Sunday, September 13, 2026

ஒரு ஒல்லியனுக்குப் பின்பாய் ....!

நண்பர்களே,

உஷார் : ஊட்டி மலையில் வளைந்து போகும் ரயிலைப் போல இங்கேயும், அங்கேயுமாய் டிராவல் செய்திடும் பதிவு இது..!  அஜீஸ் ப்ளீஸ் !!  

வணக்கம். செப்டம்பரின் முதல் பாதி முற்றுப்பெறவிருக்கும் நிலையில், இம்மாத இதழ்கள் நான்குமே அழகாய் ஸ்கோர் செய்திருப்பது கண்கூடு. ஆனால், ஒளிவட்டத்தின் முக்காலே மூன்று வீசப் பகுதியினை, ஒரு ஒல்லிப்பிச்சான் வெட்டியானே கபளீகரம் செய்திருப்பது, in many ways a real surprise. ஓ யெஸ்... ஸ்டெர்ன்  ஒரு தாக்கத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்த்திருந்தோம் தான். ஆனாலும், போட்டிக்கு Young Tex, Classic Tex, Blue Coats என கோதாவில் இம்முறை இருந்த, பாக்கிப் போட்டியாளர்கள் அனைவருமே சாம்பியன்களே. So, அவர்களை எல்லாமே மனுஷன் ஊதித் தள்ளிவிட்டு, வெள்ளிக்கும், வெங்கலத்திற்கு மட்டுமே போட்டி ! தங்கம் எனதே, என்று நிர்ணயித்தது, மெய்யான வியப்பே. இதுபோலான தருணங்கள், இந்த off-beat கதைகள் மீதான நம்பிக்கையை வளர்ப்பது மாத்திரமன்றி, கொஞ்சமே கொஞ்சமாய் எனக்குமே தெம்பூட்டும் விதம் இருப்பது மறுக்க இயலா உண்மை. So, இந்தப் பதிவினில், இன்றைய வாசிப்புக் களங்கள் பற்றி ஒரு பருந்தின் பார்வையில் எழுதிடவே நினைக்கின்றேன்.

ஈரோடு வாசக சந்திப்பிற்கு வந்திருந்த நண்பர்கள், நான் ஆத்தோ ஆத்தென்று ஆத்திய  உரையின் போது குறிப்பிட்டதொரு விஷயத்தை, எத்தனை தூரம் கவனத்தில் கொண்டிருப்பீர்கள் என்பது எனக்கு சொல்லத் தெரியவில்லை. அது படைப்பின் ரகசியத்தை போட்டுடைக்கும் பிரம்மசூத்திரம் எல்லாம் அல்லவே அல்ல. Was just that - ஏப்ரல் 2026 முதலாகவே நமது online விற்பனைகளில் மெலிதாய் ஒரு தடுமாற்றம் தென்பட்டு வருவதாய் குறிப்பிட்டிருந்தேன். சரி, ஏப்ரலில் ஏதோ காரணங்களால் online விற்பனையில் சின்னதொரு பிறழ்வு போலும் என்று நான் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை தான். ஆனால் தொடர்ந்த மே மாதமும், ஜூனிலும், ஜூலையிலும் கிட்டத்தட்ட அதே பாணியில் வண்டி தடுமாறிய போது உள்ளுக்குள் நிரம்பவே jerk ஆனதை மறுக்கமாட்டேன். அதன் நீட்சியாகத்தான் ஆகஸ்டில் ஈரோட்டில் உங்களை சந்தித்தபோது இதைக் குறிப்பிட்டுப் பேசவும் செய்திருந்தேன். ஆனால் ஆகஸ்ட் முதலாய் ஓரளவிற்கு வண்டி மீண்டும் தண்டவாளத்தில் ஏறியிருப்பது கொஞ்சமாய் ஒரு நிம்மதி பெருமூச்சை விட அனுமதித்துள்ளது. In fact ஆகஸ்டில் தல + தளபதி என்ற காம்போதான் மறுபடியும் விற்பனைகளில் ஒரு வேகம் எடுக்கும் காரணமாக அமைந்தது எனலாம். பற்றாக்குறைக்கு Terrific Tex கலர் தனித்தடமும் ஆகஸ்ட் முதலாய் துவங்கியிருந்ததல்லவா ? So கொஞ்சமாய் சுணக்கம் கண்டிருந்த engine ஆகஸ்டிலிருந்து மறுபடியும் 'குப் குப் குப்' என வேகம் பிடிக்கத் துவங்கியுள்ளது.

இங்கே சின்னதாய் ஒரு இடைச்செருகலுமே இருந்தால் தப்பில்லை என்றே தோன்றுகிறது. And அதுவுமே நமது காமிக்ஸ் வட்டம் சார்ந்த நண்பரின் பதிவெனும் போது makes for interesting reading. இது சில நாட்களுக்கு முன்பாக நமது Facebook டைம்லைனில் வந்திருந்த நண்பர் கார்த்திகேயன் பாண்டியன் அவர்களின் சமீபத்தைய பதிவுகளில் ஏதோ ஒன்று. நான் ஆகஸ்டில் ஈரோட்டில் மேலோட்டமாய் எதைப் பற்றி பேசி இருந்தேனோ அதையே நண்பர் அங்கே எழுத்தில் பதிவிட்டிருந்ததாக எனக்குப்பட்டது.

========================================================================

சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் ___________ பேசிக் கொண்டிருக்கும்போது ஏன் இந்த வருடம் அதிகளவில் புத்தக அறிமுகக் கூட்டங்களோ, அல்லது விமர்சனக்கூட்டங்களோ நடைபெறவில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். எப்போதும் ஏதாவது இலக்கிய நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும் சென்னையில் கூட கூட்டங்கள் குறைந்துவிட்டன என்றார். 

யோசித்துப் பார்த்தால் இன்றைக்கு அந்த இடத்தை முழுமையாக அரசியல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இத்தனை தீவிரமாக அரசியல் பேசுவதில் தவறேதும் இல்லை, ஆனால் அதற்காக மற்ற அடிப்படை விசயங்களைக் கைகழுவ வேண்டியதில்லை. இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அச்சுத்துறை என்னவாயிருக்கும் என்ற கவலை நம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையில் குறைந்தபட்சம் அவரவர் வாசிக்கும் நூல்களைப் பற்றிய குறிப்புகளின் வழியே நம்முடைய எண்ணங்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளலாம். எந்த மாற்றமும் வெளியிலிருந்து உருவாகப் போவதில்லை, நாம்தான் உருவாக்க வேண்டும்.

=============================================================

இன்றைக்கெல்லாம் வாசிப்புக்கு tough தரக்கூடியவை திரைப்படங்களோ சின்னதிரைகளோ OTT தளங்களோ அல்ல என்றே தோன்றுகிறது. Insta எனும் அசுரனோடும், YouTube எனும் ராட்சசனோடும் கட்டிப்புரண்டு வாங்கும் பல்புகள் பற்றாதென இப்போதெல்லாம் அரசியல் பதிவுகளும், சட்டசபை சார்ந்த reels-களும் மக்களின் கவனங்களை முன்னெப்போதும் இல்லாததொரு பரிமாணத்தில் ஆக்கிரமித்துக் கொள்வது பட்டவர்த்தனமாய் தெரிகின்றது. Oh yes, முன்செல்லும் நாட்களில் இதன் தாக்கங்கள் கூடிடக் கூடுமே தவிர taper off ஆகிடுமா என்றெல்லாம் கணிக்க எனக்குத் தெரியவில்லை. And in any case மாற்றங்களும், முன்னேற்றங்களும் இன்றைய காலகட்டத்தில் absolutely inevitable என்பதை தலைக்குள் ஏற்றுக்கொண்டு விட்டேன் எனும் போது இந்தப் புதிய போட்டியாளர்களைக் கண்டு மிரட்சி மேலோங்கவில்லை. மாறாக இந்த புதியதொரு உலகிற்குள்ளும், மாறிவரும் ரசனைகளுக்கு மத்தியிலும், நமக்கு ஏதேனும் ஒரு குட்டியுண்டு slot இருந்திடாதா என்ற தேடலை தீவிரப்படுத்தும் உத்வேகமே தலையெடுக்கின்றது. In fact, புதியதொரு தலைமுறையை எப்படியேனும் ஈர்ப்பது என்பது ஒரு மெய்யான சவாலாகவே என் முன் ஆர்வத்தைக் கிளப்புகின்றது. அதற்காக ஏற்கனவே உள்ள வாசக வட்டத்தை லூசில் விடுவது என்றெல்லாம் லூசுத்தனமாய் சிந்திக்கப் போவதில்லை. சுவரே நீங்கள்தான் எனும்போது, புதுசாய் மேலே கட்டக்கூடிய மாடி பற்றிய சிந்தனைதான் அடுத்த Gen-Z தலைமுறை பற்றிய மெனக்கெடல்.

இந்த context-ல் சிந்திக்கும் சமயங்களில்,  ஸ்டெர்ன் போலான வித்தியாசமான கதைகள் வெற்றி காணும்போது  ஒரு மிடறு கூடுதலாய் வேகம் தருவதை மறுப்பதற்கில்லை. Simply because, மரத்தைச் சுற்றி காலமாய் பாட்டுப் பாடி, பஞ்ச் டயலாக் பேசி, க்ளைமாக்ஸில் வில்லன்களை மொத்தி எடுக்கும் சினிமாக்கள் எத்தனை காலம் ஓடினாலும் சந்தோஷமே; ஆனால், இடையிடையே தலையெடுக்கும் இதுபோன்ற படைப்புகள் நிச்சயம் காலத்தை வென்று நிற்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. And ஒரு புது வாசிப்புத் தலைமுறைக்கு, எவ்வித பில்டப்களும் இல்லாத, இயல்பான கதைகளும் பிடிக்கவும் கூடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது ! Of course I may be wrong - ஆனால் எனது gut feel சொல்வது :Manga மாத்திரமன்றி அடுத்த தலைமுறை, அழுத்தமான  காமிக்ஸையும் ரசிக்காது போகாது என்பதே ! So, ஸ்டெர்னை நீங்கள் உசத்திப் பிடித்த போது, பரபரவென்று டேபிளில் போய் குந்தி 2027-க்கான அட்டவணை சார்ந்த எனது திட்டமிடலை மறுக்கா பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நிஜத்தைச் சொல்வதானால், இந்த ஆகஸ்டின் இறுதியிலேயே அட்டவணையை லான்ச் செய்திட எல்லாமே ரெடிதான். ஈரோட்டுக்கு வந்த போதே என்னிடம் அட்டவணையும் ரெடி !  ஆனால், 'Terrific Tex தனித்தடம் இப்போதுதான் துவங்கியுள்ளது; 'Fab 5 முன்பதிவுத் தடத்திலும் ஒரே ஒரு இதழ்தான் வந்துள்ள நிலையில், அடுத்த வருஷச் சந்தாவினையும் அவசரமாய் அறிவித்து, சாதிக்கப் போவது எதுவுமில்லையே என்ற முன்ஜாக்கிரதை முனியசாமி மண்டையை நீட்டினான். அதுவும் சரிதான்... நாலு மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்துவிட்டு சவசவ வெனக் காத்திருப்பதற்குப் பதிலாக, எப்போதும் போலவே அக்டோபர் இறுதியில் அட்டவணையைக் கண்ணில் காட்டிக் கொள்ளலாம் என்றே தீர்மானித்தேன். And இதோ, இந்த செப்டம்பரின் நிகழ்வுகள் கூட எனது அட்டவணை சார்ந்த fine-tuning உதவியுள்ளன என்பேன்.

Honestly, 2027-ன் அட்டவணையில் ப்ளூ கோட்ஸ்களுக்கு மனதில் மட்டுமே இடம் தருவதென எண்ணியிருந்தேன். சாரி, தீர்மானமே செய்திருந்தேன். ஆனால், இரண்டு காரணங்கள் மண்டையைக் கழுவ உதவியுள்ளன. காரணம் நம்பர் ஒன்று, கோட்டையில் ஒரு குட்டிப் புயல் உங்கள் மத்தியில் உருவாக்கியுள்ள சந்தோஷ அலைகளே !! ஸ்கூபியும் ரூபியும் negative vibes துளியும் தராது, அழகாய் ஒரு கதைக்குள் travel செய்யும்போது, இந்தத் தொடரே புதியதொரு மினுமினுப்போடு காட்சி தருவதை உணர முடிகின்றது. காரணம் நம்பர் இரண்டு, நம்மிடம் கைவசம் இருந்த ப்ளூகோட்ஸ் முந்தைய இதழ்களின் பெரும்பான்மையை ஒரு ஆர்டரில் மொத்தமாய் கொள்முதல் செய்திருக்கின்றனர். So, காத்திருக்கும் 2027-ல் ப்ளூகோட்ஸ் வெளிவராத பட்சத்தில், நம் லிஸ்டில் அவர்கள் துளியும் இடம் பிடித்திருக்க மாட்டார்கள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. As a result, அவசர அவசரமாய் நீலச்சட்டையினரை உட்புகுத்தியாச்சு. And ஸ்டெர்ன் போலான high quality off-beat கதைகளுக்கு இன்னுமுமே ஒரு இடமுண்டு என்பதை நீங்கள் நிரூபிப்பது கணிசமாய் சிந்திக்கச் செய்துள்ளது. Of course all said & done - இந்த ஒல்லிப்பிச்சான் எந்தக் கோட்டையை எட்டிப்பிடித்தாலுமே, டெக்ஸ் எனும் ஜாம்பவானின் விற்பனைகளுக்குப் பக்கத்துத் தெருவில் கூட நிற்க இயலாது என்பதை தினம் தினம் உங்களது online ஆர்டர்களில் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம். So, அந்த commercial ஜாம்பவான்கள் as always தொடரத்தான் போகிறார்கள். ஒரு மாற்றத்திற்கென மாறுபட்ட களங்களை எந்த விகிதத்தில் சந்தாவினில் உட்புகுத்துவது என்பதே million dollar question !! 

இங்கே இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட்டே தீர வேண்டும். அதுதான் புத்தகவிழா சர்க்யூட் பற்றியது.

கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஜூன் இறுதியில் நெய்வேலி முதலாய் வேகமெடுக்கும் புத்தகவிழா சர்க்யூட்டுகள் ரவுண்டு கட்டி கிட்டத்தட்ட மார்ச் வரை தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இடம்பிடித்துக் கொண்டிருந்தது நாமெல்லாம் அறிந்ததே. இந்நேரத்திற்கு மதுரை புத்தகவிழா, பின்னே கரூர், அதன் பிற்பாடு திருச்சி, தொடர்ந்து சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் என்றெல்லாம் திட்டமிடல்கள் இருந்திருக்கும். ஆனால் நடப்பாண்டினில் இப்போது வரையிலுமே மதுரைக்கான அறிவிப்புக்கே waiting. So புத்தகவிழாக்கள் circuit சீராகும் வரையிலும் என்ன எதிர்பார்ப்பதென்று யோசனையாகவே உள்ளது !   புத்தகவிழாக்கள் சார்ந்த   வரவு செலவுகள் ஒருபுறம் இருக்க, Tier 2 & Tier 3 நகரங்களில், கணிசமான ஸ்கூல் பிள்ளைகளை ஈர்க்கும் வாய்ப்புகள் நமக்குக் கிட்டி வந்தன. அடுத்ததொரு தலைமுறையை எட்டிப்பிடிக்கும் பொருட்டு அவர்களையே நாம் மலைபோல் நம்பியிருந்தோம். ஆனால் புத்தகவிழாக்கள் சீராகத்  தொடரத் துவங்கும் வரையிலும், இந்தப் பிள்ளைகளை எட்டிப்பிடிக்கும் வாய்ப்புகள் சொற்பமாகி விடுகின்றன.That is the bigger concern !

Which automatically makes the சந்தா efforts all the more precious. 2012 முதலாகவே நமது இரண்டாவது இன்னிங்ஸின் தூண்களில் இரண்டரையாக சந்தா நண்பர்கள் இருந்து வந்துள்ளனர். மீத ஒன்னரைத் தூண்களாய் - ஆன்லைன் விற்பனைகளும், ஏஜெண்டுகள் சார்ந்த விற்பனைகளும், புத்தகவிழா விற்பனைகளும் இருந்து வந்தன. இன்றைக்கோ அந்த ஒன்னரைத் தூண்களில்  ஒரு பாதி லைட்டாக ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நிலையில், இனி அந்த நடுக்கத்தைச்  சரி செய்யும் பொறுப்பினையுமே சந்தா நண்பர்களே ஏற்றுக் கொள்ள வேண்டி வருமோ ? என்று ஒரே யோசனையாக உள்ளது. And இந்த நிலவரத்தில் மாதாமாதம் நான்கும் ஐந்துமாய் புக்ஸைப் போட்டு உங்களுக்கும் சலிப்பு ஏற்பட அனுமதிக்கலாகாதே என்ற பயமும் தலைக்குள் நிழலாடுகிறது. So, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த 2027-க்கான அட்டவணையில் என்முன்னே காத்திருக்கும் சவால்கள் ஒரு வண்டி. எனது priorities என்னவென்று இதோ பட்டவர்த்தனமாய் லிஸ்டே போட்டு விடுகிறேனே:

 1.      மாதம்தோறும் வாசிப்பில் உங்களை குட்டிக்கரணம் அடித்தேனும் ஈர்த்தே தீர வேண்டும்.

2. தெறிக்கும் விலைவாசிகளின் உயர்வுகளை இயன்றமட்டிற்கு கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமே தவிர உங்கள் தலையில் சாத்தக்கூடாது. குறிப்பாய் எகிறி வரும் கூரியர் கட்டணங்கள் & packing material கிறுகிறுக்கச் செய்து வருகின்றன !  

3.    கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் அந்த சந்தாத் தொகை threshold ரூ.6200 சொச்சம் எனும் நம்பரை மீறிவிடவே கூடாது. At least ரெகுலர் சந்தாவினில்.

4.    As always கமர்ஷியல் கதைகளுக்கும் இங்கே இடம் இருக்க வேண்டும். மாறுபட்ட களங்களையும் புறக்கணிக்கலாகாது.

5.    நம் மீதான அபிமானத்திலும், நேசத்திலும் புக்ஸ் வாங்குவது அற்புதமானதொரு விஷயமே. ஆனால் அவைகள் மாத்திரமே உங்களது சந்தாக்களின் முதுகெலும்பாகிவிடக் கூடாதே. "எனக்கு இதைப் படிக்கணுமே, எனக்கு இதை ரசிக்கணுமே.." என்ற உத்வேகத்தை உங்களுக்குள் விதைத்தே தீர வேண்டும். And here - விடிய விடிய புதியவர்களைப் பற்றியும், மாறுபட்டவர்களைப் பற்றியும், புதிய யுகங்களைப் பற்றியும் நான் சிலாகிச்சாலும், ஒரு மனுஷன் 55 ஆண்டுகள் கழித்து வந்து நிற்கின்றார். சுண்டுவிரலால் அத்தனை பேரையும் 'லைனா ஓரமா போய் நின்னுக்கோங்க கண்களா' என்றபடியே வெற்றிக்கொடி நாட்டிப் போய்க்கொண்டிருக்கிறார். அவர் நமது மாயாவி மாமா என்பது நமக்கு தெரியும். கிட்டத்தட்ட அதே வீரியத்தோடு கிங் ஸ்பெஷல் நாயகர்கள் அனைவருமே இன்றளவும் விற்பனையில் சாதித்தே வருகின்றனர். So, வழுக்குப்பாறையார் தெளிய வைத்துத் தெளிய வைத்துச் சாத்துவார் என்று தெரிந்தாலும், நமது சங்கப் பொருளாளர் சங்கடப்படுவார் என்பது புரிந்தாலும், புதுப்புது ID-களில்  ஆஜராகி, நமக்குப்  பரிச்சயமான ஒருவர் அறிவுரைகள் பல நல்குவார் என்றாலும்  கிளாசிக்களுக்கு நம் மத்தியில் உள்ள இடத்தினை நான் மதித்தே தீர வேண்டும்.ஆக, ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், ஈயம் செலவாகாத மாதிரியும் இருக்கணும்; நான் இப்படி சுத்தறப்ப நீ அப்படி சுத்தணும்" என்று கவுண்டர் பேசும் டயலாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, மறுக்கா சந்தா இதழ்களை மறுபரிசீலனை செய்தும் வருகின்றேன். Classics are just an unstoppable force these days !!!

இந்த நொடியில் நமது 'FAB 5' தனித்தட அறிவிப்பு பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று படுகிறது. Maybe the timing of this announcement wasn't too great. ஆனால்    இந்தத் தனித்தட அறிவிப்பில் நாம் திட்டமிட்டிருக்கும் ஐந்து இதழ்களுமே அந்த 575 ரூபாய் பணத்திற்குப் பரிபூரண நியாயம் செய்திடக்கூடிய படைப்புகளே. எந்த ஒரு இதழுமே சின்ன பிரிண்ட் ரன் என்பதற்காகக் கூடுதல் விலையில் அறிவிக்கப்பட்டிருக்கவே இல்லை. இதோ அக்டோபரில் காத்திருக்கும் "கதிரவன் கண்டிரா கணவாய்" 160 பக்கங்கள் கொண்டது - 125 ரூபாய் விலையில்தான். காத்திருக்கும் ஸாகோர் கதையும் சரி, "என் பெயர் அந்நியனும்" சரி, "உலகத்தின் கடைசி நாள்" (மார்ட்டின் பிளஸ் டயலன் டாக் சாகசமும்) சரி... will offer unbeatable value for money for sure.

"என் பெயர் அந்நியன்" ஒரு தெறிக்கும் Dark Noir ஸ்பை த்ரில்லர் சாகசம்! "உலகத்தின் கடைசி நாள்" பற்றி கேட்கவே வேண்டாம்; மார்ட்டினும் டைலன் டாக்கும் ஒன்றிணையும் போது, சர்வ நிச்சயமாய் அந்தக் கதை பத்தோடு பதினொன்றாக இராது என்று நம்பலாம். 

So alternate மாதங்களில் வரக் காத்திருக்கும் இந்த FAB 5 இதழ்களுக்கு இன்னமுமே கொஞ்சம் முன்பதிவு வலு சேர்த்தால், எங்கள் நாக்குகள் சற்றே வாய்க்குள் திரும்பிச் சென்று ஓய்வெடுக்க சாத்தியப்படும். இந்த நொடியில், வீதி வரை நீண்டு அவை தெருவினைக் கூட்டிய வண்ணமே உள்ளன! Terrific Tex மாத்திரம் இந்த நொடியில் இல்லாது போயிருந்தால், நிரம்பவே ஆட்டம் கண்டிருப்போம் என்பதுதான் வார்னிஷ் அடிக்காத நிஜம். So, ஒவ்வொரு மாதமுமே ஏதேனும் ஒரு புள்ளியில் கவனங்களைக் குவிக்கும் ஒரு இதழாவது இருந்திடல் ரொம்பவே அத்தியாவசியம் என்றாகியுள்ளது ! ஒற்றை மாதத்தினை கொஞ்சம் இலகுவாய் விட்டால் கூட அந்த tempo குறைந்து விடுகிறது. And அந்த இதழ் சார்ந்து நீங்கள் செய்திடும் அலசல்கள், அந்த இதழை மாத்திரமன்றி, அந்த மாதத்து விற்பனையையுமே ஒரு புது உச்சத்திற்கு இட்டுச் செல்வதைப் பார்க்க முடிகின்றது. You have been simply awesome these last 2 months folks !! இப்போது நாம் தம் கட்ட முனைந்து கொண்டிருப்பது, டெக்ஸ் மாமூலாய் சலூனில் சந்திக்கும் ஒண்ணேமுக்கால் அணா வில்லன்களோடு அல்ல! ஒவ்வொரு எதிராளியும் மெஃபிஸ்டோவுக்குச் சித்தப்பாவாய், யமாவுக்கு மச்சானாய், ஆங்க ஓங்கமாய் உலகத்தைக் கடவாய்க்குள் போட்டு விழுங்கும் தடிமனுடன் நிற்கின்றார்கள். So, முன் எப்போதையும் விட உங்களது ஒத்தாசைகளும், உறுதுணைகளும் இந்த நொடியில் ரொம்பவே தேவை.


உங்களை மாதம்தோறும் புதுப்புது குஷிப் படலங்களில் ஆழ்த்த, ஆன அத்தனை குட்டிக்கரணங்களையும் அடிக்க ஃபிரெஷ்ஷாகத் தயாராகி வருகின்றோம். இதோ காத்திருக்கும் அக்டோபரில் உங்களுக்கு சின்னதொரு சர்ப்ரைஸ் getting ready. அதை தயார் செய்துவிட்டுப் பேசுகிறேனே!இப்போதைக்கு அது சார்ந்த பணிகளுக்குள் பிசியாக வேண்டியிருப்பதால் நடையைக் கட்டுகிறேன்.

Bye guys, see you around! And thanks for making this September just wonderful! Bye for now!

முன்கூட்டிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !!   

Thursday, September 03, 2026

சிறப்பாய் ஒரு செப்டம்பர் ..!

 நண்பர்களே, 

வணக்கம். யுகங்களுக்கு முன்பானதொரு நிகழ்வு போல் உள்ளது - புக்ஸ் வெளியான தினத்தில் ஒரு பதிவையும் போடும் போது. முன்பெல்லாம் பக்கத்து வீட்டில் மாடு கன்று போட்டிருந்தால் அதற்கு ஒரு பதிவு, ஆபீஸ் போகும் வழியில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தால் அதற்கு இன்னொரு பதிவு என்றெல்லாம் கூத்தடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் பிஸியான பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப்  பழக்கம் மலையேறி இருந்தது. And இரு வாரங்களாய், ஒழுங்குப்  பிள்ளையாய் பதிவு போட ஆரம்பித்த பிற்பாடு, இந்தப்  பழக்கத்திற்குமே ஒரு புனர்ஜென்மம் தந்தால் தப்பில்லை என்று பட்டது. And அதற்கு கூடுதலாய் உந்துசக்தி தந்தது ஒரு ஒடிசலான உருவமே. In fact என் பார்வையில் இந்த மினி பதிவின் நாயகனே அவர்தான். 

ஒவ்வொரு மாதமும் அட்டவணையில் முன்கூட்டியே அறிவித்த இதழ்களை slot in செய்துவிட்டு அவற்றுக்குள் தத்தகா புத்தகா என்று உருண்டு புரண்டு எப்படியேனும் முதல் தேதிக்கு தயார் செய்வது என்பது இப்போதெல்லாம் நம் ஆட்களுக்கு தூக்கத்திலும் சாத்தியம் என்ற ரேஞ்சுக்கு நகர்ந்துள்ளது. தாமதம் என்று எழும் பட்சத்தில் முக்காலேமூன்று வீசம் அது இந்த முழியாங் கண்ணனின் சோம்பல் காரணமாய் இருந்தால்தான். And ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல ஆண்டின் கிளைமேக்ஸ் பகுதியில் எப்படியோ ஒரு வண்டி இதழ்கள் குழுமி விடுவதும் இப்போதெல்லாம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றது. And அப்படிப்பட்ட பிஸியான மாதங்களில், பணிகளை முடித்த கையோடு நெட்டி முறிப்பது என்பது மெய்யாலுமே ஒரு அட்டகாச அனுபவம்.

இதோ என் முன்னே செப்டம்பரின் ஐந்து இதழ்களும் கலர்கலராய், சைஸ் சைஸாய், மினுமினுத்துக் கொண்டிருக்கின்றன. இளம் டெக்ஸ் ஒருவரைத் தாண்டி பாக்கி நான்கு இதழ்களுமே கலர் என்பதால் - மேஜை மீது பரப்பிப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் 'ஆ'வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். As cover pages go - இம்முறை யுத்தமே : டெக்ஸுக்கும், ஸ்டெர்னுக்கும் மத்தியில்தான் என்பேன். "எமனுடன் ஒரு யுத்தம்" அட்டைப்படத்தில் அந்த கெத்து நமக்கு பரிச்சயப்பட்ட ஒன்று என்றால்,  "விதி எழுதிய விசாரணை"யில் சோகம் படர்ந்த அந்த முகத்தோடு ஜெயில் செல்லுக்குள் ஸ்டெர்ன் அமர்ந்திருப்பது வானவில்லின் மறுமுனை. மஞ்சள் சட்டைக்காரரிடம் அந்த கம்பீரத்துடன் ஒரு வசீகரம் தென்படுகிறது எனில், இந்த நாகரீக வெட்டியானிடமும் ஏதோ ஒரு இனம் சொல்ல முடியா ஈர்ப்பு இருப்பதை என்னளவிற்காவது மறுக்க இயலாது. So இம்மாத அட்டைப்படப் போட்டியில் எனது ஓட்டு ஸ்டெர்னுக்கே. And ஒரு பேமானி எடிட்டராக அல்லாது, காமிக்ஸ் ஆர்வலனாக மாத்திரமே இருந்திருக்கும் பட்சத்தில் இம்மாதம் முதலில் வாசிக்க நான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடியதுமே "விதி எழுதிய விசாரணை"யாகத் தான் இருந்திருக்கும். இன்னமும் யோசிக்கின்றேன் - இந்த மனுஷனை முதல்வாட்டி பார்த்த போதே தமிழுக்குக் கொண்டு வரும் உந்துதல் எழுந்தது ஏன் என்று. பெருசாய் ஆக்ஷன் கிடையாது தான். அண்டர்டேக்கரைப் போல இவர் ஒரு அதிரடிக்காரரும் அல்ல தான். நமக்கு நிரம்பவே பழக்கப்பட்ட வன்மேற்குப் பின்னணி - ஆனால் முற்றிலும் வேறொரு பாணியில் நம்மோடு உரையாடுகின்றது !! And டமால் டுமீல் நங் கும் என்றெல்லாம் அல்லாது மெல்லிய உணர்வுகளோடு இந்த மெலிந்த தேகக்காரரை படைப்பாளிகள் பயணிக்கச் செய்திருப்பது முதல் புரட்டலிலேயே தெரிந்தது தான்.இருந்தாலுமே எனக்கு இவர் மீது ஒரு soft corner எழாது போகவில்லை. நம்பினால் நம்புங்கள் - முன்னொரு காலத்தில்...ரொம்ப ரொம்ப முன்னொரு காலத்தில்.... நம்ம மண்டை கூட ஸ்டெர்னின் இஸ்டைலில் தொங்கும் கேசத்துடன் காட்சி தந்தது தான் அவர் பக்கமாய் அணி சேர உதவிய ஒரு காரணமோ என்னவோ??!! 

இன்னும் நிறைய பேருக்கு இதழ்களே கையில் கிடைத்திருக்காது என்பதாலும் இன்னும் பலர் வாங்கி இருக்கவே மாட்டார்கள் என்பதாலும், இங்கு ஸ்பாய்லராக நான் பெரிதாக எதையும் பேசி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன். மாறாக இவற்றுள் என்னை என்ன ஈர்த்தது என்பதை சொன்னால் maybe மதில் மேல் பூனையாய் நிற்கக்கூடிய நண்பர்களுக்கு தீர்மானம் செய்வது சுலபமாகி விடக்கூடுமோ என்னவோ. Without doubt - இந்த ஆல்பத்தின் பிரதம நாயகர் : சித்திரப் பணியையும், கலரிங் பணியையும், ஒருசேரச் செய்திருக்கும் ஜூலியன் மாஃப்ரே தான். அந்த முதல் பக்கத்திலேயே நியூ ஆர்லியன்ஸ் நகரின் ஒரு ஏரியல் ஷாட்.... அதுவும் ஒரு மழை பெய்யும் தினத்தில். அடுத்த பிரேமில் கல்லறைத் தோட்டத்தில் வெட்டியானும், சக பணியாளரும் பிஸியாக இருக்கும் காட்சியோடு துவங்கும் அந்த கதையில் நியூ ஆர்லியன்ஸ் நகரும் சரி, அதன் மாறுபட்ட கட்டிடங்களும் சரி, கதை சொல்லலில் ஒரு மௌனப்  பங்கேற்றிருப்பதாக எனக்குப் படுகின்றது. ஒவ்வொரு லாங் ஷாட் பக்கத்திலும் பின்னணியில் தெரியும் கட்டிடங்களை மறக்காமல் பாருங்களேன் folks - ஒரே ஸ்டைலில் இரண்டாவது கட்டிடம் இருப்பதாகத்  தெரியவே செய்யாது. And கதையைப் பொறுத்தவரை, எப்போதும் போலவே மெலிதான மனித உணர்வுகளே இங்கு பிரதானமாக்கப்பட்டுள்ளன. பிழைப்பு நாடி புது மண்ணில் வேர்பிடிக்க எத்தனிக்கும் மரங்கள் என்ன மாதிரியான இன்னல்களை சந்திக்கின்றன என்பதை பக்கம் 73-ல் கதை முடியும் பிரேமில் ஓவியர் மௌனமாய் சொல்லி இருப்பது ஒருநூறு வீரியமான வரிகளை விட வலியவை !!

And இங்கே நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு விஷயமும் உண்டு. டின்டின் கதைகளுக்கு போடப்படும் சித்திர பாணிக்கு லைன் கிளேர் என்று பெயருண்டு என ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதாவது பெரிதாய் பேக்ரவுண்ட், ஏகமாய் முகபாவங்களில் டீடைல்ஸ் என்றெல்லாம் இல்லாது, சிம்பிளாக இப்படி வரைந்தால் மூக்கு, அப்படி வரைந்தால் வாய், அப்படி வரைந்தால் கண்கள், இப்படி விரிந்தால் கோபம், இப்படி சுருங்கினால் கடுப்பு என்று சகலத்தையும் மிகச்  சுலபமான நேர்கோடுகளுக்குள் அடக்கும் அந்த பாணியை ஜாம்பவான் ஹெர்ஜ் தனது அடையாளமாக்கி இருந்தார். அதே ரேஞ்சுக்கு இல்லாவிடினுமே இங்கும் ஓவியர் முகபாவங்களை இயன்ற மட்டிற்கு பெரிய மெனக்கெடல்கள் இன்றி அதே சமயம் அசாத்தியமாய் வேறுபடுத்திக் காட்ட கதை நெடுக உழைத்திருப்பது கண்கூடு. ஒற்றைப் பக்கத்தில் நம்மை ஒட்டுமொத்தமாய் மிரளச் செய்வதெல்லாம் இந்த ஓவிய பாணிக்குக் கிடைத்திருக்கும் ஒரு அங்கீகாரம் என்றே சொல்வேன். புரட்டுவோர், படிப்போர் யாரையும் பக்கம் 70 ஒரு புரட்டு புரட்டாமல் விடாது என்பது எனது திட நம்பிக்கை. "Sorry bro, எனக்கு பொழுதுபோக்கே பிரதானம், 'நொய் நொய்' என்று நகரும் கதைகளெல்லாம் நமக்கு சரிப்படாது" எனும் அணியாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் that's absolutely fine too folks. ஸ்டெர்ன் பக்கமாய் வராது ஒரு U டர்ன் அடித்து விடுங்கள். இது மெதுவாக நகரும் மென்மையான உணர்வுகளின் பிரவாகம் மட்டுமே. எனக்கு பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் ஹாப்பி அண்ணாச்சி. இல்லாது போனாலும் no worries.

இம்மாதத்தின் எனது இரண்டாவது வாசிப்பாக இருக்கக்கூடியது நமது பாயாசக்கார பாசக்காரர் அடிக்கடி குறிப்பிடும் ஓடிக்கொண்டிருக்கும் இளமதிகாரியே. ஆத்திச்சூடி எப்போதுமே தலைப்புகளுக்கு செட் ஆகும் பட்சத்தில், ஒரு தெறிக்கச் செய்யும் vibe தரும் என்பது எனது நெடுங்கால நம்பிக்கை. And அது இம்மாதமும் மெய்யாகியுள்ளது. இந்தப் பெயரானது இளம் டெக்ஸின் தொடரின் எந்த ஒரு ஆல்பத்துக்குமே பொருந்தக்கூடிய generic வகை என்பதை மறுக்கவே மாட்டேன். So, ஓராண்டுக்கு முன்பாகவே கதைகளை, பெயர்களை இறுதி செய்யும் வேளைகளில் இது போலான தலைப்புகள் அவ்வப்போது எனக்குக்  கை கொடுப்பதுண்டு. And பின்னாட்களில் அந்தக் கதைகள் ரெடியாகி, அவற்றுள் பணியாற்றும் சமயம், பெயர்கள் பொருந்திப் போவதைக் கவனிக்கும் போது, "ச்சே ... பின்னிட்டடா மாப்ள" என்று நமக்கு நாமே சால்வை போர்த்திக்கொள்ளத் தோன்றும். And இந்த மூன்று அத்தியாய சாகசத்தில் எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது - முன்கதை, பின்கதை, சைடு கதை என்றெல்லாம் கொக்கிகளைப் போடாது, 'ஏக்'தம்மில் மூச்சிரைக்க ஓட்டமெடுக்கும் கதையாகவும்  இருந்தது தான் !   என்னதான் அத்தனை கதைகளுக்குள்ளும் புகுந்து, அன்னம் தண்ணீர் புழங்கி இருந்தாலுமே, அந்த மாதம் முடிந்த கையோடு அவை சார்ந்த cache மெமரிகளை அப்படியே ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி விடுவது வழக்கம். So, நாலு வருஷங்களுக்கு முன் வந்த கதையில் இந்த அப்புச்சி அங்கே வந்து நாலு அப்பு அப்பினார் என்றோ, இந்த அண்ணாச்சி அந்த சாகசத்தில் உசிரை கொடுத்தார் என்றோ கதைகளின் ஊடே குறிப்புகள் எழும்போது மண்டையை மங்கு மங்கென்று சொரிந்து கொள்ளவே தோன்றும். ​இம்முறை அதுபோலான இடர்கள் ஏதுமின்றி, கோவையின் ஜி.டி.நாயுடு ஃபிளைஓவரில் 'சல்' என்று வண்டி பறப்பது போல இளம் டெக்ஸும், டைனமைட்டும் தூள் கிளப்புவது செப்டம்பரின் செம ஹைலைட் என்பேன். And பாயாசம் போடும் எண்ணத்தில் இருப்போர் கூட இதில் relate செய்திட ஒரு வசனம் உள்ளது. எங்க எந்த context-ல் என்று தேடிப் பிடிப்பது உங்க வேலை மக்களே.  ...

Moving on, இம்மாதத்தின் எனது மூன்றாவது வாசிப்பாக இருக்கக்கூடியது 'கோட்டையில் ஒரு குட்டிப் புயல்' தான். ஒரு போஷாக்கான பொடியன் கையை சப்பிக் கொண்டிருக்க, பின்னணியில் நமது சார்ஜன்ட் மாட்டின் மடியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அந்த யுத்தகளம் ஒரு குட்டி நர்சரி போல் காட்சி தருவது ஆரம்பமே வித்தியாசமானது என்று பறைசாற்றுகிறது. பக்கத்தைப் புரட்டும் முதல் நொடியில் என்னை மிரளச் செய்வது - அந்தக் கலர் கூட்டணி தான். சும்மா பச்சை பசேல் புல்வெளிகளும், அடர்நீல ராணுவச் சீருடைகளும், பளீரென்ற மஞ்சள் தொடுவானப்  பின்னணிகளும், எமிலியின் பஞ்சுமிட்டாய் கலர் கவுன்களும் பக்கத்துக்குப் பக்கம் கண்ணைப் பறிக்கின்றன என்று சொன்னால் அது மிகையே நஹி. ​நான் ஹாட்லைனில் குறிப்பிட்டிருந்தது போல, இந்த சாகசம் முழுக்கவே ஸ்கூபிக்கும், ரூபிக்கும் செம டஃப் தருவது கோட்டையின் கர்னல் தான். கதையோடு பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த மனுஷன் வரும் பக்கங்களிலெல்லாம், உற்சாக மீட்டர், பரபரப்பு மீட்டர் 'பச்சக்' என உச்சம் செல்வதை பேனாபிடிக்கும் போதே உணர முடிந்தது.

​இங்கொரு நிஜத்தை சொல்லி வைக்கட்டுமா? 2027 அட்டவணையில் இந்த நீலச்சீருடையினர் இடம்பிடிக்கப் போகின்றனரா ? இல்லையா ? என்பதை நிர்ணயம் செய்திட இந்த இதழே உதவிடக்கூடும் என்று எனக்கு மண்டைக்குள் ஒரு சிந்தனை. So all the more reason for you to read and share your thoughts please 🙏🙏

​அப்புறம் GEN Z தளத்தில் குட்டிப்பசங்களுக்கான "புதுசாய் ஒரு பூதம்". இதுவுமே கலரில் அந்த கியூட்டான படுக்கவச சைஸில் பட்டையைக் கிளப்புவதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் காக்காவுக்கு, கண்ணில் தெரியும் முட்டையெல்லாம் பீமா ஜூவல்லரி சொக்கத்தங்கமாய் தென்படுவது இயல்பே எனும்போது - நிஜ ஜூரிகளாய் நீங்களே இருக்க முடியும். எது எப்படியோ இந்த ஜூனியர் டிடெக்டிவ்ஸ் கதைத் தொடரானது இந்த சாகசத்தோடு நிறைவு பெறுகிறது. And இந்த GEN Z தளத்திற்கு சந்தா கட்டி இருப்போர் தவிர்த்து ரொம்பச் சிலரே இதை தனிப்பட்ட முறையில் வாங்கி வருவதால், அடுத்த ஆண்டிற்கு GEN Z ஒரு பெரிய கேள்விக்குறியே !!

Last but not the least, TERRIFIC TEX தனித்தடத்தின் 'எமனுடன் ஒரு யுத்தம்' - நம்மவரின் ஒன் ஷாட் சிங்கிள் ஆல்பம். இது பாக்கெட் சைஸில், நியூஸ்பிரண்ட்டில் வெளிவந்ததொரு சாகசம் என்பது நினைவுள்ளது. And தற்செயலான ஒற்றுமையாய், அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்த இதழ்களாய் 'எல்லையிலொரு யுத்தம்' and 'எமனுடன் ஒரு யுத்தம்' என கிட்டத்தட்ட ஒரே போலான கதைக்களங்களோடு ஆல்பங்களும் வெளிவந்திருப்பது வியப்பே. புதுசாய் படிப்போருக்கு கிளாசிக் டெக்ஸ் படைப்புகளின் புராதனம் லைட்டாக கண்ணில் படக்கூடும் தான். இது பெரியவர் ஜி.எல். போனெல்லி மற்றும் துவக்க நாட்களின் ஓவியர் கேலப்பீனி பணியாற்றிய ஆல்பமே. And இப்போதெல்லாம் மௌரோ போஸெலி அவர்களின் வேற லெவலிலான 'தல' கதைகளைப் பார்த்த பின்பு, இங்கே லைட்டான நெருடல் எழும் பட்சத்தில் - மிரட்டும் கலரும் சரி, அந்தப்  பரபரப்பான ஆக்ஷனும் சரி, அதனை சமன் செய்துவிடும் என்று நம்பலாம்.​நம்மில் கணிசமானோருக்கு இது முதல் வாசிப்பாகவே இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. Because 1980-களின் இறுதிகளில் இது ஒரிஜினலாக வெளிவந்த சமயத்தில் வாசித்து வந்தோரில் இன்று தொடர்ந்திடும் நண்பர்களின் சதவீதம் ரொம்பவே குறைச்சலாக இருக்கும் என்பது உறுதி. So நிச்சயமாக இந்த quickfire ஆல்பம் ரசிக்கத் தவறாது என்பது எனது நம்பிக்கை.

ஆக, ஐந்து இதழ்களோடு இந்த செப்டம்பர் உங்கள் முன்னே கடைவிரித்து நிற்கின்றது.

  • ​ஒரு கிராபிக் நாவல்,
  • ஒரு ஹியூமர் ஆல்பம்,
  • ஒரு ஹை வோல்டேஜ் வன்மேற்கு சாகசம்,
  • ஒரு கிளாசிக் வன்மேற்கு சாகசம்,
  • ஒரு சுட்டீஸ் குட்டி இதழ் 

என்று சுவைகளிலும் வெரைட்டி காத்துள்ளது.

​So யாருக்கு எது பிடித்திருந்தாலும், அவற்றிலிருந்து வாசிப்பைத் துவக்கிய கையோடு, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி, உங்களது எண்ணங்களை பதிவு செய்திடும்படி yet again கேட்டுக்கொள்கிறேன் folks. And ஸ்டெர்ன் ஆல்பத்தை வாசிக்க நீங்கள் தயாராகி வரும் பட்சத்தில், please do try it when you are relaxed and free. ​பக்கங்கள் 72 இருந்தாலும் வாசிப்புக்கென அரைமணி நேரம் பிடித்தாலே ஜாஸ்தி என்பேன். So நடுநடுவே மற்ற பணிகளுக்கு நேரம் தர அவசியம் இல்லாததொரு அரைமணி நேரத்தை இந்த நவீன வெட்டியானுக்கென ஒதுக்கினால் இவர் தரக்கூடிய அனுபவம் ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும் என்பேன். Give it a try please.

​ரைட்டு...அக்டோபரின் ஜான் பிளாக்ஸாடுடன் பயணத்தைத் தொடர கிளம்புகிறேன் guys. ​Happy reading and happy sharing too. Bye for now...See you around !!