின் இதழ்களின் பட்டியல் இதோ :

* பராகுடா : 3 பாக முழுவண்ண ஆல்பமாய் ; நமது 3 மில்லியன் ஹிட் ஸ்பெஷலாகவும் மிளிரக் காத்திருப்பது இந்த long awaited கடற்கொள்ளையர் தொடரின் முதல் சுற்றே ! இதுவரைக்கும் நாம் முயற்சித்தே இராததொரு genre ; மிரட்டலான சித்திர தரம் ; சற்றே முதிர்ந்தோருக்கான கதையோட்டம் என்று இருக்கும் இந்த ஆல்பம் "EXOTIC" என்ற இந்தச் சந்தாப்பிரிவின் அடைமொழிக்கு கச்சிதமாய் நியாயம் செய்யும் !

* பிரளயம் : மீண்டுமொரு 3 பாக முழுவண்ண one-shot கதைக்களம் ! ஒரு நிஜ சம்பவத்தின் பின்னணியோடு புனையப்பட்ட பிடரியில் அறையும் ரகத்திலான திகில் ஆல்பம் ! நிச்சயமாய் வயதும், ரசனைகளும் முதிர்ந்தோருக்கு மாத்திரமே ! இதனை போன வருஷமே வாங்கி விட்டோம் - ஆனால் இதனில் தெறிக்கும் சில "அந்த மாதிரி" சமாச்சார sequence-களை எவ்விதம் கையாளப் போகிறோமென்று இன்னமும் திட்டமிட்ட பாடில்லை !! தெய்வமே !! 

* வஞ்சம் மறப்பதில்லை : “அழுகாச்சிகள்” மட்டுமே கிராபிக் நாவல்களல்ல என்று அழுத்தமாய்ச் சொல்ல வருமொரு சித்திர சுனாமி இது! தெறிக்கும் ஆக்ஷன்; சித்திரங்களில் / கலரிங்கில் ஒரு புது உச்சம்; கதை சொல்லும் விதத்தில் மிரட்டலென - "பழிவாங்கும் படலங்களை” ஒரு புதுப்பார்வை பார்த்திட முயற்சிக்கவிருக்கிறோம் இங்கே !

அப்புறமாய் தொடர்வன 3 black & white ஆல்பங்கள் : 

* நித்திரை அறியா நியூயார்க்..!

* முடியா மூடுபனி..!

*  கதை சொல்லும் கானகம்..!               :

ஒரு முடியா இரவு“ ; “என் சித்தம் சாத்தானுக்குச் சொந்தம் பாணியிலான dark-ஆன அக்மார்க் கிராபிக் நாவல்கள் - black & white–ல் ! வெவ்வேறு காலகட்டங்கள்; வெவ்வேறு பூமிகள்; வெவ்வேறு மனிதர்கள் என்று இந்தக் கதைகள் சித்தரிக்கவிருப்பது வாழ்க்கையின் ஒரு நிழலான பக்கத்தை ! Please don’t miss these!!


ஆக மேற்படி 6 இதழ்களோடு சந்தா : E 2019-ல் தடதடக்கவுள்ளது !

So -

சந்தா A : 9 புக்குகள் - நடப்பாண்டைப் போலவே ! 

சந்தா B : 9 புக்குகள் - நடப்பாண்டைப் போலவே ! 

சந்தா C : 6 புக்குகள் - ஒரு மாதம் விட்டு ஒரு மாதமென !

சந்தா D : 6 புக்குகள் - ஒரு மாதம் விட்டு ஒரு மாதமென !

சந்தா E :  6 புக்குகள் - ஒரு மாதம் விட்டு ஒரு மாதமென !

Total =     36 புக்குகள்

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் 3 பிரதிகள் என்ற எண்ணிக்கையில் சரியாய் 12 மாதங்களைக் கடக்கவுள்ளோம் ! Of course – ஜம்போ காமிக்ஸின் இதழ்கள் இடைச்செருகலாக ஆண்டு முழுக்க இருந்திடும் ; உங்களுக்கு காமிக்ஸ் வறட்சியென்ற உணர்வு தலைதூக்கிடாது இருக்கும் விதமாய் !

சந்தா E–க்கென நான் ஒரு லாரி லோட் கதைகளைப் பரிசீலனை செய்து ; shortlist செய்தும் வைத்துள்ளேன் தான் guys ! ‘ஆனால் ஒற்றை நாளில் உங்கள் ரசனைகளை மாற்றுகிறேன் பேர்வழி‘ என்ற குடாக்குத்தனங்களைச் செய்து பல்பு வாங்கிக் கொள்ள இஷ்டமில்லை என்பதால் – slow & steady-யான பாணியே தேவலாமென்று தீர்மானித்தேன் ! So இன்னும் ஜாஸ்தி emotions-களை இங்கே எதிர்பார்த்திருந்த நண்பர்கள் – பட்ஜெட் மீதான நமது கவனத்துக்கும் உரிய மதிப்பளித்திடக் கோருகிறேன் ! சில பல புதுக் கதவுகளை மெதுவாய், சிரத்தையாய்த் திறக்க முற்படுவோம் நண்பர்களே - இயன்றமட்டிலும் அனைவரையும் கைகோர்த்துக் கொண்டு ! "Niche audience" ; "பிரத்யேக ரசனை" என்பனவெல்லாம் கேட்க உசத்தியாய் தோன்றுகின்றன தான் ; ஆனால் இருக்கும் சொற்ப வட்டத்தினுள் இன்னுமொரு அணி பிரித்தலுக்கு  அவசியமின்றி - "எல்லாப் பயணங்களும், எல்லாரும் ரசிக்கும் விதத்தில்" என்றிருப்பதன் ரம்யமே அலாதியாகிடாதா ?  அப்புறம் வானமே எல்லையாகிடாதா  ?

So thus ends the planning for 2019 !

"அட… இதுக்குத் தான் இவ்ளோ ‘தம்‘ கட்டுனியாக்கும்வே ? இதை குழந்தைப் புள்ளை யூகம் பண்ணியிருக்குமே..?"

 என்றோ…

உப்புமில்லே… புளியுமில்லே. காரமுமில்லே… சாரமுமில்லே‘ என்று ஒவ்வொரு பட்ஜெட்டையும் விமர்சிக்கும் எதிர்கட்சிகளின் முன்னாள் நிதியமைச்சர்கள் போல நீங்கள் உங்களது FB பகிர்வுகளில் / வாட்சப் வட்டங்களில் அலுத்துக் கொண்டாலும் சரி…

"மொந்தை புதுசு… கள்ளு பழசுதாம்லே" என்று தீர்ப்பெழுதினாலும் சரி…

"ஆங்....ஜெஸ் லாங் நஹி ; அலிபாபா இல்லியா ? வேதாளர் க்கு இடம் லேதுவா ? உருப்பட்ட மாதிரி தான் !" என்று அவரவரது பக்கங்களில் தாளித்தாலும் சரி ...

அவற்றின் சகலத்தையும் நிச்சயம் நான் புரிந்து கொள்வேன் guys ! ரசனை சார்ந்த விஷயங்களில், நூற்றுக்கு நூறு சதவிகித uniform ஏற்புகள்  அசாத்தியம் என்பதை இத்தனை கழுதை வயதான பிற்பாடும் நான் புரிந்து கொள்ளாமல் சுற்றி வருவேனா ? So - எனது அறிவுக்கும், ஆற்றலுக்கும், நிதி நிலமைக்கும் இயன்றதொரு combination-ல் இதழ்களை அமைத்திட விழைந்துள்ளேன் என்பதே bottomline.

உங்களின் ஆதர்ஷ நாயக / நாயகியர் யாரேனும் விடுபட்டிருப்பின் அல்லது குறைவான / கூடுதலான இடங்களோடு வலம் வர நேரிட்டிருப்பின் – அவற்றின் பின்னே ரசனை சார்ந்தோ… வணிகம் சார்ந்தோ காரணிகள் இருக்கக்கூடுமென்ற உங்களது புரிதலுக்கு எனது முன்கூட்டிய நன்றிகள் guys ! குறிப்பாய் கார்ட்டூன் பிரியர்கள் & பழமை விரும்பிகளுக்கு எனது commiserations ! எனது கரங்கள் கட்டப்பட்டுள்ள நிலை இரண்டிலுமே ! So சிவகாசியின் திசையில் வீசிட தக்காளிகளையோ ; கூமுட்டைகளையோ தயாராக்கிடும் பட்சத்தில்,  யதார்த்தங்களை மதிக்க அவசியப்படும் எனது இக்கட்டின்பால் கொஞ்சமே கொஞ்சமாய் உங்கள் சிந்தனைக் குதிரைகளை மேய விடுங்களேன் - ப்ளீஸ் ! அதற்கு அப்புறமும் அபிஷேகம் தவிர்க்க இயலா அவசியமென்று பட்டால் - you know where to find me guys !!

Right..! What next...? காத்திருப்பதிலொரு சுகமுண்டு தான்; அதனில் உங்களைத் திளைக்கச் செய்தாகி இதோ – தற்போது விடைகளையும் முன்தந்து விட்டோம் ! இனி பந்து உங்கள் தரப்பில் ! “சந்தாக்கள்” எனும் சுவாச வாயுவை எங்களது காலியான டேங்குகளில் நிரப்பி, கடப்பாரை நீச்சலடித்து வரும் நம்மை ஆழ்கடல் நீச்சலுக்குத் தயார்ப்படுத்திடுங்களேன் – ப்ளீஸ்? Yet another கலக்கலான / கலர்புல்லான காமிக்ஸ் உலகம் தொட்டு விடும் தூரத்தில் தயாராகக் காத்துள்ளதெனும் போது அதன் திறவுகோல், சந்தாதாரர்களான உங்கள் ஒவ்வொருவர் வசமுமே folks! எப்போதும் போல நம்மை உந்தித் தள்ளும் சக்திகளாகிடுங்களேன்- please ?
அப்பாலிக்கா ஒரு கேள்வி-பதில் session-ம் கூட :

1 . TEX வில்லருக்கு ஸ்லாட்கள் குறைச்சலோ ?

ஊஹூம்...! சந்தா B-ல் உள்ளதே மொத்தம் 9 இடங்கள் தான் !

And அந்த ஒன்பது  இதழ்களுள் 7-ல் நம் மஞ்சள்சட்டை மாவீரர் இடம்பிடிக்கிறார் !

அப்புறம் வண்ணத்தில் ஒரு மறுபதிப்பு !

பற்றாக்குறைக்கு 4 Color TEX சிறுகதைகள் !


And அந்த ஜம்போ காமிக்ஸ் சீசன்-2-ன் விளம்பர பக்கத்தையுமே  இன்னொரு தபா பாருங்களேன் ! கைவசமுள்ள சொற்ப இடங்களை பகிர்ந்திட இதற்கு மேலும் வழி நஹி !

2 ."அடுத்த தலைமுறைக்கு காமிக்ஸ் ரசனையினைக் கொண்டு போக வேண்டுமெனில் கார்டூன்களே வழி !" என்று வாய் கிழிய பேசிய கையோடு - கார்டூன்களையே காவு கொடுத்தால் எப்படியாம் ?

Doubtless - இதுவொரு பின்செல்லும் நகர்வே !! நிச்சயமாய் இத்தீர்மானம் ஒரு knee jerk ரியாக்ஷனாகவும்  தெரிந்திடலாம் தான் !! ஆனால் நிஜத்தைச் சொல்வதாயின் - லக்கி லூக் ; Smurfs நீங்கலாய் கார்ட்டூன் ஜானரில் தலைதப்பிக்கும் விற்பனை கண்டுள்ளது சமீபத்தைய ஹெர்லக் ஷோம்ஸ் மாத்திரமே  ! சிக் பில் கதைகளில் கூட, நம்மிடமுள்ள கையிருப்பு எண்ணிக்கையை நான் வெளியே ஒப்பித்தால் கிறுகிறுத்துப் போய் விடுவீர்கள் ! So கொஞ்சமே கொஞ்சமேனும் கையில் உள்ள ஸ்டாக் குறைந்திடும் வரைக்கும் மேற்கொண்டும் வெளியிட்டு பாரத்தை ஏற்றிக் கொள்ள வேண்டாமே என்பதன் பொருட்டே இந்த cuts !! இது தாற்காலிகமேயன்றி - நிரந்தரமாகாது !

3.  மறுபதிப்புகள் மறுக்கா கோவிந்தா தானா ?   

இல்லாத வரைக்குமான தேடல்கள் - அவை சரளமாய்க் கிடைக்கும் போது தேயத் துவங்குவது இயல்பே ! என்ன - ஆர்வங்களின் இந்தத் தேய்மானம் கொஞ்சம் ரொம்பவே ஜாஸ்தி என்று எனக்குத் தோன்றுகிறது !  புத்தக விழாக்களில் கூட இப்போதெல்லாம் மாயாவியை ஒரு சராசரி இதழாய்ப் பார்த்திடுவது தான் வலிக்கச் செய்கிறது ! At least அவருக்கேனும் அந்த ஈர்ப்பும், தேடலும் திரும்பும் வரையிலுமாவது புராதன b&w மறுபதிப்புகள் on ice !

4. சந்தா E ??? என்ன எதிர்பார்ப்பது இதனில் ?

Dark ஆன கதைகள் மட்டுமே இந்தச் சந்தா வரிசையில் இடம்பிடித்திடுமென்று இருக்கக்கூடியதொரு மனப்பாங்கை மாற்றுவதே முதல் பொறுப்பு ! "அலைக்கடலில் அசுரர்கள்" - முற்றிலும் புதியதொரு திக்கு நம் ரசனைகளின் பயணத்துக்கு ! "வஞ்சம் மறப்பதில்லை" ஒரு பிடரியில் அறையும் ஆக்ஷன் மேளா - மிரட்டும் சித்திரங்களோடு ! "பிரளயம்" ஒருவித horror கலந்த கதை - நிஜ சம்பவமொன்றின் பின்னணியில் ! பாக்கியிருக்கும் 3 black & white கதைகள் அந்த typical கிராபிக் நாவல் பாணியிலிருக்கும் ! So ஒளியும் உண்டு ; இருளுமுண்டு இம்முறை !

5. ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு வித விலையில்  இருப்பது ஏனோ அம்பி ?

நாமாய் உருவாக்கும் கதைகளெனில் - ஒரே சீரான செலவினங்கள் இருந்திடும்  ; ஒரே சீரான விலைகளை  நிர்ணயிப்பதிலும்  சிரமமிராது ! அதே போல முக்காலே மூன்று வீசம் இங்கிலாந்தின் Fleetway கதைகளையாய் நாம் வெளியிட்டு வந்த நேரங்களிலும் - பெரியதொரு ஏற்ற இறக்கங்கள் இருந்ததில்லை செலவுகளில் !

ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில், ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதத்திலான ராயல்டி கோரிக்கைகளை முன்மொழிவது சகஜமாகி விட்டது ! பௌன்சர் கதைகளுக்கான ராயல்டி ஒரு உச்சமெனில் ; ஹெர்லக் ஷோம்ஸ் இன்னொரு உச்சம் ! டெக்சின் கட்டணங்கள் ஒரு விதமெனில், ட்யுராங்கோவின் ராயல்டி வேறொரு விதம் ! So மிக்க குறுகிய பிரிண்ட்ரன் கொண்டு நாம் செயல்படும் போது, இந்த நிலையான செலவினங்கள் ஒரு மிகப் பெரிய பங்காகிக் போகின்றன ! So அதனைக் கொண்டே விலைகளை நிர்ணயிக்க வேண்டிப் போகிறது & ஒரே சீராய் அமைத்தல் சிரமமாகிடுவதும் இதன் பொருட்டே !

6 . வரும் காலங்களில் காமிக்ஸ் படிக்க விரும்புவோர் 'கோன் பனேகா கிரோர்பதி ?' நிகழ்ச்சியில் பங்கேற்று கோடீஸ்வரர்களாக முயற்சித்தாக வேண்டுமோ ?

கடந்த 45 நாட்களில் டாலரும், யூரோவும் வாங்கியுள்ள தர்ம அடியைப் பார்க்கும் போது, நானே அந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ ? என்று தான் தோன்றுகிறது ! நமது உள்ளீட்டுச் செலவுகளில் 50 % க்கு மேலானவை அயல்நாட்டு வணிகத்தின் பலன்களே ! ராயல்டியில் துவங்கி ; அங்கே செய்யப்படும் இத்தாலிய மொழிபெயர்ப்பு ; அயல்நாட்டு ஆர்ட் பேப்பர் ; அயல்நாட்டு அச்சு மசிகள் ; அட்டைகள் என்று நம் இதழ்களுள் Made in அயல்நாடு சமாச்சாரங்கள் தான் பெரும்பான்மை ! So அன்னியச் செலாவணியின் மதிப்பு எகிறும் போது நமது செலவுகளும் தெறிக்கின்றன !! உஷைக்கே போன செலவுகள் ஒருநாளும் தரை இறங்கியதாய் சரித்திரம் கிடையாதெனும் போது - இதற்கான ஒரே தீர்வு - நமது பிரிண்ட்-ரன்னை ஜாஸ்தியாக்கிட முயற்சிப்பது மாத்திரமே !

உங்கள் கோணங்களில் இந்தாண்டின் அட்டவணையைப் பார்த்திடும் சமயத்தில் என் சிறு மூளைக்கு எட்டிய சில கேள்விகளுக்கான பதில்களையும் தந்திட முனைந்துள்ளேன் - சில பல க்ரூப்களில் நம்மை சலவை செய்திடப் பயன்படுத்திடும் ஏரியலின் அளவாவது குறையட்டுமே, என்ற நப்பாசையில் ! ஆனாக்கா - "நீ என்ன குட்டிக்கரணம் அடிச்சாலும் உனக்கு மண்டகப்படி இல்லாது போகாதுடீ !!" என்ற மைண்ட்வாய்ஸ்கள் ஓரிரு மூலைகளில் ஒலிப்பதும்  கேட்காதில்லை தான்  ! So அதுபாட்டுக்கு ஒரு பக்கம் ;  சொற்பமான இந்த விளக்கங்கள் எனது திருப்திக்கோசரம் இன்னொரு பக்கம் !

Before I sign off – சில ரத்தினச் சுருக்கத் தகவல்கள் :

* அயல்நாட்டுத் தபால் கட்டணங்கள் ஏகத்துக்கு உயர்ந்து விட்டுள்ளன ! So வரும் நாட்களில் அயல்நாட்டுச் சந்தாக்கள் நிறையவே உசந்திடும் ! ஆனால் பார்சல்களை நான்கு மாதங்களுக்கொருமுறை அனுப்புவதாயின் - அந்தக் கட்டண விகிதங்கள் சற்றே சகாயமாகின்றன ! வெறும் 3 புக்குகளை மாதந்தோறும் அனுப்பிடும் போதும்  -  குறைந்த பட்ச எடை சார்ந்த கட்டணங்களையே வசூலிக்கிறார்கள் ! ஆனால் அந்தக் குறைந்த பட்ச எடையளவிற்குள் பிடிக்கக்கூடிய புக்குகளை மூன்றல்லது / நான்கு மாதங்களுக்கு ஒருவாட்டி சேர்த்தே அனுப்பிடும் போது மிச்சமாகிறது ! So அயல்நாட்டில் வாழும் நண்பர்களே : the choice is yours !

* ரெகுலர் கலர் இதழ்களில் ரூ.5/- & டெக்ஸ் வில்லர் b&w இதழ்களில் ரூ.10/- விலையேற்றம் செய்யும் நெருக்கடி! ஒரே நேரத்தில் கணிசமாய் ஏற்ற கை உதறுவதால் சின்னதான hikes மட்டுமே ! 2020-ல் இதே வீதத்தில் இன்னொரு ஐந்து ரூபாய் ஏற்ற வேண்டி வரலாம் ! புரிதலுக்கு இப்போதே நன்றிகள்!

* As always – கதைத் தேர்வுகள் / தலைப்புகள் கடைசி நேர மாற்றத்துக்கு உட்பட்டவைகளே !

*  ஆண்டுச் சந்தாவினை 2 தவணைகளில் செலுத்தும் வசதி இம்முறையும் உண்டு !! ஆனால் - இரண்டாம் தவணை மார்ச் 31 -க்கு முன்பாய் செலுத்திடல் அவசியம் ப்ளீஸ் !! "ஏன்..? நான் தான் 6 மாசத்துக்கு பணம் கட்டியிருக்கேன்லே...ஜூன் வரைக்கும் புக் அனுப்பாம - ஏன் ஏப்ரலிலேயே நிறுத்திடறீங்க ?" என்று நம்மவர்களிடம் ஏப்ரல் மல்லுக்கட்டுக்கள் வேண்டாமே - ப்ளீஸ் ? கூரியர் கட்டண சலுகைகளை முழு ஆண்டுச் சந்தாக்களில் மட்டுமே அனுபவித்திடலாம் எனும் போது - 2 தவணைகளிலான சந்தாக்கள் புதுப்பிக்கப்படுமென்ற உத்திரவாதம் நமக்கு அவசியமாகிடுகிறது ! நிறையவே இதன் பொருட்டு சங்கடங்களை சந்தித்து விட்டோம் என்பதால் - இந்த சற்றே கறார் பாலிசிக்கு உங்கள் புரிதலைக் கோருகிறோம் ! 

* போன வருட இறுதியிலேயே சந்தாதாரர்களுக்கான லாயல்டி பாஸ்போர்ட் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அவை தற்போது தயாராகி வருகின்றன – உங்களது நடப்பு பாய்ண்ட்கள் சகிதம் ! நவம்பர் பிரதிகளோடு அவை அனுப்பிடப்படும் ! And உங்களது புள்ளிகளுக்கு ஈடாக நீங்கள் விலைகளின்றிப் பெற்றுக் கொள்ளக் கூடிய சமாச்சாரங்களின் விபரங்களும் அடுத்த வாரப் பதிவினில் !

*   அப்புறம் இன்னொரு சேதியும் guys : நமது முதல் வாசகரான (சிவகாசி) டாக்டர் திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர் பிரசன்னாவுமே  நமது தீவிர வாசகர் ! கம்பியூட்டர் துறையில் சாதித்து வரும் இவர் நமக்கென ஒரு அழகான website-ஐ உருவாக்கித் தந்துள்ளார் - ஒற்றை ரூபாய் கூட இதற்கென கட்டணமாய் வாங்கிடாது !! அவருக்கு ஒரு மில்லியன் நன்றிகளையே நமது சன்மானமாய் வழங்கிட நினைக்கிறேன் !! Thank you ever so much பிரசன்னா !! பாருங்களேன் : www.lion-muthucomics.com இங்கேயே இனி ஆன்லைன் கொள்முதல்களும் செய்திடலாம் ! And of course - ஏற்கனவே உள்ள www.lioncomics.in ஆன்லைன் தளமும் செயல்படும் தான் ! புத்தாண்டின் சந்தா லிங்குகளை இரு தளங்களிலும் கொடுத்துள்ளோம் !




*  இன்னமும் ஒரு tech சேதியும்  ! ரொம்ப காலம் முன்பாகவே நமக்கென ஒரு YouTube சேனலைப் பதிவு செய்திருந்தார் நம் ஜூனியர் எடிட்டர் ! But அதனை அதற்குப் பின்பாய் இயக்கிட எனக்குத் தோன்றியிருக்கவில்லை ! சமீபமாய் அதற்கென ஒரு பகுதி-நேரத்து பணிப்பெண்ணை அமர்த்தி கொஞ்சம் வெள்ளோட்டங்களை சத்தமின்றி செய்து வந்தோம் ! And so நமது சந்தா கேட்லாக்கை  அங்கேயும் அரங்கேற்றியுள்ளோம் !! பாருங்களேன் : https://youtu.be/LZIsVjPKiko ! Of course - early days for us....சிறுகச் சிறுக இந்த முயற்சிகளை ரம்யமாக்கிட முயற்சிப்போம் ! And வாசகர்கள் நமது இதழ்களை பற்றி ஏதேனும் அலசல்களைச் செய்து video files-களாய் அனுப்பினால், அவற்றையும் நமது சேனலில் பயன்படுத்திட முயற்சிப்போம் folks !!  Wish us luck on this please !!

* அப்புறம் அந்த ALL-IN சந்தா நண்பர்களுக்கு 32 பக்க Color டெக்ஸ் சிறுகதைகள் விலையின்றி வழங்கிடுவது இம்முறையும் தொடர்ந்திடும் - 4 இதழ்களோடு !  
* அப்புறம் சந்தாக்களை 'ஏக் தம்மில்' செய்திடல் தேவலாமென்று எண்ணும் நண்பர்களின் வசதிக்கேற்ப - இதோ ஜம்போ காமிக்சின் சீசன் 2-ன் சந்தா அறிவிப்புமே !! இதற்கான கதைகளின் அறிவிப்பு மார்ச் 2019 -ல் !! "மாப்ளே ....ஒரே போடா போட்டு வசூல் பண்ண நினைச்சுட்டான்டா ஆந்தைக்கண்ணன் !" என்று விழிவிரிக்கக் கூடிய நண்பர்களின் கவனத்துக்கு : இது உங்கள் வசதிகளுக்கானதொரு ஏற்பாடு மாத்திரமே தவிர - we are in no hurry now for ஜம்போ சந்தா !
இதற்கு மேலும் எழுதினால் – இதை டைப்செட் செய்து தரும் நண்பர் குருமூர்த்தி ஜார்கண்ட் பக்கமாய் நடையைக் கட்டி விடுவாரென்பதால் – சுபம் போட்டு விட்டுக் கிளம்புகிறேன் folks - எப்போதும் போல ஆண்டவனின் அருளும், உங்களது அன்பும் வேண்டுமென்ற கரம்கூப்பலுடன் !! Bye all ! See you around ! Let's start the Music !!

And lest I forget....
ஒவ்வொரு ஆண்டும் ஏகமாய் சந்தித்து, ஏதேதோ கணக்கிட்டு அட்டவணைகளை உருவாக்கி முடிக்கும் போது - "ஹா ...பின்னிட்டே அப்பு !" என்று உள்ளுக்குள்ளேயே சிலாகித்து எனக்கு நானே ஒரு சிலை வைத்துக் கொள்ளத் தோன்றிடுவது வாடிக்கை தான் ! ஆனால் ஆண்டின் ஓட்டத்தின் போது தான் நான் விட்டுள்ள ஓட்டைகள் மெது மெதுவாய் கண்ணுக்குத் தென்பட துவங்கிடும் ! அந்த அனுபவப் பாடங்களை மறு ஆண்டுக்கு முன்னெடுத்துச் சென்று, அதே தவறுகள் திரும்பவும் தலைகாட்ட அனுமதிக்கலாகாது என்று முயற்சிப்பதுண்டு ! அதே பாணியில் இம்முறையும் இயன்றமட்டிலும் உழைத்துள்ளோம் folks - இந்த அட்டவணையினையும், அதனைத் தொடரவிருக்கும் இதழ்களையும் கொண்டு, உங்கள் முகங்களில் புன்னகைகளை மலரச் செய்திட !! அதனில் சிறிதேனும் வெற்றி கண்டிருப்போமெனின் - ஆண்டவன் எங்கள் மீது கருணையோடு இருந்திருக்கிறார் என்று யூகித்துக் கொள்வோம் !! சரியோ - தப்போ ; என் ஆற்றலுக்குட்பட்டதைச் செய்து விட்டேனென்ற சன்னமான சந்தோஷத்தோடு புறப்படுகிறேன் guys ! இனி தீர்ப்புகள் நிரந்தர ஜூரிகளான உங்கள் வசம் !  Adieu for now !! God be with us all !!