Sunday, December 30, 2018

அதகள ஐந்து !!

நண்பர்களே,

வணக்கம். ஜனவரியின் பணிகளை முடித்த கையோடு பெரும் பெருமூச்சொன்றை விட்டபடிக்கே காலாட்டிக் கொண்டிருக்கிறேன் இந்த வாரயிறுதியில் ! பிப்ரவரியின் ஜானி…ஜெரெமையா & Co-வோடு குசலம் விசாரிப்பைத் தொடர்ச்சியாய் துவக்கியிருக்க வேண்டும் தான் – ஆனால் சென்னைப் புத்தக விழா சார்ந்த பேக்கிங் பணிகளைப் பராக்குப் பார்த்துக் கொண்டு பொழுதை ஓட்டி வருகிறேன் ! வழக்கமாய் ஸ்டெல்லா & வாசுகி இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்களெனும் போது – நான் இதனில் மூக்கை நுழைக்கப் பெருசாய் அவசியங்கள் இருந்திடாது ! ஆனால் தற்போது நமது front office முற்றிலும் புதுமுகங்களுடனானது எனும் போது அக்கடாவென்று ஒதுங்கி நிற்க இயலவில்லை ! And புத்தாண்டுமே கூப்பிடு தொலைவில் நிற்பதால் ஓரிரண்டு நாட்களை லாத்தலாகச் செலவிட்டான பிற்பாடு பிப்ரவரி இதழ்களுள் மூழ்கினால் போச்சு என்றுபட்டது ! So இந்தப் பதிவில் எதைப் பற்றி எழுதுவதென்று யோசிக்க ஆரம்பித்த கணமே மண்டையில் உதித்தது – இதுவரையிலான சில அசாத்திய ஜனவரிகளைப் பற்றிய நினைவு ! ஏழு கழுதை வயதாகியுள்ள நிலையில் இதுவரைக்கும் ஏராளமான புத்தாண்டுகளைப் பார்த்தாகியாச்சு ! ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்நேரத்து சந்தோஷ நினைவுகள் maybe அப்போதைய ஜனவரிகளை ஜாலியானதாக மாற்றித் தந்திருக்கலாம் ! ஆனால் அவை எவையுமே  cache memory-ல் தங்கிட்ட ரகங்களில்லை ! But இன்னும் எத்தனை பொழுதுகள் ஓட்டமெடுத்தாலுமே – “ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஜனவரிகள்” என்ற அடையாளத்தை விட்டுத் தந்திடாது குறிப்பிட்ட சில ஆண்டுகள் சார்ந்த ஞாபக அலைகள் என்னுள் தொடர்ந்திடுவதை மறக்க இயலாது ! அவற்றைப் பற்றி எழுத நினைத்தேன் இந்த ஞாயிறுக்கு ! ‘போச்சுடா… தம்பியாபுள்ள ரிவர்ஸ் கியரைப் போட்டுட்டாப்லே!‘ என்று சலித்துக் கொள்ளக் கூடிய நண்பர்கள், ஞாயிறின் தூக்கத்தைத் தொடர்தல் தேவலாமென்பேன்! For the rest – here goes:

இன்னும் எத்தனை தூரம் பயணித்தாலும் – தொடரவுள்ள இந்த 5 ஆண்டுகளின் ஜனவரிகள் ரம்யத்தைத் துளியும் இழக்காது என்னுள் தொடர்ந்திடும் என்பது நிச்சயம்!

- 1985: The Start of it all…!

துவைத்துத் தொங்கப் போட்டதொரு காலகட்டமே இது ! இங்கோ ; ‘சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியிலோ – இந்தத் தருணங்களைப் பற்றி நிறையவே எழுதியிருப்பேன் தான் ! ஆனால் ஞாபகத்திறன் இன்றைக்கு எனது strong point இல்லை என்பதால் – எதை ஏற்கனவே எழுதியிருந்தேன் ? ; எது சொல்லாத சேதிகள் என்ற தெளிவு என்னுள் இல்லை! So மறுஒலிபரப்பு பலமாயிருப்பின் – அடுத்த பத்திக்கு hop…skip & jump ப்ளீஸ் ! 

1984 இறுதிக்கு வந்து கொண்டிருந்த வேளையில் எனக்கு எல்லாமே ஒருவிதமான கூலிங் க்ளாஸ் effect-ல் குளிர்ச்சியாய் ; ரம்யமாய் தென்பட்டுக் கொண்டிருந்தன ! ஆறே மாதங்களுக்கு முன்பாய் லயன் காமிக்ஸிற்குப் பிள்ளையார் சுழி போட்டிருந்த சிரம நாட்கள் பற்றிய ஞாபகங்களோ ; மாடஸ்டியோடு முதலிரண்டு மாதங்கள் போட்ட மொக்கைகளோ – ரொம்பவே தொலைதூர நிகழ்வுகளாய் மாத்திரமே டிசம்பர் 1984-ல் என்னுள் நின்றன ! ஸ்பைடர் & ஆர்ச்சி எனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் ஏககாலத்தில் முழங்கத் துவங்கியிருக்க – மாதம்தோறும் 19,000 to 20,000 பிரதிகளின் விற்பனைக்கு உத்தரவாதமிருந்தது ! And அத்தனையுமே முன்பணத்துக்கெதிரான விற்பனைகள் மட்டுமே ! ஏஜெண்ட்கள் யாரேனும் “கடன்??” என்று கேட்டால் – “அப்டீன்னா??” என்று நாங்கள் வினவிய காலமும் கூட அது ! So வங்கியில் ரூ.50,000 கையிருப்பு  (trust me guys – அந்நாட்களில் அதுவொரு செம பணக்கார feeling-ஐ தந்திடக் கூடிய தொகை!!!) பீரோவில் கணிசமாய் கதைகளிருப்பு ; அதே வேளையில் “கிட்டங்கி” என்றொரு சமாச்சாரமே அவசியப்படா சூழலில் – வாழ்க்கையே ஒரு வசந்தகாலமாய்க் காட்சி தந்தது! ஆனால் தலைக்குள் எவ்விதம் தோன்றினாலுமே – வெளியே நிலவிடும் டிசம்பரின் குளிர், வெடவெடக்கத் தானே செய்திடும் ?! அந்தக் குளிர் மாலைகளில் ஒரு புதிரான கூத்தை அடிக்கடி அரங்கேற்றினோம் – நானும், எனது தாய்வழித் தாத்தாவும்!!

இங்கிலாந்தின் D.C.Thomson காமிக்ஸ் நிறுவனம் ஏகப்பட்ட காமிக்ஸ் வெளியீடுகளை Fleetway-க்குப் போட்டியாய் வெளியிட்டு வந்தது எனக்கு அந்நாட்களில் நன்றாகவே தெரியும் தான் ! சென்னையின் மூர் மார்க்கெட் பழைய புத்தக மார்கெட்டில் வாங்கிடக் கூடிய ஏகப்பட்ட காமிக்ஸ்களுள் அவையும் சேர்த்தி ! But அது ஏனோ தெரியாது - அவர்களது சித்திர பாணிகளோடு எனக்கு அவ்வளவாய் ஒன்றிட முடிந்ததில்லை ! அவர்களது பாணிகளும் Fleetway-ன் ஸ்டைலிலேயே இருப்பினும், அவ்வளவாய் அவற்றிற்குள் நான் மூழ்கிட எத்தனித்தது கிடையாது !! But மேலோட்டமான புரட்டல்களில் அவர்களது  சிலபல prime நாயகர்களை அறிவேன் தான் & so அவர்களது அணிவகுப்பிலும் ஒரு “இரும்புக்கை” பார்ட்டி இருப்பது தெரியும்! (பின்நாட்களில் இரும்புக்கை ஏஜெண்ட் வில்சன் என்று நாம் வெளியிட்டோமே – அவரே தான்!) அந்நாட்களில் முத்து காமிக்ஸ் எனக்கொரு போட்டிக் கம்பெனியே & அவர்கள் வசமிருந்த “இரும்புக்கை மாயாவி” ஒரு அசாத்திய துருப்புச்சீட்டே ! அது என்னை ரொம்பவே உறுத்துவது வாடிக்கை & அது பற்றி தாத்தாவிடமும் அடிக்கடி பேசுவதுண்டு ! ஆக Fleetway-ன் போட்டிக் கம்பெனியின் கைவசமும் ஒரு இரும்புக்கரத்தார் இருப்பதைப் பற்றி ஒரு நாள் பேசி வைக்க – “அதை வாங்கிடற வழியைப் பாரு !” என்று தாத்தா உற்சாகமாகி விட்டார்கள் ! இன்டர்நெட்டோ ; செல்போனோ இல்லாத அந்த நாட்களில் கடுதாசி போடுவது தான் தகவல் தொடர்புக்கான ரஸ்தா ! But தாத்தாவுக்கு அத்தனை காத்திருப்பு காலவிரயமாய்த் தோன்றியதால் – “போன் அடிச்சுப் பேசிடுடா!” என்று அபிப்பிராயப்பட, வாழ்க்கையில் முதன்முதலாய் அயல்தேசத்துக்குத் தொடர்பு கொள்ளும் முஸ்தீபுகளினுள் இறங்கினேன் ! “Trunk Call புக்கிங்” என்ற பாணி தான் வெளியூர்களுக்கு அழைப்பதற்கே ! இந்த அழகில் – அயல்தேசத்துக்குப் பேச வேண்டுமெனில் மதுரையில் இதற்கென உள்ள பிரிவில் புக்கிங் செய்து, அவர்கள் சொல்லும் நேரத்துக்குக் காத்திருக்க வேண்டும் ! “நிமிஷத்துக்கு ரூ.100 ஆகும்... ஞாபகம் வச்சுக்கோங்க” என்று மதுரைக்காரர்களும் பயமுறுத்திவிட்டுத் தான் புக்கிங்கே எடுத்துக் கொள்வார்கள் ! 

அந்த 1984-ன் டிசம்பரின் மத்தியில் ஒரு நாள் – D.C.Thomson நிறுவனத்தின் இலண்டன் அலுவலகத்து நம்பரை எடுத்துக் கொண்டு தடதடக்கும் இதயத்துடன் போன் புக் பண்ணி வைத்தேன் ! தாத்தாவும், ஆவலோடு அருகே காத்திருக்க – எனக்கோ உள்ளுக்குள் நிறையவே உதறல். “முதல்வாட்டி வெளிநாட்டவரோடு பேசப் போகிறோம் ; தத்துப்பித்தென்று எதையாச்சும் உளறி வைத்துவிடக் கூடாதே! அப்புறம் பேராண்டியை பெரிய பிஸ்தாவாய் உருவகப்படுத்தியிருக்கும் தாத்தாவுக்கு முன்பாக மூக்குடைபட்டு விடப்படாதே!” என்று எனக்குள் ஜெர்க் ! ஃபோன் அடித்தாலே – அடித்துப் பிடித்து எடுத்துக் கொண்டு என்னால் தயார் பண்ண முடிந்த ஸ்டைலான வெள்ளைக்கார accent-ல் “ஹல்லோாா....” என்பேன் ; மறுமுனையிலோ “அண்ணாச்சி... பண்டல் போட கிஸ்தான் சாக்கு வேணுமா?” என்று யாரேனும் பேசிக் கொண்டிருப்பார்கள் ! டிசம்பரின் அந்த மாலை நாட்களில் 3 தபா ஃபோன் புக் பண்ணிக் கொண்டு காத்திருந்து – எதுவும் தேறவில்லை ! ”இன்னிக்கு லைன் கிடைக்கலை சார்... கேன்சல் பண்ணிடட்டுமா?” என்று மதுரையிலிருந்து மூன்று தடவைகளுமே தகவல் வர – நானும் “பிழைச்சோம்டா சாமி!” என்று கிளம்பிவிடுவேன் ! ஆனால் தாத்தா விடுவதாகயில்லை ! நான்காவது தடவை டெலிபோன் டிபார்ட்மெண்டும் கைவிரிக்காது போக – மெய்யாலுமே ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி செம ஸ்டைலாக ‘ஹலோாா‘ என்று விசாரிப்பது காதில் விழுந்தது இன்னமும் நினைவுள்ளது ! நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொள்ள -  “அ...அது வந்து... சிவகாசிலேர்ந்து...அதாச்சும் இந்தியாவிலேர்ந்து.. காமிக்ஸ் போடற கம்பெனியிலேர்ந்து பேசறேன்... ‘IRONFIST” வாங்கணும். அது தொடர்பாப் பேசணும் !” என்று எதையோ உளறி வைத்தேன் ! மறுமுனையில் ஓரிரு நிமிடங்களுக்கு மௌனம்... எனக்கோ ஃபோனை வைத்து விட்டு ஓடியே போய் விடலாமா ? என்ற எண்ணம் ! அதற்குள் அவரே மறுபடியும் பேச ஆரம்பித்தார் – இம்முறை நிறுத்தி, நிதானமாகவே கேள்விகள் கேட்கும் தொனியில் ! எனக்கோ இங்கே “மீட்டர் ஓடுதே” என்ற பயமும் கவ்வ, இயன்ற பதில்களை அவசரம் அவசரமாய்ச் சொல்லி வைத்தேன் ! ஒரு மாதிரியாய் எனது தேவை என்னவென்பதைப் புரிந்தவர் – “சாரி சார்... ஆனால் இது D.C. தாம்சனின் விற்பனை அலுவலகம் மட்டுமே! உரிமைகள் சார்ந்த விசாரிப்புகளுக்கு ஸ்காட்லாந்தில் உள்ள எங்களது உரிமங்கள் சந்தைப்படுத்தும் பிரிவான DCT Syndication – உடன் பேசிட வேண்டும்" என்றபடிக்கே  அவர்களது ஃபோன் நம்பரைத் தந்தார் ! “சரிங்கோ” என்றபடிக்கே லைனை கட் பண்ணி விட்டு மதுரைக்காரர்களிடம் பேசினால் – பில் தொகை ரூ.500/-க்கு மேலென்றார் ! அந்நாட்களில் சிவகாசியிலிருந்து சென்னைக்கு ரயிலில், ஸ்லீப்பரில் போகவே கட்டணம் ரூ.60/-க்குள் தான் ! நாலு நிமிஷம் வேர்க்க, விறுவிறுக்கப் பேசிய கூத்துக்கு ஐநூறா ?? என்று நான் திகைத்துப் போய் நிற்க – தாத்தா துளி கூட ஜகா வாங்கவில்லை ! "இவையெல்லாமே அத்தியாவசியங்கள்; ரொம்பக் கணக்குப் பார்க்கவெல்லாம் கூடாது !!" என்று சொல்லியபடிக்கே மறுநாள் மாலை ஸ்காட்லாந்திற்கு ஃபோன் அடிக்கச் செய்தார் !

டன்டீ என்ற நகரில் இருந்தது அந்த அலுவலகம் ! மறுக்கா மதுரை டெலிபோன் டிபார்ட்மெண்ட் ; மறுக்கா கால் புக்கிங் ; மறுக்கா தடதடக்கும் இதயத்துடனான காத்திருப்பு ; மறுக்கா ஒரு அயல்தேசத்து ‘ஹலோ‘ தொடர்ந்தது ! ஆனால் இம்முறையோ லைனில் இருந்தது ஒரு ஆண் ! இங்கிலாந்தில் ஒட்டுமொத்தமான பிரதான மொழி இங்கிலீஷ் தான் என்றாலும் – ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு தினுசாய்ப் பேசுவதுண்டு ! உசக்கே போகப் போக – யார்க்ஷையர் பேச்சுபாணிகள் ஒரு மாதிரியெனில், வேல்ஸில் இன்னொரு விதம் ! And ஸ்காட்லாந்தின் பாணி இன்னொரு படு வித்தியாசமான விதம் ! இன்றைக்காவது கிரிக்கெட் கமெண்ட்ரியில் இது போன்ற accent-களைக் கேட்டுப் பரிச்சயமாகிட வாய்ப்புள்ளது நமக்கு ! But 17 வயதுச் சுள்ளானான எனக்கு, அன்றைக்கு அந்த ஸ்காட்டிஷ் பாணியின் தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை! நான் பேசுவது அவருக்குபப் புரிகிறது ; பதிலும் சொல்கிறார்! ஆனால் அந்த பதில் தான் என்னவென்று கிஞ்சித்தும் புரிந்தபாடில்லை எனக்கு ! ஒரு மாதிரியாய் என் சிரமத்தைப் புரிந்த மனுஷன் – மெதுவாய் மறுக்காவும் சொல்லத் துவங்க – சாராம்சம் புரிந்தது ! மேக்கிரகெர் என்ற அவர்களது மேனேஜர் விடுப்பில் உள்ளதாகவும் – புத்தாண்டுக்கு முன்பாக ஆபீஸிற்குத் திரும்புவார் என்றும், IRONFIST உரிமங்கள் குறித்து பேச விரும்பிடும் பட்சத்தில், அவரோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்பதையே சொல்லிட முயற்சித்திருக்கிறார் ! ஓ.கே... ஓ.கே... ஓ.கே...!! என்று மங்களம் பாடிவிட்டு தாத்தாவிடம் விஷயத்தை ஒப்பித்தேன் ! 'விடாதே....அவரையும் போட்டுத் தாக்கு !!' என்று எதிர்பார்த்தபடியே தாத்தாவும் சொல்லிட, டிசம்பர் 31-ம் புலர்ந்தது & நான் ஞாபகத்தில் இல்லாதது போலவே பாசாங்கு பண்ணினாலும் – உள்ளுக்குள் இந்த ஃபோன் முயற்சிகளின் த்ரில் எனக்குமே ஒட்டிக் கொண்டிருந்தது ! இம்முறை கொஞ்சம் தெளிவாய்ப் பேசத் தீர்மானித்தவனாய் கால் புக் பண்ணி நேராக மிஸ்டர் மேக்கிரகெரையே பிடித்தும் விட்டேன் ! அடுத்த 10 நிமிடங்களுக்குத் தொடர்ந்தது எங்களது சம்பாஷணை ! எனக்கோ மீட்டர் பிசாசாய் ஓடும் காட்சி மட்டும் தலைக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது ! ஒரு மாதிரியாய்ப் பேசி முடித்த போது – “இரும்புக்கை ஏஜெண்ட் உரிமங்கள் தந்திடலாம்; நமது offer என்னவென்பதைப் பொறுத்து!” என்ற பதிலை அவரிடமிருந்து வாங்கியிருந்தேன் ! இனி நிதானமாய் யோசித்து, லெட்டராய் டைப்படித்து அனுப்பி, மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்ளலாமென்று தீர்மானித்து விட்டிருந்தேன் ! தாத்தாவுக்கோ பேராண்டி ஏதே கோலார் தங்க வயலு்குள்ளே சோலோவாகப் போய் ஒரு பாளத்தை லவட்டி எடுத்து வந்து விட்டதைப் போலொரு சந்தோஷம் ! இங்கே டெல்லியிலும், மும்பையிலும், இருந்த ஏஜெண்ட்களோடு பேசி, கதைகளை வாங்கிய அனுபவங்களைத் தாண்டி வேறு எதுவுமே எனக்கில்லாத நாட்களவை ! So எனக்குமே எதையோ சாதித்து விட்டது போலொரு ஜிலீர் உணர்வு ! அந்த Ironfist கதைத் தொடர் சராசரியானதே என்பதோ ; ஏணி வைத்தாலுமே இரும்புக்கை மாயாவியின் தரத்தைத் தொட்டிட சாத்தியப்படாதென்பதோ அந்த நொடியில் புத்திக்கு எட்டவில்லை ! மாறாக – “எங்ககிட்டேயும் சீப்பு இருக்குல்லே... கலைச்சுவுட்டு சீவிக்குவோம்லே!” என்ற மிதப்பு தான் மேலோங்கியது  ! அன்றைக்கிரவு வீட்டுக்குப் புறப்பட சைக்கிளை மிதிக்கும் போது – ஸ்காட்டிஷ் accent-ல் இங்கிலிபீஷில் எனக்குள்ளேயே நானாய் பிளந்து கட்டிக் கொண்டே போனது இப்போவுமே நினைவில் உள்ளது ! And எல்லாவற்றையும் விடத் தூக்கலாய் நினைவில் நிற்பது மறு நாள் டெலிபோன் டிபார்ட்மெண்டிலிருந்து வந்த சேதி தான் ! மொத்தமாய் டிசம்பரின் அயல்நாட்டு போன்கால்களுக்காகியுள்ள பில் ரூ.2700 சுமார் என்று ஒரு பெண்குரல் சொல்லிட – அந்தப் புத்தாண்டின் ஜிலுஜிலுப்பிலும் எனக்கு வியர்த்து விட்டது ! ஆனாலும், ஒரு “சாதனைக்கு” விலையில்லாது போகாது என்று என்னை நானே தேற்றிக் கொண்டு அந்தப் பணத்தை எண்ணி வைத்தேன் ! "அட ..ஒரு தம்மாத்துண்டு போன் காலுக்கு இத்தனை பீலாவா ?" என்று உங்களுக்குத் தோன்றினால் நிச்சயம் justified தான் !! ஆனால் 35 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவினில் - நிலவரங்கள் முற்றிலும் வேறு !! அன்றைக்கெல்லாம் நம்மை நாடி பன்னாட்டு நிறுவனங்களோ, குழுமங்களோ படையெடுப்பதில்லை !! மாறாக - "வெள்ளைக்காரர்கள் " என்றதொரு massive பிம்பம் நிலவி வரும் இங்கு  ! So கடல் கடந்த வணிகமென்பது இன்றைக்குப் போலொரு குழந்தைப் புள்ளை மேட்டராய் அன்று காட்சி தந்திட்டதில்லை !! And நானேயொரு அனுபவமிலா குழந்தைப் பையனாக நின்ற தருணத்தில், எனது மலைப்புகள் were that much bigger !! 

So எனது முதன் முதல் அயல்தேச வியாபார முயற்சிக்கு (!!) ஒரு ஷேப் தந்த 1984-ன் இறுதிகளும், '85 ஜனவரியின் துவக்கங்களும் இப்போதுமே evergreen in memory ! இதில் கொடுமை என்னவெனில், வேக வேகமாய்த் துவக்கிய பேச்சு வார்த்தைகள் அப்பாலிக்கா slow ஆகிப் போய் விட்டன ! In fact - முதல் முறையாக 1985-ல் frankfurt புத்தக விழாவிற்குச் சென்ற போதுமே, D.C.Thomson நிறுவனத்தைச் சந்திக்க முயன்ற நினைவே இல்லை !! Maybe பிரெஞ்சு & இத்தாலியக் கதைகளைப் பார்த்த பிரமிப்பில் இதனை மறந்து விட்டேனா - தெரியலை ! But மறு ஆண்டு அவர்களை சந்தித்து, கதைகளுக்கு உரிமைகளை வாங்கி, ஒரு மாதிரியாய் 1987-ன் மத்தியில் "இரும்புக்கை வில்சனை" தமிழ் பேசும் நல்லுலகத்தில் உலவ விட்டோம் !! ஒரு புலிக்கு முன்னே - 'மியாவ்' எனும் பூனையாய் அவரும் உலாவினாலுமே - எனக்கோ 'கமான் டைகர் !! கமான் டைகர் !!' என்ற வேகம் தான் ஊற்றெடுத்தது !! ஷப்பா - ஒரு இரும்புக்கை படுத்திய பாடுகள் தான் எத்தனை - அந்நாட்களில் !! 

அதே மாதத்தின் ஸ்பெஷல் இதழாய் “கொலைப்படை” வெளியானதும் அந்த மிரட்டலான ஸ்பைடர் சாகஸத்தையும், இரும்பு மனிதன் அதிரடியையும் உங்களிடம் சேர்ப்பித்த குதூகலங்களும், அவற்றை நீங்கள் கொண்டாடிய ஆரவாரங்களும் அதே ஜனவரி 1985-ஐ செம மெர்சலாக்கிய icings on the cake ! நமது வெளியீடுகளுள் இன்றைக்குமே ஒரு செம stand-out ஆக நின்றிடும் பெருமை அந்த இதழுக்கு உண்டெனும் போது – அந்த ஜனவரியின் பிரத்யேகத்தனம் பற்றி சொல்லவும் வேண்டுமா – என்ன?


ஜனவரி 1986 – New forays !

1985-ல் பச்சாவாய் ஆண்டைத் துவக்கியவன் – அந்தாண்டின் இறுதியினை எட்டிய சமயம் – கடல் பல கடந்து ; கலர் கலரான ஐரோப்பியர்களோடு கதை பல கதைத்து ; தொடர் பல வாங்கிய குலேபகாவலியாக உருமாற்றம் கண்டிருந்தான் ! அந்த '85 டிசம்பரின் வெளியீடான “ஆப்பிரிக்க சதி”-ன் தயாரிப்பினையும், அதன் பின்னே வண்டி வண்டியாய் விளம்பரங்களை அள்ளி விடும் பொருட்டு அடித்த லூட்டிகளையும், சத்தியமாய் மறக்க இயலாது ! அதே தருணத்தில் தான் நமது “திகில்” காமிக்ஸின் அறிமுகத்துக்கென அதகள ஜரூரில் வேலைகள் ஓடிக் கொண்டிருந்தன ! இரவுகளில் நமது ஆபீஸில் குறைந்தபட்சம் நான்கோ, ஐந்தோ ஆர்ட்டிஸ்ட்கள், 3 அச்சுக் கோர்ப்புப் பணியாளர்களென பணியாற்றிக் கொண்டிருப்பார்கள் – திகிலின் பெரிய சைஸ் பக்கங்களில் !

ரொம்ப காலமாகவே வாங்கி முத்து காமிக்சில் சும்மா கிடந்த கதைகளின் பட்டியலில் Jetace Logan என்றதொரு  சாகஸமும் உண்டு ! முத்து காமிக்ஸில், ஸ்பைடரின் "The Man who stole NewYork" கதையோடு சேர்ந்து, இதுவுமே துயில்பயின்று கொண்டிருக்கும் ! ‘பேய்-பிசாசுகள் வருகை தந்ததே வேற்று கிரகத்திலிருந்து தான்‘ என்பது போலானதொரு கதைக்களத்தோடு பயணிக்கும் இந்தக் கதை எனது all time favourites-களுள் ஒன்று ! ஆனால் திகில் கதைகள் வெளியிடுவதென்பதெல்லாம் அபச்சாரம் என்பது மாதிரியானதொரு கட்டுப்பட்டியான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க, இவற்றின் மீது கைவைக்க முத்து காமிக்ஸில் யாருக்குமே ‘தம்‘ இல்லை ! எனக்குமே ஒரு பிரத்யேக horror காமிக்ஸ் என்ற தடம் உருவாகிடும் வரையிலும் இதனை ரெகுலரான லயனில் வெளியிடத் தயக்கமே ! So திகில் இதழினை எனக்குள்ளே உருவாக்கப்படுத்திப் பார்த்த முதல் தருணத்திலேயே அந்தக் கதையை லவட்டிடுவது என்று தீர்மானித்தேன் ! "பிசாசு கிரகம்" என்ற பெயரிலோ ; அல்லது அது மாதிரியான வேறொரு பெயரிலோ திகில் # 1 -ல் வெளியான முழுநீள சாகசம் இது தான் !

“திகில்” என்ற நமது template – Fleetway-ன் ‘மிஸ்ட்டி‘ என்ற வார இதழின் பிரதிபலிப்பே ! சிற்சிறு திகில் கதைகள்; சிலபல தொடர்கதைகள் என்பதே Misty-ன் பாணி! நான் அதனை – சிற்சிறு திகில் கதைகள் + ஒரு முழுநீள சாகஸம் என்று tweak பண்ணிட உத்தேசித்திருந்தேன் ! கதைகளை வரவழைத்து – எனக்குத் தெரிந்தமட்டுக்கு மொழிபெயர்ப்பும் செய்து சுடச்சுட அடுத்த 3 மணி நேரங்களுக்குள்ளாகவே அந்தச் சிறுகதைப் பக்கங்களைத் தயார் செய்து ரசித்த நாட்கள் அவை ! லயனில் ஓரிரண்டு ஸ்பெஷல் இதழ்களை மாத்திரமே பெரிய சைஸில் வெளியிடுவது ; பாக்கி எல்லாமே நமது ஆதர்ஷ பாக்கெட் சைஸில் – என்ற பாணிக்கு நாம் முற்றிலுமாய் பழகிப் போயிருந்த தருணத்தில் – ‘திகில்‘ இதழ்களுக்கென நான் திட்டமிட்டு வைத்திருந்த அந்த all-big சைஸ்களைப் பார்த்துப் பார்த்து நானே சிலாகித்துக் கொண்டிருந்தேன் – காத்திருந்த சாத்துக்களை அறியாதவனாய் ! And முதன்முறையாக தமிழில் – சிறு கதைகள் – ஹாரர் கதைகள் – ஒரு முழுநீள சாகஸம் என்ற template துவக்கம் கண்டது அந்தத் தருணத்தில் தான் என்பதால் – ஏதோவொரு மைல்கல்லைத் தொட்டுக் கொண்டு நிற்பது போலவும் ; பெருசாய், புரட்சிகரமாய் காமிக்ஸ் வாசிப்பு இனி இதன் பின்னணியிலேயே இருந்திடப் போவது போலவும், சுகமான கனாக்கள் எனக்குள் ! அது மாத்திரமின்றி – முதன்முறையாக 2 இதழ்களை நமது நிறுவனத்திலிருந்து வெளியிடும் த்ரில்களையுமே முதன்முறையாய் நான் உணர்ந்த வேளையது ! மாதம் 4/5 என போட்டுத் தாக்கும் இன்றைய சூழலில் – அந்தப் பழம் நினைவுகள் கூத்தாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் முதல்முறைகளுக்கு எப்போதுமே ஒரு விசேஷத்தன்மை உண்டு தானே ? பண்டல்களில் 200 லயன் இதழான “மனித எரிமலை” + 200 திகில் # 1 என அடுக்கி விட்டு, அதற்கான பில்லை கெத்தாகப் போட்டு நான் ரசித்த ஜனவரி 1, 1986 – ஒரு awesome timeframe – என்னளவிற்காவது !

பற்றாக்குறைக்கு வெகு சமீபத்து foreign return என்ற கெத்தும் அப்போதைக்கு ஐயாவுக்கு நிரம்பவே உண்டென்பதால் - எனது அப்போதைய பொழுதுகள் செம ஜாலியானவை ! லண்டனின் சந்தையில் ஒன்றரையணாவுக்கு வாங்கியாந்த சட்டைகளையும், டி-ஷர்ட்களையும் மாட்டிக் கொண்டு பண்ணிய லூட்டிகளை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிப்பு-சிப்பாய் வரும் !! அங்கிருந்து வாங்கி வந்த கேசட்களில் ஒன்லி வெஸ்டர்ன் மியூசிக் கேட்பது ; ஒன்லி இங்கிலீஸ் புக்ஸ் படிப்பது ; ஒன்லி பீட்சா ; பர்கர் ; டக்கிலோ ; கபாப் - என்று லார்ட் லபக்தாஸாய் சுற்றி வந்த கொடுமையை என்னவென்பது ?!! Phew !!

1987... The Big Bangs!!

இரண்டுக்கே காலரைத் தூக்கித் திரிந்தவனுக்கு “4” என்றால் கால்கள் தரையில் நிற்குமா - என்ன ? லயன் காமிக்ஸ் அட்டகாசமாய் நடைபோட்டு வர, ‘திகில்‘ காமிக்ஸ் ஓட்டமும், நொண்டியுமாய் கூடவே ஒட்டிக் கொண்டிருந்த வேளையினில் – புதுசாய் இரண்டை உட்புகுத்தத் தீர்மானித்த crazy தருணம் 1987-ன் துவக்கமே ! ஜுனியர் லயன் காமிக்ஸ் ; மினி லயன் – என இரு புது லேபில்கள் ; ‘கார்ட்டூன் கதைகளுக்கு மட்டுமே‘ என்ற பிரத்யேகத் தடம் ; கலரில் கார்ட்டூன்கள் – என்று என்னென்னமோ firsts அந்த ஜனவரியில் சாத்தியமானது ! அது வரைக்குமே கார்ட்டூன் என்றால் விச்சு & கிச்சு; கபிஷ் ; ராமு/ சோமு ; அதிமேதை அப்பு என்ற filler pages மாத்திரமே என்று தான் நாம் பழகிப் போயிருந்தோம் ! ஆனால் ஒரு முழுநீளக் கார்ட்டூன் கதையின் ஆற்றல் என்னவென்பதை Tintin ; Asterix ; லக்கி லூக் கதைகள் தெள்ளத் தெளிவாய் காட்டியிருந்தன எனக்கு ! So குட்டிக்கரணங்கள் அடித்தாவது இந்த மூன்றுக்குமே; அல்லது இரண்டுக்குமாவது ; அட... ஏதோ ஒரே ஒரு தொடருக்காவது உரிமைகளை வாங்கிட வேண்டுமென்ற அவா எனக்குள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது 1985 முதலாகவே !

Tintin-காரர்கள் ‘புச்‘ என உதட்டைப் பிதுக்கி விட, நான் எடுத்த அடுத்த காலடி லக்கி லூக்கினை வெளியிடும் Dargaud நிறுவனத்திடம் ! அவர்களும் இசைவு சொல்ல, “ஜுனியர் லயன் காமிக்ஸ்” என்றதொரு கனவு – “சூப்பர் சர்க்கஸ்” இதழ் மூலமாய் நிஜமானது ! அந்த ஒல்லிப்பிச்சான் நாயகர் இன்றளவுக்கு நம்மோடு பயணிப்பாரென்பதோ ; இத்தனை கார்ட்டூன் variety-க்கு மத்தியில் கூட – முடிசூடா மன்னராய் கார்ட்டூன் தேசத்தை ஆண்டிடுவார் என்பதோ சத்தியமாய் அன்றைக்குத் தெரியாது எனக்கு ! But கலரில் – சொற்ப விலையில் ஒரு முழுநீளக் கார்ட்டூனை லக்கி லூக்கின் ரூபத்தில் வெளியிட முடிந்த அந்த ஜனவரி 1987 – எனது career–ல் நிச்சயமாயொரு high point ! அந்த இதழின் பின்னணியில் நான் சந்தித்த சிரமம் முற்றிலும் வேறுவிதமானது ! அது நாள் வரையிலும் பக்காவான நான்-வெஜ் ஆக்ஷன் அதிரடிக் கதைகளையாக மட்டுமே வெளியிட்டிருக்க, நான் பழகியிருந்த மொழிபெயர்ப்புப் பாணி முற்றிலுமாய் அதற்கு ஏற்றே இருப்பதாய் எனக்குத் தென்பட்டது ! So ஒரு கார்ட்டூன் கதையைத் தூக்கிக் கொண்டு மொழிபெயர்க்க முயற்சித்த போது தான் – இந்த ஜானருக்குப் பேனா பிடிப்பது என்ன மாதிரியான சிரமமென்பது புரிந்தது ! இன்றைக்கு அந்த இதழை கையிலேந்திப் புரட்டும் போது – பக்கத்துக்குப் பக்கம் ; பிரேமுக்கு பிரேம் நெருடுகிறது – அன்றைய எனது வார்த்தைத் தேர்வுகளைக் கண்டு ! But எனது அதிர்ஷ்டம், நீங்களுமே அன்றைய தருணத்தில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிராதவர்களாய் இருந்ததால் தலை தப்பியது ! அதே போல முதன்முறையாய் ஒன்றுக்கு இரண்டு full fledged தலையங்கங்களை எழுதிய சந்தோஷம் எனக்குக் கிட்டியது அந்த ஜனவரியில் தான் ! ஜுனியர் லயன் காமிக்ஸில் ஒன்று ; அம்மாத திகில் வெளியீடான “மரண விளையாட்டு” இதழில் இன்னொன்று என அன்றைக்கு அடித்த கூத்துக்களைத் தான் பாருங்களேன்!!
லயன் + திகில் + ஜுனியர் லயன் + மினி லயன் என நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைப் போலான பண்டல்கள் அந்த ஜனவரி முதல் தேதியில் நமது ஆபீஸின் முன்கூடத்தை நிறைத்துக் கிடந்தது ஒரு ஆயுட்கால ஞாபகம் ! நம்மிடம் ஆர்ட்டிஸ்டாய்ப் பணியாற்றிய காளிராஜனின் சித்தப்பா நாராயணன் தான் நமது அன்றைய one-man பேக்கிங் இலாகா ! அவர் பண்டல் போடும் வேகத்தையும், லாவகத்தையும் பிரமிப்போடு எத்தனையோ தடவைகள் ரசித்ததுண்டு ! But அந்த ஜனவரி முதல் தினத்தில் மனுஷன் சுற்றிச் சுழன்று ஒரே பகலில் கிட்டத்தட்ட 90 பண்டல்களைப் போட்டுக் குவித்திருந்தது மிரளச் செய்யும் உச்சம் ! கிட்டத்தட்ட 250 முகவர்கள் ; ரயிலில் / லாரியில் இதழ்களைத் தருவிப்போர் பாதிக்கு சற்றே குறைவெனில் – தபாலில் தருவித்துக் கொள்வோர் மீதி ! So போஸ்ட் ஆபீஸிற்குப் போய் ஒரு மெகா-லோடு பாக்கெட்களை இறக்கி வைத்த கையோடு – ரயில்வே புக்கிங்கிற்கு 90+ பண்டல்களை அனுப்பிய அந்த ஜனவரி 1-க்கு எனக்குள் ஒரு அசாத்தியமான உயரத்தில் இடமுண்டு ! பின்நாட்களில் அந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலாமல் போனதோ ; நமக்கு நாமே போட்டியாகிப் போனதோ நாமெல்லாமே அறிந்த நிகழ்வுகளே ! But சங்கிலிகளில்லா கற்பனைகள் அழகாய் சிறகை விரிக்கத் துணிந்த அந்த நாட்கள் still stay very special to me !! கனவுகள் நிலைக்கும்வரை அவற்றின் சுகமே அலாதி தானே ? கலர் கலராய்க் கனவுகள் காணவும், அவற்றுள் கொஞ்ச காலமெனும் திளைத்து நிற்கவும் எனக்கு வரம் தந்த அந்த 1987 ஜனவரி மறக்கவியலா பொழுதே !!

இங்கொரு சன்னமான விசனமுமே !! இன்றைய பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் உச்சமோ உச்சமாய் கோலோச்சி நிற்கும் Asterx & Obelix தொடர்களைப் பார்த்து சப்புக் கொட்டாத ஆண்டே இராது எனக்கு !! கொடுமை என்னவெனில், லக்கி லூக்கின் உரிமைகளை நாம் Dargaud நிறுவனத்திடமிருந்து வாங்கிய வேளைகளில் - Asterix சார்ந்த உரிமைகளுமே அவர்களிடம் தான் இருந்திருந்தன !! 'அப்பாலிக்கா பாத்துக்கலாம் !" என்று நானுமே மெத்தனமாய் இருந்து விட்டேன் ! இடைப்பட்ட ஆண்டுகளில் Asterix ஒரு சூப்பர் தொடரென்ற நிலையிலிருந்து சூப்பரோ சூப்பர்-டூப்பர் என்ற அந்தஸ்தையும் தொட்டு விட்டிருந்தது & அவற்றின் உரிமைகளும் கைமாறி விட்டன ! புதிய நிறுவனத்தினரிடம் பேசிட அவ்வப்போது முயன்று பார்த்தாலும், புது ஆல்பங்கள் ஒவ்வொன்றும் 40 லட்சம் பிரதிகள் விற்பனை காணும் நிலையில் - அவர்களிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் ரொம்பவே ஈனஸ்வரத்தில் இருப்பதால் முன்னேற்றம் நஹி ! அன்றைக்கே முயற்சித்திருப்பின், அந்த அசகாய ஜோடி நம் கரைகளில் ஒதுங்கியிருப்பது நிச்சயம் !!

Phew !! நீண்டு கொண்டே போகும் பதிவு விரல்களைத் தெறிக்கச் செய்யத் துவங்கி விட்டதால், இந்த இலக்கில் ப்ரேக் போட்டு விட்டு விடைபெறுகிறேன் guys! இன்னொரு சாவகாஸமான ஜனவரி நாளில் – எனது Magnificient 5-ன் இறுதி 2 தருணங்களைப்  பற்றி எழுதிட எண்ணியுள்ளேன்!

Before I sign out – சில updates:


1. சந்தாப் புதுப்பித்தல்கள் இந்த வாரம் மின்னல் வேகத்தில் நடைபெறத் துவங்கியுள்ளன என்பது செம சந்தோஷச் சேதி ! ரூ.5000/- என்பது நிச்சயமாய் ஒரு சிறு தொகையல்ல எனும் போது, ஆண்டின் இறுதியினில் இதனையும் உங்கள் பட்ஜெட்களில் இணைத்துக் கொண்டிட நீங்கள் முயற்சிப்பது ரொம்பவே நெகிழச் செய்கிறது ! இயன்றமட்டிலும் பிரமாதமான கதைகளையாய் உங்களிடம் ஒப்படைப்பதே நாங்கள் செய்திடக் கூடிய பிரதியுபகாரம் என்பது புரிகிறது ! புனித தேவன் மணிடோ நமக்கு ஆற்றலைத் தருவாராக !!

2. சென்னைப் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 153. இம்முறை CINEBOOK ஆங்கிலப் பிரதிகளையுமே ஸ்டாலுக்குக் கொண்டு வரும் விதமாய்ப் பதிவு செய்துள்ளோம் என்பதால் ஒரு ரேக் முழுக்க ஸ்டைலாக அவை குந்தியிருக்கும் ! ஜனவரி 4-ல் துவங்கி, ஜனவரி 20 வரையிலும் பதினேழு நாட்கள் நடக்கவிருக்கும் விழா இந்தாண்டு நந்தனம் YMCA மைதானத்துக்கே திரும்புகின்றது ! முன்னெப்போதையும் விட ஒரு உச்சமாய் இம்முறை 810 ஸ்டால்கள் உண்டு BAPASI-ன் இந்த அசாத்திய முயற்சியினில் ! So புத்தக ஆர்வலர்களுக்கு ஒரு மெகா விருந்தே காத்துள்ளது ! நம் பங்கிற்கு – கிட்டத்தட்ட 300+ title-கள் சகிதம் காத்திருப்போம், உங்களை வரவேற்கும் ஆவலுடன்! Please do drop in folks !

3. சென்னையினைத் தொடர்ந்து திருப்பபூரில் புத்தக விழா ஜனவரியின் இறுதியில் துவங்குகிறது ! அங்குமே பங்கேற்க விண்ணப்பித்துள்ளோம்! So இடம் கிடைப்பின், காமிக்ஸ் கேரவன் சென்னையிலிருந்து திருப்பூருக்கு நகரும் !

4. ஜனவரி இதழ்கள் புதனன்று கிளம்பிடும் – விடுமுறைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்திடும் பொருட்டு ! So இன்னமும் சந்தாவில் இணைந்திருக்கா நண்பர்கள், இடைப்பட்ட இந்த அவகாசத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் ஆண்டின் முதல் கூரியர் பட்டியலில் உங்கள் பெயர்களையும் இணைத்தது போலிருக்கும்! Please do your best folks!

5.        இம்மாத தோர்கல் கதைகளுள் ஒன்றான "சிகரங்களின் சாம்ராட்" பற்றி இங்கே 2 வாரங்களுக்கு முன்னே நிறையவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! "காலப்  பயணம்" ; "இணைப் பிரபஞ்சங்கள்" என்ற இதன் concept பற்றி ; கதையினில் அவை sync ஆகி நிற்கும் இடங்களை பற்றி, கதையின் knot பற்றி ஒரு பொழிப்புரை (!!!!!!) எழுதி வைத்துள்ளேன் - 2 பக்க நீளத்துக்கு !! But அதனை இதழோடு தருவதா- வேண்டாமா ? என்ற குழப்பம் என்னுள் ! பிரதானமாய் - எனது புரிதலே தப்பாகியிருந்து ஒரு முரட்டு பல்பு வாங்கிடப்படாதே என்ற பயம் ! இரண்டாவதாய் - அந்தக் கதையின் முடிச்சுகளை நீங்களாகவே decipher செய்திட முயற்சிப்பதை பாழ் செய்திடக் கூடாதே என்ற பயமும் ! மூன்றாவதாய் - "இதை புரிந்து கொள்ள கூட எங்களுக்கு வலு இராது என்று நினைத்தாயாக்கும் ?? என்று நீங்கள் கண் சிவக்கக் கூடிய அபாயம் !! So சிவனேயென்று கதையை மட்டும் வெளியிட்டு விட்டு - அப்புறமா நமது கச்சேரிகளை இங்கே வைத்துக் கொள்ளலாமா ? What say all ?

மீண்டும் சந்திப்போம் guys ! அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் all ! And bye for now!

Sunday, December 23, 2018

ஆவ்...நெருப்புடோய் !!

நண்பர்களே,

வணக்கம். தமிழ் சினிமா பார்த்திடும் யாருமே நமது தானைத்தலைவர் கவுண்டரின் ரவுசுகளுக்கோ ; லவ்ஸ்களுக்கோ   அடிமையாகிடாது இருக்க வாய்ப்பேயில்லை என்பது இந்த சிஷ்யப்புள்ளையின் கருத்து ! And கடந்த ஒரு வாரமுமே எனக்கு நிகழ்ந்தவை தலைவரின் ‘I am very happy!’ சமாச்சாரங்களே ! என்னவென்று கேட்கிறீர்களா ? எல்லாமே ஒரு கதையின் கதை தான் !!  சகலமும் ஆரம்பித்தது “அலைகடலில் அசுரர்கள்” எனும் தொடக்கப் புள்ளியிலிருந்து ! நேர்கோட்டுக் கதைக்களமாகயிருக்கும் ; பெரிதாய்ப் பணிகள் பெண்டு கழற்றாது என்ற நம்பிக்கையோடு அதற்குள் புகுந்தால் – நிலவரம் நேர்மாறாயிருந்தது ! கதையும் சரி, வசனங்களின் ஆழமும் சரி, பராகுடா பயணிக்கும் சமுத்திரத்தின் ஆழத்திற்குச் சிறிதும் சளைக்காதிருக்க, அந்த 168 பக்கங்களைக் கரை சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்தே போனது ! 

And இவை எல்லாமே போன வாரத்து நிகழ்வுகள் ! “ரைட்டு… ஒரு மாதிரியா கஷ்டமான பணிக்கு சுபம் போட்டாச்சு ; இனி இந்த மாசம் காத்திருப்பது தோர்கலும் ; ‘தல‘ டெக்ஸ் வில்லரும் தான்…! ரெண்டுமே intense ஆன களங்களே - ஆனால் சமாளிச்சுக்கலாம் !” என்றபடிக்கு ஜாலியாகி விட்டேன் ! பொதுவாய் கிருஸ்துமஸ் & ஆண்டின் இறுதி வேளைகளில் நமது மிஷினரி இறக்குமதி சார்ந்த பணிகளில் பெரியதொரு தொய்வு ஏற்பட்டு விடுவது வாடிக்கை ! மேலை நாடுகள் சகலமும் சகட்டுமேனிக்கு விடுமுறையில் சென்றிருக்க – நாம் செய்வதற்கு ஏதுமிராது ! இந்தாண்டும் அதே நிலை தொடர – பராகுடாவைத் தேற்றி முடித்த கையோடு நான் ஒரு வித விடுமுறை மூடுக்குப் போயிருந்தேன் ! 

நாட்கள் ஓட்டமெடுக்க, மற்ற இதழ்களை அச்சிட வேண்டிய நேரமும் நெருங்கிய போது  – “குஞ்சாய்ன்… பூ மிதிக்க சித்தே வரணுமே !” என்று மைதீன் தலைகாட்டினான் ! நானோ – ”ஹஹஹஹ…. எட்டாம் தேதி சேலத்திலே மாநாடு…. பத்தாம் தேதி டில்லியிலே இருக்கேன்… ஆங்… ஒன்பதாம் தேதி வந்திடறேன்” என்ற ரேஞ்சில் ஹாயாகத் தேதி கொடுத்து விட்டு, அன்றிரவு ஹாயாக தோர்கலின் மொத்தத்தையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! இம்முறையோ 3 one-shot ஆல்பங்களின் தொகுப்பாகவே இந்த இதழ் களம் காண்கிறது ; So எந்தக் கதைக்கும் – அதன் தொடரும் பாகத்தோடு தொடர்பே கிடையாது ! “அட… வேலை இன்னும் லேசுடோய்!” என்றபடிக்கு கூடுதலாய் குதூகலமானேன் ! கதை # 1 – ஆரிசியாவின் இளவயது சாகஸங்களைச் சார்ந்ததென்பதால் பெரிதாய் எந்த மொக்கையும் போட அவசியப்படவில்லை ! “காந்தக் கண்ணழகி… ஆ ரைட்லே பூசு…ஆ....பேக்ல பூசு…!” என்று சந்தோஷமாய் சந்தனப் பூச்சை ரசித்துக் கொண்டே, பக்கங்களைத் தள்ளிக் கொண்டே போனேன் ! Of course – வான் ஹாமின் ஜாலங்கள் எப்போதுமே சராசரிகளுக்கு ஒரு லெவல் மேலிருப்பது இயல்பே என்பதால் இந்தச் சுலபக் கதையிலுமே ஆங்காங்கே twist-கள் இருக்கத் தான் செய்தன! ஆனால் அவற்றையெல்லாம் சமாளித்து விட்டு, "I am very happy!" என்றபடிக்கே கதை # 2 ஆன “சிகரங்களின் சாம்ராட்டை" எட்டிப் பிடித்தேன் ! சிறுகச் சிறுக அதனோடு ஐக்கியமாகத் துவங்கும் போது தான் ”ஆ… நெருப்புடோய் !!” என்றபடிக்கே நமது தலைவர் துள்ளிக் குதித்து ஓட முயற்சிக்கும் காட்சி என் மனத்திரையில் விரிந்தது! "பூ மிதிக்க" வந்தவனுக்கு ஒரு அக்னிக்குண்டமே காத்துள்ளதே என்றபடிக்கு மலங்க மலங்க முழிக்க ஆரம்பித்தேன் !

To cut a long story short – தோர்கல் தொடரின் கதை # 14 ஆன – “சிகரங்களின் சாம்ராட்” நாமெல்லாம் இதுவரைக்கும் பார்த்தேயிரா ஒரு புது உச்சத்தைத் தொட்டு நிற்கும் படைப்பு ! “காலப் பயணம்” என்பதே இந்தக் கதையின் கரு! ஆனால் வான் ஹாம் எனும் ஒரு அசுரரின் கையில் இந்தக் கரு சிக்கிடும் போது என்ன மாதிரியான அதகளங்கள் விளைவாகிடும் என்பதை இதன் 46 பக்கங்கள் – எனக்கு உணர்த்தியுள்ளன ! ”ஆங்… சைதாப்பேட்டை போலாம்பா” என்பது போல இறந்த காலத்திற்குள்ளும் ; “கூடுவாஞ்சேரிக்கு 2” என்பது போல எதிர்காலத்திற்குள்ளும் கதை நெடுக டவுண்பஸ் ஷண்டிங் அடிக்கிறார் தோர்கல் ! இந்த ஆல்பங்கள் எல்லாமே கிட்டத்தட்ட எட்டுப்-பத்து மாதங்களுக்கு முன்பாகவே ஓர் ஓய்வான சமயத்தில் நமது கருணையானந்தம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டவை ! அவரது classical நடைக்கு இந்தப் புராதன காலகட்டத்துக்கதைகள் நெருடலின்றி ஒத்துப் போகுமென்ற நம்பிக்கையில் மூன்று பாகங்களையுமே அவரிடம் ஒப்படைத்திருந்தேன் ! அவருமே அழகாய் எழுதியனுப்பியிருக்க – சமீபமாய் DTP பணிகள் முடிந்த பின்பே அவை என்வசம் வந்து சேர்ந்தன ! 

துவக்க சாகஸமான “ஒரு தேவதையின் கதை”க்கு வழக்கம் போல திருத்தங்கள் ; சிற்சில மாற்றங்கள்; நகாசு வேலைகள் என்று செய்து பணி முடித்து விட்டிருந்தேன் ! ஆனால் “சிகரங்களின் சாம்ராட்” கதையோ மிரளச் செய்யும் ஒரு புதிரான கதைக்களம் என்பதைப் “பூ மிதிக்க” வேண்டிய தருணத்தில் தான் உணர்ந்தேன் ! நிச்சயமாய் இந்த ஆல்பத்தினில் தென்பட்ட மொழியாக்க நெருடல்களின் பொருட்டு, நமது கருணையானந்தம் அவர்களைக் குறைசொல்வது நியாயமல்ல என்பதையுமே அப்போது உணர்ந்தேன் ! சொல்லி மாளா complex முடிச்சுகள் ; பேஸ்தடிக்கச் செய்யும் சம்பவக் கோர்வைகள் ; சராசரிக் கற்பனைகளுக்கெல்லாம் எட்டவே சாத்தியமாகா ஒரு க்ளைமேக்ஸ் – என்று வான் ஹாம் இங்கே தீட்டி வைத்திருப்பது ஒரு மோனலிசா சித்திரத்தை ! இப்டிக்கா நின்று பார்த்தாக்கா ஒரு அர்த்தமும் – அப்டிக்கா குந்திக்கிட்டுப் பார்த்தாக்கா வேறொரு அர்த்தமும் தொனிக்கும் பாணி - கதை நெடுகே ! ஒற்றை வார்த்தையை இடம் மாற்றிப் போட்டால் கூட கதையின் போக்கே அந்தர்பல்டி அடித்து விடக்கூடுமென்பதை உணர்ந்த போதே எனக்கு வயிற்றைப் பிசையத் துவங்கி விட்டது! தேதியோ 16ஐத் தொட்டிருக்க – அவகாசமும் அதிகமில்லை ; ஆனால் இந்தக் கதையில் காத்திருக்கும் பணியோ இமாலய அளவிலானது எனும் போது பேய் முழி முழிக்கத் துவங்கினேன் !

வான் ஹாம்மே…! நாமெல்லாம் இட்லி சாப்பிடுகிறோம்… வடக்கே சப்பாத்தி… மேலை தேசங்களில் ரொட்டி… கீழை தேசங்களில் நூடுல்ஸ்…! ஆனால் இந்த மனுஷன் மாத்திரம் 3 வேளைக்குமே ஏதோ தேவர்களுக்கான மெனுவையே லவட்டி விடுகிறார் என்று சந்தேகம் எழுகிறது எனக்கு ! சராசரி மனிதர்களை விடவும் – படைப்பாளிகள் பன்மடங்கு கற்பனைத் திறனிலும் – ஆற்றலிலும் உச்சமானவர்களே என்பது தெரியும் ! ஆனால் இவரோ head & shoulders above every one of them ! அசாத்தியத் திறனும், நிகரில்லா தன்னம்பிக்கையும், இலக்கு மீதான கவனத்தை எந்தவொரு சூழலிலும் விட்டுத் தரா உறுதியும், அவரது சிறகடிக்கும் கற்பனைகளுக்கு மெருகூட்டும் அம்சங்கள் என்பதை இந்த ஒற்றை வாரத்தில் அழுத்தம் திருத்தமாய்ப் புரிந்துள்ளேன் !  

நாளொன்றுக்கு 3 மணி நேரங்களை ஒவ்வொரு இரவும் செலவிட்டால் 10 பக்கங்களைப் பணி முடிக்கவே நாக்குத் தொங்கிப் போனது ! அதிலும் இந்தக் கதையின் முன்னணி – பின்னணி என சகலத்தையே தலைக்குள் ஒவ்வொரு தபாவும் reload செய்து கொண்டு அமர்ந்தால் தான் அன்றைய வேலை ஓடும் ! இல்லாது போனால் சொதப்பிடுவோமோ ? என்ற பயம் ! ‘ஒட்டுமொத்தமாய் 6 நாட்களை விழுங்கிய பிற்பாடு கதையினை மாற்றியெழுதி ; திருத்தங்களைச் செய்துவிட்டதான லேசான நம்பிக்கையோடு, இரத்தக்களரியான சிகப்பு மசிப்பக்கங்களை நமது  DTP பெண்களிடம் ஒப்படைத்தேன் ! அவர்களையும் சும்மா சொல்லக்கூடாது ; யுத்த களம் போல் காட்சி தந்த திருத்தங்கள் நிறைந்த பக்கங்களைப் பொறுமையாய்க் கையாண்டு, பிரிண்டவுட் எடுத்துத் தந்த வண்ணமே இருந்தனர் ! ஆனால் எனக்கு தலைக்குள்ளோ குடைச்சல் தொடர்ந்து கொண்டேயிருந்தது ! So வெள்ளியிரவு மறுக்கா மொத்தப் பக்கங்களையும் ; CINEBOOK-ன் ஆங்கிலப் பிரதியையும் ; ஒரு கத்தை வெள்ளைத்தாள்களையும் எடுத்துக் கொண்டு கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்தேன்! ஆங்கிலத்தைப் படித்தபடிக்கே நமது தமிழாக்கத்தைக் கவனித்தால், பொடிப் பொடியான சில தகவல்கள் மிஸ் ஆவது புரிந்தது ! ‘நாசமாய்ப் போச்சு!‘ என்றபடிக்கே அவற்றை இணைத்து விட்டு – மேற்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன் ! வெள்ளைத்தாளிலோ – “ஆங்… தோர்கல் தோசை சாப்பிடறது சமகாலத்திலே ; பூரி சாப்பிடப் போறது எதிர்காலத்திலே ; இட்லி சாப்பிட்டது 37 ஆண்டுகளுக்கு முன்பாக !” என்று ஒவ்வொரு காலகட்டத்தையும் குறித்து வைக்கத் தொடங்கினேன் ! இந்த நிகழ்விற்கும் – அந்த நிகழ்விற்குமான கால வித்தியசம் இத்தினி வருஷம் என்று algebra பார்முலா போலவும் எழுதிடத் தொடங்கினேன். அப்புறமாய் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரோடும் சிற்சில சந்தேகங்கள் குறித்துப் பேசினேன். சில இடங்களது வரிகளுக்கு இரு மாதிரியான அர்த்தங்கள் சாத்தியம் என்பதை அவர் சொல்ல – அதையுமே குறிப்பெடுத்துக் கொண்டேன் ! இவை சகலத்தோடும் மறுக்கா கதையின் முழுமையையும் புரட்டத் துவங்க – நான்காவது தடவையாய்த் திருத்தங்கள் செய்யத் தேவைப்பட்டது புரிந்தது ! So சனி பகலில் இயன்றதைச் செய்துவிட்டு – “இதுக்கு மேலே தம் லேது சாமி !” என்ற கதையாக “சிகரங்களின் சாம்ராட்டை” அச்சுக்குத் தந்த கையோடு – பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறேன் – இன்னமுமே என்னால் 100% திருப்தியான விடைகளை வழங்கிட இயலா சில கேள்விகளை எண்ணி ! 

ஒன்று மட்டும் நிச்சயம் guys – இதழ் வெளியான பிற்பாடு; இந்தக் கதையினை நீங்கள் (சு)வாசித்த பிற்பாடு – எக்கச்சக்கமான ரவுசுகள் இங்கே அரங்கேறவிருப்பது சர்வ நிச்சயம் ! Keep your best thinking caps fresh folks – அவற்றிற்கு ஜரூராய் வேலை காத்துள்ளது ! ‘யாம் பிறாண்டிய பாயைப் பிறாண்டட்டும் சகலரும் !‘ என்ற நல்லெண்ணம் மேலோங்கவே செய்தது தான் ; ஆனால் தலீவர் போன்ற சில சாத்வீக ஜீவன்களின் நலன் கருதி நான் எழுதிப் பார்த்த அந்தக் காலகட்ட அட்டவணைகளையும் இதழில் புகுத்தியுள்ளேன் – கதையின் இறுதிப் பக்கத்தில் ! ஏனோ – தெரியலை - சந்தனம் பூச வரும் காந்தக்கண்ணழிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே பின்வாசலை உடைத்துக் கொண்டாவது ஓடிப் போய்விடத் தோன்றுகிறது இப்போது ! கவுண்டரே – நீர் தேவுடு !

கதை # 3 – புண்பட்ட கபாலத்தை மயிலிறகால் வருடித் தந்ததென்று சொன்னால் மிகையாகாது! தெள்ளத் தெளிவாய் ஓட்டமெடுக்கும் கதை; அழகான சில குடும்பத் தருணங்கள்; சற்றே சினிமா ஜாடையிலான க்ளைமேக்ஸ் என்று “ஓநாய்க் குட்டி” ஜெட் வேகத்தில் ஓட்டமெடுத்தது! இந்தக் கதையுமே "சி.சா." ஜாடையில் இருந்திருப்பின் – இந்நேரம் நான் கும்பமேளாவில் கலந்து கெள்ளும் பொருட்டு உத்தர் பிரதேசத்தை நோக்கிய ரயிலைப் பிடித்திருப்பேன் என்பது உறுதி ! Anyways – all’s well that ends well என்ற கதையாக இதழின் முழுமையும் நாளை அச்சுக்குச் செல்லத் தயாராகி விட்டுள்ளது ... provided - இந்த ஞாயிறு இரவில் எனக்குப் புதிதாய் ஏதேனும் சந்தேகமோ; விளக்கமோ தோன்றிடாத பட்சத்தில் ! இதுவரையிலும் வேறு எந்த ஆல்பத்திற்கும் செய்திடாத அதிசயமாய் – இந்த 46 பக்கங்களை மொத்தம் 5 முறை பிரிண்ட் அவுட் எடுத்துள்ளோம் ! And 5 தடவைகளுமே ஏதேதோ திருத்தங்கள் அவசியமாகியுள்ளன ! In spite of all that – தொக்கி நிற்கும் சில கேள்விகள் என்னைச் சுற்றி இன்னமுமே ஜிங்கு-ஜிங்கென்று நர்த்தனம் ஆடித் திரிகின்றன ! சில குழப்பமான களங்கள் கடுப்பைக் கிளப்புவது வாடிக்கை... “போங்கையா... நீங்களும் உங்க இடியாப்பமும்” என்று நடையைக் கட்டத் தான் அவ்விதக் களங்களில் தோன்றும் ! ஆனால் இங்கேயோ மறுக்கா-மறுக்கா அதே பக்கங்களைப் புரட்டோ-புரட்டென்று புரட்டி, புரிய மறுக்கும் சமாச்சாரங்களுக்கு விடை கண்டிட மனசு அல்லாடுகிறது! இதோ – இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட மண்டை அந்தப் பனிச்சிகரங்களிலேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது! ஆஹா... வாராதோ ஜனவரி? என்ற அவா இப்போதே அலையடிக்கிறது - உங்களிடமிருந்தாவது எனது கேள்விகளுக்கான விடைகள் கிட்டுமா ? என்றறிய !

உப்ப்ப்ப் ! ஒற்றைக் கதைக்கோசரம் இதுவரையிலும் இத்தனை ப்ளேடு போட்டதாய் சமீபத்தில் நினைவில்லை ! So ஓவர் புலம்பலாகவோ - அலம்பலாகவோ தென்படின் – my apologies!! கதையைப் படிக்கும் வரையும் எனது பெனாத்தல்களுக்கு முழுமையான பொருள் புரிவது சிரமமே !

And இதோ இந்த இதழின் அட்டைப்பட முதல்பார்வை + உட்பக்க previews - முறையே கதை # 1 ; 2 & 3 -லிருந்து !! அட்டைப்படம் கொஞ்சம் முன்பாகவே அச்சிட்டதென்பதால் - "முத்து காமிக்ஸ் 47 -வது ஆண்டுமலர்" என்று குறிப்பிட விடுபட்டுப் போய் விட்டது ! நிச்சயமாய் இதுவொரு முட்டாள்தனமே !! பிழையைச் சரி செய்ய அழகாயொரு ஸ்டிக்கர் தயாராகி வருகிறது !!  முன் அட்டை + பின்னட்டை  - என இரண்டுமே ஒரிஜினல் சித்திரங்களே ! And கதையின் பெயர் எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணம் !! 





இனி காத்திருப்பது நம்மவரின் “சாத்தானின் சீடர்கள்” b&w இதழ் மாத்திரமே ! இதோ – இன்றைய பொழுதே அதன் மீதான எடிட்டிங்கை நெருக்கி முடித்து விடலாமென்ற நம்பிக்கையுள்ளது ! நேர்கோட்டுக் கதைகள் வாழ்க !! டெக்ஸ் வில்லர் வாழ்க !! அவரது குழப்பமிலாக் கதைகளை உருவாக்கும் போனெல்லி வாழ்க ; அவற்றை ரசித்து என் பணியைச் சுலபமாக்கிடும் நீங்கள் வாழ்க !! கார்சன் வாழ்க !!

அப்புறம் பராகுடாவின் அச்சுப் பணிகள் சகலமும் முடிந்து பைண்டிங்கில் உள்ளது! ஒட்டுமொத்தமாய் அச்சாகிக் கிடக்கும் அந்தக் கலர்ப் பக்கங்களைப் பார்த்தால் எனது ஆந்தை விழிகள் இன்னும் அகலமாவதைத் தவிர்க்க முடியவில்லை! இதுவரையிலும் நிறைய அட்டகாசமான கலர் இதழ்களைப் பார்த்துள்ளோம் தான் ; ஆனால் இந்த இதழின் கலரிங் பாணி அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமிட்டுவிடுமென்று படுகிறது ! ஓ.... யெஸ்....! இது கணினிகளின் காலம் தான்; ஏதேதோ பணிகளை இயந்திரங்கள் அற்புதமாய்ச் செய்து தருகின்றன தான் ! ஆனால் அதன் சகலத்தின் பின்னேயும் உள்ள மனிதரின் ஆற்றலைப் பார்க்கும் போது வாய் அலிபாபா குகையாகப் பிளக்கிறது! Out of the world!!! பாருங்களேன் சில பக்கங்களின் சிதறல்களை!

Before I sign off – இதோ இன்னொரு கார்பீல்ட் கார்ட்டூன்! And சிரித்தபடிக்கே நீங்களிருக்கும் வேளையில் சந்தாப் புதுப்பித்தல்களைப் பற்றிய நினைவூட்டலையும் முன்வைத்து விடுகிறேனே folks ? இன்னும் பத்தே நாட்களில் நடப்பாண்டு நிறைவுறவிருக்கும் நிலையில் – உங்களது 2018-ன் சந்தாக்கள் ஏற்கனவே நிறைவுற்றிருக்கும் ! So இது வரையிலும் 2019-ன் சந்தா எக்ஸ்பிரஸில் இடம்பிடித்திருக்கா நண்பர்கள் இன்றைக்கே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திடலாமே – ப்ளீஸ் ? சந்தா எக்ஸ்பிரஸ் இன்னமுமே கணிசமான தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதால் இதனையே ஒரு மெலிதான நினைவூட்டலாய் எடுத்துக் கொள்ளலாமே folks !

மீண்டும் சந்திப்போம்! Have an awesome Sunday! Bye for now!

Saturday, December 15, 2018

கடலோரக் களரிகள் !!


நண்பர்களே,

வணக்கம். என்னடா பதிவின் ஆரம்பத்திலேயே நடுநாயகமாய் நம்ம கார்பீல்ட்காரு குந்தியிருக்கிறாரே என்று யோசிக்கிறீர்களா ? வேறு ஒன்றுமில்லை - சும்மா 'நொய்-நொய்' என்று மூக்கைச் சிந்திக் கொண்டே பதிவையும், பின்னூட்டங்களையும் போட்டு அலுத்துப் போய் விட்டது ;  ஜாலியாய் ஏதாச்சும் எழுதுவோமே ; படிப்போமே என்று தோன்றியது ! அதன் பலனே கார்பீல்டை இங்கே வரவழைக்கத் தோன்றிய மகாசிந்தனை ! இனி ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு பதிவிலும் இந்த சாப்பாட்டு ராமப் பூனையினை இங்கே பார்த்திடலாம் ! Maybe an extra reason to visit this page ?! 

இந்த வாரம் முழுக்கவே ஒரு செம வித்தியாசமான வாரம் எனக்கு !! பார்த்திருக்க டிசம்பரின் பாதி ஓடிவிட்டதே ; புத்தாண்டும், அடுத்த செட் புது இதழ்களும் கூப்பிடு தொலைவில் உள்ளனவே என்ற அலாரம் தலைக்குள் ஒலிக்க - வண்ண இதழ்களை முதலில் கரை சேர்ப்போமென்று தீர்மானித்தேன் ! தோர்கல் intense ஆனதொரு கதைக்களமாய் எப்போதுமே இருப்பது வாடிக்கை - ஆனால் அவை பெரும்பாலும் நேர்கோட்டுப் பயணங்களாகவே அமைந்திடும் ரகம் என்பதால் - அதனை கடைசியாகப் பார்த்துக் கொள்ளத் தீர்மானித்தேன் ! So பணி # 1 ஆக - லயன் கிராபிக் நாவலின் அலைகடல் அசுரர்களைக் கையிலெடுக்கத் தோன்றியது !! இந்தத் தொடரின் உரிமைகளை நாம் வாங்கி வருஷங்கள் இரண்டாகிறது ! 2016-ன் கடைசியில் வாங்கியிருந்தோம் எனும் போது - இந்தக் கதையின் CINEBOOK ஆங்கிலப் படிவங்களை நான் படித்ததுமே probably 2016-ன் மத்தியில் ! நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்கும் என் ஞாபக சக்திக்கு சுமார் 25 மாதங்களுக்கு முன்பான வாசிப்பு எங்கே மண்டையில் நிற்கப் போகிறது ?!!  And இதன் மொழிபெயர்ப்பும் சில பல மாதங்களுக்கு முன்னரே நமது கருணையானந்தம் அவர்களால் செய்யப்பட்டிருக்க - அந்தச் சாக்கிலும் பராகுடாவில் பயணம் போகும் வாய்ப்பு எனக்கு மிஸ் ஆகி விட்டிருந்தது ! So இப்போது எடிட்டிங்கின் பொருட்டு மொத்தமாய்த் தூக்கிக் கொண்டு அமரும் போது -  `முற்றிலுமாய்ப் புதியதொரு கதையைப் படிக்கும் உணர்வே எனக்கு வழிநெடுக !! இந்தத் தொடரை ஏதோவொரு விதத்தில் ஏற்கனவே படித்திருக்கக் கூடிய வாசகர்கள் தொடரும் பத்தியினை skip செய்து விட்டால் தேவலாமென்பேன் - simply becos தொடரும் வரிகள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான சேதியை மறுஒலிபரப்பு செய்யவுள்ளன !!

கடற்கொள்ளையர் சார்ந்த கதைக்களங்கள் நமக்குப் புதிதாய் இருக்கலாம் தான் - ஆனால் பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளுக்கு இவை fairly frequent playgrounds ! ஆனால் அவற்றை தமிழில் வெளியிட எனக்கு நிறையவே தயக்கம் இருந்துவந்துள்ளது - பிரதானமாக வண்ணம் & தரம் அந்நாட்களில் நமக்கு சாத்தியமில்லாத காரணத்தால் ! நமது ஆதர்ஷ ஓவியர் வில்லியம் வான்சின் கடல்சார்ந்த  "ப்ரூஸ் ஹாக்கர்" தொடரை வெளியிடும் நமநமப்பு எனக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னரே எழத் தான் செய்தது ! ஆனால் அந்தத் தொடரின் highlight ஆன சித்திரங்கள் + வர்ணஜாலங்கள்  நமது அப்போதைய நியூஸ்பிரிண்ட் + black & white பாணிகளில் ரொம்பவே டப்ஸாவாகத் தெரிந்திடும் என்பதால் ரிவர்ஸ் கியரைப் போட்டுவிட்டேன் ! அது மாத்திரமின்றி - டிடெக்டிவ் ; கவ்பாய் ; ஆக்ஷன் என்ற வட்டத்துக்குள் மாத்திரமே நாம் உலவிடத் துணிந்திருந்த நாட்களவை ! கொஞ்சமே கொஞ்சமாய் அந்த வட்டத்தை விட்டு வெளியேறிப் பார்க்கும் தகிரியங்கள் கூட அப்போதைக்கெல்லாம் நமக்கு லேது ! So கடற்கொள்ளையர்கள் பிராங்கோ-பெல்ஜிய லோகத்தினில் அதகளம் செய்து வந்தாலும், நாம் கடல் அண்ணாச்சிகளிடமிருந்து ஒரு கணிசமான தூரத்தை தொடர்ந்தே வந்தோம் ! அதனில் மாற்றங்கள் ஏதும் நேர்ந்திராது தான்  - "கி.நா" எனும் ஒரு தனிப் பயணத்தடத்தை ஏற்படுத்திடாது போயிருந்தால் & அந்த ரசனைக்கு நீங்கள் ஆரவாரமான வரவேற்புத் தந்திராவிட்டால் ! Enter லயன் கிராபிக் நாவல் & ஏகப்பட்ட புதுக் கதவுகள் படீர் -படீரெனத் திறந்தது போலொரு பீலிங்கு ! கதைகளில் வலுவும், வித்தியாசமும் தெறித்தால் அவற்றை ரசிக்க நீங்கள் ரெடி என்ற தைரியத்தில் - சமீப "பி-பெ" சூப்பர் ஹிட் தொடர்கள் எவை என்று அலசத்தொடங்கினேன் ! அப்போது பிரதானமாய்த் தட்டுப்பட்ட அரை டஜன் தொடர்களுள் "பராகுடா" கண்ணைப் பறித்தது!
இந்தத் தொடரோடு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாகவே எனக்கு லேசாயொரு அறிமுகம் இருப்பதும் அப்போது தான் மண்டையில் உறைத்தது ! Barracuda தொடரின் இரண்டாவதோ-மூன்றாவதோ ஆல்பம் வெளியாகவிருந்த சமயம் தான் நமது இரண்டாவது இன்னிங்சின் வேளையுமே ! ஒரு கணிசமான இடைவெளிக்குப் பின்பாக படைப்பாளிகளைச் சந்திக்க, அவர்களது பாரீஸ் ஆபீசுக்கு  சென்றிருந்தேன் என்பதால் உள்ளுக்குள்ளே சன்னமாயொரு குறுகுறுப்பு - நீண்டதொரு லீவு போட்ட பின்னே வகுப்புக்குள் கால்வைக்கமுனையும் மாணவனைப் போல !! அவர்களது ஆபீசில் கீழுள்ள reception ஏரியாவில் - வண்டி வண்டியாய் சமீபத்தைய வெளியீடுகளை ஒரு "U" ஷேப்பில் அடுக்கி வைத்திருப்பார்கள் !!  அதன் மையத்தில் உட்காரும் சோபாக்கள் இருக்கும் ! வேற்று தேசங்களிலிருந்து, உரிமைகளுக்கோசரம் வருகை தருவோரை நிறைய முறைகள் சந்தித்திருக்கிறேன் - அந்த ரிசப்ஷனில் ! அத்தனை பேரும் கோட்டிலும்-சூட்டிலும் கலக்கிக் கொண்டு பொறுமையாய் அமர்ந்திருப்பர் ! ஆனால் நானோ அரை லிட்டர் ஜொள்ளை கடைவாயோரம் ஒழுக விட்டபடிக்கே - அந்த U வடிவ ரேக்கில் உள்ள அத்தனை ஆல்பங்களையும் உண்டு-இல்லை என்று பண்ணிக் கொண்டிருப்பேன் ! அவற்றைப் பராக்குப் பார்ப்பதும், புரட்டிப் பார்ப்பதும் மெய் மறக்கச் செய்யும் பொழுதுபோக்கு !! BARRACUDA புது ஆல்பத்தின் வெளியீட்டுத் தருணம் என்பதால், அதனில் ஒரு 25  புக்குகளை அழகாய் அடுக்கி வைத்து அதன் மேலொரு கப்பல் மாதிரியான உருவ பொம்மையை அமர்த்தியிருந்தார்கள் ! ஒரு மெகா சைஸ் போஸ்டரும் பிரெஞ்சில் ஒட்டப்பட்டிருந்தது !! அது நாம் வண்ணத்தோடு கைகுலுக்கத் தயாராகி வந்த COMEBACK தருணம் என்றாலுமே, எனக்குள் நமது இரண்டாம் இன்னிங்சின் ஆயுட்காலம் பற்றியோ ; எங்களது மெனெக்கெடும் படலங்கள்  எத்தனை தூரம் தொடர்ந்திடுமென்ற யூகிப்போ சிறிதும் இருக்கவில்லை ! So "இதுக்கு பேர் தான் பேலஸ் !!" என்று சொல்லி வாயைப் பிளக்கும் வடிவேலைப் போல - அந்த பராகுடா வண்ண ஆல்பத்தை ஒரு பெருமூச்சோடு புரட்டோ புரட்டென்று புரட்டினேன் ! கதை மீதோ - அந்த ஜானர் மீதோ நமக்கு அப்போதைக்கு ஆர்வம் கிடையாதென்றாலுமே - பக்கங்களை புரட்டும் போது  - "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை காமிக்சாக வரைஞ்ச மாதிரியுள்ளதே !! என்று தோன்றியது ! And 2016-ல் இதனை வெளியிடும் உத்தேசத்தோடு பரிசீலிக்க நாம் தயாராக இருந்த வேளையில் - மொத்தம் 6 ஆல்பங்கள் வெளியாகி, இதுவொரு சூப்பர்-ஹிட் தொடராகிப் போயிருந்தது !!

BARRACUDA !! அது என்ன பேருடா சாமி ? என்ற குறுகுறுப்போடு தான் CINEBOOK ஆங்கில இதழிற்குள் புகுந்திருந்தேன் !! ஏற்கனவே நம்மால் CID லாரன்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட நாயகருக்கு ஒரிஜினலாய் fleetway படைப்பாளிகள்  தந்திருந்த  பெயரும் பராகுடா தான் !! அதுவொரு மீன்வகையின் பெயர் என்று தெரியும் ; wikipedia-வைத் தட்டினால் - மேற்கொண்டு தகவல்களை புட்டுப் புட்டு வைத்தது ! ஒரு ராட்சச மீனினம் ; ரொம்பவே மூர்க்கமானது ; பார்க்கவும் சரி, பாய்ச்சலிலும் சரி - செம வில்லங்கமானது என்று விக்கி சொன்னது ! பக்கங்களை புரட்டிய சற்றைக்கெல்லாமே - "பராகுடா" என்பது கொள்ளையர்களின் கப்பலின் பெயர் என்பது புரிந்தது ! ஆக இது ஒரு பயணத்தின் கதை ; அந்தக் கப்பலில் பயணிக்கும் மனிதர்களின் கதை ; இங்கே ஹீரோ என்றெல்லாம் யாரும் இருக்கப் போவதில்லை என்பது புரிந்தது !! என்னை விட்டம் வரை வாய் பிளக்கச் செய்தது - அந்தச் சித்திர பிரம்மாண்டமும், வர்ணக் கலவையினில் தெறித்த அசத்தியமுமே !! ஒரு தொடரை CINEBOOK தெரிவு செய்திருப்பின், அதனில் நிச்சயம் weight இருக்குமென்ற திட நம்பிக்கை எனக்குண்டு !! (Of course - சிற்சிறு விதிவிலக்குகள் உண்டு தான் !!) So பர பரவென ஆல்பங்களை புரட்டிட - சற்றைக்கெல்லாம் செமத்தியானதொரு ஆக்ஷன் மேளாவை ரசித்த திருப்தி கிட்டியது !! ஆங்காங்கே சில பல மிட்நைட் மசாலாக்கள் தெளித்துக் கிடப்பதைக் கவனிக்க முடிந்தது தான் ; but அவற்றைச் சமாளித்துக் கொள்ளலாமென்ற தைரியத்தோடு - இந்தத் தொடருக்கு உரிமைகளைக் கொள்முதல் செய்யும் வேலையில் இறங்கி விட்டேன் ! அதுவும் சில மாதப் பணிகளுக்குப் பின்னே நிறைவுற, கதைகளும் வந்து சேர்ந்தன! 2018-ல் இரத்தப் படலம் மட்டும் மெகா சைஸ் நந்தியாய் குறுக்கே பிரசன்னமாகியிராவிடின் - நடப்பாண்டின் துவக்கத்திலேயே இந்த ஆல்பம் நம்மிடையே ஆஜராகியிருக்கும். But ஓவராய் பட்ஜெட் எகிறுகிற பயத்தில், சந்தா E எனும் சமாச்சாரத்தையே ஒரு வருஷம் தள்ளிப் போடத் தீர்மானித்ததால் -  பராகுடாவுக்கும் ஓராண்டு ஓய்வென்றானது ; எனது ஞாபகப் பேழையிலும் (!!!) இது அடியே போகத் துவங்கிவிட்டது !

ஒரு வழியாய் அது வெளிச்சத்தைப் பார்க்கும் நேரமும் புலர்ந்திட - கதைக்குள் பணியாற்றத் புகுந்தவனுக்கு வித விதமான உணர்வுகள் !! ரொம்பவே சிம்பிளானதொரு கதைக் கரு ; அதனை பாகுபலி ரேஞ்சுக்கான ஒரு  மெகா கேன்வாஸில் உருவாக்கத் துணிந்திருந்த கதாசிரியரை யாரென்று தெரிந்து கொள்ள ஆர்வம் உந்தியது ! மறுக்கா விக்கிப்பீடியாவைத்த தட்டினால் - அவரொரு பெல்ஜிய எழுத்தாளர் - பெயர் ஷான் ட்யூபோ என்றும் சொன்னது !! இவர் மட்டும் என்றேனும் நமது திரையுலகிற்கு கதை எழுதத் தீர்மானித்தால் - எக்கச்சக்க டிரெக்டர்கள் அவரது வீட்டு வாசலில் தவம் கிடக்கப் போவது உறுதி !!
மெர்செலாக்கும் ஆக்ஷனோடு ஆரம்பிக்கும் கதைக்குள் - சும்மா செண்டிமெண்ட் தாக்கம் கணிசம் ! அங்கிருந்து அடுத்த கியரைத் தூக்கினால் காதல் பிரவாகம் ; மோக தாண்டவம் ! "இவன் வில்லனின் மகனாச்சே - இவனும் விஷமாய் இருப்பானோ ?" என்று நினைக்கத் தோன்றும் கணமே - அவனுக்கு ஒரு ஹீரோவுக்கான ட்ரீட்மெண்ட் நல்கப்படுவதைக் கவனிக்க முடிந்தது ! அங்கே கட் பண்ணிய கையோடு பயணித்தால் - வித்தியாசமானதொரு உறவுமுறையினை பகீரென்று முன்வைக்கிறார் கதாசிரியர் !! "யப்பப்பா...இது என்ன புதுக் கூத்து ?" என்றபடிக்கே மிடறு விழுங்கிக் கொண்டு  மேற்கொண்டு போனால் ஒரு துரோகத்தின் கதையை கண்முன்னே கொணர்கிறார் !! பெண்களின் மனதில் வஞ்சம் தீர்க்கும் வெறி புகுந்து விட்டால், வையகத்தில் அவர்களுக்கு எதுவும் துச்சமே என்பதைச் சும்மா அழுத்தம் திருத்தமாய்ப் பதிவிடுகிறார்! அதற்குள்  பார்த்தால் ஒரு மிரட்டலான கெட்டப்புடன், ஒரு டெர்ரர் வில்லன் உதயமாகிறான் ! அவனுக்கு யார் மீது குரோதம் ? அவனது எதிரியின் flashback என்னவென்று கொஞ்ச நேரம் தட தடக்கிறது கதை !! அதன் மத்தியிலேயே காதலின் கரங்கள் ஆளாளை வசீகரிக்க - சில பல பிரமிக்கச் செய்யும் பீச் backdrop-களில் ஒரு சித்திர விருந்து !! இதற்கிடையே காமெடியையும் விட்டு வைப்பேனா நான் ? என்ற வேகத்தோடு கதாசிரியர் ஒரு மையப் பாத்திரத்துக்கு ஒரு கோமாளி முகமும் தந்திடுகிறார் !! அவனோடு லேசாய்ச் சிரித்து நகர - திடுமென கதையில் வேறொரு விதத்தில் twist !! எந்தக் கதாப்பாத்திரமும் இந்தப் பயணத்தின் முழுமைக்கும் உசிரோடு தொடரும் உத்திரவாதம் கிடையாது என்பது புரிகிறது - ஆம்லெட் போட முட்டையை உடைக்கும் லாவகத்தில் கதாசிரியர் ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளும் பாங்கில் !! அப்புறம் அந்நாட்களது புரட்சித் தலைவரின் வாள்வித்தைகளை ஞாபகப்படுத்தும் sequences-ம் ஏராளம் !!

பேராசை ; காமம் ; காதல் ; துரோகம் ; வஞ்சம் தீர்க்கும் வெறி ; பணத்தாசை ; அடிமை வாழ்க்கை - புதையல் வேட்டை என்று ஒரு rollercoaster பயணத்தில் இந்த ஆல்பங்கள் நம்மை இட்டுச் செல்வதை ஒரு எடிட்டராய்ப் பார்க்கும் போது தலை கிறுகிறுத்து விட்டது !! ஒரு வாசகனாய் ஒரு கதையைக் கையாள்வதற்கும் , அதே கதையை ஒரு எடிட்டர் குல்லாயை மாட்டிக் கொண்டு கையாள்வதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மீண்டுமொருமுறை உணர முடிந்தது !! எங்கெல்லாம் டெய்லர் வேலை அவசியம் ; எங்கெல்லாம் அழுத்தம் தேவை ; எங்கெல்லாம் நீங்கள் நம்மை ஓட்டிடக் கூடிய  இடங்கள் உள்ளன ? அங்கெல்லாம் ஏதேனும் செய்திட இயலுமா ? என்ற ஆராய்ச்சிகள் நெடுகத் தொடர்ந்தன ! அப்புறம்   இது ஒரு புராதன கதைக் களம் என்பதாலோ - என்னவோ  நமது கருணையானந்தம் அவர்களின் தமிழாக்கம் ரொம்பவே classical பாணியில் இருப்பதை லேசான நெருடலோடு கவனித்தேன் ! CINEBOOK -ன் ஆங்கில மொழிபெயர்ப்பு வேறொரு உச்சம் எனும் போது அதற்குக் கொஞ்சமேனும் ஒட்டியதாய் நமது தமிழாக்கம் இருத்தல் தேவலை என்று தோன்றிட - "Operation கோடு மேலே ரோடு" துவங்கியது !  மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு - redo செய்திடத் தேவையான பகுதிகளை ஒட்டு மொத்தமாகவே மாற்றியமைக்கத் துவங்க - மொத்தம் 160+ பக்கங்களுக்கான அந்தப் பணி, இந்த வாரத்தின் முழுமையையுமே கபளீகரம் செய்துவிட்டது !! சனிக்கிழமை பகலில் ஒரு வழியாய் எடிட்டிங் முடித்து அந்த சமுத்திரப் பயணத்திலிருந்து வெளிப்பட்ட போது பிரமிக்காது இருக்க முடியவில்லை - கதாசிரியரின் ஒவ்வொரு நுண்ணிய கற்பனைக்கும் சிறகுகளை நல்கியிருந்த ஓவியரை எண்ணி !! அவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்தால் - மனுஷன் இது போன்ற classical கதைகளுக்குச் சித்திரம் போடுவதில் நிபுணர் என்று தெரிந்தது ! சித்திரங்கள் மட்டுமன்றி - கலரிங்குமே அவர் தான் ; and trust me folks - இந்த இதழின் வர்ணங்கள் முற்றிலுமாய் வேறொரு லெவல் !! இதோ - இவர் தான் ஓவியரும், வர்ணச் சேர்க்கையாளருமான ஜெரெமி ! 2007-ன் இறுதியில் பராகுடாவின் முதல் ஆல்பத்திற்கான பணிகளைத் துவக்கியவர் - ரொம்பவே இளவயதுக்காரர் ! நமது லயனுக்கும், இவருக்கும் ஒரே வயது தான் !!
இவர் ஓசையின்றி ஒரு வித்தியாசமான வேலையையும் செய்திருக்கிறார் - இந்தத் தொடரின் பயணத்தோடே !! ஆல்பம் # 1-ல் தனது சொந்தத் தாத்தாவையே வரைந்து கதையின் ஒரு பிரேமினுள் நுழைத்திருக்கிறார் ! அப்புறம் இதையே ஒரு போட்டி போல் சிருஷ்டித்து ஒவ்வொரு தொடரும் அல்பத்திலும், ஆர்வம் காட்டும் வாசகர்களின் முகங்களை கதை மாந்தர்களில் யாருக்கேனும் முகமாக்கியுள்ளார் !! 2016-ல் தொடர் முற்றுப் பெற்றிருக்க, இன்றைக்கு ஏகப்பட்ட ஐரோப்பிய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் இதுவொரு blockbuster hit !! நம்மிடையேயும் இது நிச்சயம் அழகான வரவேற்பினைப் பெற்றிடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !! தொடரும் வாரத்தில் துவங்கிடவுள்ள அச்சுப் பணிகளை ஒழுங்காகச் செய்து விட்டால் ஒரு அழகான இதழை உங்களிடம் ஒப்படைக்கும் திருப்தி நமதாகிடும் ! Fingers crossed !! ஆக ஆண்டின் முதல் வெளியீட்டுக்கானதொரு முரட்டு பில்டப்பை இத்தோடு நிறைவு செய்து கொண்டு - அடுத்த இதழ் பக்கமாய்க் கவனத்தைத் திருப்புகிறேன் !!
And who else but TEX - அதிரடிகளோடு புத்தாண்டைத் தொடர்ந்திட ?! "சாத்தானின் சீடர்கள்" ஒரு 220 பக்க முழுநீள ஆக்ஷன் அதிரடி ! அட்டைப்படம் நமது ஓவியர் மாலையப்பனின் கைவண்ணம் ! நாயகரும் சரி ; வில்லன்களும் சரி - போனெல்லின் ஓவியர்கள் வரைந்த சித்திரங்களே ! அவற்றை தேவையான சைசுக்கு பிரிண்ட் போட்டுக் கொண்டு, வர்ணம் தீட்டியிருக்கிறோம் ! So கூடுமானமட்டில் கை ; கால் ; மண்டை என அங்க அளவுகள் சரியாகவே உள்ளதாய் எனக்குத் தோன்றியது !! அக்மார்க் விளக்கெண்ணையோடு ரெடியாக நீங்கள் காத்திருப்பீர்களெனும் போது திருத்தங்களிருப்பின் செய்திடப் பார்த்திடலாம் !!  And இதோ - உட்பக்க preview :
As always - வன்மேற்கின் இந்த அதிரடிகள் ஒரு அமர்க்களமான வாசிப்புக்கு guarantee என்பேன் !!

Before I sign off - சில பல கொசுறுத் தகவல்கள் :

  • இதுவரையிலான சந்தாக்களின் பதிவினில் 97% - A B C D E என்ற 5  பிரிவுகளுக்கும் சேர்த்தே தான் என்பது செம சந்தோஷத் தகவல் ! Still a long way to go - ஆனால் இதுவரையிலான சந்தா பாணியே மேற்கொண்டும் தொடர்ந்திடும் பட்சத்தில் - "கி.நா" சந்தா நமது ஆதர்ஷச் சந்தாப் பிரிவுகளில் ஒன்றாகிடும் !! 
  • நிறைய நண்பர்கள் ஆன்லைனில் பணம் அனுப்பி விட்டு, அது சார்ந்த தகவல்களைத் தெரிவிக்காது உள்ளனர் !! எங்களது பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் சில நேரங்களில் செலுத்துவோர் பெயரிருக்கும் ; பல நேரங்களில் IMPS reference நம்பர் மாத்திரமே இருந்திடும். So பணம் அனுப்பிய கையோடு சிரமம் பாராது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ? கிட்டத்தட்ட 30 பேரது தொகைகள்  தற்போதைக்கு அனாமத்தாய் சஸ்பென்ஸில் தொங்கி வருகின்றன guys !! Please do the needful !!
  • நமது புது வலைத்தளமான www.lion-muthucomics.com-ல் ஆன்லைன் கொள்முதல் ; சந்தா கட்டும் வசதிகள் உண்டு ! அங்குள்ள payment gateway - PAYTM என்பதால் பரிவர்த்தனைகள் பிசிறின்றி இருப்பதாய்த் தெரிகிறது ! தற்போதைய www.lioncomics.in தளத்தில் payment errors கொஞ்சம் தூக்கலாகவே இருந்து வருவதாய் சமீபத்தில் புகார்கள் ! அவற்றை ஒவ்வொருமுறையும் Worldmart மும்பை நிறுவனத்தோடு சரி பார்ப்பதற்குள் நாலைந்து நாட்கள் ஓடி விடுகின்றன ! So இதுவரையிலும் சந்தா செலுத்தியிரா நண்பர்கள் புதுத் தளத்தில் முயற்சித்துப் பார்க்கலாமே - ப்ளீஸ் ? 
  • And கரம் கூப்பிய வேண்டுகோள்கள் சந்தாக்களின் பொருட்டு !! 2019 எக்ஸ்பிரஸ் புறப்பட இன்னமும் இரு வாரங்களே உள்ளன என்பதால் - உங்களின் துரிதம் நமக்குப் பெரிதும் உதவும் !! 
Bye all ; தோர்கலோடு ஞாயிறைக் கழிக்கக் கிளம்புகிறேன் !! See you around !! Have a fantastic Sunday !!

Saturday, December 08, 2018

வருடங்கள் 7 !!

நண்பர்களே,

வணக்கம். 515 பதிவுகள் ! அவற்றுள் ஒரு 100 துண்டும், துக்கடாவுமான ரகமென்றே வைத்துக் கொண்டாலும், எஞ்சிடக் கூடிய பாக்கி 400+ பதிவுகள் full fledged ones என்பதில் சந்தேகமே கிடையாது ! அந்த 400+ நாட்களிலும், கம்பியூட்டரின் முன்னே குந்திடும் போதோ ; பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு அமரும் போதோ - "என்ன எழுதுவது ?" என்று விழித்த தருணங்கள் ரொம்ப ரொம்ப சொற்பம் ! ரயில்வே பிளாட்பாரங்களில் ; ஸ்லீப்பர் பஸ்களில் ; ஏர்போர்ட்களில் ; வீட்டின் மொட்டை மாடியில் ; ஹோட்டல்களில் ; அட - பாத்ரூமின் வாஷ்பேசின் திண்டின் மீது அமர்ந்தும் கூட டைப்பியுள்ளேன் - தங்குதடைகளின்றி ! ஆனால் சமீபமாய் காற்று வாங்கி வரும் நம் தளத்தைப் பார்க்கும் போது திடீர் கற்பனை வறட்சி தலைதூக்குகிறது !இந்த கிருஸ்துமஸ் வந்தால் நமது பதிவுப் பக்கத்துக்கு 7 வயது பூர்த்தியாகிறது ! And "உசக்கே-கீழே" என்று roller coaster சவாரி செய்து வந்துள்ள இதற்கான வரவேற்பு, தற்சமயமாய்த் தரைதட்டி நிற்பது இன்றைய யதார்த்தம் ! 

இப்படியொரு பொழுது என்றேனும் புலருமென்பதை நான் எதிர்பார்க்காதோ ; யூகிக்காதோ இருக்கவில்லை தான் ! சொல்லப் போனால், இத்தனை நெடியதொரு பயணம் சாத்தியப்பட்டிருப்பதே nothing short of a miracle என்பேன் ! "வாட்சப்" எனும் அட்டகாசம் கோலோச்சத் துவங்கிய போதே ; ஆங்காங்கே நிறைய க்ரூப்கள் உருவாகத் துவங்கிய போதே - இந்த வலைப்பக்கச் சமாச்சாரங்கள் எல்லாமே ஹைதர் அலி காலத்துச் சம்பவமாய்த் தோன்றத் துவங்கியது நிஜமே ! நினைக்கும் போது பதில் போட்டுக் கொள்ளலாம் ; குறுகியதொரு closed வட்டம் எனும் போது - பொதுவெளியில் அவசியமாகிடக் கூடிய formalities-க்கு அங்கே அவசியங்கள் லேது ; எதிர்மறைக் கருத்துக்களாக இருப்பினும் தயக்கங்களின்றிப் பகிரலாம் ; இத்யாதி ; இத்யாதி என்று அவற்றுள் வசதிகள் ஏராளம் அல்லவா ? But வாட்சப்பின் ஆளுமைக்குப் பின்னேயும், இங்கே ஜாலியாய்க் குழுமுவது, ஒருவித நண்பர்களின் மீட்டிங் போன்றே என்பதில் ஏது ரகசியம் ? கொஞ்சம் அரட்டை ; கொஞ்சம் கலாய்ப்பு ; கொஞ்சம் காமிக்ஸ் அலசல் என்ற routine வாரயிறுதிகளுக்கு set ஆகியிருந்தது ! ஆனால் வெவ்வேறு காரணிகளின் பொருட்டு அதனில் ஸ்பீட்-பிரேக்கர் எழுந்துள்ளது தான் துரதிர்ஷ்டம் ! Without a doubt - அந்தக் காரணிகளின் மையமே அடியேன் தான் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை! விலகிப் போக ஆளுக்கொரு காரணமிருந்திருக்கலாம் - ஆனால் அவை சகலங்களுக்கும் மத்தியிலுள்ள ஒரே common factor - yours truly தானே ? 

டாப் கியரில் க்ரே மார்க்கெட் ;  ஏதேதோ விற்பனைகள்  ; வியாபாரங்கள்  - என்ற தனித் தடத்தில் ஓடிக் கொண்டிருந்ததொரு  வண்டி, சிறுகச் சிறுக தொய்வு கண்ட போது - அது சார்ந்த இறுக்கங்கள் என் மீதான எரிச்சலாய் உருமாற்றம் கண்டது பழங்கதை ! இன்றைக்கோ ஸ்கேன்லேஷன்கள் எனும் பணியிலும், "ஆவணப்படுத்தும்" மும்முரங்களிலும் ; அவற்றை படித்து ரசிப்பதிலும் ஒரு அணி ஈடுபட்டிருக்கும் வேளையில் - 'சற்றே அடக்கி வாசித்தால் நலமல்லவா ?" என்று நான் முன்வைக்கும் கேள்வி பிடிக்காது போய் கணிசமான முகஞ்சுளிப்புகளுக்கு ஆளாவது இன்றைய புதுக்கதை ! "இது உலகெங்கும் நடக்கும் விஷயம் தானே ? உனக்கு ஏன் காந்துது அப்பு ?" என்று அவர்களது வாட்ஸப்வாய்ஸ்களும், மைண்ட்வாய்ஸ்களும் கேட்கின்றன தான் ! ஆனால் உலகெங்கும் நடக்கும் இதே  ஸ்கேன்லேஷன் முயற்சிகளின் பின்னே, இங்கு வெகு சிறப்பாய் அரங்கேறும் "நீ இப்டிக்கா குத்துனா- நான் அப்டிக்கா குத்துவேன் !" என்ற குடுமிபிடிச் சண்டைகள் நடைபெறுமா ? என்று சொல்லத் தெரியவில்லை எனக்கு !! பவுன்சரின் முதல் இதழ் வெளியாகவிருந்த வேளையில் - நம்மவர்கள் முதல் ஆல்பத்தின் ஒரு பகுதியினை தமிழாக்கி நெட்டில் வெளியிட்டிருந்தது நினைவுள்ளதா ? அது சார்ந்த தகவல் எனக்குக் கிட்டியதே - பாரிஸிலிருந்து - பவுன்சர் படைப்பாளிகளிடமிருந்து தான் ! இங்கேயே - அணி அணியாய்ப் பிரிந்து கிடக்கும் நண்பர்களுள் சிலர், அந்த pdf file-ஐ பாரிசுக்கு அனுப்பிய கையோடு  - "இந்த ஸ்கேன்லேஷன் செய்திருக்கும் வாசகர்கள் எடிட்டருக்கு ரொம்பவே வேண்டப்பட்ட கோஷ்டியாக்கும் ; so அவர் அதன் மீது நடவடிக்கை எடுக்காது கண்டும்-காணாதும் இருக்கிறார் !! பவுன்சரை இந்தியாவில்   வெளியிட, ஏகப்பட்ட பிற மொழிப் பதிப்பகங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் இந்த வேளையில் - இது போன்ற முயற்சிகளை கிள்ளிடாவிட்டால் - சுத்தமாய் மார்க்கெட் நாசமாகிடும் !" என்றொரு மின்னஞ்சலையும் தட்டி விட்டிருந்தார்கள் ! அவர்களோ இதுபோன்ற ஒரு நூறு பஞ்சாயத்துக்களை உலகெங்கும் பார்த்து, கடந்து சென்று , முற்றிலும் வேறொரு உச்சத்தைத் தொட்டு நிற்போர் எனும் போது - அந்த மின்னஞ்சலை எனக்கு forward செய்து விட்டிருந்தனர் - "இதை என்னான்னு பார்த்துக்கோப்பா !" என்றபடிக்கு ! அன்றைக்கு காலையில் நான் கண்விழித்ததே இந்த மின்னஞ்சலில் தான் !  So பல் கூட விளக்காது, அந்தக் காலைவேளையில் ஒரு  காரமான பதிவை சுடச் சுடத்  தட்டி விட்டிருந்தேன் என்பது நினைவுள்ளது ; அதன் நீட்சியாய் கணிசமான அதிருப்தியையும் ;வருத்தத்தையும் உங்களிடம் ஈட்டியிருந்தேன் என்பதும் நினைவுள்ளது ! மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்று சும்மாவா சொன்னார்கள் ??

இன்றைக்கும் இங்கே பகிரங்கமாய் - "நான் தான் பவுன்சர் பாகம் எட்டை மொழிபெயர்த்துப் போட்டேன் ; கென்யாவுக்குப் படம் வரைந்ததே நான் தான்  ; டெக்ஸ் வில்லருக்குக் கதை எழுதியது அடியேனே " என்றெல்லாம் மார்தட்டிப்  பதிவிடும் கூத்துக்களைப் பார்க்கும் போது - "அடக்கி வாசிக்கலாமே ?" என்று நான் கோருவதன் பின்னணியே - "இது கூரையினில் ஏறி நின்று கூவிடும் சமாச்சாரமல்லவே ?" என்பதையாவது புரியச் செய்யும் பொருட்டே ! தொடர்ந்து - "லயன் காமிக்ஸ் ; முத்து காமிக்ஸ் இதழ்களை ரெஜிஸ்டர் செய்து விட்டுள்ளோம் !" என்ற எனது அறிவிப்பு - சில பல கடுப்பு மீட்டர்களை உச்சத்துக்கு கொண்டு செல்ல உதவியதையும் யூகிக்க லியனார்டோ தாத்தாவின் ஜீனியஸ் அவசியமில்லை தானே ? ஆனால் "இது எங்களது ஜனநாயக உரிமையாக்கும் ; முட்டைக்கண்ணன் நீயென்ன நாட்டாமை பண்ணுறது ? " என்று பூரணகும்ப மரியாதை செய்து விட்டு,இங்கிருந்து விலகிப் போயுள்ளோரும் கணிசம் என்பதில் ஏது இரகசியம் ? உங்களது ஆர்வங்களின் வெளிப்பாடுகள் - உங்களுக்கு மத்தியிலேயே ; உங்களின் closed க்ரூப்களுக்குள்ளேயே ஒரு விவாதப் பொருளாகிடும் போது, அதன் நோவுகள் விடிவது என் தலையில் தான் ! ஆனால் அதைக் கருத்தில் கொள்ள நேரமின்றி - "பயபுள்ளே சோலோவா காமிக்ஸ் மார்க்கெட்டை  ஆட்டைய போட நினைக்கிறாண்டோய் ; அதான் இடைஞ்சல் பண்ணுறான் !!" என்ற ரீதியில் வருந்துவோரே கணிசம் !!

அதன் இன்னொரு பரிமாணம் தான் -  "போன வருஷம் சந்தா + ரத்தப் படலம் என்று 9000 ரூபாய்க்கு வெடி வைச்சாச்சு ; இந்தவாட்டி இப்போதே 6000 க்கு வேட்டு வைச்சுப்புட்டான் ! இன்னமும் ஈரோடு புத்தகவிழாவின் இதழ்கள் பற்றிய அறிவிப்பும் பாக்கி இருக்குது !! மிடிலே !!" என்ற வாட்சப் புலம்பல்ஸ் !! ஆனால் "இரத்தப் படலம் வேண்டாமே - ப்ளீஸ் ?" என்று தலைகீழாய் நின்றவனே நான் தான் என்பது வசதியாய் மறந்து போவது தான் சங்கடமே ! For sure - ஆண்டின் காமிக்ஸ் பட்ஜெட் எகிறி வருவதில் எனக்கு நிறையவே தர்மசங்கடம் !! ஆனால் நமக்கொரு குறைந்த பட்ச வெளியீட்டு எண்ணிக்கையின்றிப் போயின் - எகிறி வரும் நிர்வாகச் செலவினங்களைக் கட்டுக்குள் வைத்திருத்தல் அசாத்தியம் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருப்பர் என்று தெரியவில்லை !  Front desk-ல் 3 பெண்கள் ; புத்தக விழாக்கள் / ஏஜெண்ட் தொடர்புகளின் பொருட்டு இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி ; அப்புறம் DTP ; டிசைனிங்கிற்கென 3 பெண்கள் ; accounts-ன் பொருட்டு ஒரு பெண் ; பேக்கிங்கிற்கென பையன் ஒருவன் ; அப்புறம் மைதீன் என்ற குறைந்தபட்ச ஆட்பலமே 10 பேர் என்றாகிறது ! விரலைச் சப்பியபடிக்கே பணியாற்றத்  தயாராய் நான் ஒருத்தன் இருந்தாலுமே - இதரவர்கள் மாதம் பிறந்த முதல் தேதிக்கு சம்பளம் ஏதிர்பார்ப்பவர்களே ! இட வாடகை கிடையாது  என்றாலும், இவர்களது சம்பளங்கள் ; போன் செலவினங்கள் ; பயணச் செலவுகள் ; போனஸ் ; நிலுவைச் சேதாரம் என்று மாதமொன்றுக்கு குறைந்த பட்சமாய் ஒரு லட்சமாவது தேவை நமக்கு ! ஆண்டுக்கு சுமார் 12 இலட்சம் எனும் போது - இந்தத் தொகையினை ஒவ்வொரு இதழின் costing-களிலும் இணைத்திடல் அவசியம். So ஆண்டுக்கு 40 புக் வெளியிட்டால் - ஒவ்வொன்றின் தலையிலும் ஏறிடும் நிர்வாகச் செலவினச் சுமை சுமார் ரூ.30000 ! இதையே நான் ஆண்டுக்கு 30 புக்காகிடும் பட்சத்தில், நி.சு.ரூ.40000  என்ற கணக்குப் போடுவது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல தானே ? So மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது - இதழ்களின் individual விலைகளைக் கூடச் செய்யும் inverse effect கொண்டிருக்கும் !

2014-ன் சமீபத்தினில், புத்தக விழாக்களில் இடம்கிட்டிட வேண்டுமெனில் கைவசமுள்ள இதழ்களின் எண்ணிக்கையைக் கணிசமாய்க் கூட்டிட வேண்டும்ன்ற நிர்பந்தம் எழுந்த பின்னரே நாம் மறுபதிப்புக்கென ஒரு தடம் ஒதுக்கினோம் ; இதழ்களின் / ஜானர்களின் எண்ணிக்கையினைக் கூட்டினோம் என்பதில் இரகசியமேது ? அதுவரையிலும் ஆண்டொன்றுக்கு 24 இதழ்களோடு தானே வண்டி ஒட்டிக் கொண்டிருந்தோம் ? Oh yes - தற்போது நம்மிடம் கணிசமான எண்ணிக்கையில் டைட்டில்கள் உள்ளன எனும் போது வேகத்தை மட்டுப்படுத்திக் கொள்ளல் சாத்தியமே ! 2019-க்கு இப்போதுள்ள பட்ஜெட்டே ஜாஸ்தி எனும் சங்கடம் நிலவிடுவது நிஜமே எனில் - "ஈரோடு ஸ்பெஷல்" என்று புதுசாயொரு வெடியினைப் பற்ற வைக்காது - ஜம்போ சீசன் 2-ன் ஸ்பெஷல் இதழொன்றை அதற்கென ஒதுக்கிட்டால் சிக்கல் தீர்ந்தது ! காலங்காலமாய் எங்கள் ஊர்க்காரர்கள் செய்துவரும் நிஜ வெடிகளுக்கே தடா போடுவது சாத்தியமாகிடும் போது - தம்மாத்துண்டான நமது வெடிகளெல்லாம் ஒரு மேட்டரா ? So யதார்த்தங்களின் இன்னொரு பரிமாணத்தை உள்வாங்கிட இயலாது, ஏதேதோ கூத்துக்களை தன்னிச்சையாய் நானே அடித்து வருவதாய் நினைத்துக் கொண்டு இங்கே பங்கேற்க மனமின்றிப் போவோரும் கணிசமே ! Gentlemen : இந்த நொடியினில்  கடிவாளம் பூட்டப்பட்டிருக்கும் குதிரையோ / கழுதையோ சாட்சாத் நானே தான் ; வண்டியோட்டும் இடத்தில அமர்ந்தபடிக்கே  நிறையத் தீர்மானங்களை எடுப்பது  இந்தத் தொழிலின் கட்டாயங்களும், நிர்பந்தங்களுமே என்பது தான் நிஜம் ! ஆனால் நிஜங்கள் தான் எப்போதுமே நிசப்தங்களில் கரைந்திடுகின்றனவே ?

கொடுமையெனும் வானவில்லின் மறுமுனையோ  - "நீ இந்த ஸ்கேன்லேஷன் ; ஸ்கேனிங் அணியிடம் கூட கண்சிவக்க மறுக்கும் இநா-வாநாவா இருக்கியே ?!! உனக்கோசரம் குரல் கொடுத்து நான் பல்ப் வாங்கிக்கிட்டது தான் மிச்சமென்று" கோபித்துக் கொண்டு புறப்படும் நண்பர்கள் !! அட - இது ஒருபக்கமெனில், "நீ என் கேள்விக்குப் பதில் சொல்லலை ; நான் நாலு சாத்து சாத்தினாலும், நீ சிரிச்சமானிக்கே எனக்கு பதில் சொல்லலை ; எனக்குப் பிடிக்காதவர்களின் வினாக்களுக்குப் பதில் சொல்லிக்கிட்டே இருக்கே ; நீ சொல்லும் பதில்களில் எனக்கு திருப்தியில்லை ; நீ புளுகுறே !!" என்ற ரீதியினில் பின்னூட்டங்களினூடே ரௌத்திரங்களை வளர்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொண்டோரும் கணிசம் ! இன்னொரு பக்கமோ - "என் ஆதர்ஷ ஹீரோ / ஹீரோயின் / தொடருக்கு நீ வாய்ப்புக் கொடுக்காது இழுத்தடிக்கிறாய் ! கரடியாய்க் கத்தினாலும் என் பேச்சுக்கு நீ காது குடுக்க மறுக்கிறாய் !! So உன்னோடு காய் " என்று மௌனம் காப்போரும் உண்டு தானே ?!

இந்தக் களேபரங்கள் எவற்றினுள்ளும் தலை நுழைக்காது, திரளாய் இங்கே நடமாட்டம் தென்படும் தருணங்களில் ஜாலியாய் தலைகாட்டி விட்டுச் செல்லும் நண்பர்களும் கணிசமாய் உண்டு ! ஆனால் இங்கே ஜனத்தைக் காணோமெனும் போது - 'சரி...வேலையைப் பார்ப்போம் !" என்றபடிக்கே அவர்கள் நடையைக் கட்டிவிடுவது இயல்பு ! And இப்போதும் அதுவே நடந்தும் வருகிறதென்பது எனது யூகம் ! இவைகளெல்லாம் ஏதேதோ காரணிகள் என்றால் - ரொம்ப ரொம்ப சிம்பிளான இன்னொரு காரணத்தையும் கை காட்டிடுவேன் !! அது தான் மிஸ்டர் Boredom-ன் கைங்கர்யம் !! வயதுகள் ; ரசனைகள் ; பொறுப்புகள் - என எல்லாமே மாறிடும் தருணத்தில், ஒரே மாதிரியான நமது routine 7 வருடங்களில் போர் அடித்துப் போயிருக்க வாய்ப்புகள் ஏராளம் !! Maybe a classic case of The Seven year itch ?!!

இவை சகலத்துக்கும் மத்தியினில், அமைதியாய் இங்கே வருகை தந்த கையோடு - பதிவுகளை படித்து விட்டுக் கிளம்பிடும் மௌன வாசகர்கள் ! And விடா நம்பிக்கையோடு அவ்வப்போது இங்கே எட்டிப் பார்த்து, நிலவரத்தில் மாற்றம் ஏதும் உள்ளதா ? என்று தவிக்கும் நண்பர்கள் !! இவர்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் - சீனியர் எடிட்டர் !! இங்கே அரூபமாய் அரங்கேறி வரும் அதிருப்திகளைப் புரிந்து கொள்ளத் தெரியாதவராக - இன்று மதியம் என்னிடம் - "பதிவை யாராச்சும் hack பண்ணி, பின்னூட்டங்கள் விழ விடாது தடுக்கிறார்களா ?" என்று சீரியசாகக் கேட்டார் !! ஒவ்வொரு வாரமும் சிறுபிள்ளையின் உற்சாகத்தோடு இங்கே அரங்கேறும் அமளிகளை ரசித்து வருபவருக்கு இந்த திடீர் மௌனத்தின் பின்னணி புரியாது போனதன் வெளிப்பாடே - வெள்ளந்தியான அந்தக் கேள்வி ! அழுவதா-சிரிப்பதா ? என்று தெரியாத எனக்கு, அவருக்கான  பதில் சொல்லிடவாவது இந்தப் பதிவு பயன்படுமென்று நினைக்கிறேன் !

"அட..தம்பி சென்டிமென்ட்டைப் புளியோ புளின்னு புளியறாண்டோய் !!" என்ற நமட்டுச் சிரிப்புகளுக்குப் பஞ்சமிராது என்று புரிந்தாலும் - as usual மனதில் பட்டதை அப்படியே பதிவிட்டுள்ளேன் ! எது எப்படியோ - ஒற்றை ஆசாமியின் மீதான அபிமானமோ, அபிமானமின்மையோ, காமிக்ஸ் எனும் சுவையினை எவ்விதத்திலும் பாதித்திடக் கூடாது என்ற எண்ணம் கொஞ்ச காலம் முன்னேவே எனக்குள் தலை தூக்கிவிட்டிருந்தது ! அதன் வெளிப்பாடே ஜம்போ காமிக்சில் 'நறுக்' என கதையைத் தாண்டி எவ்வித சமாச்சாரங்களுக்கும் இடம் நஹி & ஆசிரியர் ; புடலங்காய் ; புண்ணாக்கு என்ற பெயர்களே வேண்டாமே என்ற தீர்மானம் ! 45+ ஆண்டுகளாய்க் காத்து  வருமொரு சமாச்சாரத்தை நான் ஒருத்தன் கோக்கு மாக்காகிடக் கூடாதல்லவா ?  இது சகலத்துக்கும் ஒரு ஜாலியான flipside-ம் இல்லாதில்லை ! நிசப்தமே கச்சேரியென்றாகிடும் போது - "ஜால்ரா அணி" என்ற வாதமே காணாது போகின்றதல்லவா ? 😃😄

அந்தமட்டிற்கு சந்தாக்களின் துரிதத்தினை இந்த சமீப நிகழ்வுகள்  எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதில் உங்களின் பெருந்தன்மைகளும், ஆண்டவனின் கருணையும் பிரதிபலிக்கின்றன ! அதிலும் icing on the cake - 'பரபர' வென பதிவாகி வரும் சந்தாக்களின் 90% - A B C D E என சர்வ ஜானர் சந்தாக்களே ! Thank you ever so much guys !! Much appreciated !! And keep it going please !!

So முன்செல்லும் நாட்களில் இங்கிருந்து நாம் பயணிப்பது எங்கே ? என்ற கேள்வி எழுந்திடலாம் தான் ! Simple !! எப்போதும் போல் இங்கே நமது திட்டமிடல்கள் ; இதழ்களின் previews ; reviews என்று நான் பகிர்ந்திடுவது தொடரும் ! Maybe வாராவாரம் ஒரு பதிவு என்பதை இனி 10 நாட்களுக்கொருமுறை என்று மாற்றம் செய்து கொள்ளலாம் ! நண்பர்களின் பங்களிப்பு கிட்டிடும் பட்சத்தில் interactive ஆகவும் ; அவ்விதம் இல்லாது போகும் பட்சத்தில் Facebook-ல் நாமிடும் பதிவுகள் போல - இதுவொரு தகவல் பலகையாக செயல்பட்டிடும் !

அதன் முதல் கட்டமாய் - இதோ புத்தாண்டின் ஒரு மைல்கல் இதழின் அட்டைப்பட preview ! கொடுமை என்னவெனில் - 30 இலட்சம் பார்வைகளைக் கொண்டாடும் இதழ் சார்ந்த பதிவு - ஆளில்லா டீ கடையின் ஆற்றலாகிடக் கூடுமென்பதே !! Anyways - இதோ "அலைகடல் அசுரர்கள்" இதழின் அட்டைப்பட & உட்பக்கப் previews !

ஓராண்டின் இடைவெளிக்குப் பின்பாய்த் தலைகாட்டிடும் "லயன் கிராபிக் நாவல்" ஒருவித சந்தோஷத்தைக் கொணர்கிறது - simply becos இதன் இதுவரையிலான 6 இதழ்களுமே ஒவ்வொரு விதத்தில் செம சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொணர்ந்துள்ளன ! இம்முறையும் அதனில் துளி கூட மாற்றமிராது என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உள்ளது ! (நமக்கு) முற்றிலும் புதியதொரு கதை பாணி ; மெர்செலாக்கும் சித்திரங்கள் ; கலரிங் - என இந்த 3 பாக ஆல்பம் - புதிதாய்ப் படிக்கவுள்ளோருக்கு நிச்சயமொரு அட்டகாச அனுபவமாய் இருக்கும் ! அட்டைப்படங்கள் இரண்டுமே ஒரிஜினல்கள் என்பதால் நம் பணி அந்த எழுத்துருக்களை வடிவமைப்பதோடு நிறைவுற்றது ! பராகுடா - 2019-க்கொரு அதகளத் துவக்கமாக அமைந்திடுமென்று நம்புவோமாக !! Fingers crossed !!

அப்புறம் ஜம்போ - சீசன் 2-ன் பொருட்டு ஒரு செமத்தியான தொடர் ஏற்பாடாகியுள்ளது ! நிச்சயமாய் Jumbo-ன் அடுத்த சுற்றுக்கு இந்த ஆல்பங்கள் செம கெத்தைத் தந்திடும் என்பது நிச்சயம் !! பிப்ரவரியில் அறிவிப்பு  !!

அப்புறம் டிசம்பர் இதழ்கள் சார்ந்த நமது YouTube வீடியோ இங்கே : https://youtu.be/DXWvbsvb_28

Before I  wind off -  புத்தக விழா சார்ந்த சில சேதிகள் :

  • திண்டுக்கல் நகரில் ஞாயிறன்று (9th Dec ) நிறைவுறும் புத்தக விழாவினில் நமக்கு "மோசமில்லை" என்ற ரகத்தில் விற்பனை அமைந்துள்ளது ! Of course - மதுரையின் விற்பனையில் பாதி கூட லேது என்றாலும், முதல் தடவைக்கு நமக்கு இது ஓ.கே தான்  !!
  • வரும் 21-ம் தேதி கும்பகோணத்தில் இன்னொரு புத்தக விழா துவங்கிட, நமது கேரவன் அடுத்ததாய் அங்கே பயணிக்கவுள்ளது ! அங்கும் நமக்கிது முதல் அனுபவம் என்பதால் என்ன எதிர்பார்ப்பதென்று தெரியவில்லை !! பார்ப்போமே !!
  • சிறு நகரங்களில் இப்போதெல்லாம் தொடர்ச்சியாய் புத்தக விழாக்கள் நடைபெறுவது ரெகுலராக நிகழ்வாகி விட்டது ! ஒற்றை வருடமாவது, சளைக்காது அவற்றின் பெரும்பான்மைக்குப் பயணித்துப் பார்ப்பதென்ற உத்வேகத்தில் உள்ளோம் - கைவசமுள்ள ஸ்டாக்கின் பளுவைக் கருத்தில் கொண்டு !! ஆண்டவன் நமக்குத் துணை புரிவாராக !! 

Bye guys ; have a lovely weekend !! நான் தோர்கலோடு பொழுதைக் கழிக்கப் புறப்படுகிறேன் ! See you around !

Friday, November 30, 2018

டிசம்பரும் வந்தாச்சு !

நண்பர்களே,

வணக்கம். இன்றைக்குக் காலையிலையே உங்கள் கூரியர்களின் சகலமும் புறப்பட்டு விட்டன - டிசம்பர் இதழ்களைச் சுமந்த வண்ணம் !! So பன்னிரெண்டாம் மாதம் புலரவிருப்பது - நமது இதழ்களோடு என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! சந்தா B-ன் சார்பாய் ஒரு black & white டெக்ஸ் ; ஒரு விலையிலா கலர் டெக்ஸ் ; சந்தா C கார்டூனின் சார்பில் மதியிலா மந்திரியார் ; மறுபதிப்புச் சந்தா D சார்பில் லக்கி க்ளாசிக்ஸ்-2 & ஜம்போவின் ACTION SPECIAL என்ற கூட்டணி, மேற்படி கூரியர் டப்பியினுள் இடம்பிடித்துள்ளது ! So இந்த வாரயிறுதியை நமது இதழ்களோடு செலவிட நேரம் எடுத்துக் கொள்ள உங்களுக்கு முடியுமாயின் - சூப்பர்  !! Happy Reading !!

ஆன்லைனிலும் லிஸ்டிங் ரெடி : http://lioncomics.in/monthly-p…/564-december-pack-2018-.html

அப்புறம் திண்டுக்கல்லில் தற்போது நடைபெற்றுவரும் புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் : 81 !! அந்தப் பக்கமாயிருப்போர் ஒரு விசிட் அடிக்கலாமே - ப்ளீஸ் ? 

Sunday, November 25, 2018

ஒரு காமிக்ஸ் எழுச்சி !!

நண்பர்களே,

வணக்கம். அதிசயங்கள் ஓய்வதில்லை! போன சனி மாலை ‘டொய்ங்‘ என்ற ஓசையோடு எனது செல்போனில் SMS தகவலொன்று பதிவானது. மறுக்கா ஏதாச்சும் ஜவுளிக்கடையிலிருந்து ஆஃபர் சார்ந்த சேதியாகவோ; அல்லது க்ரெடிட் கார்டின் பாக்கியைக் கட்டாங்காட்டி உன்னையே தூக்கிப் போகவா ? என்ற மாதிரியான நினைவூட்டலாகவோ இருக்குமென்ற நினைப்பில் அசுவாரசியமாய்ப் பார்த்தால் – பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து அவசர அழைப்பு என்றிருந்தது! இது என்னடா புதுக் கூத்து ? என்றபடிக்கே மண்டையைச் சொறிய – திங்கட்கிழமை பதிவுத்தாலில் ஒரு நோட்டீஸும் வந்து சேர்ந்தது. அடித்துப் பிடித்து, செவ்வாய் கிழமை காலை மதுரையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குப் போனால் – செம கூட்டம்! ‘சரி, இன்றைய பொழுது இங்கே தான்!‘ என்றபடிக்கே தேவுடா காக்க, சுமார் 4 மணி நேரக் காத்திருப்புக்குப் பின்பாய் உள்ளே கூப்பிட்டு விட்டார்கள் ! எனக்கோ, இது போன வருடம் நான் இத்தாலியில் சிலபல வில்லங்கப் பாட்டிகளிடம் பறிகொடுத்திருந்த பாஸ்போர்ட் தொடர்பான விசாரணையிது என்பது மட்டும் மேலோட்டமாய்த் தெரிந்திருந்தது. “எவனாச்சும் நம்ம கடவுச்சீட்டைக் கொண்டு போய் ஏதாச்சும் வில்லங்கம் பண்ணித் தொலைச்சு, அது நம்ம சொட்டைத் தலைக்கு ஏழரையைக் கொண்டு வந்திருக்குமோ?” என்றெல்லாம் கலர் கலராய்ப் பீதிப்படலங்கள் தலைக்குள் படையெடுக்க, விசாரணை அதிகாரியானதொரு லேடி போன வருடத்து நிகழ்வுகளைப் பற்றி விசாரித்தார். நானும் சொந்தக்கதை, சோகக்கதையையெல்லாம் கொட்டிய கையோடு – அங்கே மிலன் தூதரகத்தில் வாங்கிய தற்காலிகப் பாஸ்போர்ட்டைக் காட்டினேன். அதையும் வாங்கிப் பரிசீலித்தவர் – ‘உங்க கிட்டே இருக்கிற மொத்த பாஸ்போர்ட்களையும் எடுத்துக்கிட்டு அடுத்த working day-ல் வந்து பாருங்க!‘ என்றபடிக்கு என்னை அனுப்பி விட்டார். 

'இது என்னடா வம்பாக் கீதே?' என்றபடிக்கு ஊர் திரும்பி, பீரோவில் தூங்கிக் கொண்டிருந்த 1985 முதலான பாஸ்போர்ட்களைத் தேடியெடுத்தேன் ! சும்மா கறுகறுவென்ற கேசம் தலைநிறைய ஆக்ரமித்திருந்த 1985-ன் பாஸ்போர்ட்டில் துவங்கி, அடுத்த 30+ ஆண்டுகளுக்குள்ளான பல்வேறு காலாவதியான / காலியாகிப் போன பாஸ்போர்ட்களைப் புரட்டப் புரட்ட – அவற்றிலிருந்த ஃபோட்டோக்கள் வாழ்க்கையின் / வழுக்கையின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றியது போலிருந்தது! பெருமூச்சோடு அவற்றைத் தூக்கிப் பைக்குள் அடுக்கிக் கொண்டு, மறுநாள் மிலாடி நபியாக இருந்ததால் – வியாழன்று மறுபடியும் ‘சலோ மதுரை‘ என்று புறப்பட்டேன். திரும்பவும் அதே ஆபீஸ்; அதே வாட்டம் நிறைந்த பல மாவட்ட மக்கள் நெரிசல்; அதே ஜன்னலோர தேவுடாப் படலம் என்று எனது திருமணநாள்ப் பொழுது ரம்யமாய்த் துவங்கியது!! இம்முறை சித்தே முன்ஜாக்கிரதையாய் கையிலொரு முரட்டு காமிக்ஸ் தொகுப்பை எடுத்துச் சென்றிருக்க – நேரம் மெதுமெதுவாய் ஓடிடத் தொடங்கியது ! மதியம் வரைக்கும் என்னைக் கூப்பிடக் காணோம் ; கையிலிருந்த புக்குமே ஒருவித மொக்கையாகத் தொடர – தூக்கம் தான் கண்ணைச் சுழற்றியது! செல்போனையும் உள்ளே பயன்படுத்தக் கூடாதென்பதால், நெட்டை உருட்டவும் வழியின்றிப் போக, ஏதோ தகவல் தொடர்புகளற்ற கஜா தாக்கிய பூமியில் இருப்பது போல்ப்பட்டது ! மதியம் பக்கத்திலிருந்த ஹோட்டலில் வரட்டி போலிருந்த 2 சப்பாத்திகளை உள்ளே தள்ளிய கையோடு மறுக்கா காத்திருப்பைத் தொடர, என்னோடு குந்தியிருந்த ஒவ்வொருவராய் வேலை முடிந்து கிளம்பத் துவங்கினர். நாலரை மணிவாக்கில் பார்த்தால் அங்கே எஞ்சியிருந்தது நான் மாத்திரமே ! ‘கிழிஞ்சது போ…. இன்று போய் நாளை வா!‘ என்றாகிடுமோ என்ற பீதியுடன் நான் திருட்டு முழி முழித்து நிற்க,ஒரு மாதிரியாக என்னை உள்ளே அழைத்தார்கள் ! சிறுகச் சிறுக அதே அதிகாரி விளக்கிய பின்னே தான் புரிந்தது சேதி : ஒன்றரையாண்டுகளுக்குப் பிற்பாடு, இத்தாலிய போலீஸார் வேறு ஏதோ திருட்டுக்களைப் புலனாய்வு செய்த சமயம், அதே வில்லங்க பாட்டிமார்கள் வசமாய் அகப்பட்டிருக்கின்றனர் போலும். அவர்களது வீட்டைச் சோதனை போட்ட போது, எனது பாஸ்போர்ட்(கள்) உட்பட ஏகப்பட்ட தேட்டை சிக்கியுள்ளது! (Of course – என்னிடம் லவட்டிய பணத்தை பாட்டிமாக்கள் அன்றைக்கே ஸ்வாஹா பண்ணியிருப்பார்கள் என்பதால் அது கிடைத்திருக்க வாய்ப்பில்லை தான்!) So பாஸ்போர்ட்களை இத்தாலிய போலீஸார் முறைப்படி அங்குள்ள தூதரகங்களில் ஒப்படைக்க, அவர்களும் இங்கே மதுரைக்கு forward செய்துள்ளனர். ஆக லவட்டப்பட்டவற்றை உரிய விசாரணைக்குப் பின்பாய் திரும்ப ஒப்படைக்கவே என்னைக் கூப்பிட்டுவிட்டிருப்பது புரிந்தது ! மாலை ஐந்து மணி சுமாருக்கு ‘ஈஈஈஈ‘ என்ற இளிப்போடு புறப்பட்டவனுக்கு இத்தாலியின் போலீஸார் மீது எக்கச்கக்க மரியாதை துளிர்விட்டிருந்தது! என்னயிருந்தாலும் நமது ரேஞ்சரின் தேசமல்லவா? அங்கே சட்ட பரிபாலனம் நிச்சயமாய் நம்மவர் போட்டுக் காட்டியிருக்கும் கோடுகளை ஒட்டியே இருந்திடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன் ! So வாரத்தின் 2 தினங்களை மதுரையில் ஒரு அரசுத்துறையின் சேரைத் தேய்ப்பதிலேயே செலவிட்டு விட்ட கவலை ஒருபக்கமிருப்பினும், பாட்டிமாக்களிடமிருந்து மீண்ட பாஸ்போர்ட்கள் மகிழச் செய்தன ! Viva Italia !!!

Moving on கடந்த ஒரு வாரமும் காலத்தில் பின்நோக்கியதொரு பயணம் செய்த மாதிரியான உணர்வைக் கொணர்ந்தது - இம்முறையோ - இங்கிலாந்தின் புண்ணியத்தினில் ! குறிப்பாய்ச் சொல்வதானால் உபயம் : The Action Special!! இன்றைக்கு பிரான்கோ-பெல்ஜியம்; பஜ்ஜியும்-சொஜ்ஜியும் என்று எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரிந்தாலுமே – நமது முத்து காமிக்ஸிற்கும் சரி; லயனிற்கும் சரி - துவக்கப் புள்ளியானது பிரிட்டனின் காமிக்ஸ்களில் தானே ? ஆரம்ப நாட்களது நமது அத்தனை ஆரவார ஹிட்களுமே Fleetway குழுமத்தின் பலரகப்பட்ட கதைகளின் தமிழாக்கங்கள் தான் என்பதில் ஏது இரகசியம் ?

- இரும்புக்கை மாயாவி

- CID லாரன்ஸ் டேவிட்

- ஜானி நீரோ

- ஸ்பைடர்

- இரும்பு மனிதன் ஆர்ச்சி

- இரட்டை வேட்டையர்

- இரும்புக்கை நார்மன்

- ஜான் மாஸ்டர்

- செக்ஸ்டன் ப்ளேக்

- விச்சு & கிச்சு

- ஜோக்கர்

- ஒற்றைக் கண் ஜாக்

- மர்ம மண்டலம்

- Mr. Z

- ஸ்பைடர் குள்ளன்

-குண்டன் பில்லி 

- அதிரடிப் படை

- பெருச்சாளிப் பட்டாளம்

etc... etc...

என்று அவர்களது கதைக்களஞ்சியங்களிலிருந்து நாம் சேகரித்து ரசித்துள்ள தொடர்களுக்குத் தான் எத்தனை ரம்யம் ! ஆனால் மெதுமெதுவாய் நமது வயதுகளும், ரசனைகளும் கூடிப் போக – சிறுகச் சிறுக இத்தாலிய சாகஸங்கள் + ப்ரான்கோ-பெல்ஜியப் படைப்புகள் நமது செல்லப்பிள்ளைகளாகத் தொடங்கினார்கள்! And அதன் பின்விளைவாய் பிரிட்டனின் நேர்கோட்டுக் கதைகளெல்லாமே – ஏதோவொரு தூரத்து நாளின் ஞாபகங்களாய் மாத்திரமே நமக்கு உருமாறிடத் தொடங்கி விட்டன ! 

And கொடுமையோ -- கொடுமை : இங்கிலாந்தின் காமிக்ஸ் மார்க்கெட்டும் கழுத்தை தேய்ந்து கட்டெறும்பாய் இழைத்துப் போயிருந்தது ! முன்பெல்லாம் - இங்கிலாந்துக்கு வேறு பணிகளின் நிமித்தம் போனாலும், அங்குள்ள அங்காடிகளில்  ; புத்தகக் கடைகளில் குவிந்து கிடக்கும் காமிக்ஸ் இதழ்களை பராக்குப் பார்ப்பது அத்தனை ரம்யமான அனுபவமாய் இருப்பதுண்டு ! ஆனால் அங்கும் (காமிக்ஸ்) வாசிப்பின் மீதான ஈர்ப்பு சரியத் துவங்கிட, எக்கச்சக்கமான இதழ்கள் மூட்டை கட்டப்பட்டன ! So பரிதாபமாய்க் காட்சி தந்து வந்தது பிரிட்டிஷ் காமிக்ஸ் சந்தையானது ! இந்த நிலையில் தான் இங்கிலாந்தின் முன்னணிப் பதிப்பகமான Rebellion Publishing, காணாமலே போகத் துவங்கியிருந்த 1960s...’70s' & 80s' களின் Fleetway கதைகளை / தொடர்களை தம் தேசத்துப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியாகவும் ; பெருசுகளின் nostalgia மோகத்துக்குத் தீனி போடும் விதமாகவும் கையில் எடுத்திருந்தனர் – வெகு சமீபமாய்! Fleetway குழுமத்தினை வெவ்வேறு பதிப்புலக ஜாம்பவான்கள் வாங்கி / விற்று / கைமாற்றியிருக்க –இறுதியாய் சிலபல முக்கிய தொடர்களின் உரிமைகள் Rebellion வசம் வந்து சேர்த்துவிட்டன ! Black & White ஆல்பங்களாகவே இந்த மறுபதிப்புத் தொகுப்புகளை அவர்கள் திட்டமிட்டிருந்தாலும் – இயன்றமட்டுக்கு சித்திரங்களைத் துல்லியமான, மெருகுடன் வழங்கிட வேண்டுமென்ற உத்வேகத்தில் ரொம்பவே மெனக்கெட்டிருந்தனர் ! So 

இது தொடர்பான செய்திகள் காதில் விழுந்த பிற்பாடு, இருப்புக் கொள்ளவில்லை எனக்கு ! எங்கெங்கோ நாம் சுற்றித் திரிந்தாலும், நமது நதிமூலம் பிரிட்டனே எனும் போது, Rebellion நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளத் துவங்கினேன் - அவர்களது மறுவருகைக்கு ஒரு சலாம் போடும் விதமாய் !  அதைத் தொடர்ந்து சென்றாண்டு இலண்டனில் நடந்த புத்தக விழாவின் போது அவர்களை சந்தித்தது ரொம்பவே அற்புதமானதொரு அனுபவம் ! இந்த Fleetway மறுபதிப்புப் பணிகளை முன்நின்று கவனித்து வரும் நிர்வாகியும் – நம்மைப் போலவே அந்நாட்களில் ஸ்பைடரையும், ஆர்ச்சியையும், அதிரடிப்படையையும் படித்து, ரசித்து, வளர்ந்து வந்ததொரு அதிதீவிர காமிக்ஸ் காதலர்  போலும் ! ஒரு அரைமணி நேரத்துக்கு அவரோடு பேசியது – ஒரு முன்னணிப் பதிப்பகத்தின் டாப் நிர்வாகியோடு உரையாடிய உணர்வைத் துளியும் தந்திடவில்லை ; மாறாக – நாடி நரம்பெல்லாம் பிரிட்டிஷ் காமிக்ஸ் மீதான காதலோடு வாழ்ந்து வரும் ஒரு ஜாம்பவானுடன் ஜாலியாகப் பொழுதைக் கழித்த சந்தோஷமே மேலோங்கியது ! நாம் அந்நாட்களில் வெளியிட்டிருந்த Fleetway தொடர்களைப் பற்றி நானும் அள்ளி விட, ‘அட... இத்தனை பிரிட்டிஷ் படைப்புகள் உங்கள் மண்ணில் உலவியுள்ளனரா ?‘ என்று விழிகள் விரியக் கேட்டு வைத்தார் ! அந்தச் சந்திப்பின் நீட்சியாய், நமது துவக்கப் புள்ளிகளுக்கு சிறிதேனும் மரியாதை செய்திடும் விதமாய் ஒரு Fleetway ஸ்பெஷல் இதழைத் தயார் செய்திட வேண்டுமென்ற உத்வேகம் எனக்குள் ! எந்தவொரு template-ம் அல்லாத ஜம்போ காமிக்ஸ் தான் இதற்கு வாகான களமென்று தீர்மானித்தவனாக “The Action Special”-ஐத் திட்டமிட்டேன்!

அவர்களது மறுபதிப்புகளுள் முதலாவதாய் அமைந்திருந்த “ஒற்றைக்கண் ஜாக்” நமது மினி லயனிலும் ஏற்கனவே நமக்கு அறிமுகமான தொடரே என்பதால் வேகமாய் ‘டிக்‘ அடித்தேன்! அவர்களோ ஒரு 128 பக்க நீள இதழினை இந்த முரட்டு NYPD காவலருக்கென ஒதுக்கியிருந்தனர் ! ஆனால் நமக்கோ கொஞ்சம் புளியோதரை; கொஞ்சம் லெமன் ரைஸ்; கொஞ்சம் தயிர் சாதம் என்று கலந்து கட்டியடிக்கப் பிடிக்குமென்பதால் – “எச்யூஸ் மீ... ஒரு கூட்டணி இதழாய் அமைத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா?” என்று கேட்டு வைத்தேன் ! துளியும் தயக்கமின்றி – ”ஓ... யெஸ்! கதைத் தேர்வுகளைச் செய்து விட்டுச் சொல்லுங்கள் !” என்று பதில் போட்டார்கள்! அப்போது தான் அவர்களது அடுத்த புராஜக்டின் அறிவிப்பும் வெளியாகியிருந்தது! 

The Thirteenth Floor” என்ற பெயரில் ஒரிஜினலாய் வெளியான கதைகளை நாம் “மர்ம மண்டலம்” என்ற பெயரில் முயற்சித்திருந்தோம் – திகில் காமிக்ஸில் ! அந்தத் தொடரும் பிரிட்டனில் மறுபதிப்பாகிடவுள்ள சேதி தெரிந்தவுடன் – அதனையே நமது இதழின் கதைத்தேர்வு # 2 ஆக்கினேன்! உங்களில் எத்தனை பேருக்கு அந்தத் தொடர் நினைவுள்ளதோ - தெரியலை; ஆனால் செம புதிரான concept & கதைக்களம் என்பது அதனைப் படித்திருப்போர் அத்தனை பேருமே அறிவர் ! எனக்கும் அந்தத் தொடர் ஒரு personal favorite என்பதால் ‘சட்‘டென்று டிக் # 2 போட்டு வைத்தேன்! நாம் அதைத் தேர்வு செய்திருந்த வேளையில், இங்கிலாந்தில் அந்த இதழ் வெளியாகிட நிறையவே அவகாசமிருந்தது. பொதுவாய் இது மாதிரியான சூழல்களில், அங்கே இதழ் வெளியான பிற்பாடே டிஜிட்டல் கோப்புகளை நம்மோடு பகிர்ந்திடுவர் ! ஆனால் நாம் Fleetway சமுத்திரத்தில் காலமாய் மூழ்கிய முட்டைக்கண்ணர்கள் என்பதால் – இந்தத் தொகுப்புகளின் file-கள் சகலத்தையும் முன்கூட்டியே அனுப்புவதில் துளியும் தயக்கம் காட்டிடவில்லை ! 

M.A.C.H. 1” என்ற ஒரிஜினல் பெயருடன் அவர்களது மறுபதிப்பின் இன்னுமொரு திட்டமிடல் என் கண்ணில்பட, அதுவுமே நாம் மினி லயனில் வெளியிட்ட சாகஸம் என்று நினைவுக்கு வந்தது! “விடாதே... அதையும் அமுக்கு!!” என்று தயாரானேன்! So 3 வெவ்வேறு பாணிகளிலான தொடர்கள் என்ற combo தயாராய்பட்டது ! சன்னமாய் கார்ட்டூனும் இருந்தால் படிக்க சற்றே இலகுவாய் இருக்குமென்று தோன்றிட – “பலமுக மன்னன்” என்ற பெயரில் தமிழில் வெளிவந்த FACEACHE தொடரானதும் Rebellion-ன் மறுபதிப்புத் திட்டமிடலில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள்! அப்புறமென்ன – “ரப்பர் மண்டையன் ரிக்கி” என்ற பெயர்சூட்டலோடு இந்தப் பொடியனையும் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டேன்! Thus concluded the திட்டமிடல் for The Action Special!

இந்தச் சமாச்சாரங்களெல்லாம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாகவே அரங்கேறியிருக்க, கதைகள் சகலமுமே அப்போதே கைக்கு வந்து,   மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டு பீரோவினுள் கிடந்தன ! அடுத்தடுத்த இதழ்கள்; பணிகள் என்ற ஓட்டத்தில் சுத்தமாய் ஞாபகத்திலிருந்து Action ஸ்பெஷல் விலகியிருந்தது – போன மாதம் வரையிலும் ! அட்டைப்படத்தை உருவாக்கிடும் நேரம் வந்த போது தான் உதைக்கத் துவங்கியது ! பெரும்பாலும் Fleetway-ன் வாராந்திர காமிக்ஸ் பக்கங்களின் தொகுப்புகளை ஒன்றிணைத்து இதழாக்கிடும் போது ஒரிஜினல் அட்டைப்படம் என்று எதுவுமேயிருப்பதில்லை ! So அவை சகலத்துக்குமே நமது ஓவியர் தான் அந்நாட்களில் அட்டைப்பட டிசைன் போட்டிருப்பார் ! ஆனால் இப்போதோ – ஏவோவொரு கோவிலில் சாமி சித்திரங்கள் வரையும் கான்டிராக்டில் நமது ஓவியர் சில மாதங்களாக பிசியாகயிருக்க – என்ன செய்வதென்ற ரோசனையில் மூழ்கினேன். Rebellion பயன்படுத்திய அட்டைப்பட டிசைன் நமக்கு அத்தனை சுகப்படாது என்பதை ஒரே நொடியில் அனுமானிக்க முடிந்ததால் – அதன் நிழலில் தஞ்சமடைய சாத்தியப்படவில்லை ! அப்புறமாய் அதன் நடுநாயகமாயிருந்த ஒற்றைக்கண் ஜாக்கை மட்டும் லவட்டிக் கொண்டு, பின்னணிகளை இங்கும், அங்குமாய்த் தேற்றிட முற்பட்டோம் ! இறுதியில் தயாரான டிசைன் – நொடியில் Rebellion-ன் சம்மதத்தை ஈட்டியது! இதோ பாருங்களேன்!

 தொடர்வன – உட்பக்கங்களது preview-களும்!




இவற்றினுள் எடிட்டிங்கின் பொருட்டு உட்புகுந்த வேளையில் தான் ஏகமாய் nostalgia ! ஆங்கிலத்திலேயே கதைகள் இருப்பதால், புரிந்து கொள்ளல் சுலபமாகிடல்; சந்து-பொந்து; இண்டு-இடுக்கு என்றெல்லாம் சுற்றிடாது நேர் கோடாய்ப் பயணிக்கும் கதைகள்; பார்த்து, பரிச்சயப்பட்ட சித்திர பாணிகள் என்று ஏகப்பட்ட plus points இங்கே கண்ணில் பட்டன ! இந்த black & white கதைகளை, ஜாலியாய் நியூஸ்பிரிண்ட்டில் வெளியிட்டு,  நெஞ்சை நிமிர்த்தித் திரிந்த நாட்களை எண்ணி ஒரு ஏக்கப் பெருமூச்சை உதிர்த்தேன்! நமது வயதுகளும் சரி, ரசனைகளும் சரி இன்றைய அளவுகளை எட்டியிரா சமயங்களில் தான் வாழ்க்கை எத்தனை சுலபமாயிருந்தது?! பெருமூச்சோடே உலாவிய நொடியில் லேசாய் சில கேள்விகளும் எட்டிப் பார்க்கத் துவங்கின!

- 1. இன்றைய சூழலில் அந்நாட்களது பிரிட்டிஷ் காமிக்ஸ் தொடர்கள் / பாணிகள் ஈர்ப்பைத் தக்க வைக்குமென்று எதிர்பார்த்திடல் practical தானா ? மாயாவி; இஷ்பைடர் போன்ற மறு-மறு பதிப்புகளைப் பற்றிய கேள்வியல்ல அது ! மாறாக – நாம் அதிகம் துவைத்துத் தொங்கப் போட்டிரா second-line பிரிட்டிஷ் நாயகர்களைச் சார்ந்த வினா இது! What would be your general thoughts folks?

- 2. The Action Special உங்கள் கைகளை எட்டியான பின்னே, அதனைப் போலவேயொரு combo இதழை ஆண்டுக்கொரு தபா திட்டமிடலாமா ? Maybe – இதே நாயகக் கூட்டணியென்றில்லாது – வேறு சிலவற்றோடு ?

- 3. பிரான்கோ – பெல்ஜியப் படைப்புகள்; இத்தாலிய கிராபிக் நாவல்கள் என்று ஏதேதோ ஆறுவழிச் சாலைகளில் பயணித்துப் பழகியான பின்னே, இந்தப் பிரிட்டிஷ் பாணிகளை எவ்விதம் ஒப்பிடுவீர்களோ? என்றதொரு curiosity என்னுள் ! How would this style of story-telling rank in comparison?

இக்கேள்விகளைக் கேட்க காரணங்கள் இல்லாதில்லை folks! இங்கிலாந்தில் இந்த மறுவருகைக்கு செமையான வரவேற்பு கிட்டி வருவதால் – Fleetway-ன் offbeat கதைகளை / தொடர்களைத் தோண்டிப் பிடித்து, மெருகூட்டிப் பதிப்பிட்டு வருகிறார்கள் ! மேற்கொண்டும் எக்கச்சக்க காமிக்ஸ் பக்கங்களுக்கான உரிமைகளை Rebellion வெகு சமீபமாயும் கொள்முதல் செய்துள்ளது ! Misty என்ற திகில் வாரயிதழின் கதைகள் சில; Valiant-ல் வெளியான தொடர்களின் தொகுப்புகள் ; Scream ; Jinty ; Roy of the Rovers என்று ஏராளமான ஆல்பங்களைக் குவித்து விட்டனர். So நமக்குமே இவற்றின் மீது ஆர்வம் துளிர்விட வாய்ப்பிருப்பின் – தொடரும் ஆண்டுகளின் திட்டமிடலில் அவற்றை இணைத்துக் கொள்ள இயலும் தான் ! இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் guys ? இவற்றையெல்லாம் நாம் தாண்டித் தட தடத்து விட்டோமா ? அல்லது - இவற்றுள் மூழ்கிடும் ஆற்றல் இன்னமும் நம்மிடம் உள்ளதென்பீர்களா ? 

பாருங்களேன் - கொட்டிக் கிடக்கும் பிரிட்டிஷ் காமிக்சின் இரண்டாம் வருகையின் பிரதிநிதிகளை !! 











Rebellion முன்னெடுத்திருக்கும் இந்த அதகள முயற்சி, பிரிட்டிஷ் காமிக்ஸ் வாசகர்களை செமத்தியாய்க் குதூகலிக்கச் செய்துள்ளது !  என்றோ ஒரு தூரத்துப் பழம்நாளில் படித்த கதைகளையெல்லாம் தற்சமயம் செம தரத்தில், மறுக்கா தரிசிப்பதை பெருசுகள் ரவுண்ட் கட்டிச் சிலாகிக்க ; சூப்பரஹீரோக்களையே ரசித்து வந்த இளசுகளுமே இந்த black & white ஜாலி கதைகளை ரசித்து வருகின்றனர் !! நாமும் இந்தப் புரட்சியில் ஒரு சிறு அங்கமாகிடல் சுகப்படுமா ? Would love to hear your thoughts !!

Before I sign out - சில ஜாலியான updates :

  1. நமது பிரார்த்தனைகளின் பலனோ ; அவரது ஆண்டவரின் கருணையோ - அல்லது இரண்டின் கலவையோ - தெரியாது ; ஆனால் நமது இத்தாலிய ஓவியர் இப்போது நலமாயுள்ளார் ! ஏகப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்பாய் அவருக்கு சிறுநீரகத்தினில் நேர்ந்துள்ள பாதிப்பு - புற்று நோயல்ல என்று கண்டுள்ளனர் ! So முறையான வைத்தியங்கள் செய்து இப்போது நலமாகி, மீண்டும் நமக்காக படம் போடத் துவங்கி விட்டார் !! 2019-ல் அவரை நாம் அடிக்கடி சந்திக்கவிருக்கிறோம் !! 
  2. திண்டுக்கல் நகரில் இம்மாத இறுதியில் புத்தக விழா துவங்குகிறது ! இம்முறை நாமும் அங்கே பங்கேற்கிறோம் ! நமது ஸ்டால் நம்பர் 81 ! இங்கு நமக்கு இதுவொரு புது அனுபவமே என்பதால் - என்ன எதிர்பார்ப்பது என்ற யூகங்களின்றிப் பயணிக்கிறோம் ! Fingers crossed !!
  3. டிசம்பரில் இறுதியில் கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள புத்தக விழாவிலும் பங்கேற்க எண்ணியுள்ளோம் ! Again - புதுக் களம் நமக்கு !! 
  4. அச்சிட்டதே குறைவான பிரதிகளே என்றாலும், அதன் இரண்டாம் தொகுப்பு வெளியாவதற்கு முன்பாகவே - ஜெரெமியா முதல் இதழ் விற்றுத் தீர்ந்து விட்டது !! Phew !!! 
  5. And "மின்னும் மரணம்" கூட ஒரு மாதிரியாய் 20-க்குக் குறைவான கையிருப்பை எட்டி விட்டது !! So கங்காரூ குட்டியைத் தூக்கித் திரிவது போல இனி தொடரும் புத்தக விழாக்களுக்கு "மி.ம" பிரதிகளைத் தூக்கித் திரிய அவசியப்படாது !! Phewwwwww !!
  6. எங்களது திருமண நாளினில் வாழ்த்துச் சொல்லிய நண்பர்கள் அனைவருக்கும் belated நன்றிகள் ! அன்றைய பொழுது முழுவதும் சேர்தேய்ப்புப் படலத்தில் ஓடிவிட்டிருக்க, இங்கே எட்டிக்கூடப் பார்த்திட இயலவில்லை !! Thanks guys !! 
  7. சந்தாப் புதுப்பித்தல்கள் இப்போது தான் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது ! நேற்றைக்கு மாத்திரமே 20 + சந்தாக்கள் !!! Thanks a ton folks !! இதே வேகம் தொடர்ந்திட்டால் அற்புதமாக இருக்கும் !! மனசு வையுங்கள் ப்ளீஸ் ! 
Bye for now !! See you around !! Have a lovely Sunday !