Sunday, September 27, 2015

எல்லாம் நலமே !

நண்பர்களே,

வணக்கம். பெங்களூரில் ஒரு நண்பர் உண்டு  ; பெரியதொரு பைக் ரசிகர் அவர் ! ஹார்லே டேவிட்சன் எனும் அந்த மொக்கை சைஸ் பைக்கை செல்லப் பிள்ளை போலப் பராமரித்துக் கொண்டு வார இறுதியாகி விட்டால் அதற்கெனப் பிரத்யேகமாய் வாங்கி வைத்திருக்கும் ஒரு கருப்பு லெதர் டிரெஸ்சைப் போட்டுக் கொண்டு 'தட்..தட்..தட்..' என்று அந்த அசுரனை ஒட்டிக் கொண்டு கூர்க் ; கோவா என்று நெடும்பயணம் செல்லும் ஒரு கிளப்பில் அங்கத்தினர் ! வார நாட்களில் பிசியானதொரு தொழில் அதிபராக இருப்பினும், வெள்ளி மதியங்கள் நெருங்கி விட்டாலே இருப்புக் கொள்ளாது தவிக்கத் தொடங்கி விடுவார் ! சீரியசாய் நாம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனைகளோ அங்கே அந்தப் பகாசுர பைக்கின் மேலே தான் லயித்து நிற்கும் ! அவரை ஒரு மாதிரியாய்ப் பார்த்ததனாலோ-என்னவோ, சனி இரவு ஆகும் போதே என் தலைக்குள் எழும் அந்த familiar குறுகுறுப்பை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது !  இல்லாததொரு மைக்செட் திடீரென்று என் முன்னே ஆஜராவதும்  ; எனது வீடிருக்கும் முட்டுச் சந்து மெகா மேடையாய் உருமாறுவதும், அடியேன் குற்றால அருவியாய் சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்றென்று ஆற்றுவதும் விட்டலாச்சார்யா படங்களின் காட்சிகள் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் தலைக்குள் துளிர்விடுவது சமீக காலங்களின் வாடிக்கையாகிப் போய் விட்டது ! So என்ன தான் '3 வாரத்து பிரேக்' என்று நேற்று அறிவித்திருப்பினும், இங்கே சட்டென்று திரும்பியுள்ள வெப்பமின்மையும், சில புரிதல்களும் நமது சாலையை சீக்கிரமே செப்பனிட்டுள்ளது போல் உணரச் செய்தன ! தவிர, நான் ஒரு இடைவெளி விட எண்ணியதும் என் பொருட்டல்ல - தர்க்கத்தில் சிக்கி நின்ற நண்பர்கள் சற்றே cool off செய்திடும் பொருட்டு மட்டுமே எனும் பொழுது எனது எண்ணம் சீக்கிரமே நிறைவேறி விட்டதாய்த் தோன்றிய பிற்பாடு விரதத்தைத் தொடரும் அவசியம் எழவில்லை !  இதை விடவும் சிக்கலான தருணங்களை நம் தளம் பார்த்துள்ளது தான் ; கடுமையாய் விமர்சனங்கள் என்பக்கமாய் வைக்கப்பட்ட பொழுதிலும் normal service தொடரவே செய்துள்ளது இந்த ரூட்டில் ! ஆனால் இம்முறை மோதல் நண்பர்களுக்கு மத்தியினில் என்றதனாலேயே என் சங்கடம் பன்மடங்காகியது ! Anyways - all's well that ends well ! தொடருவோமே எப்போதும் போலவே !  

விலையில் / பக்க நீளத்தில் அக்டோபரின் இதழ்களுள் முதன்மையாய் நின்றிடும் தோர்கலின் "சாகாவரத்தின் சாவி" அட்டைப்பட first look  இதோ !இந்தத் தொடரின் கதைகள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஒரிஜினலாய் வரையப்பட்ட எல்லா ராப்பர்களுமே நமக்கும் tailor made என்று சொல்லலாம் ! So இந்த 2 பாகக் கதையின் தொகுப்புக்கு ஒரிஜினல் அட்டை டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் ! என்ன - இரண்டாவது கதைக்கான டிசைன் கொஞ்சம் ஆக்ஷன் நிறைந்ததாய்த் தோன்றியதால் அதனை முன்னட்டைக்குப் புரமோஷன் தந்துள்ளது மட்டுமே மாற்றம் ! 

கதையின் மொழிபெயர்ப்பு நமது சீனியர் எடிட்டரின் கைவண்ணம் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும் ; அதே போல எடிட்டிங்கின் பொருட்டு கதை # 2-க்குள் நான் நுழையவிருப்பதாகவும் அதே பதிவில் சொல்லியிருந்தேன் ! முதல் பாகம் பெரிதாய்  சிரமங்கள் வைக்காது 'கட..கட..'வென ஓடியதற்கு நேர்மாறாய் இரண்டாம் கதையினில் நிறையவே ஸ்பீடு -பிரேக்கர்கள் தென்பட்டன ! கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பினை மொழிபெயர்ப்பது நிறையவே concentration -ஐ அவசியப்படுத்தும் பணி எனும் பொழுது - பணியின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதனை ஒரே சீராய் தக்க வைப்பது (எழுதும் ) அனுபவம் சார்ந்ததொரு விஷயம் ! முதன்முறையாகப் பேனா பிடிக்கும் அப்பா இத்தனை தூரம் சமாளித்ததே ரொம்பப் பெரிய விஷயம் என்பது புரிந்தது ! So அவசியமாகிடும் இடங்களில் rewrite செய்து இரண்டாம் பாகத்தையும் அழகாய் நிறைவு செய்து அச்சும் 90% முடித்து விட்டோம் ! திங்கட்கிழமை பாக்கி பத்து சதவிகித அச்சுப் பணியும் நிறைவு பெற்றான பின்னே இதழ்கள்  பைண்டிங்கின் பொருட்டு புறப்படும் ! தற்போது மின்னலாய் தலைதூக்கி நிற்கும் மின்வெட்டுப் பிரச்சனை பெருசாய் வேட்டு வைக்காது போயின்  புதன்கிழமை (30-sept ) நமது கூரியர்கள் புறப்படும் தினமாய் அமைந்திடும் ! 

கதையை முழுசாய் படித்துப் பார்க்கும் போது சமீப நாட்களில் நண்பர்களில் ஒருசாரார் வலியுறுத்தி வரும் - சகஜ நடை சாத்தியமாகி இருப்பதாகவே பட்டது ! 'மச்சி..மாமூ..dude' என்று தோர்கல் பேசுவதெல்லாம் நடவாக் காரியம் என்றாலும் - அந்தக் காலத்து R.S மனோஹரின் புராண நாடகங்களைப் பார்த்த feel நிச்சயமாய் இம்முறை தோர்கலில் இருந்திடாது என்றே நினைக்கிறேன் ! இந்த வார இறுதிக்குள் ரிசல்ட் தெரிந்து விடும் எனும் போது எனது ஈரைந்து விரல்கள் தவிர இன்னொரு பத்து விரல்களும் எங்கள் வீட்டிலிருந்தே குறுக்கப்பட்ட நிலையில் காத்திருப்பது நிச்சயம் !

இம்மாதத்து இதழ்களில் நீங்கள் இன்னமும் பார்த்திரா ஒரே அட்டைப்படமும் - இதோ உங்கள் முன்னே ! 

இந்தப் பதிவை நான் டைப் செய்யத் தொடங்கும் பொழுது தான் திருத்தங்கள் முடிந்த நிலையில் இது நமக்குக் கிட்டியது எனும் பொழுது - தற்போதையத் தயாரிப்புப் பணிகளுள் மிகப் பெரிய bottleneck தலைகாட்டுவது அட்டைப்பட டிசைனிங்கினில் தான் ! அதனை எவ்விதமேனும் சீர் செய்ய முடியும் பட்சத்தில் 2016-ல் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியை பெவிகால் போட்டுப் பிடித்துக் கொள்ள முடிந்திருக்கும் நமக்கு ! இங்கேயும் நமது ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளில் 2 புதிய (சென்னை ) டிசைனர்களைத் தேடி பிடித்துள்ளோம் தான் ; ஆனால் நாம் எதிர்பார்ப்பதை அவர்களிடமிருந்து வரவழைக்க மின்னஞ்சல் பரிமாற்றங்களும், போனில் சொல்லும் விபரங்களும் பற்ற மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே ! (7 நாட்களில் எமலோகம் அவர்களுள் ஒருவரின் கைவண்ணம் !) இம்முறையும் முன்னட்டை FLEETWAY -ன் ஒரிஜினல் டிசைன் - பின்னணி coloring மாற்றங்களோடு ! பின்னட்டையோ - ரொம்ப மாதங்களுக்கு முன்பாக எகிப்திய ஓவியர் ஒருவர் நமக்குப் போட்டுத் தந்த டிசைனின் சற்றே refined version ! (இதன் பென்சில் ஸ்கெட்சை நாம் caption எழுதும் போட்டிக்கெல்லாம் பயன்படுத்தி இருந்தது அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது !! )

Moving on, 2 வாரங்களுக்கு முந்தைய பதிவில் நான் ஜாலியாய் preview கொடுத்திருந்த கதைகளின் டிஜிட்டல் பைல்களை முழுமையாய் கோரிப் பெற்று கவனத்தை ஒவ்வொன்றின் மீதும் செலுத்த முனைந்தேன் ! (என்னையும் சேர்த்து) நிறையப் பேரின் ஆர்வங்களைக் கிளறியிருந்த PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது ! தவிர, கதையின் ஓட்டத்துக்கே அவை அவசியம் என்பதாய்த் தோன்றும் போது - நம் சென்சார் கத்திரிகளை அங்கே மேய விட முகாந்திரமிராது ! So வேறு வழியே இன்றி PANDEMONIUM தொடரினை கடாசிடும் அவசியம் நேர்கிறது !!  

அப்புறம், சமீபமாய் பிரெஞ்சில் வெளியாகியுள்ள ஆல்பங்களின் ரிப்போர்ட் வழக்கம் போல் படைப்பாளிகளிடமிருந்து நமக்கு வந்திருந்தது ! மாதம் 4 இதழ்களை வெளியிட்டு விட்டு நாம் காலரை காது வரை தூக்கி விட்டுக் கொள்ளும் வேளையில் அவர்களோ ஆளுக்கு மாதம் சுமார் 20 ஆல்பங்களை வெளியிடுவதைப் பார்க்கும் போது 'காதல்' பட பரத போல மண்டையில் கொட்டிக் கொண்டே ஓடத் தான் தோன்றுகிறது ! Anyways - அவற்றுள் ஒரு ஆல்பம் என் கவனத்தை ஈர்த்தது ! ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது ! இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ஆனால் வழக்கம் போல அழகான பையனும், நவநாகரீக அம்மணியும் லவ்விக் கொள்ளும் சம காலத்து frame இதற்கில்லை ! மாறாக - கதையின் ஹீரோ ஒரு அவலட்சணமான பையன் ! அரண்மனையின் சிறைக்கூடத்தில் இருக்கும் தாயொருத்தி பெற்று எடுத்த காரணத்தினால் அந்த மழலையும் சிறைக்கூடத்திலேயே வளர வேண்டிய சூழல் ! இது தான் உலகமென்ற சிந்தனையில் சந்தோஷமாய் வளரும் அந்த சிறுவனின் வாழ்க்கையிலும் ஒரு நாள் காதல் மலர்கிறது ! அவன் இதயத்தைத் திருடியவளோ மன்னரின் மகள் !! தொடர்வது என்னவென்பதே இந்த 64 பக்க one shot ஆல்பம் ! நம் சினிமாக்களுக்கு ஏற்றதொரு ஸ்கிரிப்ட் என்ற ரீதியில் BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது ! இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது ! ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் ! எப்படியிருப்பினும் இதனை இன்னும் கொஞ்சம்  கிளறிப் பார்க்கும் ஆர்வம் எழுந்துள்ளது ! 'அய்யய்யோ..ஆரம்பிச்சாச்சா ?' என்ற அபாய மணிகள் மடிப்பாக்கங்களிலும், பேடா நகரங்களிலும் , மங்கள நகரங்களிலும் ஒலிக்கக் கூடும் என்பது தெரிந்த விஷயமே - ஆனால் படைப்பாளிகள் முயற்சிக்கும் புதுப் புது பாணிகளை அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவதே எனது இது போன்ற தகவல்களின் (தற்போதைய) பின்னணி ! 

அப்புறம் புதுக் கதைகளின் குவியலுக்குள் உலக காமிக்ஸ் ரசனைகளின்  ஒரு பிரபலமான கதைக்களம் கொண்டதொரு புதுத் தொடரும் கண்ணில் பட்டது ! அது APOCALYPSE என்ற genre -ல் வெளியாகும் ஒரு புதிய கதை வரிசை ! என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது  ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ;  எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் ! இவற்றைப் பின்னணியாகக் கொண்டு அமெரிக்காவிலும் சரி ; ஐரோப்பாவிலும் சரி - ஏகப்பட்ட வெற்றித் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன ! ஒரு powerful நாயகன் ; அதிரடி ஆக்ஷன் ; லாஜிக் நூல்பிடித்துச் செல்லும் கதைக்களம் ; பன்ச் டயலாக்குகள் ; ஒரு கிளைமாக்ஸ் என்று நாம் இதுவரைப் பழகியுள்ள சகல சமாச்சாரங்களையும் துடைத்து விட்டு - இந்தப் புது உலகினுள் நுழைந்து பார்ப்பின் - ஏராளமாய் புது வாசிப்பு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடும் ! உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை "வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் ! 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys ? தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா ? யோசித்துப் பாருங்களேன் guys !! And I repeat - I am NOT looking at this for 2016 ! 

புறப்படும் முன்பாய் சின்னதொரு கோரிக்கை மட்டுமே ! சர்ச்சைகள் ; சலனங்கள் ; வெளிநடப்புகள் என்ற திருஷ்டிப் பரிகாரங்கள் எல்லாமே நேற்றைய நிகழ்வுகளாகவே இருந்து விட்டு போகட்டும் ! அவற்றிலிருந்து அவசியமான பாடங்களை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டென்பதால் நான் இதன் பொருட்டு லெக்சர் செய்யவெல்லாம் போவதில்லை! அதே போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் நான் கோபித்துக் கொண்டு மூட்டையைக் கட்டி கிளம்பி விடுவேன் என்ற ரீதியிலான மௌன நிர்ப்பந்தங்களும் இங்கு துளியும் அமலில் இராது !  உங்கள் பார்வையில் அவசியமெனத் தோன்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் போலவே சுதந்திரமாய் பதிவிடலாம் ! ஏற்கனவே நம்மூர்களில் அடிக்கும் அனலே ஜாஸ்தி என்பதால் - உங்கள் பின்னூட்டங்களில் அது மட்டும் குறைவாய் இருப்பின், நிச்சயம் உரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கிடையாது ! இது எப்போதுமே உங்கள் தளமே என்பதில் என்றைக்கும் மாற்றம் இராது ! 

நான் கோருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் :  'இவன் இந்தக் கட்சியா ? - அந்தக் கட்சியா ? ' ; 'இவன் அவருக்கு நெருக்கமானவனா - எனக்கு தூரத்திலிருப்பவனா ?' என்ற ரீதியில் அவ்வப்போது பரீட்சைகள் வைக்காது இருப்பின், சந்தோஷத்துடன் என் பணிகளைப் பார்த்திடுவேன் ! கிளைக்குக் கிளை தாவுவது ; அந்தர் பல்டிகள் அடிப்பது என்ற ஆஞ்சநேயச் சேட்டைகளை எல்லாம் எனக்குப் பரிச்சயம் என்பதால் அவரைப் போலவே நெஞ்சினைத் திறந்து காட்டும் ஆற்றலும் என்னிடம் இருக்குமென்று நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம் தான் ! ஆனால் நீங்கள் அனைவருமே எனக்குப் பிரியமானவர்களே ; சம அளவில் முக்கியமானவர்களே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டிட நெஞ்சினைப் பிளக்கும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அல்ல நான் ; நெஞ்சைத் திறந்து  சிகிச்சை செய்து விட்டுத் திரும்பத் தைத்து விடும் டாக்டர் செரியனும் அல்ல நான் ! So அந்தப் பரீட்சைகளை மட்டும் இல்லாது போயின் நிம்மதியாய் நடை போடுவேன் ! Thanks for reading folks ! மீண்டும் சந்திப்போம் - எல்லாம் நலமே !!

And - இது உங்கள் யூகக் குதிரைகளுக்கு கொஞ்சம் தீனி போட்டிட !! (Of course - சிற்சிறு மாற்றங்களுக்கு உட்பட்டது !!  ) Good night !! 

Friday, September 25, 2015

தவணையில் ஒரு பதிவு !

நண்பர்களே,

வணக்கம்! விநாயகர் சதுர்த்தியைத் தாண்டிய நாட்கள் எங்கள் ஊருக்கு எப்போதுமே பரபரப்பானவையாக இருப்பது வழக்கம். அக்டோபர் இறுதிகளிலோ / நவம்பர் துவக்கத்திலோ வருகை தரும் தீபாவளியை முன்னிட்டு – பட்டாசுக் கடைகள் எல்லாமே தூக்கத்தை முடித்துக் கொண்டு கண் திறக்கக் துவங்குவது இந்த வேளைகளில் தான்! நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஆர்டர் தந்திடும் பொருட்டு ‘படா முதலாளிகள்‘ சிவகாசியை நோக்கிப் படையெடுப்பதும் இப்போது முதல் தான்! So- செப்டம்பர் இறுதி; அக்டோபர் என்றாலே ஊருக்குள் ஒரு சின்ன buzz இருப்பது நடைமுறை! அந்தப் பரபரப்பு சிறுகச் சிறுக பட்டாசு அல்லாத இதர தொழில்களுக்கும் தொற்றிக் கொள்ள அதிக நேரமெடுக்காது என்பதால் – ஆவலாய்க் காத்துள்ளோம் நாமும்!

அக்டோபரின் வருகைக்குத் தயாராகும் விதமாய் ரிப்போர்டர் ஜானியின் “காலனின் காலம்” + திருவாளர் லக்கி ஜுனியரின் “புயலுக்கொரு பள்ளிக்கூடம்” – இரு இதழ்களுமே தயாராகி விட்டன! இதோ – நமது ஆதர்ஷ சுட்டி லக்கியின் அட்டைப்பட first look; மற்றும் உட்பக்கங்களின் preview! ‘Oklahoma Jim’ என்ற பெயரோடு வெளிவந்துள்ள இந்தக் கதை – சுட்டி லக்கி தொடரின் ஆல்பம் # 2. ஆனால் சுட்டிக்கென தனியாக தொடர் ஏதும் இல்லாத காரணத்தால் இவை one shots போலவே பாவிக்கப்பட்டு, லக்கி லூக்கின் கதை வரிசையிலேயே இடம்பிடிக்கின்றன !  1997-ல் ஒரிஜினலாக வெளிவந்த கதை என்பதால் இதனில் கதாசிரியர் மோரிஸ் பணியாற்றவில்லை! இருப்பினும் அந்தக் குட்டிப் பயலும், குட்டி ஜாலி ஜம்பரும் இணைந்து frame-களில் வலம் வரும் வேளைகளில் வசீகரத்தில் துளியும் குறை தெரியவில்லை! மோரிஸே பெருமைப்பட்டிருப்பார் இவற்றைக் கண்டு!! 


இவையெல்லாம் டிஜிட்டல் யுகத்தில் பிறந்த கதைகள் என்பதால் – கலரிங் பாணிகளும் பட்டையைக் கிளப்புவதில் வியப்பில்லை! And இம்முறையும் நம்மவர்கள் அச்சில் சிரத்தையோடு பணி செய்திருப்பதால் – சுட்டி லக்கி ஹேப்பி அண்ணாச்சி! 2013-ல் ஈரோட்டுத் திருவிழாவின் சமயம் இதன் முதல் இதழ் வெளியானதும்; அந்த “நாக்கார்; மூக்கார் பாஷை” ஒரு ரவுண்ட் வந்ததும் நமது வலைப்பதிவின் ஒரு சந்தோஷ அங்கம்! இந்த லிங்க்கைப் பிடித்துப் போய் பார்த்தால் – அந்த நாட்களது உற்சாகத்தை திரும்பவும் ஒரு முறை வாழ்ந்து பார்த்த அனுபவம் கிட்டிடக் கூடும்! http://lion-muthucomics.blogspot.in/2013/08/blog-post.html


அக்டோபரின் இதழ் # 3ம் தயாரே; ராப்பர் நீங்கலாக! பொன்னன் அதிகமாய் நமக்கு நடைப்பயிற்சி வழங்காதிருப்பின் – ”சிறைப் பறவைகள்” கூட அடுத்த சில நாட்களில் முழுமையாகத் தயாராகி நிற்கும்! அதன் பின்னே பணிகள் பாக்கியிருப்பது பிரபஞ்சத்தின் புதல்வரின் double ஆல்பத்தின் மீதே! தோர்கலின் கதைகள் ஒரு classic ரகம் என்பதால் அவற்றின் மொழிநடைகள் ஒருவிதப் புராதனக் கலவையில் தான் இருந்திடும்! மொழிபெயர்ப்பு பணிகள் பற்றிய விவாதம் இங்கே ஒன்றிரண்டு நாட்களாய் ஓடிக் கொண்டிருக்கும் போதே என் மேஜையில் கிடந்ததோ – ‘மகாப் பிரபு‘; ‘தயாள தெய்வங்கள்‘; ‘பேதைப் பெண்ணே‘ என்ற ரீதியிலான வரிகளைக் கொண்ட கதை! தற்செயலாய் நிகழும் இது போன்ற coincidences-ஐ எண்ணிப் புன்னகைக்காமல் இருக்க இயலவில்லை! தோர்கலும் நவீனமாய்; சமகாலத் தமிழ் பேசினால் எவ்விதமிருக்குமென்று கற்பனை செய்து பார்த்தேன்...! ”சாமி... வாங்குகிற டின் பற்றாதா?” என்று மைண்ட்-வாய்ஸ் உரக்க ஒலிக்க, ஒழுங்கு மரியாதையாய் எடிட்டிங் வேலைகளுக்குள் தலையை நுழைத்துக் கொண்டேன்! இதில் ஒரு highlight என்னவெனில் இந்த தோர்கல் ஆல்பங்களின் தமிழாக்கம் நானோ – கருணையானந்தமோ கிடையாது; நமது சீனியர் எடிட்டரே! சில பல மாதங்களுக்கு முன் – “போரடிக்கிறது; ஏதாவது எழுதட்டுமா?” என்று கேட்ட பொழுது நான் டைலன் டாக்கின் ‘நள்ளிரவு நங்கையின்‘ ஆங்கில ஸ்கிரிப்டைக் கொடுத்திருந்தேன்! முத்து காமிக்ஸ் வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் எப்போதாவது ஒரு கபிஷ் கதைக்கோ; இன்ன பிற filler pages-க்கோ தந்தையார் மொழிபெயர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்; ஆனால் நானறிந்த வரைக்கும் ஒரு முழுநீளக் கதையில் அவர் பணியாற்றியது கிடையாது. அந்த அனுபவமின்மை (?!!!) டைலன் டாக்கின் மொழிபெயர்ப்பில் தெரிந்தது! வசனங்களுக்கு நம்பர் போடுவதில் தொடங்கி – கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கத் திணறியிருந்தது வரை முதன்முறையாக பேனா பிடிக்கும் பாங்கை வழிநெடுகிலும் இனம் காண்பதில்  சிரமமே இருக்கவில்லை! அதிலும் க்ளைமேக்ஸில் டைலனின்  டயலாக்குகள் ரொம்பவே பேஸ்தடித்திருந்தன! அவற்றை இயன்றளவு சரிக்கட்டிட முயன்று தோற்றுப் போய்; கதையின் இறுதிப் பகுதியை முழுவதுமாய் rewrite செய்திருந்தேன்! So- 'இன்னொரு கதை இருந்தால் கொடுத்தனுப்பு !' என்று கேட்ட போது நிறையவே விழித்தேன்! அப்புறம் தான் தோர்கலின் அந்த classic ஸ்டைல், அப்பாவின் எழுத்துப் பாணிக்கு சரிவரக் கூடுமோ என்று தோன்றியது ! தினமும் காலையில்  ஆபீஸிற்கு வந்து எழுதத் தொடங்கி  ; சுடச் சுட அவற்றை என்னிடம் காட்டி மாற்றங்கள் / திருத்தங்கள் செய்வதென்பது தொடரும் நாட்களில் நிகழ்ந்தது !!   இறுதியில் ஒரு முறை முழுவதுமாய் rewrite செய்து – fresh ஆக என்னிடம் ஒப்படைத்ததை நமது டைப்செட்டிங் பிரிவில் தந்து    விட்டு நான் அடுத்த பணிகளுக்குள் மூழ்கியிருந்தேன்! நிறைய  வாசிப்பது ;எழுதுவது என்பதெல்லாம் கண்களுக்கு சிரமம் என்பதால் தேவையற்ற strain வேண்டாமென அப்பாவுக்கு  டாக்டர்கள் ஏற்கனவே சொல்லியிருந்ததால் – அந்த ஆரம்பத்து  ஆர்வ முயற்சிகளை நான் அதன் பின்பு ஊக்குவிக்கவில்லை! அதே சமயம் டைப்செட்டிங் முடிந்து கிடந்த தோர்கலை ‘அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம்‘ என மேஜையில் அடுக்கி விட்டிருந்தபடியால், அப்பாவின் மொழிபெயர்ப்பு எவ்விதமிருன்தது என்பதைப் பார்க்க மறந்தும் போயிருந்தது ! டைலன் டாக்கின் அனுபவம் அடிமனதில் கும்மியடிக்க, ஒரு லேசான பயத்தோடு தான் போன வாரம் கதையைக் கையில் எடுத்தேன் ! ஆரம்பத்தில் லேசாக ஆட்டம் தந்த வண்டி, போகப் போக ஸ்மூத்தாகவே பயணிப்பதை உணர்ந்த போது நிம்மதிப் பெருமூச்சு ! முதல் கதையை முடித்து விட்ட நிலையில் பெரிதாக மேடு-பள்ளங்கள் தட்டுப்படவில்லை பயணத்தில் ! So கதை # 2-க்குள் இன்றைக்கு புகுந்து, வெற்றிகரமாய் பணிகளை முடித்து விட்டேனெனில், ஒரு "இளம் 74 வயதே ஆன எழுத்தாளரின்"  படைப்பு தயாராகியிருக்கும் ! "ஈகோ என்றால் வீசம்படி எவ்வளவு ?" என்பது தான் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே ஏன் தந்தையின் அடையாளம் ! 18 வயதாகும் நாட்களிலேயே நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் முகம் சுளிக்காது சரி சொன்னவர், 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் டியூஷனுக்கு செல்லும் மாணவனைப் போல ஒரு கட்டுரை நோட்டோடு ஆபீசுக்கு வந்து எனக்கு எழுதிக் காட்டிய அந்தக் காலைகள் மறக்க இயலாதவை ! "தந்தைக்குக் கற்பித்த பெரிய அப்பாடக்கர் " என்ற ரீதியில் இதனை நான் சொல்ல முனையவில்லை ! அது போன்ற குடாக்குத்தன கற்பனைகள் பிழைப்புக்கு  ஆகாது என்பது எப்போதுமே நினைவில் கொண்டிருப்பேன் ! ஆனால் இந்த வயதிலும் ஒரு புது முயற்சியின் பொருட்டு அவர் காட்டிய முனைப்பையும், ஆர்வத்தையும் highlight செய்திடவே இந்த update !

Moving  on , சமீப வாரங்களாய் ரீங்காரமிட்டு வரும் 'டெக்ஸ் சந்தா உண்டா - இல்லியா ?' என்ற விவாதங்களின் மீதாகவும் கவனத்தைத் திருப்புவோமா ? 2016-ன் அட்டவணைத் திட்டமிடல்கள் பற்றிய பேச்சு துவங்கிய சமயங்களிலேயே அக்டோபர் இறுதி வரை பொறுமை காத்திட வேண்டியிருக்குமென தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தேன்! இருப்பினும் நண்பர்களில் சிலர் தொடர்ச்சியாய் அதே கேள்வியை முன்வைத்து வருவது தர்மசங்கடமானதொரு நிலையை உருவாக்கி வருகிறது ! ஒவ்வொரு ஆண்டும் அட்டவனையை அக்டோபர் இறுதி வரையிலும் நாம் இழுப்பதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணமுண்டு ! ஒவ்வொரு அக்டோபரின் துவக்க வாரத்தில் அரங்கேறும் பிரான்க்பர்ட் சர்வதேசப் புத்தக விழாவானது எல்லா முக்கியப்  பதிப்பகங்களின் காலெண்டரிலும் ஒரு HUGE HUGE தருணம் ! காமிக்ஸ் பதிப்பகங்கள் மட்டுமென்றில்லாது, எல்லா ரகப் பதிப்பகங்களும் அந்த அக்டோபரின் 5 நாட்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பிலிருந்தே முஸ்தீபுகளில் இறங்கி விடுவார்கள் ! 'தலை போகின்ற அவசரம்' ; நெருக்கடி ' என்றால் தவிர செப்டெம்பரில்,  ஒவ்வொரு பதிப்பகத்தின் லைசென்சிங் பிரிவிலிருந்தும் தவித்த வாய்க்கு ஒரு டம்ளர் தண்ணீர் கூடக் கேட்டு வாங்கிடவே இயலாது ! இது தான் யதார்த்தம் என்பதால் தொடரும் ஆண்டுக்கான கதைத் தேர்வுகள் ; அவற்றுள் எது-எதுக்கெல்லாம் கலரில் டிஜிட்டல் கோப்புகள் உள்ளன ? ; எவை black & white -ல் மாத்திரமே சாத்தியம் ? என்பதெல்லாமே அந்த பிரான்க்பர்ட் fever ஓய்ந்தான பின்னே தான் இறுதிப்படுத்திட இயலும் ! ஆகஸ்ட் - ஐரோப்பிய கோடை விடுமுறைகள் ; செப்டெம்பர் - அவர்ளது பிரான்க்பர்ட் முஸ்தீபுகள் எனும் பொழுது - ஜூலையிலேயே மறு ஆண்டுக்கான வேலைகளை செய்து முடிப்பது தான் நம் முன்னே உள்ள alternative ! ஆனால் அந்த சமயங்களில் நமது பணிகள் உச்சத்தில் இருப்பது ஒரு பக்கமெனில், நடப்பு ஆண்டில் எந்தெந்த நாயகர்கள் எவ்விதம் உங்களிடம் மார்க்குகள் வாங்குகிறார்கள் என்பதை நான் பார்த்திடவும் ஜூலை ரொம்பவே early அல்லவா ? So இவையெல்லாம் எங்களது back end சிக்கல்கள் ! இதன் பொருட்டு நான் அனுஷ்டிக்க அவசியமாகிடும் மௌனத்தை ஆளுக்கொரு விதமாய் அர்த்தம் பண்ணிக் கொண்டு சஞ்சலம் கொள்வதன் லாஜிக் புரியவில்லை ! And இதுமட்டுமன்றி - புது நாயகர்கள் சேர்க்கை - ஏற்கனவே உள்ள ஆசாமிகளில் யாருக்கேனும் தர வேண்டிய கல்தா பற்றியெல்லாம் சிந்திக்க சற்றே நேரம் எடுத்துக் கொள்கிறேனே guys ? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இதழும் ஒரு விதத்தில் ஒரு புதுப் பாடம் கற்பித்து வரும் நாட்களில், செய்த சொதப்பல்களிலிருந்து பாடம் படித்துக் கொள்ளவும் இந்தக் கூடுதல் அவகாசம் உதவிடும் தானே ? 

சமீபமாய் 'என் பெயர் டைகர்' அறிவிப்பினைத் தொடர்ந்து விலை பற்றி எழுந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும் நான் எதிர்பாரா ஒரு விஷயம். அன்றைய பொழுதை நாம் கடந்து வந்திருப்பினும் சந்தா அறிவிப்பினில் இதே போன்ற உராய்வுகள் நேர்ந்திடக் கூடாதே என்ற எண்ணத்தை என்னுள் ஆழமாய் விதைத்த நாள் அது ! 'ஒரே நாளில் கல்லா கட்டப் பார்க்கிறேன்' என்ற ரீதியிலான விமர்சனங்களும், அதன் பின்னணியாகச் சொல்லப்பட்ட காரணங்களும் என்னை நிறையவே சங்கடப்படுத்தின ! So இனியும் இது போன்ற வெற்றுக் கல்வீச்சுகளுக்கு முகாந்திரம் தந்திடக் கூடாதென்ற வைராக்கியம் உள்ளே குடிபுகுந்த சமயமே, சந்தாவின் திட்டமிடலில் ஆடம்பரங்களை இயன்ற அளவு தவிர்த்தல் நலம் என்றும் எனக்குள் ஒரு ஜாக்கிரதையுணர்வு குடி புகுந்தது !  பற்றாக்குறைக்கு 2 தனித்தனி இதழ்களாய் ரூ.75+ ரூ.100 என்ற விலைகளில் (ஓராண்டுக்கு முன்பாக) அறிவிக்கப்பட்டிருந்த டெக்ஸ் கதைகள் ஒருங்கிணைந்த தீபாவளி மலராகிடும் போது அந்த 560 பக பருமனுக்கு ஈடுதர பைண்டிங்கில் book sewing முறையை நடைமுறைப்படுத்திட வேண்டி வரும் ! இல்லையேல் நாளாசிரியாய்'நடுவிலே சில பக்கங்களைக் காணோம்' என்ற கதையாகிடும். தையலுக்கு ; அதைத் தொடரும் பைண்டிங் முறைகளுக்கு ; கூடுதல் கன ராப்பருக்கு ; அதனில் நாம் செய்ய நினைத்துள்ள சிறு வேலைப்பாட்டிற்கு எனும் பொருட்டு  (சந்தாவில் மாற்றம் செய்யாது) ரூ.25 விலையினை கூட்டினால் - "குனிந்தால் குட்டா ? நிமிர்ந்தால் தான் ஆச்சா ?" என்ற ரீதியில் குரல்கள் ஒலிக்கும் நாட்களிவை எனும் போதே - தொடரும் ஆண்டுக்கான costing-களை நிதானமாகவே சரி பார்த்துக் கொள்வோமே என்று நினைக்கத் தான் தோன்றுகிறது ! அதன் பொருட்டும் இந்த அவகாசம் அவசியம் தானே ? பாதி வழியில் ஏதேனும் மாற்றமெனில் அதன் பொருட்டும் குட்டு வாங்கவிருப்பது அடியேன் தான் எனும் போது அதனிலிருந்து தப்பிக்கவாவது ஹெல்மெட் மாட்டிக் கொள்ள கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்கிறேனே ?! 

எல்லாவற்றிற்கும் மேலாக - கோரப்படும் அபிப்பிராயங்கள் சகலத்தின் மீதும் உடனடியாய் positive பலன் தெரியாது போயின் - அது கருத்துச் சொன்னவர்களுக்கான அவமரியாதை என்ற ரீதியிலான சிந்தனைகளும் சங்கடத்தைத் தருகின்றன ! மனதில் அவ்வப்போது தோன்றுவதை தயங்காது இங்கே வெளிப்படுத்துவதே நமது 3.5 ஆண்டுகளின் பாணி! And மாறிடும் ரசனைகளுக்கேற்ப  நமது தீர்மானங்கள் ; சிந்தனைகள் வளைந்து கொடுக்கும் விதமாய் flexible ஆக ; fluid ஆக இருத்தல் அவசியம் என்றும் நிறைய முறைகள் வலியுறுத்தியுள்ளேன் ! இங்கே நான் கோரிப் பெரும் inputs சகலமும், சரியான சந்தர்ப்பத்தில் அமலுக்கு வருவது தான் நடைமுறை ! ஆனால் 'இன்றே-இப்போதே' என்ற ரீதியிலான எதிர்பார்ப்புகள் இந்த ஒற்றை விஷயத்தில் அமலுக்கு வருவது எத்தனை தூரம் practical ? 

And it's not like I have decided against a டெக்ஸ் சந்தா !! And it's not like I'm behind schedule either !! அக்டோபர் இறுதி வரை அவகாசம் கோரியிருந்த நான் அதற்கு மேலும் உங்களைக் காக்க வைப்பின் உங்கள் சலனங்கள் புரிந்திடும் ; ஆனால் அதற்கு ஒன்றரை மாதங்கள் பாக்கியிருக்கும் நாட்களிலிருந்தே இதன் பொருட்டு தூக்கங்களும், புன்னகைகளும் தொலைந்திடத் தான் வேண்டுமா ?? More than anything else - உங்களை நான் அலைய விட்டுப் பார்ப்பது போலவும் ; 'சார்..சார்..' என்று என்னைத் தாஜா செய்ய வைப்பதாகவும் தோற்றம் எழுந்திடவும் வாய்ப்புகள் உண்டன்றோ guys ? "வாங்கிட ரெடி !"  என்று நீங்கள் தயாராய் நிற்கும் போது - 'சார்..சார்..என்று உங்கள் தயவுகளை நாடி முன்னே நிற்க வேண்டியவன் முறைப்படி நான் தானே நண்பர்களே ?  நான் கோருவதெல்லாம் - இடையிடையே மாற்றங்களுக்கு அவசியம் தரா ஒரு சுவாரஸ்யமான அட்டவணையினை final செய்திட முறையான அவகாசம் மட்டுமே !! 

சரி, இத்தனை தூரம் வந்தான பின்னே - தேங்காயை உடைத்தே விடுவோமே  ! "தனி டெக்ஸ் சந்தா" எனும் பொழுது - நம் முன்னே உள்ள options - இரண்டே ! 

OPTION # 1 : இத்தாலிய பாணியில் மாதமொரு 104 பக்க black & white இதழ் ; கதைகள் தொடர்ச்சியாய் ஓடிக் கொண்டே இருக்கும் ; so ஆண்டொன்றுக்கு 12 தனித்தனி இதழ்கள் ! 

இந்தத் தொடர்கதை சங்காத்தமே வேண்டாமெனில் :

OPTION # 2 - ஆண்டுக்கு 6 இதழ்கள் (220 பக்க complete சாகசத்தோடு)! நாம் தற்சமயமே இது போன்ற கதைகளில் கிட்டத்தட்ட நான்கோ  / ஐந்தோ வெவ்வேறு பாணிகளில் வெளியிட்டு வருகிறோம் தானே ? So தொடரும் ஆண்டில் "6" எனும் எண்ணிக்கையைத் தொட்டு விட்டதன் ஒரே காரணத்தால் அதனை "தனி டெக்ஸ் சந்தா" என்று அறிவிப்பதில் பெரிதாய் புதுமை ஏதும் இல்லையல்லவா ? So தற்சமயத் திட்டமிடலின்படி ஆண்டுக்கு 6 டெக்ஸ் இதழ்கள் - தனித் தனி இதழ்களாய் - ரெகுலர் சந்தாவிலேயே என்றே இறுதி செய்துள்ளேன் ! இவை தவிர TEX மறுபதிப்பு (கள்) !

இதற்கிடையே உங்கள் எதிர்பார்ப்புகள் - ரெகுலர் சந்தாவில் வழக்கம் போல் நாலு டெக்ஸ் + இன்னுமொரு பிரத்யேக டெக்ஸ் சந்தா வழித்தடமா ? என்பது எனக்குப் புரியவில்லை ! எனது திட்டமிடல்களின்படி 6 ரெகுலர் (புது) இதழ்கள் என்றாலே சுமார் 1400 பக்கங்கள் எனும் பொழுது - இதற்கு மேலாக ஒரு EXCLUSIVE TEX TRACK வேறு சேர்ப்பதெனில் ஆண்டுக்கு சுமார் 3000 பக்கங்களுக்கு வறுத்த கறிக் காதலருக்கும், இரவுக் கழுகாருக்கும் நான் பன்ச் டயலாக் எழுதியே உங்களைப் பஞ்சராக்கும் நிலை தான் புலரும் ! And சந்தேகமே இல்லாது அது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமானமாகிடும் ! "டெக்ஸ் மோகம்" உள்ளதென்பதற்காக அதற்கு முறையான நியாயம் செய்ய முடியாது போயின் அந்த முயற்சி வியர்த்தமாகிப் போகும் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது ! 

So - இது தான் நமது நிலைப்பாடு - படைப்பாளிகளின் இறுதி தலையசைப்பிற்கு உட்பட்டு ! இதனில் ஒருக்கால் OPTION #1 - worth a try - மாதந்தோறும் 'தல' ஒரு 104 பக்கத் தனி இதழில் வரட்டுமே என்று நீங்கள் நினைப்பின் - நான் ரெடி ! நீங்கள் ? உங்கள் சிந்தைகளை அறிந்திட ஆவலாய்க் காத்திருப்பேன் ! Bye for now guys !

P.S : October release - in Europe !! பாருங்களேன் !


Thursday, September 17, 2015

ஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..!

வணக்கம்.  

உங்களில் நிறையப் பேரைப் போலவே  புதிய பின்னூட்ட முறையினுள் புகுந்து நானும் பாயைப் பிறாண்டாத குறை தான் என்பதால் - நள்ளிரவில் எழுந்து அமர்ந்தொரு விநாயகர் சதுர்த்திப் பதிவுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டேன் ! இதனை 'மைக் டெஸ்டிங்..1..2.33...' பாணியாக எடுத்துக் கொள்வோம் ; இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று இதன் பின்னூட்ட அனுபவங்களும் சொல்லிடும் பட்சத்தில் -  'போன மச்சான் திரும்பி வந்தான்' என ஞாயிறு பதிவினில் நமக்குப் பரிச்சயமான பழசுக்கே வாபசாகி விடுவோம் ! So கடிதம் எழுதத் தயாராகி விட்ட தலீவரைக் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பிடித்து நிறுத்தி வையுங்களேன் guys !! (ஈரோடு விழா முடிந்த கையோடு தலீவர் அனுப்பிய 7 பக்கக் கடிதத்தை சமீபமாய்த் தான் பார்த்தேன் !!)  

இது நடுநிசியின் திடீர் பதிவென்பதால் வழக்கமான முன்னோட்டங்கள் ; பின்னோட்டங்கள் என்றெல்லாம் வில்லுப்பாட்டுப் பாடாது ; சமீபமாய் நான் பார்த்த, சில பல புதுக் கதைத் தொடர்கள் பற்றியதொரு preview show-வாக இருந்திடும் ! இந்த டிரைலர்கள் சுவாரஸ்யமாகத் தெரிந்திடும் பட்சத்தில் ; இவற்றின் மீது நாம் இன்னும் கொஞ்சம் ஆர்வம் காட்டிடலாம் என உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில் - அந்த 'தனிச் சந்தா' தண்டவாளத்தில் இவைகளைப் பரிசீலிக்க முயற்சிக்கலாம் ! 

AND : பெரிய எழுத்துக்களில் ஒரு எச்சரிக்கைப் பலகையினை முன்கூட்டியே தூக்கி நிறுத்தி விடுகிறேனே......! 

  • இவை எல்லாமே நான் சமீபமாய்ப் பார்க்க / பரிசீலிக்க நேரம் எடுத்துக் கொண்ட தொடர்கள் மட்டுமே தவிர ; இவையெல்லாம் 'வரப் போகும்' பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விஷயங்கள் அல்ல - at least 2016-ன் ரெகுலர் சந்தாவிற்குள் ! 
  • அப்புறம் - இவை எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட கதைகள் / ரசனைகள் என்பதால் உங்களுக்கு அவை பிடித்திடா பட்சத்தில் -1 என்ற அபிப்பிராயப் பதிவோடு தாண்டிச் சென்றிடலாமே - ப்ளீஸ் ?! "அய்யோ ..இதெல்லாம் வரப் போகுதா ? கிழிஞ்சது போ !! " என்ற ரக எண்ணங்கள் சிதறல்களாய் இங்கு விரவிடாது இருப்பின் மகிழ்வேன் ! 
பிரெஞ்சுப் பதிப்புலகில் எனக்கு ரொம்ப காலமாகவே ஒரு சின்ன ஆச்சர்யம் உண்டு ! தங்களுக்கு சிறிதும் அண்மையில் இல்லாததொரு தேசத்தின் மீது ; கலாச்சாரங்களில் துளியும் சம்பந்தமில்லா ஒரு நாட்டின் மீது பிரெஞ்சுக் காமிக்ஸ் ஒளிவட்டம் இத்தனை அதிகம் பாய்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நிறைய முறை யோசித்திருக்கிறேன் ! அந்த "அமெரிக்கக் காதல்" கௌபாய் கதைகளின் ரூபத்தில் ஒரு பக்கம் வழிந்தோடுவது சகஜம் எனில் தொடர்ந்த 19-ஆம் நூற்றாண்டின் முதல் quarter -ன் மீது அது மீண்டும் மையல் கொண்டு நிற்பது உண்டு ! ஜனவரி 1920-ல் அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது ! 'சரக்கை' விற்பதோ ; வாங்குவதோ ; எடுத்துச் செல்வதோ குற்றமென ஆன பின்னும் மக்களிடையே அதற்கொரு வெறித்தனமான தேவை இருந்து வந்தது ! அந்த நேரம் பார்த்து இத்தாலியில் முசோலினி சர்வாதிகார ஆட்சியினைப் பிரகடனம் செய்திட, சாரை சாரையாய் இத்தாலிய மக்கள் அமெரிக்கக் கரையினில் தஞ்சம் புகுந்தனர் ! அவர்களுள் நிறையப் பேர் அமெரிக்காவின் மாபியா கும்பல்களில் ஐக்கியமாகிட - ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு வட்டமும் சிறுகச் சிறுக இந்தக் குற்ற முதலைகளின் பிடிக்குள் ஓசையின்றி அடங்கிப் போயின ! அக்டோபர் 1929-ல் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணா ஒரு வீழ்ச்சியை சந்தித்ததன் பின்னே, நாடெங்கும் வேலையின்மை தாண்டவமாடியது ! அதுநாள் வரையிலும் செல்வச் செழிப்பில் மிதந்து வந்ததொரு நாட்டுக்கே இந்த புது சூழலைக் கையாளத் தெரிந்திருக்கவில்லை ! So 1939-ல் உலகப் போர் துவங்கிடும் முன்பான காலகட்டம் கூட அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி என்று சொல்லலாம் ! 

இந்தக் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு பிரெஞ்சில் நிறையக் கதைகளும், தொடர்களும் உருவாகியுள்ளன !! அவற்றில் நமக்கு நேரடியாய் எவ்வித சம்பந்தமும் இல்லாவிடினும், கிட்டத்தட்ட 80-90 ஆண்டுகளுக்கு முன்பான நாகரீக உலகின் உச்ச சின்னமான அமெரிக்காவின் இன்னொரு முகத்தினை தரிசிக்கும் ஜன்னல்களாக இது போன்ற கதை வரிசைகளைப் பார்த்திடலாம் ! (இப்போவே கண்ணைக் கட்டுதே...என்று எண்ணும் நண்பர்கள், ஒரு கொழுக்கட்டையைக் கூடுதலாய் உள்ளே இறக்கிக் கொண்டு 'தம்' பிடித்துத் தொடரலாமே ?!

அப்படியொரு பின்னணியினில் சமீபமாய் வெளியானதொரு 2 ஆல்பம் கொண்ட கதை தான் BLUENOTE !! இந்தக் கதையினை சென்றாண்டே ஆசை ஆசையாய்ப் புரட்டினேன் நான்  ; ஆனால் அச்சமயம் பாகம் 2 வெளி வந்திருக்கவில்லை எனும் போது பெரிதாய் அதன் மீதொரு அபிப்பிராயம் உருவாக்கிட இயலவில்லை ! 


"மதுவிலக்கின் இறுதி நிமிடங்கள்" என்பது ஆல்பத்தின் பெயர் ! 1930-ல் அமெரிக்காவில் குடிபெயர வரும் ஒரு முன்னாள் குத்துச் சண்டை வீரர் தான் கதையின் நாயகர் ! ஒரு சதுரத்துக்குள் புகுந்து எதிராளியை நொங்கி எடுக்கும் அந்த பாக்சிங் ஆட்டத்துக்கே ஒரு முற்றுப்புள்ளிடா சாமி என்ற வைராக்கியத்தோடு நியூ யார்க்கின் கரைகளில் ஒதுங்குகிறார் ஜாக் டாய்ல் ! இனியும் பந்தயங்களுக்காக பாக்சிங் செய்யப் போவதில்லை என்பதில் தீர்மானமாய் உள்ளான் ஜாக் ! ஆனால் விதி அவனை விடாது துரத்துகிறது - ஒரே ஒரு இறுதி சண்டைக்கு பாக்சிங் மேடையினில் ஏறியே தீர வேண்டுமென்ற சூழல்களை உருவாக்கும் விதமாய் ! ஒரே நேரத்தில் சொர்க்கமாகவும், நரகமாகவும் பரிமாணங்களைக் காட்டக் கூடிய  நியூயார்க் நகரில் ஜாக்கின் வாழ்க்கையே ஆல்பம் # 1. பாருங்களேன் அந்த மாறுபட்ட ஓவிய பாணிகளை ; கண்ணை உறுத்தா வர்ணக் கலவைகளை !  

ஆல்பம் # இரண்டிற்கும் அதே பெயர் தான் ; இம்முறையும் கதையின் பின்னணி மிரட்டலான நியூ யார்க் தான் ! இதுவோ இசை ஆல்பம் வெளியிடும் வெறியோடு கரை ஒதுங்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றிய கதை ! ஒரே கால கட்டத்தை ; ஒரே மண்ணை - இரு வேறு நிலைகளிலிருந்து பார்த்திடும் இருவரின் வாழ்க்கைப் போராட்டங்களே BLUE NOTE -ன் பின்னணி ! நியூயார்க்கின் இரவுகள் ; அதன் கருணையிலா முகம் என அந்த சித்திரங்களில் ஒரு மெல்லிய கதை சொல்லியுள்ளார் ஓவியர் ! 


என்றோ முடிந்து போனதொரு யுகத்தை ; எங்கோ ஒரு உலக வரைபட மூலையின் மாந்தர்களை ; அவர்கள் வாழ்க்கை முறைகளை ; அந்த சோகங்களை நாம் பார்த்து சாதிக்கப் போவதென்ன ? என்ற கேள்வி உங்கள் உதடுகளில் இருப்பின், அதற்கான பதில் என்னிடம் நிச்சயமில்லை ! ஆனால் - மனித உணர்வுகளைச் சொல்ல முற்படும் இது போன்ற கதைகளும் என்றைக்கோ ஒரு தூரத்து நாளிலாவது நம் (காமிக்ஸ்) வாசிப்புக் களங்களில் இடம் பிடித்தால் நிச்சயமாய் என் வதனத்தில் ஒரு குட்டியூண்டு "ஈஈ" இடம்பிடித்து நிற்கும் ! (இப்போதைக்கு அந்தப் புன்னகை தலீவர் 'ணங்..ணங்' என அருகாமையிலுள்ள சுவற்றில் முட்டிக் கொள்ள முற்படுவதைப் பார்த்தும் ; மடிப்பாக்கத்தில் ஒருத்தர் விழுந்தடித்துக் கொண்டு ரிவர்ஸ் கியர் போடுவதை  ரசிப்பதிலும், மக்கன் பேடாவோடு ஏதேனும் மூளைச்சலவைப் பேடா போட வாய்ப்புள்ளதா என்று வினவிடும் பெங்களூராரை ரசிப்பதிலுமே எழுந்து நிற்கிறது !) 

தொடர்வது SHERMAN என்றதொரு 6 பாகக் கதை !  இங்கும் களம் அமெரிக்காவே ! கால கட்டமோ - இரண்டாம் உலக யுத்தம் துவங்கிடும் தருணமும், அது முற்றுப் பெற்று உலகமெங்கும் ஒரு புனர்ஜென்மம் எடுக்க விளையும் 1950-களின் முதல் பகுதியும் ! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்கும் ராபர்ட் ஷெர்மன் சுட்டுக் கொல்லப்படுகின்றார் ! துடித்துப் போகும் அவர் தந்தை ஜே ஷெர்மன் தன ஒரே மகனின் கொலையின் பின்னணியினைத் துருவிப் புறப்படுகிறார் ! அந்த நீண்ட சதி வலையில் தனக்கும், தனது இறந்த காலத்துக்கும் பெரியதொரு பங்கிருப்பதை ஜே உணர்கிறார் ! அமெரிக்காவில் தொடங்கும் கதை ஜெர்மனிக்கும் நீள்கிறது ; யுத்தத்தின் பின்னணியில் ! ஒரு உலக யுத்தம் நிகழும் போது அந்நாடுகளில் தினசரி வாழ்க்கைகள் ; வர்த்தகங்கள் எவ்விதம் மாற்றம் காண்கின்றன ; யுத்த அரக்கனின் நிழலில், மனிதர்களுக்குள் தூங்கிக் கிடக்கும் பேராசை அரக்கன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதை இந்த 6 பாகத் தொடர் சொல்கிறது ! சித்திரங்கள் சற்றே நுணுக்கங்களின்றி இருப்பது போல் தோன்றினாலும், கதையோடு ஒன்றிப் போகும் வேளைகளில் நமக்குப் பெரிதாய் ஒரு வித்தியாசம் தெரியாது போய் விடுகிறது ! நிறைய விருதுகள் பெற்றுள்ள இந்தத் தொடரில் ஆங்கங்கே adults only விஷயங்கள் சரளமாய் வருவதன் காரணமாகவே இதனை "இரத்தப் படலத்தின்" வாரிசாய் நாம் இன்னமும் அறிவிக்காது இருக்கிறோம் ! நிறைய மனித உணர்வுகளை வெகு கிட்டே இருந்து காட்டிடும் இந்தக் கதைத் தொடர் 288 பக்கங்கள் கொண்டதொரு சாகசம் !! 
பிரெஞ்சுப் பதிப்புலகில் SOLEIL எனும் ஒரு சமீப காலத்து நிறுவனம் பல அட்டகாசமான கதைகளைத் தன்னிடம் கொண்டுள்ளது ! எனது சமீப ஊர்சுற்றல்களின் பொழுது இவர்களையும் சந்தித்ததன் பலனாய் SOLEIL -ன் படைப்புகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாய் தமிழில் பார்த்திடும் வாய்ப்பு உருவாகியுள்ளது ! இவர்களது கேட்லாக்கை பரிசீலனை செய்யவே ஒரு வாரம் பிடித்தது எனக்கு !! அவற்றுள் நமக்கு எது ஆகும், ஆகாது என்ற பரிசீலனை ஒரு பக்கமிருக்க - பார்த்த நொடியிலேயே என்னை மிரளச் செய்ததொரு படைப்பு தான் PANDEMONIUM என்றதொரு 168 பக்க - 3 பாகக் கதைத் தொடர் ! (தலைவிரித்தாடும் குழப்பம் ; திகில் என்பது போன்ற பொருள் எடுத்துக் கொள்ளலாம் !

திரும்பவும் கதை மையமிடுவது அமெரிக்காவினில் தான் ! 1951-ன் கோடைக் காலம் ; காச நோய் கண்ட தன இளம் மகளை அமெரிக்காவின் பிரசித்தி பெற்றதொரு TB சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு தாய் ! ஆனால் அங்கே அவர்கள் சந்திக்கப் போவது மருத்துவ சிகிச்சையினை அல்ல ; ஆனால் பல இருண்ட விவகாரங்களை மட்டுமே என்பதை அவள் அறிந்திருக்க வழியில்லையே ! என்றைக்கோ மூடப்பட்டிருந்த ரயில் தடத்தினில் இருந்து இரவினில் கேட்கும் ரயிலின் விசிலோசை ; திகைக்கச் செய்யும் சில திகில் தோற்றங்கள் என சிறுமி அங்கே சந்திப்பது எல்லாமே இருளின் ராஜ்யத்தை தான் !! மிரட்டலான சித்திரங்கள் ; நிஜ நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட இந்தக் கதையிலும் 'adults ஒன்லி' சமாச்சாரங்கள் தவிர்க்க இயலா விதத்தில் கதையோடு இணைந்து கிடப்பதால் இதனை என்ன செய்வதென்ற யோசனையில் மண்டையைப் பிய்ச்சிங் !! இது தான் அந்த சிகிச்சை மையம் பற்றிய நிஜத்தின் பின்னணி :  https://en.wikipedia.org/wiki/Waverly_Hills_Sanatorium

இரத்தம், ஆவி, TB என்ற பக்கமிருந்து திரும்பிட இதொவொரு மாற்றம் : "என் தாத்தா ஒரு ஆவியாக்கும் !!" என்ற தொடரோடு  !! இத்தாலிய தாய்க்கும், வியட்நாம் தந்தைக்கும் பிறக்கும் குட்டிப் பயல் தான் நம் கதையின் ஹீரோ ! பத்தே வயதுப் பாலகனின் தாத்தா இறந்து போய் விடுகிறார் ! பொடியனின் தாயும், தந்தையும், எலியும், பூனையுமாய் தினசரி சண்டை போட்டுக் கொண்டிருக்க - ஒரு விவாகரத்து விரைவில் அங்கே அரங்கேறும் சூழல் ! அப்போது தான் மேலுலகில் இருந்து தன பிரியமான ஈரானைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டுத் திரும்புகிறார் தாத்தா - ஆவியாய் ! இந்த நல்லெண்ண ஆவியால் பொடியனுக்கு நேரும் சங்கடங்களும், சௌகர்யங்களுமே  இந்தக் கதைத் தொடர் ! இடையிடையே அந்தப் பள்ளி வயசுச் சிரார்களுக்கே உரிய சிரமங்கள், வீட்டில் அமைதி இல்லாது போகும் சமயம் நேரும் சங்கடங்கள் என செல்லும் கதை இது ! வித்தியாசமாய்த் தோன்றியது ; இன்னும் கொஞ்சம் பரிசீலனை தேவை என முத்திரை குத்தி வைத்துள்ளேன் ! 

இன்னமும் எனது மேஜையில் குவிந்து கிடக்கும் கதைகள் எல்லாவற்றையும் பற்றி இங்கே ஒரு note எழுதுவதாயின் - கோழி கூவிடும் என்பதால் இத்தோடு இந்த 'out of the blue " பதிவை நிறைவு செய்து கொண்டு தலையணை தேடலில் கிளம்பிடுகிறேன் ! நாளைய பொழுதை கொழுக்கட்டைகளோடும் ; TV பட்டிமன்றங்களோடும் கழித்திடவிருக்கும் புண்ணியவான்களை நோக்கியொரு ஏக்கப் பெருமூச்சை விட்டபடிக்கு gud nite சொல்லிப் புறப்படுகிறேன் - எங்களுக்கு வழக்கம் போல் வேலை நாளை ! And "காலனின் காலம்" & சிறைப்  பறவைகள் அச்சாகும் நாள் கூட ! சுட்டி லக்கி ஏற்கனவே அச்சாகி விட்டது - என்பதால் அக்டோபர் அட்டவணையில் தோர்கல் மட்டுமே இப்போதைக்குப் பாக்கி ! Bye guys....! See you around !

Saturday, September 12, 2015

ஒரு அக்டோபர் அலசல் !

நண்பர்களே,

வணக்கம்.எதிர்பார்க்கவேயில்லை இந்த வெற்றிகளை...!!“; “ ஹைய்யோ... சந்தோஷ ஆச்சர்யமிது!“ என்றெல்லாம் நான் பீலா விடப் போவதில்லை நமது செப்டம்பர் இதழ்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் மீது கருத்துச் சொல்லும் முயற்சியினில் ! 
  • தெளிவாகவே தெரிந்திருந்தது நமது பேர்ரோ சிட்டியின் bad boy பௌன்சர் பலரக உணர்வுகளை நம்மிடையே கிளறச் செய்திடுவான் என்று! ‘இது தேவை தானா?‘ என்ற கேள்வியிலிருந்து; ‘அடேங்கப்பா‘ என்ற மிரட்சி வரையில் பௌன்சர் நிறைய reactions-களுக்குக் காரணமாக இருந்திடுவான் என்பதில் நம்மில் யாருக்குமே ஐயப்பாடிருந்திராது தான்! 

  • And – கேப்டன் பிரின்ஸின் (வண்ண) மறுபதிப்பு சத்தமில்லாமல் சிக்ஸர் அடிக்குமென்பதையும் யூகிக்க அதிக சிரமம் இருந்திருக்கவில்லை! கதையின் அந்தப் பனிக்களமும், ஓவியர் ஹெர்மனின் சித்திர அதகளமும் பற்றாதென கலரிங்கிலும் படைப்பாளிகள் கலக்கியிருந்தது நிஜமான visual treat-க்கு வழி வகுத்திருந்தது ! 

  • கமான்சே கதையினிலும் சித்திர / வர்ண மாயாஜாலங்கள் தொடர்ந்திட்டாலும் ‘ஸ்கூலுக்குப் போக மாட்டேன்‘ என்று அடம்பிடிக்கும் பச்சாவைப் போல ‘துப்பாக்கியைத் தூக்கவே மாட்டேன்!‘ என்று ரெட் பிடித்த அடம் தான் எனக்குள் லேசாக நெருடியது ! ‘அட.... க்ளைமேக்சில் மனுஷன் பொங்கி எழப் போகிறான் போலும்!‘ எனப் பார்த்தால் அங்கே கூட மலங்க மலங்க மொட்டைத் தலையோடு ஆசாமி  முழித்து நிற்பதைப் பார்த்த போது ‘ஆஹா... இன்னிக்கு 666 பண்ணையின் முன்னாள் ஃபோர்மேனுக்கு நம்மவர்களிடம் கும்பாபிஷேகம் காத்துள்ளது டோய்!‘ என்று மெல்லிய பயம் குடியேறியது எனக்குள்! ஆனால் ‘தட தட‘வென்று ஓடும் காட்டாற்று வெள்ளத்தையும் ரசிக்கத் தெரியும்; சலசலக்கும் சிற்றோடையையும் மதிக்கத் தெரியும் என்று உங்கள் ரசனைகளின் இன்னொரு பரிமாணம் தலைதூக்கியதால்  ரெட்டின் அந்த மொட்டைத் தலையும், எனது இந்த சொட்டைத் தலையும் தப்பித்தது! 

  • டைலன் டாக்கின் “வா.ஒ.வி“ பொறுத்தவரை இதனை ஆண்டின் இறுதி வரை நான் தள்ளிக் கொண்டே சென்றதற்கொரு சின்ன காரணமுண்டு தான்! டைலனின் ஆரம்பம் தடாலடியாக இருந்தாலும் தொடர்ந்த 2 கதைகள் நம்மிடையே so-so ரக வரவேற்பை மட்டுமே ஈட்டியிருந்தது தெரிந்த சமாச்சாரம் தானே? ‘இது அவசியம் தானா? ; அதிலும் இது வண்ணத்தில் அவசியம் தானா?‘ என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் “வா.ஒ.வி“ நிச்சயமாய் அந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதிலை வழங்கிடுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது ! தவிர டைலனை black & white-ல் போடவே வேண்டாமே என்ற அடம் ஜுனியர் எடிட்டரிடமிருந்தும் கூட! So- உறுதியான ‘ஹிட்‘ கதையை; கலக்கும் வர்ணங்களோடு ஆண்டின் இறுதியை ஒட்டிய நேரத்தில் களமிறக்கினால் தொடரும் ஆண்டின் அட்டவணையில் டைலன் டாக்கின் இடம் குறித்து எவ்வித சர்ச்சைகளும் இராதே என்ற யோசனை தான் டைலனின் செப்டம்பர் விஜயத்தின் பின்னணியில்! நிறைய லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே இருப்பினும் ஒரு மனதைத் தொடும் ஆக்கமாக இது இருந்திடுமென்ற நம்பிக்கையோடு இருந்தோம் & அது நிஜமானதில் சந்தோஷமே! 

So- ஒரு ‘ஹிட்‘ மாதத்து திருப்தியோடு நமது caravan புதிய இலக்கை நோக்கி நகர்ந்திடும் வேளையும் துவங்கி விட்டதென்பதால் – its time to look ahead ! தொடரும் அக்டோபரிலும் 4 இதழ்கள் உண்டு ; இந்த நான்குமே ஒன்றுக்கொன்று தொடர்பிலா genre-களில்; பாணிகளில் உள்ளவை தான் !

- தோர்கலின் ‘சாகாவரத்தின் சாவி‘
- சுட்டி லக்கியின் ‘புயலுக்கொரு பள்ளிக்கூடம்‘
- ரிப்போர்டர் ஜானியின் ‘காலனின் காலம்‘
- (மறுபதிப்பு) ‘சிறைப் பறவைகள்‘

ஒரு 104 பக்க இதழ்; இரு நார்மல் ரக இதழ்கள்; ப்ளஸ் ஒரு மறுபதிப்பு என்று கிட்டத்தட்ட இம்முறையும் சென்ற மாதத்தின் template தான் என்ற போதிலும் ‘அந்த மறுபதிப்புக்கும்‘; ‘இந்த மறுபதிப்புக்கும்‘ ஒரு வண்டி வேறுபாடு உள்ளது! 

கேப்டன் பிரின்ஸின் கதைகளுக்குப் பெரும்பாலும் “புராதனம்“ என்ற factor செல்லுபடியாவதில்லை! சமுத்திரங்களில் சாகஸம் செய்யும் இந்த rough & tough நாயகர்களை எந்தவொரு காலகட்டத்திலும் நாம் ரசித்திட சிரமமிராது என்பது என் நம்பிக்கை! ஆனால் மும்மூர்த்திகளின் ஒரு முக்கிய அங்கமான நமது லாரன்ஸ்-டேவிட் ஜோடியின் அந்நாட்களது ஆக்கங்களில் ‘நச்‘சென்று எழுபதுகளின் முத்திரை பதிந்திருக்கும்! ரோட்டில் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்று - ஒரு டப்பா காரில் தொற்றிக் கொண்டு போய் தெருக்கோடியில் உள்ள; ஃபோன் பூத்தில் உளவுத்துறைத் தலைமையகத்தை டேவிட் தொடர்பு கொள்வதை இன்றைய Iphone 6S தலைமுறை படிப்பதை என் மனக்கண்ணில் லேசாகக் கற்பனை செய்து பார்த்தேன் ; சிரிப்பதா; அழுவதா என்று தெரியவில்லை! ஆனால் இவர்களது மறுபதிப்புகள் ‘காலத்தின் கட்டாயம்‘ என்றதொரு சூழல்;மும்மூர்த்திகளை மறந்த நீ ஷெரீப் டாக்புல்லாகக் கடவாய்‘ என்ற ரேஞ்சில் சாபங்கள் என்றெல்லாம் ஈட்டிய பிற்பாடு நமக்கு வேறு மார்க்கமிருக்கவில்லை! இன்று இந்த மறுபதிப்புத் தண்டவாளத்தில் ஓடும் கரி எஞ்சின்கள் புராதனச் சின்னங்களாய் இருப்பினும் விற்பனையில் குறையே வைக்காது ‘குப்-குப்-குப்‘ என்று சீராய் ஓடுவதென்னவோ நிஜம் தான் ஆனால் அவ்வப்போது கண்ணில் விழும் அந்தப் ‘புராதன‘ கரித் தூசி தான் லேசாய் உறுத்துகிறது ! தொடரும் ஆண்டுகளில் மும்மூர்த்திகளும்; கூர்மண்டையரும் மறுபதிப்பு பவனியைத் தொடர்வது நிச்சயம் இதற்கென நாம் முதலீடு செய்துள்ளது ஒரு வளமான மன்னரின் பணயத் தொகைக்கு ஈடானது என்பதால் !! So தொடரும் நாட்களிலும் இந்த மறுபதிப்புகளின் பொருட்டு  உங்கள் ஆதரவு எங்களுக்கு ரொம்ப ரொம்பத் தேவை ! 

சிறைப் பறவைகள்‘ அந்நாட்களிலேயே பிரமாதமான மொழிபெயர்ப்போடு வெளியான கதையென்பதால் சிற்சில மாற்றங்களைத் தாண்டி பெரிதாய் பட்டி-டிங்கரிங் ஏதும் செய்திட அவசியப்படவில்லை! And- அந்தப் பெரிய சைஸில்; தெளிவான சித்திரங்கள் ரொம்பவே கம்பீரமாய் நடைபோடுகின்றன ! எனது கொள்ளுப்பேரன் காலத்திற்கு முன்பாக இவை மீண்டும் ஒரு சுற்று மறுபதிப்புக் காண்பது சாத்தியமில்லையென்பதால் lets enjoy these oldies one last time folks! உலகின் வேறு எந்த மூலையிலும் இவற்றை எந்த விலை கொடுத்தாலும் பார்த்திட முடியாது என்ற வகையில் we are truly unique with these Fleetway reprints !! 

மறுபதிப்பின் மீதான topic-ல் இருக்கும் போதே- சின்னதொரு விண்ணப்பமும் கூட! ‘ஒரேயொரு வேதாளர் கதையாச்சும் ப்ளீஸ்? ;வைரஸ்-X‘ மட்டுமாவது? ;மினி லயன்‘ மறபதிப்பு?‘ என்றெல்லாம் அவ்வப்போது வந்திடும் மின்னஞ்சல் வினவல்களுக்கு என்ன பதில் போடுவதென்றே தெரியாத நிலை தான் நம்மவர்களுக்கு ! So அத்தகைய கோரிக்கைகளை அனுப்பும் நண்பர்களே - சற்றே பொறுமையாய் இந்த மும்மூர்த்திகளின் last hurray விழாவை தொடரும் 2 / 3  ஆண்டுகளில் நாம் அழகாய் நடத்தியாகும்வரை காத்திருங்களேன்! அதன் பின்னர் மறுபதிப்புத் தடத்தில் உங்களின் wish list-ஐ தடதடக்கச் செய்திடலாம்! அதுவரையிலும் அவ்வப்போது தலைகாட்டும் பிரின்ஸ் / லக்கி / சிக் பில் / டெக்ஸ் மறுபதிப்புகள் தொடர்ந்திடத் தான் செய்யும் ; ஆனால் இந்த Fleetway சமாச்சாரம் முடிந்தான பின்னே மறுபதிப்புகளில் இன்னும் கூடுதல் variety பார்த்திடல் சாத்தியமாகும் !

அக்டோபரின் பரபரப்பு மீட்டர்களை பிசியாக வைத்திருக்கப் போகுமொரு முக்கிய நாயகரை இந்த வார முன்னோட்டத்தில் பார்த்திடப் போகிறோம்! And- இதுவே அவருக்கும் 2015ன் முதல் + இறுதி வாய்ப்பும் கூட! ரிப்போர்டர் ஜானி தான் அந்த ஆசாமி என்பதை நான் சொல்லவும் தான் வேண்டுமா என்ன? “காலனின் காலம்“ ஒரு அக்மார்க், ஜானி த்ரில்லர்! இதோ அந்த இதழின் அட்டைப்பட first look! ஒரிஜினல் டிசைன் + நமது ஓவியரின் கைவண்ணம் + நமது டிசைனரின் மெருகூட்டல் என்ற கூட்டாஞ்சோற்றுப் படைப்பு இது! சென்ற மாதம் Pastel shades-களில், மெல்லிய வர்ணங்களில் ராப்பர்களில் ஒரு பகுதி அமைந்திருந்தன... இம்மாதமோ ‘பளிச்‘ வர்ணங்களின் தருணம்! பாருங்களேன்:
இது final version அல்ல ; இன்னும் சிற்சிறு மாற்றங்கள் இதனில் உண்டு...! 
கதையைப் பொறுத்தவரை நான் புதுசாய் எதையும் சொல்லித் தான் ஜானியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நிலை கிடையாதென்பதால் இதுவொரு அனல் பறக்கும் சாகஸம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் ! And இம்முறையும் வர்ணஜாலங்கள் ஒரிஜினல்களில் பிரமாதமாய் அமைந்திருப்பதால்- நமது printing அகப்பையிலும் அழகாய் வந்திடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது! Fingers crossed ! அப்புறம் ஏற்கனவே நான் சொல்லியிருந்தது போல- ஜானி ஒரு முற்றிலும் மாறுதலான பாணியில்- புதுக் கதாசிரியர் / ஓவியர் கூட்டணியில்- புதிதாய் வலம் வரத் துவங்கியுள்ளார் - பிரெஞ்சு மொழியில். புத்தாண்டில் new look ஜானியை நாம் தரிசிப்போமா ? - அல்லது தற்போதைய பாணிக் கதைகளே தொடரட்டுமா? உங்கள் தேர்வு என்னவாகயிருக்கும் folks ?


சென்ற வாரப் பதிவின் தலைப்புகளை ‘மாத்தி யோசிக்கும்‘ போட்டிக்கு வந்திருந்த சில பல சீரியஸ் & not so சீரியஸ் முயற்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருந்தன ! ஒரு மாதிரியாய் 400+ பின்னூட்டங்களுக்குள் புகுந்து navigate செய்து பார்த்து விட்ட போது- எல்லாப் பெயர்களுமே அழகாய் இருப்பதாய்த் தோன்றியது ! இறுதில் நான் zone-in செய்தது நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் கீழ்க்கண்ட பெயர்களின் மீதே :
எனக்குள் ஒருவள் - (பௌன்சர்)
பனியுடன் ஒரு பந்தயம் (பிரின்ஸ்)
என் உடன் இறப்பே (டைலன்)
புரவியில் ஒரு துறவி (!!!) (கமான்சே)  

So- அறிவித்தபடியே 2016-ல் வரக் காத்துள்ள லக்கி லூக் சாகஸத்திற்குப் பெயரிடும் பொறுப்பை நண்பரிடம் ஒப்படைக்கிறோம்! கதையின் ஆங்கிலப் பெயர் ‘The Oklahoma Land Rush !' டெக்ஸ் கதையில் நாம் பார்த்த அதே குடியேற்றத்திற்கு இடம்பிடிக்கும் பிரயத்தனங்களை லக்கியின் ஸ்டைலில் சொல்லியிருக்கும் ஆக்கமிது ! So -அதற்கேற்றதொரு தலைப்பை தயார் செய்து சொல்லுங்களேன் கார்த்திக் ! ("சாத்விக் கா சிங்" போன்ற போஜ்புரி தலைப்புகள் நஹி சாஹியே !)

And caption எழுதும் போட்டிக்கு நண்பர் ரமேஷ்குமாரின் இந்த வரிகள் tick அடிக்கப்படுவதால் லக்கி லூக்கின் ஆங்கில இதழொன்று நமது அன்பளிப்பாய் அவருக்கு அனுப்பப்படும் !
 டெக்ஸ் Says: நீ எந்தக் கதை வில்லனப்பா? எப்படி செத்துப் போனாய்? 

Zombie 1 Says: நான் வில்லனெல்லாம் கிடையாது. "சலூனே சமாதி" (வெளியீடு நிர் #4355) கதையில் ஒரு உதாருக்காக நீ மேல் நோக்கி சுட்டபோது மாடி ரூமில் சம்பந்தமில்லாமல் செத்தவன் நான்... உன்னை..!!!

Zombie 2 Thinks: அதோ... எவனுடைய தொப்பியையோ குறிவைத்து சுடுகிறேன் பேர்வழியென்று பின்னாலிருந்த என் தொப்பைக்குள் குண்டு அனுப்பியவன்.. தோ வரேன்..

மறக்கும் முன்பாக ஏற்கனவே "The லயன் 250"-க்கான பெயர் முன்மொழிந்தமைக்கு போராட்டக்குழுத் தலீவருக்கும், மாயாவி சிவாவுக்கும் டெக்ஸ் கதாசிரியரின் ஆட்டோகிராப் தாங்கிய இதழ் இந்த மாதம் நமக்கு எட்டி விடும் ! இத்தாலியில் ஆகஸ்டில் கோடை விடுமுறைகளென்பதால் ஜுலை கடைசி முதலாகவே திரு.போசெல்லி   அவர்களை எட்டிப் பிடிக்க இயலவில்லை என்பதே தாமதத்திற்குக் காரணம்!

Moving on, நமது டி.வி. விளம்பர முயற்சிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன ! தினத்தந்தி TV & News 7 சேனல்களின் prime time-ல் சனி & ஞாயிறுகள் தொடர்ச்சியாய் air செய்யப்படும். அடுத்த மாதம் முதல் சன் நியூஸ்; புதிய தலைமுறை என்று முயற்சிக்கவுள்ளோம். ‘டி.வி.யா? அதெல்லாம் நல்லிக்கும்; லலிதா ஜுவல்லரிக்கும் தான் தாக்குப் பிடிக்கும்!‘ என்று எண்ணிக் கிடந்த என்னை அசைத்துப் பார்த்த புண்ணியம் ஜு.எ.வைச் சாரும்! ராத்திரியே விளம்பரங்களுக்கான பலன்கள் தெரியாவிட்டாலும் சிறுகச் சிறுக நம் வட்டம் பெருகிட இந்தத் துவக்கம் ஒரு பலன் தருமென்ற நம்பிக்கையுள்ளது !

அப்புறம் சென்ற பதிவில் டாக்புல்லின் ரசிக சிகாமணி - கிட் ஆர்ட்டின் கண்ணன் நீளமாய் எழுதியிருந்த "லுலுலாயி காவியத்துக்குப்" பாராட்டாய் 'என் பெயர் டைகர்' hard cover வண்ணப் பதிப்பு ஒன்றினை அன்பளிப்பாய் இங்குள்ள நண்பர் ஒருவர் வழங்கிட ஆசை தெரிவித்து நமக்கு மின்னஞ்சல் செய்துள்ளார் ! So அந்த ரசிகரின் வாழ்த்துக்களோடு 'எ.பெ.டை' உங்களைத் தேடி வந்திடும் கண்ணன் ; நீங்கள் இதற்கென முன்பதிவு செய்திட வேண்டியிராது !


Before I log off – இதோ இன்னுமொரு வாய்ப்பு உங்கள் கற்பனைக் குதிரைகளைக் களமிறக்க ! இங்கிலாந்தில் ஒரு காமிக்ஸ் ஆர்வலர் இந்தச் சித்திரத்தை ஓவியர் ஒருவரைக் கொண்டு பிரத்யேகமாய் தயார் செய்திருக்கிறார் ! நம் ஆதர்ஷங்கள் இருவர் இதனில் இருப்பதைப் பார்த்த போது உங்களோடு இதனைப் பகிர்ந்திடத் தோன்றியது ! இதற்குப் பொருந்துமொரு நயமான caption ஒன்றினை எழுதுங்களேன் ?! ஆளுக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே guys! இம்முறை பரிசு  ரிப்போர்டர் ஜானியின் நியூ லுக் ஆல்பம் ! 

And என்றோ ஒரு சமயம்  எனக்கு சில பல டஜன் தர்ம அடிகளை வஞ்சனையின்றிச் சம்பாதித்துக் கொடுத்த ஒரு episode 2016-ல் காத்துள்ளது என்ற சேதியோடு புறப்படுகிறேன் ! யார் அதன் நாயகர் ? - அந்த சாகசம் எதுவென்று யூகிக்க அதிக சிரமிராது என்ற நம்பிக்கையோடு நடையைக் கட்டுகிறேன் ! Bye now all ! Have a wonderful Sunday !  

Sunday, September 06, 2015

பதிவில்லா ஞாயிறா ?

நண்பர்களே,

வணக்கம்.ஞாயிறுப்  பதிவுகள் உங்களுக்கு எவ்விதமொரு பழக்கமாகி விட்டனவோ  - அதே கதை  தான்  எனக்கும் - சனியிரவு முதற்கொண்டே மண்டைக்குள் வசன நடை  ஓடத் தொடங்கிவிடுகிறது !! ஆனால் அழுத்தமான சில கதைகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் நமது focus அவற்றின் மீதும், அவற்றின் விமர்சனங்கள் மீதும் லயித்து நிற்பது நலமே என்று தோன்றியதால் , கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு பிரேக் விடத் தீர்மானம் செய்தேன் ! எனினும், ஞாயிறு காலை எழுந்த நேரம் முதலாய்ப் பாயைப் பிறாண்டாத குறை என்பதால் இதோ ஆஜர் - சில இலகு ரக சிந்தனைகளோடும், கேள்விகளோடும்   !!

முதலில் நான் கோர எண்ணியது இம்மாத இதழ்களுள் ஒன்றான சா.ஒ.சி. தொடர்பானதொரு கேள்வி guys ! கமான்சே தொடரானது டெக்ஸ் பாணியிலோ ; டைகர் பாணியிலோ ;   தடாலடிக் கதைகள் ஆகாது என்பதில் இரகசியமில்லை ! கதையின் தலைப்புக்கு நியாயம் செய்வது போல் நாயகர் ரெட் பொதுவாகவே கொஞ்சம் சாது தானே ! ஹெர்மனின் சித்திர அதகளம் தான் இவருக்கு ஒரு பெரும் பூஸ்ட் என்பதில் சந்தேகமில்லை ! My question is : தொடரும் காலங்களில் கமான்சே தொடர்வதில் உங்களுக்கு இசைவு தானா ? 2016-ன் நம் அட்டவணையின் கடைசி ஒன்றிரண்டு சீட்களில் நாயகர்கள் துண்டைப் போட்டு இடம்  பிடிக்கும்  தருணமிது என்பதால் இந்தக் கேள்விக்கான உங்கள் பதில்களுக்கு மதிப்பு நிறையவே உண்டு  folks !! ஆகையால் இம்மாத இதழைப்  படித்த  பின்பு  உங்களின் சிந்தனைகள்  please ?! 

தொடர்வது இன்னொரு விளிம்பு நிலை நாயகர் டைலன் பற்றிய கேள்வி !! இவரது கதைகளைப் போட்டால் உள்ளூரில் விற்கிறதோ - இல்லியோ, இத்தாலியில் வரிந்து கட்டிக் கொண்டு ஆர்டர்களைக் குவித்து விடுகிறார்கள் என்பது கண்கூடு ! அதற்குள்ளாய் சுமார் 200 பிரதிகள் பீட்சா தேசத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டன !! "வாராதோ ஓர் விடியலே ?" டைலனின் கதை வரிசையினில் ஒரு மாறுபட்ட படைப்பு என்பதால் இது நிச்சயமாய் நம்மிடம் ஷொட்டுக்களைப் பெறுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது ! And இவை ரொம்பவே ஆரம்ப நாட்கள் மட்டுமே என்ற போதிலும், இதுவரையிலான விமர்சனங்கள் thumbs up ரகமே என்பது புரிகிறது ! இங்கே எனது கேள்வி - டைலன் தொடர வேண்டுமா ? ; வேண்டாமா ? என்பதல்ல ; டைலன் கலரில் தொடர்வது ஓகே-வா - அல்லது இவருக்கு கருப்பு-வெள்ளை போதுமா என்பதே ! இது பற்றிய உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் ?
Moving on - நமது இம்மாத மறுபதிப்பு இதழ் தொடர்பாய் ஒரு பொதுவான கேள்வி ! இதற்கான பதில்களைத் தெரிந்து கொண்டு நான் உடனடியாய் ஒரு action plan -ஐ  அமலுக்கு கொணரப் போவதில்லை எனினும், மண்டையின் ஒரு மூலையில் நிற்கும் இவை தொடர்பானதொரு long term planning -க்கு உங்கள் பதில்கள் உதவிடும் என்று தோன்றுவதால் கேட்டு வைக்கிறேன் ! நமது முத்து காமிக்ஸின் மறுபதிப்புகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க - அதே பாணிகளில் மீண்டும் black & white இதழ்களாக அல்லாது ( லயனின் / திகிலின் / மினி-லயனின் டாப் ஹிட்ஸ் கதைகளுள்) நீங்கள் வண்ண அவதாரில் பார்த்திட விரும்பும் கதைகள் எவையாக இருக்கும் ? சின்னதாய் ஒரு பட்டியல் மட்டும் ப்ளீஸ் - with your டாப் 6 selections ? இங்கே 'தலையின்' கதைப் பட்டியல் வேண்டாமே - ப்ளீஸ் ; அதைத் திகட்டத் திகட்டக் கேட்டாகி விட்டோமே !  பிரின்ஸ் போன்ற கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பிடுவதெனில் பெரிய பட்ஜெட்களுக்கு அவசியமின்றிப் போய் விடுகிறது என்பதால் இது போன்ற கதைகளுக்குள் உங்களின் தேர்வுகளை அமைத்திட்டால் சுலபமென்பென் !

எனது கேள்வி எண் நான்கு - ஜாலியானது ! சென்ற பதிவின் தலைப்பை இம்மாத இதழ்களின் தலைப்புகளுக்கு apply செய்து - கொஞ்சம் மாற்றித் தான் யோசியுங்களேன் guys  ? இதே 4 இதழ்களுக்குப்  புதிதாய் பெயர்கள் சூட்டுவதெனில் உங்களின் உருவாக்கங்கள் என்னவாக இருந்திடும் ? Leg  pulling ரகத்தில் இல்லாது - சீரியசாக முயற்சித்துப் பாருங்களேன் ? BEST 4 மாற்றுப் பெயர்களை முன்வைக்கும் நண்பருக்கு - 2016-ன் ஒரு லக்கி லுக் இதழுக்கான பெயர்சூட்டும் உரிமையைப் பரிசாக்கிடுவோமே ! 

கேள்வி எண் 5 - மீண்டும் கொஞ்சம் long  term  planning தொடர்பானதே ! BATMAN கதைகளுக்கான உரிமைகளைப் பெற்றிட நாம் குட்டிக்கரணங்கள் அடித்து வருவதைப் பற்றி  ஏற்கனவே  சொல்லியிருந்தேன் ! அதனில் 90% வெற்றி கண்டுள்ள நிலையில் - அடுத்த 4 ஆண்டுகளுக்காவது நாம் வெளியிட எண்ணிடும் BATMAN கதைகளைக் கொண்டதொரு மெகா பட்டியலை உருவாக்கிட வேண்டியுள்ளது ! ஐரோப்பாவில் போல ஒவ்வொரு மூன்று மாதமும் ஆர்டர் தந்து அவ்வப்போது கதைகளை வாங்கிக் கொள்ளும் வசதிகள் இங்கே கிடையாது என்பதால் - ஏக் தம்மில் ஒட்டு மொத்த selection களையும் தெரியப்படுத்திடும் அவசியம் இங்குள்ளது ! இயன்ற அளவு நான் முயற்சி செய்து வரும் போதிலும், ஒற்றை ஆளாய் BATMAN கதைக் கடலினுள் மூழ்கி எல்லா முத்துக்களையும் கரை சேர்ப்பது   அசாத்தியம் !   So - உங்களுள் உள்ள BATMAN ரசிகர்கள் / collectors இதனில் எனக்கு உதவிட வேண்டி வரும் guys !! உங்களின் வாசிப்புக் களங்களில் இருந்து தரமான ; நமக்கு ஒத்துப் போகக் கூடிய கதைகளின் பட்டியல்களைப் போட்டு அனுப்பிட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ?! 

கோரிக்கை # 6 - நம் இரவுக் கழுகாரைச் சார்ந்தது ! ஈரோட்டில் நாம் மறுபதிப்பிட தேர்வு செய்த "பழி வாங்கும் புயல்" கதையின் ஒரிஜினல் இத்தாலியப் பெயரினை தேடிக் கண்டு பிடிக்கும் பணி நம் முன்னே நிற்கிறது ! அந்நாட்களில் பொனெல்லியில் ஆர்டர் செய்வது கடுதாசி மார்க்கமாய் எனும் பொழுது முறையாக அந்த விபரங்களை நாம் database -ல் போட்டு வைத்திருக்கும் சாத்தியமில்லை ! And அந்நாட்களது டெலெக்ஸ் ; பாக்ஸ் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாமே இப்போது வெள்ளைக் காகிதங்களாய் மட்டுமே பைல்களில் துயில் பயில்கின்றன ! So - யாரேனும் நண்பர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பின், ஏன் வேலை சற்றே சுலபமாகிடும் ! 

Before I sign off - கனமான கதைகள் கொண்டதொரு வார இறுதியினை லேசாக்கிட ஒரு லேசான முயற்சி ! இதோ உள்ள நம்மவரின் சித்திரத்துக்குப் பொருந்தும் ஒரு நயமான caption எழுதிடுங்களேன் !! சிற்சில நிபந்தனைகள் ப்ளீஸ் : ஆளுக்கு மூன்றே வாய்ப்புகள் மட்டுமே ; and இது இன்று ஒரு நாளைக்கு மட்டுமான போட்டி மட்டுமே ; so இன்றிரவுக்குள் இதன் கடையை மூடி விடுவோம் ! வெற்றி பெறும் வாசகருக்கு ஒரு CINEBOOK ஆங்கில லக்கி லுக் இதழ் நம் அன்பளிப்பு ! so தட்டி விடலாமே அந்தக் கற்பனைப் புரவிகளை !! Bye for now all ! see you around soon !

P.S : And இன்னமுமொரு முக்கிய கேள்வி : இருக்கும் நாயகர் பட்டியலே ஆஞ்சநேயர் வால் போல் நீண்டு நிற்கும் போது - இப்போதைக்குப் புது அறிமுகங்களும் அவசியம் என்று நினைக்கிறீர்களா guys - அல்லது தற்போதைய தொடர்கள் ஏதேனும் முடிவுறும் வரை புதுசுக்குள் தலை நுழைக்காது இருப்பதே உத்தமம் என்று சொல்வீர்களா ?

Saturday, September 05, 2015

காலை எழுந்தவுடன் கூரியர்....!

நண்பர்களே,

வணக்கம். என்னவோ தெரியவில்லை - கடைசி மூன்று மாதங்களாகவே நமது டெஸ்பாட்ச் தினம் ஒரு வெள்ளிக் கிழமையாகவே அமைந்து  வருகிறது ! அதிலும் இன்றைக்கு எங்கள் நகரில் காலை 9 முதல் இரவு 7 வரை முழு மின்தடை என்ற குண்டை E.B தூக்கிப் போட்டிருந்தது வியாழன் இரவினில் ! வார இறுதிக்குள் உங்கள் கைகளில் புத்தகங்கள் இல்லாது போனால் லியனார்டோ தாத்தா தனது அசிஸ்டண்டுக்குத் தரும் 'கவனிப்பு' தான் நமக்கும் கிட்டும் என்ற பரபரப்போடு பைண்டிங் பணியாளர்களையும், நமது பேக்கிங் பணியாளர்களையும் பகல் பொழுதில் சுத்தமாய்ப் பெண்டைக் கழற்றி விட, மாலை 4 மணிக்கு முன்பாகவே உங்களின் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன - 4 இதழ்கள் அடங்கிய டப்பாக்களில் ! அசாத்திய வேலை இன்றைக்கு நம்மவர்களுக்கு !! So -நாளைக் காலையில் உங்கள் நகர் கூரியர்களின் கதவுகளின் வலிமைகளைப் பரிசோதிக்கத் தொடங்கிடலாம் ! 

And "என் பெயர் டைகர்" பற்றிய அறிவிப்பை இம்மாத இதழ்களில் ஏதேனும் ஒரு மூலைக்குள் நுழைக்க வாய்ப்பில்லாது போய் விட்டது இந்த மின்தடை சிக்கலினால் ! எங்கள் UPS தாக்குப் பிடித்த வரைக்கும் இதற்கான அறிவிப்பு + முன்பதிவுப் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து பிரதிகளுள் நுழைத்திருந்தோம் ; but அது ஒரு 100-ஐத் தாண்டியிராது !! So இதுவே நமது முதல்  official அறிவிப்பாய் எடுத்துக் கொள்ளுங்களேன் guys ! ஒரு முழு வண்ண deluxe பதிப்பு + ஒரு economy black & white பதிப்பு என்ற இந்த பரீட்சார்த்த பார்முலாவுக்கு பெரும்பான்மை நண்பர்கள் thumbs up தந்திருப்பதால் - we are going ahead with it as planned !! (மாயாவி.சிவா : உங்களுக்கு மட்டும் மாற்றிப் பொருள்பட்டதன் காரணம் விளங்கவில்லை எனக்கு !! ; ஏதேனும் ஒரு வடிவம் மட்டும் தான் சாத்தியமெனில் அந்த சாய்ஸை நான் வழங்கியிருக்கவே மாட்டேனே - கண்ணை மூடிக் கொண்டு குறைந்த விலையிலான economy பதிப்புக்கு அறிவிப்பே வெளியிட்டு இருப்பேனே ?!! இந்த dual edition பற்றிய உங்களின் சிந்தனைக் கோரல் தானே கடந்த பதிவின் நோக்கமே ?!)
Color Advt in the morning !! Don't have the files with me now !!
And - மிஸ்டர்.டைகர் கதைவரிசையில் 5 கதைகளா - 6 கதைகளா ? என்ற சந்தேகமும் வேண்டாமே ! இந்தக் கதைச் சுற்றில் மொத்தம் 5 பாகங்களே & இந்த சாகசம்  5 பாகங்களில் நிறைவு பெறுகிறது ! ஆனால் நான் கடந்த பதிவினில் 5+1 என்று குறிப்பிட்டுச் சென்றிருந்தது காரணத்தோடு தான் ! படைப்பாளிகள் இந்த 5 பாகக் கதையின் மையப் புள்ளிகளை ஒன்று திரட்டி ஒரு விதமான ரீமேக் செய்து ஆறாவதாய் ஒரு ஆல்பத்தை 2007-ல் வெளியிட்டுள்ளனர் ! சொல்லப் போனால் டைகர் தொடரின் இறுதி ஆல்பம் என்ற வகையில் இதுவொரு collector's edition ! ஆனால் அதே கதையைப் புதியதொரு பார்வைக் கோணத்தில் சொல்லியுள்ளது மட்டுமே வித்தியாசம் !  So இதனையும் தற்போது "எ.பெ.டை" கதையோடு இணைத்து விட்டால் ஒரே கிச்சடியை மாறி மாறிக் கிளறியது போல் ஒருவித அலுப்புத் தட்டி விடும் ! "எ.பெ.டை" வெளி வந்து கொஞ்ச அவகாசத்துக்குப் பின்பாக இந்த one shot  62 பக்க அல்பத்தை (தேவையென்று நினைப்பின்) வெளியிட்டுக் கொள்வோமே ?!

இதனில் கதாசிரியர் சார்லியரின் பங்கும் உண்டு என்பதால் - சேகரிப்பின் பொருட்டு இதற்கொரு பிரத்யேக மதிப்பிருக்கலாம் ! 

சரி...நாளைய பொழுது பௌன்சரின் பொழுதா ? டைலனின் பொழுதா ? என்ற கேள்விக்கு பதிலறியக் காத்திருப்போம் - ஆவலாய் ! படிக்கப் படிக்க ஒவ்வொரு இதழ் பற்றியும் உங்களின் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ! Bye for now guys !!

P.S : மதுரைப் புத்தக விழாவின் இறுதி 3 நாட்கள் காத்துள்ளன ! காலை முதல்  நமது ஸ்டாலில் புதிய வெளியீடுகள் கிடைக்கும் ! Please do visit !!