Tuesday, May 31, 2016

1 புலியும்...3 யானைகளும்..!

நண்பர்களே,

வணக்கம். சனிக்கிழமை (June 4th) காலை 11-30 மணிக்கு நுங்கம்பாக்கம் APEX PLAZA-வில் உள்ள THREE ELEPHANT புக் ஸ்டோரில் சீனியர் எடிட்டரிடமிருந்து "என் பெயர் டைகர்"  & முத்து மினி காமிக்ஸ் இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் ! பால்யத்தை மீட்டெடுத்த உற்சாகத்தோடு சீ.எ.  உங்களைச் சந்திக்கக் காத்திருப்பார் ! Please do drop in folks !!

அப்புறம் சந்தாக்களுக்கான டி-ஷர்ட்கள் ஜூன் 2-ம் தேதி தான் தயாராகின்றன ! So அவற்றை ஜூன் 3-ல் புறப்படும் "என் பெயர் டைகர்" கூரியரோடு அனுப்பிடவுள்ளோம். அதற்கு முன்பாக சென்னை கிளம்பும் வெளியூர் நண்பர்கள் & சென்னையில் நம்மை சந்திக்க நேரம் ஒதுக்கக்கூடிய நண்பர்கள் மாத்திரம் அவசரமாய்த் தகவல் தந்திட்டால் - அந்த டி-ஷர்ட்களை அவசர கதியில் தயார் செய்ய ஏற்பாடு செய்திடலாம் ! Or சனிக்கிழமை நேரிலேயே உங்களிடம் ஒப்படைத்தும் விடலாம் ! எதுவாயினும் - we need to hear from you please !

And உங்கள் முன்பதிவுப் பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பிடும் பட்சத்தில் - உடனே தகவல் ப்ளீஸ் !! 

அவகாசம் அதிகமில்லை என்பதால் - நண்பர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்திடக் கோருகிறேன் guys !! Hope to see you all on Saturday !



Saturday, May 28, 2016

நான் இங்கே ஒரே பிசி !

நண்பர்களே,

தானைத் தலைவர் கவுண்டர் மாடுலேஷனில் இந்தப் பதிவின் தலைப்பை வாசிக்கக் கோரிக் கொண்டே ஒரு வணக்கத்தையும் போட்டு வைக்கிறேனே இந்த சனி மாலையில்  !.  ஒரு ரயில் வண்டி தடதடப்பதன் பின்னால் தான் சின்னதும், பெரிதுமாய் எத்தனை எத்தனை பாகங்கள்... நுணுக்கங்கள்... செயல்பாடுகள்? அத்தனையும் ஏக கதியில் அட்சர சுத்தமாய் செயலாற்றும் போது எத்தனை பெரிய சுமையையும் பிரமாதமாய் இழுத்துச் செல்கிறதல்லவா அந்த எஞ்சின்? அந்த எஞ்சினுக்குள் குந்திக் கொண்டு ஜன்னல் வழியாக ஸ்டைலாக மண்டையை நீட்டியபடியே போஸ் கொடுக்கும் அதிர்ஷ்டம் எனதாக இருக்கும் இந்த வேளையில்- சத்தமின்றி- பின்னணியில் இந்தச் சவாரியைச் சாத்தியமாக்குபவர்களது பட்டியல் தான் எத்தனை நீளம் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது- திடீரென!

உலகின் ஏதோவொரு மூலையில் உள்ள சில பல படைப்பாளிகளின் பெருந்தன்மை காரணமாய் நமக்கு எட்டும் தூரத்தில் அவர்களது கதைகள் நிலைகொள்வதோடு ஆரம்பிக்கிறது நம் படலம்! கிட்டிய கதைகளை மொழிபெயர்த்துத் தரும் உள்நாட்டு/வெளிநாட்டு ஆர்வலர்கள்; நமது கருணையானந்தம் அவர்கள்; பின்னே DTP-ல் அயராது பணி செய்யும் நம் டீம்; அப்புறமாய் அக்னிக்குண்டம் போலத் தகிக்கும் அச்சுக் கூடத்தில் பணியாற்றும் திறமைசாலிகள்; எந்த ராத்திரி போய்க் கதவைத் தட்டினாலும் சளைக்காது உழைக்கும் நமது பைண்டிங் நண்பர்; மொத்தமாய் வந்திறங்கும் பிரதிகளை உங்களுக்கு டெஸ்பாட்ச் செய்வது மட்டுமன்றி, தொடரும் ஒரு வாரத்துக்கு அனுதினமும் ஆளுக்கு 100 போன்களாவது பேசிடும் ஸ்டெல்லா & வாசுகி என்று நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல்! ஓவியங்கள் தீட்டிடும் மாலையப்பன் ஒரு பக்கமும், வண்ணத்தில் மெருகூட்டும் பொன்னன் இன்னொரு புறமும் இருக்க- ஒட்டுமொத்தமாய் அத்தனை புள்ளிகளையும் ஒருங்கிணைத்திடும் மைதீன்! Phew... இம்மாதம் போலான களேபரத் தருணங்களில் தான் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முழுப் பரிமாணமும் வெளிப்படுகிறது! +2 படித்து முடித்துள்ள மகனைக் கல்லூரியில் சேர்க்க முனையும் முயற்சிகளால் நமது தயாரிப்பு வேலைகள் தாமதமாகிடக் கூடாதேயென்று முடிந்த குட்டிக்கரணங்களையெல்லாம் அடித்த மைதீன்; தந்தையை விபத்தொன்றில் பறிகொடுத்தும் இரண்டாம் நாளே பணிகளைக் கவனித்திட விரைந்து திரும்பிய பைண்டிங் நண்பர்; தினமும் ஒரு நூறு தடவைகள் corrections போடச் செய்து ஜீவனை நான் வாங்கினாலும் துளி கூட முகம் சுளிக்காது பணியாற்றிய நமது DTP பெண்கள்; தொடர்ச்சியாய் இரவு 1 மணி வரை வேலை என்றாலும்- கொட்டாவிகளை ஓரம்கட்டி விட்டு ஓடியாடிய அச்சுப் பணியாளர்கள்- இத்தனை பேர்களது வியர்வைகள் மட்டும் பின்னணியில் இல்லாது போனால் நான் கன்னத்தில் மரு ஒட்டிக் கொண்டு ஓடிஷா பக்கமாய்த் தற்காலிக தேசாந்திரம் போயிருக்கத் தான் வேண்டும்!

சனிக்கிழமை மாலை வரை கமான்சே & ஜுலியாவின் அச்சுப் பணிகள் அரங்கேறி வர- வீடு திரும்பும் வேளையில் ஒரு சுகமான அயர்ச்சி என்னுள்! “மின்னும் மரணம்”; “XIII– இரத்தப் படலம் முழுத் தொகுப்பு” என இதற்கு முன்பாய் நம்மைத் துவைத்துத் தொங்கப் போட்ட பணிகள் நினைவுக்கு வந்தாலும்- இம்முறையிலான சவாலோ ரொம்ப ரொம்ப மாறுபட்டது! ஒற்றை இதழை- அது எத்தனை குண்டாக இருந்தாலும் manage செய்வதென்பது ஓரளவிற்கு சமாளித்திடக் கூடிய சமாச்சாரமே என்பேன்! ஆனால் இம்முறையோ சிறிதும்- பெரிதுமாய்; ஒல்லியும்-குண்டுமாய்; கலரிலும்-காக்காய் நிறத்திலுமாய் ஒரு டஜன் இதழ்கள் எனும் போது அலாவுதீன் விளக்கிலிருந்து வெளிப்படும் பூதத்தைப் போல நொடிக்கொரு புதுப்பணி தலைதூக்கிக் கொண்டேயிருக்கும்!

திணறத் திணற; கதறக் கதற கசரத்து வாங்கியது அட்டைப்படங்களது பணிகளே என்பேன்! ஏதோ நம் சேகரிப்பில் முந்நாட்களது பெயிண்டிங்களில் கரையான்கள் பசியாறாது கருணை காட்டியிருந்ததால் முத்து மினி காமிக்ஸிற்கு 4 ஒரிஜினல் ராப்பர்கள் தேறி விட்டன! இன்னொன்றை நண்பர் பொடியன் வரைந்து தந்திட- ஆறாவது இதழுக்கும் ரொம்ப மெனக்கெடாது ஒரு ராப்பரை டிசைன் செய்து விட்டோம்! ஆனால்-தலைநோவு துவங்கியது பாக்கி ஆறு இதழ்களின் அட்டைப்படங்களில் தான்! நம் நண்பர்களில் சிலர் அட்டைப்பட டிசைனிங்கில் பங்கேற்க ஆர்வம் காட்டிய போது- ‘ஹை... தலை தப்பிச்சுடும் போல் தெரிகிறதே...!‘ என்று ‘குஷியாய் “என் பெயர் டைகர் கவர் டிசைன்களின் ஒரிஜினல்களிலிருந்து; ரின் டின் கேன் & கமான்சே ஒரிஜினல்கள் வரையிலும் அனுப்பியிருந்தேன்! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நமது குடல் உருவல்களுக்கு ஈடு தர நேரமின்றி- நண்பர்கள் யாரும் பணிகளைப் பூர்த்தி செய்திடவில்லை என்ற போது old blind lady- open the door! என்று நமது ஓவியரையும், பொன்னனையும்தான் தாமதமாய் நாட வேண்டியதானது! மைதீன் பயன்படுத்தும் செருப்புகள் எந்தக் கம்பெனியோ தெரியாது- ஆனால் அவை செம உறுதியானவை என்பதை மட்டும் கடந்த 20 நாள் டிசைனிங் மேளாவின் மூலம் நான் அறிந்தும், புரிந்தும் கொண்டேன்!

உப்ப்ப்ப்... டைகரின் வண்ண இதழுக்கான ராப்பர் டிசைன்கள்; b&w பதிப்பிற்கு கொஞ்சமாகவேணும் மாற்றத்தோடு வேறு டிசைன் என்று ஆரம்பித்த மண்டகப்படி தொடர்ந்தது solid ஆக இரு முழு வாரங்களுக்கு! "இதைக் கூட்டு... அதைக் குறை... இதைப் பச்சையாக்கு... அதைப் பஞ்சு மிட்டாய் கலராக்கு...! இது பெருசாய் வேணும்... அது சன்னமாய் வேணும்..”!" என்று அடித்த கூத்துக்கள் ஒருவழியாய் (எனக்குத்) திருப்தியானதொரு ராப்பரை கண்ணில் காட்டிய போது மே 20-ம் தேதி ஆகிவிட்டிருந்தது! அதன் பின்பு பாக்கி டிசைன்களுக்குள் நுழைந்தோம்- எல்லாவற்றிற்குமே ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்திக் கொண்டு; நகாசு வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி! இதோ- அந்த last gasp பணிகளின் பலனாகியுள்ள அட்டைப்படங்களின் preview!

கமான்சே தொடரில் ஓவியர் ஹெர்மனுக்கு ரொம்பவே அற்புதமான ஈடுபாடு இருந்துள்ளதென்றே சொல்லியாக வேண்டும்! இத்தொடரின் ஒவ்வொரு அட்டைப்படத்தையும் பார்த்திடும் போது- மலைப்பாக உள்ளது! And அவற்றை enhance செய்திட நாம் ரொம்பவெல்லாம் மெனக்கெடாமலே அழகான பலன்கள் கிட்டுவதாய் எனக்குத் தோன்றியது! நடுங்கச் செய்யும் குளிரில் பயணிக்கும் இந்தக் கதையின் mood-ஐ செமையாய் இந்த ராப்பர் capture செய்துள்ளது என்று எனக்குத் தோன்றியது! உங்கள் மதிப்பெண்கள் என்னவோ folks?
And ஒரிஜினல் ராப்பரே தான், ஜுலியாவின் "நின்று போன நிமிடங்கள்" சாகஸத்திற்கும்! அந்த டிசைன் மட்டுமென்றில்லாது- கதையின் முழுமையுமே அசாத்திய த்ரில் நிறைந்ததொரு அனுபவமென்று சொல்வேன்! இளவரசியைப் போல காங்காவோல் களவாணிப் பயல்களை இந்த அம்மணி சாத்துவதுமில்லை; லேடி ஜேம்ஸ்பாண்ட் பாணியில் slam-bang என்று ஆக்ஷனில் இறங்குவதும் கிடையாது! ஆனால் ஜுன் மாதத்து ஒரு மந்தை இதழ்களுள் ஜுலியா ‘ஸ்கோர்‘ செய்யாது போனால் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன்! சமீப நாட்களில் நான் ரசித்துப் பணியாற்றிய கதைகள் நிறையவே உண்டு- ஸ்மர்ஃப்ஸ்; க்ளிப்டன்; லக்கி லூக்; ரின் டின் கேன் என்று! அந்தப் பட்டியலில் “நி.போ.நி” க்கு நிச்சயம் ஒரு பிரதான இடமுண்டு என்பதில் எனக்குச் சந்தேகமில்லை! And ரொம்பவே இயல்பானதொரு கதைக்கு ரொம்பவே down to earth மொழிநடையைக் கையாண்டு பார்த்திருக்கிறேன்! கதையும், நடையும், ஜுலியாவும் உங்கள் அளவுகோல்களில் பெற்றிடப் போகும் மதிப்பெண்கள் எத்தனை என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருப்பது ஜுனின் ஒரு மாறுபட்ட அனுபவமாய் இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்! Fingers crossed!

And இதோ- நமது நாலுகால் ஞானசூன்யத்தின் அட்டைப்படமும் கூட! மாமூலான பாணிகளிலிருந்து கொஞ்சமே கொஞ்சமாய் மாறி அட்டைப்படத்தில் வேறுபாடு காட்டிட பொன்னன் செய்திருக்கும் முயற்சியிது! எனக்கு ‘சூப்பர்‘ என்று பட்டது- உங்களை எவ்விதம் impress செய்கிறதோ; அறிந்திட ஆவல்!

Last but not the least - "பழி வாங்கும் புயல்" அட்டைப்படத்தில் minimal திருத்தங்களைச் செய்து அதனையும் அச்சுக்குச் சேர்த்து முடிப்பதற்குள் எனது முடிதிருத்தும் நண்பருக்கு இம்மாத வியாபாரம் பணாலாகிப் போய் விட்டதென்றே சொல்வேன்! அவரது கடைப்பக்கமாய் தலை காட்டாமலே இங்கே சிரம்- IPL மைதானம் போலாகி விட்டது!

சரி, 12 ராப்பர்களும் ரெடி என்று குட்டி மூச்சு விட்டால்- "அட்டை உட்பக்கம் என்ன மேட்டர்?" ; "கதைகளில் filler pages?" ; "ஹாட்லைன் வரணுமே...?" ; "தோட்டா டைம் இல்லாமல் வேலை நிற்கிறது" ; "என் பெயர் டைகரின்‘ இதழைத் திறந்தவுடன் காட்சி தரும் (முன்&பின்) doublespread பக்கங்களுக்கு எதைப் போடுவதோ? " ; "விளம்பரங்களுக்கு எந்தப் பக்கங்களிலிருந்து படங்கள் ?"  ; "ஜுலியாவின் இறுதி வடிவத்தை இன்னும் முடிக்கலியே...?" ; "டெக்ஸ் வில்லருக்கு பேப்பர் பற்றவில்லை..." ; முத்து மினி காமிக்ஸ் இதழ்களுக்கு barcode?" என்று ஓராயிரம் தொங்கல்கள்! சத்தமின்றி ஜுனியர் எடிட்டர் நிர்வாகப் பணிகளை; அச்சு மேற்பார்வைகளை; புத்தக விழாவிற்கான பேக்கிங் ஏற்பாடுகளை பார்த்துக் கொள்ளாது போயிருந்தால்- இந்நேரத்திற்கு நான் ஏதாவது புளிய மரத்தில் தலைகீழாய் தொங்கிக் கொண்டு ‘சட்டி சுட்டதடா‘ என்று பாடிக் கொண்டிருந்திருப்பேன்!

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கமான்சே அச்சாகி விட்டால் - ஒட்டு மொத்தப் பிரிண்டிங் பணிகளும் நிறைவுற்றிருக்கும் ! இனி பைண்டிங்கிலிருந்து வரவழைத்து- ரெகுலர் இதழ்களை ஜுன் 1-ம் தேதியும்; “என் பெயர் டைகர் + “முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ஜுன் 3-ம் தேதி கூரியரில் அனுப்பிட உள்ளோம்! ஜுன் 4 முதல் சென்னைப் புத்தக விழாவில் நமது ஸ்டாலில் இவை எல்லாமே கிடைத்திடும்! தொடரும் அடுத்த சில நாட்களுக்கு நம்மவர்கள் பம்பரமாய் சுழன்று வரப்போவதை ‘பராக்குப் பார்க்கும் பணி மாத்திரமே எனக்கு எனும் போது- பீட்சாவைப் பார்த்த மறுநொடியில் கார்பீல்டின் முகத்தில் விரிவது போலொரு அகலமான புன்னகை! And- இனி ‘சலோ சென்னை‘ தான் அடுத்த இலக்கு எனும் போது இப்போதே உள்ளுக்குள் சக்கரங்கள் சுழலத் தொடங்கிவிட்டன - "நண்பர்களது கேள்விகள்; கோரிக்கைகள் என்னவாகயிருக்கும்?" ; அவற்றைச் சமாளிக்கும்  பல்டிப் பயிற்சியை எந்த தேசத்தில் கற்றிடலாம் ? என்று! சென்றாண்டின் (ஏப்ரல்) புத்தக சங்கமத்தின் போது- அழகான தனியரங்கம் புத்தக விழாவினுள்ளேயே இருந்தபடியால் நமது மின்னும் மரணம் கச்சேரியை அங்கேயே வைத்துக் கொள்ள சாத்தியமானது! ஆனால் இதுவோ BAPASI-ன் விழா என்பதோடு- 670 ஸ்டால்கள் கொண்ட பெரும் அரங்கு என்பதால் நாமங்கே அடக்கியே வாசித்தாக வேண்டுமென்பது அவசியம்!

வெளியூர்களிலிருந்து 4 & 5 தேதிகளில் சென்னைக்குப் பயணமாகவுள்ள நண்பர்களின் எண்ணிக்கையும்; சிங்காரச் சென்னையின் நண்பர்களுள் சனிக்கிழமையின் அவகாசத்தை நமக்கென ஒதுக்கிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் தெரிந்திடுமேயானால்- நாம் எங்கே ? எப்போது ? சந்திக்கலாமென்பது பற்றித் திட்டமிட இயலும்! ஈரோட்டுப் புத்தக விழாவின் வாசலிலேயே ஹோட்டலும், ஒரு மினி அரங்கும் இருந்ததால் சுலபமாகிப் போனது நம் சந்திப்பு! ஆனால் சென்னை மாநகரில் அந்த வசதி நஹி எனும் போது- திட்டமிட உங்கள் inputs உதவிடுமே? அவகாசம் அதிகமில்லை என்பதால் லக்கியின் தோட்டாவைப் போல் துரிதமாய் நாம் செயல்பட்டாக வேண்டிய தருணமிது folks! காத்துள்ளோம்- காதுகளைத் திறந்து கொண்டே!!

And இதோ - "என் பெயர் டைகர்' முன்பதிவுப் பட்டியல்கள் - முழுவதுமாய் ! உங்கள் பெயர் விடுபட்டுப் போயிருப்பின் - உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ?


தொடர்வது BLACK & WHITE பதிப்பின் முன்பதிவுப் பட்டியல் :

மீண்டும் சந்திப்போம் all! Have a lovely weekend!

Sunday, May 22, 2016

பசித்துப் புசிப்போமா ?

நண்பர்களே,
            
வணக்கம். உங்களில் எத்தனை பேர் வட இந்தியத் திருமணங்களுக்குச் சென்றுள்ளீர்களோ தெரியாது - ஆனால் அதற்கொரு வாய்ப்புக் கிடைத்தால் தவறவே விட்டு விடாதீர்கள் என்று மட்டும் சொல்லிடுவேன் ! அன்பான வரவேற்போடு தொடங்கும் உங்களது அனுபவம்- அடுத்த ஒரு மணி நேரத்திற்காவது இந்திய (சைவ) உணவுகளின் ஒரு திருவிழாவோடு அதகளமாகிடுவது சர்வ நிச்சயம்! "கலர் கலரான இனிப்புகள்... ஹைய்யோ... அதென்ன ரசகுல்லாவா? அட.... இந்த பர்பி வகைகளை ருசி பார்க்கலாம்... அங்கே குவிந்திருப்பது பேல் பூரி... பானி பூரியா?... ஷப்பா... விதவிதமான பரோட்டாக்கள்!... இது பிரியாணியா- ப்ரைடு ரைஸா? ...ஏவ்வ்வ்... மறுபடியும் ஸ்வீட்களா?" என்று உங்கள் கண்களும்; நாக்கின் taste buds களும்; சகலத்தையும் ஸ்வாஹா செய்து கொள்ளப் போகும் வயிறும் குதூகலமான பிசியில் இருப்பதை நான் சிலபல முறைகள் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்! கடந்த ஓரிரு வாரங்களாக நமது அலுவலகமே ஒரு மினி வட இந்தியத் திருமண மண்டபமாகி விட்டது போலவும்; வீட்டிலுள்ள எனது அலுவல் அறையானது விருந்து மேஜையாக உருமாறி விட்டது போலவும்... ‘அவுக்... அவுக்‘ என வாய் நிறைய எதையாவது நான் ரைஸ்மில் போல அரைத்துக் கொண்டேயிருப்பது போலவும் ஒரு ஃபீலிங்கு! என்ன ஒரே வித்தியாசம்- அந்த நிஜக் கல்யாண வீட்டில் லட்சணமான ஒரேயொரு வட இந்திய மாப்பிள்ளை ஒரேயொரு சொங்கிக் குதிரையில் ‘என்ட்ரி‘ ஆவார்! ஆனால் எனது கனவுலகிலோ மந்தை மந்தையாய் குதிரைகளில் மந்தை மந்தையாய் குளிக்காத ஆசாமிகள் அதகளம் செய்து வருகிறார்கள்! "ஹைய்யோ டெக்ஸ் வில்லர் பாதுஷாவா? தித்திக்கிறதே... அவுக்... அவுக்‘! அடடே... கமான்சே பேல் பூரியா...? பின்னிப் பெடல் எடுக்கிறது... ; ‘அதென்ன ஜுலியா ஆலு பரோட்டாவா...? awesome! ; ஹை...! ரின் டின் கேன் பாயாசமா....? உர்ர்ர்ர்ர்...; ‘அட்ரா சக்கை... அட்ரா சக்கை... டைகர் பிரியாணியைப் பார்த்தாலே நாக்கு நமநமக்கிறதே...; ‘இதென்னாது... டிசைன் டிசைனாய் பீ்டாக்கள்? ஓ... முத்து மினி மறுபதிப்புகளா? "என்று நித்தமும் நான் விடும் ஏப்பச் சத்தங்கள் ஏகாந்தமாய் பிராந்தியத்தை நிறைத்து வருகின்றன!

தெரிந்தோ- தெரியாமலோ; வெவ்வேறு தருணங்களில் திட்டமிடப்பட்ட சில பல additional இதழ்கள் இந்த ஜுன் மாதத்திலேயே சென்னைப் புத்தக விழாவின் பெயரைச் சொல்லிச் சங்கமித்திருப்பதால் தான் இந்த non-stop விருந்து அவசியமாகிறது என்பதை நாமறிவோம் தானே? குதூகலம் ஒரு பக்கமிருக்க, காலெண்டரில் தேதிகளைக் கிழிக்கும் ஒவ்வொரு காலையிலும் வயிற்றுக்குள் ஒரு பட்டாம்பூச்சிப் பட்டாளமே ‘நின்னுக் கோரி வரணும்... வரணும்!!‘ என்று ராகம் இசைப்பதை உணர முடிகின்றது! தாண்டிச் செல்லும் ஒவ்வொரு நாளிலும் நாம் பூர்த்தி செய்யும் பணிகள் ஒரு சதவிகிதமெனில்- புதிதாய் துளிர் விடும் பணிகள் ஒரு வண்டி! 

ஜுன் மாத ரெகுலர் இதழான கமான்சேவின் “நெஞ்சில் ஒரு நட்சத்திரம்” இதழில் துவங்குகிறது இந்தக் குட்டிக் கர்ணப் படலம்! சில பல மாதங்களுக்கு முன்பாகவே இதற்கான தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது ; in fact 2015-ன் இறுதி முதலே என் மேஜையில் துயில் பயின்று வரும் ஆல்பமிது! சென்றாண்டில் நாம் இங்கும், அங்குமாய் நடத்தியிருந்த மொழிபெயர்ப்பாளர் தேடலின் பலனாய் திறமையானதொரு புது வரவு நமக்குக் கிட்டியிருந்தார். ஏற்கனவே நாம் பிரசுரித்து முடித்திருந்த சில இதழ்களின் ஆங்கில ஸ்கிரிப்ட்களை அவரிடம் ஒப்படைத்து- அதன் மீது மெது மெதுவாய் பயிற்சி எடுக்கச் செய்து அவரைத் தயார்ப்படுத்திட முனைந்தோம். ‘ஓ.கே.‘ என்று எனக்குத் தோன்றிய போது- புதியதொரு ஆல்பத்தின் பணிகளைத் தந்திட நான் நினைத்த வேளையில் என் கண்ணில் பட்ட முதல் ஸ்கிரிப்ட் இந்த “நெஞ்சில் ஒரு நட்சத்திரம்” தான்! பிரெஞ்சிலிருந்து நமது மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்து அனுப்பியிருந்த பக்கங்களை  அப்படியே நமது டீமின் புது அங்கத்தினருக்கு அனுப்பி விட்டு அதைப் பற்றி மறந்தே போய் விட்டேன். சில வார அவகாசத்திற்குப் பின்பாய் அந்தத் தமிழாக்கம் நம்மை எட்டிட, மேலோட்டமாய் சில பக்கங்களைப் புரட்டி விட்டு- ‘not bad at all’ என்றபடிக்கு மைதீனிடம் தந்து விட்டு அப்போதைய பணிகளுக்குள் மூழ்கி விட்டேன்! And ஜுன் மாதம் இந்த இதழின் ரிலீஸ் தேதி என்றான பின்னே நம்மவர்கள் ‘மள மள‘ வென்று டைப்செட்டிங் செய்து முடித்து என் மேஜையில் அடுக்கி விட்டுப் போய் விட்டனர்! “சாத்தானின் உள்ளங்கையில்...” இந்தாண்டின் better இதழ்களுள் ஒன்று என்ற நிலையில் நானும் அதன் அடுத்த அத்தியாயமான இந்தக் கதைக்குள்ளே புகுந்திடும் ஆர்வத்தில்- சென்ற ஞாயிறன்று வீட்டுக்குத் தூக்கிப் போயிருந்தேன்! ஆனால் அன்றைய பொழுதின் பெரும் பகுதியை ஜுலியாவோடு (அட... நம் க்ரைம் டிடெக்டிவ் மேடமோடு தான்!!) செலவிட்டான பின்னே, கமான்சேக்குள் திங்கள் இரவு தான் தலை நுழைக்க நேரம் கிட்டியது! ஆங்கில ஸ்கிரிப்டை ஒரு பக்கம் வைத்துக் கொண்டே, தமிழ் வார்ப்பை எடிட் செய்ய முயன்ற போதுதான் என் பற்கள் தாளம் போடத் தொடங்கின! வசனங்கள் சுலப நடையில் அழகாய், எளிமையாய் இருந்த போதிலும்- ஆங்காங்கே பிசிறடிப்பது போலத் தோன்றிட; பக்கங்களைப் புரட்டப் புரட்ட எனது நெருடல்கள் அதிகமாயின! சிக்கல் எழுந்துள்ளது எங்கே? என்று நிதானமாய் அலசிட முனைந்த போது தான் இந்தக் கதையின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் எத்தனை அசாத்திய வீரியம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் அனுப்பியிருந்த ஆங்கில ஸ்கிரிப்டை மட்டும் வைத்துக் கொண்டு படங்களோடு படிக்க முனைந்த போது ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டுவதற்குள் நாக்குத் தொங்கிப் போய் விட்டது! நாயகன் ரெட் டஸ்ட் ஒரு அழுத்தமான ஆசாமி; அவனது வரிகள் எப்போதுமே சற்றே கரடுமுரடாய்; ஏளனம் தொனிக்கும் பாணியில் இருப்பது நாமறிந்ததே! ஆனால் இம்முறையோ- ரெட் டஸ்டைப் போலவே அரை டஜன் rough & tough ஆசாமிகள் ஓரணியாகிக் களமிறங்குவது தான் கதையோட்டம் என்பதால் கதை நெடுகிலும் ஒவ்வொருத்தனின் பேச்சிலும் கதாசிரியர் கொணர்ந்திருக்கும் தெனாவட்டு... நையாண்டி... அழுத்தம் சொல்லி மாளா ரகம்! 

And பிரெஞ்சின் பொதுவான பாணியே இது தானா ? அல்லது கதாசிரியர் க்ரெக் இந்தத் தொடருக்கென பயன்படுத்தியுள்ள பேச்சுப் பாணி இதுவா? என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை ; ஆனால் XIII-ன் இடியாப்ப ஸ்கிரிப்டைக் கூட ‘குழந்தைப் புள்ளை‘ சமாச்சாரமாக்கும் விதமாய் இந்தக் கதையின் ஒரிஜினல் வசன நடை ஆழமோ ஆழம்! சில இடங்களில் சுத்தமாய் எதுவுமே புரியாது போக- ‘பெக்கே பெக்கே‘ என்று திருட்டு முழி முழித்துக் கொண்டே மண்டையைப் பிறாண்டினால்- மெதுமெதுவாய் அங்கே கதாசிரியர் சொல்ல வரும் விஷயம் புரியத் தொடங்கியது! ‘ஆண்டவா! இப்படியொரு கதையை ஒரு புது மொழிபெயர்ப்பாளருக்கு அனுப்பி வைத்து அவரை நோகச் செய்த என் மடைமையை என்னவென்பது?! என்று என்னை நானே தலையில் குட்டிக் கொள்ளத்தான் தோன்றியது! சிற்சிறுப் பகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்; பாக்கி எல்லாமே புதுசாய் எழுதப்பட வேண்டும்! என்பது உறைக்கத் தொடங்க- செவ்வாய் இரவு முதலாய் இந்த “Operation ஆரம்பம் முதல்” துவங்கியுள்ளது! ரின் டின் கேன் போன்ற ‘ஜுஜுலிப்பா‘ கதைகளைக் கையில் வைத்துக் கொண்டு; இது மாதிரியான கரடுமுரடான கதைகளை சக மொழிபெயர்ப்பாளரிடம் தள்ளி விட முயன்ற எனது ‘கெட்டிக்காரத்தனம்‘ என்னைப் பார்த்துப் பல்லை இளிப்பது போல்பட்டது ! இறுதி 15 பக்கப் பணிகள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில்- மேல் மூச்சு, கீழ் மூச்சு, சைடு மூச்சு எல்லாமே ஒட்டு மொத்தமாய் வாங்குவதால், ஒரு ‘பிரேக்‘ எடுத்துக் கொண்டு இந்த வாரப் பதிவைத் தயார் செய்யத் தண்டவாளம் மாறியுள்ளேன்! பேனா பிடிப்பதில் நான் பெரிய கில்லாடியென்று ஊருக்குச் சொல்வதல்ல என் நோக்கம் ; மாறாக ஆனமட்டிலும் முயற்சித்துள்ள பின்பாகவும் இந்த ஆல்பத்தில் ஏதேனும் தவறுகள் தென்பட்டால் அதன் பொருட்டு முன்ஜாமீன் வாங்குவதே இந்த விளக்கப்படலத்தின் பின்னணி! என்ன தான் தலைகீழாய் நின்று ‘மடக் மடக்‘ கென்று தண்ணீரை லிட்டர் லிட்டராய் குடித்தாலும் ஒரு அன்னிய மொழியை அதன் தாய்மொழிப் பேச்சாளரால் மட்டுமே முழுமையாய் கிரகித்துக் கொள்ள முடியுமென்பதை நடுமண்டையில் ஒரு போடு போட்டு எனக்கு ஞாபகப்படுத்தியுள்ள ஆல்பமிது! இயன்ற சகலத்தையும் செய்துள்ளோம் folks; சன்னமாய் தவறுகள் அதை மீறியும் உட்புகுந்திருப்பின் அதன் பொருட்டு உங்கள் புரிதலை கோரிடுகிறேன்!

இரவெல்லாம் இந்த ‘ரெட் டஸ்ட்‘ காலட்சேபம்  தொடர்ந்திட- பகல்களில் ‘தல‘ கச்சேரி தான்‘! நமது ஆதர்ஷ நாயகரின் அதகள வெற்றிக்குக் காரணமென்னவென்பதை இதை விடவும் ‘பளிச்‘சென்று யாரும் எனக்குப் புரியச் செய்திட முடியாதெனறு நினைக்கிறேன்! “பழி வாங்கும் புயல்” மறுபதிப்புதான் என்ற போதிலும்; ஏதோவொரு மாமாங்கத்து நினைவுகளாய் மட்டுமே எனக்குள் தொடர்ந்து வந்தன! And இந்த இதழின் proof-reading பணிகளை நண்பரொருவர் மேற்கொண்டிருந்ததால்- மேலோட்டமாய் ஒரு பார்வையை பதித்தான பின்னே இதற்கு ‘பை... பை‘ சொல்லி விடலாம் என்று நினைத்திருந்தேன்! ஆனால் லேசாகப் பக்கங்களைப் புரட்டப் புரட்ட- நினைவுகள் தடதடக்கத் தொடங்கின! And இரவுக் கழுகாரின் ராஜதந்திர அவதாரத்திற்கு அட்டகாசமானதொரு உதாரணமான இந்தக் கதையின் முதல் 10 பக்கங்களைப் படிக்க ஆரம்பித்த பின்பாக பிரளயமே நேர்ந்தாலும் மிச்சத்தைப் படிக்காது விட முடியாது என்பதை புரிந்து கொண்டேன்! 192 பக்கங்களையும் ‘ஏக் தம்மில்‘ படிக்க ; ஆங்காங்கே திருத்தங்கள் செய்ய என்று அட்டகாசமாய் பொழுது போனது வியாழன் காலையில்! நேர் கோட்டில் செல்லும் கதை; மூக்கைச் சுற்றி மீசையை வருடும் பாணிகள் இங்கே கிடையாது; பற்களை ஆடச் செய்யும் வசன அழுத்தங்களா? –no way! என்ற பாணி இரவுக் கழுகாருக்கு அடையாளமாக இருக்கும் வரை- ‘நீ கலக்கு தல!‘ என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது! ஒரு பிரான்கோ- பெல்ஜியக் குதிரைவீரனுக்கும், இந்த இத்தாலியக் கௌபாய்க்கும் களங்கள் ஒன்றேயாக இருந்தாலும்- தாக்கங்கள் தான் எத்தனை மாறுபடுகின்றன? Oh boy!! 

கொஞ்ச மாதங்களாகவே டெக்ஸ் & டீமைக் கறுப்பு-வெள்ளையிலேயே பார்த்து விட்டு- இம்மாதம் வண்ணத்தில் பார்க்கும் வேளையில் ‘ஜிவ்‘வென்று ஒரு உணர்வு மேலோங்குவதை இப்போதைக்கு நான் அனுபவித்து வருகிறேன்; இந்த “ஜிலீரை” இன்னும் 2 வாரங்களில் நீங்களும் ரசிப்பீர்களென்பது உறுதி! And இதோ “பழி வாங்கும் புயலுக்கான” அட்டைப்பட preview! 

As always, இது இன்னமும் சிற்சிறு நகாசு வேலைகளுக்கு உட்பட்டதே என்பதால் நீங்கள் பார்த்திடப் போகும் இறுதி வடிவம் இதுவே என்று நான் சொல்ல மாட்டேன்! அரசியல் கூட்டணிகள் தேர்தலில் மண்ணைக் கவ்வியிருந்தாலும்- நமது creative கூட்டணி தோற்காது என்பது எங்களது திட நம்பிக்கை! இம்முறையும் நமது ஓவியர் மாலையப்பனின் சித்திரத்திற்கு, டிசைனர் பொன்னன் வர்ணமூட்டியுள்ளார்! டெக்ஸின் அந்த கம்பீரத்தை நம்மவர் அழகாய் கொண்டு வந்துள்ளதாய் எனக்குத் தோன்றியது! What say folks? ‘தல‘ புராணத்திலிருந்து topic மாறும் முன்பாக- குட்டியானதொரு சேதி மட்டும்! 2017-ன் ABSOLUTE CLASSICS வரிசையில் நமது டாப் ஹீரோவின் வண்ண அதளகத்தின் முதல் சாகஸத்தைத் தேர்வு செய்தாகி விட்டோம்! அது என்னவாகயிருக்குமென்ற யூகங்களை உங்களிடமே விட்டு விடுகிறேனே!
ஒரு இத்தாலிய சூப்பர் ஸ்டாரின் பக்கமிருந்து இன்னொரு இத்தாலிய நாயகி பக்கமாய் பார்வையைத் திருப்புவோமா? “ஜுலியா” என்ற பெயரைக் கேட்டவுடன் சில பல நண்பர்களின் வயிறுகளில் நயம் புளி ஒரு கிலோவாவது கரைவது நானறியா விஷயமல்ல! ஆனால் கிட்டத்தட்ட 180+ சாகஸங்கள் கொண்டதொரு நாயகிக்கு ஒரே வாய்ப்போடு தீர்ப்பெழுதுவது நிச்சயமாய் அபத்தம் என்பதில் என்னுள் மாற்றுக் கருத்தில்லை. “நின்று போன நிமிடங்கள்” இம்மாதத்து black & white ஆல்பம்! And trust me guys– எது மாதிரியும் இல்லாததொரு terrific கதையிது! துவங்கிய முதல் பத்துப் பக்கங்களுக்குள்ளாகவே டாப் கியரை எட்டிப் பிடிக்கும் கதை- க்ளைமேக்ஸ் வரையிலும் அதே உச்சத்திலேயே பயணிப்பதை சீக்கிரமே பார்த்திடப் போகிறீர்கள்! தொடரும் காலங்களில், இந்த அம்மணி நமது அட்டவணையில் ஒரு ரெகுலராக அமைந்திடப் போவது உறுதியென்று எனக்கொரு பட்சி சொல்கிறது! Julia is here to stay!

நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் ஒரு இல்லத்தரசி; தம் பணிகளைத் தாண்டி காமிக்ஸ் கதைகளோடு பெரியதொரு பரிச்சயமில்லாதவர்! ஆனால் அவரது பட்டியலில் ‘டாப்‘ கதைகளெனில்- அது கிட்-ஆர்டின் கதைகளும்; நமது நாலுகால் நான்சென்ஸ் ரின்டின் கேனின் கதைகளுமே! இது வரையிலும் 3 ரின் டின் கேன் கதைகளை மொழிபெயர்த்துள்ளவர் – அண்ணாரின் தீவிர ரசிகையாகி விட்டார்! இதோ மினுமினுக்கும் வண்ணத்தில் அச்சாகித் தயாராகி நிற்கும் ரி.டி.கே. வின் ஒரு சின்ன preview!
அச்சாகி பைண்டிங் சென்றிருக்கும் இதழ்களின் பட்டியலில்- 6x முத்து மினி காமிக்ஸ் பிரதிகளும் சேரும்! ‘ஒட்டுமொத்தமாய் அத்தனை இதழ்களும் அடுத்த 10 நாட்களுக்குள் வேண்டும் சாமி‘- என்ற வேண்டுகோளோடு பைண்டிங் நண்பரைத் தயார் செய்து வருகிறோம்!

கல்யாண வீட்டு அலங்காரங்களைப் பற்றி; சமையலைப் பற்றி; கச்சேரியைப் பற்றி; கூட்டத்தைப் பற்றியெல்லாம் பேசி விட்டு- மாப்பிள்ளையைப் பற்றிப் பேசாமல் போனால் சாமி கண்ணைக் குத்துகிறாரோ இல்லையோ- தங்கத் தலைவனின் தொண்டர்படை அந்தப் பணியைச் செய்து விடாதா? So லேட்டாக வந்தாலும்- அந்த topic-ன் லேட்டஸ்ட் தகவல்கள் இதோ! “என் பெயர் டைகர்” வண்ணப் பிரதிகளின் அச்சுப் பணிகள் பூரணமாய் முடிந்து விட்டன! அட்டைப்படமும் தயார் என்பதால் தொடரும் நாட்களில் மாதிரிப் பிரதி என் கைகளை எட்டி விடும்! நிறையவே Wild West-ன் பின்னணிகளை இணைத்து இழையோடும் கதையிது என்பதால்- அவை தொடர்பான குறிப்புகள்; ஃபோட்டோக்கள் என நிறையவே தயார் செய்துள்ளோம்! And ‘கௌ-பாய் காதல் ஏனோ?‘ என்ற கேள்விக்கான நம்மவர்களின் பதில்கள் இதழில் இடம்பிடிக்கின்றன! கார்ட்டூன்கள்; மொக்கையான filler pages என இதழின் mood-ஐ மட்டுப்படுத்தும் சமாச்சாரங்கள் இதனில் கிடையாதென்பதை முன்கூட்டியே சொல்வி விடுகிறேன் folks! Of course சின்னதொரு அறிமுக காமிக்ஸ் டைம் பக்கம் உண்டு தான்; அது நீங்கலாய் பாக்கிக் பக்கங்கள் எல்லாமே தங்கத் தலைவனுக்கும்; அவரது இந்த சாகஸம் சார்ந்த பின்னணிகளுக்கும்  மாத்திரமே!

அப்புறம் “எ.பெ.டை”யின் black & white பதிப்பானது grey scale-ல் வெளிவரயிருப்பதாய் நான் சென்ற வாரம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்! முதன் முறையாக ஒரு வாரம் முழுவதுமாய் பதிவு பக்கமாய்த் தலைவைத்தே படுக்க நேரமில்லை என்பதால் அந்த அறிவிப்பை உங்களில் யாரேனும் கவனித்தீர்களா-இல்லையா ? என்பதைக் கூட நான் தெரிந்திருக்கவில்லை ; ஆனால் அந்தத் திட்டத்தில் சின்னதொரு மாற்றம்! திட்டமிட்டபடியே greyscale-ல் அச்சும் துவக்கினோம்; ரொம்பவே அழகாய் தோன்றவும் செய்தது தான்! ஆனால் பின்பக்கம் அச்சிடும் போது- கறுப்பின் அடர்த்தி காரணமாய் முன்பக்கத்துச் சித்திரங்கள் பின்னே ரொம்பவே தெரிந்தது போலப்பட்டது ! அதிலும், கதையின் நிறையப் பகுதிகள் முழு இருளில் நடைபெறுவது போல் இருப்பதால் அங்கெல்லாமே கருப்பின் depth ரொம்பவே மறுபக்கம் தெரியத் தொடங்கியது !  ஏற்கனவே ”பேப்பர் சரியில்லை; மை சரியில்லை” என்ற ரீதியில் சின்னதாகக் குறைபாடுகள் காதில் விழுந்து வரும் தருணத்தில்- இந்த விசேஷப் பதிப்பில் அதற்கொரு இடம் தந்தது போலாகி விடுமே என்று கவலை தொற்றிக் கொள்ள- அச்சான பக்கங்களைத் தூக்கிக் கடாசி விட்டு நார்மலான black & white லைன் டிராயிங்களோடு புதிதாய் அச்சிடத் தொடங்குகிறோம்! வெள்ளை வெளேர் பின்னணி நிறையப் பக்கங்களில் இருந்தாலும்- அது தவிர்க்க இயலா விஷயமே என்றபடிக்கு பணிகளில் இறங்குகிறோம்! என்றைக்கேனும் கனந்த art paper-ல் கறுப்பு & வெள்ளை இதழொன்று வெளியிட சாத்தியமாகிடும் எனில்- அதனில் இந்த greyscale effects கொண்ட பக்கங்களை அச்சிட்டுப் பார்க்கலாம்! நிஜமாகவே b&w ன் வெறுமையை மறக்கச் செய்யும் விதத்தில் ரொம்பவே வித்தியாசமாய் இந்த பாணி உள்ளது! 
Artist Giraud ...!!
தொடரும் ஒன்றிரண்டு நாட்களில் “என் பெயர் டைகர்” b&w இதழும் அச்சாகி முடிந்திடும் போது- ஜுன் மாதத்து பரீட்சையினில் முக்கால் பங்கைத் தாண்டியிருப்போம்! ஆக்டோபஸின் கரங்களை விட எனது விரல்கள் அனைத்தையும் cross பண்ணி வைத்துக் காத்திருக்கிறேன்- சொதப்பல்களின்றி நமது திட்டமிடல்கள் அரங்கேறிட வேண்டுமென்ற வேண்டுதலில் ! சென்னைப் புத்தக விழாவின் ஸ்டால் ஒதுக்கீடுகள் பற்றிய விபரம் நாளைய தினமே (மே 23) தெரிய வருமென்பதால் ஆவலாய்க் காத்திருப்போம் சேதியறிய!

சில நாட்களுக்கு முன்பாய் சிவகாசி வந்திருந்த சென்னை நண்பரொருவர் ரொம்பவெ சுவராஸ்யமாய் பேசிக் கொண்டிருந்த போது- "வாரம் 2 பதிவு போடுங்கள் !" என்ற கோரிக்கையை வைத்தார்! ஒரு பதிவுக்கே தள்ளாட்டம் காணும் நிலையில்- வாரம் 2 எனில் சட்னியாகிப் போவோம் என்பதை அவரிடம் சொல்லி வைத்தேன்! சென்ற ஞாயிறு பதிவுக்குள் பகலில் சிறிது நேரம் உலவித் திரிந்ததற்குப் பின்பாக பெரியதொரு ஈடுபாடு காட்டவே இயலாமல் போய் விட்டது! Sorry folks! அங்கே ஏதேனும் முக்கிய கேள்விகள் எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே repeat செய்திடுங்களேன்- இயன்றளவுக்கு பதில் தர முயற்சிக்கிறேன்?!

குவிந்து கிடக்கும் பணிகளுக்கு மத்தியில்- புதிய சில கிராபிக் நாவல்கள் பற்றிய திறனாய்வுகள்; கதைச் சுருக்கங்களை ஜுனியர் எடிட்டர் தயார் செய்து என் மேஜையில் வைத்துள்ளார். மறக்காமல் அதன் பக்கமாகவும் பார்வையினை ஓடவிட வேண்டும் என்ற reminder செட் பண்ணிக் கொண்டே கமான்சேவின் எஞ்சியுள்ள 15 பக்கப் பணிகளுக்குள்  மறுபிரவேசம் செய்திடப் புறப்படுகிறேன்! பல்சுவை மெகா விருந்தொன்று தயாராகி வருகிறதென்பதால்- ஒரு ‘ஃபுல் கட்டு‘ கட்டும் திறனோடு தயாராகிக் கொள்ளுங்கள் folks! ஜுனில் துவங்கும் இந்தத் திருவிழா- தொடரும் மாதங்களிலும் 32-வது லயன் ஆண்டுமலர் ; "ஈரோட்டில் இத்தாலி" என்றெல்லாம்  உச்சத்திலேயே தொடரக் காத்திருப்பதால்- எங்களுக்கு இப்போதைய தேவை உங்களது பகாசுர காமிக்ஸ் பசி மட்டுமே! வயிற்றைச்  சுத்தம் செய்து கொண்டு get ready all !!! மீண்டும் சந்திப்போம்! Savor the Sunday !!

P.S : ரொம்ப நாள் ஆச்சல்லவா ? - இதோ உங்கள் ஆதர்ஷ ஜோடிக்கொரு caption தான் எழுதுங்களேன் - ஆளுக்கு மூன்றே வாய்ப்புகள் எடுத்துக் கொண்டு ! பரிசு : முத்து காமிக்ஸ் 1-50 பட்டியலின் ஏதேனும் ஒரு vintage இதழ் !  
நண்பர்களே, ஜூன் 1-13 வரையிலும் சென்னைத் தீவுத் திடலில் நடைபெறவிருக்கும் சென்னைப் புத்தக விழாவினில் நமது ஸ்டால் எண்: 159.
"முத்து காமிக்ஸ்" என்ற பெயரிலேயே இம்முறை நமது அரங்கு அமைந்திருக்கும் !
குடும்பத்துடன் வருகை தாருங்களேன் all ?

இடம்: 
தீவுத் திடல்

அண்ணா சாலை,
பார்க் டவுன்,
சென்னை – 600 003
நாள்: 01.06.2016 முதல் 13.06.2016
நேரம்:
விடுமுறை நாட்களில்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
வேலை நாட்களில்: மதியம் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை


Sunday, May 15, 2016

நித்தமும் ஒரு பாடம் !

நண்பர்களே,

வணக்கம். ஜூன் மாதச் சென்னைப் புத்தக விழாவினில் நமக்கு இடம் கிடைக்குமோ - கிடைக்காதோ ; இங்கே ஒரு மாட்டுவண்டிப் பொதிப் பிரதிகள் தயாராகி வருகின்றன ! "தங்கத் தலைவனின்" வண்ண ஸ்பெஷல் சும்மா தக தகக்க அச்சாகி விட்டது - கடைசிப் 16 பக்கங்கள் நீங்கலாக ! அந்தக் குறைபடிப் பக்கங்களினில் குவிந்துவரும் உங்கள் "கௌபாய் காதல் காரணங்கள் " பற்றிய  ஆக்கங்களை நுழைப்பிக்கும் பணிகள் நடந்தேறி வருகின்றன! So அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் நிறைவேறி விட்டால் -  பைண்டிங் பணிகள் தான் பாக்கி !  மறு பக்கமோ - black & white பதிப்பின் பணிகள் - நமது ஜனநாயகக் கடமைகள் பூர்த்தியான மறுதினம் அச்சு செல்லக் காத்துள்ளன !And முதன்முறையாக - black  + white  (!!) + grey tones என்ற கலவையினில் இதனை நீங்கள் ரசித்திடப் போகிறீர்கள் ! 

இத்தனை காலமாய் நாம் கருப்பு-வெள்ளையில் வெளியிட்டு வந்த இதழ்கள் எல்லாவற்றின் ஒரிஜினல் வார்ப்புகளும் வண்ணமே எனினும், அவற்றை ஒற்றைக் கலரில் நாம் தயார் செய்த பொழுது பெரியதொரு வேறுபாடு தோன்றிடவில்லை தான் ; ஆனால் முதல்முறையாக "என் பெயர் டைகர்' இதழின் கருப்பு நிற டிஜிட்டல் பைல்களை மாத்திரம் அச்சுக்குக் கொணர்ந்து பார்த்த பொழுது - செம மொக்கையாய்த் தோன்றியது !! வர்ணச் சேர்க்கைகளுக்குத் தோதுவாய், இக்கதையினில்  backgrounds சகலமும் வெள்ளையாய் உருவாக்கப்பட்டிருப்பதால் - contrast எதுவுமே கண்ணில் தட்டுப்படவில்லை ! குச்சுக் குச்சியாய் கதை மாந்தர்கள் அத்தனை பேரும் வெள்ளைச் சட்டைகளை மாட்டிக் கொண்டு, வெள்ளை வெளேர் குதிரைகளில் தொற்றிக் கொண்டு - உஜ்ஜாலா வெண்மை  வீதிகளில் உலாற்றிக் கொண்டு, பளிச்சிடும் வெண்மை வில்லன்களோடு மோதுவதைப் போல தோன்றியது கொஞ்சமும் சுகப்படவில்லை !! கதையின் பல பகுதிகள் இரவில் ; இருளில் நடக்கும் விதமாய் அமைக்கப்பட்டிருந்தாலும் - black & white -ல் பார்க்கும் போது - சுட்டெரிக்கும் பகல் வெயிலின் clear skies -ன் கீழே நடப்பது போல் காட்சி தந்தது ! அப்புறம் photoshop சகாயத்தோடு பக்கங்கள் அனைத்தையும் grey scale -ல் தயார் செய்து பார்வையிட்ட பொழுது இது கூட ஒரு வித்தியாசமான பாணியில் இருப்பதாய் தோன்றியது ! நேற்றிரவு நான் வழக்கமாய்ப் பதிவு எழுதும் வேளைதனில் இந்த grey scale பாணியின் அச்சு வெள்ளோட்டத்தை நடத்திப் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதாலேயே இந்தப் பதிவு அதிகாலைத் தயாரிப்புக்கென ஒத்தி வைக்க வேண்டிப் போனது ! So சற்றே அடர் பின்னணிகளோடு இந்தக் கருப்பு-வெள்ளைப் பதிப்பு வெளியாகிடும் என்பதை உங்கள் கவனங்களுக்குக் கொண்டு வந்து விடுகிறேனே ! And இந்த பாணி சோபிக்க வேண்டுமெனும் பொருட்டு - 'பளிச்' வெள்ளை பேப்பரைப் பயன்படுத்தியுள்ளோம் ! இந்த கருப்பு-வெள்ளைப் பதிப்பை செவ்வாயன்று அச்சிட்டு முடித்துப் பார்க்க நாங்களுமே ஆவலாய்க் காத்துள்ளோம் ! வண்டி வண்டியாய் இத்துறையில் அனுபவம் இருப்பினும், ஒவ்வொரு இதழுமே ஏதோ ஒரு விதத்தில், ஏதோவொரு சமாச்சாரத்தைக் கற்றுத் தரும் ஆசானாய் அமைவது தான் எங்கள் கால்கள் தரையில் பதிந்து நிற்க உதவிடும் காரணிகளோ - என்னமோ !! This has been no different !! 
ஸ்பெஷல் இதழின் வண்ண அச்சு முடிந்து விட்டபடியால் - அடுத்ததாய்  திருமிகு. ரின்டின் அவர்கள் தயாராய்க் காத்துள்ளார் - அச்சு இயந்திரத்துக்குள் குதித்திட ! இம்முறை ரொம்பக் குட்டியானதொரு கதை knot மட்டுமே ; பாக்கி எல்லாமே ரின்டினாரின் கோணங்கித்தனங்களைச் சுற்றிய லூட்டிகளே என்பதால் - இதனை எழுதிட பெரிதாய் சிரமங்களே தோன்றிடவில்லை !! Should be a very breezy read too ! அதற்கு நேர் மாறாய் கமான்சே & ஜூலியா கதைகளில் அழுத்தமான கதைக்களங்கள் + ஸ்கிரிப்ட் ! அவற்றின் எடிட்டிங் வேலைகள் தான் எனக்கு இன்றைக்கும், நாளைக்கும் துணை !! Hopefully அந்தப் பணிகளை என்னால் துரிதமாய் பூர்த்தி செய்திட முடிந்திடும் பட்சத்தில், தொடரும் வாரத்திலேயே இதன் அச்சும் நிறைவு கண்டிடவேண்டும் !! Fingers seriously crossed !!

இவற்றை முடித்து விட்டால் - அப்புறம் ஐயா குஷாலாகி விடுவார் - becos காத்திருக்கும் இதர 7 இதழ்களுமே - only மறுபதிப்ஸ் !! இரவுக் கழுகாரின் "பழி வாங்கும் புயல்" அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பா நண்பரொருவரின் கைகளில் தற்போதுள்ளது - proof reading -ன் பொருட்டு ! அவர் அதனை முடித்து அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஒப்படைத்து விட்டால் - ஒரு டெம்போ நிறைய மஞ்சள் மைக்கு ஆர்டர் செய்துவிட்டு - பிரிண்டிங் பணிகளுக்குள் குதித்து விடுவோம் -  மஞ்சள்சட்டை மாவீரரின் கலர் பதிப்பின் பொருட்டு ! பொதுவாய் எனக்கு நமது முந்தைய இதழ்களின் கதைகள் ரொம்பவெல்லாம் மண்டையில் தங்குவதில்லை என்பதால் இந்த சாகசம் லேசு பாசாய் மட்டுமே ஞாபகத்தில் நின்றது ! But மேலோட்டமாய் டைப்செட் செய்யப்பட பக்கங்களைப் புரட்டிய சமயம் - வெள்ளமாய் பழைய நினைவுகள் கரைபுரண்டோடிடன ! இந்தக் கதை 1970-களில் ஆங்கிலத்தில் வெளியானதொன்று என்பதால்- எனது பால்யத்துக் collection -ல் இடம் பிடித்திருந்தது என்று ஞாபகம் ! அந்நாட்களில் டெக்ஸ் வில்லரின் ஏதோவொரு கதையைத் தூக்கித் தலைமாட்டில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறு காலையும், சீக்கிரம் சீக்கிரம் எழுந்து வாசி-வாசி என்று வாசிப்பது எனது வாடிக்கை ! "டிராகன் நகரம்"  ; "சைத்தான் சாம்ராஜ்யம்" "தலைவாங்கிக் குரங்கு" இத்யாதிகளை விரல் தேயுமளவிற்கு ஞாயிறுகளில் புரட்டித் தள்ளியதெல்லாம் இந்த ஏழு கழுதைப்  பிராயத்து ஞாயிறு அதிகாலையின் நினைவினில் நடைபோடுகிறது !! அந்நாட்களில் என்னுள் "தல" ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கு நமக்கொரு பொதுவானதொரு அடையாளம் என்பது எனக்கு எல்லையிலா சந்தோஷம் நல்கிடும் ஒரு விஷயம் ! ஆங்கிலத்தில் பின்னியெடுக்கும் மொழிபெயர்ப்போடு வெளியிட்ட Topsellers பதிப்பகத்திற்கும், அதனை எனக்குக் கண்ணில் காட்டிய என் தந்தைக்கும் தான் நன்றி சொல்லியாக வேண்டும் ! Maybe அந்நாட்களில் டெக்சை நான் கண்ணில் பார்த்திராவிடின் - காமிக்ஸ் வெளியிடும் வேளை(லை) வந்த பொழுது - எனது கவனம் பிரிட்டிஷ் துப்பறிவாளர்களையும் ; சூப்பர் ஹீரோக்களையும் தாண்டி ரொம்பச் சென்றிராதோ - என்னமோ ?!  யோசித்துப் பாருங்களேன் - இன்னமும் அண்டா-குண்டாக்களை உருட்டி - சட்டித்தலையன் அர்ச்சியையும் ; கூர்மண்டையரையும் ; இன்னபிற fleetway பரிவாரங்களைக் கொண்டு உங்களைத் தாக்கிக் கொண்டிருந்தேனெனில் - author ஆதியெல்லாம் ஆட்டோ பிடித்தே ராஜஸ்தான் பக்கமாய் புறப்பட்டிருக்க மாட்டாரா ? நமது கோவைக்கார ஸ்டீல்க்ளா மட்டும் இந்நேரத்துக்கு ஒரு நாலைந்து மில்லியன் ஹிட்ஸ் அடிக்கச் செய்திருக்க மாட்டாரா - நம் வலைப்பதிவினை ?!!  நானும் சும்மா - "பூம்...கும்....ச்ச்ச்ச்ச்ச்....ற்ற்ர்ர்ர்ர்.." என்று frame -க்கு frame டிராக்டர் ஒட்டியே பிழைப்பு நடத்தியிருக்க மாட்டேனா - ஒரு கைதேர்ந்த விவசாயியைப் போல !! Just miss!!!

முதல்முறையாய் இக்கதையைப் படிக்கவிருக்கும் நண்பர்களை இரவுக் கழுகாரின் இந்த வண்ண மறுபதிப்பு மிரளச் செய்யப் போவது உறுதி !  அட்டகாசமான கதை + வண்ணம் என்ற combo அதகளம் செய்யவிருப்பது நிச்சயம் ! ABSOLUTE CLASSICS வாயிலாய் இனி களம் காணவிருக்கும் டெக்ஸ் மறுபதிப்புகள் சகலமுமே வண்ணத்தில் மாத்திரமே என்பதால் - colorful days ahead indeed ! 'இரவுக் கழுகின்' மறுபதிப்பு ஒரு பக்கமெனில், முத்து மினி காமிக்ஸின் 6 இதழ்களின் பணிகள் இன்னொருபக்கம் ! இவை எல்லாமே - கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு மப்டியில் உலவிடப் பிரியம் காட்டியுள்ள நமது சில பல புது proof reader களின் உபயத்தில் அச்சு செல்லத் தயாராய் உள்ளன ! So அவற்றையும் ஒட்டு மொத்தமாய் அச்சிட்டு விட்டு, நமது பைண்டிங் நண்பரை ஒரு கேஸ் பன்னீர் சோடா சகிதம் சென்று நலம் விசாரிக்க நம்மாட்களை அனுப்பிட வேண்டி வரும் ! ரெகுலர் இதழ்கள் 4 + 1 கலர் edition + 1 Black & white edition + 6 முத்து மினி இதழ்கள் = 12 புக்ஸ் in total எனும் பொழுது அவரைத் தெளிய வைத்துத் தெளிய வைத்து சாத்திக் கொண்டே இருக்க வேண்டி வரும் - அடுத்த 10 நாட்களுக்கு ! காத்திருக்கும்  நம் குடல் உருவல்களைத் தாங்கி நிற்கும் ஆற்றலை அந்த மனுஷனுக்குக் கொடுத்திட கடவுளைத் தான் வேண்டிக் கொள்கிறேன் !! Phew !!மந்தி வேலைகள் நமக்குப் புதிதல்ல தான் ; ஆனால் இம்முறை ஒரு டஜன் இதழ்கள் - அடுத்த 15 நாட்களுக்குள் என்பது ரொம்பவே வயிற்றைக் கலக்கத் தான் செய்கிறது !! புனித தேவன் மனிடோ தான் என் மண்டையைக் காத்தருள வேண்டும் !! 

இந்தக் கூத்தின் நடுவே சென்ற வாரத்தின் ஒரு நாள் - நமது இதழ்களின் விற்பனைகளின் பொருட்டு ஒரு முக்கிய அங்காடிச் சங்கிலியின் கொள்முதல் அதிகாரியைச் சந்திக்கும் பொருட்டு கொங்கு மண்டலப் பயணம் மேற்கொண்டேன் ! 

"சார்...சிவகாசியிலிருந்து வந்திருக்கேன்...உங்களை 11 மணிவாக்கில் உங்கள் ஆபீசில் பார்க்கலாமா ? காமிக்ஸ் புக் விற்பனை விஷயமாய் ஏற்கனவே உங்கள் பிரிவில் பேசியிருந்தோம் அல்லவா - அது சம்பந்தமாய்..."

"சரி...வாங்க...ஆபீசில் தான் இருப்பேன்"

11 மணி...!! லக்கி லூக் ; லார்கோ ; டெக்ஸ் வில்லர் ; மதியில்லா மந்திரி...மாடஸ்டி...மாயாவி....என்று கலர் கலராய் - சைஸ் சைசாய் இதழ்களோடு அவர முன்னே ஆஜராகிறேன் ! போர் அடித்துப் போனதொரு பார்வையோடு என் முன்னே அமர்ந்திருப்பவர் நான் நீட்டும் இதழ்களை இப்படியும், அப்படியுமாய்ப் புரட்டுகிறார்...!

"எப்டி ..கிலோ ரேட்டா ?" 

"புரியலை ....என்ன கேட்குறீங்க ?"

"இல்லே..இதெல்லாம் கிலோ என்ன ரேட்னு சப்ளை பண்ணுவீங்கே ?"

"கிலோ ரேட்டா ?? ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை உண்டு சார் ; இது அறுபது ரூபாய்...அது ஐம்பது...! அந்த விலைகளில் இருந்து 25% discount தருகிறோம் ! "

"ஓஹோ.."

"இதைப் படிக்க நிச்சயம் ஒரு வாசகர் வட்டம் உண்டு சார் ; சின்ன அளவிலே ஆரம்பத்திலே முயற்சி பண்ணிப் பாருங்களேன் - சரியா வந்தா அப்புறம் படிப்படியாக் கூட்டிக்கலாம் !"

"இதெல்லாம் இந்த விலைகளுக்கு விக்காது சார்.... கிலோ ரேட்டுக்கு வாங்க முடியும்னு நினைச்சிட்டு தான் உங்களை வரச் சொன்னேன் !"

"சார்..இது எல்லாமே foreign கதைகள் ; உரிமைகள் வாங்கி தமிழில் போடுறோம் ! அறுபது ரூபாய்க்கு நாங்க போடும் தமிழ் பதிப்போட இங்கிலீஷ் ஆக்கம் 400 ரூபாய் விலை !! பிளாட்பாரத்திலே போட்டு விற்கும் கோல புத்தகங்கள் மாதிரியான சஸ்தாத் தயாரிப்புகளும் கிடையாது ! அவ்வளவும்   ஆர்ட் பேப்பர் - பாருங்களேன் !"

"இல்லீங்கே...ஏற்கனவே புஸ்தகம்லாம் விக்குறதே குறைஞ்சிட்டு இருக்கு ....அதனால அந்த செக்ஷனையே படிப் படியா குறைக்கப் போறோம் ! இதை வேற அங்கே அடுக்கி வைச்சு என்ன பண்ண போறோம் ?"

கையில் அவர் புரட்டிக் கொண்டிருக்கும் லக்கியின் ஒற்றைப் பக்கத்தில் கூட அவர் கண்கள் பதியக் காணோம் என்பது புரிகிறது !

"ஏய்...அந்த சீவக்காய் பாக்கெட் சாம்பிள் வாங்கிட்டு வந்தியா ? அருகிலிருக்கும் பணியாளிடம் கேள்வி பறக்கிறது !

"சரி சார்....நான் கிளம்பறேன் !" 

"சரி..எதுவொன்னு வேணும்னா அப்புறமா சொல்லி அனுப்புறோம்"

படியிறங்கிக் கீழே செல்லும் போது எனக்குக் கோபம் கூட வரவில்லை ! கோபமும் ஒருவிதத்தில் ஒரு வித energy -ன் வெளிப்பாடே எனும் போது - இந்த மனுஷன் அதற்குக் கூட அருகதையானவராக எனக்குத் தெரியவில்லை ! இத்தனை பெரியதொரு அங்காடியின் கொள்முதல் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒரு ஆசாமிக்கு காமிக்ஸ் ஞானம் இருத்தல் அவசியமில்லைதான் ; ஆனால் சந்தையில் கூறு வைத்து விற்கப்படும் கத்திரிக்காய்க்கும் ; AC -ல் வைத்து விற்க வேண்டிய broccoli-க்கும் வேற்றுமை காணத் தெரியாது போயின் அது நம் தவறல்ல என்று நினைத்துக் கொண்டே நடையைக் கட்டினேன் ! நாம் கட்டித் தழுவி நிற்கும் ஒரு அழகான ரசனைக்கு அதன் சுவாச அனுபவமில்லா மாந்தர்களின் நிலைப்பாடு இது தானோ ? என்ற சிந்தனையைத் தவிர அந்நேரம் எனக்கு வேறெதுவும் தோன்றிடவில்லை !  உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த ஜூனியரை சற்றே கூல் பண்ணிவிட்டு கிளம்பினேன்..! முன்பெல்லாம் இத்தகைய நயமான பிலிப்ஸ் பல்ப் வாங்க நேரிட்டால் உள்ளுக்குள் ஆற்றமாட்டாமையும், எரிச்சலும் பொங்கிடுவது வழக்கம் ! ஆனால் இந்த மனுஷனின் அறியாமையும் ; ஏளனமும் அவர் மீது எனக்கொரு பரிதாபத்தையே ஏற்படுத்தின ! அது சிறியதொரு உலகமாயே  இருப்பினும் கூட, ஒரு அசுவாரஸ்யப்  பூனை கண்ணை மூடிக் கொள்வது போலப் பாசாங்கு செய்வதால் இருள் சூழ்ந்து கொள்வதாய் நாம் கருதிடத் தேவையில்லை என்பதில் எனக்கு ஐயமில்லை !

அங்கிருந்து கிளம்பி விட்டு - அந்நகரில் உள்ள நமது விற்பனையாளர்களை சந்திக்கச் சென்றேன் - நமது மார்கெட்டிங் மேனேஜருடன் ! அருகருகே தான் ஒவ்வொரு கடையும் என்பதால் வரிசையாய் ஒவ்வொருவரையும் சந்திக்க முடிந்தது ! சொல்லி வைத்தாற்போல எல்லோருமே சொன்ன ஒரே விஷயம் - "ரெகுலரா வாங்குறவங்க போன் பண்ணிக் கேட்டுட்டு கரெக்டா வந்திடுறாங்க சார் ! நீங்க நெட்லே போட்டுட்டா அன்னிக்கே போன் பண்ணிடுறாங்க  !" "புதுசா பாக்குறவங்க - இதுலாம் இன்னமுமா வருதுன்னு ?சந்தோஷப்படுறாங்க சார் !"அங்கே காதில் பாய்ந்த ஈயத்துக்கு மாற்றாய் இது இதமான சங்கீதமாய் எனக்குத் தோன்றியது ! 

ஒவ்வொரு கடையிலும் ஐந்தைந்து நிமிடங்கள் இருந்துவிட்டுப்  புறப்பட்ட போது - நமது முன்னாள் முகவரொருவர் நமது இதழ்களை மீண்டும் தன் கடையில் விற்பனை செய்ய விரும்புவதாய் நம்மவர் சொல்ல - சரி, வந்தமட்டிற்கு ஒரு எட்டு அவரையும் பார்த்து விட்டுப் போய் விடலாமே என்று நடந்தேன் ! அவர் நமது முத்து காமிக்ஸின் முன்னாள் முகவர் ; பெயரளவிற்கு மாத்திரமே எனக்குப் பரிச்சயம் ! நமது லயன் இதழ்களை விற்பனை செய்தவர் வேறொருவர் ! இருப்பினும், ரொம்பவே அன்பாய், மரியாதையாய் பேசியவர் - தானும் அந்நாட்களது காமிக்ஸ் ரசிகன் என்பதையும் ; மாயாவி ; பெய்ரூட்டில் ஜானி ; லாரன்ஸ் டேவிட் என்று மலரும் நினைவுகளுக்குள் ஏகமாய்ப் புகுந்துவிட்டார் ! கடையில் வியாபாரம் பிசியாக நடந்து கொண்டிருப்பினும், என்னுடன் பேசுவதில் காட்டிய சுவாரஸ்யத்தை சிறிதும் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை  ! பழமைக்குள் லயிக்கும் சுகானுபவத்தை நாமேன் கெடுப்பானேன் ? என்று நான் அவரது சிலாகிப்புகளை ஜாலியாய் ரசித்துக் கொண்டிருந்தேன் !   நமது பட்டியலைக் கையில் கொடுத்து விட்டு, "ஆரம்பத்தில் விலைகுறைவான இதழ்களை மட்டுமே தேர்வு செய்து விற்றுப் பாருங்கள் சார் ; அப்புறம் கொஞ்சம் பிக் அப் ஆகி விட்டால் கூடுதலாய் முயற்சிக்கலாம் !" என்று சொன்னேன் ! ஒ.கே. என்று சொன்னவர் தந்த முதல் ஆர்டர் - முழுக்க முழுக்க நமது மும்மூர்த்திகள் + கூர்மண்டையரின் மறுபதிப்புகளுக்கு மட்டுமே !! ஏஜெண்ட் விற்பனைகளில் இத்தகையதொரு தனித் தண்டவாளம் ஓடி வருவதை கடந்தாண்டு முதலாகவே பார்த்து வரும் எனக்கு இதனில் பெரியதொரு ஆச்சர்யம் இருக்கவில்லை ! லார்கோவாது...டெக்ஸ் வில்லராவது - மாயாவி இருக்க பயமேன் ? என்பதே ஏகப்பட்ட கடைக்காரர்களின் தாரக மந்திரம் ! So இதுவும் ஒரு விற்பனையே என்ற தலையாட்டலோடு ஜூனியரோடு ரூமுக்குத் திரும்பினேன் - காமிக்ஸ் எனும் ரசனைக்கு ஒரே நாளில் கிட்டிய மூவித அனுபவங்களோடு !! படிக்கிறோம் - நித்தமும் ஒரு பாடம் ! 

Before I sign off - சில ஜாலியான updates :

  • ஒரு திகுடுமுகுடான பட்ஜெட்டில் ஐரோப்பாவில் 2017-ல் ஒரு sci -fi  காமிக்ஸ் கதை திரைப்படமாகிடவுள்ளதாம் ! அதனையொட்டி அந்தத் தொடருக்கு மெருகூட்டி மறுபதிப்புகள் ; promotionsஇத்யாதி என படைப்பாளிகள் தயாராகி வருகிறார்கள் ! Sci -fi க்கு ஒரு வாய்ப்புத் தந்து பார்ப்போமா ? எல்லாவற்றையும் சந்தா X Y Z என்று கொண்டு செல்வதிலும் எனக்கு பூரணம் உடன்பாடில்லைதான் ; ஒரு புது ரசனையை நாமே ஓரங்கட்டி அறிமுகம் செய்திடும் பட்சத்தில் அது சவலைப் பிள்ளையாகவே தொடர்ந்திடுமோ என்ற பயம் எழுகிறது ! What say all ?
  • ஜூலையின் ஆண்டுமலரினில் பிரின்ஸ் + ரிப்போர்டர் ஜானி + ரோஜர் என்ற combo வை ஒரே இதழாய் ஒன்றிணைத்து வெளியிட சம்மதம் வாங்கி விட்டோம் ! So நமது பெல்ஜிய backbench boys ஒன்றாய் களமிறங்கப் போவது நம் இதழ்களில் முதன்முறையாக !!
  • ஜூன் 10-ல் தான் இரத்தப் படலம் ஒரிஜினல் பிரெஞ்சு இதழே வெளியாகிறது ! So அவர்களுக்கு முன்பாய் ஜூன் 1-ம் தேதியே நண்பர் XIII -ஐ களமிறக்குவது அபத்தமாயிருக்கும் என்பதால் அடக்கி வாசிக்கிறோம்! 
  • காந்தக் கண்ணழகி பெட்டி பார்னோவ்ஸ்கி-யின் பிரெஞ்சு ஆல்பம் இன்னொரு சுற்று அங்கே அச்சாகிறதாம் !! நாமும் அந்தக் கூட்டத்தில் இணைந்து கொடி பிடிப்போமா  ? 
  • லக்கி லூக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ரூ பகுதியாய் - "லக்கியைப் போட்டுத் தள்ளியது யார் ?" என்றதொரு கிராபிக் நாவல் (!!!) தயாராகி அழகாய் விற்பனையாகி வருகிறதாம் !! கி.நா. ஜோதிக்கு லக்கியை தீப்பந்தம் ஏந்தச் செய்யலாமா ? உங்கள் எண்ணங்கள் பிளீஸ் ?
  • மும்மூர்த்திகளின் காதல் நம்மில் ஒருசாராருக்கு மாத்திரமன்றி - அக்கட தேசத்திலும் அதன் மீதான பிரேமம் இன்னும் சிலருள் விடாப்பிடியாய்த் தொடர்வது உண்டு ! என்றோ ஒரு மாமாங்கத்தில் நாம் மலையாளத்தில் வெளியிட்ட பாம்புத் தீவு ("சர்ப்பத் தீவு " in malayalam ) & FLIGHT 731 இதழ்கள் மீது தீராக் காதல் கொண்ட வாசகரொருவர் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி எழுதுவதை ஒரு hobby யாகக் கொண்டவர் ! இதோ சமீபமாய் மாத்ருபூமி செய்தித்தாளிலும், இன்னொரு வார இதழிலும் து தொடர்பை வெளியாகியுள்ள கட்டுரைகள் !! குருவயூரப்பா !!!  விடாப்பிடியான ஆர்வத்துக்கு நன்றிகள் திரு.நாராயண் இராதாகிருஷ்ணன் சார் !! 


மீண்டும் சந்திப்போம் folks...! Have a great Sunday !! And நாளைக்கு வாக்குப் பதிவு செய்ய மறந்திடாதீர்கள் !! Bye for now !!

Wednesday, May 11, 2016

தேவை : Author -களின் சேவை !!

நண்பர்களே, 

வணக்கம். கடந்த பதிவு load more பொதிக்குள் சிக்கிக் கிடப்பதாலும்  ; காத்திருக்கும் நமது மின்னும் மரண நாயகரின் ஸ்பெஷல் இதழின் காலியான பக்கங்களை ரொப்பிட வேண்டியுள்ள அவசியத்தை / அவசரத்தை  உங்களுக்கு நினைவூட்டும் பொருட்டும் - இதொவொரு மினி ; quickie பதிவு !! 

இன்னமும் "என் பெயர் டைகர்" இதழினில் அந்த 3 பக்கங்களை நிரப்பிட உங்கள் ஒத்தாசை எனக்குத் தேவைப்படுகிறது  folks !! அது பற்றி எனக்குத் தோன்றியதொரு மகா சிந்தனை இதோ : 

என்றோ-எங்கோ- உலக வரைபடத்தின் ஒரு தூரத்துக் கோடியில் வசித்த இந்த வன்மேற்கின் கௌபாய்கள் மீது நமக்கு இத்தனை லயிப்பு நேர்ந்திடக் காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? எவ்வளவோ genre -கள் இருப்பினும், கௌபாய் தொடர்களை நாம் விடாப்பிடியாய் ஆராதிப்பதற்கு காரணங்கள் என்ன ? உங்கள் பார்வைகளில் இங்கே கொஞ்சம் அலசத் தயாரா ? இது பற்றி சில பல ஆண்டுகளுக்கு முன்பாய் இங்கே நாம் நிறைய பட்டிமன்றங்கள் நடத்தியது நினைவுள்ளது ; but சமீப ஆண்டுகளில் கௌபாய் quota உச்சத்தைப் பிடித்து வரும் நிலையில் - இது பற்றி இன்னும் கொஞ்சம் in depth சென்று பார்ப்போமா மறுபடியும் ? 

சுவாரஸ்யமான சமாச்சாரமாய் இது உருப்பெற்றால் - இதனையே இதழின் காலிப் பக்கங்களில் பயன்படுத்திக் கொள்வேனே ? WILD WEST COLLECTION என்று வெளியாகவுள்ள இந்த இதழில் வேறு சுலபமான கார்ட்டூன் filler pages போடுவது பொருத்தமாயிராது என்பதால் - இந்த முயற்சி எடுபடுமா என்று தான் பார்ப்போமே ? நாமெல்லாமே author -கள்  ஆகிட இதொவொரு வாய்ப்பு !! Give it a shot pardners ? 

And இதோ - நமது முயற்சிகளுள் இன்னொரு அட்டைப்பட preview !! கவனிக்க : இதுதான் நாம் பயன்படுத்தப் போகும் ராப்பர் என்று கருதிடல் வேண்டாம் ! முயற்சிகளுள் இதுவொரு விதம் என்பதைக் காட்டவே இங்கே upload செய்துள்ளேன் ! Bye all ! See you around !

ஞாயிறு வரையிலும் புதிய பதிவை எதிர்பார்த்திராத நண்பர்களுக்கும் இது பற்றிக் காதில் போட்டு உதவிடுங்களேன் folks ? And - மே மாத review -களையும்  இங்கே  தொடரலாமே !

Sunday, May 08, 2016

திசையெங்கும் காமிக்ஸ்...!

நண்பர்களே,
            
வணக்கம். இந்தாண்டில் முதன்முறையாக ஒளிவட்டத்தின் வெளிச்சத்தைப் பங்குபோடுவதில் இரவுக் கழுகாருக்கொரு போட்டி எழுந்துள்ளதை மே மாத இதழ்களும், அவற்றிற்கான உங்களது விமர்சனங்களும் சுட்டிக் காட்டுகின்றன! இதுவரையிலும் – ‘வந்தார்-வென்றார்‘ என்று கோப்பையை டெக்ஸ் வில்லர் பிடிவாதமாய்ப் பிடித்திருக்க; மீசைக்காரர் ஷெல்டன் இந்தத் தடவை கணிசமானதொரு போட்டியைத் தந்து வருகிறார்! ‘தல‘ ஒரு மினி version-ல் தான் களம் கண்டுள்ளார் என்பதொரு காரணமாக இருந்தாலும்- கூட – ஷெல்டனின் “பாலைவனத்தில் பணயக்கைதி“ கதாசிரியர் வான் ஹாம்மேவின் ஆற்றலுக்கொரு ட்ரைலர் என்று சொல்லலாம்! And மிரளச் செய்யும் ஓவியங்களும் வான் ஹாம்மேவுக்குத் தோள் தரும் போது அந்தக் கதையும்; தொடரும் சூப்பர் ஹிட்டாவதில் வியப்பில்லை! ஷெல்டனின் தொடரில் எஞ்சியிருக்கும் 2 புதுக் கதைகளுமே வான் ஹாம்மே கைவண்ணங்களே & அந்த இரு கதைகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளும் நம்மிடம் தயாராக உள்ளன என்பதால் சமீபமாய் அவற்றை மேலோட்டமாய் படிக்க முடிந்தது! Trust me folks – இன்னுமிரண்டு லட்சுமி வெடிகள் காத்துள்ளன! துரதிர்ஷ்டமாய் அந்த இரண்டோடு ஷெல்டனுக்கு adieu சொல்லத் தான் வேண்டும் – தொடரே இத்தோடு நிறைவு பெறுவதால்! So இருக்கும் வரையிலும் ஷெல்டனை ரசித்துக் கொள்வோமா?

மே மாத ஸ்பாட்லைட்டை வேறொரு கோணத்தில் பகிர்ந்து கொள்வது நமது நீலப் பொடியர்கள் தான்! லக்கி லூக்; மதியில்லா மந்திரி; ஆர்டின்-டாக்புல் போல நிலையான மத்திய நாயகர்கள் எவருமின்றி இந்த ஸ்மர்ப்ஸ் பொடியர்கள் ஒட்டுமொத்தமாய் வலம் வந்து மகிழ்வூட்டும் பாணி நம்முள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளதாய் நான் நினைத்திடவில்லை! “அட... இது ரொம்பவே குட்டீஸ் சமாச்சாரமே!“ என்று ஒருசாரார் தலையைச் சொரிவது புரியாதில்லை எனக்கு! ஆனால் சற்றே அவகாசம் கொடுத்தால் இந்த ஸ்மர்ப்ஸ் மாயாஜாலத்தினுள் அவர்களும் ஐக்கியமாகிடாது போக மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை எனக்கு!
இம்மாத டெக்ஸ் சாகஸமான “டாக்டர் டெக்ஸ்“ – நீளத்தில் பெரிதில்லை; உலகை உலுக்கும் கதைக்களமும் கொண்டதில்லை என்பதை நாமறிவோம்! ஆனால் அதையும் மீறி- டெக்ஸின் அக்மார்க் அதிரடி ஃபார்முலாவில் படபடவென்று பொரிந்து தள்ளியுள்ள கதையிது என்பதில் சந்தேகமேது? And இந்த இதழுக்கொரு சின்ன speciality உண்டென்று நான் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்! அதை அறிவிக்கும் நேரமும் வந்தாயிற்று! வாசக நண்பர்களின் பங்களிப்புகளை அட்டைப்படச் சித்திர அமைப்புகளுக்கும்; proof reading-களுக்கும் கோரியிருந்தது போலவே மொழிபெயர்ப்பின் களத்திற்கும் நாம் கோரியிருந்தது நினைவிருக்கலாம். விண்ணப்பித்திருந்த வெகு சில நண்பர்களுள்- செம ஸ்பீடாய்; செம ஆர்வமாய் பணியை முடித்தனுப்பியவர் ஒருவர்! அவர் மொழிபெயர்த்துள்ள கதை தான் இம்மாத “டாக்டர் டெக்ஸ்”! And அந்த முயற்சிக்குச் சொந்தக்காரர் நண்பர் ஆதி தாமிரா தான்!! எப்போதுமே தனித்துவமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான நண்பர் ஆதி- வாசக மொழிபெயர்ப்பில் உருவான முதல் முழுநீள இதழினில் பங்கெடுத்த பெருமைக்குச்(?!!) சொந்தக்காரர் ஆகிறார் !  அவரது மொழிபெயர்ப்பில் சொற்பமான நோண்டல்களை நான் செய்துள்ளேன்- நாம் பழகிப் போய் விட்ட “டெக்ஸ் பாணி” தொடர்ந்திடும் பொருட்டு ! Given a choice – மாற்றங்களின்றி அவரது ஒரிஜினல் நடையையே 100% பயன்படுத்தியிருக்கலாம் தான்! ஆனால் wholesale மாற்றங்களை ‘ஏக் தம்மில்‘ ஏற்றுக் கொள்ள நாம் தயாராகும் வரை இந்தக் “கூட்டணிப் பேனா” பாணியைத் தொடர்வது தேவலை என்று நினைத்தேன்! Of course- ‘extra நம்பர் போடச் சொல்லிக் கேட்டேனா நான்?‘ என்ற  விமர்சனம் எழக் கூடுமென்பதொ; ‘அவரை எழுதச் சொல்லி விட்டு- அப்புறமாய் அதனுள் மூக்கை நுழைப்பானேன்?‘ என்ற கேள்விகள் உருவாகிடக் கூடுமென்பதொ தெரியாதில்லை! ஆனால் முட்டையையும் உடைக்காமல், ஆம்லெட்டும் போட்டுப் பார்க்கலாமே என்பதே என் அவா! இதன் சாதக-பாதகங்களை வரும் நாட்கள் எனக்கு உணர்த்தும் என்பதில் துளி ஐயமில்லை! நண்பருக்கு நமது சந்தோஷமான வாழ்த்துக்கள்! "ஆட்டோ ஆதி" - இன்று முதல் "author ஆதி" என்று அன்போடு அறியப்படுவாராக !! நீங்களும் வாழ்த்திட நினைத்தால் சென்னையை நோக்கியும்; சாத்துக்களை சமர்ப்பிக்க நினைத்தால் சிவகாசிச் சீமையை நோக்கியும் குறிவைத்திடக் கோருகிறேன்!

தொடரும் காலங்களில் நண்பர்களின் பங்களிப்புகள் இன்னமும் கூடுதலாயிருக்குமொரு சூழல் தவிர்க்க இயலாததாகிடும் என்பதே எனது கணிப்பு! பொதுவாக நமது பணிகளின் சங்கிலித் தொடரில்- பேனா பிடிக்கும் என்னையும் திரு.கருணையானந்தம் அவர்களையும் தவிர்த்து- பாக்கி எல்லோருமே காமிக்ஸ் ஆர்வலர்களல்ல! அவர்கள் அனைவருக்குமே இதுவொரு பணி மாத்திரமே! So சில தருணங்களில் காமிக்ஸ் சார்ந்த உணர்வுகள் கொணரக் கூடிய finer results – நம்மவர்களுக்குச் சாத்தியமாவதில்லை! காமிக்ஸ் வாசிப்பிலும், ரசனைகளிலும் ஊறித் திளைத்த நண்பர்கள் சிறுகச் சிறுக உதவிட வாய்ப்புகள் புலர நாம் அனுமதித்தால் – அதன் பலன் நம் அனைவருக்குமே என்பதில் நான் திட நம்பிக்கை கொண்டிருக்கிறேன்! துவக்கத்தில் மாற்றங்களை ஜீரணிக்க நம்முள் ஒரு சாராருக்குச் சிரமமாகத் தோன்றிடலாம் தான்; ஆனால் பழகப் பழக எல்லாமே சரியாகிடாதா? அதற்காக ஒட்டுமொத்தமாய் நான் எழுதுவதிலிருந்து VRS வாங்கிக் கொள்ளப் போகிறேன் என்றோ; ‘ஓசியில் மாவாட்ட ஆள் தேடுகிறேன்‘ என்றோ அர்த்தம் எடுத்துக் கொள்ளத் தேவையிராது! எழுதாமல் இருந்தால் என் பொழுதுகள் விடிந்திடவும் செய்யாது; (உரிய) சன்மானங்களின்றி நண்பர்களை பணி செய்திட நாம் கோரப் போவதும் கிடையாது! So- இந்தச் சிறு ‘மாற்று சிந்தனை‘ பற்றிய உங்கள் எண்ணங்களை அறிந்திட ஆவலாயிருப்பேன்!

Looking ahead – அடுத்த 4 மாதங்களுக்கு 4 பெருநகரப் புத்தக விழாக்கள் வரிசை கட்டி நிற்கின்றன! அங்கெல்லாம் நமக்கு நுழைவு சாத்தியமாயின் இந்தாண்டின் கையிருப்புச் சுமைகளில் ஒரு பகுதியையாவது இறக்கி வைத்த நிம்மதி கிடைக்கும்! நம்பிக்கையோடு விண்ணப்பித்துள்ளோம்! மே 20-ம் தேதிக்கு சென்னையின் நிலவரம் நமக்குத் தெரிந்திடும்! ஸ்டால் உறுதியாயின் ஜுன் 4 & 5 தேதிகளில் உங்களைச் சந்திக்க ஆவலாய்க் காத்திருப்போம்! Absolute Classics பற்றி; தோர்கல் பற்றி; MMS பற்றி ; தொடரும் ஆண்டின் தேர்வுகள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை நேரில் தெரிந்து கொள்ள இதனையொரு வாய்ப்பாகப் பார்த்திடுகிறேன்.......! 

என்னதான் பத்தி பத்தியாய் இங்கே நான் எழுதினாலும் கூட; இந்தத் தொலைவிலிருந்து உரையாடும் முறையானது ஒரு சிலருக்கு சஞ்சலங்களைத் தருவதே வழக்கமாகிப் போகிறது என்பது மூடாக்குப் போடா ரகசியம் தானே? சொல்லப்படும் கருத்துக்களுக்கு நான் செவி சாய்க்காது போயின் அது காயங்களை ஏற்படுத்துவதும்; ஏதேனும் எதிர்கருத்துக்கு நான் யதேச்சையாய் உடன்பாடு தெரிவித்தால் அதன் பொருட்டு உஷ்ணங்கள் உருவாவதும் இந்த நாலரை ஆண்டுகளில் எனக்குப் புதிதல்ல தான்! ஆனால் ஒவ்வொரு முறையும் இவை நிகழும் போது நான் இழக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணி சங்கடமான உணர்வுகளைத் தவிர்க்க இயலவில்லை! நானிருப்பது கண்ணாடிக் கூண்டினுள் எனும் போது- உங்களின் சில மனவருத்தங்களின் பின்னணிக் காரணங்களை நான் அறிந்திருந்தாலும் அவை பற்றி எழுதுதல் சாத்தியமாவதில்லை! தவிர, வெப்பத்துக்கு வெப்பமே பதில் என்ற சிந்தனையிலும் உடன்பாடில்லை எனக்கு! வாட்சப்பில் சேதியனுப்பி விட்டு அதற்கு நான் பதில் தராவிட்டால் சங்கடப்படுவது; “இதை இப்படிச் செய்யுங்கள்- விற்பனை கூடும்; அதை அப்படி அமையுங்கள்- சிறப்பாக வரும்” என்ற அறிவுரை மின்னஞ்சல்களை நான் நடைமுறைப்படுத்தாவிட்டால் நெற்றிக்கண் திறப்பதெல்லாம் நமது இந்த இரண்டாவது இன்னிங்ஸின் பிரத்யேக அனுபவங்கள் எனக்கு! நண்பர்களின் நல்லெண்ணங்களைப் புரிந்திடாதோ; அவற்றை உதாசீனப்படுத்தும் எண்ணத்தோடோ செயல்படுவது எனது நோக்கங்களாகாது! ஆனால் ஒரு நாளில் விழித்திருக்கும் அத்தனை மணி நேரங்களும் நானொரு எடிட்டராக வலம் வர வாய்ப்பில்லை என்பதை பல வேளைகளில் நண்பர்கள் புரிந்து கொள்வதில்லை! நாளொன்றுக்கு மிஷினரி தொடர்பான நமது வியாபாரத்தில் 150-க்கும் குறையாத மிஷின்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் உள்நாட்டு / வெளிநாட்டு / வியாபாரிகளிடமிருந்து வந்து குவிந்து கிடக்கும் எனது வாட்சப்பில்! அவற்றைப் பேன் பார்த்துப் பதில் போடுவதிலேயே என் முன்வழுக்கை முன்னேறி விடுகிறது; இதனில் தமிழில் டைப் செய்து நண்பர்கள் அனுப்பும் காமிக்ஸ் சேதிகளுக்கு நானும் போனிலேயே transliteration தளத்தைத் தேடிப் பிடித்து, தமிழில் பதில் டைப் செய்து அனுப்ப ‘தம்‘ திரட்டுவது எஃகணம்? ‘பதிலளிக்க முனைய மாட்டேன்கிறான்; மண்டைக்கனம் கூடிவிட்டது‘ என்பதே மறுகணத்துத் தீர்ப்பாகிப் போகிறது! உங்களை மதிக்காத சிந்தனைகள் ஒரு நாளும் என்னுள் கிடையாது folks; ஆனால் அதே சமயம் நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்திலேயோ; பாணியிலேயோ; ரீதியிலேயோ எனது சிந்தனைகள் இருந்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சரி தானா? And வாழ்க்கையே காமிக்ஸ் என்றான பின்னே எனக்கென  ஒவ்வொரு விஷயத்திலும் இருந்திடும் அணுகுமுறையை நான் பின்பற்ற நினைப்பது தவறாகிடுமா ? நிச்சயமாய் யோசனைகள் கேட்பேன் தான் ; ஆனால் பகிரப்படும்  ஒவ்வொரு யோசனையும் நடைமுறை கண்டிடா பட்சத்தில் நானொரு  விரோதியாய் பரிணாம வளர்ச்சி காண்பது தானே நடைமுறையாகி வருகிறது - ஒவ்வொரு வாட்சப்  குழுமத்தின் குமுறல்களிலும் ? 

எது எவ்விதமிருப்பினும்- அவரவர் பார்வைகளில் அவரவர் சிந்தனைகளின் நியாயம் தூக்கலாய் தெரியுமென்பதை நான் மறுப்பதற்கில்லை! நண்பர் மகேந்திரன் பரமசிவம் பதிவிட்டிருந்தது போல - நீதி ஒன்றாய் இருப்பினும், நியாயம் ஆளுக்கு ஆள் மாறுபட்டுத் தெரிந்திடுவது இயல்பே என்பதை ஏற்றுக் கொள்கிறேன்  ! சிவகாசி வெயிலில் உரமேறிய என் சருமத்துக்கு சில காயங்கள் மிகையாய் தெரியாது போகலாம்தான்; ஆனால் நண்பர்களும் மனதளவில் அடைந்திருக்கக்கூடிய காயங்களை அதே பாணியில் சகித்துக் கொண்டு விடுவார்களென நான் எதிர்பார்ப்பது தவறே  ! End of the day- இந்தக் காமிக்ஸ் பயணமும் சரி; இந்த வலைப்பதிவின் படலமும் சரி- சந்தோஷத்தை விதைப்பதையே குறிக்கோளாய் கொண்டதெனும் போது- இடையிடையே நேரும் இது போன்ற சங்கடங்கள்- நோக்கத்தில் தோல்வி கண்டவர்களாக்குகிறது நம்மை! காரணங்கள் எவையாக இருப்பினும் – காயங்களுக்குக் காரணகர்த்தா நானே என்ற முறையில் my sincere apologies folks! ‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை‘ என்பதே நமது தேடல்! அந்தப் புன்னகைகள் தொலைந்து போகத் தெரிந்தோ- தெரியாமலோ நானே காரணியாகப் போகும் வேளையில் மன்னிப்புக் கோருவதில் எனக்குக் கூச்சமில்லை! இப்போதோ - எப்போதோ எனது அஜாக்கிரதைகளால் காயப்பட்ட எல்லா நண்பர்களிடமும் எனது மன்னிப்புகளைச் சொல்லிக் கொள்கிறேனே !  எல்லாம் கடந்த பின்னே சந்தா ABCDEFGH நினைவிருக்காது; இங்கோ-எங்கோ நேர்ந்த உரசல்கள் மறந்திருக்கும்; எப்போதோ யாராலோ ஏற்பட்ட காயங்கள் ஆறிப் போயிருக்கும்! ஆனால் எஞ்சி நிற்கப் போவது காமிக்ஸ் மீதான நேசமும்; இங்கே அறுவடை செய்திருக்கக் கூடிய நட்பும் மாத்திரமே! அதனைத் தொலைத்திடாது தொடர இயன்றால்  நிச்சயம் மகிழ்வேன் ! ஒரேயொரு சன்னமான வேண்டுகோள் மட்டும்  guys! காரணமிருந்தால் உதையுங்கள் - வேண்டாமென்று சொல்லவில்லை ; ஆனால் உதைப்பதற்கென்றே காரணம் தேட வேண்டாமே- ப்ளீஸ்? 

சரி....இந்த சென்டிமெண்ட் படலத்தை ஓரம்கட்டிவிட்டு ஜாலியான விஷயங்கள் பக்கமாய் நம் பார்வைகளைத் திருப்புவோமா ? 

சாத்துக்கள் வாங்கிய நேரம் போக  எஞ்சியிருக்கும் வேளைகளில் புதுசு புதுசாய் கதைகளை ; தொடர்களை வாசிக்க ஆனமட்டிலும் முயற்சித்து வருகிறேன் ! One shot கதைகளாய் சமீபமாய்ப் படித்து வந்ததுள் ஒரு மெல்லிய ரொமான்ஸ் + ஆக்ஷன் கதை கொஞ்சம் வித்தியாசமாய்த் தோன்றியது ! இரண்டாம் உலக யுத்தப் பின்னணி.... நேசநாட்டுப் படைகளின் சிப்பாய் ஒருவன் மரணத்துக்கு 'டேக்கா' கொடுத்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்புகிறான் ! ஆனால் அவனோ மாண்டு விட்டானென்ற நம்பிக்கையில் அவனைச் சுற்றியுள்ள உலகம் சலனமின்றிச் சுழன்று வருகிறது ! மறைவிலிருந்து தனது இறுதி ஊர்வலத்தையே பார்க்கிறான் பயல் ; அழகான தனது காதலி இன்னொருவனுடன் நட்பாய் இருப்பதைப் பார்க்கிறான் ! சுற்றிச் சுழன்று செல்லும் அவனது இந்த அரூப வாழ்க்கையில் - காதலி திரும்பவும் இடம்  பிடித்தாளா ?போட்டியாய்த் தலைதூக்கியிருந்த புதியவன் என்னவானான் ? ஒரு தேசமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் யுத்தப் பின்னணியிலும் - காதல் சாத்தியம்தானா ? அவசியமாகிடும் போது சராசரி மனிதர்கள் எடுக்கக்கூடிய அவதாரங்கள்தான் என்ன ? என்று இந்தக் கதை அழகான சித்திரங்களோடு சொல்கிறது ! யௌவனமான யுவதி ஒருத்தி தான் இந்தக் கதையின் மையப் புள்ளி ! நிஜ வாழ்க்கையில் ஓவியரின் காதலி நிச்சயமாய் ஒரு பேரழகியாய் இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் - simply becos கதை நெடுகிலும் ஓவியர் காட்டிடும் மெனக்கெடலில் காதல் கொப்பளிக்கிறது! இங்கே 'டமால்-டுமீல்' என்று சுட்டுச் சுட்டு விளையாடும் குதிரைப்பையன்கள் கிடையாது ; என்னைப் 'பன்ச் டயலாக் பரமசிவம்' அவதாரம் எடுக்கச் செய்யும் கதைக்களமே இல்லை ; மர்மத்தை முடிச்சவிழ்க்கும் டிடெக்டிவ் நாயகர்கள் கிடையாது ; பேய்-பிசாசு-ஆவி-என்ற அமானுஷ்ய ஐட்டங்களும் கிடையாது தான் ! ஆனால் மெல்லிய மனித உணர்வுகள் ; யுத்தம் எனும் கோரம் நிகழும் தருணங்களில் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என சலசலத்துச் செல்லும் ஒரு down to earth கதையிது ! "ஐயகோ..இப்போவரைக்கும் நல்லத் தானே போய்க்கிட்டிருக்கு? மறுபடியும் கி.நா.படலமா ? என சிலபல மிரட்சி தோய்ந்த குரல்கள் இப்போதே ஒலிக்கக்கூடும் என்பதும் அப்பட்டமே ! ஆனால் இந்தக் கதையை நான் 'டிக்' செய்து விட்டேனென்றோ ; இது சீக்கிரமே வந்தே தீருமேன்றோ நான் சொல்ல வரவில்லை ; 'படித்ததில் - பிடித்தது என்ற ரீதியிலான பகிர்தலாய்க் கருதிடுங்களேன் - இப்போதைக்கு ! 

"மாறுபட்ட வாசிப்புகள்" என்ற ரீதியில் இதுவொரு அழகான களமாக இருக்கலாம்தான் ; அல்லது disappointing ஆகவும் அமைந்திடலாம்தான் ! இந்தாண்டின் commercial பார்முலாவுக்குள் புகுந்தான பின்னே - இதுபோன்ற பரீட்சார்த்த முயற்சிகளை நிறையவே தயக்கத்தோடு பார்த்திட நேர்கிறது ! நிஜத்தைச் சொல்வதானால் - சிப்பாயின் சுவடுகளையும் ; கிரீன் மேனர்களையும் வெளியிட்ட 2014-ல் இது என் கண்ணில்  பட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் இந்நேரத்துக்கு அறிவிப்பாய் பொங்கியிருக்கும் ! But மொத்து வாங்கிய முதுகு இப்போதெல்லாம் சற்றே தயங்குகிறது ! Anyways நேரில் சந்திக்கும் அடுத்த தருணத்தில் இது பற்றிப் பேசுவோமே !

எனது வாசிப்புப் படலத்தில் ஒரு தெறிக்கும் ஆக்ஷன் one shot கூடச் சிக்கியுள்ளது என்பேன் ! If all goes well - நமது MMS இதழுக்கான கதையே இதுதான் என்று கூடச் சொல்லுவேன் !  ரணகள ஆக்ஷன் ; கண்சிமிட்டும் பட்டாம்பூச்சிகள் ; ஆழமான mature கதைக்களம் ; மிரட்டலான artwork + வர்ணங்கள் என இதுவொரு அதிரடி package ! கதையை வரவழைத்து - செலவாயினும் பரவாயில்லை - முழுமையாய் மொழிபெயர்த்துத் தாருங்களேன் எனக் கோரியுள்ளேன் ! ஆங்கில ஸ்கிரிப்ட் என் கைக்குக் கிடைத்த ஓரிரு நாட்களுள் இது பற்றியொரு தீர்மானம் எடுத்து விடுவேன் ! தகிக்கச் செய்யும் action thriller ! கதை நமக்கு ஒ.கே. எனில் - அதன் உரிமைகளைப் பெற்றிடுவதில் பெரியதொரு சிரமம் இருந்திடாது தான் !! Fingers crossed !!

வாசிப்பின் இன்னொரு phase-ல் எதிர்காலம் சார்ந்ததொரு கதைத்தொடருக்குள்ளும் மூழ்கிட வாய்ப்புக் கிட்டியது! தொடரின் வெவ்வேறு பாகங்களை வரவழைத்து - கதைச்சுருக்கங்கள் பெற்றுக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிசீலித்து வருகிறேன் ! இதுவரையிலுமான மதிப்பிடலில் எனது கோழிமுட்டைக் கண்கள் அகலமாய் விரிந்து நிற்கின்றன ! அசாத்தியக் கதைப் பின்னணி ; அட்டகாச ஸ்கிரிப்ட் + சித்திரங்கள் என இதுவொரு செம வித்தியாசமான கதைவரிசை என்பதில் துளியும் சந்தேகமில்லை ! கதைக்கு thumbs up தந்துவிட்டால் - அதன்பின்னே உரிமைகளின் பொருட்டு நிறையவே பிரயத்தனங்கள் அவசியமாகிடும் - இந்தப் பதிப்பகத்தோடு நாம் தொடர்பில் இல்லை என்பதால் ! ஆனால் குட்டிக் கரணம் அடித்தாவது உரிமைகளை வாங்கிவிட முடியுமென்ற நம்பிக்கையில் என் தலைக்குள் தறி கேட்டு ஓடும் குதிரைகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சித்து வருகிறேன் !  
கிடைக்கும் நேரங்களை  நடப்புப் பணிகளின் பொருட்டே முழுவதுமாய் செலவிட மனமின்றி - இங்கும் அங்குமாய் குற்றாலத்துக் குரங்கு போல் தாவி வருகிறேன் ! இருபத்தைந்து கதைகளுக்குள் தலை நுழைத்தால் , அதிர்ஷ்டம் இருப்பின் ஒன்று தேறுகிறது ! So ஒருபக்கம் ரின்டின் பெருந்தகையோடு லூட்டி அடித்துக் கொண்டே ; இன்னொரு பக்கம் டைகரின் அச்சுப் பணிகளை ரசித்துக் கொண்டே ...பிறிதொரு பக்கம் முத்து மினி காமிக்ஸின் மேற்பார்வையில் செலவாகிடும் நேரங்களையும் சிக்கனமாய் அமைத்துக் கொண்டே இந்தத் தேடல்களுக்குள் ஜாலியாய் புகுந்து வருகிறேன் ! தொடரும் 2 நாட்கள் எங்கள் ஊரின் இரண்டாவது அம்மன் திருவிழாவினை முன்னிட்டு விடுமுறைகள் என்பதால் - மேஜை நிறைய print-outs & லேப்டாப் முழுக்க டிஜிட்டல் பைல்களோடு குஜாலாய் குப்பைகொட்டத் தயாராகி வருகிறேன் ! திங்கட்கிழமை நமக்கு விடுமுறை என்பதால் அன்றைக்கு நம் அலுவலகத்தில் போன் எடுக்க ஆளிராது ; so செவ்வாய் வரை பொறுமை ப்ளீஸ் !  

அப்புறம் முத்து மினி காமிக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங் இப்போது தயார் ! முன்பதிவு செய்திட எண்ணும் நண்பர்கள் இங்கே கிளிக் செய்திடலாம் : http://lioncomics.in/all-available-comics/20951-muthu-mini-comics-6-books-advance-booking.html

இன்னொரு குஷியான சேதியும் கூட ! நமது ஆங்கில CINEBOOK காமிக்ஸ் பிரதிகள் சிறுகச் சிறுக வெளிமாநில வாசகர்களை நமக்கு ஈட்டித் தந்து வருகிறது ! அங்கேயும் லக்கி லூக் தான் டாப்பில் உள்ளார் விற்பனையில் !! Followed by BLAKE & MORTIMER !!! லக்கியின் விற்பனையில் ஆச்சர்யமில்லை எனினும், Black & Mortimer are the surprise package !! இங்கே பாருங்களேன் - ஆங்கில காமிக்ஸ் பட்டியலுக்கு : http://comics4all.in/2850-english-comics

மீண்டும் சந்திப்போம் folks !! See you around soon! Bye for now!

P.S : "என் பெயர் டைகர்" இதழினில் 3 பக்கங்கள் காலியாக உள்ளன ; ட்ஷி-ந.பா.வின் பெருமைகளைச் சொல்லும் துணுக்குச் செய்திகளாலோ ; சித்திரங்களாலோ ; உங்கள் விமர்சனங்கலாலோ நிரப்பிடலாம் ! So உங்கள் பங்களிப்புகள் அவசரமாய்க் கோரப்படுகின்றன folks ! உங்கள் முயற்சிகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிடலாமே ?

Wednesday, May 04, 2016

Yin & Yang !

நண்பர்களே,

வணக்கம். அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள பொழுதில், நம் பக்கமும் அந்தத் தாக்கம் இல்லாது போனால் சரியாகாது தானே ? அதன் பொருட்டு இங்கேயும் வெப்பமான சில பல பின்னூட்டங்கள் பதிவாகியிருப்பதில் வியப்பேது ?
  • இலவச இணைப்பு - 
  • அதற்கொரு விலை - 
  • சந்தாதாரர்களுக்கு மட்டுமே -
  • சந்தாவுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு- 
  • நிழல் 1 நிஜம் 2- 

என்ற சமாச்சாரங்கள் நிச்சயமாய் இருவித விமர்சனங்களை ஈட்டித் தருமென்பதை நான் முன்கூட்டியே எதிர்பார்த்தேன் தான் எனும் போது இன்றைய உஷ்ணங்கள் எனக்குப் பெரியதொரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திடவில்லை ! நாலரை ஆண்டுகளாய் இங்கேயும், இதர தளங்களிலும் எண்ணற்ற முறைகள் எதெதற்கோ சாத்துக்கள் வாங்கிய முதுகும், மண்டையும், இதைக் கூட யூகித்திராதா போகும் ? தலைக்கு மேலே மெய்யாகவே ஓராயிரம் பக்கங்களின் பணி காத்துக் கிடக்கும் வேளையில் நானிங்கு வரிக்கு வரி பதில்களும், என்தரப்பு விளக்கங்களையும் சமர்ப்பிக்கும் வேலைக்குள்ளே இப்போது இறங்கினால் புது இதழ்கள் கரைசேரப் போவதில்லை என்பதாலும் ; இப்போதைய focus மே மாத இதழ்களின் மீதிருத்தாலே நியாயம் என்பதாலும் சுருக்கமாய் இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன் folks !

வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் YIN & YANG இருக்குமென்மதை லார்கோவின் புண்ணியத்தில் தெரிந்து கொண்டோம் ! So நான் நினைத்திருந்தது YIN என்றால் - எதிர்சிந்தனை YANG ! Simple as that ! சந்தாவில் உள்ள நண்பர்களுக்கு டி-ஷர்ட்நிழல் 1 ; நிஜம் 2 இதழ்  + நியூஸ்பேப்பர் பாணியிலான மேகசின் மாத்திரமே நாம் (இதுவரையிலும்) கூடுதலாய் அறிவித்திருந்த சலுகைகள். அந்த மேகசினை வாசிக்க எண்ணும் சந்தாவில் அல்லாத நண்பர்களின் பொருட்டு அதனை நமது ப்ளாக்கிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளும் வசதி செய்து தரலாம் என்பதே எனது திட்டமிடலாய் இருந்தது ! இதனில் கதைகள் ஏதும் இராதே - so பேப்பராய்ப் படித்தாலும் சரி ; ஆன்லைனில் படித்தாலும் சரி - பெரியதொரு வேறுபாடு தோன்றாதே! என்ற எண்ணமே எனக்குள் இருந்தது ! And இத்தாலியில் போனெல்லி மாதா மாதம் ஒரு மேகசின் இலவசமாய்த் தருவதாயும் ; "அது இப்படியா - துக்கடாவாய் இருக்கும் ?" என்றதொரு கேள்வியையும்  பின்னூட்டங்களுக்குள் எங்கோ வாசித்த நினைவுள்ளது ! சிம்பிள் விடை - அது இப்படியே இராது தான் ! Simply becos அது முழுக்க முழுக்கவொரு ஆன்லைன் பத்திரிகை மாத்திரமே ! அவ்வப்போது தயாராகிடும் இதனை விரும்பிடும் வாசகர்கள் டவுன்லோட் செய்து வாசித்துக் கொள்ளலாம் ! 

தற்போதைய "லயன் மினி" - சமீபமாய் 1988-ன் ஹாலிடே ஸ்பெஷல் இதழைப் புரட்டிக் கொண்டிருந்த போது எனக்குள் தோன்றிய சன்னமான ஆசையின் பிரதிபலிப்பு மாத்திரமே ! முக்கியமாய் BLACK & WHITE பக்கங்களுக்கு நம்மவர்களின் வர்ணம் சேர்க்கும் பணிகள் எவ்விதம் தேறியுள்ளன என்பதைப் பார்க்கவொரு வாய்ப்பாகவும் இதை நான் நினைத்திருந்தேன். இதனை அச்சில் பார்த்த சீனியர் எடிட்டர் - "அழகாக உள்ளதே ; புத்தக விழாக்களில் வரும் சிறுவர்களுக்கு விற்பனை செய்திட நன்றாக இருக்குமே !" என்று சொன்ன போது - அதுகூட சரியென்றே தோன்றியது. அடுத்த மாதம் முதலாய்  சென்னை ; நெய்வேலி ; ஈரோடு ; மதுரை ; கோவை என தொடராய் புத்தக விழா அட்டவணை பிசியாக இருக்கும் சமயத்தில் நம்மிடம் கைவசம் இது போன்ற சின்ன விலையிலான சமாச்சாரங்கள் இருப்பின் நலமே என்று தோன்றியதால் அதற்கொரு விலை நிர்ணயித்து கூடுதலாய் கொஞ்சம் அச்சிட்டோம். ஏஜெண்ட்கள் வழியாக கடைகளில் வாங்கிடும் வாசகர்களுக்கும் இவற்றை அனுப்பிடலாமா? என நம்மவர்கள் இம்மாத despatch-ன் போது கேட்டிட-சில காலம் முன்பாய் நம் அலுவலகம் வந்திருந்த ஒரு 50 வயதுக் கனவான் தான் நினைவுக்கு வந்தார். இருவித  வர்ணச் சேர்க்கைகளோடு நாம் எப்போதோ தயாரித்திருந்த புக்மார்க்கைப் பத்திரமாய் வைத்திருந்தவர்-"அந்த இன்னொரு புக்மார்க்கும் இருக்கா சார் ?" என்று கூச்சத்தோடு கேட்டார் ! நமது இதழ்களும் ; இதழ் சார்ந்த சின்னச் சின்னப் பொருட்களும் அந்த அளவுக்கு collector's value கொண்டவை என்பதை புரிந்து கொள்ள முடிகின்ற போது - "லயன் மினியோ" ; "மேக்சியோ" - அதற்கு restricted access என்றமைப்பதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை ! So "வாங்கிட ஏஜெண்ட்கள் தயாராக இருப்பின் - இதனையும் அனுப்புங்கள்!" என்று சொன்னேன் ! இதனில் ஏதும் கொலை பாதகம் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை என்பதால், மீண்டுமொருமுறை இம்முயற்சி தொடரும் பட்சம் - இந்த பாணியே தொடரவும் செய்யும் ! 

And இந்த துக்கடா இதழையும் சேர்த்து விற்பதில் நாங்கள் பெரியதொரு கோட்டையைக் கட்டிடப் போவதாக எண்ணும் பட்சத்தில் - வெட்கத்தை விட்டு சின்னதொரு stat மட்டும் சொல்கிறேன் ! சென்னை மாநகரில் 5 வெவ்வேறு விற்பனையாளர்கள் சேர்ந்து விற்பனை செய்வது 90 பிரதிகள் மட்டுமே - ஒவ்வொரு ரகத்திலும் ! இந்தத் தொண்ணூறும் கடனுக்குச் சென்றிடும் பிரதிகளே & இதனில் unsold எடுக்கும் கதைகளும் உண்டு ! இது தான் தலைநகரின் விற்பனை சார்ந்த புள்ளிவிபரம் எனும் போது - மாநிலத்தில் நாம் என்ன சூரத்தனம் செய்து கொண்டிருப்போமென்றும் ; இந்த "மினியை" ஒரு வியாபாரப் பொருளாக்குவதால் நாம் நமதாக்கப் போகும் செஞ்சிக்கோட்டைகளோ - மலைக்கோட்டைகளோ   எத்தனை விசாலமாய் இருக்கக்கூடுமேன்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் !

சந்தாக்களின் சகாயங்களில் தான் நமது சக்கரங்கள் சுழல்கின்றன என்பதில் நம்மில் என்றைக்குமே ஒளிவு-மறைவு இருந்ததில்லை ! சந்தா செலுத்தக்கூடிய நிலையிலுள்ள நண்பர்களின் பங்களிப்பானது  - காமிக்ஸ் எனும் சவலை மழலையைத் தொடர்ந்து ஜீவித்திருக்கச் செய்திடும் பொருட்டே என்பதிலும் எனக்கு மாற்றுச் சிந்தனையில்லை ! உங்களுக்கும் அதனில் நிச்சயம் உடன்பாடிருக்கும் என்ற திட நம்பிக்கையில் தான் நமது நாட்கள் நகன்று வருகின்றன  ! அதே சமயம் சந்தா செலுத்தியுள்ள ஒரே காரணத்தால் - இந்த மாதிரியான சின்னச் சின்ன சமாச்சாரங்கள் சக வாசகர்களை எட்டிடுவது முறையாகாது என்ற ரீதியிலான சிந்தனை உங்களுள் 99%-க்கு இராதென்பதிலும் எனக்கு நம்பிக்கையுண்டு ! 

தனியொருவனின் முடிவே நமது பயணப் பாதை எனும் போது நான் எடுக்கும் தீர்மானங்கள் சரியாகவும் இருக்கலாம் ; இல்லாதும் போகலாம் ! என் ஒருவனின் கைவண்ணமே பெரும்பான்மையான தயாரிப்புகளின் பின்னணி எனும் போது உங்களை வந்து சேரும் இதழ்கள் தரமாகவும் இருந்திடலாம் ; தரமின்றியும் இருந்திடலாம் ! பாதையே விமர்சனத்துக்கு ஆளாகிடும்  போதோ ; தரங்களில் குறை காணப்படும்  போதோ - அவற்றிற்கொரு தீர்வோ ; பதிலோ தேட நான் முயற்சிப்பது இயல்பு !ஆனால் நானே சரியானவனா ? - சரியில்லாதவனா ? தரமானவனா - தரமில்லாதவனா ? என்ற கேள்விகளுக்கு சத்தியமாய் என்னிடம் பதிலும் கிடையாது ; அதன் பொருட்டொரு தேடலும் கிடையாது ! என்றைக்கோ ஒரு மாமாங்கத்தில் - எனது கேபினில் ஒட்டி வைக்க நண்பரொருவர் தந்த ஸ்டிக்கர் நவீனமாக்கப்பட்டுள்ள என் அறையில் இன்றைக்குக்  கிடையாது ;ஆனால் அதன் வாசகம் என்னுள் அகலாது உள்ளது ! So கடமையைச் செய்து கொண்டே எப்போதும் போல் நான் நடை போடுகிறேன் ; படைத்தவர் பலன்களை பார்த்துக் கொள்வாரென்ற நம்பிக்கையோடே ! அந்த பலன்கள்  பரிகாசங்களாய் இருப்பினும், உஷ்ண வார்த்தைகளாய் இருப்பினும், ஊழல்வாதி என்ற செல்லப் பெயர்களாய் இருப்பினும் ; பாராட்டுக்களாய் இருப்பினும் - எல்லாமே divine design தானே ?! So தொடர்ந்து நடை போடுவோம் folks ! 

ஜாலியாய் ஒரு note -ல் பதிவை நிறைவு செய்திடத் தோன்றுவதால் இதோ - "என் பெயர் டைகர்" ராப்பரின் பணிகளின் ஒரு ஆரம்பக் கட்டக் குட்டி preview ! நாங்கள் முயற்சித்த டிசைன்களுள் இதுவும் ஒன்று ! 
 மே மாத இதழ்களைப் பற்றிய விமர்சனங்களை இங்கே தொடர்ந்திடலாமே ? மீண்டும் சந்திப்போம் ! Bye for now !