Saturday, November 25, 2017

ஒரு பொடிப் பதிவு..!

நண்பர்களே,

வணக்கம். நாட்கள் தட தடக்கின்றன ;  தூரத்துப் புள்ளியாய்த் தெரிந்ததொரு நாள் கிட்டே நெருங்க நெருங்க. 'லப் டப்'களுமே தட தடக்கத் துவங்கி விட்டன ! And  நவம்பர் 30 ஜுனியரின் திருமண தினமாக மாத்திரமன்றி  , நமது டிசம்பர் வெளியீடுகள் தயாராகிடும் தருணமாகவும் இருந்திடவுள்ளது என்பதும் - adds to the fun  ! அடிக்கின்ற குட்டிக் கரணங்களோடு கூடுதலாய் ஒன்றை சேர்த்து அடித்து வைத்து, ஒரு நாள் முன்பாக இதழ்களைத் தயார் செய்திட ஆன மட்டிலும் முயன்று வருகிறோம் ! நீலப் பொடியர்களின் அச்சு வேலைகள் மாத்திரமே பெண்டிங் இருக்க, இதர இதழ்கள் சகலமும் பைண்டிங்கில் மையம் கொண்டுள்ளன !

And இம்மாதத்தின் most expected இதழாய் இருக்கப் போகும் "கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்" வண்ணத்தில் சும்மா கண்ணைப் பறிக்கிறது ! பற்றாக்குறைக்கு கமான்சேவின்வண்ணப் பக்கங்களும் அடர் கலரிங்கோடு  டாலடிக்கின்றன !  அவ்வப்போது ஆபீஸ் பக்கமாய் எட்டிப் பார்க்கும் தருணங்களில் - ஓவியர் ஹெர்மனின் ஒட்டு மொத்தப் பரட்டைப் பார்டிகளும் ஒன்றிணைந்து நமது அச்சுக் கூடத்தை  ஒரு கலக்கலான ரங்கோலியாய் மாற்றி வருவதை பார்க்கும் போது - ஜீனியஸ் smurf போல ஆட்காட்டி விரலை உசத்திக் கொண்டே - "கலர்லே கலக்கலாப் பொடியுறது நல்லது !! " என்று சொல்லிப் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் கொப்பளிக்கிறது  !  

So சூப்பர் 6-ன் இறுதி இதழும், நல்லதொரு முகாந்திரத்தின் பொருட்டு நினைவில் நிற்கும் ஒரு இதழாய் அமையுமென்ற நம்பிக்கை  இப்போது நிறையவே எனக்குள் ! 12+ மாதங்களுக்கு முன்பாய் "சூப்பர் 6" என்றதொரு தடத்தை நிறுவ முயன்ற நாட்களையும். ; அன்று என்னுள் நிலவிய சன்னமான பயத்தையும் ; உங்களிடையே இழையோடிய மெல்லிய அவநம்பிக்கையையும்  இப்போது நினைவுகூர்ந்திடும் போது  - இந்தத் தடத்தின் மீதான பயணத்தின் த்ரில் எத்தகையதாக இருந்துள்ளதென்பதை  முழுசாய் உணர்ந்திட முடிகிறது ! தொடரவிருக்கும் புத்தாண்டினில்,  இந்த "சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த "பழசு + புதுசு" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை ! பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று !  

And இதோ - டிசம்பரின் பொடியர் பட்டாளத்தின் அட்டைப்பட முதல் பார்வை :  
எப்போதும் போலவே - அட்சர சுத்தமாய் ஒரிஜினல் டிசைனேயே பயன்படுத்தியுள்ளோம் - படைப்பாளிகள் உருவாக்கித் தந்திருக்கும் அந்த ஸ்மர்ப்ஸ் லோகோவுடன் ! கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் ! ஒன்று : "ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது !" என்று சொல்லக்கூடிய அணி ! இரண்டாவதோ - "ஹை...சூப்பரப்பு ! கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி !" என்றிடும் அணி ! So நான் பில்டப் தந்தாலும் சரி, தராது போனாலும் சரி - அவரவரது நிலைப்பாடுகளை பெரிதாய் மாற்றிக் கொள்ளப் போவதாய் எனக்குத் தோன்றவில்லை ! ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம்  புதிதாய் ரசிக்கலாம் போலும் ! And "விண்ணில் ஒரு பொடியன்" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் ! செமத்தியான கதைக் களம் ; பற்றாக்குறைக்கு "பொடி" பாஷைக்குப் போட்டியாய் ஒரு சமாச்சாரமும் இருப்பதைக் காணப் போகிறீர்கள் ! கொஞ்சமே கொஞ்சமாய் இந்தப் பொடியர்கள் உலகினை ரசிக்க நேரமெடுத்துக் கொள்ள முடிந்தால் - ஒரு அற்புத வாசிப்பு நிச்சயம் என்பேன் ! Give it a try guys ?
தொடரும் ஆண்டினில் இவர்களுக்கு slots மிகக் குறைவே என்பதால் - காத்திருக்கும் இந்த இதழினை நீங்கள் ரசிக்கும் பாங்கைப் பொறுத்து  அதன் மறு ஆண்டினில் நீலர்களின் பங்கீடுகளைச் செய்திட வேண்டி வரும் ! So இது நிரம்பவே முக்கியத்துவம் கொண்ட இதழ் என்பேன் !

நடப்பாண்டினில் எஞ்சி நிற்பது "நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவல் மட்டுமே என்பதால் - effectively 2017-ன் main stream அட்டவணையினைப் பூர்த்தி செய்திடுகிறோம் ! ட்யுராங்கோவோடு வருஷத்தைத் துவக்கியது நேற்றைக்குப் போலிருப்பினும், மாதங்கள் 12 அசுர கதியில் பயணத்திருப்பது புரிகிறது ! கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய எனது தலைக்கு - வீட்டுக்குப் போகும் பாதையே சரியாய் நினைவில் இல்லையெனும் பொழுது - நாம் தாண்டி வந்துள்ள ஒரு வண்டி ஆல்பங்களை நினைவு கூர்ந்திடக் கோரினால் "பிதாமகன்" விக்ரம் போல முழிக்க மட்டுமே முடிகிறது ! ஆனால் மெது மெதுவாய் நிதானமும், இயல்பு வாழ்க்கையும் திரும்பிடும் ஒரு நேரத்தில் -2017 ன்  ்இந்தப் பயண அனுபவத்தை  நிதானமாய் அசை போட்டுப் பார்க்கும் ஆசை ததும்புகிறது எனக்குள் ! ஒவ்வொரு ஆண்டும் நிறைய குட்டிக்கரணங்கள் போட்டது போலவே தோன்றுவது வாடிக்கை தான் ; ஆனால் இம்முறை ஆண்டின் 'ஹிட்' எண்ணிக்கை வழக்கத்தை விட சற்றே அதிகம் என்ற உணர்வு தலைதூக்குகிறது ! உங்கள் பார்வைகளில் தென்படும் கருத்தே பிரதானம் எனும் பொழுது -  டிசம்பரின் நடுவாக்கில் உங்களைக் கருத்துச் சொல்லக் கோரிட நினைத்தேன் !  "தொடரும் ஆண்டின் அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - தற்போதைய performance பற்றிய அபிப்பிராயங்களால் பெருசாய் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது ?" என்ற கேள்வி எழலாம் தான் ! ஆனால் கதைத் தேர்வுகள் என்ற பரீட்சையில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு இக்ளியூண்டு ஆர்வமும் ; உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எத்தனை தூரம் நியாயம் செய்துள்ளோம் என புரிந்து கொள்ளும் உத்வேகமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! So டிசம்பரில் ஒரு வண்டிக் கேள்விகளோடு உங்கள் குடல்களின் நீள, அகலங்களை ஆராய்வதாய் உத்தேசம் ! தயாராகிடுங்களேன் ப்ளீஸ் ? (ஏதேனும் மணிப்பூர் , மிசோரம்  பக்கமாய் டிரிப் அடிக்கும் எண்ணங்கள் இருப்பின் - டிசம்பர் அதற்கொரு உருப்படியான பொழுதாய் அமைந்திடலாம் ! )

புத்தாண்டைப் பற்றி ; புதிய திட்டமிடல்களைப் பற்றி நிறைய பேசவுள்ள போதிலும், அவற்றை தொடரும் வாரங்களுக்கென வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன் ! இப்போதைக்கு என் முன்னே நிற்கும் ஒரு அழகான மெகா பொறுப்பை செவ்வெனே நிறைவேற்றிட ஆண்டவனின் ஆசிகளும், உங்களின் வாழ்த்துக்களும் அவசியம் என்பதால் - அவையிரண்டின் பொருட்டும் கைகூப்பி நிற்கிறேன் ! உங்கள் முன்னே வளர்ந்த பிள்ளையை நேரிலோ, தொலைவிலிருந்தே மானசீகமாயோ வாழ்த்தவிருக்கும் ஒவ்வொரு அன்புள்ளத்துக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளும் ! And சின்னதொரு அட்வான்ஸ் வேண்டுகோளும் : தயைகூர்ந்து திருமண விழா சார்ந்த புகைப்படங்களை FB-ல் ; வலைப் பதிவுகளில் ;  வாட்சப் க்ரூப்களில் என்று பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் ? மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy  மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே  ! Hope you understand folks !!

மீண்டும் சந்திப்போம் !! Have a great weekend !!

P.S : சமீபமாய் கண்ணில் பட்டதொரு படமிது ! பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது ! சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் !

Sunday, November 19, 2017

மீண்டும் கோட்டைச்சாமி !

நண்பர்களே,

வணக்கம். 2012-க்குப் பின்பான நமது ஒவ்வொரு இதழோடும் ஏதேனுமொரு ஞாபகம் தீர்க்கமாய் எனக்குள் அடையாளமாய் ஒட்டித் தொடர்கிறது என்பேன் ! துவக்க காலத்து நினைவுகள் - ஆயுட்கால நினைவுகள்  என்பதற்கு அடுத்த இடத்தை கடந்த 5+ ஆண்டுகளின் அனுபவங்கள் கெட்டியாய்ப் பிடித்து நிற்கின்றன !  சென்னையின் ஒரு அடைமழை நாளை பராக்குப் பார்த்துக் கொண்டே “என் பெயர் லார்கோ”வை எடிட் செய்தது ; ஆளரவமிலா ஒரு நிசப்த ஞாயிறு முழுக்க “கான்சாஸ் கொடூரனின்” பணிகளில் செலவிட்டது ; ஒரு அமெரிக்கப் பயணத்தின் போது 2014-ன் அட்டவணைக் கதைகளுக்கெல்லாம் பெயர்கள் தேர்வு செய்தது ; ஜெர்மனியின் கலோன் தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து LMS-க்கான costing போட்டுப் பார்த்தது ; ஈரோடு செல்லும் ரயிலில் “இரவே... இருளே... கொல்லாதே”யின் மொழிபெயர்ப்பை படித்துச் சென்றது ; தாம்பரத்தின் பிளாட்பாரத்தில் அமர்ந்து “மின்னும் மரணம்” எடிட்டிங்கோடு மல்யுத்தம் பண்ணியது – என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! So “சிங்கத்தின் தலை நரைத்த வயதில்” என்ற பகுதியினை என்றைக்கேனும் எழுதுவதாகயிருப்பின் – நிச்சயமாய் நினைவுகளுக்கோ; எழுதச் சமாச்சாரங்களுக்கோ பஞ்சமிராது என்றமட்டிலும் நிச்சயம் ! அந்த நினைவுப்பேழைச் சமாச்சாரங்களின் பட்டியலில் இந்த டிசம்பரின் கமான்சே இதழுமே நிச்சயமாய் இடம் பிடிக்குமென்பேன் !

ஏராளமான மற்ற பணிகளுக்கு மத்தியில் – நமது காமிக்ஸ் சார்ந்த வேலைகளைப் பூர்த்தி செய்திட நாக்குத் தொங்க முயற்சித்திருக்கிறேன்...! ஒரே நேரத்தில் ஏகப்பட்ட இதழ்களை இழுத்து விட்டுக் கொண்டு விழி பிதுங்கத் திக்குமுக்காடிய அனுபவமும் உள்ளது! ஆனால் மொத்த மண்டையும் முற்றிலுமாய் வேறொரு திக்கில் லயித்து நிற்கும் போது - ஒரு சிரமமான இதழோடு ஐக்கியமாக முயற்சிப்பதென்பது எத்தனை முதுகு பழுக்கும் முஸ்தீப் என்பதைக் கடந்த வாரமானது எனக்குக் காட்டியுள்ளது ! கமான்சே கதைத் தொடரினில் பணியாற்ற கதாசிரியர் க்ரெக் தயாராகிய தருணத்தில் நிச்சயமாய் ஏதோவொரு மெகா தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் – இந்தத் தொடரின் ஸ்கிரிப்ட்களும் சரி ; வசனங்களும் சரி, ஒரு சராசரியான கௌ-பாய் தொடருக்கான template-ல் இருந்திடவே கூடாதென்று ! கேப்டன் டைகர் கதைகளில் ஆழம் இருக்கும்! ஆனால் வரிகளில், சம்பாஷணைகளில் ஜாலியான கௌபாய் வாடை தான் தெறிக்கும் ! டெக்ஸ் கதைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம் - நேர்கோட்டுக் கதைகள்; குற்றால நீரோடை போலான ஸ்கிரிப்ட் ! ஆனால் கமான்சே கதையின் நெடுகிலும் ரொம்பவே மாறுபட்டதொரு பாணி அமலில் இருக்கிறது ! இவற்றை பிரெஞ்சில் நேரடியாய் படித்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு நான் எழுதுவதன் பொருள் நிச்சயமாய் இன்னும் ஒரு படி கூடுதலாய்ப் புரிந்திருக்கும்! ஒருவித தத்துவார்த்தப் பார்வையோடு –வாழ்க்கையின்  அனுபவப் பாடங்களை ரெட் டஸ்ட் மூலமாக நாம் உணர்ந்து கொள்ளும் விதமாய் ஸ்கிரிப்ட்டை வடிவமைத்திருப்பதாக எனக்கு நிறைய முறைகள் தோன்றியதுண்டு ! அது மாத்திரமின்றி – நேர்மறையான வசனங்கள் என்பதற்குப் பதிலாய் மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறை எழுத்து பாணிக்கே இங்கே க்ரெக் ‘ஜே‘ போட பிரயத்தனப்பட்டிருக்கிறார் !

இவன் எங்க சித்தப்பாரு சிங்காரவேலுவின் சின்னப் பேராண்டி மொட்டையப்பன்” என்று சொல்வது வழக்கமான பாணியெனில்,

இவன் எங்க பெரியப்பாவின் ஒன்று விட்ட தம்பியின் மூத்த பிள்ளையின் மகள் வழியில் பிறந்த இளவல்களுள் மூத்தவரல்ல” - என்ற ரீதியில் சொல்ல முற்படுவது ‘கமான்சே‘ ஸ்டைல்!

சத்தியமாய் இந்தத் தொடரின் கதைகளை பிரெஞ்சிலிருந்து  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்குள் முழி பிதுங்கியிருக்கும் நமது பிரெஞ்சு எழுத்தாளருக்கு ! And அதனை தமிழாக்கம் செய்வது - நல்ல நாளைக்கே காளை மாட்டின் மடியில் Cavin’s மில்க் ஷேக்கைக் கறக்க முயற்சிப்பதற்கு சமானம் ; இந்த அழகில் கையும், பையும் திருமண அழைப்பிதழ்கள் நிறைந்திருக்க – அவற்றோடு ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கும் கமான்சேவை தேற்ற முற்பட்டது சத்தியமாய் மறக்க இயலா பல நாட்களை நல்கியுள்ளது எனக்கு !

“கல்யாணத்துக்கு அவசியம் வந்திடுங்க !” என்று சொல்வதற்குப் பதிலாய் ரெட் டஸ்டும், மார்க் ஆப் மூனும் பேசும் டயலாக் எதையாவது எடுத்து விட்டுத் தொலைத்து விடுவேனோ? என்று அநேக வீடுகளில் பதறியிருக்கிறேன் ! கதைநெடுக ஒருவித மெலிதான சஸ்பென்ஸ் விரவிக் கிடக்க, ‘அட... அந்த வில்லன் யாராக இருக்கும் ?‘ என்ற யோசனையோடே – ஒரே தெருவை குறுக்கே ஒரு தபாவும், நெடுக்கே ஒரு தபாவும் சுற்றவும் செய்திருக்கிறேன் ! இத்தனை கூத்துக்களோடு,  ஒரு வழியாக 2 நாட்களுக்கு முன்னதாக ”ஓநாயின் சங்கீதம்”ஒரு மாதிரியாய் முற்றுப்பெற்ற போது - எனக்கு மாங்கு மாங்கென்று தலையைச் சொரிந்து கொள்ளத்தான் தோன்றியது! வழிநெடுக யதார்த்த மாந்தர்களையும், அவர்களது பிழைபட்ட சிந்தைகளையும் சித்தரிப்பதில் இத்தனை மெனக்கெட்ட கதாசிரியர் – கதையின் ஆழத்திற்குமென இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் முனைப்புக் காட்டியிருந்தால் இந்தத் தொடர் தொட்டிருக்கக் கூடிய உயரங்கள் இன்னமும் பன்மடங்காகியிருக்குமே என்ற ஆதங்கம் என்னுள் ! 

இதே கதாசிரியர் – ஓவியர் கூட்டணியின் smash hit தொடரான கேப்டன் பிரின்ஸ் கதைகளுமே இதே மாதத்திற்கென தற்செயலாய் அமைந்திருக்க – கமான்சேவிலிருந்து அவ்வப்போது கடல்களின் காதலரை நோக்கியும் ‘ஜம்ப்‘ பண்ணிட சாத்தியமானது ! தெள்ளத் தெளிவான கதைகளையும், அட்டகாசமான கதைக்களங்களையும், அழகான கலரில் பார்க்கும் போது – கடல் காற்றை நெஞ்சு நிறைய நிறைத்துக் கொண்ட சந்தோஷம் கிட்டியது! And அது சார்ந்த ஒரு ஜாலி சேதியுமே : 

போன வாரம் அறிவித்ததுபடி - “கமான்சே; ஸ்மர்ஃப் & மாயாவி” என்ற 3 இதழ்கள் மாத்திரமே டிசம்பரின் (முதல் கட்ட) கூரியரில் என்ற தீர்மானம் எனக்கே அத்தனை சுகப்பட்டதாகப்படவில்லை! நம்முள் ஒரு அணி ‘no cartoons’ என்ற கொடி பிடிப்போர் கொண்டது ; அதிலும் ‘no smurfs’ என்ற உபகொடியும் உண்டு என்பதில் இரகசியங்கள் லேது ! அதே போல மாயாவி மாமாவை நூற்றியெட்டாவது தடவையாக ரசிக்க சொற்பமான திடமனதுக்காரர்களுக்கே சாத்தியமாகும் என்பதும் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது ! So ஆண்டின் இறுதி மாதத்துக் கூரியரில் கொஞ்சமேனும் சுவாரஸ்யம் தங்கிட வேண்டுமென்ற ஆதங்கம் தலைதூக்கியது ! பிறகென்ன...?

”கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்” பணிகள் இன்னொரு பக்கம் முழுவீச்சில் ஓடத் துவங்கியுள்ளன ! பாருங்களேன் இந்த க்ளாசிக் மறுபதிப்புக் கதைகளின் வண்ணப் பக்கங்களை:


தொடரும் நாட்களில் அச்சுப் பணிகள் நிறைவுற்றிடும் & அட்டைப்படம் ஏற்கனவே தயார் என்பதால் பைண்டிங்குக்கென அவகாசம் தந்தால் போதும் – இம்மாத கூரியரில் பரட்டைத்தலை பிரின்சுமே இடம் பிடித்து விடுவார்! And of course – பிரின்ஸோடு நீங்களுமே இருக்கிறீர்கள் என்பதால் இந்தக் கூரியர் சார்ந்த சுவாரஸ்ய மீட்டர்கள் நிச்சயமாய் உயரே சென்றிடும் என்பதில் ஐயமில்லை எனக்கு ! உங்களில் ஒரு அணி : "சை...எனக்கு எதிர்பார்ப்பை வளர்த்து  ஸ்டிக்கர் அல்வா வாங்குவதே பிடிக்காது !" என்று ஓரமாய்த் திரும்பி நின்று முகத்தைச் சுளிப்பதும் ; இன்னொரு அணி - "என்னத்தே பிரிண்ட் பண்ணி..என்னத்தே தந்தே போ !" என்று உச்சு கொட்டுவதும் சாத்தியமே என்பது புரிகிறது ! மூன்றாவது அணியோ - "அவசரமாய் இப்போதே செய்து மறுக்கா சொதப்ப போறே போ !" என்று நாஸ்ட்ரடாமஸ் ஆரூடங்கள் சொல்லவும் கூடும் என்பதும் புரிகிறது !   But கூரியரை உடைக்கும் போது அத்தனை அணிகளுக்குள்ளுமே கொஞ்சமே கொஞ்சம் பரபரப்பின்றிப் போகாது  என்ற நம்பிக்கையுள்ளது எங்களுக்கு !

திரும்பவும் ஒரு தபா சாத்து வாங்கத் தயாராகிக்கோப்பா‘ என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ்கள் தெளிவாய் ஒலித்தாலுமே- ‘முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டான் இந்தக் கோட்டைச்சாமி‘ என்பதும் நீங்கள் அறிந்தது தானே? எனக்குள்ளேயும் ஒரு உம்மணாமூஞ்சி smurf கைகட்டி நின்று கொண்டு - "ச்சை...எனக்கு சாத்து வாங்கவே புடிக்காது !" என்று முறைத்தாலுமே, இன்னொரு பக்கம் - "ஹை....மறுக்கா சவாலைச் சந்திக்கவொரு வாய்ப்பு !" என்று குதூகலிக்கும் ஒரு  ஜாலி smurf-ம் உண்டு ! தினமும் எதையேனும் படிப்பதில் சுவாரஸ்யங்கள் ஒரு நூறெனும் பொழுது - சறுக்கல்களையும் சவாலாய் ஏற்றுக் கொள்வதன் த்ரில் அலாதி தானே ?!  So டிரவுசரை இறுக்கமாய் மாட்டிக் கொண்டு மாடிப்படியேறிடத் தயார் ஆகிவிட்டார் - this கவுண்டரின் சிஷ்யன் ! தலைகீழாய் கோட்டைச்சாமி சம்மர் அடிக்கக் காத்துள்ளேனா ? சில்லுமூக்கு சின்னாபின்னமாகக் காத்துள்ளதா ? விடைகாண வாரங்கள் இரண்டே !! 

டிசம்பரின் மறுபதிப்புத் துணை இதழான “மர்மத் தீவில் மாயாவி”யின் அட்டைப்படம் இதோ – நமது ஓவியரின் கைவண்ணத்தில் ! சமீப மாயாவி ராப்பர்களுள் இதுவொரு அழகான ஆக்கமாய் எனக்குத் தோன்றியது ! அப்புறம் இந்தக் கதைக்கு நான் டீசரெல்லாம் போட்டால் ஊற வைத்தே சாத்துவீர்கள் என்பது உறுதி ! அதற்குப் பதிலாக – ‘இது எத்தினியாவது தபா வரும் மறுபதிப்பு ?‘ என்ற கேள்விக்கு உங்களைப் பதில் சொல்லக் கோருவது உருப்படியான வேலையாக இருக்கும் என்பேன்! Anyways – one last time என்ற வகையில் மர்மத் தீவில் மாயாவி செய்திடும் சாகஸங்களை ரசித்துக் கொள்வோமே ?

அப்புறம் போன வாரத்துப் பதிவில் “ஒரு பரிச்சயமான ஜோடி மறுவரவு கண்டிடத் தயாராகி வருகிறது – புதுப் பொலிவுடன்” என்று சொன்னது நினைவிருக்கலாம் ! "அது அவர் தான்; இவர் தான் !" என்று ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்குப் பலர் சென்றிருந்ததையும் பார்த்தோம் ! அட... அவ்வளவு மெனக்கெடுவானேன் – simply becos காத்திருப்பதே அவர் தானே என்று உரக்கக் கூவணும் போலிருந்தது எனக்கு  ? என்ன – இன்னமும் புரியவில்லையா?

முழுவண்ணத்தில்; புதுப்பொலிவுடன் அட்டகாசமாய் மறுபடியும் ஆஜராகவிருப்பது நமது ஹெர்லெக் ஹோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தான் ! நொடியில் நூறு மாறுவேடங்களைப் புனைந்து – நூற்றியெட்டு மர்மங்களை ‘மளமள‘வென்று முடிச்சவிழ்க்கிறேன் பேர்வழி என நமது விலா எலும்புகளை நோகச் செய்திடும் இந்தக் காமெடிக் கூட்டணி தற்போது ஐரோப்பாவில் சக்கைபோடு போட்டு வருகிறது ! வண்ணத்தில்  புதுக் கதைகள் + பழைய கதைகள் என்ற கூட்டணியில் இவை கலக்கி வருகின்றன ! எப்போதுமே எனக்குப் பிரியமான இந்தத் தொடரினை மறுபடியும் தமிழுக்குக் கொணர கொஞ்ச காலமாகவே முயற்சித்துக் கொண்டிருந்தேன் ! ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் அதற்கு பலன் கிட்டியிருக்க, இதோ – மினுமினுக்கும் வண்ண டிஜிட்டல் பக்கங்கள் நம் கையில் !

விடைபெறும் முன்பாய் இன்னமும் ஒரு டீசர் :

ஏற்கனவே பரிச்சயமானவரே ; வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் ! மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே ! யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா ? விடை விரைவில் !! அதுவரை உங்கள் யூகங்களுக்கு வேலை தந்திடலாமே guys ? 

இப்போதைக்கு விடை பெறுகிறேன் guys - நீலப் பொடியர்களோடு ஐக்கியமாகிட !! ! See you around soon ! Have a cool Sunday ! 

Sunday, November 12, 2017

நெருங்குது டிசம்பர் !


நண்பர்களே,

வணக்கம். யார் சொன்னது புதுசாய் மொழிகள் படிக்க வயது ஒரு தடையென்று? இதோ ஒரு கழுதை வயதான பின்னேயும் பேஷாய் படித்து வருகிறேனே புதியதொரு பாஷையை….!

“கிர்ர்ர்ர்….. க்ர்ர்ர்ர்” என்றால் – “"மவனே… உன் முழியே சரியில்லே…! கதவைத் திறந்திட்டு உள்ளே புகுந்தியோ- உன் தொடைக்கறி தான் எனக்கு டிபன் !"” என்று அர்த்தம்.

"உர்ர்ர்ர்ர்ர்….”" என்றால்- ”"நீ யாரோ தெரிலே.. ஆனாக்கா கோட்டுக்கு இந்தாண்டை வர வாணாம்… அந்தாண்டை நானும் வர மாட்டேன்”" என்று பொருள்!

ஈனஸ்வரத்தில் “வவ்வ்வ்வ்வ்” என்றால்- “"சித்தே கண்ணசரலாம்னு பார்த்தாக்கா நீ ஏன்டா பிராணனை வாங்குறே?"” என்று அர்த்தம்!

கல்யாணப் பத்திரிக்கையும் கையுமாய் வீடு வீடாய் கதவைத் தட்டும் process ல் ஆங்காங்கே கலர் கலராய் தடித் தடியாய்; உரோமங்களுக்கு மத்தியில் முகரையுமாய் காட்சி தரும் சில பல நாயார்களுடன் ஏற்படும் அறிமுகம் கற்றுத் தந்த பாடங்கள் தான் மேற்படி சம்பாஷணைகள் எல்லாமே! ‘நாய் ஜாக்கிரதை‘; ‘நாய்கள் ஜாக்கிரதை‘; ‘கடி நாய் ஜாக்கிரதை‘ என்றெல்லாம் பலகைகள் தொங்கும் வீடுகள் என்றாலே என்னை முன்னே அனுப்பி விடுகிறார்கள்- ஒரு சுமூகப் பேச்சுவார்த்தை நடத்திட! And ஒன்று பாக்கியில்லாமல் என் ‘திரு திரு‘ முழியைப் பார்த்த கையோடு “கோணிச் சாக்குத் திருடன் வந்துட்டான்டோய்!” என்ற தீர்மானத்தில் கத்திக் கூப்பாடு போட்டு தத்தம் எஜமானர்களை வரவழைத்து விடுகின்றன நான் காலிங் பெல்லைத் தேடுவதற்கு அவசியத்தை உருவாக்காமல்! அதிலும் சமீபமாய் எனது உறவினரும், நமது வாசகருமானவரின் வீட்டிற்குச் சென்ற போதோ சித்திரக் குள்ள உசரத்தில், நீளமானதொரு நாய் வாலை ஆட்டிக் கொண்டே ‘சிக்கி-புக்கி‘ என்று குறைத்து வைக்க, எனக்கோ இதுவொரு காமெடிப் பீஸ் என்று பட்டது! “ச்சூ…. ஓடு!” என்றபடிக்கே தாழ்ப்பாளை மொள்ளமாய் திறந்து விட்டு உள்ளே கால் வைக்க முனைந்த நேரமாய் – ‘அச்சச்சோ… கொஞ்சம் பொறுங்க… இதைக் கட்டி விட்டு வருகிறேன்‘ என்றபடிக்கே அவரது மனைவி வந்தார். அப்புறம் தான் தெரிந்தது இதுவரைக்கும் என்னைப் போன்ற அரை டஜன் அசட்டுத் தைரியசாலிகளைக் கணுக்காலோடு கவ்வுவதில் திருவாளர் குட்டையார் ஒரு நிபுணர் என்று! ஆத்தாடியோவ்… 60 கிலோ எடையில் கிங்கரன் போலக் காட்சி தரும் நாய் மாத்திரமின்றி, இது போன்ற ‘சின்னத் தம்பிகளுமே‘ மரியாதைக்குரியவர்கள் தான் போலும்! என்ற எண்ணத்தில் என் கணுக்காலை ஒன்றுக்கு இருமுறை பாசத்தோடு பார்த்துக் கொண்டேன்! ஷப்பா… கூரியர்களைப் பட்டுவாடா செய்ய நாள்தோறும் ஒரு நூறு நாய் சார்களைப் பரிச்சயம் பண்ணிக் கொள்ளும் டெலிவரி நண்பர்களை அந்த கணத்தில் நினைத்துப் பார்த்து சங்கடப்படத் தான் தோன்றியது! ‘என் கூரியர் இன்னும் வரலே!‘ என்று போனில் உறுமுவது ஒரு பக்கமெனில் – களத்தில் அவர்கள் தினம் தினம் “உறுமல் பார்ட்டிகளை“ச் சமாளிப்பது எத்தனை ஆபத்தான பிழைப்பு?! Hats off to these buddies!

பத்திரிக்கைப் படலம் ஒரு மாதிரியாய் இறுதிக் கட்டங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க, ‘தெனாலி‘ திரைப்படத்து கமலைப் போல நித்தமும் புதுசு புதுசாய் பயங்கள் தலைதூக்கிய வண்ணம் உள்ளன!

  • விடுதல் இல்லாமல் எல்லோருக்கும் அழைப்பை வைத்தாயிற்றா? என்ற பயம்…
  • ‘சித்தாப்பாவை‘ – ‘மாமா‘ என்றோ – ‘ஆச்சியை‘ ‘சித்தி‘ என்றோ முறை சொல்லிக் கூப்பிட்டு சொதப்பி வைத்திருப்பேனோ என்ற பயம்!
  • சரியான முறை சொல்லியிருந்தாலும் – சொன்ன முறை சரியாக இருந்ததா? என்ற பயம்!
  • சொன்னவர்களில் ஆஜராகப் போகிறவர் எத்தனை பேர்? சமையல்காரருக்குச் சரியான கணக்குச் சொல்லி விட்டோமா என்ற பயம்!
  • நிறையச் செய்து விட்டு நிறைய மீந்து போகுமோ? என்ற பயம்!
  • குறையச் செய்து விட்டு பந்தியில் பல்லைக் காட்ட நேரிடக் கூடாதே என்ற பயம்!
  • வேஷ்டி கட்ட வேண்டுமெனும் போது, அது இடுப்பில் நல்ல பிள்ளையாய் துயில வேண்டுமே என்ற பயம்!
  • வருண பகவானுக்குத் திடீரென எங்கள் கந்தக பூமி மீது மாதயிறுதியில் மையல் எழுந்திடக் கூடாதே என்ற பயம்!
  • ஒன்றைப் பெற்று அதைக் கரை சேர்க்கவே கதக்கழி ஆடும் சூழலில் – அரை டஜன்களைப் பெற்று அனாயாசமாய் கட்டிக் கொடுத்த ஜாம்பவான்களின் முன்னே ஏற்பாடுகளில் விடுதல் ஏதும் இருந்திடக் கூடாதே என்ற பயம்!
  • ஆங்ங்... கமான்சேக்கு 16ம் பக்கத்தில் அந்த டயலாக் சுகப்படலியோ?‘ என்ற ரோசனைகளில் லயித்தபடிக்கே சுற்றித் திரிவதில் பால்காரரிடம் பூக்களின் ஆர்டரையும், பழக்கடைக்காரரிடம் பாலுக்கும் சொல்லி விட்டு அசடு வழியக் கூடாதே என்ற பயம்!

குடும்பப் பொறுப்புகளையும் சுமந்து பழிகியோர்க்கு இவையெல்லாம் just like that சாத்தியமாகிடும் சமாச்சாரங்களாக இருந்திடலாம்! ஆனால் பட்டை போட்ட குதிரை போல வீடு – ஆபீஸ் – மிஷின்கள் – காமிக்ஸ் என்றே இத்தனை காலத்தை ஓட்டியவனுக்கு இவையெல்லாமே பூதாகரமாய்த் தென்படுகின்றன! ஒரு கிராபிக் நாவலை இன்றைக்குப் பொதுவான ரசனைக்கு ஏற்புள்ளதாய்ச் சொல்வது சுலபக் காரியமாய்த் தென்படுகிறது – ஆனால் ஒரு பலசரக்குச் சிட்டையை சரிபார்ப்பதற்குள் 4 இரத்தப்படல Spin-off கதைகளை ஏக் தம்மில் படித்தது போலத் தலைசுற்றுகிறது! Anyways – ‘மரம் வைத்தவர் தண்ணீரும் விடுவார்!‘ என்ற நம்பிக்கையில், நாட்களை நகர்த்திச் செல்கிறேன்!

இடையிடையே ஆபீஸுக்கும் பாதை மறந்து விடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதையில் அவ்வப்போது attendance போட்டு வருகிறேன்! சுகவீனத்திலிருந்து மைதீனும் திரும்பியிருக்க புதுசாய் வேலைகளைப் பார்ப்போர் போல இருவருக்குமே starting troubles! ஆண்டாண்டு காலமாய் செய்த அதே பணிகள் தானென்றாலும் – ஒரு பிரேக்குக்குப் பின்பாய் அவற்றுள் மூழ்குவது சுலபமல்ல என்பதைப் புரிந்து வருகிறேன்! சைக்கிள் ஓட்டப் படித்தது மறக்காது தான் – ஆனால் இடுப்பு நெளியாமல் பெடலடிப்பது ஒரு தொடர் process ன் பலனே என்பது புரிகிறது!

And இதோ – ஆண்டின் இறுதி மாதத்து சந்தா A சார்பிலான இதழின் preview! காத்திருக்கும் புத்தாண்டில் இவருக்கு இடம் நஹி என்று தீர்மானம் செய்திருக்கும் போது தான் ஒரு சுவாரஸ்யமான கதை கண்ணில் படுகிறது – கமான்சே தொடரினில்! “ஓநாயின் சங்கீதம்” வழக்கமான slow moving கதையாக இராமல் – வித்தியாசமான plot; மாறுபட்ட கதை நகர்த்தல் என்று செல்வதைப் பார்க்கும் போது – ‘இந்த ரூட்டை சித்தே முன்னேவே அமல்படுத்தியிருக்கக் கூடாதா ஹெர்மன் சார்? க்ரேக் சார்? என்று கேட்கத் தோன்றுகிறது! வழக்கம் போல கதை மாந்தர்கள் தலைகளுக்கு எண்ணெய் போன்ற வஸ்துகளையே கண்ணில் காட்டா பரட்டைப் பிரபுக்களாய்ச் சுற்றி வருவதிலோ; சித்திர ஜாலங்களிலோ; கலரிங் அதகளங்களிலோ அதே பழக்கப்பட்ட தரங்கள் தொடர்கின்றன! கதையில் மாத்திரம் tempo ஒரு மிடறு தூக்கலாய்! இதோ – அட்டைப்படம் & உட்பக்க preview!


ஹெர்மனின் தூரிகையில் உருவாகும் ராப்பர்களை நாம் பெரிதாய் மெருகூட்ட அவசியங்கள் இராதென்பதால் கிட்டத்தட்ட ஒரிஜினல் டிசைனே நமது அட்டையுமாகிறதுஎப்போதும் போல பின்னட்டை மட்டுமே நமது பங்களிப்பு! May be சின்ன இந்த பிரேக்குக்குப் பின்பாய் கமான்சேயும் கலக்குவாராஎன்பதை 2019ல் பார்த்திடலாமே!

டிசம்பரில் ஓவியர் ஹெர்மன் & கதாசிரியர் க்ரெக் கூட்டணி தொடரவிருக்கிறது காத்திருக்கும் கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் வாயிலாகஎன்றோ ஒரு யுகத்தில் b&w ல் வெளியான இக்கதைகளை வண்ணத்தில் பளபளக்கும் ஆர்ட் பேப்பரில் பார்க்கும் போது ஒரு கணம் இதயம் துள்ளுவதை உணர முடிகிறதுகேப்டன் பிரின்ஸ் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடா சாகஸங்கள் & இம்முறை காத்துள்ள இரு கதைகளுமே செம classy என்பதால் இந்த இதழ் ஒரு ஹிட்‘டாக அமையுமென்று பட்சி சொல்கிறது! And உங்கள் போட்டோக்கள் விவகாரத்தில் ஏற்கனவே சாத்து வாங்கியுள்ள சூழலில் அதற்கான பரிகாரம் தேடவிருக்கும் இதழும் இதுவே என்பதால் நிச்சயம் இது நமக்கொரு முக்கிய இதழேகல்யாணப் பணிகளுக்கு மத்தியில் இதனையும் இழுத்துப் போட்டுக் கொண்டுதிரும்பவும் டின் வாங்கத் தயாரில்லை என்பதால் பிரின்ஸ் ஸ்பெஷல்” + “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவல் என்ற கூட்டணி டிசம்பர் 15 வாக்கில் தனியாகக் கூரியரில் கிளம்பிடவுள்ளன! So நவம்பர் இறுதிகளில் 3 இதழ்கள் மாத்திரமே இருந்திடும் உங்களது டப்பாக்களில்!

  • கமான்சே     ஓநாயின் சங்கீதம்”
  • ஸ்மர்ப்ஃஸ் விண்ணில் ஒரு பொடியன்”
  • மறுபதிப்பு – “மர்மத் தீவில் மாயாவி”


கிராபிக் நாவலுமே சற்றே ஆற அமர பணியாற்றினால் தேவலை என்ற உணர்வை எனக்குத் தந்ததால் இந்தச் சின்ன மாற்றம்ஒரு அசாத்தியமான நாவலின் கிராபிக் நாவலாக்கம் இதுஅதற்கான மரியாதையை நம்மளவிலும் தந்தாலொழிய ஒரிஜினலின் வீரியம் மட்டுப்படக் கூடும் என்று நினைத்தேன்! So “நிஜங்களின் நிசப்தம்” இருபாக கிராபிக் நாவலோடு 2017க்கு விடை தருவோம்!

பெயரளவிற்கு ஆண்டு முடிந்து புதிதாயொன்று துவங்கினாலும்நம் பயணம் as usual தொடர்ந்திடும் கூடுதலாயொரு ஆண்டின் அனுபவத்தோடுஎப்போதும் போலவே உங்கள் துணையும் நமக்கு அத்தியாவசியம் என்பதால் சந்தாப் புதுப்பித்தல்களைச் செய்திடலாமே folks?

புத்தாண்டில் உங்களைச் சந்திக்க ஒரு பழைய ஜோடி‘புதுப் பொலிவோடு மீள்வருகை செய்திடக் காத்துள்ளது முழு வண்ணத்தில்யாரந்த ஆசாமிகள்என்று யூகித்திட முடிகிறதா?

மீண்டும் சந்திப்போம்! Have a great Sunday!

Sunday, November 05, 2017

ஒரு நவம்பரின் மழையிரவு !

நண்பர்களே,

வணக்கம்.   சிங்காரச் சென்னை மீது வருண பகவானுக்கு சமீப ஆண்டுகளில் உருவாகியுள்ள அந்த மையல் இம்முறையும் வீரியமாய்த் தொடர்வதைப் பார்த்தால் மிரட்சியாக உள்ளது !  கொட்டித் தள்ளும் மழை, களைகட்டுவதற்கு ஓரிரு நாட்கள் முன்புவரை வேளச்சேரிகளிலும், பள்ளிக்கரணைகளிலும், கீழ்க்கட்டளைகளிலும் பத்திரிக்கையும் கையுமாய்ச் சுற்றித் திரிந்தவனுக்கு இன்று அதே பகுதிகளை நீச்சல்குளங்களாய் டி.வியில்  பார்க்கும் போது - கையைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் நின்று,"சை..எனக்கு மழையே புடிக்காது !" என்று புலம்பணும் போல் தோன்றுகிறது ! இம்முறை தலைநகரில்  மாத்திரமன்றி, பாண்டி ; நாகை ; கடலூர் போன்ற மண்டலங்களிலுமே ரோட்டில் படகு ஓட்டும் நிலை தட்டுப்படும் போது - 'சிவனே' என்று எங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள் சாமீ ! என்று சொல்ல தோன்றுகிறது ! Oh yes - இங்கேயும் மழை "உள்ளேன் ஐயா" போட்டு வருகிறது தான் ; ஆனால் எங்களின்  கந்தக பூமியின் தவித்த மண்ணுக்கு இந்த ஜலமெல்லாம் சர்பத் உறிஞ்சுவது போல !! Anyways - கடந்த 2 ஆண்டுகளைப் போலல்லாது இம்முறை தலைப்பாகைக்கு மட்டுமே சேதமென்று தமிழகம் தப்பித்து விட்டால் சூப்பர் ! Fingers crossed !

நவம்பர் இதழ்கள் உங்கள் கைகளில் fresh ஆக உள்ள நிலையில் - spotlight அவற்றின் மீதே இருத்தல் அவசியம் என்பேன் !  And அந்த ஒளிவட்டத்தின் நட்ட நடுவே விசாலமாயொரு இடத்தைப் பிடித்து நிற்பது யாரென்று யூகிக்க, நிச்சயம் மங்குணி smurf-க்குக் கூட சாத்தியமாகிடும்  என்பேன் ! 30 ஆண்டுகளென்பது ஒரு நார்மலான மறுபதிப்புக்கே நெடியதொரு அவகாசம் தானெனும் போது - முழு வண்ணத்தில், ஒரு மாறுபட்ட பாணியில் அந்த மறுபதிப்பு  வெளியாகிடும் போது ஒரு இனம்புரியா உற்சாகம் கூடிக் கொள்கிறது தானே ?! And அதுவொரு all time favorite நாயகரின், atf கதையாக இருப்பின் - அதன் வெற்றி எழுதப்பட்ட விதியாகிடுவதில் வியப்பில்லை அல்லவா ?! And "டிராகன் நகரம்" - என் தலைக்குள்ளே ரொம்ப காலமாகவே உறுத்திக் கொண்டிருந்ததொரு மறுபதிப்பு என்பதில் இரகசியம் கிடையாது ; so அதனை ஒருமாதிரியாய் களமிறக்க முடிந்ததில் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி ! இன்னமும் எனது தனிப்பட்ட ரசனையானது  "சைத்தான் சாம்ராஜ்யம்" இதழை வண்ணத்தில்  ரசித்திட என்னை உசுப்பிக் கொண்டே உள்ளது ; ஆனால் இம்முறை(யும்) ஈரோட்டின் வாக்கெடுப்பில் "சை.சா" மூன்றாவது இடத்தைப் பிடிக்க - "சை...எனக்கு மூன்றாம் இடமே புடிக்காது !" என்று மண்டைக்குள் ஒரு மௌன டயலாக் ஓடியது !  'பவளச் சிலை மர்மம்" ; அதன்பின்பாய்  "வைகிங் தீவு மர்மம்" என்று சிலபல மர்மங்கள் லைனில் முன்னே நிற்பதால்  - இப்போதைக்கு நம்மிடம் வந்து கிடக்கும் "சை.சா"வின்  முழுவண்ண டிஜிட்டல் பைல்களை முறைத்துப் பார்த்துக் கொள்ள மட்டுமே செய்கிறேன் !! 
SUPER 6 வரிசையின் இதழ் # 5-ன்     அட்டைப்படத்தின் highlight அந்த "டிராகன்" எழுத்துரு தான் என்பேன் ! வழக்கமான கம்பியூட்டர் font-களாகப் பார்த்து அலுத்த கண்களுக்கு ஒரு old school கலைஞனின் கைவண்ணத்தில் உருவான எழுத்துக்களைப் பார்க்கும் போது ஒரு refreshing change ஆக இருந்தது  ! இதனைத்   தயாரித்தவர் நமது ஓவியர் சிகாமணி தான் ! இதற்கு மாத்திரமன்றி,  சமீப மாதங்களில் நமது அட்டைகளில் தென்பட்ட இன்னும் சில handwritten தலைப்புகளின் பின்னிருந்தவரும் அவரே ! அறுபதைத் தாண்டிய பின்னேயும் அந்தக் கைகளின் ஜாலங்கள் மங்கிடவில்லை என்பதை உணர்ந்த போது சந்தோஷமாக இருந்தது ! என்னதான் DTP ; PC ; ஏட்டய்யா  என்று தொழில்நுட்பங்கள் புயலாய் முன்னேறியிருந்தாலும், அந்தத் துவக்க காலத்து impetus இவர் போன்ற கலைஞர்களின் உபயங்கள்  தான் என்பதை மறக்க முடியாது தானே ? மூப்பின் காரணமாய் இப்போது ஓய்வாய் இருக்கும் மனுஷன் எப்போதாவது நம் ஆபீஸ் பக்கமாய்த் தலைகாட்டினால் சில வாரங்கள் இங்கேயே தங்கி விடுவதுண்டு ! அப்படியொரு சமீபத் தங்கலின் போது எழுதி வாங்கிய தலைப்புகளுள் "டி.ந' வும் ஒன்று ! 
Old school ஓவியர்கள் பற்றிய பேச்சில் இருக்கும் வேளைதனில் - நமது இன்னொரு மூத்த ஓவியரான மலையப்பன் சமீபமாய் போட்டுத் தாக்கியுள்ள TEX அட்டைப்படங்களை பற்றி நான் சொல்லியே தீர வேண்டும் ! அவற்றை நேற்றைக்குப் பார்த்த பொழுது திறந்த எனது வாய் இன்னமும் மூடிய பாடைக் காணோம் ! இப்போதெல்லாம் பிரான்க்கோ-பெல்ஜிய சாகசங்களை ஒரிஜினல் ராப்பர்களோடே களமிறக்கப் பழகி விட்டுள்ள நிலையில் - டெக்ஸ் வில்லர் கதைகளுக்கும், FLEETWAY மறுபதிப்புகளுக்கும் தான் நமது ஓவியங்கள் தேவைப்படுகின்றன ! TEX-ன் ஒரிஜினல் ராப்பர்களில் அதிரடிகளுக்குத் துளியும் பஞ்சமிராது தான் ; ஆனால் அவற்றின் வர்ணக் கலவைகள் தட்டையான color fillings என்பதால், அவற்றை மட்டுமே redraw செய்திடுகிறோம் ! குழப்பங்களில்லா ஒரிஜினல்களை  தந்தால் - மனுஷன் எப்போதுமே தூள் கிளப்பி விடுவார் ; இம்முறை ஒன்றல்ல, இரண்டல்ல - 4 பெயிண்டிங்குகள் போனெல்லியின் ஓவியர்களுக்கே சவால் விடும் விதத்தில் உருவாகியுள்ளது ! So 2018-ன் 'தல' தாண்டவம் - சும்மா அட்டைப்படங்களிலிருந்தே கலக்கப் போகிறது !!  தொடரும் நாட்களில் நமது ஓவியரைப் பற்றி போனெல்லிக்கு சொல்ல எண்ணியுள்ளேன் ; so one of these days - மாலையப்பனை போனெல்லியின் FB பக்கத்தில் பார்க்க நேரிட்டால் நாமெல்லாமுமே காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே ?

Moving on, இம்மாத இதழ்களுள் போட்டியே இரண்டாமிடத்தைப் பிடிக்கும் பொருட்டுத் தான் எனும் பொழுது - களத்தில் நிற்பவை 3 முற்றிலும் மாறுபட்ட genre-கள் அல்லவா ? எனது வோட்டு எப்போதுமே கார்டூனுக்கே என்பதால் - லக்கி லூக்கை ஜனாதிபதியாக்க முடிகிறதா ? என்றே என் சிந்தனை ஓடுகிறது ! "ஒற்றைக்கை பகாசுரன்" அட்டைப்படத்திலுமே உள்ள அந்த எழுத்துரு உபயம் : ஓவியர் சிகாமணி தான் ! கதையானது - நாமிப்போது ரொம்பவே பரிச்சயம் கண்டு விட்டுள்ளதொரு லக்கி லூக் template தான் ; ஒரு பொறுப்பு நம் பென்சில் கவ்பாய் வசம் ஒப்படைக்கப்பட ; அதை நிறைவேற்றும் பொருட்டு வன்மேற்கை வலம் வருகின்றனர் - மாமூலான சிரிப்பு வில்லன்களின் குறுக்கீடுகளோடு !! ஆனால் இம்முறையோ - லக்கியிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு ரொம்பவே புதுசானது என்பதால் கதையும் fresh ஆக இருப்பது போல் எனக்குப்பட்டது ! Of course - ஒரு "சூப்பர் சர்க்கஸ்" ரேஞ்சுக்கோ ; "புரட்சித் தீ" அட்டகாசத்துக்கோ இது நெருங்கிட முடியாதென்றாலும் - இந்த ஆல்பத்தில் ஜாலி ஜம்பரின் லூட்டி செமையாக இருப்பதாக நான் நினைத்தேன் ! அதுவும் பக்கம் 14-ல்  "சூதாட்டம் மேலே எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் கிடையாது" என்று செனட்டரிடம் LL விளக்கிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஜாலி "ஹி..ஹி..ஹி.." என்று பல்லைக் காட்டுமிடம் A-1 !! லக்கி தொடரின் creamy layer கதைகளின் பெரும்பான்மையை நாம் போட்டு விட்டோம் என்ற நிலையில், தொடரும் ஆண்டுகளில் கதைத் தேர்வு நிச்சயம் சுலபமாய் இருக்கப் போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம் ! And by the way - சென்றாண்டு ஐரோப்பாவில் வெளியான அந்த லக்கி லூக் கிராபிக் நாவலை (Who Killed Lucky Luke?) தமிழில் படித்திட ஆர்வமிருக்குமா folks ? சென்றாண்டு இது பற்றிப் பேசியது கொஞ்சமாய் நினைவுள்ளது ; but அப்போது slots ஏதும் காலி இல்லாததால் பேசிய கையோடு அவரவர் ஜோலிகளைப் பார்க்கப் புறப்பட்டு விட்டோம் என்று நினைக்கிறேன் ! 2018-ல் இதைப் போட்டுத் தாக்கலாமா ? Or இப்போதைக்கு இந்த பழகிப் போன கார்ட்டூன் LL மட்டுமே போதுமா ? என்ன தோன்றுகிறது உங்களுக்கு ? 
LADY S - "சுடும் பனி" - எனது மதிப்பீட்டில் இம்மாதத்து இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆல்பம் ! கதை அரங்கேறும் சுவீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோல்ம் நமக்கு இதுவரையிலும் அத்தனை பழக்கமிலா அரங்கம் தானே ? இதற்கு முன்பாய் ஸ்டெல்லாவின் வழிகாட்டுதலில் சாகசம் செய்திடும் ஜானி நீரோ - "சதிகாரர் சங்கம்" இதழில் இங்கே ரவுண்ட் அடித்தது போலொரு ஞாபகம் உள்ளது எனக்கு ; அது நீங்கலாய் இந்த தேசத்தை நாம் வேறு சாகசங்களில் ரசித்துள்ளோமா guys ? I think no.... அது மட்டுமன்றி, நோபல் பரிசு வழங்கப்படும் பின்னணிகள் பற்றியும் நாம் இதுவரையிலாவது எந்தவொரு ஆல்பத்திலும்  பார்த்தது இல்லையெனும் பொழுது - கதையரங்கு ரொம்பவே புதுசு ! ஆனால் அந்த வழக்கமான வான் ஹாம்மே template-ஐ லார்கோவின் தொடரில் எக்கச்சக்க முறைகள் ரசித்திருப்பதால் - "அட..லார்கோ ஏன் நைட்டியோடு சுற்றித் திரிகிறார் ?" என்று யாருக்கேனும் தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ! But சர்வதேச ராஜாங்க சதுரங்க ஆட்டங்களை நம் கண் முன்னே கொணரும் ஆற்றல் வேறு எவருக்கும் இல்லா அளவிற்கு வான் ஹாம்மேவிடம்  கொட்டிக் கிடப்பதால் - இன்னமுமொரு சர்வதேச spy த்ரில்லரை ரசித்த திருப்தி உத்தரவாதம் என்பேன் ! காதல்வயப்படும் ஷானியா ; சென்டிமென்டுக்கு உருகும் வில்லன் என்ற இடங்களில் வான் ஹாம்மே கொஞ்சமாய் பாணிமாற்றத்துக்கும் தயாராகவே இருக்கிறார் என்பதை உணர முடிகிறது !  And "சுடும் பனி" எழுத்துரு.....yup !! சிகாமணியே ! 
மார்டினின்  MYSTERY SPECIAL - 2 மாறுபட்ட கதைகள் ; இரண்டுமே அழகான ஆக்கங்கள் தானெனினும் -சென்றாண்டின்  "இனி எல்லாம் மரணமே" தொட்ட உயரத்தை தூரத்தில் நின்று எட்டிப் பார்க்க மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை ! மார்ட்டின் ஒரு offbeat கதைவரிசை எனும் போது இதனுள் புகுந்து கதைத் தேர்வுகளை உருப்படியாய்ச் செய்து திரும்புவது என்பது சாமான்யப் பணியாக இருப்பதே இல்லை ! ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு வித்தியாசப் பின்னணியில் தட தடக்கும் சாகசம் என்பதால் எதைக் கழிப்பது ? எதைத் தேர்வு செய்வது ? என்ற தீர்மானம் எடுப்பதற்குள் போதும்-போதும் என்றாகிவிடும் ! And Mystery Special இதழின் அட்டைப்படம்  போஜ்பூரி ஹீரோக்களின் கிளோஸப் போல் இருப்பதை மறுப்பதற்கில்லை தான் ; நிச்சயமாய் அடுத்த MM சாகசத்துக்கு ஒரிஜினல் ராப்பரையே மரியாதையாகப் போட்டு விடலாமென்றிருக்கிறேன் ! இப்போதெல்லாம் நாம் பழகி விட்டுள்ள தரங்கள் - சுமாரான எதையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க அனுமதிப்பதில்லை எனும் பொழுது - Mystery Special-க்கான அட்டைப்படத் தேர்வு சுகப்படவில்லை என்பது புரிகிறது ! சிக்கல் என்னவெனில் - தீவிரமாய் எதனுள்ளேயும் தலைநுழைத்தே கிடக்கும் பட்சத்தில் - உள்ளங்கையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் ஒரு விஷயம் கூட கண்களுக்குப் புலப்படாது போய் விடும் போலும் ! "அட...விளக்கெண்ணெய் ! உள்ளங்கையில் உள்ளதை கண்ணு ரெண்டையும் முழிச்சுப் பாரேன் !" என்று சுட்டிக் காட்ட அவ்வப்போது யாரேனும் அவசியம் போலும் ! 

ஆண்டின் ஒற்றை மாதம் மட்டுமே இனி எஞ்சி நிற்கும் தருணத்தில் - "the year that has been" - பற்றிய உங்களின் முதல் சிந்தைகள் என்னவாக இருக்குமோவென்று அறிந்திட ஆவலாய் இருக்கிறோம் ! ஜனவரியில் "ட்யுராங்கோ" சகிதம் போட்ட பிள்ளையார் சுழியானது - தொடர்ந்துள்ள நாட்களிலும், மாதங்களிலும் 5000 பக்க சுமாருக்கு ஓடியுள்ளதேனும் பொழுது - 2017-ன் இது வரையிலான memorable தருணங்கள் பற்றிய அசை போடலை ஆரம்பிப்போமா ? என்று நினைத்தேன் ! சூப்பர் 6  இதழ்கள் ; சந்தா E-வின் கிராபிக் நாவல்கள் ; LADY S அறிமுகம் ;  இரத்தக் கோட்டைஜெரெமியா ; என்று கலர் கலராய் நினைவுகள் மட்டுமே எனக்குள் இந்தச் சாமத்தில் ஓடுகின்றனவே தவிர்த்து ; கோர்வையாய் எதையும் நினைவுகூர்ந்திட முடியவில்லை ! So இந்தாண்டின் இதுவரையிலான உங்களது TOP 5 moments என்னவென்று நினைவு கூர்ந்திட முயற்சியுங்களேன் guys ? அப்படியே - நவம்பரில் அலசல்களையும் தொடர்ந்திடலாமே ? Bye all !! See you around !  

Friday, November 03, 2017

First & next...!

நண்பர்களே,

வணக்கம். ஆபீசுக்கே விருந்தாளியைப் போல அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூழ்நிலையில் நானிருக்க, இங்கே அரங்கேறிய சில பல மொத்துப் படலங்களுக்கு முறையாய் பதில் சொல்ல இயலவில்லை என்பதில் எனக்கும் வருத்தமே !  ஏதேதோ காரணங்களுக்காக ஆண்டுக்கொருமுறையேனும் சாத்துக்கள் பல வாங்கி உரமேறிய முதுகு தான் என்பதால் அவகாசம் கிடைக்கும் போது சாவகாசமாய் அயோடெக்ஸ் போட்டுக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் புதிதாயொரு பதிவை போட அவசரம் காட்டவில்லை ! ஆனால் இந்த load more தலைநோவு எத்தகையது என்பதை செலபோனில் login செய்து பார்க்கும் சமயம் தான் முழுசாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்பதால் - புதிதாய் ஒரு உ.ப.வைப் போட்டு வைப்போமே என்று தோன்றியது !

As always - பலதரப்பட்ட எண்ணங்கள் ; அபிப்பிராயங்கள் ; ஆலோசனைகள் ; கடுப்புகள் என்று வானவில்லின் ஜாலங்கள் தென்பட்டன உங்களின் சமீபப் பின்னூட்டங்களில் ! என் தரப்பின் சிக்கல்களை பகிர்ந்தான பின்னே உங்களின் வருத்தங்கள்  ஓரளவேணும் மட்டுப்பட்டுள்ளனவா  ? என்பது தெரியவில்லை ; ஆனால் அடுத்த பிரின்ஸ் ஸ்பெஷல் முதல் பக்கத்தினில் உங்கள் படங்களை greyscale-ல் பார்க்கும் போது மீதமிருக்கக் கூடிய வருத்தங்கள் விலகிடவும்,  எனது ஸ்டிக்கர் தீர்மானத்தின் பின்னணி புரிந்திடவும் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! எது எப்படியோ - as always - சர்ச்சைகளின் மறுபக்கமானது விற்பனையில் சுவாரஸ்யத்தைக் கொணர்ந்துள்ளது என்பதையும் சொல்லாதிருக்க முடியவில்லை  ! ஏற்கனவே பரபரப்பாய் விற்கக்கூடிய இதழான 'டிராகன் நகரம்' இப்போது நிலவேம்புக் கஷாயம் போல சரசரவெனப் பறக்கின்றது !  And குறைவான பிரதிகளே அச்சிட்டுள்ளோம் என்பதால் ஜனவரி சென்னைப் புத்தக விழாவினைத் தாண்டி நம்மிடம் இதனில் ஸ்டாக் இராது என்றே தோன்றுகிறது !

டெக்ஸ் ஓவர்டோஸ் என்பதான அபிப்பிராயம்  ; இலவச இணைப்பு சார்ந்த பார்வைகள்   ; இந்த ஸ்டிக்கர் சமாச்சாரங்கள் என்ற வெவ்வேறு காரணங்களின் பொருட்டு சமீப நாட்களில் மத்தளம் கொட்ட உள்ளுக்குள் ஆர்வப்படும் நண்பர்கள் மீதும் / ஏற்கனவே கொட்டிய நண்பர்கள் மீதும் எனக்கு நிச்சயம் வருத்தமில்லை ! ஆளுக்கொரு பார்வை ; ஆளுக்கொரு சிந்தனை இருப்பதில் நிச்சயம் தவறில்லை எனும் பொழுது எனக்கு நேர்ந்த அந்தத் தருணத்துச் சங்கடங்களைத் தாண்டி பெரிதாய் எந்த விசனமும் தொடரவில்லை என்னுள் !  ஆனால் என் பொருட்டு "ஜால்ரா பாய்ஸ்" என்ற அழகான பட்டப் பெயரைச் சுமக்க நேரிடும்  நண்பர்களுக்காக சங்கடப்படாது இருக்க முடியவில்லை ! இது பற்றியெல்லாம் முன்பே ஏதோ எழுதிய ஞாபகம் லேசாக உள்ளது ; but still - சர்ச்சைகள் எழும் தருணங்களில் இந்த வார்த்தைப் பிரயோகம் தொடர்வதில் நிச்சயமாய் எனக்கு உடன்பாடில்லை ! So ஒரு மறு ஒலிபரப்பு போலாகத் தோன்றினாலும் தப்பில்லை என்று நினைத்தேன் :   

ஒரு விஷயம் எனக்குச் சுத்தமாய்ப் புரியவில்லை guys - ஆரம்பம் முதலாகவே ! நம் வட்டத்தின் விஸ்தீரணம் ரெண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்கக் கூடியதொரு அளவே என்பதில் இரகசியம் துளியும் கிடையாது ! இந்த வட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரின் ஆற்றல்களின் பரிமாணங்களும் எத்தகையது என்பதை அறியாதோர் இங்கில்லை  ! இலக்கியமா ? வரலாறா ? நகையுணர்வா ? அரசியலா ? தொழில் சார்ந்த தேர்ச்சியா ? ஆன்மீகமா ? காமிக்ஸ் ஞானமா ?  மழலைத்தனமா ? முதிர்ச்சியா ? பொது அறிவா ? ஒவ்வொன்றிலும் பட்டையைக் கிளப்பும் ஆற்றலாளர்கள் இங்கே கொட்டிக் கிடப்பது கண்கூடு ! இந்த அணியின் மத்தியில் உலவிடும் எனக்கு உங்களது திறன்களைக் கண்ட வியப்பு ஒரு நாளும்  குன்றுவதே கிடையாது  !  நானும் சரி, எனது தொழில் சார்ந்த அனுபவங்களும் சரி - இந்த high voltage அணியினில் என்னை வேறுபடுத்தியோ ; உயர்த்தியோ காட்டுவதாய் நான் ஒருநாளும் எண்ணியதில்லை ! And பக்கத்துத் தெருவிலேயே கூட  "முறைப்பான முட்டைக்கண்ணன்" என்பதைத் தாண்டி எனக்கென அடையாளங்கள் வேறேதும் கிடையாது என்பதும் எனக்கு அட்சர சுத்தமாய்த் தெரியும் ! இந்த ஆகக் குட்டியான வட்டத்துக்குள் மட்டுமே 'விஜயன்' என்ற பெயருக்கொரு சன்ன அடையாளம் உள்ளதென்பது மட்டும் தானே யதார்த்தம் ?

So ஒரு மாறுபட்ட ரசனைக்கென கொஞ்சமாய் மெனக்கெடும் இந்த ஆசாமியின் தோளினில், நட்போடு இங்குள்ள நண்பர்களின் ஒரு பகுதி கைபோட்டு அரவணைத்தால் அதுவே  அவர்கள் அனைவரையும் இளையராஜாவின் கச்சேரி மேடையில் ஏற்றிவிடவொரு முகாந்திரமாவதன் மர்மம் எனக்குப் புரிபடவில்லையே ? R.K நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நிச்சயமாய் நானங்கு வேட்பாளராகப் போவதுமில்லை ; அப்படியே நின்றாலும் நிச்சயமாய் ஜெயிக்கப் போவதில்லை ; அப்படியே ஜெயித்தாலும் ஏதேனுமொரு நினைவிடத்தில் தியானமும் செய்யப் போவதில்லை எனும் பொழுது -  எனக்கு சாமரம் வீசி இந்த ஜா.பா நண்பர்கள் சாதிக்க எண்ணிடுவது தான் என்னவாக இருக்கக் கூடுமோ என்பது புரிய மாட்டேன்கிறதே  ?  தத்தம் நேரங்களையும், சக்திகளையும் ஒரு பொதுத் தளத்தின் சகஜத்தன்மைக்கும் ; நட்புப் பாராட்டுதல்களுக்கும் செலவிட முன்வருவதில் யாருக்கென்ன சங்கடங்கள் இருந்திடக்கூடும் என்பது எனக்கொரு புரியாப் புதிராகவே தொடர்கிறது ! மௌனம் உங்கள் ஆதர்ஷமெனில் ; உரக்கப் பேசுவோரை உங்கள் நிம்மதிகளைக் குலைக்க வந்தோராய்ப் பார்ப்பது சரிதானா guys ? Moreover அந்தப் பாசக்கார "ஜா.பா." அணியின் ஒவ்வொருவருக்குமே எனது ஒவ்வொரு தீர்மானத்திலும் 100% உடன்பாடு இருக்குமென்ற பகல் கனவுகளெல்லாம் சத்தியமாய் எனக்கு கிடையாது !  எண்ணங்களில் பேதங்கள் எழும் வேளைகளிலும், அவற்றை நயமாய்ச் சொல்ல அவர்கள் முனைவது நட்பின்பால் அவர்கள் கொண்டிருக்கும் பிடித்தத்தின் காரணத்தின் பொருட்டே தவிர்த்து, பயத்தின் காரணமாய் அல்ல தானே ? அந்தப் பதவிசுக்குப் பரிசு இசைக் கருவிகள் எனில் - இலவசங்கள் செழிக்கும் தமிழகத்தில் இதுவும் ஜகஜமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலும் ! இலவச டி.வி. ; மடிக் கணினி வரிசையில் இசைக் கருவியுமே ?! சூப்பர்லே ?

அப்புறம் உடன்படுவோர் 'ஜிங்-ஜா கோஷ்டி' எனில்,  மாற்றுக் கருத்துக்கள் கொண்டோர் 'புரட்சிப் புயல்கள்' என்ற மாதிரியான சிந்தையும் சரி தானா ? Whenever & wherever you disagree -மாற்றுக் கருத்துக்கள் எல்லாமும், எப்போதுமே அக்மார்க்  சரியானவைகளாகவே இருக்கத் தான் வேண்டுமா ? Oh yes - இந்த ஸ்டிக்கர் சமாச்சாரம் போன்ற வேளைகளில் எனது கண்ணோட்டம் ஒருவிதமாயும், உங்கள் வருத்தங்கள் நியாயமாகவும் இருக்கலாம் தான் ; ஆனால் ஒவ்வொரு மாற்றுப் பாதையுமே சரியானதாக இருத்தலுக்கு உத்திரவாதங்கள் உண்டென்று மெய்யாகவே நம்புகிறீர்களா  ?  End of the day - இங்கொரு தொழிலும் நடந்தாக வேண்டும் எனும் பொழுது - அது சார்ந்த தீர்மானங்களின் பின்னணிகளை அறிந்திருக்க என்னைவிட வேறு யார்  தேர்ச்சி பெற்றிருக்க முடியும் நட்பூஸ் ? And ஒவ்வொரு முறையும் நானிங்கு சகலத்தையும் கடை விரித்து உங்கள் அனைவரது அங்கீகாரங்களையும் பெற்றிடல் நடைமுறைக்கு சரிப்படும்  சமாச்சாரம் தானா ?  

இதோ இம்மாதமே இந்த 2 நாட்களிலேயே பார்க்கிறோமே மௌன வாசகர்களின் அபிலாஷைகளையும், இங்கு சபைக்கு வராத அவர்களது  எண்ணங்களையும்  : 

இதுவரையிலும் 31 ஆன்லைன் ஆர்டர் வந்துள்ளன- நவம்பர் புக்குகளின் ஆன்லைன் லிஸ்டிங் செய்தான பின்பாக ! அவற்றுள் 27 ஆர்டர்களில் ஏதேனும் ஒரு TEX இதழ் (பலவற்றுள் multiple TEX இதழ்கள்) உள்ளன ; and  இந்த 31-ல் மர்ம மனிதன் மார்டினை சீண்டாது, அவர் திசையிலேயே வண்டியை விடாது பை-பாஸ் போட்டுள்ளோர் - 80 % !! இது தான் இன்னமுமே ஒரு யதார்த்த காமிக்ஸ் வாசக உள்ளத்தின் படப்பிடிப்பு ! "குழப்பங்கள் ; சோகங்கள் ; காதிலே புய்ப்பங்கள் வேண்டுமென்றால் நான் மெகா சீரியல்களுக்கும் ; அரசியல் விவாதங்களுக்கும் போய் கொள்ளுகிறேன் சாமி ; எனக்கு காமிக்ஸ்னா TEX ; லக்கி ; ஆக்ஷன் கதைகள் போதும் !" என்று அவர்கள் செயல்களின் மூலம் சேதி சொல்லுகின்றனர் ! ரசனைகளில் நெருடலிலா விஸ்தீரணம் ; அதே சமயம் வியாபார அவசியங்களுக்கும் செவி சாய்க்க வேண்டியதொரு தருணம் - என்ற கம்பி மேல் நடக்கும் அவசியம் இன்று நமக்குள்ளது என்பதை புரிந்து கொள்வதில் நம்முள் பேதமில்லை ; அதனை ஏற்றுக் கொள்வதில் மாத்திரமே பேதங்கள் தலைதூக்குகின்றன ! எனது தீர்மானங்களின் பின்னணிகளைப் புரிந்தும், ஏற்றும் கொள்வோர் - "ஜா.பா"க்களாகவும் ; புரிந்தும், ஏற்க மறுப்போர் - "பு.பு" அணியாகவும் தொடர்கின்றனர் ! அணிகள் எதுவாயிருப்பினும், காமிக்ஸ் ரசனையெனும் நம்  தாய்க்கட்சி ஒன்று தானே? So இது போன்ற மானசீகப் பாகுபாடுகளை ; "இங்கே நான் சொல்வதற்கு மரியாதை இல்லை" - என்ற ரீதியிலான chip களைச் சுமக்காது பயணிப்போமே - ப்ளீஸ் ? நம் ரேஞ்சுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்திட டில்லியிலிருந்தென்ன - கூடுவாஞ்சேரியில் இருந்து கூட ஆட்கள் வரப்போவதில்லை என்பதால், நம் கருத்து வேற்றுமைகளை நாமே பைசல் செய்து கொண்டால் தானே ஆச்சு ? இங்கே நிச்சயமாய் சகல சிந்தனைகளுக்கும் இடமுண்டு ; எழும் முதல் அபிப்பிராய மாறுபாட்டினை ஒரு விசனமாய்க் கொண்டு வருந்தாது, ஆரோக்கியமான விவாதங்களில் நயமாய் பங்கேற்றிட அனைவரும் முன்வந்தால் - இங்கு எழும் ஆர்ப்பரிப்பு இந்தக் குட்டியூண்டு வட்டத்தின்பால் பெரியதொரு வெளிச்சத்தை விழச் செய்யும் என்பதில் ஏது ஐயம் ? முகஸ்துதிகளை எதிர்பார்த்து காலத்தை நான் தள்ளுவது போலவும்,  ஐஸ் வைத்து 'ஜா.பா'. அணி பிழைப்பு நடத்துவது போலான எண்ணங்களும் சத்தியமாய் மாயைகளே ! I am as good or as bad as my last hit or my last flop என்பதற்கு இதோ - இன்றைய நிகழ்வுகளை விடவுமா வேறு உதாரணம் தேவை ? நான்கே நாட்களுக்கு முன்பு வரை தக தகவென எம்.ஜி.யாரைப் போல மின்னியவன், இப்போது 'அம்மாங்கோ' என்று மல்லாக்கக் கிடக்கவில்லையா -சங்கி-மங்கியைப் போல  ? 

ஒரு மாறுபட்ட 4 pack combo  வெளியாகியுள்ள  இந்த வேளையில், அழகான அந்த இதழ்களை review செய்திடத் துவங்கலாமே guys ? என்னைச் சாத்தி விளையாட சந்தர்ப்பங்களுக்கும், தருணங்களுக்குமா பஞ்சம் இருக்கப் போகிறது  ? அது தான் நானாக லட்டு போல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நிபுணன் ஆச்சே ? So இதழ்களின் அலசல் first ; முட்டுச் சந்தில் குமுறுவது next !!  என்று வைத்துக் கொள்வோமா ? Bye guys...see you around ! Lady S முதலிலா - ஒற்றைக்கை பகாசுரனா ?