Wednesday, January 31, 2018

ஹலோ ரின்டின் கேன்...!

நண்பர்களே,

வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை ! மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்திருந்தாலும்   - ஆங்காங்கே உள்ளுக்குள் இத்தனை காலமாய் ஆர்ப்பரித்து கிடந்திருக்கும்  இந்த ரௌத்திரங்கள் உண்மையில் மலைக்கச் செய்கின்றன ! எல்லாம் நலமாகிடுமென்று நம்பிக் கொண்டே தொடர்ந்தாலும், டி.வி. விவாத மேடை போல குரல்களில் இன்றும் தெறிக்கும் கனல்களைப் பார்க்கும் போது - "ஈகோ' எனும் எமன் எத்தகைய நட்புக்களையும் விட்டு வைக்காது  என்பது புரிகிறது !

"நாம் பார்க்காத ரணகளங்களா ?" என்று நமக்கு நாமே இம்முறையும் சமாதானம் சொல்லிக் கொண்டாலுமே, தொடர்கதைகளாகிடும் மோதல்களுக்கு எவ்வித நியாயங்களும் கற்பித்தல் பொருத்தமாயிராது - அதுவும் நம் வயதுகளில்!! தவறு எங்கே ? யாரிடம் ? என்ற ஆராய்ச்சிகளுக்குள் நூற்றியோராவது தடவையாகப் புகுவதில் நிச்சயம் அர்த்தம் இருப்பதாய்த் தோன்றவில்லை - simply becos இங்கே சகலத்தின் துவக்கப் புள்ளியும் நானே ! So நல்லதோ - கெட்டதோ அதன் முதல் பொறுப்பாளியும் நானே! நான் ஏங்கியது எல்லாமே நாமனைவரும் தோள் மேல் கைபோட்டு  ஓரணியாய் நடை போட வேண்டுமென்று ! ஆனால் end of the day  நட்பை ஈட்டிய வேகத்திலேயே ஏதேதோ காரணங்களின் பொருட்டு பகையையும் சமபங்கிலேயே சம்பாதித்துள்ளேன் எனும் பொழுது - தெரிந்தோ, தெரியாமலோ நிறையவே சொதப்பியிருக்கிறேன் என்பது அப்பட்டம் ! மனதறிந்து யாரையும் காயப்படுத்துவது எனது எண்ணமாக இருந்ததில்லை தான் ; ஆனால் man management திறன்களில் எனது ஆற்றல் போதாது போலும் ! 

பொதுவெளியில் காயப்பட்டு நிற்பது எத்தனை பெரிய ரணம் என்பதை வெவ்வேறு தருணங்களில் நம்மில் நிறையப் பேர் உணர்ந்திருப்போம். வேண்டாமே அந்தக் கடினங்கள் தொடர்ந்திடல் - at least நமது உபயத்தில் ! இந்த நொடியின் தேவை ஒவ்வொருத்தருக்குமே கொஞ்சம் தனிமையும், நிம்மதியும் என்பேன் ! So நாளை புறப்படவுள்ள பிப்ரவரி காமிக்ஸ் இதழ்களை ரசிப்பதிலோ / அலசுவதிலோ மட்டும் தொடரும் நாட்களை பயன்படுத்திக் கொள்வோமே ? இந்த இரத்தப் படலம் ; புலனாய்வு என்ற சகலத்தையும் கொஞ்ச காலத்துக்கு என்னிடம் விட்டுவிட்டு அலைபாயும் மனங்களை சமனப்படுத்த மட்டும் முயற்சியுங்கள் ப்ளீஸ் ! 

என் பங்குக்கு, ரொம்ப காலமாகவே  தள்ளிப் போட்டு வரும் உடல் சார்ந்த  சில பட்டி-டிங்கரிங் வேலைகளின் பொருட்டு ஒரு break எடுத்துக் கொள்ள  நினைக்கிறேன். 12 ஆண்டுகளுக்கும் மேலாய் சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும்  கூடவே கூட்டித் திரிபவன் என்ற முறையில் எனக்கிது அவசியமானதொரு  ஓய்வாக இருந்திடக் கூடும். பற்றாக்குறைக்கு முதுகு வலியும் நமக்கொரு ஜிகிடி தோஸ்த் ! So ரொம்பவே தாமதப்பட்டுப் போனதொரு FC-க்கு இப்போதாவது வண்டியை  விடல் நலமென்று படுகிறது ! 

இதுவொரு knee jerk reaction-ம் அல்ல ; "ஐயோ....போகாதீங்க ப்ளீஸ் !" என்ற சென்டிமென்ட்களை கசக்கிப் பிழிய முற்படும் மலிவான சிந்தனையுமல்ல ; கடந்த 2 நாட்களின் அமளிகளின் பின்விளைவுமல்ல ! சொல்லப் போனால் இந்த அமளிகளுக்குப் பின்பாய் என்னுள் நிறையவே தெளிவு பிறந்திருப்பது போல் உணர்கிறேன் !  ஜுனியரின் திருமணம் முடிந்த கையோடு எடுக்க எண்ணியிருந்த மருத்துவ ஓய்வினை ஏதேதோ பணிகளின் பொருட்டு தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்ததொரு  சராசரி 50 வயதுக்காரனுக்கு இப்போது கிட்டியிருக்கும் ஒரு வாய்ப்பு  மாத்திரமே இது  !

பணிகள் வழக்கம் போல் ஓடிக் கொண்டிருக்கும் & இதழ்களும்,  எவ்வித தொய்வுமின்றி எப்போதும் போல் ஆஜராகிடும் guys ! ஒரே வித்தியாசம் - உங்கள் முகங்களுக்குள் நின்று 6 வருஷங்களாக ஆடி வந்த நர்த்தனத்தை கொஞ்ச அவகாசத்துக்கு இதழ்களுக்குப் பின்னிருந்து மட்டுமே செய்து வருவேன் ! பரஸ்பரம் ஒய்வையும், தெளிவையும் நமதாக்கிக் கொண்ட நாளில் 'வந்துட்டேன்" என்று ஜம்ப் பண்ணி ஆஜராகியிருப்பேன் ! இடைப்பட்ட காலத்துக்கு இங்கு நடக்கும் சகலத்தையும் சந்தோஷத்தோடோ, சங்கடத்தோடோ பார்வையிட்டு வரும் சீனியர் எடிட்டர் இங்கே உங்களது பொழுதுகளை சுவாரஸ்யமாக்கிட  முனைகிறாரா என்று maybe கேட்டுப் பார்க்கலாம் ! அவருக்குமே இங்கொரு active பங்கெடுப்பதென்பது பல நாள் கனவு ! ஆனால் தமிழில் டைப் செய்வது அவருக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன் ; but you never know ! 

புகை விட்டுக் கொண்டே கிளம்பும் ரயிலிலிருந்து சினிமா பாணியில் கையசைக்கும்  'டாட்டா..பை-பை' . ரவுசெல்லாம்  நானிந்தத் தருணத்தில் பண்ணப் போவதில்லை  ; simply becos I'm going nowhere !  ஆங்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு : Familiarity breeds contempt என்று !! ஒரு அளவுக்கு மேலாய் முகத்துக்குள்ளேயே இருக்கும் போது அயர்ச்சியே மேலோங்கும் என்பதாய் பொருள்படும் இந்தப் பழமொழியினை கொஞ்சமேனும் மதிக்க முயற்சித்துப் பார்ப்போமே guys ?!  Bye for now ....See you around !

And இதோ - நம்மாள் ரின்டின் கேனின் அட்டைப்பட first look !! நாளை கூரியர்கள் கிளம்பிடும் !

Tuesday, January 30, 2018

ஷெல்டன் !

நண்பர்களே,

வணக்கம். ஆக்கப் பொறுத்தாச்சு....ஆறவும் பொறுத்திருந்தால், ஒரு அழகான நிகழ்வை மனநிறைவோடு அரங்கேற்றிப் பார்த்த சந்தோஷமும் கிட்டியிருக்கக்கூடும் ; இப்போது பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்  கணைகளுக்கு அவசியமும் நேராது போயிருக்கக் கூடும் ! But நடந்த எதையும் மாற்றியமைக்க முடியாதெனும் போது என்னால் நேர்ந்த உளைச்சல்களுக்கு சாரி சொன்ன கையோடு Peace guys என்று வேண்டுவதைத் தாண்டி வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு ! தொடரும் காலங்களில் என்னால் இது போன்ற சங்கடங்கள் யாருக்கும் நேராதிருக்க ஆன மட்டும் முனைவேன் என்பது மட்டும் உறுதி ! 

பிப்ரவரி இதழின் ஷெல்டன் ராப்பரும், உட்பக்கப் preview-ம் கடந்த பதிவில் விடுபட்டிருந்தன. Here they are !


Bye all !

Sunday, January 28, 2018

அலசும் நேரமிது...!

நண்பர்களே,

வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை வரவழைக்கும் நினைவுகளாய் மட்டுமே தங்கியுள்ளன ! And அதே கதை தான் - நடந்து முடிந்துள்ள சென்னைப் புத்தக விழாவிற்குமே !! வாசிப்பின் ஜீவன் இன்னமும் அணைந்திடவில்லை என்பதை அழுந்தப் பதிவு செய்திடும் அந்த ஜனத்திரளை எண்ணி நெடும் பெருமூச்சே வெளிப்படுகிறது ! நானங்கு இருந்தது என்னவோ ஒன்றரை நாட்களுக்கு மாத்திரமே என்றாலும், அந்தப் பரபரப்பை இன்று வரைக்கும் உணர்ந்திட முடிகிறது ! Back to the grind ; மீண்டும் பணிகள். பொறுப்புகள் என்று சக்கரம் சுழலத் துவங்கிவிட்டிருந்தாலுமே, புத்தக விழா சார்ந்த எண்ணங்கள் நிழலாடுவது மட்டுப்படவில்லை இன்னமுமே !! And சமீபத்து வழக்கப்படி புத்தக விழாவின் விற்பனைகள் ; சொதப்பல்கள் ; ,மிதங்கள்  ; உச்சங்கள் என்று சகலத்தையும் கணக்கெடுத்து ஒப்படைத்தனர் நம்மவர்கள் ! அதை பார்க்கும் போது புலப்பட்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களோடு பகிர்ந்திடத் தோன்றியது ! So இந்த ஞாயிறின் அலசல் - சென்னை 2018-ன் விற்பனைகள் பற்றியே ! 

Of course - 200+ தலைப்புகளை நமது ஸ்டாலில் முதன்முறையாகப் பார்க்க நேரிடும்  ஒரு புது வரவுக்குள் ஓடக்கூடிய பரபரப்பையும், அந்நேரத்தில் தோன்றிடக் கூடிய impulsive buying பாணியையும் ரசனைகளின் வெளிப்பாடாய்ப் பார்த்திட முடியாது தான் ! அட்டைப்படமோ ; தலைப்போ ; முதல் புரட்டலில் ஈர்க்கும் ஏதோவொரு விஷயமோ ; விலையோ ; தயாரிப்புத் தரமோ ; நோஸ்டால்ஜியாவோ அவர்களது கொள்முதல்களுக்குக் க்ரியாவூக்கிகளாய் இருந்திடக்கூடும் தான் ! So தொடரும் 'ரமணா' பாணிப் புள்ளிவிபரங்களை ஒரு ஒட்டு மொத்த statement ஆக நான் வெளிப்படுத்த முனைந்திடவில்லை ! மாறாக - ஒரு மேலோட்டமான பார்வையாக மாத்திரமே !  Here goes :

புத்தக விழாவின் TOPSELLER-லிருந்து ஆரம்பிப்பது நலமென்பேன் & அந்த மெடலைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சானது யாருடையது என்பதைக் கேட்டால் சில பல 'பணால்'கள் நேரிடலாம் ஆங்காங்கே  !! அது வேறு யாருமில்லீங்கோ - தலைகீழ் சிரசாசன SMS புகழ் இஸ்பய்டர் சாரே ! அவரது ஜனவரி இதழான "விசித்திரச் சவால்"   தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller !! அந்த செம cute பாக்கெட் சைசின் பங்கு தான் இதன் பின்னணி என்று எனக்குப் பட்டாலும் - தானைத் தலைவரின் diehard fans நிச்சயமாய் மாற்றுக கருத்துக்கள் கொண்டிருப்பது உறுதி ! எது எப்படியோ - சின்னதொரு மார்ஜினில் மாயாவியாருக்கு டேக்கா கொடுத்து விட்டு முதலிடம் பிடிக்கிறார் நமது லயனின் big boss !!

இரண்டாமிட நாயகர் முதல் பெயரை "லூயி" என்றும் இரண்டாம் பெயரை "கிராண்டேல்" என்றும் கொண்டிருக்கும் ஆசாமி ! Oh yes - எண்ணிக்கையில் slot # 2 பிடித்து நிற்பது சமீப மறுபதிப்பான "மர்மத் தீவில் மாயாவி" தான் ! இதழ் புராதனத்திலானது என்றாலும், மறுபதிப்பாய் இது வெளியானது வெகு சமீபத்தில் என்ற விதத்தில் இதுவொரு recent இதழே என்பதாலோ என்னவோ, மக்கள் வாஞ்சையோடு வாங்கியுள்ளனர் ! இந்த இதழின் ராப்பருமே விற்பனைக்கு உதவிய முக்கிய விஷயம் என்று சொல்லத் தோன்றுகிறது ! தொடர்ந்த இடங்களில் வந்திருப்பது "நாச அலைகள்" & "பாம்புத் தீவு" ! மாயாவியின் விற்பனை ஒரு மைல் தொலைவில் எனில், ஜானி நீரர்  மூன்றாமிடத்திலும் ; லாரன்ஸார்  & டேவிடர் இறுதியிடத்திலும் உள்ளனர் - மறுபதிப்புத் தரவரிசையில் ! ""தங்கவிரல் மர்மம் "  & "தலை கேட்ட தங்கப் புதையல் " அவரவரது தொடர்களுள் அதிக விற்பனை கண்டுள்ள இதழ்கள் !!

இந்த "எழுபதுகளின் பிள்ளைகளை" இன்றைக்கும் முன்னணியில் நிற்கச் செய்யும் இந்த  'நோஸ்டால்ஜியா'வை எண்ணி வியாக்காது இருக்க இயலவில்லை ! நிறைய முறைகள் இந்த அலசல்களுக்குள் புகுந்து வெளியேறி இருக்கோம் என்பதால் - இன்னுமொரு repeat தேவையில்லை தானே ?  "மாமு....நீ கிராபிக் நாவலை போட்டுக்கோ ; விண்வெளிக்கு ராக்கெட் விட்டுக்கோ ; சிக்கின குதிரைப் பையன்களையும் அழைச்சுக்கோ - ஆனால் கில்லி நாங்க தான் !!" என்று இந்த நொடியில்  மும்மூர்த்திகள் என் திசையில்  பழிப்புக் காட்டுவது போலொரு பீலிங்கைத் தவிர்க்க இயலவில்லை ! கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மறுபதிப்புகள் மெதுநடை தான் போட்டு வந்து கொண்டிருக்க - ஒரு மாதிரியாய் அந்த மோகம் மட்டுப்பட்டுவிட்டதாய்த் தான் நினைத்திருந்தேன் ! ஆனால் இந்தப் புத்தக விழாவில் தென்பட்டிருக்கும் வேகத்தை என்னவென்று classify செய்திடவோ - தெரியவில்லை ! அதற்காக 2015-ன் தொடக்கத்தில் அலையடித்த அதே விறுவிறுப்பு இப்போது மறுபிரவேசம் செய்துள்ளது என்றெல்லாம்  சொல்ல மாட்டேன் ; "நயாகராவில் மாயாவி" வெளியான அந்த ஜனவரியில் இருந்ததோ  முற்றிலுமாய் வேறொரு லெவெலிலான அதகள உத்வேகம் !! Nowhere close to that - but still beating the others !!

மறுபதிப்புகளின் மீதான லயிப்புக்குப் பின்னே அடுத்த "கவனக் கோரர்" நமது இரவுக் கழுகாரே !! கணிசமான இவரது titles  நம்மிடம் சேர்ந்து விட்டபடியால் - "TEX" என்று தேடி வருவோருக்கு நல்லதொரு சாய்ஸ் சாத்தியமாகிறது ! And இம்முறை முதலிடத்தில் நிற்பது "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்" தான் !! கடந்த   2 ஆண்டுகளாய் விடாப்பிடியாய் முத்லிடத்தைத் தக்க வைத்திருந்த "நில்..கவனி..சுடு" இம்முறை காலி என்பதால் கையிருப்பில் கடைசி 25 பிக்குகளும் சென்னையில் தீர்ந்தே விட்டன ! And சென்னையில் 'டாடா - பை-பை' சொன்ன இன்னொரு TEX இதழானது "டிராகன் நகரம்" தான் ! இது SUPER 6 limited edition என்பதால் அச்சிடப்பட்டதே சொற்பப் பிரதிகள் ; and இதனில் "போட்டோ போட்டோம் ; கோட்டை விட்டோம்" என்று ஏதேதோ ரவுசுகள் அரங்கேறியதன் புண்ணியத்தில் அப்போதே online-ல் நிறைய விற்றுத் தீர்ந்திருந்தது ! எஞ்சியிருந்தவை புத்தக விழாவில் காலி !! And TEX ஷாப்பிங்கில் எப்போதும் போல "நிலவொளியில் நரபலி" அடித்து ஆடியிருந்தது என்பது கொசுறுச் சேதி !!
As usual - டெக்சின் வாலைப் பிடித்துக் கொண்டே அடுத்தயிடத்தில் நிற்பது நமது லக்கி லூக் ! அந்த மனுஷனுக்கும் டெக்ஸைப் போலவே ஆண்கள் / பெண்கள் ; சிறார் / பெரியோர் என அனைத்துத் தரப்போடும் ஒருவித chemistry நிலவுவது கண்கூடு !! இம்முறை முதலிடம் "ஒரு பட்டாப் போட்டி" இதழுக்கே ; followed  by  "ஒற்றைக்கைப் பகாசுரன்" !! 
இந்தப் புத்தக விழாவின் நிஜமான surprise என்று சொல்வதாயின் - அது நமது உடைந்த மூக்காரின் ஆல்பங்களின் விற்பனையில் தென்பட்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பு !! கடைசி 3 ஆண்டுகளாய் டைகரும் சரி ; கமான்சேவும் சரி, ஊர் ஊராய்ப் புத்தகவிழாக்களின் பெயரைச் சொல்லி சுற்றுப் பயணம் அடித்துவிட்டு பத்திரமாய் நமது கிட்டங்கிக்கே திரும்பிடும் வித்தைக்காரர்களாகவே இருந்து வந்தனர் ! ஆனால் இம்முறையோ - "இரத்தக் கோட்டை" தந்த boost-ன் காரணமாகவோ  , என்னவோ - கேப்டன் டைகரின் விற்பனை has not been bad at all !! வழக்கம் போல "தங்கக் கல்லறை"-க்கு நல்ல வரவேற்பு !
ஆச்சர்யங்கள் ஓய்ந்த பாடில்லை - இம்முறையோ நம்பரையே பெயராகக் கொண்ட  மனுஷனின் புண்ணியத்தில் ! புத்தக விழாக்களில் "இரத்தப் படலம்" பெரும்பாலும் நமக்கு "சோகப் படலங்களாக" மட்டுமே இருந்து வந்துள்ளன ! ஆனால் இம்முறை நண்பர் கணேஷ், கன்னத்தில் மருவை ஒட்டிக்கொண்டு வந்து   மொத்தமாய் வாங்கி யாருக்கேனும் விநியோகம் செய்தாரா என்று  தெரியவில்லை ; கொண்டு சென்ற XIII-ன் இதழ்களில் பெரிதாயொரு மிச்சம் இருக்கவில்லை ! And மொத்தம் 12 முன்பதிவுகள் சென்னையில் நடந்துள்ளதையும் சேர்த்தால் தற்போதைய "இரத்தப் படலம்" முன்பதிவு நம்பர் : 402 !!! We are  there guys !!! கதைகளின் (வண்ண) டிஜிட்டல் கோப்புகள் வந்துவிட்டன ; மாதாந்திரப் பணிகளுக்கு இடைஞ்சலின்றி வேலைகளை முடுக்கி விட வேண்டியது மட்டுமே பாக்கி !! அநேகமாய் ஏப்ரல் இறுதியில் வாசக proof reading டீமுக்கு வேலையிருக்கும் !! தயாராகிக் கொள்ளுங்கள் - சிகப்புப் பேனா சகிதம்  !!

அடுத்ததாய்ப் பார்வையில் தட்டுப்படுவோர் சிக் பில் & ப்ளூ கோட்ஸ்  & சுட்டிப்புயல் பென்னி !! இந்த மூன்று கார்ட்டூன் பிரதிநிதிகளுமே - ஓசையின்றி முத்திரை பதித்துள்ளது புரிகிறது - நம்பர்களை அலசிடும் போது ! அதிலும் பென்னி அடித்துள்ளது சிக்ஸர்கள் மட்டுமே - கொண்டு சென்ற 2 அல்பங்களுமே சுத்தமாய்த் தீர்ந்து போன வகையில் ! And "சிக் பில் ஸ்பெஷல்" - ஸ்பெஷலான கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் நிச்சயம் நம்மில் யாருக்கும் வியப்பிராதென்று நினைக்கிறேன் ! Has done decent !!

அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "ஜேசன் பிரைஸ்" & "மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! And ஜேசன் ப்ரைஸ் மூன்று பாகங்களுமே சுவாரஸ்யமான விற்பனை கண்டது !! அதே போலவே LADY S ஆல்பங்களும் நிறைவாக விற்பனை கண்டுள்ளன ! அந்த மதிமுகம் செய்யும் வேலையோ ?

And நம்பினால் நம்புங்கள் ; இந்தாண்டின் பட்டியலில் உயரே நிற்பன - நமது கிராபிக் நாவல்களுமே !! அதிலும் குறிப்பாக ஜெரெமியா & "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" have been toppers !! நன்றிகள் ஓராயிரம் "குமுதம்" அரசு சார் !! உங்களின் 2 இதழ்களுக்குமான reviews நிச்சயம் இந்த விற்பனையின் பின்னணியில் உள்ளன !! But எல்லாவற்றையும் விட செம சேதியொன்று காத்துள்ளது guys : "நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!! Oh  yes - ஜனவரி 1-ல் ரிலீஸ் ஆன இந்த இதழ் ஜனவரி 22-ல் காலி !! சந்தா E சொற்ப பிரிண்ட்ரன் கொண்டதே & இது ரூ.250 விலையிலான இதழ் என்பதால் வழக்கத்தையும் விடக் குறைச்சலாகவே அச்சிட்டோம் !! But இங்கும் சரி, உங்களது whatsapp க்ரூப்களிலும் சரி - இந்த இதழ் சார்ந்த அலசல்கள் கொணர்ந்துள்ள curiosity காரணமாய் ஆன்லைனில் நல்ல விற்பனை !! So ஒரு செம dark கி.நா. தான் புது ரெக்கார்டை உருவாக்கும் அதிசயமும் கண்முன்னே நிகழ்கிறது !! என்ன கொடுமை இது தலீவரே ?!!

"உச்சமும் இல்லை ; உச்சா போகும் ரகத்திலும் இல்லை"  - என்பதே அடுத்த கண்ணோட்டத்தின் subjects !! கீழ்க்கண்ட நாயகர்கள் - இடுப்பில் துணியை இறுக்கமாய் இழுத்துப் பிடித்துக் கொள்ளும் சமயோசிதம் கொண்டிருப்பதால் - we are glad  for it !!

  • தோர்கல்
  • கேப்டன் பிரின்ஸ்
  • ரின்டின் கேன்
  • ரிப்போர்ட்டர் ஜானி  

தோர்கல் இப்போது தான் டாப்கியரைத் தொட்டிடும் தருணம் எனும் பொழுது - நிச்சயமாய் அடுத்த ஆண்டில் விற்பனை இதை விட தேவலாமென்றிருக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது ! இந்தாண்டைப் பொறுத்தவரை just about ok !! அதே கதை தான் கேப்டன் பிரின்ஸ்ரின்டின் கேன் விஷயத்திலும் !! "மோசமில்லை ; நிச்சயம் மோசமில்லை" என்ற தீர்ப்பு எழுதலாம் ! 

தொடர்வோர் ஒரு பெரும் பட்டியலை உருவாக்கும் அவசியத்தை ஏற்படுத்துவது தான் கவலையளிக்கும் சமாச்சாரம் ! "உன் குத்தமா ? என் குத்தமா ? யாரை நான் சொல்ல  ?" என்று பாடிக் கொண்டே போடுகிறேன் இந்த லிஸ்டை !! அதனிலுள்ள சில பெயர்களை வாசிக்கும் போது ஆச்சர்யத்தில் புருவங்கள் உயரலாம் ; but இம்முறை இதுவே விற்பனைக் காற்று வீசியுள்ள திசை :
  • லார்கோ வின்ச்
  • வெய்ன் ஷெல்டன்
  • CID ராபின்
  • கமான்சே 
  • ஜில் ஜோர்டன்
  • கர்னல் க்ளிப்ட
  • மதியில்லா மந்திரி
  • SMURFS 
இந்த லிஸ்டில் இம்முறை லார்கோ தான் surprise package என்பேன் ! ரொம்பவே மித விற்பனை இந்தாண்டு ! And ஏனோ தெரியவில்லை -  நமது நீல பொடியர்களுமே இம்முறை விற்பனையில் கோட்டை விட்டுள்ளனர் !! மற்றவர்கள் வழக்கத்தை விட ஒரு மாற்று குறைவாய் இந்தாண்டினில் !  ஒண்ணுமே புரியலே...உலகத்திலே.....!

சரி, "ஒரு சுமாரான விற்பனைப் பட்டியல்" என்று லிஸ்டைப் போட்ட கையோடு கிளம்பலாம் என்று பார்த்தால் - "இன்னொரு பட்டியல் போட்டுட்டுப் போப்பா ஆந்தைக்கண்ணா !!" என்ற உரத்த குரல் கேட்கிறது !! திரும்பிப் பார்த்தால் நிற்கும் அணியானது மெய்யாகவே மூக்கில் குத்தும் ரௌத்திரத்தோடு காத்திருப்பது புரிகிறது ! வெளியே சொல்லச் சங்கடம் தரக்கூடிய விற்பனை கண்டுள்ள ஆல்பங்களின் நாயக / நாயகியர் இவர்கள் எல்லாமே  : 
  • பவுன்சர் 
  • மேஜிக் விண்ட்
  • டைலன் டாக்
  • டயபாலிக்
  • மாடஸ்டி 
  • ப்ருனோ பிரேசில்
  • சாகச வீரர் ரோஜர்
நிச்சயமாய் நமது ரசனை அளவுகோல்களின் முழுமையான பிரதிபலிப்புகளும் இவையல்ல தான் & இந்தத் தொடர்களின் வீரியம் மீதான விமர்சனமும் இது அல்லவே !! மேஜிக் விண்ட் ; டைலன் டாக் ; மாடஸ்டி ; ரோஜர் என personal ஆக எனக்குப் பிடித்த நாயக / நாயகியர் மேற்படிப் பட்டியலுக்குள்சிக்கியிருப்பதில் எனக்கு வருத்தமே ! But இது முழுக்க முழுக்க விற்பனை சொல்லும் கதைகள் மாத்திரமே !! So no offence meant !!

மற்ற one -shot கதைகள் ; நாயகர்கள் பற்றி நான் அதிகம் மெனெக்கெடப் போவதில்லை - simply becos அவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடிய சமாச்சாரங்கள் சொற்பமே என்பதால் !! 

So ஒரு 12 நாள் திருவிழாவின் இறுதியில் விற்பனைக் கணக்குகள் ; செலவினங்கள் ; ஒட்டு மொத்த அனுபவங்கள் என்று அசை போட்டு வருகிறோம். ஒற்றை ஸ்டால் தான்  என்றாலும், இம்முறை 4 பணியாளர்களைக் கொண்டு செயல்படுவது என்று தீர்மானித்திருந்தோம் ! செலவுகள் அதன் பலனாய் எகிறினாலும், பல நடைமுறைச் சிக்கல்களை அது தவிர்த்துள்ளதென்பதில் சந்தோஷமே !! But ஒரு புரியாப் புதிர் இன்றளவும் தொடர்கிறது !! 2015 -ல் இப்போதிருப்பதில் சரி பாதி titles மட்டுமே இருந்த வேளைதனில் சாத்தியமான அதே விற்பனைத் தொகையினைத் தான் 200 + titles கொண்டிருக்கும் இப்போதும் ஈட்டிட முடிகிறது !! "இவ்ளோ தாண்டா உனக்கான கோட்டா ; அதுக்குள்ளாற வண்டியை ஓட்டிக்கோ"  என்று பெரும் தேவன் மணிடோ நிர்ணயம் செய்துவிட்டாரோ என்ற சந்தேகம் ஒவ்வொரு வருடமும் தலைதூக்குகிறது ! சென்னையில் மட்டும்தான் என்றில்லாது - ஈரோட்டில் ; கோவையில் ; மதுரையில் என சகல புத்தக விழாக்களிலுமே ஒரு குறிப்பிட்ட வசூல் வட்டத்துக்குள்ளேயே நாம் சவாரி செய்ய நேரிடுகிறது ! But இதுதான் பதிப்புலக நிதரிசனம் எனும் பொழுது, அரைப் பெடல் அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டும் கலையைக் கற்றுக் கொண்டே வருகிறோம் ! சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக்  காப்பாற்றிடுகிறது !  Thanks guys & thanks to all those who dropped in !! And a SPECIAL THANKS to BAPASI too !!!

"ஒவ்வொரு தினமும் ஒரு புது அனுபவமே" என்பதற்கு இந்தப் 12 நாட்களை விடவும் பெரியதொரு சான்று இருந்திட முடியாது !! இந்தப் பர பரப்பை ; உற்சாகங்களை மீண்டும் உணர்ந்திடும் வரம் கோரி கை கூப்பிட மட்டுமே தோன்றுகிறது இந்த நொடிதனில் !! மீண்டும் சந்திப்போம் folks !! Happy Sunday !!

p.s : அந்த கர்னல் க்ளிப்டன் CAPTION போட்டியின் வெற்றியாளரை அறிவிக்க மறந்து விட்டேன் போன வாரம் ! ஞாயிறு (இன்று) பகலில் நிச்சயம் அறிவிப்புண்டு !
சுட்டி லக்கி - புது ஆல்பம் ! 

Sunday, January 21, 2018

சென்னையில் ஒரு சனிக்கிழமை !

நண்பர்களே,

வணக்கம். வியக்க வைக்கும்...வியர்க்கவும்  வைக்கும்...!! பறக்க வைக்கும்...பரக்க பரக்க விழிக்கவும் வைக்கும்...!! மிரள  வைக்கும் ..மிருதுவாய் அணைத்தும்  வைக்கும்......!! மயங்க வைக்கும்....மயக்கம் வரவும் வைக்கும்...!! சிரிக்க வைக்கும்...சிரிப்பாய் சிரித்துப் போகவும் வைக்கும்..! சில்லிட வைக்கும்....மேனி சிலிர்க்கவும் வைக்கும் ! ரசிக்க வைக்கும்.....ரகளை பண்ணவும் வைக்கும் ! பரபரப்பாய் இருக்கும்....பாந்தமாகவும் இருக்கும் ! என்னடா கவிதை ஆறாய் ஓடுதே என்று பார்க்கிறீர்களா ? சிங்காரச் சென்னையே என்னை இந்த சனியிரவில் திடீர் புலவனாக்கிப் பார்க்கிறது !! And வாசிப்பை நேசிக்கும் ஒரு அசாத்திய ஜனத்தின் ஒட்டு மொத்த முகத்தையும் 2 நாட்களாய் சென்னைப் புத்தக விழாவினில் பார்க்கும் போது நம்மையும் அறியாது நெஞ்சம் குதூகலிக்கிறது ! GST சிக்கல்கள் ; பணப் புழக்கத்தின் தட்டுப்பாடு ; இன்னமும் சந்தாவில் எட்டிப் பிடிக்க வேண்டிய தூரம் ; கிட்டங்கியின்பாரம் ; ஊருக்குத் திரும்பிய நொடியே காத்திருக்கும் அந்த மாமூலான பணிகள் - என எதுவுமே புத்தக விழாவில் காலூன்றி நிற்கும் தருணங்களில் ஒரு பொருட்டாகவே தோன்ற மறுக்கும் மாயம் என்னவோ தெரிய மாட்டேன்கிறது !!  ஒட்டு மொத்த அரங்குக்கே அழகாய் விற்பனை அரங்கேறும் அழகையும், வயது வேறுபாடுகளின்றி ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு ஸ்டாலிலும் அலைமோதுவதையும்  பார்க்கும் போது வாசிப்புக்கு தொய்விருக்கலாம் ; ஆனால் அஸ்தமனம் நிச்சயம் இராது என்பதை மாடி மேலேறி நின்று உரக்கக் கூவணும் போல் தோன்றுகிறது !! 

திட்டமிடல் ஏதுமின்றி, திடீரென அவசியமானதொரு பயணத்தின் பலனாய் புத்தக விழாவில் வெள்ளி மாலையையும், சனியின் முழுமையையும் செலவிட முடிந்தது ! வழக்கமான நண்பர்கள் கும்மியடி அரட்டை என்றில்லாது இம்முறை ரொம்பவே வித்தியாச அனுபவம் - அனைவருமே விற்பனைக்கு தத்தம் உதவிகளை செய்து காட்டும் முனைப்பில் இருந்ததால் !! So பல்லி போல ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டு, என்னை அடையாளம் தெரிந்து புன்னகைக்கும் நண்பர்களைத் தவிர்த்து வேறு யாரையும் தொந்தரவு செய்யாது வேடிக்கை பார்க்க முடிந்த போது நிறையவே விஷயங்களை observe செய்ய சாத்தியமானது !!

விறு விறுவென்று ஸ்டாலுக்குள் நுழைந்த நொடியே "டெக்ஸ் வில்லர் ??" என்று கேட்ட சகோதரிக்கு என் வயதில் பாதி தானிருக்கும் ! வண்ணத்தில் இருந்த "டிராகன் நகரம்" புக்கைப் புரட்டிய நொடியில் அவரது முகத்தில் துளிர்விட்ட புன்னகைக்கு சத்தியமாய் வள்ளுவர் கோட்டத்தைப் பட்டா போட்டிருப்பேன் - மாநகராட்சிக்காரர்கள் புட்டாணியைக் கழற்றிவிடுவார்களே என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால் !! 15 நிமிடத் தேடலுக்குப் பின்னே அவரது கைகளில் இருந்த 7 புக்குகளுமே நமது டெக்ஸாஸ் ரேஞ்சரது தான் !! போதாக்குறைக்கு பின்னாடியே வந்த ஒரு 12 வயதுக்கு மிகா சிறுவன் - தன தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டே !! அவரோ லக்கி லூக்கையும், மதியில்லா முந்திரியையும் புரட்டிக் கொண்டே -"இதை வாங்கிக்கோ தம்பி" என்று கெஞ்சிப் பார்க்க - "நோ டாடி..டெக்ஸ் வில்லர் தான் சூப்பரா இருக்கும் !" என்று ஒரே போடாகப் போட "கணவாய் யுத்தம்" போணியானது ! சுருங்கச் சொல்வதாயின், இந்தப் புத்தக விழாவின் (நம்) கதையே இரவுக் கழுகாரைச் சுற்றியான கதை தான் ! விற்பனை வேகங்களுக்கு நம்மவர் அந்நியரல்ல தான் ; இதுவரையிலான புத்தக விழாக்களின் புள்ளி விபரங்களை மேலோட்டமாய்ப் பார்த்தாலே டெக்ஸ் & கோ.வின் வீச்சு எத்தகையது என்பது புரியும் ! ஆனால் இம்முறையோ விற்பனையில் ஒரு பாதி டெக்ஸாஸ் பிரஜைகளின் உபயம் ; பாக்கிப் பாதிக்குள் மிச்சம் மீதியிருக்கும் அத்தனை நாயக / நாயகியரும் சேர்ந்து கும்மியடித்துள்ளனர் ! அந்த மீதிக் கும்மியில் ஒரு இருபது சதவிகிதமாவது மும்மூர்த்திகள் & இஸ்பய்டர் சார் இடம்பிடித்துள்ளனர் எனும் பொழுது இவர்கள் முன்னே துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்பது புரிகிறது ! So இன்று முதல் CID லாரென்சர் ; டேவிடர் ; ஜானி நீரர் ; மாயாவியார் ; இஸுபைடர் சார் என்று மரியாதையோடு இவர்களை விளிக்கப் பழகிக் கொள்வதாகவுள்ளேன் ! 

பெண்களும் எத்தனை ஆர்வமான காமிக்ஸ் வாசகர்கள் என்பதை இம்முறை அழுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது ! Not that it was a secret - ஆனால் இம்முறை பெண்கள் துளியும் தயக்கமின்றி நமது இதழ்களை புரட்டவும், பரிசீலித்து வாங்கவும் முன்வந்த அழகை பார்க்கும் போது நிறைவாக இருந்தது ! சந்தா கூப்பனைக் கையில் வைத்துக் கொண்டு தமக்குள் ஆலோசித்துக் கொண்டிருந்த நடுவயதுத் தம்பதியருக்கு உதவுவோமே என்றபடிக்கு - A for Apple ; B for பிளாக் & ஒயிட் கதைகள் ; C for கார்ட்டூன்ஸ் என்று விளக்கியபடிக்கே - "வீட்டில் யார் படிக்க என்று சொல்லுங்க சார் ; எந்த சந்தா combination சுகப்படுமென்று சொல்கிறேன் !" என்ற நொடியில் அந்த இல்லத்தரசி என்னைப் பார்த்து முறைத்தார் !! "படிக்கப் போறது நான்தான் !!" என்று அவர் சொன்ன நொடியில் கை நிறைய ; பை நிறைய பல்ப் வாங்கினது போலொரு பீலிங்கு எனக்கு ! வழக்கமாய் கணவர்கள் நெளிந்து கொண்டே சந்தா கட்ட மனைவியரிடம் பெர்மிஷன் வாங்குவதை பார்த்துப் பழகியவனுக்கு - இம்முறை roles உல்டாவாகியிருப்பதை பார்த்த போது திகைப்பாய் இருந்தது ! நமது சின்ன வட்டத்தில் மகளிரணிக்கு ஒரு முக்கிய பங்குள்ளது guys ; தொடரும் காலங்களில் இந்த அணியின் ரசனைகளை அறிந்திடவும், அவற்றிற்கு நியாயம் செய்திடவும் நமக்கொரு கடமை காத்துள்ளது !! So அவர்களது கோணங்களிலும் இனி சிந்திக்க நாம் பழகிட வேண்டும் போலும் !! "30 நாட்களில் பெண்களின் வாசிப்பு ரசனைகளைத் தெரிந்து கொள்வது எப்படி ?" என்று எங்கேனும் புக் பார்த்தால் - one copy for me ப்ளீஸ் ! 

சனிக்கிழமை புலர்ந்த போதே நமது ஸ்டாலில் கணேஷ் kv சாரும் ; மாயாவிகாரு + இத்தாலிகாருவும் ஆஜராகியிருந்தனர் - விற்பனைகளுக்குள் லயித்தபடிக்கே ! இன்று கணேஷ் சாருக்கு DAY 4 - நமது ஸ்டாலில் & ஒவ்வொரு நாளும் மனுஷன் விற்பனைக்கு எடுக்கும் மெனக்கெடல்களை பார்த்தாலொழிய முழுமையாய்ப் புரிந்திட இயலாது ! இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நினைத்து வருபவர்களை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கச் செய்யும் அசாத்தியக் கலையைக் கரைத்துக் குடித்துள்ளதால் - ஸ்டாலுக்கு வந்த வாசகர்களும் பலர் புஜங்கள் கனக்கும் சுமைகளோடே வெளியேறியதை பார்க்க முடிந்தது ! நமது சேலத்து சூப்பர்மேன்  & ஈரோட்டின் எமகாதகரோ தத்தம் பங்குக்கு வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலும், அவர்களது தேடல்களுக்குப் பிரதிகளுமாய் வழங்கி அசத்திக் கொண்டிருந்தனர் ! ஒற்றை ஸ்டாலின் குறுகலான இடத்தினிலும் லாவகமாய்ப் புகுந்து எல்லோருக்கும் அவசியமான ஒத்தாசைகளை இந்த trio இன்றைக்கு செய்ததன் பலனை இரவின் விற்பனையினில் பார்த்திட முடிந்தது ! இந்தப் புத்தக விழாவினில் இதுவரையிலான top விற்பனை தினம் இன்றைய பொழுதே என்பது நிச்சயம் ஒரு தற்செயலான நிகழ்வல்ல !! காமிக்ஸ் அறிந்த நண்பர்கள் விற்பனைக்கு உதவிட இருக்கும் பட்சத்தில் என்ன மாயங்கள் நிகழ்கின்றன என்பதை நாள் முழுக்கப் பார்த்த நிறைவோடு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் - நாளைய பொழுதையும் இந்த அணி சூறாவளியாக்கிடுமென்ற உறுதியோடு !! 

Of course - இடைப்பட்ட வேளைகளில் - "இது எப்போ ? அது வருமா ?..இது எப்படி விற்றது ?" என்ற கேள்விகளை தொடுக்கத் தான் செய்தனர் ! நானும் எப்போதும் போல் ஒரு மொக்கைச் சிரிப்பை உதிர்த்து விட்டு மழுப்பும் வேலையை கனகச்சிதமாய் செய்து வைத்தேன் ! இடையிடையே நண்பர்கள் நிறைய பேர் தலைகாட்ட, அவர்களோடும் லேசான அரட்டை ; போட்டோக்கள் என்று பொழுது ஓடியது ! ஸ்டாலுக்கு முன்னே நாம் இடைஞ்சலாய் நின்றிடக் கூடாது ; மற்ற கடைகளின் முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிடக்கூடாது என்ற முன்ஜாக்கிரதை நண்பர்கள்  அனைவருக்குமே இருந்தபடியால், கிடைத்த ஓரம் சாரங்களில் நின்றபடியே பொழுதை ஒட்டிட முடிந்தது ! 2016 & 2017-ல் வந்த புக்குகள் ஒட்டு மொத்தமாய் வேண்டும் என்று குடும்பத்தோடு வருகை தந்திருந்த நண்பர் கோர, பத்தே நிமிடங்களில் குவித்து விட்டார்கள் நமது sales மும்மூர்த்திகள் !! இவர்களின்றி, நமது பணியாளர்கள் மாத்திரமே ஸ்டாலில் இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் பெப்பே பெப்பே தான் பதிலாகியிருக்கும் & அவர்களைக் கடிந்து கொள்வதிலும் அர்த்தம் இருந்திராது ! "முத்து காமிக்ஸ் & லயன் காமிக்ஸ் தான் எனது ஓவிய வாழ்க்கைக்கே அஸ்திவாரம்" என்று காதில் சொல்லிச் சென்ற பிரபல தினசரியின் கார்ட்டூனிஸ்ட் ; "க்ரீன் மேனர் ஏன் இரண்டுக்கு மேலே போடலை ?? Alan Moore கதைகள் வருமா - வராதா ? கிராபிக் நாவல்களில் அடுத்து என்ன ?" என்று மிஷின் கன் போல தாக்கிச் சென்ற இருபதே வயதான அடுத்த தலைமுறையின் பிரதிநிதி ; "ஆர்ச்சி வருமா - வராதா ?" என்ற blog நண்பர் ; "இங்கிலீஷ் புக்ஸ் ஏன் ஸ்டாலில் இல்லை ?" என்று மெல்லிய குரலில் கேட்ட ஆர்வலர் ; IT துறையில் கலக்கும் மகனுடன் வந்திருந்து அவர் காமிக்ஸ்களைத் தேர்வு செய்யும் ஆர்வத்தை ரசித்த தாய் ; "ஏம்மா..உனக்கு இன்னும் காமிக்ஸ் படிக்கிற வயசா -என்ன ?" என்று தாயாரைக் கேள்வி கேட்ட இன்றைய  யுவதி ; "இப்போ திருப்தியா ?" என்று கணவனிடம் பொறுமையாய்க் காத்திருந்தபடிக்கே கேட்கும் மனைவி - என்று நான் இன்று சந்தித்தது வாழ்க்கையின் வானவில்லின் பல பரிமாணங்களை !! 

விற்பனைப் புள்ளிவிபரங்கள் பற்றி தொடரும் நாட்களில் பேசலாம் guys ; ஆனால் இப்போதைக்கு இப்படி வைத்துக் கொள்ளுங்களேன் ரேங்க் பட்டியலை :

1 டெக்ஸ் வில்லர் & கோ.
2 மும்மூர்த்தீஸ் சார்கள்
3 லக்கி லூக் 
4 சிக் பில்
5 தோர்கல்

And "பிம்பிலிக்கா பிலாக்கி" awards பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் guys  !! அதனில் இடம்பிடிக்கவும் நிறைய ஆட்கள் ரெடி !! 

நண்பர்களிடம் விடைபெற்றுக் கிளம்பிய போது, ஒரு நூறு அழகான நினைவுகளோடு கிளம்பும் நிறைவு என்னுள் ! இன்னமும் 365 நாட்கள் உள்ளன - சென்னையின் வாசிப்பின் பெருமுகத்தை மறுபடியும் தரிசிக்க என்ற எண்ணம் ஒரு ஏக்கப் பெருமூச்சைத் தரவும் செய்தது ! நடையைக் கட்டும் வேளையில் அன்றைய நாளின் நினைவுகள் மனதில் நிழலாடிக் கொண்டேயிருக்க, ஒற்றை விஷயம் சகலத்துக்கும் மேலோங்கி நிற்பது போல் பட்டது ! தெரிந்தவர்களோ ; முதன்முறையாக இன்றைக்குத் தான் பார்ப்பவர்களோ - அந்த வேறுபாடுகள் துளியுமின்றி என்னிடம் பேச முனைந்த ஒவ்வொரு வாசகருமே அன்போடு - "பையன் கல்யாணம்லாம் நல்ல நடந்துச்சா சார் ?"  என்று வினவியது உள்ளுக்குள் உருக்கிய நிகழ்வுகள் ! எங்கோ ஒரு தூரத்து சிறுநகரில் இந்த பொம்மைப் புத்தகப் பணியில் சுற்றி வரும் எங்களை அவரவர் குடும்பத்தில் ஒரு சிறு அங்கமாக்கிப் பார்க்கும் அந்த அன்புகளுக்கு   நான் எவ்விதம் நன்றி சொல்வதென்று சத்தியமாய்த் தெரியவில்லை, !!  இதற்காகவேணும் ஆற்றலும், ஆயுளும் கோருகிறேன் ஆண்டவனிடம் !! 

மீண்டும் சந்திப்போம் all !! Have a beautiful & blessed Sunday !! 
























SUNDAY @ CHENNAI !!


AND A LAST DAY VISITOR !!

P.S :  Following is a Tweet from Ms.Kasthuri's Page :

My FAVORITE - முத்து காமிக்ஸ் . இரும்புக்கை மாயாவியையும் லக்கி லூக்கையும் மீண்டும் கிடைக்கபெற்றதில் ரொம்ம்ம்ப மகிழ்ச்சி !
லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ் Classic English comics as well- Lucky luke ! Iznogoud ! Modesty Blaise!

Sunday, January 14, 2018

பொங்கலோ பொங்கல் !!

நண்பர்களே,

வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! இல்லமெங்கும் சந்தோஷமும், வளமும் செழிக்கட்டும் ! கரும்பும், பொங்கலும், புதுப்படமுமாய் கலகலக்கும் ஜாலியான இந்நாளில் நமது காமிக்ஸ் இதழ்களுக்கும் ஒரு ஓரமாய் இடமிருப்பின் - சூப்பர் !! இந்த வேளையில் நொய்-நொய் என்று ப்ளேடு போடாமல் என்ன எழுதுவதென்று யோசிக்கிறேன் !! "பொங்கல்" என்றாலே "பொங்கல் மலரும்" மலர்ந்திடும் அந்நாட்களே மனதில் நிழலாடுகின்றன ! அதுவும் நமது லயனுக்கு "தலைப் பொங்கலாய்" அமைந்த "கொலைப்படை" இதழ் பற்றிய ஞாபகங்கள் as always பசுமையாய் தொடர்கின்றன தலைக்குள் ! அந்த இதழைப் பற்றியும், அதன் தயாரிப்புப் பின்னணி பற்றியும் ஏகமாய் எழுதி இருக்கிறேன் என்பதால் மறுக்கா அதே பாட்டைப் பாடப் போவதில்லை  ! 

மாறாக - "மாதம்தோறும் 4 இதழ்கள்" என்ற இன்றைய template-க்கு பிள்ளையார் சுழி போட்டுத் தந்த 1987-ன் தை மாதத்தை நோக்கி எண்ணக் குதிரைகளை ஓடச் செய்ய நினைக்கிறேன் !! இன்னும் எத்தனை தூரம் நாம் பயணம் போனாலும் சரி, எத்தனை புது உயரங்களை உணர்ந்தாலும் சரி - 20 வயதுக் கொயந்தை பைய்யனாய் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாய் இதே ஜனவரியில் அனுபவித்த ஒரு த்ரில்லை எட்டிப் பிடிக்க முடியாதென்றே சொல்லுவேன் !! அந்நேரத்துக்கு முத்து காமிக்ஸின் நிர்வாகம் என் கைகளுக்கு வந்திரா நிலையில் - அதுவுமே என் கண்களுக்கொரு போட்டிக் கம்பெனியே !! அச்சூழலில் - லயன் காமிக்ஸ் ; திகில் ; ஜுனியர் லயன் காமிக்ஸ் & மினி லயன் - என 4 இதழ்களோடு களமிறங்கத் துணிந்தது - அசட்டுத் தைரியத்திலா ? வெற்றிகளை உணர்ந்த குசும்பிலா ? அல்லது புதுசையெல்லாம் உங்களிடம் காட்ட புதுப் புது தடங்கள் வேண்டுமே என்ற ஆர்வக்கோளாறினாலா ? - சொல்லத் தெரியவில்லை இன்றளவிற்கும் !! எது எப்படியோ - அலிபாபாவின் பொக்கிஷக் குகையைத் திறந்து பார்த்தவனின் வாயைப் போல என்னதும் அகலமாய் விரிந்து கிடந்தது - பிரான்க்கோ-பெல்ஜியப் பேழையை மாத்திரமின்றி, இத்தாலிய கதைச் சுரங்கத்தினையும் திறக்க முடிந்திருந்த அக்கணங்களில் !! 

பற்றாக்குறைக்கு நமது 'தானைத் தலைவர் இஸ்பைடரின்' புதுப் புதுக் கதைகளையும், சட்டித் தலையனின் மெகா சாகசங்களையும் பொட்டலம் போட்டு வாங்கி வந்திருக்க -'ஐயோ..இந்த தெருவை வாங்கிப் போடவா ? இந்த ரோட்டை விலை பேசவா ? " என்ற கவுண்டரின் நமைச்சல் தான் எனக்குள்ளும் குடியிருந்தது ! மாதம் ஒன்றோ-ரெண்டோ தான் இதழ்கள் ; இதனில் குறைந்த பட்சமாய் 6 இடங்களை - ஸ்பைடர் + ஆர்ச்சி கூட்டணிக்குத் தந்தே தீர வேண்டிய கட்டாயம் எனும் போது எஞ்சிக் கிடைக்கும் 18 இதழ்களைக் கொண்டு நாம் அன்றைக்கு சீட் தர வேண்டியிருந்த கட்சித் தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு :

ரிப்போர்ட்டர் ஜானி
ப்ரூனோ பிரேசில்
கேப்டன் பிரின்ஸ்
ரெட்டை வேட்டையர்
லாரன்ஸ் & டேவிட் 
இரும்புக்கை நார்மன்
இரும்புக்கை உளவாளி
லக்கி லூக்
சிக் பில்
கராத்தே டாக்டர்
மறையும் மாயாவி ஜாக் ( ஹி..ஹி..ஞாபகம் இருக்கோ?)
சுஸ்கி & விஸ்கி 

இவர்கள் தவிர லெட்டர்பேட் கட்சிகள் ஏகமாய் இருக்கத் தான் செய்தன - ஸ்பைடர் குள்ளன் ; செக்ஸ்டன் பிளேக் ; மீட்போர் ஸ்தாபனம் etc etc என்று !! So ஒரு மெகா கூட்டணி ரெடி ; ஆனால் போட்டி போடும் களமோ மிகச் சொற்பமே என்ற நிலையில் துளியும் தயக்கம் தோன்றிடவில்லை - ஜுனியர் லயன் காமிக்ஸ் & மினி லயன் என 2 புது குட்டிகளை உலவ அனுமதிக்க !! அதுவரைக்கும் கலரில் நாம் முயற்சித்திருந்தது 1986 கோடை மலரில் - "ஈகில்மேன்" கதையினை மட்டும்தான் என்று ஞாபகம் ! பாக்கெட் சைசில், நியூஸ் பிரிண்டில் அந்த வர்ணங்களை இப்போது பார்க்கும் போது சிப்பு சிப்பாய் வந்தாலும், அதுவே அந்நாட்களில் நமக்கொரு அசாத்திய உயரம் என்பதை மறுப்பதற்கில்லை ! அந்த வண்ணப் பக்கங்களை புரட்டோ புரட்டென்று புரட்டுவதிலேயே என் விரல் ரேகைகள் தேய்ந்தது ஒருபக்கமெனில், "இந்த பாக்கெட் சைஸ் ; வண்ணம்" என்ற concept-ஐ நிரந்தரமாக்கினால் என்னவென்றே ஆர்வம் தலைதூக்கியது இன்னொரு பக்கம் !! 

அதிலும் எங்கோவொரு பழைய புத்தகக் கடையில் லுக்கி லூக்கின் WESTERN CIRCUS ஆங்கிலப் பதிப்பைப் படித்த நாள்முதலாய் அதனை தமிழில் வெளியிட்ட தீரும் ஆசை ஒரு வெறியாகவே தலைக்குள் உருமாறியிருந்தது ! விலையும் அந்நாட்களில் கட்டுக்குள் இருத்தல் அவசியமெனும் போது - ரொம்பவெல்லாம் யோசிக்க இடமிருக்கவில்லை ! "விலை ரூ.2 தான் ; முழு வண்ணம் தான் ; இதனில் எந்த compromise-ம் கிடையாது ; மிச்சம் மீதிக்கு நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோடாப்பா !! என்று தலை சொல்லிவிட, ஒரு நூறு தடவை கீழிருந்து மேலாய் costing போட்டுக் கொண்டேயிருந்தேன் ! 25 % ஏஜெண்டுகள் கமிஷன் + இன்னுமொரு 5 % புத்தகங்களை அனுப்பும் சரக்கு கட்டண வகையில் எனும் போது - நமக்கு மிஞ்சுவது புக் ஒன்றுக்கு ரூ.1 -40 மட்டுமே எனும் போது ஆந்தை முழி - பிசாசு முழியானது தான் மிச்சம் ! அன்றைக்கெல்லாம் இப்போதைப் போல ஒரே நேரத்தில் 4 வர்ணங்களை அச்சிடும் இயந்திரங்களும் சரி, pre press செயல்முறைகளும் சரி, நம்மிடம் லேது எனும் போது ஒற்றை ஒற்றை கலராய் தான் அச்சிட்டாக வேண்டும் ! பொதுவாய்ப் பொறுமையெல்லாம் போயே விடும் மாத இறுதியில் 'லொடக்கு-லொடக்கு' என்று ஒவ்வொரு வர்ணமாய் அச்சாவதைப் பார்க்கும் போது ! ஆனால் ஜுனியர் லயனின் அந்த முதல் all color இதழை அச்சிடும் சமயங்களில், புதுசாய் போட்ட குட்டிகளை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருக்கும் பூனையைப் போல மிஷின் ஹாலிலேயே கிடப்பேன் - ஒவ்வொரு கலரும் ஏறுவதை ரசித்துக் கொண்டே ! அதுமாத்திரமின்றி அப்போதுவரைக்கும்  கார்ட்டூன்கள் என்றால் மிஞ்சி மிஞ்சி விச்சு & கிச்சு ; கபிஷ் இத்யாதிகள் தான் கைதூக்கி நிற்கும் மொழிபெயர்ப்பு னுபவம் என்ற வகையில்  ! So முதல்தடவையாக ஒரு முழுநீள கார்ட்டூன் கதையை மொழிபெயர்த்ததும், அது எவ்விதம் அமைய போகிறதோ ? என்ற த்ரில்லுமே தலைக்குள் ததும்பிக் கிடந்தது ! அப்போதெல்லாம் பைண்டிங் பணிகள் நம்மிடத்திலேயே தான் நடைபெறும் என்பதால் அச்சு முடிந்த அரை மணிநேரத்துக்கெல்லாமே ஒரு மாதிரி இதழைத் தூக்கிக் கையில் ஏந்த சாத்தியமாகியது !! அதிலும் ஒரு நீளமான ஹாட்லைன் மாதிரி ஏதோவொன்றை முதல் பக்கத்தில் எழுதி வைத்திருக்க - அதை புதுசாய்ப் படிப்பது போல் வரி விடாது படித்துப் படித்துப் பார்த்துக் கொண்டேன் ! அட்டைப்படத்தில் ஏதாச்சும் வித்தியாசம் காட்ட வேண்டுமே என்று புள்ளிப் புள்ளியாய் நர்லிங் செய்ததும் சரி ; இதழை ஏகப் பெருமிதத்தோடு படைப்பாளிகளுக்கு அனுப்பியதும் சரி - lifetime memories !! அன்றைக்கே hardcover ; அட்டகாச தரம் என்ற கப்பலில் 'பூவாய்ங்' என்று ஹார்ன் அடித்தபடிக்கே பயணம் செய்தவர்களுக்கு அருகாமையில் ஒரு தம்மாத்துண்டு தோணியை  ஒட்டிக் கொண்டே - "எப்பூடி ?" என்று கேட்கிறோமே என்ற லஜ்ஜையெல்லாம் அன்றைக்கு எழவேயில்லை எனக்கு - simply becos நமக்கு அன்றைக்கு அந்தத் தோணியே ஒரு cruiser-க்கு சமானம் ! 

இந்தக் கூத்து ஒருபக்கமெனில் - அதனில் பாதி விலையில் "மினி-லயன்" என்ற பெயரில் இன்னொரு பாக்கெட் சைஸ் ஆக்ஷன் கதைவரிசை கச்சை கட்டி நின்றது ! ACTION லைப்ரரி என்றதரு fleetway வரிசையினில் வெளியான கதைகளை அங்கே களமிறக்கியிருந்தோம் ! வெற்றி-தோல்விகள் என்ற கணக்குகளுக்கெல்லாம் அப்பால் நின்று அந்த நாட்களை இன்றைக்கு நினைவுகூர்ந்தால் - இந்தப் பயணத்தில் நாமெல்லாம் ஒன்றிணைந்த இரகசியம் மெது மெதுவாய்ப் புரிந்த மாதிரியுள்ளது ! அன்றைக்கே கனவு காணும் உரிமைகளை எனக்குத் தந்துள்ளீர்கள் ; அந்தக் கனவுகள் உங்களது கனவுகளாகவும் உருமாற்றம் செய்து கொள்ளும் பெருந்தன்மை காட்டியுள்ளீர்கள் ; காலப்போக்கில் உங்கள் கனவுகளே என் கனவுகளாகவும் மாறிப் போகும் மாயாஜாலம் நிகழ்ந்துள்ளது ! இந்த மந்திர நிகழ்வுகளுக்கெல்லாம் துவக்கப் புள்ளி 30 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு தை மாதத்தின் நாட்களிலும் புதையுண்டு இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கும் போது சந்தோஷமாகவும், மலைப்பாகவும் உள்ளது - நாட்களது ஓட்டத்தை எண்ணி !! "மனித வேட்டை" என்று திகிலில் ஒரு த்ரில்லரும், "பழி வாங்கும் பாவை" எனும் TEX சாகசமும்  (அதுவும் பாக்கெட் சைசில் !!) அந்த மாதத்தை நிறைவு செய்திருக்க, மறக்க இயலா நாட்களாய் அமைந்து போயின அவை !! Phew !! 360 மாதங்கள் ஓடிவிட்டன !! 

Back to real time - இதோ காத்திருக்கும் அடுத்த 'தல' சாகஸத்தின் அட்டைப்பட preview ! மீண்டும் முன் + பின் - ஒரிஜினல் டிசைன்கள் - லேசான வர்ண மாற்றங்களோடு மட்டும் ! And உட்பக்கங்களில் சித்திர துல்லியம் தொடர்கிறது - இன்னுமொரு ஓவியரின் கைவண்ணத்தில் ! தெறிக்கச் செய்யும் ஆக்ஷன் காத்துள்ளது guys !! அது மட்டுமன்றி - பிப்ரவரியில் COLOR TEX பிரீ இதழும் உண்டு - ABCD சந்தா நண்பர்களுக்கு ! இப்போது வரைக்கும் சந்தாவில் இணைந்திருக்க நண்பர்கள் இனியும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? 
சென்னைப் புத்தக விழாவினில் ஆரம்ப 2 நாட்கள் நமக்கு விற்பனையில்  மிதமே என்றாலும்  நேற்றைக்கு அட்டகாச sales ! தொடரும் விடுமுறைகளிலும் விற்பனை களை கட்ட நமக்காக வேண்டிக் கொள்ளுங்களேன் guys - கிட்டங்கியின் சுமை ஆளை அசத்துகிறது !! Before I sign off - இதோ நம் ஆபீசில் இன்று காலை நம்மவர்கள் பொங்கல் வைத்து அசத்திய காட்சி ! இது எனக்கு 33 -வது வருஷம் பணியில் பொங்கல் கொண்டாடும் வகையில் ; ஆனால் முதன்முறை இது போலொரு அழகான பொங்கலை கொண்டாடுவதில் !! Lovely start to my day !! Bye all !! See you around !
 PHOTOS FROM CHENNAI BOOK FAIR - courtesy நண்பர் k v ganesh !!








Saturday, January 06, 2018

பழசும்..புதுசும்...!

நண்பர்களே,

வணக்கம். So far…so good என்பேன் ! நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திருக்கும் ! வருஷத்தின் ஆரம்பம் அழகாய் அமைந்தால் தொடரும் மாதங்கள் பின்தங்கிடாது என்ற நம்பிக்கையை 2017 நமக்கு ஊட்டியது ! சத்தமின்றி யுத்தம் செய்தவர் போன வருடத்தை அதகளப்படுத்த உதவியதையும், அதைத் தொடர்ந்த நாட்களில் கியர்களை ‘சட் சட்‘டென்று மாற்றி வேகத்தை அதிகப்படுத்த முடிந்ததையும் மனசு வாஞ்சையோடு நினைவு கூர்கிறது ! இம்முறையோ அந்தப் பொறுப்பை ஆணழகர் தோர்கல் கையில் எடுத்திருக்கிறார் ! பார்க்கலாமே – எஞ்சி நிற்கும் 11 மாதங்களும் நமக்கென்ன கைவசம் வைத்துள்ளதென்பதை !

ஹார்ட்கவர் தோர்கலும், ஆல்பம் சைஸிலான கிராபிக் நாவலும், பாக்கெட் சைஸிலான ஸ்பைடரும், முதல் பார்வையிலேயே  கவனங்களை தம் பக்கம் ஈர்த்திடுவர் என்பது புரிந்தாலுமே – எனக்குள் ஒரு சன்னமான பகுதியானது “பிறந்த நாள் பிள்ளை” மீதே லயித்து நின்றது ! "‘தல‘ பற்றிய கவலை ஏனோ???" என்று தோன்றலாம் தான் – ஆனால் 2017 நம் மத்தியில் அவருக்கொரு மித வருஷம் என்பதில் என்னளவில் ஐயமில்லை ! முத்தாய்ப்பாக – “அழகாய் ஒரு அராஜகம்” ரொம்பவே சுமாரானதாய் நமக்கு அமைந்திட, சென்றாண்டுக்கு டெக்ஸ் விடைதந்த விதத்தில் எனக்கு ரொம்பவே சங்கடமிருந்தது ! சகலத்தின் மூலகாரணமும் எனது கதைத்தேர்வுகளே என்பது அப்பட்டமாய் புரிந்த போது கையை நிறையவே பிசையத் தான் வேண்டி வந்தது ! வித்தியாசமான களங்களில் நம்மவர் உலவிட வேண்டுமென்ற வேகத்தில் தான் “ஆவியின் ஆடுகளம்”; “அராஜகம் அன்லிமிடெட்”; “வெறியனின் தடத்தில்”; “கவரிமான்களின் கதை”; “அழகாய் ஒரு அராஜகம் எல்லாமே தேர்வாயின ! ஆனால் களங்களில் வேறுபாடு தென்பட்டாலும், கதைகளில் வீரியம் குறைவாய் இருப்பின், ரிசல்ட் சுகப்படாது என்பதை சென்றாண்டு சுட்டிக் காட்டியது !  “அட மடப் பயலே… என்ன தான் தலைவர் காமெடி பண்ணினாலும்; குணச்சித்திர ரோல்கள் பண்ணினாலும் – நாம் ஏங்குவதெல்லாம் அந்த ‘பாட்ஷா‘வுக்குத் தானே?” என்று கொஞ்சம் லேட்டாக ஞானோதயம் புலர்ந்த போது – நமது ‘தல‘யிடமும் நாம் எதிர்பார்த்திடுவது அந்தத் தெனாவட்டு ஸ்டைலையும் தெறிக்கும் அதிரடிகளையும் தானே ? என்று புரிந்தது. So நடப்பாண்டின் கதைகள் சகலத்திலும் அந்த ‘டெக்ஸ் டிரேட்மார்க்‘ நிச்சயம் இருந்திட வேண்டுமென்று தீர்மானித்தேன் ! 

பரிச்சயமான அதே ரயில் தண்டவாள போட்டிச் சண்டைகள் சார்ந்த கதையா ? படித்துப் பழகிய கொலைவெறியர்கள் வேட்டையா? பல முறை ரசித்துள்ள செவ்விந்திய சீற்றங்கள் பற்றிய சாகஸமா ? No problems at all...வரணும்… வரணும்… அவசியம் வரணும் என்று சொல்லி வைத்தேன் ! அவற்றின் துவக்கப்புள்ளியாக வருஷத்தின் முதல் Tex சாகஸமே அனல் பறக்க அமைந்திட வேண்டுமே என்ற ஆர்வம் முன் எப்போதையும் விட இம்முறை அதிகமிருந்தது ! அதுவும்  Tex–ன் ஆண்டு # 70 இது எனும் போது, சொதப்பல்களுக்கு இடம் தந்திடலாகாதே என்ற பீதியும் உலுக்கி எடுத்தது ! அந்த வகையில் ஜனவரியில் நான் விரல்களைக் குறுக்கியபடியே காத்திருந்த காரணங்களுள் “ஒரு கணவாயின் கதை” பற்றிய அக்கறையும் பிரதானமானதே ! அட்டைப்படத்தில் ஆரம்பித்து, சூறாவளி ஆக்ஷனோடும், சித்திர ரம்யத்தோடும் டெக்ஸ் & கார்சன் பயணிப்பதை நீங்கள் ரசிக்கத் தொடங்கிய போது தான் இழுத்துப் பிடித்த மூச்சை லேசாக விட முடிந்தது எனக்கு ! விராட் கோஹ்லியாகவே இருந்தாலும், நாலு சுமாரான இன்னிங்ஸ்க்கு அப்புறமாய் களமிறங்கும் போது நெஞ்சம் 'படக்' 'படக்' என்று நமக்கு அடிக்கத் தானே செய்யும்?

And பிப்ரவரியின் காத்திருக்கும் “வெண்பனியில் செங்குருதி” இதே டெம்போவில் தடதடக்கும் இன்னொரு TEX எக்ஸ்பிரஸ் என்பேன் ! இம்முறையும் கார்சன் சளசளத்துக் கொண்டே கூட வர, இந்த சாகஸ ஜோடி கனடாவின் பனிமண்டலத்தினில் ஒரு வேட்டையை அரங்கேற்றுகிறது! மீண்டும் கதாசிரியர் மௌரோ போசெல்லி தான் ! So நல்லதொரு ஆரம்பத்தை அழகாய் முன் எடுத்துச் செல்ல இந்த ஆல்பம் நிச்சயம் உதவும் என்பேன் ! “கணவாயின் கதை”க்கும் சரி, காத்திருக்கும் அடுத்த இதழுக்கும் சரி, 2 ஒற்றுமைகளை உள்ளன! இரண்டுக்குமே கதாசிரியர் போசெல்லி தான் என்பது மட்டுமன்றி – இரண்டுமே சமீபப் படைப்புகளே! “கணவாயின் கதை” போனெல்லியின் TEX லிஸ்டில் 614 & 615 ! & “வெண்பனியில் செங்குருதி - 544 & 545 ! So தற்போதைய Tex எடிட்டர்கள் டெக்ஸுக்கென current-ஆக என்ன பாதை நிர்ணயம் செய்துள்ளார்களோ – அதனை நாமும் பின்தொடர்ந்து பார்ப்பதில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! Your thoughts guys ?

Looking around – டெக்ஸின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டம் இத்தாலியில் முழுவீச்சில் துவங்கியுள்ளது. அங்குள்ள முக்கிய இத்தாலிய தினசரி செய்தித்தாளோடு கூட்டணியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நமது ரேஞ்சரின் டாப் சாகஸங்களுள் ஏதேனுமொன்று வண்ணத்தில், ஹார்ட் கவரில் நியூஸ்பேப்பரோடே விற்பனைக்கு வருகிறது ! இலவசமாயல்ல – ஆனால் சகாயமானதொரு விலையில் ! இது பற்றாதென்று ஒரு பருமனான ஸ்டிக்கர் கலெக்ஷனும் வாசகர்களுக்கென அதே நியூஸ் பேப்பரோடு கிடைத்திடும் ! ஓவியர் க்ளாடியோ வில்லாவின் அட்டகாசமான அட்டைப்பட டிசைன்கள் ஸ்டிக்கர்களாக வழங்கப்பட, ஒரு ஆல்பத்தில் அவற்றை ஒட்டிப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம் ! சூப்பரான ஐடியாவாகத் தான் படுகிறது ! நாமும் இதனை நடைமுறைப்படுத்திப் பார்க்க முனைவோமா guys?


கௌபாய் உலகின் சேதிகள் இன்னும் முடிந்தபாடில்லை என்பேன் ! And இதுவுமே ஒரு செம சுவாரஸ்யமான தகவல் ! ஓசையின்றி நம்மையெல்லாம் வீழ்த்திய திருவாளர் ட்யுராங்கோவின் படைப்பாளி Yves Swolfs-ஐ ஞாபகமிருக்கும் தானே ? ஒரு இடைவெளிக்குப் பின்பாய் மனுஷன் இன்னமுமொரு அட்டகாச கௌபாய் தொடரை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளார் ! ‘LONESOME” என்ற பெயரில் ட்யுராங்கோவின் கதை / சித்திர பாணியிலேயே இந்தப் புதுத் தொடரை தயார் செய்துள்ளார் ! வெகு சீக்கிரமே வண்ணத்தில் வெளியாகவுள்ளது – இதன் ஆல்பம் # 1! பாருங்களேன்:

இதற்கான விபரங்களை; டிஜிட்டல் கோப்புகளைக் கோரியுள்ளோம் பரிசீலனை செய்திட ! பரபரப்பான கதையாக இருந்து – one shot களாகவும் இருக்கும் பட்சத்தில் இவரையும் தமிழ் பேச வைத்து விடலாமா ?  அல்லது ட்யுராங்கோ முற்றுப் பெறும்வரைக்கும் பொறுமையே பெருமை சேர்க்குமா ? What say all?

பழசு – புதுசாகும் படலம் இன்னொரு நாயகரின் விஷயத்திலுமே அரங்கேறி வருகிறது ! நமது சாகஸ வீரர் ரோஜரின் புதுயுக அவதார் – இரு வெற்றிகரமான ஆல்பங்களில் தொடர்கிறதாம் ! நம்மளவில் இவர் ஒரு ஓ.கே. நாயகரே என்றாலும் ஐரோப்பாவில் இவருக்கென்றே ஒரு கணிசமான ரசிகர் base உள்ளது ! பழசை சிலாகிக்கும் அவர்கள் இந்தப் புது பாணிக்குமே ‘ஜே‘ போட்டுள்ளாகள்! பாருங்களேன் !

புது பாணி artwork ; கதையோட்டத்தில் வேகம் - என்று இந்த இரு ஆல்பங்களுமே doing well என்று கேள்விப்பட்டேன் ! நாமும் இந்த ரோஜர் 2 .0 க்கு சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா ? அல்லது போட்ட ரெட் கார்டு - போட்டது தானா ? என்ன நினைக்கிறீர்கள் ? 

And பிப்ரவரியின் மறுபதிப்பு நாயகர் இவரே என்பதால் – இதோ அவரை நாம் முதன்முதலாய் பரிச்சயம் செய்து கொண்ட இதழின் new look ராப்பர் ! 
இது தான் ஒரிஜினல் டிசைன் என்பதால் பட்டி – டிங்கரிங் ஏதுமின்றி அப்படியே பயன்படுத்தியுள்ளோம். கதையின் எழுத்துரு நமது 1986-ன் அட்டைப்படத்திலிருந்து இரவல் வாங்கியது ! மாதா மாதம் நமது மும்மூர்த்திகளும் ஸ்பைடர் சாருமாய் ஆக்ரமித்து வந்த மறுபதிப்பு slot-கள் வண்ண நாயகர்களின் ஸீட்டாக இடம்மாறும் நேரத்தை நெருங்கி விட்டதென்பதைப் பறைசாற்றும் ஒரு ஜாலியான வேளையாகவும் இதைப் பார்த்திடலாம் ! “மர்மக் கத்தி” உங்களுக்கு முதல் வாசிப்பெனில் – நிச்சயம் அந்த க்ளைமேக்ஸ் புருவங்களை உயரச் செய்யும் - திகைப்பில் !

புது ஆல்பங்கள் பற்றிய சேதிகளில் இருக்கும் போது – நமது ஆதர்ஷ மதிமுகப் பெண்மணி பற்றி ! (வை.கோ. அவர்களின் ம.தி.மு.க. கட்சியில்லை சாமி!!) இதோ வெகு சமீபமாய் வெளியாகி சூப்பராக விற்பனையாகி வரும் Lady S –ன் ஆல்பம் # 13-ன் preview ! 2014 முதலே இத்தொடரிலிருந்து கதாசிரியர் வான் ஹாம் (thank you radja sir !!) ஓய்வு பெற்று விட, இங்கேயும் ஓவியராக இருந்து வந்த அய்மண்ட் – கதாசிரியரின் தொப்பியையும் சேர்த்து இப்போது அணிந்து கொண்டிருக்கிறார் ! இது அவரது மூன்றாவது படைப்பு என்ற போதிலும், இதுவே அவரது best என்கிறார்கள் ! வரும் நாட்களில் ஒரு “மதிமுக ஸ்பெஷல்” போட்டு விடலாமா ?? – என்ற சொல்கிறீர்கள் ?
மீண்டும் சந்திப்போம் all ! ஜனவரியின் விமர்சனங்கள் இன்னமும் தொடர்ந்திடலாமே ?

And சந்தாப் புதுப்பித்தல்கள் இன்னமும் தொடர்ந்தால் அற்புதமாகயிருக்கும் ! Please do join in all : http://lioncomics.in/15-2018-subscription
கிளம்பும் முன்பாய் ஒரு ஜாலியான caption போட்டி - இம்முறையோ நமது மீசைக்கார கர்னலைக் கொண்டு ! இதோ அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தின் அட்டைப்படம் !! இதற்குப் பொருந்துமாறு நயமான caption ஒன்றை எழுதிடலாமே guys ? பரிசாக ஒரு LMS கு-ண்-டு புக் !! 

Bye now! See you around !



இன்று (10-Jan-18) சென்னையில் துவங்கும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 304 !! குடும்பத்துடன் ஒரு விசிட் அடித்திடலாமே - ப்ளீஸ் ?