Sunday, October 25, 2015

ஒரு டைரியின் கதை !

நண்பர்களே,

வணக்கம். புது அட்டவணை ; ஆஹா டெக்ஸ் !! ; ஒ நோ ப்ளூகோட்ஸ் !! டயபாலிக் நஹி...ஸ்டார்ட் மண்டகப்படி...!! டெக்ஸ் ஓவர்டோஸ் !! ; எடிட்டருக்கு விடு டோஸ் !! என்றெல்லாம் இரண்டு  நாட்களாய் இங்கு தூள் பறக்க - எனக்கோ மண்டைக்குள் ஒரே ஒரு சிந்தனை மட்டுமே ! 'ஷப்பா....சுலபமானதொரு அட்டவணைக்கே இந்தப் பாடெனில் - ஏப்ரலின் heavyweight அட்டவணைக்கு இருக்குடா சாமி .." என்று !! And  தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான் !! But கடந்த ஒன்றரை மாதங்களாய்க் கிடைக்கும் சைக்கிள் கேப்புகளில் எல்லாம் புதிய அட்டவணை பற்றிய யோசனைகள் ; இப்போது சந்தா Z -க்கான பாய் பிறாண்டல்கள் என நாட்கள் ஓடிடும் நிலையில் இந்தப் பதிவிலாவது (எனக்கே)  ஒரு ஒய்வு தந்தால் தேவலாம் என்று தோன்றியது !  So இதுவொரு away from the beaten track பதிவு !  

பிரான்க்பர்ட் புத்தக விழா அனுபவங்கள் பற்றியும், பிரான்கோ-பெல்ஜியக் கதைக்களங்கள் பற்றியும் காதில் இரத்தம் வருமளவுக்கு எழுதியுள்ளேன் தான் ; ஆனால் ஆயுத பூஜை லீவுகளில் வீட்டில் எனது புத்தக ஷெல்பை உருட்டிக் கொண்டிருந்த போது சிக்கிய ஆதிகாலத்து டயரி ஒன்று எக்கச்சக்கமாய் மலரும் நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது என்னுள் ! சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பான இதே நாளில் அடியேனின் ஐரோப்பியப் பயணம் நிறைவு பெற்று - தொங்கிய நாக்கோடு ஊர் திரும்பியிருந்தேன் என்பதை அந்த டயரி சொல்ல, சிலபல கேவாக் கலர் போட்டோக்களும் அதனுள் பழுப்பேறிக் கிடந்தன ! இது போதாதா உங்களைப் போட்டுத் தாக்க ? என்ற சிந்தனையே இந்த வாரப் பதிவின் ஒரு பகுதியாகிறது !
டயரியின் மேலே  எழுதியிருந்த பெயரைப் பார்த்த போது சிரிப்புத் தான் வந்தது! உங்களில் ரொம்பப் பேருக்குத் தெரியாத விஷயம் - ஏன் என் வீட்டுக்காரிக்கே கூடத் தெரியாத விஷயம் சார்ந்தது அந்தப் பெயர் ! கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் "விஜயன்" என்று சுற்றித் திரியும் எனது முழுப் பெயர் - "ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்" !! 'அந்தக் காலத்தில் இது தான் ஸ்டைலா ? அல்லது இதிலெல்லாம் கஞ்சத்தனம் எதற்கு ?  - புள்ளைக்கு நல்ல நீளமாய்ப் பெயர் வைப்போமே என்ற ஆர்வமா என் பெற்றோருக்கு ?' - நானறியேன் ! எனது  பள்ளிக்கூட ரெகார்டுகள் முழுவதிலும் இது தான் பதிவாகியிருந்தது ! அந்நாட்களது டயரி என்பதால் அதன் முதல் பக்கத்திலும் இதே பெயரைத் தான் கொட்டை எழுத்துக்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பின்னாட்களில் - நான் தொழிலுக்குள் 'தொபுக்கடீர்' என்று குதிக்கத் தயாரான வேளையில் என் தந்தையே "விஜயன்" என்று சுருக்கமாய்ப் பெயரை எழுதச் சொல்ல - அப்புறமாய் அரசு கெசெட்டில் பெயர் மாற்றம் இத்யாதிகள்  செய்து கொள்ள -  துவக்க நாட்களது நீளமான பெயர் மறந்து / மறைந்து போனது ! ஆனால் இந்தப் பெயரே பிரான்க்பர்ட் பயணத்தின் பிள்ளையார்சுழி போடத் தொடங்கும் பொழுது சிக்கலாகி நிற்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை நாங்கள் ! ஜெர்மனி போக பாஸ்போர்ட் தேவை ; பாஸ்போர்டில் உள்ள முகவரிக்குச் சான்றாய் பள்ளி சர்டிபிகேட் ; பிறப்புச் சான்றிதழ் etc தேவையென்று வரும் போது எல்லாமே "ஈஈஈ" என்று பல்லைக் காட்டின என் முழுப் பெயரோடு   ! பாஸ்போர்டில் தந்தை பெயரும் சேர்ந்து வந்தாக வேண்டும் எனும் பொழுது என் பெயரை "SOUNDRAPANDIAN SRIKANTH MUTHUVIJAYAN " என்று எழுதுவதாயின் பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்போர்டையும் சேர்த்து வாங்கித் தான் எழுத வேண்டியிருந்திருக்கும் ! திருச்சியில் அப்போது இருந்த மண்டல பாஸ்போர்ட் ஆபீசில் போய் தேவுடு காத்து நின்று - அவர்கள் கேட்ட சமாச்சாரங்களைத் தயார் செய்வதற்குள் நாக்குத் தொங்கிப் போய் ; அதன் பின்பாக 'விசா கிடைக்குமா?' ; "கிடைக்காதா?" என்ற யோசனையோடே கோட்-சூட் எல்லாம் தைத்து வாங்கி விட்டு கண்ணாடி முன்னே நின்று அழகு பார்த்த நாட்கள் அவை ! 

டயரியின் இண்டெக்சில் "A " என்ற பகுதியில் எழுதப்பட்டிருந்த முதல் பெயரைப் பார்த்தேன் - ARPANA KAUR என்றிருந்தது ! அந்தக் காலத்து சினிமாக்களில் வருவது போல் வளையம் வளையமாய் என் சிந்தனைகள் பிளாஷ்பேக் mode-ல் செல்ல - 1985-ல் செப்டெம்பர் இறுதியில் சென்று land ஆனேன் ! ஒரு மாதிரியாய் 'எல்லாம் தயார் .....புறப்படலாம் !' என்ற நிலையில் அப்போது டெக்ஸ் வில்லர் கதைகள் வாங்கிடும் பொருட்டு நாம் தொடர்பிலிருந்த இத்தாலிய எஜெண்டிடமிருந்து ஒரு லெட்டர் வந்திருந்தது ! புது டில்லியில் இருக்கும் அர்பனா கவுர் எனும் ஒரு இந்திய ஓவியரிடமிருந்து, வீட்டை அலங்கரிக்கும் விதமாய் custom made ஓவியங்களை அவ்வப்போது வாங்குவதாகவும் - பிரான்க்பர்ட் வரும் சமயம் அவரிடமிருந்து சின்னதொரு பார்சலை சேகரித்துக் கொண்டு வர முடியுமா ? என்றும் கேட்டிருந்தார் ! 'அட...இந்த உபகாரம் கூடச் செய்யாவிட்டால் எப்படி ?' என்று என் மண்டை சொல்ல - உடனே அந்த ஓவியரிடம் பேசி அவரது முகவரியெல்லாம் வாங்கிக் கொண்டேன் ! என்னை வழியனுப்ப என் தந்தையும் டில்லி வந்து சேர, இருவருமாய் அவர் வீட்டைத் தேடித் பிடித்துப் போனோம் ! போனால் ஜில்லென்று   ஒரு கிளாஸ் ரஸ்னா கொடுத்து விட்டு, நீளமாய் ; தடிமனான ஒட்டரைக் குச்சிகள் போல் எதையோ என் கையில் தூக்கிக் கொடுத்தார் ! இதென்ன கண்றாவி ? என்று நான் முழிக்க - அப்புறம் தான் தெரிந்தது -அவை ஓவியத்தை நாலா பக்கமும் தாங்கிப் பிடிக்கும் சட்டங்கள் என்றும் ; விசேஷ மரத்தில், வேலைப்பாடுகளோடு செதுக்கப்பட்டவை என்றும் ; சித்திரத்தை மனுஷன் போன முறை நேரில் வந்திருந்த போதே வாங்கிச் சென்று விட்டார் என்றும் ; சட்டங்கள் சமீபமாய்த் தான் தயார் ஆயின என்றும் !!!  என் தந்தை என்னை முறைக்க, எனக்கோ இதைத் தூக்கிக் கொண்டு ஏணிப்படி இறங்கவே முடியாதே  ; இந்த இலட்சணத்தில் ஜெர்மனி வரைக் கொண்டு போவது எப்படியாம் ? என்ற சோகம் !! ஒரு மாதிரியாய் கீழே வந்து ஆட்டோவில் ஏற்றத் தடுமாறிய போதே, தெருக்கோடியில் சத்தமில்லாமல் தூக்கிப் போட்டு விட்டு ஓடி விடுவோமே என்று எனக்குத் தோன்றியது ! ஆனால் என் தந்தை இது போன்ற கோக்குமாக்கான வேலைகளைக் கூட எப்படியாவது சமாளித்து விடும் ஆற்றல் கொண்டவர் ! நேராக ஆட்டோவிலேயே விமான நிலையத்துக்கு அருகில் இருந்த விமானச் சரக்கக தளத்துக்குப் போனோம் ! Lufthansa ஜெர்மன் விமான சேவையின் கார்கோ பிரிவு   அது ! ஒரு மாதேரே, இவரைப் பார்த்து ; அவரைப்  பார்த்து - வாய்க்கு வந்த விளக்கங்களை எல்லாம் சொல்லி புக்கிங் செய்ய முயற்சித்தோம் ! அங்கே இருந்த ஆசாமிக்கோ நாம் கட்டைக்குள்ளே எதாச்சும் வைரம்- கீரம் கடத்துகிறோமோ என்ற சந்தேகம் போலும் - பேக்கிங்கைப் பிரித்து இந்தப் பக்கமாய் - அந்தப் பக்கமாய் லொட்டு லொட்டென்று தட்டித் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ! பிராங்கர்ட் புத்தக விழாவில் எங்கள் பதிப்பக டிசைன்களை ; சித்திரங்களை விளம்பரப்படுத்த இந்தச் சட்டங்களைக் கொண்டு போகவிருப்பதாக நாங்கள் விளக்கம் சொல்ல - அந்தாளோ என்னை மேலும், கீழும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு நின்றார் ! அப்புறம் ஒரு மாதிரியாய் X -ரே சோதனைகள் எல்லாம் செய்த பிறகு அவற்றை கார்கோவில் புக்கிங் செய்ய ஒரு நூறு படிவங்களைப் பூர்த்தி செய்யச் சொன்னார்கள் ! கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் ஆன பிற்பாடு அந்த ஓட்டரைக்கம்புகள் எங்கள் மடியிலிருந்து ஒரு மாதிரியாய்க் கிளம்பியிருந்தன !  ஷப்பா...இன்றைக்கு நினைத்தாலும் மண்டை காயச் செய்யும் அனுபவம் அது !! 

இண்டெக்சைப் புரட்டினால் - B பகுதியில் Bannerjee (BI Publications Pvt Ltd ) என்று எழுதியிருந்தது - ஒரு கொல்கத்தா நம்பரோடு ! அதைப் பார்த்த போது கெக்கே பிக்கே வென அமைதியாய் ஒரு சிரிப்பு என்னுள் !! பிரான்க்பார்டில் சந்தித்திருந்தேன் ; அங்கிருந்த ஒரு வாரமும் இவரோடு தான் சாப்பிடப் போவது ; வாக்கிங் போவது என்று நெருங்கிய பழக்கம் ! இந்தியா திரும்பிய பிற்பாடு அந்த நட்பு நீடிக்கவில்லை - செல்போன் / இன்டர்நெட் / STD கால் வசதிகள் கூட இல்லாத அந்நாட்களில் - ஆனால் ஆசாமியை நான் மறக்கவே முடியாது ! பிரான்க்பார்டில் ஹோட்டல் ரூம் முன்பதிவு ஏதுமின்றி லார்ட் லபக்தாஸ் போலப் போயிறங்கி - லொட்டா அடித்துக் கொண்டிருந்த வேளையில் - ரூமே கிடைக்காவிட்டால் என்ன செய்ய ? என்ற கேள்வி என்னை வாட்டியது ! ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் இருக்கத் தான் செய்தன ; ஆனால் அவர்களது கட்டணங்கள் ஜன்னி வரச் செய்யும் விதமாய் இருந்ததால் - அந்த திசைக்கொரு கும்பிடு போட்டு விட்டு மூளையைக் கசக்கினேன். ஜேர்மனி கிளம்பும் முன்பாக - டில்லி வந்திருந்த என் தந்தை YHA என்று சொல்லப்படும் சர்வதேச யூத்ஹாஸ்டல் சங்கத்தில் என்னை மெம்பராகச் சேர்த்து விட்டிருந்தார் ! சின்னதொரு அடையாள அட்டையும், ஒரு மெம்பர் அடையாள டாலரும் கொடுத்திருந்தனர். அது நினைவுக்கு வர - பிரான்க்பார்டில் உள்ள யூத் ஹாச்டளைத் தேடித் புறப்பட்டேன். டாக்சி எடுக்க பயம் ; நம்மூர்களில் போல ஊரெல்லாம் சுற்றிக் காட்டி மீட்டரை தீட்டி விடுவார்களோ என்று ; so இங்கே விசாரித்து, அங்கே விசாரித்து டிராமில் போய் கொண்டிருந்தேன். நடுவில் ஒரு ஸ்டாப்பில் ட்ராம் மாற வேண்டுமென்பதால் அங்கே இறங்கிக் காத்திருக்க, சிவந்து போன கண்களோடு குள்ளமாய், கறுப்பாய் ஒரு இந்திய முகம் ஒரு காரிலிருந்து இறங்கியது - மொடாங்கு சூட் கேஸ் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ! இப்போது போல் இந்தியாவுக்கு வெளியே நம்மவர்களை சந்திப்பது அந்த நாட்களிலெல்லாம் ரொம்ப ரொம்ப அபூர்வமே ! நானே நாக்குத் தொங்கிப் போயிருந்த தருணமது என்பதால் தேசப்பற்று ஆறாய் ஓடியது எனக்குள் ! அவரும் என்னைப் பார்த்து விட்டு திபு..திபுவென்று ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டார் ! கொல்கத்தாவைச் சார்ந்த பிரிட்டிஷ் இந்தியா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாய் பிரான்க்பர்ட் புத்தக விழாவுக்கு வந்திருப்பதாகவும் ; ஊருக்குள் போகும் போது வழிமாறி தப்பான திசையில் சென்று ஊர்கோடியில் தவித்ததாகவும், இரக்கப்பட்டு ஒரு உள்ளூர்காரர் அங்கே கொண்டு வந்து இறக்கி விட்டதாகவும் கதறாத குறையாகச் சொன்னார் ! தங்க ஹோட்டல் கிடைக்குமா ? என்று என்னைக் கேட்க - நான் என் சோகக்கதையை ஒப்பித்தேன் ! அப்புறம் இருவருமாய்ச் சேர்ந்து யூத் ஹாஸ்டல் சென்று 'எதற்கும் இருக்கட்டுமே' என்ற safety -க்கு ஆளுக்கொரு பெட் புக்கிங் செய்து கொண்டோம் - சொற்பத் தொகைக்கு ! ஹோட்டல் ரூமே கிடைக்காமலே போய் விட்டாலும் இன்றிரவு தெருவில் தூங்கப் போவதில்லை என்ற தெம்பு ரெண்டு பேருக்கும் வந்த பிற்பாடு - என் தந்தையின் நண்பரைப் பிடித்து ஊருக்கு வெளியில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டதெல்லாம் fast forward -ல் நடந்தேறின ! பானெர்ஜியும், அங்கேயே ரூம் போட்டுக் கொள்ள, ஒரு வாரம் எங்கள் நட்பு பொங்கோ பொங்கென்று பொங்கியது ! புத்தக விழா முடிந்து நான் லண்டன் செல்வதாகச் சொன்ன பொழுது ஒரு ரசகுல்லா டின்னை கையில் திணித்தார் ! 'அட..மனுஷன் பாசக்காரன்யா !' என்று நான் மானசீக சர்டிபிகேட் கொடுக்கத் துவங்கியிருந்த போதே - இங்கிலாந்தில் Leicester நகரில் அவரது உறவினர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு போன் மட்டும் அடித்தால் - அவர்களே லண்டனில் நான் இருக்குமிடம் தேடி வந்து பெற்றுக் கொள்வார்கள் என்றும் சொன்ன போது மறுக்க முடியவில்லை ! ஆனால் பிற்பாடு - இங்கிலாந்து நுழைவு முனையில் விசா கொடுக்கப் பிடிக்காது immigration அதிகாரிகள் என்னையும், என் பைகளையும் தலைகீழாய் உலுக்கிய பொழுது அந்த ரசகுல்லா டின்னும் வெளிவந்து கழுத்தை அறுத்தது தனிக்கதை ! இங்கிலாந்தில் எனக்கு யாரையுமே தெரியாது - வேலை ஆன பின்னே ஊருக்குத் திரும்பி விடுவேன் என்று ஒப்பித்துக் கொண்டிருக்கும் போதே - இந்த ரசகுல்லாவை யாருக்குக் கொண்டு போகிறாய் ? என்று இன்னொரு அதிகாரி 'பிலு பிலு' வென்று பிடித்துக் கொண்டார் ! உள்ளதைச் சொன்னால் அது வேறு வில்லங்கமாகிப் போகுமோ என்ற பயத்தில் - 'எனக்கு ஸ்வீட் என்றால் உசுரு சார்..! சாப்பிடக் கையில் கொண்டு போகிறேன் !" என்று சொல்லி வைக்க - 'பக்கிப் பய !' என்ற ரீதியில் ஒரு பார்வையை வீசி விட்டுப் போனார் அவர் ! பற்றாக்குறைக்கு என் பயணப் பையின்  சைடில் என் சகோதரி வாங்கிக் கொண்டு வந்து தந்திருந்த அம்மன்கோயில் திருநீறு ; குங்குமம் ; மஞ்சள் ஒரு தடிப் பொட்டலத்தில் இருக்க, அதையும் மனுஷன் பரக்கென்று பிரித்தார் ! இசகு பிசகாக அவர் கை, யூனிபார்ம் மேலெல்லாம் அந்தக் கலவை விழுந்து போக மனுஷன் செம கடுப்பாகிப் போனார் !!  இது ஏதாச்சும் கஞ்சாவோ ; ஹெராயினொ என்றது போல என்னை முறைத்துக் கொண்டே - முகர்ந்து பார்த்தார் ! நான் விலாவாரியாய் விளக்க - அதுக்கும் கிடைத்தது ஒரு முறைப்பே ! அன்று முதல் ரசகுல்லாவைப் பார்த்தாலே டோவர் துறைமுகத்தில் என்னைத் துவைத்துக் காயப்போட்டதும், கொல்கத்தா பானெர்ஜியும் தான் நினைவுக்கு வருவது வழக்கம் !!  

இண்டெக்சில் இன்னும் கொஞ்சம் புரட்ட - யாரென்றே மறந்து போயிருந்த பெயர்கள் கண்ணில் பட்டன ! அதன் பின்னே F பகுதியில் Mr Francois Printemps என்றதொரு பெயரைப் படித்த பொழுது ஒரு வண்டி சந்தோஷ நினைவுகள் அலையடித்தன ! அந்நாட்களில் DUPUIS என்ற பெல்ஜியப் பதிப்புலக ஜாம்பவானின் டாப் நிர்வாகியாக இருந்தவர் இவர் தான் ! நிச்சயமாய் 50+ வயதிருக்கும் ; தயங்கித் தயங்கி அவர்களது ஸ்டால் வாசலில் நான் பிராக்குப் பார்த்துக் கொண்டே நிற்பதைக் கவனித்த போதே என் பக்கமாய் சிநேகமாய் ஒரு பார்வையை வீசி விட்டு, அவரது உதவியாளரை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார் ! துளி கூட பந்தா இல்லாமல், குழந்தைப் புள்ளே போலிருந்த என்னை பேச விட்டு, பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார் ! ஒரு டஜன் ஆல்பங்களை என் முன்னே அடுக்கி வைத்து - கிட்டத்தட்ட ஒவ்வொன்றாய்க் கதை சொல்லாத குறை தான் !! அதிலிருந்து தேர்வு செய்தது தான் "பிசாசுக் குரங்கு" நாயகர் Paul Foran ; "சாவதற்கு நேரமில்லை" சைமன் ; ஜெஸ் லாங் எல்லாமே ! 5 நாள் பிரான்க்பர்ட் விழாவின் போது கிட்டத்தட்ட தினமும் ஒரு 10 நிமிடங்களாவது என்னை அவர்களது ஸ்டாலுக்கு வரச் செய்து பரிவோடு பேசிய நல்ல மனுஷன் ! பின்னாட்களில் DUPUIS நிறுவனமே வேறொரு காமிக்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிப் போக - அவர் ஒய்வு நாடிச் சென்று விட்டாரா ? அல்லது பதவி உயர்வில் சென்று விட்டாரா ? என்று தெரியாது - but ஆரம்ப நாட்களில் எனக்கே என் காலடிகளை அடையாளம் காண உதவிய அற்புத மனிதர் !! 

 புரட்டிக் கொண்டே போகப் போக பிரான்க்பார்டில் நான் சந்தித்த ஆசாமிகளின் கம்பெனி பெயர்களும், லாண்ட் லைன் நம்பர்களும் இருக்க - அவர்களில் ஒரு பெரும்பகுதி இப்போது கடைமூடிப் போன பதிப்பகங்கள் என்பது புரிந்தது ! டைரிக்குள் செருகிக் கிடந்த இன்னொரு போட்டோவைப்    பார்த்த போது திரும்பவும் வாயெல்லாம் பல்லாகிப் போனது எனக்கு  ! இன்றைக்கும் நாம் வெளியிடும் ஏராளமான பிரெஞ்சுக் கதைகளின் தாய் வீடான LOMBARD எனும் பெல்ஜியப் பதிப்பகத்தின் டாப் நிர்வாகிகளுள் ஒருவரான Ms விவியன் ருசியுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோ அது ! இவர்களது ஸ்டாலுக்குச் சென்ற போது ஆரம்பத்தில் லேசான இறுக்கத்தோடு பேசியவர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஜாலியாகி விட்டார் ! இந்தியாவின் கலாச்சாரங்கள் பற்றி ; கோவாவின் பீச்கள் பற்றி ; ராஜஸ்தானின் கோட்டைகள் பற்றி எனக்குத் தெரிந்திருந்ததை விட அவருக்குக் கூடுதல் ஞானம் இருந்தது ! 'யெஸ்..யெஸ்..என்று நான் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே போக - தங்களது டாப் ஆல்பங்களைக் காட்டி அதனில் நமக்கு உதவக் கூடியவை என்று அவராகவும் ஒரு பட்டியல் போட்டுத் தந்தார் ! நட்போடு பழகினாலும் - பண விஷயங்களில் துளியும் சளைக்காது கறார் காட்டினார் !! But still    - அவர்களிடமிருந்த கதைகள் அத்தனையும் லட்டு போல் எனக்குக் காட்சி தந்ததால் ஒ.கே. ..ஒ.கே. என்று சொல்லி வைத்தேன் ! பிரான்க்பர்ட் முடிந்த பின்னே, பெல்ஜியம் சென்ற போது அவர்களது பிரம்மாண்ட அலுவலகத்தில் அவரை சந்திக்கவும் செய்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் அவரோடு பணியாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது ; அப்புறம் LOMBARD நிறுவனமும் ஒரு merger -ல் வேறு நிர்வாகம் வசம் சென்றிட - புதுசாய் ஆட்கள் வந்தனர் இவரிடதுக்கு ! கடைசி நிமிஷத்தில் பணம் அனுப்பி விட்டு, "அவசரம்..உயிர் போகும் அவசரம்!" என்று டெலெக்ஸ் சேதி அனுப்பிக் கதைகளைக் கோருவதே  நம் பிழைப்பு   என்றாலும் முகம் சுளிக்காது கடைசி வரைக்கும் நம்மை ஆதரித்த நல்ல உள்ளம் !! (போட்டோவின் பின்னணியில் பாருங்களேன் - கமான்சே ; சிக் பில்  ஆல்பங்கள் அப்போவே பளிச்சென்று வீற்றிருப்பதை !! )
நிறையப் பேரை சந்தித்தும், நிறைய நிறுவனங்களோடு ஒப்பந்தங்களும் செய்திருப்பினும், எனக்கு 1985-ல் பிரதானமாய்த் தெரிந்தது இவர்கள் இருவருமே என்பதால் பாக்கிப் பேர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ளக் கேட்கக் கூட தோன்றவில்லை ! அன்றைய கலர் நெகடிவ்களிலிருந்து போடப்பட்ட பிரிண்ட்கள் மங்கலாகிப் போயிருப்பினும், அந்த நினைவுகள் பிரகாசமாகவே இருப்பது தான் ஆச்சர்யம் ! என்ன ஒரே "குர்ர்" சமாச்சாரம் - அந்நாட்களின் வளமான சிகை !! ஹ்ம்ம்....என்னத்த சொல்லி...என்ன செய்திட !! 

Back to the present - பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் நேற்றைய செய்தித்தாள்களில் இருந்ததைக் கவனித்தீர்களா ? ASTERIX & OBELIX தொடரில் புதியதொரு ஆல்பம் தயார் ஆகியுள்ளது பற்றியும், அதன் விற்பனை நம்பர்கள் பற்றியும் நேற்றைய ஹிந்து பேப்பரில் படித்த பொழுது - பிரான்சில் நம் படைப்பாளிகள் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தது தான் நினைவுக்கு வந்தது ! ஆண்டுக்கு எவ்வளவு விற்பனை ஆகும் ? எந்த கம்பெனி எவ்வளவு விற்கும் ? என்றெல்லாம் நான் மொக்கை போட்டுக் கொண்டிருக்க புன்சிரிப்போடு அந்தப் பெண் சொன்னார் - "விற்பனை வகைகள் இரண்டு - பிரெஞ்சைப் பொறுத்தவரைக்கும் ! ஒன்று asterix வருஷம் ; இன்னொன்று - asterix இல்லா வருஷம் ! Asterix வருஷமெனில் விற்பனை graph செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து நிற்கும் ; பாக்கி ஆண்டுகள் தட்டையாக இருக்கும் !! விற்பனை புள்ளி விபரங்களைப் படித்தால் தலை கிறுகிறுத்துப் போய் விடும் !! பிரெஞ்சில் மட்டும் 20 இலட்சம் பிரதிகள் அச்சிட்டுள்ளனர் - முதல் பதிப்பிற்கு ; இதர முக்கிய மொழிகளின் இன்னொரு 20 இலட்சம் !!!! உலகம் முழுவதிலும் உள்ள Asterix காமிக்ஸ்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 365 மில்லியனாம் - அதாவது 36.50 கோடி !! இதோ - வெளியாகியுள்ள புது ஆல்பத்தின் அட்டைப்படம் ! இதையாவது நாம் ரசித்துக் கொள்வோம் !! 

And அடுத்த மாதம் வெளி வரக் காத்திருக்கும் லார்கோவின் புது ஆல்பத்தின் பெயர் "20 நொடிகள் !"  இதோ - அதன் அட்டைப்படம் ! இந்த ஆல்ப்பத்துக்குப் பின்பாய் இந்தத் தொடரில் கதாசிரியர் வான் ஹம்மே இருக்கப் போவதில்லை! ஓவியர் பிரான்க் கதை இலாக்காவையும் கையில் எடுத்துக் கொள்ளவிருக்கிறார் !! 

நடையைக் கட்டும் முன்பாக - இதோ ஒரு வழியாக "என் பெயர் டைகர்" முன்பதிவுப் பட்டியல் ! உங்கள் பெயர்களையும் இங்கே நுழைத்திட ஆவன செய்திடலாமே - ப்ளீஸ் ? And 2016-ன் சந்தாக்களையும் சீக்கிரமே அனுப்பிடக் கோருகிறோம் guys  - ப்ளீஸ் ?! மீண்டும் சிந்திப்போம் ! Bye for now !! 




P.S: இது இந்த வாரத் துவக்கத்துப் பட்டியல் ; விடுதல்கள் ஏதேனும் தென்படும் பட்சம் உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்களேன் ? And பெயர்களை டைப் அடித்ததில் சொதப்பியிருப்பின் - apologies  !!

P.S -2 : ஜூனியர் எடிட்டருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !

P.S - 3 : பழசை நினைவு கூர்ந்து நான் சாதிக்க நினைப்பது ஏதுமில்லை ; உங்களின் பொது அறிவை வளர்க்கவும் இது உதவாது என்பதும் உறுதி  ! அந்நாட்களது டைரி , சரியாக 30 ஆண்டுக்குப் பிந்தைய தருணத்தில் கையில் கிடைத்த  ஆச்சர்யத்தையும், அது கொண்டு வந்த நினைவுகளையும்   பகிர்ந்திருக்கிறேன் ! அவ்வளவே !  Good night !! 

Thursday, October 22, 2015

கதைகளின் கதையிது...!

நண்பர்களே,
     
வணக்கம். ஊரெங்கும் பண்டிகையின் உற்சாகங்கள்; வீடெங்கும் பட்டிமன்றங்களின் கலகலப்புகள்; சேனல்தோறும் புதுப்படங்கள் என்ற அமளிக்கு மத்தியில் ஏகப்பட்ட பள்ளிக்கூடப் பயணங்களுக்கும் இன்றைய தினமொரு துவக்கப் புள்ளியல்லவா? அத்தகையதொரு சூப்பர் தருணத்தில் நம் புதுப்பயணத்தின் ப்ளூபிரிண்டை திரைமறைவிலிருந்து வெளிக் கொண்டு வருவதும் சாத்தியமானால் என்னவென்று தோன்றியது? அதன் பலனே நமது பதிவு # 251 !!

சில பல வாரங்களுக்கு முன்பாகவே 2016-ன் அட்டவணைகள் பற்றிய guessing games ஆரம்பித்திருந்த நிலையில் அவரவர் ஆசைகளை வெவ்வேறு ரூபங்களில் பதிவு செய்திருந்தீர்கள்! கேட்கப்பட்ட கேள்விகளுக்கு; முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக்கி வந்த என் கல்லுளிமங்கத்தனம் உங்களில் நிறையப் பேருக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதும் தெரியாதில்லை! ஆனால் சில பல combination-களை; சில பல நாயகர்களின் scope பற்றிய பட்டிமன்றங்களை என் தலைக்குள் நடத்திக் கொண்டிருந்த போது – ஓட்டைவாய் உலகநாதனைத் தற்காலிகமாய் நாடு கடத்திடலே தேவலை என்று தோன்றியது! So- நா வறண்டு போகுமளவிற்கு முயற்சித்தும் என்னிடமிருந்து உருப்படியான பதில் வாங்க முடியாது போன நண்பர்களிடம் ஒரு sorry சொல்வது எனது முதல் கடமை!

வருஷா வருஷம் இந்தத் ‘திட்டமிடல் மேளாவைத்‘ தொடங்கிடும் போது – கிராபிக் நாவல்கள்; புதுப்பாணிகள்; புது அறிமுகங்கள் என்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள் கலவையாய் தலையை நிரப்பிடுவதுண்டு! அவற்றில் பல புஸ்வாணமாவதையும்; சில சிலாகிக்கப்படுவதையும் நாம் பார்க்கத் தான் செய்கிறோம் ! பரீட்சார்த்த முயற்சிகளை main stream சந்தாவினுள் வலுக்கட்டாயமாக நுழைத்திடாமல் அவற்றிற்கென ஒரு தனித் தடம் ; தனிச் சந்தா என்ற option தற்சமயமே நடைமுறையில் உள்ளதால் – 2016-க்கும் அதனைத் தொடர்வது என்று தீர்மானித்தோம்! தற்போது பௌன்சர் & தோர்கல் ஆல்பங்கள் மட்டுமே இந்தத் தனிப்பாதையில் பயணம் செய்து வருகின்றன; ஏப்ரலில் அறிவிக்கப்பட்டிருக்கும் 2016ன் சந்தா Z-ல் (!!!) இன்னும் நிறையவே மாறுபட்ட கதைகளைக் களமிறக்குவது என்பது முடிவான போது – 2016-ன் ரெகுலர் சந்தாக்களின் திட்டமிடல் சுலபமாகியது!

‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை!‘ காத்திருக்கும் புத்தாண்டிலும் சரி; தொடரும் ஒவ்வொரு ஆண்டிலும் சரி- இதையே நமது theme-ஆகக் கொண்டு செயல்படுவதென்ற எண்ணம் எங்கிருந்தோ ஒரு நாள் எனக்குள் உதயமானது! ‘பளிச்‘ கதைகள்; positive களங்கள்; அனைவரையும் ஏதேவொரு விதத்தில் ஈர்க்கக்கூடிய தொடர்கள் என்பதில் கவனமாக இருந்திடுவது என்ற அளவுகோல்களோடு நமது நாயகர்கள் பட்டியலை கையில் எடுத்தேன்! “புது அறிமுகங்கள்” என்று நிறையப் பேரை அட்டவணைக்குள் புகுத்தி விட்டு அப்புறமாய் மூச்சுத் திணறும் நெரிசலை நாமாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டாமென்ற சிந்தனை எனக்குள் உரக்கவே ஒலித்துக் கொண்டிருந்தது! இன்னும் ஓராண்டு சுமாரில், லார்கோ; ஷெல்டன் & கமான்சே தொடர்கள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றிருக்கும் & XIII ஏற்கனவே மங்களம் பாடியுள்ள நிலையில் – 2017-ல் நிச்சயமாய் புது நாயகர்களுக்கு / தொடர்களுக்கு அவசியம் ஏற்படும் என்பதைக் கணிக்க முடிகிறது! So 2016-ல் புதுசாய் நிறையப் பேரை நம் அணிவகுப்பிற்குள் திணிக்க அவசரம் காட்ட வேண்டாமென்று (ரொம்பக் கஷ்டப்பட்டு) தீர்மானத்தேன். BATMAN & இதர அமெரிக்கப் படைப்புகளையும் சரி; பிரான்கோ-பெல்ஜியப் புது நாயகர்களையும் சரி – 2017-ல் களமிறக்கினால் மட்டுமே – அவர்களுக்கு ரேஷனில்லாமல் கணிசமான வாய்ப்புகளை வழங்க முடியும் என்பது தானே நிதர்சனம்! In fact – இரு புதுத் தொடர்களுக்குக் கான்டிராக்ட் போடும் சூழல் இப்போதே கனிந்துள்ள போதிலும் – அவற்றை நாசூக்காய் தள்ளிப் போட முயற்சித்து வருகிறோம்!

So பரீட்சார்த்த முயற்சிகள் பற்றியும்; புது அறிமுகங்கள் பற்றியும் ஒரு குழப்பமில்லா தீர்மானத்தோடு வேலையை ஆரம்பித்த போது – உரத்த குரல்களாய் கேட்டு வந்த “தனி டெக்ஸ் சந்தா” தான் எங்கள் கவனத்தை முதலில் ஈர்த்தது! ஆனால் அதன் சாதக / பாதககங்களை எடைபோட்டுப் பார்க்க கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வதே தேவலை என்பதில் தீர்மானமாக இருந்தேன்! அதற்கிடையே நமது முத்து காமிக்ஸின் இதழ் # 350 ஆன CCC-ன் வெற்றியைத் தொடர்ந்து எனக்குள் திடமாய் குடி புகுந்திருந்த யோசனையை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலிருந்து 2016-ன் சந்தா package-ஐத் தொடங்கலாமே என்று தோன்றியது! ‘மினி லயனுக்கு‘ மறுவரவு வாய்ப்புத் தந்து கார்ட்டூன் கதைகளை அந்தப் பக்கமாய் நகர்த்திடலாமே?‘ என்ற கோரிக்கையும் நீங்கள் ரொம்ப காலமாகவே எழுப்பி வருமொரு விஷயம் தான் என்றாலும் – வெறுமனே லக்கி லூக்கையும், சிக் பில்லையும் கொண்டு 12 மாதங்களை ஓட்டுவது சாத்தியமாகாதே என்ற ஆதங்கத்தில் நான் கண்டும், காணாமலும் இருந்து வந்தேன்! But கார்ட்டூன் ஸ்பெஷலின் பொருட்டு கர்னல் க்ளிப்டன்; லியனார்டோ; ஸ்மர்ப்ஃஸ் என்று புது வருகைகள் வலு சேர்க்க – ஏற்கனவே இடமில்லாமல் சீட்டியடித்துக் கொண்டிருந்த மதியில்லா மந்திரியாரையும்; நமது பிரிய ரின் டின் கேனையும் கூட்டணிக் குடைக்குள் கொண்டு வந்தால் 12 smiley இதழ்கள் தயார் செய்ய ஒரு நொடி போதுமென்று புரிந்தது! புலரவிருப்பது லக்கியின் 70-வது ஆண்டு என்பதால் அவருக்கு 2 slots; உட்சிட்டி கோமாளிகள் golden age கதைகள் இப்போது டிஜிட்டல் ஃபைல்களாகக் கிடைக்கின்றன என்பதால் அவர்களுக்கும் 2 slots; அப்புறம் நமது ஊதாப் பொடியர்களுக்கு 3 வாய்ப்புகள் என்ற நிர்ணயத்துக்கு அப்புறமாய் க்ளிப்டன்; மதியில்லா மந்திரி; ரி.டி.கே. ; லியனார்டோ; சுட்டி பென்னி என ஆளுக்கொரு இதழை ஒப்படைத்துப் பார்ததால் – 12 மாதங்களுக்கான பட்டியல் தயாராகி இருந்தது! ஒவ்வொரு மாதமும் ஒரு ஜாலியான கதை எனும் போது – மற்ற கதை பாணிகளின் இறுக்கத்தை மீறி இவை நமது வாசிப்புகளை இலகுவாக்குமென்று நினைத்தேன்! அது மட்டுமின்றி – ஒவ்வொரு மாதமும் ஒரு இதழாவது நம் வீட்டு இளைய தலைமுறைகளுக்கும் பிரயோஜனமாகிடும் விதமாய் அமைவதில் சின்னதாயொரு long term ஆதாயமும் நமக்கு இருக்கக் கூடுமல்லவா? கலக்கல் கலரில் – காத்திருக்கும் இந்தக் கார்ட்டூன் மேளாவுக்கு சந்தா C என்று பெயரிட்டேன் !  Dial C for a Cartoon Carnival in Color ! அதிக மண்டைக்குடைச்சலின்றி ‘மள மள‘ வென்று தீர்மானம் செய்ய உதவிய இந்த சந்தா C பள்ளிகளுக்கோ, பிறந்த நாள் பரிசுகளுக்கோ ஒரு அழகான வாய்ப்பாக அமையுமென்றும் தோன்றியது! எல்லாவற்றிற்கும் மேலாக – மாதா மாதம் வறண்டு போன அரிசோனா பாலைப்பிரதேசங்களைப் பற்றியே எழுதிக் கொண்டு திரியாமல் – ஜாலியாக ரின் டின் கேனுடன் கூத்தடிப்பதும்; ஊதாப் பொடி மனுஷர்களின் லோகத்திற்குள் நடைபயில்வதும்; கர்னல் க்ளிப்டனோடு இலண்டனின் வீதிகளை வலம் வருவதும் எனக்கொரு welcome relief ஆக இருக்குமே என்ற சின்ன சுயநலமும் இந்த சந்தா C-ன் பின்னே ஒளிந்துள்ளது!
சடுதியில் 12 இதழ்கள் தீர்மானமான பின்னே – அடுத்த பன்னிரண்டும் கூடப் பெரிய குழப்பமேதும் இல்லாது பட்டியலில் அணிவகுத்து நின்றன! அவை தான் மறுபதிப்புக் கோட்டா – 3 மாயாவி + 3 ஸ்பைடர் + 3 லாரன்ஸ் டேவிட் + 2 ஜானி நீரோ +  டெக்ஸ் வில்லர் (பழி வாங்கும் புயல்) என்ற கதைகளோடு! சமீபமாய் நமது இரவுக் கழுகாருக்கு அடுத்தபடியாக விற்பனையில் விறுவிறுப்பு காட்டுவது மாயாவி மாமாவும்; ஸ்பைடர் சித்தப்பாவுமே தான் எனும் போது – புத்தக விழா விற்பனைகளுக்கும், கடைகளில் நடந்தேறும் வியாபாரங்களுக்கும் மறுபதிப்புகள் ஒரு முக்கிய பங்கு என்பதை மறக்க இயலாது! அது மட்டுமன்றி – இந்த classic மறுபதிப்புகளை one last time அழகாக வெளியிட்டு விட்டால் – இந்தியாவில் ஊழல் காணாமல் போகும் வரைக்குமாவது இவற்றைக் கேட்டு குரல்கள் மறுபடியும் எழுந்திடாது என்ற நம்பிக்கை எனக்குள்ளது! So- ஈரோட்டில் வாசகர் சந்திப்பின் போது நான் மறுபதிப்பு செய்திட ஒத்துக் கொண்ட டெக்ஸின் “பழி வாங்கும் புயல்” மட்டும் இந்த Fleetway oldies உடன் கைகோர்த்துக் கொள்கிறது! இந்தப் 12 பெயர்கள் கொண்ட பட்டியலும் ‘மள மள‘ வென்று ரெடியாகி நிற்க – சந்தா D என்று இதற்குப் பெயரிட்டேன்! Dial D for Dynamic Reprints!

இந்த இரு சந்தா option-களும் finalize ஆன நிலையில் ஆக்ஷன் & சாகஸம் கொண்ட ரெகுலர் கதைகளின் பக்கமாகத் திரும்பும் தருணமும் விடிந்தது! ‘டெக்ஸ் சந்தா உண்டா – இல்லையா?' என்ற கேள்விகள் ஒரு பக்கம் விஷ்... விஷ்... என்று பாய்ந்து கொண்டிருந்தாலும் ஒரு சில விஷயங்களில் தெளிவாக இருந்தேன் நான்!

·  மாதந்தோறும் ஒரு 224 பக்க நீள டெக்ஸ் சாகஸத்தைத் தான் நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனில் – அது நடைமுறை சாத்தியம் என்ற எல்லைகளுக்குள் அடங்கிடாது என்பது தெளிவாகத் தெரிந்தது! 224 x 12 = சுமார் 2750 பக்கங்கள் எனும் போது அவற்றை இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்து வாங்குவது மட்டுமின்றி – தமிழில் மொழிமாற்றம் செய்வதும் ஒரு பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இருக்கவில்லை!
· ‘டெக்ஸ்‘ என்ற ஹீரோவின் வசீகரம் - ‘ஓவர்டோஸ்‘ என்ற சங்கதியைத் தாண்டிச் செல்ல maybe உதவிடலாம் தான்! ஆனால் கௌ-பாய் கதை genre-ன் மீதே ஒரு லேசான அயர்ச்சி தோன்றக் கூடிய ரிஸ்க் இங்கே உண்டல்லவோ?
·        ஆனால் அதே சமயம் – சந்தாவில் ஒரு மேஜர் பங்கு நம் மஞ்சள் சட்டை மாவீரருக்கு ஒதுக்கப்படாது போயின் – மொத்த முயற்சியுமே தேறாது என்பது போன்றதொரு புதிரான mindset நம்மில் சிலரிடம் குடிகொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! விற்பனைகளில் டெக்ஸ் கதைகள் சந்மேகமின்றி முதலிடத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் – முழுக்க முழுக்க ஒரு டெக்ஸ் வரிசைக்குச் சாலை அமைப்பது எத்தனை தூரம் practical என்று எனக்கு கணிக்கத் தெரிந்திருக்கவில்லை!
·        அப்பொழுது என்னுள் எழுந்தது தான் சந்தா B-ன் யோசனை! முழுக்க முழுக்க வண்ண இதழ்கள் நம் பட்டியலில் அணிசேர்ந்து நிற்பது மட்டுமன்றி அவற்றின் பெரும்பகுதி பிரான்கோ-பெல்ஜியக் கதைகளாகவும் இருப்பது நிதர்சனம்! லேசாகத் தராசின் முள்ளை பீட்சா தேசத்தின் பக்கமாகவும் திருப்பினால் – Bonelli in Black & White சாத்தியமாகிடும் என்பது புரிந்தது! கலரின் ஆதிக்கமும் சமனமானது போலவும் இருக்கும் என்றும் பட்டது! Bonelli’s Best அடங்கிய சந்தாவினுள் ஒரு மேஜர் பங்கினை டெக்ஸுக்கு வழங்குவது; பாக்கியை ஜுலியா; ராபின்; மர்ம மனிதன் மார்டின் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற எண்ணம் வலுப்பெற்றது எனக்குள்! அந்த டெக்ஸின் “மேஜர் பங்கு” எத்தனை இதழ்கள் கொண்டதாக இருக்க வேண்டும்? என்ற சிந்தனை தான் நிறையவே மண்டையைப் பிறாண்டச் செய்தது! இறுதியில் I froze on 9 – because மறுபதிப்பில் ஒரு டெக்ஸ்; தீபாவளி மலரில் ஒரு டெக்ஸ் & ஈரோட்டுத் திருவிழாவில் ஒரு டெக்ஸ் என்பன எழுதப்படா நியதிகள் என்றாகிவிட்டுள்ள நிலையில் –ரெகுலர் 9 + ஸ்பெஷல் 3 – ஆக மொத்தம் 12 இதழ்கள் டெக்ஸுக்கு என்றாகி விடும்! ஆட்டைத் தூக்கிக் குட்டியோடு போட்டாலும், குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும் கணக்கு ஒன்று தான் எனும் போது – ஏதோ ரூபங்களில் ஆண்டுக்கு 12 டெக்ஸ் கதைகள் என்ற அவாவைப் பூர்த்தி செய்ய முடிந்தால் சரி என்று தோன்றியது! டெக்ஸ் காதலர்களுக்கு இந்த ஏற்பாடு ரசிக்கும் என்ற நிலையில் – நடுநிலை நண்பர்கள் ‘ஆவ்... இது நிச்சயம் ஓவர்!‘ என்று நினைக்கக் கூடும் என்பதும் புரியாதில்லை எனக்கு! ஆனால் அங்கே தான் டெக்ஸின் மாறுபட்ட கதை நீளங்கள் உதவிடக் கூடுமென்று தோன்றியது!
94 பக்கங்கள் -
104 பக்கங்கள் -
192 பக்கங்கள் –
224 பக்கங்கள் –
260 பக்கங்கள் –
336 பக்கங்கள் –
என்று விதம் விதமான நீளங்களில் டெக்ஸ் கதைகள் இருப்பதால் – இதனில் கொஞ்சம்; அதனில் கொஞ்சம்; அதோ அங்கே இருப்பதில் கொஞ்சமோ கொஞ்சம் என்று திரட்டி வந்தால் boredom factor தலைகாட்டாது என்றே எதிர்பார்க்கிறோம்! தவிர – கதைகள் ஒட்டுமொத்தமாய் ஒரே template-ல் இல்லாது – மாறுபட்ட பல களங்கள் கொண்டவைகளாக இருக்கச் செய்ய ஏகப்பட்ட வேலைகள் செய்திருக்கிறோம்! அது மட்டுமன்றி – சித்திரத் தரங்களில் ப்ளஸ் – மைனஸ்கள் இல்லாமல் – ஒட்டுமொத்தமாய் எல்லாமே டாப் ஓவியர்களின் கைவண்ணங்களாக மட்டுமே இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டோம்! So- 94 பக்கக் கதைகள் கொஞ்சம்; mid range-ல் 200+ பக்கக் கதைகளில் கொஞ்சம்; 336 பக்கங்களில் இன்னும் சில என்று தேர்வு! வண்ணத்தில் ஸ்பெஷல் இதழ்கள்; b & w-ல் நார்மல் இதழ்கள்; நார்மல் சைஸ்; மெகா சைஸ்; என்று என்னென்ன வேற்றுமைகள் காட்ட முடியுமோ – அவை சகலத்தையும் திட்டமிட்டிருக்கிறோம்!
·        ஓராண்டில் ஒரே நாயகன் இத்தனை இதழ்களையும், பக்கங்களையும் ஆக்கிரமிக்கப் போவது இதுவே முதல் தடவை! இந்தப் பரீட்சை ஜெயம் தருமாயின் வாயெல்லாம் பல்லாக வரும் ஆண்டைக் கடக்கும் வாய்ப்புகள் நமக்குப் பிரகாசம்! அதே சமயம் இது பிராய்லரை வெந்நீர் அண்டாவிற்குள் பிடித்துத் திணித்த புண்ணியத்தை நமக்குத் தேடித் தருமாயின் – கொஞ்ச காலம் சத்தியமங்கலத்துக் காடுகள் பக்கம் யானை மேய்க்கும் வேலைக்கு ஆள் தேவையிருக்குமோ? என்று விசாரிக்க வேண்டி வரலாம்! பந்து இப்போதிருப்பது உங்கள் பக்கம் guys! பக்குவமாய் ஷாட் ஆடுங்களேன் – பளீஸ்! சத்தியமங்கலத்தில் நிறைய அட்டைப்பூச்சித் தொல்லைகள் உண்டென்று கேள்வி!!
·        ஆண்டாண்டு காலங்களாய் கோரப்பட்ட “திகில் நகரில் டெக்ஸ்” ஒருவழியாக வெளிச்சத்தைப் பார்த்திடவுள்ளது. 2016-ல் ! அதே போல – நினைவைத் தொலைத்துவிடும் கிட் – தன் தந்தை டெக்ஸோடேயே மோதும் 260 பக்க நீள் சாகஸமும் இந்தாண்டின் பட்டியலில் highlight! அப்புறம் “தலையில்லாக் கொலையாளி” மெகா சைஸில் b&w-ல் மிரட்டக் காத்துள்ளவொரு visual treat ! And 94 பக்க one shot கதைகள் எல்லாமே ஒன்றுக்கொன்று துளி கூட ஒற்றுமை இல்லாப் புது விதக் கதைப்பாணிகள் ! And 2016 தீபாவளி மலர் 3 தனித்தனி இதழ்கள் கொண்டதொரு box set-ல் அழகாக வரக் காத்துள்ளது ! 3 ஒரிஜினல் ராப்பர்கள்; போசெல்லியின் மிரட்டலான கதைக்களம்; முழு வண்ணம் என்பதோடு மட்டுமன்றி – இம்முறை நாம் பயன்படுத்தவுள்ள box நல்ல தரமாக இருக்கும்! So- மாதந்தோறும் டெக்ஸ் உங்களை சந்திக்கக் காத்திருப்பினும் – சலிப்பு நேர்ந்திடாதிருக்க நம் சிற்றறிவுக்கு எட்டிய எல்லா சாகசங்களையும் திட்டமிட்டுள்ளோம் ! But ultimately -ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உங்கள் புரிதல் ரொம்பவே இங்கு அத்தியாவசியம் ! ஒவ்வொரு டெக்ஸ் சாகசமும் ஒரு 'தலைவாங்கிக் குரங்காக ' ஒரு சைத்தான் சாம்ராஜ்யமாக இருத்தல் கடினமே ! டெக்ஸ் சூப்பர்மேன் போல் ஆற்றல் கொண்டவராய் இருந்திடலாம் தான் - ஆனால் அவரைப் படைத்திடும் கதாசிரியர்கள் நம்மைப் போலவே இரத்தமும், சதையும் ஆனவர்களே ! மறந்திட வேண்டாமே - ப்ளீஸ் !  

டெக்ஸின் யானைப் பங்கு தொகுதிப் பங்கீடு முடிந்தான பின்னே – மர்ம மனிதன் மார்ட்டினின் ஒரு முழுநீள சாகஸம்; ராபின் & ஜுலியா என போனெல்லியின் 12 இதழ்களைப் பட்டியலிட்டு முடித்தேன்! So- முழுக்க முழுக்க b&w இதழ்களாய்; முழுக்க முழுக்க இத்தாலியப் படைப்புகளோடு சந்தா B தயாராகியிருந்தது! Dial B for Bonelli's Best in Blach & White !! 

கட்டக் கடைசியாக ஆக்ஷன் & அட்வென்சர் பக்கம் ஒளிவட்டத்தைப் பாய்ச்சும் சந்தா A மட்டுமே காத்து நின்றது நம் முன்னே!
·        லார்கோ
·        வேய்ன் ஷெல்டன்
·        கமான்சே
·        XIII
என்ற முதல்நிலை நாயகர்களுக்கு வாய்ப்பை உறுதி செய்த போதே ஆறு இதழ்கள் பூர்த்தியாகியிருந்தன! ஆண்டு மலர்; ஈரோட்டுத் திருவிழாவுக்கொரு மலர் ; தீபாவளி மலர் என 3 ஸ்பெஷல் தருணக் கோட்டாக்களை நிரவல் செய்திட அடுத்து முனைந்தேன்! ஆண்டு மலர் – நமது 30 ஆண்டு பிரான்கோ-பெல்ஜியப் பயணத்தை highlight செய்யும் விதமாய் இருந்தால் தேவலை என்று தோன்றியது! So- இந்த முப்பது ஆண்டுகளும் நம்மோடு travel செய்துள்ள சில back bench boys-ன் பின்னோக்கியும், முன்னோக்கியுமான பயணங்களை கொண்ட கதைகளை ‘டிக்‘ அடித்தேன் ! கேப்டன் பிரின்ஸ் ஆரம்ப நாட்களில் ஒரு இன்டர்போல் ஏஜெண்டாக இருந்தவர் என்பது நாமறிந்திருக்கா விஷயம்! அந்நாட்களது கதைத் தொகுப்புகள் – இது வரை நாம் படித்திரா புத்தம் புது ரகம்! அதே போல ரிப்போர்டர் ஜானியின் கதையில் நான் தேர்வு செய்துள்ளது கூட ஒரு timeline சாகஸம்! ஜானியின் தந்தை துவக்கும் ஒரு புலன்விசாரணையை ஒரு தலைமுறைக்குப் பின்பாக ஜானி தொடர்கிறார்! And please note – இது ஜானியின் புது பாணி கிராபிக் நாவல் அல்ல! அந்தக் கதையை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துப் படித்துப் பார்த்த போது – கதை ஒரே shot–ல் முடிவது போல் அல்லாது தொடர்ந்திடக் கூடியது போல் பட்டது! இது வரை அதன் மறுபாகம் பற்றிய அறிவிப்பு ஏதும் படைப்பாளிகளிடமிருந்து வராத நிலையில் இந்தப் புது பாணியை ஆரம்பிப்பதில் எனக்குத் தயக்கம்! So- இம்முறை ஜானியின் classic கதையினில் ஒன்றே  தொடர்கிறது! சாகஸ வீரர் ரோஜரைப் பொறுத்தவரையிலும் இதே நிலவரம் தான் !; புதிதாகத் தொடங்கியுள்ள கிராபிக் நாவல் 2020-ல் நடப்பது போலானதொரு scenario – and இதுவும் ஒன்-ஷாட் கதையல்ல - நீண்டு செல்லும் தொடரே ! ஆகையால் அந்தப் புதிய பாணிகளும் / கதைகளும் கொஞ்சம் தொடர்ந்தான பின்பு – நமக்கு ரசிக்கும் விதமாய் கதைகள் இருப்பின் பயன்படுத்திக் கொள்வோமே என்று நினைத்தேன்!

ஆகஸ்டில் நடந்திடும் ஈரோட்டுப் புத்க விழாவின் போதும் ஒரு ஸ்பெஷல் இதழ் இருந்தால் தேவலையே என்ற நண்பர்களின் வேண்டுகோள் நினைவில் நின்றிட; “ஸ்பெஷல்” என்றாலே “இரவுக் கழுகார் அவசியம்' என்ற நண்பர்களின் ஆசைகளும் சிந்தனையில் நிழலாட – ஒரு மினி LMS“ஐத் திட்டமிட்டேன் – “ஈரோட்டில் இத்தாலி” என்று! Given a choice – இன்னமும் புஷ்டியாய்; இன்னமும் கூடுதலாய் கதைகளோடு இந்த இதழை உருவாக்கியிருப்போம் தான்! ஆனால் சற்றே conservative-ஆன திட்டமிடலே சென்றாண்டின் சந்தாத் தொகைகளை எட்டிப் பிடித்து விடும் நிலையில் –இதழ்களின் கூடுதல் பருமன் - பர்ஸ்களுக்குக் கூடுதல் பளுவாகிப் போய்விடுமே என்ற பயம் தலைதூக்கியது! So- அடக்கி வாசிப்போம் என்று சொல்லிக் கொண்டேன்!

6 ரெகுலர் இதழ்கள் + 3 ஸ்பெஷல்கள் என்றான பின்பு – நமது இளவரசிக்கு ஒற்றை slot ஆவது ஒதுக்கும் கடமை பாக்கி நின்றது! ‘என் கடன் – (மாடஸ்டிக்கு) பணி செய்து கிடப்பதே!‘ என்றொரு one point agenda வுடன் காலத்தை நகற்றும் ஒரு ஜீவனின் பொருட்டு இந்தத் தேர்வு என்று வைத்துக் கொண்டாலும் சரி; எனது ‘இளவரசிக் காதலின்‘ வெளிப்பாடாய் இதைப் பார்த்தாலும் சரி – சந்தா A வின் ஒரே b&w இதழாக மாடஸ்டி மாத்திரமே இருந்திடுவார்!
இறுதியான 2 சீட்களை மட்டுமாவது புதியவர் யாருக்கேனும் ஒதுக்குவோமே என்று யோசித்தேன்! நாற்பது – ஐம்பது கதைகள் கொண்டதொரு நெடுந்தொடருக்குச் சொந்தக்காரராக இல்லாது – crisp-ஆன கதைக்களத்தில் பயணம் செய்பவராக; சமகாலத்து ஆசாமியாக இருந்தால் தேவலையே என்ற தோன்றியது! அப்போது தான் என் நினைவுக்கு வந்தவர் John Tiffany! மனுஷன் ஒரு நவீனகால வெகுமதி வேட்டையன்! பணத் தேடலில் எதுவுமே சரியே என்ற கோட்பாடு கொண்டவன்! ‘ஜான் டைனமைட்‘ என்ற பெயரில் நம்மிடையே அறிமுகம் காணப் போகும் இவரது தொடரில் இது வரை 2 கதைகள் மட்டுமே உருவாகியுள்ளன என்பதால் அவை இரண்டையுமே 2016-ல் வெளியிடவுள்ளோம்! கொஞ்சம் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்கள் ஆங்காங்கே சிதறலாய் இருப்பினும் – பௌன்சரில் போல அவை கதையின் கருவோடு பின்னிக் கிடப்பவையல்ல என்பதால் எடிட்டிங் சாத்தியம் என்றுபட்டது! அந்த நம்பிக்கையோடு – இந்தப் புதுவரவோடு சந்தா A-வின் 12 இதழ்ப்பட்டியலை முழுமைப்படுத்தினேன்! So- Dial A for Action & Adventure!


பட்டியலைப் பூர்த்தி செய்தான பின்னே நிதானமாக படித்துப் பார்த்துக் கொண்டே போன எனக்குள் எழுந்த சில கேள்விகள் உங்களுக்கும் எழுந்திடும் என்று பட்டது! நீங்கள் கேட்கத் தொடங்காத கேள்விகளுக்கு நானே பதில் சொல்லி விட்டால் உங்கள் நேரங்கள் மிச்சமாகும் என்பதால் இதோவொரு impromptu கேள்வி-பதில் நேரம்!

·        ப்ளூகோட் பட்டாளத்தைக் காணோமே – கார்ட்டூன் கோட்டாவில்?
     
சமீபமாகவே சொதப்பி வருவது நமது cricketing men in blues மட்டுமல்ல – நமது (ஸ்கூபி-ரூபி) ப்ளூகோட் படையும் தான்! கார்ட்டூன்களாகவும் பார்த்திட முடியவில்லை; ஆக்ஷனாகவும் ரசிக்க முடியவில்லை என்ற உங்களின் புகார்கள் விற்பனையில் எதிரொலிப்பதை கவனிக்க முடிகிறது! 2015-ன் இதுவரையிலான எல்லாப் புத்தகவிழாக்களிலும் மிகச் சுமாரான விற்பனை கண்டுள்ள கார்ட்டூன் கதைகள் ப்ளூஸ் சாகஸங்களே! So இவர்களுக்கு சின்னதாகவொரு பிரேக் தேவலை என்று நினைத்தோம்!

·        ஸ்மர்ஃப்ஸ் – 3 இதழ்களுக்குத் தகுதியானவர்கள் தானா?

Oh..yes!!! இந்த நீல மனிதர்களின் உலகமும் ஒருவிதத்தில் தோர்கலின் மாயாஜால உலகைப் போன்றது! அதனுள் நாம் ஆழமாய் செல்லச் செல்ல ஏகப்பட்ட புது அனுபவங்கள் கிட்டிடும்! சிரிப்பில் விழுந்து புரளச் செய்வது மட்டுமே ஒரு கார்ட்டூன் கதையின் இலட்சியமென்றில்லாது – ஒரு அழகான, இதமான வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவைகளும் classy கார்ட்டூன்களே என்பதை ஸ்மர்ஃப்ஸ் நிச்சயம் நிரூபிப்பார்கள்!

· மறுபதிப்பில் Fleetway தவிர- இப்போதைக்கு வேறு கதைகளே கிடையாதா?
     
நிறையப் பேசியிருக்கிறோம் இது பற்றி! So- கொஞ்சம் பொறுமையோடு தொடர்ந்தால் Fleetway படலத்தை நிறைவு செய்து விட்ட திருப்தியோடு அடுத்த batch ரீப்பிரிண்டுகளுக்குள் தலை நுழைக்கலாம்! And “இரத்தப் படலம் – முழுத் தொகுப்பும் வண்ணத்தில்?” என்ற கனவு தற்போதைக்கு கனவாகவே தொடரட்டுமே? 2020-க்கு அப்புறமும் இந்தக் கோரிக்கை வலுவோடு தொடர்ந்தால் அது பற்றி யோசிப்போமே? எல்லாக் கனவுகளும் ஏக காலத்தில் நனவாகிப் போய்விட்டால் கனவுகளுக்கே கவர்ச்சியில்லாது போய் விடாதா?

·        ஜில் ஜோர்டனின் நாடு கடத்தல் ஏனோ?
     
ஏற்கனவே ஒரு main stream கார்ட்டூன் சந்தாவே நடைமுறை காணப் போகும் வேளையில் கார்ட்டூன் பாணியிலான ஜில்லையும் போட்டால் overkill ஆகிடக் கூடாதே என்று தோன்றியது! Again just a short break!

·        “தில் இருந்தால் திகுலுண்டு” என்ற பில்டப் என்னாசோ?

தனித் தண்டவாளம் – பரீட்சார்த்த முயற்சிகளுக்கு என்றான பின்னே அவற்றை ரெகுலர் சந்தாப் பக்கமாய் தலைகாட்டச் செய்வானேன்? ஏப்ரலில் இதற்கு விடை கிடைக்கும்! தில்லும் இருக்கும், திகிலும் இருக்கும், அழகான புது பாணிக் கதைகளும் இருக்கும் !

·        ஸ்பெஷல் இதழ்கள் இன்னும் கனமாக இருக்கலாமே 2016-ல்?

நிச்சயமாய் எனக்கும் அந்த ஆசை உண்டு தான்! ஆனால் உதைக்கும் பட்ஜெட்டுகள் தான் இங்கே ஸ்பீட்-பிரேக்கர்களாகி நிற்கின்றன! ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.4000/- என்ற தொகையில் நிற்கும் சந்தாவை இன்னமும் கனமான நம்பர்கள் பக்கமாக இட்டுச் செல்லும் தைரியம் நம்மிடமில்லை! “என் பெயர் டைகர்” கற்றுத் தந்த பாடம் நமக்கு long run-ல் ஒரு உபயோகமான பாடம் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை! அதுமட்டுமன்றி 2016-ல் பெரிதாய் மைல்கல்கள் எதையும் நாம் தாண்டிச் செல்லும் வேளைகளுமில்லை என்பதால் – முகாந்திரங்களும் குறைச்சலே நமக்கு! 2017-ல் 2 மில்லியன் ஹிட்ஸ்; முத்துவின் அடுத்த landmark; இத்யாதிகள் காத்திருப்பதால் அங்கே நமது கொண்டாட்டங்களை இன்னும் கொஞ்சம் விமர்சையாக வைத்துக் கொள்வோமே?

·        மேஜிக் விண்ட் – ஒற்றைக் கதை மட்டும் தானா? மார்ட்டினுக்கும் அதே one shot மட்டுமா?
     
‘டெக்ஸ்‘ எனும் ஆலமரம் விழுதுகளோடு கம்பீராய் நிற்கத் தேவையாகும் போது அரச மரங்களும், வேம்புகளும் கொஞ்சம் பின்வாங்கத் தானே வேண்டும்? ‘மாதமொரு டெக்ஸ்‘ என்ற நிலைப்பாட்டை எடுத்தான பின்பு – ஜெயமோ; வேறென்னவோ – அதை டெக்சோடே சந்திப்போமே? Moreover இந்த சந்தா B ஹிட்டாகும் பட்சத்தில் – தொடரும் நாட்களில் அதன் இதழ் எண்ணிக்கையை விரிவாக்கி – மற்ற போனெல்லி நாயகர்களுக்கும் கூடுதல் வாய்ப்புகள் தந்திட முடியும்  ! இங்கேயும் ‘வாய்ப்பு‘ எனும் கதவை விசாலமாகத் திறந்தே வைத்துள்ளோம்! அதனை பயன்படுத்திக் கொள்வதா?- அல்லது அப்படியே தொடரச் செய்வதா? என்ற final call உங்களது guys! எப்போது வேண்டுமானாலும் black & white இதழ்களின் எண்ணிக்கைகளை அதிகம் பண்ணிடும் சாத்தியங்கள் உண்டு! So please do understand that the slots to other heroes can indeed be upped!

·        கோடை மலர்” கிடையாதா?

பட்ஜெட்; பளு; விட்டமின் ‘ப‘; etc.. etc... என்ற அதே பல்லவியைத் தான் பதிலாக்கிட வேண்டும்!

·  சரி – பெருசாய் புதுசாய் ஏதும் அறிமுகங்கள் இல்லாத சூழலில் என்ன மாற்றங்களை செய்வதாக உத்தேசம்?
     
Making-ல்; அட்டைப்படங்களில்; உட்பக்க content-களில்; எழுத்து பாணிகளில் ‘திடுக்‘ மாற்றங்கள் இல்லாவிட்டாலும் – அத்தியாவசிய முன்னேற்றங்கள் செய்திடவுள்ளோம்! இங்கே உங்கள் சகாயங்கள் பெரியளவில் நமக்குத் தேவை! என்ன தான் நம்மில் பெரும்பகுதியினருக்குப் பழசு மீது தீரா நாட்டம் இருப்பினும் – புதுப் பாதைகள் / புதுப் பாணிகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய வேளைகள் புலர்ந்து வருவதை நாம் முழுமனதாக ஏற்றுக் கொண்டாக வேண்டும்! அட்டைப்படங்களில் புது சிந்தனைகளை அமல்படுத்த; உட்பக்கங்களில் புதுசாய் filler pages-களைக் கொண்டு வந்திட, நமது எழுத்து நடைகளை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றிட -  உங்கள் புரிதல்கள் நமக்கு ரொம்பவே அத்தியாவசியம்! கதைகளையும் அதன் நாயகர்களையும் முன்சீட்டை ஆக்ரமித்துக் கொள்ள அனுமதித்து விட்டு – நான் சிறுகச் சிறுகப் பின்னணியில் இருந்திடுவது தான் காத்திருக்கும் காலங்களுக்கான modus operandi ஆக இருந்திடலாம்! நாயகர்களை விட அவர்கள் மீது தற்போது படிந்து கிடக்கும் எனது நிழல் பெரிதாய் இருக்கிறதாய் எனக்குத் தோன்றுவதால் – அந்தக் குறைபாட்டைத் திருத்திட எனக்கு சுதந்திரம் தரக் கோருகிறேன் guys! And – கதை நீங்கலாக பாக்கி filler pages-களை நிரப்பிட உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது! ஒவ்வொரு இதழையும் ‘பரபர‘ வென்று கதையளவிற்குத் தயார் செய்தான பின்னே – அந்தப் பக்க நிரப்பிகளின் பொருட்டு நிறையவே  நேரங்களை விரயம் செய்ய நேரிடுகிறது! Filler pages களில் பிரயோஜனமாக; அதிகமாய் நேரத்தை விழுங்காவிதமாய் என்ன செய்திடலாம்? இங்கே உங்களது பங்களிப்புகள் ஏதேனும் இருக்க சாத்தியமாகிடுமா? ஏதேனும் (காமிக்ஸ்) தொடர்கதைகள் போடுவது உருப்படியான காரியமாக இருக்குமா? Thoughts please guys?

·        ஜனவரியின் சென்னைப் புத்தக விழாவுக்கு என்ன பிளான்?
     
Again – பந்து உங்கள் தரப்பில் தான்! ”என் பெயர் டைகர்” முன்பதிவுப் பட்டியல் 140-ல் நிற்கிறது !! (பட்டியலை டைப் செய்யக் கோரி நம்மவர்களை நேற்றே நினைவுபடுத்தி இருந்தும் விடுமுறை ஜோரில் மறந்து விட்டார்கள் ! So இன்றைய பகல் பொழுதில் அடியேனே அந்த வேலையை செய்து விடுவேன்)! அடுத்த பத்துப் பதினைந்து நாட்களுக்குள் dramatic ஆக முன்பதிவுகள் சூடுபிடித்தால் ஜனவரியில் இதன் ரிலீஸ் சாத்தியமாகும்! If not, ‘எ.பெ.டை‘ ஏப்ரலுக்கே! எவ்விதமிருப்பினும் வழக்கமான வண்ண இதழ்கள் நீங்கலாக - டெக்ஸின் ஒரு வெயிட்டான (b&w) இதழ் ஜனவரிக்கு உண்டு!

· கிராபிக் நாவல்கள் – ரெகுலர் சந்தாக்களில் கிடையவே கிடையாதா?
     
இதற்கென ஒரு தனியரங்கு யாருக்கும் சிரமங்கள் தராத விதத்தில் அமைந்திருக்கும் போது – அதனை நோண்டி வைக்க மனம் வரவில்லை! So சந்தா Z அதைப் பார்த்துக் கொள்ளும்! 

  • தோர்கல்  ?

Again சந்தா Z !!

கதைகளின் விளம்பர templates, நவம்பர் இதழோடு வரக் காத்திருக்கும் வண்ண (குட்டி) புக்கில் இருந்திடும் ! So முழுமையாய் கதைகளை / டிரெய்லர்களைப் பார்த்திட நவம்பரின் ஆரம்ப நாட்கள் வரை சற்றே பொறுமை ப்ளீஸ்! விலைகள் பற்றியும் ; காத்திருக்கும் கதைகள் பற்றியும் நவம்பர் ஹாட்லைனில் விரிவாக எழுதியுள்ளேன் ! அவை அனைத்தையும் இங்கே அட்சர சுத்தமாய் ஒப்பிப்பின் - டைப் அடிக்கும் என் விரலும் புரட்சி செய்யத் தொடங்கி விடும் ; இதழைப் படிக்கும் போது உங்களுக்கும் அந்த 3 பக்கங்கள் 'மறு ஒலிபரப்பு' விரயமாகத் தெரியக் கூடும் ! So தற்போதைக்கு அவசியத் தேவைகள் பக்கமாய் மட்டுமே என் சிந்தனைகளைத் திருப்பியுள்ளேன் !


இதற்கு மேல் எழுதினால் – காலுக்குள் இடறும் என் நாக்கார் நிரந்தரமாய் தரையிலேயே குடித்தனம் பண்ணத் தொடங்கிடும் ஆபத்துள்ளதால் இந்தாண்டின் மிக நீ-ள-மா-ன பதிவை நிறைவு செய்கிறேன்! கிளம்பும் முன்பாய் ஓரிரு குட்டிக் கோரிக்கைகளும் - ஒரு மெகா நன்றியும் !! கோரிக்கைகள் முதலில் :

'ரசனைகளில் ஒற்றுமை' மிக மிக அரிதான விஷயம் எனும் போது - நம்மில் அனைவருக்கும் 100% திருப்தி தரக் கூடியதொரு அட்டவணை பிரம்மாவுக்கு மட்டுமே சாத்தியம் என்பதை நாம் அறிவோம்  ! இயன்றவரை உங்கள் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளில் நின்று சிந்திக்க நிறையவே முயற்சித்துள்ளேன் !  நம் தரப்பில் உள்ள limitation-களுக்குள் பணியாற்றும் அவசியங்களுக்கும் நான் தலைவணங்காது இருக்க இயலாது எனும் போது - கத்தி மேல் நடப்பது போலாகிறது என் பணி ! இது தான் ULTIMATE என்று ஒரு பொழுதும் நான் சொல்லப் போவதில்லை - ஆனால் தற்போதைய சூழலில் ; உங்கள் ரசனைகளையும் / மார்கெட்டின் வாங்கும் திறன்களையும் கருத்தில் கொண்டு கவனத்தோடு தயார் செய்துள்ள அட்டவணை இது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் ! So 2016-ன் schedule பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகளை முழுவதுமாய் நிறைவு செய்ய நாங்கள் தவறியிருக்கும் பட்சத்தில் - அதன் பின்னணியில் நிச்சயமாய் ஏதேனும் காரணம் இருக்கும் என்ற புரிதலுக்கு எங்களது அட்வான்ஸ் நன்றிகள் ! 

End of the day - 'ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை !' என்பதே நம் தீரா ஆசை என்ற புரிதலுக்கும் அட்வான்ஸ் நன்றிகள் !! 
"மெகா நன்றி" எதற்கென்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் !! இந்தப் பயணமும் சரி ; இந்த சந்தோஷங்களும் சரி - உங்கள் ஒவ்வொருவரின் துணையின்றிச் சாத்தியமே கிடையாது அல்லவா ?! ஓட்டுனர் இருக்கையில் இருப்பது நானாக இருக்கலாம் தான் - ஆனால் என் பின்னே சன்னமானதொரு அன்புக்குழாமின் invisible கரங்களும், ஆசீர்வாதங்களும் இல்லாது போனால் வண்டி முதல் கியரைத் தாண்டியே இருக்காதே ! சங்கட நாட்களிலும், சந்தோஷ வேளைகளிலும் மாறா நேசத்தோடு நமக்குத் துணை நின்றுவரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் மனதார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ! தொடரும் ஆண்டிலும், காலங்களிலும் உங்கள் அன்புக்கு அருகதைகள் எங்களுக்குத் தொடர்ந்திடும் பட்சத்தில் எங்களது வரங்களை எண்ணி நிச்சயமாய் குதூகலிப்போம் !! Thank you ever so much!!! 

புலியும் வந்தே விட்டது guys - கூடவே உங்களின் சந்தாக்களைப் புதுப்பிக்கும்  தருணமும் தான் ! டிசம்பரின் ஆரம்பத்துக்குள் உங்கள் சந்தாக்கள் எங்களை வந்தடையும் பட்சத்தில் 2016-ன் வேலைகளைத் தெளிவாய்த் துவங்கிட இலகுவாக இருக்கும் ! அது மட்டுமன்றி- "GIFT A SUBSCRIPTION"பக்கமாகவும் உங்கள் சிந்தனைகளை ஓட விடலாமே ? Please do chip in folks ! மீண்டும் சந்திப்போம் - விடுமுறைகளை ஜமாயுங்கள் !!    


    
 
     




(சித்திர ) டிரெய்லர்கள் தொடரும்....கொஞ்ச நேரத்தில் !! 
P.S : And  இம்முறை - சந்தாக்களுக்கு ஒரு குட்டிப் பரிசாய் ஒரு டி-ஷர்ட் தரவிருக்கிறோம் ! So  - உங்கள் சந்தாக்களோடு - உங்களுக்குக்கான டி-ஷர்ட் அளவினையும் ( S : M : L : XL : XXL ) குறிப்பிட மறந்திடாதீர்கள் நண்பர்களே !!