Thursday, August 30, 2018

ஒல்லிகளின் மாதமிது !!

நண்பர்களே,

வணக்கம். 'ஆகஸ்டில் செப்டெம்பர்" என்று அதே மொக்கையான தலைப்பை இந்தப் பதிவுக்கும் இட மனதில்லை ; so இன்றைக்கு பகலில் உங்களது கூரியர்கள் சகலமும் கிளம்பிவிட்ட போதிலும் - தலைப்பை மட்டும் வேறு விதமாக்கியுள்ளேன் !! So 31 காலையில் கூரியர் ஆபீஸ் படையெடுப்பை நீங்கள் துவக்கிடலாம் - சற்றே ஒல்லிப்பிச்சானான டப்பாக்களை சேகரித்துக் கொள்ள !! 'தல' வண்ண மறுபதிப்பு நீங்கலாய் பாக்கி இதழ்கள்  எல்லாமே 50 ; 64 பக்கங்கள் என்றிருப்பதால் இம்முறை loads of breezy reads என்பேன் !! "இரத்தப் படலம்" எனும் பகாசுரனுக்கும் ; "டைனமைட் ஸ்பெஷல்" எனும் பயில்வானுக்கும் மத்தியில் இந்த lightweights எனக்குக் கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்ள அவகாசம் தருகிறார்கள் என்பதால் - இம்மாத இதழ்களை வாஞ்சையோடு பார்க்கின்றேன் !! நீங்களுமே இவர்களை குஷியாய் வரவேற்று ஏற்றுக் கொள்ளின் - சூப்பர் தான் !! 

And இதோ - ஜம்போ சந்தாதாரர்கள் பட்டியல் ! இன்னமும் ஜம்போவின் சந்தாக்கள் open என்பதால்  இதுவரையிலும் அந்தத் தடத்தில் பயணிக்க உத்தேசித்திரா நண்பர்கள் இந்தத் தருணத்தில் கூட ஜோதியில் ஐக்கியமாகிடலாம் !!  ஓரிரு நண்பர்கள் முகவரி தராது இன்னமும் உள்ளனர் என்பதால் அவர்களுக்கு புக் அனுப்பிட இயலவில்லை ! தவிர விடுதல்கள் ஏதேனும் இருப்பின், அதையும் சுட்டிக் காட்டிடுங்களேன் ப்ளீஸ் ! 


செப்டெம்பர் இதழ்கள் பற்றிய உங்களது அலசல்களை எப்போதும் போலவே ஆவலோடு எதிர்நோக்கியிருப்போம் !! Happy Reading folks !!!

பி.கு. நாளை முதல் மதுரைப் புத்தக விழாவும் துவங்குகிறது !! 

Saturday, August 25, 2018

Life after இ.ப....& Life before டை.ஸ்பெ..!

நண்பர்களே,

வணக்கம். சில தருணங்களில், இதர பணிகளின் தீவிரத்திலோ ; அல்லது ஏதேனும் சொந்த ஜோலிகளின் மும்முரத்திலோ, காமிக்ஸ் பக்கமாய் ஒரு நாலைந்து நாட்களுக்குத் தலையே வைக்க நேரமின்றிப் போய் விடுவதுண்டு ! ஆனால் வாரயிறுதி .......  பதிவிற்கெனத் தயாராக வேண்டிய சமயம்  - என்று புலர்ந்திடும் வேளையில், திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப்  போல மலங்க மலங்க விழித்துக் கொண்டே தான் கம்பியூட்டரின் முன்னே அமர வேண்டி வரும் ! இடைப்பட்ட நாட்கள் நாலோ-ஐந்தோ தான் என்றாலும், ஏதோ ஒரு யுகத்து இடைவெளி விழுந்துள்ள உணர்வு தலைதூக்கிட  - பின்னூட்டங்களை பயபக்தியோடு படித்து வைப்பேன் - புதுசாய் பதிவுக்கு மாவு பினையத்  துவங்கும் முன்பாக !! இந்த வாரமும் நிலவரம் அதுவே !! "இரத்தப் படலம்"....TEX கலர் தொகுப்பு ; கூப்பிடு தொலைவிலிருக்கும் செப்டெம்பர் இதழ்கள் என சகலமும் தற்காலிகமாய் மண்டையின் பின்சீட்டுக்குச் சென்றிருக்க - இப்போது தான் மறுபடியும் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்திற்கு மாற்றம் செய்து வருகிறேன் !! வழக்கம் போல பாப்பநாயக்கன்பட்டியில் ஆரம்பித்து - U-டர்ன் அடித்து பிலடெல்பியாவுக்கு வண்டியைத் திருப்புவதற்குப் பதிலாய் இம்முறை - காத்திருக்கும் புது இதழ்களின் preview படலத்தினுள் புகுந்து விடுகிறேனே?!  

"இரத்தப் படலம்" !!! ஒற்றை மாதம் முழுசுக்கும்  தனது மெகா துண்டை விரித்து வைத்திருக்க - தொடரும் மாதத்தின் நார்மலான இதழ்களின் பணிகளுக்குள் புகுவது ஒரு தினுசான அனுபவமாகவே இருக்கிறது !! Maybe in some ways - இது போன்ற "பெரும் எதிர்பார்ப்பு" இதழ்கள் நம்மிடமிருந்து அவசியத்துக்கும் அதிகமாகவே சக்தியை உறிஞ்சிடுகின்றனவோ - என்னவோ  - எஞ்சி  நிற்கும் இதழ்களை அணுகும் போதே ஒருவிதமான flat feeling தான் மேலோங்குகிறது !! பற்றாக்குறைக்கு அடுத்த மாதமே அடுத்த 'பீம்பாய்' இதழ் - டைனமைட் ஸ்பெஷல் ரூபத்தில் காத்திருக்க - ரெகுலர் இதழ்களையெல்லாம் பார்த்து  - ''தம்பி....அப்டி ஓரமாய் போயி விளையாடுங்கப்பா !!" என்று சொல்லவே தோன்றுகிறது !! Of course - ஒவ்வொரு இதழும் நமக்கொரு புதுத் துவக்கம் ; புதுச் சவால் தான் எனும் போது - ஒவ்வொரு பிள்ளையார் சுழியிலும் - நமது பாட்டெரிகள் முழு சார்ஜில் இருந்திடல் அவசியமென்று எண்ணுபவன் நான் !! ஆனால் இருக்கும் மின்சாரத்தை முழுசும், இந்த 2 மெகா இதழ்களே  உறிஞ்சிய பின்பாய் - அரை பாய்ண்ட்டில் மட்டுமே சார்ஜ் இருப்பது போலவே தோன்றுகிறது !! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும்  ஏற்படுத்திடும் எதிர்பார்ப்புகளின் பலனிது என்பது புரிகிறது !!

இந்தப் பின்னணியே - இம்முறை ஈரோட்டில் நான் பிடிவாதமாய் பெவிகால் பெரியசாமியாய் வலம் வந்ததன் காரணம் !! "குண்டு புக் ; மெகா புக் ; அத்திரி பாட்சா ஸ்பெஷல் ; குப்புற பல்டி ஸ்பெஷல் " என்று மறுக்கா கால்களை அ-க-ல-மா-ய் விரித்துக் கொண்டு, அப்புறமாய்த் திரு-திருவென்று முழிக்க வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை தான் இம்முறை வீட்டிலிருந்து நான் பேக் செய்திருந்த முதல் வஸ்து ! ஒற்றை மாத இடைவெளியில் டைனமைட்....அதன் மறு மாதம் 2019-ன் அட்டவணை என மேற்கொண்டும் இரு முரட்டுக் குதிரைகள் காத்து நிற்க - அவற்றை சவாரி செய்திடும் முன்பாய் அடுத்த பயணம் பற்றி யோசிப்பானேன் ? என்று அந்தத் தருணத்தில் பட்டது !! ஆனால் தட்டுத் தடுமாறி - "டைனமைட்" பணிகள் + அக்டொபரின் ரெகுலர் பணிகள் என தொடரும் வாரத்தினில் என்னளவுக்கு முடித்து விட்டேனென்றால் - ஒரு சிகப்பு கோட்டைப் போட்டுக் கொண்டு, தம்மாத்துண்டு பிரீஃப் கேஸையும் தூக்கிக் கொண்டு - "புதிய வானம்-----வா-ன-ம்ம்ம்ம்......புதிய பூமி..." என்று கிளம்பிடுவேன் !! So அதற்கு முன்பாய் here come the september previews :

ஜம்போவின் புக் # 2 தான் - இம்மாதத்தின் கார்ட்டூன் கோட்டாவின் பிரதிநிதி !! And துவக்கத்திலேயே நினைவூட்டி விடுகிறேன் guys - இது லயன் - முத்து ரெகுலர் சந்தாவின் அங்கமே அல்ல !! So ஜம்போவுக்கு சந்தா செலுத்தியிருந்தால் மாத்திரமே - இம்மாதத்து கூரியரில் இந்த இதழ் இடம்பிடித்திடும் !! விளம்பரங்களை மட்டுமே பார்த்து விட்டு - "எனக்கு எப்படி அந்த புக் அனுப்பாமப் போச்சு ?" என்று நெற்றிக்கண் திறந்திடல் வேண்டாமே - ப்ளீஸ் !! And ஜம்போவுக்கு சந்தா செலுத்திய போதே - "இது வேண்டாமே" என்று opt செய்திருந்தோருக்கு இந்த இதழ் அனுப்பிடப்படாது !! ஷப்பா....மூச்சு வாங்குது சாமி !! 

ஹெர்லக் ஷோம்ஸ் : ஒரு 90 வயதுப் பிதாமகரின் படைப்பே இந்த உட்டாலக்கடி டிடெக்டிவ் !! இவர் நமக்குப் புதியவர் அல்லர் ; லயனில் ; மினிலயனில் - '90s களில் இவரைச் சந்திக்க நமக்கு சொற்பமாய் வாய்ப்புகள் கிட்டியுள்ளன ! So ஒரு 20 + ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பாய் தலை காட்டும் ஆசாமியை நமது சமீபத்தைய வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் கம்மி !  இருப்பினும், அமர கதாப்பாத்திரமான ஷெர்லாக் ஹோல்ம்ஸின் பகடியே இந்த நாயகர் என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லையே !! ஹெர்லக் & அவரது தோஸ்தான டாக்டர் வேஸ்ட்சன்(all good doctors மன்னிச்சூ !!) மர்மங்களைத் துப்புத் துலக்கும் பாணிகள் அலாதி ! நொடியில் ஏதேதோ வேஷங்களைப் போடும் ஆற்றல் ; தப்பான இடத்தில் சரியான வேளையில் இருக்கும் ஆற்றல் என்று இவர்களுக்குக் கைவந்த கலைகள் ஏராளம் ! கொஞ்சம் அட்வென்ச்சர் ; கொஞ்சம் சிரிப்பு ; கொஞ்சம் பகடி - என்ற கலவையே "ஒரு குரங்கு சேட்டை / வேட்டை " ! பக்கத்துக்குப் பக்கம் ; பிரேமுக்கு பிரேம் சிரிப்பு என்றெல்லாம் எதிர்பார்த்திடாது - ஒரு ஜாலியான மூடில் இந்த ஆல்பத்தைக் கையில் எடுத்தால் - நிச்சயம் ஏமாற்றமிராது என்பேன் ! And வீட்டிலுள்ள 10 வயது & thereabouts குழந்தைகளுக்குக் கதைசொல்லவும் இந்த இதழ் செமையாக அமைந்திடும் என்பேன் ! இதோ அதன் அட்டைப்படம் : 
ஒரிஜினல் டிசைன் ; லேசாய் நாம் கூட்டல்கள், கழித்தல்கள் செய்து வழங்கியுள்ளோம்  !! வழக்கமான அடர் வர்ணங்களின்றி, இம்முறை வெள்ளை & மஞ்சள் combo !! And கதையின் தலைப்பின் எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணமே !! தொடர்வது உட்பக்கத்து preview : தெளிவான சித்திர பாணி ; கண்ணை உறுத்தா வர்ண சேர்க்கை - என பார்த்தவுடன் ரசிக்க இங்கே சமாச்சாரங்கள் உள்ளன ! அச்சிலும் அழகாய் அமைந்திருக்க - this looks a cool album !! சீக்கிரமே உங்கள் கைகளில் !! 
வண்ணத்திலிருந்து ஒரே தாவாய் black & white பக்கமாய் பயணித்தால் - இளவரசியின் சோலோ சாகசம் காத்துள்ளது !! "ஒரு விடுமுறை வில்லங்கம்" என்பதே இந்த ஆல்பத்தின் டைட்டில் ! ஒரிஜினலாக C.I.D ராபின் சகிதம் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்று வந்திருக்க வேண்டிய கதையிது ! ஆனால் அடுத்த 4 மாதங்களை நகற்றிட போதுமான எண்ணிக்கையில் இதழ்கள் மீதமில்லை என்பதால் - ராபினைத் தனியாகவும், மாடஸ்டியைத் தனியாகவும் களமிறக்க வேண்டிப் போயுள்ளது !! So "சிங்கம் சிங்கிளாத் தான் வரும் !!" போன்ற தமிழர்களின் எவெரெடி,காவிய வரிகளை இப்போதைக்கு வரவழைத்துக் கொள்ளலாம் என்பேன் !! இதோ - அட்டைப்பட preview : 
இந்த அட்டைப்படத்தின் பின்னேயொரு துக்கடா சேதியும் உண்டு !! நம் ஓவியருக்கு எப்போதுமே ஸ்பைடர் ; ஆர்ச்சி போன்ற டெர்ரர் முகங்கள் செமையாக சோபித்திடும்  ; ஆனால் மாடஸ்டி ; ஜானி நீரோ ; மாயாவி - போன்ற ரம்ய முகங்கள் எனில் 50 - 50 தான் ! விதிவிலக்காக டெக்ஸ் வில்லரின் பெரும்பான்மை கவர்களில் முகங்கள் ஓ.கே. ஆகிவிடுவதுண்டு !! சிலபல மாதங்களுக்கு முன்பாய் மாடஸ்டியின் அட்டைப்படத்தைப் போடச் சொல்லிய சமயமே எனக்குள் லேசாய்த் தயக்கம் தான் ! இருந்தாலும், newspaper strip feature ஆன மாடஸ்டி கதைகளுக்கு ஒரிஜினல் அட்டைப்படங்கள் என எதுவும் கிடையாதெனும் போது - நாமாய்த் தயாரிக்கும் அவசியம் தவிர்க்க இயலாததொன்று ! So ஒரு மாதிரியையும் எடுத்துக் கொடுத்து டிசைனும் போட்டு வாங்கி ; ஓரளவுக்கு ஓ.கே. என்றும் தீர்மானித்து விட்டேன் !!

போன மாதமோ, எப்போதோ - ஒரு பதிவினில் - 'மாடஸ்டியின் ஆல்பம் சிங்கிளாய் வருகிறது " என்று நான் எழுதியிருக்க - இளவரசி முன்னேற்றக கழகத்தின் தலைவர் அதை வரவேற்ற கையோடு - "அட்டைப்படம் தீயா இருக்கோணும் : பார்த்தாக்கா கண்ணிலே காதல் மிளிரோணும் ; நாங்க பாத்துப் பாத்து கிறங்கி போகோணும் " என்று கோரிக்கை விடுத்திருந்தார் !! நான்பாட்டுக்கு அட்டைப்படத்தை ஓ.கே. சொல்லிவிட்டு எங்கோ தேசாந்திரம் போய்விட்டிருந்தேன் !! இந்தப் பின்னூட்டத்தைப் படித்த கையோடு - அன்றிரவு நமது ஓவியரின்  அட்டைப்பட டிசைனை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தேன் ; உட்கார்த்திப் பார்த்தேன் ; ஓடவிட்டுப் பார்த்தேன் !! ஆனால் எப்படிப் பார்த்தாலும் அங்கே காதல் மிளிரக் காணோம் ! அட...நம் தானைத் தலைவரின் "ரொமான்டிக் லுக்" ரேஞ்சுக்கு வேண்டாமய்யா ; at least ஒரு உள்ளூர் நெஞ்சை உருக்கும் அளவிலாவது காதல் சொட்ட வாய்ப்புள்ளதா ? என்று பார்க்கப் பார்க்க, எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது !! நானிருந்த தேசத்தில் அப்போது குளிர்காலம் என்றாலும், எனக்கோ வியர்க்கத் துவங்கிவிட்டது - இந்த ராப்பரை நீங்கள் எப்படியெல்லாம் "வச்சு செய்வீர்களென்று" யோசித்துப் பார்க்கையில் ! அடித்துப் -பிடித்து மைதீனுக்கு போன் அடித்தேன் ; "முன்னாடி இருக்கதை தூக்கிப் பின்னாடி போட்டுடு !!" என்று !!  பின்னட்டைக்கென நாம் தயாரித்திருந்த டிசைனாவது ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில், இளவரசியின் எழிலுக்கு நியாயம் செய்வதாய்த் தோன்றியது ! So முன்னும், பின்னும் இடமாறிப் போயின - ஒரு காதல் கவிதையைக் கண்ணாலேயே நீங்கள் வாசிக்க ஏதுவாய் !! And உட்பக்கக் கதையையும் வாசிக்க உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திட - இதோ ஒரு preview பக்கம் !!  
"ஐயோ....அய்யய்யோ...கத்திரி போடுறீங்களே இளவரசி கதைக்கு !!" என்று வேர்க்க, விறுவிறுக்க என்னிடம் பதைபதைப்பு காட்டிய நண்பர்களுக்கு இந்தவாட்டி கொஞ்சம் நெஞ்சங்கள் குளிர்ந்திட வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! Anyways - கத்திரிகளோ ; காஜா போடும் மிஷின்களோ ஒரு கதையின் வெற்றியைத் தீர்மானிக்கப் போவதில்லை என்பதால் - இளவரசியின் merit -ல் மாத்திரமே வண்டி ஓடிட வேண்டுமென்பது அப்பட்டம் ! And இம்முறை கூட்டணியின்றி, தனித்தே தேர்தலைச் சந்திக்கிறார் எனும் பொழுது - ஜெயமோ - வேறென்னமோ - சகலத்துக்கும் அவரே பொறுப்பேற்றிடும் சூழல் !! Fingers  crossed big time - இளவரசிக்காகவும்...அவரது கழகக் கண்மணிகளுக்காகவும் !!!

ஆக இந்த 2 இதழ்களின் preview சகிதம் செப்டெம்பரின் கோட்டா பூர்த்தி காண்கிறது ! சகல இதழ்களும் அச்சாகி விட்டன என்பதால் - தொடரும் நாட்களில் பைண்டிங் முடிந்த கையோடு டெஸ்பாட்ச் துவங்கிடும் ! So "இடைப்பட்ட ஒரு மாதத்துக்கு நார்மல் இதழ்களைக் காணோமே !" என்று கவலைப்பட்ட நண்பர்கள் சீக்கிரமே புன்னகைக்கலாம் ! And இந்த மாதத்து 4 இதழ் கூட்டணியில் 'தல'யின் "சைத்தான் சாம்ராஜ்யம்" நீங்கலாய் starpower கொண்ட இதழ்கள் குறைச்சலே என்றாலும், இம்முறை வெவ்வேறு காரணங்களுக்காக நாங்கள் இவற்றின் ரிஸல்ட்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம் ! முக்கியமாய் டிரெண்டின் - "களவும் கற்று மற" !! - நிச்சயம் இங்கே பல சுவாரஸ்யப் பின்னூட்டங்களை இந்த இதழ் கொணரவிருக்கிறதென்று இப்போதே பட்சி சொல்கிறது ! 

Moving on - மதுரைப் புத்தக விழா ஆகஸ்ட் 31 -ம் தேதி தமுக்கம் மைதானத்தில் துவங்கிடவுள்ளது ! And அங்கே நமது ஸ்டால் நம்பர் 172 ! வழக்கம் போல் அண்ணாச்சி அங்கிருப்பார் - நமது இதழ்களுடன் ! Please do drop in folks !!இதோ ஸ்டால்களின்  லே-அவுட் : 
அப்புறம் சென்னையின் பீனிக்ஸ் மாலில் புதிதாயொரு காமிக்-கான் போன்ற முயற்சி அரங்கேறவிருப்பதாய் தகவல் வந்துள்ளது ! காமிக்-கான் நிர்வாகிகள் சிங்காரச் சென்னைக்கு thumbs up தரத் தயங்கிவரும் வேளையில் இந்தப் புதிய முயற்சி ANIMECON வெற்றி ஈட்டினால் நலமே !! We'll wish them the best !!
டைனமைட்டின் பணிகளைத் தீயாய்ப் பார்த்திட வேண்டியிருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys !! Have a beautiful weekend !! Bye for now !! 

Monday, August 20, 2018

நண்பர்களே,

வணக்கம். எதிர்பார்த்தது போலவே  - நேற்றைய பதிவு நிறையவே extreme reaction-களை கொணர்ந்துள்ளது !! "மறுபதிப்பில் கை வைத்தால் - கபர்தார் !!" என்ற குரல் சின்னதொரு அணியிடமிருந்து ஒலிப்பதை கவனிக்கும் சமயமே  - புதுசை நாடிய தேடல்களில் ஆர்வம் கூடி வருவதையும் புரிந்து கொள்ள முடிகிறது !! So அட்டவணையினை இறுதி செய்யும் முன்பாய் இயன்ற மட்டிலும் 360 டிகிரிக்கு யோசிக்க முற்படுவேன் !

"நீ 360 டிகிரிக்கு யோசிப்பியோ ; டிகிரி காப்பி போடுவியோ   - அது உன்பாடு !! நான்பாட்டுக்குப் போய்க்கினே இருப்பேன் !!" என்று சொல்லும் ஒரு மனுஷன் மாத்திரம் இல்லையெனில் - என் பாடு பணாலாகிப் போயிருக்கும் !! And  இதோ - செப்டெம்பரில், முழு வண்ணத்தில் மினுமினுக்கக் காத்திருக்கும் ஒரு மறுபதிப்பு சாகஸத்தின் பிரிவியூ !! "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுபதிப்புப் பட்டியலுள் இரண்டாண்டுகளுக்கு முன்னமே ஈரோட்டில் இடம்பிடித்திருக்க -  சித்தே சீக்கிரமாகவே உங்களை சந்திக்க இதோவொரு வாய்ப்பு ! அட்டைப்படம் - ஒரிஜினலின் வார்ப்பே ; நம் ஓவியரின் கைவண்ணத்தில் !! And அந்த எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் ஆக்கம் !! இந்த அதிரடி சாகசத்தை இதுவரையிலும் படித்திரா வாசகராய் நீங்களிருப்பின் - ஒரு ஜுராசிக் பார்க் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி நிச்சயம் என்பேன் ! ஏற்கனவே படித்திருக்கக்கூடியவராய் இருந்தாலும், இந்த முழுவண்ண ஆல்பம் ஒரு அதிரடி அனுபவத்துக்கு பஞ்சம் வைக்காது ! Not too long a wait now !!
Bye now...see you around !!

Sunday, August 19, 2018

ம.ப. & கி.நா..!!

நண்பர்களே,

வணக்கம். மேலுலகில் தலைவர்களுக்குத் திடீர் தட்டுப்பாடு போலும் – இங்கிருந்து ஒவ்வொரு மூத்தவரையாக இட்டுச் சென்ற வண்ணமுள்ளனர் ! முன்னாள் பிரதமரும், அப்பழுக்கற்ற அரசியல் தலைவருமான திரு.வாஜ்பே அவர்கள் இந்த வலையின் லேட்டஸ்ட் catch ஆகியிருப்பது நமக்கெல்லாம் ஈடு செய்ய இயலாவொரு இழப்பே! மலர்ந்த முகத்தோடு பலருக்கும் இவர் என்றென்றும் அழியா நினைவாய்த் தொடர்ந்திடுவார் என்பது நிச்சயம் ! RIP சார் ! அவருக்கு சற்றே முன்பாய் இன்னொரு பழுத்த அரசியல் தலைவரும், மக்களவை ஸ்பீக்கருமான  ; கறையே அண்டிராதவருமான  திரு.சோம்நாத் சட்டர்ஜியும் விண்ணுக்குக் கிளம்பியிருக்க - இழப்பின் பட்டியல் நீள்கிறது ! அவருக்கும் நமது மரியாதைகள் & அஞ்சலிகள் ! 
2018-ன் ஈரோட்டுப் புத்தக விழாவும் – சில தினங்களுக்கு முன்பாய் நினைவுப் பேழைகளுக்குள் இன்னுமொரு அத்தியாயமாய் மாறிப் போயிருக்க – நானோ அதற்கு முன்பாகவே பையைத் தூக்கிக் கொண்டு இன்னொரு திக்கில் பயணமாகிப் போனேன் ! வேலைகளைப் பார்க்க முடிகிறதோ – இல்லையோ, பைக்குள் சட்டை, துணிகளை அமுக்குவதற்கு முன்பாகவே அம்மாதத்து எடிட்டிங் வேலைகள் எஞ்சி நிற்கும் பக்கங்களை எடுத்து அடுக்கி விடும் வாடிக்கை இம்முறையும் தொடர்ந்தது ! அதன் பலனாய் – அவர் அடிக்கடி உலவிய அதே கலிபோர்னிய மண்ணில் “டைனமைட் டெக்ஸ்” கடந்த சில நாட்களாக மறுபடியும் சுற்றி வருகிறார்! காத்திருக்கும் ஒவ்வொரு விமான நிலையத்திலும், டெக்ஸோடு தான் எனது பொழுதுகள் நகர்கின்றன ! And இதோ – வாரயிறுதி நெருங்குகிறதென்ற அலாரம் தலைக்குள் ஒலிக்க – ஊர் திரும்பும் முன்பாய் பதிவுக்கென அமர்ந்தாயிற்று !

ஒரு விதத்தில் – ஈரோட்டுப் பக்கமாய் நமது கவனங்கள் திரும்பிய முன்பாக நான் வாராவாரம் எழுதி வந்த சமாச்சாரத்தின் நீட்சியே இது ! 2019 அட்டவணையின் ஆக்ஷன் கதைவரிசைகள் பற்றி ; டெக்ஸ் பற்றி ; கார்ட்டூன்கள் பற்றி என்று அலசி விட்டோம் ! உங்கள் எண்ணங்களை எனது ப்ளுப்ரிண்டோடு ஒத்துப் பார்க்கும் வேலைகளும் சரி; மெலிதான பட்டி டிங்கரிங் வேலைகள் செய்வதும் சரி – நடந்து வருகிறது ! இந்த நொடியில் எஞ்சி நிற்பன இரு தனித்தனி தடங்கள் மீதான பார்வைகளே ! And அவை இரண்டுமே தத்தம் விதங்களில் உங்களிடையே ஏராளமான வீரியமான சிந்தனைகளை விளைவிக்க வல்லவை என்பதிலும் no secrets! So பசுபிக் சமுத்திரத்தின் அசாத்திய பிரம்மாண்டம் என் முன்னிருக்கும் கண்ணாடி ஜன்னல் வழியே விரிய – மறுபதிப்புகளெனும் கடலின் பக்கமாயும்; கிராபிக் நாவல்கள் எனும் சமுத்திரம் மீதாயும் பார்வைகளை ஓடவிடுகிறேன்........

இன்னமுமே அந்த நாள் ஞாபகமுள்ளது ! 2015-ன் துவக்கம் முதலாய் மாயாவிகாரு & அவரது கூட்டாளிகள் நம்மிடையே மறுவருகை செய்யவுள்ளனர் என்ற சேதியை அறிவித்ததொரு ஞாயிறு காலைப் பதிவு அது ! அந்த நாள் நிறைவுறும் முன்பாய் 360 பின்னூட்டங்களைப் போட்டு அதகளம் செய்து முடித்திருந்தீர்கள்! And ஜனவரியில் சென்னைப் புத்தக விழாவில் “நயாகராவில் மாயாவி” ரிலீஸான சமயம், தற்போதைய “இரத்தப் படல” உற்சாகத்திற்குச் சிறிதும் குறையிலா reception கிட்டியதும் ஞாபகத்தை விட்டு அகலவில்லை! தினமும் சுமார் எண்பது பிரதிகள் சென்னை ஸ்டாலில் மட்டுமே விற்பனையாகிட; ஒவ்வொரு மாலையிலும் “நயாகராவில் மாயாவி” பஸ்ஸில் பயணமாகினார் சிவகாசி to சென்னைக்கு ! தொடர்ந்த மாதங்களில் / ஆண்டுகளில் மும்மூர்த்தியர் + இஷ்பைடர் சார் என்று மாதாமாதம் ரவுண்ட் கட்ட – வெகு சீக்கிரமே நம்மிடம் ஒரு golden oldies தொகுப்பானது சேர்ந்து விட்டது. ஒவ்வொரு தொடரும் புத்தக விழாவிலும் – ”ஆஆஆ... மாயாவியாாா?... லாரன்ஸ் டேவிட்டாாா? ஜானி நீரோவாாாா?” என்ற அகன்ற விழிகளோடும்; ஜலம் வடியும் வாய்களொடும் இவற்றை நெஞ்சோடு வாரியணைத்துக் கொண்ட மூத்த வாசகர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது !

இத்தருணத்தில் இரண்டு பேரை இதன் பொருட்டு “மறுக்கா” நினைவு கூர்ந்திடல் அவசியம் என்பேன் ! முதலாமவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும், ஈரோட்டுப் புத்தக விழாத் தலைவருமான திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களே ! 2013-ல் நம்மிடமிருந்த சொற்பமான title கையிருப்பைப் பார்த்தவர் – “சீக்கிரமே உங்களது புத்தக எண்ணிக்கைகளைப் பன்மடங்காக்க முயற்சிக்கா விட்டால் – வரும் ஆண்டுகளில் ஈரோட்டுப் புத்தக விழாவின் கதவுகள் உங்களுக்குத் திறப்பது கடினமே!” என்று சுட்டிக் காட்டியிருந்தார்! ஆங்கில காமிக்ஸ் இதழ்களை வாங்கி ஸ்டால் முழுக்க அடுக்கி, எண்ணிக்கை மிகுந்திருக்கும் உணர்வை ஏற்படுத்த 2014-ல் மாத்திரம் பெருந்தன்மையோடு அனுமதித்திருந்தார்கள் என்ற போதிலும் – அதே பருப்பு மறு ஆண்டும் செல்லாது என்பது புரிந்தது ! சட்டுப் புட்டென்று title-களின் எண்ணிக்கைகளை அதிகமாக்கிட ஒரே சுலப வழி – மறுபதிப்புகள் பக்கமாய்ப் பிடிவாதமாய் பார்வைகளைப் பதிக்க மறுத்து வந்த எனது மனதை மாற்றிக் கொள்வதே என்பதும் புரிந்தது ! அதற்கு முன்பாகவே என்னைப் பார்க்கும் போதெல்லாம், மறுபதிப்புகளைக் கொண்டு வந்தால் – அதன் மூலமாய் புதுசுகளுக்கும் ஆர்வங்களை வடிகாலாக்கிட முடியுமென்று சிங்கப்பூர் நண்பர் தயாளனும் சொல்லிக் கொண்டேயிருப்பார் ! (ஆனால் நடைமுறையில்  பழசை வாங்கினோர் - பழசைத் தவிர்த்து வேறு எதையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட முனையவில்லை என்பது வேறொரு விஷயம் !!) எனக்கோ காலாவதியாகிப் போய்விட்ட இனிப்பை மறுக்காவும் கடைவிரிக்கத் தான் வேண்டுமா ? என்றதொரு எண்ணம் ! இறுதியில் title-களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்திடும் அவசியத்தின் முன்னே எனது பிடிவாதம் அடிபணிய – சரமாரியான மறுபதிப்பு மேளா தொடர்ந்தது நமது வரலாறு (!!!) இவற்றிற்கேவென ஒரு பிரத்யேக சந்தாத் தடம் – தனியாக புத்தக விழாக்களில் ஒரு மூலை என்றெல்லாம் அமர்க்களப்பட்டதுமே வரலாற்றின் இன்னொரு பக்கம் ! கோவையில் ஒரு ஆரம்ப நாட்களது முகவர் – மாதாமாதம் மறுபதிப்புகளை மட்டுமே வாங்குவார் - புதுசு எதையும் திரும்பிக் கூடப் பார்க்காது ! And மாதா மாதம் – நடப்பு இதழ்கள் போணியாகின்றனவோ - இல்லையோ; "5 மாயாவி; 2 இஷ்பைடர்; 2 நீரோ" என்ற ரீதியில் ஆர்டர்கள் கிட்டி வந்தன !

ஆனால் – விற்பனையில் தெரிந்த உத்வேகம் – உங்களது அலசல்களில் வேறு மாதிரியாய் தெறிக்கத் துவங்கின நடுவாக்கில் ! தலைகீழ் சிரசாசன SMS-கள்; நியூயார்க்கைத் தர தரவென இழுத்துப் போகும் தில் ; ஜானி நீரோவின் பெர்முடாக்கள் ; ஜுடோ டேவிட்டின் கராட்டே வெட்டுக்கள் என்று முன்பொரு சமயம் நம்மை வாய்பிளக்கச் செய்த சமாச்சாரங்கள் எல்லாமே மறுபடியும் வாய்பிளக்கச்  செய்தன தான் – ஆனால் 'கெக்கே பிக்கே' சிரிப்புகளில் ! அந்த நாட்களில், அந்த அகவைகளில் ரசித்த சமாச்சாரங்களை, இன்றைக்கு மீண்டும் அரவணைக்க முயலும் போதுமே, அதே ரீதியிலான தாக்கங்கள் நம்முள் நிச்சயம் நிகழுமென்று ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம்பிக்கையுடனான எதிர்பார்ப்புகள் தான் சிக்கலின் நதிமூலம் என்பேன் ! அது நிகழாது போகும் போது நம்மை நாமே லேசாய்ப் பதம் பார்த்துக் கொள்ள முனைந்தோம் – எள்ளல்கள் வாயிலாய் ! நாட்கள் நகர நகர, "சுவாரஸ்யமாய் வாசிக்க" என்ற நிலை மாற்றம் கண்டு – ”வாஞ்சையாய் சேகரிக்க” என்ற நிலை பிறந்துள்ளது கடந்த சிலபல மாதங்களாய் ! சரி, நமது பதிவுகளில், அலசல்களில் தான் லேசாய் போரடித்து விட்டது போலும் என்று பார்த்தால் – புத்தக விழாக்களிலும், ஆன்லைன் ஆர்டர்களிலுமே அந்த முதலிரண்டு ஆண்டுகளின் பரபரப்பும், வேகமும் சிறுகச் சிறுக மறைந்து வருகின்றன! முகவர்களுமே இப்போது – “டெக்ஸில் எல்லாத்திலேயும் 2; கிராபிக் நாவல்லே 2” என்று பரிணாம வளர்ச்சி கண்டுள்ளனர் !

இத்தருணத்தில் எனது பிரதம கேள்வி: ”கிடைக்காதிருந்த வரை அலையடித்த ஆர்வமானது – சரளமாய்க் கிடைக்கத் துவங்கிய பின்பாக வடியத் துவங்கி விட்டதா?” என்பதே! இது நாள் வரை கடைகளில்; ஆன்லைனில் வாங்கி வந்த இந்தப் பழமைவிரும்பிகள் கூட சிறுகச் சிறுக காணாது போய் வருவதே இங்கே என்னைச் சலனம் கொள்ளச் செய்யும் விஷயம் ! சகல ஜானர்களையும் வாசிக்கும் இன்றைய current வாசகர்களுக்கு இந்த மறுபதிப்புகளின் புராதன நெடி நெருடலாகியிருக்கும் பட்சத்தில், அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது! ஆனால் “காமிக்ஸ் என்றாலே மாயாவி & கோ மாத்திரமே !!" என்ற ரீதியிலானோர் அரூபமாகத் துவங்கி வருவதே எனக்கு ஆதங்கத்தைத் தரும் விஷயம் !

So where do we go from here on reprints ? ஓ... யெஸ்... அன்றைக்கு கறுப்பு-வெள்ளையில் நாம் பார்த்த / ரசித்த கேப்டன் பிரின்ஸ்... ரிப்போர்ட்டர் ஜானி... லக்கி லூக்... சிக் பில்... டெக்ஸ் வில்லர் ஆகியோரை இன்றைக்கு வண்ணத்தில் உயர்தரத்தில் பார்ப்பது பாகுபாடின்றி வரவேற்புப் பெற்றுள்ளது ! So அவை தொடரும் ஆண்டிலும் தொடர்ந்திட நாம் ஏகமனதாய் ‘யெஸ்‘ சொல்வோமென்ற நம்பிக்கை எனக்குள் நிறையவே உள்ளது ! அவை நீங்கலாய் – “மறுக்கா ரிப் கிர்பி... காரிகன்... விங் கமாண்டர் ஜார்ஜ் ப்ளீஸ்!” என்ற கோரிக்கைகள் சிதறலாய் ஈரோட்டில் ஒலித்தன தான்! And PHANTOM ?? என்ற கேள்வி இம்முறையுமே உரக்க ஒலிக்காதில்லை !! வேதாளரை மறுபடியும் கொணர வேண்டுமெனில் அதற்கென நாம் எவ்விதம் தயாராகிக் கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன் ! That still holds good ! So “இரத்தப் படலம்” எனும் மறுபதிப்புகளிலான இறுதி எல்லையைக் கடந்தான பின்னே பெருசாய் பழசின் பக்கமாய்க் காதல் பார்வைகளை பாய்ச்ச இனி முகாந்திரங்களில்லை என்பதே எனது புரிதல் ! மெயின் நாற்வழிச்சாலையில் புதுக் கதைகள் வெவ்வேறு பாணிகளில் இனி பயணிக்க, ஓரமான சர்வீஸ் லேனில் லக்கி லூக்; டெக்ஸ்; பிரின்ஸ் & கோ.வின் மறுபதிப்புகள் மட்டும் வண்ணத்தில் தொடர்ந்திடுவது யாருக்கும் நெருடலிலா சங்கதியாய் அமைந்திடலாமென்பது எனது அபிப்பிராயம் ! கொஞ்சமோ – நிறையவோ; காசு கொடுத்து வாங்கும் (மறுபதிப்புப்) பிரதிகளை நாலு தபா ஆசையாய்த் தடவிக் கொடுத்து விட்டு பீரோவுக்குள் தஞ்சமாகச் செய்வதை விடவும், அவற்றை பிரியத்தோடு வாசிக்க ஒரு வழி பிறப்பின் – உங்களுக்கும், எங்களுக்கும் மகிழ்ச்சியாகிடாதா ? So ஆசை தீர; திளைக்கத் திளைக்க மறுபதிப்புகளை ருசித்து விட்ட திருப்தியோடு – இனி புதுப் பாதைகளை நோக்கிக் குதிரைகளை விடலாமா? Maybe இன்னமும் ஒரு நூறு மாயாவிகளும் ; வேதாளர்களும் ; லாரன்ஸ்-டேவிட்களும் நாம் பார்த்திரா மூலைமுடுக்குகளில் இருக்கக்  கூடுமோ – என்னவோ ? அவர்களைத் தேடிப் புறப்பட முழு மனசாய் நாம் சகலரும்  முனைந்தால் அந்த வேட்டையே சுவாரஸ்யமாகிடும் தானே?

சின்னதொரு stat மட்டும் இங்கே :

Post 2015 - கிட்டத்தட்ட இது வரையிலும் ரூ.6500 செலவிட்டிருப்போம் – மறுபதிப்புகளெனும் தடத்தில் ஏதேதோ நாயகர்களோடு சவாரி செய்திட ! மனநிறைவோடே அந்தப் பணத்தை நீங்கள் நம்மிடம் ஒப்படைக்கச் செய்துள்ளீர்கள்! நாங்களும் எங்களால் இயன்ற நியாயங்களைச் செய்ய முனைந்துள்ளோம்! ஆனால் இந்தத் தொகையானது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் 2 முழு வருடங்களது ஆண்டுச் சந்தாத் தொகைக்கு ஈடானதாக இருந்து வந்துள்ளதெனும் போது – முழுசாய் 2 வருடங்களைப் பழசின் பயணத்துக்கெனச் செலவிட்டுள்ளோம் என்றாகிறதல்லவா ? The best years of a career are still ahead of me என்ற நம்பிக்கையோடு - உத்வேகத்தைத் தக்க வைத்து வருகிறேன் – எஞ்சியிருக்கும் அடுத்த சில ஆண்டுகளிலான எனது ஓட்டத்துக்கு ! ஆனால் பயணத்தின் பாதி நேரம் ரிவர்ஸ் கியரையே போட்டுப் போட்டு வண்டியை ஓட்டுவதனால் – கடக்கக் கூடிய தூரம் அதிகமாய் இராதன்றோ ? இனிமேல் மறுபதிப்புகளைப் பயணத்தின் நொறுக்குத்தீனியாக மாத்திரமே பார்த்துப் பழகுவோமே guys? அதையே சாப்பாடாக்கினால் என்னாகுமென்று தெரியாதவர்களா நீங்கள் ? Full steam ahead!! என்று கூக்குரல் தந்து தான் பாருங்களேன் – கப்பல் எத்தனை சுளுவாய் அலைகளைச் சவாரி செய்கிறதென்று !

ஷப்பா…!! ஏற்கனவே நாடோடி போல காலையொரு ஊர்; மாலையொரு ஊர் என்று திரிந்து வருபவனுக்கு - பயணம்; கப்பல்; ரிவர்ஸ் கியர்; ரயில்; சவாரி; என்று படிக்கப் படிக்க இன்னும் கொஞசம் தலை கிறுகிறுக்கிறது! அந்தக் கிறுகிறுப்போடே – சில கிறக்கம் தரும் சமாச்சாரங்கள் பக்கமாய் பார்வைகளைப் பாய்ச்சுவோமா?

”கி.நா”!! திரும்பிப் பார்க்கையில் ஒற்றை விஷயம் புரிகிறது! இந்த “எதுமாதிரியுமிலாதப் புதுமாதிரி” கதைத் தேடல்களைப் பொறுத்தமட்டில் – எல்லாத் தருணங்களிலும் நாம் எல்லோருமே ஒரே பக்கத்தில், ஒரே ரசனையோடிருப்பதென்பது அதிசயத்திலும் அதிசயம் என்பதே அது! எனக்கு மெலிதான சோகம் பிடித்தால் – அது உங்களுக்கும் பிடித்திருக்குமென்ற எதிர்பார்ப்பு எல்லாத் தருணங்களிலும் நிஜமாகிடாது ! எனக்கு வரலாற்றுப் பரிசோதனைகள் சுவாரஸ்யமானதாய்த் தோன்றலாம் – ஆனால் அதுவே உங்களது வாசிப்புகளுக்கு இசைவானதாய் அமையும் வாய்ப்புகள் 50-50 தான்! தனிமையைப் பிரதிபலிக்கும் களங்கள் என்னளவிற்கு ஓ.கே.யாகிடலாம்; ஆனால் அதுவே உங்களிடமும் thumbs up பெற்றிடுமா ? என்பது கேள்விக்குறியே ! இது வரையிலான ஒவ்வொரு கிராபிக் நாவல் முயற்சியும் உங்களிடையே உற்பத்தி செய்துள்ளவை வானவில்லின் ஒவ்வொரு பரிமாணத்திலுமான, பல்விதமான reaction-களையே எனும் போது எனது மேற்படி statement வலு காண்கிறது ! இங்கொரு முக்கிய இடைச்செருகல் அவசியம் என்பேன் ! நானிங்கு குறிப்பிடுவது “அண்டர்டேக்கர்” போன்றோ – “இரத்தப் படலம்” போன்றோ கொஞ்சமாகவேணும் கமர்ஷியல் சமாச்சாரங்களின் கலப்பிலா hardcore கதைகளைப் பற்றி மாத்திரமே ! இங்கும் கூட - "அண்டர்டேக்கரில் " ஏது commercial சமாச்சாரங்கள் என்று நண்பர்களுள் மாற்றுக் கருத்துக்கள் இருந்திடலாம் ! எனது தற்போதைய கி.நா.சார்ந்த கேள்வியான இதுவே :

2019 -ல் நாம் தனித்தடத்தில் கிராபிக் நாவல்களோடு மீண்டும் பயணிக்க என்னயிருப்பதில் நிச்சயம் பெரியதொரு சிதம்பர ரகசியமெல்லாம் கிடையாது தான் ! அதனில் லேசான commercial பூச்சுடனான ; ஓரளவுக்கேனும் அனைவரும் தலைநுழைக்கக் கூடிய கதைகளாகத் தேர்வு செய்வதா ? அல்லது - கதைகளின் அடர்த்திகளும், ஆழங்களும் மாத்திரமே தேர்வுகளின் காரணிகளாக இருந்து விடட்டுமா ? பின்னது தான் உங்கள் பதிலாக இருக்குமெனில் :

** ஒரு முடியா இரவு...
** என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்
** கனவுகளின் கதையிது
** நிஜங்கள் நிசப்தம்

போன்ற கதைகளை நோக்கியே நான் தூண்டில்களை வீசிட வேண்டி வரும் ! அதே சமயம் - "ஓவராய்க் கடுங்காப்பி வேண்டாமே ; லேசாய்ச் சக்கரையும் போட்டுக்குவோமே ?" என்று நீங்கள் அபிப்பிராயப்பட்டால் -

** அண்டர்டேக்கர்
** பௌன்சர்
** இரவே..இருளே..கொள்ளாதே !

போன்ற பயணிகளுக்கு நான் 'ஜே' பொட்டாக வேண்டும் ! இரு ரகங்களிலுமே கதைகளை shortlist செய்து வைத்துள்ளேன் என்பதால் - எந்தப் பக்கமாய்ச் சாய்தல் தேவலாம் ? என்ற கேள்வி மட்டுமே உங்கள் முன்னே இப்போது ! 

அதே போல எனது கேள்வி # 2 – How much is too much? & how much is too little ? என்பதே! நம்மிடமுள்ள பட்ஜெட் அதுவே தான் எனும் போது – அதற்குள்ளாகவே பஞ்சுமிட்டாய்களையும் வாங்கித் தந்திட வேண்டும்; ராட்டினத்திலும் ஏற்றிக் காட்டிட வேண்டும்; டெல்லி அப்பளத்தையும் சுவைக்கச் செய்திட வேண்டும்; கடைகளில் கண்ணில் படும் புது பொம்மைகளையும் வாங்கித் தந்திட வேண்டுமே என்ற பட்ஜெட் பத்மநாப நைனாவைப் போலொரு அங்கலாய்ப்பு எனக்குள் ! So இந்த “கிராபிக் நாவல்” எனும் ஜானருக்கென நாம் ஒதுக்கக் கூடிய slots எத்தகைளாய் இருத்தல் நலம் ? என்ற கேள்வியும் எனக்குள்ளே ! ஈரோட்டில் இம்முறை “கி.நா.”வுக்கு 'ஜே' போட்ட நண்பர்கள கணிசமே ! +2 மாணவனான அகில் கூட இதன் ரசிகன் என்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தேன்! So 2019-ன் பட்ஜெட் பங்கீட்டில் கி.நா. slots பற்றிய மகாசிந்தனைகளும் புலிக்கேசி ஸ்டைலில் கழிவு அறைகளில் கூடத் தொடர்ந்து வருகின்றன இப்போதெல்லாம் ! Your take on this folks ?

இங்கே சின்னதொரு கருத்துச் சிதறலையும் நினைவில் இருத்திட விழைகிறேன்! ”ஐயா... நான் சராசரியான ரசிகன் தான். எனக்கு அறிவுஜீவிக் குல்லாக்கள் சேருவதில்லை! நாலு சில்லுமூக்குச் சிதறும் அலப்பரைகளும்; நாலு ரவுண்ட் தோட்டாக்கள் தெறிக்கும் அலம்பல்களுமே, காமிக்ஸ் படித்த திருப்தியைத் தரும் ! So இருட்டுக்குள்ளாற 'நொய்-நொய்னு' பக்கம் பக்கமா ; பத்தி பத்தியாப் பேசும் பாணிகள்லாம் சரிப்படாது! அக்காங்... சொல்லிப்புட்டேன்!” என்று சொல்லும் நண்பர்களுமே நம்மிடையே கணிசம் ! So – தனித்தடமே என்றாலும் மெயின்ஸ்ட்ரீம் காமிக்ஸ் ரசிகர்களை ரொம்பவும் அந்நியப்படுத்திடாது இந்தப் பரீட்சார்த்தக் களங்களில் கால்பதிக்கும் அவசியம் நமக்குள்ளது !

”பல நேரங்களில் வாசகர்களிடம் நிறைய தீர்மானம் சார்ந்த கேள்விகளை முன்வைக்கிறீர்களே... இது பலமா? பலவீனமா? என்று நண்பர் ஆதிதாமிரா ஈரோட்டில் என்னிடம் கேட்டது இங்கே நினைவுக்கு வருகிறது ! "பிள்ளையையும் கிள்ளி விட்டுக்கிறான்... தொட்டிலையும் ஆட்டி விட்டுக் கொள்கிறான்!" என்றுமே நண்பர்கள் நிறையத் தருணங்களில் என்னைப் பற்றி அபிப்பிராயப்படுவதுண்டு என்பதை அறியாதவனல்ல நான் ! இதோ இங்கேயே – “கிராபிக் நாவல்கள் நிறையப் போடலாமா?” என்று கேட்ட கையோடே – “மித அணுகுமுறை” பற்றியும் எழுதியுள்ளேன்! இவையெல்லாமே சிந்தனையில் தெளிவின்மையாகவோ; முரண்களின் சங்கமமாகவோ தோன்றிடலாம் தான்! ஆனால் எந்தவொரு முக்கியத் தீர்மானம் சார்ந்த கேள்வியையும் அணுகும் போது எனக்குள் பூரண தெளிவு இருப்பதுண்டு ! அந்தத் தெளிவை நானே உரக்கப் பரிசோதித்துப் பார்க்க யத்தனிப்பதன் பிரதிபலிப்புகளே – பொதுவெளியில் இரு தரப்பு வாசகர்களின் இடங்களிலிருந்தும் அந்த விஷயத்தைக் கேள்விகளாக்கிப் பார்ப்பது!

முன்செல்லும் பயணத்தில் மாறுபட்ட ரசனைகளை சிறுகச் சிறுகத் தான் நுழைத்திட முடியுமென்பது எனக்குப் புரிகிறது ! மாற்றங்களை துவேஷத்தோடு பார்ப்பதே இயல்பு ; moreso ஒருவிதப் பழக்கதோஷத்தில் ஊறிப்போன காமிக்ஸ் வாசிப்புகளில், மாற்றங்கள் சார்ந்த முயற்சிகளுக்கு மெதுமெதுவாய்த் தான் அங்கீகாரம் கிடைக்குமென்பதும் புரிகிறது ! அதே போல நமது தம்மாத்துண்டு வாசக வட்டத்தை – இந்த அடர்த்தியான ரசனையின் காரணமாய் சிதறிட அனுமதிக்கவும் ஆகாது என்பது தலையாய முக்கியத்துவம் பெறுவதும் புரிகிறது ! பல்லாயிரம் சர்குலேஷன் கொண்டதொரு பத்திரிகையின் தலைமைப் பொறுப்பில் குந்தியிருப்பின், விற்பனை நம்பர்களின் ஏற்றங்களையோ – இறக்கங்களையோ வைத்து எடிட்டோரியல் தேர்வு செய்து வரும் மார்க்கமானது சரியா? தப்பா? என்று எடைபோட்டிட முடியலாம் ! ஆனால் நம் கதையோ வேறல்லவா ? ஒரு மரத்தில் கூடு கட்ட வரும் பறவைகளின் எண்ணிக்கையே நமது வட்டமும் எனும் போது – இயன்றமட்டிலும் ஒவ்வொரு பறவையின் கீச்சுக் குரலையும் கேட்டுணர முயற்சிக்க நினைக்கிறேன் ! Of course – எல்லாக் கோரிக்கைகளையும் நிஜமாக்கும் ஆற்றலெல்லாம் யாருக்கும் சாத்தியமல்ல என்பது ஸ்பஷ்டமாகவே புரிகிறது! ஆனால் வார்த்தைக்கு முச்சூடு – “இது ஊர்கூடி இழுக்கும் தேர்” என்று சொல்லி விட்டு திருவிழா நெருங்கும் போது நானாகத் தரத்தரவென இழுக்க முனைவது நியாயமாகாதே?! ”ஏதோவொரு ரூபத்தில் என் நிலைப்பாட்டிலிருந்தும் முட்டைக்கண்ணன் யோசிக்க முனைகிறானே” என்ற திருப்தி நண்பர்கள் மனதில் ஒரு கணமாவது, சன்னமாகவாவது, துளிர்விட விரும்புவதால் தான் – எல்லாத் தடவைகளுமே இரு பக்கங்களின் சார்பாகவும் குரல் தர நானே முயற்சிக்கிறேன்! So என்னைப் பொறுத்தவரையிலும் இந்தச் சமையலில் உப்பையும், மிளகையும், மசாலையும் அளவு பார்த்து குண்டாச்சட்டியில் போடும் சமையல் சங்கரபாண்டி ultimate ஆக நானே ; ஆனால் அவற்றைத் தத்தம் கைகளால் கொஞ்சமாகவாவது எடுத்துத் தரும் வாய்ப்பை வாசகர்களுக்கும் தருவதும் ஒரு ஜாலி தானே ? உப்பு கூடுதலாய்த் தோன்றினால் சத்தமில்லாமல் அதில் ஆளாக்கை யாரும் பார்க்காத வண்ணம் கீழே வீசி விடலாம்; காரம் ஓவரானால் மிளகாயைப் போடுவது போல பாவ்லா காட்டிவிட்டு பைக்குள் அவற்றைத் திணித்துக் கொள்ளலாமல்லவா? Of course – இதற்கொரு flipside-ம் உண்டென்று புரியாதில்லை ! ”நான் தந்த உப்பை கீழே கடாசிட்டான் தடிப்பயல்!” என்று விசனங்கள் எழுவது சாத்தியமே ! ஆனால் பந்தி பரிமாறும் வாய்ப்பு ஒவ்வொரு 30 நாட்களுக்குமே இந்தச் சமையல் சங்கரபாண்டிக்கு வாய்த்திடும் போது – சாப்பாட்டைச் சூடாய், சுவையாய்ப்  பரிமாறிடும் கணமே அந்த வருத்தங்கள் காணாமல் போய்விடுமே ! என்ற நம்பிக்கையும் இருப்பதால் தான், பிள்ளையைக் கிள்ளவும் துணிகிறேன்!

பக்கத்து சீட்டிலிருக்கும் வெள்ளைக்காரர் என்னையும், கோழி கூச்சியது போலான எனது கையெழுத்தையும் விநோதமாய் பராக்குப் பார்ப்பது ஒரு மாதிரி இருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் folks ! ஆங்காங்கே நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தந்திட முனைந்தால் மகிழ்ச்சி ! அப்புறம் சின்னதாயொரு update:

இரத்தப் படலம்” பாகம் 2-ன் பைண்டிங்கில் குளறுபடிகள் அரங்கேறியுள்ளது புரிகிறது! பைண்டிங் செய்திடும் நமது காண்டிராக்டருமே இந்தப் பிழைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாது தடுமாறி வருகிறார்! வரிசைக்கிரமமான பக்கங்களை லைனாக அடுக்கி வைத்துக் கொண்டு ஒன்றுக்குள் ஒன்றை இணைத்துத் தைப்பது தான் process. அதனில் நேர்ந்துள்ள பிசகு தான் சகலத்துக்கும் மையம் என்பது புரிகிறது ! இதைத் தவிர்க்க foolproof வழியொன்று கண்டுபிடிப்பதே தற்போதைய தலையாய அவசியம் என்று உணர்கிறேன்! சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள் guys – இது தொடர்கதையாகிடாதிருக்க நிச்சயம் ஆனமட்டிலும் முயற்சிப்போம் ! பிழையான பிரதிகளை கேள்விகளின்றி மாற்றித் தந்திடுவோம்; So தயை கூர்ந்து பொறுமை காத்திடக் கோருகிறோம் !

And கையிருப்பு நிலவரம் இது :  மொத்தமே 100 பிரதிகளுக்குள் தான் stock இருக்கும். அவற்றுள் பாகம் 2-ஐ முழுமையாகச் சரிபார்த்த பின்பே இனி விற்பனை செய்திடப் போகிறோம் என்பதால் தற்காலிகமாய் ஆன்லைன் புக்கிங்கை நிறுத்தியுள்ளோம் ! அதே போல ஏஜெண்ட்கள் வாயிலாக வாங்கிட முயற்சிக்கும் நண்பர்களும் சற்றே பொறுத்திட வேண்டி வரலாம்! So வரும் வியாழன் வரைக்கும் இரத்தப் படல dispatch இராது! அதன் பொருட்டு நமது ஆபீஸ் பெண்மணிகளைக் காய்ச்சிட வேண்டாமே – ப்ளீஸ்! பிழை அவர்களல்லது அல்ல!

And சின்னதொரு கோரிக்கையுமே all! மீதமிருப்பது சொற்பப் பிரதிகளே என்பதால் இதுவரையிலும் வாங்கியிருக்கா நண்பர்களுக்கு வாய்ப்புத் தரும் விதமாய் – "ஒன்று படிக்க – மீதம் சேகரிக்க” என்ற பாலிஸியை இம்முறை மட்டுமாவது விட்டுத் தரக் கோருகிறேன் !

அப்புறம் இன்னொரு சந்தோஷ update கூட :

நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு -  கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. !! Awesome news !! வாழ்த்துக்கள் நண்பரே !! And உங்களுக்கோர் ஆச்சர்யம் காத்துள்ளது விரைவில் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன் இப்போதைக்கு !
Bye for now folks…. See you around!! Have an awesome Sunday !!

Saturday, August 11, 2018

ஒரு கதிரவன் கறுப்பாகிய தினம்..!

நண்பர்களே,

வணக்கம். ஒற்றை வாரம் தான் ஓடியுள்ளது "இரத்தப் படலம்" வெளிச்சத்தைப் பார்த்து  - ஆனால் ஓர்  யுகமாகிப் போனது போலொரு உணர்வு என்னுள் ! இடைப்பட்ட நாட்களில் இமயம் போலானதொரு தலைவரும் வரலாற்றின் பக்கமாகிப் போயிருக்க - அத்தருணம்  "கறுப்புக் கதிரவனின் தினம்" என்றாகிப்போனது ! "இனியொரு தாய் ஈன்றிடப் போவதில்லை - உன்னைப் போலொரு உழைப்பாளியை - போராளியை !!" என்றதொரு அஞ்சலி கூறும்  flex பார்த்தேன் சமீபத்தில் ! அது தான் எத்தனை நிஜம் ?!! RIP கலைஞர் அவர்களே…! 
விண்ணுலகில் கலைஞர் அவர்கள் ஐக்கியமாகியிருக்க – வாழ்க்கைச் சக்கரம் மெது மெதுவாய் அனைவருக்குமே இயல்புக்குத் திரும்புகிறது ! நமது பயண வரலாற்றிற்குள்ளேயும் ஒரு அற்புத நினைவாய் இடம்பிடிக்கும் முஸ்தீபுகளில் - இரத்தப் படலம் - The Collection in Color இடம்பிடித்து வருவதை உங்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பு தெளிவாய்ச் சொல்லி வருகிறது ! 

ஏற்கனவே ஈரோட்டில் சொன்னது தான் & கடந்த பதிவுகளில் எழுதியதுமே தான்…!! இந்த இதழின் தோரணைக்கும், மிடுக்குக்குமான பெரும்பங்கு நமது டிசைனர் பொன்னனையே சார்ந்திட வேண்டும். Of course – டிசைனிங் பணிகளைத் தொடர்ந்து பிராசஸி்ங் ; பிரின்டிங் ; அப்புறமாய் அந்த நான்கு தவணையிலான நகாசு வேலைகளென்று நிறையவே நிலைகளைக் கடந்து தான் இதழ்கள் தயாராகியுள்ளன ! ஆனால் அவை ஒவ்வொன்றிலுமே பொன்னனின் பங்களிப்பு சிறிதளவேணும் இல்லாதில்லை என்பது தான் நிஜம் ! பற்றாக்குறைக்கு அந்தச் சிகப்பு slipcase டிசைனும் அவரது கைவண்ணமே எனும் போது – his contributions have been immense ! So நம்பர் XIII–ன் பெயரைச் சொல்லியும், பொன்னன் + நமது தயாரிப்பு டீமின் பெயரைச் சொல்லியும் – நீங்கள் குவித்து வரும் பாராட்டுப் பூக்களில் நான் ஜாலியாக அபிஷேகம் கண்டு வருகிறேன் ! அதே நேரம் - சனிக்கிழமை முதல், தினத்துக்கு 200 போன்களுக்குக் குறையாது பேசியபடிக்கே, பேக்கிங் செய்து உங்களது பிரதிகளையும், ஏஜெண்ட்களின் பண்டல்களையும் அனுப்பி வரும் நமது அலுவலகப் பெண்கள் அகஸ்மாத்தாய் உள்ளே வைக்க மறந்து போன புக்மார்க்குகளுக்கும் ; கூரியர்காரர்கள் பட்டுவாடா செய்யத் தவறிய பார்சல்களுக்குமே சேர்த்த மண்டகப்படிகளையும் நானே வாங்கி வருகிறேன் ! So முழுசுமாய் எனதாகிடாத சால்வைகளை வாங்கி கொள்ளும் கையோடே - முழுசுமாய் எனதாகிடக்கூடா துடைப்பக்கட்டைச் சாத்துக்களையும் ஜாலியாய் ஏற்றுக் கொண்டு வருகிறேன் !!   ப்ளஸ்ஸுக்கும்,  மைனஸுக்கும் சரியாய் போச்சோ ? 

எது எப்படியோ – இந்த உத்வேகங்களையும், ஆரவார வரவேற்புகளையும் சந்தோஷத்தோடு பார்த்திடும் தருணத்தில் – கூடுதலாயொரு வயிற்றுக் கலக்கலும் எழுகிறது தான் ! புதுசா அது என்னவென்று கேட்கிறீர்களா ? Simple…! இந்த தொகுப்பானது ஒரு மறு-மறுபதிப்பே; ஏற்கனவே b&w-ல் நீங்கள் துவைத்துத் தொங்கப் போட்டு ; படித்து, மனப்பாடம் செய்த கதையே தான் என்ற போதிலும் – இதன் வண்ண அவதாரைக் காண நீங்கள் எத்தனை ஆர்வமாய் இருந்துள்ளீர்கள் என்பதன் முழுப் பரிமாணமும் இப்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது ! Not that I didn’t know it - ஆனாலும் உங்கள் சிலாகிப்புகளின் தீவிரத்தைக் கொண்டு பார்க்கும் போது – எனது யூகங்களை விடவுமே பன்மடங்கு வீரியத்துடனானது உங்களது எதிர்பார்ப்புகள் என்பது புரிகிறது ! So ஏதோ ஒரு அசட்டையில் இந்த இதழின் தயாரிப்பில் நாம் எங்கேனும் சொதப்பியிருக்கும் பட்சத்தில் – நம் முதுகில் சுடப்பட்டிருக்கக்கூடிய மசால் தோசைகளைப் பார்த்து அடையார் ஆனந்த பவனே மலைத்துப் போயிருப்பார்கள் என்பதை  யோசித்துப் பார்த்தேன்… வயிறு தானாய் கலக்கத் தொடங்கி விட்டது! 

இந்த “பொம்மை புக்குகள்” எத்தனை உக்கிரமான தாக்கங்களை நம்முள் ஏற்படுத்துகின்றன என்பதை upclose தரிசித்திட ஈரோடும் ; தொடர்ந்துள்ள நாட்களும் வழங்கியுள்ளன ! எகிறிடும் எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் புளியைக் கரைத்தாலுமே – அவற்றைப் பூர்த்தி செய்திடும் பட்சங்களில் நீங்கள் கொண்டாடிடும் விதங்கள் – கழுதைக்கு முன்பாய் தொங்கிடும் புஷ்டியான, ருசியான கேரட்டாகத் தோன்றுவதை மறுப்பதற்கில்லை ! கேரட்டை விரும்பாத கழுதையும் இருக்குமா- என்ன ? So ஸ்டீவ் ராலாண்ட் (aka) ஜேஸன் ஃப்ளை (aka) XIII தனது தேடலை வண்ணத்தில் உங்கள் துணையோடு நடத்திக் கொண்டிருக்க, நாமோ தொடரவிருக்கும் இதழ்களுக்குள் முழுகத் தொடங்கியாச்சு ! அது பற்றி எழுதுவதற்கு முன்பாய் ஈரோட்டின் சில தொடரும் நினைவுகளைப் பற்றிப் பேசிடத் தோன்றுகிறது ! எங்கேனும் இதுவொரு “மறுக்கா ஒலிபரப்பாய்”த் தென்பட்டிடும் பட்சத்தில் மன்னிச்சூ ப்ளீஸ்!

😇 ஈரோடின் சந்திப்பின் ஒரு சிலாகிக்கப்படா highlight என நான் நினைத்தது – கரூர் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவ/ மாணவியரின் ஆர்வங்களை ! நமது வாசக நண்பர் பிரஷாந்த் அந்தக் கல்லூரியின் விஷுவல் மீடியாப் பிரிவின் H.O.D. போலும் !! (அவரே இன்னமும் இஷ்கூல் மாணவரைப் போலத் தெரிந்தது வேறு கதை!!!) காமிக்ஸ் சார்ந்த தனது ஆர்வங்களை தனது மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் விதமாகவும் ; அந்தத் துறைக்கும், காமிக்ஸ் உலகிற்கும் என்றுமே நெருங்கிய தொடர்புள்ளதைப் புரியச் செய்யும் விதமாகவும் அவர்களையும் தன்னோடு அழைத்து வந்திருந்தது அழகானதொரு gesture ! அவர்கள் சகலருமே நமது காமிக்ஸ் உலகிற்குப் புதியவர்கள் ! பலரகப்பட்ட பெருசுகளாகிய நாம் அன்றைக்கு செய்த ரகளைகளை அகன்ற விழிகளோடு ரசித்தது அப்பட்டமாய்த் தெரிந்தது ! அவர்களுக்குள் காமிக்ஸ் மீதான ஈர்ப்பு ஒரு பத்து சதவிகிதம் புகுந்திருந்தாலுமே – புது இரத்தம் உட்புக பிரகாசமானதொரு வாசலைத் திறந்து வைத்தது போலாகிடுமல்லவா?

😇 ஐந்தே வயதானதொரு கதாசிரியரையும் ஈரோட்டில் சந்திக்கும் வரம் கிட்டியது எனக்கு ! பச்சரிசிப் பற்களும், பால் மணமும் மாறா ஒரு 5 வயதுக் குட்டிப் பையனை நண்பர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார் ; ஸ்மர்ஃப் ரசிகராம்… அந்த வயதிலேயே கதையும் எழுதும் ஆற்றல் கொண்டவராம்! அந்த வருங்காலப் படைப்பாளிக்கு இப்போதே ஒரு அட்வான்ஸ் கொடுத்து வைத்து, அவரது கதைகளை நாமே லபக்கிடலாமென்று தோன்றியது!!

😇 இல்லத்தரசிகளோடும் ; குட்டீஸ்களோடும் வருகை தந்திருந்த நண்பர்களின் முகங்களிலும் அன்றைக்கு ஒரு தேஜஸைப் பார்க்க முடிந்தது எனக்கு! “பார்த்தியா…. பாத்தியா…? மறை கழன்றவன்னு என்னை நினைச்சிருப்பேல்லே…? இங்கே எனக்குத் துணைக்கு எவ்ளோ பேர் இருக்காங்கன்னு பார்த்தியா?” என்ற சந்தோஷமாக இருந்திருக்குமோ? எது-எப்படியோ; துணிக்கடைகளில் காத்திருக்கும் கணவன்மார்களின் அசிரத்தைகளின்றி – நாமடித்த ரகளைகளை முழுவதுமாய் இல்லத்தரசிகளும் ரசித்தது ஒரு நிச்சய highlight ! தொடரும் காலங்களில் இதுவொரு குடும்பங்களின் gathering என்று பரிணாம வளர்ச்சி பெற்றால் - அதன் துவக்கப் புள்ளி ஆகஸ்ட் 4' 2018 என்றிருக்கும்! (ஆனால் நம்மில் பலரும் "சிங்கம் சிங்கிளாத் தான் வரும் !!" என்று டயலாக் பேசிட விழையும் wannabe bachelors தான் எனும் போது - எனது ஆசை சற்றே ஓவர் என்பது புரியாதில்லை !!)  

😇 வழக்கம் போல “வேதாளன்… ரிப் கிர்பி… அந்தப் பெரீய்ய ஸ்பைடர் மாமா கதை…" என்ற ரீதியிலான கோரிக்கைகளைத் தாண்டி, பழசைக் கோரி பெரியதொரு உண்ணும்விரதப் போராட்டமெல்லாம் அரங்கேறவில்லை என்பது அன்றைய சந்தோஷங்களுள் முக்கியமானது – at least என்னைப் பொறுத்தவரையிலாவது ! மெகா ரேஞ்சில் கோரிட மறுபதிப்புப் பட்டியலில் எதுவும் பாக்கியில்லை என்பது ஒரு பக்கமிருக்க – இனி கொஞ்ச காலமேனும் ரிவர்ஸ் கியரை ‘லொடக் லொடக்‘ என்று போடுவதில் பொழுதுகளைச் செலவழித்திடாது – முன் செல்வதில் கவனம் செலுத்திடுவோமே - please ? Of course – வண்ணத்தில் Tex மறுபதிப்புகள்; வண்ணத்தில் பிரின்ஸ் ; லக்கி லூக் ; சிக் பில் etc., தொடர்ந்திடுவதில் நாம் அனைவருமே ஒரே பக்கத்தில் தொடர்கிறோம் தானே ? On the topic – ரிப்போர்ட்டர் ஜானியின் ஆல்பம் ஏதேனும் மறுபதிப்பிடுவதாயின் – உங்கள் தேர்வு ப்ளீஸ்? Just 1 !!

😇 "ஒரு வாசக சந்திப்பு" ; "புத்தக வெளியீட்டு விழா" என்றெல்லாம் இனியும் நாம் இத்தகைய தருணங்களுக்குப் பெயரிட முனைவது பொருத்தமாகயிராது என்பேன் ! இது முழுக்க முழுக்கவே நண்பர்களின் ஒரு ஜாலி டே ; காமிக்ஸின் நிழலில் உருவாகியுள்ள நட்பின் கொண்டாட்டங்கள் என்பது தானே நிதரிசனம் ? சனியின் முழுமைக்கும் ஈரோட்டில் எங்கே சென்றாலும் நம்மவர்களை அணி அணியாகப் பார்க்க முடிந்தது ! புத்தக விழாவின் அரங்குகளில் ; ஹோட்டல்களில் ; V.O.C பார்க்குக்கு முன்பான வீதிகளில் - என செட் செட்டாய் நண்பர்கள் உலவியதை ரா வரையிலும் ரசிக்க முடிந்தது !!
😇  நண்பர்களுடனான அரட்டைகளில் ; எழுப்பப்பட்ட கேள்விகளில் இம்முறை "கிராபிக் நாவல்கள்" சார்ந்த எதிர்பார்ப்புகள் நிறையவே ததும்பியதைப் பார்த்திட முடிந்தது ! நடப்பாண்டில் "இரத்தப் படல" மெகா பட்ஜெட்டின் காரணமாய் கிராபிக் நாவல்கள் பம்மிட வேண்டிப் போனது எல்லோருக்கும் புரிந்திருந்தாலும் - அந்த "கி.நா" தாகம் சந்தேகமறத் தென்பட்டது ! For sure 2019-ல் கிராபிக் தனித்தடம் உண்டு !! ஆனால் எத்தனை ? ; என்ன விலையில் ? என்ற கேள்விகளை மட்டுமே சற்றே மறுபரிசீலனை செய்து வருகிறேன் !! இதன் highlight  +2 படித்து வரும் நமது (டயபாலிக்) அகில் & அவனது சகோதரனும் - "சும்மா பழசைக் கேட்டுட்டே இருப்பாங்க சார் ; காதிலே வாங்கிக்காமே நல்ல கிராபிக் நாவல்களாய் போடுங்க !!" என்று சொன்னது தான் !! அகில் : 2019-ன் கிராபிக் நாவல் சந்தா உனக்கு நமது அன்பளிப்பாய் இருந்திடும் !! அதே போல நண்பர்கள் ஆதி தாமிரா & கார்த்திகை பாண்டியன் அபிப்பிராயப்பட்டதுமே - சற்றே அடர்த்தியான கதைகளாய்த் தேர்வு செய்திட வேண்டுமென்பதை  !! "நிஜங்கள் நிசப்தம்" ; "மெல்லத் திறந்தது கதவு" போன்ற கதைகளை எட்டித் தொடும் துணிச்சல் நமக்கு சாத்தியமான பிற்பாடு - ரிவர்ஸ் அடித்திட வேண்டாமே ? என்ற அவர்களின் கோரிக்கையின் நியாயம் புரிகிறது ! நிச்சயம் நம் தேடல் தொடரும் நண்பர்களே !
😇 இளம் டைகர் சார்ந்த கேள்விகளும் கணிசமாகவே எழுப்பப்பட்டன !! பாக்கியிருக்கும் 12 ஆல்பங்களை - ஆறு + ஆறு என்று இரு தொகுப்புகளாய் வெளியிட்டு முடித்து விடலாமே ? என்பது டைகர் ரசிகர்களின் கோரிக்கையாய் இருந்தது ! On paper - சாத்தியமான கோரிக்கை தான் ; புதுக் கதைகள் எனும் போது அவற்றை வாங்கிட பரவலாய் ஆர்வமும் இருந்திடக்கூடும் தான் ! ஆனால் ஒரு "மின்னும் மரணம்" ; "இரத்தக் கோட்டை" போன்ற Charlier & Giraud உருவாக்கிய classics நம் சிந்தைகளில் நிழலாட - அதன் உயரங்களையோ ; ஆழங்களையோ எட்டிட சாத்தியமாகிடா கதைகளோடு உங்களைச் சந்திக்க என்னுள் தயக்கம் ! அமெரிக்க உள்நாட்டு யுத்தம் - 'வடக்கு-தெற்கு' பிரிவினை என்ற பின்புலத்தோடு பயணிக்கும் இந்தக் கதைகள் ஒரு சராசரி நாயகனின் தொடரினில் இடம்பிடித்திருப்பின் சிக்கலே இருந்திராது ! ஆனால் "டைகர்" எனும் ஜாம்பவானுக்கு இவை சுகப்படுமா ? என்ற கேள்வியே என்னுள் ! உங்கள் thoughts folks ? 
😇 "தல' டெக்ஸ் பற்றிய கேள்விகளுக்கும் பஞ்சமே இருக்கவில்லை இம்முறையும் ! "மெபிஸ்டோ ; மொரிஸ்கோ தலைகாட்டும்  மாந்த்ரீகம் சார்ந்த கதைகளையும் நடுநடுவே கண்ணில் காட்டுங்களேன் ?" என்ற கோரிக்கை அதனுள் முக்கியமானது ! நிச்சயம் அதுவொரு சிக்கலே அல்ல தான் என்னளவுக்கு ! ஆனால் நம்மவருக்கு - "ஒரு அதிரடி ரேஞ்சர்" என்ற அடையாளத்தை ஆழமாய்ப் பதித்து வருகிறோம் post 2012 !! And அது நெருடலின்றி நம்மிடையே ஓடவும் செய்கிறது ! இந்நிலையில்  விட்டலாச்சார்யா பாணிக்குள் இரவு கழுகு & கோ-வை லைட்டாக அமிழ்த்திப் பார்க்க பயமே மேலோங்குகிறது ! "க்யூபா படலம்" மட்டும் தான் நமது இரண்டாம் இன்னிங்சில் வெளியான ஒரே Tex மாந்த்ரீகக் கதை சார்ந்த களம் ! அதற்கு கிட்டியதும் mixed reactions தான் என்பதில் இரகசியங்களில்லை ! So அங்கே எழுந்த நெருடல்கள் - அந்தக் கதையின் மாயாஜாலப் பின்னணிகள் பொருட்டா ? அல்லது - பொதுவான வறட்சியின் காரணமாயா ? என்று முழுசாய் அனுமானிக்கத் தெரியா நிலையில் - Tex vs மாந்த்ரீகம் என்ற கேள்விக்கு பதில் சொல்ல இயலவில்லை !! "ஒரேயொரு கதை மட்டும் போடுவோமே ?" என்ற அபிப்பிராயம் எனக்கு அத்தனை சுகமாய்த் தோன்றவில்லை ; போடுவதென்று ஆச்சென்றால் சரளமாய்ப் போடும் நிலை எழுந்தால் super என்பேன் ! "அந்த ரிஸ்க் வேண்டாம் - லேசாய் காலை மட்டும் நனைக்கும் விதமாய் முயற்சிப்போமே ?" என்பது நாம் தெளிவில்லாது இருப்பது போலாகிடாதா guys ? இது பற்றி அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ? 2019-ன் அட்டவணை அச்சாகும் முன்பாய் சில பல இறுதி நிமிட tweaking செய்திடுவதெனில் - இதுவே அதற்கான தருணம் !  
Moving on, செப்டெம்பருக்கான பணிகள் - சமீப நாயகன்  ட்ரெண்ட் சகிதம் kickstart ஆகியுள்ளன ! இந்த இதழுக்கான உங்களின் வரவேற்பு எவ்விதமிருக்குமென்று அறிந்திட ரொம்பவே ஆர்வம் எனக்குள் ! Becos - இது ரொம்பவே - ரொம்பவே வித்தியாசமான ஒரு படைப்பு ! "ஆக்ஷன் த்ரில்லர்" ; "ஆட்டுக்குட்டித் த்ரில்லர்" என்ற பில்டப்பெல்லாம் இதற்கு சத்தியமாய்ப் பொருந்தாது ! அதே போல ஒரு western கதைக்கான மாமூல் அடையாளங்கள் இங்கே துளியும் இராது ! ஆனால் கதை நெடுக ஒருவித darkness ; ஒரு வித்தியாச அடிநாதம் இழையோடுவதை தான் இந்த ஆல்பத்தின் highlight என்று சொல்லிட வேண்டும் ! And எக்கச்சக்கக் கவிதைகளை பெரும்புலவர் ஆந்தை விழியோன் எழுதிடும் முகாந்திரங்களும் கதையினில்  நடு நடுவே எழுவதைக் காணவிருக்கிறீர்கள் ! அந்தக் கவிதைகளும், இந்த இதழின் தலைப்புமே - செப்டெம்பர் ட்ரென்டின் முதுகெலும்புகள் என்பேன்  !! So watch out !!! அப்புறம் "கும்மாங்கும்" இல்லாங்காட்டி, அதை எல்லாம்  கதையென்ற கணக்கிலேயே சேர்க்க மாட்டேன் அண்ணாத்தே.....!!" என்று கொடிபிடிக்கும் அணியினைச் சார்ந்தவராய் நீங்களிருப்பின் இந்த ஆல்பத்திற்கு தூரத்திலிருந்தே 'ஹலோ' சொல்லிவிட்டுக் கிளம்பி விடுங்கள் guys !! ஒரிஜினல் அட்டைப்படத்தோடு - இதோ அதன் preview : 

Have a lovely weekend all !! See you around !!

P.S : KUMUDAM நூலகப் பகுதியில் லக்கி !!

Tuesday, August 07, 2018

ஒரு அசைபோடும் படலம்....!

நண்பர்களே,

வணக்கம். இன்னும் 50+ நாட்களில் "டைனமைட் ஸ்பெஷல்" எனும் ஒரு அதிரடி இதழ் மாத்திரம் முறைப்பாய் நின்று கொண்டிருக்கவில்லையெனில்   - இந்நேரத்துக்கு ஒரு பூப்போட்ட சட்டையை மாட்டிக் கொண்டு "கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு !!" என்று  நானும் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பேன் ! இந்தாண்டின் துவக்கம் முதலே "இரத்தப் படலம்" எனும் சிறு துடிப்பு உள்ளுக்குள் டிக் டிக்கென்று ஒடத் துவங்கியிருந்தது ! ஏப்ரல் முதலே அது 'டாங்...டாங்..' என்று கோவில் மணியாட்டம் தலைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது ! And கடைசி ஒரு மாதத்தில் தீயணைப்புத் துறையின் "டங்கா...டங்கா...டங்கா..." அவசர மணியாக உருமாறிப் போயிருந்தது ! அதிலும் 3 + 1 (பு.வி.) புத்தகங்களும் தயாராகி மூடாக்குக்குள் பதுங்கி கிடக்க, அந்த slipcase மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வர வேண்டியிருக்க, அதன் பொருட்டு நேர்ந்த நோவுகளே ஒரு கிளைக்கதை ரேஞ்சுக்கு இருந்தன  ! 

முதலில் ஒரு மாதிரி போட்டுத் தந்து, அதற்கொரு ரேட்டும் சொல்லியிருந்தார்கள் & அது ஓ.கே என்று சொல்லி விட்டிருந்தோம்  ! அதன் மத்தியில் நாம் இதழ்களின் முன் & பின் அட்டைகளின் பருமனை அதிகம் பண்ணத் தீர்மானித்திருக்க, 3 புக்குகளும் ஒன்றிணைந்த விஸ்தீரணம் அதிகமாகிப் போயிற்று ! பலன் ? அந்த சிகப்பு slipcase-ன் உள்ளளவும் இத்தனியூண்டு பெரிதாக்க வேண்டிப் போனது ! So மறுக்கா இன்னொரு சேம்பிள் போட்டு அனுப்பப் கோரினால் - இம்முறை வந்ததோ கொஞ்சம் மெலிசான தயாரிப்பு !! "என்ன கொடுமைடா சாமி....? உள்ளட்டையினை நாம  புஷ்டியாக்கினால், வெளிப்பெட்டியை  இவர்கள் இளைக்கச் செய்துவிட்டார்களே ?!!" என்று கடுப்பாகிப் போனது !! "என்னம்மா...இப்டி பண்ணுறீங்களேமா ?" என்று அவசரம் அவசரமாய் அவர்களிடம் கேட்டால் - "ஓ....கொஞ்சம் குளறுபடி ஆகிப்போச்சுங்க சார் ; அடுத்தவாட்டி இந்த மாதிரி பிராபளம் வர்ரானில்லே !!" என்றபடிக்கு இன்னொரு மாதிரி செய்து அனுப்பினார்கள் - சரியான அளவில் ; கனத்தில் !! ஆனால் இம்முறையோ கனத்தில் மாத்திரமன்றி விலையிலும் புஷ்டி ஏறிப் போயிருந்தது !! "அய்யா...சாமி..தெய்வமே... யோகராஜா....முதல்லே பேசுன ரேட்டே போட்டுக் கொடுங்கய்யா ; இதுக்கு மேலே தாங்காது !!" என்று கூத்தாடி சம்மதிக்க வைப்பதற்குள் நம் XIII புதுசாய் இன்னொரு அவதாரே எடுத்து முடித்திருக்கக்க்கூடும் ! வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார்கள் ; ஆனால் பட்டுவாடா செய்ய அவர்கள் சொன்ன deadline கிறுகிறுக்கச் செய்தது !! "ஆகஸ்ட் 15 க்கு முன்னே நிச்சயம் ரெடி பண்ணிடலாம் !!" என்று சாவகாசமாய்ச் சொல்ல, மொத்தத்துக்குக் கடுப்பாகிப் போனது ! வேலையைத் தட்டிக் கழிக்கும் பொருட்டு புருடா விடுகிறார்கள் என்பது போல் எனக்கு மனதுக்குப்பட - "நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம் !!" என்றபடிக்கு ஆர்டரை கான்செல் செய்து விட்டு எங்கேனும் ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்திட வாய்ப்புள்ளதா  ? என்று பாயைப் பிறாண்ட  ஆரம்பித்தேன் ! 

"சரி...டப்பாவே வேண்டாம் ; அதற்குப் பதிலாய் மெகா போஸ்டர் ஒன்றை அச்சிட்டு இதழ்களோடு தந்துவிடலாம் ;  ஏற்கனவே புலன்விசாரணையும் இலவசமாய் வழங்கும் சூழலும் உள்ளதே ; ஒரு மாதிரியாகச் சப்பைக் கட்டு கட்டிக் கொள்ளலாம்" என்றுபட்டது !! ஆனால் கனவுகளில் கலர் கலராய் ; ரகம் ரகமாய் ; தினுசு தினுசாய் துடைப்பங்கள் அணிவகுக்கத் துவங்க - பதட்டத்தில் இங்கும் அங்கும் வலை வீசத் துவங்கினேன் !! கொடுமையிலும் கொடுமை -  அப்போது தான் உள்ளூரிலேயே, அதுவும்  நமக்கு ரொம்பவே தெரிந்த ஒருவரே, கடந்த 6 மாதங்களாய் இது போன்ற முரட்டு டப்பிக்களை செய்யும் தொழிலில் இருப்பதாய்த் தெரிய வந்தது ! அதற்கான மிஷினை வாங்கிப் போட்டு - இந்த மாதிரியான ஆர்டர்களை எடுத்துச் செய்து வருவதாய்க் கேள்விப்பட்டேன் ! "ஆண்டவா..இது தெரியாமல் எங்கெங்கோ அலைந்து பல்ப் வாங்கித் திரிந்தோமே  !!" என்று நொந்து கொண்டே, ஒரே பாய்ச்சலாய் அவர் மேலே விழுந்து பிடுங்கிப்.. பிறாண்டி... டப்பாக்களை செய்ய ஆர்டர் தந்தோம் !! கடைசி நிமிடத்துக் கூத்தென்றாலுமே, நம் அவசரத்தைப் புரிந்து கொண்டு - "இந்த வேலைக்கான சரக்கு என்கிட்டே ஸ்டாக்  இல்லை ! அட்டைக்கு ஆர்டர் போட்டு விடுகிறேன் ; ஒரே  வாரத்தில் வந்து விடும் ; வந்தவுடன் 2 தவணைகளில் செய்து கொடுத்துவிடுகிறேன் !" என்று வாக்குத் தந்தார் ! And சொன்னபடிக்கே வியாழன் மதியம் 200 பெட்டிகளும், வெள்ளி  மாலையில் மீதியையும் சப்ளை செய்து விட்டார் !! இதில்  கொடுமையின் உச்சம் - இங்கே உள்ளூரில் விலையும் சகாயம் !! தரமும் A -1 !! 

வியாழன் மதியம் முதலே நம் ஆபீசே யுத்தகளம் போலாகி விட்டது !! பேக்கிங் பணிகளை இம்முறை நம் அலுவலக பெண்பிள்ளைகள் அத்தனை பேருமே ஒட்டுமொத்தமாய் இணைந்து செய்து தள்ளினார்கள் ! 2 நாட்களுக்கு டிசைனிங் ; DTP ; அக்கவுண்ட்ஸ் என சகலத்துக்கும் லீவு விட்டுவிட்டு, ஆளாளுக்கு கத்திரிக்கோல் & பிரவுண் டேப் என்று ஒரே பிசி !! இதற்கு மத்தியில் ஈரோட்டுக்குப் புறப்படும் என் அவசரத்தை வெளிக்காட்டி அவர்களை டென்க்ஷன் கொள்ளச் செய்ய வேண்டாமென்று ரொம்பவே கூலாக இருப்பது போல் நடித்துக் கொண்டு திரிய - உள்ளுக்குள்ளோ ஒரு டஜன் மிக்சிக்கள் ஒரே நேரத்தில் ஓடுவது போல் ஒரே கலக்கல் ! சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அவர்களும் வெள்ளி காலையிலேயே வண்டியில் ஈரோட்டுக்கு கிளம்புவதாக திட்டம் ; ஆனால் இங்கே பேக்கிங் பணிகளை விரட்ட முடியவில்லை என்பதால் அவர்களை மதியம் வரை காத்திருக்கச் செய்தேன் !! இதற்கு மத்தியிலோ - "ஹல்லோவ்....இது பிரபா ஒயின்சா ? "இ.ப". கடை எப்போ திறப்பீங்க ?" என்ற நண்பர்களின் கேள்விகளோடு போன் கிணுகிணுத்துக் கொண்டே இருக்க - காலை முழுக்க  எல்லோருக்குமே வியர்த்துக் கொட்டிவிட்டது ! 

ஒரு மாதிரியாய் வண்டியில் முன்பதிவு புக்குகளோடு சீனியர் எடிட்டர் கிளம்ப - லேசாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம் ! அதற்கு மத்தியில் ஈரோட்டுக்கு ஸ்டால் அமைக்கும் பொருட்டு கிளம்பிப் போயிருந்தவர்களோ - "இங்கே லாரியைக் காணோம் !! பண்டல்கள் இன்னும் வந்த பாட்டைக் காணோம் !!"என்று பாட்டுப் பாடிக் கொண்டேயிருந்தனர் ! "மைதீன்... இங்கேயிருக்கும் லாரி ஷெட்டுக்குப் போய்ப் பாரு !!" என்று நான் கூக்குரலிட - அந்தப் பஞ்சாயத்து அடுத்த  2 மணி நேரத்துக்கு பிராணனை வாங்கியது ! ஒரு மாதிரியாய் சிவகாசி புத்தக பண்டல்கள் அங்கே பட்டுவாடா ஆகிட -  ஏழரை # 101 அடுத்தகணமே துவங்கியது !!  கோவைப் புத்தக விழாவிலிருந்து நேரடியாய் ஈரோட்டுக்கு புக் செய்திருந்த புத்தக ரேக்குகள் 4 நாட்களாகியும்  அங்கே சென்றடையக் காணோம் !! மேற்கொண்டு ஒரு 'காச்..மூச்" படலத்துக்குப் பிற்பாடு அதுவும் தீர்வு காண,ஒரு வழியாய் மாலை ரயிலைப் பிடிக்க நானும், ஜூனியரும் புறப்பட்ட தருணத்தில் எனது நாக்கு ரயில்வே பிளாட்பாரத்தைச் சுத்தம் செய்யாத குறை தான் ! நள்ளிரவுக்கு கிட்டே மஞ்சள் நகரில் இறங்கிய போது - பசி ஒரு பக்கம் ; பயம் இன்னொரு பக்கம் ! 

பொழுது விடிந்தால் ஒரு மெகா பரீட்சைக்கு மார்க் போடும் ஆற்றலாளர்கள் அதே ஹோட்டலின் அரங்கில் குழுமப் போவது நிச்சயம் எனும் போது ராவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை ! Oh yes - இதழ்களின் தயாரிப்பு ; அட்டைப்படங்கள் ; slipcase ; புலன் விசாரணை - என எல்லாமே பதம் பொருந்திய அதிரசங்களாய்க் காட்சி தந்தன தான் ; நிச்சயமாய் நீங்கள் ரசிப்பீர்களென்று நம்பிக்கை நிறையவே இருக்கவும் செய்தது தான் ! ஆனால் இருளில், தனிமையில், சலனமுற்றுக் கிடைக்கும் மண்டைக்கு - எதையேனும் கற்பனையாய் நினைத்து வைத்து - ஒரு லிட்டர் மனப் பிராந்தியை ஓடச் செய்வது ஓடச் செய்வது என்ன ரகத்து phobia-வோ தெரியலை ; (நிச்சயமாய் நம் பொருளாளர்ஜி அது பற்றி விளக்குவார் !!) ஆனால் அபத்தக் காரணங்களை தானாய் உற்பத்தி செய்து ; அவற்றின் பலனாய் நம்மையே பயமுறுத்தி, ஒரு வித இனம்புரியா த்ரில்லை நாளங்களில் ஓடச் செய்யும் வேலையை அன்றிரவு கச்சிதமாய் எனது தலை செய்து வந்தது !! சனி காலையில் வெளிச்சத்தை ; சகஜ உலகை ; நார்மலான சமாச்சாரங்களை ; அந்த இட்லிக்களை ; பூரிக்களைப் பார்த்த பின்னேயே ஒரு மாதிரியாய் நார்மலுக்குத் திரும்பியது !! And அரங்கில் உங்கள் ஒவ்வொருவரின் மலர்ந்த முகங்களையும் பார்த்த பின்னரே மெது மெதுவாய் பிராணன் கூட்டுக்குத் திரும்பியது !!
இப்போது யோசிக்கையில் - "லூஸுப் பயலே ! இத்தனை பதட்டம் என்னத்துக்காம்  ?" என்று என்னையே என் தலை கேள்வி கேட்கிறது !! பதிலின்றி 'பே' என்று நின்றாலும் - பதிலென்னவென்று தெரியாதில்லை தானே ?! இப்போதெல்லாம் நம்மால் சஞ்சீவி மலையைக் கூட அலேக்காய்த் தூக்கிட முடியும் என்றும் ; கடலைக் கூட கடப்பாரை நீச்சலில் கடந்து விடமுடியுமென்றும், நம்பிக்கையை உள்ளுக்குள் நீங்கள் வளர்த்து வைத்துள்ளீர்கள் !! ஒவ்வொரு மெகா கோரிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் -  "இதுவெல்லாம் இவனுக்குச் சாத்தியம் தானா ?" என்ற கேள்வி இப்போதெல்லாம் உங்களுள் துளியும் நஹி ! ஆனால் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூரில் ஒரு வாடகை சைக்கிளை எடுக்கும் அளவுக்கு கூட நம்பிக்கையை விதைத்திரா ஒரு முட்டைக் கண்ணன் தான் அடியேன் என்பதை நீங்கள் மறந்திருப்பினும், நான் மறந்திடவில்லை !  இன்றைய இந்த newfound எதிர்பார்ப்புகளின் பளுவைத் தூக்கித் திரியும் ஆற்றல் இந்த குருவிக்கு தொடர்ச்சியாய் வேண்டுமே தெய்வமே !! என்பதே தற்போதைய பயங்களின் முகாந்திரம் !!

இந்தப் போட்டியில் நாம் தாவித் தாண்ட வேண்டிய உயரத்தை சற்றே உசத்தி விட்டு, maybe அதனை வெற்றியோடு தாண்டியும் இருக்கலாம் தான் ! ஆனால் அதன் பொருட்டு மமதை கொள்வதை விடவும், உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு அங்குலமுமே இனி தொடரும் ஒவ்வொரு போட்டியிலுமே நாம் தாண்ட வேண்டிய குறைந்த பட்சமாகிப் போகுமே என்ற டரியலே மேலோங்குகிறது !! And இதோ - அடுத்த பணிக்குள்ளே தலை நுழைக்கத் துவங்கியாச்சு !! And முந்தய மேட்சில் சதமடித்திருந்தாலும் அடுத்ததைத் துவக்கும் போது எப்போதும் போல் பூஜ்யத்திலிருந்தே துவங்குகிறோம் என்ற புரிதலோடே !!

உங்கள் XIII-ன் வெற்றியை நீங்கள் சந்தோஷமாய்க் கொண்டாடுங்கள் guys ; உங்களின் அடுத்த சந்தோஷத் தருணத்துக்கான களம் தேடி நாங்கள் வழக்கம் போல் வலை வீசத் துவங்குகிறோம் !! Thank you for the awesomely uplifting days !! Bye for now !!











Sunday, August 05, 2018

சந்தோஷம் - ஒரு ஈரோட்டுத் தொடர்கதை !!

நண்பர்களே,

வணக்கம். எங்கிருந்து ஆரம்பிப்பது ? ; எங்கே முடிப்பது ? எதைச் சொல்லுவது ? ; எதைச் சொல்லாதிருப்பது ? ; எதை சிலாகிப்பது ? எதைக் கண்டு வியப்பது ? எதைக் கண்டு திகைப்பது ? என்று சுத்தமாய் புரியா ஒரு மோன நிலையில் மோட்டைப் பார்த்துக் கொண்டே கட்டையைக் கிடத்திக் கிடக்கிறேன் ! தலைக்குள்ளோ ஒரு நூறு ஞாபகங்கள் ; சிரித்த முகங்கள் ; அலையடிக்கும் நினைவுகள் என்று ஆர்ப்பரிப்பது - அலைகடலின் ஓசையாய் எனக்குக் காதில் கேட்காத குறை தான் ! ஒவ்வொரு ஆண்டுமே நமக்கு ஆகஸ்டின் ஈரோட்டுப் புத்தக விழாக்கள் ஒரு சந்தோஷத் திருவிழாவின் அடையாளமாய் மாறிப் போய் ஆண்டுகள் ஐந்துக்கு மேலாகி விட்டன ! நண்பர் ஈரோடு ஸ்டாலினின் முயற்சிகள் 2012-ல் நம்மை ஈரோட்டுக்கு முதன்முறையாக இட்டு வந்திருக்க - தொடர்ந்த விழாக்களில் LMS ரிலீஸ் ; மின்னும் மரணம் அறிவிப்பு ; ஈரோட்டில் இத்தாலி ரிலீஸ் ; இரத்தக் கோட்டை ரிலீஸ் என்று ஏதேதோ கொண்டாட்டங்களை நிஜமாக்கிட  - நமக்கு இந்த மண் ஒரு அதிர்ஷ்ட பூமியாக அமைந்துள்ளது ! And இதோ - நமது காமிக்ஸ் பயணத்தின் ஒரு மறக்கவியலா மைல்கல்லான "இரத்தப் படலம்" முழுவண்ணத்  தொகுப்பின் முதல் பிரதியும் உங்களை சந்தித்துள்ளது இந்த மஞ்சள் மாநகரின் மண்ணில் தான் !! Coincidences ?? No way!!

"இரத்தப் படலம்" ........!! அநேகமாய் "இரும்புக்கை மாயாவி " ; "டெக்ஸ் வில்லர்" என்பதற்கு அப்புறமாய் தமிழ் காமிக்ஸ் உலகினில் அதிகம் உச்சரிக்கப்பட்டிருக்கும் பெயர் இதுவாகத் தானிருக்கும் என்று நினைக்கிறேன் !! இந்த பெயரை உச்சரித்துப் பார்க்கும் போது எனக்குள் எழுந்த முதல் கேள்வி - "என்ன நினைச்சிட்டு இந்தக் கதைக்கு இந்தப் பேர் வைச்சோம் - 32 வருஷங்களுக்கு முன்னாடி ?" என்பதே !!  நாயகனின் நினைவுக் கேந்திரத்தை சூழ்ந்து, படர்ந்து கிடக்கும் குருதியைக் குறிப்பிட்டது போலவுமிருக்கும் ; தன் தேடலில், அவன் போகும் பாதையெல்லாம் தெறிக்கும் அதகளங்களையும், சொட்டும் இரத்தத்தையும் குறிப்பிட்டது போலவுமிருக்கும் என்று இந்த இளம் தொழிலதிப எடிட்டருக்கு அந்நாட்களில் பட்டது !  இந்தத் தொடர் இத்தனை நீளம் காணுமென்றோ ; இத்தனை உயரங்கள் எட்டுமென்றோ அன்றைக்கு சத்தியமாய் யாருக்கும் தெரியாது தான் ; least of all me !!! ஆனாலும் முதல் இதழினில் இருந்ததொரு இனம்புரியா ஈர்ப்பானது - கதையின் ரொம்பவே புதிரான ஓட்டத்தையும் மீறி அப்போதைய அரை டிராயர் வாசகர்களான நம்மை வசீகரித்திருந்தது இன்னமும் நம் யாருக்கும் மறந்திராது ! And ஒரு நீண்ட அவகாசத்துக்குள் 18 பாகங்களும் வெளிவந்தது ; அப்புறமாய் அந்தப் பதினெட்டையும் ஒட்டு மொத்தமாய் கருப்பு-வெள்ளையில் ஒரே புக்காக்கி சிலாகித்தது என்பெதெல்லாமே நம் நண்பர் XIII-ன் cult status-க்கு ஒரு அழியா சான்று ! நமது இரண்டாம் வருகையின் தருணத்தோடு ; Cinebook ஆங்கிலப் பதிப்பினில் XIII தொடரானது  சக்கை போடு போட்டதும் கரம் கோர்க்க - "நீ குட்டிக் கரணம் அடிப்பியோ - குரங்கு பல்டி அடிப்பியோ ; அதெல்லாம் தெரியாது ; ஆனால் XIII மாமாவை கலரிலே போட்டே தீரணும் !!" என்ற கோரிக்கை ஒலிக்கத் துவங்கியது ! மாயாவி மறுபதிப்புகள் : டிக் அடிச்சாச்சு ; "மின்னும் மரணம்" - மெகா டிக் அடிச்சாச்சு ; இரத்தக் கோட்டை - "உள்ளேன் ஐயா" என்றான பின்னே, எஞ்சி நின்ற ஒரே மெகா கோரிக்கையான "XIII ஆடலும்-பாடலும் நிகழ்ச்சி" ஒரு தவிர்க்க இயலா கட்டாயம் என்ற நிலையை எட்டியது ! ஓராண்டின் காமிக்ஸ் பட்ஜெட்டின் பாதித் தொகைக்கு ஈடான தொகையை ஒரு மறுபதிப்புக்கென செலவிடத் தான் வேணுமா ? என்ற தயக்கம் எனக்குள் நிறையவே இருந்தாலும் - பயணப் பெட்டிகளே எஞ்சினை உந்திக் கொண்டு தட தடப்பது போல், ஆளும், பேருமாய்ச் சேர்ந்து நம்மை இந்த பிராஜெக்ட்டினுள் புகுத்தியது சுமார் ஒன்றேகால் ஆண்டுக்கு முன்பாய் ! 

அதே வேகத்தில் முன்பதிவுகளும் துவங்கிட - முதல் ஆறு மாதங்களுக்குள் நமக்கொரு உறுதி கிட்டியது - இது நிச்சயமாய் take-off ஆகிடவிருக்கும் முயற்சியே என்று !! ஏதோவொரு துரதிர்ஷ்ட சம்பவமாய் - மறுபதிப்பு இலக்கை தொட்டுப் பிடிக்க நமக்கு சாத்தியமாகிடாது போயின் அதுவரையிலான முன்பதிவுப் பணங்களைத் திருப்பித் தந்தாக வேண்டுமேயென்ற உறுத்தல் நிறையவே குடியிருக்க - தேங்காயைக் கவ்வித் திரியும் நாய்க்குட்டியைப் போல  "இ.ப."வின் - "மு.ப."வை பத்திரப்படுத்தியே வந்தேன் !

இலக்கை எட்டிட..மெது மெதுவாய்ப் பணிகளும் துவங்கிட.....எனக்குள் ஒரு இனம்புரியா பயம் ! கதை மாஸ் ஹிட்டானதொன்று என்பதில் no secrets ; ஆளாளுக்கு இதனை மனப்பாடம் செய்யாக் குறை தான் என்பதிலும் சந்தேகங்கள் லேது ! So இந்த இதழில் ஏதாவது செய்து  உங்கள் கவனங்களை ஈர்க்க வேண்டுமெனில் - அது இந்த புக்கின் மேக்கிங்கில் நாம்  காட்டிடக்கூடிய தரத்திலும் , பிரமாண்டத்திலும் மாத்திரமே சாத்தியம் என்று தெரிந்தது ! இதழ்களைக் கையில் ஏந்தும் தருணம் உங்களுக்கோர் மறக்கவியலா moment ஆக உருமாறிட வேண்டுமென்ற வேட்கை நாளாசரியாய் ஒரு obsession ஆகவே மாறிப் போனது !! சிக்கும் அவகாசங்களிலெல்லாம், வெவ்வேறு மொழிகளில் XIII ஆல்பங்கள் வெளியிடப்பட்டிருக்கும் விதம் பற்றி ; இங்கே நம்மூரில் பைண்டிங்கில் ; அட்டைப்பட நகாசு வேலைகளில் உட்புகுந்திருக்கும் புது யுக்திகள் பற்றி - என்று எதையேனும் குடைந்து கொண்டே இருக்கத் தான் தோன்றும் !! அதுவும் 3 ஆல்பங்களிலான தொகுப்பு எனும் போது - ஒன்றுக்கு மூன்றாய்ச் சவால்கள் முன்னிற்க - சொதப்பிடும் பட்சத்தில் முதுகில் கட்டப்படும் டின்னின் வீரியமும் மும்மடங்காய் இருக்கக்கூடும் என்ற புரிதல் கடந்த ஆறு மாதங்களாகவே என்னோடு 'வித்தவுட்டில்' சவாரி செய்யும் ஒரு ஓசிப் பயணியாகிப் போனது !! 

இங்கே முழு credit செல்ல வேண்டியது நமது டிசைனர் பொன்னனுக்கே ! "ஒரிஜினல் கவர்கள் ; ஆனால் இயன்ற நகாசு வேலைகளோடு" என்பதே எனது instructions ! துவக்கத்தில் மனுஷன் பின்னணி வர்ணங்களை மாற்றி ; XIII என்ற டிசைனை ஏதேதோ பாணிகளில் போட்டு மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார் ! ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு என் முகரை அஷ்டகோணலாக - "சாமி....இது காமிக்ஸ் சித்திர உலகின் ஒரு அசுரரின் படைப்பு ; so அவரது தூரிகையின் effects துளியும் சேதமாகிடப்படாது ; ஆனால் அதையும் மீறி ராப்பரில் ஒரு glitz தெரிந்தாக வேண்டுமென்று" சொல்லி வைத்தேன் ! இந்த 3 ஆல்பங்களின் மூன்று ராப்பர்களுக்கு நாங்கள் வண்ணத்தில் போட்டுப் பார்த்து ; நிராகரித்து ; இதைக் கூட்டி ; அதைக் கழித்து என்று கூத்தடித்த டிஜிட்டல் பிரிண்ட்களின் எண்ணிக்கை ஒரு நூறைத் தொட்டிருக்கும் தாராளமாய் !! நமது ஓவியர் சிகாமணி எழுதித் தந்த "இரத்தப் படலம்" டைப்பையும் "இப்டிக்கா மாத்துங்கோ ; அப்டிக்கா மாத்துங்கோ" என்று நச்சரித்த நாட்களும் அநேகம் ! ஒரு மாதிரியாய் டிசைன்கள் தயார் என்றான பின்னே - அட்டைப்பட special effects-க்கு என்ன செய்யலாமென்று மண்டையில் இல்லாத கேசத்தைப் பிய்க்கும் படலம் துவங்கியது ! Without getting into the techicalities - இம்முறை ராப்பரில் நாம் செய்துள்ள நகாசு வேலைகளுக்கு மாத்திரமே 4 வெவ்வேறு process அவசியப்பட்டுள்ளது !! அவற்றிற்கென ஆட்களைத் தேடிப் பிடிக்கவும் பொன்னன் உதவிட, இந்த அட்டைப்பட அதகளம் சார்ந்த பரபரப்பு ஒருமாதிரியாக எனக்குள் மெது மெதுவாய் அடங்கியது ! ஒழுங்காய் பிரிண்ட் செய்து ; அப்புறமாக ஜிகினா மேட்டர்களை பத்திரமாய்ச்   செய்து முடித்தால் end result நிச்சயம் லயிக்கச் செய்யுமென்ற நம்பிக்கை புலர்ந்தது ! இது ஒருபுறமிருக்க - உட்பக்கங்களை அச்சிட 2 வாரங்கள் நாக்குத் தொங்கிப் போனது !!

ஒருமாதிரியாக சகலத்தையும் முடித்து புக்காக்கிப் பார்த்த போது அதுவரையிலும் என் தோளில் தொற்றித் திரிந்த பயமெனும் வேதாளம் டீ குடிக்கக் கிளம்பிப் போய் விட்டது போல் பட்டது ! ஆனால் கிளம்பியது ஒரு வேதாளமெனில், புதிதாய்க் குடியேறியது இன்னொன்று !! இன்னமும் ஒன்றரை மாதங்கள் உள்ளன ஈரோட்டுக்கும் ; XIII ரிலீஸுக்கும் !! மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க மறந்த கதையாகிடக் கூடாதே ; வெளியிடும் தருணம் வரைக்கும் சகலத்தையும் under wraps வைத்திருக்க வேண்டுமே என்ற பய வேதாளம் தானது !  மூடாக்குப் போட்டு, கோஷாப் பெண்ணாய் நம் XIII-ஐ 45 நாட்களுக்கு ஆபீசில் பத்திரப்படுத்தி வைத்திருப்பது சுலபமாகவே இருக்கவில்லை ! பற்றாக்குறைக்கு இந்த பிராஜெக்டில் இலவச இணைப்பான "புலன் விசாரணை" பற்றி நம்மாட்களே உளறி வைத்து விடக்கூடாதே என்ற டரியலும் இன்னொரு பக்கம் !! "போனில் அடிச்சு கேட்டாலும் எதையும் சொல்லிடப்படாது !!" என்று நமது அலுவலகப் பெண்மணிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது ஒரு பக்கமெனில், கோவை புத்தக விழாவிற்குச் சென்றிருந்த இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி & கோ. அங்கே எதையேனும் போட்டுடைத்து விடப்படாதே என்று பதறியதும் எனக்கு மட்டும் தான் தெரியும். Of course - இதனை யூகிப்பது நண்பர்களுக்கோர் கம்பு சுத்தும் பிரயத்தனமல்ல தான் என்றாலும் - நாமே போட்டுடைக்க வேண்டாமே ?!!" என்ற அவா அலையடித்தது !! So ஒரு மாதிரியாய் கண்ணில் எதையுமே காட்டாது, ஈரோட்டுக்கு இதழ்களைக் கொணர்ந்தது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு நெருக்கமானதொரு நேரத்தில் !!

எங்களுக்கு ஈரோடு ஒரு வியாபார நிர்பந்தமுமே ; நண்பர்களை ; புது வாசகர்களை சந்திக்கவும் ஒரு வாய்ப்பே !! So ஈரோட்டின் தேதிகள் நெருங்க நெருங்க எங்களது வண்டி சூடு பிடிப்பதில் வியப்பில்லை !! ஆனால் "வாசக சந்திப்பு" ; "புத்தக ரிலீஸ்" என்ற நடைமுறைகள் காலூன்றத் துவங்கிய காலம் முதலே, எங்கெங்கிருந்தெல்லாமோ சங்கமிக்கும் காமிக்ஸ் பறவைகள்  ஈரோட்டை ஒரு  நவீன வேடந்தாங்கலாய் உருமாற்றி வருவது நமக்கு அளவிலா சந்தோஷத்தை வழங்கி வருகின்றது ! And இம்முறை ஒரு மெகாஆஆ  இதழின் ரிலீஸ் தருணம் என்பதால் நண்பர்களின் உற்சாக மீட்டர்கள் தெறிக்கத் துவங்கியிருந்ததும் புரிந்தது ! அமெரிக்காவிலிருந்து ; பிரான்சிலிருந்து ; ஸ்ரீலங்காவிலிருந்து ; ஹை-டெக் சேந்தம்பட்டியிலிருந்து ; சென்னை ; பெங்களூரு ; கோவை ; திருப்பூர் ; பாண்டி ; கோபி ; குடந்தை ; நெல்லை ; கரூர் ; சேலம் ; திருச்சி ; தாராபுரம் ; நாகர்கோவில் ; காரைக்கால் plus இன்னும் எக்கச்சக்க நகர்களிருந்து நண்பர்கள் தனியாகவும் ; குடும்ப சகிதமாகவும்  படையெடுத்து சனிக்கிழமை காலையே லே ஜார்டின் ஹோட்டலின் அரங்கில் திரளாய்க் குழுமியிருப்பதைக் கண்ட முதல் நொடியில் எனக்குள் தோன்றிய ஒரே எண்ணம் இதுவே !! "தெய்வமே.... எங்கிருந்தெல்லாமோ ; எவ்வளவோ சிரமங்களுக்கு ; பணிகளுக்கு ; பொறுப்புகளுக்கு மத்தியில் இங்கே காமிக்ஸ் காதல் + அன்பெனும் உத்வேகத்தில் ஒன்றிணைந்திருக்கும் இந்த நல்ல மனங்கள் சகலமும் இங்கிருந்து புறப்படும் சமயம் நிறைந்த மனதோடு ;இதே நேசத்தோடு கிளம்பும் வரம் மட்டும் வேண்டுமே !!" என்பதைத் தாண்டி வேறு எதுவும் தோன்றவில்லை ! இரும்புக்கை மாயாவி லூயி கிராண்டேல் மட்டும் அந்த அறைக்குள் அப்போது கால்பதித்திருப்பின், அங்கே விரவிக் கிடந்த மின்சார சூழலில் மனுஷன் அரூபமாகிப் போயிருக்கக்கூடுமென்பேன் - அப்படியொரு crackling air of expectations & happiness !!

ஆளுக்கொரு அடையாள tag இருந்தால் தேவலாம் ; நாம் ஒருவருக்கொருவர் அந்நியமாய்த் தெரியாதிருக்க உதவிடும் என்ற எண்ணத்தில் ஊரிலிருந்தே நிறைய கொண்டு வந்திருக்க - நண்பர்கள் வயது வித்தியாசம் பாராது - பஞ்சுமிட்டாய் வாங்க வரிசையில் கூடிடும் குழந்தைகள் போல் அணிவகுத்தது எனது ஆயுட்கால பொக்கிஷ நினைவுகளில் ஒன்றாகிடுமென்பது உறுதி !! நமது அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொண்டிருந்த நமது கருணையானந்தம் அவர்களும், சீனியர் எடிட்டரும் உள்ளே புகுந்திட, அவர்களை அன்போடு சூழ்ந்து கொண்ட நண்பர் அணியை அரங்கின் பின்பகுதியிலிருந்தே ரசிக்க முடிந்தது எனக்கு ! நிச்சயமாய் சனி காலை அந்த அரங்கினை புதிதாய் யாரும் பார்வையிட்டிருந்தால் - அதுவொரு formal புத்தக வெளியீட்டு விழாவாய் காட்சி தந்திருக்க வாய்ப்பே இல்லை என்பேன் ! தம் வீட்டிலொரு விசேஷம் என்பது போல் ஆளாளுக்குப் பர பரத்துக்கு கொண்டிருந்தது ஒரு பக்கமெனில் ; "என் பொண்டாட்டி ஊர்லே இருக்கா....!!" என்ற ஜனகராஜ் உற்சாகத்தோடு நண்பர்கள் மறுக்கா bachelors ஆகிப் போனது போல் இன்னொரு பக்கம் அதகளம் செய்து கொண்டிருந்தார்கள் ! ஒரு மாதிரியாய் நண்பர்களின் வரவுகள் streamline ஆகிட - சீனியரையும் ; கருணையானந்தம் அவர்களையும் மேடைக்கு அழைத்த கையோடு - முதல் இதழை உங்கள் கண்களில் காட்டிடும் ஆர்வத்தின் பலனாய் எழுந்த நமைச்சலைக் கட்டுப்படுத்த இயலவில்லை - அதற்கு மேலாகவும் !! ஏற்கனவே இங்கே நான் வாக்குத் தந்திருந்தது போல முதல் இதழை பெற்றுக் கொள்வது நமது நண்பர் கரூர் ராஜசேகராகத் தானிருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், துணைவியாரோடு வந்திருந்தவரை மேடைக்கு அழைத்தேன் !! முதல் இதழை திரு கருணையானந்தம் அவர்கள் வெளியிட - நண்பர் ராஜசேகர் பெற்றுக் கொண்ட நொடியில் என் தோளில் தொற்றித் திரிந்த சில பல வேதாளங்கள் விடை பெற்றதை உணர முடிந்தது !! ஒரு தூரத்து மழைநாளில், ஓய்வின் குடைக்கடியில் அமர்ந்திருக்கும் தருணம் இந்த ஆகஸ்ட் 4 -ம் தேதியை நான் நினைவுகூரும் போது கண்கள் சன்னமாய் வேர்க்காது போகாது  என்பது மட்டும் நிச்சயம் !

தொடர்ந்து முன்பதிவின் பிரதிகள் நண்பர்களுக்கு வழங்கப்பட - எனக்கோ ஒவ்வொரு முகத்திலும் தென்படக்கூடிய முதல் reaction என்னவென்று பார்த்திடும் ஆவல் ஆட்டியெடுத்தது ! அனைவரின் முகங்களிலும் LED பல்பின் பிராகாசம் தெரிய தெரிய - எனக்குள் ஒருவிதமான அமைதி குடி கொள்வது போலுணர்ந்தேன் ! ஏகமாய் எதிர்பார்ப்புகள் ; ஏகமாய் பணிகள் / பொறுப்புகள் என்றெல்லாம் சமீப மாதங்களில் சுமந்து திரிந்தவனுக்கு - அவை சகலமும் ஒற்றை நொடியில் காற்றில் கரைந்து போன போது மனமே நிச்சலனமானது போலிருந்தது ! தொடர்ந்து சீனியர் எடிட்டர் சுருக்கமாய்ப் பேசிட ; அதைத் தொடர்ந்து கருணையானந்தம் அவர்கள் நம் காமிக்ஸ் பயணத்துடனான தனது நினைவுகளை செம சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார் ! ஜூனியரின் திருமணத்துக்கு வருகை தந்திருந்த நண்பர்களுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருக்க, இதர நண்பர்களுக்கு இதுவே முதல் பரிச்சயக் களம் !

அவர் பேசி முடிக்க - நண்பர்கள் அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் துவங்கினர் !! பிடித்த கதை ; பிடிக்காத கதை ; சுலபமான கதை ; சிரமமான கதை ; ஸ்பைடர் ; டெக்ஸ் வில்லர்  ; கிராபிக் நாவல்கள் என்று கேள்விகளின் ரேன்ஜ் எங்கெங்கெல்லாமோ பயணித்தது !! அத்தனைக்கும் அசராது அவரும் பதில் சொல்ல, அரங்கமே சுவாரஸ்ய mode-ல் ஆழ்ந்து போனது. அதற்கு முன்பாய் புலன் விசாரணை இதழின் மொழிபெயர்ப்புக்கு அசாத்திய உழைப்பைத் தந்திருந்த நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அவர்களையும், J என்ற ஜனார்த்தனன் அவர்களையும், கணேஷ்குமார் அவர்களையும் பற்றி பேசிய கையோடு - முதலிருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவப்படுத்தினோம் - அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் தந்து !! அவர்களுக்கான நமது சிறு சன்மானங்களையும் தந்த பின்னே நண்பர்கள் இருவரும் பேசியது இன்னொரு அழகுத தருணம் !!

ஒருவாறாக அடியேன் வசம் மைக் வந்து சேர, இரத்தப் படலம் சார்ந்த எனது நினைவுகளை கிளறத் துவங்கினேன் ! 32  ஆண்டுகளுக்கு முன்பான துவக்கப் புள்ளி பற்றி ; 10 ஆண்டுக்கு முன்பான black & white தொகுப்பு பற்றியெல்லாம் பேசிய போது ஆட்டோகிராப் சேரனின் சைக்கிள் சவாரியின் சுகம் என்னவென்று புரிந்தது ! XIII-ஐ சிலாகித்தது பற்றாதென்று - நண்பர்களின் XIII சார்ந்த ஞாபகங்களை பரிசோதிக்கும் பொருட்டு நான் ஊரிலிருந்து கொணர்ந்திருந்த கேள்வித் தாள்களை திடுமென்று நீட்ட - அரங்கமே பரீட்சை mode-க்கு மாறிப் போனது !! முன்ஜாக்கிரதையாய் பதில்களையும் ஊரிலிருந்தே கொண்டு வந்திருந்த கெத்தில் நான் பத்திரமாய் அமர்ந்திருக்க, பர பரவென பதிலெழுதும் நண்பர்களின் முகங்கள் தினுசு தினுசாய் போவதை பார்த்திட முடிந்தது !! 5 வாசகர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க - இப்படியும், அப்படியுமாய் மார்க் வாங்கியிருந்தனர் இதர நண்பர்கள் ! எல்லாமே ஜாலிக்காண்டி தான் என்பதால் அனைவருக்குமே  ஒரு குட்டியான XIII போஸ்ட்கார்ட் தந்த கையோடு விழாவாய் நிறைவு செய்துவிட்டு மதிய உணவுக்கும், போட்டோ எடுக்கும் படலத்துக்கும் துவக்கம் கொடுக்கத் தீர்மானித்தோம் !! 4 மணி நேரத்தை கொண்டு செல்வது எவ்விதமோ ? என்ற பதட்டத்தோடு அரங்கிற்கு வந்தவனுக்கு மணி 2 ஆகிவிட்டதென்பதை நம்பவே முடியவில்லை !! பிரியமானவர்களின் அண்மையில் நேரத்துக்கு றெக்கைகள் முளைத்துவிடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன் !! விடைபெறும் நண்பர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஒரு நிறைவு தென்படுகிறதா ? என்ற தேடலோடு நின்றவனுக்கு, அணிவகுத்த மலர்ந்த முகங்கள் சந்தோஷ விடை தந்திட - சாப்பிடாதுமே வயிறும், மனதும் நிறைந்த உணர்வு !!

இறுதியாய் பந்திப் பக்கம் போன சமயம், அரங்க அமைப்பாளர்களின் பணியாளர்கள் கடைசிப் பந்தியிலுமே பம்பரமாய்ச் சுழன்று கொண்டு பரிமாறியதை பார்க்க சந்தோஷமாகயிருந்தது ! நம் நண்பர்களுள் சிலருமே சாம்பார் வாளிகளையும், அன்னச் சட்டிகளையும் சுமந்து சுழலும் அட்டகாசங்களுக்கும் முறையிருக்கவில்லை ! Phew !!! ஒரு மாதிரியாய் அனைவரும் பசியாறி, விடைபெற்ற போது ஜூனியரும், நானும் மெதுநடை போட்டு ரூமுக்குத் திரும்பினோம் !!கால்களும், கைகளும் ஓய்ந்து போயிருப்பினும், மனதில் நிறைவு வியாபித்துக் கிடந்தது ! கொஞ்சமாய்க் கட்டையைக் கிடத்தியான பின்னே மாலை நான் மட்டும் நம் ஸ்டாலுக்குச் செல்ல, சற்றைக்கெல்லாம் நண்பர்களும் வருகை தர, நமக்கிப்போது வெகு பரிச்சயமாகிப் போய் விட்டுள்ள புத்தக விழாவின் பின்னுள்ள மரத்தடியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோம் ! எப்போதும் போலவே "அடுத்து என்ன ?" "குண்டு புக் ???" ; கி,நா உண்டா இல்லையா ?" மறுபதிப்பு digest உண்டா ? ; வேதாளன் உண்டா ? அடுத்த மெகா பிராஜெக்ட் எது ? டெக்ஸ் டைனமை ஸ்பெஷலில் என்ன ஸ்பெஷல் ? " இளம் டைகர் உண்டா ? " என்ற ரீதியில் கேள்விகள் சிறகடித்தன !! இம்முறை பெவிகால் பெரியசாமி அவதாரமே எடுக்க வேண்டிய நிர்பந்தம் - மறுபடியும் ஒரு பெரும் பட்ஜெட் காமிக்ஸ் ஆண்டை உங்கள் முன்னே வைத்திட வேண்டாமே என்ற ஆதங்கத்தில் ! So தட புட என அறிவிப்பை ஏதும் செய்யாது - 2019 அட்டவணையில் உங்கள் கேள்விகளுக்குப் பதிலிருக்கும் என்று மட்டும் சொல்லி வைத்தேன் !! நண்பர்களுக்கு இதன் பொருட்டு ஏமாற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை ; ஆனால் ஓராண்டின் திட்டமிடலை finetune செய்யும் தருணத்திலிருக்கும் எனக்கு - "இரத்தப் படல" பரபரப்பிலிருந்து விடுபட்டிருக்கும் இந்த நொடியிலேயே அடுத்த மெக் பிராஜெக்ட்டினுள் தொபுக்கடீர் எனக் குதிக்கும் தம் இல்லை என்பதே நிஜம் ! நிதானமாய் கதைகளை பரிசீலனை செய்து, 2019 -ன் அட்டவணையை இறுதி செய்வதே தற்போதைய முதல் priority எனும் போது அதனை செவ்வனே செய்து முடித்த கையோடு, நம் அடுத்த biggie project பக்கமாய்க் கவனத்தைத் திரும்புவேன் guys ! That 's a promise !!
And ஊருக்குத் திரும்பிய முதலே 'தல' வில்லரின் "டைனமைட் ஸ்பெஷல்" பணிகளில் மூழ்கிடும் அவசியமும் உள்ளதால் - லேசாய் முன்ஜாக்கிரதை முனிசாமியாகிப் போனேன் !!

கச்சேரியை முடித்த கையோடு இரவு அறைக்குத் திரும்பிய தருணத்தில் தூக்கம் சுழன்றடித்தது !! கனவில் வில்லரோடு அரிஸோனாவில் பயணிப்பது போலவும், XIII சகிதம் கோஸ்டா நெக்ராவில் பயணிப்பது போலவும்  கனவுகள் ஆர்ப்பரித்தன !! திடீரென்று நாமெல்லோரும் இத்தாலியில் 'தல'யின் 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுவது போலொரு கனவும் எங்கிருந்தோ எட்டிப் பார்க்க - அடித்துப் பிடித்து எழுந்தேன் !!  பார்த்தால் ஞாயிறு காலை புலர்ந்திருப்பதைக் குருவிகளும், காக்கைகளும் அறிவித்துக் கொண்டிருந்தன ! எனது அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஈரோட்டுப் புத்தக விழா அரங்கு அமைதியில் துயின்று கொண்டிருந்தது தெரிந்தது  !! ஒரு பயணத்தின் பல சந்தோஷதருணங்களை நமக்கு நல்கித் தந்துள்ள அந்தப் புத்தகப் பூங்காவை லயித்துப் பார்த்துக் கொண்டேயிருந்த போது மனதுக்குள் எண்ணற்ற புதுப் புதுக் கனவுகள் சிறகு முளைப்பது போலுணர்ந்தேன் !!   ஒரு கனவின் முற்றுப் புள்ளியில் இன்னொரு புதுக் கனவு துளிர் விடுவது இயல்பு தானோ ?!!!! 

Bye all ! See you around !!! And thank you from the bottom of our hearts !!  😀