Friday, December 30, 2016

பதினாறில் பதினேழு.. !!

நண்பர்களே,

வணக்கம். நடப்பாண்டின் இறுதி பதிவும் ஒரு சந்தோஷப பகிர்வாக அமைந்திடுவது ஒரு வரமென்பேன் ! யெஸ்...."நவம்பரில் டிசம்பர்" சாத்தியமான போது - "டிசம்பரில் ஜனவரி" நிஜமாகிடாதா - என்ன ? இன்றைக்கு 2017 ஜனவரியின் சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரில் புறப்பட்டு விட்டன - உங்கள் இல்லங்களைத் தேடி ! (ரசீதுகள் எல்லாமே இரவில் தான் எங்களுக்குத் தருவார்கள் என்பதால் - ட்ராக்கிங் நம்பர்கள் கோரி இப்போதே போன் அடித்தலில் பலன் இராது  - ப்ளீஸ் ?

* சத்தமின்றி யுத்தம் செய் ! - ட்யுராங்கோ
* ஆவியின் ஆடுகளம் - டெக்ஸ் வில்லர்
* நானும் சிப்பாய்தான் ! - ப்ளூகோட் பட்டாளம்
* இயந்திரத்தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி 
   Plus
* ஒரு சர்ப்ரைஸ் கிப்ட்

அடங்கிய பார்சல்கள் on the way ! நாளைய காலையில் முதலாவதாக இவற்றைக் கைப்பற்றவிருக்கும் நண்பரே-2017-ன் முதல் வாசகராகிடுவார் ! 

"ஜனவரிப் பணிகள் முடிந்த மாதிரித் தான் ; பிப்ரவரியில் இருக்கிறேன் ; மார்ச்சில் மிதக்கிறேன் !" என்று அவ்வப்போது நான் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தாலும் - நடப்பாண்டின் (டிசம்பரின்) இதழ்களை நிறைவுக்கு கொணர்ந்த பின்பாக லேசாயொரு விடுமுறை மூட் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும் ! So "நீதிக்கு நிறமேது ?" பணிகளை முடித்த கையோடு - ஜனவரியின் இறுதிப் பணிகளுக்குள் பாய்ந்திடாது கொஞ்சம் ஜாலியாய் சுற்றித் திரிந்தேன் ! கண்ணிமைக்கும் வேளைக்குள் டிசம்பரின் பாதியைக் காணோம் ! அதன் பின்பாக,அடித்துப் பிடித்து ட்யுராங்கோவின் final touches-க்குள் மூழ்கிட - 4 கதைகள் கொண்ட இந்த ஆல்பத்தின் பணிகள் ஒன்றன்பின் ஒன்றாய் குவிந்து கொண்டே இருந்தன ! அட்டைப்படம் - முத்து காமிக்சின் ஒரு முக்கிய தருணத்துக்கு நியாயம் செய்வதாகவும் இருக்க வேண்டும் ; ஆண்டின் முதல் மெகா இதழுக்கான தோரணையுடனும் அமைந்திட வேண்டுமென்ற ஆர்வத்தில் - நமது டிசைனரை ஒரு வழி பண்ணி விட்டேன் ! இதனில்   முக்கிய கண்டிஷன் - ஒரிஜினல் டிசைனையே பயன்படுத்திட வேண்டுமென்ற படைப்பாளிகளின் கட்டளை சார்ந்ததாகிப் போனதால் - ஓவராக மாற்றங்கள் / நகாசு வேலைகளை செய்திட இடமில்லை ! Without much ado - இதோ 2017 -ன் முதல் ஸ்பெஷல் இதழின் முதல் பார்வை ! 
ஒரிஜினல் டிசைனையே லேசாக மேம்படுத்தி - வழக்கம் போல நமது ஹார்ட்கவர் இதழ்களுக்கான வேலைப்பாடுகளோடு உருவாக்கியுள்ளோம் ! முடித்த இதழைக் கையில் ஏந்திப் பார்க்கும் போது அட்டகாசமாய் இருப்பது போல் எனக்குத் தோன்றியது !! But of course - இதனில் உடன்பாடும் இருக்கக் கூடும் ; மாற்றுக கருத்து இருந்திடலும் சாத்தியமே என்பதால் - all yours to rate ! கதை / தயாரிப்பு / அச்சு என எல்லாமே ஒரு புதுப் பரிமாணத்தில் இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது ! "விடுதலையே உன் விலை என்ன ?" கூட பிரமாதம் என்று சொன்னவன் தானே சாமி நீ ? " என்ற மைண்ட் வாய்ஸ்க்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு எனும் போது - மார்க் போடும்  பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் ! So ஆண்டின் ஆரம்பத்தை ட்யுராங்கோ with a bang துவக்கித் தந்துள்ளார் எனும் போது - ஒரு முழுமையான ரேட்டிங் பொறுப்பு உங்கள் முன்னுள்ளது !

* நாயகர் எப்படி ?
* ட்யுராங்கோவின் கதாப்பாத்திரம் எவ்விதம் ?
* கதைபாணி பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் ?
* Overall தயாரிப்புப் பற்றி ?

என்று உங்களிடமிருந்து நிறைய சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்வது எங்களது புத்தாண்டின் எதிர்பார்ப்புகளுக்குள் ஒன்றாக இருந்திடும் ! So படித்து விட்டு please do share your thoughts ? இதழைப் புரட்டிவிட்டு ; படித்து விட்டு மௌனமாய் நீங்கள் நகர்ந்திடும் போதும் "விற்பனை ஆச்சுதானே !" என்று நாங்கள் நினைத்துக் கொள்ளலாம் தான் ; ஆனால் நிறை-குறைகளை அறிந்து கொள்ளும் போதே இந்தப் பணிகளுக்கொரு அர்த்தம் இருப்பது போல் தோன்றிடும் ! So ,இது போன்ற தருணங்களிலாவது மௌனத்துக்கு சிறு விடுமுறை தந்திட்டால் மகிழ்வோம் !  
அப்புறம் - நமது இரவுக் கழுகார் & கார்சன் ! எப்போதும் போலவே வண்ண இதழ்களை முதலில் முடித்துவிட்டு, அப்புறமாய் b & w ஐப் பார்த்துக் கொள்ளலாமென்ற நினைப்பில் சுற்றி வந்துவிட்டு, கிருஸ்துமஸ் தினத்தன்று 'மாங்கு மாங்கென்று' எழுதித் தள்ளி "ஆவியின் ஆடுகளம்" பணிகளை நிறைவு செய்தேன் ! ஆண்டின் முதல் 'தல' சாகசம் எவ்விதமென்றும் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ?

வரிசையில் மூன்றாவதாக ப்ளூகோட் பட்டாளம் ! But நிறைய நண்பர்களின் வாசிப்பினில் முத்லிடத்தைப் பிடிக்கப் போவது இந்த வண்ண விருந்தானது தானிருக்குமென்று நினைக்கிறேன் ! ஓராண்டு break-க்குப் பின்னர் தலைகாட்டும் இந்த ஜோடியின் ஒரு அழகான ஆல்பமிது ! 

Finally - மாயாவி !! இவரெல்லாம் 'பில்டப்' அவசியங்களுக்கு அப்பாற்பட்ட தனியொருவர் எனும் போது - இதழின் அட்டைப்படத்தை உங்கள் கண்ணில் காட்டுவதோடு முடித்துக் கொள்கிறேன் ! ஆங்காங்கே பற்களை ஆட்டம் கண்ணகி செய்த புராதன வசன கடைகளில் மெலிதான திருத்தங்களைத் தாண்டி இங்கே பெரிதாய் எனக்குக் கம்பு சுழற்றும் பணிகள் இருந்திடவில்லை ! 
Last but not the least - சின்னதாயொரு gift-ம் கூட, நமது சந்தா நண்பர்களுக்கு ! 2017-ன் ஒவ்வொரு மாதமும் நம் சக்திக்குட்பட்ட சிற்சிறு surprises உங்களது கூறியர்களில் இருந்திடும் என நான் அறிவித்திருந்ததை மெய்ப்பிக்கும் முதல் வாய்ப்பு ! இதன் நிதியுதவி - சீனியர் எடிட்டரின் உபயம் என்பது கொசுறுத் தகவல் ! Gift-ஐப் பார்த்து விட்டு - "ப்பூ...இதுக்குத் தானா ?" என்று நண்பர்கள் என்னிடவும் கூடும் ; "அட !" என்று முகம் மலரவும் கூடும் ! எது எப்படியிருப்பினும் - பதினாறிலேயே (2016 ) பதினேழைச் (2017 ) சாத்தியமாக்கிய சந்தோஷத்துடன் நடையைக் காட்டுகிறேன் ! ஒரு விசாலமான ஆண்டின் பயணத்தை, நமது இதழ்கள் வாயிலாகவும், இந்தப் பதிவின் மார்க்கமாகவும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு ஆயுட்கால நினைவாகத் தொடரும் என்னுள் !

ஓட்டமாய்  ஓடிக் கொண்டேயிருந்த சமயம் - 52 ஆண்டுகள் கொண்டதொரு ஆண்டினில் எங்களது டீம் உருவாக்கியுள்ளது 58 இதழ்களை (தற்போதைய இதழ்களையும் சேர்த்துக் கொண்டால்) என்பதன் முழு தாக்கத்தையும் புரிந்து கொள்ள நேரமிருக்கவில்லை ! ஆனால்  ஒரு வருஷத்தின் ஓட்டத்தை நின்று, நிதானமாய் மனதில் இன்றைக்கு அசை போடும் போது - ஓசையின்றிச் சுழன்றிருக்கும் எங்களது டீமின் ஆற்றல் என்னை அசாத்தியப் பெருமை கொள்ளச் செய்கிறது ! 

நான்கே பெண்கள் + மைதீன் + நமது மார்க்கெட்டிங் மேனேஜர் என்பதே நமது front office ; back end என சகலமும் !! Of course அச்சுப் பிரிவும் நமக்கு இன்றியமையா அங்கமே - but அதுவொரு commercial பிரிவு எனும் போது, நம் பணிகள் மட்டுமென்றில்லாது, மற்ற அச்சு வேலைகளையும் செய்வதுண்டு ! ஏன் - நானோ, ஜுனியரோ கூட காலையில் ஒரு வேலை ; மதியமொன்று என்று மரத்துக்கு மரம் தாவும் மந்திகள் தானே ?! ஆனால் நமது இந்த 4 + 1 +1 டீமுக்கோ  - உலகம் ஆரம்பிப்பதும், முடிவதும் நமது காமிஸ்களோடு தான் ! ஆண்டு முழுக்க உங்களது பார்சல்களை அனுப்புவதிலிருந்து, தோராயமாக சில ஆயிரம் போன் கால்களை, துளியும் சளைக்காமல் புன்சிரிப்போடே கையாளும் ஸ்டெல்லா & வாசுகி ஒரு பக்கமெனில் - மிஷின்கன் வேகத்தில் டைப்செட்டிங் / டிசைனிங் என எதைக் கையில் கொடுத்தாலும் மூன்றே நாட்களில் முடித்துத் தரும் இவாஞ்செலின் & கோகிலா இன்னொருபக்கம் ! போனிலேயே "இந்தக் கதையில் யார் ஹீரோ ? " என்பதில் ஆரம்பித்து ; கைவசமுள்ள 140 இதழ்கள் பற்றியும் ஒரு நூறு கேள்விகளை வாசகர்கள் எழுப்பும் போது, அத்தனைக்கும் பதில் சொல்லும் பொறுமையை எண்ணி நான் எத்தனையோ நாட்கள் வியந்ததுண்டு ! காலை பத்துக்குத்  துவங்கி மாலை ஏழு வரை இவர்கள் உலகமே இந்தப் பணிகள் மட்டுமே ! மைதீனுக்கோ ஒன்பதுக்குப் புலரும் பொழுது - இரவு பதினொன்றுக்கு முன்பாய் ஓய்ந்ததில்லை ! And எந்தவொரு பணியும் அவனது எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாகாது !! களப்பணிகளே நமது மார்க்கெட்டிங் மேனேஜர் கணேஷுக்கு என்பதால் - ஊர் ஊராய் ; வீதி, வீதியாய் நம் முகவர்களை பொறுமையாய் / திறமையாய்க் கையாள்வது அவரது இலாக்கா ! And புத்தக விழாவினில் நம் ஸ்டாலைப் பார்த்துக் கொள்பவரும் அவரே ! தமிழ் பதிப்புலகில் - இத்தனை சன்னமான - ஆனால் இத்தனை ஆற்றலானதொரு அணியிருக்க சத்தியமாய் வாய்ப்புகள் குறைவு என்பேன் ! Doubtless - ஆங்காங்கே சின்னச் சின்ன குறைபாடுகள் இருந்திடலாம் தான் ; ஆனால் அவர்களின் முன்னே நான் குவித்துப் போட்டிருக்கும் பணிகளின் சுமைக்கு சற்றே அனுசரணையும் நிச்சயம் அவசியமே ! ஆண்டின் இறுதி நாளை நெருங்கும் இந்தத் தருணத்தில், அளவில் சிறிதாயிருப்பினும் ஆற்றலில் அசகாயர்களாக இருக்கும்  எனது இந்த டீமை உயர்த்திப்பிடிப்பதும் - இந்தாண்டின் மறக்க இயலா விஷயங்களுள் ஒன்றாக இருக்குமென்பது நிச்சயம் ! Thank you my team !

And before I sign off -சின்னதொரு வேண்டுகோளும் !! இன்னமும் சந்தாப் புதிப்பித்தல்களைச் செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? எங்களுக்குச் சுறுசுறுப்பைக் கற்றுத் தந்தவர்கள் நீங்களே ! இன்றைக்கு எங்களோடு தோள் கொடுத்து நிற்க நீங்களில்லாது போனால் ரொம்பவே மிஸ் செய்வோம் !! 

புத்தாண்டில் சந்திப்போம் folks - God be with us all ! Happy Reading !! And அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும் !

Sunday, December 25, 2016

பதிவுப் பக்கத்தின் வயது 5 !

நண்பர்களே,

            

வணக்கம். ஆண்டுகள் ஐந்து நிறைவடைகிறது இந்த வலைப்பதிவுப் பக்கத்துக்கு ! தட்டுத் தடுமாறி நாலு வரிகளைப் பதிவிடவே ஓராயிரம் தடவை யோசித்த தருணங்களுக்கு இத்தனை வயதாகி விட்டதா ? என்று ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் - என்னமோ இதை யுகங்களாய் செய்து வருவது போலும் உள்ளுக்குள் தோன்றாதில்லை ! “இரத்தப் படலம் – The Collector’s Edition” வெளியான பின்பாக மொத்தமாய் மல்லாந்து படுத்தவன் - ஏதோவொரு அசட்டுத் தைரியத்தில் 2011-ன் இறுதியில் ஒரு மீள்வருகையைப் பற்றி யோசித்த போது ரொம்பவே கூச்சமாக இருந்தது ! எனது credibility – நம்பகத்தன்மை கால்மிதிக்கும் தணிவானதொரு நிலையில் இருந்த சமயமல்லவா அது ? "திரும்பவும் வந்துட்டேன்... கலர் கலரா வந்துட்டேன் ! "என்று நான் சூடத்தை அணைத்துச் சத்தியம் செய்திருந்தாலும் அரையணாப் பிரயோஜனம் இருக்க வாய்ப்பில்லை என்ற நினைப்பில் பம்மிக் கிடந்தவனை இந்த வலையுலகிற்குள் பிடித்துத் தள்ளி விட்டது ஜுனியர் தான் ! பதிவைத் தொடர்ந்து புதுப்பொலிவுடனான இதழ்களும் ; இதழ்களைத் தொடர்ந்து புதுப் பொலிவுடனான பதிவுப் பக்கங்களும் தொடர்ந்தது வரலாறு (!!!) இடையிடையே “மானே... தேனே... பொன்மானே...” என்று போட்டுக் கொள்ள சாத்து வாங்கும் படலங்களும் விதவிதமாய் அமைந்தாலும் இந்த ஒட்டுமொத்த அனுபவம் ஒரு ஆயுட்கால நினைவென்று சொல்வேன் ! இத்தனை தொலைவு பயணிக்க அனுமதித்த உங்கள் பெருந்தன்மைகளுக்கும் ; நமக்கு எரிபொருளாய்த் தொடர்ந்திடும் அந்த காமிக்ஸ் காதலுக்கும் இந்தத் தருணத்தில் ஒரு மெகா சலாம் !! இரண்டுமின்றிப் போயின் என்றைக்கோ கடையை மூடி விட்டு, சனியிரவையும், ஞாயிறு பகல்களையும் குறட்டை தேசத்திற்கு நெடுங்குத்தகைக்கு விட்டிருப்பேன் ! 


மொக்கைகளோ, நமது இதழ்கள் சார்ந்த பதிவுகளோ, இதுவரையில் இங்கே நான் எழுதியுள்ள எவையுமே பெரியதொரு சிந்தனையின் பிள்ளைகளல்ல ! ஏதேனும் சிக்கல்கள் / விளக்கங்கள் தரும் அவசியங்கள் எழுந்திருக்கும் தருணங்கள் தவிர்த்து பாக்கி நாட்களில் எதையும் தலைக்குள் போட்டு உருட்டிக் கொள்வதில்லை -சனியிரவு கம்பியூட்டரின் முன்னே ஆஜராகும் வரையிலும் ! அந்தக் கடைசி 7 நாட்களுள் எனது பணி சார்ந்த நினைவுகள் ; காத்திருக்கும் தயாரிப்புகள் என்று ஏதேனும் ஒரு சமாச்சாரம் வாகாக அமைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை இதுவரையிலுமாவது என் காலை வாரியதில்லை ! So இந்தப் "பதிவுகளின் கதையையே" இன்றைய பதிவாக்கி விட்டாலென்னவென்று இன்றைக்குத் தோன்றிய போது - ‘அப்படியே செய்தால் போச்சு‘ என்று தான் தோன்றியது ! 


இங்கொரு சின்ன "உஷார் பலகையும்" கூட ! இங்கு நான் பதிவிடக்கூடிய சிந்தனைகளில் சில / பலவற்றை முந்தைய பதிவுகளிலோ ; எனது பதில்களிலோ நான் சொல்லியுள்ள சமாச்சாரங்களே  ! So ஒரு மறு ஒலிபரப்புப் போல தோன்றிடும் பட்சத்தில் - இது காலவோட்டத்தின் போக்கில் நமது பார்வைகள் ஓடிடும் திசைகள் பற்றிய ஒரு updated பார்வையாக எடுத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ? அப்புறம் நிறைய விதங்களில் இது ‘ரமணா‘ பாணியிலான பதிவாக இருக்கக் கூடுமென்பதால் - பாதித் தூக்கத்தில், சிரமத்தோடு கண்விழித்து மொபைலை உற்றுப் பார்ப்பவராக நீங்களிருப்பின் - ‘தூங்கி முழித்து விட்டே வாருங்களேன்‘ என்று சொல்வேன் ! நிச்சயமாய் வார்தாப் புயல் பாணியில் பூமியைப் புரட்டிப் போடக் கூடிய சங்கதிகள் இதனிலிருக்க வாய்ப்புகள் சொற்பம்! Here goes :

 

பதிவுகளின் எண்ணிக்கை நிற்பது 350-க்கு அருகாமையில் என்றாலும் - துவக்கத்து நாட்களின் 4 வரிப் பதிவுகள் ; இடையிடையே போட்ட உபபதிவுகளுமாய் ஒரு 50 இடங்களை ஆக்ரமித்திருக்குமென்று நினைக்கிறேன். So அவை நீங்கலாகப் பார்த்தால் தேறக் கூடியது 290-300 பதிவுகள் - which makes it roughly 60 posts an year ! "வாரமொன்று" என்பதைத் தாண்டியும் நிறையவே எழுதித் தள்ளியிருக்கிறேன் என்பது புரிகிறது ! உசிலம்பட்டியில் ஆரம்பித்து உஸ்பெகிஸ்தான் வரை இதனுள் travel பண்ணியிருப்போம் நாம் ! அவற்றுள் ‘பளிச்‘ என்று நினைவில் நிற்பவை சிலபல பதிவுகளே ! முதலாவதாய் ஞாபகத்தில் உச்சத்தை ஆக்ரமித்து நிற்பது - நமது மறுபதிப்புத் தடத்தை அறிவித்ததொரு ஞாயிறின் பதிவே :

 

2012-ல் அறிவிப்போடு மாயாவி & கோ. காணாது போய் விட, தொடர்ந்த நாட்களில் நிறையவே சாத்துக்கள் அதன் பொருட்டு வாங்கியது மறக்கவில்லை ! So ஒரு வழியாக 2014-ல் “நயாகராவில் மாயாவி” மார்க்கமாக மீண்டும் மும்மூர்த்திகள் + ஸ்பைடரார் வலம்வரவுள்ளனர் என்று நான் அறிவித்த தினத்தின் பதிவுக்கு 360 பின்னூட்டங்கள் கிட்டியிருந்ததாய் நினைவு ! அந்த நாளில் நிறைய உற்சாகம் உருப்பெறும் என்பதை நான் யூகித்திருந்தேன் தான் - ஆனால் அன்று காணக் கிடைத்தது என் எதிர்பார்ப்புகளை விடப் பன்மடங்கு வீரியமான ஆரவாரத்தை ! So என் மண்டைக்கள் இதுவரையிலான பதிவுகளில் - அசாத்தியமான நம்பர் 1 இடம் அதற்கு என்று சொல்லுவேன் !

 

இரண்டாம் இடமென்று சொல்லுவதாயின் 2014-ன் ஈரோட்டுப் புத்தகவிழாவின் காலையில் LMS வெளிவரவிருந்த தருணத்தில் வந்த பதிவைச் சொல்வேன் ! முதல் hardcover என்ற விதத்தில் இந்தத் தருணம் நமக்கெல்லாம் ரொம்பவே fresh ஆனதொரு வேளையாக அமைந்தது என்பதோடு ; காத்திருந்த ஈரோட்டு விழாவின் சந்திப்பு சார்ந்த உற்சாகங்களும் அன்றைய  பதிவினில் கரைபுரண்டோடியது என்பேன் !

 

மூன்றாம் இடத்தை என் தலைக்குள் தக்க வைத்திருக்கும் பதிவோ- “தெளியத் தெளிய வைத்துத் தெறிக்க விடுவது எப்படி?” என்ற செயல்முறை விளக்கம் ! Yes – அதீத உற்சாகத்தோடும், பரபரப்போடும் வேகம் பிடித்திருந்த பயணத்துக்கு - “மொத்து வாங்குவதென்றால் என்ன ?” என்பதை முதன்முறையாகச் சுட்டிக் காட்டிய 2012 அக்டோபரின் AFTER ‘தங்கக் கல்லறைப் பதிவு‘ தான் அது ! டெரரான ராப்பர் ; அசாத்தியக் கதைக்களம் ; பிரமாதமான வர்ணத் தயாரிப்பு என்றாலும் - “மொழியாக்கத்தை என்னமாய் மாற்றப் போச்சு ?” என்று விழுந்த தர்ம அடிகள் - ஷெரீப்பிடம் கிட் ஆர்டின் வாங்குவதை விடவும் விசேஷமானவை ! அது வரையிலும் சகல இதழ்களும் பாராட்டு மழையையே வரவழைத்திருக்க - “அட... சமூக வலைத்தளங்களில் வெற்றி காண்பது இவ்ளோ தானா?” என்ற மெலிதான தெனாவட்டை எனக்குள் விதைத்திருந்தன ! So- நாணயத்தின் மறுபக்கத்தைப் பார்க்க முதல் முறையாகச் சாத்தியமான அந்த சப்தநாடிகளை ஒடுங்கச் செய்த நாட்களும் ரொம்பவே memorable என்பேன் - albeit for the wrong reasons!

 

இந்தாண்டின் ஈரோட்டு வாசகர் சந்திப்பு சார்ந்த பதிவினில் எழுதிட எனக்கு அதிக அவசியங்கள் இருந்திடவில்லையெனினும் - சரமாரியான ஃபோட்டோக்களும், அன்றைய தினத்தில் நாம் ஒட்டுமொத்தமாய் உணர்ந்த நேசமும் அந்தப் பதிவை என் நெஞ்சுக்கு ரொம்பவே நெருக்கமானதாக்கி விட்டிருந்தது ! இன்னமும் அசைபோடும் போது - ‘ஐயையோ... அவரைக் குறிப்பிட மறந்து விட்டோமே ; இவரைப் பற்றி எழுதத் தவறி விட்டோமே !" என்ற பதைபதைப்பு எழத் தவறுவதில்லை ! சுருக்கமாகச் சொன்னால் ஒரு அசாத்திய நாள் பற்றியதொரு நினைவு கூர்தல் அந்தப் பதிவை ரொம்பவே ஸ்பெஷலாக்கித் தந்தது எனக்கு !

 

‘பௌன்சரின் வருகை‘ பற்றிய அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முந்தையதொரு செப்டம்பரிலோ ; அக்டோபரிலோ வெளியிட்ட வேளையில் இங்கே ரவுண்ட் கட்டிய உத்வேகமும் மறக்க இயலா ரகம் ! சாதகங்கள்- பாதகங்கள் என்று இருவிதக் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தாலும், ஒரு out of the ordinary நாயகரின் வருகை ஏற்படுத்தித் தந்திருந்த அதிர்வுகளை அந்தப் பதிவில் துல்லியமாய் ரசிக்க முடிந்தது! 

 

NBS எனும் ஒரு extraordinary அனுபவமும் நமக்கொரு மைல்கல் தருணமாய் அமைந்தது நிஜம் ! வெளியீட்டின் தர மேம்பாட்டில் மட்டுமன்றி ; பதிவின் சுவாரஸ்யம் சார்ந்த விஷயங்களிலும், NBS ஏற்படுத்தித் தந்திருந்த உத்வேகத்தை என்னவென்று விவரிப்பது ? அதிலும் அந்த இதழின் சென்னைப் புத்தக விழாவின் வெளியீட்டு வேளையை இப்போது நினைவு கூர்ந்தாலும் - மின்சார ஓட்டைக்குள் விரல் செருகிடும் மாயாவியின் உணர்வலைகள் என்னையும் தாக்குவது போலுள்ளது ! மூன்றடி நடைபாதையிலும், ஒரு 9’ x 9’ ஸ்டாலினுள்ளும் அந்த மாலை குழுமியிருந்தோர் 180 பேர் !! ஆறு மணி சுமாருக்கு ஆரம்பித்த அதகளம் எட்டு மணி வரைக்கும் நீடித்ததெனும் போது - சுற்றுமுற்றுமிருந்த கடைக்காரர்களின் திகைப்பை இப்போது உருவகப்படுத்திப் பார்க்க முயன்றாலும், கிறுகிறுக்கிறது ! அன்றைய தினம் நம்மைப் பிட்டத்தில் உதைத்து வெளியேற்றாது விட்ட அமைப்பாளர்களுக்கு ஆயுள் முழுக்கவும் நாம் கடமைப்பட்டிருப்போம் ! கட்டுப்பாடிலா, காட்டாற்று வெள்ளமாய் காமிக்ஸ் காதல் பிரவாகமெடுத்த அந்தத் தருணத்தை மீண்டுமொரு முறை கண்ணில் பார்க்கத் தான் முடியுமா ? Phew! மறக்க இயலா தினம்... நினைவை விட்டு அகலாப் பதிவு!

 

வெளியீட்டு விழாவின் கோலாகல அளவுகோல்களில் NBS-ன் தெருப்பக்கமாய்க் கூட மற்ற ஸ்பெஷல்கள் நெருங்கிட வாய்ப்பில்லை என்றாலும் - தயாரிப்பின் பிரம்மாண்டத்தின் பொருட்டு ஒரு தடாலடி அனுபவமும், அற்புதமான பதிவையும் நல்கியது ”மின்னும் மரணம்” என்பேன் ! படித்த கதை தான் ; பரிச்சயமான நாயகர் தான் - ஆனாலும் முழு வண்ணத்தில் ; ஒரு ராட்சஸத் தொகுப்பாய் இதனை நாம் வெளியிடத் தீர்மானித்து அறிவித்த வேளையின் energy level களும் விண்ணைத் தொட்ட ரகம் ! ஸ்பெஷல் இதழ்கள் ; கையில் சுகமான சுமையாகக் கனக்கும் "குண்டூஸ்" - நமது adrenaline சுரப்பிகளைத் தட்டியெழுப்பி விடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது ! So “மின்னும் மரணம்” அறிவிப்புப் பதிவும் சரி ; வெளியான பின்னே உங்கள் பாராட்டு மழைகள் பிரவாகமெடுத்த பதிவும் சரி- very very special ones!

 

சென்றாண்டும், இந்தாண்டும், புது அட்டவணைகள் அறிவிக்கப்பட்ட தினத்தின் பதிவுகள் - நிஜமாகவே எங்களது பெட்ரோல் டாங்குகளை உற்சாகமெனும் எரிபொருளால் நிரப்ப நிரம்பவே உதவியவை ! அந்த விதத்தில் இரு ஆண்டுகளுமே அந்த அறிவிப்பு நாளில் இங்கு கரைபுரண்ட உற்சாகம் - out of the world !

 

திரும்பிப் பார்க்கையில் இந்த 5 ஆண்டுப் பயணத்தில் எக்கச்சக்கமோ எக்கச்சக்கமான சந்தோஷத் தருணங்கள் நமதாகியுள்ளது புரிகிறது ! Yes of course - பஞ்சாயத்துகளுக்கும், பழுத்த முதுகுகளுக்கும் பஞ்சமே இல்லை தான் என்றாலும் - the positives far outweigh everything else - hands down!


  • 2012-ன் முதன் முதல் சந்திப்புகள்- சென்னைப் புத்தக விழாவின் போது & Come back ஸ்பெஷலின் ரிலீஸ்.
  • 2012 செப்டம்பரில் பெங்களுர் காமிக்-கான்
  • 2013 ஜனவரியில் NBS ரிலீஸ்
  • சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலும், அது உருவாக்கிய அதகள சிரிப்பலைகளும்...!
  • 2014 ஆகஸ்டில் LMS
  • "மின்னும் மரண" அறிவிப்பு
  • 2014 அக்டோபரில் மும்மூர்த்திகளின் மறுவருகை சார்ந்த அறிவிப்பு
  • 2015 சென்னைப் புத்தக விழா
  • 2015 மின்னும் மரணம் ரிலீஸ்
  • 2016 ஈரோட்டு வாசகர் சந்திப்பு 


என்று ஏராளமாய் ஜாலியான வேளைகளை நாம் கடந்து வந்துள்ளது புரிகிறது ! எப்போதுமே சுமாரான பழம்நினைவுகள் கூட நிகழ்காலத்தில் ரொம்பவே ஜிலுஜிலுப்பாய்த் தோன்றுவது சகஜம் தானே ? அவ்விதத்தில் பார்க்கையில், maybe 10 / 15 ஆண்டுகள் கழிந்த நிலையில் - கிராபிக் நாவல்களும், sci-fi கதைகளும் படித்துக் கொண்டிருக்கும் சூழலில் - “அந்தக் காலத்திலே மாதிரி வருமா?” என்று ஏக்கப் பெருமூச்சிட இந்தத் தருணங்களுள் ஏதோவொன்று பிரயோஜனப்படுமோ - என்னவோ ?! And இந்த 60  மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ guys ? தெரிந்து கொள்ள ஒரு சின்ன அவா !! 

 

TOP 3 of 2016 :


அடடே...அதற்குள்ளாக இன்னொரு ஞாயிறா ? - 5116 views

http://lion-muthucomics.blogspot.in/2016/07/blog-post_24.html


இத்தாலிய மாதமிது...! - 4954 views

http://lion-muthucomics.blogspot.in/2016/07/blog-post_17.html


ஒரு 'மினி"மம் முயற்சி ! - 4278 views

http://lion-muthucomics.blogspot.in/2016/02/blog-post_14.html

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ALL TIME TOP 10 :


'தல'....தளபதி.....திருவிழா..! - 7305 views

http://lion-muthucomics.blogspot.in/2014/08/blog-post_2.html


ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை ! - 6658 views

http://lion-muthucomics.blogspot.in/2013/01/blog-post.html


இது வேங்கையின் வேளை ! - 6177 views

http://lion-muthucomics.blogspot.in/2013/11/blog-post_16.html


எட்டும் தூரத்தில் NBS ! - 6071 views

http://lion-muthucomics.blogspot.in/2012/12/nbs.html


காசு...பணம்...துட்டு...money..money !! - 6019 views

http://lion-muthucomics.blogspot.in/2013/06/moneymoney.html


ஒரு கௌபாய் வானவில்..! - 5846 views

http://lion-muthucomics.blogspot.in/2014/10/blog-post_11.html


சித்திரமும் பேசிடுமே..! - 5746 views

http://lion-muthucomics.blogspot.in/2012/11/blog-post.html


வண்ணத்தில் ஒரு விருந்து..! - 5352 views

http://lion-muthucomics.blogspot.in/2013/12/blog-post_10.html


இது புலியின் தினம்..! - 5248 views

http://lion-muthucomics.blogspot.in/2015/04/blog-post_19.html


தீபாவளிக்கொரு நல்வரவு ....! - 5227 views

http://lion-muthucomics.blogspot.in/2014/10/blog-post_19.html


நாளாசரியாய் எல்லாமே அதன் மெருகை இழப்பது இயல்பே என்ற விதத்தில் - 5 நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னேயும் துவக்க நாட்களது அதே உற்சாகத்தைத் தக்க வைத்தக் கொள்வது எல்லோருக்கும், எல்லாத் தருணங்களிலும் சாத்தியமல்ல என்பது புரிகிறது ! அதிலும்  நவம்பர் 8 ATM படையெடுப்புகள் துவங்கிய பின்பாக - இங்கே நண்பர்களின் பங்களிப்பு குறுகலாகியிருப்பதும் புரிகிறது ! ஆனால் - ஆண்டின் preview சார்ந்த பதிவுகளிலாவது இன்னும் கொஞ்சம் ஈடுபாடு கிட்டின் - நிறைவாக உணர்வோம்! But, எல்லா நிலைகளிலும் - குன்றா வேகத்தோடும், உற்சாகத்தோடும் இங்கு வருகை தந்து, பதிவிட்டு, தளத்தையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்திடும் die-hard நண்பர்களுக்கு இந்தத் தருணத்தில் ஒரு மிகப்பெரிய வணக்கம் ! உங்கள் ஈடுபாட்டுக்கும், மெனக்கெடல்களுக்கும், மாறா அன்புக்கும் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம் !

 

And இதோ- ஜனவரியின் இரவுக்கழுகாரின் b&w வெளியீட்டின் அட்டைப்பட முதல் பார்வை ! நமது ஓவியர் + டிசைனர் வழக்கம் போலக் கைகோர்க்கின்றனர் இந்த ராப்பருக்கும் ! உங்களுக்கும் பிடித்திருப்பின்- சூப்பர் ! கதையைப் பொறுத்த வரை - இது க்ளாடியோ நிஸ்ஸி உச்சத்தில் இருந்த சமயம் உருவானது ! ‘ஓக்லஹோமா‘ புகழ் ஓவியர் லெட்டரீ சித்திரங்களுக்குப் பொறுப்பேற்கிறார் ! ஆவி - அமானுஷ்யம் என்றாலும், நம்மவர் நடுமூக்கில் தான் குத்துவார் என்பது தெரிந்த விஷயம் தானே ? ஒரு டிடெக்டிவ்வாக இரவுக் கழுகார் வலம் வருவதே இந்த சாகஸத்தின் highlight ! மிரட்டலான ‘பன்ச்‘ டயலாக்குகள் எழுத அதிகம் அவசியப்படவில்லை இம்முறை என்றாலும் - கதையோட்டத்தில் அழுத்தமான வரிகளுக்கும் வாய்ப்புகள் கிட்டாமல் போகவில்லை! ஜாலியாக, ரசித்து எழுத முடிந்த கதையிது என்று சொல்வேன் !



”நீலச் சீருடை நல்லவர்களின்” அட்டைப்பட முதல் பார்வையுமே இதோ ! ஒரிஜினல் டிசைன் ; லேசான நமது நகாசு வேலைகளுடன் ! இதிலும் உங்கள் தீர்ப்பென்ன என்றறிய ஆர்வம் !



சகல இதழ்களும் அச்சாகி விட்டன- டெக்ஸ் நீங்கலாக ! திங்களன்று அதுவும் முடிந்து விடுமெனும் போது - பைண்டிங்ஆபீஸ் போகும் சாலைகளே நம்மவர்களின் பாதையாக இருக்கும் - அடுத்த சில நாட்களுக்காவது ! 


“சந்தாவினில் மாதமொரு Surprise” என்பதற்குத் துவக்கம் தரும் முயற்சியும் இன்னொரு பக்கம் தயாராகி வர -காத்திருக்கும் அடுத்த சில நாட்கள் எங்களுக்குப் பரபரப்பான பொழுதுகளாய் இருக்கப் போவது உறுதி ! இன்னமும் சந்தா ரயிலுக்கான டிக்கெட் புக்கிங்குகள் முடிந்த பாடில்லை என்பதால் - அவர்களுக்காகவும் சற்றே பொறுமையாய் காத்திருக்கிறோம் ! இந்த வாரத்தினில்சந்தாக்களை அனுப்பி வைத்து, புது இதழ்களை ரசித்திடத் தவறாதீர்கள் - ப்ளீஸ்!

 

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !  Enjoy this Blessed Day ! மீண்டும் சந்திப்போம் !


P.S : சென்னையில் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கிடவுள்ள சென்னை புத்தகக்காட்சி 2017-ல் நமக்கு முதன்முறையாக டபுள் ஸ்டால் ஒதுக்குப்பட்டுள்ளது ! நமது ஸ்டால் நம்பர்கள் 624 & 625 !!

BAPASI அமைப்பிற்கு நமது உளமார்ந்த நன்றிகள் !  PLEASE DO VISIT US !!

...

Saturday, December 17, 2016

தி ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ் !

நண்பர்களே,
            
வணக்கம். நமது இதழ்களில் கதைகளாய்ப் படிக்கும் போது சுவாரஸ்யமாகத் தான் உள்ளது ; “புயல்... சூறாவளி” என்று அடைமொழிகளோடு தலைப்புகளை அமைக்கும் போதும் லயிக்கத் தான் செய்கிறது ! ஆனால் the real thing-ஐ நிஜத்தில், நேருக்கு நேராய்ப் பார்க்க நேரிடும் போது, அடிவயிற்றில் பந்தாய் சுருண்டு நிற்கும் பயம் பிரளயத்தையே கிளப்பி விடுகிறது உள்ளுக்குள் ! சென்னையைத் திங்களன்று புரட்டிப் போட்ட திருவாளர்.புயலாரைப் பற்றித் தான் பேசுகிறேன் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமிராது என்று நினைக்கிறேன் ! ஞாயிறன்று சென்னையில் வேலை என்பதால் சனியிரவே பதிவைப் போட்டு விட்டு ரயிலேறிப் பட்டணம் போய்ச் சேர்ந்த போதெல்லாம் வித்தியாசமாய் எதுவும் தோன்றவில்லை ! ‘அட... ஆந்திரா பக்கமாய்ப் போயிடுமாம்... நம்மள பெரிசா பாதிக்காதாம் !‘ என்ற நம்பிக்கையில் ஞாயிறு பகலை ஒப்பேற்றிய போதும் கூட எதுவும் மாறுபட்டுத் தோன்றவில்லை ! ஆனால் டி.வி. சேனல்கள் சகலத்திலும் - “திங்களன்று காத்துள்ளது மண்டகப்படி!” என்று முகாரி பாடத் தொடங்கிய போது தான் “லைட்”டாக வியர்க்கத் தொடங்கியது ! அதுவும் மழை... புயல்... அடைமழை... குளிர் என்பதையெல்லாமே பேப்பரில் எழுதினால் மட்டுமே பார்ப்பது சாத்தியமான சிவகாசிக்காரனுக்கு - இசகுபிசகாக சிக்கிக் கொண்ட உணர்வு தலைதூக்கியதில் ஆச்சர்யமேது ? திங்கள் காலையில் கண்முழித்த நேரம் முதலாய் போட்டுத் தாக்கிய மழையும், அந்த சூறைக்காற்றும் - கேப்டன் பிரின்ஸ் கதையை நினைவுபடுத்தின ! “பயங்கரப் புயல்” என்று பாக்கெட் சைஸிலும், கலர் மறுபதிப்பிலும் போட்டுப் பார்த்து ‘ஹை... சூப்பர்லே!‘ என்று சப்புக் கொட்டினவனுக்கு ‘இது தான்டா புயல்‘ என்று நிஜமான தரிசனம் கிட்டிய பொழுது விக்கித்துப் போகச் செய்தது ! 15 ஆண்டுகளுக்கு முன்பாகத் தென்கொரியாவில் ஒரு சூறாவளியின் சமயம் மாட்டிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது ; ஆனால் ‘வார்தா‘வின் தாண்டவம் அதற்கு நான்கு மடங்கு வீரியமானதாக இருப்பதைப் பார்க்க முடிந்தது ! ஒரு வழியாய் அன்றைய பொழுதை அறைக்குள்ளேயே பம்மிக் கிடப்பதில் செலவிட்டு விட்டு, மறு நாள் ‘துண்டைக் காணோம்- துணியைக் காணோம் !‘ என்று ஊரைக் காலி பண்ண விமான நிலையத்தைச் சென்றடைந்து, அங்கே ‘தேவுடா‘ காத்து, ஒரு வழியாய் மாலையில் மதுரையை எட்டிப் பிடித்த போது - சுளீரென்று கதிரவனின் காரமான வரவேற்பே காத்திருந்தது ! ‘ஷப்பா.. ஒரு மணி நேரப் பயண தூரத்திற்குள் தான் இயற்கையின், எத்தனை மாறுபட்ட முகங்களைப் பார்க்க முடிகிறதென்ற‘ பெருமூச்சோடு வீடு போய்ச் சேர்ந்தேன் ! So - புதன்கிழமை தொட்டு ஆபீஸில் பணிகளுக்குள் புகுந்த பொழுது   - இந்த வாரம் முழுவதுமே நமது இதர தொழில்களின் நிமித்தம் ஒன்றின்பின் ஒன்றாய்ப் பணிகள் தொற்றிக் கொண்டன ! பற்றாக்குறைக்கு ஜனவரியின் இதழ்களின் இறுதிக்கட்டப் பணிகளும் ‘இன்னாங்கிறே?‘ என்று முறைப்புக் காட்டிக் கொண்டு நிற்க - வலைப்பதிவு பக்கமாய்த் தலைவைத்துப் படுக்க முடியவில்லை ! ஒரு மாதிரியாய் இந்தப் பதிவைப் போட்ட கையோடு, முந்தையதுக்குள் புகுந்து சகலத்தையம் வாசிக்கவுள்ளேன் ! So இந்த வாரத்து லீவுகளின் பின்னணி இதுவே ! Sorry all !

ஜனவரியின் இதழ்களுள் நமது புது வரவு ‘ட்யுராங்கோ‘ தான் highlight என்பதில் ஐயமேது ? இது நமது முத்து காமிக்ஸின் 45-வது ஆண்டுமலரும் கூட என்பதால், தயாரிப்பில் நிறையவே கவனம் தந்து வருகிறோம் ! ட்யுராங்கோவை மொழிபெயர்க்கத் தொடங்கியது நான் தான் என்ற போதிலும், முதலிரு அத்தியாயங்களைத் தாண்டவே நிறைய தாமதமாகி விட்டது ! So எனது ஊர் சுற்றல்களின் பொருட்டு இதழில் சுணக்கம் நேரலாகாது என்று - மீத 2 அத்தியாயங்களை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைத்திருந்தேன். ஆனால் ஒட்டுமொத்தமாய் 4 அத்தியாயங்களையும் படிக்கும் போது அந்த நடைமாற்றம் மெலிதாய்த் தட்டுப்படுவது போலப்பட்டது ! So திரும்பவும் “எடுறா பேனாவை... போடுறா திருத்தங்களை!” என்று ஆரம்பித்த போது பெண்டும் கழன்று விட்டது ! ட்யுராங்கோவைப் பற்றி இங்கே ஒரு preview தருவது பொருத்தமாக இருக்குமென்று படுகிறது ! 
மனுஷன் ஒரு நீதிக்காவலரும் கிடையாது ; இராணுவ வீரரும் கிடையாது ; பௌன்சரைப் போலொரு பார் முதலாளியும் கிடையாது ! தனது சுடும் ஆற்றலை அவசியப்படுவோர்க்கு வாடகைக்கு விடும் பணியே இவரது ! ‘The Hired Gun’ என்று சொல்லலாம் ! தற்காப்புக்கன்றி யாரையும் கொல்ல மாட்டார் ; அதே சமயம் சென்டிமெண்ட்களோ, பாவ-புண்ணியப் பாகுபாடுகளோ இவருக்கு அந்நியமே ! அதிகம் பேச மாட்டார் ; இவரது கண்களும், தோட்டாக்களும் அந்தப் பணிகளைப் பார்த்துக் கொள்ளும் ! போகுமிடமெல்லாம் மரண தேவனின் நிழல் படிவது இவரது திறமைக்கு சான்றா ? வாங்கி வந்த சாபத்தின் பலனா ? என்பது பதிலிலாக் கேள்வி ! கிட்டத்தட்ட இந்த வாரத்தின் முழுமையையுமே இந்த மனுஷனோடு கடத்தியதில் நான் அவரது ரசிகனாகி விட்டேன் என்பதை விட, அவரைப் படைத்த Yves Swolfs-ன் பிரதம விசிறியாகி விட்டேன் என்று சொல்லலாம் ! எந்தவொரு அத்தியாயத்திலும், பூமியைப் புரட்டிப் போடும் ரக plot-கள் கிடையாது ; எந்தவொரு பிரேமிலும் நாயகர் ட்யுராங்கோவுக்கு அனல் பறக்கும் ‘பன்ச்‘ டயலாக்குகள் கிடையாது ! இன்னும் சொல்லப் போனால் நாயகரே ஒரு ‘சுமார் மூஞ்சிக் குமார்‘ தான் ! நமது இரவுக்கழுகாரின் கம்பீரமோ, மிடுக்கோ, தட்டைமூக்காரின் வசீகரமோ இவரிடம் லேது ! ஆனால் கதை முழுவதிலும் நம்மைக் கட்டுண்டிருக்கச் செய்யும் வித்தையில் இவர் வித்தகரென்பதை உணர முடிந்தது ! அந்நாட்களது ஹாலிவுட் கௌபாய் படங்களில் வரும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை நினைவுபடுத்தும் விதமாய் நாயகரை subtle ஆகக் கதாசிரியர் சிருஷ்டித்திருப்பதாய் நான் நினைத்தேன் ! பாசாங்குகள் இலா வன்மேற்கு ; அதன் கரடுமுரடான மனிதர்கள் ; இயற்கையின் சீற்றத்தை காட்டும் பின்னணிகள் ; மிரளச் செய்யும் சித்திரங்கள் - என்று இந்தத் தொடரெங்கிலும்  ஒரு சீரான தரம் பயணிக்கிறது ! நாயகர் ஒரு நீதிக் காவலர் இல்லை என்பதால் எல்லா வேளைகளிலும் ஜெயம் அவருக்கே என்ற ரீதியில் கதையோட்டம் அமைக்கப்பட்டிருக்கவில்லை ! So ஒரு டெகஸ் வில்லரின் ‘மாஸ் ஹீரோ‘ சமாச்சாரங்களோ ; கேப்டன் டைகரின் விவேக வெற்றிகளோ இங்கு உங்களுக்குக் காத்திராது ! அதே சமயம் யதார்த்தம் என்ற சாயத்தைப் பூசிக் கொள்ளும் பொருட்டு, ‘கமான்சே‘ தொடரைப் போன்ற மெலிதான வறட்சியையும் இது இரவல் வாங்கிக் கொள்ளவில்லை ! பக்கங்கள் சும்மா ‘பர பர‘வென்று பறக்கின்றன - எங்குமே சுணக்கமின்றி ! And நாயகர் கன்னி ராசிக்காரரோ என்னவோ - பட்டாம்பூச்சிகளின் பிரத்யேகக் கவனிப்புகள் அவரை நாடிடுகின்றன ஒவ்வொரு கதையிலும் ! 

And இங்கே கலரிங் ஆர்ட்டிஸ்டைப் பற்றியும் சொல்லியே தீர வேண்டும் ! முதல் அத்தியாயமானது - பரந்து விரிந்த பனிக்காலத்து கௌபாய் பூமியில் அரங்கேறுவதாலோ என்னவோ - ஒரு விதமான sepia டோனில் வண்ணங்கள் அமைக்கப்பட்டுள்ளன ! ஆளையடிக்கும் அடர் வர்ணங்களுக்குப் பதிலாக லாந்தர் விளக்கின் மஞ்சள் ; ஆரஞ்சு போன்ற கலர்களும் ; பனிநாட்களைக் காட்ட- கண்ணை உறுத்தா மெல்லிய நீலத்தையும் நிறையவே பயன்படுத்தியுள்ளார் ! (So- பக்கங்களைப் புரட்டின மறுகணமே பீதி வேண்டும் பாஷா சார்!) ஆனால் மெல்ல, மெல்ல தொடரும், அதன் வீச்சும் கூடிடும் வேளையில் கலரிங் ஆர்ட்டிஸ்ட் விஸ்வரூபமே எடுக்கிறார் என்பதைத் தொடரும் அத்தியாயங்களில் பார்த்திடப் போகிறீர்கள் ! அத்தியாயம் 2 & 3-ன் சில பல பக்கங்களை அச்சில் பார்த்த போது எனக்கே ‘டர்ராகி‘ விட்டது அந்த அதகள வர்ணக்கலவையைக் கண்டு ! வழக்கமான இங்க் ரகத்தை ஒட்டுமொத்தமாய் ஓரம்கட்டி விட்டு, ஜெர்மானிய இங்க்களை வாங்கி ட்யுராங்கோவை அச்சிட்டுக் கொண்டிருக்கிறோம் வெள்ளி முதலாய் ! If all goes well - சமீப நாட்களது மிரட்டலான தயாரிப்புகளுள் ட்யுராங்கோவுக்கொரு முக்கிய இடமிருக்கும் என்றே மனசுக்குப் படுகிறது. இன்னமும் 3 நாட்களது பணி பாக்கியுள்ளது ; god willing அவையும் நயமாக அமைந்திடும் பட்சத்தில் உங்களுக்கு, எங்களுக்கும் ஒரு visual விருந்து வெயிட்டிங் ! அட்டைப்படத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரிஜினல்களையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது - இது புதியதொரு பதிப்பகத்துடனான நமது முதல் பரிச்சயம் என்பதால் ! So மெலிதான நகாசு வேலைகளோடு ராப்பர் தயாராகி வருகிறது ! இதழ் டெஸ்பாட்ச் ஆகும் நாளன்று அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டுகிறேனே ?!
Phew... புதுவரவுக்கு இது ஓவரான பில்டப்பாகத் தோன்றக் கூடும் தான் ; ஆனால் கடந்த வாரத்தின் முழுமையையும் இவரோடு செலவிட்டான பின்னே, அதன் hangover இன்னமும் எனக்குத் தெளியவில்லை என்று சொல்லலாம் ! “ப்பூ... இதுக்குத் தானாக்கும் இவ்ளோ பில்டப்பு ?” என்று கதையைப் படித்தான பின்னே நமது நண்பர்களில் சிலர் உதட்டைச் சுளிக்கவும் கூடும் தான் ; ஆனால் ஒரு ‘அக்மார்க்‘ கௌபாய் உலகினை, ஒரு சலனமிலா நாயகனோடு தரிசித்த திருப்தி எனக்குக் கிடைத்தது ! அது உங்களுக்குக் கிட்டிடும் பட்சத்தில் - "ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ்" தொடர்ந்து தடதடக்கும் நம் தண்டவாளங்களில் !
Yves Swolfs
ஜனவரியின் இன்னொரு வண்ண இதழான ப்ளுகோட் பட்டாள காமெடி சரவெடி அச்சு முடிந்து, பைண்டிங்கில் உள்ளது ! சொல்லப் போனால் இது தான் ஸ்கூபி & ரூபி ஜோடியின் துவக்கப் புள்ளி ! இருவரும் சந்திப்பது எவ்விதம் ? பட்டாளத்தினுள் தொபுக்கடீரென்று பாய்வது எவ்விதம் ? என்பதை ‘நானும் சிப்பாய் தான்‘ செம ஜாலியாய் சொல்லக் காத்துள்ளது ! வழக்கம் பொல நகைச்சுவைத் தூவல்கள் வழிநெடுகிலும் காணக் கிடைக்கிறதென்றாலும் - இது சிக் பில் / ரின்டின் கேன் பாணியில் பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம் கிச்சுக்கிச்சு மூட்டிடும் தொடரல்ல என்பதை நினைவூட்டிடுகிறேன் folks ! யுத்தம்... மரணம்... காயம்... இரத்தம் என்ற சங்கதிகளைக் கொண்டு ஒரு முழுநீள காமெடியை உருவாக்கினால் அது குதர்க்கமாய்த் தோன்றுமல்லவா ? யுத்தத்தின் அர்த்தமின்மையை ; போரின் போலித்தனத்தை நையாண்டி செய்வதே படைப்பாளிகளின் நோக்கமென்பதால் - ‘இன்னும் வெடிச்சிரிப்பு சீன் வரக்காணோமே... காணோமே ?‘ என்ற தேடலோடு கதையை அணுகிட வேண்டாமே - ப்ளீஸ் ?! இயன்றமட்டிலும் சினிமா வாடையை (தலைப்பு நீங்கலாக) கதையின் ஓட்டத்தில் தவிர்க்க முயற்சித்துள்ளேன் - மொழிபெயர்ப்பின் போது ! So- ஒரிஜினலுக்கு நியாயம் செய்திடும் ஒரு ஜாலியான வாசிப்பு அனுபவம் காத்துள்ளதென்று சொல்வேன்!
ஜனவரியின் மறுபதிப்புக் கோட்டா - சென்னைப் புத்தகவிழாவின் பொருட்டு நமது evergreen நாயகரான மாயாவிக்குத் தரப்படுகிறது ! தவிர, 45 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பயணத்தைத் துவக்கி வைத்தவரே இவர் தானெனும் போது - who better this time as well ? “இயந்திரத் தலை மனிதர்கள்” இன்றைக்கு லைட்டாக விலா எலும்பை கிச்சு கிச்சு மூட்டினாலும், 1960-களுக்கும் ; '70-களுக்கும் இது ரொம்பவே அட்டகாசமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை ! நான் முதல்முதலாய் இலண்டனை பராக்குப் பார்க்க முடிந்த போது எனக்குள் ரொம்பவே ஆர்வத்தை உண்டு பண்ணியது அந்தச் சுழலும் கோபுரம் தான் ! அதனை “இயந்திரத் தலை மனிதர்கள்” கதையில் படித்த அனுபவம் அத்தனை வீரியமாய் பதிந்திருந்தது ! சென்னை விழாவினில் ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் - எப்போதும் போலவே விற்பனையில் முதலிடம் பிடிக்கவிருப்பது இந்த இதழாகத் தானிருக்கும் என்பதைச் சொல்ல பட்சிகள் தேவையா - என்ன?

ஸ்டால் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இதழ்களைப் பண்டல் போட்டுத் தயார் செய்யும் பணிகளைத் துவக்கி விட்டோம் ! PayTm-ல் பதிவு செய்து கொண்டாயிற்று ! Swipe மிஷினும் அதற்குள் தயாராகி விடுமென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது – நமது வங்கியில் அதற்கென நிறையப் பேரின் குடல்களை உருவியிருக்கிறோம் ! பேனர்களும் தயாராகி வருகின்றன ; ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக‘ இப்போதிலிருந்தே மணியார்டர் தொகைகளைப் பத்திரப்படுத்தி, பத்து ரூபாய்; இருபது ரூபாய் நோட்டுச் சில்லறைகளைச் சேகரித்து வருகிறோம் ! So - ஹீரோ ரெடி ; ஹீரோயின் ரெடி ; லொகேஷன் ரெடி ; மியுசிக் ரெடி... அந்த கதை...கதை மட்டும் தான் இப்போதைய தேவை என்பதால் நம்பிக்கையோடு  காத்திருக்கிறோம் ! சென்னையில் ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் நமக்கங்கு ஒத்தாசை செய்திட நேரம் ஒதுக்கிடக் கூடிய சென்னை நண்பர்கள் இருப்பின், கோவையில் ‘கடல்யாழ்‘ ரம்யா துவக்கி வைத்த புள்ளிக் கோலத்தை இங்கேயும் கலர்புல்லாக்கிடலாம் ! நேரமிருப்பின் உதவிடலாமே folks - ப்ளீஸ் ?

அப்புறம் சந்தா எக்ஸ்பிரஸின் ஜனவரி surpise ஜரூராய்த் தயாராகி வருகிறது ! ‘மாதமொரு குட்டி ஆச்சர்யம்‘ எனும் பொருட்டு நிறையவே திட்டமிட்டு வருகிறோம் ! அதன் ஆரம்பம் நிச்சயமாய் சுவாரஸ்யமாய் இருக்குமென்ற திட நம்பிக்கையுள்ளது ! And சந்தா எண்ணிக்கை பாதியைத் தொட்டு நிற்கும் நிலையில் - தொடரும் நாட்களில் சற்றே துரிதம் காட்டினால் அட்டகாசமாக இருக்கும் folks ! இன்றே உங்களது சந்தா ஏற்பாடுகளைச் செய்திடலாமே - ப்ளீஸ்?

மீண்டும் சந்திப்போம்! Have a great week-end !

P.S : கடல் கடந்தும் கதை பேசும் நம் அட்டைப்பட ஓவியங்கள் ! பாருங்களேன் http://spartanideas.msu.edu/2015/02/11/original-comic-art-from-muthu-comics-in-india/

Saturday, December 10, 2016

இன்று ஒரு புது நாள்....

நண்பர்களே,

வணக்கம். எல்லாம் கடந்து போகும் என்பதை கடந்த சில “இயல்புக்குத் திரும்பும் நாட்கள்” சுட்டிக் காட்டும் போது, நாமும் அதற்கொரு விதிவிலக்காக முடியுமா ? So - இதோ தொடர்வோம் பாதியில் நின்று போன டிசம்பர் மாதத்து அலசல்களை ! இந்த வாரத்தின் துவக்கத்தில் ஒரு மின்னஞ்சல் கிட்டியிருந்தது - 2016-ன் அதிரடிப் புது வரவான ஜேஸன் ப்ரைஸைப் பற்றி ! அதனை உங்களோடு பகிர்வதில் சுவாரஸ்யம் இருக்குமென்று பட்டதால் - here it is:

பார்க்க ‘பிதாமகன்‘ விக்ரம் போலிருக்கும் இந்த டிடெக்டிவ் எத்தனை முடிச்சுகளைத் தான் கடைசி பார்டில் அவிழ்க்கப் போகிறார் ? எனக்கு நினைவு தெரிய நம் புக்ஸில் இது போல் ஒரு செம சஸ்பென்ஸ் த்ரில்லர் வந்ததே கிடையாது ! க்ளைமேக்ஸில் இத்தனை தொங்கிக் கொண்டிருக்கும் முடிச்சுகளையும் கதாசிரியர் எப்படித் தான் சரிசெய்யப் போகிறாரோ ? பாவம் !”

இரண்டாவது பாகத்தை எழுதி முடித்து விட்டு பேனாவை மூடும் முன்பாக எனக்குள் தோன்றியதும் கனகச்சிதமாய் இதே உணர்வுகள் தான் ! காத்திருக்கும் (இறுதி) 46 பக்கங்களுக்குள் கதாசிரியர் வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய மர்மங்களின் பின்னணிகள் தான் எத்தனை- எத்தனை ? என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மலைப்பாக இருந்தது ! ‘பர பர‘வென்று க்ளைமேக்ஸ் பாகத்தினை வாசிக்கத் தோன்றினாலும் - அதன் மீது பணியாற்றும் வேளை புலரும் வரைக்கும் சஸ்பென்ஸ் தலைக்குள் தொடரட்டுமே, என்று தீர்மானித்தேன் ! மூன்று பாகங்கள் கொண்ட இந்தக் கதைத் தொடரை ஒற்றை ஆல்பமாய் இணைத்து வெளியிடாது- பாகம் பாகமாய் வெளியிட்டதன் பின்னணி கூட இதுவே தான்!
Whodunit ரகக் கதைகளை (அதாவது- குற்றங்களுக்குக் காரணகர்த்தா யார்? என்ற ரீதியிலான மர்மக் கதைகள்) வெற்றி கொள்ளச் செய்வதாயின் வாசகர்களின் ஆர்வமான பங்களிப்பும் அவசியம் என்பது பதிப்புலகின் எழுதப்படாத விதி ! So “எழுதப்பட்ட விதி”யில் துவங்கிய இந்தச் சிறு பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறையவே சிந்திக்க, பாயைப் பிறாண்ட கதாசிரியர் ஏற்பாடு செய்து தந்திருக்கும் முகாந்திரங்களை நாமும் சிறுகச் சிறுக மனதில் ஊறப் போட்டு - கதையின் பின்னணி என்னவாகயிருக்குமென்று யூகிக்க முயல்வதும் இந்த “ஜேஸன் ப்ரைஸ் அனுபவத்திற்கொரு” முக்கிய அங்கமாக இருக்குமென்று பட்டது ! ஒரே இதழாய் மூன்று பாகங்களையும் வெளியிடும் பட்சத்தில் ‘கட கட‘வென்று படித்து முடித்து விட்டு, அடுத்த மாதம் மறந்து விடுவோம் ! ஆனால் இப்போதோ இந்த லயிப்பு மனுதுக்குள் ஓரிரு மாதங்களுக்காவது ரீங்காரமிடுவது ஒரு மாறுபட்ட அனுபவம் தானே ? தவிர, ஒரே ஆல்பமாய் – கூடுதல் விலையில் ஒரு புது நாயகருடன் வெளிவரும் “புது பாணிக் கதை” என்ற மறுநொடியிலேயே வாசகர்களுள் ஒருசாரார் க்ளிசரின் இல்லாமலேயே தாரை தாரையாய் (!!) கண்களில் ஜலப்பிரவாகத்தை ஓட விடுவதும் possible என்று பட்டது ! வாய்ப்பளிக்காமலே இதனை மூலை சேர்த்து விடுவார்களோ என்ற பயம், பாகம் பாகமாய்ப் பிரித்து வெளியிடும் தற்சமயம்  தவிர்க்கப்பட்டதாக நினைத்தேன் ! எல்லாவற்றிற்கும் மேலாய் - “மறைக்கப்பட்ட நிஜங்கள்” இதழில் ஆங்காங்கே மௌனமாய் விரவிக் கிடக்கும் முடிச்சுகள் தான் எத்தனை ? என்று யோசித்துப் பார்ப்பதே ஒரு த்ரில்லான காரியம் என்பேன்! இதோ- மேஜரான கதை knot நீங்கலாக ஆங்காங்கே எழுப்பப்பட்டிருக்கும் சன்னமான கேள்விக் கணைகளின் பட்டியல் :

1. யார் அந்த ராய் ஃபேகண்டம் கதாப்பாத்திரம் ? மார்கன் ஃபாடாய் எழுதிய நாவல்களில் அவனுக்கு அடிக்கடி தலைகாட்ட என்ன ஜோலி ?

2. பழைய போலீஸ் குறிப்புகளைத் தேடிப் பார்க்கும் போது 4 ஆண்டுகளுக்கு முன்பாக இரு மர்மக் கொலைகள் நடந்ததாகவும் ; அந்த சடலங்கள் மீது விநோதமான சில சடங்குகள் செய்யப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக வருகிறது ! அதற்கும் தற்போதைய நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் என்னவாக இருக்க முடியும் ?

3. கஞ்சாக் கூடத்திலிருக்கும் இந்த ஜடாமுடி ஆசாமி யார் ? இலண்டன்... கெய்ரோ... ஸ்காட்லாந்த் என அவன் வலம் வருவது ஏனோ ?

4. அவன் கழுத்தில் தொங்கும் வட்ட வடிவிலான தாயத்து ; எகிப்தியக் கல்லறைத் தேடல்கள்... இவற்றின் முக்கியத்துவங்கள் என்னவாக இருக்கும் ?

5. கறுப்பழகி க்ளோவின் மகனான சிறுவன் ஜெஃப்ரியை உள்ளுர் ரௌடிகள் ரவுண்ட் கட்டுகின்றனர் ! தொடர்ந்து நிகழ்வது என்ன ? அந்த முரடன்கள் இரத்தக்களரியாகி செத்துக் கிடப்பது ஏன் ? எவ்விதம் ?

6. அந்த ஆளரவமிலா ஸ்காட்லாந்துத் தீவில் வீடு முழுக்க உள்ள கிறுக்கல்களின் அர்த்தமென்ன ? எல்லாவற்றிற்கும் சிகரமாய் ஜேஸன் ப்ரைஸ் பற்றிய புத்தகங்கள் அங்கே எழுதிக் கிடப்பது எவ்விதம் ? நம்மூரின் நம்பிக்கைகளான நாடி ஜோதிடம் ; ஏடு... போன்றவற்றின் தழுவலா இது ?

7. அந்தத் தீவில் பதுங்கிக் கிடந்து ஜேஸனை எதிர்பார்த்துக் காத்திருப்பது யார் ?
முதலிரு பாகங்களையும் கையில் வைத்துக் கொண்டே- க்ளைமேக்ஸ் பாகத்தை வாசிப்பது நிச்சயமாய் நமக்கொரு த்ரில்லான அனுபவமாய் இருக்குமல்லவா ? அதையும் தான் ரசித்துப் பார்ப்போமே ? 2008-ல் முதல் பாகம்; ‘09-ல் பாகம் # 2 & 2010-ல் இறுதிப் பாகமென மூன்றாண்டுகள் பிரயாணம் செய்ததொரு த்ரில்லரை நாம் மூன்றே மாதங்களுக்குள் பூர்த்தி செய்வது நிச்சயம் மோசமில்லை என்றே நினைத்தேன் !
டிசம்பரின் இன்னுமொரு சுவாரஸ்யமான இதழாக நான் பார்த்தது டெக்ஸின் “நீதிக்கு நிறமேது?” இதழையே ! ஜேஸன் ப்ரைஸ் பாணியில் இங்கே அதிரடிகளோ, ஆச்சர்யங்களோ கிடையாது ; நேர்கோட்டுக் கதை சொல்லலே என்றபோதிலும் இதனிலொரு முக்கிய வித்தியாசம் உள்ளதென்று சொல்வேன் ! பொதுவாய் இரவுக்கழுகாரின் கதைகளில் ஒருவிதமான வெறுமை இருப்பதில்லை ! அநீதி ஆசாமிகளை அடித்து துவம்சம் செய்து நல்லவர்களைக் காப்பாற்றுவார் நம்மவர் ! ஆனால் இம்முறையோ அந்த நீக்ரோ கைதியும் சரி, சூதாடி டாய்லும் சரி, செத்துப் போய் விடுகிறார்கள் – டெக்ஸின் முன்னேயே ! அந்தக் கைதிக்கொரு நியாயமான விசாரணை அவசியமென்ற ஆர்வத்தினாலேயே தன் உற்ற தோழனையும், ஊர் மக்களையுமே எதிர்த்து நிற்கும் டெக்ஸால் கூட அந்த tragedy-ஐத் தவிர்த்திட முடியாது போவதாய் கதையமைக்கப்பட்டிருப்பது சற்றே வித்தியாசமாய்ப் பட்டது. அதுமட்டுமன்றி, இறுதியாக வில்லனுக்கான தண்டனையைத் தருவதும் ‘தல‘ அல்ல ; சவுக்கடி பட்டதொரு கறுப்பின ஆசாமி என்பதைக் கவனியுங்களேன் ! எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல – டெக்ஸ் & கார்சன் கசப்போடு அந்த நகரை விட்டுப் புறப்படும் இறுதிப் பக்கம் - மாமூலான happy ending கிடையாது ! உற்ற நண்பனோடு மோத வேண்டிய நிர்ப்பந்தம் ; படுகாயத்தோடு படுக்கையில் கிடக்கும் நிலையில் அவனை விட்டுப் புறப்படுவது ; காப்பாற்ற எண்ணிய கைதி அநியாயமாய் மாண்டு போன விதத்தில் தோல்வி ; நிறவெறி தலைவிரித்தாடும் அந்தப் பகுதியில் மாற்றங்களென எதுவுமே நிகழவில்லையே என்ற ஆதங்கம் - என்று பல சங்கடங்கள் மனதை அரிக்க நாயகர் விடைபெறுவது டெக்ஸ் கதைகளில் அடிக்கடி நாம் காண்பதல்ல ! கதைகள் # 200-300 வரையிலான படைப்புகளில் இது போன்ற மெல்லிய கசப்பு சுவை விரவிக் கிடப்பதைக் காணலாம் என்று இத்தாலிய ரசிகர்கள் சொல்கிறார்கள் ! இறுதியில் வென்றது நீதியல்ல... முரட்டுத்தனமும், பழிவாங்கும் வேட்கையுமே என்ற theme நம்மவருக்கு தினசரி நிகழ்வில்லையே ?! So 2016-ன் துவக்கம் ஒரு மாமூலான கதையோடு என்றால் - அதன் இறுதியோ ஒரு off beat கதையோடு !

அப்புறம் அந்த 2016-ன் ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து, ஃபோட்டோ எடுத்து நமது அலுவலக மொபைலுக்கு வாட்சப்பில் அனுப்பவாவது செய்யலாமே ? இதுவரையிலும் அந்தப் படிவத்தை விட்டுத் தர யாருக்கும் மனம் ஒப்பவில்லை போலும் - கடுதாசிகள் வருகின்றனவா என்று போஸ்ட்மேன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்ததே மிச்சம்! Please do share your thoughts folks! ஆண்டுக்கு ஒரு முறை இது போன்ற தருணங்களிலாவது மௌனங்களைத் கலைக்க நீங்கள் மெனக்கெடாது போயின், நிச்சயமாய் ரசனைகளின் அளவுகோல்களில் நாம் அனைவருமே ஒரே பக்கத்தில் தானிருக்கிறோமா - இல்லையா ? என்பதே ஜேஸன் ப்ரைஸ் மர்மமாகிவிடக் கூடும் !

புத்தாண்டும்... சென்னைப் புத்தக விழாவும் கூப்பிடு தொலைவில் காத்திருப்பது தெரிகிறது ! வழக்கம் போல நம்பிக்கையைத் துணைக்கு அழைத்துக் கொண்டு BAPASI -ன் இந்த விழாவுக்கு விண்ணப்பித்துள்ளோம் ! துவக்க ஒன்றிரண்டு ஆண்டுகளில் எழுந்த, நம் மீதான புகார்களைத் - தொடரும் ஆண்டுகளில் தவிர்த்துக் கொள்ள நாம் முயற்சித்து வெற்றி கண்டோம் என்பதால், அமைப்பாளர்களின் கருணைப் பார்வை நம் மீது விழுமென்ற நம்பிக்கையோடு காத்துள்ளோம் ! All fingers crossed in all angles ! அவ்விதம் ஸ்டால் கிட்டிவிடும் பட்சத்தில் முதல் வாரத்து சனியும், ஞாயிறின் பகல் பொழுதிலும் ஸ்டாலில் டேரா போட்டிருப்போம் ஜுனியரும், நானும் ! புது டெல்லிப் புத்தக விழா கூட அதே வேளையில் தான் துவக்கம் காண்கிறதென்பதால் ஞாயிறு மாலை அங்கே தலைகாட்டுவதாய் உத்தேசம் ! So சனி & ஞாயிறில் நமக்கென நேரம் ஒதுக்கிட முயற்சிக்கலாமே folks ?! ரூபாய் நோட்டுப் பிரச்சனை தலைதூக்கிய நாள் முதலாய் - புத்தகக் கடைகளில் நிகழ்ந்திடும் பொதுவான sales ரொம்பவே உதைக்கிறதாய் முகவர்கள் சொல்லி வருகின்றனர் ! புது மாதம் - புது ஆண்டு – அரசின் இறுக்கத் தளர்வுகளுக்கும், கொஞ்சம் சுலபமான சூழலுக்கும் வழிவகுக்குமென்ற நம்பிக்கையோடு புத்தக விழாவை எதிர்நோக்குகிறோம். சீக்கிரமே PayTm ஜோதியிலும் ஐக்கியமாகத் தீர்மானித்துள்ளோம் - மாறுகின்ற தருணங்களுக்கு நியாயம் செய்யும் விதமாய் !
ஜனவரியின் வண்ண இதழ்களின் பணிகள் 70% நிறைவடைந்துள்ள நிலையில், தொடரும் வாரத்தில் அச்சுக்குச் செல்லத் தயாராகி வருகிறோம் ! புது வரவு ட்யுராங்கோ ஒரு ‘அக்மார்க் கௌபாய்‘ என்பதை தினமும் எனக்கு உணர்த்தி வருகிறார் ! டெக்ஸ் வில்லருக்கும், கேப்டன் டைகருக்கும் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வார் இந்த மனுஷன் என்பது எனது எதிர்பார்ப்பு ! `Good ol` Westerns' – என்ற classic பாணிக்கு 100% நியாயம் செய்திடப் போகும் இந்தக் கதைகள் ஒவ்வொன்றின் தலைப்புமே ஒரு template-ல் அமைத்துள்ளோம் ! இதழ் வெளி வந்து, அதனை நீங்கள் வாசிக்கும் வேளையில் அந்தத் தலைப்புகளுக்கான logic நிச்சயம் புரியும் ! And இது நமது முத்துவின் 45-வது ஆண்டுமலரும் கூட என்பதால் உங்களது ‘மலரும் நினைவுகளுக்கென‘ இரண்டு பக்கங்கள் காலியாகக் காத்துள்ளன ! மூத்த வாசகர்கள் மட்டுமன்றி, இடையில் இணைந்து கொண்டோரும் முத்துவுடனான உங்கள் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொண்டால், அவற்றை இதழுக்குள்ளும் இணைத்து விடுவேனே ? So- contributions please?

இறுக்கமானதொரு வாரத்தைத் தாண்டியிருக்கும் வேளையில் - இதோ இந்த வேளையை கொஞ்சமாய் ஜாலியாக்கிடவொரு caption போட்டி! வெற்றி பெறும் நண்பருக்கொரு Super 6 சந்தா அன்பளிப்பு ! Get cracking guys ! 

Before I sign off, சந்தா 2017-ன் ஒரு நினைவூட்டலும் கூட !!காத்திருக்கும் புதுப் பயணத்தினில் இணைந்து கொள்ள இன்றே சந்தாத் தொகைகளை அனுப்பிடலாமே - ப்ளீஸ் ? மீண்டும் சந்திப்போம் !

P.S : முத்து காமிக்ஸ் 45 !! - இது அவசரமான தேவை folks ; இயன்றமட்டிலும் துரிதம் ப்ளீஸ் ?

Tuesday, December 06, 2016

மறைந்திருப்பது ஒரு சகாப்தம் எனும் பொழுது மௌனத்துக்கும், மரியாதைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், அன்பான நினைவு கூர்தல்களுக்குமான  நேரமன்றோ இது ? 

R.I.P our beloved Amma !



Sunday, December 04, 2016

கேள்விப் படலம் 2016 !

நண்பர்களே,
            
வணக்கம். வருஷம் முழுக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லி ‘மாங்கு மாங்கென்று‘ இங்கே எழுதுவது என் பொறுப்பு- என்றாகி வருடங்கள் 5 ஆகப் போகிறது ! அதிலும் ‘ஞாயிறுதோறும் பதிவு‘ என்ற நடைமுறையை நாமாக அமல்படுத்திக் கொண்டும் கிட்டத்தட்ட 2 ½ ஆண்டுகளாகப் போகிறதென்று நினைக்கிறேன் ! ஆனால் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு மட்டுமாவது நான் பேச்சைக் குறைத்துக் கொண்டு – உங்கள் எண்ணங்களுக்கு, விமர்சனங்களுக்கு, அபிப்பிராயங்களுக்கு, ஆண்டின் அனுபவங்களுக்கு, முக்கியத்துவம் தரலாமென்று மனதுக்குப் பட்டது ! So- ஞாயிறு காலைகளில் சோம்பல் முறித்துக் கொண்டே செல்போனில் எனது அன்றையப் பதிவைப் படித்து விட்டுப் புரண்டு படுத்துத் தூக்கத்தைத் தொடர்வதற்குப் பதிலாய்- உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கும் வேளையிது folks !

For starters – எனது முதல் கேள்வியானது : உங்கள் பார்வைகளில்  2016-ன் Top 3 இதழ்கள் எதுவோ ? என்பதே !  “என் பெயர் டைகர்”; “ஈரோட்டில் இத்தாலி”; “சர்வமும் நானே”; “தலையில்லாப் போராளி”; “லக்கி ஸ்பெஷல்” என்று நிறையவே மெகா இதழ்களும் ; ஜேஸன் ப்ரைஸ் ; பெட்டி பார்னோவ்ஸ்கி ; பென்னி என்று புதுவரவுகளும் ; ‘தல‘யின் ஏகப்பட்ட தாண்டவங்களும் அரங்கேறிய ஆண்டிது ! So ஒவ்வொருவரின் ரசனைகளின் அளவுகோல்களுக்கேற்ப  இந்தாண்டின் Top 3 இதழ்கள் விதவிதமாய் அமைந்திடும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! இந்த வருடத்தை மனதில் ஓடவிட்டு, நினைவுகளைத் தட்டியெழுப்பி - ஆண்டின் Top 3 இதழ்களைத் தேர்வு செய்யுங்களேன் - ப்ளீஸ் ?

2. எனது கேள்வி # 2 என்னவாகயிருக்குமென்று நிச்சயம் யூகித்திருப்பீர்கள் ! இதற்கான பதிலும் என்னவாகயிருக்குமென்று நாம் பரவலாய் அறிவோம் தான் ! But still – ஓராண்டின் வாசிப்பு அனுபவத்திற்குப் பின்பாய்- ‘மாதமொரு TEX‘ என்ற பரிசோதனையை எவ்விதம் பார்த்திடுவீர்கள்?
  • அட்டகாசம் – A
  • குட்... ஆனால் கொஞ்சம் போல எண்ணிக்கையைக் குறைத்தால் தப்பில்லை ! – B
  • திகட்டுது ஷாமியோவ் ! – C 

3. இந்தாண்டின் இன்னுமொரு துவக்கம்- பிரத்யேக கார்ட்டூன் தடத்திற்குமே ! டெக்ஸ் வில்லரின் அளவுக்குக் கார்ட்டூன் genre-ஐயும் நம்மில் பெரும்பாலானோர் ரசிப்பதுண்டு தான் என்றாலும் - அந்த ரசிக எண்ணிக்கை உத்தேசமாய் என்ன சதவிகிதம் என்றறிவதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக நினைக்கிறேன் ! So நடப்பாண்டின் சந்தா C பற்றியும் ; காட்டூன் தனி track பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
  • A – நிச்சயம் தொடர்ந்திட வேண்டும்!
  • B–ஆசைக்கு ஓரிரண்டு வருடங்கள் இதனை முயற்சிப்பது ஓ.கே. தான்!
  • C–வேறு பாணிகளுக்கும் கவனம் தந்து பார்க்கலாமே?

4. இது Evergreen மறுபதிப்பு நாயகர்கள் பற்றிய கேள்வி ! இந்தாண்டின் 10 மும்மூர்த்தி + ஸ்பைடர் மறுபதிப்புகளுள் நீங்கள் எத்தனையைப் படித்திருப்பீர்கள் ? எத்தனையை வருடித் தந்து- ‘அந்தக் காலத்திலே...‘ என்ற நினைவலைகளுக்குள் மூழ்கி விட்டுப் புத்தகத்தை மூலை சேர்த்திருப்பீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாமா ? 
  • A – படித்தது – 10/10
  • B – பாதிக்குப் பாதி !
  • C – ஹாவ்வ்வ்வ்! 

5. 2016-ன் பல தருணங்கள் நமக்குப் பளீரென்று நினைவில் தங்கியிருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! அவை நமது வாசகச் சந்திப்பு வேளைகளாக இருந்திருக்கலாம் ; ஏதேனும் memorable இதழ்களின் வெளியீட்டு மாதமாக இருந்திருக்கலாம் ; அல்லது ஏதேனும் ஒரு ஞாயிறின் பதிவாகவோ, அது சார்ந்த உற்சாகப் பங்களிப்பாகவும் இருந்திருக்கலாம் ; அல்லது தொடரும் ஆண்டின் அட்டவணை unveil செய்யப்பட்ட வேளையாக இருந்திருக்கலாம் ! என் கேள்வியெல்லாம் இதுவே : “2016-ன் மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள்” என்று எந்த 2 நிகழ்வுகளைப் பட்டியலிடுவீர்கள் ? அது பற்றி லேசாகவோ / விரிவாகவோ எழுதினால் இன்னும் சூப்பர் !

6. Best of the lot – என்ற கேள்வியினை இந்தாண்டின் அட்டைப்படங்கள் பக்கமாகவும் கொண்டு செல்லும் போது- உங்கள் கண்களுக்கு 2016-ன் Top 3 ராப்பர்களாகத் தோன்றுவது எவையாக இருக்குமோ ? வரிசைப்படுத்திடலாமே ?

7. Best-களைப் பார்த்து விட்டு, ‘பாதாள பைரவிகளைப்' பார்க்காது செல்வது முறையாகாதல்லவா ? So “2016-ன் TOP 3 டப்ஸா இதழ்கள்” எவையாக இருக்குமென்று வெளிச்சம் போட்டுக் காட்டுங்களேன் ப்ளீஸ் ? எவை சோடை போன இதழ்கள் என்பது பற்றிய கோடு போடப்படும் போது - தொடரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள் எவையென்ற புரிதலும் எங்களுக்குக் கிட்டி விடும் என்பதால் இதுவொரு முக்கிய கேள்வி என்பேன் ! So சற்றே சிந்தித்துப் பதில்கள் ப்ளீஸ் ? 

8. ஆண்டில் புதுவரவுகளென்று பார்த்தால் ஜேஸன் ப்ரைஸ் & பென்னி மாத்திரமே கைதுதூக்கி நிற்கின்றனர் ! இந்த இருவரும் – இரு மாறுபட்ட கதைபாணிகளின் பிரதிநிதிகள் ! இவர்களை rate செய்வதெனில் உங்களின் மதிப்பெண்கள் எவ்வளவாக இருக்குமோ ? 
  • A – ஜேஸன் ப்ரைஸ்
  • B – சுட்டிப் புயல் பென்னி 

9. சந்தா முறையில் இதழ்களைப் பெற்று வருபவர்களாக நீங்கள் இருப்பின் - நடப்பாண்டில் எங்களின் செயல்பாடுகளை நீங்கள் எவ்விதம் பார்த்திடுவீர்கள் ? தவறுகளின்றி, flawless performance தந்திருப்போமென்ற பகற்கனவெல்லாம் எனக்கில்லை! ஆனால் on a scale of 1 to 10 இந்தாண்டின் “சந்தா அனுபவத்தை” எவ்விதம் பார்த்திடுவீர்களோ ? 

10. இறுதியாய் ஒரேயொரு கேள்வி ! நிச்சயமாய் ஒவ்வொரு தரப்பிலும் மாற்றங்கள் / முன்னேற்றங்களை நனவாக்கிட ஆனமட்டிலும் முயற்சித்தே வருகிறோம் ! கதைத் தேர்வில் தொடங்கி, மொழிமாற்றம், தயாரிப்பு, அட்டைப்பட உருவாக்கம், பைண்டிங், தாமதத்தைத் தவிர்த்தல், புத்தக விழாக்களின் பங்கேற்பு என்று பல பரிமாணங்களிலும் தினம் தினமும் ஏதேனும் கற்றறிய முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம் ! இந்தத் தொடர் பயணத்தில் எங்களை 2016-ல் எவ்விதம் rate செய்வீர்கள்- ப்ளீஸ்?

A – சரியான திசையில் தான் வண்டி ஓடுகிறது !
B – மேலே போகவில்லை; கீழே பாயவுமில்லை !
C – ஊஹும்.... திருப்தி லேது !

 ஆக- இவையே இந்த ஞாயிறுக்கான எனது கேள்விகள் ! ‘அட போய்யா... ATM-ல் நின்று தாவு தீர்ந்து போச்சு ; நீ வேற இந்த வயசிலே பரீட்சை வச்சுக்கிட்டு !! என்ற சலிப்பு முகத்தைக் காட்டாது - இவற்றிற்குப் பதில் சொல்ல மெனக்கெட்டால் - நிச்சயமாய் அதனில் நம் அனைவருக்குமே பலனிருக்கும் ! ‘2017-ன் அட்டவணை தான் ஏற்கனவே அறிவிச்சாச்சே...? நான் இப்போ அபிப்பிராயம் சொல்லிப் புதுசாய் எந்த ஆணியைப் பிடுங்குவதாக உத்தேசம் ?‘ என்ற கேள்வியும் சிலபல மனங்களில் எழாது போகாது தான் ! ஆனால் ஒரு முடிவிலாப் பயணத்திற்கு இந்த inputs ரொம்பவே விலைமதிப்பற்றவை தானே ? 2017-க்கு  இல்லாது போனாலும் தொடரும் அடுத்த  ஆண்டுக்கு அவை பயனாகுமல்லவா ?

வழக்கம் போலவே வேண்டுகோள் folks : அவரவர் கருத்துக்களை – அவரவர் ரசனைகளின் பிரதிபலிப்புகளாய் மட்டுமே பார்த்திட்டால் தலைவலிகள் எழாது ! So அவரவரது அபிப்பிராயங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் ப்ளீஸ் ?!

Before I sign off - பாருங்களேன் நண்பர் அஜயின் அட்டகாசக் கைவண்ணத்தை ! இதனை SUPER 6-ன் ‘இளவரசி இதழுக்கு‘ ராப்பராக்கிடலாமா ? ஓ.கே.எனில் - இந்த நான்கில் உங்களது தேர்வு எதுவாக இருக்கும் ? சொல்லுங்கண்ணே... சொல்லுங்க ! 
அப்புறம் சந்தாப் புதிப்பித்தல்கள் & புது வரவுகள்இவ்வாரம் செம வேகமாய் நடந்து வருவது மகிழ்வாய் உள்ளது ! நீங்களும் 2017 -க்கான சந்தா ரயிலுக்கு டிக்கெட் போட்டு விடலாமே ? Bye all ! மீண்டும் சந்திப்போம் ! 

P.S.: டிசம்பர் விமர்சனங்கள் தொடரட்டுமே ப்ளீஸ்?

கிராபிக் நாவல்கள் பற்றியதொரு இந்திய பார்வை !! - என்ற விதமாய் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு ஸ்பெஷல் கட்டுரை வெளியாகியுள்ளது பாருங்களேன் !! அழகாய் இதனை செதுக்கியுள்ள எக்ஸ்பிரஸ் எடிட்டோரியல் டீமுக்கும், அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கெடுத்த சென்னையைச் சார்ந்த feature writer Ms .ஜெயந்தி சோமசுந்தரத்துக்கும் நமது நன்றிகள் !! 
http://epaper.newindianexpress.com/1023546/The-Sunday-Standard-Magazine/04-12-2016#page/2/1