நண்பர்களே,
வணக்கம்! சமீபமாய் எங்கோ வாசித்தேன்- "புரியாத மெரியே பதிவுகளில், பதில்களில் ஆந்தையன் எழுதிக்கினு இருக்காப்டி '' என்று ! அட, அந்த நண்பரது கண்டுபிடிப்புக்கு உரம் சேர்த்தால் என்னவென்று தோன்றிய நொடியில் இந்தப் பதிவுக்கு மூக்கைச் சுற்றியொரு முன்னுரை தந்திடலாமென்று பட்டது! ஐன்ஸ்டீனின் Relativity தியரி சொல்வதென்னவென்றால் - நேரத்தின் ஓட்டமானது - கடிகாரங்கள் நிர்ணயிப்பது போல அனைவருக்கும் ஒரே சீரானது அல்லவாம் ! கடந்து போயிருப்பது ஒற்றை வாரமாய் - ஏழு தினங்களாக இருக்கலாம்! ஆனால், நண்பர்களோடு ஜாலி டூர் போயிருப்பவருக்கும், குடும்பத்தைப் பிரிந்து துபாயில் பணியாற்றுபவருக்கும் இடையே அந்த 7 தினங்களுக்கான தாக்கம் மாறுபடும் தானே !
அதே நிலமை தான் இங்கு எங்களுக்குமே! சீனியர் எடிட்டர் நலமாய் இருந்த வேளைகளில், ஒரு வாரயிறுதியின் பதிவுக்கும், அடுத்த பதிவுக்கும் மத்தியிலான அவகாசம் மின்னலாய்க் கடந்து விடுவதாகத் தோன்றுவது வழக்கம்! ஆனால், சுகவீனங்கள் ; நடமாட்ட முடக்கம் என்றான நிலையில் - கடந்த 7 நாட்களை நகர்த்துவதென்பது ஒரு யுகத்தைக் கடப்பதற்கு ஒப்பாகத் தென்படுகிறது! சிறுகச் சிறுக சீனியர் எடிட்டரின் உடல்நலம் தேறி வந்தாலும், மனதின் சலனங்கள் சீராகியிருக்கவில்லை! Maybe மறுபடியும் இந்தப் பதிவுப் பக்கங்களுக்கு விஜயம் செய்யத் துவங்கினாரென்றால் உங்களின் உற்சாக ஆறுதல்கள் அவருக்குத் தெம்பூட்டலாம்! Fingers crossed!
ரைட்டு... மார்ச்சின் இதழ்கள் சகலமுமே சக்கை போடு போட்டு வரும் சந்தோஷச் சேதியை முதலில் பகிர்ந்து விடுகிறேனே! ஆன்லைனில் குவிந்து வரும் ஆர்டர்களை டெஸ்பாட்ச் செய்திட நம்மாட்கள் மெய்யாலுமே தடுமாறி வருகின்றனர்! அதிலும் டின்டின் & ஆர்ச்சி MAXI இதழ்கள் தெறி மாஸ்!
சிறுகச் சிறுக டின்டினின் முழுப் பரிமாணமும் நம் வட்டத்தின் மத்தியில் பிரபலமாகி வருவதில் அடியேன் செம ஹேப்பி! Honestly speaking நமது க்ளாஸிக் நாயகர்களுக்கு ஈடாக டின்டினுக்கு வரவேற்பு கிட்டக் காணோமே என்பதில் உள்ளுக்குள் நிறையவே நெருடல் இருந்தது தான்! "இதுவுமே ஒரு கார்ட்டூன் தான்" என்ற எண்ணத்தில், நம்மவர்களில் ஒரு பகுதியினர் இந்த பெல்ஜிய ஜாம்பவானை பெரிதாய் கண்டுகொள்ளவில்லையோ என்பதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் அமரர் Herge-ன் படைப்புகளின் சகலமுமே, ஆக்ஷன், அட்வென்சர், சென்டிமென்ட், காமெடி என்ற ரசனைகளின் ரம்யமான கலவை, என்பதை "விண்கல் வேட்டை'' அழுந்தப் பதிவு செய்துள்ளது கண்கூடு! தயாரிப்பில் இம்மி பிசகினாலும் கண்ணைக் குத்திட படைப்பாளிகள் ஒருபுறமும், கதைத் தரத்தில் ஒற்றை மாற்று குறைந்தாலும் செம மாத்து மாத்த நீங்கள் மறுபுறமும் காத்திருப்பதால், +2 பரீட்சைக்குப் படித்ததைக் காட்டிலும் ஜாஸ்தி பயந்து, பயந்து பணி செய்தேன் ! And இன்று அந்த மெனக்கெடலுக்கான பலன்களை தரிசிக்க இயலும் போது, மனதில் ஒரு நிறைவு விரவுவதை உணர முடிகிறது!
Next in line காத்திருப்பது "கேல்குலஸ் படலம்'! டின்டின் தொடரிலேயே செம சுவாரஸ்யமான Spy த்ரில்லர் சாகஸமென்றால் இதைத் தான் சொல்வேன்! Again சிங்கிள் ஆல்பமே! Hopefully in September '25.
இம்மாதத்து சர்ப்ரைஸ் ஆர்ச்சி தான்! அந்த MAXI சைஸ் தரும் கெத்தான லுக் ஒரு பக்கமென்றால், நமது பால்ய நண்பனின் மீள்வருகை ஒரு இனம்புரியா மகிழ்ச்சியினை படரச் செய்திருப்பதையும் மறுப்பதற்கில்லை! Oh yes -"அவற்றைப் புரட்டக் கூட இப்போதெல்லாம் முடிய மாட்டேன்குதுங்கோ!"என்று விசனப்படும் நண்பர்களும் உண்டென்பதை நானறிவேன்- but உள்ளதைச் சொல்வதானால் - ஸ்பைடரின் பாட்டில் பூதத்தை விட, புரட்சித் தலைவன் ஆர்ச்சியில் பணியாற்றுவது சுலபமாகயிருந்தது எனக்கு! தவிர, ஒரு புதுக்கதை + ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு என்ற கலவையுமே ரசித்ததாகப்பட்டது மனசுக்கு!
இந்த க்ளாஸிக் பார்ட்டிகளின் entry - புத்தகவிழாக்களில் பள்ளி மாணாக்கருக்குமே பயன்படும் விதமாய் நமது அடுத்த திட்டமிடல்களைச் செய்திடவிருக்கிறோம்! So எதிர்வரும் மாதங்களில்:
😀விச்சு கிச்சு
😀பரட்டைத் தலை ராஜா
😀செக்ஸ்டன் ப்ளேக்
😀கபிஷ்
ஆகியோரின் கூட்டணியோடு, இன்னும் இரண்டு பார்ட்டிகள் கரம் கோர்க்க உள்ளனர்! In fact "2 பார்ட்டிகள்" என்பதை விட ""மூவர்'' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்! Becos அந்த நாயக லிஸ்டில் உள்ள முதல் பெயரே "இரட்டை'' என்பது தான்! இதையெல்லாம் ஒரு quiz என்று வைத்து, நானும் கேள்விளைக் கேட்டு வைத்தால் மொக்கை (Meaning : முரட்டு; பலமான) பல்பு தான் வாங்க நேரிடும் என்பதால் நானே சொல்லி விடுகிறேனே!!
இரட்டை வேட்டையர்
&
C.I.D ஜான்மாஸ்டர்
இவர்களே "மீள்வருகை லிஸ்டில்' இணைந்திடக் காத்துள்ள அடுத்த batch! இவர்களது டிஜிட்டல் கோப்புகளெல்லாம் தயாராகிவிட்டன என்பதால் - சின்னச் சின்ன விலைகளுக்கு இவர்களது சாகஸங்களைக் களமிறக்க வேண்டியது தான் இந்தாண்டின் பிற்பகுதிப் புத்தகவிழாக்கால agendas!!!
"ஆங்.. பழைய சோத்தை மைக்ரோவேவில் சூடு பண்ணிப் போட்டே பிராணனை வாங்கிடுவே!'' என்று மலைப்பிரதேசத்திலிருந்தொரு குரல் கேட்கிற மெரி இருப்பதால் அடுத்த டாபிக் பக்கமாய்ப் பயணிப்போம்!
"குண்டு புக்'' மீதான நமது காதலில் இரகசியங்கள் ஏதுமில்லை தான்! ஆனால், அளவில், பருமனில், பக்க நீளங்களில் மட்டுமே குண்டென்று இல்லாது - புக்கே ஒரு குண்டைப் பற்றியதென்றால் என்ன சொல்வீர்களோ folks?
Yes - you guessed it! மனித வரலாற்றில் ஒரு நீங்காக் கறையாகிப் போன ஹிரோஷிமா - நாகசாகி மீதான இரண்டாம் உலக யுத்தத்தின் அணுகுண்டுத் தாக்குதல் படலத்தை, துவக்கம் முதலாய் கர்ம சிரத்தையாக விவரித்துச், சித்தரிக்கும் LA BOMBE என்ற 452 பக்க அசுர கிராபிக் நாவல் நம் மத்தியில் களமிறங்கத் தயாராகி வருகிறது!
2020-ல் ப்ரெஞ்சில் உருவான இந்தப் படைப்பு இதுவரையிலும் 18 மொழிகளில் வெளியாகியுள்ளது! And தமிழ் will be # 19!!எண்ணற்ற விருதுகள், வெளியான தேசங்களிலெல்லாமே அசாத்தியமான பாராட்டுக்கள் - எனக் குவித்திருக்கும் இந்த ஆக்கத்தை தமிழில் வெளியிட வேண்டுமென்பது பல மாதங்களாகப் பெரும் கனவு எனக்கு! In fact நாம் "அர்ஸ் மேக்னா'' வெளியிட்ட அந்த சமயத்திலேயே இதற்கான உரிமைகளையும் வாங்கிட உள்ளங்கை அரித்தது தான்! Becos அர்ஸ் மேக்னாவின் கதாசிரியரே இங்கே "LA BOMBE' ஆசிரியருமே! ஆனால், இந்தப் பணியின் பரிமாணம்; அந்தக் கொரோனா நாட்களெல்லாம் மிரட்டலான தடைகளாக அமைந்து போயின!
ரொம்பச் சமீபமாய் நண்பர் அறிவரசு ரவி, "இந்த கி.நா. சாத்தியப்படுமா சார்?" என்று இங்கே கேள்வி எழுப்பிய போது கூட சபலம் உள்ளுக்குள் ஆட்டிப் படைத்தது தான் - but இதன் மொழிபெயர்ப்புப் பணியானது நம்ம பல்லடத்துத் தோர்கல் காதலரின் லடாக் சிகரமேற்றத்துக்கு ஒப்பான சிரமம் என்பதால் back அடித்திருந்தேன்! ""இதெல்லாம் நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதினால் தான் வேலைக்கு ஆகும் சார்!'' என்றபடிக்கே ஜகா வாங்கியிருந்தேன்! இதெல்லாம் maybe ஐந்தாறு மாதங்களுக்கு முன்பான நிகழ்வுகள்! இந்த ஜனவரியின் இறுதிவாக்கில் பார்த்தால் நண்பர் கார்த்திகை பாண்டியனிடமிருந்து மெஸேஜ்- ""சார்.. ப்ளாக்கில் வாசித்தேன்! BOMB தமிழாக்கம் பண்ண நான் ரெடி!!'' என்று!!
சமீப ஆண்டுகளில் நம் நண்பரின் எழுத்துப் பணிகள் அவரை உயரே உயரே இட்டுச் சென்று கொண்டிருப்பதை நாமறிவோம்! இன்று தமிழ் எழுத்துலகில் ஒரு முக்கிய ஆற்றலாளராய் வலம் வருபவர்! And செம பிஸியாக இருப்பவரை இட்டாந்து, நம்ம கி.நா.வை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்கிறதுக்கெல்லாம் எனக்காக வாயே வந்திருக்காது தான்! ஆனால், நண்பரே முன்வந்து கேட்ட நொடியில் கோ- ஆப்டெக்ஸ் பெட்ஷீட்களை ஒண்ணுக்கு - ரெண்டாகப் போர்த்தி, அப்படியே லாக் பண்ணிய கையோடு, கதைக்கான உரிமைகளை வாங்கிவிட்டோம்!
So கடந்த இரண்டு வாரங்களாகப் பணிகள் ஓட்டமெடுக்கத் துவங்கிவிட்டன & அவரது வாடிக்கையான வேலைகளுக்கு இடர் தராத வகையில் நிதானமாய்ப் பணியாற்ற அவகாசமும், திட்டமிட்டுவிட்டோம்! So இந்தப் பக்கமாய் தலைகாட்டி விஷயத்தை உங்களிடம் பகிர்ந்திடலாமென்றுபட்டது!
And here goes:
1.அசாத்தியமான கிராபிக் நாவல் இது! இரண்டாம் உலக யுத்தத்தை "சட்'டென்று ஒரு முற்றுப்புள்ளி காணச் செய்த அணுகுண்டு வீச்சு; அதன் பின்னணித் திட்டமிடல்கள்; உருவாக்க முஸ்தீப்புகள் ; அரசியல்கள்; அதிரடிகள் என்று சகலத் தரவுகளையும் கதாசிரியர் Didier Swysen துளிப் பிசகுமின்றிச் சேகரித்து - இரு அற்புத ஓவியர்களின் துணை கொண்டு இதனை உருவாக்கியுள்ளார்! இங்கே பன்ச் டயலாக்ஸ் இராது ; கெக்கே பிக்கே தருணங்கள் இராது; ஹீரோ- வில்லன்கள் என்ற சராசரிகளும் இராது!
மாறாக, மனிதகுலத்தின் மகத்தானதொரு களங்கப் பக்கத்தின் ஆதி முதல் அந்தம் வரையிலான நிகழ்வுகளின் மீது வெளிச்சம் மட்டுமே பரவிக் கிடக்கும்! So இது சர்வ நிச்சயமாய் ஒரு கமர்ஷியல் முயற்சியே ஆகிடாது எனும் போது, மாமூலான வாசிப்பாக இது இருந்திடவே செய்யாது! அது ஸ்பஷ்டமாகவே புரிகிறது!
ஆனால், அரை நூற்றாண்டுக்கும் மேலாக காமிக்ஸ் உலகினில் அன்னம் - தண்ணீர் புழங்கிய பிற்பாடும் 'Only கமர்ஷியல்ஸ்' என்ற அடையாளத்தின் கீழே குளிர் காய்வது பொருத்தமாகப்படவில்லை! So ஜெயமோ- மிதமோ, பலன் எதுவாகயிருந்தாலும் - அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகக் களமிறங்குகிறோம் - ஆபத்பாந்தவர்களாய், நீங்களிருக்கும் தைரியத்தில்!
2. இது முழுக்கவே முன்பதிவுகளுக்கு மட்டுமேயானதொரு இதழாக அமைந்திடும்! முகவர்களுமே தேவைப்படும் பட்சத்தில் முன்பதிவு செய்திடத் தான் அவசியமாகிடும்!
3. மிகக் குறைந்த ப்ரிண்ட்-ரன் என்பதால் விலையில் சமரசம் சாத்தியமாகவில்லை! ஆனால் MAXI சைஸில், இயன்ற அத்தனை நகாசு வேலைகளுடனும், அட்டகாசமான தயாரிப்பில் இதழை உங்களிடம் ஒப்படைப்பது எங்களது promise!
4. தற்சமயத்துக்கு ""ஈரோடு 2025'' என்பது இலக்கு - இந்த இதழின் ரிலீஸுக்கு! ஆனால், இது துளியும் அவசரப்பட்டுச் செய்திடக் கூடாததொரு படைப்பு என்பதால் maybe "சேலம் 2025'' என்றும் கூட அமைந்திடலாம்!
5. பேக்கிங் & கூரியர் கட்டணங்கள் தனி : ரூ.50 (தமிழகம்) & ரூ.75 (பிற மாநிலம்) so ஒரு டீசண்டான நம்பரினை முன்பதிவில் எட்டிடத் தேவையான அவகாசங்கள் தந்திடுவோம்!
And நண்பர்கள் விரும்பினால் - ரூ 500 இப்போது & ரூ.400 இதழ் வெளியாடுகிவதற்கு முன்பாக - என்றும் இரண்டு தவணைகளில் பணம் அனுப்பலாம்!
6.ஒரு இமாலயப் பணியினில் இறங்கியிருக்கும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் ஒரு பலத்த கரகோஷத்தை இந்த நொடியில் ஒப்படைத்தோமெனில் சர்வநிச்சயமாய் அவரது சிரமங்கள் மட்டுப்பட்டுத் தென்படும் என்பேன்! செய்வோமா மக்களே?
7.கதைக்கான தலைப்பாய் எதை பரிந்துரை செய்வீர்களோ? என்று கேட்ட போது சிம்பிளாக "குண்டு" என்றார் நண்பர் கா. பா. ஆனால் நம்ம மூக்கு தான் புடைப்பானது ஆச்சே ; சிம்பிளான தீர்வுகளை ஏற்றுக் கொள்ளாதே? So - "சாம்பலின் சங்கீதம் " என்ற பெயரை முன்மொழிந்தேன் & நண்பரும் உடனே டிக் அடித்தார்! And here we are!!
So ஒரு சிகரம் ஏறும் முயற்சிக்கு ஒட்டு மொத்தமாய் தயாராக வேண்டிய தருணமிது folks! தம் கட்டியபடியே ஆரம்பிக்கலாமுங்களா?
Of course - "இது எங்கே தேற போகுது? ச்சீ.. ச்சீ... இது டாக்குமென்டரி படம் மெரி இருக்குமே - இந்த ஆணிய யாரு கேட்டா?" என்ற ரீதியிலான ஞானம் தோய்ந்த குரல்கள் ஆங்காங்கே துரிதமாய் ஒலிக்கும் என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகங்களில்லை! ஆனால் சமகால உலகக் காமிக்ஸ் படைப்புகளுள் அசாத்திய ஆழம் கொண்ட இந்த ஆல்பத்தில் வெறும் 100 பிரதிகள் மட்டுமே தமிழில் போணி பண்ண முடிந்தாலுமே மகிழ்வோம் - simply becos ஒரு சிகரத்தை ஏறிடத் துணிந்தோம் என்ற திருப்தி நமதாகி இருக்குமே?!
விஷப் பரீட்சை தான் ; சக்திகளுக்கு மீறிய முயற்சி தான் - but காலிருக்கி.... கட்டை விரலிருக்கி... கடைவாயுமிருக்கி.... எனும் போது விடுவானேன்? "கட்டைவிரல் கடைவாயில்" - at it's absolute peak!
புனித மனிட்டோ நமக்குத் துணை நிற்பாராக 🙏🙏🙏!!
Bye all... மர்ம மனிதன் மார்ட்டினோடு சால்ஸா ஆட நான் கிளம்புகிறேன்! See you all ! Have a lovely Sunday!!