Sunday, August 30, 2026

பேரைச் சொல்லவா.... 🎵🎵

 நண்பர்களே, 

வணக்கம் கபாலி படத்தில்  தலைவர் பேசும் வசனம் போல "வந்துட்டேன்னு சொல்லு.... போன மாதிரியே திரும்பவும் வந்துட்டேன்னு சொல்லு...." இன்று இல்லாவிட்டாலுமே, ஒரு ஜாலியான அடுத்த இன்னிங்ஸை துவங்கத் தேவையான உத்வேகத்தை போன வாரமே நீங்கள் கணிசமாய் வழங்கி விட்டுள்ளீர்கள். Thanks a ton all !! சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பதிவுகளைப் பறக்க விட வேண்டியதுதான் என்று மண்டைக்குள் மறுக்கா பதிவு செய்து கொண்டுவிட்டேன். காத்திருக்கும் செப்டம்பர் இதழ்களின் மீதங்களைப் பற்றி பேசுவதை தாண்டி இந்தப் பதிவில் எதனைப்  எழுதுவதென்று யோசிக்க அவசியமே ஏற்பட்டிருக்கவில்லை - becos வாரத்தின் நிகழ்வு ஒன்று பதிவின் தலைப்பை எனக்கு தேடித்தந்துவிட்டது...! 

வேறொன்றுமில்லை folks.... 2027 சார்ந்த அட்டவணைக்கான பணிகள் கிட்டத்தட்ட ஓவர் என்ற நிலையில் கதைகளுக்குப் பெயர் வைத்து finishing touches தந்து கொண்டிருந்தேன். ஜூனியர் எடிட்டருக்கு இப்போதெல்லாம் நான் பணியாற்றும் விதம் அத்துப்படி. காலையில் 6 மணிக்கு எழுந்தால் "ஆறரைக்கு ஆளைக்  காணோம்... !" என்று பெயர் வைப்பேன் என்பது தெரியும். 7 மணிக்கு எழுந்தால் ""எமனின் நம்பர் ஏழு " என்று பெயர் சூட்டுவேன் என்பதும் தெரியும். So நான் பணியாற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், "ஒரே பெயரை மறுக்கா ரிப்பீட் செய்யாமல் எப்படி பார்த்துக் கொள்வீர்கள் ?" என்ற கேள்வியை முன்வைத்தான். நம்ம கைவண்ணத்திலேயே கிட்டத்தட்ட 1200 இதழ்கள் தயாராகி உள்ள நிலையில் எனக்கே அந்த கேள்வி 'ஆமால்ல....ஒரே தலைப்பை இருவேறு கதைகளுக்கு வைத்தும் தொலைத்திருக்கலாமோ ??' என்ற பீதி உருவாகியது. எதையோ சொல்லிச் சமாளித்துவிட்டு முந்தைய இதழ்களின் பட்டியலை எடுத்து ஒருவாட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியில் தோன்றியதுதான் தலைப்புகளை மையமாக்கி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று....?

ஒவ்வொரு கதைக்குமான முதல் திறவுகோல் அதன் தலைப்பு தான் என்பது நமக்குத் தெரியும். இந்தத்  தலைப்புகள் எவ்விதம் தலைக்குள் உதிக்கின்றன ? என்பது எனக்கே இன்றளவும் பிடிபடாத ஒரு புதிரே. வழக்கம் போல ரிவர்ஸ் கியர் போட்டு, லயனின் துவக்க நாளில் போய் நின்றால் - அந்த முதல் இதழான "கத்திமுனையில் மாடஸ்டி" கண்முன்னே நிழலாடுகிறது. ஒரிஜினலாய் இந்தக் கதையின் ஆங்கிலத்திலான பெயர் "The Vanishing Dollybirds"  - அதாவது "மாயமாய் மறைந்து போகும் சிட்டுக்கள்" என்ற அர்த்தத்தில்..! அதுவரையிலும் முத்துக்காமிக்ஸில் பெயர் வைப்பதைப் பார்த்திருந்து பழகியவனுக்கு, முதன்முறையாக நாமளே ஒரு பெயர் சூட்டணுமோ ? என்ற கேள்வி எழுந்தபோது, மண்டை மொத்தமாய் blank ஆகிப் போயிருந்தது. ஏதேதோ யோசித்துப் பார்த்தாலும், அன்றைக்கு சுத்தமாய் வண்டி செல்ப் எடுக்கவே இல்லை. முத்துக்காமிக்ஸில் அன்று மேனேஜராகப் பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியனிடம் ஒரு டைட்டில் மட்டும் வைக்கச் சொல்லி கேட்போம் என்றால் - நம்ம ஈகோ அதற்கு இடம் தரவில்லை. அந்தக் கதையின் sequence-ல் மாடஸ்டி இலக்காகி நிற்க, வில்லி கார்வின் அவளைச் சுற்றி கத்திகளை வீசுவார். அந்த ஒரு சீன் மனதில் ஸ்பஷ்டமாய் பதிந்திருக்க, "கத்தி முனையில் மாடஸ்டி" என்ற பெயர் உதயமானது. இது யாரோட கதை என்பதையும் தலைப்பிலேயே சொன்னது போலாயிற்று ; கொஞ்சம் பரபரப்பும் சேர்ந்த டைட்டிலாகவும் அமைந்துவிட்டது என்று நினைத்து அதையே லாக் செய்துவிட்டேன். இன்று யோசிக்கும் போது, அந்தக் கதைக்கு நிச்சயமாய் இன்னும் கொஞ்சம் பெட்டராய் தலைப்பு சூட்டியிருக்கலாம் என்றே படுகிறது. இரண்டாவது இதழுக்குச் சூட்டிய பெயரானது, முழுக்க முழுக்க முத்துக்காமிக்ஸின் தலைப்புகள் தந்த influence தான் காரணம் என்பேன். "மாயாவி in மாம்பலம்"..... "ஜானி in ஜக்கம்பட்டி"..... "லாரன்ஸ் in தல்லாகுளம்" என்று வைக்காத குறையாய், "இமயத்தில் மாயாவி"..... "நயாகராவில் மாயாவி".... "ஜானி in ஜப்பான்".... "ஜானி in லண்டன்".... என்ற ரீதியில் அந்நாட்களது முத்துக்காமிக்ஸ் இதழ்களில் சாகசங்கள் அரங்கேறும் நகரங்களை தலைப்போடு இணைத்திருப்பது என் நினைவில் இருந்தது. மாடஸ்டியின் அந்த இரண்டாவது ஆல்பமானது ஒரிஜினலாய் "The Junkmen" என்ற பெயருடன் இங்கிலீஷில் வெளிவந்திருந்தது. ஆனால் கதைக்களமோ இஸ்தான்புல் என்றவுடன் பச்சக்கென "மாடஸ்டி in இஸ்தான்புல்" என்று ஜோலியை முடித்துவிட்டேன். 

என் பார்வையில் மெய்யாலுமே கொஞ்சம் அர்த்தத்துடன் அமைந்த முதல் தலைப்பானது நமது தானைத்  தலைவரின்  "எத்தனுக்கு எத்தன்" தான் என்பேன் ! அங்குமே original பெயர் அட்டகாசமான ஒன்று The Man Who Stole New York. தமிழில் "நியூயார்க்கைத் திருடிய ஸ்பைடர், ஸ்பைடர் திருடிய நகரம், நகரத்தைக் காணோம், தலைநகரில் டெரர் என்றெல்லாம் ஏதேதோ யோசித்துப் பார்த்தது எனக்கு நினைவுள்ளது. ஆனால் அங்கெல்லாம் எழுந்த முதல் practical சிக்கலை அன்றுதான் அனுபவித்தேன். இன்றைக்குப் போல digital-ல் எழுத்துருக்களை உருவாக்க முடியாது என்பதால் ஓவியர்களே பெயர்களை அழகாய் எழுதித் தருவதுண்டு. எனது original-ஆன முழுப் பெயரைப் போல - சிங்கம்புணரியில்  ஆரம்பித்து ஸ்ரீ லங்கா  வரை நீண்டு செல்லும் title ஆக இருந்தால் painting-க்குள் அதை அடக்குவது நாக்குத் தள்ளும் வேலையாகி போய்க்கொண்டிருந்தது. So கொஞ்சம் க்ரிஸ்ப்பான பெயராய்  இருந்தால் தேவலாம் என்று எதார்த்தம் சொல்லியது. பற்றாக்குறைக்கு இது pocket size வேறு. ஆகையால் "ராஜாதிராஜ... ராஜகம்பீர.... ராஜமார்த்தாண்ட... என்றெல்லாம் இழுத்துக் கொண்டு போக இடமே இல்லை. அந்த நொடியில் எங்கேயோ மண்டைக்குள் strike ஆனதுதான் எத்தனுக்கு எத்தன் என்ற தலைப்பானது. அந்த இளிக்கும் ஸ்பைடரின் close-up மண்டையோடு இந்த title அழகாய் gel ஆனதாக எனக்குப் பட்டது. And the rest is history.....

அடுத்த மாதம் வந்த ஸ்பைடர் கதைக்கோ பெயர்  வைப்பது மறுபடியும் தண்ணீர் குடிக்கச்  செய்யும் சிக்கலாகிப் போனது. எதேதோ முயற்சித்துப் பார்த்தாலும் நச்சென்று  எதுவும் அமையவில்லை. அந்நாட்களில்  "டக்கர்" என்ற வார்த்தை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகமாகி சரளமாய் பேச்சுநடையில் ஐக்கியமாகியிருந்தது. அத்தனை போதாதா நமக்கு ? அந்த மெயின் வில்லனுக்கு "டாக்டர் டக்கர்" என்று பெயர் சூட்டிய கையோடு அதையே கதைக்கும் தலைப்பாக்கி வைத்தேன். மிச்ச மீதியை நமது சிரசாசன SMS-காரர் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து நாட்களில் கபாலர் கழகம், பாதாளப் போராட்டம், கொலைப்படை என்று வண்டி தடதடக்க ஆரம்பித்ததெல்லாம் நமது இஸ்திரியின் ஒரு பக்கம். ஓரளவிற்கு தலைப்புகளெல்லாம் நேர்கோட்டில் தட்டையாகவே லயனின் துவக்க நாட்களில் அமைந்திருந்தன என்று சொல்வதுதான் பொருத்தமென்று நினைக்கிறேன். எல்லாமே கதையை நேரடியாய் சுட்டிக்காட்டும் விதத்தில் - பழிவாங்கும் பொம்மை, காணாமல் போன கடல், யார் அந்த மினி ஸ்பைடர், தலைவாங்கிக்  குரங்கு என்ற ரேஞ்சிலேயே இருந்து வந்தன. எனக்குத் தெரிய தலைப்புகளில் கொஞ்சமாய் ஒரு வித்தியாச பாணியைத் துவக்கித் தந்தது நமது திகில்தான். 

ஒரு iconic தலைப்பாக, 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்திடும் இரத்தப் படலம் அதற்கொரு உதாரணம் என்பேன். எனக்கு நினைவில் உள்ள வரைக்கும் அந்நாட்களில் maximum மொக்கை போட்டது இந்த தலைப்பிற்காகத் தான். கதையே முற்றிலும் வித்தியாசமான பாணியிலானது.... and நாம் எதிர்பார்த்திருந்ததற்கு நேர்மாறான துவக்கம் கொண்டது. இந்த அழகில் கதை ஒரு தொடர் வேறு. So, இழுத்துப் போட்டு மொத்துவீர்களா..? தெளிய வைத்துச் சாத்துவீர்களா ? என்பது மட்டுமே அன்றைக்கு எனது பிரதான பயமாக இருந்தது.​ எத்தனை யோசித்தாலும் ஒரு கிளாசிக் தலைப்பு அமையவே இல்லை. "நினைவைத் தொலைத்தவன்".... "நினைவுகளைத் தேடி"..... "இறந்தகால வேட்டை" என்றெல்லாம் மொக்கை மொக்கையாய் தலைப்புகள் தான் தலைக்குள் தாண்டவமாடின. அன்றைய குழப்பத்தில். out of the blue தோன்றியது தான் இரத்தப் படலம் என்ற அந்த டைட்டில். ​தலையில் காயம்பட்டு நினைவிழந்த நிலையில் நமது XIII கரை சேரும் போது, ஏதோ ஒரு sequence-ல் அவரது நினைவுகள் முழுமையும், ரத்தக் கசிவில் அழிந்து போயிருக்கக்கூடும் என்பது போன்றான காட்சி எனக்கு முக்கியமானதாகப் பட்டது. ஆக, கதை நெடுக ரத்தம் சிந்துவது ஒரு பக்கம் இருக்க, நாயகனின் அந்த நினைவற்ற நிலைக்கே மூளையைச் சூழ்ந்திருக்கும் ரத்தப்படலமே காரணம் என்ற ரீதியில் தலைப்பு அமைந்தால் மோசமில்லை என்று தான் நினைத்தேன். 40 ஆண்டுகள் கழித்தும் நமது பயணத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்டிருக்கும் பெயராக அது பின்நாட்களில் அமைந்திடும் என்பது அன்றைய 19 வயது எடிட்டருக்கு சர்வநிச்சயமாய் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கேப்டன் பிரின்ஸின் பனிமண்டலக் கோட்டை என்ற தலைப்புமே எனக்கு கம்பீரமானதாய் அன்றைக்கே பட்டது. அந்த அட்டைப் படத்திற்கும் அந்த தலைப்பிற்கும் அழகாய் ஒரு harmony செட்டாகி இருப்பதாக நினைத்தேன். திகில் இதழ்களில் வித்தியாசமான titles தொடர்ந்தது மறுவருடம் 'சாவதற்கு நேரமில்லை' என்ற தலைப்போடு. தொடர்ந்த மாதங்களில் 'முகமற்ற கண்கள்', 'சிரித்துக் கொல்ல  வேண்டும்', 'பற்றி எரியும் பாலைவனம்', 'மரணத்தின் பல முகங்கள்', 'இறந்தவனைக் கொல்லாதே' என்றெல்லாம் நமது தலைப்புகளின் range ஒரு படி வீரியம் பெற்றிருந்தது என்றே சொல்வேன்.

​திகிலில் தலைப்புகள்  கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன என்றால், மினி லயனிலும், ஜூனியர் லயனிலும் அந்தச் சிக்கலே இருக்கவில்லை. எல்லாமே நேர்கோட்டுக் கதைகள், கார்ட்டூன்கள் என்றபோது - 'ராஜா ராணி ஜாக்கி', 'விண்வெளியில் ஒரு எலி', 'ஒரு நாணயப் போராட்டம்', 'எழுந்து வந்த எலும்புக்கூடு' என்று பஜக் பஜக்கென போட்டுத் தாக்குவது சாத்தியமாகி இருந்தது. And by then - இந்தப் பெயரிடும் படலங்கள் பெரும் கம்பு சுற்றும் கடினங்களாக இருந்திருக்கவுமில்லை ! ஒருகட்டத்தில் கதையோடு பயணிக்கும்போதே தலைக்குள் எழும் முதல் தலைப்பே பொருத்தமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் குடியேறத் தொடங்கியிருந்தது. அப்போதெல்லாம் இப்போது போல 'ஏக்' தம்மில் ஒரு வருஷ அட்டவணைகளை கண்ணில் காட்டும் அவசியங்கள் லேது எனும்போது, அந்த மாதத்து இதழின் கடைசிப் பக்கத்தில் அடுத்த இதழாய் செய்திட வேண்டிய விளம்பரத்திற்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் விவரம் கேட்கும்போதுதான் இந்தத் தலைப்புப் பஞ்சாயத்தே தலைதூக்கும். So அவசர அவசரமாகவே முக்கால்வாசி நேரங்களில் பேர்களைச் சூட்ட வேண்டியதிருக்கும்.

​இந்த ஊர்களை சம்பந்தப்படுத்தும் பாணியானது அவ்வப்போது கைகொடுக்கத் தவறியதும் இல்லை. எதுவும் தோணாத பட்சத்தில் - 'பிரின்ஸ் in ஆப்பிரிக்கா', 'ஆர்ச்சி in பாரிஸ்' என்றெல்லாம்  தலைப்புகளாக்கியும் விடுவதுண்டு. இடையிடையே 'பெர்முடா படலம்', 'மெக்ஸிகோ படலம்' என்றெல்லாம் படலப் படலங்களும் தொடர்ந்து வந்தன.

​லயனில் கம்பீரமான தலைப்புகள் என்று இன்றும் எனக்குப்படும் சில - நமது இரவுக் கழுகாரின் சாகசங்களைச் சொல்வேன். 'கார்சனின் கடந்தகாலம்' ஒரு cult hit என்பதற்கு அந்தத் தலைப்பும் சிறியதோர் அளவில் உதவியதென்றால் மிகையில்லைதானே ? அப்புறம் மூன்று அத்தியாய சாகசமான 

'ரத்த ஒப்பந்தம்', 'தணியாத தணல்', 'காலன் தீர்த்த கணக்கு

என்ற காம்போ இன்றும் எனக்கு நினைவிலிருக்கும் titles.

தலைப்புகளில் "சாவுக்கு சா, காவுக்கு கா" என்று ரைமிங்காக வார்த்தைகள் அமைந்தால் வேலை சுலபம் என்பதும் அந்த பூமர் காலத்து mindset.​ அதற்கேற்ப பார்த்தீர்களெனில் 

'ஆர்ச்சிகோர் ஆர்ச்சி', 

'கானகத்தில் கண்ணாமூச்சி', 

'வாரிசு வேட்டை', 

'யமனுக்கு யமன்', 

'திக்குத் தெரியாத தீவில்', 

'யமனோடு யுத்தம்', 

'ஏரியில் ஒரு எரிமலை', 

'பலி கேட்ட புதையல்', 

'மேடையில் ஒரு மன்மதன்', 

'பூமிக்கொரு பிளாக்மெயில்' 

என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நம் நேரத்திற்கு அதுபோலான ரைமிங் தலைப்புகள் கதையோடும் எப்படியோ பொருந்திப்போய்விட, அந்நாட்களில் உங்களை impress செய்வது எனக்கு சாத்தியமாகிப் போனது. இன்னும் பட்டியலை எடுத்துப் பார்த்தால் கெக்கபிக்கவென்று சிரிப்புதான் வருகிறது. 

'கானகத்தில் கலவரம்', 

'பறக்கும் பரலோகம்', 

'மலையோடு மல்யுத்தம்',  

என்று இஷ்டத்திற்கு போட்டுத் தள்ளியிருக்கிறேன்.

​இந்தக் கூட்டணி இதழ்கள் — அதாவது பல கதைகளின் combo-வில் வந்த இதழ்களுக்கு எப்படியோ அந்நாட்களிலேயே, கம்பீரமாகவே தலைப்புகள்  செட்டாகி இருப்பதாக  இன்று லிஸ்ட்டைப் பார்க்கும்போது மனதில் படுகிறது. 'லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல்' ஆரம்பித்து வைத்த பாணியை 'லயன் ஜாலி ஸ்பெஷல்', 'கவ்பாய் ஸ்பெஷல்' என்றெல்லாம் தொடர்ந்திருந்தோம்.

​ஆனால் மெய்யாலுமே எல்லாமே ஒரு கியர் உசக்கே செல்ல ஆரம்பித்தது நமது இரண்டாம் வருகையைத் தொடர்ந்தான தருணங்களில்தான் என்பேன். நாம் கம்பேக் செய்த நொடியில் எனக்கு அந்த இதழினை 'The கம்பேக் ஸ்பெஷல்' என்று பெயரிட அரைக்கால் நொடி கூட பிடிக்கவில்லை. 'இல்ல இல்ல, நாங்க எப்பயும் போல இங்கேயே இருக்கத்தானே செய்கிறோம்' என்று பாசாங்கெல்லாம் செய்திடத் தோன்றவே இல்லை. 'ஆமாம், தேசாந்தரம் போயிருந்தோம், இதோ திரும்ப வந்தாச்சு' என்று சொல்வதில் ஒரு நயம் இருக்கும் என்று மனதில்பட்டது. So, அதைக் கொண்டு அமைத்ததுதான் 'The கம்பேக் ஸ்பெஷல்' என்ற தலைப்பு. அதைத் தொடர்ந்து வந்த சில தலைப்புகளெல்லாம் நீங்கள் வழங்கியவை. 

'லயன் நியூ லுக் ஸ்பெஷல்', 

'லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல்', 

'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்', 

The Wild West ஸ்பெஷல்

'ஹாட் அண்ட் கூல் ஸ்பெஷல்', 

'ஆல் நியூ ஸ்பெஷல்' 

என்றெல்லாம் வரிசைக்கு ஸ்பெஷல் தோசைகளை சுட்டுத்தள்ள ஆளுக்கொரு கை மாவு நல்கிய நாட்கள் மறக்க இயலாதவை.

​நமது இரண்டாம் வருகையில் முதல் வித்தியாசமான தலைப்பாக எனக்குப் படுவது 'Green Manor'. அந்தத் த்ரில்லிக்கச் செய்யும் சிறுகதைத் தொகுப்பிற்கு 'மனதில் மிருகம் வேண்டும்' என்று வைத்தது ரொம்பவே 'ரிச்'சான தலைப்பு என்று இன்றைக்கும் எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதேபோல ஏதோ ஒரு ஜனவரியின் புத்தக விழா சமயத்தில் வெளியான கமான்சே இதழுக்கு 'யுத்தம் உண்டு எதிரி இல்லை' என்ற டைட்டில் கூட நம்ம ரேஞ்சுக்குக் கவித்துவமான தலைப்பாக இன்றும் கவிஞர் முத்துவிசயனாருக்குத் தோன்றுவதுண்டு. ​'எஞ்சி நின்றவனின் கதை' என்ற தலைப்பிலும் ஒரு கம்பீரம் இருப்பதை உணரலாம். 'நில் கவனி சுடு' என்று நம்ம தலை தெறிக்கவிட்டது 2014-ன் ஹைலைட் என்று நினைக்கிறேன். தொடர்ந்த தலைப்புகளுள் 'ஆத்மாக்கள் அடங்குவதில்லை' என்பதும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்ததொரு பெயர். And of course, மறக்கவே முடியாத 'லயன் மேக்னம் ஸ்பெஷல்'! இந்தப் பெயருக்கு எத்தனை அலசி ஆராய்ந்து இதில் fix ஆனோம் என்பதெல்லாம் இந்தப் blog-ன் ஒரு மறக்க இயலாத அத்தியாயம் என்பேன்.

​அதனைத் தொடர்ந்து வந்த 'தேவரகசியம் தேடலுக்கல்ல' தலைப்பு உருவான விதம் இந்த நொடி கூட எனக்கு நினைவிலுள்ளது. கதையெல்லாம் வந்தாச்சு, அட்டகாசமான கதை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் ஏனோ டைட்டில் மட்டும் 'சிங்கிடி ஜிங்கிடி' ரகத்தில்தான் செட் ஆகிக் கொண்டே இருந்தது. உச்சரிக்கும்போதே பவர்ஃபுல்லான உணர்வைத் தரும் விதமாய் இந்த டைட்டில் அமைந்தால்தான் ரசிக்கும் என்ற எண்ணத்தில் அல்லாடிக் கொண்டிருந்தேன். பொதுவாகவே சிவகாசியில் அத்தனை பெரிய வீதிகளும் கிடையாது, ஆளைத் தூக்கிப் போகும் traffic-ம் கிடையாது. ஆகையால் வீட்டிற்கோ, ஆபீஸிற்கோ போகும்போது மண்டையை இதுபோல் ஏதேனும் சிந்தனைகளுக்குள் தொலைத்துவிட்டபடியே பயணிப்பது வழக்கம். நம்பினால் நம்புங்கள் guys, மிகச்சரியாக நமது ஆபீஸுக்குச் செல்லும் வழியில் உள்ளதொரு தேவாலயத்து வாசலைக் கடப்பதற்கு முன்னே மண்டையில் flash ஆன டைட்டில்தான் இது ! நம்ம சோன்பப்டி தாடி லியோனார்டோ தாத்தாவின் தலைக்குள் ஐடியா பல்ப் பளீரென்று எரிவது போல், அந்தப் பகலில் சாலையோரமாய் என் தலைக்குள் உதித்ததுதான் 'தேவரகசியம் தேடலுக்கு அல்ல'. கிட்டத்தட்ட அதே  நேரத்தில் வாங்கி இருந்த இன்னொரு கதையான 'THE HALLOWEEN BLUES' என்ற ஆல்பத்திற்கும் இதே போலவே ரோட்டில் ஷண்டிங் அடிக்கும் போதுதான் தலைப்பு செட் ஆனது. ​12 ஆண்டுகள் கழிந்தும் கைவசம் ஸ்டாக் இருந்தாலும் கூட, இன்னமும் ஒவ்வொரு புத்தக விழாவையும் தெறிக்கவிடும் அந்தத் திகில் ஆல்பத்தின் வெற்றிக்கு ஒரு சிறு காரணமாய் அமைந்திருப்பது 'இரவே..இருளே....கொல்லாதே' என்ற அந்த தலைப்புதான் என்பேன். தொடர்ந்த நாட்களில் 'வல்லவர்கள் வீழ்வதில்லை', 'நித்தமும் குற்றம்', 'ரௌத்திரம் பழகு', 'ஆதலால் காதல் கொள்ளாதீர்', 'சாத்வீகமாய் ஒரு சிங்கம்', 'வாராதோ ஒரு விடியலே' என்றெல்லாம் வண்டி ஓடி வந்தது.

​நடுநடுவே "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" என்ற ரேஞ்சில் சில தலைப்புகளும் தொடராதில்லை ! 'மரணத்தின் நிறம் பச்சை', 'சீற்றத்தின் நிறம் சிகப்பு', 'என் சொக்காயின் நிறம் நீலம்' என்ற ரேஞ்சுக்கு நடுநடுவே டைட்டில்களைப் போட்டு, தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இல்லாவிட்டாலும் ஏதாச்சும் ஒரு வயல்காட்டில் எழுதி வைக்கப் பேர்கள் உருவாக்கிய இஸ்திரி நமக்கு உண்டு. தொடர்ந்த நாட்களில் 'பிரியமுடன் ஒரு பிணையக்கைதி', 'கேடியும் ஒரு கோடியும்', 'தற்செயலாய் ஒரு ஹீரோ' என்றெல்லாம் பயணித்துக் கொண்டிருந்தபோது, another good one என என்னை நினைக்கச் செய்தது 'சர்வமும் நானே' என்ற தலைப்புதான். 

நிஜத்தைச் சொல்வதானால் அந்த சாகசத்திற்கு இந்தத்  தலைப்பானது முழுப் பொருத்தம் என்றெல்லாம் சொல்லவே மாட்டேன். மாறாக அது நமது பயணத்தில் சகலமுமாய் அமைந்து போய்விட்டிருந்த தலைவர் டெக்ஸின் பெருமையைப் பறைசாற்றும் பெயராக நான் பார்த்தேன். And அதே கோணத்தில் நாம் அனைவருமே பார்த்தோம் என்பது அந்த இதழின் smash hit ஸ்டேட்டஸுக்குக் காரணமாகிப்போனது மெய்தானே...? ​'நீதிக்கு நிறம் ஏது..?', 'திரை விலகும் நேரம் இது', 'தடை பல தகர்த்தெறி', 'இது கொலையுதிர்காலம்' என்றெல்லாம் சற்றே வித்தியாசமான titles சகிதம் நமது பயணம் தொடர்ந்தது இந்த இரண்டாவது இன்னிங்ஸின் போது. இப்போதெல்லாம் கதையோடு டிராவல் செய்வது போல், அதே சமயம் தலைப்பிலேயே கதையைப் போட்டு உடைத்துவிடாத பாணியில் டைட்டில்ஸ் இருக்க வேண்டும் என நிரம்பவே மெனக்கெடுகிறோம். இதோ சமீப டெக்ஸ் கதைகளில் கூட கொஞ்சம் வழக்கமான ஆக்ஷன் டெம்ப்ளேட் இல்லாமல் 'என் இனிய பொய்யே', 'உதிரம் பொழியும் நிலவே', 'தலைநகரில் தலைமகன்', 'பனிமண்டல போராளிகள்' ; நித்திரை மறந்த நித்தியன் என்றெல்லாம் வித்தியாசம் காட்ட முனைந்து வருகிறோம். Of course, sometimes we get it right, sometimes we don't. ஆனால் by far இந்த இரண்டாவது இன்னிங்ஸில் நமது பெயர் சூட்டல்கள் துவக்க நாட்களை விட ஒரு படி பெட்டர் என்பதே எனது எண்ணம்.

As titles go, இன்றைக்கு என் தலைக்குள் TOP என்று படும் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன் பாருங்களேன்:

​பிஸ்டலுக்கு பிரியாவிடை

​சாம்பலின் சங்கீதம்

​நிஜங்களின் நிசப்தம்

​கர்மாவின் சாலையில்

​மறந்தும் மறவாதே

​கலாஷ்னிகோவ் காதல்

நித்திரை மறந்த நியூ யார்க் 

என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்

​உங்களது நினைவில் நிழலாடும் தலைப்புகளைப் பற்றி சொன்னீர்களெனில் இந்த பதிவை கொஞ்சம் களைகட்ட செய்யலாம் மக்களே. Why not give it a try?

And - இரத்தப் படலம் சாகசத்தை முழுமையையும் இன்று அறிவீர்கள் ! இந்த நொடியில் - அதற்கு சாலச் சிறந்த தலைப்பாய் ஒன்றைச் சூட்டுவதாயின் உங்க சாய்ஸ் என்னவாக இருக்கும் guys ? ஆளுக்கு மூன்றே பெயர்கள் தான் !! ஓ.கே.வா ?

அப்புறம் செப்டெம்பர் புக்ஸ் எல்லாமே பைண்டிங்கில் உள்ளன folks - புதன் or வியாழனன்று கிளம்பிடும் ! இதோ - அவற்றின் அட்டைப்பட ப்ரீவியூஸ் மாத்திரம் இங்கே ! புக்ஸ் புறப்படும் தினத்தன்று அவற்றின் களங்கள் பற்றி எழுதுகிறேன் - இந்தப் பதிவினை இதற்கு மேலும் நீட்டிக்க தம் லேது !! 




Bye all...see you around ! பூனைமண்டை டிடெக்டிவ் சாரோடு இந்த ஞாயிறு பயணிக்க வேண்டியுள்ளது !! Have a lovely Sunday !!


Saturday, August 22, 2026

பதிவின் பாதையில்... !

 நண்பர்களே, 

வணக்கம். "இன்று பதிவுக்  கிழமை". இந்த வரியை blog-லும் சரி, வாட்சப் குழுக்களிலும் சரி, வாரந்தோறும் சனியன்று  பார்த்து வருகிறோம் தான். And சமீப வாரங்களாகவே "போதுமே இந்தப்  பதிவுப்  பக்கம்" என்று நான் சண்டித்தணம் செய்து வருவதும் தெரிந்த விஷயமே. In fact ஒரு ஈரோடு வாசக சந்திப்புக்குப்  பிற்பாடு பதிவினைப்  போட நான் முனையாதது இதுவே முதல்முறை. So எந்த அளவிற்கு ஆளில்லா டீக்கடையில் ராகி மால்ட் ஆத்தும் பணியானது அலுத்துவிட்டது என்பது புரிந்திருக்கும். But "நாங்க பதில் போடாட்டியும் படிக்கத்தான் செய்யறோம்பு . So எழுதுவதைத்  தொடரு...!" என்று நண்பர்கள் ஆங்காங்கே பதிவிடுவதையும் பார்க்கத்தான் செய்கிறேன். 

என் பார்வையில் நிலவரம் ரொம்பவே simple folks. உலகமே இன்றைக்கு fast forward-ல் இயங்கிக் கொண்டிருக்கும் போது, காமிக்ஸ் சார்ந்த எல்லாவுமே ஒரு time loop-ல் சிக்கி அதே இடத்தில் நிலைகொண்டிருப்பது சாத்தியமே அல்ல என்பதை நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பாகவே உணர்ந்தும் புரிந்தும் கொண்டேன். And இது குறித்து எவ்வவித வருத்தங்களும், விசனங்களும் என்னுள் கிடையாது. ஏனெனில் காதில் தக்காளி சட்னியைக்  கசிய விடும் அந்தப்  பழமொழி சொல்வது போல "மாற்றம் ஒன்றே மாறாதது" அல்லவா ? So 2012 முதலாய் நாம் கூடி, கும்மியடித்து வரும் இந்தப் பதிவுப்  பக்கத்தில், நாட்களின் ஓட்டத்தோடு சற்றே அயர்வும்,  நேரமின்மை கொணரும் பொறுமையின்மையும்  குடி புகுந்தது வியப்பு தரும் சமாச்சாரம் அல்ல தானே? ஒரு பதிவை எழுதிட, டைப் அடித்திட ஆகும் நேரமானது கிட்டத்தட்ட ஒரு 48 பக்க லக்கி லூக் கதையை எடிட் செய்வதற்கு அவசியமாகும் அவகாசத்திற்கு இணையானது. And இந்த உழைப்பு புஸ்ஸாகிப் போகும் போது - "போதுமே இந்த மெனக்கெடல் !"  என்று தோன்றுவது இயல்பு தானே  ?  நண்பர்களோடு ஒரு bus பயணம் போகும்போது பேசிக்கொண்டே போவதைப் போலானது இந்தப் பதிவு என்பது எனது பலகாலத்து அபிப்பிராயம். உடன் பயணிப்போரும் பேசிக்  கொண்டே வரும் வரைக்கும் நடுவில் இருப்பவனுக்கு  அலுப்புத்  தட்டாது தான் ! ஆனால் அருகே அமர்ந்திருப்போர் கண் அயர்ந்து விட்டால் லூசாட்டம் ஒண்டியாய்ப்  பேசிக்கொண்டே போவது சுகப்படாது அல்லவா? எனது நிலையும் exactly the same guys. நானாகவே சிரித்து, நானாகவே வருந்தி, நானாகவே சிலாகித்து, நானாகவே வீட்டில் போய் கட்டையைக் கிடத்துவதற்குப்  பதிலாய் கம்யூனிட்டியில் உங்களோடு கரம் கோர்த்து, கும்மியடித்துவிட்டுப் போகலாமே என்பதே எனது எண்ணமாக இருந்து வந்துள்ளது. இதோ - கடந்த ஓரிரு நாட்களிலேயே கணிசமான முக்கிய வினாக்களை அங்கு முன்வைத்து உங்களின் பதில்களையும் பெற்றுக்கொள்ள முடிந்திருந்ததே ? அந்த விதத்தில் blog கொஞ்சம் பழைய அம்பாஸடர் வண்டியைப் போலானது தான் - மறுப்பதற்கில்லை !

"சரி... ரைட்...! புரியுது உன் நிலைப்பாடு. அப்புறம் இந்த பதிவு எதுக்குடா தம்பி ?"  என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை ! ஆபிஸில் ஒரு சமீப மதிய பொழுதில் நிகழ்ந்ததொரு சமாச்சாரம் has a role in this. வழக்கம் போல நம்மவர்கள் போனில் பிஸியாகியிருக்க, நான் உலாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது பரபரவென சைக்கிளில் ஒரு பரிச்சயமான உருவம் வந்திறங்கியது. அது வேறு யாருமல்ல நமது மூத்த வாசகரும், சிவகாசியின் மூத்த மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் பாலசுப்பிரமணியன் அவர்களே. கிட்டத்தட்ட நாம் கடை திறந்த 1984 முதலாய், லயனின் அதிதீவிர அபிமானி அவர் என்று சொல்வது ஒரு understatement தான். நமது துவக்க நாளது டவுன் ஆபீஸ் அவரது கிளினிக்கிற்கு   ரொம்பவே அருகே என்பதால் தவறாமல் அவரது கம்பவுண்டர் உதவியாளர் மாதாமாதம் நம்ம ஆபீஸில் ஆஜராகி விடுவார் - டாக்டருக்கான இதழ்களை வாங்கிச் செல்ல ! இதழ்களை  வாங்கிப் போன மறுவாரமே, நீல நிற இன்லண்ட் லெட்டரில் டாக்டரின் அலசல்  கடிதமானது, நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட எழுத்துக்களில் வந்து சேரும் ! And அந்தக் கடிதத்தில் இம்மி வெற்றிடமும் இன்றி, ஓரஞ்ச்சாரம் வரை நிறைத்திருக்கும். .​நாம்  சாணித்தாளில் b&w-ல் வெளியிட்டுக்  கொண்டிருந்த நாட்களிலேயே மாய்ந்து மாய்ந்து சிலாகிப்பவர்,  பின்நாட்களில் கலரில், உயர்தரத்தில், தயாரிக்கத் தொடங்கிய பிற்பாடு, ரெகுலராய் அவரே நேரில் வந்து பெற்றுச் செல்வதும் நடைமுறையாகிப் போனது. மாதம்தோறும் ரெகுலராக அவர் வந்தாலும், சில  சமயங்களில் தான் அந்நேரம் நான் ஆபீஸில் இருப்பதுண்டு. அவ்விதம் பார்க்கும் போதெல்லாம்,  அற்புதமான வார்த்தைகளால் மனதை நிறைப்பது நிகழத் தொடங்கியது. "சாரி விஜயன் தபால் எழுத இப்போதெல்லாம் நேரமில்லை...! புக்ஸ் சூப்பர்... தொடருங்கள்.!" என்று அவர் சிரித்த முகத்தோடு சொல்லும்போது, கடுதாசி நின்று போனது  ஒரு குறைபாடாகவே எனக்குத் தோன்றவில்லை தான். இரு வாரங்களுக்கு முன்பாக நிகழ்ந்ததும் மிகச் சரியாக அதுவேதான். பென்ஸ் கார் ஓட்டும் வசதி இருந்தும் அதே சைக்கிளில் இன்னமும் பவனி வரும் டாக்டர் சார் அதே புன்னகையோடு, அதே போல இதழ்களை சிலாகித்துபடி, அதேபோல பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.  அந்த நொடியில்  ஏதோவொரு  பணிக்குள் நான் புகுந்திருந்த, அது அந்நேரம் பெரிதாய் sink in ஆகி இருக்கவில்லை. ஆனால் நேரமின்மை காரணமாய் அவரது அலசல்கள் மட்டுமே தொடரவில்லையே தவிர - வாசிப்பின் மீதிருந்த நேசம் குறையவில்லை என்பது இன்று யோசிக்கும் போது மண்டையில் உரைக்கிறது. And கிட்டத்தட்ட இந்தப்  பதிவு பக்கத்தில் நீங்கள் சொல்லி வருவதும் அதையே தானே ? So கலந்தரையாடல்களில் நீங்கள் கலந்துகொள்ளாவிட்டாலுமே, வாசிக்கத்தான் செய்கிறீர்கள் எனும் போது, மொத்தமாய் கடையைச்  சாத்துவது சரியல்ல என்பது புரிகிறது. அதே சமயம் - முன்போலவே வாராவாரம் பதிவுகளைப் போட்டுத் தாக்குவது என்பதுமே  இந்த fastforward யுகத்தில் ஓவர்கில் ஆகிவிடும் என்று நெருடுகிறது ! So மாதத்தின் இரு வாரங்களில், பதிவுகளை சனியோ, ஞாயிறோ அன்று போடுவதென்று உத்தேசித்துள்ளேன். And maybe ஏதேனும் ஒரு இடைப்பட்ட வாரத்தில்,  பகிர்ந்து கொள்ள எனக்கு வேறு தகவல்கள் இருப்பின், பட்டென்று ஒரு பதிவைப்  புகுத்தி விட்டால் போச்சு.தானே ?  So இந்த நொடியில் இதுவே திட்டமிடல்..!

And பதிவு... பதிவு பற்றிய ஒரு அளவளாவலின் போது, வாடகைச்  சைக்கிளை எடுத்துக்கொண்டு சேரனைப் போல பின்னோக்கிப்  போவது தவிர்க்க முடியா ஒரு காரியமாகிறது Becos 13 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப்  பதிவு என்ன மாதிரியானதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது அந்நாட்களின் veterans-களுக்கு  நன்றாகவே தெரிந்திருக்கும். So சமயம் கிடைக்கும் போது, சந்தர்ப்பம் வாய்க்கும் போது, "பதிவுகளின் பாதையில்..." என்று flashback படலத்தோடு மொக்கை போடுவதாகவும் இருக்கிறேன். 

இங்கு எல்லாமே வேகம் எடுத்தது 2012-ன் மத்தியில் இருந்து தான் என்பது நினைவுள்ளது அதிலும் "என் பெயர் லார்கோ" இதழ் முதற்கொண்டு கலரில்  முற்றிலும் புதுமையான கதை ஜான்ராவினில்  நாம் பயணிக்கத்  துவங்கிய போது, அது குறித்து எழுதியதெல்லாம் நேற்றைய நிகழ்வு போல் நினைவில் உள்ளது. அந்நாட்களின் ஆகப்பெரிய வில்லன் மொக்கையிலும் மொக்கையான 2G Internet தான். சென்னையில் சகோதரியின் வீட்டில் அமர்ந்து கொண்டு laptop-ல் ஒரு வார்த்தையை டைப்  செய்துவிட்டு, அதன் தமிழுரு தலைகாட்டுவதற்குள் பக்கத்துத்  தெருவில் போய் குல்பி ஐஸ் வாங்கிச்  சாப்பிட்டு விட்டே வந்து விடலாம் என்றொரு சூழ்நிலை!! அந்தப்  பதிவுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 9 மணி நேரங்கள் மல்லு கட்டியதெல்லாம் நமது வீர சரித்திரத்தின் ஒரு பக்கம். And அந்நாட்களில் ராக்கூத்து என்பது ஒரு ரெகுலரான  சமாச்சாரம் அடுத்த மாதம் வரவிருக்கும் இதழ்களுக்குப்  பெயர் சூட்டும் படலம் அரங்கேறியதெல்லாம் இங்கே தான் என்பது எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ ? லக்கியுடனான ஆண்டுமலருக்கு  "The New Look Special" என்று பெயர் தந்தீர்கள் ! கேப்டன் ப்ரின்ஸ் & ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் இணைந்து வெளிவந்த டபுள் ஆல்பமுக்கு Double Thrill Special என்று பெயரிட்டீர்கள் ! எமனின் திசை மேற்கு அப்புறம் கேப்டன் டைகரின் சாகசம் இணைந்து வந்ததற்கு The Wild West Special என்றெல்லாம் இங்கு நம்மவர்கள் பெயர் சூட்டி ரகளை செய்தது ஒரு பொற்காலம். And yes, கையைப்  பிடிச்சு இழுத்தியா ? என்று தொட்டதுக்கெல்லாம் சட்டைக்  கிழிப்புகள் அரங்கேறியதுமே அந்நாட்களின் மறக்க இயலா ஜாகஜங்களே !!

உள்ளதைச் சொல்லப் போனால் துவக்க நாட்களில் சமூக வலைத்தளத்  திசைக்கு முற்றிலும் புதியவனான எனக்கு தலையும் புரியவில்லை - தூரும் புரியவில்லை. எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கத் தானே நினைக்கிறோம்.....? அப்புறமும்  மூத்திரச் சந்தின் இரு பக்கங்களுமே சதா காலத்துக்குத் திறந்தே கிடக்கின்றனவே - why ? என்று மண்டையைச் சொறிந்து கொண்டே பாதி நாட்களைக் கடந்திருப்பேன். ஒரு பதிவெல்லாம் வெளியான சற்றைக்கெல்லாம்,  சட்டசபைக்கு tough தரும் பாணியில், பாட்டில்கள் பறக்காத குறையாக அமளிகள் அரங்கேறிட,   கிட்டத்தட்ட 175 பின்னூட்டங்கள்  பதிவான பிற்பாடும்  அந்தப் பதிவையே, முழுசுமாய்த்  தூக்க நேர்ந்ததும் இன்னமும் நினைவில் உள்ளது. 

But பக்காவான சிமெண்ட் கூரையெல்லாம் போடப்பட்டு மூத்திரச் சந்து பிரமாதமாய் கிரகப்பிரவேசம் கண்டதோ - தங்கக் கல்லறையின் கலர் வார்ப்பு அக்டோபர்  2012-ல் வெளியான நாளில் தான். "இன்னாமா நீ ஒரிஜினல் மொழிபெயர்ப்பை மாத்தப் போச்சு ??? இப்போ எழுதியிருப்பது அதே கருணையானந்தமாக இருந்தாலும் சரி - ஒன்ன வெளுக்காமல் விடமாட்டோம் !" என்று தெளிய வைத்துத், தெளிய வைத்துச்  சாத்தியதெல்லாம் மறக்கத்தான் முடியுமா? அதுநாள் வரையிலும் கம்பளத்தில் நம்ம கிட் ஆர்டின்  பறப்பது போலவே, நானும் ஒரு தனி லெவலில்  பறந்து கொண்டிருந்தேன் என்பது தான் நிஜம். "ஆஹா இந்த ராஜவாழ்க்கையை இத்தனை காலமாய் தவற விட்டுவிட்டோமே...!!"  என்ற மிதப்பு கணிசமாய் உள்ளுக்குள் குடியிருந்தது. ஆனால் தங்கக் கல்லறையில் ஒரு புது ஸ்கிரிப்ட் களமிறங்கிய நொடியில் விழுந்த சாத்துக்கள் சலூன் சண்டையில் டெக்சிடம்  எதிராளிகள் வாங்கும் குத்துக்கள் எப்படி இருக்கும் ? என்பதை எனக்குக்  கண் முன்னே கொணர்ந்து காட்டின. ஓஹோ.... இது முழுக்க முழுக்க பறக்கும் பயணம் மட்டுமல்ல - விஜயகாந்த் பாணியில் பறந்து பறந்து லெப்டு கிக் விடும் நம்மாட்களைச்  சமாளிக்க வேண்டிய பயணமுமே கூட என்பதை உணர்ந்த நொடியில் ரெண்டு நாட்களுக்கு ராவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை ! பேசாம ஏதாச்சும் சாக்குப்போக்கு சொல்லிப்புட்டு பிளாக்கை  மொத்தமாகவே காலி பண்ணிப்புடலாமா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது. 

அதேபோல இன்னொரு மறக்க இயலா "செவிளோடு சாத்துப்  படலம்" அரங்கேறியது நமது மதியில்லா மந்திரியின் உபயத்தில்.உங்களில் எத்தனை பேருக்கு அது நினைவுள்ளதோ again தெரியவில்லை ஆனால் ஒரு 16 பக்க மதியில்லா மந்திரி சிறு கதையைத்  தந்துவிட்டு அதனைத்  தமிழாக்கம் செய்து அனுப்பும்படி போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். அந்நாட்களில் ரவுண்டு கட்டி பங்கேற்றோர் எக்கச்சக்கம். ஆனால் எனக்கோ - "இது சூத்தை..... இது நொள்ளை ... இது சரிப்படாது.... இது சுகப்படாது...." என்று அத்தனையையும் கழிக்கும் மனப்பாங்கே ஓங்கி இருந்தது. இன்று யோசித்துப்  பார்க்கையில், 'என்னடா இத்தனை பெரிய பேமானியா இருந்திருக்கே ?' என்று என்னை நானே கேட்டுக்கொள்ளத் தான் தோன்றுகிறது. ஆனால் அன்றைக்கோ ஒட்டுமொத்தமாய் அத்தனை பேரது முயற்சிகளையும் தூக்கிக்  கடாசிவிட்டு, "எதுவும் சரியில்லை - so இதோ நானே எழுதிவிட்டேன் !" என்று எனது வார்ப்பை பப்ளிஷ் செய்திருந்தேன். "ஏண்டா டேய்..... மானாட மயிலாட போட்டிக்கு மேடையில வந்து டான்ஸ் ஆடுறது சுமார் என்றால் நடுவராக இருப்போரே டான்ஸையும் போட்டுவிட்டு, மெடலையும் நெஞ்சில் குத்திக் கொள்வார்களா ?"என்று குமுறிக் குமுறி  எடுத்தது மூத்திரச் சந்தின் வீர வரலாற்றில் இன்னொரு அத்தியாயம். அதன் நீட்சியாக இன்னொரு போட்டியும் நடத்தி, அதில் நம்ம இயவரசர் ஏதோவொரு பரிசை வென்றதெல்லாம் சன்னமாய் ஞாபகமுள்ளது !   

ஆனால் எல்லாமுமே அனலாய்த்  தெறிக்கத் தொடங்கியது 2013 ஜனவரிக்கு வெளியாகவிருந்த நமது Never Before ஸ்பெஷல் சார்ந்த பிரவ்யூக்களை நான் போடத் துவங்கிய பிற்பாடே. 400 ரூபாய் விலையில், ஐந்தோ ஆறோ ஏழோ கதைகளுடன் ஆன ஒரு கதம்ப இதழை அட்டகாசமாய் அறிவித்திருந்து அதற்குள் பேயாய் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அன்றைக்கெல்லாம் எனக்கு வீட்டில் யாரும் கிடையாது. பையன் சென்னையில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்க, வீட்டம்மாவும் அவனுக்கு சமைத்துப் போட சென்னையில் செட்டில்ட். நான் மட்டும் இரு வாரங்களுக்கு ஒருமுறை வார இறுதிகளில் சென்னைக்கு ஷண்டிங் அடித்துக் கொண்டிருப்பேன். So ஆபீஸில் வேலை முடித்துவிட்டு நைட் ஒன்பது மணிவாக்கில் வீட்டுக்குப் போனால் - இன்றைய ரீல்ஸோ, இன்ஸ்டா ஷார்ட்ஸோ, OTT தளங்களோ கிடையவே கிடையாது - பொழுதை ஒப்பேற்ற. ஆக அங்கேயும் கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டு blog-ல் குடியிருப்பதே அந்நாட்களது எனது வாழ்க்கையின் ஒரு முழுமூச்சான அங்கம். And கண்ணிமைக்கும் நொடிக்குள் refresh கொடுத்தால் - ஐந்தோ பத்தோ நண்பர்கள் கமெண்ட்ஸ் போட்டுருப்பார்கள் ! அதற்குப்  பதில் சொல்கிறேன் பேர்வழி என்று அடுத்த புதைகுழிக்குள் காலை விடுவது ; அப்பாலிக்கா அதை வெளியே எடுத்து என் வாய்க்குள் திணித்துக் கொள்வது என்று செம ஜிலோவென  இரவுகள் நகர்வது வாடிக்கை.

அந்த மாதிரியான சூழலில்தான் NBS சார்ந்த பிரிவியூக்களை வாராவாரம் ஒரு நாயகன் என்ற வீதத்தில் போடத் துவங்கியிருந்தேன். And ஒரு பதிவெல்லாம் இரவு இரண்டரை மணிக்கு பூர்த்தி செய்தேன் என்பதும்  நினைவில் உள்ளது. அதைவிடப்  பெரிய கொடுமை - இரண்டரை மணி வரை முழித்திருந்து சீனியர் எடிட்டர் அந்தப்  பதிவை வாசித்ததுதான். ஏனெனில் ஒன்றே முக்காலுக்கு எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது - "என்ன பதிவை இன்னும் காணோம் ?" என்று. சொ 2012 -ன் அந்த நாட்களெல்லாம் முழுநீள ஆக்ஷன் மேளாக்களாகத் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தாலும், வாசிப்பினை  முற்றிலும் இன்னொரு உச்சத்துக்கு இட்டுச் செல்ல, இந்த பிளாக் சார்ந்த activities எந்தளவிற்கு  உதவின - என்பதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. Those were simply unbelivably aweesome days. உங்களுக்கெல்லாம் டிரவுசர் போட்ட பால்யங்களை எண்ணி நோஸ்டால்ஜியா தலைதூக்குகிறதெனில்,  எனது நோஸ்டால்ஜியா நிலை கொண்டிருப்பதெல்லாமே 2012-க்கு பிற்பாடான தினங்களில்தான். 

சென்னையில் ஜனவரியில் புத்தக விழாவில் NBS ரிலீஸ் என்று நாம் அடித்த லூட்டிகளும், அந்த இதழை நீங்கள் சிலாகித்த அற்புதங்களும், அதில் வெளியாகியிருந்த ஜில் ஜோர்டன் கதையில் ஏதோ ஒரு பிழை உள்ளது என்று பிரான்சிலிருந்து நண்பர் ஒருவர் ரவுண்டு கட்டிக்  குமுறியதும் 13 ஆண்டுகள்  கழிந்தும், நினைவில் தொடர்கின்றன. நேரம் கிடைத்தால் 2012-ன் இரண்டாம் பாதி சார்ந்த பதிவுகளையும் NBS ரிலீஸ் பதிவினையும் மேய்ந்திட முயற்சி செய்துதான் பாருங்களேன். சர்வநிச்சயமாய் ஒரு அதிரடி டெக்ஸ் சாகசத்தை உடனிருந்து அனுபவித்தது போன்றதான உணர்வு உத்தரவாதம்.

ஒவ்வொரு பதிவுக்கும் அந்நாட்களில் அடித்த லூட்டிகளும், ஷண்டிங்குகளும், பல்டிகளும், ஆயுட்கால நினைவுகள். இன்டர்நெட் இணைப்புகளுக்கு டாங்கிள் ஒன்றை லேப்டாப்பில் சொருகிக் கொண்டு வானம் வழியாய் இன்டர்நெட் சிக்னல் பாய்ந்து நம்மைக்  கரை சேர்த்து விடாதா ? என்ற ஏக்கத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில், பெங்களூருவில், கும்பகோணத்தில், திருச்சியில்,  தேவுடு காத்திருந்திருக்கிறேன். அமெரிக்க, ஐரோப்பிய விமான நிலையங்களின் அநேகங்களில் தவம் கிடந்திருக்கிறேன். அட, ரூமுக்குள் லைட்டைப் போட்டு டைப்படித்தால் பையன் தூங்க முடியாதே - என்று சென்னை ஹோட்டலில்  பாத்ரூமுக்குள், வாஷ்பேசின் ஸ்லாப் மீது ஏறி அமர்ந்தபடிக்கே  அதிகாலை 4 மணிக்கு டைப்படித்திருக்கிறேன் ! 2013 முதல் இஷ்டத்துக்கு ஒவ்வொரு கிழமையில் வெளிவந்து கொண்டிருந்த பதிவுகள், சீராய் ஞாயிறுதோறும் - என்ற discipline தலைதூக்கியது LMS வெளியீட்டுக்கு முன்பாகத்தான். அதுபற்றி இன்னொரு வாரம் சாவகாசமாகப்  பார்ப்போமே ? 

Back to the ground and back to reality - ஆகஸ்ட் மாதத்தின் இதழ்கள் அத்தனையுமே அட்டகாசமாய் விற்பனை கண்டுள்ளது உள்ளமெல்லாம் மகிழ்வூட்டும் சமாச்சாரம். டெக்ஸும், டைகரும் ஒரே மாதத்தில் வெளிவரும்போது பட்டாசுகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை என்பது yet again நிரூபணமாகியுள்ளது. And இம்முறையோ - டெரிஃபிக் டெக்ஸ் தனித்தடத்தின் உபயத்தில், "எல்லையில் ஒரு யுத்தம்"  இரு ஆல்பங்களாய் வெளிவந்திருந்தாலுமே,  have been absolute blockbusters. 2000 வருஷத்தில் வெளியான இந்த சாகசம், 26 ஆண்டுகள் கழிந்திருக்கும்  நிலையில், நம்மில் நிறையப்  பேருக்கு முற்றிலுமாக மறந்திருந்தது obvious. எனக்கெல்லாம் அந்த  மில்லினியம் சூப்பர் ஸ்பெஷல் என்ற பெயரையும், அட்டைப்படத்தையும் தாண்டி சுத்தமாய் எதுவுமே ஞாபகத்தில் தங்கியிருக்கவில்லை. So இதனுள் பணியாற்றும்போது துளி அயர்வும்  இன்றி செம ஜாலியாக ரவுண்டடிக்க முடிந்தது. And அந்நாட்களில் டெக்ஸ் கதைகளில் எக்ஸ்டரா நம்பர்கள் போடும் பழக்கம் இருந்ததில்லை ! டெக்ஸ் & கார்சன் மத்தியிலான உரையாடல்கள் தட்டையாகவே இருப்பதுண்டு ! ஆனால் 2012 முதலாகவே இதை மாற்றியமைக்க ஆரம்பித்து விட்டதால் தயக்கமின்றி மூக்கை உள்ளே புகுத்தியிருந்தேன் & பாராட்டுக்களே பலனாகியிருப்பதில்  ஹேப்பி அண்ணாச்சி ! 

Moving on - இதோ செப்டம்பரிலும் டெக்ஸ் ஒரு யுத்தமிடுகிறார் - இம்முறை எமனுடன் !! 96 பக்கங்களே கொண்ட செம crisp சாகசம் & இந்த நொடியில் அதனுள்ளே தான் பயணம் பண்ணி வருகிறேன். இதெல்லாம் 1990-களில் தம்மாத்துண்டு சைசில் வெளியான black & white ஆல்பம் என்பதால் - கலரில், மினுமினுப்பாய்ப் பார்ப்பது ஒரு அட்டகாச அனுபவமாக இருக்குமென்பது உறுதி !! இதோ - ஒரு பிரிவியூ :


இங்கும் கார்சனுக்கு கோட்  நம்பர்ஸ் போடும் வாய்ப்பு அமைந்துள்ளது - நிச்சயம் ரசிக்குமென்ற நம்பிக்கை உள்ளது ! இங்கொரு சுவாரஸ்ய கொசுறுத் தகவல் - துவக்கத்தில் கொஞ்சம் மித வேகமே காட்டிய TERRIFIC TEX சந்தாத்தடம் - "எல்லையிலொரு யுத்தம்" 2 இதழ்களினையும் பார்த்தான பின்னே சிட்டாய்ப்  பறக்கத் துவங்கிவிட்டது ! காத்திருக்கும் இந்த சிங்கிள் ஆல்பம் அந்த வேகத்துக்கு உரமூட்டும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது ! 

ரைட்டு... காத்திருக்கும் மீதப் பணிகளைக் கவனிக்கப் புறப்படுகிறேன் folks ! நேரம் கிட்டின் - please do write something here ....! Bye all...see you around ! And have a great weekend !