Thursday, December 31, 2015

புதிதாயொரு தடமும்...பயணமும்..!

நண்பர்களே,

வணக்கம். 'புதுப்படப் பொட்டி' புறப்பட்டாச்சு சிவகாசியிலிருந்து ! புத்தாண்டின் முதல் நாளன்று உங்களில் பலரும் விடுமுறையில் இருந்திடக் கூடுமென்பதால் கூரியர்களைச் சரிவரப் பெற்றிடுவதில்  சிரமம் தோன்றக் கூடுமே என்ற மகா சிந்தனை உதித்த மறுகணமே பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கி விட்டோம் ! நமது பைண்டிங் நண்பரும் சிறுகச் சிறுக வளர்ந்து இன்று அத்தியாவசியமான இயந்திரங்கள் பலவற்றையும் வாங்கி வைத்துள்ளார் என்பதால்  - 'இந்தாங்க..புடியுங்க !'   என 4 இதழ்களையும் படு ஸ்பீடாய் பட்டுவாடா செய்து விட்டார் !! பின்னென்ன - நேற்று இரவு முதலாய் கைபார்க்கும் படலமும், பேக்கிங் பணிகளும் துவங்கிட - இன்று உங்கள் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன ! So ஆண்டின் இறுதி நாளிலேயே புத்தாண்டின் புது வரவுகளை உங்களிடம் ஒப்படைத்த ஒரு குட்டித் திருப்தி எங்களுக்கு !

And இதோ ஜனவரியின் இதழ்களுள் நீங்கள் பார்த்திரா மாயாவியாரின் மறுபதிப்பின் அட்டைப்பட first look !  இம்மாதத்து ராப்பர்களின் பெரும்பகுதி bright red -ல் அமைந்துள்ளதொரு தற்செயலான ஒற்றுமையே....! இந்த டிசைனும் நமது ஓவியர் + டிசைனர் கூட்டணியின் தயாரிப்பு ! 45 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் மொழியில் மாயாவியின் "பாம்புத் தீவு" வெளியான சமயம் இதுவே தான் அவர்களது டிசைன் ! அதை பின்னணியாக்கி  நமது ஓவியரைக் கொண்டு சிற்சிறு மாற்றங்களோடு புதிதாய் வரைந்து - அப்புறம் கம்பியூட்டரில் வர்ண மெருகூட்டல்களைச் செய்துள்ளோம் ! கதையின் புராதன பாணியிலேயே ஓவியமும் இருப்பதை கவனிக்கத் தவற மாட்டீர்கள் என்பது  தெரியும் தான் ; but அதே இரும்புக்கையை ஒவ்வொரு ராப்பரிலும் முன்னிலைப்படுத்துவதை விட - அந்த ஈல் மீன் + மாயாவி action தேவலை என நினைத்தேன் ! Anyways - ராப்பர் அழகாகத் தோன்றினால் நம் ஓவியருக்குப் பாராட்டுச் சொல்லுங்கள் ; சுமாராகத் தோன்றிடும் பட்சத்தில் - என்னை எவ்விடம் எட்டிப் பிடிக்க வேண்டுமென்பது தான் தெரியுமே ?!! 
ஜனவரியின் நால்வர் அணியோடு - உங்கள் டி-ஷர்ட்களை எதிர்பார்த்திட வேண்டாமே- ப்ளீஸ் ?! சந்தாக்களின் புதுப்பித்தல்கள் தினமும் நடந்து வரும் நிலையில் இன்னுமொரு 2 வாரங்கள் காத்திருந்து விட்டு - அதன் பின்னே சைஸ்வாரியாக மொத்த ஆர்டர்களைப் பிரித்துக் கொண்டு திருப்பூர் பயணத்தைத் துவக்குவதாக உள்ளோம் ! So 'திருநெல்வேலி ஐட்டத்தை  ரெடி பண்ணிட்டான்டா டோய் !!' என்ற பீதிக்கு நிச்சயமாய் அவசியமில்லை ! இம்மாதத்து 4 இதழ்களுமே அழகாய் வந்துள்ளதாய் எனக்குப்பட்டது ; அது தாய் காக்கையின் அனுமானம் மட்டுமேவா ? அல்லது நிஜமும் தானா ? என்பதை நாளைய தினம் சொல்லிவிடுமென்பதால் -  எப்போதும் போலவே மூச்சை இழுத்துப் பிடித்துக் காத்திருப்போம் ! அப்புறம் இன்னொரு முக்கிய தகவல் : DTDC கூரியரில் இன்றைய பார்சல் புக்கிங் திகுடுமுகுடாய் பிசியாக இருந்தபடியால் தமிழ்நாட்டுக்குள் அனுப்பிடும் கூரியர்களை ST கூரியரிலேயே புக் பண்ணியுள்ளோம் ! So காலையில் வழக்கம் போலவே உங்கள் நகரத்து STC கதவுகளைப் பதம் பார்த்திடும் சுதந்திரம் உங்களது ! 

அப்புறம் சில வாரங்களுக்கு முன்பாக ஜூனியர் எடிட்டரின் முயற்சியினில் ஒரு புது track உருவாகி வருவதாய் நான் எழுதி இருந்தது நினைவிருக்கலாம் ! அது பற்றிய அறிவிப்பினைச் செய்திடவும் இந்தக் குட்டிப் பதிவை பயன்படுத்திக் கொள்கிறேனே...! 

ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் - ஏராளமான பெற்றோர்கள்  விறுவிறு வென்று நமது ஸ்டாலுக்குள்   நுழைந்து  - 'ENGLISH COMICS ?? You have them ?" என்று கேட்பதும் - நாம் 'ஊஹூம் ' என்று உதட்டைப் பிதிக்கியதும் அதே வேகத்தில் நடையைக் கட்டுவதும் வாடிக்கை ! போன வருடம் ஈரோட்டுப் புத்தக விழாவினில் மட்டும் கொஞ்சமாய் ஆங்கில லக்கி லூக் இதழ்களை வைத்திருந்ததோம் ; and அவற்றின் பெரும்பான்மை அங்கேயே விற்றும் விட்டன ! வரும் நாட்களின் போது - நாமே ஆங்கில இதழ்களைக் கொஞ்சமாய் இறக்குமதி செய்து விற்றாலென்னவென்று ஜூ.எ. வினவிய பொழுது நான் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை தான் ! ஆனால் காமிக்ஸ் எனும் ஒரு விஷயம் நமது மார்கெட்டில் எந்தவொரு ரூபத்தில் வளர்ச்சி கண்டாலும் கூட நெடும் பயணத்தில் நிச்சயம் நமக்கும் நன்மை தரக் கூடியதே என்ற சிந்தனை மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு நின்றது ! தொடர்ந்த நாட்களில் நமது பிராங்கோ - பெல்ஜிய கதைத் தொடர்களின் டாப் இதழ்களை அட்டகாசமாய் ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் CINEBOOKS -ன் நமது collection -ஐ  ஜூ.எ. பார்த்த பொழுது - "இவற்றையே சிறிதளவில் ஆரம்பத்தில் வரவழைத்துப் பார்ப்போமே ?"  என்று திரும்பவும் கேட்டிட - 'வேண்டாம்' எனத் தடை சொல்லத் தோன்றவில்லை எனக்கு ! ஒவ்வொரு பெங்களூரு COMIC CON-க்கும் அதன் அமைப்பாளர்கள் நம்மை அழைப்பதும் - தமிழ் இதழ்களை மாத்திரமே வைத்துக் கொண்டு அங்கு சென்று என்ன செய்வதென்ற தயக்கத்தில் நான் மறுத்து வருவதையும் சுட்டிக் காட்டி - 'ஆங்கில இதழ்களும் நம்மிடம் ஸ்டாக் இருந்தால் COMIC CON களிலும் பங்கேற்கலாமல்லவா ?' என்று ஜூ.எ. கொக்கியைப் போட்ட பொழுது பச்சைக் கொடியை ஆட்டினேன் ! So அப்படித் தொடங்கியது தான் CINEBOOKS இறக்குமதிப் படலம் ! மலையளவு ரகங்களைக் கைவசம் வைத்துள்ள CB நிறுவனத்திடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு மித அளவு ஆர்டரினை முன்வைத்து - அதனை நம் கிட்டங்கிக்குக் கொணர்ந்து சேர்க்க பணம் தந்தது மாத்திரமே நான் ; செயலாக்கியது ஜூ.எ. ! 

இவற்றை நம் மாநிலத்திலும், நம் வாசக நண்பர்கள் வசிக்கும் அண்டை மாநிலத்திலும் மாத்திரமே விற்றிட முனைந்திடாது - சிறுகச் சிறுக இந்தியாவின் முழுமைக்கும் பரப்பிடுவதே ஜூ.எ.வின் நோக்கம் ! So நமது ஆன்லைன் ஸ்டோரில் இதனை லிஸ்ட் பண்ணிடாது - www.comics4all.in என்றதொரு புதிய தளத்தில் லிஸ்ட் செய்திடவுள்ளோம் ! சுங்கவரி செலுத்தி இதழ்களை வரவழைக்கும் தலைநோவிலேயே நிறைய நேரம் ஓடி விட்டதால் - தளத்தைப் பூரணமாய் வடிவமைக்கும் பணிகள் இன்னமும் முழுமை அடையாது உள்ளன ! அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் அந்த வேலைகள் World Mart செய்து முடித்து விடும்  ! இப்போதே நாம் வாங்கியுள்ள இதழ்கள் சகலமும் லிஸ்ட் ஆகி விட்டன ; அவற்றை நீங்கள் வாங்கிடவும் முடியும் தான் ! ஆனால் தளம் இன்னமும் கொத்த வேலை பூர்த்தியாகா கட்டுமானம் போலக் காட்சியளிப்பது தான் சிக்கலே ! http://comics4all.in/2850-english-comics என்ற லின்க்கில் இதழ்களின் லிஸ்டிங்கைப் பார்த்திட முடியும் ! வாங்கிடவும் முடியும் ! 

இதழ்களின் விலைகளைப் பார்க்கும் பொழுது தலைசுற்றல் வந்திடுமென்பது நிச்சயம் ; சகஜமாய் ரூ.500 / 600 / 700 என்றெல்லாம் விலைகள் உள்ளன ! ஆனால் ஐரோப்பிய விலைகள் இவையே எனும் பொழுது நாம் செய்திடக் கூடியது அதிகமிருக்கவில்லை  !  இந்தியாவின் எல்லா இடங்களுக்கும்  free shipping செய்திடவுள்ளோம் என்பது தான் லேசான ஆறுதல் !  நமது சந்தாதார நண்பர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் தந்திட உத்தேசித்துள்ளோம் ! அந்த சலுகையினை தளத்திலேயே implement  செய்திட வழியில்லை என்பதால் உங்கள் ஆர்டர்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி விட்டு - 10% கழித்து தொகையினை அனுப்பிடலாம் ! வரும் நாட்களில் தளத்தினை சற்றே செதுக்கிட அவகாசம் எடுத்துக் கொள்கிறோமே..! 

இந்த விலையின் இதழ்களை நமது புத்தக விழாக்களிலும், ஆன்லைனிலும் விற்றுத் தீர்ப்பதென்பது நிச்சயமாய் விளையாட்டுக் காரியமே அல்ல என்பதை என்னை விடவும் ஜூ.எ. தெளிவாகவே உணர்ந்துள்ளார் ; And ஏற்கனவே இன்னும் சில ஆன்லைன் தளங்கள் CB-ன் இதழ்களை விற்பனை செய்து வருவதையும் நாம் அறிந்திடாதில்லை தான் ! But பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ்களையும் விற்பனை செய்திடும் தளங்களுக்கும்  - காமிக்ஸ் மட்டுமே மூச்சாய் செயல்படும் நம் போன்றோருக்கும் ஒரு குட்டியூண்டு வேறுபாடாவது இருக்குமென்ற நம்பிக்கை மனதின் ஒரு ஓரத்தில் புதைந்துள்ளது ! எங்கே சுற்றினாலும் நாம் திரும்புவது காமிக்ஸ் எனும் தாயின் மடிக்கே எனும் பொழுது - வெற்றியோ - புஸ்வாணமோ - அதனையும் ஒரு சந்தோஷப்பாடமாகவே எடுத்துக் கொள்வோம் !  சின்னதாய் எடுத்து வைக்கும் இந்த அடி - ஏதோ ஒரு தூரத்து நாளில் காமிக்ஸ் இதழ்களை மட்டுமே விற்பனை செய்திடும் மேலை நாடுகளின் COMICS STORES-கள் போன்றதொரு வாய்ப்புக்குக் கதவு திறந்து விடும் சாவியாக அமைந்தால் - we would be delighted !! புதியதொரு பாதையில் - சின்னதாயொரு பயண முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் - உங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் ஆவலாய்க் காத்திருப்போம் !

அப்புறம் 52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டினில் 69 பதிவுகளைப் போட்டு கதிகலங்கச் செய்திருக்கிறேன் என்பதை Posts count சொல்கிறது !! எந்தவொரு ஆண்டிலும் இல்லா இந்த வேகத்தை இப்போது நிதானமாய் பரிசீலித்தால் "ஞே" என்ற குழப்பத் தோரணை தான் மிஞ்சுகிறது ! கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிப் போனதொரு உணர்வு தலைதூக்குவது காரணமில்லாதில்லை என்பதும் புரிகிறது ! எனது ஆர்வக் கோளாறு - உங்கள் ஆர்வங்களில் கோளாறை எற்படுத்திடக் கூடாதென்பது தான் முக்கியமென்பதால் - 2015-ன் இந்த ரெக்கார்டை காலத்துக்கும் நிலைத்து நிற்குமொரு எண்ணிக்கையாய் பத்திரமாகப் பேணிக் காத்திடுவோமே  !!

புது இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, உங்களின் முதல் அபிப்பிராயங்களைப் பற்றியும், கதைகளைத் துரிதமாய்ப் படிக்க முடிந்திடும் பட்சங்களில் - அவற்றின் விமர்சனங்களையும் ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் ! So please do write folks !! மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் ! அமர்க்களமான, அட்டகாசமான, சந்தோஷ ஆண்டாய் 2016 நம் எல்லோருக்கும் அமைய வேண்டிக் கொள்வோமே..! Bye for now !! See you around soon !

P.S. : ஜனவரி இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs-december-2015/19863-january-2016-pack.html


Saturday, December 26, 2015

கச்சேரி களை கட்டட்டுமே !!

நண்பர்களே,

வணக்கம்சிட்டாய்ப் பறந்து விட்டன 48 மாதங்கள்! 2011-ன் ஒரு மார்கழி நாளில்  காத்திருந்த நமது மறுவருகையினை உங்களிடம் தெரியப்படுத்த வழி தேடி நான் விழி பிதுங்கிக் கொண்டிருந்ததொரு சமயம் அது! ‘அட... போங்க பாஸு... ஜனவரியிலேயே ஏப்ரல் ஃபூலா?‘ என்று நீங்கள் நிச்சயம் பரிகாசம் செய்வீர்களென்பதை நான் அறியாதில்லை ஆனாலும் இம்முறை we mean business என்ற தகவலை எப்பாடுபட்டேனும் உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற துடிப்பு என்னுள் நிறைந்திருந்தது! ‘வலைப்பதிவொன்றைத் துவக்கலாமே?‘ என ஜுனியர் சொன்ன யோசனையை அரைமனதோடு செயல்படுத்தியது தொடர்ந்த நாட்களில் அதுவே நம் எண்ணப் பரிமாற்றங்களுக்கு அட்டகாசமானதொரு பாலமானது இன்றைக்கு 260+ பதிவுகளோடும், 17 இலட்சம்பார்வைகளோடும் நம் பயணம் தொடர்வதெல்லாம் எவ்விதத் திட்டமிடலின் பலனுமல்ல! As always – ‘ஆண்டவன் நம்மை வழிநடத்துகிறார்துணையிருப்பது நீங்கள்!‘ என்ற நமது சுலபமான ஃபார்முலாவின் வெற்றி மட்டுமே! ‘அட போருமய்யா... இதை எழுதுவதே நீரல்ல! என்ற புள்ளியில் ஆரம்பித்து கதை பாணிகள்எழுத்து நடைகள்வெவ்வேறு நாயக/நாயகியரின் ப்ளஸ் மைனஸ்கள்மறுபதிப்புகள்புத்தக விழா அனுபவங்கள்படைப்பாளிகளுக்கான சந்திப்புகள்சந்தோஷ உச்சங்கள்சங்கடத்தின் பாதாளங்கள் என இங்கே நாம் பார்த்திடாத சமாச்சாரமேயிராது என்று சொல்லுமளவிற்கு இந்த வலைப்பதிவு ஒரு roller coaster ride ஆக இருந்துள்ளதுஆனால் சகலத்திற்குப் பின்பும்காமிகஸ் எனும் காதலோடு நம்மை இயங்கச் செய்திடுவதற்கு இந்தத் தளம் ஒரு மகத்தான க்ரியா ஊக்கி என்பதை மறுக்கவோ மறக்கவோ இயலாது! ‘அன்புக் கண்மணிகளே‘ என்று ஒன்றரைப் பக்கத்திற்கொரு ஹாட்லைனை எழுதியதைத் தாண்டி உங்களோடு interact செய்திட மெனக்கெடாது கிடந்த எனக்கு இந்தப் பதிவானது இப்போதெல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போய் விட்டது போலொரு உணர்வு! And மௌனமாகவோஉரக்கவோ இங்கே சங்கமிக்கும் நண்பர்களுக்கும் அத்தகையதொரு சிந்தை சிறிதளவேணும் ஏற்பட்டிருப்பின்  I would count myself privileged! ஏதோவொரு வகையில் உங்களில் ஒவ்வொருவரும் இந்தத் தேரின் வடத்தைப் பற்றி இழுத்துள்ளீர்களெனும் போது  உங்கள் அத்தனை பேருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாக்கிட வேண்டும்! Thanks ever so much folks!

2015-ன் ‘திரும்பிப் பார்க்கும் படலத்தின்‘ இறுதி அத்தியாயத்தை இன்றோடு மங்களம் பாடிடுவோமாஆகஸ்டில் ஈரோட்டுப் புத்தக விழா ஒரு அழகான உச்சமாக இருந்த பின்பு – தொடரும் மாதங்களும் அந்த விறுவிறுப்புக்கு ஈடு தரும் விதமாய் அமைந்திட வேண்டுமே என்ற ஆதங்கம் எங்களுள் நிறையவே இருந்ததுபௌன்சரின் “கறுப்பு விதவை” செப்டம்பரின் பட்டியலில் இருந்ததெனும் போது – அதகளத்திற்குப் பஞ்சமிராது என்ற நம்பிக்கை என்னிடம்ஆனால் – ஆல்பம் 6 & 7 இணைந்த இந்த பாகத்தினை எழுத உட்கார்ந்த போது – கம்பளிப் பூச்சிகளை மெத்தை முழுவதும் பரப்பிப் போட்டுக் கொண்டு அதன் மேலே சயனித்த உணர்வு தான் மேலோங்கியது! 1-5 வரையிலான ஆல்பங்களில் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்த போதிலும் – கதையின் ஓட்டத்தோடு அவை பெரியளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கவில்லைவசனங்களை சற்றே நாசூக்காய் அமைப்பதன் மூலமும், சித்திரங்களை டிங்கரிங் செய்வதன் மூலமும் முதலிரண்டு இதழ்களை ஒப்பேற்ற முடிந்திருந்ததுஆனால் இந்த இறுதி ஆல்பத்திலோ – கதையின் மையப் புள்ளியிலேயே தவிர்க்க இயலா நெருடல்கள்கதை நெடுகிலும் சில்லிட வைக்கும் வன்முறைதிகைக்கச் செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ‘கோக்கு-மாக்கான‘ கதாப்பாத்திரங்கள் என திரும்பிய திசையெல்லாம் தலைநோவுகள் தான் என் கண்ணுக்குப் புலப்பட்டன! ‘இந்த பாகத்தைப் போட்டே தான் தீரணுமாகல்தா கொடுத்து விடுவோமே?‘ என்ற எண்ணம் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் தலையெடுக்கத் தொடங்கியது!! ‘முன்பதிவுகள்‘ – ‘கிராபிக் நாவலுக்கென பிரத்யேக சந்தா‘ என்றெல்லாம் அறிவித்தான பின்பு – இது போல பாதியில் அந்தர்பல்டி அடிப்பது என் முதுகின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்ற கவலை மட்டும் இன்னொருபுறம் எழுந்திருக்கா பட்சத்தில் – நிச்சயமாய் கறுப்பு விதவை‘ கல்தா கண்டிருக்கும்ஒரு மாதிரியாகத் தட்டுத் தடுமாறி மொழிபெயர்ப்பைத் துவக்கிய போது தான் பௌன்சரின் புதிரான ஈர்ப்பினுள் நானும் இன்னொரு முறை இழுத்துச் செல்லப்பட்டதை உணர்ந்திட முடிந்ததுலார்கோவின் கதைகளை எழுதும் சமயங்கள் பெண்டெல்லாம் கழன்று போயுள்ளது – அதன் நவீனபிசுனஸ் சார்ந்த கதைக் களங்களால் ; கிரீன் மேனர் முற்றிலும் வேறு விதமான சவாலை முன்வைத்துள்ளது ; ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல; XIII-ன் spinoff கதைகளும் இன்னொரு மாதிரியான மெனக்கெடல்களை அவசியப்படுத்தியுள்ளன தான்ஆனால் பௌன்சரின் இந்தக் ‘கறுப்பு விதவை கதையினைச் சேதாரமின்றி தமிழாக்கம் செய்வதற்குள் திருவாளர் நாக்கார் தரையில் போர்வெல்லே போட்டு முடித்திருந்தார்நா கூசும் விரசமான ஆங்கில வசனங்களும்சித்திரங்களும் முன்னிருக்க – அந்த இடத்தினில் நார்மலான டயலாக்குகளை நுழைப்பதென்பது மார்கழியில் பச்சைத் தண்ணீரில் குளிப்பதற்கு நிகரான அனுபவம் என்பதை உணர்ந்திட முடிந்ததுஇறுதியில் பௌன்சரின் shock-factor-ன் முன்பாக பாக்கி எல்லா விஷயங்களும் முக்கியத்துவத்தை இழந்து நின்றதால் இந்த இதழும்எனது சிரமும் தப்பிப் பிழைத்தன என்று சொல்வேன்ஏகமாய் விமர்சனங்களையும்எக்கச்சக்க விவாதங்களையும் இது எழுப்பிய போதிலும் – பௌன்சரின் இனம் சொல்ல இயலா வசீகரம் தர்ம அடியிலிருந்து நம்மைக் காப்பாற்றியது என்று சொல்வேன்! 6/10 எனது பார்வையில்!

செப்டம்பரின் இதர இதழ்கள் எல்லாவுமே சத்தமிலா ஹிட்களாக அமைந்து போயினகமான்சே அமர்க்களமான அட்டைப்படத்துடன்ஆரவாரமிலா ‘சாத்வீகமாய் ஒரு சிங்கம்‘ ஆல்பத்தோடு ஸ்கோர் செய்திடசூப்பர் வண்ண மறுபதிப்பாக கேப்டன் பிரின்ஸின் ‘சைத்தான் துறைமுகம்‘ இன்னொரு பக்கம் மிளிர்ந்ததுஎன்றோ ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக black & white-ல் வெளியான இந்த கேப்டன் பிரின்ஸ் சாகஸம் முழுவண்ணத்தில் கலக்கலாகக் காட்சி தந்தது செப்டம்பரின் highlight! இரு இதழ்களுக்குமே 7/10 என்பேன்!

செப்டம்பரின் இன்னுமொரு surprise package – டைலன் டாக்கின் ‘வாராதோ ஓர் விடியலே?‘! Johnny Freak என்ற பெயரில் ஒரிஜினலாக வெளியான இந்த இத்தாலிய ஆல்பம் நம் மனங்களை நிச்சயம் இளகச் செய்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்ததுதமிழ் சினிமாவுக்குச் சவால் விடும் விதமான சென்டிமெண்ட் சார்ந்த கதையமைப்பில் ஆங்காங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பினும் – படிக்கும் போது ஒரு மென்மையான உணர்வு கதைநெடுகிலும் இழையோடுவதை ரசிக்க முடிந்தது! And டைலன் டாக் கதைவரிசையில் இது போன்றதொரு ஆல்பம் நிஜமான surprise தான்6.5/10 தரலாமா?

திருப்தியான செப்டம்பருக்குப் பின்னே அக்டோபரும் ‘மோசமல்ல‘ என்ற ரகத்திலிருந்ததுதோர்கலின் ‘சாகாவரத்தின் சாவி‘ சந்தேகமின்றி centre stage எடுத்துக் கொள்ள – வான் ஹாம்மேவின் கதை சொல்லும் ஆற்றலை முழுவீச்சில் இந்த ஆல்பத்தில் உணர்ந்திட முடிந்ததுஅதுவரையிலும் ஒரு substitute ஆட்டக்காரரைப் போல பென்ச்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோர்கலை – ஒரு டாப் லெவல் ஆட்டக்காரராகப் புரமோஷன் பெறச் செய் இதழிது என்று சொல்லலாம்! Fantasy கதைகளுக்கும் நம்மிடையே ஒரு உச்ச இடமுண்டு என்பதை நிரூபித்த இந்த இதழுக்கு என் பார்வையில் 8/10!

புயலுக்கொரு பள்ளிக்கூடம்” சுட்டி லக்கியின் இரண்டாவது சாகஸம் எனினும் நகைச்சுவை quotient குறைச்சலானதே! "நாக்கார் – மூக்கார்" என்று இதன் முதல் அத்தியாயத்தை நாம் 2013-ல் கரை சேர்த்திருப்பினும் – இம்முறை அது போன்ற டகுல்பாஜி வேலைகளுக்கு வாய்ப்பிருக்கவில்லை! So- ஒரு சராசரியான கதையை சீராய் – அழகான சித்திரங்களோடு சொன்ன இந்த இதழுக்கு 6/10 என் கணிப்பில்இதனோடு வெளியான ரிப்போர்ட்டர் ஜானியின் ‘காலனின் காலம்‘ did decently too! எப்போதும் போலவே ஒரு இடக்கு – முடக்கான கிராமத்தில் நடக்கும் சரமாரியான மர்மங்களை தன் டிரேட்மார்க் பாணியில் நம்மவர் முடிச்சவிழ்ப்பதை அட்டகாசமான வண்ணங்களோடு பார்ப்பது சந்தோஷ அனுபவமாகத் தானிருந்ததுஆனால் ராசி பலன்ஜோசியர் என்று ரொம்பவே வீக்கான கதையம்சத்தோடு பயணித்த இந்த இதழுக்கு 5.5/10 தான் சரியென்று தோன்றுகிறது!

நவம்பர் புலர்ந்த போதே – நமது இரவுக்கழுகாரின் ‘தீபாவளி மலர்‘ தொடர்பான எதிர்பார்ப்பும் எதிறியிருந்தது! “தீபாவளி with டெக்ஸ்” 576 பக்க black & white ‘குண்டூஸ்‘ என்பதால் – செமத்தியாக வேலை வாங்கியதுடைனோசரின் பாதையில்” அதிரடியில் சற்றே குறைச்சலான சாகஸம் என்ற போதிலும் – வித்தியாசமான கதைக்கரு எனக்குப் பிடித்திருந்ததுஆனால் டெக்ஸ் வில்லரை அவரது பெரியப்பா ஜாடையில் காட்டிய அந்த சித்திர பாணி தான் நெருடலாக இருந்ததுஆனால் அதை வட்டியும்முதலுமாய் ஈடு செய்ய எமனின் வாசலில்‘ படுநேர்த்தியான ஓவியங்களோடு ஆஜரானது saving grace! கதையைப் பொறுத்தவரை பெரியதொரு அசாத்தியங்கள் இதனில் இல்லாத போதும் – விறுவிறுப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை என்றே நினைத்தேன்கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவை டிராகன் நகரங்களோதலைவாங்கிக் குரங்குகளோ இல்லையெனினும் – நிச்சயமாய் ‘தூங்கிப் போன டைம்பாமும்‘ அல்ல!! 7/10 என் கணக்கில்!

மஞ்சள் நிழல்‘ நவம்பரின் மதில் மேல் பூனைவிறுவிறுப்பான கதை... சித்திரங்களும் coolவர்ணங்கள் மட்டுமே சொதப்பல் என்று இதழ் வெளியான வேளையில் அபிப்பிராயங்களாக எழுந்த போது மகிழ்ந்திருந்தேன்ஆனால் கடந்த சில வாரங்களாய் இங்கும் சரிநமக்கு மின்னஞ்சலில் வந்திடும் review களிலும் சரி – ‘மஞ்சள் நிழல்‘ துவைத்துத் தொங்கப் போடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்ததுசென்றாண்டு காலத்தின் கால்சுவடுகளில்‘ மூலம் குருவிரொட்டி வாங்கியிருந்த ரோஜரார் இம்முறை குச்சி மிட்டாய் வாங்கியிருப்பதைப் பேந்தப் பேந்தத் தான் பார்க்க முடிகிறது! One last time – 2016-ல் ரோஜருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு அவர் நியாயம் செய்திடாது போயின் – VRS பட்டியலுக்குள் அவரை நுழைத்திடல் தவிர்க்க இயலாது போகும்என் பார்வைக்கு ‘மோசமில்லைஆனால் நிச்சயம் ஆஹா-ஓஹோவுமில்லை‘ என்ற மஞ்சள் நிழலுக்கு 5/10!

நவம்பரின் ஷெல்டன் சாகஸமான ‘வரலாறும்... வல்லூறும்‘ நிறையவே என்னை பஸ்கி எடுக்கச் செய்ததொரு இதழ்வரலாற்றுக் குறிப்புகளுள் எவை நிஜமோ – எவை உட்டாலக்கடியோ என்ற சந்தேகம் அவ்வப்போது தலைதூக்க – கூகுளுக்குள் அடிக்கொரு தடவை புதைந்து போக வேண்டி வந்ததுபரபரப்பான ஆக்ஷன்அழகான சித்திரங்கள்குளுமையான வர்ணங்கள் என்றெல்லாம் இருந்தாலும் – ‘கடவுள் பாதி – காதுல பூ பாதி‘ என்ற ரீதியில் பயணமான கதையின் முதுகெலும்பை சற்று பலவீனமானதாகவே தான் பார்த்திட முடிந்தது! ‘புனித ஈட்டியைக் கொண்டு ஹிட்லரை உயிர்பிப்பது‘ என்ற புஷ்பத்தை காதில் சுமந்து கொண்டே கதையை ரசிப்பது ஒரு 60 – 40 அனுபவமாகத் தானிருந்தது! So- 6/10 எனது மதிப்பீட்டில்!

And finally on to December – மீண்டும் ஒரு தோர்கல் அதகள மாதம்! And இன்னுமொரு கமான்சே மௌன சரவெடி!! எதிர்பார்த்தபடியே இவ்விரு இதழ்களும் அழகாய் ஸ்கோர் செய்திட – 7.5/10 (தலாதந்திட நினைத்தேன்! ‘சிக்‘கென்று பிரசன்னமான மாடஸ்டியும் சோடை போகவில்லையெனினும் – தேம்ஸ் நதியை பற்றி எரியச் செய்யவுமில்லை தான்சற்றே ஆழமான கதைக்கருக்கள்திட்டமிடல்கள் கொண்ட முழுநீள ஆல்பம்களாக சமீப ஆண்டுகளில் பழகியான பின்னர்மாடஸ்டி போன்ற strip தொடர்கள் ஒருவித ஆழமின்மையைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானாவென்று தெரியவில்லை! But – 5/10 என் பார்வையில் இளவரசிக்கு! (sorry MV sir !!)

ஆண்டின் இறுதி இதழான ‘பாதைகளும்... பயணங்களும்..!‘ சீக்கிரமாய் மறக்க வேண்டியதொரு இதழ் என்பதில் ஐயமில்லைஇரண்டே பாகம் கொண்ட கதையாக அமைந்திடுமென்ற நம்பிக்கையில் நாம் முயற்சித்த கதையிதுஇரண்டு – மூன்றாக மாறிடமூன்றும் அடுத்த சுற்றுக்கு முன்னுரையாகி நிற்க – அரைவேக்காட்டில் குக்கரிலிருந்து வடித்த சாதத்தைப் போல இந்த இதழ் காட்சி தந்ததுநிச்சயமாய் முதலிரு பாகங்களின் tempo விற்கு நியாயம் செய்ய மறந்த இந்த மூன்றாம் பாகத்திற்கு 4.5/10 என் மார்க் ஷீட்டில்!

So- ரைட்டோதப்போ – எனது பாரபட்சமற்ற ஆண்டறிக்கை இதுவேஇதழ்கள் மொத்தமாய் பெற்ற மார்க்குகளைக் கொண்டு 2015-ன் நமது average score என்னவென்று கண்டுபிடிக்கும் பொறுப்பையெல்லாம் உங்களிடம் விட்டு விடுகிறேன்! But ஒட்டுமொத்தப் பார்வையில் எனது overall impressions இவையே:
  • 2015ன் மறக்க இயலா highlight நமது சிறப்பிதழ்களே!! ‘மின்னும் மரணம்‘ தொடங்கிலயன் 250முத்து 350 என ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும் மறக்க இயலா வெற்றிகளை ஈட்டித் தந்த அதிரடிகள் !!
  • சமீப ஆண்டுகளின் trend இன்னமும் தொடர்கிறது - கௌபாய்களின் ஆதிக்கத்தின் ரூபத்தில் ! டெக்ஸ் ; டைகர் ; பௌன்சர்   ; கமான்சே என score செய்துள்ளவர்களில் பெரும்பகுதியனர் "மாட்டுப் பையன்களே"!  
  • 2015-ன் most  talked about நாயகர் பௌன்சரே! சர்ச்சைகளோ;சந்தோஷங்களோ – அவர் உண்டாக்கித் தந்த சகலமும் விறுவிறுப்பின் உச்சமானவை!
  • 2015-ன் ஒரு சத்தமிலா நாயகன் நமது டிசைனர் பொன்னனும் கூட!இந்தாண்டின் அட்டைப்படத் தரங்களில் நிஜமாக நானொரு உயரே செல்லும் கிராபைப் பார்த்திட்டேன்பணிகளை முடித்து வாங்குவதற்குள்ஒவ்வொரு மாதமும் சந்நியாசம் ஒரு பிரமாதமான option ஆக நமக்குத் தோன்றத் தான் செய்தது என்றாலும் – ராப்பர்களைப் பார்க்கும் போது அந்த உஷ்ணம் மட்டுப்பட்டுப் போனது நிஜமே!
கதைத் தேர்வுகளில் எத்தனைக்கெத்தனை கவனம் எடுத்தாலும் – அத்தனைக்கத்தனை பள்ளங்களும் காத்திருக்குமென்பதை சிக் பில்லேடி Spitfire போன்றோர் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தனர்! 2016-ல் A+B+C+D சந்தாக்களில் விஷப்பரீட்சைகள் ஏதுமில்லை எனும் போது – காத்திருக்கும் ஆண்டில் உங்களுக்கும்எங்களுக்கும் சோதனைகள் அதிகமிராதென்று நினைக்கிறேன்! Fingers crossed ! So- ஒரு பெருமூச்சோடு இந்தாண்டின் புராணத்தைப் பார்சல் பண்ணிவிட்டு – புத்தாண்டின் புதுவரவுகள் பக்கமாய் ஒளிவட்டத்தைத் திருப்புவோமாஇதோஜனவரியின் நாயகர்களின் கலக்கலான அட்டைப்படங்களின் முதல் பார்வைகள்..........
கம்பீரமான டெக்ஸ் நமது ஓவியரின் கைவண்ணம் ! பின்னணி வர்ணச் சேர்க்கைகள் நமது டிசைனரின் லீலை ! So இந்தக் கூட்டணியின் கைவரிசையோடு களம் காணும் ஆண்டின் முதல் இதழ் மிரட்டலாய் வந்திருப்பதாய் எனக்குப்பட்டது ! உங்களுக்கும் அவ்விதம் தோன்றிடும் பட்சத்தில் - would be a job well begun ! தொடரும் டெக்ஸ் இதழ்கள் அனைத்துமே இந்த template-ஐப் பின்பற்றியே இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! And அது மட்டுமன்றி - இப்போதே 5 'தல' ஓவியங்கள் தயாராகி நிற்கின்றன நம்மிடம் என்பதும் கூடுதல் தகவல் !! ஒரு "புயலின்" வருகைக்கு ஓரளவுக்காவது நாமாவது முன்கூட்டியே தயாராகிக் கொள்வோமே !!
தொடர்வது மீசைக்கரரின் ஆக்ஷன் spot ! இங்கே சந்தோஷச் செய்தி - இந்தக் கதைத்தொடரின் ஒரிஜினல் பிதாமகரான வான் ஹாம்மேவின் மறுவருகை ! இதோ அதன் அட்டைப்பட first look ! முன்னும், பின்னுமே ஒரிஜினல் சித்திரங்களே - நமது டிசைன் சேர்க்கைகளோடு !

Next in line - இன்னுமொரு மீசைக்காரரின் ஆல்பம் ! இவரோ நாலரையடி உயரத்தில் பாக்தாத்தில் கூத்தடிக்கும் வஸ்தாது ! Enter - மதியில்லா மந்திரி - முழு வண்ணத்தில் ; ஒரு முழு நீள ஆல்பத்தில் !! இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே இருபக்கத்து ராப்பர்களுக்கும் ! நிச்சயமாய் முத்திரை பதிப்பார் நம் மோடி மஸ்தான் என்ற நம்பிக்கை இந்தப் 'பளிச்' அட்டைப்படத்தின் பொருட்டு இன்னும் கூடுதலாகிறது எங்களுக்கு !!  
ஜனவரியின் இறுதி இதழான மாயாவிகாருவின் அட்டைப்படத்தினை மட்டும் இதழ் வெளியாகும் தினத்தன்று கண்ணில் காட்ட உத்தேசித்துள்ளேன் ! இது நமது ஓவியரின் தயாரிப்பே ! So - சில பல மாதங்களாய் வெறும் அறிவிப்புகளாய் மட்டுமே வட்டமடித்துக் கிடந்த 2016-ன் வெளியீடுகள் வெளிச்சத்தைப் பார்க்கும் வேளையும் புலர்ந்து விட்டது ! எங்கள் தரப்பினில் அச்சுப் பணிகளை முடித்து விட்டோம் ; பைண்டிங்கின் ஆண்டிறுதி rush-க்கு மத்தியில் வரும் வார இறுதிக்கு முன்பாக இதழ்களை முடித்து வாங்கி விடுவோம் ! So we are all set to rock guys !! இனி கச்சேரியைக்  களைகட்டச் செய்யும் பணி மாத்திரமே பாக்கி ! இதுவரையில் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இனிமேலும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? மீண்டும் சந்திப்போம் !! முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! Enjoy the day & the festive season folks ! Bye for now !

Sunday, December 20, 2015

"தி.பா." படலம் - 2 !


நண்பர்களே,
            
வணக்கம். ‘The Year in Reviewஎன கடந்து சென்றுள்ள 2015-ன் வெளியீடுகளை நாமே ஒரு சுய விமர்சனம் செய்திடும் முயற்சி இது! கடந்த வாரமே இதன் முதல் பகுதி துவங்கியிருந்ததால் புதிதாய்ப் படிக்க நேரிடும் வாசகர்கள் (மட்டும்) அங்கிருந்து ஆரம்பித்திடக் கோருகிறேன்!

மின்னும் மரணம் பல வகைகளில் ஒரு நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்ற உறுதியிருப்பினும் எனக்குள்ளே அதன் பொருட்டு இருந்த கலக்கங்களும் ஏராளம்! 'தெரிந்த கதை தான் பல முறைகள் படித்தான சாகஸம் தான்' எனும் போது அத்தனை தடிமனான புத்தகத்தின் முழுமையையும் நீங்கள் மறுவாசிப்பு செய்திடத் தயாராக இருப்பீர்களா? அல்லது இது உங்களது புத்தக அலமாரிகளை நடுநாயகமாய் அலங்கரிக்கப் போகுமொரு காகிதப் பூவாக மாத்திரம் இருந்திடுமா? என்ற கலக்கம் பிரதானமெனில் Arizona Love’ பாகத்தில் டைகர் வாங்கும் பல்புகளை நீங்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ ? என்ற கவலை இன்னொரு பக்கமிருந்தது! அப்புறம் தயாரிப்பில் அச்சில் அட்டைப்பட அமைப்பில் என எல்லா இடங்களிலுமே ‘ஸ்கோர்‘ செய்யாது போயின் ஏமாற்றங்கள் தலைதூக்கி விடுமே என்ற ஆதங்கமும்! Yes of course – அட்டைப்படம் பிடிக்கலை!‘ என்று சில நண்பர்களின் குரல் ஒலிக்காதில்லை; but கடவுள் புண்ணியத்தில் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது! “வசனம் ஓவர்... படங்களை மறைத்துக் கொண்டு வண்டி வண்டியாய் எழுத்துக்கள்“ என்ற ரீதியில் சில random  எண்ணச் சிதறல்களும் இருந்த போதிலும் அவற்றில் காலணாவிற்கு merit கிடையாதென்பதை எழுதியிருந்த நண்பர்களே புரியாதிருக்க மாட்டார்கள்! ஒரிஜினலின் பிரதிகளை பிரெஞ்சிலோ; ஆங்கிலத்திலோ பார்த்திருக்கக் கூடிய அனைவருக்கும் ‘வசன மிகுதி‘ இந்த சாகஸத்தின் ஒரு தவிர்க்க இயலா அங்கமே என்று புரிந்திருக்கும்! So- ஒரு வழியாக ‘‘மின்னும் மரணம்‘‘ அரங்கேற்றம் கண்டான போது எனக்குள் சந்தோஷம் நிரம்பியிருந்ததை விட எங்களது சின்ன டீமின் ஆற்றலை எண்ணிய மலைப்பே ஓங்கி நின்றது! கிட்டத்தட்ட 6 பேரின் டைப்செட்டிங்கில் ஆரம்பித்து அச்சு பைண்டிங் அப்புறம் உங்கள் முன்பதிவுகளைக் கூரியர் செய்தது என எண்ணற்ற கைகள் வழியாகப் பயணித்த “மின்னும் மரணம்என் career ல் ஒரு மறக்க இயலா high !

ஏப்ரலின் புயல் வேகத்தை மே மாதம் நமது புஸ்வாணங்கள் சற்றே மட்டுப்படுத்தி விட்டன என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! மர்ம மனிதன் மார்ட்டினின்கனவின் குழந்தைகள் + புது அறிமுகமான Lady Spitfire-ன் “விண்ணில் ஒரு வேங்கை வெளியான வேளை அது! மார்ட்டினின் கதைகள் என் எழுத்துக்களைப் போலவே மூக்கை ஒரு மைல் சுற்றித் தொட்டுக் காட்டும் பாணியிலானவை என்பது தெரிந்ததே! சில கதைகளின் மையங்கள் நமக்குப் புரிபட சற்றே சுலபமாக இருக்கும் வேளைகளில் அந்த சாகஸங்கள் ‘ஹிட்‘டாகி விடுவது வாடிக்கை! And சில தருணங்களில் plot ரொம்பவே complex ஆக இருந்திடும் போது நமது தலைமுடியை கொத்துக் கொத்தாய்ப் பிடித்து வேர்களின் வலிமையை நாமே பரிசோதித்துப் பார்க்கும் வேட்கை உந்தித் தள்ளலாம்! கொத்துக் கொத்தாய்ப் பிடித்து tug of war நடத்திடும் வசதியெல்லாம் என் மண்டையில் கிடையாதென்ற போதிலும் இந்த ஆல்பத்தின் எடிட்டிங் பணிகளுக்குள் தலைநுழைத்த போது தலை ரங்கராட்டினம் சுற்றியது! இண்டர்நெட்டில் ஏதேதோ தேடல்களைச் செய்து கனவின் குழந்தைகளை புரிதலின் எல்லைகளுக்குள் கொணர நான் ‘தம்‘ கட்டியது நேற்றைக்குப் போலுள்ளது! “ம்ம்ம்... புரிஞ்சா மாதிரி தான் இருக்குது... அப்புறம் லைட்டா கிறுகிறுன்னு வர்ற மாதிரியும் இருக்குது...! என்ற உங்களின் விமர்சனங்கள் said it all! வழக்கமான மார்ட்டின் பாணியிலான சித்திரங்கள்; வழக்கம் போல history + science ன் கலவை கண்ட கதைக்களம் என்று இருப்பினும் என் பார்வையில் இதற்கு 5.5/10!

விண்ணில் ஒரு வேங்கையோ அடியேன் அநேக எதிர்பார்ப்புகளோடு களமிறக்கியதொரு அறிமுகம்! யுத்த பாணிக் கதைகளுக்கொரு welcome addition ஆக இது இருந்திடுமென்று ஆழமான நம்பிக்கையோடு ஜாலியாக இந்தக் கதையை மொழிபெயர்த்த ஞாபகம் இன்னமும் உள்ளது! ஆனால் நடுமண்டையில் ‘ணங்‘ என்று நீங்கள் வைத்த குட்டில் சித்த நேரம் எதுவும் புலப்படவில்லை! இந்தத் தொடர் நிச்சயம் வெற்றி காணுமென்று என் தலைக்குள் கிசுகிசுத்த குட்டிச் சாத்தான் எதுவோ தெரியாது அதன் நம்பிக்கையில் இந்தத் தொடரின் முதல் மூன்று கதைகளுக்கும் அப்போதே உரிமைகளை வாங்கியும் விட்டேன்! So இப்போது பாகம் 2 & 3 ‘அம்போ‘வென எனது அலமாரியில் நித்திரை கண்டு வருகின்றன! வித்தியாசமான சித்திர பாணி; dense & bright கலரிங் பாணிகள் என்ற காரணத்தினால் சற்றே வலு குறைவான கதைக்களத்தையும் மீறி 6/10 என்று மார்க் போடத் தோன்றுகிறது! Again – இது எனது பிரத்யேக அபிப்ராயம் மாத்திரமே!

மே மாதம் சுமாரான பிற்பாடு ஜுனிலும் பெரியதொரு எழுச்சிக்கு வழியில்லாது போனது! ப்ளுகோட் பட்டாளத்தின்தங்கம் தேடிய சிங்கம்+ ஜில் ஜோர்டனின் ‘துணைக்கு வந்த தொல்லை‘+ ‘விடுதலையே உன் விலையென்ன? என 3 புது இதழ்களும் வெளிவந்தன. ஜுன் 2015-ல்! ப்ளுகோட்ஸின் இந்த சாகஸமானது படைப்பாளிகளின் சிபாரிசுகளோடு வந்த கதை என்பதால் எனக்கு இதன் மீது ஏகமாய் எதிர்பார்ப்பிருந்தது! And கதையும் வழக்கமான யுத்தகள concept-லிருந்து விலகி கனடாவின் கானகத்தினுள் லயித்திருந்ததில் நிறையவே சந்தோஷம் எனக்கு! But அருமையானதொரு காமெடி அதகளத்திற்கு வாகான தளமும் கதாப்பாத்திரங்களும் இருந்தும் கூட கதையை out & out நகைச்சுவை விருந்தாக ஆக்கிடாது மெல்லிழையான சீரியஸ்னஸ் கலந்தே படைப்பாளிகள் நகற்றியிருப்பது போல எனக்குப் பட்டது! And உங்களில் பலரும் அதே எண்ணத்தைப் பிரதிபலித்திருந்தீர்கள்! But still – எனது பார்வையில் 7/10 பெற்ற சாகஸமிது! இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதுவொரு 10/10 கதையாகியிருக்கக் கூடுமே என்ற ஆதங்கம் தான் எனக்குள்!

ஜில் ஜோர்டனின்துணைக்கு வந்த தொல்லையும் ஒரு சிம்பிளான யோக்கியமான துப்பறியும் நாயகரின் ஆக்ஷன் த்ரில்லர் (!!!) என்பதில் ஐயமில்லை! But இங்கேயும் கூட நகைச்சுவையா? அதிரடியா? என்ற கேள்விக்குறியோடே படைப்பாளிகள் பயணித்திருப்பது போலப்பட்டது! இயன்ற இடங்களிலெல்லாம் காமெடி வசனங்களை நான் இடைச்செருகலாக்கினாலும் அடிப்படையில் இதுவொரு சிம்பிளான கதை என்பதை மாற்ற இயலாதென்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்! அழகான அச்சு; வர்ணங்கள் என்று இருந்தாலும் 5.5/10 தான் இதற்கொரு சரியான rating என்று நினைத்தேன்!
 கழுவிக் கழுவிக் காக்காய்க்கு ஊற்றப்பட்ட சாகஸமென பெயர் பெற்றது விடுதலையே உன் விலையென்ன? தான்! ‘விடுதலை‘ என்ற concept-ல் உருவாக்கப்பட்ட தொடரின் கதை # 7 இது! பிரெஞ்சு ஆல்பத்தின் முன்னோட்டத்தையும், கதைச் சுருக்கத்தையும் படிக்க முடிந்த போது இதுவொரு சூப்பர் டூப்பர் கிராபிக் நாவலாக அமைந்திடுமென்று எனக்குப் பட்டது! கதைக்களமும நாம் இதுவரை ரசித்திரா ரஷ்ய பனி மண்டலம் எனும் போது விறுவிறுப்பிற்குப் பஞ்சமேயிராது என்று நினைத்து வைத்தேன்! பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் ‘கதை எப்படியிருக்கு மேடம்?‘ என்று கேட்டிருந்த போது Quite decent!’ என்று சொல்லியிருந்ததில் எனக்குள் நிரம்ப நம்பிக்கை! ஆனால் கருணையானந்தம் அவர்கள் தமிழில் எழுதியிருந்த ஸ்கிரிப்டைக் கொண்டு டைப்செட்டிங் செய்தான பின்பு first copy என் மேஜைக்கு வந்த போது சின்ன வயதில் நாங்களாகச் செய்ய முயற்சித்த மைசூர்பாகு தான் நினைவுக்கு வந்தது! கட்டியும் ஆகாமல்; தண்ணீராகவும் இல்லாமல் தோராயமாய் கேப்பைக் களி போல காட்சி தந்த அந்த மைசூர்பாகு தான் என் மனக்கண்ணில் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது இந்த கிராபிக் நாவலைப் புரட்டப் புரட்ட! ‘டில்மான் ராசைன்‘ என்று ஒரு ராபின் ஹுட் மாதிரியான ஆசாமி க்ளைமேக்ஸில் ‘திடும்‘ பிரவேசம் செய்வான் போலும் என்ற நம்பிக்கையோடே நான் காத்திருக்க ‘சுபம்‘ என்று போட்டிருப்பதைப் பார்த்த போது என் வயிறு கலங்கித் தான் போனது! கதையின் புரிதலுக்கு உதவிட என்னாலான சகலத்தையும் செய்தான பின்பு கூட ‘விறுவிறுப்பு‘ என்ற விஷயம் வீசம்படிக்குக் கூடயில்லை என்பதை மறுக்க இயலவில்லை; And நீங்கள் மொத்தித் தள்ளிய போது ‘குத்துங்க எசமான்... குத்துங்க‘ என்று ஒத்துக் கொள்ளத் தான் தோன்றியது! 4.5/10!

ஜுனின் சொதப்பல்களை ஒற்றை நொடியில் பரணுக்கு அனுப்பிடும் புண்ணியம் நமது காமிக்ஸ் தலைமகன் டெக்ஸ் வில்லருக்கு மாத்திரமே சாத்தியமாகியிருக்கக் கூடும்! And அவர் அதைக் கனகச்சிதமாகச் செய்தும் தந்தார்! The Lion 250! அதிரடியாய் மூன்று வெவ்வேறு நீளங்களிலான வர்ண டெக்ஸ் சாகஸங்கள் ஒரு இதழில் என்பதை அறிவித்த சமயமே இது ஒரு winning குதிரை என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை! ஆனால் கதைளுக்குள் இயன்றளவு வேறுபாடு காட்ட வேண்டும் என்பதோடு முழுக்க முழுக்க வர்ணமயமான இதழ் எனும் போது புராதன டெக்ஸ் கதைகளையாகத் தேர்வு செய்திடாது புது யுக கலரிங் பாணிகளுடனான சாகஸங்களை மட்டுமே pick செய்திடுவதில் தீவிரமாக இருந்தேன்! ஓக்லஹோமா‘ கதைக்கு ‘டிக்‘ அடிப்பதில் அதிக நேரத்தை நான் வீண் பண்ணவில்லை – simply becos ‘மேக்ஸி‘ டெக்ஸ் கதைவரிசையின் பிள்ளையார்சுழியே இது தான்! So அதன் கதைக்களத்தில் நமக்கு நிச்சயமாய் திகட்டலிராது என்று நம்பினேன்! And முக்கியமாக – வர்ண பாணிகளும் அழகாக இருந்ததால் – thumbs up தந்திட சிரமம் இருக்கவில்லை! இரண்டாம் சாகஸமான ‘பிரம்மன் மறந்த பிரதேசம்‘ தான் என்னை நிறையவே தோண்டித், துருவச் செய்திருந்தது! இன்டர்நெட்டில் ஆராய்ச்சி; இத்தாலிய நண்பர்கள் சிலரிடம் கோரிப் பெற்ற சிபாரிசுகள் என்றெல்லாம் நிறைய நேரம் செலவிட்டான பின்னே இதனில் freeze ஆனேன்! தமிழ் சினிமாக்கள் பாணியிலான முக்கோணக் காதல் ஆங்கிள் நமது டெக்ஸ் கதைகளுக்குப் புதுசு என்றும் எனக்குப் பட்டது! ‘முகமில்லா மரணதூதன்‘ சிரமம் அதிகமில்லாது ‘டக்‘கென்று டிக்கான சாகஸம்! தற்போதை டெக்ஸ் எடிட்டர் திரு.மௌரோ போசெல்லியின் வெகு சமீபத்தைய படைப்பு என்பதோடு – தாட்டியனமானதொரு வில்லனும் இருந்ததால் இந்த 110 பக்கக் கதைக்கு இசைவு சொல்வதில் சிரமம் எழுந்திடவில்லை!

சொல்லப் போனால் – ‘The Lion 250’ ன் தயாரிப்பினில் எந்தவொரு கட்டத்திலும் பெரிதாய்  சிரமங்கள் அதிகம் தலைதூக்கவேயில்லை என்பது தான் நிஜம்! ‘பிரம்மன் மறந்த பிரதேசத்தினில்‘ டெக்ஸுக்கும், கார்சனுக்கும் ‘பன்ச்‘ டயலாக் எழுதிட ஏகமாய் வாய்ப்புகள் சிதறிக் கிடந்தபடியால் அவற்றிற்கு மட்டுமே சில பல இரவுகளில் கண்விழித்துப் பணி செய்தது நினைவுள்ளது! மற்றபடிக்கு இதழின் தயாரிப்பின் பெரும்பகுதிக்கு smooth sailing தான்! And அச்சிலும் அட்டகாசமாய்  பணியான பின்பு – இந்த இதழுக்கொரு சிகப்புக் கம்பள வரவேற்பு உத்தரவாதம் என்று பட்சி காதில் சொல்லியது! நெய்வேலி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்த இதழின் வெளியீட்டை அங்கே கொண்டிருக்கலாம் என நான் எண்ணியிருந்தேன்! ஆனால் ‘ஸ்டால் நஹி! ஜாவ்... ஜாவ்...!‘ என்று நிலக்கரி நகரம் சொல்லியான பின்பு – அதிரடியானதொரு இதழ் சாதுவாய் கூரியர் பயணங்களைத் துவக்குவது தான் விதியானது! என் பார்வையில் 8.5/10 பெறும் இதழ்! And – வெளியான பின்பு உங்களிடம் அற்புத வரவேற்பு பெற்றது மட்டுமன்றி – ஆன்லைனில் சகட்டுமேனிக்கு விற்பனையும் கண்ட இதழிது! So- 2015-ன் மறக்க இயலா வேளைகளுள் ஜுலையும் முக்கிய இடம் கொண்டிருக்கும்!

ஆகஸ்ட் என்றாலே ‘அதகளம்‘ என்றாகிப் போய் விட்டது சமீப ஆண்டுகளில் – ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் காரணத்தினாலும்; அது சமயம் அரங்கேறும் நண்பர்கள் சந்திப்பின் காரணத்தினாலும்! And இம்முறை நமது முத்துவின் இதழ் # 350ம் CCC வடிவத்தில் வெளியாகிட – உற்சாகம் உச்சத்தைத் தொட்ட வேளையது! அட்டவணையில் அவசியமான பட்டி-டிங்கரிங்கின் பொருட்டு புதுமுகங்களாய் உள்ளே புக வாய்ப்புக் கிட்டியது நமது காமெடி கர்னலுக்கும், லியனார்டோ தாத்தாவுக்கும்!

·        கர்னல் க்ளிப்டன்
·        சிக் பில்
·        ஊதாப் பொடியர்கள்
·        லியனார்டோ

என்று நான்வகை காமெடி சூரர்கள் ஒரே மாதத்தில் – 4 தனித்தனி இதழ்களில் உங்களை சந்திக்கின்றனர் என்ற போது எனக்குள் ஏக குஷி! என்ன தான் லார்கோ – டெக்ஸ் – பௌன்சர் – டைகர் – XIII என்றெல்லாம் அழுத்தமான தடங்களில் வண்டி ஓட்டிச் சென்றாலும் – சுலபமான சாலையில் ஜாலியா சைக்கிள் மிதிப்பது போலான உணர்வு மேலோங்கிடும் – கார்ட்டூன் கதைகளின் வெளியீட்டு வேளைகளில்! And – 2016-ன் “கார்டூன் சந்தா” என் மண்டைக்குள் ஓரமாய் குந்திக் கிடந்த வேளையுமது! So- ஒரே மாதம் 4 கார்ட்டூன் இதழ்களைக் களமிறக்கும் போது உங்களின் response எவ்விதமிருக்குமென்பதை கண்டிட செம ஆர்வமாயிருந்தேன்! அதிலும் SMURFS high-profile அறிமுகமென்பதால் – அதற்கான வரவேற்பையும் அறிந்திட நிறைய interest என்னுள்! இவர்களது smurfy பாஷைக்கும் உங்களது reactions-ஐத் தெரிந்திடுவதில் ஆர்வமும் மேலோங்கியது!

7 நாட்களில் எமலோகம்‘ ஆட்டத்தைத் துவங்கி வைத்த சாகஸம் – நமது கேரட் மீசைக்காரரின் பெயரைச் சொல்லி! நீண்ட பெரும் இடைவெளிக்குப் பின்பாக கர்னல் க்ளிப்டன் மீள்வருகை செய்திடும் சாகஸமிது என்பதால் இதனை சுவையாக உங்களுக்குப் பரிமாறிட வேண்டுமென்ற வேகம் நிறையவே இருந்தது! And சினிபுக்ஸின் ஆங்கிலப் பதிப்பில் இதன் ஒரிஜினல் நமக்கு வழங்கப்பட்டிருந்ததால் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை வேக வேகமாய் கையிலெடுத்துக் கொண்டேன்! And என்னவோ ஒரு அரைவேக்காட்டு ஆசை என்னை ஆட்டிப் படைக்க – ‘ஒரு கதையினை ஒரே நாளில் மொழிபெயர்த்திட சாத்தியமாகும் தான்!‘ என்று எனக்கு நானே நிரூபித்துக் காட்ட முயற்சித்துப் பார்த்தேன்! ஜுன் மாதத்து ஞாயிறின் காலையில் தொங்கி, அன்று மாலையே இந்த 46 பக்கக் கதையை முடித்திருந்த போது என் வலது கை விரல்கள் ஓய்ந்தே போயிருந்தன! மேலோட்டமாய் பார்க்கும் போது – கார்ட்டூன் கதைகளை எழுதுவது சுலபம் போலத் தோன்றலாம்; ஆனால் the sheer volume of the script is always huge! பக்கத்துக்கு சுமார் 12 படங்கள் – ஒவ்வொன்றிலும் ‘கெக்கே பிக்கே‘ என்று 3 பேராவது வசனம் பேசுவது எனும் போது – வண்டி வண்டியாய் பக்கங்கள் ஓடிவிடும் – மொழிபெயர்ப்பின் போது! அது மட்டுமன்றி - நகைச்சுவைக் கதைகளில், பிரேமுக்கு பிரேம் நீங்கள் சிரிப்பு வெடிகளை எதிர்பார்ப்பது இயல்பெனும் பொது எங்கேயும் லேசாக ஓய்வெடுக்க சாத்தியமிராது ! சதா நேரமும் 100% கவனத்தோடு கதையோடு ஒன்றிச் சென்றாக வேண்டியிருக்கும் ! சமீபமாய் – நமது மதியில்லா மந்திரியின் மொழிபெயர்ப்பில் இதை அனுபவ ரீதியா உணர முடிந்தது! 52 பக்கங்கள்; மொழிபெயர்க்கப்பட்ட பிற்பாடு சுமார் 58 பக்கங்கள் தேறின – புல்ஸ்கேப் பேப்பரில்! And கிளிப்டனின் கதையில் இன்னொரு சிக்கலும் கூட ! காரட் மீசைக்காரரின் கதை பாணியின் பின்னணியே பிரிட்டிஷ்காரர்களின் வறண்ட நகைச்சுவையுணர்வு  எனும் போது - அதைக் கையாள்வதும் மண்டை நோவே ! இப்போது கூட - "நில்..சிரி...திருடு.."   கதையின் 'மொழிபெயர்ப்பு மல்லுக்கட்டு; அரங்கேறி வருகிறது எனது மேஜையில் ! So கார்ட்டூன்களைக் கையாள்வது சுலபமே கிடையாது தான் – ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டி உருண்டேனும் அந்த சந்தோஷத்தை உணர்ந்திடுவது ஒரு அலாதி அனுபவமே!

Back on track – கர்னல் க்ளிப்டனின் கதை செம விறுவிறுப்பான plot கொண்டதென்றால் – நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட பாணி உங்கள் அனைவருக்கும் பிடித்துப் போயிருந்தது! And அந்தக் குட்டிப் பூனையை நமது மீசைக்காரர் பாசத்தோடு க்ளைமேக்ஸ் வரை சுமந்து சென்ற சின்னஞ்சிறு சென்டிமெண்டும் work out ஆகிட – hit for sure! 8/10 என் பார்வையில்!

“இதுவொரு ஊதா உலகம் !” உலகப் பிரசித்தி பெற்ற Smurfs பொடியர்கள் நம் கரைகளுக்கு ஒதுங்கிட வாய்ப்புத் தந்த இதழ்! இதன் பொருட்டு நாம் தந்திருந்த பில்டப்பும் ஏகம்; படைப்பாளிகள் விதித்திருந்த நிபந்தனைகளும் அநேகம் எனும் போது – இதன் மீதான எதிர்பார்ப்புகளின் சுமை எனக்கு நன்றாகவே புலனானது! நாமும் இயன்ற நியாயங்களைச் செய்தாக வேண்டுமென்ற வேகத்தில் ஸ்மர்புகளுக்கான லோகோ டிசைனிங்மொழிபெயர்ப்பில் ஓராயிரம் முயற்சிகள் என்று தம் கட்டினோம்! இதழ் வெளியான போது நான் வெளிப் பார்வைக்கு confident ஆக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே உடுக்கடித்துக் கொண்டுதானிருந்தது! ஆனால் உங்கள் அனைவரது review களும் “அமர்க்களமான இதழ் / அறிமுகம்” என்று பறைசாற்றிய போது தான் உயிர் வந்தது எனக்கு! அதிலும் அந்த ஸ்மர்ப்களின் ‘அவுக்... அவுக்‘ அதிரடிகள் வீட்டின் குட்டீஸ்களை ரொம்பவே கவர்ந்ததாக நீங்கள் சொன்ன போது – வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது! ‘இது ரொம்பவே குழந்தைத்தனமான தொடரோ?‘ என்ற கேள்வியை உங்களில் ஒரு சிலர் முன்வைத்த போதிலும் – அது ஒரு சுருக்கமான எண்ணிக்கையிலேயே தான் இருந்ததால் – 8/10 பெற்றிடும் இதழிது என் பார்வையில்!

லியனார்டோ தாத்தா – a collection of gags என்றான பிற்பாடு – அங்கும் மொழிபெயர்ப்பில் இயன்ற நகாசு வேலைகளைச் செய்து வலுவூட்ட ஆனமட்டிலும் முயன்றேன்! இது போன்ற ஒற்றைப் பக்க / இருபக்கக் குட்டிக் கார்ட்டூன்களின் தொகுப்பு நமக்கெல்லாம் புதுசு என்பதால் – லியனார்டோ நம்மை அதிரச் செய்யவுமில்லை; அழச் செய்யவுமி்ல்லை! 6/10 may be!

CCC-ன் நிச்சயிக்கப்பட்ட சொதப்பல் சிக் பில் தான் என்பதை “மாறிப் போன மாப்பிள்ளை”யை தமிழில் first copy-ல் படித்த போதே புரிந்து கொள்ள முடிந்தது! மிக average ஆன கதைக்களம்; பற்றாக்குறைக்கு பாதி நேரம் ஷெரீப் மண்டையார் நோயாளியாகக் கிடந்திடல் என கதை தள்ளாட்டம் காண்பதை கவலையோடு பார்க்கத் தான் முடிந்ததே தவிர – வேறு சிக் பில் கதைகளில் டிஜிட்டல் பைல்கள் தயாராகியிரா அந்தத் தருணத்தில் மாற்று மார்க்கம் தட்டுப்படவில்லை! அந்த நொடியில் சிக் பில்லை காவு கொடுத்து விட்டு மதியில்லா மந்திரியாரை உட்புகுத்தி விடுவோமா? என்ற எண்ணம் என்னுள் பலமாய் ஓடியது! ம.ம. கதைக்கான டிஜிட்டல் பைல்கள் அப்போதே நம்வசம் தயாராகயிருந்தன! ஆனால் – கடைசி நிமிடத்தில் இது போல மாற்றம் செய்தால் ‘அதெப்படி மாற்றப் போச்சு ?? இதை நான் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்!!!‘ என்ற உஷ்ணக் குரல்கள் வலையிலும், மின்னஞ்சல்களிலும் பொங்கிடும் என்பதால் – அமைதி காத்தல் தவிர வேறு option இருக்கவில்லை என் முன்னே! Sometimes – just sometimes எனது இது போன்ற தீர்மானங்கள் நன்மையின் பொருட்டே இருந்திடக்கூடும் என்ற புரிதல் நிலவிடின் ”மாறிப் போன மாப்பிள்ளையின் ரீதியிலான (தவிர்த்திடக் கூடிய) சங்கட அனுபவங்கள் தொடர்ந்திடாது! But – ”மாற்றம்” என்ற மறுகணம் நம்மில் பலருக்கும் கண்கள் சிவந்து போவது தான் சிக்கலே! And அது மட்டுமன்றி ஏற்கனவே லியனார்டோ ஆல்பமானது  - குட்டிக் குட்டிக் கதைகளின் தொகுப்பாய் இருக்கும் வேளையில், மதியில்லா மந்திரியாரின் அதே பாணியிலானதொரு ஆல்பத்தையும் களமிறக்கக் கொஞ்சம் தயக்கம் என்னுள்ளும் விரவிக் கிடந்தது என்பதும் fact! Anyways என் பார்வையில் 4/10 பெற்ற இதழிது!

முத்து காமிக்ஸின் 350-வது இதழிது என்பதால் - டப்பாவின் ஒரு பக்கம் முத்துவின் முத்திரை நாயகர்களைப் போட்டுத் தான் பார்ப்போமா ? என்று லேசாக ஒரு மகாசிந்தனை தலைக்குள் ஓடியதன் பலனிது ! ஆனால் மாயாவியாரை இந்தக் கோலத்தில் டப்பாவினில் பார்த்தால் இதனுள் மாயாவி கதையும் உண்டோ ? என்ற குஷி / பீதி தேவையின்றி வியாபித்த பிழைப்பாகிடுமே என்பதால் திட்டம் drop ஆனது ! 

Overall – CCC-ன் அனுபவமும், ஈரோட்டில் நண்பர்களைச் சந்தித்த உற்சாகமும் தான் இந்தாண்டின் சந்தா C + சந்தா B-ன் பின்புலன்கள்! அன்றைக்கு CCC ஏனோ தானோவென்று மாத்திரமே வரவேற்புப் பெற்றிருப்பின் – காத்திருக்கும் 2016-க்கு 12 கார்ட்டூன் இதழ்களை தயாரிக்கும் தைரியம் எனக்கு வந்திராது! And டெக்ஸின் விஸ்வரூபத்துக்கு தடம் அமைத்திட்ட புண்ணியம் இங்கு வலையிலும் சரி, மின்னஞ்சல்களிலும் சரி, ஈரோட்டுச் சந்திப்பின் சமயம் நேரிலும் சரி – நீங்கள் தந்த தொடர் கோரிக்கைகளே! அடுத்த வருஷம் இதே சமயம் 2016-ஐ நான் review செய்யும் வேளை புலரும் போது – முகம் முழுக்கப் பல்லாக நான் அமர்ந்திருப்பின் – இரு சந்தாக்களுமே இனிப்பான பலன்களை நல்கியிருப்பது நிச்சயம்! Fingers crossed big time!

தற்போதைய சந்தோஷம் என்னவெனில் சந்தாக்கள் வேகமாய் கிட்டி வருவது மட்டுமின்றி அவற்றின் 95% A+B+C+D என்ற 4 சந்தாக்களின் காம்பினேஷனுக்கே என்றிருப்பது தான் !!கார்ட்டூன் வேண்டாம்‘ என்று பத்து நண்பர்களும்; ‘தல‘ வேண்டாம் !' என்று ஒரு 4 நண்பர்களும் மட்டுமே ஒதுங்கி நிற்கப் பிரியப்பட்டுள்ளனர்! பாக்கி எல்லோருமே நம் பொருட்டு ஆங்கிலத்தின் முதல் 4 எழுத்துக்களின் மீது பரிவு காட்டியுள்ளனர்! Thanks ever so much all!

ஜனவரியின் பணிகள் ஜரூராய் நடந்து வருகின்றன! அதிலும் நமது இரவுக் கழுகாரின் அட்டைப்படம் நிச்சயம் ஒரு showstopper ஆக இருந்திடப் போவது உறுதி! நமது ஓவியருக்கு சரியானதொரு மாதிரியைக் கையில் கொடுத்து விட்டால் – அதகளம் உத்தரவாதம் என்பதை மீண்டுமொரு முறை பார்த்திடப் போகிறீர்கள்! Just wait till the coming Sunday !

And – 'செப்டம்பர் ’15 முதலான ஆண்டின் இறுதி quarter இதழ்களின் விமர்சனம் என்னாச்சு? என்ற கேள்வி கேட்கும் நண்பர்களுக்கு : சென்ற வாரம் 11 என்றால் – இந்த வாரம் 13.5 பக்கங்கள்!! நிஜமாய் இதற்கு மேல் விரல்களில் ஜீவனில்லை என்பதால் – last quarter's review- வரும் ஞாயிறுக்குக் கொண்டு செல்கிறேன்! மீண்டும் சந்திப்போம் guys! Advance Christmas Wishes! Bye for now!