Tuesday, September 30, 2014

ஒரு மழை நாளின் நன்றிகள் !

நண்பர்களே,

வணக்கம். நேற்றைய மாலை அக்டோபரின் சந்தாப் பிரதிகளை கூரியர்களில் அனுப்புவதே ஒரு பெரும் சாகசமாய்ப் போய் விட்டது ! சனிக்கிழமை மதியம் வரை கார்சனின் கடந்த காலம் அச்சுப் பணிகள் நடந்து கொண்டிருக்க, பைண்டிங்கிலோ "வீதியெங்கும் உதிரம் " ஓடிக் கொண்டிருந்தது ! 'திடு திடுப்பெனக் ' கடையடைப்பு ; சங்கடமான சூழல் என்றானவுடன் கதவுகளைப் பூட்ட வேண்டிய நெருக்கடி ! 'சரி..இம்முறை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியப் போவதில்லை ...அசடு வழிய என்ன வழி ? என்று யோசிக்கத் தொடங்கினேன் ! 'இரவில் பணி செய்ய வாய்ப்புக் கிட்டுகிறதா - பார்ப்போம் என நம்மவர்களிடம் மெதுவாய்க் கேட்டுப் பார்த்தேன் ; துளியும் தயக்கமின்றி அச்சகப் பிரிவினர் இரவில் ஆஜராகி விட்டனர் ! ராக்கூத்து முழு வீச்சில் அரங்கேற ஞாயிறு காலையில் பக்கங்கள் சகலத்தையும் தயார் செய்தும் விட்டோம் ! அதே போல நமது பைண்டிங் கான்ட்ராக்டரிடமும் ஞாயிறு வேலை செய்து தர முடியுமா என ஒரு கொக்கியைப் போட்டு வைத்திருந்தேன் ; 'சரி' என்று அவர் தலையசைத்திருந்த போதிலும் எனக்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது ! ஆனால் ஞாயிறு காலையில் 'டாண்' என அவர்களும் வந்து மடிப்பு இயந்திரத்தில் வேக வேகமாய் கா.க.கா. பக்கங்களை மடிக்கத் துவங்க ; திங்கள் பகல் பொழுதில் சுடச் சுட 3 இதழ்களுமே நம் ஆபீசில் இருந்தன !! புத்தகங்கள் வந்து மட்டும் கதைக்கு ஆகாதே - அவற்றை டெஸ்பாட்ச் செய்யவும் வேண்டுமல்லவா ? மதிய உணவிற்கு 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் பேகிங் பணிகளில்  பம்பரமாய் சுழல - பிற்பகலில் கூரியர் அலுவலகங்களை முற்றுகை இட முடிந்தது ! இரவு வீட்டுக்குச் செல்லும் போது தலைக்குள் ஒற்றை சிந்தனை மட்டுமே - "எப்படி இருந்த நாங்கள் - இப்படியாகி விட்டோமே ?!!" இலக்குகளை நிர்ணயம் செய்வது ; அந்தத் தேதிக்குள் பணிகளை முடிப்பது ; என்பதெல்லாம் சமீப காலங்கள் வரை நமக்கு ரொம்பவே அந்நியமானவை ! ஆனால் இங்கு நிலவும் அந்த உற்சாக எதிர்பார்ப்பும்  ; ஒரு மாதத்து இதழ்கள் வெளியாகி, மறு மாதத்துப் பிரதிகள் வரும் வரை நிலவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும் ஒன்றிணைந்து எங்களது குட்டி டீமுக்கு சிறகுகளை நல்குவது புரிகிறது ! Thanks all - for driving us on..! 

இம்மாத இதழ்களின் பின்னணியில் எங்கள் டீமின் சாகசங்கள் இன்னமும் கூட உள்ளன ! 'அதைக் கிழித்தேன் ; இதைப் பாய்ந்தேன்!' என நான் விடும் வழக்கமான உதார்களின் மத்தியினில் கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு எங்கள் அணியின் பணிகளைப் பற்றி சிலாகித்துக் கொள்கிறேனே ?!! நமக்குப் பிரதானமாய் டைப்செட்டிங் செய்து கொண்டிருந்த பெண்மணிக்குத் திருமணம் என சமீபத்தில் நான் இங்கு எழுதியது நினைவிருக்கலாம் ! பெண்ணுக்குத் திருமணமாகி ஊர் விட்டுச் செல்கிறாளே ! என பெற்றோர் கலங்கினார்களோ - இல்லையோ ; நான் ரொம்பவே கவலைப்பட்டேன் ! துவக்கத்தில் கொஞ்சமாய்த் தடுமாறினாலும், பின்னாட்களில் நமது தேவைகளை ; அவசரங்களை ; அந்தர்பல்டிகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டு அழகாய்ப் பணி செய்த பொறுமைசாலி ! கடந்த 2.5 ஆண்டுகளில் நமது பணிகளின் 70% செய்த புண்ணியம் அவரையே சாருமெனும் போது - திடுதிடுப்பென அவருக்கொரு replacement தேடுவதில் நிறையவே மொக்கை போட்டோம் ! ஆனால் இன்றைய கணினியுலகில் திறமைசாலிகளுக்கா பஞ்சம் ? ரமேஷ் என்றதொரு டிசைனர் நம்மிடம் தற்போது பணியாற்றி வருகிறார் - மிகவும் திறன்படவே ! இம்மாதத்து கா.க.கா. ராப்பர் ; காலனின் கைக்கூலி உட்பக்க டைப்செட்டிங் என அனைத்தும் அவரது கைவண்ணங்களே ! இவர் தவிர நமது அலுவலகத்தில் இன்னும் இரு புதுமுகங்கள் டெஸ்பாட்ச் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளுக்காக இணைந்துள்ளனர் ! சுகவீனத்திலிருந்து சிறுகச் சிறுகத் தேறி வரும் நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இனி முழு நேரமும் பணியாற்றும் பொறுப்பில் இருக்கப் போவதில்லை ; வாரம் இரண்டல்லது ; மூன்று நாட்கள்  மட்டுமே வந்து செல்வார் ! அவரது இடத்தை இட்டு நிரப்பும் பணியினை அற்புதமாய்ச் செய்து வருவது ஸ்டெல்லா தான் ! தினமும் ஒலிக்கும் நம் தொலைபேசிகளை சமாளிப்பது முதல், சந்தாப் பிரதிகளின் அனுப்புதல் ; முகவர்களின் ஆர்டர்களைக் கவனிப்பது என 'ஆல்-இன்-ஆல்' இவரது பொறுப்பே ! Pre Production-ல் சகலமும் மைதீன் எனில் ; Post Production-ல் அத்தனை பொறுப்புகளும் ஸ்டெல்லாவுக்கே ! இது போன்றதொரு dedicated ஒத்தாசை இருக்காவிடின் நான் சுவற்றைப் பிறாண்டத் தான் அவசியமாகியிருக்கும் ! Thanks my team !!


கா.க.கா.வின் அட்டைப்படம் இதோ - மாலையப்பன் + நமது டிசைனர் ரமேஷின் கூட்டணிக் கைவண்ணத்தில் ! இந்த டிசைன் 2015-ன் பிறிதொரு டெக்ஸ் சாகசத்திற்காக வரையப்பட்டதொன்று ; கா.க.கா.விற்கென வரையப்பட்ட ஓவியம் எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்ததால் - கடைசி நிமிட switch இது ! 'மண்டை ஓட்டிற்கு இங்கென்ன வேலை ?' என்ற யோசனைக்கு நேரமிருக்கவில்லை என்பதால் டெக்ஸ் + கார்சனோடு திருவாளர் மண்டையாரும் அட்டையில் ஆஜர் ! கா.க.கா. இதழும் ஒரு விதத்தினில் one-off ! இந்தப் பக்க எண்ணிக்கைகளுக்கும் - விலைக்கும் துளியும் சம்பந்தமோ - ஒப்பீடோ கிடையாது ! சந்தாத் தொகைக்குள் இதனை இணைத்ததாக வேண்டிய கட்டாயம் என்பதால் கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டோம் ! But - இதே சைஸ் ; பக்கங்களோடு இன்னுமொரு இதழ் வெளியாகும் வேளையில் விலை சத்தியமாய் நிரம்ப மாறுபடும் ! இப்போதைக்கு happy reading guys !!

COMING in 2015.....
அப்புறம் அந்த CAPTIONS எழுதும் போட்டி தொடர்கிறது ; புது பின்னூட்டங்களை இனி இங்கே   போட்டு வைத்தால் எனக்குத் தேடித் பிடிக்கும் பணி கொஞ்சம் மிச்சமாகும் ! Carry on the fun !!


விடுமுறைகளுக்கு முன்பாக இம்மாத இதழ்கள் மூன்றையும் உங்களிடம் கூரியர் அன்பர்கள் ஒப்படைத்து விடுவார்களென்ற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! காலனின் கைக்கூலி இதழைப் பற்றிய உங்கள் அபிப்ராயங்களை அறிந்திட எக்ஸ்ட்ரா ஆவலாய்க் காத்திருப்போம் ! (நம் அலுவலகம் வியாழன் & வெள்ளியில் விடுமுறை என்பதை நினைவூட்டுகிறேன் !) தீபாவளி மலரின் பணிகள் மேஜையில் நடுநாயகமாய்க் காத்திருப்பதால் அதற்குள் மூழ்கிடும் நேரமிது ! Adios amigos !

P.S : Facebook மற்றும் சமூக வலைத்தளங்களே புதிய தலைமுறையை எட்டிப் பிடிக்கும் சுலப வழி என்றாகிப் போன நிலையில் - உங்களது facebook நண்பர்களுக்கு நமது வலைப்பக்கங்களை share செய்திட்டால் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கூடிட வாய்ப்புண்டே ? Please do share our posts folks ! (ஜூனியர் எடிட்டர் முன்வைக்கச் சொன்ன கோரிக்கை இது ! :-) )

Sunday, September 28, 2014

கனவிலும்..நனவிலும்...!

நண்பர்களே,

வணக்கம். வானமும், பொதுவான ஊர் நிலவரமும் இருண்டு கிடக்கும் ஒரு ஞாயிறின் காலை வணக்கங்கள் ! 'திடு திடுப்'பென நேற்றைக்குப் பிற்பகல் கடையடைப்பு ; ஆபீஸ்களுக்கு விடுமுறை என்றதின் ஒரே வெளிச்சக் கீற்றாய் அமைந்தது வண்டி வண்டியாய் வந்து - என்னைச் சூழ்ந்து கிடக்கும் காமிக்ஸ் சாம்பிள்களைப் படிக்கக் கிடைத்த நேரமே என்று தான் சொல்லுவேன் ! "கனவெல்லாம் காமிச்சே !" என்ற தலைப்பில் எப்போதோ ஒரு பதிவிட்டதாய் ஞாபகம் ; அதே பெயரை இன்னுமொருமுறை இரவல் வாங்கிக் கொள்ள முடிந்தால் இந்தப் பதிவுக்கும் கூட அதனையே தலைப்பாக்கி இருப்பேன் ! தூக்கத்தில் விரிவதோ டெக்ஸாஸ் பாலைவனமும் ; தோட்டாவே நிரப்பாமல் ஓராயிரம் முறை முழங்கும் துப்பாக்கிகளும் ! புரண்டு படுத்தால் - 'சர்ர்-புர்ர்- ரென்று சீரும் கார்களில் ஸ்டைலாகப் பறக்கும் டிடெக்டிவ் நாயகர்கள் ; உற்றுப் பார்க்க முனைகிறேன் - ஒரு பயலின் முகமும் தென்படமாட்டேன்கிறது ! சரி...கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் படுப்போம் என்று முயற்சித்தால் - ' அன்பார்ந்த செல்லக் குழந்தைகளே'  என்ற விளிப்போடு ஹாட்லைன் எழுதுவது போலொரு பயங்கரக் கனவு ! 'ஆத்தாடி !' என்று எழுந்து உட்காருகிறேன் ! 2015-ன் அட்டவணையை இறுதி செய்வதற்கு முன்பாக "காமிச்சொமேனியா" ரொம்பவே சீரியஸ் ரகமாகிவிடும் போலுள்ளது ! சரி... பூதம் புதையலைக் காப்பது போல் மண்டைக்குள்ளே வைத்து 'தேவுடு' காப்பதை விட - விஷயங்களைக் கொஞ்சமே கொஞ்சமாய் உங்களோடு பகிர்ந்திட்டல் நலம் எனத் தோன்றியது ! அட்டவணை கையில் கிடைக்கும் வரை ஆர்வமும்,  சஸ்பென்சும் தொடர்ந்திட வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என்பதால் - புது வரவுகளைப் பற்றி ஜாஸ்தி வாயைத் திறக்காமல் இருக்க முயற்சிப்பேன் ! கெலிக்கப் போவது  பெவிகாலா ? ஒட்டைவாயா ? என்பதைப் போகப் போகவே பார்த்தாக வேண்டும் !

ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல - இத்தனை கதைவரிசைகள் நம்மிடம் இருக்கும் வேளையில் கூட 'யார் பெயர்களை அணிக்குள் முதலில் 'டிக்' அடிப்பது ?' என்பதில் பெரிதாய் சிரமங்கள் இருக்கவில்லை ! முன்பெல்லாம் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பிள்ளையார் சுழி போட்ட கையோடு "ஸ்பைடர்" என்று பவ்யமாய் எழுதி விட்டுத் தான் மோட்டைப் பார்த்து அடுத்த ஆசாமியின் பெயரைப் பற்றிச் சிந்திக்கத் துவங்குவது வழக்கம் ! அட்டைப்படத்தினில் ஒரு ஓரமாகவாவது தனது அழகு வதனத்தையும், உட்பக்கங்களில் ஒரு நாலே நாலு பக்கங்களிலாவது தலைவர் தலைகாட்டினாலும் போதும் - அந்த இதழ் ஹிட் என்பது அன்றைய சம்பிரதாயம் ! இன்றைக்கு அந்த இடத்தில் "லார்கோ" என்றதொரு பெயரை எழுதி வைக்கும் நிலை என்பதில் துளியும் இரகசியம் இல்லை ! இன்றைய நம் அணிவகுப்பில் - First amongst Equals என்று பார்த்தால் அது நிச்சயமாய் இந்த ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் தான் ! கையில் துப்பாக்கியே எடுக்காமல் ; குதிரைச் சவாரிகளும் செய்யாமல் ( நவம்பர் இதழில் மனுஷன் கொஞ்ச நேரம் குதிரை மீதும் பவனி செல்கிறார்!!) நம்மை மயக்க இயலும் என்பதை லார்கோவும், கதாசிரியர் வான் ஹாம்மேவும் நிரூபிக்க - 2015-ன் அட்டவணைக்கு நான் முதல் பெயராய்த் தேர்ந்தெடுத்தது லார்கோவையே ! ஒரே பிரச்சனை என்னவெனில் இத்தொடரில் இன்னமும் எஞ்சி இருக்கும் கதைகள் வெகு சொற்பமே என்பதால் - லார்கோவோடு பிள்ளையார் சுழி போடும் luxury இன்னும் அதிக காலத்துக்கு நீண்டிடப் போவதில்லை ! இருக்கும் வரை ரசித்துக் கொள்வோமே ! (இந்தாண்டு பிரெஞ்சில் புதிய பாகம் ஒன்று வெளிவரவுள்ளது கொசுறுச் சேதி !)
இரண்டாமிடத்துப் பெயரை எழுதுவதற்கும் 'தல' புண்ணியத்தில் எனது தலைமுடி அதிகம் பிய்ந்திடவில்லை ! என்ன தான் 'தளபதி' ரசிகர்கள் கலாய்த்தாலும் ; டெக்ஸ் கதைகளில் ஆழமில்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும் ; மசாலா ; காரம் என்றெல்லாம் அபிப்ராயங்கள் முன்வைக்கப்பட்டாலும் - விற்பனை எனும் முனைகளில் நமது "VRS வாங்கிய மும்மூர்த்திகளுக்கு" அப்புறமாய் கல்லா கட்டும் ஆற்றலை அதிகம் கொண்டிருப்பவர் நமது இரவுக் கழுகார் என்பதில் சந்தேகமே இல்லை ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நாங்கள் திரும்பத் திரும்ப அனுப்பத் தேவையாக இருந்து வந்துள்ளது டெக்ஸ் கதைகளையே ! So காரணங்கள் எவையாக இருப்பினும், "மாஸ் ஹீரோ"  பட்டம் தற்போதைக்காவது திருவாளர் டெக்சுக்கெ ! ரசனைகளில் நாம் சிறுகச் சிறுக மேலேறி இருப்பினும்  கூட ; நமது வாசிப்புக் களங்கள் விஸ்தீரணமாய் மாறி இருந்தால் கூட - அடிமனதில் நாமெல்லாமெ 'பாட்ஷா" வின் ரசிகர்கள் தான் என்பதை அடிக்கோடிடும் விஷயமாய் இதைப் பார்க்கத் தோன்றுகிறது ! So let's enjoy the ranger !! அட்டவணைக்குள் ஆட்டோமேடிக்காக நுழையும் ஆசாமி # 2 இவர் ! ஏற்கனவே ஈரோட்டில் ஒ.வா.உலகநாதனாய்  நான் உளறி வைத்தது போல - 2015-ல் வரக் காத்திருக்கும் நமது லயனின் 250-வது இதழை அலங்கரிக்கப் போவது 2 x   மெகா டெக்ஸ் சாகசங்களே - முழு வண்ணத்தில் ! தலா 336 பக்க சாகசங்கள் எனும் போது இதுவொரு 672 பக்க அதிரடி இதழாய் இருந்திடப் போகிறது ! வெறும் கும்மாங்குத்துக்கள் மாத்திரமின்றி - கதையம்சமும் பொருந்திய சாகசங்களைத் தேர்வு செய்ய இம்முறை முனைந்துள்ளேன் ! So இதுவொரு memorable இதழாய் இருக்குமென்ற திட நம்பிக்கை என்னுள் !   
அட்டவணையின் பெயர் # 3 எனது personal favorite -ம் கூட ; தொடர்ச்சியாய் 2012 முதல் அனைத்துப் புத்தக விழாக்களிலும் பட்டையைக் கிளப்பிய மனுஷன் ! அது வேறு யாருமில்லை - நமது பென்சில் உடம்பு லக்கி லூக் தான் ! கார்டூன்களில் ; டிவி.க்களில் தலை காட்டியதனாலோ - என்னவோ குட்டீஸ்களின் பெரும்பான்மைக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஓரளவிற்குப் பழகிய பெயராய் இருப்பதால் ஸ்டாலுக்குள் நுழைந்த உடனேயே லக்கியின் பக்கமாய் ஈர்க்கப்படுவதை ஏராளமான தடவைகள் பார்த்தாகிவிட்டோம் ! Yes - நாம் அந்நாட்களில் படித்துப் பழகியிருந்த "புரட்சித் தீ" ; "சூப்பர் சர்க்கஸ்" : "பொடியன் பில்லி" தரங்களில் இதர கதைகளில் நகைச்சுவை quotient மிகுந்திருக்கவில்லை தான் ; ஆனால் சலிப்புத் தட்டாமல் பயணிக்கும் இவை எப்போதுமே safe bets ! திரைப்பட பாஷையில் சொல்வதாயின் "மினிமம் கேரண்டி "க்கு என்றைக்குமே சிக்கல் தரா தேர்வு ! So - பட்டியலில் # 3 லக்கி !  

இன்றைய சூழலில் ; கௌபாய் கதைகளே flavor of the season என்றிருக்கும் நிலையில் - ஆர்ப்பாட்டமில்லாமல் ; அட்டகாசச் சித்திரங்களோடு நம்மை வசியம் செய்து வரும் கமான்சே தொடரினை அடுத்ததாக அட்டவணையில் பட்டியலிட்டேன் ! ஒரு காலத்தில் கீச்சலாய்த் தெரிந்த  ஓவியர் ஹெர்மனின் ஓவிய பாணியானது இன்றைக்கு நம்மில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை நினைக்கும் போது ரசனைகளின் படிகளில் நாம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம் என்பதை உணர முடிகின்றது ! முதன்முறையாக ஹெர்மனின் சித்திரங்களோடு கேப்டன் பிரின்சின் "பனிமண்டலக் கோட்டை" இதழை நாம் 1986-ல் வெளியிட்ட போது - "உள்ளூர் ஆர்டிஸ்ட் போட்ட படங்களா இவை ? " என்று கேட்ட வாசகர்களும் இருந்தனர் ; ஆனால் அந்த ஸ்டைலில் உள்ள வசீகரத்தை வெகு சீக்கிரமே நாம் உணர்ந்து கொண்டோம் என்பது தான் நிஜம் ! So 2015 அட்டவணையில் தேர்வு # 4 சிக்கலின்றி !

லார்கோவின் கதைகளின் ஆழமோ ; நுணுக்கமோ கிடையாதெனினும் இவரும் ஒரு மாறுபட்ட நாயகரே என்பதில் சந்தேகமில்லை ! Mandrake -க்கு அடுத்ததாய் மீசை வைத்த நாயகர் என்ற பெருமை (வேறு யாரேனும் உண்டா - கார்சனைத் தவிர ??)  ; கிருதாக்களில் நரை ; 50-களில் அகவை என்ற அடையாளங்கள் ! Yes - நாம் பேசுவது வேய்ன் ஷெல்டனைப் பற்றியே ! பளீர் சித்திரங்கள் ; பிரமாதமான வர்ணங்கள் - பரபரப்பான கதைக்களங்கள் என ஒருவிதமாய் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஓடும் இவரது சாகசங்கள் அத்தனையும் இதுவரை ஹிட் ! So தொடரும் ஆண்டிலும் இவரது ஆட்டம் தொடரும் ! 

TOP 5 தேர்வுகளில் டெக்ஸ் மாத்திரமே கலர் + black & white என இரு பாணிகளிலும் தலைகாட்டும் தைரியசாலி ! இதர தேர்வுகள் out & out கலர் நாயகர்கள் என்பதால் - பிரத்யேகக் கறுப்பு-வெள்ளையின் முதல் தேர்வைப் பற்றிப் பார்ப்போமா ? ரொம்ப காலமாய் ஓய்வில் இருந்த காரணத்தால் - புது உத்வேகத்தோடு மீண்டும் சாகசம் செய்ய வருபவர் நமது தங்கத் தலைவி ; பரணி புகழ் பாடும் (!!) மாடஸ்டி அம்மையார் அவர்களே ! 100 கதைகள் உள்ள இந்தத் தொடரில் நாம் இதுவரையில் ஒரு 30 சாகசங்களை வெளியிட்டிருப்போம் எனும் போது ஏராளமாய் புதுக் கதைகளைத் தன்னுள் கொண்ட கதைவரிசை இது ! இதனை சமீப காலங்களில் நாம் அதிகமாய் பயன்படுத்திடாது இருக்க 2 முக்கியக் காரணங்கள் உண்டு ! தினசரி strips ஆக வெளியாகும் இக்கதையினை இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் வெட்டி-ஒட்டி ; ஓரங்களை திரும்பவும் வரைந்து தயார் செய்வது அலுப்பை ஏற்படுத்தும் பணி என்பது காரணம் # 1 என்றால்  மாடஸ்டிக்கு செலுத்தத் தேவையான ராயல்டி கட்டணம் தலை சுற்றச் செய்யும் ஒரு தொகை என்பது இரண்டாம் பூதம் ! இங்கிலாந்தில் உருவாக்கப்படும் இக்கதைகளுக்கு பவுண்ட் ஸ்டெர்லிங்கில்  (அந்நாட்டுக் கரென்சி ) பணம் அனுப்பிட அவசியமாகிறது ! ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது மதிப்புக்கு ரூ.68 என்று இருந்து வந்த பவுண்ட் 'சொய்ய்ங்' என்று ரூ.103 க்குச் சென்று குந்திக் கொண்டது ! அவர்களது கட்டணங்கள் மாற்றமில்லாமல் இருந்த போதிலும், அதற்கு ஈடாக நாம் இங்கு செலுத்தத் தேவைப்படும் இந்தியப் பணம் எக்குத்தப்பாய் கூடிப் போனது ! இன்றும் நிலை அதுவே தான் ; ஆனால் எப்படியோ குட்டிக் கரணம் அடித்து தங்கமங்கையை அவ்வப்போதாவது கண்ணில் காட்டுவோமே என்ற அவாவின் விளைவே 2015-ல் மாடஸ்டி தலை காட்டும் பின்னணி ! But - இவரது கதைகள் வெளியாகும் இதழ்களின் விலைகள் மாத்திரம் - இதர b&w இதழ்களின் விலையிலிருந்து சற்றே கூடுதலாய் இருக்கும் ; அல்லது பக்கங்கள் குறைவாய் இருக்கும் ! (மாடஸ்டி வருகிறார் என்ற உடனேயே எங்கள் DTP ஆப்பெரேடர்கள் தையல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி விட்டனர் என்பது கொசுறுச் செய்தி !!) 

தொடரும் வாரங்களில் 2015-ன் preview பற்றி இன்னமும் கொஞ்சம் பேசுவோமே ! ஒ.வா. உலகனாதனாகவும் இல்லாது - பெ.பெ.வாகவும் இல்லாது ஒரு 'சமநிலை சண்முகமாக' அவதாரம் எடுக்க முனைவேன் ! அதற்கு முன்பாக ஒரு சில teasers & updates :

1.ஏழு முழு ஆண்டுகளைச் செலவிட்டு ஒரு டெக்ஸ் கதைக்கு சித்திரம் போட்டுள்ளார் ஐரோப்பிய ஓவியர் ஒருவர் !! அவரது அசாத்திய கைவண்ணத்தை 2015-ல் நாம் ரசித்திடக் காத்துள்ளோம் !!

2."கிராபிக் நாவல்" என்ற கெட்ட வார்த்தை (!!) 2015-ல் ஒரு புது அர்த்தத்தைக் காணவுள்ளது ! ஆஸ்கார் பரிசை பெற்றதொரு blockbuster  திரைப்படத்தின் காமிக்ஸ் ஆக்கத்தை நாம் வரும் ஆண்டில் காணவிருக்கிறோம் !! கடந்த 2 நாட்களும் என் தலைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஷண்டிங் செய்து வரும் இந்தப் படைப்பு நிஜமாகவே மூச்சு வாங்கச் செய்யும் ஒரு stunner !! இதனை வெளியிட சகல முயற்சிகளும் செய்து வருகிறேன் - ராயல்டி கட்டணம் எத்தனை அதிகமாய் இருந்தாலும் பரவாயில்லை என்ற வேகத்தில் !! நிச்சயமாய் 2015-ல் இது நம் கைகளில் இருந்திடும் !!   (போராட்டக் குழுத் தலைவரை தற்காலிகமாகவாவது ஸ்டோர் ரூமில் போட்டுப் பூட்டி வைக்கும் பணியை யார் ஏற்றுக் கொள்வது ?)

3.அக்டோபர் இறுதியினில் காத்திருக்கும் ஒரு பதிவானது நிச்சயமாய் ஒரு கலக்கு கலக்கவிருக்கிறது ! Wait n' watch guys...!

4.அடுத்தாண்டின் ஒரு ஹாரர் கதை உங்கள் விழிகளைப் பனிக்கச் செய்யக் காத்துள்ளது ! Be prepared !

5.சென்ற வாரம் Caption எழுதும் போட்டிக்கு நடந்த அதகளமும், அட்டகாசமும் நான் மூன்றே நாட்களில் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்ததால் மட்டுப்பட்டு விட்டதாய் நண்பர்களில் சிலர் அபிப்ராயம் சொல்லி இருந்தனர் ! 'இதற்கு மேலே தளம் தாங்காது !' என்று நினைக்கத் தோன்றியதால் தான் final whistle-ஐ சீக்கிரமே ஊத வேண்டியானது ! சரி - இம்முறை 7 நாள் அவகாசத்தோடு இன்னுமொரு வாய்ப்பு ! இம்முறை பரிசு வழங்கக் காத்திருப்பது நண்பர் ஒருவர் !! Yes - சென்ற வார உற்சாகத்தை திரும்பவும் லேசாகவேனும் தரிசிக்க வாய்ப்புக் கிட்டினால் அதற்கு ஈடாக என்னிடமுள்ள "இரத்தப் படலம்"  The Complete Collection இதழின் spare copy -ஐத் தரத் தயாரென்று சொல்லி கூரியரில் அனுப்பியுள்ளார் !!! சற்றே புரட்டப்பட்ட ; கைபட்ட இதழ் தான் எனினும், எவ்விதக் கிழிசலும் இல்லாது 'ஜம்'மென்று காட்சி தருகிறது ! பெயரை வெளிச் சொல்லிக் கொள்ள விரும்பா இந்த நண்பரின் உபயத்தில் இவ்வாரத்துப் போட்டி guys ! Get cracking !! மீண்டும் சந்திப்போம் - அதுவரை have  fun  ! 
Captions 1 & 2: 



Wednesday, September 24, 2014

ஒரு "7 donkeys" சமாச்சாரம் !

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு காலையிலும் கண்ணாடியைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் அந்த "7 donkeys சமாச்சாரம்"  'ஹிஹிஹி' எனப் பல்லிளிப்பதை தவறாது உணர முடியும் ! ஆனால் அந்த சோகங்களை (தற்காலிகமாகவாவது)  மறக்கடிக்க சாதனங்களுக்கா பஞ்சம் ?! "உள்ளேன் அய்யா" என்று சொல்லி பரவலாய் நிற்கும் வெளிர்நிற ரோமக்கால்களை மறைக்க சாயங்கள் ; நெற்றியில் நிலைகொண்டு நிற்கும் "இந்தியன் தாத்தா " சுருக்கங்களை பூசி மெழுக கிரீம்கள் என்று ரசாயனமும், வியாபாரமும் கரம்கோர்த்துப் புண்ணியம் சேர்க்க - வண்டி ஒரு மாதிரி ஓடித் தான் வந்தது - இந்த சில நாட்களை தொடும் வரையிலாவது  !!  சரியாகச் சொல்வதாயின் - "கார்சனின் கடந்த காலம்" இதழைக் கையில் எடுக்கும் வரை !! 

நமது இதழ்களின் தயாரிப்புப் பணிகள் முடிந்தான பின்னே இதழ்களை மேலோட்டமாய்ப் புரட்டுவதோடு அடுத்த பணிக்குள் தலைநுழைத்து   விடுவதே எனது வழக்கம். கொஞ்ச காலம் கழித்துத் திரும்பவும் படிப்பதோ ; அசைபோடுவதோ கிடையாது ! மறுவாசிப்பின் போது கண்ணில்படுவது பிழைகளும் ; அச்சின் குறைபாடுகளுமே என்பது ஒரு காரணமெனில் - மொழிபெயர்ப்பு ; பிழைதிருத்தம் ; எடிட்டிங் என பலகட்டங்களுக்கு ஒரே கதையோடு மல்லுக்கட்டி விட்டான பின்பு அதன் மீதொரு மெல்லிய அயர்வு தோன்றி இருக்கும் என்பது காரணம் # 2 ! So - நாட்களின் ஓட்டத்தோடு கதைகளின் தலைப்புகள் ; அட்டைப்படங்கள் ; லேசான கதையோட்ட ஞாபகங்கள் என்பதைத் தாண்டி வேறேதும் தலையில் குடியிருக்காது எனக்கு ! அதுவே தான் 'கா.க.க.' கதையைப் பொறுத்த வரையிலும் கூட ! எப்படியிருப்பினும் இதுவொரு மறுபதிப்பு தானே ? ; இதனில் அதிகம் சிண்டைப் பிய்க்கத் தேவையிராது  ! என்று சாவகாசமாய் ஒரு மேலோட்ட வாசிப்பை மாத்திரமே போட்டு வைக்கும் அபிப்ராயத்தில் printout  பக்கங்களைக் கையில் எடுத்தேன் ! சமீப சில டெக்ஸ் கதைகளின் "கீச்சல்" சித்திரங்கள் பாணி இதனில் இல்லை என்பது முதல் பக்கத்திலேயே 'பளிச்' எனத் தெரியத் துவங்க - மெதுவாய் வாசிக்கத் தொடங்கினேன். புரட்டப் புரட்ட பக்கங்கள் வந்து கொண்டே இருக்க ; 'இதோ இங்கே கதை நினைவுக்கு வந்து விடும் ! ; அதோ - அந்தத் திருப்பத்தில் ஞாபகக் கதவுகளைத் தட்ட ஏதேனும் சம்பவங்கள் வந்து விடுமென்ற' நம்பிக்கையோடு வண்டி ஓடிக் கொண்டே இருந்தது ! ஆனால் பக்கங்கள் தான் நீண்டு சென்றனவே தவிர, திருவாளர் ஞாபகசக்தி அந்தப்பக்கமாய்த் தலை வைத்துக் கூடப் படுக்க முனையவில்லை ! 'ஆஹா...! இந்தக் கதை வெளியானது 1995-ல் எனும் போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பயணித்து விட்டன ; கதையினில் கார்சனுக்கு ஏறிடும் அதே 7 donkeys சங்கதி நமக்கும் தான் பொருந்தும் போலும் !!' என்ற ஞானோதயம்  புலர்ந்தது !

ஆனால் முதல்முறையாகப் படிப்பது போல இந்தக் கதையினைத் திரும்பவும் ஒருமுறை படிக்கக் கிடைத்த அந்த அனுபவத்தில் வேறு எதுவுமே முக்கியமாய்த் தோன்றிடவில்லை ! சமீபத்திய "சட்டம் அறிந்திரா சமவெளி" கதையில் (!!) கும்மாங்குத்துக்களை மாத்திரமே மூலதனமாய்க் கொண்டு கதை முழுக்க டெக்ஸ் அடித்த லூட்டிக்குப் பின்னே, 'கா.க.கா.வில்' கார்சன் பிரதானமாய் இடம் பிடிப்பதும் ; டெக்ஸ் அடக்கி வாசிப்பதும் ; அழகான நீரோடை போல கதை flashback & நிகழ்காலத்தில் விரிவதும் இதமான மாற்றங்களாய் எனக்குத் தோன்றியது ! அதிலும் இளவயதுக் கார்சனின் அத்தியாயங்களிலும்  ; தலைநரைத்த கார்சனின் அத்தியாயங்களிலும் ஓசையின்றி ஓடும் அந்த நேசக்கீற்றை கதையின் உயிர்நாடியாய்க் கொண்டு செல்வதை ரசிக்க முடிந்தது ! திரும்பவும் ஒரு மொழிபெயர்ப்புக்கு நேரமில்லை என்பதாலும், அந்நாட்களது எழுத்துநடையில் கத்துக்குட்டித்தனம் தலைக்காட்டவில்லை என்பதாலும் 'அட..இதை புதிதாய் ஒரு மொழியாக்கம் செய்யாமல் விட்டுவிட்டோமே! என்ற சிந்தை உதிக்கவில்லை ! எனினும் சின்னச் சின்ன இடங்களில் இன்றைய டெக்ஸ் - கார்சன் கதை பாணிகளுக்கு இணக்கமான சிற்சிறு மாற்றங்களை மட்டுமே செய்ய முனைந்துள்ளேன் ! முக்கியமாக பாடல் sequences -ல் (!!) அன்றைக்கு இடம்பிடித்திருந்த மொக்கை வரிகளைக் கடாசி விட்டு, புதிதாய் தோன்றிய சில வரிகளை இணைத்துள்ளேன் - மனப்பாடமாய் இக்கதையை நினைவில் வைத்திருக்கும் நண்பர்கள் மாற்றங்களை விளக்குமாற்றால் சாத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் !  அப்படியே பூசைகள் விழுந்தாலும் அது நமது கவித்திறனுக்குக் (!!) கிட்டிய சன்மானமாய் எடுத்துக் கொள்ள வேண்டியது தான் ! In hindsight, இக்கதையை 20 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடாது - இன்றைய புதிய பாணிகளில் fresh ஆக வெளியிடவொரு சந்தர்ப்பம் கிட்டியிருப்பின் அதகள வெற்றியாகி இருக்குமென்பது உறுதி என்று தோன்றுகிறது ! அன்றே இக்கதையை நாம் கொண்டாடிடத் தவறவில்லை என்பது ஒருபக்கமிருப்பினும், ரசனைகளில் லேசாக ஒரு படி மேலே சென்றிருக்கும் இன்றைய சூழலில் இது ஒரு bigger  blockbuster ஆக மிளிர்ந்திருப்பது உறுதி ! Anyways - 'சமீப நாட்கள் வரை கையிருப்பில் இருந்ததொரு இதழ்' என இக்கதையை புறந்தள்ளிடாது மறுபதிப்புப் பட்டியலுக்குள் இணைக்கச் செய்த நண்பர்களுக்கு இங்கொரு நன்றி சொல்லியே தீர வேண்டும் ! டெக்சின் "குடும்ப உடுப்பான" அந்த  மஞ்சள் சட்டை வழக்கம் போல் டாலடிக்க - வண்ணத்தில் மின்னுகிறது ! So - என்னைப் போல் கதையை மறந்திருக்கா திட நினைவாற்றல் கொண்ட "இளைஞர்களுக்குக்" கூட மறுவாசிப்பில் வண்ணம் எனும் வீரியம் துணை புரியுமென்பது உறுதி ! பாருங்களேன் கண்களுக்கு விருந்தளிக்கும் சில teasers !
ரொம்ப நாட்கள் முன்பாக டெக்ஸ் ரசிகர்கள் மத்தியில் எடுக்கப்பட்டதொரு கருத்துக் கணிப்பில் இரண்டாம் இடம் பிடித்த கதை இது என்பது கொசுறுச் செய்தி ! முதல் இடம் எந்தக் கதைக்கு ? என்ற கேள்வி உங்கள் மைண்ட்வாய்ஸாக  உதயம் ஆகும் முன்பாகவே பதிலையும் நானே சொல்லி விடுகிறேன் ! 1992-ல் லயனில் நாம் வெளியிட்ட "கழுகு வேட்டை" தான் கதை # 1-ஆகத் தேர்வானது ! 
கதைத் தேர்வுகள் பற்றிய தலைப்பில் நாம் இருக்கும் போது - நாமுமொரு  "TOP OF TEX "தேர்வை நடத்தினாலென்ன என்று தோன்றியது ! கிட்டத்தட்ட 60 டெக்ஸ் கதைகள்  வெளயாகியுள்ள நிலையில் உங்களது டாப் 1 & 2 டெக்ஸ் சாகசங்கள் எவையாக இருக்கும் ? உங்கள் தேர்வுகளை நாளையே மறுபதிப்பாய் வெளியிட்டு விடுவேன் ! என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி விட மாட்டேன்  ; ஆனால் உங்களின் ரசனைகளின் டாப் இதழ் எதுவென்ற சேதியை நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தால் - வாகானதொரு சமயத்தில் அது உதவிடுமே ! (உங்கள் சேமிப்பில் இல்லாத இதழை டாப் தேர்வாக்கி மறுபதிப்புக்குப் பாதையமைக்கும்  போங்கு ஆட்டமும் வேண்டாமே - ப்ளீஸ் !! ) Let's pick the best - nice and simple !!

ஊற்றடிக்கும் கற்பனைப் பிரவாகத்தின் பலனோ ; வெகுமதியின் (!!) கனம் தந்த ஊக்குவிப்போ ; XIII எனும் அந்தப் பெயருக்கு நம்மிடையே இன்னமும் பறக்கும் அந்தத் தீப்பொறியின் பலனோ - ஞாயிறுவின் பதிவிற்கு 'வரலாறு காணாத ' (!!) response ! ஒரே நாளில் 250 பின்னூட்டங்கள் ; கிட்டத்தட்ட 3000 பார்வைகள் என்று IPL மேட்ச் பார்த்த effect தான் !! (இரும்புக்கையாரின் சகாயம் இன்றியே  'Load More ' தொட்டதே ஒரு சாகசம் தானே !!) கற்பனைக் குதிரைகள் தறிகெட்டுப் பாய்ந்த இந்தப் போட்டியில் வெற்றி யாருக்கு ? என இரண்டே பேரைத் தேர்வு செய்வதை விட  - ஒரு அசாத்தியக் கலகலப்பான நாளை சாத்தியமாக்கித் தந்த அத்தனை பேருமே வெற்றியாளர்கள் தான் என்று சொல்ல எனக்கு ஆசை ! ஆனால் அத்தனை பேருக்கும் பரிசு தர வேண்டுமெனில் இரத்தப் படலத்தை ஆளுக்குப் 10 பக்கமாய்ப் பிய்த்துத் தான் தர வேண்டியிருக்கும் என்பதால் இரண்டே தேர்வுகளைச் செய்வது அவசியமாகிறது ! Here goes ! பின்னி எடுக்கும் கற்பனைகள் ; டயலாக்குகள் என்று ஏகமாய் குவிந்து கிடந்த entries மத்தியினில் முன்னேயும் - பின்னேயும் நிறைய ஸ்க்ரோல் செய்தே களைத்துப் போன பின்னே எனக்கு நன்றாகத் தோன்றியவை கீழ்க்கண்டவையே !

XIII Caption :

XII: பதினைஞ்சாவது எபிஸோட் நடக்கும்போதே எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. வெளிய சொல்லாதேனுட்டானுங்க.. சொன்னாலும் எவன் நம்புவான்? ஸ்டார் வேல்யூ! பிசினஸ்னு ஆகிப்போச்சு! எதுக்கு வம்பு.. பேசாம இப்படியே கண்டினியூ பண்ணிடுவோம்.
TEX Caption  :

டெக்ஸ் : தோஸ்த் ! பையனுக்கு பொண்ணு பாக்க போகனும்னு ரெடியாக சொன்னா, நீ ஏன் இஞ்சி திண்ண ஏதோ மாதிரி ஆயிட்ட.?
கார்சன் : பையனுக்கு பொண்ணு பாக்கவே பளபளன்னு ஷேவிங் பண்ற பங்காளி,
உங்கூடவே சுத்துற நானும் கல்யாணமாகாத கன்னிப் பையன்தானே.? எனக்கு ஒரு பொண்ணப் பாத்து கட்டி வெக்கினுமின்னு உன்னோட புத்திக்கு ஏன் உறைக்காம போச்சு.!?

நண்பர்கள் இருவருக்கும் நமது ஜாலியான வாழ்த்துக்களோடு பரிசுகள் நாளைய கூரியரில் அனுப்பிடப்படும்! (டெர்ரர் பாய்ஸ் : நாளைக்கு அலுவலகத்தில் முகவரிகளை வாங்கி விட்டால் 'Operation கிட்னா' ஸ்டார்ட் பண்ணிவிடலாம் !!)

'இரண்டாமிடம்' என ஒரு தகுதி அறிவிக்க கஜானாவில் பரிசுகள் இல்லை - இல்லேயேல் கீழ்க்கண்ட இரு முயற்சிகளுக்கும் இரண்டாமிடம் தந்திருப்பேன் !
Erode Vijay..

Sathiya..
Congrats guys !! தவிர, இதற்கும் முந்தைய பதிவில் நமது "2015-ன் யூக அட்டவணையினை" முயற்சிக்கும் போட்டியில் ஒரு நண்பர் எனது தேர்வுகளுக்கு ஓரளவு நெருக்கத்தில் உள்ளார் ! இன்னமும் 30 நாட்களுக்குள் எனது மண்டை ஒரு நூறு திசைகளில் பயணிக்கும் எனும் போதிலும், நான் அறிவித்தபடி - 2015-ன் சந்தா அந்த நண்பருக்கு நமது அன்பளிப்பாய் அமைந்திடும் ! அட்டவணை உங்கள் கைகளுக்கு வரும் வேளையில் அவர் யார் என்பதையும் சொல்கிறேனே ?!

2015-ன் அட்டவணை பற்றியும், அதனில் இடம்பிடிக்கப் போகும் இதழ்கள் பற்றியும் நிறைய பில்டப் விட்டிருக்கிறேன் ! அதனில் லேட்டஸ்டாக : இம்முறை நமது அளவுகோல்கள் ரொம்பவே ஸ்ட்ரிக்ட் என்பதால் மதில் மேல் பூனையாய் நிற்கும் நாயகர்களுக்கு இதயத்தில் மாத்திரமே இந்தாண்டு வாய்ப்பு ! சந்தேகத்துக்கு இடமின்றி 'ஹிட்' தந்து வரும் நாயகர்களன்றி வேறு யாருக்கும் இடமில்லை இம்முறை ! அடுத்த பதிவில் அது பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோமே..?! Bye for now all !

ஹீரோக்களும்...ஒளிவட்டங்களும்..!

நண்பர்களே,

வணக்கம். மாலையில் பேட்டி - காலையில் பிரதானமாய் கட்டுரை என அசத்தியுள்ளனர் டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்பகத்தினர் ! இன்றைய காலை Times of India செய்தித்தாளில் (சென்னை பதிப்பு) பக்கம் 6-ல் அரைப்பக்கம் ஒதுக்கி நமது நாயகர்கள் மீதும் ; காமிக்ஸ் எனும் கலையின் மீதும் தாராளமாய் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருக்கும் TOI நிர்வாகத்துக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ! தவிர, மாமூலான கேள்விகளையாய் கேட்டு வைக்காது, சற்றே மாறுபட்ட வினாக்களை முன்வைத்த கட்டுரையாளர்களுக்கும் நமது நன்றிகள் !! இது போன்ற பிரதான மீடியாக்களில்  காமிக்ஸ் மீதான பார்வை அதிகரிப்பது நமக்கொரு வரப்பிரசாதமே ! கோலிவுட்டின் ஹீரோக்களை முன்னிலைப்படுத்தும் நமது மீடியாக்களில் காமிக்ஸின் ஹீரோக்கள் இடம்பிடிப்பது நிச்சயமாய் ஒரு ஸ்பெஷல் நிகழ்வு தானே ?! சென்னைப் பதிப்பு நீங்கலாய் - மற்ற நகரங்களில் நாளை காலை இக்கட்டுரை இடம்பிடிக்கும் ! இதோ இன்ற லிங்கில் பயணித்தால் முழுக் கட்டுரையைப் படிக்கலாம் : http://epaperbeta.timesofindia.com/index.aspx?eid=31807&dt=20140924


இன்று இரவு..புதியதொரு பதிவோடு சந்திக்கிறேன் ! அது வரை have a great day all !

Sunday, September 21, 2014

பத்தோடு, பதினொன்றாய் ஒரு பதிமூன்று !!

நண்பர்களே,

வணக்கம். அலாவுதீன் விளக்கின் பூதத்தைப் போல் 'டாண்' என இன்னுமொரு ஞாயிறுக்கு உங்கள் முன்னே ஆஜராகிறேன்! இவ்வாரத்துப் பதிவு - கன்னித்தீவு சிந்துபாத்திற்குச் சவால் விடும் XIII தொடரின் மையமானதொரு மனிதனைப் பற்றியே...!

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பாய் பெல்ஜியக் காமிக்ஸ் உலகினில்  பத்தோடு, பதினொன்றாய் ஒரு பதிமூன்று உதயமானது ! SPIROU என்ற அவர்களது காமிக்ஸ் பத்திரிகையில் - நினைவை இழந்ததொரு மனிதனை மையமாகக் கொண்டு ஓவியர் வில்லயம் வான்சின் சித்திரங்களோடு XIII என்றதொரு பெயரோடு (நம்பரோடு !!) கதை ஒன்று துவங்கியிருந்தது  ! துவக்கத்திலேயே வாசகர்களை ஒருவித வசீகர ஈர்ப்பில் கட்டிப் போட்ட இந்தத் தொடரை பதிப்பகத்தினர் மாமூலாய் கொண்டு சென்று கொண்டிருக்க - தொடரும் ஒவ்வொரு பாகமும் விறு விறு விற்பனையை சந்தித்தது ! கிட்டத்தட்ட 8 பாகங்கள் வெளிவந்திருந்த நிலையில் தம் கையில் இருப்பது ஒரு blockbuster என்பதை அவர்கள் உணர்ந்திட - ஏகப்பட்ட விளம்பரங்கள் ; வேற்று மொழி மொழிபெயர்ப்புகள் என்று தூள் கிளப்பினார்கள் ! அன்று சூடு பிடித்த XIII -ன் தொடரானது ஐரோப்பாவில் உடைக்காத விற்பனை ரெகார்டுகள் கிடையாது ! நிறைய சமயங்களில் நாம் ஒரு தொடருக்குள் தலையை நுழைக்கும் வேளையினில் - அதனில் ஏற்கனவே 30-40 கதைகள் வெளியாகி இருப்பது வாடிக்கை ! So ஒருவிதமாய் establish ஆகிய கதைவரிசைகளையே நாம் கையாண்டு வந்துள்ளோம் ! ஆனால் இந்த XIII தொடரைப் பொறுத்த வரை நாம் அதன் இரண்டாம் ஆல்பம் வெளியான நிலையிலேயே வண்டியில் தொற்றிக் கொண்டோம் - தெரிந்தோ தெரியாமலோ !! படைப்பாளிகளுக்கே இந்தத் தொடரானது இத்தனை வலிமையானதொன்றாக அமையுமென ஆரூடம் சொல்லத் தெரியா நிலையில் - நாம் ஒரு ஓரமாய் ஒட்டிக் கொண்டது நம் குருட்டு அதிர்ஷ்டம் என்றே சொல்லுவேன் ! So வெற்றி பெற்றதொரு தொடரின் வேரோடு நமக்கும் குட்டியாகவேனும் ஒரு சம்பந்தம் உள்ளதென்ற சந்தோஷத்தோடு XIII -ன் 30-வது பிறந்தநாளை எதிர்கொண்டு நிற்போமே ! இது வரை 22 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் - பாகம் 23 இந்தாண்டு நவம்பர் இறுதியினில் தலைகாட்டக் காத்துள்ளது ! Yves Sente + Jigounov கூட்டணியில் இன்று உருவாகி வரும் இத்தொடரின் லேட்டஸ்ட் வருகையின் அட்டைப்படம் இதோ :


பொதுவாக ஒரு topnotch டீம் பணி செய்த இடத்தை புதியவர்கள் ரொப்பிடும் அவசியம் நேரும் போது அவர்கள் திணறுவதே நடைமுறை ! ஜிராடுக்குப் பின்னே தடுமாறும் டைகரின் தொடர் ; மோரிஸ் பணியாற்றாத பின்னே நொண்டியடிக்கும் லக்கி லூக்கின் தொடர் என சோபிக்காது போன "வாரிசு" களைப் பறைசாற்ற உதாரணங்கள் நிறையவே உண்டு தான் ! அப்படிப் பார்க்கையில் வான் ஹாம்மேவும் ; வில்லியம் வான்சும் விட்டுச் சென்ற கால்தடங்களின் பரிமாணம் அசாத்தியமானவை ; அவற்றை பின்தொடர கிட்டத்தட்ட யாருக்குமே வாய்ப்பிருக்கப் போவதில்லை என்ற எண்ணம் பரவலாய் இருந்தநிலையில் இப்புதுக் கூட்டணி கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி விட்டுள்ளன ! வான்சின் தரத்துக்குத் துளியும் குறைவில்லா சித்திரங்கள் ; வான் ஹாம்மேவை சந்தோஷப்படுத்தக் கூடியதொரு புதுத்திசையில் ; காலத்துக்கு ஏற்ற நவீனங்களோடு நகரும் கதைக்களம் என்று உற்சாகமாய்ப் போகிறது இந்தப் புதுப் பயணம் ! இதோ பாருங்களேன் - பாகம் 23-க்கு ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்டிருந்த ராப்பர் - பெண்ணின் கையிலொரு செல்போன் சகிதமாய் !!


Yuri Jigounov- Artist..
Yves Sente - Script
கடைசியாய் நான் கேட்ட போது - புதியவர்களின் கைவண்ணத்தில் ஓடும் இந்தத் தொடரின் ஒவ்வொரு ஆல்பமும் 400,000 பிரதிகள் விற்பனையாகின்றதாய்ச் சொன்னார்கள் ! சரி...ஒரிஜினல் பிதாமகர் கூட்டணியின் போது என்ன விற்பனை ? எனக் கேட்டேன் - "550,000 பிரதிகள் ! " என்று கூலாகச் சொன்னார்கள் !! அலிபாபா குகையைப் போல அகலமாய் விரிந்த என் வாய் மூட நிறைய அவகாசம் தேவைப்பட்டது என்பது கிளைக்கதை ! அவர்கள் லட்சங்களில் தொடும் எண்ணிக்கையை நாம் ஆயிரங்களில் தொட்டாலே குஷிப்படுவோம் என்ற நிலையில் - பாகம் 22 + பாகம் 23 இணைந்து 2015-ன் மார்ச்சில் நமது லயனில் வெளியாகிறது என்பதே நமக்கான சேதி !

XIII -ன் flashback -ஐப் பார்த்தாகிவிட்ட நிலையில் இம்மாதத்து வரவைப் பற்றி பேசுவோமா ? XIII மர்மம் தொடரினில் மங்கூசின் பார்வையைத் தொடர்ந்து இம்மாதம் ஸ்டீவ் ரோலாண்டுக்கு வாய்ப்புக் கிட்டுகிறது - தன பார்வைக்கோணத்தில் கதை சொல்லிட ! அவனது இளமைக்காலம் ; காதல்கொண்ட நாட்கள் ; திசைமாறிய தருணங்கள் என அழகாய் அங்குலம் அங்குலமாய் சொல்லப்பட்டிருக்கும் இந்த கிராபிக் நாவலின் அட்டைப்படம் இதோ :


ஒரிஜினலே முன்னட்டையாகவும், நமது டிசைன் பின்னட்டையிலும் இடம் பிடிக்கின்றது ! இங்கே தெரிவதை விடவும் ராப்பரில் வர்ணங்கள் இன்னமும் அழுத்தமாய் இருக்கும் ! சிம்பிள் ஆகத் தோற்றம் தந்தாலும் - பின்னட்டை அழகாய் வந்துள்ளதை மனதுக்குப் பட்டது ! உங்களுக்கு ? உட்பக்கங்களின் வர்ணக் கலவைகள் அழகாய் அமைந்துள்ள போதிலும், வித்தியாசமான பக்கம் ஒன்றினை மட்டுமே இங்கே நமது teaser -க்குப் பயன்படுத்தியுள்ளேன் !
அப்புறம், சன்ஷைன் கிராபிக் நாவலின் பாணியில் - தலையங்கம் , இத்யாதிகள் ஏதுமின்றி ஒரு படைப்பாளிகளின் அறிமுகப் பக்கம் + கதை மாத்திரமே என்ற பாணி இதனில் தொடரும் ! ("இந்த பாணி - பரணிக்குப் பிடிக்காது" என்ற கடிதத்தின் துவக்க வரிகளை இப்போதே தாரமங்கலத்தில் ஒருவர் எழுதத் துவங்கி விட்டதாய் உளவுத்துறை தகவல்கள் கசிகின்றன..!) XIII பற்றிய புராணத்துக்கு மங்களம் பாடும் முன்பாக - on a lighter vein நமது நண்பர் அஜய் சாமியின் கைவண்ணம் :


இம்மாதத்து 3 வெளியீடுகளுள்  இரண்டு அச்சாகி விட்ட நிலையில் - "கா.க.கா." தொடரும் நாட்களில் அச்சுக்குச் செல்கிறது ! கடந்த பதிவின் பின்பகுதியில் - இக்கதையின் நீளம் பற்றியும் ; நாம் இப்போது வண்ணத்தில் வெளியிடப் போவது எவ்விதமான சைசில் என்றும் வினவல்களை மேலோட்டமாய்ப் பார்த்தேன் ! 336 பக்க ஒரிஜினல் கதையினை அதே போலவே வண்ணத்தில் வெளியிடுவதெனில் விலை ரூ.180 என்று நிர்ணயம் செய்திட வேண்டி வரும் ! கறுப்பு-வெள்ளையில் திட்டமிடப்பட்டிருந்ததொரு மறுபதிப்புக்கு வண்ணம் சேர்த்திடும் பொருட்டு ஏற்கனவே விலையை டபுள் ஆக்கியுள்ள நிலையில் - we are going into this reprint with 250 pages of the regular TEX size ! ஆகையால் விலை ரூ.125 என்பதும் சரியே ; கதை முழுமையாகவே வருகின்றது ; வர்ணமும் உண்டு ! அதன் அட்டைப்படம் + ட்ரைலர் அடுத்த ஞாயிறுக்கு ! 3 இதழ்களும் செப்டெம்பர் 29-ஆம் தேதி இங்கிருந்து அனுப்பப்படும் - ஆயுத பூஜை விடுமுறைகளுக்கு முன்பாய் உங்களை வந்து சேர்ந்திடும் பொருட்டு !

வரக்காத்துள்ள டைலன் டாக் இதழுக்கு ஒரு சின்னதொரு மெருகூட்டல் சாத்தியமாகியுள்ளது ! பொதுவாக அட்டைப்படங்களுக்கு படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ள அதே டிசைனை நாம் பயன்படுத்துவதோ ; அல்லது நம் ஓவியர் மாலையப்பனைக் கொண்டு டிசைன் போடுவதோ மாமூல் ! ஆனால் முதல்முறையாக அயல்நாட்டு ஓவியர்கள் இருவரின் உதவியோடு இம்மாதத்து "வீதியெங்கும் உதிரம்" அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது ! டைலன் டாக் கதைகளுக்கு சித்திரம் போட விரும்பிய freelance ஓவியர் இவர் ! போனெல்லி குழுமத்திடமிருந்து ஒரு வாய்ப்புக்குக் காத்திருக்கும் இவரது டிசைன்களைப் பார்த்திட எனக்கு வாய்ப்புக் கிட்டிய போது - மெதுவாய்க் கேட்டு வைத்தேன் - நமது ராப்பரில் அவரது சித்திரத்தை அரங்கேற்றலாமாவென்று ?! துளியும் தயக்கமின்றி உற்சாகமாய் சரி சொன்னார் இந்த இத்தாலிய ஓவியர் டேனியல் ப்ரண்டௌ ! வர்ணச் சேர்க்கை : எடுவார்டோ பெரேரா ; இறுதியாய்ப் பட்டி டிங்கரிங் நம்மவர்கள் ! இதோ ஒரு முக்கூட்டணியின் படைப்பு - உங்கள் பார்வைக்கு !   


டிசைனை எப்போதும் போல போனெல்லி குழுமத்துக்கு அனுப்பிவிட்டு அவர்களது ஒப்புதலைக் கோரினோம் ; அவர்களும் ஒரு டிசைனை எத்தனை நுணுக்கமாய்ப் பார்வையிடுகிறார்கள் என்பதையும் ; தங்கள் கதாப்பாத்திரங்களை எத்தனை நேசிக்கிறார்கள் என்பதும் அவர்களது பதிலில் பார்த்திட முடிந்தது ! " ராப்பர் ஒ.கே. ; ஆனால் சின்னதொரு திருத்தம் - டைலன் எப்போதும் அணிவது Clark's ரக ஷூக்கள் மட்டுமே ; தவிர அவரது ஷூ லேஸ் எப்போதுமே சிகப்பில் தான் இருக்க வேண்டும் !" என்று பதில் வந்தது !! 'தம்மாத்துண்டு விஷயம் தானே !' என்றில்லாது தலை முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய்ப் பார்த்துப் பார்த்து செதுக்கும் அவர்களது dedication பிரமிப்பாய் உள்ளது ! அவசரம் அவசரமாய் லேஸ்களை சிகப்பாக்கியுள்ளோம் - அச்சுக்கு முன்பாக ! இந்த அட்டைப்படமும் - soft -ஆன இந்த வர்ணக்கலவையும் எப்படித் தோற்றம் தருகிறது folks ?

2015-ன் அட்டவணையை உங்களுக்குத் தந்திட இன்னமும் முப்பதே நாட்கள் உள்ள நிலையில் - கடைசி நிமிட additions & deletions நடந்தேறி வருகின்றன ! ஆனால் 2014 தந்துள்ள பாடங்கள் ஓரளவுக்கு என்னுள் தெளிவை நல்கியுள்ளதால் - போன வருஷம் போல 'காலையில் ஒரு பட்டியல்...மதியம் ஒரு அட்டவணை..இரவு புதிதாய் ஒரு schedule ' என்ற ரீதியில் ஜூனியர் எடிட்டரைக் கிறுக்காக்கும் வேலைகளில்லை இம்முறை !! ஒரே சிக்கல் என்னவெனில் முத்து காமிக்ஸின் active நாயகர்கள் பட்டியலில் உள்ள ஆசாமிகளின் எண்ணிக்கை லயனின் பட்டியலை விடக் குறைவாய் உள்ளது ! So - " நிறைய லயன் ; குறைவாய் முத்து " என்றதொரு தோற்றத்தைத் தவிர்த்தாக வேண்டுமே என்பது தான் இப்போதைய சிக்கல் ! பார்க்கலாமே..!

Before I sign off for this week - சின்னதாய் ஒரு ஜாலி போட்டி ! இங்குள்ள நம் நண்பர் (நண்பர்) XIII -க்கும் 'தல + தாத்தா ' சித்திரத்துக்குப் பொருத்தமாய் captions எதாச்சும் எழுதிடுவோமா ?


இது XIII -ன் பதிவு வாரம் என்பதால் டாப் captions எழுதிடும் 2 நண்பர்களுக்குப் பரிசாய்  "இரத்தப் படலம் - The Complete Collection " இதழ்கள்  பரிசு ! Get cracking guys !! Bye for now ! 

Sunday, September 14, 2014

நேற்றும்..நாளையும்..!

நண்பர்களே,

வணக்கம். ஒரு வார ஊர்சுற்றலுக்கு சனி அதிகாலையில் 'மங்களம்' பாடி விட்டு, பகல் பொழுதில் ஒரு கும்பகர்ணத் தூக்கத்தையும் போட்டு விட்டு, இன்னமும் நம்மூர் கடிகாரங்களுக்குப் பரிச்சயம் கொண்டிரா அகண்ட விழிகளோடு பிசாசு உலாற்றும் வேளையில் இங்கே அடியெடுத்து வைத்தால் - இரண்டே நாட்களுக்கு முன்பு வரை கொடைக்கானலாய் காட்சி தந்து வந்த தளம், திடீர் வெப்பச் சுழற்சியில் சிக்குண்டு கிடப்பதை தரிசிக்க முடிந்தது ! சிற்சிறு உராய்வுகள் ; அபிப்ராய பேதங்கள் ஒரே நாளுக்குள் இத்தனை சூட்டைக் கிளப்பிட முடியுமா என்பதை உட்புகுந்த பின்னரே உணர்ந்திட முடிந்தது ! எனினும், வெவ்வேறு விதமான சிந்தனைகள் சங்கமிக்கும் ஒரு பொதுத்தளத்தில் வெப்ப அளவுகள் இது போல் சர்ரென்று எப்போதாவது உயர்வது இயல்பே என்பதும், நம்மில் யாரும் யாருக்கும் பகையாளிகள் அல்ல என்பதும் அனுபவப் பாடங்களாய் இருப்பதால் - 'குற்றம்- நடந்தது என்ன ?'  என்று ஆராய்ச்சிகளுள் நான் மூழ்கப் போவதில்லை ! மாறாக - எப்போதும் போலவே காமிக்ஸ் எனும் காயம் தீர்க்கும் களிம்பைத் தடவிக் கொண்டு புரபசர் எகோன் பாயரைப் போலவே நாமும் புது நடை போடுவோமே ?அதிலும் நம் முன்னே காத்திருக்கும் நாட்கள் ஒரு அட்டகாசமான விருந்துக்கு அடித்தளம் போடும் தருணம் என்பதால் let's move on folks !

ஆண்டின் இறுதி மாதங்களை நமக்கு நாமே இடியாப்பங்களாய் ஆக்கிக் கொள்வது கடந்த இரு ஆண்டுகளாய் வாடிக்கை என்பதால் எனக்குள் ஒருவிதப் பரபரப்பு ஓசையின்றிக் குடிகொண்டுள்ளதை உணர முடிகின்றது ! அதிலும்,இந்த அக்டோபர் & நவம்பருக்குக் காத்துள்ள இதழ்கள் அனைத்துமே அதிர்வேட்டு ரகங்கள் என்பதால் அவற்றைக் களம் இறக்கி விடும் துடிப்பு ஏகமாய் !! பற்றாக்குறைக்கு 2015-ன் அட்டவணை - படைப்பாளிகளின் பரிந்துரைகளின்படி அழகான கதைகளோடு கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறி வர ; சில அட்டகாச நாயகர்களின் புது வரவுகளும் ; நெடுந்துயிலில் இருந்த சிலரது மீள்வருகைகளும் இன்னொரு பக்கம் நாடித்துடிப்பை எகிறச் செய்து வருகின்றன ! 'ஓவராய் பில்டப் கொடுத்தே கழுத்தை அறுக்கிறானே !!' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கணீரென்று கேட்கிறது தான் ; ஆனால் இறுதிக் கட்ட முயற்சிகளை செய்து புது வரவுகளை உறுதிப்படுத்த ; ஒவ்வொரு தொடரிலும் உள்ள ஏராளமான கதை வங்கியிலிருந்து நமக்கான நல்ல கதைகளைத் தேர்வு செய்ய ; அதன் பின்னே அவற்றிற்கான டிரைலர்களைத் தயார் செய்ய என்று ஒரு வண்டிப் பணிகள் காத்துள்ளன 2015-அட்டவணையை உங்களிடம் ஒப்படைப்பதற்கு எஞ்சி இருக்கும் 45 நாட்களில் !! அதுவரையிலும் மூடிய வாயோடே நான் லொடலொடப்பதை நீங்கள் சகித்தாக வேண்டிய நிர்பந்தம் !! தவிர, அத்தனையையும் இப்போதே போட்டுத் தாக்கி விட்டால் - 2015 ஜனவரி புலர்ந்து, புது இதழ்கள் வெளிவருவதற்குள் அவை ஏதோ ஒரு மாமாங்கத்தில் பேசப்பட்ட பழங்கதைகள் என்பது போல் ஆகி விடாதா ? So கொஞ்சமே கொஞ்சமானாலும் சஸ்பென்ஸ் தொடரட்டுமே ?! நிஜத்தைச் சொல்வதாயின் இந்த சஸ்பென்ஸ் - சுண்டக்காய் என்பதெல்லாம் "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" பாணியிலான விளம்பர gimmick தான் ; ஒரு பேப்பரும், பேனாவும் கையில் எடுத்துக் கொண்டு - ஒரு கால் மணி நேரம் செலவிடத் தயாராக இருக்கும்  பட்சத்தில் நமது அட்டவணையின் ஒரு தோராய அவுட்லைன் போட்டுவிட நண்பர்கள் அனைவருக்கும் சாத்தியமாகிடும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ! யார்-யார் தவிர்க்க இயலா நாயகர்கள் ? ; யாருக்கு எத்தனை slots இருந்திடும் ? என்பதை யூகிக்க பெரியதொரு ராக்கெட் விஞ்ஞான ஞானம் அவசியப்படாது தானே ?! For fun's sake - 2015-ன் உங்களின் "யூக அட்டவணையைத்" தயாரித்துப் பார்த்திடலாமே ?அறிவிக்கப்படும் நமது 2015-ன் schedule-க்கு 90% நெருங்கிடும் யூகங்கள் அனைத்திற்குமே புத்தாண்டின் சந்தா நமது பரிசாக இருக்கட்டுமே ? Give it a shot guys ? 

சரி...அடுத்தாண்டின் அலப்பரைகள் ஒரு பக்கமிருக்க, அக்டோபரின் இதழ்களை ஒரு முன்னோட்டம் பார்க்கத் தொடங்குவோமா எப்போதும் போலவே ? கார்சனின் கடந்த காலம் - முழு வண்ணத்தில் ; காலனின் கைக் கூலி + திகில் நாயகர் டைலன் தோன்றும்  "வீதியெங்கும் உதிரம்" தான் இம்மாதத்தின் வரவுகள் ! LMS -ல் அறிமுகமாகி - நம்மில் நிறையப் பேரை பேந்தப் பேந்த விழிக்கச் செய்த டைலன் தான் இவ்வாரப் preview -ல் இடம்  பிடிக்கும் ஆசாமி ! இந்தாண்டின் அட்டவணை அறிவிக்கும் வேளைதனில் டைலன் கதைகளை black & white -ல் வெளியிடுவது என்பதே திட்டமாக இருந்தது ! ஆனால் LMS -ல் வர்ணங்களில் அழகாய்த் தோற்றம் தந்த டைலனை கறுப்பு - வெள்ளைக்குப் பதவி இறக்கம் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவருக்கு ஆர்ட் பேப்பரும், முழு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது ! இதோ - வண்ணத்தில் டாலடிக்கும் மனுஷரின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு !  

இவை இன்னமும் இறுதிக்கட்ட நகாசு வேலைகளுக்குக் காத்திருக்கும் பக்கங்கள் என்பதால் இதனில் தெரியும் ஆங்கில எழுத்துக்கள் ஒரிஜினலில் வந்திடாது ! Jack The Ripper என்ற கதையின் தமிழாக்கம் இம்மாதம் நீங்கள் சந்திக்கவுள்ள டைலன் சாகசம் ! அந்தி மண்டலத்தைப் போல் இதுவொரு தலைசுற்றச் செய்யும் ஹாரர் ரகக் கதையல்ல ; மாறாக இதனை ஒரு psycho - detective திரில்லர் என்று சொல்லலாம் ! 'பர பரவென்று' பயணிக்கும் இக்கதையில் டைலனுக்கு உள்ள டயலாக்கை விட அவரது உதவியாளன் க்ரௌச்சோவிற்கு உள்ள வசனங்கள் ஜாஸ்தி ! க்ரௌச்சோவின் பகுதிகளை எழுதுவது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் இருந்தது ; கதையைப் படிக்கும் போது ஏனென்று புரிந்து கொள்வீர்கள் ! 96 பக்கங்களில் crisp ஆக முடியும் இக்கதை - உங்களிடம் நிச்சயமொரு thumbs up ஈட்டி விடுமென்றே நினைக்கிறேன் - நம்பிக்கையோடு காத்திருப்போம் ! நம்மை விடவும் டைலனின் இத்தாலிய ரசிகர் மன்ற நண்பர்கள் மிகுந்த ஆவலோடு காத்துள்ளனர் ! தங்கள் ஆதர்ஷ நாயகர் புது தேசங்களில் ; புது மொழிகளில் மிளிர்வதில் அவர்கட்கு அலாதிப் பெருமிதம் !!!


இம்முறையிலான ஊர்சுற்றலின் போது அமெரிக்க காமிக்ஸ் கடல் ஒன்றினுள் அடிவைக்க நேரம் கிட்டியது ! அதனைப் புத்தகக் கடை என்று சொல்வது நிச்சயம் பொருந்தாது ; வாசலில் இருந்து கடைக் கோடி வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்த காமிக்ஸ் குவியல்களைப் புரட்ட நிச்சயமாய் ஒரு நாள் போதாது தான் ! மார்கெட்டில் புகுந்திருக்கும் புதுப் பதிப்பகங்களின் கதைத் தொடர்கள் ; கற்பனை வளங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன ! புதியவர்கள் எத்தனை பேர் வந்தாலும் எங்கள் ராஜ்யத்தை அசைக்க ஆள் கிடையாதென்று பறைசாற்றும் விதமாய் BATMAN ; SPIDERMAN ; AVENGERS ; SUPERMAN என விற்பனையில் எண்ணற்ற சாதனைகள் செய்த ஜாம்பவான்கள் புதுசு புதுசாய், மிரட்டலாய் ஏதேதோ அவதாரங்களில் டாலடிக்கின்றனர் ! அவர்களது காமிக்ஸ் படைப்புகள் சகலமுமே, டி.வி. ; திரைப்படப் பின்னணிகளும் கொண்டவைகளாய் இருப்பதால் - விளம்பரங்களுக்குப் பஞ்சமே இருப்பதே இல்லை என்பதைக் கண்கூடாய்ப் பார்க்க முடிகின்றது ! தவிரவும், பொம்மைகள் ; ஸ்கூலுக்குக் கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் ; வாடர் பாட்டில் ; டி-ஷர்ட் ; போஸ்டர்கள் போன்ற காமிக்ஸ் தொடர்புடைய merchandising விற்பனைகளும் பிரமிப்பைத் தருகின்றன ! உலகின் தலையாய காமிக்ஸ் சந்தையாக அமெரிக்க தக தகப்பதில் வியப்பேதும் இல்லை தான் !!


அந்த சூப்பர் ஹீரோ லோகம் ஏனோ நமக்கு அவ்வளவாய் set ஆகவில்லை எனும் போது விரதத்தில் இருப்பவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைக்குள் நுழைந்த உணர்வே எனக்கு ! கால் கடுக்க கடையை முழுசும் அலசிய போது நமக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு சில கிராபிக் நாவல்களை (!!!) அடையாளம் பார்த்திட முடிந்தது ! அவை black & white ஆக்கங்களே எனினும், ஒவ்வொரு கதையும் ஒரு வித்தியாசமான கதை சொல்லும் பாணியை முன்வைப்பதை உணர முடிந்தது ! சிக்கிய பிரதிகளை வாங்கி ; அவகாசம் கிட்டும் போதெல்லாம் படிக்கும் வேலைக்குள் மெள்ள நுழைந்துள்ளேன் ; நமக்கு ஏற்ற கதைகளாய் அவை இருக்கும் பட்சத்தில் - அவற்றின் உரிமைகளைப் பெற கல்லைத் தூக்கிப் போட்டு வைப்போமே என்ற சிந்தனையில் ! அதே போல - மலையாய்க் குவிந்து கிடக்கும் அவர்களது science -fiction கதைகளில் ஒரு சிலவற்றையும் வாங்கி எப்படியேனும் அதற்குள் ஐக்கியமாகிட முயற்சித்து வருகிறேன் ! அந்த genre-க்கு உலகெங்கும் ரசிகர்கள் கோடானுகோடிப் பேர் இருக்கும் போது நாம் அதன் பக்கமாய்த் தலையே வைக்காது இருப்பது சரி தானா ? என்று எனக்குள் இருக்கும் சின்னதொரு நெருடலுக்கு விடை காணும் முயற்சியில்..! What's your take on sci-fi folks ? நேற்றைய பாலைவனங்களில் குதிரைகளிலும், கோவேறு கழுதைகளிலும் பயணம் செய்யும் மனிதர்களை ரசித்து வரும் நாம் - நாளைய விண்வெளிக் கப்பல்களையும், பிரபஞ்சத்தின் பிற பிறவிகளையும் லேசாகவேனும் அணுகிட முயற்சிப்போமா - 2016-ல் ? 



அப்புறம் பெங்களூரில் நடந்திடும் COMIC CON 2014 விழாவிற்கு சென்ற நண்பர்கள் தங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்திடலாமே  - ப்ளீஸ் ?! இம்முறை புதியதொரு அரங்கம் ; முதன்முறையாக நுழைவுக் கட்டணம் என்ற மாற்றங்கள் ஏதேனும்  வித்தியாசங்களைக் கொண்டு வந்துள்ளனவா ? நாம் பங்கேற்கவில்லை எனினும், காமிக்ஸ் எனும் காதலை சிலாகிக்கும் எல்லா முயற்சிகளும் வரவேற்புக்குரியவைகள் தானே !


And before I sign off - இதோ - மி.மி. The Complete Saga--வின் updated முன்பதிவுப் பட்டியல் ! இம்மாத இறுதிக்குள் 500 என்ற நம் முன்பதிவு இலக்கைத் தொட்டு விடும் சாத்தியம் இருப்பின் 2015 ஜனவரிக்கு தளபதி ஜொலிப்பார் ! இது வரையிலும் பதிவு செய்திருக்கா நண்பர்கள் ('தல' ரசிகர்களை இருப்பினும் கூட !!) களத்தில் இறங்கிடலாமே - ப்ளீஸ் ?! 

மீண்டும் சந்திப்போம் ! Bye for now all !

P.S : Special Update நம் பயணத்தில் முதன்முறையாக - அட்டைப்படத்தினில் அயல்நாட்டு ஒவியரொருவரின் கைவண்ணம் மிளிரக் காத்துள்ளது ! விபாங்கள் இந்த ஞாயிறன்று ..! 


Sunday, September 07, 2014

பதில்களும்..சில உரத்த சிந்தனைகளும்...!

நண்பர்களே,

வணக்கம். "தேவ இரகசியம்" மட்டுமல்லாது செப்டெம்பரின் இதர இதழ்களுமே உங்களை திருப்தி கொள்ளச் செய்திருப்பது மனதுக்கு இதமாக உள்ளது ! பொதுவாகவே ஒரு மெகா முயற்சிக்குப் பின்பாகத் தொடர்ந்திடும் நார்மல் வாழ்க்கையில் ஒரு சின்ன வெறுமை தோன்றுவது இயல்பே ! ஆனால் எப்பாடுபட்டேனும் LMS எனும் 'திடும்' இதழுக்குப் பின்பாய் அந்த vacuum நம்மிடையே உருவாகிடக் கூடாதே என்பதே எங்கள் நோக்கமாய் இருந்தது ! ப்ளூகோட் புண்ணியவாளர்களும், ஓவியர் ஹெர்மனின் கமான்சே டீமும், மில்லியன் ஹிட்சின் சித்திர மாயாஜாலங்களும் ஒன்றிணைந்து அந்தப் பிரச்சனைக்கு இடமின்றிச் செய்து விட்டார்கள் என்பதை உணரும் போது thumbs up தந்திடத் தோன்றுகிறது  ! இம்மாதத்து இதழ்களை தம் தோள்களில் சுமந்திடும் பொறுப்பை பெரியளவில் ஏற்றுக் கொண்டுள்ளது ஓவியர்களே என்பது அப்பட்டம் ! கமான்சேவின் கதையினை ஒரு போஸ்ட் கார்டின் முன்பக்கத்தில் எழுதி முடித்து விடலாம் தான் ; வழக்கமானதொரு கௌபாய் பழிக்குப் பழி படலம் தான் ! ஆனால் அதனை தனது அசாத்திய சித்திரத் திறமைகளால் பற்பல படிகள் மேலே உயர்த்திச் சென்றுள்ளது ஹெர்மனின் தூரிகை என்றால் மிகையாகாது தானே ? No wonder காமிக்ஸ் உலகின் டாப் கௌபாய் கதைப் பட்டியல்களில் ஓசையின்றி இத்தொடர் இடம் பிடித்துள்ளது !! "தேவ இரகசியம்" பற்றிச் சொல்லவே தேவையில்லை ; துவக்கம் முதல் இறுதி வரை ஒவியரெனும் அந்த ஒற்றை மனிதனின் அதகள ராஜ்யமே !! ப்ளூகோட்சில் மட்டுமே கதாசிரியர் + ஓவியர் சரிசமமாய் திறமைகளைக் காட்டியுள்ளனர் என்று சொல்லலாம் ; குதிரைகள் இல்லாத குதிரைப்படை ; காட்டுக் குதிரைகளை சாதுவாக்கும் வழிமுறைகள் ; வெளியேற பாதையே இல்லையெனும் போதும் கூட மனம் தளராமல் குதிரைகளைக் கண்ணைக் கட்டி மலை உச்சியிலிருந்து கயிற்றில் கீழ் இறக்கும் அந்த இராணுவ உத்வேகம் என்று கதாசிரியர் எந்தவொரு வாய்ப்பையும் வீணாக்கிடவில்லை !

So the Moral of this September (for me !!) : மீடியமான கதை இருந்தால் கூட, ஒரு திறமையான ஓவியரின் கையில் அது பட்டை தீட்டப்பட்ட வைரமாதல் சாத்தியமே !! 

சரி, 2 வாரங்களுக்கு முன்பாக இங்கு நான் முன்வைத்திருந்த வினாக்களுக்கு உங்களின் பதில்களை சற்றே அலசுவோமா ? ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தது போல இம்முறை ஒரு மிகப் பெரிய pleasant surprise - நெடுநாளைய மௌன வாசக நண்பர்களும் கூட நேரம் எடுத்துக் கொண்டு விரிவாய் பதில் தந்திட முனைந்திருப்பதே !! இங்கு பதிவிட்டோர் ஒரு பகுதியெனில், மின்னஞ்சல்களில் தொடர்பு கொண்டோர் மீதம் !! இத்தனை ஆர்வமாய் உங்களில் ஒவ்வொருவரும் காட்டிடும் அந்த ஈடுபாடு நிஜமாக எங்களுக்கொரு வரப்பிரசாதம் !! Thanks indeed all...!!! On to business now !
  1. (இது வரையிலான) 2014-ன் TOP 3 இதழ்கள் உங்கள் பார்வையில் ? (LMS வேண்டாமே ஆட்டத்துக்கு !!)
Surprise !!! அந்தக் கூர்மண்டைகளுக்கும், ஓவலான முகங்களுக்கும், அசாத்திய  வில்லத்தனங்களுக்கும் நம்மோடு ஒரு மாய பந்தம் இருக்குமோ - என்னவோ தெரியவில்லை!! அன்றைக்கு ஸ்பைடர் எனும் பெயருக்கு "உள்ளேன் அய்யா !" சொன்னவருக்கும் இதுவே அடையாளங்கள் எனில் இன்று "மங்கூஸ்" என்ற பெயருக்கு முறைப்பைப் பதிலாய் வழங்கும் "விரியனின் விரோதியே" இது வரையிலான 2014's டாப் ஹிட் !! தல..தளபதி...லார்கோ...ஷெல்டன்...வுட்சிடி கோமாளிகள் ...லக்கி ...என்று ஒரு வலுவான களத்தினில் he came...he saw..he conquered !! இக்கதையை கையில் எடுத்த போது எனது முதல் சிந்தனை - XIII தொடரின் most hated ஆசாமியை எவ்விதம் படைப்பாளிகள் கையாண்டிருப்பார்களோ என்பதே ! குரூரமான வில்லனை மேற்கொண்டு கொடூரமாய்ச் சித்தரிப்பார்களா ? அல்லது அவனது மறுபக்கத்தை முன்கொணர முயற்சிப்பார்களா என்ற கேள்வி எனக்குள் ! ஆனால் கதையைப் படித்து முடித்தான பின்னே மங்கூசின் "மனித முகத்தையே" நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பது புரிந்தது ! கதை நெடுக பத்தி பத்தியாய் இருந்த வசனங்கள் துவக்கத்தில் சற்றே புருவங்களை உயரச் செய்தன ; ஆனால் கதையின் ஜீவனே அந்த ஸ்கிரிப்ட் தான் என்பதை உணர முடிந்த போது கவனமாக உள்ளே கால்பதித்தோம் ! தமிழ் மொழிபெயர்ப்புகள் உங்கள் முன்பு பவனி வருவதால் சுலபமாய் நானும், நமது கருணையானந்தம் அவர்களும் ஸ்கோர் செய்வது சாத்தியமாகிறது ; ஆனால் இக்கதையின் நிஜ நாயகி இதனை பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துத் தந்தவரே  என்பதில் எனக்கு துளியும் ஐயம் கிடையாது ! ஆண்டுகளாய் XIII கதையினைப் படித்துப் பழகிய ஆட்கள் நாம்  ; நமக்கு சுமாராகவாவது இக்கதையின் outline தெரிந்திருக்கும் ; ஆனால் அவ்விதப் பரிச்சயம் எதுவுமின்றி இது போன்றதொரு complex கதையினை அழகாய் ; துளியும் கோர்வைக்குறைவின்றி, ஒற்றை அடித்தம் திருத்தமும் இல்லாமல் வழங்கியது அசாத்திய ஆற்றலின் வெளிப்பாடு !! இந்தக் கதையின் ஆங்கில ஸ்கிரிப்ட் எனக்கு வந்த போது கொஞ்ச நேரம் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன் ; பரீட்சைப் பேப்பரில் மொத்தமாய் ஒரு 55 பக்க ஆக்கம் !! சீரான ; அழகான கையெழுத்தில் அற்புதப் புலமை !! இது போல் ஒரு கம்பீரமான ஸ்கிரிப்ட் நமக்குக் கையில் கிடைக்கும் வேளைகளில் நம்மையும் அறியாது ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்வதைப் புரிய முடிகின்றது ! So இந்த இதழின் வெற்றிக்குப் பெரும் பங்கு சேர வேண்டியது  நமக்கு பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் செய்து தரும் அந்த இல்லத்தரசியே ! அப்புறமாய் அந்த சித்திர பாணிகள் ; கதை சொல்லப்பட்டிருந்த விதம் ; வர்ணங்களில் ஒரு வித்தியாசம் என ஒவ்வொன்றும் தன் பங்கைச் செய்திட நிறைவானதொரு இதழாக இது அமைந்தது ! "கிராபிக் நாவல்" என்றாலே பேஸ்த்தடிக்கும் தருணத்தில் ஒரு கிராபிக் நாவல் டாப் ஹிட்டாக அமைந்திருப்பதே icing on the cake என்று சொல்லலாமா ? 

ஹிட் # 2 - no  surprises !!! 'தல' அதகளம் செய்திட்ட "நில்..கவனி...சுடு..!" தான் இதுவரையிலான இந்தாண்டின் வெளியீடுகளில் இரண்டாமிடத்தில் ! நண்பர்கள் நால்வருமே ஆக்ஷனில் இறங்கும் பாணியாகட்டும் ; கார்சனின் கொஞ்ச நேர solo அட்டகாசமாகட்டும் ; கிளைமாக்சில் அனல் பறக்கும் ஆவேசமாகட்டும், துளியும் தொய்வில்லாது துள்ளிக் குதித்த இக்கதைக்கு உங்களின் பாராட்டுக்கள் நிரம்பவே கிட்டியுள்ளது ! சித்திரங்கள் மட்டும் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் பட்சத்தில் இக்கதை வேறொரு பரிமாணத்தை எட்டிப் பிடித்திருக்கும் என்பது நிச்சயம் ! 

மூன்றாமிடத்திற்கு தான் கொஞ்சம் அபிப்ராயங்களில் வேற்றுமை உங்களிடையே ! ஆனால் மெல்லியதொரு வாக்கு வித்தியாசத்தில் முன்நிற்பது ஷெல்டனின் "எஞ்சி நின்றவனின் கதை" ! பரபரப்பான கதைக்களம் ; கொஞ்சமாய் செண்டிமெண்ட் ; ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான நாயகர் என்ற காரணங்களே ஜனரஞ்சகப் package ஆன  இக்கதையை நீங்கள் தேர்வு செய்ததன் பின்னணி என்று நினைக்கிறேன் !  

Moral behind the choices : நல்ல கதைகள் வென்றே தீரும் ; அவை எத்தனை complex ஆக இருப்பினும் ! 

2.     2014-ன் 3 டப்பா இதழ்கள் ? 

கொஞ்சம் கூட சிரமமே இல்லாது "டப்பா"வாகத் தேர்வாவது - "கா" வில் துவங்கும் 2 இதழ்களே ! "காவியில் ஒரு ஆவி" ; மற்றும் "காலத்தின் கால்சுவடுகளில்" தான் அவை என்று நான் சொல்லவும் வேண்டுமா ? ஜில் ஜோர்டன் கதைகளை நாம் கார்டூன்களாகப் பார்ப்பதா - அல்லது சீரியஸ் ரகத் துப்பறியும் கதைகளாகக் கருதுவதா ? என்பதில் தான் சிக்கலே துவங்குகிறதென்று  நினைக்கிறேன் ! கார்ட்டூன் எனில், வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும் சூழ்நிலைகளும் ;ஒன்றுக்கு இரண்டாய் காமடிப் பாத்திரங்கள் இருத்தல் அவசியமாகும். ஆனால் ஜில்லின் கதைகளிலோ அவரது ஓட்டைவாய் அசிஸ்டன்ட் தவிர்த்து பாக்கி யாரும் 'கெக்கேபிக்கே' ரகம் கிடையாது என்பதோடு - ஜில் ஒரு சீரியசான துப்பறிவாளரும் என்பதால் இக்கதைகள் நமக்கொரு 'அந்தி மண்டலமாய்' காட்சி தருகிறதோ ? ரோஜரைப் பொருத்தவரை "காலத்தின் கால்சுவடுகளில்" பெரியதொரு கதையென்று இல்லாமல் ஒரு plain adventure மாத்திரமே இடம்பிடிப்பதால் வஞ்சணையின்றி உதை வாங்கியுள்ளது புரிகிறது ! இன்னமும் ஒரு சொதப்பலாய் நிற்பது முதலைப் பட்டாளத்தின் "முகமற்ற கண்கள் "!! நம் ரசனைகளின் மாற்றங்களை அப்பட்டமாய்ச் சொல்லிட இதை விட வேறொரு உதாரணம் அவசியமாகாது என்பதே இதனில் கிட்டும் பாடம் !  1987-ல் முதன்முறையாக இக்கதை வெளியான சமயம் கிட்டிய வரவேற்பு பிரமாதமானது ! ஆண்டுகள் 27 கடந்த நிலையில், என் தலைக்குள் கதை மறந்து போயிருக்க, அந்நாட்களில் கிட்டிய வரவேற்பு மாத்திரமே நினைவிருக்க - ஆர்வமாய் மறுபதிப்புப் பட்டியலில் இதனை டிக் அடித்தேன் ! ஆனால் அச்சுக்குச் செல்லும் முன்பாக எடிட் செய்ய அமர்ந்து கதையைப் படித்த போது புராதன நெடி பிடறியோடு அறைவதை உணர முடிந்தது ! So - டப்பா பட்டியலுக்குள் இது இடம் பிடித்ததில் வியப்பில்லை !! ஆனால் இங்கொரு சந்தோஷ முரண்பாடும் இல்லாதில்லை ! இந்தாண்டின் இன்னொரு மறுபதிப்பான "பூம்-பூம் படலம்" எவ்விதத் தொய்வுமில்லாது சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது எனும் போது - அந்தக் கௌபாய் களங்களுக்கும், கார்ட்டூன் பாணிகளுக்கும் மட்டும் இந்தப் புராதன அளவுகோல்கள் அவசியமாகாது  போலும் ! 

Moral of the story : எத்தனை அழகான சித்திரங்கள் இருப்பினும், கதையெனும் முதுகெலும்பு சிறிதேனும் தெம்பாய் நிற்றல் அவசியம் ! இல்லையேல் "கா.கா.சு" போல மண்ணை ருசி பார்த்தல் அவசியமாகும் ! 

3. கௌபாய் கதைகளை ரொம்பவே துவைத்துத் தொங்கப் போடுகிறது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா ? பதில் 'ஆமாம்' எனில் - 'கிளம்பு நைனா..' என்று யாரை மூட்டை கட்டச் சொல்லலாம் ? (தல ; தளபதி WWF இதற்குள் கண்டிப்பாக வேண்டாமே - ப்ளீஸ் ?!)

An Emphatic 'NO' is the answer to this one....!! கௌபாய் கதைகளின் பாணிகள் இன்னுமொரு மாமாங்கம் ஆனால் கூட நமக்கு அலுத்துப் போகாது என்பதை அழுத்தம் திருத்தமாய்ப் பதிவிட்டுள்ளீர்கள் ! அந்தக் கரடுமரடான லோகத்திற்கு நாம் என்றும் ரசிகர்களே என்பது தெளிவாகி இருப்பதால் எனக்குள்ளே தோன்றிய ஒரு சிறு நெருடல் மாயமாகிப் போய் விட்டது !

4.Black & white இதழ்களை வரவேற்கிறீர்களா ? இவை தொடரலாமா ?

இதற்குமே கிட்டத்தட்ட ஏகோபித்த "ஆமாம்" என்பதே பதில் ! வண்ணத்தில் வானவில்லே காட்சி தந்தாலும், 'அந்த black & white-ன் கம்பீரமும் தொடரட்டுமே !' என்ற உங்கள் சிந்தனைகளுக்கு நமது 2015-ன் திட்டமிடலில் ஒரு எதிரொலி இருப்பதைக் காணப் போகிறீர்கள் ! 

5.'Yes' எனில் அவற்றில் யாரைக் காண ஆவல் ? (ப்ளீஸ், மாட்சிமைதங்கிய மும்மூர்த்திகளை துயில் எழுப்பக் கோர வேண்டாமே ?!!)

ரிப் கிர்பி...காரிகன்..மாடஸ்டி....என்ற ரீதியில் "முன்னோர்களை" நினைவுபடுத்தியவர்கள் ஒரு பகுதியெனில் - மர்ம மனிதன் மார்டின் ; CID ராபின் ; டயபாலிக் போன்ற இத்தாலிய ஆசாமிகளை black & white அவதாரத்தில் தொடரக் கோரிய நண்பர்கள் ஏகம் ! பார்ப்போமே...!! 


6.தோர்கல் பற்றிய உங்கள் அபிப்ராயம் ? 

ஏகோபித்த "ஆமாம்" என்ற பதில் இல்லை தான்...! ஆனால் அதே சமயம் இதனைப் புறக்கணிக்கவும் வேண்டாம் என்பதே மெஜாரிட்டியின் அபிப்ராயம் ! எப்போதுமே ஒரு புது பாணிக்கு நாம் பழக்கமாகிக் கொள்ள அவகாசம் தேவையாவது இயல்பே என்பதால் இந்த fantasy ..mythology ...ரகக் கதைவரிசைக்கு நம்மை நேம் தயார் செய்து கொள்ளவும் நேரம் தேவையே என்பது புரிகிறது ! தோர்கலின்  தொடரும் அத்தியாயங்கள் விறுவிறுப்பானவை என்பதாலும், இனி வரும் தோர்கல் கதைகள் இரண்டல்லது மூன்று ஆல்பங்களின் தொகுப்பாகவே இருக்கும் என்பதால் நம் ஈடுபாட்டு அளவுகளும் உயர்ந்திட ஏதுவாக இருக்குமென்றே நினைக்கிறேன் ! தோர்கள் ஒரு நெடுந்தொலைவு ஓட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை ! 


7.2013 & 2014-ன் நமது காமிக்ஸ் சேகரிப்பில் பெரியதொரு ஆர்வத்தைக் கிளப்பாது போன இதழ் எது ? இப்போது வரை படிக்கவே தோன்றவில்லை என்ற ரகத்தில் ஏதேனும் ....? 

எதிர்பார்த்தபடியே (!!) "சிப்பாயின் சுவடுகளில்.." அந்த "ஐயகோ  அவார்டை " தட்டிச் செல்கிறது ! கொஞ்சம் வரலாறு...கொஞ்சம் மனித உணர்வுகள் ; புதியதொரு கதைக்களம் (வியட்நாம்) என்று பயணமான இக்கதை உங்கள் உள்ளக்கதவுகளைத் தட்டாமல் போனதில் எனக்கு வருத்தமே ! 

இந்த ஜூலை இறுதியில் ஐரோப்பா பயணமாகி இருந்த போது பணி நிமித்தம் ஹாலந்து நாட்டில் இருந்தேன் அன்றைய தினம் ஒரு தேசிய விடுமுறையாய் அறிவிக்கப்பட்டிருந்தது யுக்ரைனில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அவர்களது வான்வீதியில் பறந்து கொண்டிருந்த Malaysian Airlines பயணிகள் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதை நாம் அறிவோம் அந்த விபத்தில் உயிரிழந்தோரின்  பெரும்பகுதியினர் ஹாலந்துப் பிரஜைகள் என்பதும்அவர்களது சடலங்கள் யுக்ரைனின் வயல்களில் சிதறிக் கிடந்தன என்பதும் பிற்பாடு உலகமே அறிந்த சோக நிகழ்வு நிறைய இழுபறிக்குப் பின்னே அங்கே சேகரிக்கப்பட்ட பயணிகளின் சரீரங்கள் குளிரூட்டப்பட்ட இரயில் மூலமாக யுக்ரைனின் தலைநகருக்குக் கொண்டு வரப்பட்டுபின்னே அங்கிருந்து விமானம் மார்க்கமாய் ஹாலந்தில் Eindhoven தளத்திற்கு கொண்டு வரப்பட்டன விமானத்தில் வரும் சவப்பெட்டிகளில் தம் அன்பிற்குரியவர்கள் உள்ளனரா என்பது கூடத் தெரியாத ஏராளமான குடும்பங்கள் Eindhoven விமான நிலையத்தின் வாசலில் பரிதாபமாய் நிற்பதை டி-வியில் பார்க்க முடிந்த போது வயிற்றைப் பிசைந்தது அதே கணத்தில் நமது "சிப்பாயின் சுவடுகளில்.." கதையின் துவக்கமும் கிட்டத்தட்ட இது போன்றதொரு கட்டமே என்பதை நினைவுக்குக் கொணராது இருக்க முடியவில்லை ! 'நிஜ வாழ்வினில் அவரவருக்கு உள்ள சிக்கல்களை தலைநோவுகளை மறக்கவே காமிக்ஸ் எனும் சோலைக்குள் தலைவிடுகிறோம் இங்கும் அழுகாச்சி தேவையா ?' என்ற நமது நண்பர்களின் கேள்விகள் நியாயமே ஆனாலும்வரம் வாங்கியிரா சக மனிதர்களின் துரதிர்ஷ்ட ஜீவிதங்களை எப்போதேனும் ஒரு முறை நமது வாசிப்புகளுக்குள் இணைத்துக் கொள்வது அத்தனை பெரிய தவறாகிப் போகுமா என்ன தோற்றுப் போனதொரு இதழாக "சி.சு." இருப்பினும்இதனைத் தேர்வு செய்ததன் பொருட்டு என்னுள் நிச்சயமாய் எவ்வித வருத்தமும் இல்லை 



8.தற்போதைய கேப்டன் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை தொடரலாமா ? அல்லது 2015-க்கு - மின்னும் மரணமே போதுமென்று கருதிடலாமா ? (unbiased opinions ப்ளீஸ் ? ; தல, தளபதி ரசிகக் கண்மணிகளின் முத்திரைகளின்றி ?)


Mixed reactions...! கேப்டன் டைகரின் இளம் பருவத்துக் கதைகளில் வீரியம் பற்றாதென்பதில் ஏகோபித்த உடன்பாடு ; அதே சமயம் இதனை தொங்கலில் விட வேண்டாமென்றும் நிறையவே குரல்கள் ! தவிர, ஒரு பாகத்துக்கும், அடுத்த பாகத்துக்கும் நீண்ட இடைவெளிகள் இருப்பது மிச்சசொச்ச சுவாரஸ்யத்தையும் போட்டுத் தள்ளி விடுகிறதென்பது பரவலான கருத்து ! இதை நான் பார்ப்பது வேறொரு ரீதியினில் : சுமாரான கதைகளாய் தொடர்ச்சியாய் ஒரு 3 மாதங்கள் வந்திடும் பட்சத்தில் நிறையப் புருவங்கள் 'விர் விர்ர்ரென்று' உயர்வது உறுதி ! தவிர, மாதம் 3 கதைகள் எனும் போது அவற்றில் ஏதேனும் ஒன்றாவது மீடியம் ரகமே என்றே துவங்கும் ; இந்நிலையில் இளம் டைகரும் "சுமார்" முத்திரையோடு களத்தில் இறங்கினால் - அம்மாதத்து வாசிப்பு அனுபவத்தின் பெரும்பகுதி அம்பேல் ஆகிப் போய் விடாதா ?  So கொஞ்சம் சீரான இடைவெளியோடு டைகரை உள்ளுக்குள் நுளைக்கவே இது வரை முயற்சித்துள்ளேன் !  2015-ல் "மின்னும் மரணம் " வெளியாவதைத் தொடர்ந்து டைகர் power பெருக்கெடுப்பது நிச்சயம் ; so சந்தடி சாக்கில் இளம் டைகரையும் தொடர்வோமே  


9.ரிப்போர்டர் ஜானி ...? ப்ருனோ பிரேசில் ? சாகச வீரர் ரோஜர்...? இவர்களது எதிர்காலங்கள் எவ்விதமோ - நமது வாசிப்பு ரசனை வரிசையில் ?

ரிப்போர்டர் ஜானிக்கு ஒரு உறுதியான "YES " & இதர 2 நாயகர்களுக்கும் அதே உறுதியோடு "NO " சொல்லியுள்ளீர்கள் ! YES SIRS !! என்று நானும் உங்களின் அபிப்ராயங்களுக்குத் தலையசைக்கிறேன் !  


10.புதியதொரு தலைமுறை கொஞ்சமே கொஞ்சமாகவேனும் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து வருவதைக் கவனிக்கிறேன். இந்த சூழலில் நமது எழுத்து பாணி ; மொழிபெயர்ப்பு ஸ்டைல் மாற்றங்களின்றி இப்படியே தொடர்வது பற்றி உங்களது அபிப்ராயம் ?

60-40 ! "உள்ளதை ஏன் நோண்டுவானேன் ?" ; "சீராய் ஓடும் விஷயத்தை டின்கெரிங்க் செய்ய வேண்டாமே !" என்ற ரீதியில் 40% சிந்தனைகள் ! ஆனால் "இன்றைய தலைமுறையை சென்றடைய எழுத்துப் பாணிகளில் மாற்றம் செய்ய முடிந்தால் நன்றே !" என 60% அபிப்ராயங்கள் ! தனிப்பட்ட முறையில் இன்றைய தலைமுறையின் தமிழ் ஆர்வம் குன்றி வருவதில் எல்லோரையும் போல் எனக்கும் வருத்தமே ! சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த என் 22 வயது மருமகன் LMS -ஐப் படிக்க அடித்த அந்தர்பல்டிகளையும் ; "மிரட்சி" என்ற சொல்லுக்கும் கூட அர்த்தம் கேட்டதையும் சங்கடத்தோடு தான் பார்க்க முடிந்தது ! அழகான தமிழாக இருப்பினும், அதில் சுலபம் இல்லாது போயின் அடுத்த தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பது கடினமே என்பது நம் முன்னேயுள்ள சுவற்றில் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள சேதி என்பது புரிகிறது !! அதற்காக ஏக் தம்மில் - 'இன்னா நய்னா' என்ற ரீதிக்குக் குதிப்பதில் உடன்பாடும் எனக்கு இல்லை ! Over a period of time எழுத்துக்களில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு practical approach கொணர முயற்சிப்போம் ! தவிர,புதுத் தொடர்கள் அறிமுகம் செய்யும் வேளைகளில் புது இரத்தமும் பாய்ச்ச வழியுள்ளதா என்ற தேடலைத் துவக்கிப் பார்ப்போம் ! காமிக்ஸ் படித்திரா ; நமது எழுத்துக்களின் வாடைகளே அறிந்திரா fresh ; young talent கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷப்படுவேன் ! மொத்தமாய் ஒரு புதிய கோணத்தில் அணுகும் புதிய தலைமுறை - மொழிநடைக்கும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொண்டு வந்தால் பயன் அடைவது அனைவரும் தானே இது ஒரே நாளில் நடந்தேறப் போகும் விஷயமல்ல என்பதால் 'போச்சா..போச்சா..?!!" என்ற பதட்டம் தற்போதைய நம் பாணியின் ரசிகர்களுக்குத் தேவைப்படாது ! This will be a gradual and seamless transition...!


11.புதிய கதைத்தொடர்களுக்காவது - மொழிபெயர்ப்புப் பொறுப்புகளைப் புதியவர்களிடம் ஒப்படைத்து புதிய பாணியொன்றைத் தேடும் ஒரு சிந்தனையினை நீங்கள் எவ்விதம் பார்ப்பீர்கள் ?

மேலேயுள்ள பதில் இதற்கும் பொருந்தும் என்பதால், ஒரு ditto மட்டும் போட்டு வைக்கிறேன் !! 


12.ஆண்டவன் அருளோடு 2014-ன் அட்டவணை திட்டமிட்டபடியே பூர்த்தியாகும் பட்சத்தில் இந்தாண்டில் நாம் வாசித்திருக்கப் போகும் கதைகளின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் ! டூ..டூ. மச் ? Your thoughts ?

90%  "தொடரட்டும் ; இன்னும் ஜாஸ்தி !" என்ற குரல் எழுப்பி இருப்பினும், 10% - "அளவாய் ; சீராய்ச் செல்வோமே !" எனக் கருத்துச் சொல்லியுள்ளனர் !

இங்கே சின்னதொரு practical உபாயம் நமக்கு உதவிடும் என்றே நான் நினைக்கிறேன் ! இந்தாண்டின் 11-வது மாதத்துக்கு முன்பாய் நமது ஸ்டாக் நிலவரத்தை ஒரு பரிசீலனை செய்வோம் ! ஸ்டாக் வைக்க நமது வங்கி இருப்புகள் தாக்குப் பிடித்தே விட்டால் கூட - நமது கிட்டங்கிகள் அதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியது மிக மிக அவசியம் ! முந்தைய ரூ.5 ; ரூ.6 இதழ்களைப் போல் அல்லாது தற்போதைய புக்ஸ் இடம் அடைப்பதில் பகாசுரன்கள் என்பதால் 2015-ன் உத்தேச வெளியீட்டு எண்ணிக்கை ; தோராயமாய் ஸ்டாக் என்பதைக் கணக்குப் போட்டால் நமது கிட்டங்கியில் இடம் எத்தனை மீதம் இருக்கும் என்பதை ஓரளவிற்கு கணித்திட முடியும் ! அதனையும் ஒரு வழிகாட்டியாய் எடுத்துக் கொண்டே 2015-ன் அட்டவணையைத் தயாரிப்போம் !

13.வரக் காத்திருக்கும் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல.." ; "இரவே..இருளே..கொல்லாதே..!" - உங்களில் ஏற்படுத்துவது எதிர்பார்ப்புகளையா ? அல்லது - 'முட்டைக்கண்ணனுக்கு ஏன் இந்த கொக்கு மாக்கு வேலை ? " என்ற சிந்தனைகளா ? 

"தேவ இரகசியத்திற்குக் " கிட்டியுள்ள வரவேற்பை இந்தக் கேள்விக்கான பதிலாய் எடுத்துக் கொள்வோமா ?     :-)

14.சிறார்களுக்கென கார்டூன்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய் நுழைக்கும் சிந்தனையை எவ்விதம் பார்ப்பீர்கள் ?

ஏகோபித்த வரவேற்பு இதற்குக் கிட்டும் என எதிர்பார்த்திருந்தேன் என்பதே நிஜம் ; ஆனால் இங்கும் ஒரு 10% மாறுபட்ட கருத்துக்கள் ! 'இப்போதே கார்ட்டூன் quotient ஜாஸ்தியாய் உள்ள நிலையில், மேற்கொண்டு திணிக்க வேண்டாம் !' என்ற ரீதியில் சில நண்பர்கள் கருதுகின்றனர் ! ஆனால் தரமான கார்ட்டூன் கதைகளே நம் இளம் பட்டாளத்தை இங்கு வரவழைக்கும் உபாயம் என்பதில் எனக்கு நிறையவே நம்பிக்கையுள்ளது ! So நல்ல கார்ட்டூன்கள் கிடைக்கும் பட்சத்தில், we will do them justice !

15. 2015-ன் அட்டவணையில் நீங்கள் எதிர்பார்க்கப் போவது முத்திரை பதித்த நாயகர்களின் தொடர்ச்சிகளையா ? அல்லது புது வரவுகளையா ? 

புது வருகைகளுக்கு 30 சீட்கள் ; இருப்போர்க்கு 70 என்ற பார்முலா முன்வைக்கப்பட்டுள்ளது ! ஆனால் 30 என்பதே ஜாஸ்தி என்பது தான் எனது அபிப்ராயம் ! இப்போதுள்ள established ஸ்டார்களில் லார்கோ நீங்கலாய் பாக்கியுள்ள அனைவரது தொடர்களையும் பூர்த்தி செய்ய நிச்சயம் 4-5 ஆண்டுகளாவது ஆகும் ! ப்ளூ கோட்ஸ் ; லக்கி லூக் ; சிக் பில் போன்ற முரட்டுக் கதைவங்கிகளுக்கு 10-15 ஆண்டுகள் எடுக்கும் சுலபமாய் !! டெக்ஸ் ; மேஜிக் வின்ட் ; ராபின் போன்றோரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் ;என் பேரன் காலத்திலும் அவை முற்றுப் பெற்றிருக்காது !! So இந்நிலையில் மேற்கொண்டு 30% புது வரவுகளை நுழைப்பது எல்லோரையும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்ள மாத்திரமே உதவிடும் ! புது வரவுகளை தொடர்களில் தேடாது, one shots வரிசைகளில் தேடுவதே அதற்கு தீர்வு என்று மனதுக்குப் படுகிறது ! What say folks ?  

சரி, நீண்டு கொண்டே செல்லும் இப்பதிவுக்கு இங்கே "சுபம்" போட்டு விட்டு, இப்போதைக்கு விடைபெறுகிறேன் !! செல்லும் முன்பாய் சிலகேள்விகள் - உங்களின் "உலக ஞானத்தை " சோதித்தறியும் பொருட்டு :
  • இது வரை நாம் வெளியிட்டுள்ள வண்ண இதழ்கள் மொத்தம் எத்தனை ? (லயன் ; முத்து ; சன்ஷைன் இத்யாதிகளை கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் ; முழு வண்ண இதழ்கள் மாத்திரமே ; இரு வர்ண இதழ்களைக் கணக்கில் சேர்த்திட வேண்டாமே !!)
  • இது வரை ரிப்போர்டர் ஜானி கதைகளை எத்தனை போட்டுள்ளோம் நாம் ? (மறுபதிப்புகளை கணக்கில் சேர்த்திடாது!)
  • மாடஸ்டி ப்ளைசி அம்மையாரின் கதைகள் எத்தனை இது வரை லயன் & முத்துவில் அரங்கேறியுள்ளன ?
  • வரலாற்றுப் பின்னணிகள் கொண்ட கதைகள் எத்தனை நம் பட்டியலில் உள்ளன என்று யூகித்துப் பாருங்களேன் ?
  • இது வரையிலும் நாம் வெளியிட்டதிலேயே (பக்க) அளவில் மிக நீ--மா-ன கதை எதுவோ

சரியான பதில்களை சொல்லிடும் நண்பர்களுக்கு THE KING SPECIAL நம் அன்பளிப்பு ! Good night folks !!