Saturday, April 28, 2018

ஒரு அமெரிக்க முக்கோணம் !

நண்பர்களே,

வணக்கம். டிக்கெட் எடுக்கத் தேவை இருப்பதில்லை ; விசாவும் வேண்டியதில்லை....அட..மூட்டை, முடிச்சுகளைக் கட்டக் கூட வேணாம் - ஆனால் கண்டம் விட்டு கண்டம் பயணிக்க முடிகிறது - படு சுலபமாய் !! ஜலதோஷத்துக்காக டாக்டர் தந்த மாத்திரைகளின் புண்ணியத்தில் ஒரு அசுர தூக்கம் வருது பாருங்களேன் - சும்மா  பாயிண்ட் to பாயிண்ட் பஸ் போல தேசம் விட்டு தேசம் ; பிரபஞ்சம் to பிரபஞ்சம் கூடப் பறக்க சாத்தியமாகிறது ! அவ்வப்போது அடிக்கும் செல்போன் மணிச்சத்தம் மட்டும் கேட்கவில்லையெனில் ஒரு வாரமாச்சும் தூங்கலாம் போலும் !! But தலைக்குள்ளிருக்கும் அந்த "சனிக்கிழமை இரவுப் பதிவு" அலாரம் எப்போதும் ஓயாது என்பதால் - இதோ ஆஜர் !! 

மே பிறக்க இன்னமும் சில நாட்கள் இருக்கும் போதே இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது -  தொடரும் நாட்களை சுவாரஸ்யமாக்கிடும் பொறுப்பு உங்கள் விமர்சனங்கள் + அலசல்களுக்குத்  தான் என்பேன் ! So மெக்சிகோவில் ட்யுராங்கோவோடு பயணமோ ; சிகாகோவில் மேக் & ஜாக் உடன் லூட்டியோ  ; அல்லது அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயரில் மார்டினோடு யாத்திரையோ - ஏதோவொன்றை மேற்கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்களேன் guys ! 

பெர்சனலாய் எனக்கு சிகாகோ தான் # 1 - simply becos ஒரு கார்ட்டூன் தொடருக்கு (நம்மளவிலாவது) இந்தக் களம் ரொம்பவே புதுசு ! பொதுவாய் ஜில்லார் போல  ; க்ளிப்டன் போல ஒரு சிரிப்புப் போலீஸ் பாத்திரத்தைப் பார்த்திருப்போம் ; ஆனால் இந்த மேக் & ஜாக் ஜோடியைப் போலவொரு பாடிகார்ட் கூட்டணியை நாம் பார்த்ததில்லை தானே ?! ஊரே பார்த்து மிரளும் ஒரு தாதாவுக்கும் கூட பாடிகார்டாகச் சம்மதிக்கும் போதே இந்த கொரில்லாக்கள்  - "நீதிடா.. நேர்மைடா... நாயம்டா..." என்ற நாட்டாமை டயலாக்கை விடப் போவதில்லை என்பதுமே அப்பட்டமாகிறது ! நிறைய விதங்களில் இந்த நெட்டை + குட்டை நாயகர்கள் என்ற template ப்ளூகோட் பட்டாள  ஸ்கூபி + ரூபி யோடு ஒத்துச் செல்வதைக் கவனிக்க முடியும் ! பேனா பிடித்த கை ஒன்றே (Raol Cauvin) எனும் போது அந்த ஒற்றுமையைப் புரிந்து கொள்வதில் சிரமமிராது தான் ! அப்புறம் சமீபமாய் ஒரு கார்ட்டூன் கதையைப் படித்துவிட்டு நான் விழுந்து, புரண்டு சிரிச்சதாய்ப் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் - அது இந்த மேக் & ஜாக் தொடரின் இன்னொரு ஆல்பமே என்பது கொசுறுச் சேதி ! 2019-க்கு இந்தப் புதியவர்கள் வேண்டுமென்று நீங்கள் தீர்மானிக்கும் பட்சம் அந்த ஆல்பத்தை அடுத்தாண்டில் நிச்சயம் களமிறக்கலாம் ! தற்சமயம் நமது கார்ட்டூன் அணிவகுப்பானது மும்பை இந்தியன்ஸ் போல தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் - இவர்கள் கொஞ்சம் கை கொடுப்பார்களெனில் - கார்ட்டூன் டீம் நிச்சயம்  நிம்மதிப் பெருமூச்சு விடும் ! ஏதோ பார்த்து செய்யுங்களேன் guys !! 
சிகாகோவிலிருந்து சோத்தாங்கை பக்கமாய் பயணித்தால் இம்மாத மார்ட்டின் வலம் வரும் நியூ இங்கிலாந்துப் பிராந்தியங்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கும் ! இந்த ஆல்பம் முழுக்கவே இருண்டதொரு களமே என்பதாலோ என்னவோ - ஏகமாய் grey areas இங்குமங்கும் !  கதாசிரியரைத் தவிர்த்து - இந்தக் கதை சார்ந்த அலசல்களை  யாருமே முழுமையாக்கிட இயலாதென்பது எனது அபிப்பிராயம் ! Simply becos - கதையின் போக்கில் நிறைய சமாச்சாரங்களை "இப்படியும் எடுத்துக்கலாம் ; அப்படியும் எடுத்துக்கலாம்" என்று முடிச்சுப் போடாது திறந்தே விட்டுள்ளார் ! So படைத்தவர் மனதில் நின்றிருந்தது என்னவென்பதை அவர் வாயால் கேட்டறிய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்று நமக்குத் தெரிந்த கூகுள் translator-ல் ஒரு இத்தாலியக் கடிதத்தை டைப் செய்து கதாசிரியருக்கே அனுப்பியிருந்தேன். ஆனால் அவர்களது செம பிசி அட்டவணைகளின் மத்தியில் பதில் சொல்ல நிச்சயம் அவகாசங்களிராது என்பதும் புரிந்தது ! So "மெல்லத் திறந்த கதவு" இட்டுச் செல்லக்கூடிய பாதைகள் ஏராளமாய் இருக்கக்கூடும் எனும் போது - நாம் infer செய்திடும் பாதை எதுவென்று பார்த்திட செம ஆவலாய் காத்திருப்பேன் ! வரும் நாட்களில், இந்தக் கதையில் மௌன வரைவுகளாய்த் தொடர்ந்திடும் சித்திரங்கள் சொல்லும் செய்திகள் பற்றியொரு அலசலும்  நம்மிடையே நடந்திட்டால் இந்த ஆக்கத்தின் முழுப் பரிமாணமும் வெளிப்படுமென்பேன் ! Are you ready folks ?

மார்டினுக்கு விடை கொடுத்துவிட்டு அப்டியே வண்டியைக் கீழே விட்டால் அமெரிக்காவின் எல்லையோடு உரசியோடும் மெக்சிகோவின் தகிக்கும் மண்ணுக்கு ஹலோ சொல்லிடலாம் - ட்யுராங்கோ துணை நிற்க ! அதிலும் அந்தக் கதை # 3 எனக்கு ரொம்பவே பிரமாதமாய்ப்பட்டது - 2 காரணங்களுக்காக !! ஒரு தக்கனூண்டு கருவைக் கொண்டுமே தூள் கிளப்ப முடியுமென்பதைக் காட்டியது ஒருபக்கமெனில் ; பழி வாங்கிட ரொம்பவே மாறுபட்டதொரு  காரணத்தை வில்லன் கும்பலின் முகமூடித் தலைவனுக்குத் தந்தது காரணம் # 2  என்பேன் ! தொடரும் பாகங்களில் ஆர்ட்ஒர்க் & கலரிங் தரம் இன்னமும் ஒருபடி மேலே போய் விடுவதைப் பார்க்க முடிகிறது ! So ஆர்ப்பாட்டங்களின்றிப் பயணிக்கும்  இந்த மனுஷனை இன்னும் அழகாய் ரசிக்க வாய்ப்புள்ளதென்பேன் !  

So இந்த அமெரிக்க முக்கோணத்தினுள் எந்தப் புள்ளியில் நீங்கள் பயணத்தைத் துவக்கினாலும், அது பற்றிய பயணக் கட்டுரையினை இங்கே பதிவிட மறவாதீர்கள் - ப்ளீஸ் ! 

Moving on, ஜம்போ காமிக்ஸ் பணிகளின் ஓட்டம்  பற்றி ! (இளம்) டெக்ஸ் அதிரடியாய் பயணம் செய்யத் தயாராகி வருகிறார் - அதன் முதல் இதழில்  ! முதல் சுற்றில் "காற்றுக்கென்ன வேலி ?"இடம்பிடிக்கிறதெனில், தொடரக்கூடிய காலங்களில் இளம் டெக்ஸ் வில்லர் மட்டுமன்றி, அவரது அண்ணாவான ஸாம் வில்லரையும் இந்த வரிசையில் பார்த்திட வாய்ப்புள்ளது ! டெக்சின் புதுக் கதைகளின் பயணம் ஒருபக்கம் எப்போதும் போல நடந்திட - இளம் டெக்ஸை ஒரு அட்டகாசப் பரிமாணத்தில் காட்டவும் போனெல்லி மெனக்கெட்டு வருவது புரிகிறது ! சமீபமாய் வெளியாகியுள்ள இந்த வண்ண இரு பாக சாகஸத்தைப் பாருங்களேன் : 

அப்பா கென் வில்லரை தீர்த்துக் கட்டிய கும்பலை நிர்மூலமாக்க வில்லர் சகோதரர்கள் ஒன்றிணைவது மட்டுமன்றி - இன்னமும் அதிரடியாய் ஏதேதோ ஆச்சர்யங்களை போனெல்லி கைவசம் வைத்துள்ளனராம் ; அது மாத்திரமின்றி, Tex-ன் துணைவி லிலித் சார்ந்த flashback ஒன்றுமே திட்டமிடலில் உள்ளதாம் !! செப்டெம்பரில் டெக்சின் 70-வது பிறந்தநாள் கேக் வெட்டும் சமயம் தான் சகலத்தையும் வெளிப்படுத்தவிருக்கிறார்கள் !  ஆக நமது ஆதர்ஷ ரேஞ்சரின் உலகமறியா பக்கத்தினை சீக்கிரமே பார்க்கவுள்ளோம் நாம் !  எது எப்படியோ - இந்த "கௌபாய் சிங்கத்தின் சிறு வயதில்" ஜம்போவில் தொடர்ந்திடும் ! 

அது சரி....சின்ன சிங்கத்துக்கு இடமிருக்கும் போது - சின்ன புலிக்கு இடம் நஹியா ? என்று சில கண்கள் சிவக்கும் முன்பே இன்னமும் ஒரு இளம் புயலுமே ஜம்போவில் தலைகாட்ட வாய்ப்புகள் உள்ளதென்பதைச் சொல்ல நினைக்கிறேன்  ! அது நமது "இளம் தோர்கல்" தான் ! 2011-ல் துவங்கி, ஆண்டுக்கொரு ஆல்பமென வெளியாகி இதுவரை 7 ஆல்பங்கள்  உண்டு இத்தொடரில் ! Maybe பெரிய தோர்கலுக்கு இணையாய் இவரையும் ஓடவிட்டுப் பார்க்கலாமா ? அல்லது பெரியவர் சாதிக்கட்டுமென அவகாசம் தந்து விட்டு நிற்கலாமா ? 
அப்புறம் ரொம்ப காலம் கழித்து ஒரு அட்டைப்பட டிசைனிங் போட்டியுமே ! காத்திருக்கும் புது நாயகர் TRENT-ன் துவக்க ஆல்பத்துக்கு முன்னட்டை அமைக்க ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! Please note guys : ஆர்வமென்பதை விடவும், டிசைனிங்கில் அனுபவமும், ஞானமும் இந்தப் பணிக்கு முக்கிய தேவைகள் என்பது நினைவிலிருக்கட்டுமே ப்ளீஸ் ? So விண்ணப்பிக்க விரும்பும் நண்பர்கள் இங்கே கை தூக்கிய கையோடு நமக்கொரு மின்னஞ்சல் அனுப்பிட வேண்டியதும்  அவசியம் ! 

ஜம்போ லோகோ தயாரிப்புக்கென நண்பர்களில் சிலர் அனுப்பியிருந்த ஆக்கங்கள் தொடர்கின்றன : 
Mahesh Tiruppur





Jagatkumar, Salem



Karthik Somalinga, Bangalore

Sridharan, Kumbakonam
Podiyan, Colombo
இன்னமும் ஒன்றிரண்டு லோகோக்களை  கடந்த பதிவில் நண்பர்கள் லிங்க்கில் அனுப்பியிருந்ததும் நினைவுள்ளது ! அவற்றையும் ஒப்பிட்டு ஒரு தேர்வுக்கு வருவோமா guys ?

விடாது உசிரை வாங்கி வரும் வறட்டு இருமலைச் சமாளிக்கவும், சில நாட்களாய் தொங்கலில் விட்டு விட்ட பணிகளைக் கவனிக்கவும் கிளம்புகிறேன் !! மே விமர்சனங்கள் மென்மேலும் வரட்டுமே ? Bye now ...Happy weekend !!

பி.கு.

1 .மே இதழ்கள் ஆன்லைன் லிஸ்டிங் செய்து விட்டோம் ! லிங்க் இதோ : http://lioncomics.in/latest-releases/501-vidhi-eludhiya-thiraikadhai.html

2. ஜம்போ காமிக்ஸுக்கு இன்னமும் சந்தா செலுத்தியிராதிருப்பின் - இதோ அதற்குமான லிங்க் : http://lioncomics.in/advance-booking/498-pre-booking-for-jumbo-comics-within-tamil-nadu.html

Thursday, April 26, 2018

ரெண்டு smurfs - டாக்டர் & உம்மணாம்மூஞ்சி !!

நண்பர்களே,

வணக்கம். ஞாயிறு பகலில் மார்டினோடும், இங்கே பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களோடும் செலவிட்ட போதே தொண்டையில் லேசான கிச் கிச் தென்பட- அன்றைக்கு மாலை முதலே ஜல்ப்பு ஜலதரங்கம் செய்யத் துவங்கிவிட்டது  ! "ச்சை....எனக்கு சளி பிடித்தாலே புடிக்காது " என்று புலம்பாத குறையாக கைக்குச் சிக்கிய மாத்திரைகளை விழுங்கியபடிக்கே  ஆபீஸுக்கும் போய்க் கொண்டுதானிருந்தேன் ! ஆனால் பருப்பு வேகக்காணோம் என்பதால் இன்றைக்கு ஒழுங்காய், மரியாதையாய் டாக்டர் smurf க்கொரு விசிட் அடித்து விட்டு, அக்கடாவென வீட்டில் கட்டையை நீட்டி விட்டேன் ! சுடு தண்ணீர் ; ரசச் சாதம் ; கஷாயம் என்று குடிக்க வேண்டிய வேளையில் தான் ஊரிலுள்ள தர்பூசணிகள் முழுசும் ஜில்லென்று கண்முன்னே ஒரு குத்தாட்டம் போட்டு விலகுகின்றன !! வேறு நேரம் காலமே இல்லாது, இப்போது தான் குல்பி ஐஸ்வண்டியின் மணியோசை தேவகானமாய்க் கேட்கிறது ! ச்சை !!!  ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகுமென்ற ஆராய்ச்சியை யாராச்சும் செய்யுங்களேன் விஞ்ஞானீஸ் ! உம்மணாம்மூஞ்சி smurf இப்போதெல்லாம் என் ஆதர்ஷ நாயகனாகிவிட்டான் என்றால் பாருங்களேன் !  !!

ஆனால் நான் இருந்தாலும் சரி, கிட் ஆர்டினைப் போல பண்ணையார் ஆகிடும் பொருட்டு எங்கேனும் மாடு மேய்க்கக்  கிளம்பியிருந்தாலும் சரி,  பணிச்சக்கரங்கள்  ரிமோட்டில் இயங்கிடக் கற்றுக் கொண்டுவிட்டனவே - நம் டீமின் கைவண்ணத்தில் !! So மே மாதத்து 3 இதழ்களும் இன்றே கூரியரில் கிளம்பி விட்டன !

நாளைக்கு (வெள்ளி) அனுப்பிடும் பட்சத்தில் பாதிப் பேருக்குக் கிடைத்து, மீதிப் பேருக்கு திங்கள் வரைக்கும் கடுப்பை மட்டுமே வழங்கிடும் நோவு உள்ளதால் - இன்றைக்கே அடித்துப், பிடித்து கூரியர்களை அனுப்பி விட்டோம் ! So இந்த ஞாயிறுக்கும் சரி, காத்திருக்கும் மே தின விடுமுறைக்கும் சரி, நமது மூவர் கூட்டணி உங்களுக்குத் துணையிருக்கும் !! Happy reading all & குட் லக் with மார்ட்டின் !! Bye for now !
Bye for now !!

பி.கு. கொஞ்சம் உடம்புக்குத் தேவலாமென்ற உடனேயே கடந்த பதிவில் பதில் தர வேண்டிய கேள்விகளையெல்லாம் புதியதொரு பதிவுக்கு carry forward செய்து பதிலும் அளித்திடுவேன்! 

Saturday, April 21, 2018

ஊம்...? ஊஹும்...?

நண்பர்களே,

வணக்கம். மர்ம நாயகன் மார்ட்டின் & பென்சில் இடை ஜுலியாவின் புண்ணியத்தில் கடந்த வாரம் ஒரு சுவாரஸ்யமான உள்ளே-வெளியே மங்காத்தா அரங்கேறியதைப் பார்த்தோம் ! ஒவ்வொரு நாயகரும், நாயகியரும் நம்மில் ஏற்படுத்தும் தாக்கங்களை அவரவரது பாணிகளில் வெளிப்படுத்திய விதங்கள் செம ! இந்த ஓட்டெடுப்புகளை பழையபடிக்கு ஒவ்வொரு விளிம்புநிலை ஹீரோக்களுக்கும் நல்குவதாயின் – சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் விதவிதமான பலன்கள் கிட்டக்கூடுமென்றும் தோன்றுகிறது ! நண்பர்களில் சிலர் “அட… இந்த அக்கப்போரெல்லாம் வேணும் தானா ? விற்பனையில் ஓ.கே. ரகங்களை உள்ளேயும் ; not ஓ.கே. ரகங்களைக் கடாசவும் செய்யலாமே ?” என்று அபிப்பிராயப்பட்டிருக்கவும் செய்தனர். இது நிச்சயம் லாஜிக் நிறைந்ததொரு சிந்தையே ! ஆனால் நாம் தான் மரத்தில் ஈரலைக் கழற்றி வைத்து விடும் குரங்கைப் போல 'லாஜிக்' எனும் சமாச்சாரத்தை உச்சாணிக் கிளையில் பத்திரமாக போட்டு மூடி விட்டு கீழே இறங்கி வரும் மந்திகளாச்சே?

பொதுவாக ஒரு கல்தா அவசியமாகிடும் போது ரொம்பவே சங்கடப்படுவது எங்கள் தரப்பே guys ! புதிதாய் ஒரு நாயகரையோ, நாயகியையோ அறிமுகம் செய்வதாயின் – அவரைப் பற்றி background data சேகரிப்பது ; படைப்பாளிகளின் வாயைக் கிண்டவது ; அந்தத் தொடரின் ஆல்பங்களை பரிசீலிக்க (அதாவது படம் பார்க்க!!) முயற்சிப்பதென்று நிறைய behind the scenes வேலைகள் அரங்கேறிடும் ! Cinebook or இன்னபிற ஆங்கிலப் பதிப்பகங்களின் புண்ணியத்தில் அந்தத் தொடரானது இங்கிலீஷில் சிக்கிடும் பட்சத்தில் – பரிசீலனையைப் படம் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாது – முழுசுமாய்ப் படித்து அனுமானிக்கவும் சாத்தியப்படும். And இந்தச் சடங்குகளெல்லாம் ஓ.கே.வாகிய பிற்பாடு “உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்ற பில்டப் படலம் துவங்கிடும். ”புதுசு” என்றவுடனேயே நமக்குள் ஒரு சன்ன ஆர்வக் கேள்விக்குறி துளிர்விடுவது ஜகஜம் தானே ? So காத்திருக்கும் புது வரவுகள் காட்டப் போகும் கம்பு சுற்றும் வித்தைகள் எவ்விதமிருக்குமோ ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பீர்கள் ! எடுத்த எடுப்பிலேயே உங்களை ‘wow’ சொல்ல வைத்து விட்டார்களெனில் – அந்த நாயகர்கள் உங்களது செல்லப்பிள்ளைகளாகும் சாத்தியங்கள் வெகு பிரகாசம் ! லார்கோவின் முதல் ஆல்பமே நம்மைச் சாய்த்தது ; ஷெல்டனின் முதல் ஆக்ஷன் சூறாவளியே நம்மை மிரளச் செய்தவையெல்லாம் இங்கே மனதில் நிழலாடுகின்றன ! அதே சமயம் – “சரி… சரி… புள்ளை மோசமில்லை… போகப் போக பார்க்கலாம்!” என்று தீர்ப்பெழுதுகிறீர்களெனும் பட்சத்தில் அடுத்தடுத்து வரக்கூடிய சாகஸங்கள் extra வீரியத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகிடும் ! அவையுமே சராசரியாக இருப்பின் – ரொம்பச் சீக்கிரமே “வாசல் கதவு அப்டிக்கா இருக்குதுடா தம்பி!” என்று சுட்டிக்காட்டத் தயாராகி விடுவீர்கள் – மேஜிக் விண்டின் விஷயத்தில் நடந்ததைப் போல ! வெகு சிலருக்கே ஒரு extended run கிடைப்பதுண்டு – ‘கமான்சே‘வைப் போல ! ஹெர்மனின் ஆற்றல்களுக்கும், அவரது வன்மேற்கின் யதார்த்த சித்தரிப்புகளுக்கும் சிறுகச் சிறுகவேணும் ஆதரவு கூடிடக் கூடுமென்ற எதிர்பார்ப்பில் தான் ஒன்பது ஆல்பங்கள் வெளியாகின ! ஆனால் அந்தத் தொடர் உங்கள் மத்தியிலும் பெரியதாய்ப் பேசப்படவில்லை ; விற்பனையிலும் மந்தமுகமே காட்டி வந்தது புலனான பிற்பாடே கல்தா நடைமுறை கண்டது ! So விற்பனை அளவுகோல்களைக் கொண்டு ஒரு தொடரின் ஆயுளை நிர்ணயிக்க முனைவதெல்லாமே கடைசிப் பட்சங்களில் தான் ! தேயிலையைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளிலும் சரி, ‘ஸ்காட்ச்‘ சரக்குத் தயாரிக்கும் brewery களிலும் சரி – செம ரசனையான ஆட்களை ‘டேஸ்ட்‘ பார்ப்பதற்கெனவே நியமித்திருப்பார்களாம் ! அந்தந்த batch தயாரிப்புகளை அவர்கள் ருசி பார்த்து – "ஊம்… ஊஹும்…" என்று சொன்ன பிறகே தரம் பிரிக்கப்படுமாம் ! பல விதங்களிலும் நம் கதையும் அதுவே ! உங்களது முதற்கட்ட “ஊம்… ஊஹும்"களே நாயகர்களின் சாஸ்வதங்களை நம் மத்தியில் நிர்ணயிக்கின்றன ! So உங்களது அபிப்பிராயங்கள் எத்தனை முக்கியமென்பதையும், திரும்பத் திரும்ப உங்களை வாய் திறக்கச் செய்ய நான் மெனக்கெடுவதன் பின்னணியும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன் !

ஆனால் சில தருணங்களில் சரக்கைக் காய்ச்சும் போதே – “இது தூக்கியடிக்கும்டோய்!!” என்று உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்லிடும் தான் ! நிச்சயமாய் இதனை ரசிக்க இயலும் என்ற திட நம்பிக்கை பேனா பிடிக்கும் போதே தோன்றிடும் ! இதோ – மே மாதம் வரவிருக்கும் மேக் & ஜாக் அறிமுக ஆல்பமான “வாடகைக்கு கொரில்லாக்கள்” அத்தகையதொரு நம்பிக்கையை எனக்குள் விதைத்துள்ளதையே உதாரணமாய் சொல்லிடுவேன் ! Of course – கார்ட்டூன் என்றாலே ‘ஙே‘ எனும் நண்பர்களுக்கு இந்த ஜோடியைப் பிடிக்கும் வாய்ப்புகள் பற்றிச் சொல்லத் தெரியவில்லை எனக்கு ; ஆனால் – கார்ட்டூன் பிரியர்களுக்கு இந்தப் புதுவரவு நிச்சயம் செமையாக ரசிக்குமென்பதில் எனக்குச் சந்தேகங்கள் கிடையாது !
1920-களில் அமெரிக்கா ஒரு பெரும் மாற்றத்தைக் கண்டு வந்த தருணம். மாஃபியா கும்பல்களும் முன்னெப்போதையும் விட வீரியமாய் கோலோச்சி வந்த நாட்களும் அவை! குறிப்பாக சிகாகோ நகரை பிரபல டான் அல் கபோன் ஆட்சி செய்யாத குறை தான் ! இதோ – அந்தக் காலகட்டத்தைப் பற்றியதொரு மினி அறிமுகமாய் “வாடகைக்கு கொரில்லாக்கள்” ஆல்பத்தின் முதல் பக்கமாய் வரவுள்ள குறிப்புகள் ! இது தான் மேக் & ஜாக் கதைகளின் பின்னணி ! 
ஊரே பதட்டப்பட்டுக் கிடக்கும் வேளையில் – இந்த ஜோடி எந்தவொரு பாதுகாப்புப் பணிக்கும் தங்கள் சேவைகளை நல்கத் தயாராகயிருக்கும் பாடிகார்டுகள் ! அந்நாட்களில் அடியாட்கள்; பௌன்சர்ஸ் போன்ற ஆசாமிகளுக்கு “கொரில்லாக்கள்” என்று பட்டப் பெயருண்டு ! So நம்மாட்களும் “வாடகைக்கு கொரில்லாக்கள்” சும்மா slapstick ரகக் காமெடியாக அல்லாது, கதையின் ஓட்டத்தையே நகைச்சுவையாக அமைத்துள்ளார் ராவுல் கௌவின்! இவர் நமக்கு ரொம்பவே பரிச்சயமான படைப்பாளி தானே - ப்ளூ கோட் பட்டாளத்தின் சிருஷ்டிகர்த்தாவென்ற  விதத்தில் !
துவக்க 30 ஆல்பங்கள் வரைக்கும் கதை + ஓவியங்கள் என இரட்டைப் பொறுப்புகளையுமே தன் வசம் வைத்திருந்தார். 1970-ல் துவங்கிய இந்தத் தொடரானது 2009 வரை ஓடி – தனது 40-வது ஆல்பத்தோடு மங்களம் பாடியுள்ளது ! So கணிசமானதொரு கதைக்களஞ்சியம் இத்தொடரில் உள்ளதால் – மேக் & ஜாக் ‘க்ளிக்‘ ஆகிடும் பட்சத்தில் ஒரு நெடும் ஓட்டம் சாத்தியமே!

அட்டைப்படத்தைப் பொறுத்தவரையிலும் as in recent times – ஒரிஜினல் டிசைனே; பின்னணி வர்ண மாற்றத்தோடு ! And உட்பக்க preview-ஐப் பார்க்கும் நொடியே – இதுவொரு புதுயுக வர்ணச் சேர்க்கையே என்பது புரிந்திடும் ! ஜவ்வுமிட்டாய் வர்ணங்களாக அல்லாது – சிலபல அடர் வர்ணங்களோடு கண்ணைப் பறிக்கின்றன ஒவ்வொரு பக்கங்களுமே ! 
இது மாதிரியான கதைகளில் விடிய விடிய பணியாற்றினாலும் அலுப்புத் தெரிவதில்லை எனும் போது – இதன் 44 பக்கங்களை மொழிபெயர்ப்பது நோவே தரா அனுபவமாய் இருந்தது ! நம்மவர்கள் எல்லோருக்குமே கார்ட்டூன்கள் மேல் காதல் மட்டும் கசிந்துருகி விட்டால் – அடடா… அடடடடா…. எங்கள் பணிகள் தான் எத்தனை சுலபமாகிப் போய்விடும் ! ஹ்ம்ம்ம்ம்ம்ம் !! 
Moving on, மே மாதத்து மார்ட்டினுக்கோசரம் நடந்தேறும் கூத்துக்கள் இன்னமுமே முடிந்தபாடில்லை ! கதையின் மையக்கரு ; அதன் விளைவுகள் ; கதையோட்டத்தில் இணைந்து கொள்ளும் விபரீதங்கள் என்று சகலமுமே புரிபட்டு விட்டன ! நான் அந்தர்பல்டியடித்துப் புரிந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கு சுலபமாகவே புரிந்திட வேண்டுமென்பதற்காக மொழியாக்கத்தில் மெனக்கெட முனைந்துள்ளோம் ! ஆனால் கதையில் பயணிக்கும் இன்னொரு இணைத்தடத்தின் அவசியத்தை; முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத்தான் திணறிக் கொண்டிருக்கிறேன் ! துலுக்கப்பட்டியில் துவங்கி துபாய் வரையிலும் நீண்டிடும் “இரசவாதம்” சார்ந்த கிளைகளுக்கு கதையுடனான தொடர்பைத் தெரிந்து கொள்ள சட்டையைக் கிழிக்காத குறை தான் ! இந்த ஞாயிறு – மிச்சம் மீதியுள்ள சட்டையையும்; தேவைப்பட்டால் லங்கோட்டியையும் கிழித்தாவது இந்தப் புதிருக்கான விடை காண்பதாக உள்ளேன் ! ஷப்ப்ப்பா… முடில்லே !!
இரத்தப் படலம் பற்றிய updates:

1-18 பாகங்களின் முழுமையும் டைப்செட்டிங் நிறைவுற்று – சின்னதொரு LIC கோபுரமாய் என் மேஜை மீது குவிந்து கிடக்கின்றன ! எட்டோ-ஒன்பதோ ஆண்டுகளுக்கு முன்பாய் - இதே கோபுரம், இதே போல் என் மேஜையில் குந்தியிருந்த நினைவுகள் ஸ்பஷ்டமாய் இன்னமும் நிழலாடுகின்றன என்னுள் ! அன்றைய நாட்களில் அந்தக் கோபுரத்தின் மீதான எனது பணிகளை நிறைவேற்ற சுமார் 4 மாதங்கள் எடுத்துக் கொண்டேன் என்பதுமே நினைவுள்ளது ! இம்முறையோ அத்தகைய luxuries சாத்தியமாகிடாது எனும் போது - மிஞ்சிப் போனால் நான்கே வாரங்களில் அச்சுக்குத் தயாராகிட வேண்டிவரும் !! So மார்ட்டினுடனான மல்யுத்தத்தை முடித்த கையோடு – ஜுன் & ஜுலை இதழ்களைத் தற்காலிகமாய் மறந்து விட்டு – நேராக ஆகஸ்டினுள் குதிக்க உத்தேசித்துள்ளேன் ! "6 பாகங்கள் முடிந்தால் ஒரு புக் ரெடியாகிடும் !" என்பது பெரும் ஆறுதலான விஷயமாக இப்போது தெரிகிறது ! அட்டைப்பட டிசைனிங் பணிகளுக்கு பொன்னனை நோக்கிப் படையெடுப்பது மட்டுமே இப்போதைய priority என்பதால் - அரை டஜன் இரும்புச் செருப்புகள் தயார் செய்து கொண்டுள்ளோம் !!

அப்புறம் JUMBO காமிக்ஸ் பற்றிய updates-ம் கூட…! முதல் இதழான இளம் டெக்ஸின் - ""காற்றுக்கென்ன வேலி ?" டைப்செட்டிங் பணிகள் துவங்கவுள்ளன ! வழக்கமான TEX இதழ்களிலிருந்து கொஞ்சமேனும் வித்தியாசப்பட்டு இந்த இதழ் நிற்க வேண்டுமென்ற அவாவில் ஏதேதோ திட்டமிடல்கள் தலைக்குள் கண்ணாமூச்சி ஆடி வருகின்றன! டெக்ஸ் இடம்பிடிக்கும் இதழ் எனும் போதே 'பாகுபலி பலம்' எங்கிருந்தேனும் கிட்டிவிடுமென்ற தைரியத்தில் வண்டி ஓடுகிறது ! Fingers crossed ! அப்புறம் ஜம்போவின் சந்தாத் தொகை மந்திர எண் ‘999‘ என்பதை மறந்து விடாதீர்கள் folks ! இது வரையிலும் இந்தச் சந்தா செலுத்தியிரா பட்சத்தில் – why not give it a try now please ?

Still on the topic - ஜம்போவின் லோகோ ரொம்பவே குழந்தைத்தனமாய் உள்ளதென நிறைய அபிப்பிராயங்கள் உலவுவதைக் கவனித்தேன்! அந்தக் குறையை நிவர்த்திக்க நீங்கள் ரெடியெனில் – ரூ.2000/- பரிசோடு நாங்களும் ரெடி! ஜம்போ காமிக்ஸுக்கு உங்களது திறன்களைக் களமிறக்கி ஒரு லோகோவை ‘சிக்‘கென்று உருவாக்க முயற்சியுங்கள் folks ! தேர்வாகும் best-க்கு ரூ.2000/- பரிசுண்டு ! What say?

Before I sign off – இன்னமுமொரு “மங்காத்தா கேள்வி” – இம்முறை நமது டிடெக்டிவ் ராபின் பற்றி ! காலமாய் இவர் நம்மோடு பயணித்து வருபவரே ! இதுவரையிலும் மெகா-ஹிட் என்று எதுவும் தந்திராத போதிலும் – “சித்திரம் பேசுதடி” போன்ற த்ரில்லர்களைத் தந்துள்ள திறமைசாலியே ! நமது மறுவருகையினில் ஆண்டுக்கொரு முறை இடம்பிடித்திருப்பார் தான் – ஆனால் பெரிதாய் கவனத்தை ஈர்த்த பெருமைகளில்லாமல் ! டிடெக்டிவ் ஜானரில் நம் வசமுள்ள சரக்கு ஏகக் குறைவு என்ற நிலைமையில் – ராபின் இந்த once a year ஃபார்முலா தொடரலாம் என்பீர்களா ? முதல் வோட்டை நான் போட்டு விட்டே கேள்வியை உங்களிடம் அனுப்புகிறேன் folks !  

ராபின் – ஊம்? ஊஹும் ?
அப்புறம் – அந்த ட்யுராங்கோ + டைகர் கேப்ஷன் போட்டிக்கான winner யாரென்பதை  நாளைய பகல் பொழுதுக்குள் இங்கே சொல்லி விடுகிறேன் ; அந்தப் பின்னூட்டக் குவியலுக்குள் இன்றிரவு நுழைந்திடப் போகிறேன் ! மீண்டும் சந்திப்போம் all! Have a lovely weekend ! Bye for now !!

P.S : நமது அனாமதேய அன்பர் - கீழ்க்கண்ட நண்பர்களுக்கு, ஆளுக்கொரு ஜம்போ காமிக்ஸ் சந்தாவினை தன் அன்புடன் வழங்க முன்வந்துள்ளார் : 

தாரமங்கலம் பரணிதரன், 
போஸ்டல் பீனிக்ஸ், 
கோவிந்தராஜ் பெருமாள் 
மற்றும் 
மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் 

Awesome stuff - என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்லவென்று தெரியவில்லை !!!

Tuesday, April 17, 2018

ஐப்பசி பிறந்தால் 20 !!

நண்பர்களே,

வணக்கம். மார்ட்டின் நம்மிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இன்னமுமொரு முறை அழுந்தப் பதிவிட்டமைக்கு நன்றிகள் guys ! மார்ட்டினைக் கையாளும் ஒவ்வொரு தருணத்திலுமே எங்களுக்குக் கிட்டிடுவதொரு complex அனுபவமாக இருந்தாலும், இதழாகிய பின்னே உங்களுக்குக் கிட்டுவதொரு செம அனுபவம் எனும் போது  நாங்கள் கொஞ்சம் மெனக்கெடுவதில் நிச்சயம் தவறில்லை தான் ! ஆனால் ஒன்று நிச்சயம் guys - "மெல்லத் திறந்தது கதவு" வெளியான பின்பாக இங்கொரு அலசல் அருவியை பார்க்க முடியுமென்று பட்சி சொல்கிறது ! 

On the flip side - இன்னமுமொரு படு சுவாரஸ்யமான / வெற்றிகரமான  போனெல்லி தொடரினை நாம் அயர்ச்சியோடு பார்த்திடும் காரணம் தான் புரிய மாட்டேன்கிறது ! இந்த ஐப்பசி பிறந்தால் அகவை 20-ஐத் தொடவிருக்கும் பென்சில் இடையழகி   ஜூலியவை இத்தாலியில் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ! அதற்குள் 235 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன இவரது தொடரில் !! எழுபது ஆண்டுகளாய் சாகசம் செய்துவரும் நமது இரவுக் கழுகார் கூட இந்த வேகத்தினைத் தொட்டுப் பிடித்ததில்லை எனும் போது - இந்த கிரிமினாலஜிஸ்ட் அம்மணியிடம் சரக்கு இல்லாமலா இத்தனை சிலாகிப்பு சாத்தியமாகிடும் ? 
  • ஜூலியா மீதான நமது தீர்ப்பு கொஞ்சம் அவசர கதியோ ? 
  • அல்லது மெய்யாகவே அவரது கதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தினை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமோ ? 
  • இவரொரு குற்றவியல் நிபுணரே தவிர்த்து ஆக்ஷன் அதிரடியில் இறங்கக்கூட்டிய டிடெக்டிவ் அல்ல என்பதை நாம் ஒருக்கால் மறந்து விட்டு - "இந்த அக்கா ஏன் பேசிட்டே இருக்கு ?" என்ற கேள்விகளை எழுப்பிக்கொள்கிறோமா ? 
  • நிஜ சம்பவங்களை  உந்துகோலாய் கொண்டு உருவாக்கப்படும் இவற்றில் நாம் கரம் மசாலாவை எதிர்பார்ப்பது தான் சிக்கலின் அடிப்படையோ ? 
  • ஜூலியா - இன்னொரு வாய்ப்புக்கு அருகதையானவரா ? 
  • அல்லது - சாத்திய கதவு சாத்தியதாகவே இருக்கட்டுமா ? 


உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ? 

Bye guys for now ! Back to Martin for me..!!

Saturday, April 14, 2018

ஒரு காமிக்ஸ் கடமை !

நண்பர்களே,

வணக்கம். புலர்ந்திருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நலமும், வளமும் தந்திடும் அட்சயப் பாத்திரமாய் விளங்கிடப் பிரார்த்திப்போம் ! ஆங்கில புது வருஷம் பிறந்ததே இப்போது தான் போலிருக்க அதற்குள் அடுத்த மைல்கல்லின் நிழலில் நிற்கிறோம்! ஒரு காலத்தில் இந்த ஏப்ரல் & மே மாதங்களுக்காக வருஷம் முழுவதும் தவம் கிடப்போம்! “மாமூலான 25% ஏஜெண்ட் கமிஷன் என்னுமிடத்தில் 5% கூடுதலாக – 30% கமிஷன் உண்டுங்கோ!” என்றொரு சுற்றறிக்கையை ஏஜெண்டுகளுக்கு அனுப்பினாலே போதும் – அந்த வாரத்தின் இறுதிக்குள் புஷ்டியான கவர்கள் வங்கிக் காசோலைகளுடன் தபாலில் வந்து குவியும்! பற்றாக்குறைக்கு நாம் 'சம்மர் ஸ்பெஷல்'… 'அக்னி நட்சத்திர ஸ்பெஷல்' என்று எதையாச்சும் வெளியிட்டு ரகளை பண்ண – இந்த 2 மாதங்களுமே ஆபீஸ் களைகட்டி நிற்கும் ! ஐந்து ரூபாய்களுக்கும், பத்து ரூபாய்களுக்கும் அன்றைக்கு சாத்தியமான இதழ்களைப் பார்த்து இப்போது பெருமூச்சு தான் விட முடிகிறது! Of course – சாணித் தாள் நாட்களே அவை ; ஆனால் அவற்றின் விலைகளாவது ஏதோவொரு கட்டுக்குள் கிடந்தன! இப்போதோ நிலவரமே உல்டா! உள்ளுர் ஆர்ட் பேப்பரை விட, சீன இறக்குமதிகள் விலை குறைச்சலாகக் கிடைக்கிறதுடா சாமி… என்று திடு திடு ஓட்டமாய் அந்தத் திக்கில் படையெடுத்தால் – ‘நாங்களுமே அல்வா தருவோமே!‘ என்று அவர்களும் ஒரு விலையேற்றத்தைக் கொண்டு செவியோடு சாத்துகிறார்கள் ! என்ன ஒரே ஆறுதல் – இரத்தப் படலத்துக்கு ஏற்கனவே தாள் வாங்கி இருப்பில் வைத்து விட்டோம்! So அதன் பொருட்டு அந்த நேரம் காவடி தூக்கித் திரிய வேண்டி வராது – பேப்பர் ஸ்டோர்களின் பின்னால்!

இரத்தப் படலம்” பற்றிய தலைப்பில் உள்ள போதே “புலன் விசாரணை“ பற்றிய updates தந்து விடுகிறேனே?! சொல்லி வைத்தாற் போல நேற்றைய தினம் :
  • - கூரியரில் நண்பர் குடந்தை J-வின் முழு ஸ்கிரிப்ட் !
  • - மின்னஞ்சலில் நண்பர் கார்த்திகை பாண்டியனின் முழு ஸ்கிரிப்ட் !
  • - மின்னஞ்சலில் நண்பர் கணேஷ்குமாரின் பகுதி ஸ்கிரிப்ட் !
என்று ஒட்டுமொத்தமாய் வந்திறங்கின! இங்கே ஏற்கனவே நான் மர்ம மனிதன் மார்டினின் உபயத்தில் கண்முழி பிதுங்கிப் போயிருப்பதால் மேற்படி 3 ஸ்கிரிப்ட்களுக்குள் இன்னமும் புகுந்திட முடியவில்லை! ஆனால் மேலோட்டமான பார்வையில் இந்த உழைப்புகளின் பரிமாணம் மூச்சிரைக்கச் செய்கிறது ! End of the day – இவற்றை நம்மில் எத்தனை பேர் முழுமையாக வாசிக்கப் போகிறார்களோ - தெரியவில்லை ; ஆனால் இந்த உழைப்பை கௌரவப்படுத்தவாவது எல்லோருமே நேரம் எடுத்துக் கொள்வது ஒரு “காமிக்ஸ் கடமை” என்பேன்! "ஜெனரல் பென் காரிங்டன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அத்தனையாம் ஆண்டு பிறந்தார்; அவரது தாத்தா ஆயிரத்து எண்ணூற்று இத்தனையாவது ஆண்டில் காலமானார்” என்ற ரீதியில் பத்தி பத்தியாய் கோனார் நோட்ஸ் சாயலில் ஓடும் ஸ்கிரிப்ட்களை வாசிக்கும் போதே என் மனக்கண்ணில் நிழலாடுவது மூவருமே இதற்கென எடுத்திருக்கும் அசாதாரண முயற்சிகளும், நோவுகளுமே! Phewwwwww!! And இவற்றை பரிசீலிப்பது என் பொறுப்பு என்பதை நினைத்துப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறது ! யாரது ஸ்கிரிப்ட் தேர்வானாலும் – இங்கே வெற்றி மூவரின் மனதிடத்திற்கும், விடாமுயற்சிக்கும் சமபங்கில் உரித்து என்பேன்! A round of standing applause please all ! அப்புறம் காத்திருக்கும் இவை சார்ந்த பரிசீலனைப் படலத்தின் இறுதியில் நண்பர் XIII-ஐப் போல ‘ஙே‘ முழியோடு நிற்காது – ஸ்மர்ஃபியைப் பார்த்த கவிஞர் ஸ்மர்ஃப் போல நான் நின்றிட என் சார்பில் ஒரு தபா வேண்டிக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்! More updates on பு.வி.- once I get into them soon !! 

மெல்லத் திறந்தது கதவு!“ சென்றாண்டின் இறுதியில் மார்டின் கதைவரிசையினில் ஏதேனுமொன்றைத் தேர்வு செய்ய இன்டர்நெட்டில் ஏகமாய் உருட்டிக் கொண்டிருந்த சமயம் கண்ணில் பட்ட கதையிது! படங்களைப் பரபரவென்று பார்வையிட்ட போது வழக்கமானதொரு மார்டின் த்ரில்லர் என்பது புரிந்தது. இங்கும் அங்குமாய் இது பற்றிய விமர்சனங்களைத் திரட்ட முயன்ற போது பெரிதாய் எதுவும் சிக்கவில்லை – at least எனக்காவது! So நமக்கு 2 வருடங்களாக இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து தரும் ரோம்நகரவாசியான அந்த அம்மணியிடமே கேட்டு வைத்தேன்! “A normal MM (மார்டின் மிஸ்ட்ரி) story” என்று அவரிடமிருந்து பதிலும் கிடைத்திட – டக்கென்று அடித்தேன் டிக்! அப்புறம் கதைகள் வந்து சேர்ந்திட இது பற்றி மறந்தே போய்விட்டிருந்தேன் ! அட்டவணையில் இதனை மே மாதத்துக்கென slot பண்ணிய பிற்பாடு – மார்ச் ஆரம்பத்தில் சாவகாசமாய் ஆங்கில ஸ்கிரிப்டைத் தூக்கி வைத்து ”எழுதலாமா? வேண்டாமா?” என்று யோசனையில் ஆழ்ந்தேன்! லார்கோ பாதியில் தொங்கிக் கொண்டும்; “ஹெர்லக் ஷோம்ஸ்“ & “மேக் & ஜாக்” இன்னொரு பக்கம் மேஜையை ஆக்ரமித்துக் கொண்டும் கிடக்க – மார்டினின் இஞ்சிமுட்டாய் பாணியையும் சேர்த்துக் கொள்வது சுகப்படாதென்று பட்டது! அந்த ஆங்கில ஸ்கிரிப்டின் பிரிண்ட்-அவுட்கள் 55 பக்கம் பிடித்து நின்றதும் கவனத்தைத் தப்பவில்லை! So நல்ல பிள்ளையாக இதை நமது கருணையானந்தம் அவர்களுக்குப் பார்சல் பண்ணச் சொல்லி விட்டேன்!

15 நாட்களுக்குப் பின்பாக ஒரு மாலைப் பொழுதில் ஃபோன் செய்தவர் ஜாவாவின் முதலாளி பாடாய்ப் படுத்தி எடுத்த கதையைச் சொன்ன போது “ஆஹா… மார்டின் வழக்கம் போல வேலையைக் காட்டுகிறார் போலும்!” என்று யூகித்துக் கொண்டேன்! “கதையின் நடுநடுவே சுமார் 23 பக்கங்கள் சுத்தமாய் தலையும் புரியலை; வாலும் புரியலை! அவை கதைக்கு அவசியமென்று எனக்குத் தெரியலை… அதை எழுதாமல் அப்படியே விட்டிருக்கிறேன்! நீ பார்த்துக்கோ!“ என்றார்! என் மண்டை பரபரவென்று பின்நோக்கி ஓடியது!  வேற்று கிரகவாசிகள் ஆஸ்திரேலியாவில் வந்திறங்கி ஒரு வகை தாது மணல்துகள்களைத் தேடும் கதையில் இரண்டோ, மூன்றோ ஆண்டுகளுக்கு முன்பாய் சட்டையைக் கிழித்த நாட்கள் முதலாவதாக நினைவில் நிழலாடியது ! அப்புறமாய் அந்த எலிகள்; தேனீக்கள் என்று கும்பல் கும்பலாய், நியூயார்க்கை அதகளம் செய்த “இனியெல்லாம் மரணமே” நினைவுக்கு வந்தது! இந்த 2 கதைகளிலும் பணி செய்த ராத்திரிகளை சாமான்யத்துக்குள் மறக்க இயலாது! நாலு பக்கத்திற்கொரு தபா கூகுளில் தகவல் தேடுவது; அவற்றைக் கதையோடு படைப்பாளிகள் பொருத்தியிருக்கும் லாவகத்துக்கு நியாயம் செய்ய முயற்சிப்பதென்று சொல்லி மாளா மணிநேரங்கள் செலவாயின! So அந்த ஞாபகங்களெல்லாம் சேர்ந்து கொண்டு ‘ஜிங்கு ஜிங்கென்று‘ ஆட – அப்போதைக்கு ஃபோனில் ”நான் பார்த்துக் கொள்கிறேன் அங்கிள்!” என்று சொல்லி வைத்தேன்! அதன் பின்னர் நம்மவர்கள் டைப்செட்டிங் செய்து முடித்து என்னிடம் ஒப்படைக்க, ”ஆங்... பார்த்துக்கலாம்! பார்த்துக்கலாம்!” என்று நாட்களை நகர்த்தினேன்! டியுராங்கோவுமே முன்கதைச் சுருக்கம் ; intense ஆன கதைக்களமென்று நாட்களை விழுங்கி வைக்க – அதனை நிறைவு செய்த கையோடு 3 நாட்களுக்கு முன்பாக “மெல்லத் திறந்தது கதவு” பக்கமாய் லேசாக கவனத்தைத் திருப்பினேன்! அப்போது சுற்ற ஆரம்பித்த தலையானது – ஒரு டஜன் அவாமின் மாத்திரைகளையோ; அரை லிட்டர் இஞ்சிக் கஷாயத்தையோ குடித்தும் தீர்ந்தபாடில்லை! 

ஸ்கிஸோஃப்ரெனியா” எனும் மனச்சிதைவு நோய் தான் இந்தக் கதையின் மையம்! அதனை அசாத்திய ஆழத்தில் ஆராய முற்படுவதோடு – கதையோடு பின்னியும் கொண்டு செல்கின்றனர்! 154 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பத்தில் நான் இன்னும் பக்கம் 58-ஐ தாண்டின பாடில்லை; ஆனால் இதற்கே 3 நாட்கள் பிடித்துள்ளது! “புரியவில்லை” என்று கருணையானந்தம் அவர்கள் எழுதாமல் விட்டுள்ள பக்கங்களில் மூன்றில் ஒரு பங்கைக் கடந்து விட்டேன் தான்; ஆனால் மேலோட்டமான புரட்டலில் – காத்துக் கிடக்கும் மற்ற blank பக்கங்களை அர்த்தம் பண்ணி எழுதுவதற்குள் 'புலன் விசாரணையே' தேவலாம் என்றாகி விடும் போலுள்ளது! எந்த முடிச்சுக்கு எங்கே சம்பந்தம் ஏற்படுத்தியிருப்பார்களோ என்பது தெரியாது, பக்கங்களைக் காலி பண்ணவும் தைரியம் எழவில்லை ; என்ன சொல்ல வருகிறார்களென்பதை புரிந்து கொள்வதும் பிராணன் போகும் பிரயத்தனமாயுள்ளது ! இப்போதே சொல்லி விடுகிறேன் guys – “மார்டின் பாணி” என்பது நமக்குப் புதிதல்ல தான்! ஆனால் இதுவோ வேறொரு லெவல்! So நல்ல நாளைக்கே மார்டின் கதைகள் உங்கள் கண்களை வேர்க்கச் செய்திடுமெனில் – இந்த இதழானது குற்றாலத்தைக் கொணரக் கூடும்! Classic Martin ! இன்னமும் பாக்கியிருக்கும் 90 சுமார் பக்கங்களைத் தாண்ட ஞாயிறு நிச்சயம் போதாது; so தொடரும் வாரத் துவக்கத்தில் இதை முடித்த கையோடு பு.வி.ப. ஆரம்பமாகிடும்! அதற்குள் சந்நியாசம் வாங்காதிருக்க பெரும் தேவன் மனிடோ தான் அருள் புரிய வேண்டும் சாமீ !! 

And இதோ மார்டினின் சாகஸத்துக்கான அட்டைப்பட முதல் பார்வை! இது நமது ஓவியரின் அதகளக் கைவண்ணம் – ஒரிஜினல் டிசைனை மாதிரியாக வைத்துக் கொண்டு! சமீப மார்டின் அட்டைப்படங்கள் எல்லாமே மொக்கையோ மொக்கையாக அமைந்திருந்ததால் – அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்வது அவசியமென்று நினைத்தேன்! And அதில் நம் ஓவியருக்கு வெற்றியே என்று நினைக்கத் தோன்றுகிறது! What say folks?

இங்கே ஒரு கேள்வியுமே! சமீப வாரங்களில் உங்களிடம் நான் முன்வைத்திருந்த கேள்விகளுக்கு நீங்கள் சொல்லி வந்த பதில்களைக் கொண்டு 2019-ன் அட்டவணைக்குத் தேவையான ஒட்டுக்கள் எவை? வெட்டுக்கள் எவை? என்பதை நிர்ணயம் செய்ய பெருமளவு முடிந்திருக்கிறது! அதன் நீட்சியாய் மார்டின் பற்றியுமே : இவரது களங்கள் எப்போதுமே செம complex என்பது அப்பட்டம்! இவற்றுள் சுலபக் கதைகளென்பது அத்திபூத்தாற் போல் நிகழும் சமாச்சாரம் ! So யதார்த்தம் இதுவே எனும் போது இவருடனான பயணம் ஓ.கே. தானா? முன்பெல்லாம் கோழிமுட்டை போலொரு முரட்டு மிட்டாய் கிடைத்து வரும்; அவற்றைக் கடித்துச் சாப்பிடுவதெல்லாம் சாத்தியமாகாது. வாய்க்குள் போட்டுக் கொண்டு மெதுமெதுவாய் சப்பித் தான் சுவைத்திட வேண்டிவரும்! In many ways – மார்டினின் கதைகள் கூட அந்த ரகமே! 'பிரித்தோம் – படித்தோம் – பயணித்தோம்' என்ற பருப்பெல்லாம் இங்கே நிச்சயமாய் வேகாது தான்! ஆனாலும் இந்த குண்டு மிட்டாய் ஓ.கே. தானா ? Of course இதே கேள்வியை மே இறுதியிலும் ஒரு முறை repeat செய்திடுவதே பொருத்தமாகயிருக்கும் தான்; ஆனால் இப்போதைக்கும் சொல்லுங்களேன் ப்ளீஸ்?

Moving on, ஒரு மாற்றம் குறித்த சேதி! ஏப்ரலின் “பவளச்சிலை மர்மம்” சமீபத்தைய இதழ்களுள் ஒரு அதிரடியிடத்தைத் தனதாக்கியுள்ள இதழ் என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது! இப்போதெல்லாம் கிட்டங்கியில் இடம் பற்றாக்குறை என்பதால் நாம் அச்சிடுவது மிகக் குறைவான பிரதிகளையே! அப்படியிருந்துமே பல நாயகர்களின் இதழ்கள் கைவசம் இருப்பது தொடர்கதையே! ஆனால் இம்முறையோ surprise... surprise!! “பவளச் சிலை மர்மம்” மட்டுமாவது ஏஜெண்ட்களின் மறுஆர்டர்களுக்கும்; ஆன்லைனில் பரபரப்பான விற்பனைக்கும் ஆளாகியுள்ளது! நிச்சயமாய் சில மாதங்களிலாவது இது தீர்ந்தே விடக்கூடுமென்ற நம்பிக்கை எழுந்துள்ளது ! Tex ; அதுவும் வண்ணத்தில்,என்ற கூட்டணியோடு nostalgia என்றதொரு சமாச்சாரமும் இணையும் போது இந்த மேஜிக் சாத்தியமோ?! வண்டி வண்டியாய் ஸ்டாக்கைச் சுமந்து கொண்டு பல்லைக் கடித்தபடிக்கே வண்டியை ஓட்டும் நமக்கு – இது போன்ற அதிசயத் தருணங்கள் silver lining ஆகத் தென்படுகின்றன! So- இந்தாண்டின் சந்தா D-ல் சின்னதொரு மாற்றம் folks! CID லாரன்ஸ்; டேவிட் & ஜானி நீரோ இணைந்து வரவிருந்த SECRET AGENT ஸ்பெஷலின் இடத்தில் – TEX-ன் “சைத்தான் சாம்ராஜ்யம்” முழுவண்ணத்தில் வெளிவரவுள்ளது! ஆண்டின் இறுதியில் அட்டவணையின் டெக்ஸ் இதழ்கள் எல்லாமே தீர்ந்து போயிருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதென்பதால் இந்த addition அந்தக் குறையை நிவர்த்திக்கக் கூடும்! So “சைத்தான் சாம்ராஜ்யம்” நடப்பாண்டிலேயே & “வைக்கிங் தீவு மர்மமோ” உங்களது வேறு தேர்வு எதுவுமோ 2019-க்கென இருந்திடும்! Hope this is an o.k. change guys!

நீண்டு கொண்டே போகும் பதிவுக்கு ‘சுபம்‘ போட்டு விட்டு மார்டினோடு மனோதத்துவ ஆராய்ச்சிக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன்! நமது பொருளாளரோ; இங்குள்ள மருத்துவ நண்பர்களில் எவரோ செய்ய வேண்டிய பணியை நான் செய்ய முயன்று வருகிறேன்! Wish me luck guys! இதழ் வெளியான பின்னே நான் உங்களுக்கு luck wish பண்ணுகிறேன்! நிச்சயமாகஉங்களுக்கு அது அவசியப்படுமென்பேன் ! 😊

 இப்போதைக்கு bye all ! Have a cool weekend !

Monday, April 09, 2018

பார்த்ததும்....பார்க்காததும் !

நண்பர்களே,

வணக்கம். நீங்களெல்லாம் பரபரப்பாய் இன்னொரு திங்களைச் சமாளித்து வரும் வேளையில், நாங்களோ இங்கே ரெஸ்ட் எடுத்து tired ஆகி, மறுக்கா ரெஸ்ட் எடுத்து வருகிறோம் ! ஆபீசுக்கு லீவு ; சிவகாசிக்கே லீவு எனும் போது, ரொம்ப நாள் கழித்து ஒரு மதியத் தூக்கம் ; IPL மேட்ச் பார்க்க நேரம் என்ற சொகுசுகளெல்லாம் சாத்தியமாகிறது ! ஆனாலும் கொஞ்ச நேரத்திலேயே மனசானது - 'மார்டினின் எடிட்டிங் காத்துக்கிடக்கு...' ; "லக்கி லூக்கை இந்த நேரத்துக்கு முடித்திருக்கலாம் "  ; "பு.வி.லோடு வந்திறங்கும் முன்பாய் மற்ற பணிகளை முடித்து வைத்தால் க்ஷேமம் !" என்று செக்கு மாட்டு routine-ஐ நினைவுபடுத்திடத் தவறிடவில்லை ! அதையும் மீறி லாத்தலாய் கொஞ்ச நேரத்தைச் செலவிடக் கிட்டிய போது சும்மாவேனும் நமது மின்னஞ்சலின் உள்பெட்டியை (அது தான் INBOX-ங்கோ) நோண்டிக் கொண்டிருந்தேன் ! அப்போது கண்ணில் பட்ட சில சமாச்சாரங்களையே இந்த உபபதிவுக்கு மேட்டராக உருமாற்றம் செய்திடத் தோன்றியது !

அட்டைப்பட உருவாக்கத்துக்கு நாம் அடிக்கும் கூத்துக்களில் இரகசியங்கள் கிடையாது தான் ; ஆனால் அந்த process-ல் நாம் முயற்சிக்கும் எல்லாமே உங்கள் பார்வைகளுக்கு வந்திராதென்று நினைக்கிறேன் ! இதோ அவற்றுள் சில ! சகல டிசைன்களுமே உபயம் - நம் டிசைனர் பொன்னன் ! இவற்றைப் பார்க்கும் போது "சி.ம.வ." ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை !! 






இன்னமும் இதுபோல் நிறைய உள்ளன தான் ; ஆனால் இன்னும் சில பல சோம்பல் நாட்களின் உபபதிவுகளுக்கென அவற்றை ரிசர்வில் வைத்திருப்போம் ! மேற்படிப் படங்களைப் பார்க்கும் போது - இந்த உலகம் பார்த்திரா டிசைன்கள் தேவலாமா ? - அல்லது அந்தந்த இதழ்களுக்கு நாம் பயன்படுத்தத் தீர்மானித்த டிசைன்களே better ஆ என்று சொல்லுங்களேன் ? 

அப்புறம் நேற்றைய ட்யுராங்கோ பாகம் 3-ன் ஆரம்ப பிரேமின் வரிகளை எழுதிய வகையில் பாராட்டுக்கள் ஈரோட்க்காருக்கும் ; அதற்கான பரிசு அவர் உபயத்தில் நண்பர்கள் யாருக்கேனும் செல்கிறது ! இதே போட்டிக்கு  "100 பொற்காசுகள் பரிசு" என்று அறிவித்திருப்பின் parcel redirect எப்படியிருந்திருக்கும் என்ற யோசனையோடு கிளம்புகிறேன் ; டால்டன்கள் கோடீஸ்வரர்களாகத் தூள் பறத்திக் கொண்டிருக்கும் ரகளையில் ஐக்கியமாகிடும் ஜாலி காத்துள்ளது ! அப்பறம் ட்யுராங்கோ - டைகர்-ஜிம்மி- caption போட்டி இன்னமும் தொடர்கிறது ! Keep writing !!  Bye all !! 

Saturday, April 07, 2018

கோடையிலொரு இடிமுழக்கம் !!

நண்பர்களே,

வணக்கம்.  இதோ இன்னுமொரு ஏப்ரல் முதல் வாரம் புலர்ந்து விட்டுள்ளது & இதோ – இன்னுமொரு தென்மாவட்ட ஸ்பெஷலான “பங்குனிப் பொங்கலுமே“ நெருங்கி விட்டது ! போன ஞாயிறு முதலே ஊரே வண்ணமயமாகத் துவங்க, தொடரவிருக்கும் அடுத்த 3 நாட்களில் பக்தியும், பரவசமும், சந்தோஷங்களும், கோலாகலங்களும் ஒரு உச்சத்தை நோக்கிப் பயணமாகிடும்! அதிலும் நமது ஆபீஸ் இருப்பது கோவிலின் வாசலிலே எனும் போது – இந்தத் திருவிழா மூடில் ஐக்கியமாகிடுவது ஒரு மேட்டரே அல்ல! சாயந்திரங்களில் அப்படியே பொடிநடையாய் கோவில் பாதையில் பஜார் வரை ஒரு நடை போட்டால் – தினப்படிப் பிடுங்கல்கள் சகலத்தையும் தற்காலிகமாவது தள்ளிப்போட்டு விட்டு, மக்கள் காட்ட முனையும் அந்தக் கலப்படமிலா உற்சாகமானது நொடிப் பொழுதில் நம் தோளுக்கும் தாவி விடுகின்றது ! ராட்டினங்களில் பளீர் சிரிப்போடு சுற்றி வரும் சுட்டி பென்னிகளையும் ; கலர் கலரான பானங்களை ‘கடக்‘ ‘கடக்‘ என்று உள்ளே தள்ளிக் கொண்டு அவரவரது நாக்குகளை வெளியே நீட்டி – 'கலர் ஒட்டியுள்ளதா?' என்று பரிசோதிக்கும் குட்டி லியனார்டோக்களையும்; பாதையோரக் கடைகளில் ஜரூராய் பேரம் பேசிடும் மக்களைச் சமாளித்து, வியாபாரத்தைப் பார்த்து வரும் லார்கோக்களையும் ரசிக்கும்போது – மண்டைக்குள் அலையடித்துக் கிடக்கும் நெருடல்கள் ஒன்று பாக்கியில்லாது மறைந்து விடுவதன் மாயம் என்னவோ – தெரியலை !! “பு.வி.” ஸ்கிரிப்ட் சத்தியமாய் ஒரு ‘குட்டி யானை‘யிலோ, TATA 407-இலோ தான் பயணித்து வரவுள்ளதெனும் போது – அதனை டைப்செட் செய்வதில் துவங்கி, தலையைப் பிய்த்துக்கொள்ளும் ஆனந்த நாட்கள் காத்துள்ளன என்ற ஞானமோ ; மே மாதத்து மார்ட்டினின் சாகஸத்தால் ராட்டினத்தில் ஏற அவசியமேயின்றி தலை 360 டிகிரியில் சுழல்வதன் அற்புதமோ ; ட்யுராங்கோ ஆல்பத்தின் எடிட்டிங் பணியின் sheer intensity-யோ ; டைனமைட் ஸ்பெஷலுக்கான படபடப்புகளோ  – இந்தத் திருவிழா நாட்களின் பரபரப்பின் முன்னால் சுலபமாய் பின்சீட்டுக்குப் போய் விடுவதால் தற்காலிகமாவது விட்டத்தை முறைக்காது நாட்களை நகர்த்த முடிகின்றது!

தகிக்கும் கோடை எனும் போது – “கோடை மலரிலிருந்து கச்சேரியை ஆரம்பிப்பது தானே பொருத்தமாகயிருக்கும்? And இம்முறை இந்தக் கோடையை அதிரச் செய்யவிருப்பவர் நமது காமிக்ஸ் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தான்! “மௌனமாயொரு இடிமுழக்கம்ட்யுராங்கோ தொடரின் ஒரு அடுத்த கட்டம் எனலாம். சித்திர நேர்த்தி மெருகேறிடுவது ஒரு பக்கமெனில் ; கதையில் தென்படும் பன்முகத்தன்மை இன்னொரு highlight! அதிலும், "ஒரு ராஜகுமாரனின் கதை" என்ற சாகஸத்தின் க்ளைமாக்ஸ்  நாம் துளியும் எதிர்பார்த்திட இயலா ரகம் ! So ஒரு தொடரென்ற முறையிலும், ட்யுராங்கோ முன்னேறி வருவது அப்பட்டம் ! என்ன ஒரே சிக்கல் -  கடந்த 2 வாரங்களை இந்த அதிகம் பேசா மனுஷனோடு செலவிட்டதைத் தொடர்ந்து எனக்குமே மணிரத்னம் பட நாயகர்கள் போல ரெண்டு வார்த்தை; மூணு வார்த்தைப் பதில்களே பேச வருகிறது இப்போதெல்லாம் ! நிறைய தருணங்களில் கேப்டன் டைகர் கதைகளின் சாயல்; பாணி தட்டுப்பட்டது எனக்கு மட்டும் தானா ? என்பதை மே மாதம் தெரிந்து கொள்ளக் காத்திருப்பேன் – உங்களது விமர்சனங்களிலிருந்து ! 

இதோ – கோடை மலர் 2018-ன் அட்டைப்பட preview ரொம்ப ரொம்ப அட்வான்ஸாய் ! முழுக்க முழுக்க நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணமிது! நாம் இதற்குத் தரவுள்ள special effects சகிதம் புக்காக நீங்கள் கையில் ஏந்திப் பார்க்கும் போது - ஒரு மிரட்டலான அனுபவம் உத்திரவாதம் என்பேன் ! 
சில ஹீரோக்களுக்கு ‘ஹிட்‘ பாடல்கள் தாமாய் அமைந்து விடுவது போல – சில காமிக்ஸ் நாயகர்களுக்கு ராப்பர்கள் சுலபமாய் set ஆகிடுவதை நான் கொஞ்ச காலமாகவே கவனித்து வருகிறேன் !  ட்யுராங்கோ அந்தப் பட்டியலில் நிச்சயம் ஒரு புது வரவே! And இந்த இதழுக்கென நிறைய மெனக்கெட்டு, நண்பர்கள் பலரும் முன்கதைச் சுருக்கங்களை எழுதியிருப்பது அழகானதொரு gesture ! இங்கே கொஞ்சம்; அங்கே கொஞ்சமென இரவல் வாங்கி ஒரு மாதிரியாய் அமைத்துள்ளேன்! Thanks a ton guys! உங்களின் திறன்களைப் பார்த்த கணத்தில் எனக்குத் தோன்றியதொரு விஷயத்தை இந்த வாரத்து சுவாரஸ்யக் கூட்டலுக்கு பயன்படுத்திடும் எண்ணமும் உதித்துள்ளது! Here goes:

இதோ – கீழே நீங்கள் பார்த்திடும் சித்திரமானது – ட்யுராங்கோவின் கதை # 3-ன் ஆரம்ப பிரேம்! இங்கே சித்திரமே பேசட்டுமென்று Yves Swolf அவர்கள் வசனங்கள் எதையும் அமைத்திடவில்லை! ஆனால் கதையின் opening sequence-ல் எழுதும் வரிகள் – அந்தக் கதையின் மூடுக்கு ஒரு திறவுகோலாக அமையக்கூடுமென்பது எனது அபிப்பிராயம். So இந்த பிரேமுக்குப் பொருத்தமான வரிகளை எழுதிப் பார்க்க ஆசையா guys? ரெண்டு – மூன்று வரிகளுக்கு மிகாது பார்த்துக் கொள்ளல் அவசியம். இங்கேயோ; மின்னஞ்சலிலோ,அவற்றை நீங்கள் பகிர்ந்திடலாம் ! சிறப்பாய்த் தோன்றும் வரிகளை கதையில் பயன்படுத்திடுவோம் ! ப்ளஸ் ஒரு LMS குண்டு புக்கும் பரிசு ! முயற்சித்துப் பார்க்கலாமே all?
அதான் ஒரிஜினல்லேயே காலியா இருக்கே… அதிலே புதுசா என்ன நாட்டாமை பண்ணத் தேவையாம்?” என்று சில ஆர்வலர்கள் ஆங்காங்கே உடனடிப் பொங்கல்களைப் படையல் போடக் கூடுமென்பதை யூகிப்பதில் சிரமமில்லை! But மெருகேற்றும் எந்தவொரு முயற்சியும் வியர்த்தமாகிடாது என்ற நம்பிக்கையோடு தொடர்வோமே ?!

மே நோக்கிய பார்வையில் நடப்பு இதழ்களை மறந்து விடலாகாது என்பதால் சில updates! “சிக்பில் க்ளாசிக்ஸ் – 2“ & “பவளச் சிலை மர்மம்“ என்ற வண்ண ஜாம்பவான்களுக்கு மத்தியில் தான் இம்மாத விற்பனை bestseller எதுவென்று போட்டி! இரண்டுமே (வண்ண) மறுபதிப்புகள் என்பதை ஒரு தற்செயலான நிகழ்வென்று நிச்சயமாய் ஓரம்கட்டிவிட முடியாதென்பேன்! அந்த பால்யம் சார்ந்த ஞாபகங்கள் கலரில்; தரமாய் உருமாற்றம் காணும் போது – அதற்கு நீங்கள் நல்கிடும் வரவேற்பு நிச்சயமாய் ஒரு அலாதி ரகம் தான்! Having said that – “பவளச் சிலை மர்மம்” கதை குறித்து, நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதியிருந்த வரிகளை நான் நூற்றுக்கு நூறு ஆமோதிப்பேன்! "போன மாதத்து இதழ் எது?" என்று கேட்டாலே மலங்க மலங்க முழிக்கும் வெண்டைக்காய்ப் பார்ட்டியான எனக்கு 1985-ல் நாம் வெளியிட்ட இந்தக் கதை சுத்தமாய் நினைவில் இல்லை! ஏதோ ஒரு சிலையைத் தேடி, நம்மவர்கள் வலம் வருவது மாத்திரமே மச மச ஞாபகம்! So ஈரோட்டில் சென்றாண்டு நீங்கள் படுஜோராய் இதனைத் தேர்வு செய்த போது – இதுவுமே “தலைவாங்கிக் குரங்கு” ரேஞ்சுக்கான க்ளாசிக்காக இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன்! ஆனால் கதையை எடிட்டிங் செய்யும் போது – செவாலியே சிவாஜி சாரின் ”ஓடினான்… ஓடினான்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினான்!” வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது! மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் போல டெக்ஸும், கார்சனும், செவ்விந்தியர்களும் ஓட்டமோ ஓட்டமாய் ஓட - எனக்கிங்கே  மூச்சிரைக்காத குறை தான் ! And அறவங்காடு தோட்டா பாக்டரியின் ஒரு வருஷத்துத் தயாரிப்பை இந்த 110 பக்கங்களிலேயே நம்மாட்கள் காலி பண்ணியிருப்பதைப் பார்த்த கணத்தில் கருமருந்துப் புகை வாசனை பக்கங்களிலிருந்து எழாத குறை தான் ! No offence meant at all guys - ஆனால் "இதுக்கு என்னோட favorite “சைத்தான் சாம்ராஜ்யம்” தேவலாமோ?” என்ற சிந்தனை எழாதில்லை எனக்குள் ! ஜுராஸிக் பார்க் பாணிக் கதைக்களமென்றாலுமே அதிலொரு X-factor இருப்பதாக எனக்கு நம்பிக்கை ! “வைக்கிங் தீவு மர்மம்” உங்கள் தேர்வுப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்ததே guys – அதுவுமொரு மறுபரிசீலனையைக் கோரிடுமா ? Or அது ஓ.கே.வா ? மறுபதிப்புகளில் சொதப்புவது பெரும் பிழையாகிடுமென்பதால் – let’s be doubly sure please!
அப்புறம் 2019-ன் அட்டவணையில் 70% தேர்வாகி விட்டுள்ள நிலையில் – மறுபதிப்புகள் சார்ந்த உங்கள் selections எனக்கு ரொம்பவே உதவிடும் என்பதால் – கீழ்க்கண்ட வினாக்களுக்கு தெளிவான விடைகள் ப்ளீஸ்:

1. அடுத்த Tex மறுபதிப்புக்கு? (வை.தீ.ம. ஓ.கே. தானா ? லாக் பண்ணிடலாமா ? )

2. அடுத்த லக்கி மறுபதிப்புக்கு? (Again – just 2!)

3. அடுத்த கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்புக்கு? (Just 1!)

Moving on, ஜம்போவின் சந்தா ரயில் தடதடத்து வருகிறது! ‘இதைக் கூட்டியிருக்கலாமே; அதைக் குறைத்திருக்கலாமே!‘ என்ற suggestions சகிதம் நிறைய மின்னஞ்சல்களும் வந்துள்ளன! முதல் சுற்றின் கதைகள்; தயாரிப்புப் பணிகள் என்று ஏற்கனவே நிறையவே பயணித்திருக்கிறோம் guys! So மாற்றங்கள் எதுவும் இனி சாத்தியமில்லை! Maybe தொடரவிருக்கும் அடுத்த cycle-ன் போது உங்களது எண்ணங்களுக்கு நடைமுறை சாத்தியம் தந்திட முடிகிறதாவென்று பரிசீலிப்போம்! 

தற்போது முதல் இதழான இளம் டெக்ஸின்காற்றுக்கென்ன வேலி?” தயாராகி வருகிறது! இங்கொரு சின்ன விளக்கம் ! சென்றாண்டின் தீபாவளி மலரில் வெளியான “ஒரு தலைவன் – ஒரு சகாப்தம்” இதழை – இளம் டெக்ஸ் கதைவரிசையோடு முடிச்சுப்போட்டு ஆங்காங்கே சில தயக்கங்கள் பதிவாகியிருப்பதைக் கவனித்தேன். Let’s be clear on it folks:

தீபாவளி மலரில், வண்ணத்தில் நாம் பார்த்தது –மூத்த படைப்பாளி பாவ்லோ எல்ட்யூரி செர்பியரியின் பார்வையிலான டெக்ஸின் கடந்த காலம் பற்றியதொரு யூகமான ஆக்கமே ! பிரான்கோ-பெல்ஜியக் கதைகளின் சைஸில்; வண்ணத்தில்; வித்தியாசமான சித்திர பாணியில் ஒரு ஆல்பத்தை உருவாக்கிட எண்ணிய குழுமம் அதற்கெனத் தேர்வு செய்தது திரு.செர்பியரி அவர்களை! போனெல்லியின் வரையறைக்குள் பயணிக்கும் கட்டுப்பாடுகளின்றி – ஒரு புதியதொரு கோணத்தில் “டெக்ஸ்” எனும் சகாப்தத்தைப் பார்த்திடும் சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது! So அதனில் நாம் ரசித்துப் பழகியிருக்கும் அந்த மாமூலான ‘டெக்ஸ் touches’ தூக்கலாய்த் தெரியாது போயிருக்கலாம் ! ஆனால் ஜம்போவில் நாமிப்போது பார்த்திடவுள்ள இளம் டெக்ஸ் – பெரியவர் போனெல்லி உருவகப்படுத்தி, ஆரம்பக் கதைகளில் சுருக்கமாய் கண்ணில் காட்டிய  டெக்ஸ் வில்லரின் துவக்க நாட்களது விசாலச் சித்தரிப்பு ! கதாசிரியர் மௌரோ போசெல்லி கதைக்களத்தைக் கையாள்கிறார் எனும் போதே ஒற்றை விஷயம் நிச்சயமாகி விடும்! அது தான் – “மாற்றங்களின்மை” எனும் factor! பெரியவர் போனெல்லி; அப்புறமாய் அவரது மைந்தர்; பின்னே க்ளாடியோ நிஸ்ஸி & இப்போது மௌரோ போசெல்லி எனத் தொடர்கிறது டெக்ஸ் வில்லரின் தலையெழுத்தை நிர்ணயிப்போரின் பட்டியல்! இன்றைய யுகத்தின் பிரதிநிதியாய் போசெல்லி இருந்தாலுமே – ‘காலத்துக்கு ஏற்றபடி நாயகரை நான் பட்டி-டிங்கரிங் செய்கிறேன் பேர்வழி‘ என்ற விஷப் பரீட்சைகளைச் செய்திட அவர் முனைவதே கிடையாது! ‘டெக்ஸ்‘ எனும் பார்முலா 70 ஆண்டுகளாய்ச் சாதித்து வந்துள்ளதெனும் போது – இன்னுமொரு 100+ ஆண்டுகளுக்குமே அதுவே சுகப்படத் தான் செய்யுமென்ற நம்பிக்கை அவருக்குண்டு! So ”காற்றுக்கென்ன வேலி”யில் அவர் நம் கண்முன்னே உலவச் செய்யும் டெக்ஸ் – பெரியவர் போனெல்லி சுருக்கமாய் சொல்ல நினைத்த flashback-களின் விஸ்வரூபமே! MAXI TEX தொடரில் இந்த 240 பக்க சாகஸம் கறுப்பு-வெள்ளையில் வெளிவந்து சக்கை போடு போட்டுள்ளது! So – “அதுவா இது?” என்ற மிரட்சிகளுக்கு நிச்சயம் அவசியமிராது!
ஜம்போ இதழின் தயாரிப்பிலும், வழக்கமான பாணிகளே தொடர்ந்திடாது – புதிதாயொரு template உருவாக்கிட முயற்சித்து வருகிறோம்! மண்டைக்குள் மட்டும் இந்த இரத்தப் படலம் + டைனமைட் ஸ்பெஷல் சார்ந்த ஆகஸ்ட் பரபரப்பு குடையாமல் இருந்தால் – இன்னும் கொஞ்சம் relaxed ஆக சிந்தனைகளை ஓடச் செய்திட முடிந்திடும் ! தற்போதைக்கு all roads seem to lead to August ; at least for me !

Before I sign off – சின்னதொரு நினைவூட்டல்! திருவிழாவினை முன்னிட்டு நமது அலுவலகம் திங்கள் (9 ஏப்ரல்) விடுமுறையிலிருக்கும் ! So உங்களது ஃபோன் அழைப்புகளுக்கோ; மின்னஞ்சல்களுக்கோ  பதிலிராது! ஆனால் ஆன்லைன் ஆர்டர்கள் மட்டும் எவ்விதமேனும் டெஸ்பாட்ச் ஆகிடும்!

Have a wonderful weekend ! எனது விடுமுறை நாட்களை ஜேம்ஸ் பாண்டோடும், லக்கி லூக்கோடும் கழிக்கும் ஜாலியில் புறப்படுகிறேன்…! “மை நேம் இஸ் பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்”… மொண மொண…. “தனிமையே என் துணைவன்” மொண மொண…!மிஸ்.மணிபென்னி மொண மொண ; ஜாலி ஜம்பர்...மொண மொண......லண்டன்....பெர்லின்....மொண மொண..... டால்டன் ..டெக்ஸாஸ்...மொண மொண !  Bye guys – See you around !

P.S : இந்தப் பதிவுக்கு மங்களம் பாடும் தருவாயில் நெட்டில் இந்த ட்யுராங்கோ + டைகர் + ஜிம்மியின் படம் கண்ணில் பட்டது ! இது போதாதா - தலைக்குள் நமைச்சலெடுக்க ? Caption time again ! பரிசு இன்னொரு LMS குண்டு புக் !!! Get cracking !!