Thursday, June 30, 2016

இன்னொரு உப பதிவு !

நண்பர்களே,

வணக்கம். வாட்சப் என்றொரு சமாச்சாரம் மாத்திரம் நடைமுறையில் இல்லாது போயிருந்தால் - நிறைய புறாக்கள் தான் வளர்த்திருக்க வேண்டும் - எடிட்டிங் பணிகள் முடிந்த பக்கங்களை கால்களில் சுமந்து ஊருக்கு எடுத்துச் செல்ல !! கௌபாய் தேசத்தில் சின்னதொரு பணி என்பதால் இங்கே பயணம் ! இங்கிருந்தவாக்கில் நமது டாப் கௌபாயின் "குற்றம் பார்க்கின்"இதழின் final version -ஐத் திருத்தி  அனுப்புவது கூட  வாழ்க்கையின் ஆச்சர்யங்களுள் ஒன்று போலும்  ! அதிலும் 'ஆவென்று' இங்குள்ள இன்டர்நெட் வேகங்களைப் பொறாமையாய்ப் பார்க்கும் போது - இந்தச் சேதிப் பரிமாற்ற வேகத்துக்காகவாவது இங்கே குடிபெயர்ந்து விடலாம் என்று தோன்றுகிறது ! குதிரைகளின் முதுகுகளில் கடுதாசிகளை சுமந்து போன "போனி எக்ஸ்பிரஸ்" மண்ணில் தான் என்னவொரு மாற்றம் !!  Phew !!

வண்ண இதழ்கள் சகலமும்  ஊரில் அச்சு முடிந்த நிலையில் - கருப்பு-வெள்ளை இதழ்கள் மட்டுமே பாக்கி ! அவையும் அடுத்த ஒரு நாளுக்குள் அச்சாகி - மொத்தமாய் திங்களன்று கூரியரில் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம் - உங்கள் டி-ஷர்ட்களுடன் ! இதுவரையிலும் அளவு தந்திருக்கா நண்பர்கள் இனி கொடுத்து பிரயோஜனம் ஏதும் இருக்கப் போவதில்லை ; பொதுவாய் ஆர்டர் செய்துள்ள L சைஸ் தான் அனுப்பிட இயலும்.  இந்தாண்டில் முதன்முறையாக மாதத்தின் முதல் தேதியைத் தவற விடுவதில் ரொம்பவே சங்கடம் எனக்கு ; ஆனால் பெட்டியை - பெட்டி, படுக்கையோடு இந்த இதழுக்கும் ஐக்கியம் ஆக்கிடுவதில் தாமதம் நேர்ந்து விட்டது ! Sorry all !! 

கொரில்லா சாம்ராஜ்ஜியம் இதழுக்குப் பதிலாய் இடம்பிடிக்கும் "இமயத்தில் மாயாவி" இதழிலும் குரங்கு ஜாடையில் மனிதர்கள்   உலா வருகின்றனர் ! ரொம்ப காலம் கழித்து இந்தக்  கதையினை வாசிக்க இப்போது தான் வாய்ப்புக்கு கிட்டியது என்பதால் - ஆங்காங்கே பீறிடும் கெக்கே பிக்கே க்களை அடக்கிக் கொண்டே எடிட்டிங் (?!!) செய்து முடித்தேன் ! மாயாவி ஒரு எவர்க்ரீன் நாயகரே என்பதில் என் கையிலுள்ள விற்பனைப் புள்ளிவிபரங்கள் மாற்றுக கருத்துக்களுக்கு இடம் தராது தான் ; ஆனால் இந்தத் தலைமுறையின் பிரதிநிதிகளுக்கு இக்கதைகள் எவ்விதம் தோன்றுகின்றன ? என்றொரு நிஜமான curiosity எனக்குள் !! இங்குள்ள இளம் வாசக / வாசகியர் - இந்தக் கதைகளை எவ்விதம் பார்க்கிறீர்கள் என்று கொஞ்சமாய் விளக்கலாமே ? 

ஞாயிறு சந்திப்போம் - புதியதொரு பதிவோடு ! அதுவரை bye !

Sunday, June 26, 2016

ஒரு "குட்டி" (!!) மாற்றம்..!

நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் விதியின் humour sense-ஐக் கண்டு வாயடைத்துப் போகத் தான் வேண்டி வருகிறது! 2015-ன் சந்தாவினில் தென்பட்ட சில ‘மொக்கைகளுக்கு‘ மருந்தாய் சிக் பில்லின் – ”நிழல் 1... நிஜம் 2..!” தயாராகும் அதே தருணத்தில்- நடப்பாண்டின் ஒரு ‘ம.மொ.‘ கண்ணில் கச்சிதமாயத் தட்டுப்படுவதை பின்னே எவ்விதம் விவரிப்பதென்றே புரியவில்லை! 

அடுத்த சில நாட்களில் இன்னொரு பயணம் காத்திருக்கக்கூடும் என்பதால் ஜுலையின் இதழ்களைக் காலில் சுடுநீர் ஊற்றாத குறையாய் கவனித்து வருவதைக் கடந்த (குட்டிப்) பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும்! இம்மாதத்து highlight ஆன லயன் 32-வது ஆண்டுமலர் தான் எனது பிரதான கவனத்தை ஈர்த்து வந்தது! சரி- 3 பெல்ஜிய நாயகர்கள்; 1986 முதலாய் நம்மிடையே வலம் வரும் பரிச்சயமான முகங்கள் தானே? ...மட மடவென்று எடிட்டிங்கை முடித்து விடலாமென்று இந்த வாரத் துவக்கத்தில் பிஸியானேன்! எப்போதுமே சிண்டைப் பிய்க்கச் செய்பவர் நமது ரிப்போர்ட்டர் சார் தான் என்பதால் நான் முதலில் தலை நுழைத்தது ஜானியின் “நேற்றும்... இன்றும்” சாகஸத்தினுள்! இந்தக் கதையை 2015-ல் தேர்வு செய்த போதே இதன் one liner ஐத் தெரிந்து கொண்டிருந்தேன்! வழக்கம் போலவே ஒரு சிறு கிராமத்தில் நடைபெறும் மர்மங்களை- கடைசிப் பக்கம் வரை தாண்டவமாட அனுமதித்து விட்டு இறுதிப் பக்கத்தில் போட்டுத் தாக்கும் அதே பாணி; சுவாரஸ்யமான plot என்பதோடு மட்டுமன்றி - இந்த சாகஸத்தில் ஜானியின் தந்தை தனது இளமைப் பருவத்தில் துப்பறிய முயற்சிக்கும் சிக்கலொன்றை ஒரு தலைமுறைக்குப் பின்பாக ஜானி வந்து தீர்த்து வைப்பதே highlight! So கதையின் ஆரம்பம் 1938-ல்! அச்சாய் ஜானியைப் போலவே தோற்றம் தரும் அவரது டாடி கதையைத் துவக்கி வைத்து விட்டு சற்றைக்கெல்லாம் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டே ஊர் திரும்புவதை ரசிக்க முடிந்தது! And எப்போதும் போலவே இவர் குற்றவாளியா? அவர் குற்றவாளியா? என்ற அலப்பரையும் இருந்த போதிலும், சுவராஸ்யமாய் கதை தடதடத்ததால் நான் எதிர்பார்த்ததை விடவும் விரைவாகவே இதன் பணிகளை நிறைவு செய்திட முடிந்தது! ‘ஹை... ஜாலி... கஷ்டமான பரீட்சையை ஊதித் தள்ளியாச்சே!‘ என்ற குஷியில் நமது "கடல்களின் காதலர்" பக்கமாய் கவனத்தைக் கொண்டு சென்றேன்! 

கேப்டன் பிரின்ஸ் தொடரினில் நாம் வெளியிட்டிரா இரு ஆல்பம்கள் உள்ளன! அவற்றில் ஒன்றுக்கான உரிமை மாத்திரம் ஒரு புது முயற்சியாகத் துவக்கப்பட்டதொரு பதிப்பகத்திடம் உள்ளது! ஆரம்பித்த சூட்டிலேயே அது கடையை மூடி விட்டதால்- அதன் உரிமைகளை trace செய்வது இன்றைக்குப் படு சிக்கல்! எஞ்சியிருக்கும் இன்னொரு ஆல்பமோ- கேப்டன் பிரின்ஸின் சிறுகதைகளின் தொகுப்புகள்! ஆரம்பத்தில் இன்டர்போலில் இன்ஸ்பெக்டராகப் பணி புரியும் பிரின்ஸின் 4 & 6 & 8 பக்கக் கதைகள்; பொடியன் ஜின்னை சுவீகாரம் செய்து செய்து கொண்ட பின்னணி; ‘கழுகு‘ அவரது உடைமையான நிகழ்வுகள் என்று செல்பவை இந்தத் தொகுப்பின் கதைகள்! இவற்றில் சிலவற்றை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த போதிலும்- அழகாய், வண்ணத்தில், பெரிய சைஸில் பார்ப்பது மாறுபட்ட அனுபவமாய் இருக்குமென்பதால்- அவற்றையும் இணைத்துள்ளோம்! ரொம்பவே சுமாராய் இருந்த ஒரு சில மினி சாகஸங்களுக்கு மட்டும் கல்தா தந்து விட்டு, பாக்கிக் கதைகளைத் திட்டமிடலில் சேர்த்துள்ளோம்! (ஒரிஜினல் பிரெஞ்ச் ஆல்பத்தில் உள்ள இதை- இதையெல்லாம் விழுங்கி விட்டீர்களா? என்ற கேள்வியை எங்காவது எழுப்பிடத் தயாராகிடும் நண்பர்களின் பொருட்டு; ஓரம் கட்டியுள்ள சிறுகதைகள் சகலமுமே அக்மார்க் உப்மாக்கள்! So அவற்றைப் போடலியா? என்று பொரிந்து தள்ளுவது அரையணா பிரயோஜனம் நல்கிடாது! கதைத் தொகுப்பின் முழுமையையும் கொள்முதல் செய்திருந்தாலும்- ஓரம்கட்டப்பட்ட அந்தப் பக்கங்கள் எப்போதாவது, எங்காவது filler pages-களுக்குப் பயன்பட்டால் படட்டும்; இல்லையேல் மூலை சேர்வதில் தப்பில்லை‘ என்று தீர்மானித்தேன்).

So- சிற்சிறுக் கதைகள் and அவையும் பிரின்ஸின் சுலப பாணிகளில் என்பதால் பெருசாய் மூச்சிரைக்காமல் வேலைகளை முடிக்க 2 நாட்களுக்கு முன்பாய் சாத்தியமானது! ‘ஆஹா... 2 down.... 1 to go!’ என்ற குஷியில் அடுத்தவரை கச்சேரி செய்ய மேடைக்கு அழைக்கலாமென்று ஆயத்தமானேன்! And நமது சாகஸ வீரர் ரோஜரும் அமர்க்களமாய் மேடையேறினார்! இதுவும் நான் எழுதியிரா ஆல்பம் என்பதால்; மேலோட்டமாய் சித்திரங்களைப் பார்த்தே சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்! 2016-ன் டைம்-டேபிளில் ஒரிஜினலாய் அறிவிக்கப்பட்டிருந்த ரோஜர் சாகஸமோ- “எழுந்து வந்த மம்மி”. இன்டர்நெட் ஆராய்ச்சியினில் "இந்தக் கதை நல்ல ஸ்பீடு" என்ற வாக்கில் விமர்சனங்கள் இருந்தபடியால் ‘டிக்‘ அடித்திருந்தேன்! ஆனால் பின்நாட்களில் நமது பெல்ஜிய ஆலோசகரைக் கதைச்சுருக்கம் அனுப்பக் கோரியிருந்த போது பேஸ்தடித்துப் போனேன்! ஜாலியாய் அருங்காட்சியகத்திலிருந்து வாக்கிங் புறப்படும் மம்மி, எந்தவொரு பெரிய லாஜிக்குமே இல்லாது சுற்றி வந்து விட்டு அடங்கி விடுவது போலாகக் கதை உள்ளதென்று படித்துப் பார்த்த போது- அவசரம் அவசரமாய் மாற்றுக் கதை தேடினேன்! சரி... அமானுஷ்யங்கள்; ஆட்டுக் குட்டிகள் என்று போனால் தானே காதில் 'புய்ப்பம்' சூட நேரிடுகிறது... ‘சிவனே‘ என்று தரையில் சாகஸம் செய்யும் இரண்டு கால் வில்லனோடு மோதும் ரகமாய்க் கதையைத் தேர்வு செய்வோமே என்ற ஆர்வத்தில், படைப்பாளிகளிடமே அபிப்பிராயம் கேட்டேன்! அவர்களது suggestion தான் “நேற்றைய நகரம்”! சரி... படைப்பாளிகளே சொல்லி விட்டார்களே; இதைத் திரும்பவும் அலசுவானேன்? என்ற சோம்பலில் இந்தக் கதைக்கும் ஆர்டர் போட்டு விட்டோம்! ஏப்ரல் இறுதியில் கதையும் வந்திட- ‘மட மட‘வென்று மொழிபெயர்ப்புகள் நடந்திருந்தன!

எனக்கு எப்போதுமே ஒரு சிறு நெருடல் நமது மொழிபெயர்ப்பு டீமிடம் உண்டு! அந்தந்தக் கதைகள் பற்றிய feedback எதுவும் எனக்கு வழங்குவதில்லை என்ற வருத்தமே அது! 'ஓ.கே.யோ- சுமாரோ'- எழுதியனுப்பி விடுவார்கள்! அந்த ரகத்தில் இப்போதும் பணிகள் நிறைவு பெற்றிருக்க- நானும் ஒரு சுபயோக, சுப தினத்தில் கதைக்குள் மூழ்கினேன்! அட்டகாசமான சித்திரங்கள்; வழக்கம் போலவே கானகம்... தேடல்... மாயன் கலாச்சாரம் என்று கதை நகர, நானும் ஈடு கொடுத்துக் கொண்டே சென்றேன்! ஆனால் பாதிக் கதை வரையும் எட்டிப் பிடித்தான பின்பும் கதையில் உப்போ- சப்போ இருப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை! அட... இங்கே கதை take off ஆகி விடும் ; அடுத்த கட்டத்தில் விறுவிறுப்புக் கூடி விடும் என்று நான் நம்பிக்கையோடு தொடர, நயம் மஸ்கோத் அல்வாவை வாய் நிறையத் திணித்துக் கொண்டது போலவே உணர முடிந்தது! 30 பக்கங்களைத் தொட்டிருந்த தருணத்தில் என்னால் பாண்டியராஜனைப் போல விழிப்பதைத் தாண்டி வேறெதுவும் செய்ய முடியவில்லை! கதையை நான் எப்போதுமே பணியாற்றும் வேகத்தில் படிப்பது தான் வழக்கம் ; ‘சடக்‘கென்று பக்கங்களைப் புரட்டி க்ளைமேக்ஸ் என்னவென்று எட்டிப் பார்ப்பதெல்லாம் கிடையாது! ஆனால் இம்முறையோ நேராகக் கடைசி 4 பக்கங்களைப் புரட்டினால்- கதை பரம சாதுவாக நிறைவு பெறுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது! ஒரு லட்சணமான தென்னமெரிக்கப் பெண்ணை ரோஜர் லைட்டாக ‘சைட்‘ அடிப்பதை வேண்டுமானால் இந்த சாகஸத்தின் (???) highlight என்று சொல்லிட முடியும் போலத் தோன்றியது!

ஒரு நாள் முழுக்க விளக்கெண்ணெய் குடித்த மாதிரியே சுற்றி வந்தேன்- ஏதேனும் பல்டியடித்து இந்தக் கதையை விறுவிறுப்பாக்க முடியுமாவென்று யோசித்தபடியே..! அப்புறம் இன்னொரு அரை நாளைச் செலவிட்டுப் பார்த்தேன்- தீவிர ரோஜர் ரசிகர்கள் இதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதா ? என்ற கோணத்தில் யோசிக்க ! எப்படிப் பார்த்தாலும் பறக்கும் துடைப்பம்களும்; காற்றைக் கிழித்து வரும் கலர் கலரான காலணிகளுமே மனக்கண்ணில் தோன்றி மறைந்தன! இதற்கும் மேல் யோசித்தால் 32-வது ஆண்டுமலர் தப்பான காரணங்களுக்காக நினைவில் நிற்குமொரு இதழாகி விடக் கூடுமென்ற கிலி தொற்றிக் கொள்ள- அவசரம் அவசரடாய் ஒரு மாற்றுக் கதையை தலைக்குள் தட தடவென்று பரிசீலிக்கத் தொடங்கினேன்! இதைப் போடலாமா?- அதைப் போடலாமா? என்ற சிந்தனைகள் நாலா திசைகளிலும் இறக்கை கட்ட- நான் ஊருக்குப் புறப்படும் தருணத்தில் இன்னொரு முழுக் கதையையும் எழுதி முடிப்பது இயலாக் காரியம் என்பது புரிந்தது தெளிவாக ! அப்போதுதான் என் மனக்கண்ணில் அந்த  “ஆபத்பாந்தவி” ஆஜரானார்! 

ஈரோட்டுப் புத்தக விழாவின் போது ஒரு "குட்டி" surprise ஆக வெளியிடலாமே என்ற அவாவில் XIII மர்மத்தின் தொடரின் டாப் கதைகளுள் ஒன்றான “பெட்டி பார்னோவ்ஸ்கி” யின் டிஜிட்டல் பைல்களை ஆர்டர் செய்து வந்திருந்தேன்! அதற்கான மொழிபெயர்ப்பு சென்றாண்டே தயார் என்பதால்- அடித்துப் பிடித்து, “பைங்கிளி பெட்டியை” நமது ஆண்டுமலரின் ஒரு அங்கமாக்கிட தீர்மானித்தேன் சனிக்கிழமை காலையினில் ! துவங்கியுள்ள டைப்செட்டிங் பணிகளை,செவ்வாய்க் காலைக்குள்  நிறைவுறச் செய்திடலாமென்ற நம்பிக்கை எனக்குள்ளது! So- "2 ஜாம்பவான்களும்; ஒரு சின்னப் பிள்ளையும்" என்ற combination தான் தொடரவிருக்கும் இதழுக்கு! கிராபிக் நாவல் ரகத்தில் இல்லாது சரளமாய் பயணம் செய்யும் XIII Mystery கதையிது என்பதால் நண்பர்களுக்கு இதனில் பெரியதொரு முகம் சுளிப்புக்கான முகாந்திரமிராது என்றே நம்புகிறேன்! இருந்தாலும்- ‘எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொன்னேனா?‘ என்ற வினவல்களும் எழுந்திடாது போகாது என்பதை உணா்ந்தே உள்ளேன்! ஆனால் எனக்கே படிக்க இயலாததொரு கதையை உங்கள் மீது சுமத்துவதை விட- மாற்றத்தைச் செய்து விட்டு அதன் பொருட்டு சாத்துக்கள் வாங்குவதில் தப்பில்லை என்று தோன்றியது! And நமக்குத் தான் சாத்துக்கள் சாகுபடி செய்வது சாத்துக்குடி ஜுஸ் சாப்பிடுவது போலான விஷயம் எனும் பொழுது- அதிகமாய் யோசிப்பதில் பொழுதைச் செலவிடவில்லை! 

இங்கே தோர்கலின் ஆல்பம் ஒன்றினையோ ; XIII -ன் இறுதிப் பாகத்தையோ ; ஜேசன் ப்ரைஸின் ஒரு கதையையோ இணைக்கும் வாய்ப்பும்; சிந்தனையும் எழத்தான் செய்தது! ஆனால் அவை எல்லாமே  தொடர்களின் பாகங்கள் என்பதால் அவற்றின்  ஒற்றை ஆல்பத்தை இது போன்ற compilation-க்குள் நுழைக்க வேண்டாமே என்று நினைத்தேன்! இதுவோ one-shot; இதனைத் தனியாகப் படித்தாலும் சரி; ஒரு தொகுப்பில் படித்தாலும் சரி- பெரியதொரு வேறுபாடுயிராது என்று மனதுக்குப் பட்டது! So- ‘மாற்றம் நல்லதே!‘ என்ற நண்பர்கள் காந்தக் கண்ணழகியை வரவேற்கத் தயாராகிடலாம்; ‘மாற்றம் பாதகமே‘ அணியினர் துடைப்பங்களைத்  தூசி தட்டிடலாம்!

And இதோ- ஆண்டுமலரின் அட்டைப்பட preview! அச்சுக்குத் தயாராகயிருந்த ராப்பர்களை இறுதி நிமிடத்தில் ‘பிரேக்‘ போட்டு நிறுத்தி- மாற்றங்களைச் செய்து மறுபடியும் தயாராகி வருகிறோம்! எல்லாமே ஒரிஜினல் டிசைன்களே; துளியும் மாற்றங்களின்றி! அழகாய் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது! உங்களுக்கும் அவ்விதமே தோன்றின்- சூப்பர்!

என்னவிதமான திட்டமிடல் இது?‘; ‘அட்டவணையில் மாற்றமெனில் அட்டவணையே ஏன்?‘ என்ற ரக விசாரணைகளை வாஞ்சையாய்ச் செய்திட நண்பர்கள் சிலர் தயாராகிடுவார்களென்பதில் ஐயமில்லை! ஆனால் ஒளிவு மறைவின்றி எனது இக்கட்டை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டேன்! One man editorial என்ற கயிற்றைக் கால்களில் கட்டிக் கொண்டு சாக்கு ரேஸை 48 இதழ்களின் தூரத்துக்கு ஓட முற்படும் போது நேர்ந்திடும் இடர்களும், இடறல்களும் இவை! தவிர்க்க ஆனமட்டிலும் முயற்சிக்கத் தான் செய்கிறேன்- ஆனால் சங்கடங்கள் எதிர்பாரா ரூபங்களில் துளிர் விடுவதைத் தடுக்க சில தருணங்களில் முடிய மாட்டேன்கிறது! Apologies all!

And இதோ- நம்மவர் ஜானியின் கதையிலிருந்து ஒரு பக்கப் preview! வழக்கம் போலான taut த்ரில்லர் இது!
இது பெட்டி பார்னோவ்ஸ்கியின் உட்பக்கச் சித்திரங்கள்..! செம மிரட்டல் என்று சொல்வேன் !! (ஹ்ம்ம்ம்...ஈரோடு சஸ்பென்ஸ் இதழ் போச்சா ?!!)
அப்புறம்- நமது (மறுபதிப்பு) மருந்தின் அட்டைப்படம் இதோ! முற்றிலும் புதிய ஓவியங்கள்; முழுவதுமாய் புது வசனங்கள் என இந்த இதழில் புராதன நெடி துளியுமிராது என்ற நம்பிக்கையுள்ளது எனக்கு! சென்றாண்டின் சில கசப்புகளை மறக்கச் செய்ய இந்த மிட்டாய் உதவின்- எங்கள் டீமுக்கே மகிழ்ச்சி! 
Still to do minor corrections....unfinished first look ! 
மீண்டும் சந்திப்போம் guys! எனது பயணம் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகக் கூடுமென்பதால் ஞாயிறு முழுவதும் மாயாவியின் எடிட்டிங்கிலும்; இரவுக் கழுகாரின் எடிட்டிங்கிலும் செலவிட்டாக வேண்டும்! So bye for now!

P.S : கிடைக்கும் தருணத்தில் நமது ஆண்டுமலர்கள் பற்றிய flash back -க்குள் மூழ்கிட வாய்ப்புள்ளதா ? - என்றும் பாருங்களேன் ? "The best Annual yet " என்று வோட்டளிப்பதாயின் உங்களது TOP 3 தேர்வுகள் எவையாக இருந்திடக்கூடும் ? லயன் ஆண்டுமலர்களுள் மாத்திரமே உங்கள் தேர்வுகள் ப்ளீஸ் ? 

Wednesday, June 22, 2016

ஒரு உப பதிவு !

நண்பர்களே,

வணக்கம். "என் பெயர் டைகர்" ; முத்து மினி காமிக்ஸ் ; சென்னைப் புத்தக விழா...அப்புறம் தேசாந்திரம் என்று ஜாலியாய் நாட்கள் காணாது போயிருக்க - ஜூலை இதழ்களின் deadline-க்கு ரொம்பவே ஆபத்தான உரசலில் நிற்பதை இந்த வாரம் உணர்த்துகிறது !! So ஞாயிறு முதலே ரோஜரோடும் ; பிரின்ஸோடும் ; இடியாப்ப ஸ்பெஷலிஸ்ட் ஜானியோடும் மல்யுத்தம் ஆரம்பமாகி விட்டது ! தவிர இந்த வார இறுதியில் வேறொரு திக்கில் பயணமொன்று காத்திருப்பது போல் தோன்றுவதால் டாக்புல்லை பார்த்த ஆர்டின் போல் கை கால் உதறலோடு வேலைகளுக்குள் தலைபுதைத்துக் கிடக்கிறேன் ! So கடந்த பதிவின் முழுமையையும் படித்து விட்ட போதிலும், பதிலிட அவகாசமில்லை ! Sorry guys !! 

அப்புறம் 400-ஐத் தொடக்க காத்திருக்கும் பின்னூட்ட எண்ணிக்கைக்குள் navigate செய்வது கேச எழிலுக்கு ஒத்தாசை செய்வதாய் தெரியக் காணோம் என்பதால் - இதோ பதிவின் பாகம் 2 என்ற ஏற்பாடு ! இனி வரும் நாட்களில் - ஞாயிறு & திங்களிலேயே பின்னூட்ட எண்ணிக்கை 300-ஐ தொட்டு விட்டால் - ஒரு உப பதிவை உபத்திரவ  நிவாரணியாய் களமிறக்கிவிட எண்ணியுள்ளேன் !

சனியிரவு புதிய பதிவோடு சந்திக்கிறேன் folks !! Bye until then !
Original Fleetway Cover ; First look....still to be finetuned...

Sunday, June 19, 2016

ஒரு சுவாரஸ்ய வாரம் !!

நண்பர்களே,
            
வணக்கம். செம சுவாரஸ்யமானதொரு வாரத்தின் இறுதியில் “பதிவு நேரம்” புலர்ந்திருக்க- இதோ ஆஜராகி நிற்கிறேன்! போன ஞாயிறின் பதிவிற்கு உங்களின் ரகளையான 300+ பின்னூட்டங்களும் ; தொடர்ந்த தினத்தின் மினி பதிவிற்கும் உங்களிடமிருந்து பிரவாகமெடுத்துள்ள பலதரப்பட்ட எண்ணச் சிதறல்களும் ஒரு பக்கமெனில்; “என் பெயர் டைகர்” தொடர்பாய் ஏராளமான பாராட்டுக்கள்; ஆலோசனைகள்; அறிவுரைகள்; ஆதங்கங்கள் என நமது மெயில் பாக்ஸ் நிரம்பிக் கிடந்தது! பற்றாக்குறைக்கு ABSOLUTE CLASSICS தொடர்பாய் ஏகமாய் கதைத் தேர்வுகள்; உற்சாக வரவேற்புகள்; ‘இது ஏன் இப்படி?‘ ‘அது ஏன் அப்படி?‘ ரீதியிலான கேள்விகள் என்று ஒரு கத்தை ஈ-மெயில்களும் கூட!! இன்னொரு பக்கமோ - சென்னைப் புத்தக விழாவினில் நமது இதழ்களை முதன் முறையாய் பார்க்க நேரிட்ட (புது) வாசகர்களும் சரி; ஹிந்து; பிசினஸ்லைன்; இன்டியன் எக்ஸ்பிரஸ்; தினமலர் நாளிதழ்களின் கவரேஜ் புண்ணியத்தில் தகவல் அறியப்பெற்ற வாசகர்களும் - ‘மாயாவி புல் செட் இருக்குதா?‘; ‘நாடோடி ரெமி உள்ளதா?‘ என்ற பாணியில் கணைகளைத் தொடுத்திருக்க- அத்தனை பேருக்கும் பதில் போட முனைவதற்குள்ளேயே இந்த வாரம் ஓடியே போய்விட்டது! இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் 2 x அரை கிலோ மைசூர்பாகுகள் மறந்தே போயிருக்க- ஒரு வழியாய் இன்றைய கூரியரில் அவற்றை அனுப்பியுள்ளோம்! திங்கள் காலையில் ஈரோட்டிலும்; சேலத்திலும் ‘அவுக் அவுக் அவுக்‘ என்ற ஓசை எழும் பட்சத்தில் அது நிச்சயம் 'டுரா முரா 'பூச்சியின் கைவண்ணமாக இராது என்று சொல்ல முடியும்!

ஊருக்குத் திரும்பிய கையோடு மற்ற வேலைகள் என்னை பிசியாக்கி வைத்திட- ஒரே வாரத்திற்குள் டைப்செட்டிங் பணிகள் முடிந்த நிலையில் ஜுலை மாதத்தின் சகல கதைகளும் என் மேஜையில் படையெடுத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது ! பற்றாக்குறைக்கு “ஈரோட்டில் இத்தாலி” இதழின் எல்லாக் கதைகளும் ரெடி எனும் போது அடுத்த ஒரு வாரத்திற்கு அல்லும், பகலும்- பெல்ஜிய நாயகர்களோடும்; இத்தாலிய ஸ்டார்களோடும் தான் குப்பை கொட்டியாக வேண்டும்! ‘ஹை ஜாலி...!‘ என்று மனதின் ஒரு பக்கம் சந்தோஷம் ஊற்றடித்தாலும், காத்திருக்கும் பணிகளின் விஸ்தீரணம் அந்த ஆந்தை விழிகளை இன்னமும் அகலமாய் விரியச் செய்கின்றன! 

மேஜையில் குவிந்து கிடக்கும் கதைகளின் தாயகங்களில் தான் இந்த வாரத்தின் பாதியையும் கழிக்க நேரிட்டது என்பது ஒரு ஆச்சர்யமான coincidence என்பேன் ! ஞாயிற்றுக்கிழமைகளைப் பெரும்பாலும் ஊர் திரும்பும் பயணத்திற்கே செலவிடுவது வாடிக்கை! ஆனால் இந்த முறையோ வாரயிறுதியை இத்தாலியிலேயே நீட்டிக்க வேண்டிய சூழல் என்பதால் சென்ற சனிக்கிழமை இரவைப் பதிவினில் செலவிட்டு விட்டு, ஞாயிறு பகலில் என்ன செய்வதென்று யோசிக்கத் தொடங்கினேன். ஊரைச் சுற்றிப் பார்க்கும் வயதுகளையெல்லாம் தாண்டி ஒரு மாமாங்கம் ஆகிப் போய் விட்ட நிலையில்- நமக்குத் தான் இருக்கவே இருக்கிறதே காமிக்ஸ் உலகம்! மிலான் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் காமிக்ஸ் இதழ்கள் குவிந்து கிடப்பது ஒரு பக்கமிருக்க- எனக்குத் தெரிந்த இரு பழைய காமிக்ஸ் கடைகளும் உண்டு! நேரம் கிடைத்தால் அங்கே போய் ‘ஆ‘ வென்று வாய் பார்ப்பது எனது பொழுதுபோக்கு! ஆனால் இம்முறையோ அங்கே போவதற்குப் பதிலாக- ஒரு காமிக்ஸ் நூலகத்திற்கு விசிட் அடிப்பதென்று தீர்மானம் செய்தேன். 

சாவகாசமாய் மதியமாய் அந்த இடத்தைத் தேடிப் பிடித்து உள்ளே நுழைந்த மறுகணமே எதிர்பட்டவர்கள் இத்தாலியின் ஆதர்ஷப் புருஷர்களான டேஞ்சர் டயபாலிக்கும், நமது இரவுக் கழுகாருமே! டெக்ஸின் பெரிய சைஸ் ஒரிஜினல் சித்திரங்கள் சுவற்றில் தொங்கியிருப்பதைப் பார்த்தபோதே அந்த இடத்தோடு  ரொம்பவே அன்னியோன்யம் ஆகி விட்டது போலொரு உணர்வு எனக்குள்! சின்னச் சின்ன அலமாரிகளில் சூப்பர்மேன்; பேட்மேன்; ஸ்பைடர் மேன் பொம்மைகள்; கொஞ்சம் டி-ஷர்ட்கள் என விற்பனை சமாச்சாரங்கள் முன்னறையில் இருக்க, உள்ளே சென்றாலோ ஒரு நீ-ள-மா-ன ஹாலின் மத்தியில் நிறைய மேஜைகளும் நாற்காலிகளும்! சுவரோரமாய் இருந்த புத்தக ஷெல்ப்களில் வரிசை வரிசையாய் காமிக்ஸ் அடுக்குகள்! வேண்டியதை எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து சாவகாசமாய் அத்தனையையும் படித்துக் கொள்ளலாம்- கட்டணங்கள் ஏதுமின்றி! குட்டிப் பசங்கள் கொஞ்சப் பேர் இத்தாலிய டிஸ்னி கதைகளுக்குள் லயித்துக் கிடக்க; இளைஞர்கள் நிறையப் பேர் விதவிதமான போஸ்களில் காமிக்ஸ் இதழ்களோடு மேஜை மீது சாய்ந்து கிடந்ததைப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது! 

ஹாலின் இடதுபுறமொ சின்னதொரு அரங்கு போல்- ஒரு சின்ன மேடையுடன் ஒரு அறை! ஏதேனும் காமிக்ஸ் வெளியீட்டு விழா; ஆசிரியர் / ஓவியர் சந்திப்பெனில் அங்கே அரங்கேறிடும் போலும்! அவற்றை அலங்கரித்து நின்ற போட்டோக்களைப் பார்த்த போது தான் சென்றாண்டின் ‘டெக்ஸ் கிராபிக் நாவல் காமிக்ஸ்‘ முதல் இதழின் வெளியீடு நடைபெற்றது கூட இந்த குட்டியரங்கில் தான் என்பது புரிந்தது! அண்ணாந்து பார்த்தால் நமது XIII; தளபதி டைகர் என்று பிரான்கோ-பெல்ஜிய popular நாயகர்களின் நீளமான banner-களும்! 

ஓரம் சாரங்களில் சூப்பர்மேன்; டெக்ஸ்; டயபாலிக் ஆகியோரின் கட்அவுட்கள் கம்பீரமாய் நிற்க- ஆளாளுக்கு அவர்களோடு நின்று செல்ஃபிக்கள் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர்! ‘அட... நாம் ஏன் விடுவானேன்?‘ என்று நானும் அந்த புண்ணியத்தை சேர்த்துக் கொண்டேன்! மறுவாரம் ஸ்மார்ட் ஃபோன்களுக்கென ஒரு டயபாலிக் app இந்த அரங்கில் வெளியிடப்பட இருந்ததால்- நமது கறுப்புடுப்பு நாயகர் கொஞ்சம் கூடுதல் தேஜஸோடு முறைத்துக் கொண்டிருந்தார்!
எல்லாச் சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டான பின்னே, புத்தக அலமாரிகளில் குவிந்து கிடந்த பிரதிகள் பக்கமாய் கவனத்தைத் திருப்பிட- அதன் நாயகர்களில் பலர் நமக்குப் பங்காளிகளாகவும், தோஸ்துகளாகவும் காட்சி தந்தனர்! மர்ம மனிதன் மார்ட்டின்; ஜுலியா; CID ராபின்; டெக்ஸ்; டயபாலிக்; டைலன் டாக்; மேஜிக் விண்ட் என்று நம் அணிவகுப்பின் பிரதான முகங்கள் சகலமும் அங்கே வண்டி வண்டியாய்க் குவிந்து கிடந்தன! 
வாய்ப்பை விட்டுடாதேடா கைப்புள்ளே‘ என்ற சத்தம் தலைக்குள் உரக்க ஒலிக்க, ஒரு லோடு டெக்ஸ் பிரதிகளைக் கீழறக்கி மேஜையில் அடுக்கிவிட்டு வேக வேகமாய் அவற்றைப் புரட்டத் தொடங்கினேன்! என்னதான் இன்டர்நெட்டில் ஆராய்ச்சிகள் சாத்தியமெனினும் ஒரு புத்தகத்தைப் பரபரவென்று புரட்டி, அதனை ரசித்து ; கதை பற்றியொரு அனுமானத்தை உருவாக்கிடும் அனுபவத்தின் சுலபத்தன்மையும் ; சுவாரஸ்யமுமே தனி என்பதால் கிடைத்த இந்த அழகான அவகாசத்தை வீணடிக்க மனது கேட்கவில்லை! அதிலும் டெக்ஸின் 1-200 கதைகள் மொத்தமாய் அங்கே வீற்றிருக்க- இந்தத் தொடரின் டாப் கதைகளே அவைதான் எனும் பொழுது - அவற்றைப் பரிசீலிக்கும் வாய்ப்பு ரொம்பவே ஸ்பெஷல் என்று தோன்றியது ! TEX கதைகள் எப்போதுமே ஒரு சீராய் ஆரம்பித்து ; ஒரு சீராய் முடியும் ரகங்கள் கிடையாது ;  இதில் ஆரம்பித்து, அதில் பயணித்து, வேறு எதிலோ நிறைவுறுவதே டெக்ஸின் கதை பாணிகள்! So ஒரு கதையின் தலை எங்குள்ளது? வால் எங்குள்ளது? என்ற ஆராய்ச்சியிலேயே தலைமுடி கார்சனின் பாணிக்கு மாறிப் போவது வாடிக்கை. ஆனால் இம்முறையோ அவசரம் ஏதுமின்றி; வசதியாய் ஆராய்ச்சி செய்திட அந்த ஞாயிறு பின்மதியப் பொழுது அமைந்து போக நிதானமாய் பணிக்குள் மூழ்கினேன். தற்போதைய டெக்ஸ் தொடரினில் 12 வெவ்வேறு ஓவியர்கள் பணியாற்றி வருவதால் ஓவிய பாணிகளில் ஏராளமாய் வேறுபாடுகள் தெரிவது கண்கூடு! அந்நாட்களில் ஒன்றோ இரண்டோ ஓவியர்கள் தான் செயல்பட்டிருப்பார்கள் என்பதால் பெரியளவில் திகட்டல் இராது என்று நம்பிக் கிடந்த எனக்கு அன்றைக்கு சின்னதொரு பாடம் படிக்க முடிந்தது! (துவக்க) ஓவியர் காலெப் நீங்கலாக அன்றைக்கு கூட ஏராளமானவர்கள் சித்திரங்கள் போட்டுள்ளதை- இதழ்களைப் புரட்டப் புரட்டத் தெரிந்து கொண்டேன்! So சற்றே மொக்கையான சித்திரங்கள் கொண்ட கதைகளை ‘டப்‘பென்று ஓரம்கட்டிவிட்டு பாக்கி இதழ்களைப் பேன் பார்க்கத் தொடங்கினேன்! நேரம் ஓடியதே தெரியவில்லை - எனது டயரியில், கதைகளின் பெயர்கள்; பக்க எண்ணிக்கைகள்; வெளியீட்டு நம்பர்கள் என்று நிரப்பிக் கொண்டே போனதில்! ஆறு மணி சுமாருக்கு நிமிர்ந்த பொழுது கிட்டத்தட்ட 22 கதைகளின் விபரங்கள் என்னிடம் தயாராகி இருந்தன! அடுத்த சில வருஷங்களுக்குத் ‘தல‘யின் கச்சேரிகளுக்கு நம்மிடம் ராகங்கள் ஏகமாய் ரெடி என்ற சந்தோஷத்தில் ஜுலியா; மார்டின்; டயபாலிக் பக்கமாகவும் கொஞ்சம் நேரம் செலவிட்டேன்! ஆனால் இவர்களது கதைகளின் பெரும்பான்மை one-shots; சீரான ஆரம்பமும், முடிவும் கொண்டவை என்பதால் ‘டெக்ஸ் ஆராய்ச்சி‘க்கு நிகராய் இவற்றில் மெனக்கெட அவசியமிருப்பதில்லை! Moreover இவர்கள் எல்லோருமே ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ slot-களை மாத்திரமே தமதாக்கும் ஸ்டார்கள் என்பதால் புத்தகங்களை தூக்கி ஷெல்பில் அடுக்கி விட்டு நடையைக் கட்டத் தயாரானேன்! 

வாசலுக்கருகே இருந்த வரிசையில் ஒரு டெரர் ராப்பருடன் டேஞ்சர் டயபாலிக் என்னை உற்றுப் பார்த்து நிற்க- அந்தப் பிரதியில் மட்டும் ஒன்றை வாங்கினேன். இத்தாலிய இதழை வாங்குபவனுக்கு மொழி நிச்சயம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் கல்லாவிலிருந்த கேஷியர் என்னிடம் ஆர்வமாய் தஸ்-புஸ்சென்று ஏதோ சொன்னார்! ‘ஹி...ஹி... only english!‘ என்று நான் அசடு வழிய - பக்கத்திலிருந்த  இளம் பெண், அடுத்த வாரம் அங்கே நிகழவிருக்கும் Diabolik interactive app வெளியீட்டு விழாவுக்கான குட்டி இன்விடேஷன் அட்டையை என்னிடம் தந்து விட்டு- ‘டயபாலிக் ரசிகரெனில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!‘ என்றார்! பூம்-பூம் மாடு போல தலையாட்டி நின்ற போதே- ‘Diabolik- for your collection?’ என்று கேட்டார்! ‘Yes and no...! டயபாலிக் எங்கள் ஊரில் தமிழ் பேசுவதுண்டு; நாங்கள் அவரது கதைகளை வெளியிட்டுள்ளோம்!‘ என்று சொன்ன மறுநொடி அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படியொரு பரபரப்பு ; ஆனந்தம்! பக்கத்திலிருந்த கேஷயரிடமும், சகப் பணிப்பெண்களிடமும் ‘சிக்கி-முக்கி‘ என்று வேக வேகமாய்த் தகவலைப் பரிமாற- ooh... ooh... என்று அவர்களது உதடுகள் வியப்பில் விரிந்தன! எங்கள் ஊரில் இவரைக் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றுவதும் நடைமுறையே என்று சொல்லியிருந்தால் அந்த உதடுகள் வேறு விதமாய் உருமாற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதால் சாலைக்குச் சென்று பஸ்ஸைப் பிடிக்க விடைபெற்றுப் புறப்பட்டேன்!  ரூமுக்குத் திரும்பும் போது- ஞாயிறை உருப்படியாய் பிரயோஜனப்படுத்திய திருப்தி என்னை நிரப்பியிருந்தது!


மறுநாள் மற்ற வேலைகள் மாமூலாய் துவங்கிட, செவ்வாயன்று ஊர் திரும்புவதாய் புரோக்ராம்! ஆனால்- ‘ஆனது ஆச்சு; இன்னுமொரு அரை நாள் மெனக்கெட்டால் படைப்பாளிகளை பெல்ஜியத்தில் சந்தித்து விடலாமே!‘ என்ற சபலம் சப்புக்கொட்டச் செய்ய- ஏதாவது புட்போர்ட் அடிக்க வாய்ப்புள்ளதா என்ற இறுதிக்கட்ட விமானக் கட்டணங்களை நோட்டமிட்டேன்! என் யோகத்திற்கு 3000 ரூபாய் சுமாருக்கெல்லாம் அதிகாலை விமானத்தில் டிக்கெட்டிருக்க- யோசிக்காமல் மூட்டையைக் கட்டினேன். அங்கே பெல்ஜியத்தில் மூன்றே மணி நேரம் தான் நேரமிருக்கும் என்றாலும்- அதற்குள் ஆனமட்டும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று அவசரம் அவசரமாய் ஒரு அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு வைத்தேன். பாரிசிலும் சரி, ப்ரஸ்ஸல்ஸிலும் சரி- ‘வாம்மா மின்னல்!‘ பாணியில் படைப்பாளிகளின் அலுவலகத்தில் திடுதிடுமென்று குதிப்பது எப்போதுமே என் வாடிக்கை என்பதால் அவர்கள் புன்னகையோடு ஓ.கே. சொன்னார்கள்! So ‘தம்‘ கட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் அவர்கள் முன்னே ஆஜரானேன் புதன் காலையில்! 
மலையெனக் குவிந்து கிடக்கும் ஆல்பம்கள்; வேற்று மொழிகளில் பதிப்புகள்; புது வரவுகள்; பழம் நினைவுகள் என படைப்பாளிகளின் அலுவலகங்கள் எப்போதுமே என் மூச்சைத் துரிதமாக்கும் சமாச்சாரங்களோடு நிறைந்து கிடப்பது வழக்கம்! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல தான்! வெண்கலக் கடையில் எதுவோ நுழைந்தது போல- பர பரவென்று இங்கும் அங்குமாய் முட்டைக் கண்களைச் சுழல விட்டுக் கொண்டே முடித்த மட்டிற்கும் உள்வாங்க முயற்சித்தேன்! சீன மொழியில் சமீபமாய் லக்கி லூக் இதழ்கள் வெளிவரயிருப்பதாகப் போன தடவையே சொன்னார்கள்! லக்கியும், டால்டனும், ஜாலி ஜம்பரும் ஜாக்கி சான் பாஷை பேசுவதைப் பார்க்க அட்டகாசமாகயிருந்தது! இன்னொரு பக்கமோ லக்கியின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொருட்டு பிரெஞ்சிலும், ஜெர்மன் பாஷையிலும் வெளியாகியிருந்த ராட்சஸ சைஸிலான ஆல்பங்களைப் பார்க்க முடிந்தது! கலரிலும் சரி; black & white லும் சரி- புது பாணியிலான லக்கி சும்மா தக தகத்தார்! மெய்யாகவே b&w-ல் இந்த சாகஸம் செமையாகத் தோற்றம் தருகிறது! "விற்பனை எவ்விதமுள்ளது- லக்கியின் இந்தப் புதுப்பாணிக்கு?!" என்று கேட்டு வைத்தேன்! முகம் நிறையப் புன்முறுவலோடு- ‘ஏப்ரலிலிருந்து இதுவரைக்கும் 6 முறைகள் மறுபதிப்பு செய்து விட்டோம்!‘ என்ற போது பொறாமையாய் இருந்தது அவர்கள் தேசத்துக் காமிக்ஸ் காதலைப் பார்த்து!

இன்னொரு பக்கம் நமது ஞாபக மறதிக்கார நண்பரின் புது ஆல்பம் ரிலீஸ் தொடர்பாய் போஸ்டர்கள்; கட் அவுட்கள் நின்றன- XIII என்ற முத்திரையைப் பெரிதாகத் தாங்கிக் கொண்டு! ‘இந்தச் சுற்று இப்போதைக்கு ஓவர்.... அடுத்து எப்போது?‘ என்று கேட்டேன்! ‘For sure...!’ என்று மட்டும் பதில் சொன்னார்கள்! எப்போது? யார் கதாசிரியர் / ஓவியர் என்பதெல்லாம் தீர்மானமாகவில்லை ; ஆனால் உடனடியாக இல்லாவிட்டாலும்- அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் “படலம் தொடரும்!” என்ற சேதி கேட்ட போது கலவையான உணர்வுகள் எனக்குள்!! And 2017-ன் நடுவினில் XIII மர்மம் தொடரினில் அடுத்த spin-off ஆல்பம் தயாராகிடுமாம்! அதன் நாயகரோ- கால்வின் வாக்ஸ்! மொத்தம் 13 spin-off ஆல்பங்கள் என்பது தான் இதனின் திட்டமிடல்! “கால்வின் வாக்ஸ்” நம்பர் 10 என்பதால் இதன் பின்னே மேற்கொண்டு  3 spin-offs வந்திடுமாம்! இது வரையிலான டாப் விற்பனைகள்- மங்கூஸ்; பெட்டி பார்னோவ்ஸ்கி & கர்னல் ஆமோஸ் என்றார்கள்! இப்போது வெளியாகியுள்ள XIII-ன் இறதி ஆல்பத்தில் அரை மில்லியன் பிரதிகள் (500,000) அச்சிட்டுள்ளனராம்! காது வழியாகப் புகை வராத குறைச்சல் தான் எனக்கு!

புதிதாய் Sci-fi ரகக் கதைகளை முயற்சித்துப் பார்க்கலாமே? என்று சிலபல புது ஆல்பம்களை என் முன்னே நீட்டிய போது ‘சந்தா X-Y-Z’ என்று என்னென்னவோ எண்ணங்கள் எனக்குள் கபடி ஆடத் தொடங்கின! ‘இதை வாங்கிடுவோமா?; ‘அதற்குக் கான்டிராக்ட் போட்டு விடுவோமா?‘ என்று ஆசை பொங்கியெழுந்தாலும்- மண்டையில் என்னை நானே நாலு தட்டு தட்டிக் கொண்டு நிதானம் கொள்ள முயற்சித்தேன்! மாதிரிகளைக் கொண்டு செல்கிறேன்; நிச்சயம் யோசிப்பேன்!‘ என்று சொல்லி வைத்தேன்! புதிதாய் வெளியாகிடவுள்ள சில கிராபிக் நாவல்களின் அட்வான்ஸ் பிரதிகளைக் காட்டிய போது அந்த சித்தரத் தரங்களைப் பார்த்து ஸ்தம்பித்தே போனேன்! ரொம்ப dark ஆனதொரு கதைக்களம் என்று மேலோட்டமாய் அவர்கள் விவரித்ததைக் கேட்ட போது என் நாடித்துடிப்பு எகிறத் தொடங்கியிருந்தது! ‘ஆண்டவா.... இவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டு செல்ல ஒரு வாய்ப்புக் கிட்டினால் இந்த ஜென்மத்துக்கு ஒரு சிறு அர்த்தம் கிட்டிடுமே! என்ற தவிப்பு! கொஞ்சமே கொஞ்சமாய் பரிசோதனைகளுக்கென ஒரு களமும், காலமும் புலர்ந்திட்டால் என்னென்னவோ சாத்தியமாகிடும் folks! இவை எல்லாமே நம் மாமூலான அளவுகோல்களில் 100/100 வாங்கக் கூடிய படைப்புகளாக இராது போகலாம் தான்; ‘பொழுது போக்கு‘ என்ற ரீதியில் நாம் பரிச்சயம் கண்டிருக்கும் பாணிகளில் இவை அடங்கிடும் வாய்ப்புகள் சொற்பமே! ஆனால் காமிக்ஸ் படைப்புலகின் உச்சபட்ச சில கற்பனைகளின் வளங்களை தரிசித்த ஆத்மதிருப்தி நமதாகலாம்! என்றேனும் இந்த வளங்களையும் வாஞ்சையோடு அரவணைக்க நாம் அனைவருமே, சந்தோஷமாய் தயாராகும் நாள் விடியுமென்ற நம்பிக்கையோடு அந்த மாதிரிகளை அவர்களிடம் திரும்பத் தந்தேன்!

சரி... நாளைய திட்டமிடல்கள் ஒருபக்கமிருக்க, தற்போதைய பசிக்கு என்ன பதில்? என்று வழக்கம் போல கௌ-பாய்; டிடெக்டிவ் என்ற தேடல்களை தொடர்ந்தேன்! பிரமிக்கச் செய்யும் ஓவியத் தரத்துடன் இரு வித்தியாசமான கௌ-பாய் தொடர்கள் கண்ணில் பட்டன! ஏற்கனவே அவற்றுள் ஒரு தொடர் பற்றிய ஆராய்ச்சியோடே நான் தயாராக இருந்ததால்- அதனை ‘பட்‘டென்று ‘டிக்‘ அடித்து விட்டேன்! அந்தக் “குதிரைக்காரர்” 2017-ன் highlight ஆக இருந்திடுவார்! டிடெக்டிவ் தொடர்கள்... ஆக்ஷன் தொடர்கள் பற்றிய பேச்சிலிருந்த பொழுது- வேய்ன் ஷெல்டன் மேற்கொண்டும் தொடரக் கூடுமென்று அவர்கள் சொன்ன போது ‘அட்ரா சக்கை... அட்ரா சக்கை‘ என்று உள்ளுக்குள் துள்ளியது! இந்தா- அந்தாவென்று அவர்களது நேரத்தில் 120 நிமிடங்களை ஸ்வாஹா செய்திருந்தேன் அந்நேரத்திற்குள்! புறப்படத் தயாரான சமயம்; என் கையிலிருந்த ஒரு வண்டி ஆல்பம்களைச் சுமந்து செல்ல ஒரு சிகப்புத் துணிப்பையைத் தந்தார்கள்- லக்கியின் படத்தோடு! ஸ்டைலாக அதனுள் இதழ்களைத் திணித்துக் கொண்டு விடைபெற்ற பேது- புஜங்கள் சுகமாய் கனத்தன! நான் சென்றிருந்த முக்கியப் பணி 50-50 என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருப்பினும், சைக்கிள் கேப்பில் சிக்கிய காமிக்ஸ் ஆராய்ச்சிப் பொழுதுகள் என்னை நிறைவாக உணரச் செய்து கொண்டிருந்தன !

வியாழன் மதியம் சென்னை திரும்பிய போது வெயிலும், மாமூலான பணிகளும், வரவேற்று நின்றன! ஊரில் ஒரு மூட்டைக் கதைகள் - அடுத்த கட்ட எடிட்டிங்கை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றன என்று மைதீன் தகவல் சொன்ன போது கண்ணில் பூச்சி பறப்பது  போல் தோன்றியது ! 
அதன் மத்தியிலோ- பதிவிலும், நமது மெயில் பாக்ஸிலும் சென்னை உஷ்ணத்துடனான எண்ணச் சிதறல்கள் சில பல! ‘இது Absolute Classics–ஆ?‘; ‘இதை எப்படித் தேர்வு செய்யப் போச்சு?‘; ‘அதை தேர்வு செய்யாதது ஏனோ?‘; ‘இந்த விலை சரிதானா?‘; "அது க்ரே மார்க்கெட்...இது புல்லு மார்க்கெட் !" ‘இதற்கு hard cover கேட்டோமா?‘; ‘விற்பனையாளர்களிடம் பேசி நிறைய விற்பனை செய்ய வழி பார்க்கலாமே?‘ ’80,000 பிரதிகள் விற்றவர்களாச்சே நீங்கள் (????? எந்த நூற்றாண்டில் ???) "கூடுதலாய் அச்சிட்டு... பலரையும் சென்றடைய வழிபார்க்க வேண்டாமா?‘ என்ற ரீதியில் ஆதங்கங்கள்; அர்ச்சனைகள்; அறிவுரைகள்! ‘பதில் போட மாட்டீர்கள் என்று தெரியும்- ஆனால் நான் எழுதாமல் இருக்க மாட்டேன்!‘; ‘இதை நினைத்தால் பயமாக உள்ளது- அதைப் பார்த்தால் பீதியாக உள்ளது‘ என்ற மெயில்கள் இன்னொரு பக்கம்! திங்கள் மாலைக்குப் பின்பாக கம்ப்யூட்டர் பக்கமே வர இயலாது தெருத் தெருவாய் சுற்றிக் கொண்டிருப்பவனுக்கு ஒருசேர இந்த மின்னஞ்சல் மழையைப் பார்த்த போது எழுந்த முதல் சிந்தனையே- ‘இன்னும் எத்தனை மாமாங்கங்கள் கழிந்தாலுமே இந்த நித்திய விசாரணை- நிரந்தரக் குற்றவாளி' syndrome-லிருந்து எனக்கு விடுதலையிராது போலும் என்பது தான்! புதிதாய் ஒன்றை முயற்சிக்கும் முன்பாக அதன் சாதக பாதகங்களை எங்களது பார்வையில் அலசிவிட்டே களமிறங்குகிறோம்! நம்மிடமுள்ள பணத்திற்குள்; ஆற்றல்களுக்குள் இயன்ற உச்சத்தைத் தொட்டுப் பார்க்க ஒவ்வொரு நாளும் முயற்சித்து வருகிறோம்! நம் பயணப் பாதையில் ஒளிவுமறைவுகள் வேண்டாமே என்பதால் இயன்றவரைக்கும் நம்மைச் சுற்றிய சூழல்களை; நிகழ்வுகளை பகிர்ந்திடுவதில் நான் தயங்குவதில்லை! ஆனால் தத்தம் பார்வைக் கோணங்களில் சரியெனப்படும் தேர்வுகளோ- தீர்மானங்களோ எடுக்க என்னால் இயலாது போகும் மறுநொடியில் விரோதப் பார்வைகளும், பரிகாசங்களும், எள்ளல்களும் ரவுண்ட் கட்டத் தொடங்கி விடுகின்றன! ABSOLUTE CLASSICS சமாச்சாரத்தில் நிகழ்வதும் அதுவே !

விமர்சனங்களோ, மாற்றுக் கருத்துக்களின் உஷ்ணமோ நமக்குப் புதிதல்ல ! சொல்லப் போனால் கடந்த 4+ ஆண்டுகளில்,இங்கும், வேறெங்கிலுமோ "காமிக்ஸ் நேசம்" + "காமிக்ஸ் மீதான அக்கறை" என்ற முகாந்திரங்களில் நண்பர்களிடம் நான் வாங்கியுள்ள சாத்துக்கள் + ஏச்சுக்களை ஒரு பட்டியலிட்டால் அது NBS-ஐ விடக் கனமானதொரு புத்தகமாகி விடும் ! ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றைத் தாண்டிச் செல்லும் வலிமையை எனக்கு நல்குவது இன்னமும் ஒவ்வொரு இதழினிலும் பணியாற்றும் பொழுதும் கிடைக்கும் அந்த உற்சாகமும், உத்வேகமுமே ! ஆனால் "என் எண்ணத்தோடு ஏற்பில்லை - so நிச்சயம் நீயொரு   உதவாக்கரையே !" என்ற மேக்கி நூடுல்ஸ் ரகத் தீர்ப்புகளும், உடனடிக் கண்சிவத்தல்களும் ஒரு கட்டத்துக்கு மேல் அயர்ச்சியையே ஏற்படுத்துகின்றன ! உங்களில் பலருக்கும் ஏதோவொரு சிறு விதத்தில் நானொரு முகம் பார்க்கும் ஞாயிறுக் கண்ணாடி என்பதால் - எனது சங்கடங்களையும், இயலாமைகளையும் அவ்வளவாய் வெளிக்காட்டிக் கொள்வதில்லை ! தலைமேல் பாறாங்கல்லே கிடக்கும் வேளைகளில் கூட அதனை சுமையாய் கருதிட அவகாசம் எடுத்துக் கொண்டதில்லை ! உங்கள் ரசனைகளே எனது ரசனை - and vice versa தான் நிஜமென்ற கற்பனையில் நாட்களைத் தள்ளிக் கொண்டு வந்துள்ளேன் ! ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு தருணத்திலும், ரசனைகளில் நாம் எல்லா வேளைகளிலும் ஒரே பக்கத்தில் இல்லை என்பது புரிகிறது ! நிச்சயமாய் ஆளுக்கொரு ரசனை / தேர்வு / விருப்பம் இருக்கலாம் - தவறில்லை தான் ; ஆனால் எனது தேர்வுக்குப் பின்னே ஒரு மெய்யான காரணம் இருக்கக்கூடுமென்ற சிந்தனைக்கு ஒரே ஒரு நொடி ஒதுக்கும் பொறுமை நம்மில் பலருக்கும் இருப்பதில்லையே ? 

லக்கி லூக்கின் இதழுக்கென "ஒரு கோச் வண்டியின் கதை" யினை நான் தேர்வு செய்ததற்கான முழுக் காரணத்தை இதழ் வெளியாகும் தருணம்  புரிந்து கொள்வீர்கள் என்பது திண்ணம் ; ஆனால் அதன் பொருட்டு இன்று எனக்கு நல்கப்படும்  "முதல் மரியாதைகளை" சமன் செய்திட பின்னோக்கிச் சென்றிடும்  கால இயந்திரங்கள் ஏதேனும் இருக்குமா - தெரியவில்லையே ! And "ஜெஸ்ஸி ஜேம்ஸ் " உங்களின் பெரும்பான்மையின் தேர்வே ! இதில் நான்உடனடி வில்லனாகிப் போவதன் வழிவகைகள் என்னவோ - சிந்திக்கிறேன் ! கருத்துச் சுதந்திரம் உண்டு தான் ; உங்கள் காமிக்ஸ் நேசத்தை யாரும் குறைவாய் மதிப்பிடப் போவதுமில்லை தான் !  ஆனால் அவையே என் தொழிலில் எந்தப் பொருளை - எவ்வளவு  ;தயாரிப்பது ? எவ்விதம் - யாருக்கு விற்பனை செய்வது ? ; என்ன விலை நிர்ணயம் செய்வது ? என்பதில் எனக்கிருக்க வேண்டிய உரிமைக்குள் ஊடுருவும் பட்சத்திலும் நான் அமைதியாய் தலையாட்ட வேண்டுமென எதிர்பார்த்தல் நியாயம் தானா ? 
  • நானாய்த் தீர்மானம் செய்தால் - நானொரு சர்வாதிகாரி ; திமிர் பிடித்தவன் !
  • தீர்மானத்தை வாசகர்களிடமே விட்டால் நானொரு பூம்-பூம் மாடு ; தலையாட்டிப் பொம்மை  !!
  • உங்களுக்குப் பிடிக்கா தீர்மானம் அமலாகிட்டால் நானொரு மடையன் ! 
  • பல்லைக் கடித்துக் கொண்டு இலட்சங்களின் பணச் சுமைகளை தாண்டிடும் ஒரு நூறு தருணங்களில் வேலையைச்   செய்யும்  எடிட்டர் மாத்திரமே  நான் ! 
  • ஒரு கூரியர் டப்பாவில் பத்திருபது ரூபாய் விரயமாவதைத் தவிர்க்க எண்ணிட்டால் நானொரு மொள்ளமாறி ! 
  • மறுபதிப்பு முயற்சியினை அறிவிக்கும் தருணம் நானொரு ஜீனியஸ் !
  • அதனில் உங்களுக்கு வசதிப்படா இதழ் தேர்வாகும் வேளையில் நானொரு ஞானசூனியம் ! 

நிச்சயமாய் உலக நாயகன் கூடத் திணறிப் போய்விடுவார் - நண்பர்களில் ஒருசாரார்  அவ்வப்போது எனக்குத் தந்திடும் கணக்கிலா வேஷங்களைப் புனைந்திட எண்ணினால் ! 

ஆனால் மாறுபடும் இந்தச் சூழல்கள் என்னை தளரச் செய்வதில்லை ; மாறாக நண்பர்களது அபிப்பிராயங்களைத் தவறென நிரூபிக்கும் வேகமே ஊற்றெடுப்பது வழக்கம் ! இப்போதுகூட உறுதியோடு சொல்கிறேன்  - லக்கி டைஜெஸ்டின் முதல் இதழ் வெளியான பின்னே  எனது தேர்வுகளும், விலைகளும், திட்டமிடல்களும் தவறென உங்களுக்குத் தோன்றிடும் பட்சங்களில் - உங்களின் பாக்கிப் பணம் முழுவதையும் refund செய்திடத் தயாராக இருப்போம்  ! And இதர இதழ்களின் கதைத் தேர்வுகள் (பிரின்ஸ் ; சிக் பில் ; டெக்ஸ்வில்லர்) நிறைவுறும்   அடுத்த ஓரிரு வாரங்களிலேயே உங்களுக்கு அவற்றில் ஏற்பில்லை எனும் பட்சத்திலும் கூட - உங்கள் முன்பதிவுத் தொகையினை திரும்பக் கோரிப் பெற்றுக்கொள்ளலாம் ! refunds.lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரே ஒரு மெயில் - உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களோடு தட்டி விட்டால் - மறுநாளே உங்கள் பணம் உங்களைத் தேடி வந்திருக்கும் ! உங்களுக்குப் பிடித்தமில்லா இதழ்களை உங்கள் தலைகளில் கட்டி, அதனில் ஒரு கோட்டை கட்டிக் குடியிருக்கும் சொகுசு நிச்சயமாய் என் குறிக்கோள் கிடையாது......குடியிருக்கும் வீடும், பணியாற்றும் அலுவலகமும் வங்கியில் அடமானமாய் நின்றாலும், சக்தியுள்ள வரை இந்தப் பயணத்தைத் தொடர்வது மாத்திரமே ! ('அடடா..செண்டிமெண்ட் சீன போட்டு நெஞ்சைத் தொட்டுட்டீங்களே ஆசானே !" என்ற வரிகளை நாளை டைப் செய்யும் சிரமத்தை "மாணாக்கர்களில்"  சிலருக்கு வைக்காது - அதையும் கூட நானே டைப் அடித்து விடுகிறேனே - கட் & பேஸ்ட் செய்துகொள்ள வசதியாய் !!)

1000 / 1200 என்ற சர்குலேஷனில் வழக்கமான விலைகள் சாத்தியமில்லை என்றால் - 'கூடுதலாய் விற்கப் பார் !!" என்ற அறிவுரைகள் !! ஏழு இலக்கக் கடன்தொகைப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு அதனில் பாதி போல தேறவே தேறாது என்ற "குதூகலத்தை" நான் உங்களிடம் பங்கிடாது போவது என் தவறோ - என்னவோ ?! "நான் ஹார்ட்கவர் கேட்டேனா ?" என்ற கேள்வி எழுப்பிய கையோடே - "மாடஸ்டிக்கு ஹார்ட் கவர் ஏன் கிடையாது ?" என்ற கேள்வியும் ! கையால் பைண்டிங் செய்யும் வழிமுறைகளில் வெறும் 64 பக்கங்களே கொண்ட இதழுக்கு ஹார்ட் கவர் போடுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டென்று நான் விளக்க நேரம் எடுத்துக் கொண்டால் - "சப்பைக் கட்டு கட்டுகிறான் !" என்ற எள்ளல்கள் ! சரி...அவர்களே புரிந்து கொள்வார்களென்று அமைதி காத்தால் - "பதில் போட இங்கிதமறியா திமிர் பேர்வழி !" என்ற ரௌத்திர மின்னஞ்சல்கள் !"குவிந்து கிடக்கும் பணிகளை தாமதங்களின்றிச் செய்திடவே நாக்குத் தொங்கிப் போகிறது ; இதனில் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் பொறுமையாய், விளக்கமாய் பதில் எழுத அவகாசம் கிட்டுவதில்லை !" என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்ற எனது எதிர்பார்ப்பில் தவறே போலும் ! "சந்தா Z போடும் வழியைப் பார்க்காது - இதற்குள் தலை நுழைக்கவில்லை என யார் அழுதது ? " என்ற கேள்விகள் ------- பணிச்சுமையின் சூழலும்,, ஆண்டின் மத்திய பொழுதின் பணத் திட்டமிடல்களும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்ற பதிலை நான் ஓராயிரம் முறைகள் ஒப்பித்து விட்ட பின்னேயும் !

நிறைய கடின தினங்களைத் தாண்டி வந்துள்ள போதிலும், புன்னகையைத் தொலைக்காதிருக்க ஆண்டவன் இதுவரை வரம் தந்துள்ளார் ! பொதுவில் வைத்து எனது யோக்கியமும், நோக்கங்களும்  விவாதப் பொருட்களாகும் இந்த நூற்றியோராவது வேளையிலும் அந்த வரம் தொடரக் கோரி பிரார்த்திக்க மட்டுமே தோன்றுகிறது ! இப்போது சொல்லுங்களேன் - மெய்யாகவே செம சுவாரஸ்யமான வாரம் தானே இது ? 

அட...ஊருக்குத் திரும்பிய பின்னே ஒரு வேண்டுதலின் பொருட்டு கோவிலுக்குப் போகலாமென வெளியூருக்கு சனி மாலையில் புறப்பட்டால் - ஏழு மணிவாக்கில் ஒரு நண்பரிடமிருந்து மின்னஞ்சல் - "ப்ளாக் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன் - நிலவரம் சரியில்லை" என்று ! கோவில் வாசலில் நின்று போனை உருட்டி நெட்டுக்குள் புகுந்தால் ஆன்மீகம் சார்ந்த கருத்து மோதல்களைக் காண நேரிட்டது irony of life என்று தான் தோன்றியது ! எனக்கு சாத்தியமான 2G இன்டர்நெட் நல்கிய மொக்கை ஸ்பீடில் இந்த சர்ச்சை எங்கே-எவ்விதம் துவங்கியது என்ற ஆய்வைச் செய்ய சாத்தியமாகிடவில்லை என்பதால் - மேற்கொண்டு உஷ்ணப் பரிமாற்றம் வேண்டாமே என்ற எண்ணத்தில் முதல்முறையாய் நமது பதிவுப் பக்கத்திற்கு கமெண்ட்ஸ் moderation -ஐ அமல் செய்தேன் - தற்காலிகமாய் ! வீடு திரும்ப 11 மணி ஆகிப் போக, அதன் பின்னே புதுப் பதிவைத் தயார் செய்வதிலேயே இத்தனை நேரமாகிவிட்டது ! 

ஆன்மிகம் சார்ந்த கருத்து இங்கே பதிவான தருணமே அதனை நீக்காது போனது நிச்சயம் என் தவறே ! அந்தப் பின்னூட்டத்தை முழுவதும் படிக்காது நுனிப்புல் மேய்ந்து சென்ற அசட்டையின் பலனாய் இன்றைக்கு இந்த சர்ச்சை வேரூன்றி நிற்கிறது என்பதால் - அதன் பொருட்டு எனது ஆழ்ந்த மன்னிப்புக் கோரல்கள் ! ஆன்மீகத்தில் ; கடவுள் நம்பிக்கையில் - எனக்கு மிகுந்த பற்றும் ; போற்றுதலும் உண்டென்பதில் ஒளிவு மறைவுகள் கிடையாது ! கடவுள்மறுப்புக் கொள்கை ஒரு உரிமையெனில் ; அதன் மறு பக்கமும் ஒரு சம உரிமையே ! ஆனால் நாம் நேசிக்கும் காமிக்ஸ் - மதமோ ; ஜாதியோ அறியாதென்பதால், அவையிரண்டுக்குமே இந்தத் தளம் ஒரு தாயகமாகிட வேண்டாமே ? அந்த ரீதியில் யார் பதிவிட்டிருப்பினும், அதில் நிச்சயம் எனக்கு உடன்பாடில்லை ! நாளைய பொழுது கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் நேரம்  சென்ற பதிவினுள் புகுந்து சலனம் ஏற்படுத்தும் பின்னூட்டங்கள நிச்சயம் நீக்கி விடுவேன் ; அதுவரை அவற்றை ஓரம் கட்டிவிடுங்களேன் - ப்ளீஸ் ?

புதிய நாயகர்களுள் ஓரிருவரை அறிமுகம் செய்திடவும் ; இன்னுமொரு இதழின் அறிவிப்பினைச் செய்திடவும் இந்த ஞாயிறைப் பயன்படுத்திட எண்ணியிருந்தேன்!; ஆனால் அதற்கென  சற்றே சௌஜன்யமான வேளையினை எதிர்நோக்கிடுவது தேவலை என்பதால் -  இப்போதைக்கு விடைபெறுகிறேன் folks ! ஆர்வமிகுதியில் ஏதேதோ செய்துவிட்டு விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்குவதை விட, தட்டுத் தடுமாறியாவது நிதானமான வியாபாரியாகிட முயற்சிப்பதே இனி வரும் நாட்களின் கட்டாயமெனில் - அந்தப் பள்ளிக்கூடம் பக்கமாய் ஒதுங்க எத்தனிக்க வேண்டும் போலும்  ! ஒரு ஸ்லேட்டும்  , பல்ப்பமும் இருந்தால் - யாராச்சும் இரவல் தாருங்களேன் guys - ஆட்டையைப் போடாது நிச்சயம் திரும்ப ஒப்படைத்து விடுவேன் !! 

Bye for now !! See you around folks ! 

P.S : Comments moderation அமலில் இல்லை !  எப்போதும் போலவே பின்னூட்டமிடலாம் ! 

Monday, June 13, 2016

"ஜெ.ஜே" -க்கு ஜே !!

நண்பர்களே,

வணக்கம். ஒற்றை நாளில் 340+ பின்னூட்டங்களோடு நேற்றைய பதிவை அமர்க்களப்படுத்தி விட்டீர்கள் ! கூடவே LOAD MORE தலைநோவும் கைகோர்த்துள்ளதாலும், ABSOLUTE CLASSICS -ன் இரண்டாவது லக்கி லூக் கதையின் தேர்வையும் உறுதிப்படுத்தும் விதமாயும் இதோ ஒரு மினி , புதுப் பதிவு ! 

By a distance , ஜெஸ்ஸி ஜேம்ஸ் அந்த இரண்டாவது slot -ஐ தனதாக்கிக் கொள்வதால் - செப்டெம்பரில் "ஒரு கோச் வண்டியின் கதை" + :ஜெஸ்ஸி ஜேம்ஸ்" இணைந்த ABSOLUTE CLASSICS இதழானது வெளிவரும் ! So பாக்கிக் கதைகளின் தேர்வுகளை 'நச்'என்று தேர்வு செய்தீர்களெனில் கச்சேரி களைகட்டத் தொடங்கி விடும் !

நேற்றைய பொழுது - சமீபமாய் இங்கே வெளிவந்துள்ள "லக்கியைப்   போட்டுத் தள்ளியது யார் ? " புது கிராபிக் காமிக்ஸின் இத்தாலியப் பதிப்பைப் பார்த்தேன் ! நமது ஒல்லிப்பிச்சான் கொஞ்சம் சத்துப் பிடித்து, 'ஜம்'மென்று சுற்றி வருகிறார் ஒரு சீரியஸ் நாயகரைப் போல !! இதனை மொழிபெயர்க்கக் கோரியுள்ளேன் நம்மவர்களிடம் - ஆங்கிலத்தில் படித்துப் பார்த்து விட்டு இது பற்றியொரு தீர்மானத்துக்கு வரலாம் என்றுள்ளேன் !

திரும்பிய திசையெல்லாம் கடைகளில் வண்டி வண்டியாய் காமிக்ஸ் என்று ரொம்பவே ஜொள்ளு விடச் செய்யும் நகராக இது உள்ளது !! அந்த அந்தரத்தில் ஆரஞ்ச் சாமியைப் பார்த்து கொஞ்சம் தொழில் ரகசியத்தைத் தெரிந்து கொண்டால் நாமும் கூட இங்கே குடி பெயரலாம் போலுள்ளது !! 

And மைசூர்பாகு - ஆளுக்கொரு அரைக்கிலோ பார்சல் - சேலம் & ஈரோடுக்கு !! Bye all !

P.S : இன்றைய  (ஹிந்து) BUSINESS LINE செய்தித்தாளில் நம் இதழ்கள் பற்றியதொரு coverage வந்துள்ளதென நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் ! அதன் லிங்க் இருப்பின், இங்கே போட்டு விடலாம் - நாம் எல்லோருமே பார்த்திடும் வகையில் ! BUSINESS LINE -க்கு நமது நன்றிகள் !! 

Sunday, June 12, 2016

பயணத்தில் ஒரு பதிவு !

நண்பர்களே,

வணக்கம். கால்பந்து ஜூரம் அனலாய் அடிக்கும் ஐரோப்பாவில் இந்த வாரயிறுதியினை ஒப்பேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் ! நமது மிஷினரி இறக்குமதிப் பிரிவின் சார்பில் இந்தப் பயணம் ஒரு வாரத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் ! ஆனால் ஒரு டஜன் இதழ்கள் / நண்பர்கள் சந்திப்பு / புத்தக விழா ஏற்பாடுகள் என அத்தனையும் அந்தரத்தில் தொங்கி நின்ற  தருணம் எனக்கு மூட்டையைக் கட்டவே ரசிக்கவில்லை ! ஆண்டவனும் ஒரு காமிக்ஸ் காதலர் என்பதில் ஐயமில்லை என்பதால் - எனது வேலையை  இந்த வாரம் வரை ஜவ்விழுக்க சாத்தியமாக்கித் தந்துவிட்டார் ! And அந்தப் புண்ணியத்தில் நமது கோமானின் வேட்டை நகரில் நேற்றைய பொழுதையும், டெக்சின் தாய்வீட்டில் இன்றைய நாளையும் கடத்திக் கொண்டுள்ளேன் ! கோடையின் வரவும், வாரயிறுதியின் முதல் நாளும் ; யூரோ கோப்பை புட்பால் போட்டிகளும் கைக்கோர்த்து நிற்க - ஊரே திருவிழா கோலம் பூண்டு நிற்க -எனக்கோ மண்டைக்குள் "பதிவு போட்டாகணுமே கோப்பால் !" என்ற குடைச்சல் ! So மிலான் நகரின் மையத்தில்  எழுந்து வரும் பரபரப்பின் ஓசைகளை காதுக்குள் போட்டுக்கொள்ளாமல் சிக்கியதொரு காகிதக் கத்தையில் எழுதிட மிலானின்  அசாத்தியமான தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் ! பதிவின் சாரம் தெற்கே புறப்பட்டு, கிழக்கே பயணமாகி , வடக்குப் பக்கமாய்ப் போய் ; மேற்கே U-டர்ன் அடிக்கும் விதமாய் இருப்பின், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்களேன் - இந்த ஒருமுறை மட்டும் ! 

First things first !! இன்னமும் ஒரே நாள் மீதமிருக்கும் BAPASI சென்னைப் புத்தக விழா நம்மைப் பொறுத்தவரை கடவுளின் கொடையே !! வழக்கமான ஜனவரியின் விற்பனை எண்ணிக்கையினைத் தொடும் சாத்தியங்கள் துளியும் இல்லையெனினும், ஆண்டின் மையப் பகுதியில் கடுமையான வைட்டமின் "ப" தட்டுப்பாட்டில் தடுமாறி வரும் நமக்கு - இங்கே கிட்டியுள்ள decent விற்பனையானது அடுத்த மூன்று மாதங்களைக் கடந்து செல்லும் வலுவை நல்கியுள்ளது ! தொடரும் மாதங்களில் நெய்வேலி ; ஈரோடு & மதுரை விழாக்களும் நமக்கு வாயில்களைத் திறந்திடும் பட்சங்களில் - டிசம்பரைத் தொட்டு விடுவோம் - புத்தூர் மாவுக்கட்டுப் போடும் அவசியங்களின்றி ! விற்பனை ஒருபக்கமெனில் - சென்னையில் எப்போதுமே மீடியாவின் பார்வைகளில் நாம் விழும் சாத்தியங்களும் அதிகம் ! இம்முறையும் TV சேனல்கள் ; தினமலர் ; இந்தியன் எக்ஸ்பிரஸ் ; ஹிந்து உள்ளிட்ட நாளிதழ்கள் நம் பக்கம் நிறையவே ஆர்வத்தைக் காட்டின ! இதுதவிர இன்னும் சில சுவாரஸ்யமான மனிதர்களும் நமது ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தனர் ! அதனில் ஒரு சந்திப்பு கொஞ்சமாய் பலன் தந்திடும் பட்சத்தில் - நமது சிக்கல்களில் ஒரு பகுதி தீர்ந்திடவும் வாய்ப்புள்ளது ! அது நிஜமாகிடும் பொழுது நிச்சயமாய் உங்களுக்குத் தெரிவிப்பேன் ! Last but not the least - அடைமழையோ ; அனலடிக்கும் பகல் பொழுதுகளின் வெப்பங்களோ ; ஜூன் மாதத்தின் பிடுங்கல்களோ - நிஜமான புத்தகக் காதலர்களுக்கு ஒரு பொருட்டே ஆகாது என்பதை அழுத்தமாய்ப் பதிவு செய்துள்ள தலைநகரின் பிரஜைகளுக்கு நமது வணக்கங்கள் உரித்தாகட்டும் ! And தேர்தல் முடிந்த பின்னே இருந்த சொற்ப அவகாசத்தில் விழாவுக்கென அற்புதமாய் ஏற்பாடுகள் செய்ததுக்கும் சரி ; மழை கொட்டித் தீர்த்த நாளின் இரவிலும், தொடர்ந்த பொழுதின் காலையிலும் அசாத்திய ஈடுபாடு காட்டியமைக்கும் சரி - BAPASI -யின்குழுவிற்கு hats off !!ஒவ்வொரு ஸ்டாலின் உரிமையாளர்களுக்கும் கலையில் போன் செய்து, உடனே ஸ்டாலுக்கு வரச் சொல்லித் தகவல் தந்தது மட்டுமன்றி, இரவு முழுவதும் இருளினுள் தட்டுத் தடுமாறிக் கொண்டே இயன்ற அத்தனையும் செய்துள்ளனர் - ஒவ்வொரு ஸ்டாலிலும் உள்ள புத்தகங்கள் நனைந்து போகாதிருக்க ! Awesome !!

"என் பெயர் டைகர்"-ன் hype-லும் ; முத்து மினி இதழ்களின் மறுவருகையின்பொருட்டும்,  திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளாய் இம்மாதத்து ரெகுலர் இதழ்கள் தத்தளிக்குமோ என்ற சிறு பயம் என்னுள் இருந்தது ! அதிலும், டெக்ஸ் மறுபதிப்பு நீங்கலாய் - பாக்கி இதழ்களில் எல்லாமே சராசரியான நாயக / நாயகிய / நாலு காலார் ஆதிக்கம் தான் என்ற பொழுது எனது கலக்கத்திற்கொரு முகாந்திரமில்லாதில்லை ! ஆனால் அவற்றிற்குக் கிட்டியுள்ள பரவலான thumbs up சந்தோஷம் தருகிறது ! 

COMANCHE - எப்போதும் போலவே சித்திரங்களில் வாங்கிடும் ++++++ மார்க்குகள் - கதையின் (-) (-) (-) களை தனது தோளில் சுமந்து செல்வது புரிகிறது ! "பேசியே பிராணனை வாங்குகிறார்கள்" என்ற விமர்சனம் இந்தக் கதைக்கு சற்றே தூக்கலாய் பதிவாகியுள்ளதையும் கவனிக்கவே செய்தேன் ! In fact எழுதும் போதே "பேச்சைக் குறைங்கடா !" என்று அந்தக் கும்பலிடம் சொல்ல வேண்டும் போலவே தோன்றியது ! Maybe ஆங்காங்கே வசனத்தில் கொஞ்சம் கத்திரி போட்டு - சற்றே crisp ஆக்கிடுவோமா ? என்று கூட நினைத்தேன் ! ஆனால் - 'கதாசிரியரின் கடின உழைப்பை நீ என்னமாய் கபளீகரம் செய்யப் போச்சு ?" என்றொரு புது Surf Exel படலத்துக்கு நாமே தடம் போடுவானேன் ? என்று அந்த ஆசையை ஓரம்கட்டி விட்டேன் !   15 ஆல்பம்கள் கொண்ட தொடரின் மையத்தில் தற்போது நிற்கிறோம் - 8 இதழ்களை வெளியிட்டுள்ள நிலையில் ! பாக்கி 7 கதைகளை இதே போல் ஆண்டுக்கு 2 இதழ்கள் என இன்னமுமொரு 3 ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லலாம் ! Or maybe ப்ளூகோட்களுக்கு செய்ததைப் போல - ஒரு  சின்ன பிரேக் தந்து விட்டு அதன் மறுவருஷம் கேரட் மண்டையரை மறுபடியும் துவங்கிடலாமா ? (ப்ளூகோட் கதைகள் எல்லாமே one shots எனும் போது - பிரேக் விழுந்தாலும் தொடரவில் பெரியதொரு பாதிப்பு இராது தான் !) ஆனால் COMANCHE விஷயத்தில் நிலவரம் அவ்விதம்  கிடையாதெனும் பொழுது - ப்ரேக் விடுவதில் எனக்கு உடன்பாடில்லை தான் ; but still - உங்கள் அபிப்பிராயங்களையும் தெரிந்து கொள்வது நலமே என்று பட்டது ! What say all ? 

சந்தேகமின்றி ஜூலியா ஜூனின் ஒரு வெற்றிக் கதை ! "வள வள வென்று போனது ; ஆக்ஷன் இல்லை !" என்ற ரீதியிலான விமர்சனங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாய்ப் பார்க்க இயன்றது தானெனினும் - இது போன்ற இயல்பான, வித்தியாசமான கதைகளை ஆண்டுக்கு ஒருமுறை கூட வெளியிட வேண்டாமென்ற சிந்தனையில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது ! திரும்பின திசையெல்லாம் தொப்பிவாலாக்களும், தோட்டவாலாக்களுமே ராஜ்ஜியம் செய்வது தொடரின் - சலிப்பு நேர்வதைத் தவிர்க்க இயலாது தானே ? So ஜூலியா is here to stay ! 

நிஜத்தைச் சொல்வதானால் - இம்மாதப் பட்டியலில் நமது "4 கால் ; 1 வால் ரின் டின்பார்ட்டி" உங்களிடம் டின் வாங்கிடுவாரோ என்ற பயம் என்னுள் இருந்தது ! பெரியதொரு கதை கிடையாதெனும்   பொழுது - வசனங்களிலும், சித்திர ஜாலங்களிலுமே தலைதப்பித்தாக வேண்டுமென்பதைப் படைப்பாளிகள் அழகாய்ப் புரிந்து வைத்திருந்ததால் இதனை நீங்கள் எவ்விதம் எடுத்துக்கொள்வீர்களோ என்ற சிறு அச்சம் ! ஆனால் ஜாலியான நமது கலாரசிகனை நீங்களும் ஜாலியாய் ஏற்றுக் கொண்டு விட்டதில் எனக்கு ஜாலியோ ஜாலி ! Phew !! 

And விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு லெவெலில் வீற்றிருக்கும் இரவுக் கழுகாரின் ஒரு classic வண்ண மறுபதிப்பெனும் பொழுது - no surprises at all !! "பழிவாங்கும் புயல்"  நம் கையிருப்பில் 6  மாதங்களைத் தாண்டாது  என்பது நிச்சயம் !! A crackerjack !!

முத்து மினி மறுபதிப்புகளும் decent ஆன வரவேற்பைப் பெற்றுள்ளதைப் பார்க்க மகிழ்வாக உள்ளது ! உள்ளூர் ஆக்கங்களே என்றாலும், தரமானவை எனும் பொழுது அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதில் மன நிறைவாய் உணர்கிறோம் ! இந்த "குட்டி விலை / சிம்பிள் format" என்ற தடம் வரும் நாட்களில்  நிறையவே பரிசோதனை முயற்சிகளுக்கு பயன்படக் கூடுமென்றே தோன்றுகிறது ! இந்த 6 பிரதிகளையும் பார்த்த நாள் முதலாகவே தலைக்குள் சுழலும் சக்கரங்கள் உருப்படியாய் ஒரு பலனை அறிவிக்கும் பொழுது - நிச்சயமாய் அதனைப் பகிர்ந்து கொள்வேன் உங்களோடு !!

And finally to the man of the moment : டைகர் !! கூரியர் குளறுபடிகள் ; ஏகப்பட்ட சின்ன இதழ்களோடு வந்திருக்கும் பெரிய இதழ் ; விடுமுறைகள் இல்லா மாதம் - என்ற சிலபல காரணங்களால் "என் பெயர் புலிக்குள்" உங்களில் பலரும் முழுவதுமாய்ப் புகுந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரிகிறது ! "அட்டைப்படம் அழகு ; black & white பதிப்பு அழகு "என்ற ஆரம்ப கட்ட எண்ணச் சிதறல்களைத் தாண்டி - கதை பற்றி ; இதழ் பற்றி உங்களது பதிவுகளைக் காண ஆவல் ! Maybe இந்த ஞாயிறை அதற்கெனச் செலவிடலாமா ? 

Looking ahead - lion ஆண்டுமலருக்கென ஒரு 3-in -one பிரான்கோ-பெல்ஜிய நாயகர்களின் தொகுப்பு தயாராகி,அதன் பக்கங்கள் என் மேஜையில் ஒரு பகுதியும், இங்கே எனது பெட்டிக்குள் மீதமும் கிடக்கின்றன ! இந்த ஞாயிறை ரோஜரோடு செலவிடப் போகிறேனா ? - பார்த்தாக வேண்டும் ! ஆண்டுமலர் என்ற topic-ல் உள்ள இந்தத் தருணத்தில் - எனக்குள் ரொம்ப நாளாகவே ஒரு சின்னக் கேள்வி ! ஒவ்வொரு ஆண்டும் சத்துக்கு ஏற்றார் போல ஏதோ ஒரு "ஆண்டுமலர்" இதழை நமது லயனில் வழக்கமாக்கியுள்ளோம் ! ஆனால் முத்து காமிக்ஸில் நான் பொறுப்பேற்றுக் கொண்ட புதுசில் -  (1988 ? 1989 ?) ஆண்டுமலர் என்று வெளியிட்டதன்பின்னே ஏனோ அந்த முயற்சி தொடரவில்லை! And உண்ணும் விரதம், சைக்கிள் மறியல் , கண்ணாடியை முறைத்துப் பார்த்தல் என்ற ரீதியில் உக்கிரமான கொரில்லா யுக்திகளை அறிந்து வைத்திருக்கும் "போ.கு" இதுபற்றி பெரியதொரு கொட்டாவியைக் கூட விட்டிருக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சர்யமே ! காத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ? 

ABSOLUTE CLASSICS பற்றிய updates :  "மின்னும்  மரணம்" வண்ணத் தொகுப்புக்கான முன்பதிவுக்குப் பிற்பாடாய் இது போன்றதொரு அட்டகாச  முன்பதிவினை இப்பொழுது தான் பார்க்க சாத்தியமாகியுள்ளது என்று சொல்லலாம் ! முன்பதிவின் எண்ணிக்கை அதற்குள் 100-ஐத் தாண்டி விட்டதென்றே நினைக்கிறேன் ! So நமது இலக்கைத் தொட ரொம்பவெல்லாம் காத்திருக்கத் தேவையிராது என்றே படுகிறது ! இங்கே சின்னச் சின்னதாய் சில விளக்கங்களைச் சொல்லிட நேரம் எடுத்துக் கொள்கிறேனே :

" 2 கதைகள் ; hardcover பைண்டிங் ; விலை ரூ.200" என்ற template தான் இந்த வண்ண ABSOLUTE CLASSICS இதழ்களின் பின்னணியாக இருக்குமென்று சென்ற பதிவிலேயே விளக்கமாய் எழுதியிருந்தேன். நண்பர்களுள் சிலர், "hardcover வேண்டாம் - விலை ரூ.150 என்று வையுங்களேன்"  என்றும், இன்னும் சிலரோ - "hardcover வேண்டாம் - 3 கதைகள் போட்டு, விலையை ரூ.200 என்றே நிர்ணயம் பண்ணுங்களேன்" என்றும் எழுதியுள்ளனர் ! விலையைக் குறைப்பதோ - அதே விலையில் பக்ககளைக் கூட்டுவதோ in effect ஒரே விளைவுகளைச் சார்ந்த தீர்மானங்களே என்பதால் 2 வினவல்களுக்கே ஒரே பதிலே சொல்லிட அவசியமாகிறது ! வெறும் 1000-1200 என்ற printrun களில் செயல்படும் வேளையில் நமக்கு தலை தப்பிப்பதே பெரும் விஷயம் என்றாகிறது ! இன்னும் சொல்லப் போனால் - பிராசஸிங் & அச்சுப் பணிகளில் சிவகாசி ஸ்டைல் அந்தர்பல்டிக்கள் நிறையவே அடிக்க முடிவதால் தான் இந்த முயற்சி சாத்தியம் என்றாகிறது ! பெருநகர அச்சக கட்டணங்களையோ ; நிர்வாகச் செலவுகளையோ நாம் கணக்கிட்டால் அம்பேல் தான் ! So விலை குறைப்பு / பக்க இணைப்பு இரண்டுக்கும் தற்போதைய சொற்பமான பிரிண்ட் ரன்னில் வாய்ப்பில்லை நண்பர்களே ! And "இந்த இதழ்களுக்கு  hardcover ஏனோ ?" என்ற கேள்வியினை கொண்டுள்ளோர்க்கும் பதில் சொல்லிய புண்ணியம் எனதாகட்டுமே ? நமது இதழ்களின் பல பரிணாம மாற்றங்களை / ஏற்றங்களை / இறக்கங்களை அருகிலிருந்து கவனித்து வரும் உங்களுக்கு இதன் பின்னணிக் கதைகள் தெளிவாய்த் தெரிந்திருக்கும் என்பதால் எங்கள் பிழைப்பு லேசாகிறது ! ஆனால் இந்தக் கருத்துப்பரிமற்றங்களுக்கு அப்பால் உள்ள நண்பர்கள் ; புத்தக விழாக்களில் நமது ஸ்டாலில்  புத்தகங்களை வாங்கிட முனையும் casual readers போன்றோருக்கு ஒரு regular இதழுக்கும், அடுத்த limited edition இதழுக்குமான வேற்றுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா ? So  ரூ.65 என்ற விலையில் ஒரு லக்கி லூக் ரெகுலர் இதழையும் , வரக்கூடிய ABSOLUTE CLASSICS-ன் 2 லக்கி லூக் கதைகள் அடங்கிய தொகுப்பினை  ரூ.200 என்ற விலையிலும் பார்க்க நேரிட்டால் குழம்பிடுவது இயல்பு தானே ? So இந்த hardcover வடிவமானது - ABSOLUTE CLASSICS இதழ்கள் ஒருவித பிரத்யேக சேகரிப்பின் பிரதிநிதகள் என்பதை வேற்றுமைப்படுத்திக் காட்டும் பொருட்டே ! ஆகையினால் அதனிலும் மாற்றம் இராது guys ! 

பேசிக்கொண்டே பொழுதைக் கரைக்காமல் - உங்கள் முன்பதிவின் வேகங்களுக்கு ஈடுதரும் விதமாய் நாமும் செயலில் இறங்கினால் சாலச் சிறந்தது என்று மனதுக்குப் படுவதால் - முதல் இதழான லக்கி digest -க்கு மட்டும் இன்றே கதைத் தேர்வுகளை இறுதி செய்துவிடுவோமே ? சவ சவ என்ற நிதானக் காத்திருப்புகளுக்கு அவசியமின்றி - ABS CLASS இதழ்கள் வெளிச்சத்தைப் பார்த்திடத் தொடங்கினால் அதுவே கூட முன்பதிவுகளின் துரிதத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நினைத்தேன் ! So கீழ்க்கண்ட 3 கதைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வோமா - "கோச் வண்டியின் கதை" யோடு சவாரி செய்திட ? 

1.ஜெஸ்ஸி ஜேம்ஸ்
2.தாயில்லாமல் டால்டனில்லை 
3.கௌபாய் எக்ஸ்பிரஸ் 

இன்றே இதுபற்றிய தீர்மானம் ஆயின், வண்ண டிஜிட்டல் பைல்களுக்கு சுடச் சுட நாளையே ஆர்டர் பண்ணிவிடலாம் ! நிழலை விடவும் வேகமாய்ச் சுடும் கௌபாய் சமாச்சாரத்தில் - நாமும் அந்த வேகத்தைக் காட்டுவோமா ? உங்கள் தேர்வுகளை மேற்படி 3 கதைகளுக்குள் மாத்திரமே வரையறை செய்திடக் கோருகிறேன் folks !! 

"எல்லாம் சரிதான்....ஆனால் நான் எதிரார்த்த மறுபதிப்புகள் இது இல்லையே !!" என்ற ஆதங்கம் தெரிவித்துள்ள நண்பர்களுக்கு : எனது தெளிவான பதில் சென்ற பதிவிலேயே உள்ளது ! ஆதரவும், விற்பனையும் கிட்டிடும் பட்சத்தில் இந்த ABS CLASS சுற்றுக்கள் ரெகுலராகத் தொடரும் - இயன்ற கதைகளோடு ! புழக்கத்திலேயே இல்லாத கதைகளோ, வாசக ஆதரவின் மீட்டரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாத நாயகர்களோ உங்கள் தேர்வுகளை இருப்பின் - sorry guys !! 

இறுதியாய் - "பொன்முட்டை...பிரியாணி...அஞ்சப்பர்..." என்ற ரீதியில் அபிப்பிராயம் கொண்டுள்ள நண்பர்களுக்கு : என்றைக்கோ ப்ளஸ் ஒன்னில் படித்த எகனாமிக்ஸ் பாடத்தை எடுத்து விட இதனை ஒரு குறும் வாய்ப்பாக எடுத்துக்எ கொள்கிறேன் ! எப்போதுமே சந்தை வணிகத்தில் ஒரு பொருளின் விலையும் சரி, அதன் உற்பத்தியும் சரி - நிர்ணயம் காண்பது டிமாண்டின் அடிப்படையிலேயே ! இங்கே தற்போது அரங்கேறி வருவதும் அதுவே !ஒரு சொற்பமான வாசகர்களுக்கு  மாத்திரமே இந்த மறுபதிப்புகளில் ஆர்வமெனில் அதற்கேற்ப விலையும் சரி ; எண்ணிக்கையும் சரி  நிர்ணயித்து செயல்பட முனைந்துள்ளோம் ! அள்ளி அடித்து இதனிலும் ஏராளமாய் பிரதிகளை அச்சிட்டு கடைகளில் குவித்தால் -  நெடும் ஓட்டத்தின் பொழுது நமக்கே அதுவொரு இடராய் உருப்பெற்றிடலாம் தான் ! ஆனால் இப்போதோ - இதுவொரு on demand முயற்சி மட்டுமே ! உங்களுள் ஆர்வம் தொடரும் நாள் வரைத் தொடரும் இதுவும் !! அந்த ஆர்வம் வற்றிய நாளில் அரவமின்றி ஆறடிப் பள்ளத்துக்குள் தஞ்சம் கண்டுவிடும் ! So இப்போதைக்கு - let the show begin !!

கிளம்பும் முன்பாய் ஒரு சின்ன போட்டி !! இன்று மதியம் இங்கே மிலானின் மைய வீதியொன்றில் எடுத்த  போட்டோ இது !! 

நம்மாட்கள் இங்கேயும் கலக்குவது சுற்றுமுற்றும் நிற்போரின் முகங்களில் தெரியும் மிரட்சியிலேயே புரியும் !! அந்தரத்தில்  ஆரோகணம் செய்திடும் இந்த ஆரஞ்ச் ஆசாமிக்கு நமது காமிக்ஸ் தொடர்பாய் ஏதேனும் நயமானதொரு  caption எழுதுங்களேன் ?! வெற்றி காண்போருக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு ஈடாய் எங்கள் நகர மைசூர்பாகு அரை கிலோ பரிசு !! இன்றைய பொழுது மட்டுமே போட்டிக்கான அவகாசம் ! See you around all ! Bye for now !

Saturday, June 04, 2016

ஒரு புதுப் பொழுது.......ஒரு புதுப் பயணம்..!


நண்பர்களே,

வணக்கம். இந்தாண்டு பருவ மழை நன்றாகவே இருக்குமாம் - வானிலை ஆய்வறிக்கைகள் சொல்கின்றன ! இரண்டே நாட்களுக்குள் நான்கு பதிவுகள் எனும் போது - தொடரும் மாதங்களில் நமது காமிக்ஸ் மழை கூட ரொம்பவே செழிப்பாய்  இருக்குமென்று தோன்றுகிறது ! And இது நமது 300-வது பதிவும் எனும் போது - ஏதோவொரு சின்ன மைல்கல்லைத் தொட்டு நிற்பது போல் உணர்கிறேன் ! ஆயிரக்கணக்கான பதிவுகளோடு எத்தனையோ ஆற்றலாளர்கள் வலையுலகில் வலம் வருவதை நானறிவேன் ; ஆனால் காமிக்ஸ் எனும் ஒற்றை agenda-வைத் தாண்டி வேறெதன் பக்கமும் தலை சாய்க்காத நமக்கு "300" என்பது கணிசமான எண்ணிக்கையாகவே தோன்றுகிறது ! இத்தனை பக்கங்களில் ; பதிவுகளில் - ஒரே மாதிரியான எனது எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருவது நிச்சயமாய் ஒரு சுலபக் காரியமல்ல என்பதில் சந்தேகமில்லை ! Thank you ever so much for being such compassionate companions !

முன்னூறாவது பதிவு !! What's new ? என்ற கேள்வி உங்களுள் எழும் முன்பாகவே பதில் தயார் என்னிடம் ! சில மாதங்களாகவே நாம் பேசி வந்த ABSOLUTE CLASSICS முயற்சிகளுக்கொரு செயல் வடிவம் தருவது குறித்து அவ்வப்போது யோசித்து வருவேன் ! ஆனால் அந்தந்த மாதத்துப்   பிடுங்கல்கள் சுற்றி வளைக்கும் போது - அந்தச் சிந்தனைகள் பின்சீட்டுக்குச் சென்றுவிடும் ! அது மட்டுமன்றி - "என் பெயர் டைகர்" இதழினை உங்களிடம் ஒப்படைக்காது அடுத்த முயற்சிக்குள் மூக்கை நுழைப்பதில்லை என்று எனக்கே ஒரு கட்டுப்பாடு போட்டு வைத்திருந்தேன் ! 'எ.பெ.டை' முடிந்தது ; முத்து மினி மறுபதிப்புகளும் ஆயிற்று ; தொடரும் மாதங்களில் மென்னியை முறிக்கும் சிரமமான இதழ்கள் ஏதுமில்லை என்பதால் தலைக்குள் ஒரு இறுக்கம் விடுபட்ட உணர்வு மெலிதாய் மேலோங்கிய போதே ABSOLUTE CLASSICS பற்றிய சிந்தனைகள் வேகம் பிடித்துக் கொண்டன ! ஏற்கனவே தொங்கலில் உள்ள சந்தா Z பற்றிய சிந்தனைகளும் இணை கோட்டில் ஓடத் தொடங்கின  ! ஆனால் Z-ல் எனக்குத் தோன்றிய ஒரே தயக்கம் - அது கொணரக்கூடிய வேலைப் பளுவை சமாளிக்கும் ஆற்றலும், நேரமும் நம்மிடம் உள்ளதா ? என்ற கேள்வி மட்டுமே ! மாதமொரு TEX எனும் பொழுது அந்தப் பக்க நீளங்களையும், 12 மாதங்களுக்கும் அவை கொண்டு வரக்கூடிய பணிச் சுமைகளையும் நான் முழுமையாய் கணிக்கத் தவறி விட்டேன் என்றே சொல்ல வேண்டும் ! என்னதான் செம சுவாரஸ்யமான சுலபமான ; நேர்கோட்டுக் கதைகள் என்றாலும் - 220 பக்கங்களும் ; 330 பக்கங்களும் கொண்ட ஆல்பங்கள் மூச்சு வாங்கச் செய்து விடுவதை கடந்த ஆறு மாதங்களில் உணர்ந்து வருகிறேன் ! So முறையான திட்டமிடலும், முன்கூட்டிய மொழிபெயர்ப்புகளும் செய்திடாது சந்தா Z -ஐ அறிவிப்பது எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது போலானது என்று தோன்றியது ! So  ஓசையின்றி நடந்து வரும் அந்தப் பணிகள் ஓரளவுக்கு முழுமை அடையும் நேரமே சந்தா Z -க்கான சரியான தருணமாய் இருக்க இயலும் என்ற புரிதலோடு - ABSOLUTE CLASSICS  பக்கமாய் தலை சாய்த்தேன் !  And இதோ - புதியதொரு பாணியில் நாம் எடுத்து வைக்கப் போகும் எட்டுக்களின் ஒரு சின்ன preview !!

  • மொத்தமாய் 6 ஸ்பெஷல் இதழ்களுக்கும் முன்பதிவு செய்வோருக்கு விலை ரூ.1050/- கூரியர் கட்டணம் கிடையாது!
  • You can pick any 4 out of this 6 too! இந்தப் பட்டியிலில் எல்லா இதழ்களையும் வாங்கித் தான் தீர வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது ! ஏதேனும் 4 இதழ்களை மாத்திரமே வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் உண்டு! பிரதிகளின் விலைகளோடு தமிழகமெனில் ரூ.120 & பெங்களுரெனில் ரூ.180 கூரியர் கட்டணங்களுக்கெனச் சேர்த்துக் கொள்ளுங்கள்!
  • இவை அனைத்துமே நிஜமான limited editions! ஒவ்வொரு இதழிலும் சரியாக 1000 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும்! டெக்ஸ் & MMS-ல் மட்டும் 1500 பிரதிகள்!
  • ABSOLUTE CLASSICS முயற்சியின் முதல் சுற்று இது! (5 மறுபதிப்புகள்) தொடரும் காலங்களில் இந்தப் பாணியின் சாதக/ பாதகங்களை உள்வாங்கிக் கொண்டு சுற்றுகள் தொடரும்!
  • மறுபதிப்புகளின் கதைத் தேர்வு முழுக்க முழுக்க வாசக விருப்பங்களைச் சார்ந்ததே! தொடரும் நமது ஜூலை இதழ்களிலும் இந்தக் கேள்விகள் எல்லோரிடமும் சமர்ப்பிக்கப்படும்! The choices of the majority will prevail!
  • வேதாளன்‘ இல்லையா?; இரத்தப் படலம் அவ்ளோ தானா?; ‘டிடெக்டிவ் ஸ்பெஷல்‘ பூட்ட கேஸ் தானா? என்ற சஞ்சலங்களுக்குத் தேவை கிடையாது! முயற்சியின் முதல் படி இது! படிகளும், பயண தூரமும் ஏகமாய் காத்துள்ளன நம் முன்னே என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்!
  • இந்த ABSOLUTE CLASSICS அட்டவணை செப்டம்பர் முதல் துவங்கிட பணிகளை முடுக்கிடுவோம் ; அதற்குள் உங்களின் முன்பதிவுகள் வேகமாய்க் கிட்டிடும் என்ற நம்பிக்கையில்   ! 
  • வழக்கம் போல ‘500‘ எனும் மந்திர எண்ணை நாம் நெருங்கிட வேண்டியது அவசியம் !
  • இவை முன்பதிவுகளுக்கும், கையிருப்புள்ள வரையிலும் online & புத்தக விழா விற்பனைகளுக்கும் மாத்திரமே! முன்பணம் அனுப்பிப் பெறும் முகவர்கள் இதனை வாங்கிட இயலும் தான்; ஆனால் உங்கள் நகர முகவர்கள் இவற்றை வாங்கிடுவாரா? இல்லையா? என்ற உத்தரவாதம் கிடையாது!
  • And here’s the icing on the cake! ஆறு ஸ்பெஷல் இதழ்களுக்கும் ஆர்டர் செய்யும் நண்பர்களுக்கு மாத்திரமே ஒரு பிரத்யேக முயற்சி செய்திடவுள்ளோம்! காத்திருக்கும் ABSOLUTE CLASSICS-ன்  டெக்ஸ் மறுபதிப்பின் முதல் பக்கத்தில் (hard cover புக்கைத் திறந்தவுடன் கண்ணில் படும் double-spread ) உங்களது black & white போட்டோவும் பெயரும் அச்சிடப்பட்டு வழங்கப்படும்! Customized imprints என்பதன் நிஜ அர்த்தமாகித் தான் பார்ப்போமே என்ற எங்கள் ஆசையின் வெளிப்பாடு இது! Please note: இது ஆறு இதழ்களையும் முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு மாத்திரமே சாத்தியம்!! And Tex இதழில் மட்டுமே!
  • கடைகளில் மட்டுமே வாங்கிடும் நண்பர்களும் இதனில் இணைந்திட ஆர்வமாயிருப்பின், உங்கள் நகர விற்பனையாளர் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் தான் ! 
  • கடல் கடந்த இலங்கை நண்பர்களாயின்- உங்கள் பொருட்டும் இந்த imprint முயற்சியை செய்திடத் தயார் நாங்கள்! ஆறு ஸ்பெஷல் பிரதிகளின் விலையில் பாதித் தொகையினை இப்போதைக்கு உங்கள் விற்பனையாளரிடம் முன்பணமாய் வழங்கிய கையோடு உங்கள் போட்டோக்களையும் மின்னஞ்சல் செய்தால்- சந்தோஷமாய் செயல்படக் காத்திருப்போம்!
  • இதர அயல்நாட்டுச் சந்தாதார நண்பர்களுக்கு: நிச்சயமாய் நீங்களும் நம் திட்டமிடலில் ஒரு இன்றியமையா அங்கமே! இந்த மொத்த project-ம் ஒன்றரை நாட்களுக்கு முன்பான மகாசிந்தனைகளின்  பலன்களே என்பதால் ஏர்மெயில் கட்டணங்களைக் கேட்டறிய அவகாசமில்லை! உங்களுக்கும் இந்த SUPER 6-ல் ஆர்வமெனில் நமக்கொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடுங்கள். எத்தனை சீக்கிரமாய் முடியுமோ- அத்தனை விரைவாய் கட்டணங்களோடு உங்களைத் தொடர்பு கொள்வோம்.
  • இயன்ற மட்டிலும், ஒவ்வொரு கோணத்திலிருந்தும் சிந்தித்துத் தீர்மானங்களைச் செய்திட sincere ஆக முயற்சித்துள்ளேன்! விலைகளையும் மிகுந்த கவனத்தோடும்; நிறைய தயக்கத்தோடும் தான் நிர்ணயித்துள்ளேன் ! Print-run ஏகக் குறைச்சல் என்றாலும் படைப்பாளிகளுக்கு நாம் செலுத்தியாக வேண்டிய ஒரு மினிமம் ராயல்டி கட்டணத்தில் பஞ்சப்பாட்டு பாடுவது இயலாக் காரியம்! So அவர்களது கட்டணங்களில் காக்காய் கடி கடித்து, செலவினங்களைக் குறைக்க வாய்ப்பின்றிப் போகிறது! 
  • மறுபதிப்புகளெனும் தடம் தனியாக ஆரோக்கியமாக உருவாக வேண்டுமெனில்- இவற்றையும் வழக்கம் போல நிறையவே அச்சிட்டு மலையாய் கிட்டங்கிகளில் குவிக்கும் பாணிக்கு 'டாடா' காட்டியே தீர வேண்டுமென்பது நம் நிதிநிலைமைகளும்; மார்கெட் நிலவரங்களும் உருவாக்கும் கட்டாயங்கள் ! அதன் பொருட்டு உங்கள் புரிதல் கிட்டின்- நிச்சயமாய் தடுமாற்றங்களின்றி இந்த ‘மறுபதிப்பு எக்ஸ்பிரஸ்‘ தடதடக்கும்! எப்போதும் போலவே- உங்கள் காமிக்ஸ் நேசத்தையும், நம் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையுமே ABSOLUTE CLASSICS-ன் மூலதனமாக்க விழைகிறேன்! 
  • கொஞ்ச நாட்களாகவே தலைக்குள் மிதந்து கிடந்த சிந்தனைகளுக்கு சொற்ப அவகாசத்தில் வடிவம் கொடுத்துள்ளேன் இந்த அறிவிப்பின் வாயிலாக! So இந்த business மாடலில் நிச்சயமாய் ப்ளஸ் & மைனஸ் இருந்திடலாம் தான்! மைனஸ்(கள்) கண்ணில் படும் பட்சத்தில்- என்னைத் துவைத்துத் தொங்கப் போடவொரு லேட்டஸ்ட் வாய்ப்பாகப் பார்த்திடாது- பதிவிலோ; மின்னஞ்சலிலோ பிழைகளை என் கவனத்துக்குக் கொண்டு வந்தால் அவற்றை சரி செய்ய நிச்சயம் முயற்சிப்பேன்! என் கவனத்துக்கே வர வாய்ப்பில்லா மேடைகளில் நம் குறைகளை காரசாரமாய் அலசிடுவது நமக்கு எவ்விதத்திலும் உதவிடாது என்பதை அறியாதவர்களா நீங்கள்?!
  •  And இன்னமும் காமிக்ஸ் சேகரிப்பின் மீது நண்பர்களின் ஒரு சிறு பகுதியினர் கொண்டிருக்கும் மோகத்தை ஒரு வியாபார வாய்ப்பாகக் கருதி வரும் நமது Scan & Print at home நண்பர்களுக்கு : ‘இவையெல்லாம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்பதால் நாங்கள் இதனை ஒரு சேவை மனப்பான்மையில் செய்கிறோம்ஜி!‘ என்று இனியும் தொடர்ந்திட வேண்டாமே- ப்ளீஸ்? உங்களிடம் உள்ள பழைய சேகரிப்புகளை ஒரு கோடி ரூபாய்க்குத் தெருக் கோடியில் கடையே போட்டு விற்றாலும் அதனில் எனக்குத் துளியும் விசனம் கிடையாது! ஆனால்- ஸ்கேன் செய்து CD-யாக விற்பது; பிரிண்ட் போட்டு பெயரின்றி விற்பது என்ற தவறுகள் இனியும் தொடர  வேண்டாம்! And இதனை ஒரு விளையாட்டாய்; நட்பின் தொடர்ச்சியாய்; காமிக்ஸ் சேகரிப்பின் அங்கமாய்ப் பார்த்து வரும் நண்பர்களும்- இனி மேற்கொண்டும் இந்த கிரே மார்கெட்  “வியாபாரங்களுக்கு“ (?!) உரமாக இருந்திட வேண்டாமே- ப்ளீஸ்? நிதானமாய், பொறுமையாய் பயணம் செய்தோமேயானால் உங்களின் ‘கனவு இதழ்கள்‘ எல்லாமே- நியாயமாய், எல்லோரையும் எட்டும் விதமாய் நனவாகும் நாட்கள் தூரமில்லை! இன்றைக்கு ஆயிரம் பிரதிகள் மட்டுமே என்ற நிலை மாறி - விற்பனை எண்ணிக்கையினைக் கூட்ட வாய்ப்பு ஏற்படின் - நிச்சயமாய் தற்போதைய விலையினை அதற்கேற்ப குறைப்போம் என்பதிலும் நம்பிக்கை கொள்ளலாம் ! 
இனி கதைகளின் தேர்வுகள் பற்றி :

லக்கி லூக் classics :

நமது ஆதர்ஷ கார்ட்டூன் நாயகரின் 2 கதைத் தொகுப்பினில் "ஒரு கோச் வண்டியின் கதை" ஜூனியர் எடிட்டரின் தேர்வாக உட்புகுகிறது ! மீத ஸ்லாட்டில் எதனை உட்புகுத்தலாம் என்பதை சென்னை வாசக சந்திப்பிலும், நமது ஜூலை இதழிலும் கேட்டு வைப்போம் ; ஏகோபித்த பெரும்பான்மைத் தேர்வே ஜெயம் காணும் ! 

சிக் பில் classics :

"இரும்பு கௌபாய்"   ; "விண்ணில் ஒரு எலி " என்ற தேர்வுகள் நமது முந்தய உரையாடல்களின் பொழுது அடிபட்டதாய் ஞாபகம் ! ஆனால் வலைக்கும், நேரடிச் சந்திப்புகளுக்கும் தூரமாய் நிற்கும் வாசகர்களின் தேர்வுகளும் நமக்கு முக்கியமே என்பதால் - இங்கேயும் ஒரு ப்ரெஷ் வாக்கெடுப்பு எடுத்து விடுவோமே ? தெளிவாய் சிந்தித்து அழகான கதைகளாய்ச் சொல்லுங்களேன் நமது வுட் சிட்டி கோமாளிகளுக்கு ? 

கேப்டன் பிரின்ஸ் classics :

சென்றாண்டு ஈரோட்டின் சந்திப்பின் போது நான் செய்திருந்த promise இது ! நமது பரட்டைத்தலைக் கேப்டனின் மறுபதிப்புகள் வண்ணத்தில் அட்டகாசமாய்த் தோற்றம் தருவதைப் பார்க்கும் போது - வண்ண மறுபதிப்புகளுக்கு ரொம்பவே தகுதியான கதைத் தொடரிது என்பதில் சந்தேகமில்லை எனக்கு ! ஏற்கனவே நாம் reprint செய்து முடித்து விட்ட கதைகள் போக எஞ்சி நிற்பவற்றுள் TOP 2 எதுவோ ? 

TEX WILLER classic !

சென்ற முறை ஈரோட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்த "டிராகன் நகரம்" தான் வண்ண மறுபதிப்புக்கு மனதில் நிழலாடும் இதழ் என்றாலும் - "ஒரு அறைக்குள் அமர்ந்திருந்த 50+ வாசகர்களின் தேர்வுகளையே ஏகோபித்த தேர்வாய்க் கருதுவது நியாயமா ?" என்ற ரீதியில் எழுந்த கேள்விகளும், அவற்றின் பின்னணி ஆதங்கங்களும் எனக்கு கவனத்தைக் கோரும் விஷயங்களாய்த் தோன்றின ! So மீண்டும் இந்தக் கேள்வியை இங்கும், நேரிலும், நம் இதழிலும் கேட்டு வைப்பேன் ; the mass choice will prevail ! டெக்சின் எல்லாக் கதைகளின் டிஜிட்டல்  பைல்களுமே கிடைக்கும் என்பதால் எந்தக் கதையாக இருப்பினும் நமக்கு ஒ.கே. தான் ! ஒரே நிபந்தனை - 192 பக்கங்களுக்கு மிகுந்திடாத பக்கங்கள் கொண்ட சாகசமாய் இருத்தல் அவசியம் ! 

Modesty Blaise classic !

சில தருணங்களில், தொடர்ச்சியாய் ஒலிக்கும் குரல்கள், எண்ணிக்கையில் குறைவாய் இருப்பினும் - உரத்துக் கேட்பதன் காரணமாய் ஒரு வெகுஜன வாய்சாகத் தோன்றிடுவதுண்டு  ! நமது வலைப்பக்கத்தில் சமீப காலமாய்க் கேட்டு வரும் "இளவரசிக்கு ஜே " குரல்கள் மிகுந்து வருவதால் - "கழுகுமலைக் கோட்டை" இதழினை வண்ணத்தில் மறுபதிப்பிடும் தீர்மானத்தை எடுத்துள்ளேன் ! விற்பனையிலும் இது சாதித்து விட்டால் - இளவரசி நற்பணி மன்றத்துக்கு ஒரு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்போம் ! ஆனால் இளவரசிக்கு மனதில் மட்டுமே இடமென்று நண்பர்கள் தீர்மானிப்பின் - நமது முதல் நாயகியின் எதிர்காலம் முன்னேயொரு கேள்விக்குறி எழுவதைத் தவிர்த்தல் சிரமமாகிடும் ! பார்ப்போமே !! 

Finally onto The MMS !! 

3 வெவ்வேறு தேர்வுகளை முயற்சித்து வருகிறேன் - அடுத்த 3 மாதங்களுக்குள் நாம் எட்டிப் பிடிக்கக் கூடிய 2 மில்லியன் எனும் இந்த மைல்கல்லிற்கு !  அவற்றின் முடிவுகள் அடுத்த 1 மாதத்துக்குள் தெரிந்திடும் என்பதால் அது பற்றிய தீர்க்கமான அறிவிப்பு ஆகஸ்டிலேயே வெளிவந்திடும் ! அதற்கு முன்பாய் வாயை விட்டு, அப்புறமாய் அசடு வழிய வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை காரணமாய் இப்போதைக்கு MMS அறிவிப்பளவில் மட்டுமே ! "தோர்கல்   இல்லியா ? ; அது பூட்ட கேஸ் தானா ? வாக்கெடுப்பெல்லாம் எடுத்தீர்களே ? அதுவும் சும்மாகாச்சுதானா ?" என்று உஷ்ணமாய் குரல்கள் இங்கே எழுவது நிச்சயம் என்பதை யூகிக்க முடிகிறது ! அவற்றிற்கு நான் சொல்லக் கூடியதெல்லாம் ஒன்றே : நம் சக்திகளுக்குட்பட்ட முயற்சிகள் எப்போதுமே,உங்களுக்கு THE BEST-ஐ வழங்குவதன் மார்க்கத்திலேயே இருந்திடும் ! வெகு சமீபமாய்  2 மாறுபட்ட கதைகளின் உரிமைகளுக்குக் கல்லை விட்டெறிந்து பார்க்கும் வாய்ப்பு வந்துள்ளதெனும் பொழுது அதனைத் தவற விட மனம் ஒப்பவில்லை ! So ஆகஸ்டில் இது தொடர்பாய் ஒரு இறுதி வடிவத்தை நான் அறிவிக்கும் வரையில் பொறுமை ப்ளீஸ் ! 

And before I wind off, நிறையமுறை நான் சொல்லியுள்ளதையே மறுபடியுமொருமுறை பதிவிட அனுமதியுங்களேன்? எனது பிரதான இலக்கு- இன்றும், என்றும் புதிய ஆக்கங்களே! இன்றைய சமையலுக்கு நான் லீவு போட்டு விட்டால்- நேற்றைய பழையதை மைக்ரோ-வேவில் வைத்துச் சூடு பண்ணிச் சாப்பிடும் கலாச்சாரம் அதிக நாள் ரசிக்காது / ருசிக்காது! So மறுபதிப்பு மோகங்களையும்; புதியனவற்றின் மீதான பார்வைகளையும் நிதானமாய்க் கையாளும் கட்டாயம் என்னிடமுள்ளது! உங்கள் ஆதர்ஷ இதழொன்று தற்போதைய சுற்றில் மறுபதிப்பு காணாது போய் விட்டால் அதன் பொருட்டு சலனம் கொள்ளத் தேவைகளே கிடையாது ; சுற்றுக்கள் தொடரும் தருணங்களில் அவை சிறுகச்சிறுக அட்டவணையில் புகுந்திட வாய்ப்புகள் உண்டென்று நம்பிக்கை கொள்ளுங்கள் ! 

இரு குதிரைச் சவாரியெனும்போது கூடுதல் கவனமும், ரொம்பவே ஜாக்கிரதையும் தேவையென்பதால்- எப்போதையும் விட இப்போது உங்கள் ஆதரவுகளும், வழித்துணைகளும் எங்களுக்குத் தேவை! ‘சிங்கத்தின் பல் போன வயதில்‘ எனும் தொடரை தலீவரும், நீங்களும் மூக்குக் கண்ணாடிகள் போட்டுக் கொண்டு படிக்கும் ஒரு தூரத்து நாளில் இன்றைய இந்தத் தருணத்தை நான் வாஞ்சையோடு நினைவுகூர்ந்திட நிச்சயம் வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்! Thank you again for being with us !! Bye for now !!

P.S : ஒரே நேரத்தில் 3 பதிவுகள் ; மூன்றுமே live topics ! இயன்றவரைக்கும் மூன்றையுமே உயிர்ப்போடு தொடரச் செய்து தான் பார்ப்போமா ?

நண்பர்களோடு ஒரு அற்புதக் காலையும்....அதகள மாலையும் ! இன்றைய காலையில்...சென்னை THREE ELEPHANT புக் ஸ்டோரில் நடந்த நமது புத்தக ரிலீசின் பொழுது...!! 

ஆத்தா...நான் பெயிலாயிட்டேன்...! 
Muthu Mini முதல் பிரதிகள்..! 













க்ரூப் ஸ்டடி பண்ணலாமோ..?