Saturday, January 31, 2026

பிப்ரவரி = fun

நண்பர்களே,

வணக்கம்! புது வருஷம் ஆரம்பித்தது நேற்றைக்குப் போலுள்ளது - ஆனால், அதற்குள்ளாக காலெண்டரில் ஒரு கற்றைக் காகிதங்களைக் கிழித்துவிட்டோம்!  இதோ பிப்ரவரியுமே நாளை கதவைத் தட்டக் காத்துள்ளது! சில தருணங்களில் காலத்தின் இந்த மின்னல்வேக ஓட்டமானது மூச்சிரைக்கச் செய்யத் தவறுவதில்லை! 9 சென்னைப் புத்தக விழா ஸ்பெஷல்ஸ் + 3 ரெகுலர் தடத்தின் இதழ்கள் - ஆக, மொத்தம் ஒரு டஜன் புக்ஸ் ஜனவரிக்குக் கச்சிதமாய் ரெடி பண்ணியாச்சு; and அவற்றின் பெரும் பங்கு ஹிட்ஸ் என்ற மகிழ்வோடு லைட்டா மிதப்பாய் மல்லாந்தால், "தம்பி டேய்.. அடுத்த மாசத்துப் பணிகள் வெயிட்டிங்'' என்று கபாலத்துக்குள் குரல் கேட்கின்றது!  So அடித்துப் பிடித்து ஆண்டின் இரண்டாவது மாதத்துக்கென ரெடியும் ஆகியாச்சு! Here we go with the previews!

எப்போதும் போலவே இன்ன பிற நாயக/ நாயகியரின் ஆல்பங்களை முன்நின்று இழுத்துப் போகும் எஞ்சினாக நிற்பது "தல' டெக்ஸ் தான்! "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று வாசித்திருப்போம்; அதையே நமக்கேற்ப கொஞ்சமாய் tweak செய்வதாக இருப்பின் - "டெக்ஸ் இல்லா மாதம் சப்பையே!'' எனலாம் போலும்! So காத்திருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனுமொரு மார்க்கத்தில் டெக்ஸ் & டீம் ஆஜராகிக் கொண்டே இருப்பார்களென்பது 2026-க்கான நமது தீர்மானங்களுள் பிரதானமானது! அதன் நீட்சியாய்- இதோ நடப்பு வருடத்தின் முதல் டபுள் ஆல்பம்! 224 பக்கங்களில் கதை + 8 பக்கங்களுக்கு ஹாட்லைன்;  வலையி­லிருந்து பதிவு; அடுத்த வெளியீட்டு விபரங்கள் என இம்முறை 232 பக்க இதழாக " என் இனிய பொய்யே' ' தயாராகியுள்ளது! 

டெக்ஸ் கதைகளின் பாணிகளில் ஒருவித ஒற்றுமை இருப்பினும், அவற்றின் படைப்பாளிகளுக்கேற்ப கதைகளில் சன்னமான வேற்றுமைகள் இருப்பதுண்டு! கதாசிரியர் மௌரோ போசெல்லி­ டபுள் பேரல் துப்பாக்கியைப் போலானவர் - செம கமர்ஷியல் கதையையும் உருவாக்க வல்லவர் ; அதே சமயம் இரவுக் கழுகாரையும், டீமையும் ஆர்ஜெண்டினா மண்ணுக்கும், கனேடிய வனாந்திரங்களுக்கும் அனுப்பி நாக்குத் தொங்கப் பாடுபடச் செய்யவும் தெரிந்தவர், ஆனால் Pasquale Ruju போன்ற கதாசியர்கள் அத்தனை கனங்களின்றி yet செமத்தியாக ரசிக்கும் கதைகளைப் படைக்கும் ஆற்றல் கொண்டிருக்கின்றனர்! வாசிக்க எல்லா ரகங்களும் நமக்கு ரம்யமாகவே இருந்தாலும் - பணியாற்றும் சோம்பேறி மாடனின் பார்வையில் அந்த ஜா­லியாய் ஓட்டமெடுக்கும் ரகக் கதைகள் கொஞ்சம் ஸ்பெஷல்! Simply becos மாற்றி எழுதவோ; எடிட் பண்ணவோ அவை ஆகச் சுலபமாய் இருப்பதுண்டு! இந்த பிப்ரவரியும் செம ஜாலி­யாய் ஆந்தை விழியனை வைத்திருக்கும் கதையே! அதென்ன பொய்யில் இனிப்பு? ஜீராவிலே முக்கி எடுத்த பலகாரத்தை மொசுக்கினபடியே எவனோ ஒரு பயபுள்ளை பொய் சொல்­லியிருக்குமோ? என்று நினைக்கத் தோன்றலாம்! மாறாக இந்தக் கதைக்களமே ஒரு பொய்யனைச் சுற்றிச் சுழல்கிறது! ஒரு தாய்ப் பொய் போடும் குட்டிகள் பற்பல பொய்களாய் வளர்ந்து ஒரு பெரும் இடியாப்ப சிக்கலாய் விஸ்வரூபமெடுக்க, நம்மவர்கள் களம் காணும் கட்டாயம் ஏற்படுகிறது! ஒரு செமத்தியான ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது- அட்டகாசமான சித்திரங்களில்! Without a doubt இம்மாதத்தின் highlight என்பேன்!


பிப்ரவரியின் அடுத்த Black & white இதழில் நமது ஆதர்ஷ இளவரசியும், கர்ரீஷ் கார்வினும் போட்டுத் தாக்குகின்றனர்! மாடஸ்டியின் சில சாகஸங்கள் சூடு பிடிக்கவே பாதிக் கதை தேவைப்படுவதுண்டு; அப்புறமாய் தான் வண்டி வேகமெடுப்பதுண்டு! ஆனால், இந்த ஆல்பமோ நேர் மாறு! ஆரம்பமே டாப் கியரில் தான்! 1994ல் உருவாக்கப்பட்ட இந்த சாகஸத்தில் பெருசாய் timeline உதைக்கவில்லை! So புராதனம் எட்டிப் பார்க்காது crisp ஆகப் பயணிக்கின்றது கதை! தவிர ஆதிவாசிகள் கெட்டப்பில் இளவரசி+ கர்ரீஷ் கதையின் பாதிக்கும் மேல் சுற்றி வருவதால் கண்களுக்கும் நிரம்பவே குளிர்ச்சி வெயிட்டிங்! And அட்டைப்படமோ ஒரிஜினல் ட்ராயிங்கி­லிருந்து AI அண்ணாத்தேயின் சகாயத்தோடு நிரம்பவே மெருகூட்டப்பட்டதொன்று! பாருங்களேன் மிளிர்ந்திடும் அட்டைப்படத்தினை!





ரெகுலர் தடத்தின் மூன்றாவது இதழோ நமது GEN-Z சந்தாவினில் வெளிவந்திடும் "டைட்டானிக் தாத்தா'' Again அதே காம்பேக்ட் சைஸ்; அற்புதமான சித்திரங்கள் + கலரிங் கலவை! கதையைப் பொறுத்தவரை இது கெக்கே பிக்கே சிரிப்புக்கான களமே ஆகிடாது! ஒரு தாத்தாவும், பேத்தியும் கழிக்கும் அழகான பொழுதுகளே இந்த இதழின் அடிநாதம்! குடும்பத்தின் ஆக மூத்தவரும்; ஆகப் புதியவரும் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான பாசச் சங்கிலி­யே இந்தக் கதை வரிசையின் அழகே! அதுக்காக சென்டிமெண்ட் ரசத்தைப் பிழியும் வேலையெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது!  Is just a beautiful day in the life of a  தாத்தா & பேத்தி! இதனை GEN Z மாத்திரமன்றி- பேரன் பேத்தி எடுத்திருக்கக் கூடிய GEN X ; Y கூட ரசித்திடலாம்! மறவாமல் நீங்களும் படித்துப் பாருங்களேன் folks!




ரெகுலர் தடத்தின் இதழ்கள் நிறைவுற- Electric'80s தனித்தடத்தின் Penultimate இதழாக The King's  ஸ்பெஷல் -2 இம்மாதம் பருமனூட்ட வருகிறது! முதல் ஆல்பத்தைப் போலவே இம்முறையும்  6 க்ளாஸிக் நாயகரின் கதைகளும் இடம்பிடிக்கின்றன! வேதாளர்; ரிப் கிர்பி; & மாண்ட்ரேக்குக்கு தலா இரண்டு கதைகள் & பாக்கிப் பேருக்குத் தலா ஒரு சாகஸம் என்பது ஞாபகம்! அப்புறம் சார்லி­யின் "பேய் தீவு இரகசியம்' ' க்ளாஸிக் மறுபதிப்பு என்பது கொசுறுத் தகவல்! எல்லா சாகஸங்களுமே மித நீளக் கதைகள் தான் & சகலமுமே நேரோ நேரான கோட்டுக் கதைகளே எனும் போது - பாத்திரம் துலக்கிய கையோடோ;  துணிகளை மொட்ட மாடியில் காயப் போட்டு வந்த கையோடோ துளி குழப்பமுமின்றித் தொடர்ந்திட இங்கே சாத்தியமாகிடும்! Of course இந்த ஜாம்பவான்களெல்லாம்  VRS வாங்கிடும் வயதிலான oldies தான்- ஆனால், நமது நினைவலைகளை இதமாய்த் தட்டித் தாலாட்டும் சூட்சமம் அறிந்தவர்கள் என்பதால், இன்னமும் இவர்களுக்கான மவுசு குறையவில்லை தான்! சென்னை புத்தகவிழாவில் The King's ஸ்பெஷல் -1 ஒரு bestseller & மற்ற ரிப் ; சார்லி தொகுப்புகளுமே did pretty decent!! நீலாம்பரி பாணியில் சொல்வதானால் இந்தப் படையப்பர்களுக்கு வயசானாலும், அழகும், ஸ்டைலும் குறைந்தபாடில்லை!

இதோ- அனல் மெய்யாலுமே பறந்திடும் அட்டைப்படப் preview! உட்பக்க ப்ரிவியூக்களுமே கீழே உள்ளன! And முக்கியமான நினைவூட்டல் - இந்தத் தனித்தடத்தில் நீங்கள் subscribe செய்திருக்காத பட்சத்தில் கூரியர் கவர்களில் பருமன் குறைவாகவே இருந்திடும்!




மாடஸ்டி & டெக்ஸ் பைண்டிங்கில் உள்ளனர்! செவ்வாயன்று பணி முடிந்து வந்து சேர்ந்திட- புதன் காலையில் டெஸ்பாட்ச் இருந்திடும்! படுத்தி எடுக்கும் பல்வ­லியும், அதற்கான சிகிச்சைகளும் நடுவாக்கில் சில நாட்களைக் கபளீகரம் செய்துவிட்டதால் அது டெஸ்பாட்ச் தேதியின் தாமதமாகப் பிரதிபலி­த்துவிட்டது! பல் ஆஸ்பத்திரியின் ரிசப்ஷனில் குந்தியபடியே மாடஸ்டியை எடிட் செய்த முதல் பேமானி என்ற பெருமை அநேகமாய் வேர்ல்டு லெவ­லில் அடியேனையே சார்ந்திடும் என்று நினைக்கிறேன்!

அப்புறம் போன பதிவின் நீட்சியாய் மேகி கேரிஸன் & தாத்தாஸ் சார்ந்த limited edition முன்பதிவுக்கான படலம் இன்று முதல் துவக்கம் காண்கிறது! போன பதிவிலேயே இதைப் பற்றி நாக்குத் தொங்க விளக்கியுள்ளதால் இன்னொரு மேஜர் சுந்தர்ராஜன் அவதாருக்கு அவசியமிராதென்று நினைக்கிறேன்! So "The கிராபிக் நாவல் Twins'' உங்களது  ஆதரவை எதிர்நோக்கி வெயிட்டிங்! 60 நாட்களின் முன்பதிவுச் சாளரம் சரியாக இருக்குமென்ற நம்பிக்கையோடு களம் காண்கிறோம்! So பிப்ரவரி & மார்ச்சில் முன்பதிவுகள் & ஏப்ர­லில் தயாரிப்பு & மே மாத ஆன்லைன் மேளாவில் ஆஜர் என்பதே இந்த நொடியின் திட்டமிடல்! இந்தப் புது ரூட்டுக்கு எவ்விதம் வரவேற்பு இருக்குமோ? என்ற படபடப்போடு விடை பெறுகிறேன் all!


டின்டினும், ராபினும் ஸகுவாரோவும் ஏக காலத்தில் மேஜையை நிரப்பிக் கிடப்பதால் அவர்களோடு கரணமடிக்க கிளம்புகிறேன்! Bye all.. see you around! Have a fun Sunday.!

Monday, January 26, 2026

ஒரு ஜென் தத்துவமும், ஒரு மாலைப் பதிவும்...!

 நண்பர்களே,

வணக்கம். அப்பப்போ எங்கயாச்சும் ஜென் தத்துவங்கள்னு எதையாச்சும் படிச்சுப் போட்டா, அதை உங்ககிட்டே பகுமானமா இறக்கி வைக்கவொரு வாய்ப்பு கிடைக்காதான்னு மண்டைக்குள்ளே குடைவது வழக்கம். இதோ - ஒரு சமீபத்தைய வாசிப்பை உங்க மடிகளிலே இறக்கி வைக்க லட்டு போல் ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது - இந்தச் சென்னைப் புத்தக விழாவின் நிறைவோடு !! 

ரீல்ஸ் போடும் பொருட்டு ஒரு நதியில் இறங்கி நிக்குறோம்னு கற்பனை பண்ணிக்கோங்களேன்..."அடியேன் தாமிரபரணி ஆத்திலே நிக்கிறேன்...அண்ணாத்தே கூவத்துக்குள்ளே நிக்குறேன்" என்று குரல் கொடுப்போம் தானே ? ஆனால் ஜென் தத்துவத்தின்படி அது பிழையாம் !! (ஊஹூம்...ரீல்ஸ் போடுறதோ, கூவத்துக்குள்ளாற இறங்குவதோ தப்புன்னு ஜென் சொல்லலே..!) நதியின் உள்ளே கால்பதித்த நொடியினில் நம்மைத் தொட்டுச் சென்ற நீரானது, ஆற்றின் ஓட்டத்தில் அதுக்குள்ளாற அரை மைல் கடந்து போயிருக்கும் எனும் போது - ஆற்றினை ஒரே இடத்தில நிலைகொண்டிருக்கும் ஒரு சமாச்சாரமாகவே வகைப்படுத்த முடியாதாம் ! அது நிரந்தரமாய், இடைவிடாது  ஓடிக் கொண்டேயிருக்கும் ஒரு நிகழ்வாம் ! ஆக "ஒரு மனிதன் ஒரே நதியினில் இரண்டு முறைகள் இறங்கமுடியாது - ஏனெனில் அடுத்த முறை அவன் இறங்கும் போது அது அதே ஆறும் அல்ல, அவன் அதே மனிதனும் அல்ல !" என்கிறது அந்தத் தத்துவம் ! 

எப்புடி - நம்மவர் மெரி தெளிவா மண்டையை மாவு பிசைஞ்சு விட்டுட்டேனா ? லீவு நாளும் அதுவுமாய் உங்களை பரக்க பரக்க முழிக்க வைச்சாச்சா ? இனி ஹேப்பியா மேட்டருக்கு வர்றேன் !!

மாற்றங்கள் இல்லா விஷயங்கள் வாழ்க்கையில் almost எதுவுமே லேது தானே ?! So இந்த காமிக்ஸ் பயணத்திலும் பல மாற்றங்கள் தாமாகவும், சில  மாற்றங்கள் நம்மாலும் நிகழ்ந்திடுவதை தவிர்க்க வழி ஏது ? 2012 முதலாய் மறுவருகை என்ற போது தரத்தில், தயாரிப்பில், தேர்வுகளில், காலங்களுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு மனமுவந்து உட்பட்டோம் - and அது ஒன்றே நம்மை இங்கு வரை இட்டு வந்துள்ளது.  மாறிவரும் உங்களது ரசனைகளுக்கேற்ப நமது தேடல்களை மாற்றியமைத்துக் கொள்ளும் அவசியமானது இடைப்பட்ட காலங்களில் ஓசையின்றி நம்மிடையே நிலைகொண்டது ! மாயாவியையும், ஸ்பைடரையும் நம்பி ஆரம்பித்தவர்கள், நீங்கள் மண்டையில் தட்டும் முன்னமே லார்கோ, ஷெல்டன், தோர்கல், ரூபின், டேங்கோ, ஸ்டெர்ன், பவுன்சர் etc etc என மாற்றங்களைப் புகுத்திக் கொண்டோம் !  இதோ - ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பிற்பாடு கூட நமது வாசிப்பில் ஒரு freshness தொடர்கிறதெனில், அதற்கு இந்த அத்தியாவசிய மாற்றங்களே காரணம் எனலாம். But இந்த நொடிதனில் நமது விற்பனைகள் சார்ந்த பாணிகளில் ஒரு quantum மாற்றத்தினை கொணரும் அவசியம் தலைதூக்கி இருப்பதே இந்தக் குடியரசு தினப் பதிவின் சாரம் !  லீவு நாள் தான் என்பதால் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் நான் கொஞ்சம் அழுந்த விளக்க முற்படுவதை சகித்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன் !!

அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை (printrun) சார்ந்ததே ஒரு இதழின் விலை நிர்ணயம் என்பதை நாமறிவோம் ! So நமது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கிய நாளில் எவ்வளவு புக்ஸ் விற்கும் என்றோ ? இந்த வண்ணம், ஆர்ட்பேப்பர் போன்ற ஆடம்பரங்களை ஏற்றுக் கொள்வீர்களா ? என்றோ நமக்குத் தெரிந்திருக்கவில்லை ! கடைசியாய் black & white இதழ்களை நியூஸ்பிரிண்ட்டில் அச்சிட்டுக் கொண்டு 2007 ..2008 வாக்கில் மொக்கை போட்டுத் திரிந்த நாட்களில், நமது பிரிண்ட்ரன் 4000 பிரதிகள் & அவற்றுள் குறைந்தபட்சம் 1500 கையில் தேங்கி நிற்கும் ! முகவர்களிடமிருந்து 6 மாதங்கள் கழித்து இன்னும் கொஞ்சம் unsold returns ஆகத் திரும்பிடும். So யதார்த்தத்தில் அன்றைக்கு விற்றது தோராயமாய் 2000 பிரதிகளே ! And therefore அதே பழைய கணக்கினை துவக்கப் புள்ளியாகக் கொண்டு 2012 முதலாய் comeback செய்த சமயத்திலும் 2000 பிரதிகள் அச்சிட்டோம் !! ஒரு கடும் காமிக்ஸ் வறட்சிக்குப் பின்பாய் பஞ்சுமிட்டாயோடு ஆஜராகும் சாண்டா க்ளாஸைப் போல நாம் அந்நாட்களில் தென்பட்டிருப்போம் என்பதால் சும்மா தெறி சேல்ஸ் தான் !! இங்கே வலைப்பக்கமும் விற்பனைகளுக்கு செமத்தியான ஒத்தாசை செய்திட, டாப் கியரில் வண்டி ஓட்டமெடுத்து வந்தது ! கண்ணாலம் ஆன புச்சிலே தினப்படி "மானே..தேனே..பொன்மானே.."என்று லட்டர் போடுவதும், குழந்தை, குட்டிகள் ஆன பிற்பாடு "கொஞ்சம் பிசி பேபிம்மா !" என்று குறுந்தகவல் அனுப்புவதும் காலத்தின் கட்டாயங்கள் தானே ?! So அந்தத் துவக்கத்து பெரும் உத்வேகம்...euphoria சற்றே மட்டுப்பட்ட நாட்களில் விற்பனைகளும் மட்டுப்பட்டன, and அதன் நீட்சியாய் நமது பிரின்ட்ரன்னையும் குறைத்துக் கொண்டோம். கொரோனா காலகட்டங்களில் நிலவரம் கலவரமாகிட, கழுதை கட்டெறும்பே ஆகியும் போனது ! பிரிண்ட்ரன் குறையும் பொழுது விலைகள் ஏறுவது தவிர்க்க இயலா நிகழ்வென்பதால் படிப்படியாய் விலைகளும் ஏறிடவே செய்துள்ளன ! Cut to the present now !!

கொரோனாவுக்குப் பின்பான கடந்த சில ஆண்டுகளாகவே  நாம் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையில் சரி பாதியினையே அந்தந்த மாதங்களில் விற்பனை செய்து வருகிறோம் ! சந்தாக்களில் ஒரு நம்பர் ; முகவர்கள் மார்க்கமாய் இன்னொரு நம்பர் ; ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிடும் நண்பர்களின் வாயிலாய் ஒரு நம்பர் & இறுதியாய் புத்தக விழா விற்பனைகளில் மீதம் - என்பதே ஒரு இதழின் விற்பனை முழுமை காண வேண்டிய ரூட் ! Touch wood - உங்கள் அன்புகளின் புண்ணியத்தில் Route 1 (சந்தா) ; Route 2 (ஏஜெண்ட்ஸ்) & Route 3 (ஆன்லைன் வாடிக்கையாளர்கள்) சிக்கலின்றி ஓடி வருகின்றன ! ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகவே அந்த Route # 4 - அதாவது தமிழகப் புத்தக விழாக்களின் விற்பனைகளில் தலைதூக்கி வந்திருக்கும் very selective buying தான் விளிம்புநிலை நாயகர்களை நமக்கொரு தீரா பாரமாக்கியுள்ளது !! 

விளக்கிச் சொல்கிறேனே :

இந்த மாதம் சோடா, டெக்ஸ் & ப்ளூகோட்ஸ் - என்றொரு கூட்டணி என்று வைத்துக் கொள்வோமே ?! வாசிக்கிறீர்களோ, இல்லியோ - by default சந்தாவில் உள்ள அனைவருக்கும் சோடாவும் விற்றிருக்கும், டெக்ஸும் போணியாகி இருக்கும் & ப்ளூகோட்ஸ் புக்ஸும் சேல்ஸ் ஆகியிருக்கும். முகவர்களோ, சோடாவில் கம்மியாய் ஆர்டர் செய்வார்கள், but still கொஞ்சமாகவாச்சும் வாங்கி விடுவார்கள். இதே கதையே - ஆன்லைனில் செலெக்ட் செய்து வாங்கிடும் நண்பர்களின் நிலவரத்திலும்! 'கார்ட்டூன் நமக்கு கொத்தில்லா !" என சிலர் அதைத் தவிர்த்து விடுவர் ! 'சோடா - நீ போடா' என்றும் சொல்லி விடுவர் ! So அங்கேயும் ஒரு கணிச சுணக்கமிருக்கும். இவ்விதம் மிஞ்சிடக்கூடிய கையிருப்பினை ஒவ்வொரு புத்தக விழாவிலும் வாங்கிடும் casual வாசகர்களே காலி செய்ய முன்னெல்லாம் உதவிடுவார்கள் ! ஆக, variety என்ற தேடலில் நான் அடிக்கும் குட்டிக்கர்ணங்களின் பலன்கள் பெரியளவிற்கு சேதாரத்தினை விளைவித்ததில்லை ! Of course - கமான்சே ; லேடி S போலான தொடர்கள் துவக்கம் முதலே கோணலான ரூட்டில் போனது காலத்தின் கோலமென்று மனதைத் தெற்றிக் கொண்டேன் ! ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சிறுநகர / பெருநகர விழாக்களிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே விற்பனை பாணியே தென்படுகிறது !! இந்த நாயகர்களின் ரசிகர்களை சங்கடம் கொள்ளச் செய்வது எனது நோக்கமே அல்ல ; வெற்றியோ-தோல்வியோ, அந்த நாயகப் பெருமக்களை இங்கு அறிமுகம் செய்தவனே நான் தான் எனும் போது அவர்களது முதல் ரசிகனாகவும் நானே இருப்பேன் என்பதில் ரகசியங்கள் ஏது ? Yet - நான் செல்லவிருக்கும் புள்ளி விபரங்கள் யதார்த்தத்தினை பறைசாற்றிட மாத்திரமே :
  • பவுன்சர் : (சாபம் சுமந்த தங்கம்) - சென்னை விழாவில் : 7 பிரதிகள் & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்வை 19 பிரதிகள் !!
  • சாகச வீரர் ரோஜர் (மஞ்சள் நிழல்) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 4 பிரதிகள் !!
  • சோடா (தப்பிச் சென்ற தேவதை) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 7 பிரதிகள் !!
  • சிஸ்கோ (கலாஷ்னிகோவ் காதல்) - சென்னை விழாவில் : 3 பிரதிகள்  & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 20 பிரதிகள் !!
  • வஞ்சம் மறப்பதில்லை (ஜம்போ காமிக்ஸ்) - சென்னை விழாவில் : 1 பிரதி & 2025 -ன் முழுமையிலும் விற்றுள்ளவை 5 பிரதிகள் !!
இந்த ரீதியில் நான் அடுக்கிக் கொண்டே போகலாம் ; ஆனால் காதிலே கசியக்கூடிய தக்காளிச் சட்னியைக் கொண்டு அடையார் ஆனந்த பவனின் டிபன் வேளையையே சமாளித்து விடமுடியும் என்பதால் தொடராது நிறுத்திக் கொள்கிறேன் !

ஒவ்வொரு இதழிலும் குறைந்த பட்சமாய் 300 பிரதிகள் ஸ்டாக்கில் தேங்கி நிற்கிறதென்று வைத்துக் கொள்ளுங்களேன் - ஆண்டொன்றுக்கு நான்கும், ஏழுமாய் கையிருப்புகள் விற்றால் நம்ம கொள்ளுப் பேரப்பிள்ளைகள் காலம் வரைக்கும் இந்த ஸ்டாக் தாக்குப் புடிக்கும் !! இதில் இன்னொரு ஆகப் பெரிய கொடுமையும் உள்ளது !! சரி, ரைட்டு கையில் தேங்கியிருக்கும் புக்ஸை நஷ்டத்துக்குனாலும் விழாக்களுக்கு வரும் ஸ்கூல் பசங்களிடம் விற்பனை செய்திடலாம் ; அது எதிர்காலத்திற்கான முதலீடு என்று எடுத்தும் கொள்ளலாம் என்ற தீர்மானத்தில் செயல்பட்டு வருகின்றோம் - since 2023. ஆனால்...ஆனால்...புள்ளைங்க கிட்டே smurfs விற்கலாம் ; கிளிப்டன் விற்கலாம், பென்னி விற்கலாம், லியனார்டோ தாத்தா விற்கலாம் - ஆனால் பவுன்சரை ??? சோடாவை ??? கிராபிக் நாவல் தாத்தாக்களை ??? அவர்களை எந்தவொரு நிலையிலும் பிள்ளைகளிடம் தர இயலாதெனும் போது - இவை ஈச்ச மரங்களின் கனிகளுக்கு ஈடான வணிகத்துக்கே இனி பயனாகிடும் என்பதே இந்த நொடியில் குமட்டில் குத்துகிறது !! சோடா போன்ற ஒரு noir தொடரினை நிரம்பவே ஆசைகளோடு, அளப்பரிய எதிர்பார்ப்புகளோடு கொணர்ந்தேன் ! But அது பெரியளவில் click ஆகிடவில்லை எனும் போது நோகிட இங்கே யாருமில்லை !! பலருக்கும் அது ரசிக்கவில்லை எனும் போது அதன் பொருட்டு யாரையுமே குறை சொல்லிட இயலாதே ?! Just need to accept it and move on !! 

So இந்த நொடியினில் கையிருப்புகள் சார்ந்த ஒப்பாரியல்ல எனது பதிவின் நோக்கம் ! அவற்றை எவ்விதம் கையாள்வதென்பதை நிதானமாய் யோசித்துக் கொள்வோம் தான் ! மாறாக - இனி வரும் காலங்களில்,  விற்பனையின் செம Elite நாயகப் பெருமக்களைத் தாண்டிய இதர பார்ட்டிகளை எவ்விதம் கையாள்வதோ ? என்பதே எனது விசனம் ! மாயாவியாரும், வேதாளரும், டெக்ஸும், டின்டின்னும், லக்கி லூக்கும், லார்கோவும் இன்னும் சில முக்கியஸ்தர்களும்  சிந்தும் வியர்வைகளின் பலனில் தோர்கல்களும், பவுன்சர்களும்,ஷெல்டன்களும் இனியும் தொடர்ந்தால் நம்ம கிட்டங்கியும் தாங்காது, நம்பள் கி புட்டாணியும் தாங்காது ! கடவுள் புண்ணியத்தில் சாத்தியப்பட்டிருக்கும் ஒரு அட்டகாச சென்னையின் விற்பனை இந்தாண்டினை ஓரளவிற்குக் கடந்திடும் வழியினைக் காட்டியுள்ளது. தற்போதைய திருப்பூர் விழாவும் சரி, தொடரவுள்ள சேலம், நெல்லை, போன்ற விழாக்களிலும் சரி, விற்பனைகளின் முனைப்பு இதே போல தொடர்ந்தால் - ஆண்டின் இறுதி வரைக்கும் ஜானி நீரோவின் பழைய ஜாக்கிகளை இரவல் கோரிடாமலே தப்பித்து விடுவேன் ! அல்லாங்காட்டி தலீவரின் பதுங்குகுழிப் பக்கமாய் வந்து ஒண்ணோ-ரெண்டோ பட்டாபட்டிகளை லவட்டியே தீர வேண்டியிருக்கும் !      

இந்த நொடியினில் நம் முன்னே உள்ள options செம clear :

Option ஒன்று : மருவாதியா விற்பனை கண்டிடும் மகராசர்களோடு மட்டுமே இனி  வண்டியினை ஓட்டிட வேணும் ! விஷப்பரீட்சைகள் ; குட்டிக்கரணங்கள் என்பனவற்றை பேப்பரில் மட்டுமே எழுதி வாசித்துக் கொண்டாக வேண்டும் !

Option இரண்டு : விற்பனையில் ஒத்தாசை அவசியமாகிடும் நாயகப் பெருமக்களை திடு திடுப்பென கைகழுவாது அவர்களோடும் பயணிக்க வேண்டுமெனில் - "சாம்பலின் சங்கீதம்" போல அவர்களது எல்லா இதழ்களுக்குமே முன்பதிவுக்கேற்ப மட்டுமே பிரிண்ட்ரன் & விலைகள் நிர்ணயிக்க வேண்டி வரும் ! இதோ ஒரு உதாரணமே காட்டுகிறேன் :


இதோ - நமது அணிவகுப்பின் மணிமகுடங்களில் சிலவாக நான் கருதிடும் நாயகப் பெருமக்களின் கதைகள் கைவசம் உள்ளன !! ஆனாலும் அவர்களைக் களமிறக்கும் தகிரியம் இப்போதில்லை என்னிடம் ! நார்மலான விலைகளில், நார்மலான எண்ணிக்கையில் இவர்களது ஆல்பங்களை அச்சிட்டால் - இன்பநிதியின் பேரன் அரசியலில் குதிக்கும் நாளிலும் கூட ஸ்டாக் இருக்கும் என்பதே காரணம் ! So ஒவ்வொரு க்வாட்டருக்கும் இது போல் கி.நா.க்களில் ; second-tier கார்ட்டூன்களில் ; தோர்கல் போன்ற fantasy களங்களில் ;  நமது புதுத் தேடல்களில் ; அல்லது மறுபதிப்புகளில்  இருந்து இரு கதைகளைத் தேர்வு செய்து short term முன்பதிவுகளுக்கு அறிவித்தால் - ஒரு குறைந்தபட்ச நம்பர் தேறிடும் சமயத்தில் அதற்கேற்ப அச்சிட்டுக் கொள்ளலாம். And இவற்றில் இம்மி கூட excess பிரதிகள் இருக்காத விதத்தில், "சாம்பலின் சங்கீதம்" இதழுக்குச் செய்தது போல் மிகச் சரியாகத் தயாரித்தோமெனில் ஸ்டாக் எகிறாது & கிட்டங்கியும் குலுங்காது ! But in the bargain - விலைகள் சர்வ நிச்சயமாய் கூடுதலாகவே இருக்க நேரிடும் ! 

"கொஞ்ச காலத்துக்கு இந்தக் கூத்துக்கள் எதுவுமே வாணாமே ? விக்கிற பொஸ்தவங்களை மட்டும் போட்டுப்புட்டு, நிம்மதியா இருப்போம் !" என்று சொன்னீர்களெனில் ஓகே பாஸ் ! என்று கேட்டுக் கொள்வேன் ! மாறாக  - 

"இறங்கி ஆடித்தான் பார்ப்போமே" - என்று சொல்லிடும் பட்சங்களில் நீங்கள் செய்திட வேண்டிய காரியங்கள் மூன்று இருக்கும் : 

முதலாவது - வாங்குவதைத் தவறாது படிக்க நேரம் எடுத்துக் கொள்வது !! நீங்க டெக்ஸை நாலு நாள் முன்னேவோ, பின்னேவோ படிச்சாலும் அவரது அரண் இம்மியும் விரிசல் காணாது ! ஆனால் ஒரு மித வலு நாயகரையும், தலைமாட்டில் தேமே எனக் கிடத்தினால் அது அவரை சீக்கிரமே ICU-விற்கு இட்டுச் சென்று விடும் என்பதே அனுபவப்பாடம் ! 

இரண்டாவது - விலைகளில் இருக்கக்கூடிய jumps-களை பொறுத்துக்க வேண்டி வரும் !! ஓவர்னைட்டில் ஒபாமா ஆவது முழியாங்கண்ணனின் நோக்கமல்ல என்பதை நம்பிட வேண்டி வரும் !  சுணக்கங்களின்றி விற்பனையாகிடும் ஒரு ரெகுலர் நாயகரின் கலர் இதழ் மெயின் தடத்தினில் ரூ.135 விலையில் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்களேன் ; அதே சைசில், அதே பக்கங்களுடன் இந்த முன்பதிவு முயற்சிகளில் வரக்கூடிய ஒரு  கி.நா. maybe ரூ.200 விலைக்கு வர நேரிடலாம் ! So க்ரூப்களில் கும்மியடிக்க முகாந்திரம் தேடும் பெருமக்கள் இத்தகையதொரு வாய்ப்பு கிட்டிடும் பட்சத்தில் செம குஷியாகி விடுவர் என்பதை யூகிக்க முடிகிறது ! But இத்தனை நாட்களாய் நாம் பழகி விட்டிருக்கும் variety-ஐ நிரந்தரமாய் காவு கொடுக்க வேணாமே ? என்ற உந்துதலே இந்த முன்மொழிவுக்கு என்னைத் தூண்டியுள்ளது ! And at this point of time - பகடிகளுமே போரடித்துப் போய்விட்டன ! கிண்டல்களின் புண்ணியத்தில் உரமேறுவதே எனது தனிப்பட்ட அனுபவமும் கூட !

மூன்றாவதான கோரிக்கை : இதில் opt செய்திடும் நண்பர்களின் மத்தியில் ரசனை சார்ந்த ஒற்றுமை அவசியமாகிடும் ! உதாரணத்துக்கு - எனக்கு "மேகி வேணாம்...தாத்தா மட்டும் போதும் !" என்றோ "தாத்தா வேணாம் - மேகி மட்டுமே மதி !" என்றோ pick & choose செய்திடக் கூடாது ! ஒவ்வொரு twin அறிவிப்பும் ஒரு குறிப்பிட்ட கதை பாணியினில் இருந்திடும் ! 
  • "கார்ட்டூன் Twins" என அறிவிக்கும் பட்சத்தில் maybe ஒரு ரின்டின் கேன் + ஒரு மேக் & ஜாக் இருந்திடக்கூடும் ! 
  • "Newbies Twins " என்று அறிவித்தால் - இரு இதழ்களுமே புது வரவுகளாக இருந்திடும் ! 
  • "Classic Twins" என அறிவித்தால் - maybe  இரட்டை வேட்டையரும், ஜான் மாஸ்டரும் இருக்கக் கூடும் ! 
So இந்த முயற்சிகள் எப்போது ; எவ்விதம் வந்தாலும் - இரட்டையர்களாகவே, இணைபிரியாதவைகளாகவே இருந்திடும் ! And ஆரம்பத்தில் ஒரு குறைந்தபட்ச நம்பருக்கென புக்கிங் செய்திட 45 நாட்களின் அவகாசங்கள் தந்து பார்ப்போம்  ; maybe முன்பதிவுகள் அதை விடவும் துரிதமாகவே கிட்டிடுகின்றன எனும் பட்சத்தில் அந்த முன்பதிவுச் சாளரத்தினை 30 நாட்களாகக் குறைத்துக் கொள்வோம் ! 

So இதுவே கொஞ்ச காலமாய் என்னுள் குடியிருந்த சிந்தனைகளின் வெளிப்பாடு ! நடப்பாண்டில் சென்னை விழாவின் விற்பனைகளைப் பார்த்தான பின்னே இது குறித்தொரு இறுதித் தீர்மானத்துக்கு வரலாமென்று நினைத்திருந்தேன். And now that அந்த விபரங்கள் கைக்கு வந்து விட்டன எனும் போது - பந்தை உங்கள் திக்கில் போட்டாச்சு folks !! எவ்விதம் ஆடுவதென்ற தீர்மானம் இனி உங்கள் கைகளில் !

இங்கொரு குறிப்புமே : Just maybe இந்த விஷப்பரீட்சைகள் தேவையற்ற ஆணிகளே என்றே தீர்மானிக்கிறீர்கள் எனும் பட்சத்தில், ரெகுலர் தடத்தினில் வரக்கூடிய பந்தயக் குதிரைகளின் எண்ணிக்கைகளில் எவ்வித குறைகளும் இராது ! ஆண்டுக்கு 30 to 32 புக்ஸ் என்ற அந்த ரெகுலர் சந்தாத் தடத்து நம்பர்கள் தொடர்ந்திடவே செய்யும் ; maybe டெக்ஸுக்கு, லக்கி லூக்குக்கு, டின்டினுக்கு, சிக் பில்லுக்கு, டைலனுக்கு slots கூடுதலாய் ஒதுக்குவோம் ! So மெனுவில் variety மட்டுப்படுமே தவிர, சுவையில் பங்கமிராது !!

Bye all...see you around ! Have a great week going ahead !

P.S : Going ahead, இதுவொரு முக்கிய பதிவு என்பதால் - SAFE OK /  RISK OK என்றேனும் ஏதாச்சுமொரு direction தந்திட நண்பர்கள் அனைவரும் முனைந்தால் நலமென்பேன் ! மௌனமே பெரும்பான்மையின் மொழியெனில் மருவாதியாய் safe option-ஐ தேர்வு செய்வதைத் தவிர்த்து நமக்கு வேறு மார்க்கமிராது !!  Please do write 🙏

Sunday, January 25, 2026

"சென்னை" எனும் சாகசம் !!

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் வருஷத்தின் முதல் மாதம் பல விதங்களில் ஒரு மெகா திருவிழாவாகிப் போகிறது நமக்கு! புத்தம் புதியதொரு ஆண்டு கொண்டு வரும் உத்வேகம் ஒரு பக்கம் ; புத்தம் புது அட்டவணையுடன், புதிதாய் புறப்படும் நமது காமிக்ஸ் பயணத்தின் த்ரில் இன்னொரு பக்கமெனில்... சென்னைப் புத்தகவிழா எனும் அமர்க்களம் is the icing on the cake! ஒவ்வொரு ஜனவரியுமே தலைநகரம் தனது புஜங்களைத் தட்டி, தனது வாங்கும் திறனைக் காட்சிப்படுத்தும் போது "வாவ்வ்!" என்று வாய் பிளக்காதிருக்க முடியாது! And no different this time too! அதுவும் இம்முறை டபுள் ஸ்டால் கிடைக்காத நிலையில் - உள்ளுக்குள் உடுக்கடித்துக் கொண்டிருந்ததெல்லாம் நிஜம் தான்! ஆனால் மெய்யான காமிக்ஸ் ஆர்வலர்களின் தேடல்களுக்கு 'சிங்கிள் - டபுள்' என்ற பேதங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதை ஓங்கி உரக்கப் பதிவு செய்து, நம் வயிற்றில் மில்க் ஷேக் வார்த்துள்ளனர் - பட்டினத்துப் பிரஜைகள் ! சிங்கிள் ஸ்டால் விற்பனைக்கு அநேகமாய் இம்முறை ஒரு புது ரெகார்ட் போட்டிருப்போம் என்பேன் - thanks to your பொம்ம புக் காதல்!

And வழக்கம் போலவே சென்னையில் தென்னையாய் இதம் தந்தோர் யார்? வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்த கையோடு ஊடு திரும்பினோர் யார்? என்பதை அலசிடலாமா? ஜூனியர் எடிட்டரின் ஏற்பாட்டில் பில்லிங் software செம இலகுவாக அமைந்திருப்பதால் - விற்பனைப்  புள்ளி விபரங்களை விரல்நுனியில் அறிவது சுலபமாகியுள்ளது! So ஆரம்பிக்கலாமுங்களா?

"சென்னைக்குப் போவ டிக்கெட் எடுக்குறியோ - இல்லே கக்கூசிலேயே வித்தவுட்டில் போறியோ ? - அது உன்பாடு ; ஆனாக்கா கணிசமான மாயாவி கையிருப்பு இல்லாமல் போகாதே!" என்பது ரொம்பச் சீக்கிரமே நாம் படித்துக் கொண்ட பாடம் என்பதால், இந்த தபா கொஞ்சம் முன்கூட்டியே சுதாரித்திருந்தேன்! And அதன் பலன்களை இந்த நொடியில் என் கையிலுள்ள காகிதம் பறைசாற்றுகிறது! என்ன தான் விடிய விடிய நான் கி.நா; க்ரைம்; த்ரில்லர்; fantasy; கௌபாய் என்று எதை எதையோ promote பண்ணக் கூரை மேல் நின்று கொண்டு கூவித் தீர்த்தாலுமே,  படிய வாரிய தலையோடு வலது கரத்தினை ஒரு இரும்புப் பிரதேசமாக்கியதொரு மனுஷன் 'தேமே' என Black & White-ல் ஆஜராகும் நொடியில், ஒளிவட்டம்  அந்த மனிதன் மீது மட்டுமே நிலைகொள்வது ஒரு வருடாந்திரத் தொடர்கதையாகிறது. அதுவும் இந்தவாட்டி நாம் மறுபதிப்புக்குத் தேர்வு செய்த கதைகளும் சரி, புக் சைஸும் சரி, அட்டைப்படங்களும் சரி, அம்சமாய் அமைந்து போக - "சென்னை '26-ன் TOPSELLER யார்?" என்பதற்கான போட்டி - மாயாவியின் 4 ஆல்பங்களுக்கு இடையே தான்!!

டெக்ஸ் அல்ல; டைகர் அல்ல; XIII அல்ல; டின்டின் அல்ல; லக்கி லுக் அல்ல....... இரும்புக்கை மாயாவியே yet again சென்னை விழாவின் பிரதம நாயகன்! And "மாயாவிக்கோர் மாயாவி" தான் இம்முறை விற்பனையில் டாப் இடத்தைப் பிடித்திருக்கும் இதழ்! தானாய் மாயாவியைக் கற்பனை செய்து ; தானாய் கதை எழுதியதாய் அள்ளி விட்டு வரும் அந்த டைரடக்கரின் பங்களிப்பும் maybe இங்கே கொஞ்சம் இருக்கலாமோ, என்னவோ -  4 மாயாவி மறுபதிப்புகளும் புரட்டியெடுத்துள்ளன விற்பனைகளில்!! "போச்சு... பழசு வந்தாலே புதுசுக்கான ஸ்லாட் போச்சு!" என்று அவ்வப்போது குரல் எழுப்பும் ஆர்வலர்களை ரெண்டு நாட்களுக்கு நம்ம பில்லிங் செக்ஷனில் நிலைகொள்ளச் செய்யனும் என்ற அவா இந்த நொடியில் பீறிடுகிறது! உசிரைக் கொடுத்துப் பணி செய்து உருவாக்கும் புத்தம் புது ஆல்பங்களை விடவும் பத்து மடங்கு - பன்னிரெண்டு மடங்கு கூடுதலாய் மாயாவி மாமா பட்டையைக்  கிளப்புவதை நேரில் பார்க்கும் பின்னரும் அவர்களதுவிசாரங்கள் தொடருமா? என்றறிய ஒரு curiosity!

"சரி, சரி மாயாவிக்கு all time craze; பழசென்றாலும் விற்குது! அதுக்காக பழசுக்கே ஜெயம்ன்னு ஒரேடியாவும் எடுத்துக்க முடியாது தான்!" என்றபடிக்கே அடுத்ததாக யார் ஸ்கோர் செய்துள்ளார் என்று பார்க்க விழைந்த போது எனது ஆந்தை விழிகள் இன்னும் அகலமாய் விரிந்தன! Becos வெயிலோ, மழையோ, குளிரோ - அதே ஜட்டியும், முழுக்கைச் சட்டையும் அந்த முகமூடியுமாய் உலா வரும் வேதாள மாயாத்மா கம்பீரமாய் காட்சி தந்து நிற்கிறார்! நம்பினால் நம்புங்கள் guys - இங்கேயும் சிரிகாகுவா சில்க்கின் இடையளவே வித்தியாசம் - "மாயாவிக்கோர் மாயாவி" இதழின் விற்பனை நம்பருக்கும், வேதாளரின் "சூனியக்காரியின் சாம்ராஜ்யத்தில்" இதழின் விற்பனை நம்பருக்குமிடையில் ! வெறும் 7 பிரதிகளே இடைவெளி இம்முறைக்கான Best seller #1-க்கும #2-க்கும் மத்தியிலான இடைவெளி! இங்கேயுமே கொஞ்சம் முன்னமே சுதாரித்து செப்டம்பரில் "கபால வேட்டை" & ஜனவரிக்கென "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்" இதழ்களைத் தயார் செய்திட்டதால் கானக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமின்றிப் பார்த்துக் கொள்ள முடிந்துள்ளது! And KING'S ஸ்பெஷல் # 1 இதழிலுமே மிரட்டலானதொரு விற்பனை!  Pheww... க்ளாஸிக் பார்ட்டிகள் இந்த மாதிரிக் பின்னியெடுத்தால் புது வரவுகளை அப்புடிக்கா ஓரமாப் போயி கில்லி, பம்பரம் என்று ஏதாச்சும் ஆடச் சொல்லலாம் தான் போலும்!

சரி ரைட்டு - மாயாவி first; வேதாளார் second.... சர்வ நிச்சயமாய் 'தல' டெக்ஸ் தான் மூன்றாமிடத்தில் இருக்கணுமென்ற நம்பிக்கையில் பரிசீலனையைத் தொடர்ந்தால் மறுபடியும் ஒரு LED பல்பு எனக்கு! இங்கேயுமே வெற்றிக் கோப்பை ஒரு க்ளாஸிக் பார்ட்டிக்கே!

And அவருமே கானகத்தைச் சார்ந்தவரே and அவருமே மரத்துக்கு மரம் தாவுபவரே! இல்லீங்கோ - நான் குறிப்பிடுவது நம்ம கோடாரி மாயாத்மாவை அல்ல...! நம்ம அபிமான "கபிஷ்" புள்ளையாண்டனைத் தான்! சென்றாண்டின் அளவுக்கு இல்லையென்றாலும் கபிஷ் ஸ்பெஷல்-3 தான் 2026-ன் விற்பனைகளில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது! சரி..."நோஸ்டால்ஜியா...வீட்டில் பசங்க படிக்க ஏதுவானது; கலரில் அம்சமா இருக்குது என்ற காரணங்களினால் ஸ்கோர் செய்துள்ளது! ப்ரீயா விடு... next நம்ம 'தல' தான் - confirmed"என்றபடிக்கே சேல்ஸ் ரிப்போர்ட்டை மறுக்கா ஸ்கேன் செய்தால், இம்மாம் பெரிய பல்பாய் மறுக்கா கிட்டியது! எனக்கே நம்பச் சிரமமாய் உள்ளது folks - ஆனால் நமது அரைஜாண் வெகுமதி வேட்டையன் "கைப்புள்ள ஜாக்" தான் இம்முறை விற்பனையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளான்! அட்டகாசமான அந்த அட்டைப்படமும், உள்ளே புரட்டும் போது கண்ணைப் பறிக்கும் சித்திரங்களும், வர்ணங்களும் இந்த இதழுக்கு அசாத்தியமானதொரு விற்பனையைத் தந்துள்ளன! Simply amazed!

இப்படியே பல்பு-பல்பா வாங்கிட்டுத் திரிஞ்சா எக்மோர் வாசலிலே ஒரு சாலையோர பல்புக்கடை போட்டிடலாம் என்று பட்டதால் அடுத்து யூகங்கள் எதையும் முன்வைக்காமல் லிஸ்ட்டை மட்டுமே படித்தேன்! ஷப்பாடி.... ஒரு வழியாக TEX வந்தே விட்டாரென்று நிம்மதிப் பிரவாகம் உள்ளுக்குள் குடிகொண்ட நொடியே "நானும் அதே படகிலே தான் வர்றேனுங்க" என்று ஒரு கறுப்புக் கோட் ஆசாமி குரல் கொடுப்பது போலிருந்தது! யாரென்று பார்த்தால் - டைலன் டாக் தான்! "The குட்.. பேட்.. & அக்ளி" இதழும், டெக்ஸின் Best seller இதழும் ஒரே நம்பரில் விற்பனை கண்டுள்ளன்! "ஆஹா!" என்று உள்ளுக்குள் ஒரு வித சன்னமான மகிழ்வு பரவியது! சச்சின் டெண்டுல்கரோ, விராத் கோலியோ, ரோஹித் ஷர்மாவோ பின்னிப் பெடல் எடுத்து டீம் கெலித்தால் அது நார்மலான நிகழ்வு தானே! அதே சமயம் ஒரு புஜாராவோ, ரஹானேயோ, நிதிஷ் ரெட்டியோ சதமடித்து டீம் ஜெயிக்கும் பட்சத்தில் மகிழ்வு கொள்ள கூடுதல் முகாந்திரமாச்சே! அதே போலவே இந்த நொடியில்! 'தல' டெக்ஸ் வழக்கம் போல overall ரகளை செய்திருந்தாலும், மற்றவர்களின் பங்களிப்புகளும் கணிசமாய் இருந்திருப்பது heartening! இம்முறை "மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல் " டாப்கியரில் தான் பயணித்துள்ளது! And "சாபம் வாங்கிய சுரங்கம்" இதழ் தான் டெக்ஸ் வரிசையில் maximum விற்றுள்ளது!

அப்புறம் வழக்கம் போலவே நமது ஒல்லியார் கார்ட்டூன் கொடியை உசத்திப் பிடித்து நிற்கின்றார்! "புதுவரவு" என்ற காரணத்தினால் "கைப்புள்ள ஜாக்" கார்ட்டூன் இதழ்களுள்  #1 இடத்தைப் பிடித்திருக்கலாம்! ஆனால் overall விற்பனையில் லக்கி லூக் எப்போதும் போலவே பட்டியலில் ரொம்பவே உசரத்தில்!

Top perfomers லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பவர் நம்ம உலகம் சுற்றும் டின்டின்! போன வருஷம் போலவே நடப்பாண்டிலும் டின்டின் has done well!

அதிலும் "விண்கல் வேட்டை" + "கேல்குலஸ் படலம்" தெறி விற்பனை! So உலக மொழிகளின் ஒரு ஜாம்பவான் நம் மத்தியிலும் சிறுகச் சிறுக ஒரு சூப்பர் ஸ்டாராய் பரிணாம வளர்ச்சி கண்டு வருவதில் மெய்யான மகிழ்ச்சி!

இன்னொரு solid performer நம்ம பில்லியனர் லார்கோ வின்ச் தான்! சமீபமாய் "போர் கண்ட சிங்கம்" வாயிலாக ஏகமாய் வெளிச்ச வட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் 'W' குழுமத்தின் 'தல' இம்முறை  அழகாய் விற்பனை கண்டுள்ளார். "கான்க்ரீட் கானகம் நியூயார்க்" நீங்கலாய் நம்மிடம் இதர இதழ்கள் எல்லாமே இருப்பதால் செட்டாக வாங்கியோரும் கணிசம். நம்ம B டீமிடம் அந்த  "கா.கா.நி" இருப்பதால் அதை மட்டும் அங்கே வாங்கிவிடும்போது full set சாத்தியமாகி விடுகிறது!

இந்த விழாவின் surprise package யாரென்று சொன்னால் நம்பச் சிரமமாக இருக்கும் தான்! ஓ யெஸ் - ரிப்போர்ட்டர் ஜானி தான் இம்முறை ஆச்சர்யமூட்டும் விற்பனை கண்டுள்ள பார்ட்டி! இதற்கான முழுப் புண்ணியமும் Gosu Vlog-ல் (பரிதாபம்) சுதாகர் & கோபி போட்டிருந்த அந்த காமிக்ஸ் வீடியோவுக்கே சாரும் என்பேன்! "ஜெர்மனியில் ஜானி"..."ஜானிக்கொரு தீக்கனவு" என்று எந்த இதழ்களெல்லாம் வீடியோவில் காட்டினார்களோ - அவையெல்லாமே பட்டையைக் கிளப்பியுள்ளன அடுத்த 4 தினங்களில்! அந்த வீடியோ வந்த ஞாயிறு மதியம் முதலாய், விழா முடிந்த புதன் வரை ஜானி செம பிஸி! பற்றாக்குறைக்கு நமது ஆன்லைன் ஆர்டர்களிலும் திரும்பின திக்கெல்லாம் ஜானி தான்! Gosu vlogs - பெரிய பெரிய நன்றிகள்!

இன்னொரு solid performer - நம்ம தட்டை மூக்குத் தளபதியார் தான்! கைவசமிருப்பது இரண்டே இதழ்கள் தான் என்றாலும் இரண்டுமே வழக்கம் போல 'நச்' என்ற விற்பனை!

வியப்பூட்டும் வகையில் விற்பனைகளில் மேல் அடுக்கில் இடம் பிடித்திருக்கும் அடுத்த நாயகர் நமது மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் தான்! செம காதில் பூ சுத்தும் கதைகள் தான்; அவ்வப்போது ஆளாளுக்குக் கலாய்க்கவும் செய்கிறோம் தான்! ஆனாலும் மனுஷன் விற்பனைகளில் துளியும் அசராமல் சாதனை செய்து வருகிறார் - கடந்த சில வருடங்களாகவே! மேஜிக் ஆப் மாண்ட்ரேக் !

கொஞ்சம் கொஞ்சமாய் லிஸ்டில் கீழே பார்வைகளை நகர்த்தும் போது, மத்திமமான விற்பனை கண்டுள்ள பார்ட்டிகள் அடுத்து தென்படுகின்றனர்!

உட்சிட்டியின் சிறப்புச் சிரிப்புப் போலீசார் அங்கே கரம் தூக்கி நிற்பது தெரிகிறது! ‘பட்டையைக் கிளப்புவோம்’ என்றும் இல்லாமல், ‘குட்டையைக் குழப்புவோம்’ என்று தலைநோவுகளுக்கும் வழி தராது மீடியமாக விற்றுள்ளன சிக் பில் இதழ்கள்! But லக்கி லுக்கிற்கும் இவருக்கும் மத்தியிலான இடைவெளி இன்னுமே பயில்வான் ரங்கநாதனின் இடுப்பளவு என்பேன்!

டீசெண்டான விற்பனை என்ற அணிவகுப்பில் முண்டியடித்தபடியே தலை காட்டும் அடுத்த அணியோ நமது க்ளாஸிக் பார்ட்டீஸ்!

 * CID லாரன்ஸ் & டேவிட்

 * ஜாக்கி நீரோ & ஸ்டெல்லா

ஆகியோர் சிறப்பாக இல்லாவிட்டாலும் ஓ.கே.வாக விற்பனையாகியுள்ளனர். Again, மாயாவிக்கும், அவரது சமகால  நாயகர்களுக்கும் மத்தியிலான இடைவெளி HULK HOGAN-ன் இடுப்பளவையும் விடப்  பன்மடங்கு ஜாஸ்தி என்பேன்! மாயாவியார் இருப்பது குல்பர்காவில் என்றால் பாக்கிப் பேர் இருப்பதோ கன்னியாகுமரியில்! Phewww !!

‘Decent சேல்ஸ்’ அணியில் அடுத்த நபரோ ஒரு அம்மணி! கேரட் கேசத்தோடு, கலக்கலான கலரில் சிகாகோவை தெறிக்க விடும் டிடெக்டிவ் ரூபின், மூன்றாவது ஆண்டாகத் தரமான சம்பவம் செய்துள்ளார். ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் என்ற பொறுப்புக்கு அம்மணி ‘நச்’சென்று நியாயம் செய்து வருகிறார் என்பேன்!

ஒற்றைப்படி கீழே நிற்பதோ நமது அணியின் நிரந்தர இளவரசியாரே! டாக்டர்கள் முதல் டகாட்டி விடுவோர் வரை அனைவருக்கும் ஆதர்ஷ டாவான மாடஸ்டி பிளைசி, இம்முறை தனக்கான விற்பனைகளை கரெக்ட்டாகச் செய்து தந்துள்ளார். And - அந்த மேக்சி சைசில், “ The BLAISE ஸ்பேஷல் ” புருவங்களை உயரச் செய்யும் விற்பனை கண்டுள்ளது !

அடுத்த இடத்திலும் வியப்பில்லை - ஹாரர் கதைகளின் ஒரே பிரதிநிதியான டைலன் டாக், ஓட்டுக்கா பார்க்கையில் அழகாகவே ஸ்கோர் செய்துள்ளார். இவரது கதைகளில் சமீப காலமாய் Adult Content சற்றே தூக்கலாக இருப்பது மட்டும் தான், இவருக்குக் கூடுதல் ஸ்லாட் ஒதுக்க விடாமல் தடுத்து வருகிறது! இல்லையெனில் நிச்சயமாய் he is worth more! என்ன சொல்கிறீர்கள் folks?

நாயகராய் அல்லாது - ஒரு ஜான்ராவாக அடுத்த நிலையில் நிற்கின்றன - டீசெண்ட் விற்பனை பார்த்த இதழ்களின் லிஸ்டில்! And அவை கிராபிக் நாவல்களை கூட்டணி! Black & White கிராபிக் நாவல்கள் இம்முறை ஓரளவுக்கு நன்றாகவே விற்றுள்ளன தான்.ஆனால் கலரிலான கி.நா.களில் ஒரு விதச் சுணக்கம்! Strange!! இங்குமே உங்களது எண்ணங்கள் ப்ளீஸ்?

அடுத்து நான் சுட்டிக் காட்டப் போவது:

 * ⭐️ ஸகுவாரோ (Saguaro)

   &

 * ⭐️ சாமுராய் தாத்தா & டீம்

2025-ல் வெளிவந்து முதல் இதழிலேயே impressive ஆக செயல்பட்டிருக்கும் இந்த இரு ரக அணிகளுமே, முன்செல்லும் பயணங்களுக்குத் தமது டிக்கெட்களை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்! Very decent!

லிஸ்டில் அடுத்த இடத்திலிருப்பவர்கள் மீது தான் இனி பார்வையினை நீள விட வேண்டும்! And இவர்களோ - தென்னையாய் உசரங்களுமின்றி, வெண்ணெய்களாய் சொதப்பல்களுமின்றி ‘பரவாயில்லை’ என்று சொல்லச் செய்துள்ளனர்!

முதலிடம் இந்தப் பிரிவினில் - நம்ம மர்ம மனிதர் மார்ட்டினுக்கே! அமைதியாய், தனக்கென ஒரு சிறு ரசிக வட்டத்தைக் கொண்டிருக்கும் இந்த மனுசன், ஆர்ப்பாட்டம் இல்லாமல் விற்பனைக்கு வழி வகுத்துள்ளார். Again - ஆண்டுக்கொரு slot-க்கு நேர்மையாய் செயல்படும் நாயகர்!

வியப்பு தான் - ராபின் 2.0 கூட இந்த ‘ஓகே’ லிஸ்டில் மட்டுமே இடம் பிடித்திருப்பதில்! சர்வ நிச்சயமாய் இவருக்கு முந்தைய ‘டாப்’ பட்டியலில் இடம் கிட்டியிருக்க வேண்டும் தான்! ஆனால் ஏனோ புரியலை - அந்த அளவிற்கான அதிரடி வரவேற்பில்லை!

மிஸ்டர் நோ கூட “ஓ.கே... ஓ.கே.. விசாரம் கொள்ள ஏதுமில்லை!” என்ற ரேஞ்சுக்கே செயல்பட்டுள்ளார்! இவரைப் பொறுத்தவரை இன்னும் கூடுதலாய் வாய்ப்புகள் வழங்கினால் தான், இவர் முழுமையாய் limelight-க்கு வந்திடுவார் என்று தோன்றுகிறது! அந்த 9 அத்தியாய மெகா சாகஸத்தை துவக்க வேண்டிய வேளை நெருங்கி விட்டது போலவே படுகிறது!

Exactly the very same situation with ZAGOR too !! ஒரு மிரட்டலான குண்டு புக் தேவை போலும் - கோடாலி மாயாத்மாவை வெளிச்ச வட்டத்தில் உறுதியாய் நிலைப்படுத்திட !! திட்டமிடுவோம் - ரொம்பச் சீக்கிரமே !! இத்தனை வீரியமான ஆட்டக்காரரை சோம்பி இருக்க அனுமதிக்கலாகாதே ?!

அடுத்த செட் இதழ்களோ - நமது கதை சொல்லும் காமிக்ஸ் (Fairy Tales)! போன வருஷம் அவை ‘புதுசு’ என்ற காரணத்தினால் செமத்தியாக விற்றிருந்தன! இம்முறை அந்தப் ‘புது இதழ் factor’ இல்லாத காரணத்தால் அதே வேகம் நஹி! ஆனாலும் “கூட்டிக் கழிச்சப் பாரு... கணக்கு சரியா வரும்” என்றே தகவல் சொல்லுகின்றன!

‘பரவாயில்லை’ பட்டியலில் அடுத்த இடமோ நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பிக்கே! இவரது இதழ்கள் நம்மிடம் ரொம்பக் கிடையாதென்பதால், அதன் விற்பனையைப் பொறுத்தே அளவிட முடிகிறது! Nothing to complain at all! 

இனி காத்துள்ள பெயர்களோ - நமக்கு சங்கடத்தை உருவாக்கக் கூடிய சில பல பெயர்கள்! Please remember guys : இது முழுக்கவே ஒற்றைப் புத்தக விழாவின் விற்பனை சார்ந்த புள்ளி விபரங்கள் தான் என்பதால், இதனையே அவர்களது ஆற்றல்கள் மீதான தீர்ப்பாகவோ; முன்செல்லும் பொழுதுகளில் அவர்களது எதிர்காலங்களைத் தீர்மானிக்கும் காரணிகளாகவோ பார்த்திடத் தேவையிராது என்பேன்! அப்புறம் சொதப்பல்ஸ் என்றான பின்னே இவருக்கு என்ன இடம் ? - அவருக்கு அந்த இடம் என்றெல்லாம்  கணக்குப் பார்க்கத் தேவை இல்லை என்று எண்ணினேன்! என்ன - நமக்கான ஏமாற்றத்தை ஆகக் கூடுதலாய் தந்துள்ளது யாரென்று பார்த்தால்:

🔻 SODA

🔻 மேக் & ஜாக் 

🔻 சிஸ்கோ 

🔻 ப்ளுகோட்ஸ் 

🔻 வேய்ன் ஷெல்டன் 

🔻 தோர்கல் 

🔻 ஸ்பூன் & ஒயிட் 

🔻 சுஸ்கி & விஸ்கி 

ஆகியோரே தந்துள்ளனர். அதிலும் சுஸ்கி & விஸ்கி நிலவரமெல்லாம் வெளியே சொல்ல முடியா கலவரம்!! அதே கதை தான் ஸ்பூன் & ஒயிட் மற்றும் மேக் & ஜாக் (Mac & Jack) கார்ட்டூன் பார்ட்டிகளுக்கும்! SODA வைப் பொறுத்தவரைக்கும் - சரி, வாணாம், விட்ருவோம் - அழுதுருவேன் !! ஒற்றை விஷயம் மட்டும் ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது : 

எதில் பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு லக்கில் தலை தப்பிவிடும் போலும் - ஆனால் கார்ட்டூன்களில் மட்டும் தெரியாத்தனமாய் 'புதுசு - புத்தம் புதுசு' என்ற விஷபரிட்சைகள் கூடவே கூடாது போலும்! இங்கே விழும் சாத்துக்கள் ஒவ்வொன்றும் டெக்ஸின் டிரேட்மார்க் ‘ணங்’ - ‘சத்’-களை விட வீரியமானவையாக உள்ளன! Phewww!! இனி கார்ட்டூன் களங்கள் ரொம்பவே சின்ன குண்டாவுக்குள் தான் இருந்திட வேணும் போலும்!

ஆக்ஷன் கதைகளிலும் நமது வேய்ன் ஷெல்டன் ; சோடா ஆகியோர் வாங்கி வரும் மதிப்பெண்களைப் பார்க்கும் போது சற்றே கவலையாகத் தானுள்ளது! இவர்கள்  தான் இப்படியென்றால் நம்ம XIII-ன் இதழ்களுமே இம்முறை செம சாத்து வாங்கியுள்ளன! பூஜ்யத்துக்கு மிக அருகில் சேல்ஸ் !! இந்தக் கொடுமையில் 4 ஆண்டுகளின் தரைக்கடிப்  பதுங்குதள ஜாகைக்குப் பிற்பாடு, நமது இரத்தப்படலம் கலர் தொகுப்பானது ‘ஏக் தம்மில்’ இப்போது வெளிவந்துள்ளது! வாங்கி அடுக்கிய சமயம் - பன்மடங்கு விலை பெருகும் என்ற நம்பிக்கை இருந்திருக்குமென்பது உறுதி! ஆனால் நம்மிடமே நண்பர்கள் எக்கச்சக்கமாய் வாங்கி முடித்து விட்டதாலும், நம்மிடம் ஒரு வெளியே தெரியாத நம்பரில் பிரதிகள் இன்னுமுமே இருப்பதாலும் - எதிர்பார்த்த 'ஜாக்பாட்' சாத்தியப்படவில்லை போலும்! So, நமது புக்கிங் ஒரிஜினல் விலைகளுக்கு ஒட்டியதொரு விலையிலேயே பிரதிகள் நீரின் மேற்பரப்புக்கு இப்போது வந்துள்ளன! B இருக்க பயமேன்?!

ரைட்டூ... Yet another விழாவின் நிறைவுடன், நிறைவான விற்பனையுடன், நிறைந்த மனசுடன் விடைபெறுகிறேன் folks!நேற்று முதல் திருப்பூரில் விழா தொடங்கியுள்ளது & காத்திருக்கும் வாரங்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் புத்தக விழாக்கள் களைகட்ட உள்ளன! Hopefully இங்கே ‘சுமார் மூஞ்சிக் குமார்கள்’ அவதாரில் இருந்தோர் அங்கே ஜொலிப்பார்கள் என்று நம்புவோம்!

Bye all.. See you around! ஒரு மினி அறிவிப்போடு நாளை திரும்புகிறேன் ! Have a great long weekend all !!

Thursday, January 22, 2026

வல்லவர்களும் வீழ்வதுண்டு.. 😪

நண்பர்களே,

வணக்கம். வார்த்தை அலங்காரங்களுக்கு இது நேரமல்ல என்பதால் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேனே..... நண்பர் பல்லடம் சரவணக்குமார் நம்மிடமிருந்து விடை பெற்று ஆண்டவனின் பாதங்களில் நிரந்தரமாய் ஐக்கியமாகி விட்டார்....! 

போன டிசம்பர் முதல் தேதியன்று கோவை செல்லும் சாலையில் கார் விபத்துக்கு உள்ளானவர், காரிலிருந்த LPG சிலிண்டர் பற்றிக் கொண்டதில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்தார். தவிர அந்தக் கரும் புகையினை நிறையவே சுவாசித்ததில் அவரது நுரையீரல்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன! கோவையின் 2 பெரிய மருத்துவமனைகளில், பெரும் பொருட்செலவில் குடும்பத்தினர் சிகிச்சை செய்து பார்த்தும், நண்பருக்கு ஒன்றன் பின் ஒன்றாய் இடர்கள் தொடர்ந்த வண்ணமே இருந்து வர, காலதேவனுக்கு மேற்கொண்டும் வாய்தா சொல்ல சாத்தியமாகிடவில்லை. நள்ளிரவுக்கு சற்றே பின்னர் நண்பர் SKP-ன் போராட்டம் ஒரு முற்றுப்புள்ளி கண்டுள்ளது.

இடைப்பட்ட தருணத்தில் அவரது குடும்பத்தாரின் நிதிச்சுமையினை சற்றே மட்டுப்படுத்த நாமெல்லாம் கரம் கோர்த்ததில் ஒரு கண்ணியமான தொகை சாத்தியப்பட்டு இருந்தது. நல்ல சிகிச்சைகளும், நம் அன்பும், பிரார்த்தனைகளும், இறை அருளும் எப்படியேனும் நண்பரை மீட்டுத் தந்து விடுமென்று நம்பிக்கை நிறையவே இருந்தது. ஆனால் கடவுளின் சித்தமோ வேறாக இருந்து விட்டது பெரும் சோகமே!

நண்பரை தனிப்பட்ட முறையில் எனக்கு maybe ஆறோ- ஏழு ஆண்டுகளாகத் தான் தெரியும். திருப்பூர் புத்தக விழாவிற்கு தன் பள்ளிக் குழந்தைகளை இட்டு வந்து, தன் கைக்காசைப் போட்டு காமிக்ஸ் வாங்க ஊக்குவித்து மகிழ்ந்த ஒரு ஆசிரியரைப் பற்றி நம்மாட்கள் சிலாகித்தது தான் சரவணகுமார் பற்றிய எனது முதல் நினைவு! க்ரூப் போட்டோக்களில் ஒரு மலர்ந்த முகமாய் மட்டுமே தொடர்ந்து வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்னே சென்னை புத்தக விழாவுக்கு கிளம்பி வந்த போது தான் நேரில் நான் பார்த்தது! If memory serves me right, அந்த நேரம் நம்மைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரில் நியூஸ் போட்டிருந்தனர் & சரவணகுமாரை பேட்டியும் கண்டிருந்தனர். மிகுந்த அன்போடும், தீரா காமிக்ஸ் காதலோடும், அதி தீவிர அக்கறையோடும் நமது பயணத்தின் ஒவ்வொரு முன்னெடுப்புமே ஜெயம் கண்டிட வேண்டும் என்ற முனைப்பு அவருக்குள் கனன்று வருவதை எனக்கு அன்றே உணரமுடிந்தது. தொடர்ந்த நாட்களில், நான் பதில் போட்டாலும் சரி, போடாது போனாலும் சரி, அவ்வப்போது வாட்சப் சேதிகளின் மார்க்கமாய் டச்சில் இருப்பார்...! தோர்கலின் அசாத்தியக் காதலர் என்ற முறையில் அடிக்கடி அந்தத் தொடரின் லேட்டஸ்ட் updates பற்றி பேசிக் கொண்டிருப்பார். தோர்கல் கதைகள் மீதம் இருப்பவை வருமா சார்- அல்லது மங்களம் பாடிடுவீங்களா? என்பதே நண்பரின் பிரதான கவலை....! தோர்களின் விற்பனை சுணக்கங்கள் பற்றிப் பதிவிடும் போதெல்லாம் நான் தாண்டிப் போயிருந்தாலும், நண்பர் SKP மருகியது நிஜம்..! 

2024 சென்னை Comic Con விழாவிற்கும் அவர் வந்திருந்தார், and டின்டின் in திபேத் இதழின் சிறப்புப் பரிசான நேபால் ட்ரிப் வாய்ப்பு சார்ந்த குலுக்கல் நிகழ்ந்த நொடியில் முன்னே, என்னருகே தான் நின்று கொண்டிருந்தார். நண்பர் சென்னை வெங்கடேஸ்வரனின் புதல்வி டப்பாவினுள் இருந்து ஒரு சீட்டை எடுத்து SPK என்று வாசித்த நொடியில், மெய்யாலுமே வாயடைத்துப் போனார் சரவணகுமார். சந்தோஷத் தகவலை வீட்டாரோடு பகிர்ந்து விட்ட கொஞ்ச நேரம் மௌனமாய் நின்று கொண்டிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னவை என் காதில் இன்னமும் ஒலிக்கின்றது....! "வாழ்க்கையில் எனக்கு இதுவரை எதுவுமே பரிசா கிடைச்சதே கிடையாது சார்... இது தான் என் வாழ்க்கையின் முதல் பரிசு!" என்று சொன்னார். 

தொடர்ந்த வாரங்களில் அந்தப் பயணம் தொடர்பாய் அடிக்கடி தொடர்பில் இருந்தார்... அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதால் நேபாள் போவதற்குக் கூட அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்று முயற்சித்தவர், "அது லேட்டாகும் போல் தெரியுது சார் - நான் வேணும்னா லடாக் போயிட்டு வரட்டுமா? " என்று வினவினார். நாமும் ஓ.கே சொல்ல, நம் பங்களிப்பில் தனது டிக்கெட்டையும், தன் கைக்காசில் தனது வீட்டாருக்கும் டிக்கெட்டும் போட்டு இமய மலைக்கு family trip சென்ற அனுபவத்தினை அத்தனை ஆர்வத்தோடு பகிர்ந்து வருவார் SKP...! அதிலும் நமது டின்டின் இதழை அங்கே பனிச் சிகரத்தில் நண்பர் ஏந்தி நின்ற போட்டோவெல்லாம் நமது ஆயுட்காலப் பொக்கிஷங்களுள் ஒன்று! But வாழ்க்கை எத்தனை ஸ்திரமற்றது என்பதை yet again காணும் போது தலைக்குள் ஒரு வெறுமையே வியாபிக்கின்றது!

எனது தீரா விசனம் நண்பர் பெரிதும் எதிர்பார்த்திருந்த THORGAL SAGA நம் மத்தியில் "விடைகொடு ஆரிசியா" என வெளிவந்திருக்கும் அதே மாதத்தில், அந்த இதழை ரசிக்கும் வாய்ப்பு கூட இல்லாது நண்பரும் விடைபெற்று விட்டதே!! இழப்புகள் இல்லா வாழ்க்கையே கிடையாதென்பது தெரிந்த விஷயமே, ஆனால் அவற்றை அனுபவத்தில் உணரும் ரணம் ஆற நிரம்பவே நாள் பிடிக்கும் போலும்! 

அமைதியாய் துயிலுங்கள் சரவணக்குமார்... இனி ஈரோட்டில் உங்களை சிரித்த முகமாய் பார்க்க முடியாது.... இதோ இரண்டே நாட்களில் துவங்கிடவுள்ள உங்கள் அபிமான திருப்பூர் விழாவிலும் தோர்கலை தூக்கிப் பிடிக்க நீங்கள் இருக்கப் போவதில்லை...! ICU-விலிருந்து வெளிப்பட்ட முதல் நாளே டெக்சின் "வல்லவர்கள் வீழ்வதில்லை" புக்கை கொண்டு வரக் கோரிய உங்களின் டெக்ஸ் நேசம் இனி நமது நினைவுகளில் மட்டுமே தொடர்ந்திடும்! உங்களுக்கு ரொம்பவே பிடித்தமான வைக்கிங் இதிகாசத்து வீரர்களின் சொர்க்கபூமியாம் வால்ஹல்லாவில் இனி உலவுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு 🙏🙏! 

Rest in Eternal Peace my friend!



Sunday, January 11, 2026

Happy NBS Day 😀

நண்பர்களே,

வணக்கம்! நினைவுகள் என்றென்றும் பறவைகளே..! அவை கம்பீரமாய் சிறகுகளை விரிக்கும் போது மலர்வதெல்லமே ரம்யமான, எண்ணற்ற எண்ணச் சிதறல்களே! And இதோ- சென்னைப் புத்தகவிழாவின் 202-6ம் ஆண்டிற்கென சிங்காரச் சென்னையில் குந்தியிருக்கும் இந்த நொடியில் 13 வருஷங்களுக்குப் பின்னே ஞாபகங்கள் திமிறிச் செல்கின்றன.. and பலனாவதோ நமது பயணத்தின் மறக்கவியலா ஒரு மைல்கல் தருணம்! Yes- மிகச் சரியாக 2013-ன் இதே ஜனவரி 11 தேதியன்று தான் நமது NBS (Never Before Special) இதே சென்னையில் இதே YMCA நந்தனம் மைதானத்தில் சுமார் 200 நண்பர்களின் மத்தியில் ரிலீஸ் கண்டது! Phewwww.... என்னவொரு அனுபவமது!!

NBS!! நமது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய பிற்பாடு, வண்டி முற்றிலுமாய் வேறொரு கியரில் பிய்த்துப், பிடுங்கிக் கொண்டு சீறிப் பறப்பதை பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்! ஏதேதோ ஜான்ராக்கள், ஏதேதோ விலைகள் என்று புல்டோசராட்டம் அடித்துத் தூக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் தான்! ஆனால், அதற்கெல்லாமே ஒரு தொடக்கப் புள்ளி இருக்கத் தானே வேணும்? அந்த முதற்புள்ளி தான் நமது NBS!!

நம் மத்தியில் மெகா ஹிட்டாகிப் போயிருக்கும் இதழ்கள் சகலமுமே- ஏதேனுமொரு சோம்பலான நாளில் உங்களை நிமிர்ந்தடிச்சு உட்காரச் செய்தாலென்ன? என்ற சிந்தையின் பலன்களே! மெகா ட்ரீம் ஸ்பெஷல் (MDS) என '90களின் மத்தியில் வெளியான இதழ் தான் இந்த ட்ரெண்டுக்குப் பிள்ளையார் சுழி போட்டுத் தந்த முயற்சி - literally!! ஒரு மதியம் ஆபீஸில் வாய்கிழியக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன்! நமது விற்பனை நிலவரங்களுமே அந்நாட்களில் பதம் தப்பிய மைசூர்பாகாட்டம் கொள கொளவென்றே இருந்தும் வந்தன! அட...எதையாச்சும் கோக்கு மாக்காய் திட்டமிட்டு அந்த மந்த நிலவரத்தை மாற்றியே தீரணுமே? என்று உள்ளுக்குள் ரீங்காரம் கேட்ட நொடியில் ஜனித்தது தான் தொண்ணூறுகளின் அந்த மைல்கல் இதழ்!

2012-ல் நமது மறுவருகை துவங்கிய பின்னேயோ நிலவரத்தில் மாற்றமிருந்தது தான்! களம் செம பரபரப்பாகியிருந்தது & இந்த வலைப்பூவுமே அந்நாட்களில் அனலாய் தகித்துக் கொண்டிருக்க, ஆர்வ மீட்டர்கள் ஒட்டுமொத்தமாகவே ஒரு உச்சத்திலிருந்த காலமது! So என்னையோ- உங்களையோ பரஸ்பரம் உசுப்பிக் கொள்ளவெல்லாம் அந்நேரத்தில் கிஞ்சித்தும் அவசியங்கள் இருந்திருக்கவில்லை! ஆனால், எனது உந்துதலோ வேறொரு காரணத்தின் பொருட்டு!

கலரில், ஆர்ட் பேப்பரில், லார்கோ, கேப்டன் ப்ரின்ஸின் புதுக் கதைகள்; இளம் டைகரின் தெறி கதைகள்; லக்கி லூக் என வூடு கட்டி அடித்துக் கொண்டிருக்க, நீங்களோ புளகாங்கித mode-ல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தீர்கள்! இதையெல்லாம் ஒரு நாளும் firsthand உணர்ந்த அனுபவம் நமக்கு லேது! "அட்டைப் படம் சூப்பர்... ஸ்பைடர் சாகஸம் செம சார்'' என்ற ரீதியிலான போஸ்ட்கார்ட் பாராட்டுக்களே அதுவரை நமக்கான பரிச்சயம்! ரொம்பவே அத்தி பூத்தாற் போலான சந்தர்ப்பங்களில் நண்பர்கள் நம்மைப் பார்க்க வரும் நாட்களில், அவர்களது பாராட்டு மழைகளில் நனைந்தது உண்டு தான்! ஆனால், ஒட்டுப் போட்ட பட்டன் போன டயர்களோடு ஓடி வரும் அரசாங்க பஸ்ஸைப் போல டர்ரான்.. டர்ராண் என்று ஓடி வந்த நம் பதிப்பகப் பிழைப்பானது எத்தனை காலத்துக்குத் தொடருமோ? என்ற கேள்விக்குறி என்னுள்ளே அப்போதெல்லாம் குடியிருப்பது வாடிக்கை! So சந்திக்கும் நண்பர்கள் மகிழ்ச்சிகளைக் கொட்டினாலுமே அதனை முழுமையாய் உள்வாங்கிட என்னால் முடிந்ததில்லை! But இரண்டாம் வருகையின் சில இதழ்களுக்குப் பின்னே, எங்கிருந்தோ மாயாஜாலமாய் பிரசன்னமான மனவுறுதி - "இனி no going back....ever!" என்று காதுக்குள் குரல் கொடுத்த நொடி முதலாய் அந்தக் குற்றவுணர்ச்சி போயிண்டே...போயே போச்சு! So இங்கே blog-ல் அவ்வப்போது கேக் வெட்டிக் கொண்டாடுவது ; அவ்வப்போது நம்மளையே வெட்டிப் படையல் போடுவதென்ற ஜாலியான கேம்கள் சகிதம் ஓட்டமெடுத்து வர, இந்த அன்பின் மழையினில் முழுமையாய் ஐக்கியமாகிடல் சாத்தியமானது! அதன் நீட்சியாய் "இசை வெள்ளத்தில் நனையத் தயாரா??'' என்று கேட்ட காஜல் அகர்வாலைப் போலவே தத்தா புத்தாவென்று எதை- எதையோ செய்தபடியே உங்களை மேற்கொண்டும் ஒரு உச்சபட்ச மகிழ்வை உணரச் செய்ய ஏதேனும் பண்ணியே தீரணுமே என்று கபாலம் கட்டளையிட்டிட அந்தத் தருணத்து ஞானோதயம் தான் NBS!!

நிஜத்தைச் சொல்வதானால் என் தலைக்குள் உதித்தத முதல் combo- மாயாவி+ லாரன்ஸ் டேவிட் (புது கதைகள்)+ ஸ்பைடர் + மாடஸ்டி தான்! VINTAGE STARS பங்கேற்றிடும் ஸ்பெஷல்  கொண்டு fire விடுவது தான் எனது first thought ஆனால்,, அப்போது தான் கலரின் அற்புதங்களை நாமெல்லாம் உணர்ந்திட்டு வந்த நாட்கள் எனும் போது மறுக்கா கறுப்பு வெள்ளையில் பெருசாய் ஈர்ப்பு எழாதென்று மனசுக்குப்பட்டது! So தமிழ் காமிக்ஸ் உலகமானது அந்த VSS பிரளயத்தி­லிருந்து ஜஸ்ட் எஸ்கேப்!

எனது அடுத்த தேர்வோ துளியும் சந்தேகமின்றி லார்கோவாகத் தான் இருந்தார்! 2012-ன் மத்தியில் "என் பெயர் லார்கோ'' என தெனாவட்டாய் அறிமுகம் கண்ட இந்த மனுஷனன் ஓவர்நைட்டில் நம் மத்தியில் ஒபாமாவாகிப் போயிருந்தார் என்ற போது கலருக்கு அவரது அடுத்த சாகஸம் செமத்தியாய் சரிப்படும் என்று நம்பினேன்! 


And மறு நொடியின் தேர்வோ நமது இளம் தளபதியாரே! ரொம்ப முன்னர் Black & white-ல் "இளமையில் கொல்'' என்று நாம் துவங்கியிருந்த "இளம் டைகர்'' தடமானது திருவிழாவில் தொலைந்து போன பிள்ளையைப் போல நடுவழியில் நின்று கொண்டிருப்பது மனதில் நெருடிக் கொண்டேயிருந்தது! தளபதியாரின் ஆல்பத்தினை இந்தப் புது முயற்சிக்குள் இழுத்துப் போட்டால் செம ஸ்டார்பவர் ஏறிப் போகுமென்ற நம்பிக்கை இருந்ததால் ஆட்டோமேடிக் தேர்வானார்!

அடுத்து நமது கார்ட்டூன்களின் தலைமகனார் லக்கி லூக் பக்கமாகவே எனது பார்வை நீண்டது! ஆனால், இந்தத் திட்டமிடலெல்லாம் ஆகஸ்ட் 2012 வாக்கில் நடந்து கொண்டிருக்க, அதற்கு ஒரு மாதம் முன்னே தான் ''The New Look ஸ்பெஷல்'' என்று ஒரு டபுள் லக்கி டமாக்காவைப் போட்டுத் தாக்கியிருந்தோம்! So மறுக்கா, அவரே வேணாமே என்று தயங்கின நொடியில் கரம் உசத்தியோர் நமது உட்சிட்டி கோமாளிகளே! கலரில் சிக் பில் கதைகள் கலக்கலாக இருக்குமென்பதால் அந்த வித்வான்களையும் ஒத்து ஊத அழைத்துக் கொண்டோம்!

எப்போதுமே ஒரு மெகா முயற்சியில் சின்னதாகவேணும் ஒரு X-factor; ஒரு புது வரவு அவசியம் என்பதும் என் துவக்க நாட்கள் முதலான ஒரு நம்பிக்கை! So யாரை இழுத்து வரலாமென்று யோசித்த போது கண்ணில் பட்டவர் தான் நம்ம ஜில் ஜோர்டன்! இவருக்கு நம் மத்தியில் பெருசாய் மவுசு கிளம்பவில்லை என்றாலும் ப்ரான்கோ- பெல்ஜிய படைப்புலகில் இவரொரு ஜாம்பவானின் பிள்ளை! So பெரும் ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் ஜில்லாரைத் தமிழ் பேச அழைத்து வந்தோம்! அதுவும் அந்த முதல் சாகஸத்துக்கு "அலைகளின் ஆலி­ங்கனம்'' என்று நீட்டாகப் பெயர் அமைந்த நொடியில் எனக்குள் ஏகப்பட்ட கலர் கனவுகள்! "ஜில்லார் வரப் போறாரு.. பிரிச்சு மேயத் தான் போறாரு...!'' என்று பாட்டுப் பாடாத குறை தான்!

"எல்லாம் ரைட்டுடா தம்பி.. ஆனாலும், நம்ம க்ளாஸிக் ரசிகர்களுக்குமே கொறிக்க ஏதாச்சும் இருந்தால் தானே பந்தி சிறப்பாகும்?'' என்ற நமைச்சல் உசிரை எடுத்து வந்தது! When in doubt- dial மாயாவி என்பதே என்றென்றும் நமது தாரக மந்திரமாச்சே?! So நீங்க அவசியம் வரணும் சாரே!'' என்று இரும்புக்கரத்தாரையும் Black & white பகுதியின் பிரதிநிதியாக இட்டாந்தோம்!

மண்டைக்குள் ஒரு மூலையில் அந்த VINTAGE STARS ஸ்பெஷல் குடியிருந்து கொண்டேயிருக்க, அவர்களிலி­ருந்து இளவரசியையும் இங்கே அழைத்து வரத் தீர்மானித்தோம்! But அநியாயத்துக்கு அந்த சாகஸத்தில் மாடஸ்டி செம காற்றோட்டமாய் ட்ரெஸ் செய்திருக்க, அந்நாட்களது ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் சுடலமுத்து, தார் சட்டியோடு கோடு போட்ட மேக்ஸிக்குள் அம்மணியை ஐக்கியமாக்கியது தான் பலனாகிப் போனது! அதன் பொருட்டு நண்பர்களுடன் இன்பச் சுற்றுலாவாய் மூ.ச. போனதும் சரி, அங்கிருந்து "ஐயோ.. அம்மா..'' என்ற குரல் ஒலித்ததும் சரி, நமது வீர வரலாற்றின் பசுமையான பக்கங்கள்!

அத்தனையையும் ப்ளான் பண்ணி விட்டு பரபரவென பணி செய்து கொண்டிருந்தோம்! புத்தக அமைப்பு ; costing ; ப்ரிண்ட் ரன் என்று ஏதேதோ யோசனைகள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தாலுமே என்னால் முழுமையாய் பணிக்குள் ஐக்கியமாகிட முடியவில்லை! ரூ.400 என்று விலை வைத்திருக்க, இந்தக் கதைக் கூட்டணி அதற்குப் பற்றாது என்றே எனக்குள் நெருடல்! 

இன்னும் யாரை உள்ளே நுழைக்கலாமென்று பார்த்தால்- அத்தினி பேருமே பல்செட் கட்டக் காத்திருந்த புராதனப் பார்ட்டிகளாகவே தென்பட்டனர்! அப்போதெல்லாம்; நமக்கு பரீட்சார்த்த முயற்சிகள் வீசம்படி எவ்வளவென்று கூடத் தெரியாது! So க்ளாஸிக் நாயகர்; பிரபலமான ஆக்ஷன் நாயகர்கள் என்பதைத் தாண்டி யோசிக்கவே தெரிந்திருக்கவில்லை!

அந்த நொடியில் கண்ணில்பட்டவர் தான் அப்போதைய புதியவரான வேய்ன் ஷெல்டன்!! அவரது முதல் சாகஸத்தின் கோப்புகளைப் பார்க்க முடிந்த போது, விட்டம் வரை விரிந்து போனது வாய்! ஆக்ஷனில் அனல் பறக்க அந்த அசுர ட்ரக்குகள், வாகனங்கள் என ஓவியர் மிரட்டித் தள்ளியிருந்தார்! இலங்கையில் சீதா தேவியாரைக் கண்டு ஆஞ்சநேயர் எம்புட்டு குதுகலி­த்தாரோ- தெரியாது; ஆனால், ஷெல்டனாரை நம்ம NBS கூட்டணிக்குள் புகுத்தும் வாய்ப்பு சாத்தியமே என்பதை உணர்ந்த, நொடியில் கால்கள் தரையில் நிற்கவே மறுத்தன! இவரையும் கடைசி நிமிட addition ஆக உட்புகுத்திய திருப்தியோடு பணிகளில் வேகமெடுத்தோம்!

வாரா வாரம் என்றில்லாது; சிக்கிய சிக்கிய பொழுதுகளில் பதிவுகள் வெளியான நாட்களவை! So ஏதாச்சும் கதையினில் progress எனில் ஒரு பதிவோடு ஆஜராகி விடுவேன்! Blog-ல்லோ "இவனைப் போட்றா.. தம்பி.. அவனைப் போட்றா தம்பி!'' என ஆளாளுக்கு சொக்காய் கிழித்து எதன் பொருட்டோ ஜாலி­யாய் பொழுதுகளைக் கழித்துக் கொண்டிருக்க; நமது NBS பதிவுகளும் ஆர்வ மீட்டர்களை எகிறச் செய்து வந்தன!

அட்டைப்படத்துக்கென டைகர் தான் என்பது தீர்மானமாச்சு; ஆனால், இளம் டைகர் தொடரின் துவக்க ஆல்பங்களது கவர்களெல்லாமே சுமார் ரகமே! So புதுசாய் டிசைன் போட நமது ஆஸ்தான ஓவியர் மாலையப்பனை வரவழைத்து ஏதேதோ கூத்துக்கள் அடித்துப் பார்த்தோம்! எனக்கோ எதிலும் பெருசாய் திருப்தி இல்லை! அப்பாலி­க்கா கிட்டிய டிசைன் தான் தளபதியார் விஷ்ணு சக்கரம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த அந்த அட்டைப்படம்!! அந்த நாட்களின்; அந்த நொடியில், எனக்கு அது "ஜுப்பரப்பு" என்று தோன்றியது & we went ahead with it! ஆனால், அச்சில் கொஞ்சம் சொதப்பி விட்டிருந்தார்கள் - சிகப்பு மட்டும் தேவைக்கதிகமாய் ப்ரிண்ட் ஆகியிருக்க, தளபதியார் நவஹோக்களின் கலரில் இருந்தார்! பயத்தில் குடல் வாய்க்கு வராத குறை தான் எனக்கு! அட்டைக்கென வாங்கியிருந்ததோ செம உசத்தியான ரக imported artcard! So அச்சிட்டதைக் கடாசிவிட்டு மறுக்கா அட்டை வாங்கி, ப்ரிண்ட் பண்ணத் தெம்புமில்லை; தம்முமில்லை! அந்த நொடியில் உதித்தது தான் அந்த dustjacket யோசனை! அதே சித்திரத்தை பேப்பரில் அளவான RED மசியுடன் அச்சிட்டு, புக்கின் மேலே கோர்த்தும் விட்டோம்! So ஒரு சொதப்பலை மறைக்கச் செய்த ஏற்பாடானது இதழுக்கே கூடுதலாய் கெத்து சேர்க்க உதவியதெல்லாம் புனித மனிடோவின் கருணையே!

புக் ரெடியுமாகி, ஆபீஸிற்கு வந்து இறங்கிய தினத்தில் "உபய குஜலோபரி'' என்று நந்தினிக்கு லவ் லெட்டர் எழுதிய அந்நியன் படத்து அம்பி விக்ரம் போல நம்ம நடையில் ஒரு கெத்து கூடியிருந்தது! ஏதோ டின்டினுக்கும், ஆஸ்டெரிக்ஸுக்கும் போட்டியாக பொஸ்தவம் போட்டு விட்டது போல கழுத்தை தினுசு தினுசாய் வலி­த்து புக்கை வெவ்வேறு கோணங்களிலி­ருந்து ரசித்துக் கொண்டிருந்தேன்!

ஜனவரி 11 2013 சனி மாலை சென்னை புத்தகவிழாவில் ரிலீஸ் என்றும் திட்டமிடல்!! ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி + அப்போதைய பணியாள் கணேசன் என்று இருவரும் ஸ்டாலி­ல் இருக்க சீனியர் + ஜுனியர் எடிட்டர் சகிதம் அடியேன் அங்கு ஆஜராவது என்று plan! இதற்கிடையே டிசம்பர் விடுமுறைக்கு சென்னை சென்றிருந்த சமயம் இரவு பாத்ரூம் போன போது அம்மா வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பை உடைத்துக் கொண்டிருக்க, ப்ளேட் வைத்து ஆபரேஷன் செய்திருந்தார்கள்! So அடுத்த இரண்டு வாரங்களுக்காவது பயணம் வேலைக்கு ஆகாது என்பதால் சென்னையிலேயே அம்மாவும், அப்பாவும் தங்கியிருக்க, நானும் ஜுனியரும் 11-ம் தேதிக்கு அங்கே போனோம்!

மாலை 6 மணிக்கு YMCA கிரவுண்டில் இருப்பதென்ற ஏற்பாடு! மூவரும் ஒரு cab பிடித்துக் கிளம்பி "YMCA போங்க"ன்னு சொன்னா- அவர் நேரா வேப்பேரியில் உள்ள YMCAல் கொண்டு போய் இறக்கிவிட்டார்- ஸ்டா­லில் இருந்த பணியாள் கணேசனுக்கு போன் அடித்து- "எந்தப் பக்கமா வரணும்? என்று கேட்டேன்!'' அவரும் ஏதோ சொல்ல அந்த கிரவுண்டுக்குள் போனால் ஏதோவொரு சேட்டு வீட்டுக் கல்யாணத்துக்கு முரட்டுத்தனமான பந்தல் போட்டு சமையல் வேலைகள் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது! "பரால்லி­யே... புக்பேருக்கு முந்திரி ஸ்வீட்லாம் பண்றாங்களே? " என்றபடிக்கு மூவரும் நடந்தால்... "கோன்? கோன்?" என்றபடிக்கே ஒரு சேட்டு தாத்தா வந்தார்! அப்புறம் தான் புரிந்தது புத்தகவிழா நடப்பது நந்தனத்திலுள்ள YMCA மைதானத்தில் என்று! அது கிடக்கு இன்னொரு 8.கி.மீ தொலைவில்! அடிச்சுப் பிடிச்சு, ட்ராபிக்கில் போய்ச் சேரும் போதே மணி 6.30. .. and பெரும் திரளாய் நண்பர்கள்!

ஒரு வழியாய் அதிரும் கரகோஷங்களுக்கு மத்தியில் சீனியர் எடிட்டர் முதல் பிரதியினை ரிலீஸ் செய்ய, புத்தகவிழாவினையே கலங்கடித்த நண்பர்களின் அன்று மாலையின் கொண்டாட்டங்களை ஆயுசுக்கும் மறக்க இயலாது! நாம் அடித்த லூட்டிகள் பற்றி ஏகமாய் புகார்கள் பறக்க புத்தக விழா நிர்வாகத்தினர் கட்டையைக் கொண்டு வந்து சாத்தாத குறை தான்! ஒரு மாதிரியாய் அவர்களிடம் மன்னிப்புக் கோரி அன்றைய பொழுதை முழுமையான மனநிறைவோடு நிறைவுக்குக் கொண்டு வந்ததெல்லாமே awesome ஞாபகங்கள்! இதோ இன்னமும் அந்த 13 வருடங்களுக்கு முன்பான நாளினை நினைவு கூர்ந்திடும் நொடியில் முகம் முழுசும் மலர்ந்திடும் புன்னகையே அதற்கொரு சான்று!

Happy NBS Day Folks !!

உங்களின் NBS நினைவுகள் இருப்பின் பகிர்ந்திடலாமே ப்ளீஸ்?




இன்று மாலை 4.45 மணி முதல் சென்னை ஸ்டா­லில் உங்களைச் சந்திக்கக் காத்திருப்பேன்! Bye all..!! See you around!

Saturday, January 03, 2026

சந்தோஷமெனும் 2025 !!

 நண்பர்களே,

வணக்கம்! புத்தாண்டு நல்வாழ்த்துகள்! டெக்ஸ் வில்லரின் ஆரோக்கியமும், தளபதி டைகரின் மதியூகமும், லக்கி லூக்கின் அதிர்ஷ்டமும், லார்கோவின் குன்றா செல்வமும் இந்தாண்டு முழுக்க உங்களோடு பயணிக்க புனித தேவன் மனிடோ அருள்புரிவாராக!

2026.. ஒரு புது வருஷம்... yet another புதுப் பயணம்!

நிஜத்தைச் சொல்வதானால் இந்த நொடியில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை! 2025 எனும் ஒரு அசாத்திய ஆண்டு இதோ- ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் முற்றுப் பெற்றிருக்க, மண்டையினுள் கலீடாஸ்கோப்பில் தெரிவது போல கலர் கலராய் ஏதேதோ காட்சிகள் கரணமடித்து வருகின்றன! 

பாக்ஸிங் போட்டிகளில் உடல் எடைக்கேற்ப வெவ்வேறு பிரிவுகள் இருப்பதுண்டு!

* 53 கிலோ எடை வரையிலும் உள்ள குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்கும் பிரிவுக்கு Bantamweight என்று பெயர்!

* 61 கிலோ எடை வரை உள்ளோர் Lightweight பிரிவில் மோதுவர்!

* 90 கிலோக்களுக்கு மேலே இருப்போருக்கு Heavyweight பிரிவு!

ரொம்ப ரொம்பச் சொற்பமான போட்டிகளில், கம்மியான எடைப்பிரிவில் உள்ள வீரர்கள் தம்மை விடக் கூடுதல் எடை கொண்ட வீரர்களோடு மோதி வெற்றியும் காண்பதுண்டு! பாக்ஸிங்கில் இதனை "Punching above your weight'' என்பார்கள்! இந்த நொடியினில் எனக்கு அது தான் நினைவுக்கு வருகிறது!

* எலி­க்குட்டி போலானதொரு நிர்வாகக் கட்டமைப்பு...!

* பூனைக்குட்டி போலானதொரு மிதமான பொருளாதார அமைப்பு..!

* சுண்டைக்காய் போலானதொரு விற்பனை அமைப்பு..!

* ஆனால், ஆசைகளும், லட்சியங்களுமோ வானளவு..!

நம்மை நாமே சுருக்கமாய் வர்ணித்துக் கொள்வதாயின் மேற்படி நான்கு வரிகளே போதும்! ஆனாலும், எலி­க்குட்டியாய், பூனைக்குட்டியாய், சுண்டைக்காயாய் இருந்து கொண்டே, கடந்துள்ள 2025-ல் நமது அணி செய்துள்ள சாதனைகளை நெருங்கிட பதிப்புலக ஜாம்பவான்களே தண்ணீர் குடிக்க வேண்டி வருமென்று சொன்னால் மிகையாகாது! Our team has punched way beyond it's weight என்பதே 2025-ஐ நிதானமாய் அசைபோடும் போது மனதில் எழும் முதல் சிந்தனை! இதைக் கொஞ்சம் மனதில் அசைபோட்டுப் பாருங்களேன் : 

"ஒரேயொரு குருக்கள் வர்றார்" - என்ற கதையாக.... 

-ஏப்ரல் முதலே, நமது DTP டீமில் பணியாற்றுவது ஒரேயொரு பெண்மணி   !

-ஊரெல்லாம் சுற்றி வரும் புத்தக விழா கேரவனில் இருப்பதும் ஒரேயொரு பெண்மணி !

-Front office-ல் உங்களது ஆர்டர்களையும், அப்புகளையும் ஒருசேரக் கையாள்வதும்  again ஒரேயொரு பெண்மணி !

-தயாரிப்பிலிருந்து, அச்சிலிருந்து , பைண்டிங்கிலிருந்து சகலத்தையும் ஒருங்கிணைக்க இம்மி கூட formal படிப்போ, பயிற்சியோ இல்லாத ஒரு நபர் !

_இவர்களோடு ஒரேயொரு திறன்கொண்ட, முறையான கல்வி கற்ற ஜூனியர் எடிட்டர் !

-And இவுகளுக்கெல்லாம் பாஸூ என்று சொல்லிக் கொள்ள, இன்னிக்கே ரிட்டையர்மென்ட்டுக்கு ரெடியானதொரு  ஆந்தை விழியன் - இளமை எனும் ஊஞ்சலில் ஆடியபடியே !

இந்த amateur டீம் ஒன்றிணைந்து தயாரித்துள்ள வானவில்லே 2025-ன் ஜாலங்கள் என்பதை எனக்கே நம்ப முடியலை இந்த நொடியினில் ! பீப்பீ ஸ்மர்ஃப் போல இது நம்ம  பீப்பீயை நாமே  ஊதிக் கொள்வது போலி­ருக்கலாம் தான் - ஆனால், 2025-ல் வெளியான 56 இதழ்களும் என் மேஜையில் இறைந்து கிடக்கும் இந்த நொடியில் ஒரு மெலி­தான பெருமிதம் உள்ளாற விரவுவதைத் தவிர்க்க இயலவில்லை! இத்தனை ஆல்பங்களை, இந்த அவகாசத்தினுள், இந்தத் தரத்தில், இந்த சொற்ப சர்குலேஷனோடு, இந்த விலைகளில், இந்த variety சகிதம் வெளியிட எந்தவொரு பிராந்திய மொழிப் பதிப்பகத்திற்கும் "possible நஹி' என்பதை காதுக்குள் ஒரு பட்சி சொல்கிறது!

* கௌபாய்* ஆக்ஷன் * டிடெக்டிவ் * ஹாரர் * கார்ட்டூன் * Fantasy* இருள் களங்கள்* மென்சோகம்  * வரலாறு* சர்வதேச பிசுனஸ் களங்கள்

என இந்தாண்டினில் நாம் அடித்திருக்கும் பல்டிகளின் பரிமாணங்கள் பற்பல..! And அவை ஒவ்வொன்றையுமே ஆரவாரமாய் ரசித்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருக்கும் சிறுவட்டமான உங்களிடம் பீற்றிக் கொள்வதில் தப்பேயில்லை என்றே தோன்றுகிறது- simply becos இது பரஸ்பரம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தருணமாச்சே?!

* வேறு எந்த இந்திய மொழியில் ஒரு வரலாற்று ஆவணத்தை சங்கீதத்தை ரசிக்கும் முனைப்புடன் கொண்டாடுவார்களோ?

* வேறு எந்த இந்திய மொழியில் ஒரு பொழுதுபோக்கு இதழில் - Bitcoin; cryptocurrency என்று எக்னாமிக்ஸ் பாடமெடுப்பதை சகித்துக் கொள்வார்களாம்?

* வேறு எந்த இந்திய மொழியில் ஒரு பரபரப்பான ஆக்ஷன் காமிக்ஸ் நாயகரை Futures Trading; Derivatives என்ற கிறுகிறுக்கும் களங்களில் இறக்கி விடும் லாவகத்தை ஆர்வமாய் உள்வாங்குவார்களாம்?

* வேறு எந்த இந்திய மொழியில் இரும்புக்கை மாயாவியைக் கொண்டாடும் அதே மூச்சினில் சமுராய்களின் vintage காலகட்டத்துக் கதைகளையும் சிலாகித்த கையோடு, "மூன்றாம் தினம்'' என்ற சிண்டைப் பிய்க்கச் செய்யும் இருண்ட களத்தினுள் நடமாடத் துணிவார்களாம்?

So யாருக்கும் கிட்ட வாய்ப்பில்லாத ஒரு unique வாசக வட்டம் நமக்குக் கிட்டியிருக்கும் போது, அவர்கள் முன்னே தைய்யா- தக்கா என்றேனும்  சிக்கிய சிக்கிய டான்ஸ்களையெல்லாம் 56 தபாக்கள்  அவிழ்த்து விட்ட மகிழ்வை உரக்கப் பகிர்வதில் சாமி குற்றமில்லை என்று நினைத்தேன்! So Cheers to us & 2025 folks...! 

இதில் பெரும் கூத்து என்னவென்றால்- ரெகுலர் தடத்திலான 32 புக்ஸ் தவிர்த்த பாக்கி எல்லாமே on the go தீர்மானமானவைகளே! உங்களது உற்சாகங்கள் அசாத்திய ஊக்க சக்திகளாய் செயல்பட்டிட - ஒவ்வொரு "ஆட்றா ராமா.. தாண்ட்றா ராமா'' படலமுமே சித்திரைத் திருவிழாக்களாகிப் போயின! And இந்த நொடியில் நம் முன்னே ""டங்கடி.. டங்கடி..'' என ஆட்டம் போடும் கேள்வியே- ''WHAT NEXT?'' என்பதே! ரெண்டு பந்துகளை சிக்ஸருக்குச் சாத்தின மறுநொடியே அடுத்த பந்தையும் ஸ்டேடியத்தை விட்டே வெளியே சாத்தத் துடிக்கும் பேட்ஸ்மேனின் புஜங்களைப் போல உள்ளுக்குள் அலைபாய்கிறது மனசு! ""இந்த ரோட்டை வாங்கிப் போட்டுப்புடலாமா?'' "இந்த தெருவை வாங்கிப்புடலாமா?'' என பாடாய்ப்படும் கவுண்டராகத் தான் கண்ணுக்கு முன்னே தென்படும் அம்புட்டு மெகா காமிக்ஸ் படைப்புகளையும் பார்வையிடத் தோன்றுகிறது! "அடங்குடா கைப்புள்ள' என்று உள்ளாற ஒரு மூ.ச. அனுபவஸ்தனின் குரல் மட்டும் சன்னமாய் ஒலி­ப்பதால், எனக்கு நானே "தடா' போட்டுக் கொண்டிருக்கிறேன்!

"கைப்புள்ள'' என்ற தலைப்பிலி­ருக்கும் போது, இந்த ஒற்றை விஷயத்தை உட்புகுத்தி விடுகிறேனே folks? 2026-ன் சென்னை புத்தகவிழா ஸ்பெஷல்களுள் ஒன்றாக வரவுள்ள "கைப்புள்ள ஜாக் ஸ்பெஷல்' - மூன்று தினங்களுக்கு முன்னே தான் அச்சாகி என் மேஜைக்கு வந்துள்ளது! சமீப காலங்களில், இதற்கு இணையானதொரு கலர் படைப்பை நாம் பார்த்திருக்கவே மாட்டோம் என்பது தான் என் மண்டைக்குள் ஓடிய முதல் சிந்தனை! லேட்டஸ்ட் லார்கோவோ; டேங்கோவோ; லக்கி லுக்கோ கூட இந்த அரை ஜாண் வெகுமதி வேட்டையனிடம் பிச்சை எடுத்திட வேண்டியதிருக்கும் என்பேன்! சித்திரங்களும்.. கலரிங்கும் வேறொரு லெவலுக்கு இதை இட்டுப் போயிருப்பதாக நினைக்கிறேன்! "கார்ட்டூன் தானே ?" என ஓரம் கட்டினால், நிச்சயமாய் ஒரு அற்புதத்தை மிஸ் செய்தவர்களாகி விடுவீர்கள் !! 

And காத்துள்ள "கர்மாவின் சாலையில்'' கிராபிக் நாவலுமே ஒரு ரவுசான வாசிப்பு அனுபவத்தினை நல்க இருப்பதாய் மனுசுக்குள் ஒரு பீ­லிங்! குறும்படங்கள்; OTT தளங்களில் ரிலீஸ் ஆகும் சில பரீட்சார்த்தத் திரைப்படங்களை Roomcom என்பார்கள்! அதாவது ஒட்டுமொத்தப் படமுமே ஒற்றை அறைக்குள் இருக்கும் மனிதர்களோடே அரங்கேறி முடிந்துவிடும்! இங்கேயோ இதனை Carcom எனலாம் - becos இருளுக்குள், தனிமையில் சீறிச் செல்லும் ஒற்றைக் காருக்குள் அமர்ந்திருக்கும் ஆசாமியே கதையின் சகலமும்! அந்த ஆளரவமற்ற சாலையில் அரங்கேறிடும் பயணத்தில் மனுஷனது வாழ்க்கையே என்னமாய் ரோலர் கோஸ்டராட்டம் ஊசலாடுகிறது என்பதே இந்த ஆல்பத்தின் களம்!! லைட்டாக ஒரேயொரு பக்கத்தினை இங்கே ப்ரிவ்யூ செய்திடும் ஆசையைத் தவிர்க்க இயலவில்லை- so here goes :


இந்த ஆல்பத்தினை "திசைகள் நான்கு'' தனித்தடத்தில் முயற்சித்திடவே எண்ணியிருந்தேன்! ஆனால், அந்த "வாய்க்குள்ளாற கால்'' முயற்சிக்கென ஒரு iconic கதைத் தொடரை shortlist செய்து அவற்றின் உரிமைகளுக்காக வெயிட்டிங்! சொல்லப் போனால் ஒப்புதல் எல்லாம் வந்தாச்சு தான்; ஆனாலும் நமது ரெகுலர் (லக்கி லூக்) சைஸில் அவற்றைப் பிரசுரிக்க கதாசிரியர்+ ஓவியரின் இசைவைத் தெரிந்திடவே வெயிட்டிங்! Maybe.. just maybe இந்த சைஸுக்கு அவர்கள் தயங்கினால், MAXI சைஸில் அந்தத் தொடரினை களமிறக்கிடவும் நாம் தயங்க மாட்டோம்!  கோக்குமாக்கான ஒரு முயற்சிக்கு இதை விடவும் செம பொருத்தமான ஈரோவோ / தொடரோ அமையாது என்பேன் ! Fair chances are that - "இன்னா மேன் தொடர் இது?'' என்று நீங்கள் திகைக்கவும் செய்யலாம் தான்! ஆனால், மதிப்பெண்களையும், விமர்சனங்களையும் எதிர்நோக்கியே பரீட்சை எழுதிப் பழக்கப்பட்ட template-க்கு டாட்டா காட்டிவிட்டு, "நேக்கு புடிச்சது.. நோக்கும் புடிக்குமென்ற நம்பிக்கையில் கொண்டு வந்திருக்கேனாக்கும்!'  என்று "திசைகள் நான்கு'' ரூட்டில் வண்டியை விட எண்ணியுள்ளேன்! So கொஞ்சமே கொஞ்சமாய் வெயிட்டிங் ப்ளீஸ்!

புத்தாண்டு...புத்தாண்டின் முதல் மாதம்

வழக்கம் போலவே 'தல' டெக்ஸ் & டீம் ஆட்டத்தைத் துவக்கித் தருகின்றனர் நமக்கு ! இந்த ஆல்பம் 2024-ல் வந்திருக்க வேண்டியது ; ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போய் நடப்பாண்டில் ஆஜராகியுள்ளது ! செம breezy read என்பதோடு - சித்திரங்களும், மிரட்டும் டிஜிட்டல் கலரிங்கும் இதன் highlights என்பேன் ! அடுத்த மாதம் முதலாய் 224 பக்க டெக்ஸ் டபுள் ஆல்பம் என்ற தடத்துக்குத் திரும்பிடவுள்ளோம் ! 

And காவியத் தலைவன் தோர்கல் - எதிர்பாரா ஹார்ட்கவரில் கச்சிதமாய் உருவாகி இருப்பதாய்த் தோன்றியது ! இது நார்மலான பைண்டிங்கில் வந்திருக்க வேண்டிய இதழே ; moreso ஆண்டின் ஆக பிஸியான தருணத்தில் ஹார்ட்கவர் பைண்டிங் பணிகள் செமத்தியான தாமதம் கண்டிடக்கூடும் எனும் காரணத்தினால் ! ஆனால் தோர்கலின் ஒரு புனர்ஜென்ம முயற்சியானது, பத்தோடு பதினொன்றாய் இருந்திட வேணாமே - என மனசுக்குப் பட்டது ! நமது பைண்டிங் நண்பரும் "நீங்க போடுங்க...எப்படியோ சமாளித்து விடலாம்" என தைரியமூட்டிட - "விடைகொடு ஆரிசியா" அழகாய் அமைந்தே விட்டது ! இதே வரிசையில் உள்ள அடுத்தடுத்த oneshot தோர்கல் சாகசங்களை தொடரவுள்ள ஆண்டுகளில் முயற்சிக்கலாமா - வேணாமா ? என இனிமேல் decide பண்ண வேண்டியது நீங்களே folks !! நிதானமாய் வாசித்து முடித்த பிற்பாடு ஒரு தீர்ப்பைச் சொல்லிப் போடுங்களேன் நாட்டாமைஸ் ?!

என்னைப் பொறுத்தமட்டில் இம்மாதம் ரொம்பவே எதிர்பார்த்திருந்தது GEN Z சந்தாவின் முதல் இதழினையே ! கம்பர் காலத்திலிருந்தே காமிக்ஸ் போட்டு வருவதாக உள்ளாற பீலிங் இருப்பினும், ஒரு புது target audience-க்கு ; ஒரு புது ரூட்டில் ஒரு தனித்தடத்தினை உருவாக்குவது கொஞ்சம் மறந்தே போயிருந்த routine ! நாம் சுட்டு வரும் மாமூலான  தோசைகளிலிருந்து, எல்லா விதங்களிலுமே இந்தப் புது முயற்சியானது மாறுபட்டுத் தெரிந்திட வேணுமே என்பதே எனது பிரதான எண்ணமாக இருந்தது ! அந்தப் படுக்கை வசத்திலான புக் அமைப்பு அதை நோக்கிய முதல் படி ! அப்புறம் பிரெஞ்சு காமிக்ஸ் சமுத்திரத்தினுள் பொறுமையாய் முத்துக் குளித்தால் - ஆதாம் ஏவாளுக்கே சுவாரஸ்யம் தரக்கூடிய கதை வரிசைகள் கிட்டாது போகாதென்ற எனது நம்பிக்கை அடுத்த படியாகிப் போனது ! 'சவ சவ' என நீண்டு செல்லும் கதைகளைத் தந்து, புது வாசக வரவுகளின் பொறுமைகளைச் சோதிக்கலாகாது என்பதில் ஆரம்பம் முதலே தெளிவாக இருந்தேன் ! அதே சமயம் ஒற்றைப் பக்க சுட்டி லக்கி gags ; லியனார்டோ தாத்தா gags போலான சமாச்சாரங்களும் இதற்கு சரிப்படாது என்பதிலும் தெளிவாய் இருந்தேன் ! சிம்பிளான கதைக்களங்களும் அவசியம் ; ஒரு தெளிவான storyline-ம் இருக்கணும் ; எடுத்தால் ஒரே தம்மில் வாசித்து முடிக்கச் செய்யும் ஈர்ப்பும் இருந்திட வேணும் - என்பதே தேவைகள் ! 

"உள்பக்கம் 4 கரண்டி நெய்...வெளிப்பக்கம் மழைச் சாரலாட்டம் பொடி தூவி, ரெட்டு கலர்ல முறுகலா ஒரு ஊத்தப்பம்" என சொல்வது சுலபம் ; ஆனால் அதற்கேற்ப நிஜத்தில் தேடிப் பிடிப்பது சுலபமே அல்ல என்பது களமிறங்கிய பிற்பாடே புரிந்தது ! அமெரிக்க வால்ட் டிஸ்னி கதைகள் ; டாம் & ஜெரி கதைகள் போலானவை இதற்கு கச்சிதமாய்ப் பொருந்திடும் என்பது புரிந்தது ; so அவர்களது கதவுகளை மருவாதியோடு தட்டிப் பார்த்தோம் ! "இன்னா மேன் மேட்டரு ..?" என வினவியோரிடம் நமது கோரிக்கைகளை முன்வைத்தோம் ! "அல்லாம் பண்ணிக்கலாம் மேன்.....வருஷத்துக்கு இத்தினி பொஸ்தவம் மினிமம் போடணும்....இத்தினி லகரங்கள் ராயல்டியாக கட்டணும் ! காண்டிராக்ட் போட்றலாமா ?" என பதிலளித்தனர் ! "இதோ - தெருக்கோடியில் உள்ள ATM க்கு முழியாங்கண்ணன் போறான் ; லகரங்களை டிரா பண்ணி எடுக்கிறான் ! பொட்டலம் போட்ட கையோடு திரும்பி வர்றான் !" என்று எடுத்தேன் பாருங்க ஒரு ஓட்டம் - உசைன் போல்ட் பொறாமைப்பட்டிருப்பார் ! So அமெரிக்க தேசத்துக்கு 'கா' விட்ட கையோடு, நமது ஆதர்ஷ ஆடுகளமான பிரெஞ்சு உலகினுள் புகுந்து கதைகளைத் துளாவ ஆரம்பித்தேன் ! Trust me guys - குறைந்த பட்சம் 40 வெவ்வேறு தொடர்களையாவது பரிசீலித்திருப்பேன் ! இந்தப் பொண்ணு உசரம் கம்மி ; அந்த மாப்பிள்ளைக்கு மண்டையிலே கேசம் கோவிந்தா - என்ற ரேஞ்சுக்கு ஒவ்வொன்றையும் கழித்துக் கொண்டே போனது தான் மிச்சம் ! இறுதியில் கிட்டிய TEAM ஜு.டி.நிறைய பெட்டிகளை டிக் அடித்தது போலிருக்க - 'பச்சக்' என லாக் செய்தேன். நாம் ஏற்கனவே பணியாற்றி வரும் Bamboo நிறுவனமே என்பதால் உரிமைகளை கோரிப் பெற்ற கையோடு பணிகளை ஆரம்பித்தோம் ! நான் அந்நேரம் இருந்ததோ சாம்பலின் சங்கீதம் + லார்கோ இதழ்களின் பணிச் சுனாமிகளுக்குள் !! ஒரு பக்கம் டாக்டர் சில்லார்ட் சங்கிலித் தொடர்வினை பற்றிப் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் புரஃபஸர் பேங்கிராப்ட் பங்குச் சந்தையின் பொருளாதாரப் பாடம் எடுத்துக் கொண்டிருக்க, நானோ மூணாப்புப் பசங்க ரேஞ்சுக்கு இறங்கி "குச்சி குச்சி ராக்கம்மா" என்று பூதத்துக்கு டப்பிங் கொடுக்கவும்  வேண்டியிருந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜாலியான variety தான் இன்னமும் இந்தப் பணிக்குள் என்னை உயிர்ப்போடு உலவ அனுமதிக்கின்றது ! பாலேயும் ஆடிக்கலாம் ; குச்சிப்புடியையும் கதிகலங்கடிக்கலாம் ; பேட்ட ராப் என்று குத்தும் குத்திக்கலாம் இங்கே ! அவ்விதம் ஜாலியாய் உருவானதே "சாலையில் ஒரு பூதம் !" Early days yet - ஆனால் துவக்கத்து reviews அனைத்துமே செம பாசிட்டிவ் ! தொடரும் நாட்களில் மெய்யாலுமே பாலகர்ஸ் இதனை வாசித்து அபிப்பிராயம் சொல்லல் சாத்தியமானால் would be great to know their reactions !!

அப்புறம் சந்தா நண்பர்களுக்கான அந்த கலர்புல் (சிண்ட்ரெல்லா) காலெண்டர் முழுக்க முழுக்க ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமே ! டிசைன் ; திட்டமிடல் - என சகலமும் விக்ரம் பார்த்துக் கொள்ள, கீழே வரும் அந்த வஜனங்கள் மாத்திரமே நம்ம கைவண்ணம் ! காலெண்டர் அழகாய் அமைந்து விட்டதில் ஹேப்பி ! 
Looking ahead, சென்னைப் புத்தகவிழா இதோ- அடுத்த வாரத்துக்கென நெருங்கிவிட்டது! And இம்முறை புது நிர்வாகம் BAPASI-ல் பொறுப்பேற்றிருக்க, முன் எப்போதும் இல்லாத அளவில் ஸ்டால்கள் கேட்டு ரஷ்ஷோ ரஷ்! ஆக, சங்கத்தின் உறுப்பினர் அல்லாதோர் அனைவருக்குமே சிங்கிள் ஸ்டால் தான் என்று சொல்லி­ விட்டார்கள்! Which means நமக்கும் இம்முறை சிங்கிள் ஸ்டால் தான்! So சும்மா பட்டணம் பார்க்க பஸ் ஏறி, நந்தனம் YMCA-வுக்குப் போயும், வந்துமாய் இருக்கக் கூடிய கமான்சே ; LADY S ;  ப்ரூனோ ப்ரேசில் போன்றோரெல்லாம் இம்முறை ஊரிலேயே குந்தியிருக்கப் போகிறார்கள்! போணியாகும் குதிரைகளை மட்டுமே பட்டியி­லிருந்து வெளியேற்றி இட்டுச் செல்வதாகவுள்ளோம்! வழக்கம் போல குடும்பத்தோடு வருகை தந்து இந்த முறையும் தெறிக்க விடுவீர்களென்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்! நமது ஸ்டால் நம்பர் 240 and அடியேன் ஜனவரி 10 சனி மாலையிலும், 11 ஞாயிறு மாலையிலும் புத்தகவிழாவில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன்! இயன்றால் would love to catch up ! Please do visit with family !! 

நாளை  "2025- The Year in Review'' என்று 2025-ன் பயணத்தை சற்றே விரிவாய் பார்வையிடும் முயற்சியினை வீடியோ பதிவில் செய்திடவிருக்கிறேன்! So ஞாயிறு பக­லில் அதனை நமது YouTube சேனலி­ல் பார்த்திடலாம்!

Bye all... and thanks again for the wonderful memories of 2025. See you around! Have a great weekend !

சந்தா ரயிலில் இன்னமும் இடம்பிடித்திடவுள்ள நண்பர்களுக்கு - சன்னமாய் ஒரு நினைவூட்டலுமே...!! 

P. S : கேள்விகள் உங்களுக்கு :

1.உங்களின் TOP 3 புக்ஸ் of 2025 எவையோ?

2.TOP 3 அட்டைப்படங்கள்?

3.டப்சா 3 of 2025?