Saturday, August 28, 2021

வாராயோ செப்டெம்பரே !

 நண்பர்களே,

வணக்கம். அதகள ஆக்ஷன் நிறைந்த ஆகஸ்டுக்கு விடை தந்திடும் வேளையும் நெருங்கியிருக்க, இதோ செப்டெம்பரின் பணிகள் முழு வீச்சில் ஓட்டமெடுத்து வருகின்றன ! இந்த மாசம் நமது முகவர்களிடம் சகட்டு மேனிக்கு சாத்து வாங்கும் வாய்ப்புகள் நம்மவர்களுக்குப் பிரகாசம் என்பேன் - simply becos - "காமிக்ஸ் நம்மவர்" இம்மாத அட்டவணையினில் நஹி ! "டெக்ஸ் இல்லியா ???" என்று ஏஜெண்ட்கள் போடும் சத்தத்தில் சப்த நாடிகளும் ஒடுங்கியவர்களாய் நம்மாட்கள் பம்முவதை அடிக்கடி பார்த்திட முடிகிறது ! "அது தான் தெரியுதுலே....பின்னே மாசத்துக்கு ஒருக்கா அவரை போட்டுத் தொலைக்குறதுக்கு என்ன ?" என்ற வினா தொடரக்கூடும் என்பதால் பதிலையும் சொல்லி விடுகிறேன் !  

நடு நாயகமாய் மஞ்சளார் & கோ. பவனி செல்லும் வேளைகளில் கூடிய மட்டுக்கு second string நாயக / நாயகியரைக் கண்ணில் காட்டாதிருக்கவே நான் முயற்சித்து வருகிறேன் ! அதனால் தான் ஒரு பிரளயப் பயணத்தோடு லக்கி ஆண்டுமலர் ; ஒரு லயன் # 400 உடன் ஒரு தோர்கல் ;  சிகப்பாயொரு சிலுவை" சகிதம் இன்னொரு லக்கி லூக் - என சம பலம் பொருந்திய ஈரோக்களை; ஈரோயினிகளைத் தேடிட முயன்றுள்ளேன் ! அந்தந்த மாதங்களின் (விற்பனை) நீர்வரத்தின் பெருமளவை 'தல' தனதாக்கிக் கொண்டாலும், பாக்கிப் பேருக்குமே கொஞ்சமாய் பாய்ந்திடாது போகாது தான் என்பது எனது நம்பிக்கை  ! ஆனால் அந்த அளவிற்கான வலு இல்லாத அடுத்த நிலை நாயகர்களாய் களமிறங்கிட வேண்டிய கட்டாயப் பொழுதுகளில் என்ன செய்வது ??? 'பளிச்' என்ற சின்னப் பொண்ணு வீட்டிலிருக்கும் போது, ஒரு மிடறு சுமாரான மூத்த பொண்ணைப் பார்க்க பிள்ளை வீட்டிலிருந்து வரும் போது என்ன செய்வார்களோ - அதையே தான் செய்தாகணும் !! So  "சின்னப்பொண்ணு" தலயை எங்காச்சும் அந்த வேளைகளில் பதுங்கிடச் செய்யணும் ! இதுவே காரணம் - மாதமொருமுறை 'தல' தலை காட்டாதிருக்க மையக் காரணம் ! Of course - அட்டவணையின் அத்தினி பேருமே அதிரி புதிரி அதிரடிப் பார்ட்டிகள் தான் என்றொரு சூழல் பிறப்பின், அன்றைக்கு இந்த பயங்களுக்குப் பெரிதாய் முகாந்திரங்களிராது ! அட - 'வலிமை'யான ரிலீஸ் நாளா ?  நாங்களுமே 'அண்ணாத்தே' தான் ! No பயம்ஸ் என்று சொல்லிட இயலும் !! புனித மனிடோவிடம் வேண்டி வருகிறேன் - அத்தகையதொரு தினத்தை நமக்குப் புலரச் செய்திட !!  

And இதோ இம்மாதம் களமிறங்கவுள்ள அனைவருமே தேனீக்களைப் போலான சுறு சுறுப்புப் பார்ட்டீஸ் ; கொடுத்த பணியினை பிசகின்றி முடிக்கும் திறன் கொண்டோர் !! Before I move on to details : ஒரு சிறு குறிப்பு  guys ! செப்டெம்பரில் காத்துள்ள இதழ்கள் மூன்றல்ல - நான்கு ! Trent சிகப்புச் சட்டைக்காரரும் இம்மாதமே இணைந்திடவுள்ளார் ! 

ஆட்டத்தைத் துவக்கவுள்ளவர் நமது 'திண்டுக்கல் டிக்"...sorry ...sorry ..."டெட்வுட் டிக்" ! போனெல்லி குழுமத்தின் இந்த சமீப உருவாக்கம் பற்றிய பின்னணியில் வரலாற்று சுவாரஸ்யம் ஏகமாய்ப் புதைந்து கிடக்கிறது !  நான்கூட முதலில் இதே பெயரில் ஒரு கறுப்பின ஆசாமி வாழ்ந்தார் போலும் ; அவரையே ஒரு காமிக்ஸ் அச்சில் வார்ப்பெடுத்துள்ளனர் போலும் என்று நினைத்திருந்தேன் ! ஆனால் அப்புறம் தான் தெரிந்தது DEADWOOD DICK என்பது 1877 முதல் 1897 வரையிலும் வெளியானதொரு நாவல் தொடரின் நாயகரின் பெயர் என்று !! லைட்டன் வீலர் என்ற நாவலாசிரியர் - சொற்ப விலைகளிலான பல நாவல்களில் இந்த டெட்வுட் டிக்கை முன்னிறுத்தி கதைகள் பண்ணியிருக்கிறார் !


டெட்வுட் என்பது அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்திலுள்ளதொரு சிறு நகரம் ! 1870 வாக்கில் இங்கே கொஞ்சம் கொஞ்சமாய் ஜனம் குடியேறியுள்ளனர் ! 1874-ல் தென் டகோட்டாவின் பிளாக் ஹில்ஸ் பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட, திபு திபுவெனப் படையெடுத்த மக்கள் டெட்வுட் நகரின் முன்னோடிகள் ! ரொம்பச் சீக்கிரமே பெருத்த இந்த நகரத்தின் ஜனத்தொகை 1876-ல் இருபத்திஐந்தாயிரத்தைத் தொட்டிருக்கிறது ! தங்கச் சுரங்க முதலாளிகள் ; சுரங்கத் தொழிலாளர்கள் ; சலூன் நடத்துவோர் ; ப்ராத்தெல் நடத்துவோர் ; சூதாடிகள் ; குடிகாரர்கள் - என்று இங்கே ரகம் ரகமாய் ஜனம் குடியேற, சட்டம், ஒழுங்கெல்லாம் வீசம்படி என்ன விலை ? என்ற நிலவரம் நிலவியுள்ளது ! வன்மேற்கின் நிஜ நாயகர்களான வ்யாட் ஏற்ப் ; வைல்ட் பில் ஹிகாக் ; கலாமிட்டி ஜேன் போன்றோரெல்லாம் இங்கே வாழ்ந்திருக்க, கடைசி இருவரும் இங்கேயே செத்தும் போயிருக்க, அவர்களது கல்லறைகளும் டெட்வுட் நகருக்கு வெளியே தான் உள்ளனவாம் !


1876 -ல் டெட்வுட் நகரம் !!

ஆக ஒருவிதமான ரவுடி நகராய் டெட்வுட் தலையெடுத்த பொழுதினில் - அதனை மையமாய் கொண்டு "டிக்" என்றதொரு ஹீரோவை உருவாக்கி நாவல்கள் எழுதித் தள்ளினார் அந்தக் கதாசிரியர் ! பின்னாட்களில் டெட்வுட் நகரைச் சார்ந்த நிஜமான பிஸ்தா பார்ட்டிகள் - அந்தப் பெயரின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அதனையே தமது புனைப்பெயர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் ! அவ்விதம் இந்தப் பெயரைக் கடன் வாங்கியவர் தான் Nat Love என்றதொரு டெட்வுட் நகரைச் சார்ந்த கௌபாய்  !


1854-ல் பிறந்து, 1921 வரைக்கும் வாழ்ந்திருக்கிறார் முன்னாள் அடிமையும், பின்னாள் சாகச வீரருமான இந்த மனுஷன் ! அடிமைத்தனம் கோலோச்சிய அமெரிக்காவின் தென் மாநிலத்தில் ஒரு அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர், "கருப்பு அடிமைகள் கல்வி கற்கப்படாது" என்ற கோட்பாடையும் மீறி கொஞ்சமாய்ப் படித்திருக்கிறார் ! அடிமைத்தனம் ஒழிந்த பின்னே தந்தைக்கு விவசாயத்தில் உதவி ; 16 வயசில் கௌபாய் வாழ்க்கை என வண்டி ஓட, குறிபார்த்துச் சுடும் சாகச வீரராய் ; சண்டிக் குதிரைகளை கையாளும் திறன் கொண்ட கில்லாடியாய் ; கால்நடைத் திருடர்களை எதிர்த்து நின்று போராடிய கில்லியாய் பின்னாட்களில் மனுஷன் பிரபலமாகினார் ! So Deadwood Dick என்ற கற்பனைப் பெயர் + Nat Love என்ற அந்தக் கறுப்பின (நிஜ) கௌபாய் வீரன் என்ற கலவையினை ஒரு காமிக்ஸ் நாயகராக்கி, தலா  64 பக்கங்கள் வீதம் ஒரு 7 அத்தியாயக் குறுந்தொடர் ஆக்கியுள்ளனர் போனெல்லி !

நிஜ Nat Love எப்படிப்பட்ட ஆசாமியோ தெரியில்லா ; ஆனால் போனெல்லி இந்த நாயகரை ஒரு கரடு முரடான மனிதராகவே சித்தரித்துள்ளனர் ! கொச்சையான பேச்சு ; நிறைய நக்கல் ; நையாண்டி ; நிறைய ஜொள்ளு ; எவன் எக்கேடோ கெட்டாலென்ன ? என்ற பாணியில் வலம் வருகிறார் ! இவரும், ஒரு சக கறுப்பின சிப்பாயும் முதன் முதலில் சந்தித்துக் கொள்ளும் கட்டம் - எனக்கு செமத்தியாய்க் கட்டம் கட்டவுள்ள தருணம் என்று இப்போதே ஸ்டீலின் பட்சிகள் காதில் ஓதுகின்றன !  இங்கே கதாசிரியர் சிருஷ்டித்துள்ள ஒரிஜினல் வரிகளை, கொஞ்சம் மிதமாக்கிடலாமா ? என்று பேனா பிடிக்கும் போது யோசித்தேன் தான் ; ஆனால் நாயகரின் பாத்திரத்தோடு ஒன்றிட வேண்டுமெனில் அதே கரடு + முரடு அத்தியாவசியம் என்றே பட்டது ! So watch out guys !! இதுவரைக்கும் இந்த மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் நம்மிடையே பார்த்திருக்க மாட்டீர்கள் தான் ; and நாளை துவங்கவுள்ள எடிட்டிங்கில் நானே என் வரிகளுக்கு கத்திரி போடாது விட்டேனெனில் சூடான வார்த்தைக்களமொன்று இம்மாதம் ஆஜராகிடும் ! தெரியலை - நாளைய பொழுதுக்கு எனது 'தெகிரியம்' எந்த அளவிற்கு தாக்குப் பிடித்திடவுள்ளதென்று ! And சித்திரங்களிலுமே எந்த மட்டுக்கு எடிட்டிங் இருந்திடுமென்பதை நானே அடுத்த சில நாட்களில் தான் அறிந்திருப்பேன் ! So பொங்கப் பானையை பரணிலிருந்து இருக்குவதாயின் புக்ஸ் வெளியான பின்னே இறக்கிடல் பொருத்தமாயிருக்கக்கூடும் ! இந்த ஒற்றைப் பக்க டிரெய்லருக்கே பொங்கலோ பொங்கலன்று குலவைகள் போடத்தான் வேணுமா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் ! 


இந்தத் தொடரின் முதல் 4 பாகங்களை ஒன்றிணைத்து, 256 பக்க ஆல்பமாய் ரூ.200 விலையில் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் ரொம்பவே கரடு முரடான இந்தக் கதாநாயகனை ; இந்த ரவுசு பாணியினை உங்கள் சிரங்களில் ஏகமாய்க் கொட்டி விஷப்பரீட்சை பார்க்க தயக்கம் மேலோங்கியது ! So முதலிரண்டு அத்தியாயங்களோடு நிறைவுறும் முதல் கதையோடு இந்த இதழுக்கு "சுபம் " போட்டு விட எண்ணியுள்ளேன் ! விலையுமே பாதியாய் - ரூ.100 என்று இருந்திடவுள்ளது ! So இங்கே கத்திரி காணும் ரூ.100 மீதமிருக்கும் நம்மிடம் ! 

அப்புறம்  அட்டவணையில் காத்துள்ள புதுமுகம் "மேகி கேரிசன்" உங்களுக்கு நினைவிருக்கலாம் ! அம்மணி ஒரு வித்தியாச பாணி டிடெக்டிவ் & இவரது தொடரினில் இருப்பன மொத்தமே 3 கதைகள் தான் ! எனது ஒரிஜினல் திட்டப்படி நடப்பாண்டின் டிசம்பரில் இவரது முதல் ஆல்பமான "செய்வன தில்லாய்ச் செய்" இதழை வெளியிட்ட கையோடு, 2022-ன் முதலிரு மாதங்களில் பாகங்கள் 2 & 3 போட்டு விடலாமென்று எண்ணியிருந்தேன் ! ஆனால் காத்திருக்கும் 2022-க்கு ஒரு செம வேக (கமர்ஷியல்) அட்டவணை திட்டமிட்டிருக்க, மேகியின் பாணி அதனுள் நுழைந்திட சிரமப்படும் என்று படுகிறது ! So நடப்பு அட்டவணையில் உள்ள மேகியின் முதல் ஆல்பத்தினை ஏதேனுமொரு Bookfair ஸ்பெஷல் இதழாக்கிடத் தீர்மானித்துள்ளேன் ! So இங்கொரு ரூ.90 மீதமிருக்கும்.

இந்த ரூ.100 + ரூ.90-க்கு ஈடாகத் தான் லக்கி லூக்கின் 75-வது பிறந்தநாள் ஸ்பெஷல் இதழாய் "நிதிக்குத் தலை வணங்கு" & "தாயில்லாமல் டால்டனில்லை" இணைந்த ஸ்பெஷல் இதழ் - ரூ.200 விலையில், ரெகுலர் சந்தாவிலேயே வரவுள்ளது guys !! So கொஞ்சம் கரடு முரடான களங்களில் பிடிக்கும் மிச்சத்தைக் கொண்டு ஒரு ஜனரஞ்சக நாயகருக்கு "ஹேப்பி பர்த்டே" சொல்ல திட்டமிட்டுள்ளோம் ! 

And of course - "மேக்கியை சந்திக்கும் ஆவலில் இருந்தேன் ; தலையிலே மண்ணள்ளிப் போட்டுப்புட்டியே ?!" என்று குரல் எழுப்ப உள்ளோருக்கு : கூடிய விரைவில் மேகியை கண்ணில் காட்டிடுவேன் guys ; "செய்வன தில்லாய்ச் செய்" கதையெல்லாம் வந்து விட்டது பிப்ரவரி மாதத்திலேயே !! 

So இந்த செய்திகளை உங்களிடம் சேர்ப்பித்த கையோடு கிளம்புகிறேன் - இம்மாதத்து ஜம்போ இதழின் எடிட்டிங்கை நிறைவு செய்திட ! கிளம்பும் முன்னே சில குட்டி updates !

  • SMASHING '70s முன்பதிவு 210-ஐ தொட்டு விட்டது அதற்குள்ளாய் ! அக்டோபர் 14 வரையிலும் இன்னமும் அவகாசமிருக்க, நிச்சயமாய் 500 எனும் நம்பரைத் தொட்டு விட இயலுமென்றே தோன்றுகிறது !!
  • ரிப் கிர்பி கதைத் தேர்வுகள் done & கதைகளும் வந்தாச்ச்சூ !!
  • வேதாளர் கதைகளின் தேர்வுகளுமே நேற்றைக்கு done and  அடுத்த சில நாட்களில் அதுவும் வந்திடும் !
  • அப்புறம் தான் உங்களைத் துணைக்கு அழைக்க வேண்டி வரும் folks - மாண்ட்ரேக் & காரிகன் கதைகளினில் தேர்வுகளை செய்திட !! So இப்போதிலிருந்தே வெண்டக்காயைக் கூட்டுக்களை கொஞ்சம் கூடுதலாக்கிக் கொள்ளுங்களேன் உங்களின் போஜனங்களில் !

Bye all...see you around ! Have a fun weekend !!

Thursday, August 26, 2021

'தலபிமானம்' !!

 நண்பர்களே,

வணக்கம். லேட்டஸ்ட்டாய் சேலத்திலிருந்து லாலா கடை ஸ்பெஷல் லட்டுக்கள் டப்பி டப்பியாய் நேற்று வந்திறங்க, ஆபீஸ் முழுக்க 'ஏவ்வ்வ்வ்வ்வ்' சத்தம் தான் ! 'ஏக் தம்மிலே' லட்டை உள்ளாற தள்ளினா தானே ஷூகர் சீவனை வாங்கும் ; ஆகையாலே இப்டிக்கா போறச்சே கொஞ்சம் ; அப்டிக்கா போறச்சே இன்னும் கொஞ்சம்னு உள்ளுக்குள்ளே தள்ளினாக்கா, ஆரோக்கியத்துக்கு பெத்த நல்லதுங்கிற லேட்டஸ்ட்டான 'லியனார்டோ தாத்தா ஆராய்ச்சியின்படி' நாமளும் ஒரு ரெண்டை போட்டுத் தாக்க, அடடா...இதுக்காகவே அடிக்கடி மொட்டை மாடியிலே புத்தக விழாக்கள் நடத்தலாம் போலத் தோணுதே !! தேங்க்ஸ் STV !

ஆகஸ்டின் அதகளங்கள் சிறுகச் சிறுக அடங்கிட, சமீப நாட்களின் ஒரு ஸ்பெஷல் நிகழ்வே  இந்த உ.ப.வின் மேட்டர் ! 

அட்டைப்படத்தினில் மட்டுமன்றி, கதையின் நீள அகலங்களின் முழுமைக்கும் தாட்டியமாய் 'தல' மட்டுமே தாண்டவமாடிடும் மாதமிது என்பதில் ஐயங்களே இருக்க இயலாது ! சென்றாண்டினில் அட்டவணையினைத் திட்டமிடும் போதெல்லாம் - 2021-ல் கொரோனா கொடுமையானது (தடுப்பூசிக்குப் பின்னே) போயே போயிருக்கும் என்றும் ; ஒரு வித இயல்பு நிலை திரும்பியிருக்குமென்றும் பேமானியாட்டம் கனா கண்டு கொண்டிருந்தேன் ! And அந்த பேமானிக் கனவினில், அம்பானியாட்டம் ஈரோட்டில் ; புத்தக விழாவினில் வியாபாரம் ஆகிடும் என்ற நம்பிக்கை நிரம்ப இருந்ததால் லயன் 400 இதழினை இந்த மாதத்துக்கென ஸ்லாட் செய்திருந்தேன் ! ஆனால் அந்த பேமானிக் கனவோ, பேய் முழி நிஜமாகியிருக்க, திட்டமிடலை "E-ROAD ஆன்லைன் புத்தக விழா" என  மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிப் போனது ! And அதற்கென ஸ்லாட் செய்திட்டதுமே 'தல' யின் "சிகப்பாய் ஒரு சிலுவை" தான் என்ற போது, ஒரேயொரு கணத்துக்கு சன்னமாய் தயக்கம் எட்டிப் பார்த்தது - "அதிகாரியை போட்டு ஓவராய் தாக்குறீக !!" என்ற குரல்கள் ஒலிக்குமோவென்று ! ஆனால் போன வருஷமே கதையும் ரெடி ; நடப்பாண்டினில் ராப்பரும் ரெடி ; and இது போலான தருணங்களில் டெக்ஸ் தான் best என்ற நம்பிக்கையும் ஒன்றிணைந்து என் தயக்கத்தினை தகர்த்திருந்தது ! இப்போது சாவகாசமாய் பின்னே திரும்பிப் பார்க்கும் போது மாற்றுத் தேர்வாய் வேறு எதையேனும் நான் செய்து வைத்திருப்பின், உறுதியாய் இந்தத் தாக்கம் கிட்டியிராதென்றே தோன்றுகிறது ! சன்னமானதொரு வியப்போடு தான் இந்தக் கேள்வி என்னுள் எழுகிறது :

டெக்ஸ் வில்லர் & டீம் மாத்திரம், நாட்களின் ஓட்டத்தோடே - fine wine போல சுவையினில் கூடிக்கொண்டே இருப்பதாய்த் தெரிவது ஏனோ ? ? 

Of course - நூற்றுக்குத் தொண்ணூற்றியெட்டுப் பேர் தரும் வரவேற்புக் குரலுக்கு இணையாய் மீதமிருக்கும் இருவர் தங்களின் அதிருப்தியினை உரக்கத் தெரிவிப்பர் என்பதில் ரகசியங்களில்லை தான் ! ஆனால் கடந்த 10 நாட்களில் நான் அகன்ற விழிகள் அகண்டிடப் பார்த்து வருவது ஒரு அடுத்த லெவல் ஆதர்ஷத்தினை !! 1985 முதலாய் நம்மோடு பயணிப்பவர் தான் டெக்ஸ்.... and கடந்த 8+ ஆண்டுகளாய் அவருக்கு அழுத்தமாய் ஒரு அரியணை போட்டுள்ளீர்கள் தான் ....ஆனால் இந்தாண்டினில் உங்களின் 'டெக்ஸ் ரசனை' ஒரு மிடறு கூடியிருப்பதாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானோ - என்னவோ ?! அதன் பின்னணிக் காரணங்களாய் என்ன இருக்கக்கூடுமோ ? என்று யோசித்துப் பார்த்தால் - possible reasons என இவை தென்பட்டன :

1 .கதைத் தேர்வுகள் ; பாணிகள் ?!

"நெஞ்சே எழு" ஒரு racy அதிரடி ; "பிரளயப் பயணம்" - வித்தியாசமான கதைப்பின்புலத்துடனான செம breezy read  ; "புத்தம் புது பூமிவேண்டும்" 'தல' தாண்டவத்தின் highlight ; "சிகப்பாய் ஒரு சிலுவை' - நோஸ்டால்ஜியா கலந்த அதிரடி ! So ஒன்றன்பின் ஒன்றாய் அகஸ்மாத்தாய் அமைந்து போன ஹிட்ஸ் -கூடிப் போன  "தலபிமானத்துக்கு" உதவியிருக்குமோ ? Not to mention - "பனியிலொரு புது நேசம் !!"

2 .நாம் வாழ்ந்து வரும் இந்த நாட்களுக்கும், டெக்சின் அதிரடி பாணிகளை ரசிப்பதற்கும் ஏதேனும் சம்பந்தமிருக்குமோ ? சமீபப் பின்னூட்டமொன்றினில் கோவை பாபு இதைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததை கவனித்தேன் ! பேரிடர் ; நோய்த்தொற்று ; திக்கெட்டும் சிரமங்கள் ; கட்டுப்பாடுகள் ; இயல்பை மறந்த வாழ்க்கை முறைகள் - என்பதே கடந்த ஒண்ணரை ஆண்டுகளின் பிழைப்பாகிப் போயிருக்க, டெக்சின் அந்த devil may care அதிரடிகள் நம்மை கூடுதலாய் லயிக்கச் செய்கின்றனவோ ?

3  கிட்டத்தட்ட 'நெதமும் ஒரு பதிவு' என்ற ரீதியினில், லாக்டௌன் தினங்களில் டெக்சின் ஏதேனும் இஸ்திரி ; ஜியாக்ரபி பற்றியெல்லாம் நாம் அலசி ஆராய்ந்து, கும்மியடித்தது  கூட  இதற்கொரு பங்காற்றியிருக்குமோ ?

4 அப்புறம் சமீபத்தைய டெக்சின் சாகசங்கள் சகலத்திலும், ஹியூமர் சன்னமாய் சாஸ்தியாகவும், பன்ச்கள் சன்னமாய் வீரியமாகவும் இருந்திட கொஞ்சம் மெனெக்கெட்டுள்ளோம் ! Maybe வாசிப்பினில் தென்படும் அந்த மாற்றமும் has a role too ?

5 Last but not the least - சமீபமாய் (காமிக்ஸ்) வாட்சப் க்ரூப்கள் ; FB க்ரூப்கள் என செம விறுவிறுப்பாய்ப் பயணித்து வருவது பற்றி நண்பர்கள் அவ்வப்போது update செய்து வருகின்றனர் ! "பொம்ம புக்குலாம் இன்னமும் வருதா ?" என்ற கேள்வியோடு ஆஜராகும் long lost வாசகர்களுக்கு அந்த க்ரூப்கள் வழிகாட்டுவதுமே, டெக்சின் இந்த எழுச்சிக்கொரு காரணமாய் இருக்கலாம் என்றுபடுகிறது !

அல்லது...அல்லது....ஒரு ஜாலியான ஆரவாரத்தை நான் தான் ஏதோ கட்சி மாநாட்டின் ரேஞ்சுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேனா ? 

(கூடியுள்ள)'தலபிமானம்' !! What's your take on this folks ? 

இது நம்ம வாசகஜி ஒருத்தரின் 'தல' கலெக்ஷன் ! (கலெக்ஷன் as in சேகரிப்பு ; தொகுப்பு...இத்யாதி !! ) 😍

உங்களின் சேகரிப்பினையும் இது போல க்ளிக்கி அனுப்புங்களேன் - போனெல்லிக்கே அனுப்பி வைப்போம் ஒட்டு மொத்தமாய் !!


தொடர்வது நண்பர் கிருஷ்ணாவின் சேகரிப்பு !!




Saturday, August 21, 2021

Classy க்ளாசிக்ஸ் !!

 நண்பர்களே,

வணக்கம். சரக்கடிச்ச அனுபவம் லேது ; ஆனால் சரக்கடித்த நண்பர்களின் hangover-களைப் பார்த்திருக்கிறேன் தான் ! And இதோ லேட்டஸ்டாக - இந்த வாரத்தின் முழுமைக்கும் நம்மாட்கள், E-ROAD '21 தந்துள்ள  ஹேங்கோவரில் கிறங்கிக் கிடப்பதைப் பார்த்து வருகிறேன் ! போன சனிக்கிழமை ஒலிக்கத் துவங்கிய செல்போன்கள் - இந்த சனி வரையிலும் ஓய்ந்த பாடில்லை ! எதிர்பாரா இந்த அதகளத்தினை நம்மவர்களில் 4 பேர் சமாளிக்க முயன்று வந்தாலும், பணியின் தன்மையானது ஜவ்விழுக்கச் செய்கிறது ! கொஞ்சம் சொதப்பியுள்ளனர் நம்மாட்கள் ; நிறைய சரியாய்ச் செய்துள்ளனர் - ஆனால் இம்முறை கிட்டியுள்ள அனுபவங்களானவை ரொம்பவே different !!

**எட்டு ஆண்டுகளுக்கு முன்பான இதழிலும் ஆர்டர் ; நேற்றைய புக்கிலும் ஆர்டர் எனும் போது, இரு தனித்தனிக் கிட்டங்கிகளிலிருந்து கிட்டத்தட்ட முன்னூறு புக் குவியலுக்குள், ஒவ்வொன்றையும் தேடியெடுத்து சரி பார்த்து அனுப்பிடுவது சுலபமாகவே இல்லை  தான் ! 

**சின்னச் சின்ன ஆர்டர்கள் ;  Google Pay வாயிலாய் அவற்றிற்கான பணப் பட்டுவாடாக்கள் ; and இந்த Google Pay அனுப்பப்படுவதோ  இல்லாள் பெயிரிலிருந்தோ ; புள்ளையின் பெயரிலிருந்தோ எனும் போது - "யார் கணக்கில யாரு பணம் போட்டா ?" என்ற ஆராய்ச்சியில் உச்சந்தலை கேசங்கள் (!!) நட்டுக்குத்தாகி நிற்காத குறையே ! கொடுமைக்கென போன சனிக்கிழமையின் பகல் பொழுதினில் நமது வங்கியின் சர்வர் புட்டுக்கிட, நிறைய பேருக்கு GPay செய்திட முடியலை ; சிலருக்கோ அனுப்பியது அவர்களையே மறுக்கா சென்றடைந்துவிட்டது ! அதையெல்லாம் குறித்துக் கொண்டு, சிரமம் பார்க்காது இன்னொருவாட்டி முயற்சிக்க அவர்களிடம் கோரியதும் அரங்கேறியது !!

**சிலரோ ஆன்லைனில் வங்கிக்கே டிரான்ஸ்பர் செய்திட, சிற்சிறு தொகைகளால் இந்தியக் கிரிக்கெட் அணியின் தற்போதைய வாலைப் போல நீண்டு தென்படும் ஸ்டேட்மெண்ட்டினில் , கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியபடியே சரிபார்த்திடவும் அவசியப்பட்டது  ! ஒரு சில நண்பர்களோ, ஆங்காங்கே தத்தம் ஊர்களில் உள்ள TMB கிளைகளில் ரொக்கமாய்க் கட்டியிருக்க, எங்களது ஸ்டேட்மெண்ட்டில் - "இன்ன ஊர் ; ரொக்கம்" என்ற விபரம் மட்டுமே இருக்கிறது ! செலுத்தியது யாரென்றே புலனாய்வு -  நம்மாட்களை ஹெர்லக் ஷோம்ஸ் ரேஞ்சுக்கு உருமாற்றிவிடுகிறது !

**அயல்நாட்டிலிருந்து ஆர்டர்ஸ் ; அவற்றிற்கான ஏர்மெயில் ரேட்களைக் கேட்டறிந்து சொல்வதற்குள் பொழுதுகள் ஓட்டமெடுத்து விடுகின்றன !!

**பொதுவாய் "மஞ்சப் பத்திரிகை " என்றால் நாமெல்லாம் "ஐயே" என்று முகம் சுளிப்பதே வாடிக்கை ; ஆனால் இங்கேயோ நிலவரம் தலைகீழ் !  இப்போது மஞ்சள் தான் flavour of the season ; ஆளாளுக்கு ஐஞ்சு புக் ; பத்து புக் என்று ஒவ்வொரு "மஞ்சச் சொக்காய்க்காரவுக" கதைகளிலும்  வாங்கித் தள்ளியுள்ளனர் எனும் போது அவற்றை மாமூலாய்  கூரியர் டப்பிக்களில் பேக் செய்திட வழியில்லை ; முகவர்களுக்கு அனுப்புவதைப் போல பண்டல்களாக்கி டிராவல்ஸ்களிலும், லாரிகளிலும் அனுப்ப வேண்டிப் போயுள்ளது !

**இதற்கிடையே எங்கிருந்தோ திரட்டியுள்ள உத்வேகங்களோடு, முகவர்கள் இரட்டிப்பாய் ஆர்டர்களை அனுப்பி வைத்துள்ளனர் - லயன் # 400 இதழுக்கும் ; "சிகப்பாயொரு சிலுவை" இதழுக்கும் ! போன மாசம் வரைக்கும் 20 புக் ; 30 புக் என்று வாங்கியோர் இப்போது திடு திடுப்பென 100 ; 200 வேணுமெனும் போது அவர்களுக்கு பதில் சொல்ல நேரிடும் திணறல்கள் வித்தியாச ரகம்  ! ஐநூறு பேருக்கென சமைத்த விருந்தின் பந்தியில், எவ்வித முன்னறிவிப்புமின்றி 800 பேர் அமர்ந்தால் - இட்லியிலும் ரேஷன் ; கேசரியிலும் ரேஷன் தவிர்க்க இயலாதாகிடும் தானே ? So இங்கும் அதுவே செய்திட வேண்டியிருந்துள்ளது ! ஆனால் அதனைப் புரிந்து கொள்ள பொறுமையின்றிப் பொங்கலோ பொங்கலென்று பொங்குவோர்க்கு பதில் சொல்லிட எடுக்கும் நேரம் இன்னொரு பக்கம் !! 

So தட்டுத் தடுமாறி உங்கள் ஆர்டர்களைக் கரை சேர்த்து விட்டு, தங்களையும் கரை சேர்க்கக் கரணம் அடித்து வரும் நம்மவர்களின் முனைப்புகளே  எனது இவ்வாரத்து highlight !! இயன்றதைச் செய்து வரும் அந்தச் சிறு அணிக்கு ஒரு பெரிய பார்சலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகளும், காரமும் அனுப்பியுள்ள நண்பர் ராகவன் ஒருபக்கமும் ; சன்மானமொன்றை அனுப்பியுள்ள நண்பர் N.சரவணகுமார் இன்னொரு பக்கமும் திக்குமுக்காடச் செய்துள்ளனர் ! பார்சலிலிருந்த ஸ்வீட் டப்பியில் ஒன்றை ஆட்டையைப் போட்டவனென்ற முறையில், நண்பர்களின் எதிர்பார்ப்பில்லா இந்த அன்பு எத்தனை இனிமையானதென்று சப்புக்கொட்டியபடிக்கே சொல்ல முடிகின்றது !!  Thanks from me & the team sirs !!

நம்மவர்கள் இன்னமும் போன வாரத்து மேளாவின் பிசியிலேயே மூழ்கிக் கிடக்க, நானோ வேறொரு  ஜாலியான பிசியில் இந்த வாரத்தை நகற்றி வருகின்றேன் ! அது வேறொன்றுமில்லை guys - காத்திருக்கும் SMASHING '70s நான்கு ஆல்பங்களுக்குமான கதைத் தேர்வுப் படலமே தற்சமயம் பிசியாக்கி வருகின்றது !! ஒட்டுமொத்தமாய் வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி & காரிகன் கதைகளில் ஒரு பெரும் கத்தை சாம்பிள்கள் அமெரிக்காவிலிருந்து வந்து குவிந்திருக்க, வேளைக்கு ஒரு நாயகரின் கதையோடு பயணித்து வருகிறேன் ! அதிலும் நாம் திட்டமிட்டுள்ள முதல் ஆல்பமானது வேதாளனினது என்பதால் டென்காலி  ; டயானா ; ரெக்ஸ் ; டெவில் ; ஜும்போ  ; குறன் ; வம்பேசி ; ஈடென் தீவுகள் -  என்று அவர் கதை சார்ந்த ஏதேதோ தலைக்குள் ஓட்டமெடுத்து வருகின்றன ! கனவில் அந்தக் கபாலக் குகை வராதது ஒண்ணு தான் பாக்கி ! படைப்பாளிகளிடமிருந்து வந்துள்ளது ஒரு வண்டி எனில், அமேசானிலும், இன்ன பிற மார்க்கங்களிலிருந்தும் வரவழைத்துள்ள தடித் தடி புக்ஸ் இன்னொரு வண்டி ! So கதை படிக்க ; குறிப்பெடுக்க, என்று ஓடும் நாட்களினூடே, எனது பால்யத்து PHANTOM நினைவுகளையும் கொஞ்சமாய் வருடிக் கொள்ள முடிகிறது !! அந்நாட்களில் இந்திரஜால் காமிக்சில் வெளியாகும் வேதாளன் கதைகளை வீட்டுக்கு வெகு கிட்டேயிருந்த கடையினில் வாங்கியது  ; குஷ்வந்த் சிங் அவர்கள் எடிட்டராய்ப் பணியாற்றிய THE ILLUSTRATED WEEKLY OF INDIA வாரயிதழினிலிருந்து வேதாளன் தொடரினைக் கத்தரித்துச் சேகரித்தது ; அதன் பின்னே முத்து காமிக்ஸில் வேதாளன் தலைகாட்டத் துவங்கிய பிற்பாடு ஆபீசுக்கு வந்திடும் ஆங்கில ஒரிஜினல்களை மேய்ந்தது - என்று நிறைய Phantom வாடகை சைக்கிள் moments இருந்துள்ளன தான் - இவ்வாரத்தினில் !  

அதே சமயம் ஒரு சிக்கலுமே இந்தத் தேர்வுப் படலத்தில் இருப்பதை உணர முடிகிறது ! உதாரணத்திற்கு ரிப் கிர்பி தொடரையே எடுத்துக் கொள்வோமே !! இங்கும்  இந்திரஜாலில் இவர் கதைகளைப் படித்துள்ளேன் ; முத்து காமிக்சிலும் படித்துள்ளேன் ; அப்புறமாய் நாமே லயனில் ; மினி லயனில் இந்த ஜென்டில்மேன் டிடெக்டிவை வெளியிட்ட நாட்களில் - லோடு லோடாய்ப் படித்துள்ளேன் தான் ! சொல்லப் போனால், மும்பையிலிருந்த அவர்களின் ஏஜெண்ட்களின் ஆபிஸுக்குப் போக நேரும் போதெல்லாம், அவர்களிடம் கையிலிருக்கும் அத்தனை கதைகளையும் வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாய் இருக்கும் அவர்களது கணக்கரின் மேஜையருகே அமர்ந்து அத்தனையையும் மேலோட்டமாகவாவது வாசித்து, அதனுள்ளிருந்து நாம் வாங்கிடும் கதைகளைத் தேர்வு செய்திடுவேன் ! So இன்றைக்கு மறுக்கா ரிப்போடு சவாரி செய்யும் போது - 'இந்தக் கதையை இதுக்கு முன்னே போட்டுப்புட்டோமா - இல்லியா ?" ; "இதை இதுக்கு முன்னே நான் எங்கே படிச்சேன் ?" என்று மண்டையைச் சொரிய வேண்டிப் போகிறது ! 

ஏழோ / எட்டோ கதைகள் கொண்ட நமது SMASHING '70s  ஆல்பம் ஒவ்வொன்றிலும் - 2 மறுபதிப்புக் கதைகள் & பாக்கி அனைத்தும் புதியனவை என்றே அமைத்திடத் திட்டமிட்டுள்ளேன் ! And அந்த மறுபதிப்புகளுக்கு ஒரிஜினல் மொழிபெயர்ப்பே இருந்தாக வேண்டும், இல்லையெனில் பள்ளிப்பாளையத்திலிருந்து கண்ணைக் குத்த ஒருத்தர் ஸ்கூட்டரிலேயே கிளம்பிப்புடுவார் என்ற பீதி நிரம்பவே இருப்பதால் - பீரோவில் உள்ள பழைய முத்து இதழ்களையும், லயன் இதழ்களையும் உருட்டோ உருட்டென்று உருட்டி வருகிறோம் ! இதோ இப்போது கூட, பட்லர் டெஸ்மாண்டை ஹிப்னாட்டிஸ வசியம் செய்து, ராவினில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்து போய்த் திருடச் செய்திடும் அந்த ரிப் கிர்பி சாகசம் வந்தது லயனிலா ?  மினி லயனிலா ? முத்துவிலா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் !! இதே நோவு காரிகன் கதைகளிலும், மாண்ட்ரேக் கதைகளிலும் தொடர்கின்றது ! முதலில் வேதாளர் கதைகளையும், ரிப் கிர்பி கதைகளையும் தேர்வு செய்து முடித்து விட்டால் - அப்புறமாய் மந்திரவாதி சாரோடும், ஸ்டைலான சீக்ரெட் ஏஜெண்ட் சாரோடும் மல்லுக்கட்ட எண்ணியுள்ளேன் !  நமது ஆரம்ப இதழ்கள் முதலாய்ப் படித்திருக்கக்கூடிய ; நிறைய வெண்டைக்காய்கள் சாப்பிட்டிருக்கக்கூடிய நண்பர்களை அந்நேரத்துக்குக் குடலை உருவ வேண்டியது தான் ! 

And இங்கொரு சமாச்சாரத்தை நான் சொல்லியே தீரவும் வேணும் தான் ! பொதுவாய் ரிவர்ஸ் கியர் போட்டு, க்ளாஸிக் நாயகர்களின் பக்கமாய்ப் பயணிக்கும் வேளைகளில் - பூட்டிக் கிடக்கும் மச்சு அறைக்குள் புகுந்தாற்போல புராதன நெடி சுழற்றியடிப்பது வாடிக்கை ! க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளே அதற்கொரு prime உதாரணம் என்பேன் ! ஆனால் ஆச்சரியத்திலும், ஆச்சர்யம் - இந்த அமெரிக்கப் படைப்புகளில் இது வரைக்குமாவது அந்தப் புராதனம் சார்ந்த சிக்கல்கள் தலைதூக்கக் காணோம் ! திகுடு முகுடாய்க் குவிந்து கிடக்கும் இந்த நாயகர்களின் கதைக் குவியலுள், எந்தக் காலகட்டத்தினில் அதன் best கதாசிரியர்களும், ஓவியர்களும் பணியாற்றியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சித்து, அந்த phase-ல் தேட முனைந்தது maybe இதற்கொரு காரணமாக இருக்கலாம் தான் ; ஆனால் in general - இவர்களது golden years தந்துள்ள கதைகளின் தரம் மெய்யாலுமே மிரட்டுகிறது ! Of course - ஒரு லார்கோவின் நவீனத்தை ரிப்பிடம் எதிர்பார்க்க இயலாது தான் ; ஒரு ஜேம்ஸ் பாண்ட் 2.0-ன் sophistication-ஐ காரிகனிடம் எதிர்பார்க்க இயலாது தான் ; ஆனால் இந்த இருவரின் கதைகளிலும் நிறைய gems இறைந்து கிடப்பதைப் பார்க்கிறேன் ! 

And வேதாளர் & மாண்ட்ரேக்கின் விஷயங்களிலோ, மேட்டர் வேறு விதம் !! TEX சாகசங்கள் ஒரு கண்ணில் பார்த்திரா (வரலாற்று) வன்மேற்கில் அரங்கேறுவதால் எப்படி அங்கே நமக்கு புராதன நெடி உதைக்காதுள்ளதோ - அதைப் போலவே, வேதாளரின் கதைகளுமே இருண்ட கண்டத்தின் ; இருண்ட டெங்காலியில், நடைபெறுபவை எனும் போது - இங்கே பெருசாயொரு timeline தென்படும் அவசியம் இருக்கவில்லை ! Oh yes -  கோட்-சூட்-கண்ணாடி மாட்டிக் கொண்டு "உலகும் சுற்றும் வாலிபன்" போல செம ஸ்டைலாய் வேதாளர் நகருக்குள் புகுந்திடும் தருணங்களில் படைப்பின் timeline தட்டுப்படாது போகாது தான் ; ஆனால் அங்கே  நாம் 'கெக்கெக்கே' என சிரிக்க நேரிடும் நிலையெல்லாம் இல்லை ! 

மாண்ட்ரேக்கோ - முழுக்க முழுக்க ஒரு வித fantasy நாயகர் & கதைக்களங்கள் எல்லாமே எதிர்காலத்தினில் இருப்பது ஜகஜமோ, சகஜம் எனும் போது அங்கே புராதனத்துக்கு spelling கூடப் பார்க்க இயலவில்லை !  என்ன, காதிலே சுற்றும் புய்ப்பங்களைச் சமாளிக்கத் தான் கொஞ்சம் தெம்பு அவசியப்படும் ! 

So காத்துள்ள மீள்வருகை - க்ளாஸிக் நாயகர்களதாய் இருப்பினும், அவர்களோடு பயணிக்கவுள்ளது செம தெறி சாகசங்களே என்பது மட்டும் உறுதி !! கதைத்தேர்வினில் இன்னும் நிறையவே வேலை காத்துள்ளது தான் ; ஆனால் நிச்சயமாய் இந்த SMASHING '70s - SMASH HITS ஆகிடுமென்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உள்ளது !! Fingers crossed !! 

And வேதாளரின் அட்டைப்படத்திற்கென ஒரு  ஐரோப்பிய ஓவியரின் கைவண்ணங்களை ரெடி செய்திடும் படலமும் துவங்கியாச்சு ! So மாஸ் கதைகளோடு ; தெறிக்கும் அட்டைப்படமும் இருக்குமென்று எதிர்பார்க்கலாம் !! இந்த '70s முயற்சிகள் மட்டும் வெற்றி கண்டிடும் பட்சத்தினில் - காத்திருக்கும் காலங்களில் வேதாளரை முழு வண்ணத்தினில் உலவச் செய்திடலாம் தான் ! Fingers crossed once more !!

Anyways - இந்த 4 ஆல்ப SMASHING '70s முன்பதிவினில் இன்னமும் தயக்கம் கொண்டிருப்போராய் நீங்கள் இருப்பின், உங்கள் மனதுகளைத் தாராளமாய் மாற்றிடலாம் என்பதே எனது பரிந்துரையாக இருக்கும் ! நிச்சயமாய் ஹைதர் அலி ஜாடைகள் எங்குமே தட்டுப்படாதென்ற மட்டுக்கு தைரியம் கொள்ளலாம் ! 

ரைட்டு, ஆண்டின் முக்கிய இலக்குகளுள் ஒன்றான ஆகஸ்டின் பாடு ஒரு வழியாய் நிறைவுற்றிருக்க, நமது கவனங்கள் அடுத்ததாய் 2022-ன் அட்டவணை மீதே ! இதோ இன்றிரவு அதன் இறுதிப் படிவத்தை ஒருக்கா பார்த்தாகி விட்டால், அடுத்த சில நாட்களுக்குள் அச்சுக்குத் தயாராகி விடும் ! அட்டவணையின் ஹைலைட்டே முத்து ஆண்டுமலர் # 50 தான் எனும் போது - அதன் மீதான பணிகளும் இனி தட தடக்க வேண்டி வரும் ! அக்கட, இன்னமும் இரண்டே ஆல்பங்களே பாக்கி - மொழிபெயர்ப்பினில் ! So எப்படியேனும் அடித்துப் பிடித்து இந்த மாதயிறுதிக்குள் அந்தப்  பணிகளுக்கு "சுபம்" போட்டு விட்டால், அப்புறமாய் டென்காலியின் கரையோரமாய் ஒதுங்கிட வேண்டியது தான் பாக்கி இருக்கும் ! 

எனது பால்யத்து முதல் சூப்பர் ஹீரோவுக்கு நான் முதன்முறையாய்ப் பேனா பிடித்தது 1981-ல் ......"டிங் டாங்" என்றதொரு சிறார் இதழினில் வந்திடவிருந்த 4 பக்கத் தொடர்கதையின் பொருட்டு ! In fact - தொடரவிருந்த இதழ்களின் பொருட்டு (!!!) மேற்கொண்டும் எழுதிய ஞாபகமெல்லாம் உண்டு தான் ; ஆனால் "டி.டா." - பணால் ஆகிப் போனதால், அந்தப் பக்கங்கள் வெளிச்சத்தைப் பார்க்காமலே மூலை சேர்ந்து விட்டன ! So 14 வயதில் விட்டதை, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பாய் மறுக்கா முயற்சித்துப் பார்க்கவுள்ளது தான் விதியின் நிர்ணயிப்பெனில், அதனை மாற்றிடத் தான் இயலுமா ?  பார்ப்போமே - இரண்டாம் முறையாச்சும் அதிர்ஷ்டம் அரவணைக்கிறதாவென்று !!

Before I sign out - ஒரு வருத்தமான தகவல்  : 

நமது ப்ளூகோட்ஸ் தொடரின் பிதாமகர் ரௌல் கோவான் அவர்கள் நேற்று தனது 82-ம் வயதினில் தீரா புற்று நோய்க்குப் பலியாகி விட்டுள்ளார் ! பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகினில் ரொம்பவே மரியாதைக்குரியவர் ; பல மில்லியன் பிரதிகளின் விற்பனைக்கு சொந்தம் கொண்டாடக்கூடியவர் ; அழகான பகடிகளையே தனது படைப்புகளின் முத்திரையாகக் கொண்டிருந்தவர் - இப்போது இறைவனடி சேர்ந்து விட்டுள்ளார் ! எண்ணற்ற புன்னகைகளை நமக்கெல்லாம் தந்தவர் மேலுலகினில் நிம்மதி காண பிரார்த்திப்போம் ! RIP சார் !

Some updates :

  1. E-ROAD எபெக்டா ? வேறெதுவுமா - சொல்லத்தெரியலை ; ஆனால் லயன் # 400 & சிகப்பாயொரு சிலுவை இதழ்களின் கையிருப்பு தரைதட்டி விட்டுள்ளது  ! So அவற்றில் இனி யாருக்கும் மொத்தமாய் புக்ஸ் அனுப்பிடப்படாது ; இன்னமும் வாங்காதிருக்கும் நண்பர்களின் பொருட்டு அவை நமது ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் தடையின்றிக் கிடைக்கும் ! இது பொருட்டு க்ரூப்களில் பொங்கும் நண்பர்கள் - அந்தப் பொங்கலை - ஆயிரம் ரூபாய்க்கு எனது கோழி கீச்சல் கையெழுத்தைக் கொண்ட டெக்ஸ் இதழின் விற்பனை போலான சமாச்சாரங்கள் பக்கமாய்த் திருப்பிடக் கோருகிறேன் ! நம்மிடம் கையிருப்பில் உள்ள TEX இதழே அது எனும் போது, ஒரு நூறோ, இருநூறோ போட்டுக் கொடுத்தீர்களெனில், பஸ்ஸையோ, ரயிலையோ , மாட்டு வண்டியையோ பிடிச்சு உங்க வீட்டாண்டையே வந்து கூட இன்னொரு கோழி கீச்சல் கீச்சித் தந்து விடுவேன் !
  2. தொடரவுள்ள TEX இதழ்களில் நமது பிரிண்ட் ரன்னை சன்னமாய் கூட்டிட உத்தேசித்துள்ளோம் ! சமீபத்தைய இந்தத் திடீர் சேகரிப்பு மோகங்கள் தொடர்கதையாகிடும் பட்சங்களில், casual வாசகர்கள் பாதிக்கப்படலாகாதே என்பதால் இந்த முன்ஜாக்கிரதை ! அதே சமயம் ஒரேடியாய்ப் போட்டுத் தாக்கி விட்டு தேவுடு காக்கவும் கூடாதென்பதிலும் கவனமாக உள்ளோம் ! 
  3. கொஞ்சமாய் மூச்சு விட அவகாசம் கிட்டும் முதல் தருணத்தினில் டெக்சின் "நெஞ்சே எழு" & "பிரளயப் பயணம்" இதழ்களை இன்னும் கொஞ்சம் தயார் செய்திடவுள்ளோம் ! அவற்றை இன்னமும் வாங்கிடாது இருப்போர், கொஞ்சம் பொறுமை ப்ளீஸ் ! 
Bye all...see you around ! Have a relaxed Sunday !


                                                                  Meme : MKS Ramm !

Monday, August 16, 2021

நாட்கள் 4 ; லட்டுக்கள் 5 !!

 நண்பர்களே,

வணக்கம். நேற்றைக்கு இரவு சேனல்களுக்குள் கதக்களி ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், ஏதோவொன்றில் ஏதோ ஒருவிதப் போட்டிக்கோசரம், ஆளாளுக்கு ஜிலேபி ஜிலேபியாய் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது ! நடுவர்கள் வந்து பார்த்துவிட்டு 'இது ரிஜிட்' என்றால் மறுக்கா சுடணுமாம் ! 'சபாஷ்...சரியான போட்டி' என்று தோன்றியது !!  கைநடுங்க நடுங்க, அந்த amateurs சுடும் ஜிலேபிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்த போது தான் - கடந்த வாரத்தினில் நாம்கூட இதே போலொரு முயற்சியினில் ஈடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது ! ஆகஸ்டின் அத்தனை இதழ்களுமே மெகா இதழ்கள் and ஒவ்வொன்றின் முதுகிலுமே ஒரு வண்டி எதிர்பார்ப்புகள் எனும் போது, நடுவர்களாக நீங்கள் என்ன சொல்லக் காத்திருக்கிறீர்களோ ? என்ற பதைபதைப்பு உள்ளுக்குள் கணிசமாயிருந்தது !!

'தல' தான் ; மாஸ் தான் ; முழுநீளக் கதை தான் ; வண்ணம் தான் ; கெத்தான அட்டைப்படம் தான் - ஆனாலும் உங்களுக்குக் கதை பிடித்திருக்க வேண்டும், தெறிக்கும் வேகத்தில் செய்திருந்த மொழியாக்கம் பிடித்திருக்க வேண்டும் ; தயாரிப்பினில் எல்லாமே set ஆகியிருக்க வேண்டும் ; அட்டைப்படம் நேரில் கெத்து காட்ட வேண்டும் ; and எல்லாவற்றிற்கும் மேலாய் இத்தாலிய மஞ்சச்சட்டைக்காரர் மீது இப்போதெல்லாம் ஒரு மிடறு கூடுதலாகவே நாமெல்லாம் குவித்து வைத்திருக்கும் அபிமானத்துக்கு நியாயம் செய்திட வேண்டும் என்ற டென்ஷன் லயன் 400 இதழினில் !!

XIII தான் ; ஏற்கனவே வெளியான மறுபதிப்புத் தான் ; தடவிப் பார்த்து விட்டு ; முகர்ந்து பார்த்து விட்டு, புரட்டிப் பார்த்து விட்டு, பீரோவிற்குள் துயிலுக்கு அனுப்பிடவோ ; 'வாங்க சார்...வாங்க சார்...சுடச் சுட வாங்கிக்கோங்க சார் !' என்று "காமிக்ஸ் பிரைவேட் சேல்" க்ரூப்பில் கல்லா கட்டிடவோ போகும் 2.75  கிலோ சமாச்சாரம் தான் !! ஆனாலும் , இத்தனை மாதங்களது எதிர்பார்ப்பின் பலன்கள் உங்களைப் பூரணமாய்த் திருப்தி கொள்ளச் செய்திட வேண்டும் ; அச்சில் ; பைண்டிங்கில் ; தயாரிப்பில் உங்கள் முகங்களுக்குப் புன்னகையினைக் கொண்டு வர வேண்டும் எனும் போது இங்கேயும் பிரஷருக்குப் பஞ்சமே கிடையாது !

ஆன்லைன் புத்தக விழா ; ஸ்பெஷல் இதழ்கள் ; யூகிக்கக்கூடிய மறுபதிப்புகளே என்றாலும், அங்கேயும் தல hardcover கலர் இதழ் - எல்லா பெட்டிகளையும் டிக் அடித்தாக வேண்டும் தானே ? So இங்கேயும் எதையுமே taken for granted என எடுத்துக் கொள்ளும் குஷன் லேது நமக்கு ! 

ஜட்ஜ்கள் வரிசையாய், ஒவ்வொரு ஜாங்கிரியையும் ருசித்து ; ரசித்து ; மார்க் போடும் வரைக்கும் தில்லாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் எனக்கு டர் தான் ! And கடந்த நான்கு நாட்களில் ஜிலேபிகள் ஒவ்வொன்றாய்த் தேர்வாகிட, ஒரு கனவை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை எனக்குத் தந்துள்ளீர்கள் guys !! லயன் # 400 கெத்து ; இ.ப. தயாரிப்பினில் கெத்தோ கெத்து ; "சிகப்பாய் ஒரு சிலுவை" புக் இன்னமும் உங்களை எட்டியிருக்கவில்லை என்றாலும், அதுவும் சோடை போயிடாது என்ற நம்பிக்கை - என இந்த triple சந்தோஷங்களோடு - வாரயிறுதியினில் நிகழ்ந்த அந்த 'நல்ல காரியத்துக்கு கைகொடுக்கும்' முயற்சி + ஆன்லைன் புத்தக விழாவின் thumping வெற்றி என, நான்கு நாட்களில், ஐந்து லட்டுக்களைத் தின்ன வாய்ப்புத் தந்துள்ளீர்கள் !! 

First things first !! 

நம்மிடமிருந்த அந்தப் 13 Slipcase (2018) இதழ்களின் விற்பனையினில் முதல் 11 இதழ்கள் - அடையார் மையத்துக்கு நன்கொடையாய் ஈட்டியிருந்தது ரூ.32,400 என்பதை நேற்றே அறிவித்திருந்தேன் ! பாக்கி இருந்த 2 இதழ்களின் சார்பிலும் - "நாங்கள் ஒரு தொகையினை நன்கொடையாக மட்டும் அடையாருக்கு அனுப்பி விடுகிறோம் ; புக் ஏற்கனவே எங்களிடம் உள்ளதால் வேறு யாருக்கேனும் அன்புடன் கொடுத்து விடுங்கள் !!" என்றபடிக்கே முன்வந்துள்ளனர் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் வசித்து வரும் இரு வாசக அன்புள்ளங்கள் !! And இருவரது நன்கொடைகளும் தலா ரூ.10,000 என்ற போது - அடையாருக்கான வாசகப் பங்களிப்பு மட்டுமே ரூ.52,400 என்றாகிறது !!!  Take a bow மகிஜி & கணேஷ் ராஜேந்திரன் சார் from ஆஸ்திரேலியா !! And ஆஸ்திரேலிய நண்பருக்கு நமது இம்முயற்சியினைப் பற்றிச் சொல்லி, அவரை இதனில் பங்கேற்கச் செய்த காமிக் லவர் ராகவன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் !! ஏற்கனவே நமது நிதி திரட்டும் முயற்சிகளிலும் நண்பர் கணேஷ் ராஜேந்திரன் அவர்கள் கணிசமான பங்கெடுத்துள்ளார் என்பது கொசுறு தகவல் ! 

So நண்பர்களின் பங்களிப்பு ரூ.52,400 என்றாக, 13 இதழ்களுக்குத் தலா ரூ.2900 வீதமான விற்பனைத் தொகையினை round off செய்து - ரூ.38,000 இன்றைக்கு நம் சார்பினில் அடையாருக்குச் சென்றாகிவிட்டது !! So வருஷங்களாய் டப்பாக்குள் துயின்று கிடந்த 13 இதழ்களின் வாயிலாய் ஒரு நற்காரியத்துக்கென ரூ.90,400 புரட்ட முடிந்துள்ளது இந்த வாரயிறுதியினில் !! And நாளை இன்னொரு தொகையும் நம்மிடமிருந்து செல்லவுள்ளதெனும் போது - கனவாய் மட்டுமே தென்படுகிறது உங்களின் உத்வேகப் பங்களிப்புகள் !! Simply awesome folks !!! 

Moving on to the லட்டு # 5 - என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு !! இது வரையிலுமான நமது ஆன்லைன் புத்தக விழாக்களின் போது - தூரத்தில் நின்று பராக்குப் பார்த்து விட்டு, விற்பனை நம்பர்களை மட்டுமே கேட்டுக் கொண்டு நகர்ந்திடுவேன் ! ஆனால் இம்முறை ஜிலேபி சார்ந்த டென்க்ஷன் உள்ளுக்குள் இருந்ததாலோ, என்னவோ, இயன்ற அளவுக்கு நேரம் செலவிட முனைந்தேன் நம்மவர்களோடு ! And மெய்யாலுமே எனக்கு வியர்த்துப் போய்விட்டது உங்களின் திக்கு முக்காடச் செய்த உற்சாக வரவேற்பினில் !! கணிசமான (ரெகுலர்) புத்தக விழாக்களுக்கு வந்திருக்கிறேன் தான் ; வாரயிறுதிகளில் அலை மோதும் கூட்டங்களில் நமது ஸ்டால் திணறுவதையும் பார்த்திருக்கிறேன் தான் ! ஆனால் அவையெல்லாமே ஜுஜுப்பி தான் - கடந்த 2 நாட்களின் உங்களின் ரகளைகளுக்கு முன்னாள் ! பல்லாயிரங்களில் ஜனம் வந்து போகும் பெருநகர புத்தக விழாக்களில் கணிசமான கூட்டம் சேர்வதில், கூரையிலேறிக் கூவிடும் வியப்புகள் இல்லை தான் ; ஆனால் ஒரு virtual விழாவினில், தொலைவிலிருந்தபடியே இத்தனை வேகத்தை ; உத்வேகத்தை உண்டாக்குவதென்பது ஒரு ராட்சச சாதனை என்பேன் !! 

சனிக்கிழமை காலையில் அடிக்கத் துவங்கிய போன் மாலை ஏழு மணிக்கு நம்மாட்கள் கிறங்கிப் போய்க் கிளம்பும் வரைக்கும் அடித்துக் கொண்டேயிருந்தது !! ஞாயிறோ இன்னொரு உச்சம் !! மதியம் சாப்பிட அமரும் போது மட்டும் செல்லை அணைத்து விட்டு, 15 நிமிடங்கள் கழித்து ஆன் செய்து பார்த்தால் நூற்றிச் சொச்ச வாட்சப் மெசேஜஸ் !! உள்நாட்டிலிருந்து, வெளிநாட்டிலிருந்து என்று எங்கெங்கிருந்தோ நண்பர்கள் அழைக்க, அத்தனை பேரையும் ஏதோ வருஷமாய் நேரில் தெரிந்து வைத்திருப்பவர்களை போல நலம் விசாரித்து ; ஆர்டர் கேட்டு நம்மாட்கள் மூவரும் இயங்கியதை நான் வெறிக்க வெறிக்கத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் !! அத்தனை பேரின் ஆர்டர்களிலும் டெக்ஸ் இருந்தார் ; இம்முறை கணிசமானோரின் ஆர்டர்களில் லார்கோவும் இடம்பிடித்திருந்தார் ; சில பல இறுக்கமான சீன்ஸ் இமான்தார்கள் (இ.சீ.இ) கார்ட்டூன்களுக்காய் ஆர்டர் செய்திருந்தனர் ! ஆங்கில காமிக்ஸ் ஆர்டர்களும் இருந்தன ; SMASHING 70 s பற்றிய விசாரிப்புகள் ரவுண்டு கட்டின ; "இ.ப" இல்லியா ? என்ற கேள்விகள் காதில் உதிரம் கொட்டுமளவுக்கு இருந்தன !! மாலை ஆறரைக்கு மேல் ஆளாளுக்கு அறிஞர் அண்ணாவின் வாய்ஸில் பேச ஆரம்பிக்கும் நிலை தென்பட, செல்களை அணைத்து விட்டு, E -ROAD 2021-க்கு மங்களம் பாடிவிட்டு நம்மவர்கள் கிளம்பிய பின்னேயும் land line கதறிக் கொண்டே இருந்தது !! And இன்று, திங்கட்கிழமையின் முழுமையிலும் கிட்டத்தட்ட அதே கதை தான் !! "நேற்றைக்கு லைன் கிடைக்கலை ; என் ஆர்டர் இதெல்லாம்" - என்று பிரித்து மேய்ந்து விட்டீர்கள் guys !! பாக்கெட் போட்டுக் கொண்டே இருந்தார்கள் மாலை ஏழு வரையிலும் & இன்னும் ஒரு வண்டி ஆர்டர்கள் தொக்கி நிற்பதும் தெரியும் எனக்கு !! 

இந்த விற்பனைகளினில் - வாசிக்க எவ்வளவு சதவிகிதம் ? தெரிந்தோருக்கு வழங்கிட எத்தனை சதவிகிதம் ? சேகரிப்புக்கு எத்தனை சதவிகிதம் ? நம் மீதான பரிவின் காரணமாய் வாங்கியிருப்பது எத்தனை சதவிகிதம் ? என்பதை மட்டும் கண்டறிய ஒரு மாயக்கண்ணாடி இருப்பின், அமேசானில் முதல் வேலையாக அதற்கு ஆர்டர் போட்டிருப்பேன் ! எது எப்படியோ - இந்த இரு நாள் மேளாவின் பலனாய் கிட்டங்கியின் பளு சன்னமாய்க் குறைந்திருக்கலாம் தான் ; ஆனால் இத்தனை அன்பினைக் கடனாகப் பெற்றிருக்கும் வகையில் எனக்குள்ள பொறுப்புகளின் பளு பன்மடங்கு கூடியிருப்பதாய்த் தோன்றுகிறது !! ஜெய் பாகுபலி !! உங்களின் அன்புகளுக்கு நியாயம் செய்திடும் ஆற்றலை புனித மனிடோ எங்களுக்கு அருள்வாராக !! 

அடுத்த சில நாட்களாவது ஆகும் - நம்மவர்கள் இந்த ஆர்டர்கள் முழுமையினையும் அனுப்பி முடித்திட !! அதற்குள் நான் புதுசாய் SWEET '60s என்றோ ; EXCELLENT '80s என்றோ ; "நின்னுக்கோரி '90s" என்றோ - எதையேனும் இழுத்து விட்டிருக்கக்கூடாதே என்று  கருப்பசாமி கோயிலுக்குப் போய் கறுப்புக் கயிறு கட்டியபடியே அவர்கள் வேண்டியிருந்தாலும் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் !!  அசாத்தியமான நீங்கள் ; அசாத்தியமான நாட்கள் & அசாத்தியமாய்க் கையாண்ட பெருமை நம்மவர்களையே சாரும் !! THANKS A TRILLION ALL !!!

Before I sign out - சுடச் சுட கூரியர் டப்பிக்களை உடைத்த கையோடு "இ.ப" இதழ்களை ஏலம் போட புதுசாக திரை மறைவைத் தேற்றியுள்ள "ஆர்வலர்களுக்கு" ஒரு update :    "கழுகு வேட்டை" சுத்தமாய் துடைத்தாச்சு ; அதைக் கோரி ஒரு நூறு போன்களும் வந்தாச்சு ! So நாளை முதல் கத்திரிக்காய் ; வெண்டைக்காய்களோடு - "கழுகு வேட்டை" களையும் ஷாப்பிங் கூடைக்குக் கொணர இப்போதே ஏலேலோ - ஐலசா என நீங்கள் தயாராகிக் கொள்ளலாம் ! உங்கள் முகங்களை அச்சிட்டு, ஒரு பரோபகார நண்பர் விலையின்றித் தர ஒரு லட்சம் பணஉதவியும்  செய்திட்ட இந்த இதழிலும் இனி நீங்கள் கல்லா கட்டிட ரூட் செம க்ளியர் !! ஒரு பக்கம் - "எனக்கு புக்கே வேணாம் ; ஆனால் ஒரு நல்ல காரியத்துக்கு என்னால் இயன்றதைத் தருகிறேன்' - என ஓசையின்றி செயல்படும் பிரசன்னாக்களும், மஹேந்திரன்களும், கணேஷ் ராஜேந்திரன்களும் இருக்கும் இதே வட்டத்தினுள் - நீங்களுமே இருப்பது, வானவில்லின் வர்ணஜாலத்துக்கு ஒப்பாகிடும்  தானே ? So ஜமாயுங்கள் நட்பூஸ் !! 

அதே சமயம் "இ.ப" இதழ்களுக்கென காசைக் கரியாக்கிட முனைப்பு காட்டிடும் நண்பர்களே !! ஒரு முகவரிடம் கணிசமான அளவுக்கு உபரி இதழ்கள் உள்ளன & அவர் ஏலமிடும் பார்ட்டியும் அல்ல ! ஒரிஜினல் விலைக்கே விற்றால் போதுமென்ற எண்ணத்தினில் உள்ளார் ! So காசைச் சூறை போடும் முன்பாய் கொஞ்சமாய் யோசித்துக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே எனது வேண்டுகோள் ! And அவர் யாரென்ற கேள்விகளோடு நாளை நம்மவர்களைத் துளைக்க வேண்டாமே - ப்ளீஸ் ; because அந்த சமாச்சாரங்களை நான் மட்டுமே கையாள்வதாய் உள்ளேன் ! நம்மாட்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது !! 

அப்புறம் டெக்ஸ் இதழ்கள் காலமாய் நம்மிடம் கையில் உள்ள போதெல்லாம் வாங்காது இருந்து விட்டு, இப்போது மூன்று மடங்குகளுக்கு விலை தரும் நண்பர்களுக்கும் ஒரு தகவல் : பொறுமை ப்ளீஸ் ; உங்கள் தேடல்களுக்கு சீக்கிரமே நியாயமான பலன்கள்  கிட்டாது போகாது ! So careful please !!

Time for me to sign out folks !! பொதுவாய் இங்கே நமது பொம்ம புக் & அவை சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி பெருசாய் வேறெதைப் பற்றியும் நான் எழுத முனைவதில்லை ! ஆனால் ஆப்கனிஸ்தானிலிருந்து இன்று வந்து கொண்டிருக்கும் வீடியோ க்ளிப்பிங்களையும், படங்களையும், தகவல்களையும், உள்வாங்கிடும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குகிறது ! அதிலும் இன்றைக்கு காபூல் விமான நிலையத்திலிருந்து வந்திடும் படங்கள் சத்தியமாய் கண்ணில் உதிரத்தை வரச் செய்கின்றன ! இத்தனை ஜனமும் ஒட்டுமொத்தமாய் என்ன பாவம் செய்தனரோ - இப்படியொரு தலையெழுத்துக்கு ஆளாகிட ! தெய்வமே...அவசரமாய் இந்த அப்பாவிகளின் கண்ணீரைத் துடையுங்களேன் என்பதைத் தாண்டி இந்த நொடியினில் வேறெதுவும் தோன்றவில்லை !  

Bye all...see you around !! 

Saturday, August 14, 2021

காலியான அறைக்குள் நிறைவாய்...!

 நண்பர்களே,

வணக்கம். ஒரே நேரத்தில் காலியாகவும், நிறைவாகவும் உணர்ந்திட இயலுமா ? முடியும்ங்கிறேன்....!! ஒண்ணு இல்லை...ஆனா இருக்குங்கறேன் ! எப்புடின்னு நீங்க கேக்கவே கேக்காட்டியும்,நான் சொல்லியே தீருவேனே !! 

மாலை 6 மணி சுமாருக்கு ஆபீசுக்கு சும்மா எட்டிப் பார்ப்போமே என்று போயிருந்தேன். மாடியில் அத்தனை பேருமே கேம்ப் அடித்திருக்க, கீழே நிசப்தம் ! எனது ரூமுக்குள் போய் லைட்டைப் போட்டால் - ரூமே காலியாய் ; வெறிச்சோடிக் கிடப்பது போல் சுத்தமாய் பள பளத்தது ! இந்த வாரத்தின் துவக்கம் முதலாய் நம்ம XIII & பட்டாளம் எனது அறையினை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருக்க - தொடர்ந்த ஒவ்வொரு நாளிலும் அங்கேயே அமர்ந்து புக்ஸை சரி பார்ப்பது ; பபுள் ராப் செய்வது ; பேக் செய்வது ; அட்ரஸ் ஓட்டுவது - என நம்மவர்கள் பணி செய்து கொண்டிருந்தனர் ! ஆனால் நேற்றைக்கு XIII முன்பதிவுப் பிரதிகளின் முழுமையும் புறப்பட்டிருக்க, இன்றைக்கு முகவர்களின் ஆர்டர் அனைத்தும் கிளம்பியிருக்க, இப்போது அறையினுள் மேஜையும், நாற்காலிகளும், வித வித பாஷைகளிலான காமிக்ஸ்களும் மட்டுமே உள்ளன !! 

காலியானது அறையாக இருந்தாலும், உள்ளே சென்று அமர்ந்த போது மனசில் ஒருவித நிறைவு !! Of course - இது மறுபதிப்புக்கு மறுபதிப்புக்கு மறுபதிப்பு தான் ; எப்போதோ ஒரு சமயம் துவங்கி, எப்போதோ ஒரு வேளையில் நனவாகியுள்ளது தான் ; அட்சர சுத்த நகலுமே தான் ; and நாம் பார்த்திடும் முதல் பெரிய இதழும் அல்ல தான்  ! ஆனால் இத்தனை பெரியதொரு தேரை இழுத்துக் கொணர்ந்து எல்லை சேர்க்கும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ந்திட வேண்டியதொன்று தானே ? 

தவிர, நேற்று முதலாய் இங்கு நாம் சாட்சியாக இருந்து வருவது அசாத்தியமானதொரு  ஈகைப் பிரவாகத்திற்கு ! இங்கே காமிக்ஸ் ரகளைகளை ஒருநூறுவாட்டி பார்த்திருப்போம் ; கையைப் புடிச்சி இழுத்தியா ? பஞ்சாயத்துக்களோடு இருநூறுவாட்டி குப்பை கொட்டியிருப்போம் ; ஏதேதோ அலசல்கள் உற்சாகங்களில் திளைத்திருக்கிறோம் ! And yes - சுகவீனங்களில் சங்கடப்பட்டு வந்த நண்பர்களுக்கென நாம் பணம் திரட்டிட முயன்றுள்ளதுமே பல முறைகள் நிகழ்ந்துள்ளன தான் ! ஆனால் நேற்று முதலாய் நண்பர்கள் இங்கே கரங்கள் சிவக்கக் காட்சி தந்திடுவது இரு காரணங்களின் பொருட்டு என்று எனக்குப்பட்டது ! முதலாவதும், பிரதானமானதும்  : அசாத்திய மருத்துவச் சேவை செய்து வரும் ஒரு அமைப்புக்கு தம் சிறு பங்கினைச்  செய்திட, இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள நண்பர்கள் முன்வந்தது ! இரண்டாவதும்  & நமது காமிக்ஸின் பார்வைக்கோணத்தினில் significant ஆனது : வாசிப்பினில், வணிகம் ஒரு இடராகிட அனுமதிக்கலாகாது என்பதை highlight செய்திட முனைந்தது என்பேன் !  Of course, 'காதிலே புகை கழகம்' இதனில் மாற்றுக் கருத்து கொண்டிருக்கும் தான் & இந்த ஒற்றை நாளினில் சகல 'ஏலேலோ ஐலசா' நிகழ்வுகளும் காற்றில் கரைந்து போய்விடவும் போவதில்லை தான் ! In fact - 'நீயென்ன சொல்றது ? நான் என்ன கேக்குறது ?' பாணியினில் எதிர்வினையாற்றும் முனைப்புகள் வேகமெடுக்கும் என்பதை யூகிப்பதிலும் சிரமங்களில்லை தான் ! ஆனால் எல்லா மாற்றங்களுக்கும் ஏதேனுமொரு புள்ளியில் துவக்கம் இருந்திடத் தான் வேணுமெனும் போது - அந்தப் புள்ளியை நண்பர்கள் தங்களின் தயாளங்கள் வாயிலாக அழகான கோலமாய்ப் போட்டிருப்பது எனக்கு அளவிலா மனா நிறைவைத் தந்துள்ளது ! சம்பந்தமே இல்லாதோர் கூட, தெருவில் ஒரு அழகான மாக்கோலம் போடப்பட்டிருக்கும் போது, அதனை மிதிக்காது சுற்றிப் போக முனைவதுண்டு தானே ? அது இங்கே கிஞ்சித்தேனும் நடந்திடாது போகாதென்ற நம்பிக்கையினை இன்றைய பொழுது விதைத்துள்ளது !

இதோ, இப்போது வரையிலும் போணியாகியுள்ள 11 புக்ஸ் நிகழ்த்தியுள்ள மாயாஜாலம் இது :

அடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும்  நன்கொடைத் தொகை : ரூ.32400 !! 

நண்பர்களின் தயாளங்களுக்கான புண்ணியங்கள் அவர்களையே சார்ந்திட வேண்டுமென்பதனாலேயே, நான் பணத்தினை நேரடியாகவே அங்கு அனுப்பிடச் சொல்லிக் கோரியிருந்தேன் !!

Here are the donors :

1.Mr.Shanthakumar, Chennai.

2.Mr.Sathya Sainath, Chennai

3.*************** (name withheld on request)

4.Mr.Srinivasa Raghavan, Chennai

5.Master.Kanishk, Srirangam.

6.Mr.Prem, Nagercoil / U.S.A.

7.Mr.Kumar Raghavan, Salem.

8.Mr.Sanjay, Chennai.

9.Dr.Rajesh Ranganathan, Chennai.

10.Mr.Sundarapandian, Nellai

11.Mr.Gautham

And ரூ.2900 வீதம் 11 புக்சின் பொருட்டு நமக்கு வந்துள்ள / வந்து கொண்டுள்ள தொகை - ரூ.31900 !! இந்தத் தொகையானது நாளையே  சன்ஷைன் லைப்ரரியின் பெயரினில் அடையாருக்கு அனுப்பிடப்படும் !

And திங்களன்று உங்கள் சார்பினில் + பிரகாஷ் பப்ளீஷர்ஸ் சார்பினில் இன்னொரு தொகை அடையாருக்கு புறப்பட்டிடும் - இந்த நடப்பு இ.ப. புராஜெக்டின் பணத்திலிருந்து !! Thanks a million : அத்தனை நண்பர்களுக்கும் !! 

இந்த சிந்தனை போதாதா - ஒரு காலி அறையின் நிசப்தத்திலும், நிறைவாய் உணர்ந்திட ?! என்ன ஒரே சிக்கல்  - 'ரூமை மறுக்கா ரொப்பிப் பார்க்க இன்னா செய்யலாம் மன்னாரு ?'ன்னு மனசு கேட்கும் போது தான் பதில் சொல்ல முழிச்ச பிழைப்பாய்ப் போகுது ;  கட்டைவிரல்கள் நமைச்சல் எடுக்கிறா மெரியே தோணுது !! And அதுக்கோசரம் ஒரு திட்டமிடல் லேசாய்த் துளிர் விடவும் துவங்கியுள்ளது - வரும் நாட்களில் அதனை நனவாக்கிட புனித மனிடோ அருள்புரிவாராக !!  

அப்புறம் இன்று காலை முதலாய் ஆபீசில் நடந்து வரும் E ROAD ஆன்லைன் புத்தக விழா - ஒரு smashing success !! காலையில் ஒரு ரெண்டு மணி நேரம் ; மாலையில் ஒரு மணி நேரம் நம்மவர்களோடு  அமர்ந்திருந்தேன் !! Phewwwwwwwww !!! தாரை தாரையாய் தக்காளிச் சட்னி அந்த அறையெங்கும் ஒவ்வொருவரின் காதிலிருந்தும் வழிந்திடாத குறை தான் என்றாலும், அடுத்த போன் அழைப்பிற்கு அதே புன்னகையோடு அவர்கள் தயாராவதைப் பார்க்கும் போது மெய்யாலுமே பெருமையாய் இருந்தது ! "நான் தென்..நான் தென்..." என்று சொட்டைத் தலையை முன்னே நீட்டிக்க கொண்டு நிற்கும் வாய்ப்பு எனதாகிடும் போது, நான் பணிகளின் பொருட்டு மெனெக்கெடுவதில் பெருசாய் வியப்புகளில்லை தான் ! ஆனால் சொற்பமோ, ஜாஸ்தியோ - வாங்கும் சம்பளங்களுக்கு உண்மையாய் ; வாசகர்களின் ஆவல்களைப் புரிந்து கொண்டு, இயன்றமட்டிலும் யார் மனதும் நோகிடாது பணியாற்றுவதென்பது சாமான்யக் காரியமில்லை !! And பொதுவாய் நான் அருகே இருக்கும் பட்சங்களில் 'சொடலைமுத்து ரொம்ப ஸ்டிக்கட்டுப்பா !" என்ற பயத்தில் பணிகளில் கவனம் செலுத்தத் திணறிடுவார்கள் ! So இதற்காகவே நான் 'மாசா மாசம் பொழியுதா மழை ?" என்ற கேட்ட கையோடு எனது அறைக்குச் சென்றுவிடுவேன் தான் ! ஆனால் இன்றைக்கு இந்த Slipcase XIII புக்ஸ்களை  அனுப்பும் பணியினையும் அவர்கள் தலைகளில் சுமத்திட வேண்டாமே என எண்ணியவனாய் அங்கே இருக்க வேண்டிப் போனது ! And உங்களின் ஆர்வங்கள், துள்ளல்கள், என சகலத்தையும் ஒரு ஓரத்திலிருந்து பார்க்க / கேட்க முடிந்த போது - நேரம் போனதே தெரியலை !! End of the day - உங்கள் ஒவ்வொருவரின் காமிக்ஸ் நேசங்களும்,  இறைவன் நஇந்த காமிக்ஸ் சிறுவட்டத்திற்கென  தந்துள்ள பிரத்யேக வரம் என்பதைத் தாண்டி இந்த நொடியில் வேறெதுவும் சொல்லத் தோணலை !!  

ரைட்டு...தடி தடியாய் ; கலர் கலராய் ஒரு வண்டி புக்ஸை கையில் ஏந்தியிருக்கும் உங்கள் மீதே இனி limelight ! அலசுங்கள்...ஆராயுங்கள் guys ; நான் "அந்தியும் அழகே" தாத்தாஸ் கூட கரம் கோர்க்கக் கிளம்புகிறேன் !! Bye all ; see you around !! அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! And நாளைய பொழுதையும் நமது புத்தக விழாவுக்கு மெர்ச்சலூட்டும் தினமாக்கிட உங்களைக் கோரியபடிக்கே  I am அப்பீட் ! Have a Safe Sunday !!

P.S : எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ? 

Friday, August 13, 2021

ஒரு படலத்தின் கதை !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு பேரிடரின் துவக்க நாட்களில் துவங்கியதொரு 'மறுக்காகாகா' முயற்சியானது, இதோ இன்று நிறைவு காண்கிறது ! பதின்மூன்றை அடையாளமாய்க் கொண்ட நமது ஜேசனின் last hurray கூட ஒரு பதின்மூன்றில் அமைவது தான் விதியின் வேடிக்கை வரிகள் போலும் ! 

Finally, இன்றைய கூரியர்களில் இரண்டே முக்கால் கிலோ எடையிலான புக்ஸ், reinforced  டப்பிக்களில் இங்கிருந்து ரொம்பச் சீக்கிரமே கிளம்பி விட்டன - நாளைய பொழுதில் XIII உங்கள் இல்லக்கதவுகளை தட்டிட ஏதுவாக ! (அதாவது, கூரியர்காரவுக சொதப்பிடாத பட்சங்களில் !) இம்முறை பயன்படுத்தியிருக்கும் டப்பிக்கள், காசுக்கேற்ற வலுவோடு இருப்பதால், கூரியர்காரர்கள் கும்மாங்குத்து குத்தினாலொழிய தாக்குப் பிடித்திடும் ! And ஒவ்வொரு புக்கையுமே பொறுமையாய் கைபார்த்து அனுப்பிட, நமது பைண்டிங் நண்பர் இம்முறை முனைந்துள்ளார் ! So hopefully - சிக்கல்கள் இருந்திடக்கூடாது ! புனித மனிடோ...காப்பீராக !!

And here you go - இந்த 2 ஆல்ப மறுபதிப்பின் அட்டைப்பட முதற்பார்வை !! இரண்டுமே அமரர் வில்லியம் வான்சின் ஒரிஜினல் சித்திரங்களே ; ஆனால் ஆல்பம் இரண்டினில் மட்டும் டிசைனுக்கு நாம் சற்றே மெருகூட்ட முனைந்துள்ளோம் ! And இரு அட்டைப்படங்களுக்குமே வழக்கம் போல நகாசு வேலைகளில் இம்மியும் குறை வைத்திருக்கவில்லை ! So நாளைய பொழுதினில் புக்ஸ் உங்களை எட்டிடும் போது வர்ண ஜாலங்களுக்குப் பஞ்சமிருந்திடாதென்று நினைக்கிறேன் ! Fingers crossed !!

So ஓராண்டுக்கும் மேலாய் கைகளில் வைத்திருந்த உங்கள் பணத்திற்கான பொருளை ஒரு வழியாய் அனுப்பி விட்ட சன்னமான திருப்தியுடன் அடுத்த பணிக்குள் முனைப்பாகிட முயற்சிக்கிறேன் ! And அட்டையினில் "XIII" என்று போடுவதா ? "13" என்று போடுவதா ? என்ற பஞ்சாயத்துக்கு படைப்பாளிகளே தீர்வு சொல்லி விட்டதால், என் சிரம் தப்பிச்சூ ! "இது முதல் சுற்றின் மறுபதிப்புக்கு மறுபதிப்பே  எனும் போது பழைய பாணியிலேயே XIII என்று போட்டுக் கொள்ளுங்கள் !" என்று சொல்லிவிட்டார்கள் ! So அதன் பொருட்டு துடைப்பங்களை உணரும் அவசியமின்றிப் போனது எனது அதிர்ஷ்டம் ! 

அதே அதிர்ஷ்டம் தொடரும் நாட்களிலும் தொடர்ந்தால் மகிழ்வேன் - simply becos இறுதி ஒரு வாரத்தினில் "இ.ப." தேடி அலைபாய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை ரொம்பவே கணிசம் ! So புக்ஸ் சுற்றுக்கு வந்தான பின்னே, ஒரு கணிசமான எண்ணிக்கை 'ஏலேலோ ஐலசா ' என க்ரூப்களில் ஏலங்களுக்கு வந்திட முகாந்திரங்கள் இருப்பதாய் எனக்கு சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன ! முன்பதிவுகளுக்கு எத்தனை அவகாசம் தந்து, எத்தனை குரல் கொடுத்தாலுமே நண்பர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதையும், அப்புறம் தண்ட விலைகளுக்கு வாங்க நேர்வதையும்  சங்கடத்தோடே பார்க்கிறேன் ! சேகரிப்பாளர்கள் அரிய இதழ்களை லாபத்திற்கு விற்பது உலகெங்கும் நடைமுறையே ; அவர்கள் அதனில் பார்த்திடக்கூடிய இலாபங்களிலும் எனக்கு கிஞ்சித்தும் நெருடல்களுமில்லை ! ஆனால் இங்கேயோ போன மாசத்து புக்ஸும், முந்தைய மாதத்து புக்ஸும் இந்தக் கூத்துக்களுக்கு ஆளாகிடத் துவங்குவதைப் பார்க்கும் போது, ரசிக்க மாட்டேன்கிறது ! 'எப்படியோ - எனக்கு இடம் காலியானால் சரி தான்' என்று நான் இன்றைக்கு ஒதுங்கிடும் பட்சத்தில்  - இந்தப் போக்கானது, நாளை நம்மையே பதம் பார்த்திடக்கூடும் என்பதால், தொடரும் நாட்களில் சில நடைமுறை மாற்றங்கள் வந்திடவுள்ளன ! அவற்றைப் பற்றி நானிங்கு டமாரம் போடப்போவதில்லை ; ஆனால் சீக்கிரமே அவற்றின் பலன்களை நீங்கள் பார்த்திடுவீர்கள் ! 

ஏலமென்ற தலைப்பினில் இருக்கும் வேளையில், ஒரு சுவாரஸ்யமான விஷயமுமே !!

2018-ல் slipcase சகிதம் வந்த மூன்று தொகுப்பு இரத்தப் படலம்  வெளியீட்டுக்கு பிரெஞ்சு அமைச்சகமானது நமக்கு ஒத்தாசை செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் !  அதன்படி, புக்சினை  நாம் வெளியிட்ட பிற்பாடு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாதிரிகளை  அவர்களுக்கு அனுப்பிட வேண்டி வரும்  - அவர்களது நூலகத்தில் ஆதாரங்களாய்ப் பத்திரப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ! So மூன்று பெரிய பார்சல்களில் slipcase சகிதம் புக்சினை அனுப்பியிருந்தோம் - டில்லியிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்துக்கு ! ஆனால் இத்தனை பருமனான இதழ்களில், இத்தனை புக்ஸ்களைப்  பத்திரப்படுவது எங்களுக்கு அவசியப்படாதென்று சொல்லி ஒரு பார்சலை உடைக்காமலே தூதரகத்திலிருந்து திருப்பி அனுப்பி விட்டனர் - ஒரு மாதம் கழித்து !  அவ்விதம் ரிட்டர்ன் வந்த பார்சலை உடைக்காமலே ஆபீசில் அந்நாட்களில் பத்திரப்படுத்தி விட்டோம் - பின்னாட்களில் ஏதேனுமொரு விசேஷத் தருணத்தினில் நண்பர்கள் யாருக்கேனும் பணம் புரட்டிடும் அவசியம் எழுந்திடும் பட்சத்தில், இவற்றை ஏலப்பொருள்களாக்கிடலாமே அல்லது பரிசுகளாக்கிடலாமே என்ற எண்ணத்தினில் !  நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமார் அவர்களின் வைத்தியத்துக்கு நெருக்கடி நேர்ந்த சமயம் இதனை முன்னெடுக்க எண்ணினேன் ; ஆனால் நண்பர் J.S. ஒரு ஸ்பைடர் பிரியர் என்று கேள்விப்பட்ட போது "சர்ப்பத்தின் சவால்" இதழினை அவருக்கொரு tribute + fundraiser ஆக உருவாக்கிட தீர்மானித்தேன் ! இப்போது சமீபமாய் நமது ஓவியர் மாலையப்பன் குடும்பத்திற்கென பணம் திரட்ட முனைந்த போது கூட, இந்த நினைப்பு எழுந்தது தான் ; ஆனால்  நண்பர்களில் சிலர், பெரும்தொகைகளை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தாமாகவே அனுப்பித் தந்திட, இந்த slipcase சகித "இரத்தப் படல" பார்சலை உடைக்கவே அவசியமாகிடவில்லை ! 

இப்போது, ஒரு வழியாய் அதற்கடுத்த இ.ப. version கூடத்  தயாராகியிருப்பதால் - 2018-ன் அந்தப் பார்சலை உடைத்து அதனிலிருக்கும் 13 இதழ்களையும் (!!!) இப்போது வெளியெடுக்கும் எண்ணம் தலைதூக்குகிறது  ! இவற்றிலிருந்து கிட்டிடக்கூடிய முழுத் தொகைகளையுமே அடையார் புற்று நோய் மையத்துக்கு,நாம் ஏற்கனவே அனுப்பிடவுள்ள தொகையுடன் சேர்த்து அனுப்பிட எண்ணியுள்ளேன் ! ஆனால்...ஆனால்...அந்த முயற்சியினில் என்னைத் தயங்கச் செய்வது சமீப நாட்களின் 'திருநெல்வேலிக்கே அல்வா' நிகழ்வுகள் தான் ! 

இக்கட நம்மிடமே, உண்டான விலைகளில் புக்ஸை வாங்கிய கையோடு, கடை, கண்ணிகள் எதற்குமே விநியோகிக்காது, கொஞ்ச காலத்துக்கு அவற்றைப் பத்திரமாய் ஆறப் போட்டுவிட்டு, அப்புறமாய் சாவகாசமாய் ஆங்காங்கே உள்ள  க்ரூப்களில் மும்மடங்கு விலைகளுக்கு, சிறுகச் சிறுக ஏலம் விடுவதே ஒரு செம வியாபாரமாய் நடைபெற்று வருகிறதென்பதை நண்பர்கள் நம் கவனங்களுக்குக் கொணர்ந்துள்ளனர் - கடந்த சில தினங்களாய்  ! மெய்யாலுமே கிடைத்தற்கரிய இந்த slipcase இ.ப. விஷயத்திலும் நம்மைப் பிராந்தன்களாக்கிடும் வேலைகள் நடந்திடக்கூடாதே என்ற ஆதங்கம் மண்டையை நோவச் செய்கிறது !  So  மறு வணிகங்களுக்குப் பயன்படுத்திடாது, மெய்யாகவே வாசிப்பின் பொருட்டு தேடி வரும் தீவிர ரசிகர்களின் கைகளுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க எண்ணுகிறோம் ! 

ஊருக்குள் யார் என்ன செய்தாலும் சரி, என்ன மாதிரியான கொள்ளை விலைகளில் விற்றாலும் சரி, நாம் அதே மாக்கான்களாய், உண்டான அதே  விலையினில் தான் விற்றிடவுள்ளோம் ! கூரியர் கட்டணம் சேர்த்து தலா ரூ.2900 கிட்டினால் இந்த 13 இதழ்களையும் சந்தோஷமாய் விற்றிடுவோம் ! But please note : இதழின் விலைகளோடு அடையார் புற்று நோய் ஆராய்ச்சி மையத்துக்கு நன்கொடையாய் ஏதேனுமொரு தொகையினைத் தந்திட முன்வரும் நண்பர்களுக்கே இந்த புக்சினில் முன்னுரிமை வழங்கப்படும் ! 

So all you need to do is this :

***இங்கேயோ, அல்லது நமது மின்னஞ்சலிலோ - இதழின் கிரயத்துக்கு மேலாக நன்கொடையாய் நீங்கள் தந்திட எண்ணும் தொகையினை மட்டும் "DONATE 500" ; "DONATE 1000" என்ற ரீதியில் குறிப்பிட்டுப் பதிவு செய்தால் போதும். நன்கொடையானது பல்லாயிரத்தில் , பெரும் தொகையாய் இருந்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்பெல்லாம் நிச்சயமாய் நமக்குக் கிடையாது ; இதே புக் ஒரு க்ரூப்பில் ஏலத்துக்கு வந்தால் நீங்கள் என்ன தந்திட நினைப்பீர்களோ, அதனையே இங்கே நீங்கள் தெரியப்படுத்தலாம். நீங்கள் தந்திட முன்வரும் பணமானது, யாரது பாக்கெட்களையும் ரொப்பிடாது ; மாறாக ஒரு நற்காரியத்துக்கே பயன்படுமென்ற திருப்தி இங்கே போனஸ் !

** வரும் ஞாயிறு காலை (Aug 15th) வரையிலும் மட்டுமே இதற்கான அவகாசம் !

***கூடுதலாய் நன்கொடை தந்திட முன்வருவோர் யாரென்பது தீர்மானமான உடனே அந்தப் பத்துப் பேருக்குமே அடையார் புற்று நோய் ஆய்வு மையத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அனுப்பித் தருவோம்.

***அவர்களே நேரடியாய் அந்த வங்கிக்கணக்குக்கு நன்கொடைத் தொகையினை UPI மூலம் அனுப்பிய கையோடு, நம்மைத் தொடர்பு கொண்டால் போதும்.

***அதன் பின்னே, நமது கணக்குக்கு புக்கின் கிரயமான ரூ.2,900 அனுப்பிட்டால், கூரியரில் புக்ஸை அனுப்பி விடுவோம்.

***மொத்தம் 13 இதழ்களின் விற்பனைத் தொகையான ரூ.37,700 ப்ளஸ் நடப்பு இ.ப.வெளியீட்டிலிருந்து ஒரு தொகை என மொத்தத்தையும், நாங்கள் தனியாக அடையாருக்கு அனுப்பிடுவோம். 

***ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நன்கொடையாளர்களின் பட்டியலினை அடையார் மையத்தினர் வெளியிடும் போது,  நான் வெறும் வாயால் வடை சுட்டுள்ளேனா ? அல்லது மெய்யாலுமே பணம் அனுப்பியுள்ளேனா ? என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம் ! 

So - ஒரு தவறான முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டவும், ஒரு நல்ல காரியம் செய்திடவும், உங்கள் சேகரிப்பில் இல்லாததொரு இதழை இணைத்துக் கொள்ளவும்,  இதனை ஒரு வாய்ப்பாக்கிட முயற்சிக்கலாமே folks ?! 

Oh yes, வணிக அடிமடிகளில் கைவைக்கும் விதமாய் நான் ஏதேனும் செய்யும் முதல் நொடியில், எனது குரல்வளையைக் கடிக்க முகாந்திரங்கள் தேடும் வேலைகள் ஜரூராய்த் துவங்கி விடுமென்பது தெரியாதில்லை ! But மு.ச. + மூ.ச.நமக்குப் புதிதே அல்ல தானே ? So நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையுடன் முயற்சிப்போம் ! 

ரைட்டு.....நாளை துவங்கிடவுள்ள ஆன்லைன் புத்தக விழாவின் பொருட்டு நம்மவர்கள் போன்களை off செய்துவிட்டு இன்னும் பணியாற்றி வருகின்றனர் !! ஒலிக்கும் செல்களின் ரிங்டோனில் காதில் தக்காளிச் சட்னி வராத குறை தான் !! So ஒரு எட்டு அவர்களைப் பார்த்து வர நான் கிளம்புகிறேன் !! Bye all .....see you around ! Wishing a fun weekend ahead !! 

கிளம்பும் முன்பாய் - அந்த 2 bookfair special இதழ்களைப் பற்றியுமே !!

உங்களின் நாயகர் சார்ந்த யூகங்கள் bang on ....நமது இரு மஞ்சள்சட்டை நாயகர்களே இந்த 2 ஸ்லாட்களையும் ஆக்கிரமிக்கின்றனர் ! "இவிகளுக்கு ஓவராய் இடங்கள் தர்றே ; அதிகாரி தான் ஏற்கனவே இந்த மாதம் ஐநூறு ரூபாய் விஸ்வரூபம் எடுத்துள்ளாரே ; மறுக்காவும் அவரேவா ?  " என்ற குரல்கள் ஒலிப்பது சர்வ நிச்சயமே ! ஆனால் எனது பதில் ரொம்பவே சிம்பிள் guys !! ஒரு வண்டிப் பணிகள் தொக்கி நிற்கும் தருணத்தினில், இதற்கென புது வெளியீடுகளைத் திட்டமிட சாத்தியங்கள் பூஜ்யம். So மறுபதிப்பே தீர்வெனும் போது விற்பனைகளின் அளவுகோல்கள் மாத்திரமே இங்கே முன்னிற்கின்றன ! And இந்த 2 மஞ்சள் சட்டை நாயகர்களைத் தாண்டி இன்றைக்கு போணி கண்டிடுவோர் எவருமிலர் ! "இளம் டைகரின் கதைலாம் பாக்கி இருக்கே - கண்ணுக்குத் தெரிலியா ?" என்ற கேள்வி தொடருமென்பதும் புரிகிறது ! இளம் டைகர் நன்றாகவே கண்ணுக்கு (இன்னமும்) தெரிகிறார் என்பதே இங்கே பிரச்சனை ; ரூ.80 விலையிலான "இளமையில் கொல்" இரண்டு ஆண்டுகளைத் தாண்டி விட்டுள்ளது கிட்டங்கி குப்பைக் கொட்டலில் ! So கேட்டுப் புளித்துப் போயிருப்பினும், யதார்த்தத்தை மாற்றிட வழியில்லையே guys ?!! இன்றைய வாசக வட்டத்தின் டார்லிங் மட்டுமன்றி, விற்பனையாளர்களின் டார்லிங்கும் கார்சனின் சகாவே !! So ரெகுலர் தடத்தில் இல்லாததொரு  இதழ் சோடை போகிடாது கரைசேர வேண்டுமெனில் - அதன் அட்டைப்படத்தில் TEX என்று பதிக்கப்பட்டிருக்க வேண்டிப் போகிறது ! இதோ - இதற்கு முன்பான ஆன்லைன் விழா ஸ்பெஷலாய் நாம் வெளியிட்ட ஆர்ச்சி புதுசு + மாயாவி மறுபதிப்பு கம்பீரமாய் நம்மிடமிருந்து நகர மறுக்கின்றன ! இடையினில் சென்னைப் புத்தக விழாவினில் விற்றதோடு சரி ; அப்புறமாய் ஆன்லைன் ஆர்டர்களோ, முகவர்களின் ஆர்டர்களோ பூஜ்யமே !  

அவ்விதம் TEX என்று பதிக்கப்பட்டுள்ள இதழினில் "சிகப்பாய் ஒரு சிலுவை" என்ற பெயருமே இம்முறை இணைந்து கொள்கிறது ! Yes guys - கால்நூற்றாண்டுக்கு முன்னே நமது மெகா ட்ரீம் ஸ்பெஷல் இதழினில் பெரிய சைசில், கருப்பு-வெள்ளையில் வெளியான அந்த 200 பக்க சாகசமே, நாளை உங்களுக்குக் காத்துள்ளது ! ஓராண்டுக்கு முன்னமே ; in fact போன லாக்டௌனின் சமயத்திலேயே என் கண்ணில்பட்டு , சுவாரஸ்யத்தைக் கிளப்பிய கதை இது ! தனியாய் ; சோலோ சாகசங்களாய் வெளியான டெக்ஸ் கதைகளைக் கூட எப்படியேனும் உருட்டிப் பிடித்து யாரிடமாச்சும் வாங்கிடலாம் தான் ; ஆனால் இது போன்ற - கிடைக்கவே கிடைக்காதெனும் ஸ்பெஷல் இதழ்களுக்குள் புதைந்து கிடைக்கும் டெக்ஸ் சாகசங்களை இவ்விதம் மறுபதிப்பு செய்தாலொழிய பார்ப்பது அரிது என்று தோன்றியதால் போன ஆண்டே இதனை வாங்கி விட்டிருந்தேன் ! And சும்மா இருக்காமல் அந்த வேளையினில் நம்மிடம் விண்ணப்பித்திருந்ததொரு யுக்ரேனிய ஓவியையிடம் இதன் அட்டைப்படத்தினை டிஜிட்டலாய் உருவாக்கச் சொல்லி ஒப்படைத்துப் பார்த்தேன் ! அவர் போட்டுத் தந்த சித்திரம் இதோ :

டிசைன் ஒரு தினுசாய் ஓ.கே.வாகத் தென்பட்டாலும், அந்த முகங்கள் எல்லாமே ரொம்பவே செயற்கையாய் இருப்பது போல் பட்டது ! அதன் பின்னே, சிவனே என்று நம்மவர்களைக் கொண்டு அட்டையினை இன்னொருமுறை ரெடி செய்து வாங்கினேன் ! And here it is ! 


"கழுகு வேட்டை" புக்கின் அட்டைப்படம் அச்சான அதே சமயம் இதுவும் இணைந்து அச்சாகி இருந்தது - அதே நகாசு வேலைகளுடன் ! So நமது இஸ்திரி ; ஜியாகிரபி என சகலத்திலும் முதன்முறையாக -  "ஒற்றை வாரத்தினில் 4 hardcover புக்ஸ்" என்ற சாதனையினை நிலை நாட்டவுள்ளது  இந்த ஆல்பம் !! என்ன ஒரே பிரச்சனை - பைண்டிங்கில் மனுஷன் விழி பிதுங்கிக் கிடக்கிறார் - ஏக காலத்தில் அவரது பிராணனை நாம் வாங்கி வரும் வேகத்தினில் ! So "சிகப்பாய் ஒரு சிலுவை" பைண்டிங் முடிந்து நாளை மாலையே கைக்கு வந்து சேரும் ; காலையில் மாதிரிகள் மட்டுமே இருந்திடும் ! So பொறுத்தருள்க ப்ளீஸ் !!

அப்புறம், "பழிக்குப் பழி" & "இரத்த வெறியர்கள்" - என்ற இரு மறுபதிப்புகளுமே நமது TEX மறுபதிப்புப் பட்டியலில் next in line என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன் - புருவங்களை உயர்த்தியிருக்கும் டெக்ஸ் ரசிகர்களுக்கு ! 

லூக்கின் மறுபதிப்பினை உங்களில் almost அனைவருமே கச்சிதமாய் யூகித்திருந்தீர்கள் என்ற மட்டில் kudos !! இதோ - அதன் அட்டைப்படம் !! 

லக்கியின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் முதல் படி இது ! அடுத்த பெரிய படி, இந்த புக்கினுள்ளே விளம்பரமாய் இருக்கிறது !! So அதனை மட்டும் இப்போதைக்கு சஸ்பென்சாக விட்ட கையோடு கிளம்புகிறேன் !! Bye again all ! 

Wish us luck for the E-Road Online Bookfair please !!


Thursday, August 12, 2021

ஒரு லயன் பயணம் !

 நண்பர்களே,

வணக்கம். திரும்பிய பக்கமெல்லாம் ஆபீசில் டப்பிக்கள் மயம் !! கொஞ்ச காலமாகவே கூரியர் அனுப்பும் 'பொட்டிகள்' சற்றே வலுவிழந்தவைகளாக இருக்க, இம்மாதத்து பயில்வான் பொஸ்தவங்களுக்கு அவை சுகப்படாதென்று தீர்மானித்தேன் ! So வழக்கத்தை விடவும் கனமும், வலுவும் கூடுதலான டப்பிக்கள் - இம்மாதத்து ரெகுலர் புக்ஸுக்கெனவும் ; மாடு மாதிரியான கனத்தினில் "இ.ப" புக்ஸுக்கெனவும் பிரேத்யேகமாய் செய்து வாங்கியிருப்பதால், ஆபீசில் திரும்பின திக்கிலெல்லாம் ப்ரவுன் மயமே !! And இன்றைக்கு அவற்றுள் முதல் பாதி இடத்தைக் காலி செய்துள்ளன - லயன் # 400  + தோர்கலைச் சுமந்தபடியே ! 

அவர்களோடு கொசுறாய் இணைந்து பயணிக்கும் TEX Color சிறுகதை இம்மாதத்தில் கொஞ்சமாகவேனும் பேசுபொருளாகிடாது போனால் நான் வியப்புக் கொள்வேன் - simply becos இது நம்ம 'வெள்ளிமுடியாரின்' solo சாகசம் + தாத்தா சாரை இங்கே கொஞ்சமே கொஞ்சமாய் வித்தியாசமானதொரு அவதாரில் ரசித்திடவுள்ளோம் ! இதோ அதன் அட்டைப்பட (முதல் பக்க) preview ! நாளைக்கு புக்ஸ் கைக்கு கிட்டிய பின்னே, ஒரு சர சர வாசிப்புக்கு இதனை உட்படுத்தினால் - mixed comments இங்கே பதிவாவது சர்வ நிச்சயம் என்பேன் ! 

அப்புறம் இந்த 32 பக்க புக்லெட்டை பெரிய சைசில் போடுவது சுகப்படாதென்பது இறுதி நொடியினில் தான் புலனானது ! லயன் 400 ரெகுலர் சைசில், ஹார்ட்கவரில் தாட்டியமாய் டப்பாவினுள் இடம்பிடிக்கும் சமயத்தினில், அட்டைப்படமில்லா இந்த புக்லெட் மட்டும் பெரிய சைசில் உள்ளே நுழைக்கப்பட்டால், உங்களை அது வந்து சேரும் போது புளியம்பழமாய்க் கசங்கியே சேர்ந்திடும் என்பது புரிந்தது ! இம்மாதத்தின் தோர்கலுமே பெரிய சைஸ் என்றாலும், அதற்கு வலுவான ராப்பர் உண்டெனும் போது அதனில் இந்த நோவுக்கு வாய்ப்புகளில்லை !  So டெக்சின் அதே சைசுக்கு கதாசிரியர் மௌரோ போசெல்லியின் இந்தப் புதுயுகக் குட்டிக் கதை இடம் பிடிக்கிறது !! 

லயன் 400 !! 

இ.ப ; Smashing 70's ; 2022 அட்டவணை ; முத்து ஆண்டுமலர் - என சில பல (மெகா) புராஜெக்ட்ஸ் ஏக காலத்தில் துவக்கம் கண்டிருக்க, அத்தனைக்குள்ளும் ஒரே நேரத்தில் புலி வேஷம் கட்டிக்கொண்டு ஆட நான் முற்பட்டு வருவதால், இந்த நொடிக்கான முக்கியத்துவத்தை அடிக்கோடிட மறந்து விட்டேனோ என்ற சிறு உறுத்தல் உள்ளுக்குள் !! 'ஆ-வூ-ன்னா' ஸ்டாண்டை எடுத்துப்புட்டு, வாடகைச் சைக்கிளில் பின்னோக்கிய பயணம் போவதே நமது வாடிக்கை எனும் பொழுது - மறுக்கா அதையே இப்போதும் செய்யத் தோன்றவில்லை எனக்கு ! மாறாக - லயன் # 500 இருக்கக்கூடிய திக்கினில் பார்வைகளை ஓடச் செய்யவே விழைகிறது ! ஆனால் மிதமிஞ்சிய நோஸ்டால்ஜியா காதலர்களான நமக்கு, கடந்து வந்த பாதையின் மீதே மையல் அதிகமல்லவா ? தவிர, என்னைப் போலான சில வெள்ளிமுடியார்கள் "முத்து காமிக்ஸ்" யுகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், யூத்தான உங்களின் பெரும்பான்மை "லயனின் யுகத்துப் பிள்ளைகள்" அல்லவா ? So உங்களின் காமிக்ஸ் துவக்கங்கள் பெரும்பாலும் லயனிலிருந்தே இருந்திருக்கும் எனும் போது - இந்த ஜாலியான மைல்கல் is one to be cherished !! ஆகையால் - 'தன்னான்னே...தானான்னே...' என்று ஒருவாட்டி பின்திரும்பி ஒரு ஆட்டம் போட்டுக் கொள்வதில் தப்பில்லை என்பேன் !! 

சாவகாசமாய் யோசித்தால் நமது (இதுவரையிலான) லயன் பயணத்தில் - நான்கு distinct அத்தியாயங்கள் இருப்பது புலனாகும் ! முதலாவதும், எனது தலையெழுத்தையே மாற்றியதுமான அத்தியாயம் - "இளம் கன்று பயமறியாது ; பசியறியாது ; சாலையறியாது ; மேடறியாது ; பள்ளமறியாது" அத்தியாயமே !! பதினேழு வயசுக்கு என்ன தெரிஞ்சிருக்குமோ அது மாத்திரமே தெரிந்திருந்தாலும் - சந்தர்ப்ப சூழல்களின் புண்ணியத்தில் நான் இங்கே அடிக்க நேர்ந்த கூத்துக்கள் ஏற்கனவே well documented ! ஆகையால் அதனில் நான் மேற்கொண்டும்  'டொய்ங் டொய்ங்' என்று தம்பூராவை வாசிக்கப் போவதில்லை ! மாறாக, அந்தப் பிள்ளையார் சுழிப் பருவத்தில் நமக்கென செட் ஆன சில templates பற்றி மட்டுமே highlight செய்திட எண்ணுகிறேன் ! பிரதானமானது - variety !! 1984 to 1987-க்குள்ளான முதல் 3 ஆண்டுகளில் நாம் களமிறக்கிய நாயகர்களை மட்டுமே எண்ணினால் கூட  - ஒரு விடுமுறை தினத்தின் காசிமேடு மார்க்கெட்டில், மீன் வாங்க நிற்கும் ஜனத்தை விடவும் ஜாஸ்தி தேறும் ! பெருசாய்த் திட்டமிடல்களின்றி, கண்ணில்பட்ட கதைகளையெல்லாம் நமது லயனின் இதழ்களாக்கிட வேண்டுமென்ற அந்நாட்களின் வேட்கையே - இன்றளவிற்கு நம் முன்னே தொங்கி வரும் variety என்ற கேரட் !! அந்தக் கேரட்டை  விழுங்கிட மாட்டோமா ? என்ற ஏக்கத்தோடே ஓட்டமெடுத்து வரும் கழுதைக்கு இன்று வயசாகியிருக்கலாமேயொழிய - அந்த பேரவா துளியும் குன்றிடவில்லை ! 

Template # 2 - சைஸ்கள் மீதான ஒரு ஆராய்ச்சி அவா !! அந்நாட்களிலெல்லாம் மதியம் சீக்கிரமாய் சாப்பிட்டு முடித்து விட்டு ஆபீசுக்குத் திரும்பும் பட்சத்தில் - புதுசாய் எந்த மரத்தில் ஏறலாமென்ற மந்தி சிந்தனை தான் ஓடி வரும் ! நியூஸ்பிரிண்ட் காகிதங்களில் தான் நமது அந்நாட்களது பயணம் எனும் போது - பெரிய சைசில் ரீல்களாய் பேப்பர் வாங்கி, அவற்றை என் கோக்கு மாக்குப் புத்திக்கேற்ற அளவுகளில் வெட்டினால் வினோதமான சைஸ்களுமே  சாத்தியமாகிடும் ! உள்ளுக்குள்ளேயே சிகாமணி + திறன் வாய்ந்த ஆர்டிஸ்ட்கள் பணியாற்றிய நாட்களென்பதால்  - நான் எவ்விதம் வெட்டி, ஒட்டி மாற்றியமைக்கச் சொன்னாலும் நொடியினில் வேலை ஆகி விடும் ! So சைஸ்களின் மீதான மையல் ; அதிலும் குறிப்பாய் அந்த பாக்கெட் சைஸ் மீதான காதல் தான் - அடுத்த பத்தாண்டுகளுக்கு நம்மைச் சுமந்து சென்ற வாகனம் என்றால் மிகையாகாது !!

லயன் பயணத்தின் அத்தியாயம் # 2 - "இது டூ மச்..த்ரீ மச்..." days ! உங்களில் பலருமே இன்றளவிற்கு golden age என்று சிலாகிக்கும் - அந்தத் "திகில்" ; ஜூனியர் லயன்" ; "மினி-லயன்" ; "முத்து" ரவுண்டு கட்டி அடித்த நாட்கள் அவை !! பட்டிக்காட்டான் முட்டாய்க் கடைக்குள் நுழைஞ்சாச்சு ; பள பளக்கும் பட்சணங்கள் அணிவகுத்து நிற்பதை வாய் பிளந்து ரசிக்கவும் செஞ்சாச்சு !! அத்தோடு நகராமல், பிளந்த வாய்க்குள் அங்கிருக்கும் அத்தனையையுமே திணிக்க முற்பட்டால் என்ன ஆகுமோ - அதுவே அன்றைய பொழுதில் அரங்கேறியது ! Fleetway எனும் அட்சயப் பாத்திரமே திகட்டத் திகட்ட அமுதூட்டி வந்த நிலையில், பிரான்க்கோ பெல்ஜிய பாற்கடலும், டெக்ஸ் வில்லரெனும் உச்சமும் அதே பந்தியில் கிட்டிய போது பகாசுரப் பசி எட்டிப் பார்த்தது ! அதன் பலனாய் ஒன்றுக்கு நான்காய் இதழ்களைப் போட்டுத் தாக்கிட, வெகு சீக்கிரமே அஜீரணம் பலனாகியது ! So 'திக்கெட்டும் காமிக்ஸ்' என்ற அந்த phase - "அபரிமித ஆசை ; ஆரோக்கியத்துக்கு ஆகாது !!" என்று கற்றுத் தந்தது !

லயன் பயண அத்தியாயம் # 3 - "இனியெல்லாம் சோகமே !" விறு விறு ஏற்றம் ; உச்சத்தில் சடுகுடு ஆட்டம் என்றான பின்னே, தொடரக்கூடியது கிடு கிடு கீழிறங்கும் படலமன்றி வேறென்னவாக இருக்கக்கூடும் ? கேபிள் டிவி ; வாசிப்பினில் மந்தகதி ; இன்டர்நெட்டின் வருகை என பற்பல காரணிகளோடு நமது சோம்பலும், நேரம் சார்ந்த ஒழுங்கீனமும் கரம் கோர்க்க, பாதாள பைரவியானது கதை ! இத்தனைக்கும் இந்த வேளையினில் நீங்களெல்லாம் மீசைகளை முறுக்கி விட்டுக் கொள்ளும் பருவத்தினைத் தொட்டிருந்திருப்பீர்கள் & நியாயப்படிப் பார்த்தால் - ஆரம்ப நாட்களை விட உங்களின் வாங்கும் திறன் இப்பொழுதுகளில் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் ! இன்ன பிற சிரமங்கள் காமிக்ஸ் நிர்வாகத்தினையும் சிரமமானதாய்க் காட்டிட, 'போதுமே சாமீ - இந்த பொம்ம பொஸ்தவ சவகாசம் !!' என்று உள்ளுக்குள் தோன்றிய தருணங்கள் இவை ! இந்த இருண்ட காலகட்டத்திலிருந்து நாம் கற்றிருந்த பாடமென்று ஏதேனும் இருப்பின், அது - "டில்லிக்கே ராசாவானாலும், பள்ளிக்குப் பிள்ளை தான்" என்ற பாடமாகத்தானிருக்க வேண்டும் ! எத்தனை ஆதர்ஷங்களை ஈட்டியிருப்பினும், அடிப்படைகளை மதிக்காது போயின் - மவனே சங்கு தான் என்பதை நமக்கு வாழ்க்கை உணர்த்திய நாட்களவை !

லயன் பயண அத்தியாயம் # 4 - நமது மீள்வருகைக்குப் பின்பான "வந்துட்டேன்னு சொல்லு" அத்தியாயம் ! இனி இழக்க ஏதுமில்லை  என்றபடிக்கே, முதல் மூன்று அத்தியாயங்களிலும் கற்ற பாடங்களை மண்டையில் குட்டி, ஏற்றியபடிக்கே தட்டுத் தடுமாறியபடியே மறுக்கா புறப்பட்ட வண்டியானது, இன்றைக்கு இந்த மைல்கல்லினைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது ! நமது COMEBACK ஸ்பெஷலின் வெளியீடு நம்பர் 210 ! So கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகளில், முதல் 27 ஆண்டுகளில் வெளியிட்ட அளவினைத் தொடச் சாத்தியப்பட்டுள்ளது என்பது தான் இந்த மீள்வருகை நாட்களின் highlight ! Of course - ஒரு சில ஆண்டுகளில் முத்து காமிக்ஸ் வெளியீடுகள் குறைச்சலாகவும், லயனின் நம்பர்ஸ் கணிசமாகவும் இருந்திருக்கக்கூடும் என்பதால் இந்த doubling of the numbers சுலபமாகியிருக்கலாம் தான் ; but still - கடந்த தசாப்தம் எதில் உச்சமாய் இருந்துள்ளதோ, இல்லையோ - sheer numbers-களில் ரவுண்டு கட்டி அடித்துள்ளது என்பேன் !! இந்த வேளையினில் முதல் பருவத்தின் variety இன்னமும் அதே உத்வேகத்துடன் தொடர்கிறது தான் ; சைஸ் சார்ந்த கிறுக்கும் அவ்வப்போது தலைகாட்டுகிறது தான் ; (ஸ்பைடரின் விசித்திரச் சவால் - பாக்கெட் ஸைஸ் hardcover ஞாபகங்களில் கீது தானே ?)  ; இரண்டாம் பருவத்தின் பகாசுரப் பசியும் தொடர்கிறது தான் ; கண்ணில் தென்படுவதையெல்லாம் விழுங்கிட மனசு துடிக்கிறது தான் ! ஆனால் மூன்றாம் பருவத்தினில் செய்த பிசகை மட்டும் இன்றைக்கு எக்காரணம் கொண்டும் செய்திடலாகாது என்ற அடிப்பு தான் எனது நள்ளிரவு எண்ணெய்களின் நதிமூலம் ! ஒற்றை தேதி பிசகிட அனுமதித்தல் கூட ஒரு மினி தோல்வி - என்ற ரீதியில் பார்க்கத் துவங்கியிருப்பதால் இந்த மைல்கல்களெல்லாம் சாத்தியமாகின்றன ! (என்ன - கொரோனா அசுரன் மூஞ்சியில் கணிசமாய்க் கரி பூசிக் சென்று விட்டது கிளைக் கதை !!) ஆண்டொன்றுக்குச்  சரளமாய் 6000+ பக்கங்களை போட்டுத் தாக்குமிடத்தினில் நானிருப்பேன் - என்று 10 வருஷங்களுக்கு முன்னே யாரேனும் ஆரூடம் சொல்லியிருந்தால், "போங்கப்பு...காமெடி பண்ணாமப் போய் புள்ளை குட்டியைப் படிக்க வையுங்க அப்பு !" என்று சொல்லியபடியே நகர்ந்திருப்பேன் ! ஆனால் உங்களின் மாறா நேசங்களும், குன்றா அன்புகளும், எனது அசமந்தங்களை ஆயுசுக்கும் ஒரு கெட்ட கனவாக்கிட உதவியதே இந்த தசாப்தத்தின் my biggest takeaway என்பேன் ! ஓராயிரம் நன்றிகள் guys - நம்பர்களால் உங்களின் பங்களிப்பினை ஒருபோதும் அளவிட்டிட முடியாது !!

இதோ இந்தத் திரும்பிப் பார்க்கும் நொடியினில் உங்களிடம் கேட்க எனக்கு கேள்விகள் இல்லாமலா போய்விடும் ? So here you go !!

1. (நம்முடனான) உங்களின் காமிக்ஸ் பயணமானது துவங்கியது - மேற்சொன்ன அத்தியாயங்களில் எதனுள்ளிருந்து folks ? நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?

2. அந்த பாக்கெட் சைஸ் மோகம் தலைவிரித்தாடிய நாட்கள் உங்களுக்கு இன்னமும் நினைவுள்ளதா ? திரும்பிப் பார்க்கையில் இன்று சிப்பு சிப்பாய் வருகிறதா ? அல்லது - அதெல்லாம் ஒரு கனாக்காலம் ! என்ற பெருமூச்சா ?

3. இதுவரையிலுமான 400 லயன் காமிக்ஸ் இதழ்களுள் TOP 3 என்று நீங்கள் தேர்வு செய்வதாயின் - அந்த 3 எவையாக இருக்கும் ? 

4. எல்லாமே ஒரு குடையின் கீழே நிழல் தேடும் வாத்துக்கள் தான் என்ற போதிலும், என்னளவினில் "லயன் காமிக்ஸ்" என்றென்றும் சன்னமான கூடுதல் வாஞ்சைக்குரியது ! Of course - முத்து காமிக்ஸ் "போட்டி கம்பெனி" என்ற எண்ணங்களை இடைப்பட்டுள்ள இத்தனை ஆண்டுகளில் களைந்தாச்சு தான் ; but still , பந்தி பரிமாறும் போது -  ஒரு கரண்டி கூடுதலாய் கேசரியை லயனின் இலையில் வைக்க மனசு பறக்கும் என்பதை மறுக்க மாட்டேன் ! உங்களுக்கு எனது இந்தக் குடாக்கு எண்ணமானது புரிகிறதா ? உங்களுக்கும் இது போல ஏதேனும் மினி ஓரவஞ்சனை எதன் மீதாச்சும் உண்டா guys ?

5. And of course - கடாசிக் கேள்வி : ஒரு இதழை....ஏதேனும் ஒரேயொரு இதழினை இந்த நானூறிலிருந்து மறுக்கா பதிப்பிடுவதெனில், உங்களின் தேர்வு எதுவாக இருக்குமோ ? இது சும்மா ஒரு curiosity -ன் பொருட்டு நான் முன்வைக்கும் வினவலே தவிர்த்து வேறெதுவும் இல்லை guys ! So ஜாலியான கேள்விக்கு, ஜாலியாய் பதில் ப்ளீஸ் ?

ரைட்டு...நாளைய பொழுது இரண்டே முக்கால் கிலோக்கலின் எடையுடன் XIII கூரியர்கள் கிளம்பிடத் தயாராக இருக்க, நாளை மறுநாளின் முஸ்தீபுகளுக்குள் இறங்கிடக் கிளம்புகிறேன் guys !! And btw, ஆகஸ்ட் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி : 

https://lion-muthucomics.com/latest-releases/855-august-pack-2021.html

https://lioncomics.in/product/august-pack-2021/

So happy shopping & happy reading folks !! மீண்டும் சந்திப்போம் - bye for now !!

Tuesday, August 10, 2021

E -ரோடை நோக்கி !

 நண்பர்களே,

வணக்கம். அது என்ன மாயமோ தெரிலிங்கண்ணா - ஒண்ணரை வருஷமாய் முன்பதிவை அறிவிச்சுப் போட்டு, ஈயோட்டும் போதெல்லாம் ஆருக்கும் நம்ம நினைப்பே தோணலே  ! ஆனா இப்போ பாருங்க - அச்சும் முடிஞ்சு ; பைண்டிங்கும் முடிஞ்சு ; பொஸ்தவங்கள டப்பிக்குள்ளாற அடைக்கிற வேலை மட்டுமே பாக்கிங்கிறச்சே - நெதமும் கொறஞ்சது 15 போன் வருதுங்க - 'நெத்தப் படலம்' வேணுமேன்னு !!  ஏற்கனவே புக் பண்ணின எசென்ட்களுமே இதிலே சேர்த்தி ! 

தெள்ளத் தெளிவாக - "இது முன்பதிவுகளுக்கோசரம் மாத்திரமே" என்று ஒண்ணரை ஆண்டுகளாய்க் கத்திக், கதறிக்,கூப்பாடு போட்ட பொழுதுகளிலெல்லாம் சயனங்களில் இருந்த நண்பர்கள், இன்றைக்கு நம்மவர்களைப் போட்டுத் தாக்கும் போது - 'ஒண்ணுமே பிரியலே..ஒலகத்திலே....!! ' என்று தான் பாடத் தோணுது !! இதோ இவ்வாரயிறுதியில் புக்குகள் கைக்குக் கிடைத்தான பின்னே, என்ன நிகழவுள்ளதென்பதை யூகிக்க இங்கே லியனார்டோ தாத்தா கூட தேவைப்படமாட்டார் தான் ! வெகு சமீபமாய் கூட, டெக்சின் "பிரளயப் பயணம்" + "நெஞ்சே எழு" இரண்டு மடங்கு ; மும்மடங்கு விலைகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன என்று நண்பர்கள் வருத்தத்தோடு தகவல் சொல்லியிருந்தனர் ! தொடரும் நாட்களில் டெக்சின் பிரிண்ட் ரன்னை கொஞ்சமாய் கூட்டிவிட்டால் இந்த நோவு தொடர்கதையாகிடாது தான் ! ஆனால் மேக்கிங்கில் பிராணனை வாங்கவல்ல  "இரத்தப் படலம்" போலான  இதழ்களை, உண்டான விலையினில் முன்பதிவு செய்து வாங்கிட இருந்திடும் ஒரு வண்டி அவகாசங்களை உதாசீனம் செய்து விட்டு, அப்புறமாய் கூடுதலாய் விலை தந்து வாங்கிட நேரும் பட்சத்தில் யாரை நொந்து என்ன பலனிருக்கப் போகிறது ? And அதன் நீட்சியாய் "இன்னொருக்கா போடலாமே ?" என்ற கொடி பிடிக்க இப்போவே கச்சை கட்டிக் கொண்டு நண்பர்கள் இருப்பர் என்பதும் உறுதி ! 

Make no mistake folks -  சுற்றியதையே மேற்கொண்டும் மேற்கொண்டும் செக்கு மாடாய் சுற்றி வரும் வயசோ, ஆர்வமோ , ஆற்றலோ என்னிடம் லேது ! So தயை கூர்ந்து சேகரிப்பின் மீதான உங்கள் ஆர்வங்களை "இ.ப" மீதிருந்து - புதியன மீதோ ; Smashing '70s மீதோ திசைதிருப்பிட கரம் கூப்பிக் கோருகிறேன் ! இதோ - எனது அறையின் ஒரு மூலையில் குந்தியிருக்கும் இந்த புக்ஸ் தான் - XIII-க்கு நாம் தந்திடும் இறுதி hurray !!

And ஓராண்டுக்கும் முன்னே ஒரு சிறுமியின் வைத்தியத்துக்கென அவளது பெற்றோர் இணையத்தில் கதறிக் கொண்டிருந்தது கண்ணில்பட்ட தருணத்தில் துளிர் விட்டது தான் இந்த  (நடப்பு) "இ.ப" புராஜெக்ட் !  தொடர்ந்த நாட்களில், தயாரிப்பின் செலவினங்கள் கூடியிருந்தனவோ ; குறைந்துள்ளனவோ - அதை பற்றிய கவலைகளின்றி, இந்தப் பணியிலிருந்து ஒரு தொகையினை அடையார் புற்று நோய் மையத்துக்கு உங்கள் சார்பினில் செலுத்திடவுள்ளோம் ! அது பற்றி மேற்கொண்டு - சனிக்கிழமையில் - சின்னதொரு சர்ப்ரைஸ் சகிதம் ! 

And இதோ - ஆன்லைன் புத்தக விழாவின் புக் லிஸ்ட் - டிஸ்கவுண்ட் விபரங்களுடன் :

ரூ.1000-க்கு மேலான ஆர்டர்களுக்கு தமிழகத்தினுள் அனுப்பிடுவதாயின் கூரியர் கட்டணங்கள் இராது !

And

ஆங்கில CINEBOOK இதழ்களில் 5-க்கு அதிகமான புக்ஸ் வாங்குவோருக்கு 10% டிஸ்கவுண்ட் இருந்திடும் !

இவை சகலமும் இந்த 2 தினங்களுக்கு மாத்திரமே - ப்ளீஸ் !

Happy Shopping all !! Bye for now ! See you around !!

Saturday, August 07, 2021

ஒரு தங்க தின updates !!

It's GOLDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDD

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் பொன்மொழிகள் கண்ணில்படுவது அரிய அறிஞர்களின் படைப்புகளிலோ ; முக்கியமான சொற்பொழிவுகளிலோ லேது - at least என்னளவிற்கு ! மாறாக - ஆங்காங்கே மீம்ஸ் மூலம் மிஸ்டர்.பொதுஜனம் போட்டுத் தாக்குவதையெல்லாம் வாசிக்கும் போது, 24 காரட் பொன்மொழிகளாய்த் தோன்றுகின்றன ! இதோ சித்தே முன்னே படித்தது : "பணமும் சரி, ஞாயிறும் சரி - வர்றதும் தெரிலே....போறதும் தெரிலே !!" என்றொரு மீம்ஸ் ! How true !!! 

இப்போதெல்லாம் என்னைப் பொறுத்தவரையிலும் "பதிவுக்கு நேரமாச்சுடோய்" - என்ற அலாரம் தலைக்குள் ஒலிக்கும் போது தான் -  yet another ஞாயிறு புலரவுள்ளது  உரைக்கிறது ! கடந்த கொஞ்ச மாதங்களாகவே, WORK FROM HOME என்றதொரு வாடிக்கை செட் ஆகியிருக்க ; எழுதிடவும் வண்டி- வண்டியாய்க் குவிந்திருக்க, ஆபீசில் போய் அமர்ந்து பணியாற்றும் பழைய நாட்களெல்லாம் - நீங்கள் சுஸ்கி-விஸ்கியை அரை நிஜார் போட்டபடியே படித்த புராதன நினைவுகளாய் எனக்கிப்போது தென்படுகின்றன ! நிர்வாகப் பணிகளின் பெரும்பான்மையை ஜூனியர் வசம் ஒப்படைத்திருக்க, அதன் பொருட்டும் என்னை யாரும் பெருசாய் ஆபீசில் தேடுவதில்லை எனும் போது - இதழின் இறுதிக்கட்டப் பணிகளின் போது ஆபீசில் தலை காட்டுவதோடு சரி !! So எனது பொழுதுகளில் இப்போதெல்லாம் மாறிடுவது கதை நாயகர்கள் மட்டுமே எனும் போது - நாளென்ன ? பொழுதென்ன ? என்ற ஞாபகங்கள் மண்டையில் இம்மியூண்டே இருக்கின்றன ! And இதோ - உங்களின் புண்ணியத்தில் இது பதிவுக்கிழமை என்பது புரிவதால், தீக்கோழியைப் போல பேப்பர் கத்தைகளுக்குள் புதைத்து வைத்திருக்கும் மண்டையை வெளியே உருவிக் கொண்டு - கோலி சோடா விழிகளை உருட்டியபடிக்கே என்ன எழுதுவதென்று யோசிக்கிறேன் ! 

ஆகஸ்ட் !! மாமூலாய்ப் பார்த்தால் இந்நேரம் ஈரோட்டில் ஸ்டாலில் விற்பனைகளைப் பார்த்தபடிக்கே ; 'இன்னிக்கு இன்னார் இன்னாருலாம் வந்தாக ; இன்னார் இன்னார்லாம் போனாக !!" என்று அண்ணாச்சி சொல்லும் கதைகளுக்குக் காது கொடுத்திருப்பேன் ! ஆனால் இப்போதோ - அந்த யோகம் லேது எனும் போது - நமது ஆபீஸின் மாடியே தயாராகி வருகிறது - E ROAD ஆன்லைன் புத்தக விழாவின் பொருட்டு ! அடுத்த சனி & ஞாயிறுக்கெனத் திட்டமிட்டுள்ள இந்த மினி ஜாலி மேளாவிற்கென நம்மவர்கள் இப்போதே ரேக்கை செட் பண்ணி ; புக்ஸை அடுக்கி  தயாராகி வருகின்றனர் என்பதால் ஆபீசில் பர பரப்புக்குப் பஞ்சமில்லை ! And "இரத்தப் படலம்" புக்ஸுக்கென தடிமனான டப்பிக்கள் ஒரு பக்கம் ; ரெகுலர் (சந்தா) இதழ்களின் டப்பிக்கள் இன்னொரு பக்கம் ; E ROAD புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்களுக்கு கிட்டக்கூடிய ஆர்டர்களுக்கென இன்னொரு குவியல் - என்று டப்பிக்களும் குவிந்து கிடக்க, அவற்றினுள் ஆளாளுக்கு நர்த்தனம் ஆடி வருகின்றனர் ! 

டப்பிக்கள் ரெடி ; ஆனால் அவற்றினுள் ரொப்பிட வேண்டிய சமாச்சாரங்களை இன்னும் ரெடியில்லா என்பதால், எனக்கும், மைதீனுக்கும், கடந்த ஒரு வாரமாய் குட்டிக்கரணங்கள் அன்றாடம் என்றாகி விட்டுள்ளன ! திங்கள் முதலாய் 2 bookfair special இதழ்களும் அச்சுக்குச் செல்லவுள்ளன எனும் போது, அடுத்த வாரத்தில் நமது பைண்டிங் நண்பரும் குட்டிக்கரண ஜோதியினில் ஐக்கியம் ஆகிட வேண்டி வரும் ! இப்போது தான் "இரத்தப் படலம்" ஹார்டகவர்களை ஒரு மாதிரியாய்ப் பூர்த்தி செய்தவர் - பின்னாடியே  லயன் # 400 ஹார்ட்கவர் புக்சின் வேலையில் பிசியாகி விட்டிருக்க, அடுத்த வாரத்தில் இன்னமும் பிதுங்கிட வேண்டி வரும் ! பாவம் மனுஷன் !! 

எது எப்படியோ - 'Bookfair ஸ்பெஷல் இதழ்கள் எவையென்பதை யூகிக்கிறேன் பேர்வழி' என்று ஸ்டீல் எதை எதையேனும் அள்ளி விடும் முன்பாய் நானே கொஞ்சமாய் hints தந்து விடுகிறேன் folks ! இரண்டுமே மறுபதிப்புகளே என்பது பிரதான hint !  இது போன்ற இடைச்செருகல் தருணங்களில் நுழைக்கும் புது இதழ்கள் பெருசாய் சோபிப்பதுமில்லை & கையில் தங்கியும் விடுகின்றன என்பதால் இத்தகைய வேளைகளுக்கு மறுபதிப்புகளே மதி ! என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளோம் ! 

Of course - "உயிரைத் தேடி" இங்கே இடம்பிடித்திருக்க வேண்டும் தான் ; ஆனால் 189 பக்க நெடும் கதையினை உரிய கவனங்களின்றி வெளியிட மனம் ஒப்பவில்லை & MUTHU ஆண்டுமலர் 50 + SMASHING '70s புண்ணியத்தில் கைவசம் அதிக அவகாசங்களும் இருக்கவில்லை ! தவிர, தீவிர "உயிரைத் தேடி" ஆர்வலரானதொரு நெருங்கிய நண்பர் முன்வைத்த கோரிக்கையுமே செம சுவாரஸ்யமானதாய்த் தோன்றிட, அதன் பொருட்டு கவனம் தந்திடும் முனைப்பில் இந்த இதழினை அடுத்த ஆன்லைன் bookfair-க்கென மாற்றிடத் தீர்மானித்துள்ளேன் ! அந்தக் கோரிக்கை வேறொன்றுமில்லை : இதழினை black & white-ல் போடுவதை விடவும், விலை கூடினாலும், வண்ணத்தில் வெளியிடலாமே என்பது தான் ! எப்போதுமே நமது முதல் பார்வைகள் நிலைகொள்வது விலையினில் தான் எனும் போது, விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆர்வமே எல்லாப் புதுத் திட்டமிடல்களிலும் பிரதானமாகிடுவதுண்டு ! Likewise in this case too ! ஆனால் இந்த one-shot தினமலரில் வெளியான நாட்களில் வண்ணம் + 2 வண்ணம் என்று வந்திருக்க, இன்றைக்கு அதனை plain ஆக கருப்பு-வெள்ளையில் வெளியிடுவதில் பெருசாய் ஈர்ப்பு இராதென்பது நண்பரின் எண்ணம் ! So இதனை வண்ணத்தில் வெளியிட படைப்பாளிகளிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, கொஞ்சமாய் மூச்சு விட நேரம் கிட்டும் போது தயாரிப்புகளுக்குள் புகுந்திட வேண்டியது தான் !  

Moving on, நடப்பு மாதத்தின் ரெகுலர் இதழ்களின் slim பார்ட்டியான "தோர்கல்" பற்றி ! சமீப ஆண்டுகளாய் இவர் புஷ்டியாய் ; ஆகிருதியாய் மூன்றல்லது , நான்கு கதைகள் கொண்ட தொகுப்புகளாய் வலம் வந்திட, இந்தமுறையோ தவிர்க்க இயலா 9 மாத சந்தா தருணத்தில் தடிமனான ஸ்லாட்டை அவருக்கு வழங்கிட தோதுப்படவில்லை ! ஜனவரியில் தான் "அழகிய அகதி" hardcover வந்திருக்க, இம்முறை அவர் சிங்கிள் சிங்கமாய் சோலோ கெத்து காட்டுகிறார் ! And கதையும் one shot தான் எனும் போது - ஜாலியான சிங்கிள் வாசிப்புக்கு பெருசாய் நெருடாதென்பேன் ! In fact - அழுத்தமான கதைக்களத்தோடு பயணிக்கும் தோர்கல் தொடரினில் இது சற்றே லைட்டான சாகஸமே எனும் போது - இந்த சிங்கிள் ஆல்பம் treatment சுகப்படுமென்றே நினைக்கிறேன் ! பார்ப்போமே !! இதோ - சற்றே வர்ணங்களில் மாற்றங்களுடனான அட்டைப்படம் : 

Before I wind up some updates : 

1 ஆகஸ்டின் ரெகுலர் இதழ்கள் வியாழன் காலையில் (ஆகஸ்ட் 12) இங்கிருந்து புறப்பட்டிடும்.

இரத்தப் படலம் டெஸ்பாட்ச் வெள்ளியன்றிருக்கும் ! (ஆகஸ்ட் 13 )

3 ஆகஸ்ட் 14 & 15 தேதிகளில் E-ROAD புத்தக விழாவினில் புது இதழ்கள் நீங்கலாய் கைவசமுள்ள பாக்கி அனைத்து இதழ்களுக்கும் வெவ்வேறு சதவிகித டிஸ்கவுண்ட்ஸ் இருந்திடும் - ஆங்கில CINEBOOK உட்பட

4 E-Road ஆன்லைன் புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்கள் இரண்டும் எவையாக இருக்கக்கூடுமென்று சரியாய் யூகிக்க முயற்சிக்கலாமே guys ? உங்கள் யூகம் சரியெனில் - அந்த இரு புக்ஸும் எங்கள் அன்புடன் உங்களுக்கு ! இந்தப் போட்டி இந்த ஞாயிறு வரையிலும் மட்டுமே ! And யாரேனும் சரியாய் யூகித்திருப்பினும், அது சனி காலையில் தான் அறிவிக்கப்படும் ! முடிந்தமட்டும் கொண்டையை மறைக்கப் பார்ப்போம் ; நம்மாட்கள் சொதப்பி வைக்காத வரையிலும் !! 

5 SMASHING 70's முன்பதிவுகள் தட தடத்து வருகின்றன ! இன்னமும் இரண்டே கால் மாத முன்பதிவு அவகாசம் இருக்க - 500 என்ற அந்த இலக்கைத் தொட்டு விட சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது ! புனித மனிடோ அருள்வாராக !!

Bye all...see you around !! Have a great weekend !!





Memes உபயம் : நண்பர் கிரிதரசுதர்சன் !!