Thursday, February 28, 2019

சுடச் சுட ஒரு மார்ச் !!

நண்பர்களே,

வணக்கம்."சுடச் சுட"....."சூட்டோடு சூடாக.." என்றெல்லாம் பேசுவது ; எழுதுவது ஜகஜம் ! ஆனால் அதை நடைமுறையில் ; மெய்யாலுமே பார்க்க உங்களுக்கோர் வாய்ப்பு !! நேற்றைக்கு அச்சாகிய டெக்ஸ் வில்லரும், கிராபிக் நாவலும் - நாளை இதர புக்குகளோடு உங்களை எட்டிப்பிடிக்கும் வேளையினில் அவற்றை சற்றே ஜாக்கிரதையாய்த் திறந்து நுகர்ந்தீர்களெனில் ஆப்செட் மசியின் வெப்பமும், பெட்ரோல் நெடியும் ஜிவ்வென்று தூக்கியடிக்கத் தவறாது ! என்ன செய்தோம் - எப்படிச் செய்தோமென்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை ; ஆனால் 4 புக்குகளோடு உங்களது கொரியர்கள் சகலமும் இன்றைக்குக் கிளம்பிவிட்டன இங்கிருந்து !! 
http://www.lion-muthucomics.com/home/383-march-pack-2019.html
ஞாயிறு துவங்கிய எடிட்டிங் கூத்துக்கள் - திங்களும், செவ்வாயும் சர்க்கஸ் கூடாரமாய் மாற்றிவிட்டது நமது DTP அறையை !! டெக்ஸ் வில்லரை அரக்கப் பரக்க முடித்த போதே ஞாயிறு மாலையாகிப் போயிருந்தது !! அப்புறமாய் "முடிவிலா மூடுபனி" கிராபிக் நாவலைக் கையிலெடுத்தால் - 'கெக்கெபிக்கே' என்று சிரிக்கத் தான் தோன்றியது - சிலபல காரணங்களின் பொருட்டு !! இது 2 மாதங்களுக்கு முன்பாய் கருணையானந்தம் அவர்கள் எழுதிய கதை என்பதால் - இந்த ஞாயிறு மாலை வரையிலும் அதனுள் நான் நுழைந்திருக்கவேயில்லை !! பக்கங்களை புரட்டப் புரட்ட - அந்த black & white கி.நா.பாணி செமையாய் வசீகரிக்கச் செய்தது ! ஆனால் வரிகளில் இன்னும் வீரியம் கூடுதலாயிருந்தால் கதையின் அந்த melancholy மூடுக்கு பிரமாதமாய் ஒத்துப் போகுமே என்று தோன்றியது !! So ஸ்கிரிப்டில் ஏகமாய்  கைவைக்க வேண்டிவருமென்பது பிப்ரவரி 24-ன் ஞானோதயமாய் துளிர்க்கும் வரையிலும், ஏதேதோ காரணங்களின் பொருட்டு மாடு மேய்த்துத் திரிந்த எனது  மடமையை எண்ணிச் சிரிக்கத் தோன்றியது ! சிரிப்பின் காரணம் # 2 - "இந்தக் கதையின் பொருட்டும் இங்கொரு அலசல் காத்துள்ளது டோய்ய் !!" என்ற புரிதலின் பலன் !! "தோர்கலின்-சிகரங்களின் சாம்ராட்" ரேஞ்சுக்கு இல்லாவிடினும், வெகு சுலபமாய்த் தெரியும் அதே நொடியில் - செம complex ஆகக் கதாசிரியர் எதைச் சொல்ல வருகிறாரோ ? என்று நாம் நிச்சயமாய் அபிப்பிராயங்களை இந்தக்கதையின் பொருட்டு பரிமாறிக் கொள்ளப்போவது உறுதி !! சிரிப்பின் காரணம் # 3 - பெரும்புலவரின் குறள்வரிகள் !! காத்திருந்த 25 & 26 தேதிகளில் நமது இதர தொழில்களின் பொருட்டு வேறு பணிகளுமே சற்றே மிரட்டலாய்க் காத்திருக்க - இங்கேயோ ஒரு முழுநீள கிராபிக் நாவலை ஏகமாய் மாற்றியெழுதி ; அதனை மறுக்கா எடிட் செய்யும் பொறுப்பு தாட்டியமாய் நின்று கொண்டிருந்தது !! வேறென்ன செய்வது - இடுக்கண் வரும் சமயம் சிரிப்பதைத் தாண்டி ??! ஞாயிறு & திங்கள் சாமக்கூத்துக்களை வழக்கத்துக்கும் ஜாஸ்தியாக்கிய கையோடு - நமது DTP அணியின் பெண்களையும் ஆபீசில் லேட்டாய் அமரச் செய்து அடித்துப் பிடித்து புதனன்று அச்சிட்டோம் !! And வியாழன் காலையில் despatch !! 

As always - நமது டீம் 'வேலையென்று வந்துவிட்டால் விஸ்வரூபம்" எடுப்பதை இம்முறையும் பார்க்க முடிந்தாலும், இங்கே நிறைய credit இந்தக் கதைக்கே சாரும் என்பேன் !! டெக்ஸ் வில்லரின் எடிட்டிங் பொதுவாய் பெரிய குழப்படிகளில்லா பணியே ; ஆனால் அங்கேயே ஒருநேரத்துக்கு 20 பக்கங்களைத் தாண்டுவதற்குள் பிட்டம் பிதுங்கிப் போய்விடுவதுண்டு !! 260 பக்கங்களை சுமார் 10 நாட்களாய் நீட்டித்து வந்தேன் ! ஆனால் இங்கேயோ விரவிக்கிடக்கும் ஒருவித சோகமான வசீகரம் - அலுப்புத்தட்டாது பணியாற்ற அனுமதித்தது !! ஞாயிறு சாமத்தில் 50 பக்கங்களையும், திங்களின் இரவினில் பாக்கி 60 பக்கங்களையும் மாற்றியெழுதி முடிக்க முடிந்தது - என்னைப் பொறுத்தவரையிலும் nothing short of a medical miracle தான் - because எடிட்டிங் வேலைகள் என்று வரும் போது நானொரு மேல்வளையா கோவேறு கழுதையாகிடுவது வாடிக்கை ! அப்படியொரு மெதுவண்டியான எனக்கே இந்த வேகம் என்றால் - எல்லாப் புகழும் அந்தக் கதாசிரியருக்கே !! கதையின் தரம் பற்றிய அறைகூவலாகவோ  - அதற்கான பில்டப்பாகவோ இதனை நான் சொல்லவில்லை ; ஆனால் ஏதோவொரு காந்தமுள்ளதாய் எனக்குத் தோன்றியது "முடிவிலா மூடுபனி " இதழினில் !! And here is the first look of the (original ) cover :


ஒரிஜினல் அட்டைப்படம் - துளிகூட மாற்றங்களின்றி ; and அந்தத் தலைப்பு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணம் !! மாற்றியெழுதிடும் பணி தானென்றாலும், கடைசி நிமிடத்தில் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டே செய்ய வேண்டிய வேலையென்றாகிப் போனாலும் - ரொம்பவே ரசித்தேன் இங்கே பேனா பிடித்ததை !! மென்மையாய் ஓடிய கதை ; yet ஏதோவொரு இன்னும்சொல்ல இயலா air of mystery about it !! உங்களுக்கும் அவ்விதமே தோன்றினால் சூப்பர் ; மாறாக - "ச்சை...எனக்கு இந்த கி.நா.வே புடிக்காது !!" என்று முகம் சுளித்தாலும் புரிந்து கொள்வேன் !!

அப்புறம் "தொடர்ச்சியாய் இந்தாண்டின் மூன்று மாதங்களுமே கடைசி நிமிடம் வரை இழுத்துக்கோ-பறிச்சுக்கோ என்று கூத்தடித்து வருகிறோமே -  நம்மள்க்கு லைட்டா வயசாகிட்டு வருதோ ? ; அப்டிக்கா -இப்டிக்கா தெரியுறதுலாம் பித்த நரையில்லையோ ?  " என்ற கேள்வி எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! ஆனால் எது எப்படியோ - நூற்றி எழுபத்தி எட்டாவது தபாவாய் விஸ்வரூபமெடுத்துக் காட்டியிருக்கும் எனது டீமுக்கு ஒரு thumbsup என்றபடிக்குக் கிளம்புகிறேன் - ஏப்ரலின் லக்கி லூக் & ஜாலி ஜம்பர் டீமோடு மிஸிஸிப்பி நதியினில் சவாரி செய்திட !! Bye all ; see you around !!

பி.கு : "Onomatopoeia" பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்வோமா guys - தொடரும் நாட்களில் பயன்படக்கூடும் !! 

Online listing available now !!

Sunday, February 24, 2019

ஒரு தடதடக்கும் டெக்ஸ் எக்ஸ்பிரஸ் !!!

நண்பர்களே,

வணக்கம். 1582-ல் பதிமூன்றாம் போப் க்ரெகரி வடிவமைத்த ஆண்டுக் காலெண்டரைத் தான் லோகம் முழுக்க இன்றுவரைக்கும் நாமெல்லாம் பயன்படுத்தி வருகிறோம் ! கனகச்சிதமான இந்தக் கண்டுபிடிப்பில் என்னளவுக்கு ஒரேயொரு குறை தான் : பிப்ரவரிக்கு மட்டும் நாட்களை சுருக்கமாய் அமைத்து விட்டாரே என்று !! அதன் நோவுகளை இந்த வாரம் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டியுள்ளது எனக்கு ! சகோதரி இல்லத்துத் திருமணம் மாத்திரமன்றி தொடர்ந்த விருந்துகளிலும், அப்புறமாய் ரிஷப்ஷனிலும், பந்தியில் தொந்தியை நிரப்பிக் கொள்வதிலேயே வாரத்தின் 5 நாட்கள் செலவாகிப் போயிருக்க - காலண்டரில் நான்கே நாட்களே எஞ்சி நிற்கின்றன - மார்ச் உதித்திடும் முன்பாய் !! "ச்சை...எனக்கு இந்த 28 தேதி கொண்ட பிப்ரவரியே புடிக்காது !!" என்று பழிப்புக் காட்டியபடிக்கே எஞ்சி நிற்கும் black & white இதழ்களின் பணிகளுக்குள் அரக்கப் பரக்க மூழ்கிட இந்த ஞாயிறை முழுசாய்ச் செலவிட்டாலொழிய கதை கந்தலாகிப் போய் விடும் !! So பதிவிட்ட கையோடு, பாலைவனப் பயணத்தைக் தொடர்ந்திட வேண்டி வரும் - நமது ஆதர்ஷ ரேஞ்சர்களோடு !!

And இது கொஞ்சம் ரேஞ்சர் புராணமாய் அமைந்திடவுள்ள பதிவுமே என்பதால் - "ச்சை...எனக்கு இரவில் பறக்கும் கழுகுகளையே புடிக்காது !!" என்றிடக்கூடிய (சொற்ப) நண்பர்கள் பதிவின் பிற்பகுதிக்கு நேராய் வண்டியை விடல் நலமென்பேன் !!

ஒரு க்ளாஸிக் சித்திர பாணி ; டாப் கதாசிரியரான கிளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் ஒரு 260 பக்க அதிரடி ; கதை நெடுக அடித்துக்கொண்டும் - பிடித்துக்கொண்டும் பயணிக்கும் இரவுக் கழுகார் + வெள்ளிமுடியார் கூட்டணி !! இந்த மூன்றும் கலவையானால் கிடைப்பது என்னவாக இருக்குமென்று நான் சொல்லித் தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா - என்ன ? ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்பாய் பட்டையைக் கிளப்புமொரு நீள சாகசத்தில் நம்மவர்களை பார்க்கும் போது ஒரு இனம்சொல்ல இயலா த்ரில் உள்ளுக்குள் !! வறண்ட பாலைவன சாகசம் என்றாலும், நெடுக ரவுசு விட்டுத் திரியும் கார்சனின் புண்ணியத்தில் கதையோட்டத்தினில் வறட்சி லேது !! ஒரு கட்டத்தில் வெள்ளிமுடியார் அதட்டி உருட்ட - இரவுக்கழுகாரே தன மனதை மாற்றிக் கொள்ளும் அதிசயமும் இங்கே அரங்கேறுகிறது ! தற்போதைய டெக்ஸ் எடிட்டராய் மௌரோ போசெல்லி அசைத்தது துவங்கிய வரைக்கும், கதாசிரியர் நிஸ்ஸியே டெக்சின் டாப் நவீனப் படைப்பாளியாக இருந்து வந்தார் ! அந்தக் காலகட்டத்தில் உருவான சாகசமிது என்பதால், செம சுதந்திரமாய்  வித்தியாசமான plot ஒன்றைக் கையில் எடுத்துள்ளார் !! So எதிர்பாராததை எதிர்பார்த்திடலாம் "பாலைவனத்தில் ஒரு கப்பல்" ஆல்பத்தில் ! இதோ அதன் அட்டைப்பட preview - ஒரிஜினல் ராப்பரின் தழுவலாய் : And உட்பக்க preview கூட தொடர்கிறது - மிரட்டலான கதைக்கும், சித்திர பாணிக்கும் டிரைலராய் அமைந்திடும் பொருட்டு !! 

இன்னும் சில நாட்களில் இந்த ஆல்பத்தை நாம் ரசிக்கலாம் தான் ! ஆனால் இத்தாலியில் தட தடத்து வரும் அந்த "டெக்ஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலின் தடத்தையாவது நாம் பின்பற்றிட நினைத்தால் - முகத்தில் அந்தக் கரி எஞ்சின் ஊதித் தள்ளிடும் புகையைக் கூட உணர முடியாது போலும் !! சும்மா "இருளில்ஒரு இரும்புக்குதிரை" சாகசத்தில் வருவதை போல, டெக்ஸ் எக்ஸ்பிரஸ் தெறிக்கும் வேகத்தில் பயணித்து வருகிறது ! சென்றாண்டு இரவுக்கழுகாரின் 70 -வது பிறந்தநாள் ஆண்டென்றால் - நடப்பாண்டு அவரது சாகசம் # 700 வெளியாகி அதகளம் செய்திடும் பொழுது !! மௌரோ போசெல்லியின் கதைக்கு அட்டகாச ஓவியர் சிவிடெல்லி சித்திரங்கள் தீட்ட "பாண்நீ  புதையல்" என்றதொரு  முழுவண்ண - முழுநீள சாகசம் இந்த மாதம் வெளியாகியுள்ளது !! பாருங்களேன் அதன் முன்னோட்டத்தை !!

மாமூலான மஞ்சள் சொக்காய்க்கு விடுப்புத் தந்து, இம்முறை சிகப்பில் ஜொலிக்கும் ரேஞ்சரைப் பார்த்து பெருமூச்சைப் பெருசாய் விட்டுக்கொள்கிறேன்!! மாட்டுவண்டியில் ஒரு ரயிலைத் துரத்திப் பிடிக்க ஏதேனும் வழியுண்டா என்று யாராச்சும் அகுடியா சொல்லுங்களேன் ப்ளீஸ் ? நாம் ஆண்டுக்கு 12 டெக்ஸ் என்று பந்தாவாய் அறிவித்தால், அவர்கள் ஆண்டுக்கு 50 ஆல்பங்களை போட்டுத் தாக்கிடுவார்கள் போலுள்ளதே !! Phewwwwww !!! 

எனது பெருமூச்சுகள் சற்றே மிகையென்று யாருக்கேனும் தோன்றினால் - nopes guys ! நிச்சயம் அதற்கொரு கூடுதல் காரணமும் உண்டென்பேன் !! மாதா மாதம் ரெகுலர்  டெக்ஸ் வெளியாவது ஒருபக்கமெனில், க்ளாஸிக்  டெக்ஸ் என்னும்தடத்தில் மறுபதிப்புகள் ஓடிவருகின்றன ! மூன்றாவதாயொரு தடத்திலோ கலர் டெக்ஸ் கதைகள் உருவாகி கலக்கியும் வருவது பற்றாதென வெகு சமீபத்திலிருந்து "போக்கிரி டெக்ஸ்" என்றதொரு பிரத்யேக பாதையைப் போட்டு அதகளம் செய்து வருகிறார்கள் ! டெக்சின் துவக்க நாட்களை சித்தரிக்கும் "இளம் டெக்ஸ்" கதைகளின் வெற்றியைத் தொடர்ந்து - அவரது "போக்கிரி நாட்களுக்கென" ஒரு exclusive வரிசையை உருவாக்கி பின்னிப் பெடலெடுக்கும் வெற்றிகளை சந்தித்து வருகின்றனர் !! பாருங்களேன் அந்த வரிசையில் இதுவரைக்கும் வெளியாகியுள்ள 3 ஆல்பங்களின் முன்னோட்டங்களை :
Album # 1
Album # 2
Album # 3

இவர்கள் மனுஷர்களா ? அல்லது வரம் வாங்கி வந்த தெய்வப் பிறவிகளா ? என்று மலைக்கச் செய்கிறது இவர்களின் படைப்புலக ஆற்றல்களைப் பார்க்கும் போது !! கதையொன்றை உருவாக்க மினிமம் 8 மாதங்கள் தேவைப்படுகிறது என்று என்னிடம் மௌரோ போசெல்லி அவர்கள் சொன்னதை இங்கே நினைவு கூர்ந்து பார்த்தால் - இன்றைக்கு நாம் கண்ணில் பார்த்திடும் சரக்குகளெல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்னே ஜனிக்கத் துவங்கியவை என்பது புரிகிறது !! "ஆஆ...எழுநூறா ?" என்று நாம் வாய் பிளந்து நிற்கும் இந்த நொடியில் அவர்கள் அநேகமாய் 725-ன் திட்டமிடலில் குந்தியிருக்கக்கூடும் !!! Amazingly awesome !!!! And extremely  inspiring !!! 

கவ்பாய் காமிக்ஸ் உலகினில் ஒவ்வொரு மைல்கல்லாய் முறியடித்து வரும் இந்த அசாத்திய நாயகரின் தனிப்பட்ட மைல்கல் தருணங்களின் அட்டைப்படங்களையும் பாருங்களேன் !! வரிசையாய் 100 ; 200 ; 300 என்று :






அந்த TEX 200 ராப்பரைப் பார்க்கும் போது நிறையவே flashbacks எனக்குள் !! நாம் நியூஸ்பிரிண்டில் புக் வெளியிடுவதே பெரும் சமாச்சாரமாய் இருந்து வந்த அந்த late '80s & early '90s காலகட்டத்தில் இத்தாலியின் ரோம் நகர ரயில்வே நிலையத்தில் இந்த வண்ண இதழை முதன்முறையாகப் பார்க்க முடிந்தது - ஒரு பழைய புத்தகக் கடையில் ! அதைக் கடையென்று சொல்வதைவிட - "பழைய புத்தக வண்டி" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் !! அந்நாட்களில் நம்மூர்களில் குச்சி ஐஸ்களை ஒரு சக்கரம் போட்ட மர தள்ளுவண்டியில் விற்றுக் கொண்டு வருவதை இங்குள்ள சில veterans (!!!) பார்த்திருக்கக்கூடும் ! அது மாதிரியொரு தள்ளுவண்டிக்குள் ஒரு வண்டி டெக்ஸ் இதழ்களை மட்டுமே குவித்து வைத்து ரோமின் ரயில்நிலையத்தில் விற்பனை செய்வார் புஷ்டியானதொரு ஆசாமி ! முதன்முறையாக நான் அவரிடம் டெக்ஸ் இதழ்களை அள்ளிய போது - நேக்கு இத்தாலிய பாஷை தெரியும் போலும் என்ற நினைப்பில் மனுஷன் கிக்ரி-பக்ரீ என்று ஏதோ சொல்ல முயன்றார் !! "இத்தாலியன் நோ-நோ...ஒன்லி இங்கிலீஷ் !!" என்று நான் பதில் சொல்ல - "பின்னே இதை எதுக்கு அள்ளிட்டு போறேலே ?" என்ற ரீதியில் மறுக்கா ஏதோ சொன்னார் !! ஆனால் காமிக்ஸ் வாசகர்களுக்கு "சேகரிப்பு" எனும் ஒரு சங்கதியும் உடன்பிறந்ததே என்பதைப் புரிந்தவராய் - அவருக்கு வந்த துக்கனூண்டு இங்கிலீஷில் பேச முயன்றார் !! நம்ம முழியையும், மூஞ்சியையும் பார்த்தவர் - "இந்தியா ? பாகிஸ்தான் ? பங்களாதேஷி ?" என்று கேட்க - "இந்தியா...இந்தியா !!" என்றவுடன் புரிந்தது போல் மண்டையை ஆட்டியபடிக்கே, வண்டியின் அடிப்பகுதியிலிருந்து மேலும் ஒரு கத்தை டெக்ஸ் இதழ்களைத் தூக்கி மேலே அடுக்கி வைக்க - அதனுள் டாலடித்தது டெக்ஸ் 200 வண்ண இதழ் !! அப்போதெல்லாம் "கலர்" என்றால் எங்கள் ஊர்த் திருவிழாக்களில் குடிக்கக்கூடிய பாட்டில்களில் வரும் திரவம் மட்டுமே ஞாபகம் வரக் கூடிய நாட்கள் !  அட...போனெல்லிக்கே வண்ணம் என்பதெல்லாம் ஒரு குறிஞ்சிப்பூ மாதிரியான மேட்டரே அந்நாட்களில் ! So 'ஆஆவென்று' வாயைப் பிளந்தபடிக்கே அந்த TEX 200-ன் வண்ணப் பக்கங்களை புரட்டியது இன்றைக்கும் நினைவுள்ளது ! சொல்லப்போனால் அந்த புக் இன்னமும் எனது பீரோவுக்குள் கிடக்கிறது என்றே நினைக்கிறேன்  ! காலம் இன்றைக்கு ஏகமாய் மாறியிருக்க,,,"நாங்களும் பரட்டை தானே !! எங்ககிட்டேயும் சீப்பு இருக்குல்லே !!" என்று இல்லாத கேசத்தை சிலிப்பிக் கொள்வதாய் மனதுக்குள் பிரமை !! எது எப்படியோ - ஒரு காமிக்ஸ் சகாப்தத்தின் பயணத்தில் ஒரு கடைக்கோடியில் தொங்கிக்கொண்டேனும் நாமும் இடம்பிடித்திருப்பதில் நிரம்பவே சந்தோஷம் !! And அதை சாத்தியமாக்கியுள்ள டெக்ஸ் ரசிகர்களுக்கும், ரசிக்காதது போலவே  ரசிக்கும் நண்பர்களுக்கும் எனது THANKS !!! 

Moving on, மார்ச்சில் கார்ட்டூன் கோட்டா சந்தா C  சார்பில் இல்லையெனினும், மறுபதிப்புச் சந்தா D-ன் புண்ணியத்தில் இலகு வாசிப்புக்கொரு இதழ் ஆஜர் !! இதோ துப்பறியும் மாமேதை ஹெர்லாக் ஷோம்சின் 2 மறுபதிப்பு சாகசங்கள் அடங்கிய வண்ண இதழின் அட்டைப்பட preview :

ஏற்கனவே மினி-லயனில் (?) வெளியான இந்தக் கதைகளை வண்ணத்தில், பெரிய சைசில், டாலடிக்கும் கலரில் பார்க்கும் போது சும்மா ஜில்லென்று உள்ளது !! புதிதாய்ப் படிப்போருக்கு சரி ; மறுக்கா வாசிக்கவுள்ளோரும் சரி - இந்த ரம்யத்தில் மயங்கிடாது போயின் ஆச்சர்யம் கொள்வேன் !! ஏதேதோ கட்சிகளெல்லாம் வோட்டு கேட்டு வரக்காத்துள்ள இவ்வேளையில் அடியேனின் கோரிக்கையோ - "கார்ட்டூன் சின்னத்துக்கும் சித்தே வோட்டு போடுங்களேன் புளீஸ்ஸ்ஸ்ஸ் !!" என்பதாகத் தானிருக்கும் !! அதுக்கோசரம் தந்திட நம்மளிடம் இரண்டாயிரம், மூன்றாயிரமெல்லாம் லேது ; மாதமொரு இக்கிளியூண்டு டெய்ரி மில்க் சாக்லேட் வேண்டுமானால் சாத்தியம் ! டீலா ? நோ டீலா ?

காத்துக் கிடைக்கும் பணிகளுக்குள் புகுந்திட இப்போது புறப்படுகிறேன் guys !! அதற்கு முன்பாய் இன்னொரு கேள்வியுமே !! "இந்த டெக்ஸ்...அந்த டெக்ஸ்...என்று நாவிலே ஜலம் ஊர ஜாலம்  செய்துவிட்டு நடையைக் கட்டாது - அதற்கென ஏதாச்சும் செய்திடத் தான் முனைவோமா ? போக்கிரி டெக்ஸ்..........!!!! தெறிக்க விடலாமா ? Bye all....see you around !! And have a lovely Sunday !!

P.S : போன வாரத்துப் பதிவினில் கேட்டிருந்த அந்த "அமெரிக்க போலீஸ் புலனாய்வு" கதைக்கு உங்களின் thumbsup கணிசமாய்க் கிடைத்திருக்க - அதன் உரிமைகளுக்கு கோரிக்கை அனுப்பிடவுள்ளோம் அடுத்த சில நாட்களில் !! And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ? அடிச்சுக் கேட்டாலும் அவர் பெயரை மட்டும் நான் சொல்லவே மாட்டேனாக்கும் !! 

Saturday, February 16, 2019

பில்டப்பே என் துணைவன் !!

நண்பர்களே,

வணக்கம். சகோதரியின் மைந்தனுக்குத் திருமணம் என்பதால் இந்தப் பதிவை நீங்கள் பார்க்கும் நேரத்திற்கு நான் ஏதேனுமொரு பந்தியில் இட்லி குண்டாக்களைத் தூக்கிக் கொண்டிருக்கக்கூடுமென்பேன் ! So சிலபல நாட்களுக்கு முன்பாகவே எழுதிய பதிவிது என்பதை யூகிக்க மதியூக மந்திரிகள் அவசியப்பட மாட்டார்கள் தான் ! And இந்தப் பதிவு அத்தனை நீளமானதாய் இராதென்றாலுமே, நாம் பயணிக்கவுள்ள பாதை சார்ந்தது என்ற விதத்தில் நிரம்பவே முக்கியமானதென்பேன் ! So இயன்றமட்டிலும் மௌனப் பார்வையாளர்களுமே தத்தம் two cents worth கருத்துக்களைப் பகிர்ந்திட்டால் நலம் – நமக்கெல்லாம் ! பீடிகையும், பில்டப்பும் போதுமென்பதால் – விஷயத்துக்குள் குதிக்கிறேனே…?!

ஜம்போ காமிக்ஸ்” எனும் 6 சீட்டுக்களைக் கையில் வைத்திருந்து – அவற்றை ஒன்றொன்றாய் உங்கள் முன்னே இறக்குவது சுவாரஸ்யமானதொரு அனுபவமாகவே இருந்து வந்துள்ளது – சீஸன் 2-ன் துவக்கத்தின் விளிம்பில் நிற்கும் இந்த தருணத்தில் ! In hindsight – இதுவரையிலும் கதைத் தேர்வுகளில் நிகழ்ந்திருக்கக்கூடிய பிசிறுகளை அலசிட சாத்தியமாவதால் – அவை தொடர்ந்திட இடம் தரக்கூடாதென்ற வைராக்கியமும் முன் எப்போதையும் விட ஜாஸ்தி ! கதைகளின் அறிவிப்பை வெளியிடாமலே கூட உங்களுள் 75% சந்தாதாரர்கள் சீஸன்-2க்கும் thumbs-up தந்திருக்கும் போது – நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நியாயம் செய்திட வேண்டுமென்ற பரபரப்பு அனலாய்த் தகிக்கிறது உள்ளுக்குள் ! இதன் பொருட்டு எக்கச்சக்கமான தேடல்கள் ; லோடு லோடான கதைக் கோரல்கள் ; வண்டி வண்டியாய் பிரிண்ட்-அவுட்கள் ; தலையணைக்குப் பதிலாய் மொத்த மொத்தமாய் புதுக்கதைகள் என்று கடந்த மூன்று வாரங்களும் தடதடத்துள்ளன ! “மார்ச் ‘19-ல் ஜம்போ சீஸன் 2-ன் கதைகள் அறிவிக்கப்படும் !” என்று கெத்தாக விளம்பரத்தைப் போட்டு வைத்திருக்க – முதல் 4 ஸ்லாட்களுக்கு அதிகம் குளறுபடிகளின்றி கதைத் தேர்வுகள் தாமாய் அமைந்து போயின ! அவை ஒவ்வொன்றுக்குமே ஒரு அடையாளம் இருப்பதாய் எனக்குப்பட்டது!


இளம் டெக்ஸ் – காலத்தின் கட்டாயம் !

ஜேம்ஸ் பாண்ட் # 3 – நவீனத்தின் அடையாளம் !

லக்கி லூக் கிராபிக் நாவல் –கார்ட்டூன் படைப்புலகின் இன்னொரு முகம் !

மார்ஷல் சைக்ஸ் – வன்மேற்கின் yet another யதார்த்தப் பார்வை - இம்முறையோ ஒரு தடுமாறும் ஹீரோவுடன்!

ஆக எஞ்சி நின்ற 2 ஸ்லாட்களுள் புகுத்த – தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு முண்டியடிக்கும் குட்டிக் கட்சிகள் போல ஏகப்பட்ட one-shots / தொடர்கள் கைதூக்கி நிற்பது புரிந்தது ! ஒவ்வொரு ஆண்டுமே ஜுலைவாக்கில் தொடங்கும் கதை வேட்டையானது இம்முறை ஜம்போவின் பெயரைச் சொல்லி ரொம்ப முன்கூட்டியே துவங்கியிருக்க – மண்டையெல்லாம் காய்ந்து போய் விட்டது – ஒவ்வொரு மெகாப் பதிப்பகமும் இடைப்பட்டுள்ள இந்த ஏழெட்டு மாதங்களுக்குள் குவித்துத் தள்ளியிருக்கும் ஆல்பங்களின் variety-களைப் பார்த்த போது ! ஜம்போ தவிர்த்து – “ஈரோடு ஸ்பெஷல்” என்றதொரு வாய்ப்பும் காத்திருக்க, “இந்தக் கதையை இங்கே நுழைக்கவா?” அந்தத் தொடரை அங்கே புகுத்தவா?” என்ற குழப்பத்தில் சட்டையைக் கிழிக்காத குறைதான் ! இதில் வேடிக்கை என்னவெனில் காலியுள்ள shots மொத்தமே 4 தான் & கைவசமுள்ள பட்ஜெட்டுமே மிதரகம் தான் ! ஆனாக்கா – “ஐஃபெல் டவரை வாங்கிப்புடலாமா ? வெள்ளை மாளிகையை ஒத்திக்குக் கேட்கலாமா ?” என்றபடிக்கு பாயைப் பிறாண்டிக் கிடப்பதைப் பார்க்க எனக்கே சிப்பு-சிப்பாய்த் தான் வருது ! ஆனால் என்ன செய்ய ? திருவிழாவில் கலர் கலராய் பலூன்களையும், பானங்களையும், பொம்மைகளையும் பார்க்கும் போது அத்தனையையும் சொந்தமாக்கிட வேண்டுமென்ற ஆசை யாரைத் தான் விட்டது ?! இதில் இன்னொரு மெகாக் கொடுமை என்னவெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் அங்கும், இங்கும் வாங்கிப் போட்ட கதைகளுமே ஒரு கணிசமான கையிருப்பில் உள்ளன ! அவற்றைக் கொண்டே ஜம்போவின் மிஞ்சிய 2 ஸ்லாட்களையும் மட்டில்லாது ஈரோடு / பொள்ளாச்சி / உடுமலைப்பேட்டை ஸ்பெஷல்களையும் கூடத் தயார் செய்து விடலாம் தான் ! ஆனால் current ஆகக் குவிந்து வரும் கதைகள் என்னவென்று பார்த்திடும் ஆர்வம் ஆட்டிப் படைப்பதால் – ஆந்தைவிழிகளை பரபரக்க அனுமதித்து வருகிறேன்!

பொதுவாய் வேக வேகமாய் கதைகளை வரவழைத்து பிரிண்ட் போட்ட கையோடு அவற்றை கெத்தாய் ; கொத்தாய், கத்தையாய் வீட்டுக்குத் தூக்கிப் போன கையோடு படித்து, முடித்து, பரிசீலித்து விட வேண்டுமென்று எனக்கே சொல்லிக் கொள்வேன் தான் ! ஆனால் நடுராத்திரியில் 10 பக்கங்களைப் புரட்டுவதற்குள் – 20 கொட்டாவிகள் பிராணனை வாங்கிடுவதும் ; தலைமாட்டிலேயே பக்கங்களையும் கிடத்திய கையோடு குறட்டை லோகத்துக்கு டிராவல் பண்ணுவதுமே நடைமுறைகள் தான் ! பொதுவாய் கதைகளின் சுவாரஸ்யமோ – சுவாரஸ்யமின்மையோ இதற்கொரு காரணமாய் இருப்பதில்லை ; ஏழு கழுதை வயதின் தாக்கமே கொட்டாவிகளின் புண்ணியப் பின்னணி ! ஆனால் முதல் முறையாக ஒரு 132 பக்க ஆக்ஷன் த்ரில்லரை கையிலேந்திய 30 நிமிடங்களுக்குள் மெய்மறந்து படிக்க சாத்தியமாயிற்று நேற்றைக்கு ! அதைப் படித்து முடித்த கையோடு எனக்குள் ஓட்டமெடுத்த எண்ணங்களைச் சுடச் சுட பதிவாக்கவும் செய்கிறேன் – உங்களிடம் கேட்க அது சார்ந்த கேள்விகள் எனக்கிருப்பதால் !! பில்டப்புகளின் பெரியண்ணன் நான் என்பதில் ரகசியங்கள் லேது ! “துயிலெழுந்த பிசாசு” கதைக்கே ஆனை-பூனை என்ற intro தந்தவன் தானே ? So வழக்கம் போல இம்முறையும் சிலாகிப்புப் படலத்துக்குள் நான் வரிந்து கட்டிக் கொண்டு நுழையும் போது – நீங்கள் கொட்டாவி விடத் தொடங்கினால் நிச்சயம் ஆச்சர்யப்பட மாட்டேன் ! ஆனால் trust me when I say this guys – இது “புலி வருது” சமாச்சாரமல்ல ; புலியே தான்! (இதுவொரு உவமையே தவிர, புலியென்ற மறுநொடியே - "தங்கத் தலைவன் மறுக்கா வர்றாருடோய்!” என்று யூகித்திட வேண்டாமே – ப்ளீஸ்?!)

பொதுவாய் நாம் பார்த்தும், ரசித்தும் வரும் ஆக்ஷன் த்ரில்லர்களில் / டிடெக்டிவ் த்ரில்லர்களில் ஒரு மத்திய நாயகரோ – நாயகியோ இருப்பதுண்டு ! போலீஸ் இலாக்காவினில் அதிரடியாளராக வலம் வர, கெத்தாய் துப்பு துலக்கி – க்ளைமேக்ஸில் வில்லன் கோஷ்டியை முட்டியில் தட்டி – “சுபம்” போட உதவிடுவர் ! நான் படிக்க நேர்ந்த இந்தக் கதையிலுமே களம் கிட்டத்தட்ட அதே போலத் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. போலீஸ் இலாக்காவின் டீம் நடுநாயகமாய் இந்த ஆல்பம் முழுக்க பயணிக்கிறது ! Star TV ; HBO போன்ற இங்கலீஷ் சேனல்களில் அமெரிக்க குற்றப் புலனாய்வு சீரியல்களைப் பார்த்துப் பழகியிருப்போருக்குப் பரிச்சயமாகியிருக்கக் கூடிய பாணியில் இங்கே கதை நகர்த்தலுள்ளது ! மிகைப்படுத்தல்களின்றி ; போலீ்ஸ் டிடெக்டிவ்களை சூப்பர்-டூப்பர் ஹீரோக்களாகக் காட்டிடாது – அவர்கள் இலாக்காவினுள் சந்திக்கும் சவால்கள்; மேலதிகாரிகளோடு நேர்ந்திடும் உரசல்கள் ; ஒரு புலனாய்வை அதன் அத்தனை யதார்த்தப் பரிமாணங்களோடும் முன்எடுத்துச் செல்லும் பாங்கு – என்று இந்த ஆல்பம் ஒரு டி-வி சீரியலைப் போல தட தடக்கிறது !

எனது கேள்வி # 1: : ஒரு க்ரைம் த்ரில்லரின் யதார்த்த முகத்தையும் தரிசிக்க / ரசிக்க நாம் தயாரா ? என்பதே ! இது சத்தியமாய் நாம் இதுவரைக்கும் (நமது காமிக்ஸ்களில்) சந்தித்திரா ரகம் guys ! ஆனால் சந்திக்க வேண்டுமென்று நான் விரும்புமொரு ரகம் !! போலீஸ் பணிகளோடு இணைத்தடமாய் ஓடும் அரசியல் ; அதன் குறுக்கீடுகள் என்றும் படு இயல்பான இழைகளே கதைநெடுக எனும் போது, ஒரு மாமூலான “காமிக்ஸ் க்ரைம் த்ரில்லர்” சமாச்சாரங்களிலிருந்து இது மாறுபட்டுத் தெரியும் ! அதற்காக தூர்தர்ஷனின் டாக்குமென்ட்ரி படம் போல வறண்ட களமல்ல இது ! பக்கம் 1-ல் ஆரம்பிக்கும் ஓட்டமானது 132-ல் நிறைவுறும் போது நமக்கே மூச்சிரைக்கத் தான் செய்யும் ! So கதையில் இம்மி கூடத் தொய்வு நஹி ; ஆனால் கதை சொல்லியுள்ள பாணி நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசு ! So ஆண்டாண்டு காலமாய் நாம் பார்த்து வந்திருக்கும் "காமிக்ஸ் போலீஸ் டிடெக்டிவ்" கதைகளைத் தற்காலிகமாகவேணும் மறந்துவிட்டு - இந்த யதார்த்த உலகினுள் நுழைந்து பார்க்க ரெடியா guys ? 

எனது கேள்வி # 2 – ஒரு அதிரடி ஆல்பத்தை அட்டகாசமாய் ரசித்திட அதன் சித்திரங்களின் பங்கு எத்தனை சதவிகிதம் என்பீர்கள் ? என்பதே ! இங்கே ஓவியங்கள் – வில்லியம் வான்ஸின் தரத்திலோ ; பராகுடாவின் பிரம்மாண்டத்திலோ ; சிவிடெல்லியின் அழகிலோ நிச்சயமாய் இல்லை ! ஆனால் அதற்காக “மோசம்” என்றும் சொல்வதற்கில்லை ! இப்படி வைத்துக் கொள்வோமே : இதே ஆல்பத்துக்கு சித்திரங்களை இன்னும் சற்றே தேர்ந்ததொரு ஓவியர் போட்டிருந்தால் – அள்ளியிருக்கும் என்பதில் no மாற்றுக் கருத்துக்கள் ! தற்போதைய ஓவியர் ஒரு decent தரத்திலேயே பக்கங்களை நகர்த்தியுள்ளார் என்றாலும், சமீபமாய் நாம் பார்த்தும் பழகியும் வந்துள்ள ஓவிய அளவுகோல்களை இங்கே இட்டுப் பார்க்கும் பட்சத்தில் ஒரு மாற்று குறைச்சலாய் தென்படும் தான் ! அதனைப் பெரிதுபடுத்தாது இந்த ஆல்பத்தை வாங்க நாம் முயற்சிப்போமா folks ? அல்லது "மித சித்திரங்களெனில் மறுக்கா யோசிக்கலாம் !” என்பீர்களா?

கேள்வி # 3 : கதையோட்டமும், சொல்லப்பட்டிருக்கும் விதமும், களமும்  நிச்சயமாய் சற்றே புருவங்களை உயரச் செய்யும் தான் ! தெறிக்கும் வன்முறை ; யதார்த்த குற்றவுலகின் விகார முகம் என்று முகத்தில் அறைந்தாற் போல கதை சொல்லியுள்ளனர் எனும் போது “18+ வாசகர்களுக்கே உகந்தது” என்ற ஸ்டிக்கர் அவசியப்படலாம் ! இதனை எவ்விதம் பார்த்திடுவீர்களோ guys ? “ஜனரஞ்சகத்தை விட்டு சிறுகச் சிறுக விலகுகிறோம் ! இந்தப் போக்கு நம் பயணத்துக்கு சுகப்படாது!” என்பீர்களா? அல்லது – வாசக வட்டத்தின் தற்போதைய அகவைகளையும் ரசனைகளையும் மனதில் கொண்டு - "இத்தகைய முதிர்ந்த பாணிகளைத் தேடிப் போவது தப்பில்லை !" என்பீர்களா ? அதே போல தொட்டதுக்கெல்லாம் “முன்பதிவுக்கு மட்டுமே” என்ற அஸ்திரத்தைக் கையிலெடுக்க எனக்கு அத்தனை இஷ்டமில்லை என்பதில் இரகசியமில்லை folks ! ஆனால்  – இது மாதிரியான கதைகள் எந்தவொரு சந்தாப் பிரிவினுள்ளும் கட்டாயத் திணிப்பாய் இல்லாது – “பிடித்தால் வாங்கிக்கலாம்” என்று அமைவதே நல்லதென்பீர்களா? Enlighten me please…!

ஏகப்பட்ட புதுக்கதைகளைப் படிக்கத் தொடங்கும் போது ஆரம்பம் பிரமாதமாக இருந்திடுவதுண்டு ! "ஆஹா… இதைப் போடறோம் ; ஹிட் அடிக்கிறோம்; வாசகர்கள் பாராட்டும் போது அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ… எல்லாமே கதாசிரியரின் கைவண்ணம் !என்று ஜாலியாய்ப் பதிவிடுகிறோம்!” என்ற ரேஞ்சிற்குக் கற்பனையில் திளைத்திடுவதுண்டு ! ஆனால் பாதிக் கதையைத் தாண்டும் போதே – தம்மாத்துண்டு மாவை மட்டுமே கையிருப்பில் வைத்துக் கொண்டு படைப்பாளிகள் வடை சுட வந்திருப்பது புரியத் துவங்கிட்டால் “ஙே” என்ற முழியே மிஞ்சிடும் ! கதையை முடிக்கும் போது யாரையாச்சும் மூக்கில் குத்துவோமா ? என்பது மாதிரியானதொரு இனம் சொல்லத் தெரியா எரிச்சல் ஓட்டமெடுக்கும் ! So இம்முறையும் அதே பாணியில்,  இந்தக் கதையின் அட்டகாச ஆரம்பத்தைப் பார்த்த கணமே எனக்குள் சன்னமாய் ஒரு வேண்டுதல் துளிர் விட்டது! “தெய்வமே… இதுவுமொரு பப்படமாய் முடிந்திடக் கூடாதே!” என்று ! பக்கங்களைப் புரட்டப் புரட்ட கதையில் பரபரப்பு ஒரு பக்கமெனில் – அதைக் கடைசி வரைக்கும் தொய்வின்றிக் கொண்டு செல்லும் ஆற்றல் கதாசிரியருக்கு வாய்த்திருக்க வேண்டுமே என்ற எனது பதைபதைப்பு இன்னொரு பக்கம் ! “சுபம்” என்ற வேளையைத் தொட்டு நின்ற போது எனக்குள் 90% நிறைவு !! நூற்றுக்கு - நூறு ; சதம் ; என்றெல்லாம்  பீலா விட மாட்டேன்; ஆனால் 90% மார்க் போடத் தயங்கவும் மாட்டேன் !

இந்தக் கதையினை வாங்க நீங்கள் பச்சை விளக்கை ஆட்டிடும் பட்சத்தில் நிச்சயமாய் இன்னொரு ஒத்தாசையும் செய்ய வேண்டியிருக்கும் guys ! ஐரோப்பியப் படைப்பாளிகளின் கைவண்ணம் இதனில் இருப்பினும், இது முற்றிலும் அமெரிக்க மண்ணில் அரங்கேறும் அதகளமெனும் போது – கதைநெடுக பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடை true blue yankee ரகமே ! அதுவும் போலீஸ் புலனாய்வு சார்ந்த கதையெனும் போது – வசனங்கள் செம crisp ! நிச்சயமாய் அமெரிக்கப் பேச்சுவழக்கில் புரிதலும், பரிச்சயமும் கொண்டதொரு திறன் வாய்ந்த மொழிபெயர்ப்பாளராலே தான் இந்தக் கதைக்கு நியாயம் செய்திட முடியும் ! So உங்களுள் யார் அந்த அமெரிக்க மாப்பிள்ளை ? சாரி… சாரி… அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் ? என்பதே எனது கேள்வி ! அல்லது - இப்பணிக்கென தேர்ந்த எழுத்தாளர்களுள் யாரையேனும் பரிந்துரைப்பீர்களா ? சராசரிகளுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப மேலுள்ள மொழித்தரம் இங்கே அத்தியாவசியம் என்பதால், இந்த ஆல்பத்தை நாம் கையிலெடுக்கத் தீர்மானித்தால் அதற்கான ஏற்பாடுகளும் கையிலிருப்பது  கட்டாயமாகிடும் guys !

உப்ப்ப் ! “பில்டப் பரமானந்தா” அவதார் நீண்டு கொண்டே போகிறதென்று உறுத்தினாலும், இன்றைக்கு உங்களை விடுவதாகயில்லை ! மேலும் ஒரு கேள்வி waiting ! இதுவோ – இன்னொரு முற்றிலும் புதியதொரு ஆல்பம் சார்ந்தது !! So உங்களின் ஞாயிறு காலைத் தேநீர்க் கோப்பை காலியாகியிருக்கும் பட்சத்தில் – வீட்டில் இன்னுமொரு அரை கப் மட்டும் வாங்கி விட்டுப் படிக்கத் தொடருங்களேன்?

ஒரு நல்ல கார்ட்டூன்” என்று அடையாளப்படுத்திட உங்களது அகராதியில் என்னவெல்லாம் இடம்பிடித்திட வேண்டுமென்பீர்கள் folks ?

- பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகள் சிதற வேண்டும் !

- வேடிக்கையான சித்திர பாணி கட்டாயம் தேவை !

- ஜாலியான களம் இருக்கணும் !

மேற்படி 3 புள்ளிகளுமே தேவை தான் – இல்லையா ? 

சரி, ஓ.கே…. “ஒரு விறுவிறுப்பான கதை” என்று சொல்லிட என்னவெலாம் அத்தியாவசியப்படக் கூடும் folks?

- பஞ்சமிலா ஆக்ஷன் !

- சுறுசுறுப்பான கதை நகர்த்தல் !

- படித்து முடிக்கும் போது ‘அட‘ என்ற புருவ உயர்த்தல் சன்னமாகவேணும் நிகழ்ந்திட வேண்டும் !

ரைட்டு ! இப்போது முதல் மூன்றில் கொஞ்சமும், இரண்டாவது மூன்றில் கொஞ்சமுமாய்  சேர்ந்தொரு ஆல்பம் அமைந்தால் அதை என்னவென்பது? “ஒரு விறுவிறுப்பான கார்ட்டூன்” என்றா ? அல்லது “ஒரு ஜாலியான விறுவிறுப்பு” என்றா ? சரி – என்னமோவொரு பெயரை யோசித்துக் கொள்வோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் ! சரி- இந்த ஆராய்ச்சியெல்லாம் ஏனோ ? என்ற கேள்வியா உங்கள் வசம் ? Simple guys – சமீப வாசிப்புகளின் ஒரு அங்கமாய் புதியதொரு நெடும் one-shot கையில் சிக்கியது ! சிரிக்கவும் செய்து, சிந்திக்கவும் வைத்தது ! லக்கி லூக் பாணியிலோ ; மேக் & ஜாக் ஸ்டைலிலோ ரெண்டு பக்கத்துக்கொரு gag ; ஒரு வெடிச் சிரிப்பு என்றெல்லாம் இருக்கவில்லை – ஆனால் கதை நகர்த்தலுக்குத் தேவைப்படும் மாந்தர்களுள் சிலர் இயல்பாகவே காமெடி பீஸ்களாக அமைந்திருக்க, அவர்கள் தலைகாட்டும் தருணங்களில் சிரிப்புத் தோரணங்கள் களைகட்டுகின்றன ! அதே சமயம் சொல்ல வரும் கதையின் தன்மை செம வலுவானதெனும் போது, காமெடிகளின் ஒட்டுமொத்த இலகுத்தன்மை இங்கே இராது ! மாறாக – ரொம்பவே intense ஆனதொரு வாசிப்பை இது கோரிடும் ! My questions here are : 

- இப்படியொரு hybrid கதை பாணியை ரசிக்கலாமென்று தோன்றுகிறதா guys?

- “ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல்” என்ற இடத்தினில் இந்த “ஜாலியான விறுவிறுப்பு” இடம்பிடிக்க அனுமதிக்கலாமா?

- குழம்பு ருசியாக உள்ளவரைக்கும் சமையல் பாணி நம்மூர் ரகமா ? வடநாட்டு ரகமா? என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்பீர்களா ? அல்லது – நாம் ரசித்துப் பழகிய அதே சாம்பாரையும், ரசத்தையும் நோண்டுவானேன் ?  என்பீர்களா guys ?

- “ஓவர் விஷப்பரீட்சை உடம்புக்கு ஆகாது !” என்பதே எனக்கான உங்களது பரிந்துரையாக இருக்குமா ? அல்லது – “போவோமே… போய்த் தான் பார்ப்போமே!” என்பீர்களா guys?

சரி- இந்த பில்டப்பெல்லாம் எந்தெந்தக் கதைகளுக்கானவை என்று கேட்கிறீர்களா ? உங்கள் பதில்களுக்கேற்பவே நமது ஏற்பாடுகள் அமைந்திட வேண்டும் & அவற்றின் பின்னர் படைப்பாளிகள் மனது வைத்தாலே இவை நனவாகிடும் என்பதால் இப்போதைக்கு பில்டப் பரமானந்தாவுடன், பெவிகால் பெரியசாமியே கைகோர்த்துக் கொள்கிறான் ! ஆனால் நாமொரு மரியாதைப்பட்ட முன்மொழிவைப் படைப்பாளிகளிடம் ஒப்படைத்தால் கதைகளை வாங்கிடுவதில் சிரமங்கள் இராது என்றே தோன்றுவதால் தற்சமயம் வாசக சமூகங்களின் பிரியங்களே பிரதானம் என்ற சூழல் ! So ப்ளீஸ்… ஞாயிறின் தூக்கத்தைத் தொடரும் முன்பாய் உங்களின் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ! சிம்பிளாய் மட்டுமே பதில் சொல்ல நினைப்போர் - "குரங்கு சேட்டை இப்போ தேவை நஹி !!" என்றோ - "ஆட்ரா ராமா...தாண்ட்ரா ராமா !!" என்றோ சொன்னால் கூடப் போதும் - புரிந்து கொள்வேன் ! மற்றபடிக்கு விவரமாய் கருத்துக் சொல்ல விழையும் நண்பர்களும் - most welcome !! Am all ears here !!

அப்புறம் – ஓவியர் ஹெர்மனின் one-shot ஆல்பங்கள் ஏகமாய்த் ததும்பிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது ! அவரது மகனான Yves கதையெழுத – தந்தை சித்திரம் தீட்ட – எக்கச்சக்கமான ஜானர்களில் இந்தக் கூட்டணி கலக்கி வருகிறது ! (Yves ஏற்கனவே நமக்குப் பரிச்சயமே; கேப்டன் பிரின்ஸின் ஆல்பமொன்றிலும், XIII – இரண்டாம் சுற்றிலும் கதாசிரியராய்ப் பணியாற்றிய வகையில்) So இந்த பிரான்கோ-பெல்ஜிய ஜாம்பவான்களின் கதைகளை விதவிதமாய் ரசிக்கத் தேவையான ரோடு போட ஜல்லி ; தார் ; சிமெண்ட் என சகலமும் ரெடி! ஜல்லியை விரித்து, தாரைத் குழைக்க வாகான வேளைக்கு மட்டுமே வெயிட்டிங் ! ஏற்கனவே சில கதைகள் கைவசமிருக்க, தற்போது இன்னும் சிலவற்றில் துண்டை விரித்து வைத்துள்ளோம் என்பதால் – தொடரும் சந்தர்ப்பங்களில் பலரகப்பட்ட ஹெர்மென் ஸ்பெஷல்கள் on the way ! ஜெரெமியா தொடரில் சற்றே ஜெர்க்கடித்துக் கிடக்கும்   நண்பர்களும் கூட இந்த one-shots களை ரசித்திடச் சிரமப்பட மாட்டார்களென்பது எனது கியாரண்டி ! 

 Before I sign out - மார்ச் இதழ்கள் & others பற்றிய updates :

1. ஜேம்ஸ் பாண்டின் ஜம்போ (Season 1) – முழுவண்ணத்தில் ரெடி ! இத்துடன் சீசன் 1 நிறைவுறுகிறது !! 

2. அப்புறம் மாறுவேஷச் சிங்கம் ; துப்பறியும் புலியுமே முழுவண்ண மறுபதிப்பில் ரெடி ! Herlock Sholmes !!

3. இரவுக் கழுகார் மிரட்டலாயொரு 260 பக்க சாகஸத்தோடு waiting – எடிட்டிங்கின் பொருட்டு !

4.        Ditto – “"முடிவிலா மூடுபனி"” கிராபிக் நாவலுக்கும் !

5.    அப்புறம் - இதோ ஜம்போ சீசன் 2-ன் இறுதிப் பட்டியல் ! தி லோன் ரேஞ்சரின் ஒரு முழுவண்ண-முழுநீள ஆல்பம் slot # 5-ஐக் கைப்பற்ற - கடைசி சீட்டைத் தனதாக்கிக் கொள்வதொரு அதிரடி ஆக்ஷன்  த்ரில்லர் ! மர்ம மனிதன் மார்ட்டின் பாணியில் இங்கே ஒரு மெர்செலாக்கும் கதைபாணி வெயிட்டிங் ! :"கால வேட்டையர்" - உங்கள் உள்ளங்களை வேட்டையாட - சீசன் 2-ன் முதல் இதழாக ஏப்ரலில் களமிறங்குகிறது !! So இன்னமும் ஜம்போ - சீசன் 2-ன் சந்தாவில் இணைந்திரா நண்பர்கள் இனியும் தாமதித்திட வேண்டாமே - ப்ளீஸ் ? 

அது சரி - ஜம்போவின் இடங்களை முழுசாய்ப் பூர்த்தி செய்தான பிற்பாடு மேலே பத்தி பத்தியாக கடைவிரித்துள்ள இதழ்கள் தேர்வாயின் அவற்றை எங்கே நுழைப்பதாம் ? என்ற கேள்வி ஓடுகிறதா உங்களுள் ? இருக்கிறதே slots - "ஈரோடு ஸ்பெஷலில் " !! 
6.   நாகர்கோவிலில் பிப்ரவரி 15 to 25 வரை நடைபெற்றிடும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 100 guys ! And  இங்கேயும் நமது CINEBOOK ஆங்கில காமிக்ஸ் இதழ்களும் விற்பனைக்கு (கொஞ்சமாய்) இருக்கும் ! அந்தப் பக்கத்து நண்பர்கள் ஒரு visit அடிக்கக் கோருகிறோம்  !! Please do drop in folks !!
திருமணத்து ஜாலிகள் நிறைவுற்ற பின்பாக 2 black & white இதழ்களையுமே பரபரவென பணிகளுக்கு உட்படுத்தினால் – பிப்ரவரி 28-க்கு டெஸ்பாட்ச் சாத்தியமே என்று தோன்றுகிறது ! Too early for now – அதனால் சாம்பார் வாளியைத் தேடிப் புறப்படுகிறேன் இப்போதைக்கு! See you around all ! Have a fun Sunday !

Sunday, February 10, 2019

ஒரு சாவகாச sunday !

நண்பர்களே,

வணக்கம் ! நேற்றைக்குத் தான் "புது அட்டவணை-புது வருஷம் - புதுப் பயணம்" என்றெல்லாம் பெனாத்திக் கொண்டு திரிந்தது போலுள்ளது ! ஆனால் கண் மூடித் திறப்பதற்குள், மார்ச்சின் பணிகள் நிறைவு பெறும் தருவாயை நெருங்கி நிற்பதைப் பார்க்கும் போது -  "ஆண்டின் முதல் க்வாட்டர் நிறைவு பெறுகிறதுடோய் !" என்ற புரிதல் ஒருவித த்ரில்லையும், பயத்தையும் ஒருங்கே ஓடச் செய்கிறது !! த்ரில் - for obvious reasons : தோர்கல் துவக்கி வைத்த பயணத்தில் பராகுடா எனும் புதுவரவு அதிரடியாய் இணைந்து கொள்ள - ஜனவரியே ஜாலிவரிகளின் சங்கமமாயிற்று ! "சிகரங்களின் சாம்ராட்" நம்மிடையே உருவாக்கிய அலசல்கள் இன்றைக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்க்கின் தருணமாய்த் தோன்றியிருக்கலாம் தான் ; ஆனால் ஒரு சோம்பலான நாளில் பின்திரும்பிப் பார்க்கும் போது - இந்த நொடி நம் பயணத்தில் ஒரு மைல்கல் நொடி என்பது நிச்சயமாய் புரிந்திடாது போகாது !! "காலப் பயணம் ; பிரபஞ்சக் கோட்பாடுகள் ; இணையுலகங்கள்" என நாம் ரவுண்டு கட்டி அடித்துள்ளதெல்லாமே ஒரு "பொம்மை புக்" ரசிகக் குழுவின்  ரேஞ்சே கிடையாது !!! பிப்ரவரியில் ரிப்போர்ட்டர் ஜானியின் புத்தம் புது பாணி, சிந்தைகளைக் கவர்ந்திட ;  மேக் & ஜாக் கார்ட்டூனில் கதக்களி ஆடிட ; வண்ண மறுபதிப்பில் டெக்ஸ் ஜாலம் பண்ண ;  ஜெரெமியாவோ "படிக்கப் - படிக்கப் புடிக்கும்" என்ற பாணியில் ரவுசு விட, ஆண்டின் இரண்டாம்  மாதமுமே உற்சாகத்துக்கு குறை வைக்கா பொழுதாகிப் போயுள்ளது - at least until now !! மார்ச்சில் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள மட்டினைக் கொண்டே கணிப்பதாயின் - அதுவுமொரு செம பட்டாசு மாதமாயிருக்கப் போகின்றதென்பேன் ! ஆக த்ரில்லுக்கான காரணம் புரிகிறது !! Why then பயம் ? 

சொல்கிறேனே....! ஒரு காலத்தில், நாலு ரகளையான ஆக்ஷன் sequences ; சுலபமாய் - நேர்கோட்டில் ஓடும் கதையென்று இருந்தாலே போதும், நாமெல்லாம் குஷியாகி அதனை ஹிட்டாக்கி விடுவோம் ! சிறுகச் சிறுக XIII ; கேப்டன் டைகர் போன்ற கதைகள் களம் காணத் துவங்கிய பிற்பாடு - பைப்பாஸைப் பிடித்து ஓடும் கதைகளையும் ரசிக்கத் துவங்கினோம் ! And தற்போது ரிங் ரோடைச் சுற்றி வரும் கி.நா.பாணியாகவே இருந்தாலும் அதை மடித்து அக்குளுக்குள் செருகிக் கொள்ளும் லாவகம் நமக்குத் துளிர்த்து விட்டது என்பது தான் நிதரிசனமாகத் தெரிகிறது ! ஒரு காலத்தில் "சிகரங்களின் சாம்ராட்" போலான கதைகளை தெரியாத்தனமாக தொட்டு விட்டிருப்பின், அதை அப்படியே பத்திரமாய் பீரோவுக்குள் போட்டுப் பூட்டியிருப்பேன் - காசு முடங்கினாலுமே பரவாயில்லையென்று !! (The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது ! அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது !!) "பராகுடா " - என்று காதில் விழுந்திருந்தாலும் - "போடா..போடா.." என்று நகன்றிருப்பேன் ! "கிராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் " ; பசங்களும்-பசங்களும் குத்தாட்டம் போடும் கதை" என்றெல்லாம் முன்வந்திருப்பின் - நான் ஏகப்பட்ட ஸ்டெப்ஸ் பின்சென்றிருப்பேன் ! கம்யூனிசம் பேசும் ரிப்போர்ட்டர் ஜானியை கண்ணில் முழிக்கவே அனுமதித்திருக்க மாட்டேன் !! ஜெரெமியா நம் தெருவில் நடந்து வந்து மணி கேட்டிருந்தால் கூட - "நேக்கு மணி பாக்கவே தெரியாதுடா தம்பி !" என்று அனுப்பியிருப்பேன் ! ஆனால் இன்றைக்கு நீங்கள் தொட்டு நிற்கும் ரசனைகளின் லெவெல்களைப் பார்க்கும் போதுதான் பயமே பூக்கிறது - நம் பயணமானது, உங்களுக்கு  துளியும் ஏமாற்றத்தைத் தந்திடாது, மேலும் மேலும் சுவாரஸ்யங்களோடு தொடர்ந்திட வேண்டுமே என்று !  தொடர்களின் தேர்வுகளில் ; கதைகளின் தேர்வுகளில் ; கதைகளைக் கையாளும் விதங்களில் ; மொழியக்கத்தின் தரங்களில் ; அட்டைப்படங்களின் டிசைனிங்கில் ; தயாரிப்பின் பரிமாணங்களில் துளிகூட சறுக்க, இனித் தொடரும் காலங்களில் leeway இருக்கவே செய்யாதெனும் போது - ஒவ்வொரு இதழையும் விராட் கோலியின் சதங்களை போல ரம்யமாக செதுக்கிடும் பொறுப்பு, வழுக்கைத் தலைமீது குடிகொண்டு நிற்பது புரிகிறது !! At this point of time - முன்வைக்க வேண்டிய முக்கிய கேள்வி "ஜெரெமியா" பற்றியே ! 

மாதத்தில் 10 தேதிகள் ஓடியிருக்கும் நிலையில், ஹெர்மனின் இந்தப் பரட்டை நாயக ஜோடியின் ஆல்பத்தை வாசிக்கும் வாய்ப்பு உங்களுள் பெரும்பான்மைக்காவது கிட்டியிருக்குமென்று நினைக்கிறேன் ! So படித்தவுடன் பிடித்திருந்தாலும் சரி...படிக்கப் படிக்கப் பிடித்திருந்தாலும் சரி - அந்த அனுபவங்களைக் கொஞ்சம் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ! அதே போல - ஜெரெமியாவைப் பார்த்த (படித்த_ கையோடு), கும்ப மேளாவில் ஒருமுழுக்குப் போட காசி புறப்பட்டிருப்போரும் தங்களின் நிலைப்பாடுகளைப் பற்றிப் பதிவிடலாமே ? எதிர்காலம் சார்ந்த இந்தக் கதைக்கு (நம்மிடையிலான) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளையிது ! "ஊம்" என்றீர்களெனில் ஜம்போ சீசன் 2-ல் ஒரு ஸ்லாட்டை ஜெரெமியா-3 க்கு ஒதுக்கிடலாம் ! "ஊஹும்" என்றீர்களெனில் மனதின் ஒரு ஓரத்தை அவர்களுக்கு ஒதுக்கிடலாம் !   தேர்தல் நேரம் guys ; so பட்டியலை இனியும் தாமதிக்க சுகப்படாது !! ஜம்போ சீசன் 2-ன் மொத்த இதழ்களையும் இந்த மார்ச் இதழ்களில் நாம் திரைவிலக்கிக் காட்டிட வேண்டுமென்பதால் decision making time right now !! 

ஜம்போவின் முதல் சீஸனின் இறுதி இதழில் தற்போது பணியாற்றி வருகிறேன் !!  பக்கத்துக்குப் பக்கம் சும்மா அனல் பறக்கிறது ஜேம்ஸ் பாண்ட் 007 -ன் இரண்டாம் சாகசத்திலும் !! And trust me - இது நிச்சயமாய் வெற்று பில்டப் இல்லை guys !! கதையினில் தெறிக்கும் வேகம், அந்த ஆக்ஷன் sequences களில் முற்றிலுமாய் வேறொரு கியரைத் தொட்டு விடுகின்றன !! மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை - இம்முறை yet another விதத்தில் சவால் ! ஒரிஜினலில் இங்கிலீஷில், நாலே வார்த்தைகளில் செம அழுத்தத்தோடு  வசனங்களை கதாசிரியர் அமைத்திருக்க  - அதனை அதே crisp பாணியில் தமிழ்ப்படுத்த நாக்கார் தரையைக் கூட்டியது தான் மிச்சம் !! And பற்றாக்குறைக்கு - அந்த வறண்ட பிரிட்டிஷ் நகைச்சுவையுணர்வு ஆங்காங்கே தலைகாட்டிட வேண்டுமெனும் போது - நிறையவே மண்டையைப் பிய்த்துக் கொண்டேன் - இயன்ற நியாயத்தைச் செய்திட !! எது-எப்படியோ - இதுவொரு "டைனமைட்" பதிப்பகத் தயாரிப்பு மாத்திரமல்ல ; பாணியிலும் டைனமைட் தான் ! பாருங்களேன் இதன் அட்டைப்பட first look - ஒரிஜினல் டிசைனோடே !! 
இங்கொரு சின்ன கொசுறுத் தகவலும் !! ஜேம்ஸ் பாண்டின் ஒவ்வொரு முழு சாகசமும் 132 பக்கங்களில் அமைத்துள்ளனர் ! அவை 22 பக்கங்கள் கொண்ட 6 தனித்தனி மாதாந்திர இதழ்களாய் வெளிவந்திடுகின்றன அமெரிக்காவில் ! So நாம் முழுசாய் ஒரே  தொகுப்பாய் வெளியிடும் போது - அவர்களது 6 இதழ்களின் முன் + பின்னட்டை டிசைன்கள் என்று மொத்தமாய் ஒரு பத்துப் பன்னிரண்டு அதிரடி  டிசைன்கள் நமக்கு கிட்டுகின்றன !! Variant covers என்றதொரு பாணி அவ்வப்போது மேலைநாடுகளில் நடைமுறையில் உண்டு ! அதாவது ஒரே கதைக்கு ; ஒரே பதிப்பின் போது வெவ்வேறு வித அட்டைப்படங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் ; இஷ்டப்பட்ட கவரை வாசகர்களே  தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் !! சேகரிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களோ - எல்லா டிசைன்களிலும் ஒரு புக் என்று வாங்கிப்போடுவதும் உண்டு !! Maybe அடுத்தாண்டில் ஏதேனுமொரு ஜேம்ஸ் பாண்ட்   புக்குக்கு இந்த variant covers பாணியை நாம் கையில் எடுத்துப் பார்க்கலாமா ? முன்னொரு காலத்தில் முத்து காமிக்சில் ஒரு இதழுக்கு இது நிகழ்ந்தது ! நினைவுள்ளதா - எந்த இதழென்று ?

ஜம்போவின் சீசன் 1 நிறைவுறும் தருணத்தில் - இந்த அனுபவம் சார்ந்த உங்களின் எண்ணங்களும் எனக்குப் பெரிதும் உதவிடக்கூடும் - சீசன் 2-வின் 2 காலி ஸ்லாட்களை ரொப்பிட !! How has the JUMBO experience been guys ? இயன்றமட்டிற்கும் இதனை ஜனரஞ்சகக் கதைகளோடு - நல்ல தரத்தில் உருவாக்க முனைந்துள்ளோம் ! உங்களின் மதிப்பீடுகள் தொடரும் சீசனுக்குச் செய்திட அவசியமாகிடக்கூடிய திருத்தங்களை சுட்டிக்காட்ட உதவிடக்கூடும் என்பதால் - இத்தருணத்தில் no to மௌனம் ப்ளீஸ் !!

Before I sign off - சின்னச் சின்ன updates :

1 .சென்றாண்டின் டெக்ஸ் வண்ண மறுபதிப்பு - "பவளச் சிலை மர்மம்" காலி !! தோட்டா மழை பொழியோ பொழியென நம்மவர்கள் பொழிந்ததை நீங்கள் ஏகமாய் ரசித்து விட்டதன் பலனிது !

2 அதே போல "விரட்டும் விதி" - COLOR TEX முதல் மூன்று சிறுகதைகளின் தொகுப்பானது sold out ! இதன் அடுத்த edition (சிறுகதைகள் 4 ; 5 & 6 கொண்டதை ) அடுத்து கையிலெடுக்கலாமா ?

3 . இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி !! "பிரபஞ்சத்தின் புதல்வரே" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் !! தமிழ் இதழ்கள் மாத்திரமின்றி, நம்மிடமிருந்த CINEBOOK ஆங்கில தோர்கல் இதழ்களும் பரபரப்பாய் விற்பனை கண்டுள்ளன !! ஆரிசியாவின் ஆதர்ஷ நாயகர் நமக்கும் செம தோஸ்த் ஆகி விட்டிருப்பது செம ஹாப்பி !!

4 . ஏற்கனவே பலமுறைகள் சொன்னதே தான் ; but மறுக்கா ஒலிபரப்பில் தவறில்லை என்றே தோன்றுகிறது !! ஜனவரியிலும் சரி, பிப்ரவரியிலும் சரி - உங்களின் அலசல்கள் இங்கே களை கட்டியதன் நேரடிப் பிரதிபலிப்பு ஆன்லைன் விற்பனையில் தெறிக்கிறது !! "வாங்குவோமா-வேணாமா ?" என்ற விளிம்பில் நிற்கும் நண்பர்களுக்கு நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பின்னூட்டமும் செமத்தியாய்ப் பயனாகிறது guys !! கிராம் கூப்பிய நன்றிகள், இங்கே நேரம் செலவிட மெனெக்கெடும் ஒவ்வொரு நண்பருக்கும் !! Keep it going folks !!!

5 திருப்பூர் புத்தக விழா இன்றோடு நிறைவு காண - அப்பாலிக்கா நமது கேரவன் பயணிக்கவிருப்பது நாகர்கோவில் நோக்கி ! நம் ஸ்டால் விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் பிப்ரவரி 15 to 25 வரையிலான நாகர்கோவில் விழாவில் நாமும் கலந்திடுவோம் !!

மீண்டும் சந்திப்போம் all !! Have a great Sunday !! நானோ முடிவிலா மூடுபனிக்குள் மூழ்கிடப் புறப்படுகிறேன் !! Bye for now !! 

Sunday, February 03, 2019

The Feb Four !!

நண்பர்களே,

வணக்கம். The Feb Four - உங்களிடம் The Fab Four என்ற பெயரை ஈட்டிட உள்ளார்களா என்பதே இப்போதைய மேட்டர் எனும் போது - ஞாயிறின் (குட்டியான) பதிவு வேறெங்கும் ஒளிவட்டத்தைப் பாய்ச்சிடப் போவதில்லை !! So இந்த இதழ்களின் தயாரிப்பு ; இத்யாதி பற்றியே எழுதவுள்ளேன் !

போன மாசமும் சரி ; இந்த மாதமும் சரி, இதழ்களின் தயாரிப்பில் நிறையவே பல்டி அடிக்க வேண்டியிருந்தது போலவே தோன்றிடுவதற்கு என்ன காரணமென்று நிதானமாய் யோசிக்க முயற்சித்தேன் ! "வயசாகிட்டே போகுது மாப்பு ; வேறென்ன ?" என்று பதில் பளிச்சென்று கிட்டினாலும் - முதன்மையான காரணமாய்த் தோன்றியது ஜனவரியில் இரு biggies & இம்மாதமும் ஜெரெமியாவின் வடிவில் இன்னொரு biggie இருப்பதே ! பரக்குடா ; தோர்கல் & ஜெரெமியா -தலா 3 அல்பங்களின் தொகுப்புகள் எனும் போது பணியில் பளு கூடித் தெரிவது இயல்பு தானே ! And அவை மூன்றுமே தத்தம் பாணிகளில் complex கதைகளே எனும் போது - அவற்றை உருப்படியாய் உங்களிடம் ஒப்படைப்பதில் நிறையவே தண்ணீர் குடித்தேன் !

Latest in the list - நமது பரட்டை ஜோடி ஜெரெமியாவின் இரண்டாவது தொகுப்பு பற்றிச் சொல்வதானால் - ரொம்பவே வித்தியாச அனுபவம் இம்முறையும் ! Truth to tell - இந்த apocalypse உலகின்  (அதாவது நிகழுலகம் அழிவு கண்ட பின்னே எஞ்சியிருக்கும் ஒரு இருண்ட உலகின்) கதைகளில் எனக்கு அத்தனை பரிச்சயம் நஹி ! So அந்த ஜானரிலுள்ள காமிக்ஸ் தொடர்களை அவ்வளவாய் படித்திரா நிலையில் ஹெர்மனின் இந்த எதிர்காலக் களத்தொடரைப் பற்றி பளிசென்றோரு கணிப்பை செய்து வைக்க எனக்கு முடிந்திருக்கவில்லை ! "இங்கே இதைத் தான் எதிர்பார்த்திடலாம் ; எதிர்பார்த்திடணும் !" என்று சொல்லத் தெரியா நிலமையெனும் போது, ஒவ்வொரு ஆல்பத்தையும் ஒரு மோனா லிசா ஓவியம் போல பாவிக்க வேண்டும் போலும் என்பதே எனக்குள் பிறந்த ஞானம் ! இப்டிக்கா ஒரு கோணத்தில் பார்த்தால் (படித்தால்) கதை ஒரு பாணியிலும், அப்டிக்கா இன்னொரு டிஸைனாகவும் புரிபடும் என்பதை இந்த ஆல்பங்களுள் பணியாற்றும் போது புரிந்து கொண்டேன் ! நமது தொகுப்பானது ஆங்கிலத்தில் வெளியான JEREMIAH INTEGRAL-ன் ஈயடிச்சான் காப்பி என்பதால், இடையிடையே, ஒவ்வொரு கதைக்கும் மத்தியினில் கதாசிரியர் ஹெர்மன் அந்தந்தப் படைப்புகள் பற்றிச் சுருக்கமாய் சொல்லியுள்ள வரிகளுமே நமக்கு கிட்டின ! And அட்சர சுத்தமாய் அவற்றையும் நமது தமிழ் முயற்சியினில் இடம்பிடிக்கச் செய்துள்ளேன் - அவையும் உதவிடும் என்ற எண்ணத்தில் ! அந்த 3 பக்கங்களுக்குமே நாம் நிரம்பக் கடமைப்பட்டிருப்போம் என்பதை நீங்கள் புரிந்திடுவீர்கள் - இந்த ஆல்பத்தைப் படித்து முடிக்கும் போது !! 2 INTEGRALS ; 6 ஒற்றை ஆல்பங்கள் என்று ஜெரெமியாவில் ஒரு decent தூரத்தைக் கடக்க நமக்கு இப்போது சாத்தியமாகியுள்ளது !! இப்போது உங்களின் பளிச் தீர்ப்புகளே நம்மை அடுத்து வழிநடத்திடக்கூடும் - இந்தத் தொடரினைத் தொடர்வது குறித்து ! So நிதானமாய் இந்த ஆல்பத்தை படிக்க நேரமெடுத்துக் கொண்ட பிற்பாடு - YESSS !! NOOOO !! என்று ஏதேனும் ஒரு பதிலை மட்டும் தந்திட்டால் ரெம்போ மகிழ்வேன் ! இம்முறை மட்டும் NOTA-க்கு NO ப்ளீஸ் !! And இதழைப்  படிக்காமலே போடும் டப்ஸா வோட்டுக்களும் ஆட்டத்துக்குச் சேர்த்தியாகாது ! So புக்கை எடுக்கறோம் ; படிக்கறோம் ; வோட்டைக் குத்தறோம் !! 

ஜானியாரின் இந்தப் புது template சார்ந்த இதழிலுமே உங்களுக்கு அதே பொறுப்புள்ளது - இம்முறை அத்தனை சீரியஸான பொறுப்புக்கள் அல்லாது ! புதுப் பாணியோ ; பழைய "புன்னகை  மன்னன்" பாணியோ - ஜானி நம் அணிவகுப்பில் தொடரவிருப்பதில் ஐயங்கள் லேது ! So தற்போதைய வாக்கெடுப்பே - இந்த ஜானி புது அவதாரைத் தொடர்வதா - பழசுக்கே ரிவர்ஸ் கியரை  போடுவதா  ? என்பதே !  இந்தக் கதையில் பணியாற்றும் போது ஒரு சுவாரஸ்ய விஷயத்தைக் கவனிக்க முடிந்தது !! கமிஷனர் போரடனுக்கு    இங்கே நல்கப்பட்டிருக்கும் காமெடி பொறுப்புகளைப் பார்த்து முகம் மலர்ந்திடாது இருக்க இயலவில்லை !! பிரின்ஸ் கதைகளுக்கு ஒரு குடிகார  பார்னே மெருகூட்டுவது போல ; கார்சனின் நக்கல்கள் டெக்ஸ் சாகசங்களை ஜாலியாக்குவது போல ; இனி கமிஷனர் போர்டனை கொண்டு ஜானியின் புது பாணி கதைகளை refresh செய்திட படைப்பாளிகள் எண்ணியுள்ளனர் போலும் ! எப்படியிருந்த மனுஷன்....இப்படியாகிப் போனாரே ?!! தவிர, இந்த ஆல்பத்தை முழுசாய்ப் படித்த பிற்பாடு எனது கேள்விக்கு பதில் தர முற்படுவீர்களா guys ? ஜானியின் இந்த சாகசம் நடைபெறுவதாய் சித்தரிக்கப்பட்டிருப்பது 1968-ல் ! உங்களுள் முக்காலே மூன்று வீசத்தினர் அன்றைக்கெல்லாம் பிறந்திருக்கவே மாட்டீர்கள் ! My question is - கதை நெடுக கவனமாய்க் கவனித்தால் எல்லாமே அந்த 1960's காலகட்டத்தோடு பொருந்திடும் விதத்தில் கதாசிரியர் அமைத்துள்ளாரா ? என்பதே !! 'மண்டையை மறைத்தாச்சு ; ஆனால் கொண்டையை அல்ல' - என்பது போல் எங்கேனும் கதாசிரியர் லைட்டாய் கோட்டை விட்டுள்ளாரா ? கதையினை ஒரு தபா அங்குலம் அங்குலமாய் அலசிச் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? 

டெக்சின் "வைக்கிங் தீவு மர்மம்" பற்றி புதுசாய் என்ன சொல்லவிருக்கிறேன் - என்னளவிற்கு அந்த பாக்கெட் சைஸ் தான் இதைவிடவும் அழகாய்த் தெரிந்தது என்பதைத் தவிர்த்து ? Maybe இன்றைக்கு எல்லா இதழ்களையும் ஒரே standard சைசில் பார்த்துப் பழகிப் போய் விட்டதாலோ - என்னவோ , அந்நாட்களது அந்த கோக்கு மாக்கு சைஸ் லைட்டாய் சபலப்படுத்துகிறது ! கதையைப் பொறுத்தவரைக்கும் எனக்குச் சுத்தமாய் எதுவும் ஞாபகம் இருந்திருக்கவில்லை - எடிட்டிங்கிற்கு அமர்ந்த போது ! And உப்புத்தாளைக் கொண்டு லேசாய் லேசாய் தொடையில் உரசுவது போல் அந்நாட்களது மொழிபெயர்ப்பு வழிநெடுக படுத்தி எடுத்ததால் அதனைச் செப்பனிடும் அயர்வில் கதையை இம்முறையும் அவ்வளவாய் உள்வாங்க முடியவில்லை ! Maybe மார்ச்சில் வேலைகளைக் கொஞ்சம் சீக்கிரமாய் முடிக்க முடிந்திட்டால் புக்கை fresh ஆக வாசிக்க வேண்டும் போலும் !! And இங்கேயே இன்னொரு முக்கிய கேள்வியும் எழுகிறது - what next இரவுக்கழுகாரின் மறுபதிப்பினில் என்று ! ஆண்டுதோறும் இது ஈரோட்டில் தீர்மானிக்கப்படும் சமாச்சாரம் என்றாலும் - உங்களின் அடுத்த "TEX 3" பட்டியலை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து வைத்துக் கொள்கிறேனே ?! எனது personal choice : குத்தும் ஒரு சாகசம் !! 

Last in the list ; but first in my list - "மேக் & ஜாக்" ஜோடியின் அந்த "நடனமாடும் கொரில்லாக்கள்" ! எப்போதோ ஒரு யுகத்தில் பாரிசில் வாங்கியிருந்ததொரு SAMMY Integral ஆபீசில் துயில் பயின்று வந்தது ! பெரிய சைசில் - 4 கதைகள் அடங்கிய அந்த ஹார்டகவர்  இதழை போன வருஷம் உருட்டிக் கொண்டிருந்த போது கண்ணில்பட்டுத் தேர்வானது தான் இந்த கார்ட்டூன் கூத்து !  அப்போதே இதனை டிக் செய்து விட்டிருந்தேன் 2019-ன் கோட்டாவில் கட்டாயம் இடம்பிடித்திட வேண்டுமென்று ! 
And தற்செயலாய் ஆண்டின் முதல் மாதம் கார்டூனிலா வறண்ட பொழுதாய்க் காட்சி தர - பிப்ரவரியில் இந்தக் குட்டை-நெட்டை ஜோடிக்குக்  கிட்டியுள்ளது லட்டு போலவொரு வாய்ப்பு என்பது புரிந்தது !! Early days yet ; ஆனால் இதுவரைக்கும் செம positive reviews எனும் போது வருஷத்தில் முதல் கார்ட்டூன் இதழ் சோடை போகாதென்றே தோன்றுகிறது !! இங்கேயும் நீங்கள் கதையை முழுமையாய்ப் படித்து விட்டீர்களா ? என்பதை ஊர்ஜிதப்படுத்திட ஒரு சின்ன வேலை !! அவசரகதியில் அட்டவணை தயாராகும் சமயம் வைத்த பெயர் தான் "நடனமாடும் கொரில்லாக்கள்" ! நிதானமாய் யோசிக்கும் போது இதற்கு இன்னும் வேறு பெயர்கள் தலைக்குள் உதிக்கின்ற எனக்கு ! இது உங்களின் turn - இந்தக் கதைக்கு ஏற்ற விதமாய் மாற்றுப் பெயர்களை இங்கே புட்டு வைக்க !! Give it a try guys !
ஞாயிறை ஜேம்ஸ் பாண்டோடு தொடர்ந்திட நான் புறப்படுகிறேன் !! நீங்கள் The Feb Four பற்றி அலசல்களை நடத்திட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ?

And இன்னமும் சந்தாவில் இணைந்து கொள்ளாதிருக்கும் ஒரு 40+ நண்பர்கள் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாய் நம்மோடு பயணத்தில் கைகோர்த்துக் கொண்டால் அட்டகாசமாயிருக்கும் !! Please folks - maybe this Sunday is a good time for it ? 

மீண்டும் சந்திப்போம் all !! அட்டகாசமானதொரு வாரயிறுதியாய் இது அமையட்டும் நமக்கெல்லாம் ! Bye for now !