Saturday, September 27, 2025

ஒரு விஸ்வரூபம் 💥!

நண்பர்களே,

வணக்கம்! எங்க வீட்டு ஸ்டார் - உங்க வீட்டு ஸ்டார் கூடக் கிடையாது; சூப்பரோ, சூப்பரான பல ஸ்டார்கள் இந்த வருஷத்திலே ஏகப்பட்ட படங்களில் "ஆக்ட்'' கொடுத்திருக்கிறார்கள்! ஆனால், அவர்களுக்கெல்லாம் எட்டாததொரு மெகா வெற்றி - பெருசாய் ஸ்டார்பவரே இல்லாத "டூரிஸ்ட் பேமிலி­'' என்ற படத்திற்குக் கிடைத்துள்ளமாம் - சமீபமாய் எங்கேயோ படித்தேன்! "அடடே.." என்றபடிக்கே உள்ளுக்குள் படித்தால் - ஐந்து கோடியில் எடுக்கப்பட்ட படம் 275+ கோடிகளை வசூலித்துள்ளது பற்றி சிலாகித்திருந்தார்கள்! நல்லதொரு கதை மட்டும் முதுகெலும்பாக அமைந்துவிட்டால் போதும் - விச்சு & கிச்சு கூட விண்ணைத் தொட்டுவிடலாம் போலும் என்று நினைத்துக் கொண்டேன்! And கடந்த பத்து தினங்களாய் அந்த நினைப்பானது எத்தனை சரியென்பதை அட்சர சுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது - ஏஜெண்ட் ராபினின் உபயத்தில்!

ராபின் 2.0!! இரண்டு ஆண்டுகளாய் நம்ம V காமிக்ஸில் வருகை தந்து கொண்டிருக்கும் ஒரு டீசன்டான நாயகர்! ராபினை நமக்குக் கிட்டத்தட்ட 30+ ஆண்டுகளாகத் தெரியும் என்றாலும், கிருதாக்களில் "ஒயிட்'' படர்ந்துள்ள சற்றே முதிர்ந்த இந்த ராபின் 2.0 கொஞ்சம் மாறுபட்டவர்! கதாபாத்திரத்தில் ஆசிரியர் குழு செய்துள்ள சிற்சிறு மாற்றங்களை... அவரது குணங்களில் அவர்கள் காட்ட விழைந்திடும் வித்தியாசங்களை subtle ஆகக் கவனிக்க முடிந்தது தான்! ஆனால், முதன்முறையாக முந்நூறுக்குக் கொஞ்சம் குறைச்சலான பக்கங்களில் ராபின் 2.0 சாகஸம் செய்திடவொரு களம் ஏற்படுத்தித் தந்தான பின்னே, அவர்களும் சரி, அவர்கள் வாயிலாக ராபினும் சரி- முற்றிலுமாயொரு விஸ்வரூபம் எடுத்திருப்பதே இந்த வாரயிறுதியின் பதிவு!

எல்லாம் ஆரம்பித்தது போன வருஷம் இதே சமயத்தில்! ஒன்-ஷாட்களே ராபின் தொடரின் signature எனும் போது நம்ம V காமிக்ஸில் 5 சிங்கிள் ஆல்பங்கள் வெளியாகியிருந்தன! And ஆறாவதான ஆல்பமும் அறிவிக்கப்பட்டிருந்தது -"எழுந்து வந்த எதிரி!'' என்ற தலைப்புடன்! அட்டைப்படமெல்லாம் ப்ரிண்ட் ஆகியிருந்தது & தமிழாக்கம் நமது டீமில் ரொம்பத் தற்காலிகமாய் இடம் பிடித்திருந்ததோர் எழுத்தாளரின் பொறுப்பில் செய்யப்பட்டிருந்தது! எப்போதும் போலவே DTP முடித்து பக்கங்கள் ஜுனியரின் மேஜையில் கிடந்தன & வழக்கம் போலவே இதனில் எடிட்டிங் செய்திடும் ரிஸ்க்கை அவர் எடுத்துக் கொள்ளவில்லை! "புது ரைட்டர்; So நீங்களே பார்த்திடுங்களேன்'' என்று என் பக்கமாய் அனுப்பியிருந்தார்! 94 பக்க சிங்கள் ஆல்பம் தானே...பெருசாய் படுத்தி எடுக்காது என்றபடிக்கே நானும் மண்டையை ஆட்டி வைத்திருந்தேன்! But கதைக்குள் நுழைந்த பத்தாவது நிமிஷமே புரிந்துவிட்டது - புது எழுத்தாளர் ரொம்பவே திணறியுள்ளார் என்பது! கதையின் பேச்சு நடையில் ஆரம்பித்து வார்த்தைத் தேர்வுகளி­லிருந்து வாக்கியக் கோர்வை வரை சகலமுமே மழை காலத்து நம்மூர் சாலைகள் போல குண்டும் குழியுமாய் இருந்தன! பெருமூச்சிட்டபடியே மாற்றி எழுத ஆரம்பித்தேன்! அப்போதே ஒரு வாரம் எடுத்துக் கொண்டதாய் ஞாபகம்! 

கதையின் பிற்பகுதியை நெருங்க நெருங்கவே லைட்டாய் வேறொரு வகை பீதி தொற்றிக் கொள்வது புரிந்தது! "இந்தக் கதை இப்போது தான் 80 பக்கங்களைத் தாண்டிய தருவாயில் சூடு பிடிப்பது போலுள்ளதே..? அடுத்த பத்துப் பக்கங்களுக்குள் இதற்கு "சுபம்'' போட வேண்டுமெனில் ரிப்போர்டர் ஜானியின் கதாசிரியர் வந்தால் தானே முடியும்?!''என்று குழம்ப ஆரம்பித்தேன்! "வேற வழியே இல்லே- நேரடியா கடைசிப் பக்கத்துக்குப் போய் பார்த்திடலாம்!' என்றபடிக்கே பரபரப்பாய் பாய்ந்தால், ஒரு வில்லன் ஆராமாய் குந்தியபடியே "ஆட்டம் ஆரம்பிக்கப் போகுதுன்னு'' வசனம் பேசறான்! ஆக இது ஒன்-ஷாட் அல்ல; ஒரு நெடும் சாகஸத்தின் முதல் அத்தியாயம் மட்டுமே என்பது அந்த நொடியில் தான் எனக்கும் Vகாமிக்ஸ் எடிட்டருக்கும் புரிய ஆரம்பித்தது! கதைத் தொடரில் இது ஆல்பம் # 6. And நாம் அதற்கடுத்த இரண்டு நம்பர்களையுமே ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் - 2025-ல் வெளியிடுவதற்கென! And எங்களது அந்நேரத்தைய புரிதலி­ன்படி ஆல்பம் # 6 ஒரு one shot & ஆல்பம் 7+8 டபுள் ஆல்பம்ஸ். அதைத் தான் "இரத்தமின்றி யுத்தம்'' என 2025-ல் Vகாமிக்ஸ் தீபாவளி மலராகவும் விளம்பரப்படுத்தியிருந்தோம்! கோப்புகளைத் தூக்கி வைத்து நிதானமாகப் பரிசீலி­த்த போது தான் நிலவரம் புரிந்தது :

ஆல்பம் # 6: நிகழ்காலத்தில் அரங்கேறும் ஒரு episode

ஆல்பம் # 7 & 8 : பத்தாண்டுகளுக்கு முன்னமாய் அந்த episode-க்கான முன்வினைகள்!! And எல்லாமே இணைந்து தான் ஒரு முழு story arc..!

ஆக, கதாசிரியர் Davide Rigamonti ஒரு பத்தாண்டுப் பெரிய கேன்வாஸில் இந்த மெகா சித்திரத்தைத் தீட்டியிருப்பது மெது மெதுவாய்ப் புலர்ந்தது!

ஆனால், 2024 நவம்பரில் அன்றைய ஸ்லாட்டை நிரவல் பண்ண வேண்டிய அவசியமும், அவசரமும் மட்டுமே மேலோங்கியது! டைலன் டாக்கின் "சட்டைப்பையில் சாவு'' கோப்புகள் கைவசமிருக்க, அடிச்சுப் புடிச்சி அதனை ரெடி செய்து உட்புகுத்தி, அன்றைய பாட்டை சரிசெய்து விட்டோம்! And நமக்குத் தான் அடுத்த வேலை உதிக்கும் நொடியில் முந்தைய பொழுதுகளின் கூத்துக்கள் மறந்தே போய் விடுமல்லவா? So ராபினின் அத்தியாயம்-1 ( எழுந்து வந்த எதிரி) 80 பக்கங்களை மாற்றி எழுதிய நிலையில் அப்படியே பீரோவுக்குள் போட்டுப் பூட்டியாச்சு! 2025 தீபாவளி சமயத்தில் மூன்று அத்தியாயங்களையும் ஒரு சேரப் பார்த்துக் கொள்ளலாம்; அந்நேரம் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானமானது!

கண்ணை இமைப்பதற்குள் 2025-ம் புலர்ந்து; ஒன்பது மாதங்களும் ஓட்டமாய் ஓடிவிட்டன! டின்டின் ; "சாம்ப­லின் சங்கீதம்'' என ஏதேதோ பணிகளுக்குள் நான் கைகளையும், கால்களையும் நுழைத்துக் கிடந்ததால் - ராபினின் இரு அத்தியாயங்களையும் நண்பர் கிட் ஆர்டினாரிடம் ஒப்படைத்திருந்தோம்! கிட்டத்தட்ட ஓராண்டின் ஓட்டத்தில் இந்த ராபின் சாகஸத்தின் களமும் சரி, கனமும் சரி சுத்தமாய் எனக்கு மறந்தே போயிருந்தது! So நடப்பாண்டிற்கான டெக்ஸ் தீபாவளி மலர் 336 பக்க நீளத்திலானது என்ற "டர்'' மட்டுமே மனதில் நிலைத்திருந்தது! But செம ஆச்சர்யமாய் அந்த ஸ்க்ரிப்டில் பெருசாய் பட்டி- டிங்கரிங் பார்த்திடும் அவசியங்கள் இல்லாது போனதால் மின்னல் வேகத்தில் அது முடிந்து விட்டது! So ஒரு முழு ப்ளேட் சுக்கா ரோஸ்டை போட்டுத் தாக்கிய கார்சனின் குஷியோடே ராபினின் பணிகளை ஆரம்பித்தேன்! 

போன வருஷம் மாற்றி எழுதியிருந்த முதல் 80 பக்கங்களை முழுசாய், புதுசாய்ப் படிக்க ஆரம்பித்த போது தான் - "ஆஹா.. இது அதுல்லே? போன தபாவே முழி பிதுங்கச் செய்திருந்தது தானே?!' என்ற ஞாபகம் விரவ ஆரம்பித்தது! ஒரு மாதிரியாய் முதல் அத்தியாயத்தின் மீத 14 பக்கங்களை முடித்துவிட்டு, நண்பர் ரவிக்கண்ணனின் ஸ்க்ரிப்டுக்குள் புகுந்தேன்!

Truth to tell - இது நிரம்பவே கனமான களம்! அதுவும் எக்கச்சக்க கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் பின்னிப் பிணைந்தோடும் பின்புலம், பற்றாக்குறைக்கு Crypto Currency என்ற மெய்நிகர் நாணய வர்த்தகம் பற்றிய கதையும் கூட! நியாயப்படிப் பார்த்தால் இதனை இத்துறைகளில் நிபுணத்துவம் கொண்ட நண்பர்கள் யாரேனும் தான் கையாண்டிருக்க வேண்டும் ! ஆனால், மேச்சேரியாரும், சிவகாசியானும் இதற்குள் ரங்க ராட்டினம் ஆட நேர்ந்தது தான் விதியின் விளையாட்டு! நண்பரும் இயன்றமட்டிற்கு  முயற்சித்திருந்தார் தான்! ஆனால், ஒரு நுணுக்கமான களத்திற்கு இன்னமும் மெருகு, இன்னமும் better flow ரொம்பவே அத்தியாவசியம் என்பது ஐயமின்றிப் புரிந்தது! To cut a very long story short - டெக்ஸின் தீபாவளி மலரில் கழன்றிடாது தப்பித்த குறுக்கானது இங்கே not so lucky! 

300 பக்கங்களுக்கு முன்னே; பத்தாண்டுகளுக்கு பின்னே - என குறுக்கும், நெடுக்குமாய் ஓட்டமெடுக்கும் இந்த சாகஸத்தைக் கோர்வையாய் நான் புரிந்து கொள்ளவே நாக்கு தொங்கிப் போச்சு ! And எனக்கே புரிந்திடாத பட்சத்தில் - அதை உங்களுக்குப் புரிய வைப்பது சாத்தியமாவது ஆகுமா? So தோண்டினேன்- துருவினேன் :  Bitcoin என்றால் என்ன? Data flow என்றால் என்ன? Block chain என்றால் என்ன? என்றெல்லாம் புரிந்து கொள்ள !! 'கந்தர் சஷ்டி கவசத்தை படிக்க வேண்டிய வயசிலே இதுலாம் தேவையா கோபி??' என்றொரு குரல் உள்ளுக்குள் கேட்காத குறை தான்!! ஒவ்வொரு முடிச்சாய் என் மண்டைக்குள் அவிழ்க்க முடிந்த பிற்பாடே, மாற்றியெழுதும் போது பேனாவுக்கு ஒரு கோர்வை சாத்தியமானது! And என்ன முக்கு முக்கினாலும்-நாளொன்றுக்கு இருபது பக்கங்களைத் தாண்ட முடியலை எனும் போது 192 பக்கங்களுமாய் கிட்டத்தட்ட பத்து தினங்களுக்கு என்னை "ஆட்றா ராமா.. தாண்ட்றா ராமா' என்று ஆட்டுவித்தன! சகலத்தையும் முடித்த பிற்பாடு, over the 280 pages எனக்கிருந்த சந்தேகங்களை; கேள்விகளை நிவர்த்தித்துக் கொண்டு இந்தப் பதிவை எழுத உட்காருவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னே தான் மொத்தத்தையும் அச்சுக்கு அனுப்ப ஒப்புதல் தந்தேன்!

இங்கே நியாயப்படி இந்த நொடியில் எனக்குள் ஒரு பெரும் relief அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்! "ஷப்பா!'' என்ற பெருமூச்சு பிரதானமாகியிருக்க வேண்டும்! மாறாக மனசெல்லாம் ஒரு இனம்புரியா சந்தோஷம்! குறுக்கில் வெந்நீர் பையை ஒட்டிக்காத குறையாய் 10 தினங்களாய் சுற்றித் திரிய நேரிட்டிருந்தாலும், மனம் நிரம்ப மகிழ்ச்சி! ஒரு மெய்யான உயர்தர விருந்தை பண்டிகை வேளையில் சமைத்திருக்கும் மகிழ்வும், பெருமிதமும் என்று இதைச் சொல்லலாம்! தவிர, ஒரு நார்மலான நாயகரின் விஸ்வரூபத்தை கண்குளிர அருகிலி­ருந்து ரசித்த சந்தோஷம் என்றும் சொல்லலாம்!

நாற்பதுகளில் Irritable Male Syndrome (IMS) என்றதொரு மனநிலை ஆண்களிடம் சகஜமாம்! ஒருவித தனிமை நாடும் உத்வேகம், உலகத்தின் மீதே கோபம்; பதட்டம் ; எரிச்சல் என்பனவெல்லாம் ஆணுக்குள் குடி கொள்ளுமாம்! எக்கச்சக்கமான stress; உட­லில் நேர்ந்திடும் மாற்றங்கள்; குடும்ப சூழல்கள்; நில்லாது ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதன் ஆற்றமாட்டாமை - என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடுமாம்! இங்கே ராபினிடம் நாம் காண்பது இவற்றின் சகல பரிமாணங்களையுமே!! 

தனிமையின் கனம்.. சதா நேரமும் கம்பி மேல் நடப்பதற்கு இணையான பணியின் stress ....அதிலுள்ள ஆபத்துக்கள்.. நண்பர்களின் இழப்பு தந்திடும் வலி­.. மாற்றங்களை ஏற்க மறுக்கும் பிடிவாதம்.. அதிகாரத்தை எதிர்த்துத் திமிர விழையும் சண்டித்தனம்.. உசிரே போனாலும், மசிராச்சு..! என்றதொரு ஒற்றை வேங்கையின் மனப்பான்மை- என கதாசிரியர் ராபினுக்கு இங்கே தந்துள்ள layers-களை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை! நாற்பதுகளைக் கடக்கும்/கடந்த நம் ஒவ்வொருவருக்குமே ஏதேனும் ஒரு புள்ளியில் இந்த ராபினோடு ஒன்றிட முடியும்!

And அந்த கதைக்களம்!! 💥💥💥 "எட்றா வண்டிய.. சுட்றா புறம்போக்கை'' என்று சைரனை அலறவிட்டபடியே நியூயார்க்கின் வீதிகளில் அனல் பறக்கவிடும் cops-களை இங்கே நாம் பார்க்க முடியாது! மாறாக கம்ப்யூட்டர்களின் பின்னே அமர்ந்து கொண்டு, ஒரு கீ-போர்டின் அசைவில் ரணகளங்களை உருவாக்கும் டிஜிட்டல் மாயாவிகளோடு சடுகுடு ஆடுகின்றனர்! க்ரிப்டோ கரன்சி என்ற கண்ணுக்குத் தெரியாத காசைக் கட்டி ஆள நினைப்போரோடு மல்லுக்கு நிற்கின்றனர், பணியில் மரணமும் ஒரு சன்மானமே என்றபடியே தளராது முன்னேறிச் செல்கின்றனர்! போலீஸாரை காமெடி பீஸ்களாகவே திரைகளில் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு, கடைசிப் பக்கங்களில் ராபினின் ரௌத்திரமும், நண்பர்களின் சவப்பெட்டிகளைச் சுமக்கத் தோள் தரும் கண்ணியமும் நெகிழ்வைத் தராவிட்டால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வேன்! ஒற்றை வசனம் கூட இல்லாத அந்தப் பக்கத்தை சில நிமிடங்களுக்குப் பார்த்துக் கொண்டே இருந்தேன் - ஏதோ கண்முன்னே விரியும் காட்சியைக் காண்பது போல! நாமெல்லாம் நிம்மதியாய் வாழ தூக்கம் தொலைக்கும் போலீஸாருக்கு ஒரு சல்யூட் & ஒரு சமகாலக் கதையை அட்டகாசமாய் உருவாக்கியுள்ள கதாசிரியருக்குமே தான்!

"இன்னுமா இதெல்லாம் படிக்கிறே?''என்று யாராச்சும் நமது காமிக்ஸ் வாசிப்பினைப் பகடி செய்திடும் அடுத்தவாட்டி "நச்'' என்று நடுமூக்கில் ஒரு குத்தை இறக்கிய கையோடு இந்த ட்ரிபிள் ஆல்பத்தினை அவர்களிடம் படிக்கக் கொடுத்துப் பாருங்கள் folks! நிச்சயமாய் மெர்சலாகிப் போவார்கள்!


""சாம்ப­லின் சங்கீதம்'' என்ற ultra tough பணிக்குள் ஏற்கனவே டப்பா டான்ஸாடிக் கொண்டிருந்த சூழ­லில், இந்த ரன்டக்கா.. ரன்டக்கா டான்ஸ் படலமும் சேர்ந்து கொண்டிருக்க, நியாயப்படி நான் "ஐயா.. மிடிலே..!'' என்று ஒரு ஓரத்தில் புலம்பிக் கொண்டே கட்டையைச் சாத்திக் கிடக்க வேணும்! மாறாக இந்த நொடியில் "bring them on'' என்று துள்ளிக் குதித்தபடியே சாம்ப­லின் சங்கீதம் - பாகம் 2-க்குள் புகுந்திடப் புறப்படுகிறேன் ! Phewww!

And மொத்தமாய் ராபினின் மூன்று அத்தியாயங்களும்.. இரண்டு புக்ஸ்களாய் ஒரு அழகான ஸ்லிப் கேஸில் வரவுள்ளது folks! இந்தப் பதிவினை நான் எழுதி முடிக்கும் நேரத்திற்குள் முதல் அத்தியாயம் பிரிண்ட் ஆகியிருக்கும்! மீத இரண்டும் திங்களன்று அச்சாகிடும்! So ஆயுத பூஜை முடிந்ததும் புக்ஸ் பைண்டிங்கி­லிருந்து வந்து விடும் என எதிர்பார்க்கலாம்! தீபாவளி மலர் ஏற்கனவே ரெடி! கொஞ்சமே கொஞ்சமாய் தாமதித்து புக்ஸ்களை அதன் மறு வாரத்தில் அனுப்பினால் தீபாவளிக்குப் பொருத்தமாகயிருக்கும் என்பது எனது எண்ணம்! What say folks?

ரைட்டு.. ஒரு சமகால டிஜிட்டல் யுத்தத்தி­லிருந்து 80 வருடங்களுக்கு முன்பான ஒரு அசுர உலக யுத்தத்தினுள் ஐக்கியமாகப் புறப்படுகிறேன்! And கிளம்பும் முன்பாக ஒன்று மட்டும் சொல்லிக்கொண்டு நடையைக் கட்டுகிறேன் guys ! Maybe கொஞ்ச காலத்திற்குப் பின்பாய், இந்த நடப்பு ஆண்டானது சாவகாசமாய் ஒரு அலசலுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், இதுவொரு மைல்கல் ஆண்டாகத் தென்படக் கூடும் என்றொரு பீலிங் உள்ளுக்குள் ! இந்த நொடியில் அதன் மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அதை உணர்வது கடினமே ; but இது நிச்சயம் ஒரு ஸ்பெஷல் ஆண்டென காதோரமாய் பட்சி சொல்கிறது! நகரும் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு பணி தரும் அனுபவமும் பட்சியின் சேதி மெய் தானோ? என்று எண்ணச் செய்கின்றன!

Bye all.. see you around! Have a great Sunday!

Saturday, September 13, 2025

THE BOMB 💥

நண்பர்களே,

வணக்கம்! அது என்ன மாயமோ தெரியலை - ஆனால், ஒவ்வொரு வருஷத்தின் கடைசிக் க்வார்ட்டர்களும் தெளிய வைத்துத், தெளிய வைத்து கும்மாங்குத்துக்களாய் நடுமூக்கில் இறக்குவதில் வல்லுநர்களாய் உள்ளன ! "அப்பாலி­க்கா பார்த்துக்கலாம், அடுத்த மாசத்திலே பார்த்துக்கலாம்!'' என்று தள்ளிப் போகும் முரட்டுப் பணிகள் ஒரு பக்கமென்றால், மறு வருஷத்தின் அட்டவணைத் திட்டமிடல்கள் இன்னொரு பக்கம்! "அடடா.. என் பங்கு என்ன சூத்தைப் பங்கா?'' என்று அடுத்த கேள்வியோடு தீபாவளி மலர்கள் பொங்கியெழுவதோ முற்றிலுமாய் வேறொரு பக்கம்! இந்த வாட்டியோ- நான்காவதாய் ஒரு முனையிலிருந்தும் தாக்குதல் நிகழ்ந்து வருகிறது! And அது வெளுக்கும் வெளுப்போ முற்றிலுமாய் ஒரு புது உச்சம்! பெயரிலேயே ''BOMB'''' இருக்கும் போது அதன் தாக்கம் மிதமாய் இருக்கவாச்சும் முடியுமா- என்ன? Oh yes- காத்திருக்கும் "சாம்பலின் சங்கீதம்'' சார்ந்த பணிகள் தான் இந்த நொடியில் டெக்ஸ் வில்லர் அவதாரெடுத்து புடைப்பான நம்ம மூக்கை பொளேர் பொளேரென பிளந்து வருகின்றன! And இந்தப் பதிவு சுகமான அந்த சாத்துக்கள் சார்ந்ததே!

LA BOMBE!!! உலகையே கொரோனா எனும் அசுரன் கபளீகரம்  செய்வதற்கு ஒற்றை மாதத்திற்கு முன்பாக ப்ரெஞ்சில் உருவான மெகா கிராபிக் நாவல் இது! மிகச் சரியாக அந்த மார்ச் 2020 நம்பளுக்கொரு பெர்சனலான மகிழ்வையுமே உள்ளடக்கி வைத்திருந்தது! அந்த மாதத்தில் தான் "பாரிஸ் புக் மார்கெட்'' என்ற பெயரில் ஒரு மூன்று நாள் புத்தகவிழா ப்ரெஞ்சுத் தலைநகரில் அரங்கேறிடவிருந்தது! And இந்தியாவில் ப்ரெஞ்சு காமிக்ஸ்களின் கொடியை உசரமாய்த் தூக்கிப் பிடிப்பதில் நமக்கே முத­லிடம் என்ற விதத்தில் ப்ரெஞ்சுத் தூதரகம் அடியேனை guest of honor ஆக தங்கள் உபசரிப்பில் பாரிஸுக்கு அனுப்பிடத் திட்டமிட்டிருந்தது! So பாரிஸின் முக்கிய பதிப்பகங்களெல்லாம் நம்பளை வந்து சந்திக்க ஏதுவாய் ஏற்பாடுகள் பல செய்தும் வைத்திருந்தனர்! மிகச் சரியாக அந்த மார்ச்சில் தான் LA BOMBE ரிலீஸும் என்பது எனக்குத் தெரியும்! So 'சூட்டோடு சூடாய் அங்கேயே இதற்கான உரிமைகளை வாங்குறோம்; ஊருக்கு வந்த கையோடு கெத்து காட்டறோம்!' என்று மனசுக்குள் பெரூசாய் கோட்டையெல்லாம் கட்டி வைத்திருந்தேன்!

ஆனால், பிப்ரவரி இறுதி முதலாகவே ஐரோப்பாவில் கொரோனாவின் தாக்கம் பிசாசு வேகத்தில் ஆட்டத்தைத் துவக்க, "விழா நடக்குமா? நடக்காதா?'' என்ற கேள்வி உள்ளுக்குள் எழத் தொடங்கியது! டெம்போல்லாம் வச்சுக் கடத்தின மாதிரி பாரிஸுக்கோசரம் புது கோட்டெல்லாம் வாங்கியிருந்தேன்! "போச்சா சோணமுத்தா?'' என்று வயிற்றில் புளி கரைய ஒவ்வொரு நாளையாகக் கடத்த, ஒரு சுபயோக சுபதினத்தில் "பாரிஸில் விழா கேன்சல்'' என்ற தாக்கீதும் வந்து சேர்ந்தது! இந்நேரத்திற்குள் கொரோனாவின் பிடிக்கு பூமியில் யாருமே விதிவிலக்காகிடப் போவதில்லை என்பது இங்குமே வேகமாய்ப் புரிபட ஆரம்பித்த போது, "கோட் போட முடிய­லியே'' என்ற கவலையெல்லாம் பின்சீட்டுக்குப் போயிருந்தது! And அந்தக் களேபரத்தில் LA BOMBE சார்ந்த அபிலாஷைகளும் போயே போயிருந்தன ! தொடர்ந்த பொழுதுகளில் லாக்டவுண்; இந்தச் சிக்கல் - அந்தச் சிக்கல் என ஏதேதோ தாண்டவமாட, இந்த மெகா ப்ராஜெக்ட் பற்றிச் சிந்திக்க இம்மி கூட "தம்'' இருந்திருக்கவில்லை!

இன்று திரும்பிப் பார்க்கையில் 2020-ல் இந்த முயற்சி பணாலாகிப் போனதெல்லாம் ஏதோ தெய்வச் செயல் என்றே தோன்றுகிறது! Becos அன்று இதன் மீதிருந்த மோகம் மட்டுமே மூஞ்சிக்கு முன்னே "ரா.. ரா...'' என்று நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது! 452 பக்கங்கள் எனும் போது, குறுக்கைத் கழற்றவல்ல அவை சார்ந்த பணிகள் பற்றிய புரிதல் அந்த நொடியில் எனக்கு முழுசாய் இருந்திருக்கவில்லை! ஏதேதோ நிகழ்ந்து பெருசாய் சக்கை விழுந்திருக்காத பட்சத்தில் 2020-லேயே கதைக்கான உரிமைகளை வாங்கியிருப்போம்; அப்புறமாய் மோவாயைத் தடவியபடியே மல்லாந்திருப்போம்! So "சொதப்பல் கூட நல்லதே!'' என்று Surf Exel மம்மியாட்டம் எனக்கு நானே தேறுதல் சொல்­லிக் கொண்டேன்!

ஆண்டுகள் ஐந்து கடந்தன... and எக்கச்சக்க இடைப்பட்ட அனுபவங்கள் தந்த பக்குவம்- நம்மைப் பலவிதங்களில் பட்டி-டிங்கரிங் பார்த்து வைத்திருந்தன! அம்பது- நூறு பக்கங்களுக்கு எழுதுறதுலாம் முற்றிலும் வேறு மாதிரி; நானூறு/ஐநூறு என்று எழுதுறலாம் முற்றிலும் இன்னொரு மாதிரி என்ற புரிதல் புலர்ந்திருந்தது. Of course - "நெதம்  பத்து பக்கம் வீதம் எழுதினா மிஞ்சிப் போனா ரெண்டு மாசங்களுக்குள்ளாற முடிச்சிட முடியாதா?'' என்ற "சபலம் சடகோபன்'' அவதாரெல்லாம் எடுக்காதில்லை தான்! ஆனால், sustained ஆக, அத்தினி நாட்களுக்கு ஒற்றைப் பணியில் முனைப்பு காட்டிடுவதெல்லாம் நம்ம வயசுக்கு மீறின ஆசைடா தம்பி! என்று மண்டை எச்சரிக்கை செய்து தந்ததால் LA BOMBE பற்றி வினாக்கள் எழும் போதெல்லாம் - சூனா-பானா பாணியில் எதையாச்சும் அள்ளிவிட்டு, பஞ்சாயத்தை கலைத்து விடுவது அப்போதைய வாடிக்கை!

And அந்த நொடியில் தான் வான்டனாக வந்து வண்டியில் ஏறினார் - நம்ம நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள்! ஏற்கனவே 2018-ல் நம்ம இரத்தப் படலம் வண்ணத் தொகுப்புடனான இணைப்பான "புலன் விசாரணை''யின் காமிக்ஸ் அல்லாத சிரமமான பக்கங்களை, கர்ம சிரத்தையாய் மொழிபெயர்த்திருந்தவர்! So அவராய் வ­லிய கரம் தூக்கிய போது மின்னலாய் உரிமைகளை வாங்கிப் போட்ட கையோடு, படைப்பாளிகளிடமிருந்தே இதன் இங்கிலீஷ் பதிப்பினையும் வாங்கி மொத்தமாய் நான்கு அத்தியாயங்களையும் மொழிபெயர்த்திட அவரிடமே ஒப்படைத்துவிட்டோம்! Post 2018 - நண்பரின் எழுத்துத் திறன்கள் வேறொரு லெவ­ல் களமாடி வருவதை அறிவேன் தான்! So நாம் மாமூலாய் குச்சி சகிதம் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் பின்னேயும் நின்று வேலை வாங்கும் பாணியெல்லாம் இம்முறை சரிப்படாதே என்ற "டர்'' உள்ளுக்குள்! மொழிபெயர்ப்புகளுக்கு விருதுகள் வாங்கிக் குவிப்பவரிடம் போய் நாம் புதுசாய் சொல்ல என்ன இருக்கக் கூடும்?

வாரங்கள்... மாதங்கள் ஓட்டமெடுத்தன! ஒவ்வொரு அத்தியாயமாய் முடிய, முடிய நண்பரும் ஸ்க்ரிப்டை நமக்கு அனுப்பி வைப்பார்! ஆனால், "ரயில் வரப் போகுது... கேட்டை போடப் போறாங்க'' என்பது வரைக்கும் காலாட்டிக் கொண்டிருந்து விட்டு, கடைசி நொடியில் ஓட்டமாய் ஓடுவது தான் நம்பள்கி இந்த வயதுக்கான நடைமுறை! So "மேலே இருக்கவன் பார்த்துக்குவான்..! மேலே இருக்கவன் பார்த்துக்குவான்!'' என்று நோவுகளை ஒத்திப் போடும் பயில்வான் ரங்கநாதன் பாணியில் - "ஒட்டுமொத்தமாய் பார்த்துக்கலாம்! நெருக்கவட்டிலே பார்த்துக்கலாம்!'' என்றபடியே பக்கங்களை பீரோவுக்குள் வைத்துப் பூட்டும் வேலையை மட்டுமே செய்து முடித்தேன்! ஏற்கனவே அந்தந்த மாதத்தின் பணிகளை உரிய காலத்தில் முடித்துக் கொடுப்பதிலேயே சட்டை கிழிஞ்ச கைப்புள்ளையாட்டம் இஸ்துக்கினே நடந்து கொண்டிருப்பவனுக்கு 452 பக்க heavy கி.நா, பீதியூட்டாமல் என்ன செய்யும்? 

ஒரு சுபயோக சுபதினத்தில் நண்பரும் "finish'' என்று மொத்தத்தையும் முடித்தனுப்பியிருக்க, "ஆங்.... டைப்செட்டிங் பண்ண நாழியாகுமே? அப்போ பார்த்துக்கலாம்!'' என்று மறுக்கா மனசைத் திடப்படுத்திக் கொண்டேன்! But        ஆகஸ்டும் புலர்ந்து, ஈரோட்டில் நண்பர்கள் சந்திப்பும் முடிந்த பிற்பாடு - "ஆஹா.. இடைப்பட்ட செப்டம்பர் & அக்டோபர் இரண்டு மாதங்கள் மட்டுமே பாக்கிடா புண்ணாக்கு மண்டையா! நவம்பரிலே எப்போன்னாலும் சேலம் புத்தகவிழாவை அறிவிச்சிடுவாங்க! அதுக்குள்ளே எப்பாடுபட்டேனும் பொஸ்தவத்தை ரெடி பண்ணியே தீரணுமே?!!'' என்று பகீரென உறைத்தது! அதனிடையே 336 பக்கங்களில்  டெக்ஸ் & 284 பக்கங்களில் ஏஜெண்ட் ராபின் & பட்டாப்பெட்டியை உருவ வல்ல அட்டவணை finalization கூட காத்திருப்பதும் புரிந்தது!

"ஒரு மலையை இடம் மாற்ற நினைப்பவன், சிற்சிறு கற்களைச் சுமந்து போவதிலிருந்து தான் ஆரம்பித்தாகணும்!'' என்பது சீனப் பழமொழி! ரைட்டு... இனியும் மொக்கை போட்டால் சேலத்துக்கு பீப்பீபீபீ.. தான்! என்ற பயத்தோடு பணிகளுக்குள் ஐக்கியமாகிடத் தயாரானேன்! 

கதாசிரியர்ஸ் Alcante & Bollee இதன் உருவாக்கத்துக்கென செய்திருக்கும் அசுரத்தனமான research & மெனக்கெடல் தான் கதைக்குள் புகுந்த ரொம்பச் சீக்கிரமே பிடரியோடு சாத்தியது! ''ஆதி முதல் அந்தம் வரை'' என்று பல இடங்களில் உவமைகளை பயன்படுத்தியிருப்போம் தான் ; ஆனால் அதற்கொரு சான்று பார்க்க நினைத்தால் அணுகுண்டின் உருவாக்கம் பற்றிய இந்தப் படைப்பை சுட்டிக் காட்டலாம் என்பேன்! Absolute awe inspiring stuff!

Oh yes - முதல் அத்தியாயத்தின் நூறு பக்கங்களைத் தான் இதுவரையிலும் கடந்திருக்கிறேன் & எப்போதும் போலவே படைப்பினை முழுசாய்ப் படிக்கவுமில்லை தான்! போகப் போக பார்த்துக்குவோமே என்ற மாமூலான குசும்பு! ஆனால், கடந்துள்ளமட்டிற்கே கதாசிரியர் பட்டுள்ள பிரயாசைகளை ஸ்பஷ்டமாய்ப் பார்த்திட இயல்கிறது! And மொழியாக்கத்தைப் பொறுத்த வரையில் A-1! நிஜம், வரலாறு, விஞ்ஞானம், அரசியல் என எக்கச்சக்கமான சங்கதிகளின் கலவை எனும் போது, அதனைக் கையாள்வது எத்தனை கடினமென்பது புரிகிறது! அதே சமயம் நம்ம மூக்கு செம புடைப்பு என்பதுமே தெரிந்த சமாச்சாரம் தானே? So கதை நகர்த்தல் ரொம்பவே வறட்சியாய் தென்பட்டிடக் கூடாதே என்ற ஆதங்கத்துடன் ஆங்காங்கே நண்பரின் ஸ்க்ரிப்ட் மீது திருத்தங்கள் போடவே செய்து வருகிறேன்! நமக்கே நமக்கான பாணியாய் நாம் கருதிடும் சமாச்சாரத்தில் சமரசம் செய்திட வேணாமே என்ற உந்துதல் உள்ளுக்குள் குத்த வைத்துக் கொண்டு, ஆட்றா ராமா.. தாண்டறா ராமா! என்று கரணம் போடச் செய்து வருகிறது! 

And "சாம்பலி­ன் சங்கீதம்'' காத்துள்ளதென்ற பயத்திலேயே டெக்ஸின் தீபாவளி மலர் பணிகளை அசுரகதியில் முடித்துவிட்டது இங்கொரு சந்தோஷப் பக்கவிளைவு! என் சர்வீஸில் ஒரு 336 பக்க டெக்ஸ் கதையை இந்தத் துரிதத்தில் முடித்ததாய் எனக்கு நினைவேயில்லை! So ஒரு தார்குச்சியை வைத்துக் கொண்டே பின்னே யாரோ நிற்பதானதொரு பிரமையே போதும் போ­லிருக்கு - VRS வாங்க வேண்டியவனும், இயவரசரைப் போல தொப்பையை உள்ளே இழுத்துக் கொண்டு நகர்வலம் வந்திடுவதற்கு!

எனது அனுமானம் சரியாகயிருக்கும் பட்சத்தில், செப்டம்பர் இறுதிக்குள் "சாம்ப­லின் சங்கீதம்'' என் மேஜையி­லிருந்து பிராசஸிங்குக்கும், அச்சுக்கும் நகர்ந்திடத் தயாராகியிருக்க வேணும்! மிஞ்சிப் போனால், அக்டோபர் முதல் வாரத்தைத் தாண்டக் கூடாது! So சேலம் விழாவானது நவம்பரில் எப்போது அறிவிக்கப்பட்டாலுமே கம்பு சுத்த நாம் ரெடியாக இருப்போமென்று தோன்றுகிறது! So "டீம் சேலம்'' சீக்கிரமே களமிறங்கத் தயாராகிடலாம்! 

பத்து நாட்களுக்கு முன்னமே சேலத்தில் நமது ஸ்டாலி­ல் all-in-all            ஆகச் சுழன்று வருவோரில் முக்கியமானவரான நண்பர் ரகுராமன் "ஏற்காட்டில் வச்சுக்கலாமா சார் மீட்டிங்கை?.. ஒன்லி 28 கிலோமீட்டர்ஸ் '' என்ற கேள்வியோடு தொடர்பு கொண்டிருந்தார்! "சார்... விழாவுக்கான தேதி அறிவிக்கட்டும்! அப்புறமாய் ஊருக்குள்ளேயே புத்தக விழா அரங்குக்கு அருகேயே ஏதாச்சும் இடம் தேடலாம்!'' என்று சொல்­லியிருந்தேன்! வழக்கம் போல நவம்பர் இறுதி & டிசம்பர் துவக்கம் என சேலம் விழா அமைந்திடும் பட்சத்தில் செமயாய் அவகாசம் கிடைத்திடும்- இதழை அமர்க்களமாய் தயார் பண்ணிட! இப்போதைக்கு நவம்பர் வரையிலான book fair schedules வந்தாச்சு! So எப்படிப் பார்த்தாலுமே நவம்பரின் பின்பாதியில் தான் சேலம் புலரும் என்றே தோன்றுகிறது ! Fingers crossed!

முன்பதிவுகள் எக்ஸ்பிரஸில் ஏற்கனவே துண்டு போட்டு வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு மெகா "தேங்க்ஸ்'' சொன்ன கையோடு, "அப்போ பார்த்துக்கலாம்!'' என்று ஒத்திப் போட்டிருக்கக் கூடிய நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டலுமே! அடுத்த மூன்று வாரங்களுக்குள் அச்சுக்குத் தயாராகி விடுவோம் folks-- ஆக அதற்குள்ளாக முன்பதிவு செய்திட்டால் நலம்! "பயணம்'' கதை போல கடைசி நிமிட சொக்காய் கிழி படலங்களைத் தவிர்க்க இது நிச்சயம் உதவும்! Trust me when I say this :இது ஒரு landmark இதழாக இருக்கப் போவது சர்வ நிச்சயம்! இதோ - சில உட்பக்க previews :



Bye all. see you around! அங்கே மேஜையில் காத்திருப்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனும் போது இங்கே லாந்தித் திரியப்படாது தானே? Have a great weekend all!

Saturday, September 06, 2025

ஜியூ பா டிங்.. 🤔

நண்பர்களே,

வணக்கம்! "பு பா மான், ஜியூ பா டிங்''! இன்னா மேன் - ஆரம்பமே ஒரு மார்க்கமா கீதே? என்று புருவங்களை உசத்துகிறீர்களா? மேற்படி வரி சீன மொழியில் ஒரு பழமொழி! அதாவது- "மெல்ல மெல்ல அடி வைத்து நடப்பதை எண்ணித் தயங்காதே! நடையே போடாமல் ஒற்றை இடத்தில் தேங்கிக் கிடப்பதை எண்ணி மட்டுமே பயம் கொள்!'' என்று பொருளாம் இதற்கு! "ஆஹாங்?'' என்கிறீர்களா? Oh yes- இம்மாதத்தின் V காமிக்ஸ் இதழானது தான் எங்கோ, எப்போதோ படித்த இந்த வரியைத் தேடிப்பிடித்து நினைவுபடுத்திக் கொள்ளத் தூண்டியது!

"வதம் செய்வோம் வேங்கைகளே!'' இம்மாதத்தின் டபுள் V காமிக்ஸ் இதழ்களுள் ஒன்று! நாயக/நாயகியரென்று யாருமில்லாத; கதையே ஹீரோவென்றானதொரு கிராபிக் நாவல்! பொதுவாய் கி.நா.க்கள் என்றாலே heavyweights வெளிவரும் மாதத்தில் அவற்றைக் கண்ணில் காட்டவே மாட்டேன் தான்! சுமோ மல்யுத்த வீரர்கள் கச்சை கட்டிக் கொண்டிருக்கும் போது ஓமகுச்சி நரசிம்மனை உள்ளே புகுத்திய கதையாகிடக் கூடுமே என்ற பயத்தில்! ஆனால், இந்த முறை ஒன்றுக்கு இரண்டாய் ஜாம்பவான்கள் டெக்ஸ் & ஸாகோரின் ரூபத்தில் களம் காணும் போதிலும் இந்த கி.நா.வை கோதாவுக்குள் இறக்கி விடத் தோன்றியது - simply becos இதனில் தென்பட்டதொரு இனம் புரியா வசீகரம் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையிருந்தது! ஆனால், ஜாம்பவான்களையே ஓரமாய்ப் போய் விளையாடச் சொல்­விட்டு "வதம் செய்வோம் வேங்கைகளே'' முன்சீட்டைப் பிடுத்திடுமென்றெல்லாம் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை தான்! Of course - இது முதல் வாரம் மட்டுமே! And துவக்க அலசல்களை மட்டும் தான் பார்த்திருக்கிறோம்! இருந்தாலுமே பாராட்டுகளின் அந்த scale - இந்த ஆல்பத்தின் தாக்கத்தை அழகாய் உணர்த்துகின்றன! " சரி, ரைட்டு- இதுக்கும், ஆரம்பத்தில் நீ அலம்பல் விட்ட சீனப் பழமொழிக்கும் இன்னாய்யா சம்மந்தம்?'' என்கிறீர்களா? சொல்கிறேனே!

2026-ன் அட்டவணை கிட்டத்தட்ட ரெடி என்ற நிலை! ஆகஸ்டில் தான் ஐரோப்பியக் கோடை விடுமுறைகள் என்பதால் நமது படைப்பாளிகளில் பலரும் நெடும் லீவில் இருக்க, இறுதி இரண்டு ஆல்பங்களுக்கான ஒப்புதலை மட்டும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்! இந்த இரண்டுமே கிட்டியவுடன் "சுபம்'' சொல்­லிவிட்டு அட்டவணையை அச்சுக்கு அனுப்பலாம் தான்! ஒவ்வொரு ஆண்டுமே அட்டவணையினை நான் இறுதி பண்ணும் காகிதத்தின் ஒரு மூலையில் கடைசி நிமிடத்தில் ஏதேதோ காரணங்களால் தேர்வு காணத் தவறிய கதைகளை சின்னதாயொரு ­லிஸ்ட் போட்டு எழுதி வைத்திருப்பேன்! Maybe இடைப்பட்ட நாட்களில் ஒரு window கிட்டினால் யாரை நுழைப்பதென்ற தடுமாற்றமே வேணாமென்ற நோக்கத்தில்! And இம்முறையும் அதைப் போலவே ஒரு list ஓரமாய் இருந்தது தான்! அவற்றுள் இடம் பிடித்திருந்த ஆல்பங்களோ - ஜாம்பவான் ஹீரோக்களையோ, ஹீரோயின்களையோ கொண்டதாக இருக்கவில்லை! மாறாக- கடைசி ஒரு மாதமாய் நான் உருட்டிப் பிடித்த சில வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட one-shots அவை! ஒரு வேகத்தில் அவற்றையெல்லாம் பரிசீலனைக்கு செம சீரியஸாய் எடுத்துக் கொண்டிருந்தேன் & அவற்றிற்கான விலைகளையும் கணக்கிட்டு மொத்தமாய் பட்ஜெட் போட்டும் பார்த்தேன்! அங்கே அடிச்சது தான் ஜெர்க்! மொத்த சந்தாத் தொகை நாம் விடாப்பிடியாய் தொங்கிக் கொண்டு திரியும் அந்த ஆறாயிரத்தைத் தாண்டிச் சென்றிருந்தது! ஆஹா.. அது தப்பாச்சே?! என்றபடிக்கு எவற்றையெல்லாம் ­லிஸ்டி­ருந்து அப்புறப்படுத்தலாமென்று யோசிக்க ஆரம்பித்தேன்!

🕸️ஆங்.. இவரு பெரிய "தலக்கட்டு''! இவருக்குக் கல்தா தந்தா - குரல்வளையில் கடி வாங்க நேரிடும்!

🕸️அச்சச்சோ.. இவரா? இவரு பயங்கரமான ஆளாச்சே?

🕸️ஆத்தீ.. இந்த யீரோயினி இல்லாட்டி தமிழகமே கொந்தளிச்சிடுமே?!

என்று பல சிந்தனைகள் தலைக்குள் ஓட- அந்தக் கத்திரி போடும் லி­ஸ்டிலி­ருந்து hero centric கதைகளின் பெரும்பான்மை தப்பிவிட்டன ! And பாவப்பட்ட 'கதையே, ஹீரோ' களங்கள் கீழேயிருந்த அந்த ஒப்புக்குச் சப்பாணி ­லிஸ்டிற்குக் குடி மாறிச் சென்றிருந்தன! இங்கே தான் உட்புகுகிறது "வதம் செய்வோம் வேங்கைகளே''!!!

பெரிய பெயர்கள் எல்லா நேரங்களிலும் தேவையல்ல! பெரிய பெரிய பில்டப்கள் சதா சமயங்களிலும் ஜெயத்துக்கு உத்தரவாதம் தருபவையல்ல! படைப்பினில் வீரியமிருந்தால், ஜாம்பவான்களையே தண்ணீர் குடிக்கச் செய்யலாமென்று இந்த ஒற்றை ஆல்பம் உணர்த்தியுள்ளது! So "இவுகள்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டோர்; அட்டவணைகளில் நிரந்தரர்கள்!'' என்றிருந்த சில மிதமான performers-களை ஓரம் கட்டவும் செய்யலாம் போலும் ; உலகம் நிச்சயமாய் மாற்றிச் சுழலவெல்லாம் செய்யாது! சரக்கு முறுக்காக இருந்தால் big names-களை சற்றே ஓய்வெடுக்க அனுமதிக்கவும் செய்யலாமென்ற தைரியத்தை எனக்கு "வதம் செய்வோம் வேங்ககைளே'' தந்துள்ளது! So அந்த நாயக பிம்பங்களோடு ஒரே இலக்கில் நிலை கொண்டிருப்பதை இனியும் தொடராமல், நல்ல கதைகளென்று மனதுக்குப்படுபவற்றினை அட்டவணைக்குள் நுழைப்பதில் பிழையில்லை என்ற புரிதலோடு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்க நினைக்கிறேன் 2026-ன் அட்டவணையினில்! "பு பா மான்.. ஜியூ பா டிங்..!'' So wish me luck folks!

🗿கிழிஞ்சது! வருஷம் முழுக்க கி.நா.க்களைப் போட்டு இனி முழியாங்கண்ணன் கொலையா கொல்லப் போறானா?

🗿சொந்தக் காசிலே சூனியம் வச்சுக்கலாம்! ஆனா, நம்ம காசிலேல்லே விளையாடப் போறான்?

🗿போச்சா? "அவர்" கிடையாதா? "இவர்" கிடையாதா? உருப்பட்ட மாதிரித் தான்!

🗿ஒரு கதையை ரசிச்சது தப்பாய்யா? அதுக்கோசரம் ஓடற குதிரைகளை.. லாயத்திலே பிடிச்சா அடைப்பே?!

என்று பற்பல சிந்தனைச் சிதறல்கள் ஆங்காங்கே தெறிக்குமென்பதை யூகிக்க முடிகிறது! எனது பதிலோ ரெம்ப சிம்பிள்! சாதித்துக் காட்டிவரும் நாயக/நாயகியர் யாருக்குமே இடமில்லாமலோ ; உரிய மருவாதிகளோ இல்லாது ஒருக்காலும் போகாது! மாறாக, பெருங்காய டப்பிகளை நினைவூட்டும் பார்ட்டிகள் மட்டுமே கொஞ்சமாய், சுழற்சி முறையில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவர் ! அவர்களது ஸ்லாட்களில் மாத்திரமே இந்த "கதைகளே ஹீரோஸ்'' என்றான ஆல்பங்கள் உட்புகக் கூடும்! And மொது - மொதுவென கணிச எண்ணிக்கையிலும் அவை இராது; இரண்டோ- மூன்றோ slots கிட்டினாலே பெரிய பாடு!

So மெது மெதுவாய் அடியெடுத்து, சின்னச் சின்ன மாற்றங்களை நோக்கி மெதுநடை போடலாமா? என்பதே இம்மாத கி.நா.வின் சிலாகிப்புகள் என்னிடம் சொல்லும் சேதி! பார்ப்போமே - இதை நடைமுறை செய்திட முடிகிறதா? என்று ! யார் கண்டது- கடைசி நொடியில் பயம் மேலோங்க "இது எதுக்கு விஷப் பரீட்சை?" என்றபடிக்கே "நாயகரே பலம்''என்று நான் பால் மாறிடவும் வாய்ப்புண்டு தான்! But இந்த நொடிக்கு - சமுராய் பெரியவர் தந்திருந்த கெத்தில் மீசையை லைட்டாக முறுக்கித் திரியத் தோன்றுகிறது!

இம்மாத இளம் டெக்ஸ்+ ஸாகோர்+ சிக் பில் நிச்சயமான breezy reads என்பதால் அவை சீக்கிரமே உங்களது வாசிப்புகளுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுள்ளது! அந்த நம்பிக்கை தரும் தைரியத்தில் பெரிய பில்டப்களின்றி அடுத்த மாதம் காத்துள்ள தீபாவளி மலர் பணிகளுக்குள் மும்முரமாகிடத் தோன்றுகிறது! And காத்துள்ள கலர் டெக்ஸ் அதிரடி- block buster என்பதில் இம்மி கூட சந்தேகமில்லை எனக்கு! அது என்னவோ தெரியலை- சமீப காலங்களில் "தல'' மெக்ஸிக மண்ணை மிதிக்கும் போதெல்லாம் அனல் பறக்கிறது! Mexico Magic ஸ்பெஷலின் இரண்டு ஆல்பங்களும் பட்டையைக் கிளப்பிய அதே பாணியில் தீபாவளி மலரிலும் நம்மவர் மெக்சிகோவில் போட்டுத் தாக்குவது வேற லெவல்! So 336 பக்கங்களா??? என்று துவக்கத்தில் வாயைப் பிளந்தவன்- கதைக்குள் ஐக்கியமான சற்றைக்கெல்லாம் செம குஷியாகிப் போனேன்! தீபாவளிக்கு அற்புதமாய் மெருகூட்ட "தல'' சீக்கிரமே ரெடியாகிடுவார்! இங்கே ஒரே சிக்கல் தீபாவளி அக்டோபரின் மூன்றாம் வாரம் வரை தள்ளிப் போவது தான்! அக்டோபர் ஆரம்பத்திலேயே தீபாவளி இதழ்களை அனுப்பி விட்டால், பண்டிகை நேரத்துக்கு இவை பழசாகியிருக்கும்! So கொஞ்சமே கொஞ்சமாய் அக்டோபர் இதழ்களை லேட்டாய் அனுப்பலாமா? என்ற சிந்தனையும் ஓடுகிறது! What say folks??



அப்புறம் நமது கம்பேக்குக்குப் பின்பான சில out of stock டெக்ஸ் ஆல்பங்களை மறுபதிப்பிட எண்ணி வருகிறோம் - 2026-ன் புத்தகவிழா circuit-க்காக! அவற்றுள் ஒரு பகுதியாய் 'தலையில்லாப் போராளி'' MAXI சைஸில், கலரில் போட்டுத் தாக்கிடலாமா? என்ற திட்டமிடலும் உள்ளது! இது முழுக்கவே நமது இரண்டாவது இன்னிங்ஸின் பின்பான மறுபதிப்புத் திட்டமிடலே! ஆகையால் ரொம்ப முந்தைய டெக்ஸ் சாகஸங்கள் இதனில் இடம்பிடித்திடாது! 

அப்புறம் அந்த golden age டெக்ஸ் க்ளாஸிக்ஸ் மறுபதிப்பு(கள்) தெறி கலரில் வரவுள்ளதைப் பற்றியுமே வாகானதொரு வேளையில் திட்டமிடலாம் folks! That again will be for later in 2026!

Bye for now! See you around! Have a wonderful weekend 👍